இரவின் கருமையில் ஒரு மனிதன் செய்யும் எந்த ரகசியக் காரியமும் வெண்பகலில் தெள்ளியதாக வெளிப்பட்டுவிடும். தனிமையில் புலம்பிய சொற்கள் யாவும் எதிர்பாராத விதமாகப் பொது உரையாடலின் பேசுபொருளாக ஆகிவிட்டிருக்கும். இன்று நம் அறை மூலைகளில் மறைத்து வைக்கும் ஆவணங்கள் யாவும் நாளை வீதிகளெங்கும் பறைசாற்றப்படும்.
இப்படித்தான் மதகுரு பூலோஸ் காலிப், ஃபாரிஸ் எஃபாண்டி கராமியுடன் சந்தித்து உரையாடியதை இருண்மையின் வாய்கள் அரற்றின. அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து பேசிப் பேசி அலர் என் காதை எட்டியது.
அந்த இரவு பூலோஸ் காலிபுக்கும் ஃபாரிஸ் எஃபாண்டிக்குமிடையே நடைபெற்ற உரையாடல் ஏழைகள், கைம்பெண்கள், அநாதைகள் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைப் பற்றியது அல்ல. ஃபாரிஸ் எஃபாண்டியைக் கையோடு அழைத்து வரச்சொல்லித் தனிவண்டியை அனுப்பித் தன் இல்லத்திற்கு அழைத்தது பாதிரியார் தனது ஒன்றுவிட்ட மகன் மன்சூர் பே காலிபுக்குச் செல்மாவை நிச்சயம் செய்வதற்காக.
செல்மா செல்வந்தர் ஃபாரிஸ் எஃபாண்டியின் ஒரே மகள். பாதிரியார் அவளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அவளது அழகோ தூய மனமோ இல்லை. மாறாக ஃபாரிஸ் எஃபாண்டியின் சொத்து மன்சூர் பே காலிபைச் செல்வந்தனாக ஆக்குவதோடு அவனைச் சமூகத்தில் பலப்படுத்தும் என்ற பேராசையே காரணம்.
கிழக்கின் மதத்தலைவர்களுக்குத் தங்களது தொன்றுதொட்ட பெயரும் பெருந்தன்மையும் போதுமானதாக இல்லை. அவர்களுக்குத் தன் குடும்பத்தினர் அனைவரும் சமூக பலத்துடன் அதிகாரமும் செல்வாக்கும் இருந்தாக வேண்டும் என்ற தீவிரமாக எண்ணமுண்டு. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். ஒரு அரசனின் பெருமை அவரது மூத்தமகனுக்கு மரபு ரீதியாக அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மதத்தலைவரின் புகழ் எளிதில் பங்காளிகள், மருகர்கள் என அவருக்கு அணுக்கமானவர்களையும் சேர்க்கிறது. பலருக்கும் அதிகார ஆசையும் அதைப் பயன்படுத்தி செல்வமீட்டும் எண்ணமும் பெருகுகிறது. இவ்வாறாக, கிறித்துவ பாதிரி, இந்துப் பூசாரி, இஸ்லாமிய இமாம் என்று எந்த மதகுருவும் கடல் வாழும் எண்கால் உயிரியைப் போல கைகளை நீட்டி வளைத்துப் பிடித்து சமூகத்தில் பலரது குருதியை உறிஞ்சிக் குடிக்கிறார்.
தன் மருகன் செல்மாவின் கரம்பிடிக்க வேண்டுமென்று பாதிரியார் கோரியதற்கு அவளது தந்தையிடமிருந்து ஆழ்ந்த மெளனத்தால் பெருகிச் சிந்திய கண்ணீரே பதிலாக இருந்தது. தன் ஒற்றை மகளை இழப்பதை அவர் மிகவும் வெறுத்தார். எந்த ஒருவனுக்கும் தன் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கி அவள் பெண்ணானதும் பிரிய நேர்வது ஆன்மாவைத் தகர்க்கும் நிகழ்வு.
மகனின் திருமணத்தால் கொள்ளும் உவகையின் அளவுக்குப் பெரிதானதே மகளின் திருமணத்தால் அடையும் துயர். ஏனெனில் மகன் இன்னொருத்தியைக் குடும்பத்திற்கு அழைத்து வருகிறான். ஆனால் பெண்ணோ மணமானதும் அக்குடும்பத்திற்கு இல்லையென்று ஆகிவிடுகிறாள்.
பாதிரியாரின் வேண்டுகோளை ஃபாரிஸ் எஃபாண்டி ஏற்றாலும் அவரால் முழுமனத்துடன் இணங்க முடியவில்லை. ஏனெனில் அவருக்கு மதகுருவின் மருகனைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. அவன் மிகக் கொடியவன். வெறுப்பாலும் ஊழலாலும் தீக்குணங்களாலும் ஆனவன்.
லெபனானின் எந்த ஒரு கிறித்தவனும் பாதிரியாரை எதிர்க்கவும் முடியாது, எதிர்த்துவிட்டு நிம்மதியாக வாழவும் முடியாது. தன் மதகுருவுக்குக் கீழ்ப்படியாமல் யாராலும் மரியாதையைக் காத்துக்கொள்ள முடியாது. ஈட்டியை நேர்கொண்டு பார்க்கும் விழிகள் குத்தித் துளைபடாமல் தப்பாது. கூரிய கத்திமுனையைக் கையால் பற்றினால் கீறாமல் தப்ப முடியாது.
ஒருவேளை ஃபாரிஸ் எஃபாண்டி பாதிரியின் விருப்பத்திற்கு மாறாக மறுப்பு தெரிவித்தால் அழுக்கான ஊர்வாய் அலர் தூற்றும்; செல்மாவின் பொற்பு களங்கப்படும். எட்டாத உயரத்தில் இருக்கும் திராட்சைக் கனி யாவுமே நரிகளின் பார்வையில் புளிப்பானவையே.
இவ்விதமாக ஊழ் செல்மாவைச் சிறைப்பிடித்து துயர்மிகுந்த அடிமை ஊர்வலத்தில் செல்லும் கீழைத்தேயப் பெண்ணென ஆக்கியது. மலர்களின் நறுமணம் கமழ, நிலவொளி பொழியும் வானத்தில் வெண்சிறகடித்துப் பறந்துவந்த ஓர் உயரிய ஆன்மா இவ்விதமாகக் கீழ்மையின் பொறியில் சிக்கியது.
சில நாடுகளில் பெற்றோரின் செல்வமே பிள்ளைகளுக்கு ஆபத்தாக மாறுவதுண்டு. அன்னையும் தந்தையும் ஒன்றுசேர்ந்து தம் செல்வத்தைச் சேகரித்துப் பாதுகாக்க வைத்திருந்த கருவூலப் பெட்டியே அவர்களது பிள்ளைகளுக்கான சுருங்கிய இருட்சிறையாக மாறுவதுண்டு. மனிதர்கள் வழிபடும் செல்வக் கடவுளான தினாரே ஆன்மாவைத் தண்டித்து இதயத்தைச் சீரழிக்கும் சாத்தானாகவும் மாறுவதுண்டு. பெற்றோரின் செல்வத்தாலும் மணமகனின் சிற்றின்ப வேட்கையாலும் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருத்தி செல்மா கராமி. தந்தையிடம் பெருஞ்செல்வம் இல்லாது போயிருந்தால் செல்மா தன் வாழ்வை மிக்க மகிழ்ச்சியுடன் கழித்திருப்பாள்.
ஒரு வாரம் கழிந்தது. செல்மாவின் காதலே என் முழுமுதல் பொழுதுபோக்கு. இரவெல்லாம் உவக்கும் பாடல்களைப் பாடி உறங்க வைத்து, விடியலில் பூபாளம் பாடி என்னை எழுப்பிய அவை என் செவியருகே வந்து இயற்கையின் மர்மத்தை விளக்கின. அழுக்காறு அணுகாத தெய்வீகக் காதல். ஒருபோதும் மனத்தைக் காயப்படுத்தாத மேன்மையான காதல். வலுவான ஈர்ப்புவிசை கொண்ட காதல் ஆன்மாவைத் திருப்தி உணர்வில் நிலைக்கச் செய்கிறது. நேசத்திற்காகக் கடும்பசியில் இருக்கும் மனம் பசி தீர்ந்ததும் பரிசால் ஆன்மாவை நிறைக்கும். உள்ளத்தை உலுக்காமல் நம்பிக்கை அளிக்கும் அக்கனிவு, மண்ணகத்தை விண்ணகமாக்கும்; இனிமை பொங்கும் எழிற்கனவாக வாழ்வை மாற்றும்.
அந்நாட்கள் ஆவிகளைப் போலக் கடந்தன. முகிற்பொதிகளெனக் கரைந்தன. விரைவிலேயே வதைக்கும் நினைவுகளைத் தவிர என்னிடம் ஏதும் எஞ்சவில்லை. இளவேனில் அழகையும் இயற்கையின் எழிலையும் ஒருசேரக் கண்டடைந்த அவள் விழிகளில் இப்போது சூறாவளியின் சினத்தையும் கடும்பனிக்காலத்தின் உறைவையுமே என்னால் காண முடிகிறது. இன்னலைகள் என ஒலித்த பாடல்களை அறிந்த என் செவியால் ஊதற்காற்றின் ஓலத்தையும் பெரும்பாறையில் மோதும் ஆழியலைகளின் இரைச்சலையுமே கேட்க முடிகிறது. பிரபஞ்சத்தின் சால்பையும் மானுடத்தின் தொய்வற்ற வீரியத்தையும் மகிழ்வுடன் ரசித்துவந்த என் ஆன்மா ஏமாற்றத்தையும் கீழ்மையையும் பற்றிய அறிவால் நொய்வடைந்தது. அந்தக் காதல் பகல்களைவிடக் கவின் மிக்கவையும் ஏதுமில்லை; துயர்மிகுந்த கொடும் இரவுகளைவிடக் கசப்பானவையும் ஏதுமில்லை.
என்னால் தாங்க முடியாத நிலையில் வார இறுதியில் மீண்டும் – அழகு தெய்வம் கட்டியெழுப்பிய காதல் தேவனின் ஆசிபெற்ற, ஆன்மாவே வழிபடவும், நல்லிதயம் மண்டியிட்டுப் பணிவாக வேண்டவும் தகுந்த ஆலயமாம் செல்மாவின் இல்லத்திற்குச் சென்றேன். பொழிலுக்குள் சென்றதும் ஏதோவொரு விழியறியா விசை இந்த உலகில் இருந்து என்னைப் பிடுங்கி வலியும் போராட்டமும் அற்ற ஒரு இயற்கையை மீறிய வட்டத்திற்குள் அனுப்பியது. துறக்கத்தின் அழைப்பை உணர்ந்த ஒரு மாந்திரீகனைப் போல என்னை நானே பூமரங்களிடையே கண்டேன். இல்லத்தின் வாயிலை நெருங்கியபோது செல்மா மல்லிகைக் கொடியின் நிழலில் நாங்கள் சென்ற வாரம் – பேராற்றல் என்னை உவகை பொங்கும், துயரில் உழலும் வாழ்வுக்குத் தெரிவுசெய்த நாளில் – அமர்ந்திருந்த அதே விசுப்பலகையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.
நான் நெருங்கிச் சென்றபோதும் அவள் அசையவோ பேசவோ இல்லை. நான் வருவேன் என்பது உள்ளாரத் தெரிந்திருந்ததைப் போல, என்னை ஒருகணம் பார்த்துவிட்டு, அவள் தலையைத் திருப்பி மீண்டும் வானத்தைப் பார்த்தாள். ஒரு மாய மெளனத் தருணத்தைக் கடந்த பின் என்னை நோக்கித் திரும்பி என் கையைத் தன் நடுங்கும் கைகளால் ஏந்தி மெல்லிய குரலில் ‘தோழா, என்னைப் பார். பார்த்து வாசித்து – என்னால் பதில் அளிக்க முடியாதவற்றை – நீயே அறிந்துகொள். நன்கு பார் என் அன்பே… நன்கு பார் என் நண்பனே!’ என்றாள்.
அவளைக் கூர்மையாகப் பார்த்தேன். சில நாட்களுக்கு முன் புன்னகை புரியும் அதரங்களென வானம்பாடி சிறகடிப்பதைப் போலத் துடித்த அவள் விழிகள் வீங்கி, வலியாலும் துயராலும் இடுங்கி இருந்தன. சூரியக் கதிர்களை ஏந்திய விரியல்லியைப் போன்ற அவள் வதனம் மங்கி நிறமிழந்திருந்தது. அவளது இன்னிதழ்களோ இலையுதிர் காலம் விட்டுச்சென்ற ஒளிமங்கிய இரட்டை ரோஜா மடல்களாகத் தெரிந்தன. தந்தச் சிலை நிகர்த்த அவள் நீள்கழுத்து தன் தலையில் ஏற்றப்பட்ட சுமையைத் தாங்க முடியாததைப் போல முன்னோக்கிக் குனிந்த நிலையில் இருந்தது.
செல்மாவின் முகத்தில் நான் கண்ட இந்த மாற்றங்கள் யாவுமே, முன்னால் நகரும் மேகத் திரள்களால் மேலும் அழகடையும் நிலவை நினைவூட்டின. உள்ளார்ந்த துயரை வெளிப்படுத்தும் பார்வை – எத்தனை வலியையும் துன்பத்தையும் ஏற்றாலும் அதையும் மீறி – முகத்தை மேலும் அழகுறச் செய்கிறது. உள்ளிருக்கும் மர்மங்களைக் குறிப்புணர்த்தாமல் இருக்கும் முகம் அதன் வடிவொழுங்கு, சமச்சீர்மை போன்ற பண்புகளையும் கடந்து அழகு குன்றித் தெரியும். ஒளிபுகும் கண்ணாடிக் குப்பியின் ஆழத்தில் இருக்கும் தேறலின் நிறத்தை விழிகள் அறியாதபோது அதன் சுவைக்கு நம் உதடுகள் தன்னிச்சையாக இணங்காது.
செல்மா அன்று மாலை வாழ்வின் கசப்பும் இனிப்பும் கலந்த தெய்வீகப் பழந்தேறல் கோப்பையில் குவளையில் நிறைந்து வழிவதைப் போலிருந்தாள். தன் கணவனால் கழுத்தில் விலங்குப் பூட்டப்படும்வரை, தம் பெற்றோரை ஒருபோதும் நீங்காதவர்களாகவும், தாம் ஒரு தொழும்பையாகக் கணவரின் தாயிடம் துன்பங்களை அனுபவிக்கும் வரை தன் தாயின் சிறகணைப்பை ஒருபோதும் நீங்காதவளாகவும் வாழும் கீழைத்தேய பெண்களின் ஒட்டுமொத்தக் குறியீடாக அவள் தோன்றினாள்.
காலம் தீர்ந்து பிரபஞ்சம் இன்மைக்குள்ளாகும் வரை செல்மாவையே தொடர்ந்து பார்த்து, அவளது துயர்மிகு ஆன்மாவின் ஓலங்களைக் கேட்டுத் துன்புற்றிருந்தேன். என்னைச் சிமிட்டாமல் பார்த்த அவளது விழிமணிகளையும் என் கையைப் பற்றி நடுங்கியிருந்த அவளது குளிர்ந்த கரங்களையும் மட்டுமே உணரும் நிலைக்கு வந்தேன்.
செல்மாவின் மென்குரல் கேட்டு மூர்ச்சை நிலையிலிருந்து மீண்டேன். ‘துணை வா அன்பே. என் கொடிய எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்போம். என் தந்தை நான் சாகும்வரை என் துணைவராக உடனிருக்க வேண்டியவரைச் சந்திக்க அவர் இல்லம்வரை சென்றிருக்கிறார். என் இருப்பின் நிமித்தம் என்று கடவுள் தேர்ந்தெடுத்த என் தந்தை, இந்த உலகத்தார் கூடி என் எஞ்சிய வாழ்வின் அதிகாரியாக இருக்க விழைகிறவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். இளமையில் என்னை வளர்த்த என் தந்தை இனிவரும் ஆண்டுகளில் நான் உடன் வாழவேண்டிய கணவரைச் சந்திக்க, நகரத்தின் இதயத்தில் இருக்கும் இல்லத்திற்குச் சென்றிருக்கிறார். இன்றிரவு இரு குடும்பத்தாரும் திருமண நாளைத் தீர்மானிக்கிறார்கள். எத்தனை விசித்திரமான நாழிகை இது! சென்ற வாரம் இதே நாழிகையில் இந்த மல்லிகைக்கொடியின் கீழ் அமர்ந்திருந்த நம் ஆன்மாக்களை காதல் முதல்முறை தழுவியது, இல்லையா! அதே சமயம் பாதிரியாரின் மாளிகையில் விதி என் கதையின் முதல் சொல்லை எழுதியிருக்கிறது. இப்போது என் தந்தையும் எனக்கான வரனும் எங்கள் திருமணத் தேதியை முடிவுசெய்யும்போது துள்ளும் நீரோடையில் அரவம் சுற்றி வர, கடும் தாகத்துடன் ஓடையை ஏங்கிப் பறக்கும் பறவையைப் போன்ற உன் உள்ளத்தை என்னால் உணர முடிகிறது. எத்தனை அற்புதமான இரவு அது! அதன் மர்மம்தான் எத்தனை ஆழமானது!’
இந்தச் சொற்களை ரசித்துக் கேட்டபடி, விரக்தி என்னும் இருட்பேய் எங்கள் சிசுக்காதலைக் கழுத்தை நெரிப்பதையும் உணர்ந்தேன். அவளிடம் ‘இந்தப் பறவை தாகத்தால் உலர்ந்து மடியும் வரையோ, வீழ்ந்து அரவத்திற்கு இரையாகிச் சாகும் வரையோ, இப்படியே படபடக்கும் சிறகுடன் இந்த இனிய ஓடையைப் பார்த்துக்கொண்டே இருக்கும்’ என்றேன்.
அவள் பதிலளித்தாள். ‘கூடாது அன்பே. நீ வானம்பாடி! உயிருடன் இரு. பேரிருள் வரும்வரை நீ பாட வேண்டும். இளவேனிற்காலம் கடக்கும் வரை பாட வேண்டும். உலகம் முடியும்வரை பாட வேண்டும். என்றென்றும் பாட வேண்டும். உன் குரல் நெரிபடக்கூடாது. ஏனெனில் அதுவே என் இதயத்திற்கு உயிரூட்டுகிறது; உன் சிறகுகள் முறிபடக்கூடாது. ஏனெனில் என் இதயத்தை மூடியிருக்கும் மேக மூட்டத்தை அகற்றும் அசைவு அவற்றினுடையது.’
’என் அன்பே செல்மா, தாகம் அதைக் களைப்புறச் செய்யும், அச்சம் அதைக் கொல்லும்’ என்று நான் சொன்னேன்.
’திண்மப் பொருட்களின் தேறலைவிட ஆன்மாவின் தாகம் இனிப்பானது. உடலுக்குக் கிட்டும் பாதுகாப்பைவிட அச்சத்தின் தளிர் மேன்மையானது. ஆனால் நன்கு கவனி அன்பே, கூர்ந்து கவனி. எதுவுமே அறிந்திராத வருவாழ்வின் முன் நான் இன்று கையறுநிலையில் நிற்கிறேன். குருடன் கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காகத் தன் பாதையைத் தடவித் தடவி நடப்பதைப் போல நடக்கிறேன். என் தந்தையின் கடன் என்னை அடிமைச் சந்தையில் நிறுத்திவிட்டது. இந்த ஆள் என்னை வாங்கிவிட்டார். எனக்கு அவரைத் தெரியாது. நான் அவரைக் காதலிக்கவும் இல்லை. நான் அவரைக் காதலிக்கப் பழக வேண்டும். கீழ்படிய வேண்டும். சேவை செய்து அவரை மகிழ்விக்க முயல வேண்டும். மெலிந்த பெண்டிர் வலிந்த ஆடவருக்குச் செய்யும் அனைத்தையும் நான் செய்தாக வேண்டும்’ என்று பதிலளித்தாள்.
மேலும் தொடர்ந்து பேசினாள். ’ஆனால் என் அன்பே, நீயோ இன்னும் வாழ்வின் வளரிளம் பருவத்தில் இருக்கிறாய். மலர் கம்பளம் விரிக்கப்பட்ட ராஜபாட்டையில் நீ கைவீசிப் பீடுநடை போடலாம். உலகெங்கும் ஓடியாடலாம். செல்லுமிடமெல்லாம் உன் இதயச்சுடரை ஏந்தி ஒளிகூட்டலாம். நீ தளையின்றிச் சிந்தித்தும் பேசியும் செயல்புரிந்தும் வாழலாம். உன் வாழ்வின் முகப்பில் உன் பெயரைப் பொறிக்கலாம், ஏனெனில் நீ ஆண்மகன். நீயே உன் தலைவனாக வாழலாம். ஏனெனில் உன் தந்தையின் கடன் உன்னை அடிமைச் சந்தையில் நிறுத்தாது. நீ விரும்பித் தேர்ந்த பெண்ணை மணக்கலாம். அவளுக்கு உன் இல்லத்தில் இடம்தரும் முன்பே உன் இதயத்தில் இடமளித்து ஒளிவுமறைவின்றி அனைத்தையும் பேசிப் பரிமாறிக்கொள்ளலாம்.’
ஒரு நொடி நிதானித்துப் பின் மீண்டும் தொடர்ந்தாள். ‘இப்போது நம்மைப் பிரிக்கும் இவ்வாழ்வு நீ ஆண்மையின் சால்பையும் நான் பெண்மையின் சேவையையும் ஆற்றவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறதோ? தாழ்வரைகள் வானம்பாடியின் பாட்டைத் தம் ஆழத்தில் ஈர்த்து மறைத்துக்கொள்கிறதோ? வன்வளி ரோஜாவின் இதழ்களைச் செடியில் இருந்துப் பிடுங்கிப் பறக்க விடுகிறதோ? நாம் முற்றிலும் நாமாக மட்டுமிருந்து மல்லிகைப் பந்தலின் கீழ் அமர்ந்து பேசிய அன்றைய நாள் வீணோ? நாம் வெகு விரைவில் – சிறகுகள் களைப்படைவதையும் சிந்திக்காமல் – விண்மீனுக்கு அருகே பறந்துவிட்டோமா? அதனால்தான் இப்போது பாதாளத்தில் வீழ்ந்தபடி இருக்கிறோமா? அல்லது நம்மிடம் வரும்போது அரைத்துயிலில் இருந்த காதல் தேவன் பின்னர் விழித்துக்கொண்டு நம்மைத் தண்டிக்கிறானோ? அல்லது நம் ஆன்மா இரவுத் தென்றலை வன்வளியாக மாற்றி நம்மைச் சிதறடித்துத் தூசியாக வீசி மலைமடுக்களில் கொட்டுகிறதோ? எந்தக் கட்டளையையும் நாம் மீறவில்லை, பாவக்கனியை ருசிக்கவில்லை, ஆயினும் ஏன் இந்தச் சொர்க்கத்திலிருந்து துரத்தப்படுகிறோம்? நாம் ஒருபோதும் துரோகமோ கிளர்ச்சியோ செய்யாதபோதும் ஏன் நரகத்தை நோக்கித் தள்ளப்படுகிறோம்? இல்லை, இல்லை. நம்மைப் பிணைத்த அந்நொடி நூற்றாண்டுகளைவிட நெடியது. நம் ஆன்மாக்களில் வீழ்ந்த வெளிச்சம் இருளைவிடக் கொடியது. இந்தக் கொடிய சமுத்திரத்தில் நம்மைப் புயல் பிரித்தாலும் கடற்கரையை அடைந்ததும் அலைகள் நம்மை ஒன்றிணைக்கும். இது நம்மைக் கொன்றாலும் இறப்பு நம்மை ஒன்றிணைக்கும். காலத்துக்கும் பருவநிலைக்கும் ஏற்றபடி தகவமைவது பெண்மனம். அது செத்தாலும் ஒருபோதும் சிதையாது. போர்க்களமாக மாறிய வயல்வெளியே பெண்மனம். மரங்களைப் பிடுங்கினாலும் புல்வெளிகளை எரித்தாலும் குருதியால் சிவந்த மண்ணில் மண்டையோடுகளையும் எலும்புகளையும் விதைத்தும் அது ஏதும் நிகழாததைப் போல அமைதி காக்கும். இளவேனிற் காலமும் இலையுதிர் காலமும் அதற்கான இடைவெளிகள்விட்டு மீண்டும் வந்து தம் கடமையைச் செய்யும்.
’இப்போது என்னன்பே, நாம் என்ன செய்வது? நாம் எப்படிப் பிரிவது, எப்படி மீண்டும் சந்திப்பது? நம் காதலை மாலையில் வந்து சந்தித்துவிட்டு காலையில் பிரிந்துவிடும் விசித்திரமான அந்நியரைப் போல உருவகிப்பதா? இல்லை, இந்த நேசத்தை உறக்கத்தில் தோன்றி விழிப்பில் மறைந்த கனவென்று கருதுவதா?
‘இந்த வாரம் முழுவதையும் விடமேறிய நாட்கள் என்று கருதி அதை நிதானத்தால் மீற வேண்டும் என்று நினைப்பதா? நிமிர்ந்து எனக்கு உன் முகத்தைக் காட்டு அன்பே. உதடுகளைப் பிரித்து என்னிடம் பேசு. உன் குரலைக் கேட்க வேண்டும். நம் காதல் கப்பலை வன்புயல் உடைத்தபிறகும் என்னை ஞாபகத்தில் வைப்பாயா? மோன இரவுகளில் என் சிறகுகளின் மெல்லிய முணுமுணுப்புக்குச் செவி மடுப்பாயா? என் ஆன்மா உன்னைச் சுற்றி வரும் ஒலியைக் கேட்க முடிகிறதா? என் பெருமூச்சுகளுக்கு மதிப்பளிப்பாயா? மாலையின் இருளோடு வந்து காலையின் ஒளியால் கழுவப்படும் என் நிழலைக் காண முடிகிறதா? சொல் என் அன்பே! என் விழிக்கு மாயக்கதிராகவும் செவிக்கு இனிய பாடலாகவும் மனச்சிறகாகவும் இருந்ததை மீறி நீ எனக்கு என்னவாக இருக்கிறாய்? என்னவாக இருப்பாய்?’
இந்தச் சொற்களைக் கேட்ட என் இதயம் உருகியது. ‘உன்னுடனான உறவை எப்படிச் சொல்கிறாயோ அப்படியே பேணி இருப்பேன்!’ என்று பதிலளித்தேன்.
அதற்கு அவள் ‘கவிஞர்களுக்குத் துக்க சிந்தனைகளைப் போல, புவியொளியைப் பாராமல் இறந்த பச்சிளங்குழவியை அதன் அன்னை நினைப்பதைப் போல, தடாகத்தில் நீரருந்தும் பயணி அதன் அசைவின்மையை ஞாபகத்தில் வைப்பதைப்போல, மன்னிப்பு பெற்று விடுதலை நாள் வரும்முன்பே இறந்துவிட்ட கைதியின் நினைவில் மனம் உளையும் அரசனைப் போல என்னை நீ கருதி இருக்க வேண்டும்! என் பிரிவின் துயரால் தனிமையில் வாடும் என் தந்தையை அடிக்கடி வந்து சந்தித்து அவருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். விரைவில் அவரை நீங்கி நான் அந்நியமாகப் போகிறேன்’ என்று சொன்னாள்.
அவளுக்குப் பதிலளித்தேன். ’நீ சொன்ன அனைத்தையும் நிச்சயம் செய்வேன். உன் ஆன்மாவுக்கு என் ஆன்மாவைக் கவசமாக்கிப் பாதுகாப்பேன். உன் எழிலை என் இதயத்தில் இருத்திப் போற்றுவேன். உன் துக்கங்களின் கல்லறையாக என் மார்புத் தரை அளிப்பேன். வனங்கள் ஓடையை விரும்புவதைப் போல நான் உன்னை நேசிப்பேன் செல்மா. சூரியக் கதிரால் வாழும் மலர்களைப் போல உனக்குள் நான் வாழ்வேன். கிராம ஆலய மணியோசையை எதிரொலிக்கும் மலைமடுக்களைப் போல நான் உன் எண்ணங்களை எதிரொலித்தபடி இருப்பேன். அலைகளின் கதையைக் கரை அறிவதைப் போல உன் ஆன்மாவின் மொழியை நான் அறிந்தபடியே இருப்பேன். அகதிக்குத் தன் தாய்நாட்டைப் போல, பசித்தவனுக்குப் பந்தியைப் போல, அரியணையிலிருந்து நீக்கப்பட்ட அரசன் தன் ஆட்சியின் பொற்காலத்தைக் கருதுவதைப் போல, சிறைப்பட்டவன் விடுதலை அடையும் தருணத்தைப்போல உன்னை நான் ஞாபகம் வைத்திருப்பேன். உழவன் கதிர்க்கட்டுகளைக் களத்தில் இருத்தி பொலியைக் கருதுவதைப் போல, இடையன் புல்வெளியையும் இன்னோடையையும் விழைவதைப் போல உன்னை நினைத்திருப்பேன்.’
நடுங்கும் இதயத்துடன் என் சொற்களைக் கவனித்திருந்த செல்மா, ‘நாளை உண்மையானது ஆவியைப் போலவும் விழிப்புநிலையானது கனவைப் போலவும் இருக்கும். காதலன் ஆவியாகும் தன் காதலியின் பிம்பத்தைத் தழுவச் சம்மதிப்பானா? தாகம் மிகுந்தவன் கனவோடையில் நகரும் நீரை அருந்துவானா?’ என்று கேட்டாள்.
நான் அவளுக்குப் பதில் சொன்னேன்: ‘நாளையே ஊழ் உன்னை நல்ல குடும்பத்தில் கொண்டு சேர்க்கும். ஆனால் அதுவே என்னை அல்லல் நிறைந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும். நீ உன் அழகாலும் மேன்மையாலும் தன்னை மிகுந்த நல்லூழ் கொண்டவனாக மாற்றியதை எண்ணி மகிழும் ஆடவன் இல்லத்தில் இருக்க, நானோ துயரமும் வேதனையுமாக ஒரு வாழ்க்கையை வாழ்வேன். நீ வாழ்வின் கதவைத் திறந்து நுழையும்போது நான் மரணத்தின் கதவைத் திறந்திருப்பேன். நான் தனிமைச்சிறையில் அடைபடும்போது நீயோ அழகிய விருந்தோம்பலுக்கு ஆளாவாய். ஆயினும் மரணத்தின் மடுவில் நான் காதலின் நினைவுச்சின்னத்தைக் கட்டியெழுப்பி அதை வழிபடுவேன். காதலே என் முழுமையான ஆறுதல். அதை நான் தேறலாக அருந்துவேன், பொன்னுடையெனப் பூணுவேன். காலையில் என்னைத் துயிலெழுப்பி களங்களுக்கு அழைத்துச்செல்லும் காதலே, பிற்பகலில் எனக்கு நிழல்விரித்து இளைப்பாறச் செய்யும். அதில் பறவைகளின் குடம்பையைப் பகிர்ந்து நான் சூரியனின் தகிப்பில் இருந்து தப்பித்திருப்பேன். அந்தியில் அது சூரியச் சாய்வின் முன் என்னை நிலைநிறுத்தி ஒளிக்கான பிரியாவிடைப் பாடலைக் கேட்கச் செய்யும், ஒளி மங்கிய வானில் திரியும் முகில்திரள்களின் அலைவுறலைக் கண்டு களிக்கச் செய்யும். இரவில் என்னைக் காதல் முற்றிலும் தழுவிக்கொள்ளும். அப்போது நான் உறங்கி காதலின் ஆன்மாக்களும் கவிஞர்களின் மனங்களும் உலவும் தெய்வீகக் கனவில் லயித்திருப்பேன். இளவேனிற்காலத்தில் குவளையும் குமுதமும் கைகோர்த்திருக்கும், நான் காதலுடன் நடந்தபடி தாகத்திற்கு அல்லிக் கிண்ணங்களில் எஞ்சியிருக்கும் தூய குளிர்நீரைப் பருகுவேன். கோடையில் நெற்கற்றையைத் தலையணையாக்கிப் புற்தரையைப் பாயாக்கி நிலவையும் விண்மீன்களையும் வியந்தவாறு படுத்திருக்கும் எனக்கு விரிந்த கூரையாக வானம் மேலே மூடியிருக்கும்.
‘இலையுதிர்க்காலத்தில் நான் பழமுதிர்ச்சோலைக்குச் சென்று திராட்சைக்கனிகள் எப்படித் தம் பொன்னாடை களைந்து தேறலாக மாற ஆயத்தமாகின்றன என்பதை ரசிப்பேன். எங்கள் தலைக்கு மேல் நீள்தொலைவுக்கு இடம்பெயரும் பிலவங்கள் சிறகடித்து வானை நிறைப்பதைக் கண்டு மனம் மலர்வேன். கூதிர்காலத்தில் எரியூட்டி அதில் காய்ந்தபடி நெடுந்தொலைவில் இருக்கும் நாடுகளின் பழங்கதைகளைப் பாடியும் கேட்டும் இருப்பேன். என் இளமையில் காதலே என் குருவாக, நடுவயதில் வழித்துணையாக, முதுமையில் இனிமையாக இருக்கும். என் இனிய செல்மா, காதல் என் வாழ்வின் இறுதிவரை துணையிருக்கும். இறப்புக்குப் பின் கடவுளின் கரம் நம்மை மீண்டும் பிணைத்து வைக்கும்.’
இந்தச் சொற்கள் யாவும் மனஎழுச்சியுடன் கனலடுப்பில் இருந்து தாவும் தீயைப் போல எழுந்து பொழிந்து பின் சாம்பலாகிப் போயின. விழியே அதரங்களாக கண்ணீரே சொற்களாகச் செல்மா எனக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தாள்.
காதலால் சிறகுகள் அருளப்படாதவர்கள் எவரும் மாய மேகங்களில் ஏறி அந்த அற்புத உலகத்தில், அந்தத் துயரார்ந்த மகிழ் கணங்களில், செல்மாவின் ஆன்மாவும் என் ஆன்மாவும் இரண்டறத் தழுவியிருப்பதைக் கண்டுணர இயலாது. காதல் தன்னை அணுக்கமாகத் தொடர்வோர் என யாரையெல்லாம் தேர்வுசெய்யவில்லையோ அவர்களுக்கெல்லாம் காதலின் அழைப்பு கேட்காது. இந்தக் கதையே அவர்களுக்கானதல்ல. ஒருவேளை இந்தப் பக்கங்களில் இருக்கும் வரிகள் அவர்களுக்குப் புரிந்தாலும் சொற்களால் மட்டுமே உணர்த்தப்படாத, தாளில் எழுத்தாக இருக்காத, மாய நிழலாகக் கரையும் உன்னத உணர்வுகளை அவர்களால் நிச்சயம் பற்றி உணர முடியாது. காதலின் கிண்ணத்தில் இருந்து இன்தேறலை ஒருபோதும் சுவைக்காதவன் எப்படி மனிதன் என்றாவான்? ஆண் பெண் மனங்களில் பாதை பாவப்பட்டு, கனவுகளின் விதானங்கள் ஒளி வீசும் ஆலயத்தில் பக்தியுடன் கரம் கூப்பாத மனம் என்ன மனமாகும்? ஒருபோதும் வைகறை ஒரு துளி பனியைக்கூடச் சிந்தியிருக்காத இலை சூழ்ந்த முகை எப்படி மலராகும்? கடலுக்குச் செல்லும் பாதையை மறந்து அலைவுறும் சிற்றோடை எப்படித் தன் பிறப்பை அர்த்தமாக்கும்?
வானுக்குத் தலை நிமிர்த்தி செல்மா அங்கு ஒளிரும் விண்மீன் சுடர்களை உற்று நோக்கினாள். தன் கைகளை விரித்து நெட்டி முறித்தாள். அவள் விழிகள் அகன்றன. உதடுகள் மெலிதாய் நடுங்கின. அவளது வெளிறிய முகத்தில் துயரம், அவநம்பிக்கை, வேதனை, அடக்குமுறையின் வலித் தடங்களை என்னால் காண முடிந்தது. அதன் பிறகு அழுதாள். ‘கடவுளே! பெண்கள் செய்த எது உம்மைக் காயப்படுத்தியது? இத்தகைய தண்டனையை அடைவதற்கு அவள் என்ன பாவம் செய்தாள்? எந்தக் குற்றத்திற்காக அவளுக்கு இப்படி நித்திய கசையடிகள்? கடவுளே! நீர் சர்வ வல்லமை மிக்கவர், நான் நலிந்தவள், என்னை ஏன் வலியைப் பட்டறியச் செய்கிறீர்? நீர் மகோன்னதமான சர்வ வியாபி, நானோ உமது அரியணைக்கு முன் நெளிந்து அசையும் புழு. ஏன் உம் பாதங்களால் என்னை நசுக்குகிறீர்? நீரோ வெறிச் சூறாவளி, நானோ தூசித் துகள். ஏன் என்னை இந்தக் கொடிய புவியில் வீசியெறிந்தீர்? நீர் ஆற்றலின் பெருமை. நானோ கையறுநிலையில் வதையுறும் சிறுமை. என்னுடன் ஏன் சமரிடுகிறீர்? நீர் காருண்யத்தின் தேவன், நானோ சுயநலவாதி. ஏன் என்னை அழிக்கப் பார்க்கிறீர்? ஏன் பெண்னை அன்பின் சொரூபமாக உருவாக்கினீர்? அன்பின் முகமாகப் படைத்துவிட்டு பெண்களை ஏன் நாசமாக்குகிறீர்? ஏன் உமது வலக்கையால் அவளை ஆசீர்வதித்து இடக்கையால் அளற்றில் வீசி எறிகிறீர்? அவளுக்கு அதற்கான அர்த்தமும் புரிவதில்லையே ஏன்? அவள் வாயில் வாழ்க்கையின் வளியை ஊதிய நீரே, அவள் இதயத்தில் மரணத்தின் விதைகளை ஏன் தூவினீர்? அவளுக்கு உவப்பின் பாதையைச் சுட்டிவிட்டு ஏன் கசப்பின் கல்லதரில் நடக்க வைத்தீர்? அவள் நாவில் இனிய பாடல்களை ஏற்றிவிட்டு, வாயைப் பூட்டி வேதனையால் நாவை நடுங்க வைத்தீர்? உமது மாய விரல்களால் அவள் காயங்களுக்கு மருந்திட்டு விட்டு அவள் இனிமைகளைச் சுற்றி வலி தெறிக்க வைக்கிறீர்? அவள் மஞ்சத்தில் அமைதியையும் உவகையையும் அளித்துவிட்டு அருகிலேயே அச்சத்தையும் தடையையும் அரணாக எழுப்புகிறீர். அவளது நேச உணர்வை உமது விருப்பிற்கேற்ப வளர்த்துவிட்டு அவளது நேசத்தின் மீது அவமானத்தை உமிழும் நிகழ்வுகளை உருவாக்குகிறீர். அவளுக்குப் படைப்பின் மகத்துவத்தைக் காட்டிவிட்டு அழகை ரசிக்கும் அவளுக்கு வறட்சியைப் பரிசளிக்கிறீர். நீங்கள் அவளை மரணத்தின் கிண்ணத்தில் இருந்து வாழ்வின் பானத்தையும் வாழ்வின் கிண்ணத்தில் இருந்து மரணத்தின் பானத்தையும் அருந்தச் செய்கிறீர். அவளைக் கண்ணீர் சிந்த வைத்துத் தூய்மைப்படுத்துகிறீர், அக்கண்ணீராலேயே அவளைக் கழுவிக் கரைந்தோடச் செய்கிறீர். இறைவா, என் விழிகளைக் காதலால் திறந்து வைத்து, அக்காதலாலேயே என் கண்ணைக் குத்திக் குருடாக்கினீர். உங்கள் இன்னுதட்டால் எனக்கு முத்தமிட்டபடியே உம் வன்கரத்தால் ஓங்கி அறைந்தீர். என் இதயத்தில் வெள்ளை ரோஜாவை வளர்த்ததோடு மட்டுமின்றி அதைச் சுற்றி முள் அரணையும் உருவாக்கினீர். நான் மனமுவந்து விரும்பும் இளைஞனோடு என் ஆன்மாவைப் பிணைத்து என் உடலை நானறியாத ஒருவனோடு பிணைத்துவிட்டீர். ஆகவே வாய்மையையும் பொற்பையும் பாதுகாத்து நான் சாகும்வரை போராடுவதற்கு நீரே எனக்கு ஆற்றல் அளிக்க வேண்டும் இறைவா தேவரீர்! உமது விழைவை ஆற்றி முடிப்பேன். இறையே! ஆண்டவரே!’
தொடர்ந்து மெளனம் நிலவியது. வெளிறி, வலுவிழந்து கீழே பார்த்தாள். அவள் கைகள் துவண்டன. வன்வளியில் முறிந்து உலர்ந்து நசியட்டுமென விடப்பட்ட ஒரு மரக்கிளையைப் போல அவள் முகம் எனக்குத் தோன்றியது.
அவளுடைய குளிர்ந்த கரங்களை முத்தமிட்டேன். அவளுக்கு ஆறுதல் சொல்லும்போதுதான் அவளைவிட அதிக ஆறுதல் தேவைப்படும் நிலையில் நான் இருப்பதை உணர்ந்தேன். எங்கள் அவலநிலையை எண்ணியபடி என் இதயம் துடிக்க மெளனமாக இருந்தேன். நாங்கள் மேலதிகமாக எதுவும் பேசவில்லை.
கொடும்வதை என்பது சொல்லற்ற நிலை. அதனால் நாங்களும் நிலநடுக்கத்தால் பிறழ்ந்து பூமிக்கடியில் புதைந்த பளிங்குத் தூண்களைப் போல மெளனத்தில் அமர்ந்திருந்தோம். ஒருவரை ஒருவர் கவனிப்பதையும் மறந்த நிலையில் இருந்தோம். இதயம் வலுவிழந்து ஒற்றைச் சுவாசத்துக்கே உடைந்துவிடுவதைப் போலிருந்தது.
நள்ளிரவு. சுனீன் மலை மீது ஏறிய பிறைநிலாவைக் காண முடிந்தது. அது விண்மீன்களுக்கிடையே சவக்களையுடன் மங்கிய ஒளிவீசும் மெழுகுவத்திகள் சூழ இருந்த சவப்பெட்டியில் கிடப்பதைப் போலத் தோன்றியது. லெபனான் முதுமையால் கூனிய கிழவனைப் போலிருந்தது; உறக்கமின்மை நோயால் கருவளையம் சூழ்ந்த விழிகளைப் போலிருந்தது; தன் சிதிலமடைந்த மாளிகையில் கருகிச் சாம்பலான ஆசனத்தில் அமர அழைப்பதைப் போல இருளில் விடியலை எதிர்நோக்கி இருந்தது. காலநிலைக்கும் பருவங்களுக்கும் ஏற்ப மலைகளும் நதிகளும் மரங்களும் தம் தோற்றத்தை மாற்றிக்கொள்ளும். அது மனிதர்கள் தம் பட்டறிவுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்பத் தம் குணத்தை மாற்றுவதற்கு நிகரானது. பகலில் புது மணப்பெண்ணை ஒத்திருக்கும் உயர்ந்த நெலிங்க மரம் இருண்டதும் புகைப்போக்கியாக மாறும். பகல் நேரத்தில் பெரும் வலிமையுடன் தகர்க்கவியலாததாய்க் காட்சியளிக்கும் மலை இரவின்போது பாவப்பட்ட ஏழையைப் போல் பரிதாபத் தோற்றம் பெறும். பகலில் வானத்தைக் கூரையாகவும் நிலத்தை மஞ்சமாகவும் கொண்டு சலசலத்து நித்தியத் துள்ளலுடன் பாயும் காட்டாறு இரவில் குழந்தையைப் பறிகொடுத்த தாயின் ஓலத்தைக் கண்ணீர் சிந்திப் பாடும். ஒரு வாரத்துக்கு முன் நிலவு இனிமை பொழிந்து எங்கள் மனங்களைக் களிப்பால் நிரப்பியபோது கனவானைப் போல் தோற்றமளித்த லெபனான் இன்றிரவு மங்கி துயர்மிக்க அகதியாய் இருந்தது.
நாங்கள் எழுந்து ஒருவருக்கொருவர் விடையளித்தபோது எங்களிடையே காதலும் விரக்தியும் ஆவிகளைப் போல் நலிந்து நின்றன. ஒன்று சிறகுகளை விரிக்க மற்றொன்று எங்கள் குரல்வளைகளை நெரித்தது. ஒன்று கண்ணீர்விட மற்றொன்று எக்களிப்பில் நகைத்தது.
செல்மாவின் கரத்தில் நான் முத்தமிட்டபோது என்னருகே வந்த அவள் என் நெற்றியில் முத்தமிட்டாள். அப்படியே மர இருக்கையில் வலுவற்று வீழ்பவளைப் போல அமர்ந்தாள். அவள் தன் விழிகளை மூடி மென்குரலில். ’கடவுளே! என் மீது கருணைகூர்ந்து என் முறிந்த சிறகுகளைச் சீராக்கித் தாரும்’ என்று இறைஞ்சினாள்.
நான் செல்மாவைத் தோட்டத்தில் விட்டுச் செல்லும்போது பனி போர்த்திய ஏரியைப் போல என் புலன்களைக் கனத்த சோகம் மூடியிருப்பதாக உணர்ந்தேன்.
மரங்களின் எழில், நிலவொளி, ஆழ்ந்த மோனம், என்னைப் பற்றிய அனைத்தும் அழகிழந்து கொடூரமாகத் தோன்றின. பிரபஞ்சத்தின் பேரெழிலையும் அற்புதத்தையும் தெளிவாகக் காட்டிய ஒளியே அன்று தீயாக மாறி என் இதயத்தை எரித்தது. நான் கேட்டுவந்த நித்திய இசை இன்று இரைச்சலானது; அது சிங்கத்தின் கர்ஜனையைவிடவும் அச்சமூட்டுவதாக ஒலித்தது.
வேடனால் தாக்குண்ட காயப்பட்ட பறவையென என் அறையை அடைந்து படுக்கையில் விழுந்தேன். செல்மாவின் சொற்கள் மீண்டும் மீண்டும் எனக்குள் ஒலித்தன: “கடவுளே! என் மீது கருணைகூர்ந்து என் முறிந்த சிறகுகளைச் சீராக்கித் தாரும்!”
*
கலீல் கிப்ரானின் “முறிந்த சிறகுகள்” நாவலிலிருந்து ஒரு பகுதி. தமிழினி வெளியீடு.