முகூர்த்த நாள் என்பதால் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சுப காரியங்களுக்குச் செல்லும் பயணிகளால் தளும்பிக்கொண்டிருந்தன. நிலையத்தில் இருக்கும் வேப்ப மரத்தடியில் இளம்பெண்ணொருத்தி தன் எதிரில் நின்றிருந்த மனிதரிடம் கரங்களை அசைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அணைசு இல்லாத நாதஸ்வரம் போல நீண்டிருந்த ஜடை அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் துள்ளிக்கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சாமிநாதனின் கவனத்தைக் கலைப்பதைப் போல வந்த ஆரன் சத்தம் கேட்டு முகத்தைத் திருப்பினான். சிதம்பரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து மிகுந்த வேகத்துடன் நிலையத்திற்குள் நுழைந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் சில நொடிகள்கூட நிலையத்தில் நிற்காது என்பதைப் புரிந்துகொண்டு பேருந்தை நோக்கி விரைந்தான்.
படிக்கட்டுகளில் வேட்டிகளும் பேண்ட்டுகளும் ஏறும் வழியை மறித்து நின்றுகொண்டிருந்தன. சாமிநாதன் புலிப்பாய்ச்சலாக ஓடிவந்து ஏறிக்கொண்டான். அவன் அப்படி ஓடிவந்து தொற்றியதும் அதைப் பக்கக் கண்ணாடி வழியே பார்த்த ஓட்டுநர், “யோவ்.. என் வண்டியில வுழணும்னு வேண்டுதலா ஒனக்கு?” என்று கத்தினான். சாமிநாதனுக்கு அது காதில் விழவில்லை. ஆனால் அதைக் கேட்டவர்கள் எல்லோருமே சாமிநாதனை ஒருகணம் கேலி கலந்த பார்வையுடன் பார்த்தனர்.
பேருந்து நகரத் தொடங்கியதும் கூட்டத்தின் வியர்வையும் புழுதியும் கலந்து வெக்கை மணம் நாசியை நெளியச் செய்தது. ஒருவர் காலில் படாமல் இன்னொருவர் கால் வைத்தாக வேண்டிய நெரிசலில் நாதஸ்வர உறையோடு நிற்க முடியாமல் தடுமாறி நின்றுகொண்டிருந்தான்.
மேலே இருந்த கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். கம்பியில் துளை இருப்பதாகக் கற்பனை செய்து ச.ரி.க.ம.ப.த.நி.ச என விரல்களால் நாதஸ்வரத்தைப் பிடிப்பதைப் போலப் பாவித்து மனத்துக்குள் ஒரு ராகத்தை ஆலாபனை செய்யத் தொடங்கியவன், மின்சாரத்தில் கைபட்டதைப் போல வெடுக்கென இழுத்துக்கொண்டான்.
பின்னால் நின்றிருந்த பெரியவர் அவன் தோளில் மாட்டியிருந்த நாதஸ்வர உறையை ஏற்கெனவே பழகிய உரிமையோடு வாங்கி லக்கேஜ் வைக்குமிடத்தில் தூக்கி வைத்தார். “இறங்கும்போது எடுத்துக்கலாம் செரமப் படாதீங்க” என்றார்.
’எனது குடும்பத்தின் அத்தனை வளமைக்கும் பெருமைக்கும் காரணமாக இருந்த நாதஸ்வரம் தன்னைவிட்டு நிரந்தரமாகப் பிரியப் போவதை இப்போது ஒரு சிறிய பிரிவின் மூலம் ஒத்திகை பார்க்கிறேன்..’
’இந்தப் பரம்பரையில் நாதஸ்வரத்தை விற்ற ஒரே ஆள் நான்தான் என்ற அவப்பெயர் வருங்காலத்தில் கிடைக்கக்கூடும். ஆனால் அவப்பெயரை விடவும் பைத்தியமாகிச் சாகாமல் இருப்பது முக்கியம்’ என்று நினைத்துக்கொண்டான்.
நடத்துநர் டிக்கெட் கொடுத்துவிட்டுக் கடந்தார். இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு முன்னே இருந்த சீட்டிலிருந்து ஒரு குடும்பம் இறங்கியதும் அவனுக்கு உட்கார இடம் கிடைத்தது.
மேலே வைக்கப்பட்டிருந்த நாதஸ்வர உறையைப் பார்க்கும்போது இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்குவது மாதிரி நடிக்கும் குழந்தையைப் போலிருந்தது. புன்னகை செய்துகொண்டான். விடுமுறைக்கு வந்த குழந்தை விழித்துக்கொண்டிருக்கும்போது ஊருக்குப் போக மறுக்கும் என்பதால் உறங்கும்போது அழைத்துச் செல்லப்படுகிறது என்றொரு எண்ணமும் வந்து அவனைத் துணுக்குறச் செய்தது.
நாதஸ்வர உறையை உடனே எடுக்க முடியாது போலிருந்தது. இரண்டு நிறுத்தங்கள் கடந்த பிறகு எடுத்து மடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அருகில் இருந்தவர் முக்கால் பங்கு இருக்கையில் நிரம்பியிருந்தார், சாமிநாதன் ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்துவிடுவது போல நெளிந்தவன் எதிர் சீட்டுக் கம்பியைப் பிடித்துக்கொண்டான். நின்றுகொண்டிருக்கும்போது இருந்ததைவிட உட்கார்ந்தபோது மேலும் இருமடங்கு கூட்டம் அதிகமாய்த் தெரிகிறது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். குளிர்ந்த காற்று தலையைத் தடவிவிட்டது. முடிகள் நிமிர்ந்து காற்றுக்குச் சலாம் வைப்பதைப் போலப் பறந்தன. களைப்பில் அப்படியே உறங்கிப் போனான்.
அவனது அப்பாவும் தாத்தாவும் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள். சாமிநாதனுக்கு முன்பு ஆறு குழந்தைகள் வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்து இறந்துபோயின. ஏழாவதாகச் சாமிநாதன் பிறந்தபோது அவனது தந்தையாருக்கு ஐம்பத்தைந்து வயது ஆகியிருந்தது.
கண்ணில் எழுத்து மறைவதற்குள் தான் கற்றறிந்த கலையைப் புதல்வனுக்குக் கற்பிக்க நினைத்தவர், முதலில் அவனுக்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். சரளி வரிசையை அவர் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு அதிகாலையில் இடது மார்பைப் பிடித்துக்கொண்டு தரையில் சாய்ந்தவர் பின் எழவில்லை.
தந்தையின் மரணத்திற்குப் பிறகு சாமிநாதன் நாதஸ்வரம் பயில்வதற்காகத் தலச்சங்காட்டில் இருந்த வித்துவான் ஒருவரிடம் அனுப்பி வைக்கப்பட்டான். அவர் ஒருவகையில் சாமிநாதனின் அப்பா வழிச் சொந்தம் என்பதால் சாமிநாதனுக்குத் தனிக்கவனம் எடுத்துக் கற்றுக்கொடுக்க நினைத்தார். ஆனால் சாமிநாதனுக்கோ கற்றுக்கொள்வது மொழி தெரியாத ஊரில் வழி தேடுவதைப் போல இருந்தது.
தலச்சங்காட்டார் நாதஸ்வரம் பயிற்றுவிப்பதில் நிபுணராக இருந்தார். அவரது மாணவர்கள் உலகம் முழுவதிலும் விரவியிருந்தனர். ’அவரிடம் இருந்தாலே பிள்ளைகள் மேதைகளாகி விடுவர், அத்தனை கைராசிக்காரர்’ என்ற பெயரும் அவருக்கிருந்தது.
தலச்சங்காட்டார் சரளியே ஆயிரக்கணக்கில் உண்டு பண்ணி வைத்திருந்தார். கற்றுக்கொள்ளும் மாணவர்களின் கைப்பக்குவத்திற்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுப்பார். மற்ற பிள்ளைகள் அடியடியாக உள்வாங்கி மனனம் செய்துவிடுவார்கள். சாமிநாதனிடம் வாத்தியார் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லச் சொல்லிக் கேட்கும்போது அவனது மனத்தை ராட்சத கறுப்புத் திரையொன்று மூடிக்கொள்ளும். அந்தச் சமயங்களில் அவனது வியர்த்த உள்ளங்கையில் சிவப்புக் கோடாக பழுக்கும் அளவிற்கு வாத்தியாரின் பிரம்பு தினமும் ‘மடேர்..மடேரென்று’ விழுந்துகொண்டே இருந்தது.
அடி உதையும் வசவுச்சொற்களும் ஒருவருக்கு எதையும் கற்றுக் கொடுத்துவிடாது. மாறாக ஆர்வமும் உள்ளுணர்வுமே எதையும் வளர்த்தெடுக்கும் என்பதை நன்கு உணர்ந்த தலச்சங்காட்டார், அவனது அம்மாவை வரவழைத்து, “இந்தப் பையனுக்கு இசை வராது. இவனுக்கு நாதஸ்வரம் கத்துக் கொடுத்தா நான் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான். வேற வேலைக்குச் சேர்த்துவிடுங்க..” என்று சொன்னார். தாயாருக்கு அது தாங்க முடியாத துக்கமாக இருந்தது.
கணிதப் பாடத்தைப் புரிந்துகொள்ள முடிந்தால், ஆங்கில வார்த்தைகளை உள்வாங்க முடிந்தால், பள்ளிக்கூடத்துக்குத் திரும்பவும் போகிறேன் என்று சொல்லலாம். ஆனால் பள்ளிக்கூடத்தை நினைத்தாலே அவனது உடல் விதிர்த்துவிடுகிறது.
இந்த நிலையில் ஊருக்கு வந்ததும் அம்மாவிடம் எனக்கு இது வேண்டாம், வேண்டும் எனத் தீர்மானமாக எதையுமே சொல்ல இயலாமல் அம்மாவே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று காத்திருந்தான். பிள்ளை இப்படியே இருந்தால் குட்டிச்சுவரின் மேல் உறங்கும் கோழியைப் போல் ஆகிவிடுவானோ என்று பயந்தாள் தாய்.
அவனது அப்பாவின் நண்பர் ஒருவரைப் பார்த்து அவனது நிலையை எடுத்துச்சொல்லி உதவி கேட்டாள். அவர் இரக்கப்பட்டு, அந்த ஊரிலேயே பெரிய வித்துவானான வைத்தியநாத சுவாமியிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார்.
தனியாகப் பாடம் என்று எதுவும் கிடையாது. அவர் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும், கச்சேரிக்குச் சென்று அவர் வாசிப்பதை ஆழ்ந்து கவனிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். இவனது நடவடிக்கை பிடித்துப்போனால் ஒருவேளை அவரே இவனை அமர்த்திப் பல நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்கக்கூடும்.’ இதுதான் சேர்த்துவிட்டவர் சாமிநாதன் அம்மாவிடம் சொன்னது. அதற்கு அவள் ”பெரிய புண்ணியம்” என்று சொல்லி அவர் காலில் விழுந்தாள்.
வைத்திக்கு முன் எழுந்து அவர் கண்விழிக்கும்போது வாய் கொப்பளிக்கச் சொம்பில் தண்ணீர் வைத்து, அவர் குளித்து முடித்து வருவதற்குள் காரைத் துடைத்துச் சுத்தம் செய்து, வாசல் படிக்கட்டில் இறங்கியதும் அணிந்துகொள்ள காலணிகளை எடுத்து வைத்து, பிளாஸ்க்கில் காபி ஊற்றி, சுதிப்பெட்டியைப் பின்சீட்டில் வைத்து, வாத்தியத்தை உறையில் போட்டுத் தயாராக வைத்து, நெற்றியில் விபூதி அணிந்து பக்திச் சிரத்தையுடன் காத்திருப்பான்.
பட்டு வேட்டி, பட்டு ஜிப்பா, கையிலும் கழுத்திலுமாகத் தங்கச் சங்கிலிகள், நெற்றியில் திருநாகேஸ்வரம் குங்குமம், காதுகளில் சிவப்புக்கல் கடுக்கன், அறையிலிருந்து வெளிப்படும்போதே புறப்படும் ஜவ்வாது மணம், வாய் நிறையத் தாம்பூலம், உப்பிய கன்னத்தில் வெளிநாட்டுப் பவுடர் என வீட்டினுள் இருந்து கமகமவென வெளிப்படுவார். அவனது ஏற்பாட்டில் அவருக்கிருக்கும் திருப்தியின் அளவிற்குப் புன்னகை செய்வார்.
வைத்தியநாதசுவாமி கச்சேரிக்குத் தகுந்தபடி ராகங்களை வாசிப்பார். கோவில் உற்சவங்களுக்கு என்றால் கீர்த்தனைகளையும் ராகங்களையும் முறையான ஆலாபனையுடன் வாசிப்பார். திருமண விழா எனில் துரிதகதி கீர்த்தனைகளையும் சில திரைப்படப் பாடல்களையும் வாசிப்பார். ரசிகர்களுக்கு ஏற்ற முறையில் வாசிப்பதால் சுற்றுவட்டாரங்களில் அவர் நன்கு அறியப்பட்ட நாதஸ்வரக்காரராக இருந்தார்.
சாமிநாதனின் கண்களுக்கு மனத்தோடு தொடர்பிருந்ததே தவிர அவன் காதுகளுக்கும் மனத்துக்கும் வெகு தூரமாக இருந்தது.
கோவில் கச்சேரிகளில் வாசித்துக்கொண்டிருக்கும்போது சாமிநாதன் பலமுறை தாளத்தைத் தவறாகப் போட்டுவிடுவான். ஒருமுறை தேவகாந்தாரி ராகத்தில் வைத்தியின் நாதஸ்வரம் கறுப்பு மெழுகுவத்தியாய் உருகிக்கொண்டிருந்தது. எதிரில் அமர்ந்திருந்த எல்லோரும் அதில் திளைத்துக்கொண்டிருந்தார்கள், தவில்காரர்கூடப் பேருக்குத் தட்டிக்கொண்டிருந்தாரே தவிர நாதஸ்வரத்துக்கு மேலே ஒலியெழுப்பவில்லை. ஆலாபனையை முடித்துவிட்டுப் பல்லவிக்கு வரும்போது மொத்தக் கூட்டமும் நிமிர்ந்து அமர்ந்தது. அப்போது கண்ட கதி, திரிபுட தாளத்தில் அவர் வாசித்துக்கொண்டிருக்க, இவனது கைகளோ ஆதி தாளத்திலேயே தட்டிக்கொண்டிருந்தன. முன் வரிசையிலிருந்த சங்கீத நுட்பங்களைத் தெளிவுற அறிந்தவரான விழாக் கமிட்டி தலைவரின் முகம் கோணியது. அதை வைத்தியும் பார்த்துவிட்டார். சீவாளி மாற்றிவிட்டுத் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டே யாரும் அறியாமல் தவில்காரரின் குச்சியை எடுத்து சாமிநாதனை ஓங்கி இடித்தார். விலாவைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். இது எல்லாமே மின்னல் வேகத்தில் கச்சேரிக்கு இடையே நடந்தது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் தவிலுக்குத் தனி ஆவர்த்தன நேரம் கொடுத்துவிட்டுப் பின்னே சாமிநாதனிடம் கையை நீட்டினார் வைத்தி. சாமிநாதன் பயபக்தியுடன் வெற்றிலைச் செல்லத்தைப் பிரித்துக் கொடுத்தான். வெற்றிலைக் காம்பை நீக்கிவிட்டுச் சுண்ணாம்பைத் தடவியவருக்கு விரல்களில் சுண்ணாம்பு வித்தியாசமாகப் பொருபொருப்பாக இருக்க, சாமிநாதனை முறைத்துப் பார்த்து, “வாசன சுண்ணாம்பு எங்கேடா தண்ட தீவட்டி” என்று உள்ளே கடுமையும் வெளியே புன்னகையுமாகத் தொண்டைக்குள்ளிருந்து மெதுவாகக் கேட்டார். சாமிநாதனுக்குச் சிறுநீர் பிரிந்துவிடுவதைப் போலப் பயம் வந்துவிட்டது. “அண்ணே வூட்லயே வச்சிட்டு..” என்று அவன் சொல்லிமுடிப்பதற்கு முன் துண்டால் முகத்தைத் துடைப்பதைப் போல உள்ளே வெற்றிலைப் பெட்டியால் அவன் முழங்கையில் ஓங்கி ஒரு இடி கொடுத்தார். சாமிநாதனுக்கு நீர் தளும்பி கண்ணெரிச்சல் வந்துவிட்டது.
அன்றைக்குக் கச்சேரி முடிந்து காரில் வரும்போது பொறி கலங்க வைக்கும் அறை ஒன்றும் சில தஞ்சாவூர் கெட்ட வார்த்தைகளும் கிடைத்தன.
குருவிடம் கிடைத்த அனுபவங்களும் வயதின் ஏற்றமும் அவனை உந்தித் தள்ள, அவ்வப்போது தன்னுணர்வு பெற்றவனாக வீட்டிலிருக்கும் நாதஸ்வரத்தை எடுத்து அன்று குருநாதர் வாசித்த ராகத்தை முயன்று பார்ப்பான். அக்கம்பக்கத்தினரில் பெரும்பாலானோர் வாத்தியக்காரர்கள்தான் என்பதால் அவன் வாசிக்க ஆரம்பித்ததுமே கேட்பவரின் முகம் நெளியும். அந்த ஒலியைச் சகிக்க முடியாமல் காதுகளைப் பொத்திக் கொள்வார்கள். ”அப்பன் பேர கொல பண்றதுக்காகவே நாதஸ்வரத்த கைல எடுத்துருக்கான்” என அவன் தெருவில் நடந்து போகும்போது பகிரங்கமாக திட்டுவார்கள்.
கீர்த்தனைகளும் ராகங்களும் மனத்தில் இருந்தாலும் கைக்கு வரவில்லையே என்ற ஏக்கம் குளவியாகி மனத்தைக் கொட்டிக்கொண்டே இருந்தது. அப்போதெல்லாம், ”அய்யோ நான் ஏன் பொறந்தேனோ.. எனக்கு எதுவுமே சரியா வரமாட்டுதே” என்று உள்ளுக்குள் புழுங்கி அழுவான்.
பல சமயங்களில் நாதஸ்வரத்தை வாசிக்கக் கையில் எடுத்தாலே மணிக்கட்டுகள் நடுங்க ஆரம்பித்தன. கரங்கள் அசைவே கொடுக்காமல் மரத்துப் போவதைப் போல உணர்ந்தான். சட்ஜத்திலிருந்து ரிஷபத்துக்கு விரல்கள் நகராமல் துளைகளின் மீது ஒன்றோடொன்று இணைத்துக் கட்டப்பட்டதைப் போலக் கிடந்தன. அவனுக்கு ஒரு வரியைச் சுதியோடு வாசிப்பதே ஓடும் குதிரையின் மேல் நின்றுகொண்டு சவாரி செய்வதைப்போல இருந்தது.
தெருக்காரர்களின் நகைப்புக்குப் பயந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த காளியம்மன் கோவிலுக்குச் சென்று அதிகாலையிலேயே பயிற்சி செய்ய ஆரம்பித்தான். விடிவதற்கு முன் சென்று வாசிக்கத் தொடங்கி ஊர் துயில் கலையும் முன் வீட்டிற்கு வந்தான்.
ஓரளவிற்குத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குருநாதரிடம் ராகங்கள் குறித்தும் நுணுக்கங்கள் குறித்தும் கேள்வி கேட்கத் தொடங்கினான். வைத்திக்கு அவன் கேட்பது ஆச்சரியமாக இருப்பினும் அவனது கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதில் சொல்வார்.
சில நாட்களில் அவரே அவன் கையில் வாத்தியத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். நடுங்கும் கரங்களில் அனலாய் உருளும் நாதஸ்வரத்தை விரல்களே மனமாகி அழுந்தப் பற்றிக்கொண்டு வாசிப்பான். பிழையாக அவன் வாசித்த இடங்களை வைத்தி சுட்டிக்காட்டித் திரும்ப வாசிக்கச் செய்வார். நாளடைவில் ஓரளவிற்குச் சமாளித்து வாசிக்க முடியும் என்ற நிலைக்கு வந்திருந்தான் சாமிநாதன்.
ஐப்பசி மாத உற்சவத்தில் சுவாமி ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. இரண்டாவது நாதஸ்வரமாகச் சாமிநாதனையே வாசிக்கச் சொல்லியிருந்தார். அன்றைக்கு அச்சமும் ஆனந்தமும் சாமிநாதனை ஒருங்கே அணைத்துக்கொண்டிருந்தன. தெற்கு வீதியில் ஊர்வலம் நுழைந்தது. முன்னாள் கலெக்டரும் இன்னாள் கோவில் காரியதரிசியுமான முக்கியஸ்தரின் வீட்டின் முன் தீபாராதனைக்காகச் சுவாமி வாகனம் நின்றது. தவில்காரர் கோர்வையை வாசித்துக்கொண்டிருந்தார். ஆபேரி ராகத்தில் நகுமோமு வாசிக்கலாம் எனச் சாமிநாதனிடம் சொல்லி வைத்திருந்தார் வைத்தி. தவில்காரர் நடை வாசித்து நாதஸ்வரத்திற்கு எடுத்துக் கொடுக்கும் இடத்தில் வைத்தி நாதஸ்வரத்தை வாயில் வைத்து வாசிக்க எத்தனிக்கும்போதே சாமி அவரை முந்திக்கொண்டு வாசிக்கத் தொடங்கினான்.
வைத்தி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு உடன் வாசித்தார். ஒற்றையடிப் பாதையில் ஓட்டத் தெரியாதவன் அருகில் சைக்கிள் ஓட்டுவதைப் போல மிகக் கவனமாக அவர் சரிசெய்து வாசித்துக்கொண்டிருந்தார். திடீரெனச் சாமியின் நாதஸ்வரச் சுதி தாறுமாறாக விலகியோடி அடிபட்ட வலி தாங்க முடியாத மயிலின் அகவலாக அபசுரமாகக் கேட்கத் தொடங்கியது. காரியதரிசி தன்னை மீறிச் சிரிக்க, ஒற்றை வெடியின் தீப்பொறிச் சரவெடியைப் பற்ற வைத்ததைப் போலச் சுற்றியிருந்த கூட்டமும் அதிரச் சிரித்தது. சாமிநாதன் மேலும் கைகள் நடுங்கி, பூனை அழுவதைப் போல, விட்டுவிட்டு வாசித்துக்கொண்டிருந்தான். வைத்தியநாதசாமிக்கு உடலிலிருந்து மொத்தக் குருதியும் மண்டைக்கு ஏறியது. தன் கையை ஓங்கி அவன் கையிலிருந்த வாத்தியத்தை வெடுக்கெனத் தட்டிவிட்டார். சீவாளி மோவாயில் இடிக்க வலி தாங்காமல் முகத்தைப் பிடித்தான் சாமிநாதன். நாதஸ்வரம் பொத்தெனக் கீழே விழுந்தது. வெறி வந்தவரைப் போல அவனைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். கூட்டத்தினர் அவர்களுக்கிடையே புகுந்து விலக்கிவிட்டனர். வைத்திக்கு மூச்சு வாங்கியது. அவரது மூச்சுச் சத்தத்தைவிட வேகமாகச் சாமிநாதனின் மூச்சுச் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு மேலும் கொதிப்படைந்தவராக ஓடிச்சென்று அவனை எட்டி உதைத்தார் வைத்தி. “நீயெல்லாம் உண்மையிலயே ஒரு வாத்தியக்காரனுக்குப் பொறந்தவனாடா.. கம்னாட்டி பயலே” என்று ஆவேசமாக அவனை நோக்கி ஓடினார். அவருக்கு அவன் அபஸ்வரமாக வாசித்ததைக் காட்டிலும் தன் கண்ணசைவுக்கு முன்னரே வாசித்துவிட்டானே என்ற கோபம்தான் அதிகமாக இருந்தது.
கூட்டத்தினர் வந்து விலக்கப் பார்த்தும் வைத்திக்கு ஆவேசம் குறையவில்லை. இன்னும் இரண்டு உதைகள் விட்ட பிறகே அவர் கால்கள் நிலத்தில் ஊன்றின. அவன் தடுமாறி விழப்போன போது அவனது வேட்டி அவிழ்ந்து கீழே சரிந்தது. கூட்டத்திலிருந்த ஒருவர் அதை அவன் இடுப்பில் சுற்றிக் கட்டிவிட்டார். சாமிநாதனுக்கு உடம்பிலிருந்த மொத்த ரத்தமும் சுண்டியதைப் போல ஆகிவிட்டது. சுற்றியுள்ள எல்லோர் கண்களிலும் அவன் காயத்துடனும் அவமானத்துடனும் நிற்க முடியாமல் நின்றுகொண்டிருந்தான். ஏதோ நினைவுக்கு வர கீழே கிடந்த நாதஸ்வரத்தைப் பார்த்தான். மண் ஒட்டிக் கீழே கிடந்த நாதஸ்வரத்தைப் பார்க்கும்போது தன் அப்பாவை யாரோ அடித்துத் தெருவில் போட்டதைப் போலத் தோன்றியது. பதறி ஓடிப்போய் நாதஸ்வரத்தைக் கையில் எடுத்துக்கொண்டான்.
நெஞ்சில் நாதஸ்வரத்தை அணைத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து ஓடத் தொடங்கினான். நிழலும் துணையற்ற இருட்டை அடைந்தபோது அவமானத்தின் கைகள் அதன் மீதிருந்த பிடியைச் சற்று தளர்த்தின.
அன்றைக்கு வீட்டுக்கு வந்ததும் முடிவெடுத்தவன்தான். அதிலிருந்து நாதஸ்வரத்தைத் தொடுவதே இல்லை. அம்மாவிடம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, “எனக்கு நாதஸ்வரம் வாசிக்க வரல. நான் வேற எதாவது வேலைக்குப் போறன்ம்மா” என்று சொன்னான். தாயாரால் மகனைத் தடுக்க முடியவில்லை.
சட்டைநாதர் கோவிலுக்கு அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்கு சப்ளையர் வேலைக்குப் போனான். சில நாட்கள் எல்லாவற்றையும் மறந்து வேலைக்குப் போவதும் வருவதுமாக இருந்தான்.
ஒருநாள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும்போது கோவிலிலிருந்து நாதஸ்வர ஓசையும் தவிலும் அவனுக்குக் கேட்டது. உச்சி முடியை வெடுக்கெனப் பிடித்திழுத்ததைப் போல அதிர்ந்து நின்றான். மின் விசிறிக்குக் கீழே நின்றிருந்தாலும் உடல் வியர்த்து நடுங்கியது. உணவு மேஜைகளுக்கு நடுவே சாம்பார் வாளியுடன் பொத்தென மயங்கி விழுந்தான்.
மறுநாளிலிருந்து கோவிலைக் கடந்து கடைக்கு நுழையும்போதெல்லாம் ஒருவித நடுக்கம் அவனுக்குள் புகுந்துகொண்டது.
மிரட்சியான பார்வையும் அச்சம் படர்ந்த பேச்சுமாக இருந்தவனைப் பார்த்த அம்மா முனீஸ்வரன் கோவிலில் தாயத்து மந்திரித்துக் கையில் கட்டிவிட்டாள்.
நாளாக நாளாக, கோவிலில் இருந்து கேட்கும் வாத்தியம் இவன் காதுகளுக்கு மிகவும் அருகில் கேட்க ஆரம்பித்தது. அந்தச் சமயங்களில் அந்தச் சத்தத்தைக் கேட்காமல் இருப்பதற்காகச் சமையற்கட்டில் போய் நின்று சமையல்காரரிடம் ஏதேனும் வலியப் பேச்சுக் கொடுப்பான். சமையற்கட்டினுள் பாத்திரங்களின் உருட்டல் சத்தங்களையும் குழம்பு கொதிக்கும் ஒலியையும் தவிர வெளியிலிருந்து வரும் வேறெந்தச் சத்தமும் கேட்காது.
வீட்டிற்கு வந்தால் நடுக்கூடத்தில் மூலையில் துணி போட்டு நிறுத்தி வைத்திருக்கும் நாதஸ்வரம் இருக்கும். பூசைகள் செய்யாது நெடுநாட்கள் துணியால் மூடி வைத்திருக்கும் தெய்வச் சிலையைப் போலத் தோன்றும்.
”ஏன்டா தலமுறை தலமுறையா ராகங்களும், கீர்த்தனைகளுமா பொழிஞ்ச வாத்தியத்த இப்புடி மூலைல சாத்தி வெச்சுருக்கியேடா பாவி?” என்று அப்பாவின் குரலில் கேள்வி கேட்கும்.
இதனாலேயே அது வைக்கப்பட்டிருக்கும் திசையைத் திரும்பியே பார்க்க மாட்டான்.
சாலையில் நடக்கும்போது சிறுகுழந்தைகள் ஊதாங்குழலைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்தாலே அடி வயிற்றில் குளுமையாக எதுவோ மேலெழுந்து உடல் நடுக்கம் உண்டாகிவிடும்.
ஏதேனும் வேலையில் ஈடுபட்டால் நாதஸ்வர ஒலி கேட்பதில்லை. லேசான ஓய்வில் உடம்பு இருந்தால் மனசில் நாதஸ்வர ஒலி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கும். ஒருகட்டத்தில் ஓங்கி வளர்ந்து வளர்ந்து தானே நாதஸ்வரமாக மாறிவிட்டதாய்த் தோன்றும்.
அவன் பிறந்தபோது அந்த சந்தோஷத்தைக் கொண்டாட அவனது அப்பா தோடி ராகம் வாசித்ததாக அம்மா சொல்வாள். இப்போதெல்லாம் அவன் தூங்கும்போது தோடி ராகத்தில் நாதஸ்வரம் அழுகைச் சத்தம் போலக் கேட்க ஆரம்பித்திருந்தது. திடீரெனத் தூக்கம் கலைந்து எழுந்து பார்க்கும்போது நாதஸ்வரம் மூலையில் இருந்தது. சட்டென்று அதைப் பழைய சாமான்கள் வைக்கும் அறைக்குள் மாற்றி வைத்தான். மறுநாளும் அந்த அறைக்குள்ளிருந்து சத்தம் வர, தூக்கம் இல்லாமல் வெறிக்க வெறிக்க அமர்ந்திருந்தான். காதுகளில் பஞ்சை வைத்துக்கொண்டு தூங்கினாலும் நாதஸ்வர ஒலி கேட்டபடியேதான் இருந்தது. காதுகளை அடைத்துக்கொண்டால் மனத்தில் கேட்பதையெல்லாம் தடுக்க முடியுமா என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவனுக்குள் தோன்றிக்கொண்டே இருந்தன. ஓசை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருக்க, வெளியில் காணும் எல்லாவற்றிலிருந்தும் அவன் விலகி ஓடிக்கொண்டிருந்தான்.
நாதஸ்வர ஒலி தினம் தினம் அவன் மனத்தைத் தொந்திரவு செய்துகொண்டேயிருக்க, தூக்கமும் உணவும் இல்லாமல் தவித்தான். உடலும் மனதும் சோர்வாகி நிம்மதியிழந்து துயருற்றான். அதற்குத் தீர்வுகாண கும்பகோணத்தில் தனக்குத் தெரிந்த ஆளிடம் சொல்லி நாதஸ்வரத்தை விற்றுவிடுவது என முடிவுசெய்தான். அம்மாவுக்குத் தெரிந்தால் குடும்பத்திற்குக் குலதெய்வமாக இருக்கும் வாத்தியத்தை விற்பதற்காக மிகுந்த வருத்தமடைவாள். தளர்ந்த வயதில் வீட்டைவிட்டே சென்றாலும் சென்றுவிடுவாள். அதனால் அம்மாவிடம் தனக்குத் தெரிந்த ஒருவர் துணை நாதஸ்வரமாகக் கும்பகோணத்திற்குக் கச்சேரிக்கு வரச்சொன்னதாகப் பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். திரும்பி வரும்போது நாதஸ்வரத்தைக் குறித்து அம்மா கேட்டால் தொலைந்துவிட்டது அல்லது திருடு போய்விட்டது என்று சொல்லவும் மனத்திற்குள் திட்டமிட்டான்.
“கும்பகோணம்.. கும்பகோணம்லாம் எறங்கு.” பெரிய பாத்திரத்திற்குள்ளிருந்து யாரோ பேசுவது போலிருந்தது. கண்ணைக் கசக்கினான். பக்கத்தில் இருந்தவர் இவனை இடித்தபடியே இறங்கினார். ஜன்னல் வழியே பார்க்கும்போது எல்லோரும் இறங்கிக்கொண்டிருந்தார்கள். தலையை உதறிச் சட்டென்று எழுந்து நாதஸ்வரம் வைத்த இடத்தில் பார்த்தான். இரண்டு இரும்பு போல்ட்டுகள் மட்டும் கிடந்தன. நாதஸ்வரத்தைக் காணவில்லை.
“ஐயோ.. நாதசொரம்”. நாதஸ்வரத்தை வாங்கி வைத்த பெரியவரின் முகத்தை யோசனை செய்து பார்த்தான். கண்ணாடி, மாந்தளிர் நிற மேல்சட்டை எல்லாம் நினைவுக்கு வந்தும் அவர் முகம் நினைவுக்கு வரவில்லை. மாறாக, அம்மாவின் முகமே நினைவுக்கு வந்தது. ஒரு பொய் சொல்ல நினைத்து அதுவே உண்மையாகிவிட்டதே! “அவையம்பா என்ன மன்னிச்சிடு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டான்.
அது சாமிநாதனின் அப்பாவுக்கு நாதஸ்வரத்தில் ஆர்வம் துளிர்த்தபோது அவனது தாத்தா நரசிங்கம்பேட்டை ரங்கநாதன் ஆசாரியிடம் செய்து வாங்கிவந்த நாதஸ்வரம். அப்பா உயிரோடு இருந்தவரை அதைத் தொடாத நாளில்லை. அந்த வாத்தியத்தின் ஒவ்வொரு துளைகளைச் சுற்றியும் படிந்திருக்கும் அப்பாவின் விரல் ரேகைகளுக்கு ராகங்கள் ‘இதோ வந்தேன் ராஜாவே’ என்று பணிந்து வரும்.
ஓட்டுநரும் நடத்துநரும் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். விசாரிக்கச் சென்றவன் சட்டெனத் தயங்கிப் பின்வாங்கினான். “நீ என்னடா என்ன விக்குறது? நானே ஒன்ன விட்டுப்போறேன்னு போய்டுச்சோ?” என்று வாய்க்குள் முனகிக்கொண்டே பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தான். சட்டென உடல் எடையற்றதாக ஆனதைப் போல விடுதலை உணர்வு பெற்றவனாக நடந்தான். அப்பாவும் தாத்தாவும் இன்று கனவில் வரலாம். மனசு ஓயாமல் பிராண்டியது. அதனிடமிருந்து தப்பிக்க நாகேஸ்வரன் கோவிலுக்குள் நுழைய எத்தனித்தவன், அங்கிருந்து தவில் சத்தம் ஒலிக்கத் தொடங்க, சடேரென மனம் மாறிச் சில தப்படிகள் தள்ளியிருந்த ஒரு திரையரங்கத்திற்குள் நுழைந்தான். படம் தொடங்கி ஐந்து நிமிடம் ஆகியிருந்தது. இருட்டில் துழாவியபடியே முன் வரிசையில் இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தான். அருகில் இருந்தவனிடமிருந்து மது வீச்சம் அடித்தது.
திரையில் நாயகனும் நாயகியும் பேசிக்கொண்டிருந்தார்கள். உடனே அவர்களின் திருமணக் காட்சி வந்தது. பின்னணியில் நாதஸ்வரம் தவில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் சாமிநாதனுக்குக் கால் விரல்களுக்கிடையில் ஈரப் பஞ்சால் நனைத்ததைப் போலிருந்தது. உடலில் சட்டென்று ஒருவிதமான குளிரை உணர்ந்தவனாய் கால்களைத் தூக்கி இருக்கையின் மேலே வைத்துக்கொண்டான். பாடல் இடையில் இரண்டு மூன்று பேர் திரையரங்கக் கதவைத் திறந்து வெளியே போகும்போது சரிந்து கிடந்த வெள்ளை நிறத் தூண் நிமிர்ந்ததைப் போல வெளிச்சம் வந்தது. சாமிநாதன் எழுந்து திரையரங்கை விட்டு வெளியே வந்தான்.
தெருவிற்குள் இறங்கி நடந்தான். ஒரு நீண்ட வேலிப்படல் முழுவதும் செம்பருத்திச் செடிகள் கழுத்தை வளைத்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. நாதஸ்வரத்தின் அடிப்பாகமான அணைசுவைப் போலிருந்தன செம்பருத்திப் பூக்களின் இதழ்கள். நீண்ட வரிசையில் மல்லாரி வாசிக்க நிற்கும் நாதஸ்வரக்காரர்களைப் போலத் தெரிந்தன செம்பருத்திகள். முதன்முறையாக மலர்களைப் பார்க்கும் குழந்தையின் பிரமிப்பு அவன் கண்களில் துலங்கியது. இதழ்களிலிருந்து வெளிவரும் மகரந்தங்கள் ராகங்களாகத் தோன்றின. மெல்ல அடியெடுத்து அருகில் சென்று ஒரு மலரை மெதுவாகத் தொட்டான். எங்கிருந்தோ ஒரு வண்டின் ரீங்காரம் மலையமாருதத்துக்கான ஆலாபனை போலக் கேட்கத் தொடங்கியது. மெல்லக் காற்றடித்து செம்பருத்தித் தண்டுகளை அசைத்தது. சட்டென்று ஒரே நேரத்தில் ஒன்றுபோல எல்லாச் செம்பருத்திகளும் மேலும் கீழுமாக அசைய, உலகத்திலுள்ள அத்தனை செம்பருத்திகளும் இந்நேரம் அசையுமோ என எண்ணினான். ஒவ்வொரு செம்பருத்தியும் ஒரு நாதஸ்வரம். எல்லாவற்றிலிருந்தும் நாதம் தளும்பி வழிகிறது. தனக்குள் புகும் காற்றையெல்லாம் கல்யாணியாக, தோடியாக, ஆபேரியாக, ஊசேனியாக எனப் பல்வேறு ராகங்களாக உருமாற்றிக்கொண்டிருந்த மலர்களின் அசைவுகளைக் கண்டு அவனது உடல் ரோமங்கள் குத்திட்டு நின்றன. இப்போது எல்லா நாதஸ்வரங்களிலிருந்தும் ஏக காலத்தில் ஒரே ராகம் கேட்கத் தொடங்க, அப்படியே செம்பருத்திச் செடியின் அடியில் தாங்க முடியாமல் மண்டியிட்டு அமர்ந்து, “ஐயோ கடவுளே என்னால முடியலயே.. முடியலயே..” என்று கதறி அழத் தொடங்கினான். திடுமெனப் பேருந்து நிலையத்தை நோக்கி ஓட்டமெடுத்தான்.
நேரக் கண்காணிப்பாளரிடம் தான் வந்த பேருந்தைச் சொல்லி அது மறுபடியும் எத்தனை மணிக்கு வரும் எனக் கேட்டுக் காத்திருந்தான்.
இரண்டரை மணி நேரம் கழித்து அதே பேருந்து வந்தது. நடத்துநரிடம் சென்று, ”சார் போன ட்ரிப்ல சீர்காழியில ஏறுனேன். கூட்டமா இருந்ததால என் நாதஸ்வரத்த ஒரு பெரியவர் வாங்கி லக்கேஜ் வைக்கிற எடத்துல வச்சாரு. கும்மாணம் வந்து பாக்கும்போது நாதஸ்வரத்த காணும்” என்று பரிதாபமான குரலில் சொன்னான். ”எது நாதஸ்வரத்த காணுமா? சின்னதா இருந்தாலாவது யாராவது கொழந்தைக்கு எடுத்துட்டுப் பொயிருப்பாங்கன்னு சொல்லலாம். அத எடுத்துட்டுப் போயி யாரு என்னங்க பண்ணப் போறாங்க?” நடத்துநர் பயணச்சீட்டுகளை அடுக்கிக்கொண்டே சொன்ன பதிலில் அவனுக்குத் திருப்தியில்லாமல் இருந்தது.
“சார் யாராவது நாதஸ்வர ஒறையோட எறங்குனத பாத்தீங்களா?” சாமிநாதனின் கேள்விக்கு நடத்துநர் “ப்ச்” என்றார்.
“சார் நூத்துக்கணக்கான பேஸஞ்சர் வர்ற வண்டியில யார் கையில ஊதாங்குழல் இருந்ததுன்னு பாக்குறதா என் வேல?” இப்போது கண்டக்டரின் குரலில் ஒருவிதச் சலிப்பும் அசதியும் உயர்ந்திருக்க, சாமிநாதன் அவரிடம் ’சார் அது நாதஸ்வரம்’ என்று சொல்ல நினைத்து விழுங்கினான். சற்றுத் தள்ளி நின்றிருந்த ஓட்டுநர் அவர்களைப் பார்த்துக்கொண்டே அருகில் வந்து, “என்னாப்பா? காலைல சீர்காழில ஓடிவந்து ஏறுன ஆளுதானே நீ.. என்னா விஷயம்?” என்று கேட்க, சாமிநாதன் குரலை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “அண்ணே என் நாதஸ்வரத்த பஸ்லயே வச்சுட்டேன்ணே.. கும்மாணத்துக்கு வந்து பாத்தா காணுங்கண்ணே.” இந்த முறை சாமிநாதனுக்குக் குரல் உடைந்துவிட்டது. ”இல்லியே. நீங்க வெறுங்கையோடதானே ஓடி வந்து ஏறுனீங்க..” ஓட்டுநர் உறுதியான தொனியில் சொன்னார். சாமிநாதனுக்கு நெஞ்சில் அறைந்ததைப் போலிருந்தது. ”இல்லண்ணே ஒரு பெரியவர் வாங்கி வெச்சாரு” என்று மறுபடியும் ஆரம்பிக்க, ஓட்டுநர் “யோவ்.. எதுவும் இல்லாம வெறுங்கையோடதான்யா ஏறுனேங்கறேன்.. நாதஸ்வரத்தோட ஏறி இருந்தா வேகமா வெளிய வர்ற வண்டியில் ஓடிவந்து படியில எப்டி தொத்திருக்க முடியும்?” என்று சொல்ல, காலையில் வீட்டில் புறப்பட்டதில் இருந்து பேருந்து நிலையம் வந்தது வரை நினைவை மீட்டிப் பார்த்தான். நாதஸ்வரத்தை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோமா என்று சந்தேகம் சாமிநாதனுக்கு முதன்முறையாக உண்டானது.
உறுமிக்கொண்டே நின்ற சீர்காழி பேருந்தில் ஏறி அமர்ந்தான். மாந்தளிர் நிற உடையணிந்து நாதஸ்வரத்தை வாங்கி வைத்த பெரியவர், தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என எல்லோரையும் நினைவில் மீட்டிப் பார்த்தான். யார் முகமும் நினைவுக்கு வரவில்லை.
சோர்வும் களைப்புமாகத் தெருவிற்குள் நுழைந்தவன் தூரத்தில் குண்டு பல்பு வாசலில் எரியும் தன் வீட்டைப் பார்த்ததும் ஆவேசமாக நடந்தான். அம்மா அடுப்பு ஊதிக்கொண்டிருந்தாள். அந்த ஒலி நாதஸ்வர வித்துவான் சீவாளியைச் சரிபார்க்க ஊதுவதைப் போல சாமிநாதனுக்குக் கேட்டது. வேகமாக ஓடி வீட்டின் மூலையைப் பார்த்தபோது அது அங்கே இல்லை. சாமிநாதனுக்குத் தலை சுற்றியது. பேருந்தின் ஆரன் சத்தம் மண்டைக்குள் மாறி மாறிக் கேட்க, தலை சுற்றிச் சுவரோடு சரிந்து உட்கார்ந்தவனுக்கு உள்ளறையிலிருந்த சாமிப் படத்தின் முன்பு நாதஸ்வரத்தை அம்மா சாற்றி வைத்திருப்பது தெரிந்தது.
“ஏன்ம்ப்பா எங்க போன.. இன்னைக்கு வேலைக்குப் போகலையா?” என்றபடி அவன் கையில் தண்ணீர்ச் சொம்பைக் கொடுத்தாள் அம்மா.
“அம்மா நான் வந்து நாதஸ்வரம்…” என்று அவன் திணறிச் சொல்லத் தொடங்கும் முன்பே, “நீ ராத்திரியில பயந்த கொணம் கொண்ட மேறி வெறுங்கையாலயே நாதஸ்வரம் ஊதுற.. அப்புறம் ஓ..ன்னு அழுவுற.. அதனாலதான் என்னுமோ எதோ மகமாயின்னு.. சாமி எடத்துல கொண்டுபோயி வச்சிட்டன்ப்பா” என்றாள்.
சாமிநாதன் முகத்தில் ரத்த ஓட்டமில்லாததைப் போல உறைந்து நின்றான்.
“தம்பி.. நான் மனசுல பட்டத சொல்லட்டுமா? ஒனக்கும் நாயனத்துக்கும் விதிக்கல போலருக்குப்பா.. பெசாம யார்கிட்டியாவது கொண்டுபோயி குடுத்துருப்பா..”
அம்மா அப்படிச் சொன்னதும் சாமிநாதனுக்குப் பொங்கிக்கொண்டு வந்தது. விழியோரங்கள் ஈரமாயின. நாதஸ்வரத்திலேயே அவனது பார்வை நிலைகுத்தியிருந்தது.
சாமி அறையை நோக்கிச் சென்றான். தாத்தா அப்பா படத்திற்கு முன் இருந்த நாதஸ்வரத்தை எடுத்தான். அப்போதுதான் பிறந்த குழந்தையைத் தூக்கும் தகப்பனைப் போல நாதஸ்வரத்தை ஏந்தி மார்போடு அணைத்துக்கொண்டான். சீவாளியை எச்சில்படுத்தி உயிரூட்டிய பின், கண்ணை மூடி அடிவயிற்றிலிருந்து காற்றெடுத்து ஊதத் தொடங்கினான். அவனது கழுத்து நீண்டு, கன்னங்கள் காற்று புகுந்த பலூனைப் போல உப்பின. ஆபேரி ராகத்தில் ஆலாபனை புது வெள்ளமாய்ப் பாயத் தொடங்கியது. துடுக்கான சிட்டுக்குருவிகளென அவனது விரல்கள் துளைகளின் மேலே அசைந்துகொண்டிருந்தன. ஒரு நடுக்கமோ தயக்கமோ இன்றி இம்மியும் விலகாத சுதியுடன் சரளமாகப் பொழிந்தது நாதம்.
தூரத்தில் இருப்பவர்களைக் கைநீட்டி அழைப்பதைப் போலப் பரந்தவெளியில் இருக்கும் மொத்தக் கீதத்தையும் வீட்டிற்குள் வரவேற்றுக்கொண்டிருந்தது அவனது நாதஸ்வரம்.
அடர்ந்த வனத்தில் ஓசையெழுப்பி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, ஆங்காங்கே எதிர்படும் பாறைகளில் பட்டுச் சிலிர்த்துக்கொள்வதைப் போலச் சங்கதிகள் தெறித்து விழுந்தன. அடுப்பில் கிடந்ததை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்த தாயார் அதிர்ச்சியோடு நின்றாள். தான் பிரசவ நாளன்று அடைந்த மகிழ்ச்சியைத் திரும்ப ஒருமுறை மீட்டுத் தந்த மகனைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நகுமோமு” என்று சாமிநாதன் ஆரம்பிக்க, வீட்டு வாசலில் கூட்டம் கூடிவிட்டது. சட்டென அந்த வீடு முழுவதும் நட்சத்திரங்கள் இறைந்து கிடப்பதைப் போல நாதம் வீட்டை நிறைத்தது.
வளையாத பெரும் நாகத்திலிருந்து வளைந்த நெளிநெளியான குட்டி நாகங்கள் வெளியே வருவதைப் போலச் சங்கதிகள் வந்து விழுந்தன.
வீட்டிற்குள் வந்த தெருவாசிகள் எல்லோரும் தெய்வச் சன்னிதியில் நிற்பதைப் போலப் பரவசத்தோடு நின்றிருந்தார்கள். குழந்தைகள் சாமிநாதனைப் பார்த்துக் கைதட்டிக்கொண்டே இருந்தார்கள். மழைக்காலங்களில் ஈர மண்ணோடு அழுந்திக் கிடக்கும் பன்னீர்ப் பூக்களின் சுகந்தம் காற்றில் பரவியது. முன் அறிமுகம் இல்லாமல் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களுக்குள் இனம் புரியாமல் உண்டாகும் சிநேக உணர்வு அக்கணம் அங்கிருந்த எல்லோர் முகத்திலும் துலக்கமாகத் தெரிந்தது. யாருக்கும் தெரியாமல் படரும் கொடிபோல வாத்தியத்திலிருந்து வந்த நாதம் அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டது.
‘ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது’ என்ற வரியைச் சாமிநாதன் நெஞ்சுருக வாசிக்கும்போது அவனது கண்களில் அனிச்சையாகக் கண்ணீர் கொட்டத் தொடங்கி மார்பில் இறங்கியது. ‘பரமாத்மாவே இந்த உலகத்தில் உன்னையன்றி யாரிடம் நான் முறையிடுவேன்’ என்று அர்த்தப்படும் அந்த வரியில் வீட்டிற்குள் நின்றிருந்த பலருக்கும் விழிகள் கலங்கின. தன் வயனமான வாசிப்பில் ஒருமுறை வந்த சங்கதி மறுமுறை வராமல் கற்பனைகளை அள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தான். மனதில் தோன்றுவதையெல்லாம் கைகள் ஜாலம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது அவன் மனமே கைகளாக மாறிவிட்டதோ என்று பார்ப்பவர்களுக்குத் தோன்றியது.
இத்தனையும் இவ்வளவு நாளாக இவனுக்குள்தான் இருந்ததா என்பதைப் போல மொத்தக் கூட்டத்தினரின் முன்பும் அசராமல் வாசித்துக்கொண்டிருந்தான்.
நேரம் ஆகிக்கொண்டே இருந்தது, சாமிநாதன் வாசிப்பை நிறுத்தவேயில்லை. கனன்று எரியும் தீ ஜ்வாலை போல அவன் உடலை நாதம் அசைத்தது. துளைகளின் மீது படர்ந்திருந்த விரல்கள் தக்கையாய் மாறி வேகமெடுத்தன. பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவன் படபடத்து எரியும் சுடரைப் போலக் காட்சி தந்தான். அவனது உடம்பிலிருந்து வியர்வை அருவியைப் போல வழிந்தது. அவன் அம்மா ஒரு துண்டை வைத்து உடல் முழுக்கத் துடைத்துக்கொண்டே இருந்தாள். அவனது தொண்டைக்குழியில் காலையில் வைத்த குங்குமம் வியர்வையில் கரைந்து சிவப்பாய் வழிவதைப் பார்க்கும்போது தொண்டை பொத்துக்கொண்டு ரத்தம் வருகிறதோ என்று கூட்டத்தினரை நினைக்க வைத்தது. அம்மா அதைப் பதறிப்போய் துடைத்தாள். இது எதுவும் பொங்கும் புனலெனப் பெருக்கெடுத்துக்கொண்டிருந்த அவனது வாசிப்பை நிறுத்தவேயில்லை.
*
நாதஸ்வர கலாநிதி காருக்குறிச்சி அருணாசலம் அவர்களுக்கு அகம் பணிந்து சமர்ப்பணம்.
16 comments
சமர்ப்பணம்..சமர்ப்பணம்..சமர்ப்பணம்..
என்ன அழகான எழுத்து செந்தில் சார்..நன்கு இசைக்க தெரிந்த நபர் போல அவ்வளவு technicality .அந்த நைச்சியத்தை எங்களுக்கும் ரொம்ப அழகாக கடத்துகிறீர்கள் . பெண்ணின் ஜடையை நாதஸ்வரத்திற்கு பொருத்திப்பார்ப்பதிலுருந்து கடைசி வரி வரை இந்த கதையில் நாதஸ்வரத்தின் மகிமையே மேலோங்கியிருந்தது..தன்னை எது ஓட ஓட விரட்டியதோ அதையே ஒரு நேருக்கு நேர் ஒரு முறை சந்தித்து விட்டால் பல பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு காணலாம் என்கிற உண்மையை உரக்க கூறிற்று உங்கள் கதை.வெகு சிறப்பு..ஒருவரது உணர்ச்சிகளை வார்த்தைகளாக மாற்றுவது பெரிய கலை ஒரு எழுத்தாளருக்கான மிக முக்கிய தேவை..அது உங்களுக்கு மிக அழகாக வருகிறது..வாழ்த்துக்கள் செந்தில் சார்..
அருமை இனிமை.. சாமிநாதன் வாசித்ததைப் போல், நாம் வாசிக்கும் போதும் அவ்வளவு சுகம்..
மிக அற்புதமான ஒர் வாசிப்பு அனுபவம் தந்த செந்தில் ஜெகன்நாதன் அண்ணனுக்கு என் பேரன்பு வாழ்த்துக்களும் நன்றியும். உண்மையாகவே தாங்கள் ஒரு நாதஸ்வர வித்வானாக உருவெடுத்து வந்து அந்த வாழ்வனுபவத்தை எங்களிடம் சொல்லியது போன்ற ஓர் நிறைவு. கதை முழுவதும் அழகு நிறைந்த சொற்களால் தொடுக்கபட்டிருக்கு எனலாம். ஒரு இசை தெரியாத வாசகனும் நாதஸ்வாசிக்கும் கலை கொள்ள செய்யும் இந்த வாசிப்பு. சிறுகதைகளும் பேரனுபவம் தரும் என்பதை நிரூபணம் செய்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. தியேட்டரின் கதவு இடைவெளியில் “வெள்ளை நிற தூண் எழுந்து நின்றது” பின் வீட்டிற்கு வரும் வழியில் செம்பருத்தி பூக்கலோடு நாதஸ்வரத்தை தொடர்புபடுத்தி தந்த வரிகள் எல்லாம் மிக அற்புதம். இதை வாசித்த பின் உங்களுடைய “காளகம்” சிறுகதை நினைவில் வந்து சென்றது. ஒரு நல்ல கதை இன்னொரு கதையை நினைவு படுத்தாமல் எப்படி இருக்கும்.
“சொற்கள் உங்கள் வசம்” இன்னும் பல கதைகள் தந்திடுங்கள் எங்களுக்கு
என்றும் அன்புடன்
கணேஷ்மதியழகன்
அபுதாபி
அற்புதமான எழுத்து..
அருமை சார். கண்கள் குளமாகிவிட்டன.
மிகச்சிறப்பு காருகுறிச்சி அருணாசலம்
திருவாடுதுறை ராஜரதினம் அவர்களிடம்
வாசிக்கும் போது அணுக்கமாய் அமர்ந்து
கேட்டு பின்னர் தனியே வாசித்து பார்த்து
பழகி மேதையானவர் இதற்கு கதா விருது
கிடைக்க வேண்டும் தஞ்சையின் மண்
வாசனை கமழும் கதை மல்லாரி வாசிக்கும்
செம்பருத்தி மலர் வரிசை ஆற்றின் சுழிப்பை இசையோடும் உவமையுடன்
சொல்வதுடன் எனக்கு முத்துப்பேட்டை
சண்முக சுத்தரம் அவர்களிடம் மைசூரிலிருந்து நாதசுவரம் கற்கவந்த நண்பன் மரிக்கொழுந்து ஞாபகம் வந்தது
கலை விமர்சகர் தேனுகா இல்லையே இக்கதை படிக்க தமிழினிக்கு நன்றி
மிகச்சிறப்பு காருகுறிச்சி அருணாசலம்
திருவாடுதுறை ராஜரதினம் அவர்களிடம்
வாசிக்கும் போது அணுக்கமாய் அமர்ந்து
கேட்டு பின்னர் தனியே வாசித்து பார்த்து
பழகி மேதையானவர் இதற்கு கதா விருது
கிடைக்க வேண்டும் தஞ்சையின் மண்
வாசனை கமழும் கதை மல்லாரி வாசிக்கும்
செம்பருத்தி மலர் வரிசை ஆற்றின் சுழிப்பை இசையோடும் உவமையுடன்
சொல்வதுடன் எனக்கு முத்துப்பேட்டை
சண்முக சுத்தரம் அவர்களிடம் மைசூரிலிருந்து நாதசுவரம் கற்கவந்த நண்பன் மரிக்கொழுந்து ஞாபகம் வந்தது
கலை விமர்சகர் தேனுகா இல்லையே இக்கதை படிக்க தமிழினிக்கு நன்றி
அன்புள்ள செந்தில் அவர்களுக்கு,
வணக்கம்.
என்ன சொல்லி ஆரம்பிப்பது. “அனாகத நாதம்” “அனாகத நாதம்” “அனாகத நாதம்” என தலைப்பையே தியானிக்க வைத்துவிட்டீர்கள். இது கதை என்றா கூறுவது. ஒரு கலையின் உயிர் வடிவம் என்று சொன்னாலும் மிகையாகாது.
ஆரம்பிக்கும் பொழுது சாமிநாதன் குடும்ப கஷ்டம் காரணமாக நாதசுவரத்தை விற்கப் போகிறார் என்று நினைத்தேன். தன் அப்பாவின் கலையை கற்றுக் கொள்ளத் திணரும் ஒரு மகனின் வாழ்க்கைக்குள் என் கரம் பிடித்துக் கூட்டிச் சென்றீர்கள்.
சாமிநாதன் கற்க இயலாமல் அடி வாங்கி அவமானப் படும் பொழுது என் கண்கள் நனைந்துவிட்டன். அவன் விலகி ஓடினாலும் அவனை துரத்தும் இசையைக் கண்டு எனக்கு சற்று கோபமே வந்தது. ‘எப்படியாவது கத்துத் தொலையேன் ‘ என்று சாமிநாதனையும் கடிந்து கொண்டேன்.
நாதஸ்வரத்தை விற்க அவன் முனையும் பொழுது வேண்டாம் விற்காதே என்று உள்மனம் சொன்னது. நீங்கள் விற்க விடமாட்டீர்கள் என்பதையும் நம்பினேன். ஆனால் அது அவன். வீட்டிற்கே சென்றடைந்த விதத்தை அபாரமாக எழுதியுள்ளீர்கள்.
இறுதியில் சாமிநாதன் வாசிக்கும் பொழுது என் உடம்பு சிலிர்த்து விட்டது. நட்சத்திரங்கள் சாமிநாதன் வீட்டில் மட்டும் அல்ல என் மனதிலும் தான்.
என்னை பாதித்த வரிகள் என்று சிலவற்றைக் குறித்துக் கொண்டேன். இதோ,
“ஒருமுறை தேவகாந்தாரி ராகத்தில் வைத்தியின் நாதஸ்வரம் கறுப்பு மெழுகுவத்தியாய் உருகிக்கொண்டிருந்தது.”
“அவனுக்கு ஒரு வரியைச் சுதியோடு வாசிப்பதே ஓடும் குதிரையின் மேல் நின்றுகொண்டு சவாரி செய்வதைப்போல இருந்தது.”
“மண் ஒட்டிக் கீழே கிடந்த நாதஸ்வரத்தைப் பார்க்கும்போது தன் அப்பாவை யாரோ அடித்துத் தெருவில் போட்டதைப் போலத் தோன்றியது. பதறி ஓடிப்போய் நாதஸ்வரத்தைக் கையில் எடுத்துக்கொண்டான்.”
“சாலையில் நடக்கும்போது சிறுகுழந்தைகள் ஊதாங்குழலைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்தாலே அடி வயிற்றில் குளுமையாக எதுவோ மேலெழுந்து உடல் நடுக்கம் உண்டாகிவிடும்.”
“ஓசை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருக்க, வெளியில் காணும் எல்லாவற்றிலிருந்தும் அவன் விலகி ஓடிக்கொண்டிருந்தான்.”
“அந்த வாத்தியத்தின் ஒவ்வொரு துளைகளைச் சுற்றியும் படிந்திருக்கும் அப்பாவின் விரல் ரேகைகளுக்கு ராகங்கள் ‘இதோ வந்தேன் ராஜாவே’ என்று பணிந்து வரும்.”
“சட்டென அந்த வீடு முழுவதும் நட்சத்திரங்கள் இறைந்து கிடப்பதைப் போல நாதம் வீட்டை நிறைத்தது.”
உண்மையில் இக்கதையின் ஒவ்வொரு வார்த்தைகளுமே என்னை மூழ்கடித்து விட்டது என்பதே உண்மை.
அறிமுகம் இல்லாதவர்களின் மனம் தொட்ட கலைஞன் நீங்கள் என்று மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள்.
அன்புடன்,
மலர்.
அன்பு வாழ்த்துகள்
உங்களது அனாகத நாதம் சிறுகதை அபாரம்.
ஓர் அருமையான இசைக் கச்சேரி கேட்க ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு காசு தேத்திக் கொண்டு கல்லும் முள்ளும் கடந்து பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டு வேறு திசையில் எங்கோ பொழுதை முடிக்க நினைத்து இறங்கும் நேரத்தில் ஆற்றங்கரை அருகே மண்டபத்தில் ஏகாந்தமாக அந்தக் கச்சேரியை அங்கே கேட்க வாய்த்தது போல் அமைந்தது..
ஒரு தேர்ச்சியான வாசிப்பு போல் அதன் எடுப்பு தொடுப்பு முடிப்பு அமைந்திருந்தது…. ராக சஞ்சாரத்திலேயே அது எங்கே வந்து நிறைவு பெறும் என்ற ஊகத்தை வாசக ரசிகருக்கு தெரியச் செய்திருந்தீர்கள் எனினும், அந்த இடத்தில் வாசிப்பு இன்னும் லயித்துக் கேட்க்கும்படியாக அமைந்தது என்பது கூடுதல் சிறப்பு.
“நீங்கள் ரசிப்பீர்கள்” என்ற குறிப்போடு கதையை வாசிக்குமாறு அனுப்பி வைத்த எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல…
அன்பும் வாழ்த்தும்
எஸ் வி வேணுகோபாலன் 94452 59691
விழிகளில் நீர் தளும்ப,மெய் சிலிர்க்க வைத்தது விட்டது இந்தக் கதை. ஆசிரியருக்கு வாழ்த்துகள்
மிக நுட்பமாக ராகங்கள் அலசி சரியான இடத்தில் பிரயோகித்து உள்ளார்.
மனதை தொட்ட கதை. கடைசி பாரா கண்களில் நீர் வரவழைத்து விட்டது.
கதை படித்து ரொம்ப நேரம் கழித்து தான் சகஜ நிலைக்கு திரும்பினேன்.
பெண்ணின் ஜடை முதற்கொண்டு, பேருந்து கம்பி வரையில் எதிலும் நாதஸ்வரத்தைக் காணும் பெரும் ஆர்வலனாக அறிமுகமாகும் சாமிநாதனோடு நம்மையும் பயணிக்கச் செய்யும் எழுத்து. நாயனத்துக்கும் நாயகனுக்குமான பிணைப்பைச் சொல்லும் கதை என்பதை இசைக்குறிப்புகள் கலந்த ஒவ்வொரு வரியும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது சிறப்பு.
சில கதைகளிலும், திரைப்படங்களிலும் முன்னரே வந்த திருப்பம் என்றாலும் ‘நாதஸ்வரத்தோடு நீ ஏறலை’ என்று ஓட்டுநர் உறுதியாகச் சொல்லும் இடத்தில் கபாலத்துக்குள் மூளை ஒரு கணம் சுழன்று நிலைபெறும் உணர்வு ஏற்படுவது நிஜம். கதையின் இடையினிலேயே அதுபோன்ற பெரும் திருப்பம் வருவதால் சிறுகதை என்ற வடிவம் மாறி குறுநாவலை சுருக்கியதுபோன்ற உணர்வும் இறுதியில் ஏற்படுவதை தவிர்க்க முடியலை.
சங்கீத குடும்பத்தில் பிறந்தும் சங்கீதம் வராமல் இரு குருக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட சாமிநாதனை சங்கீதமே அணைத்துக்கொள்ளும் அந்தக்கட்டம், மாய்ஜாலமாக இல்லாமல் இயல்பாக இருந்திருக்கலாம். முற்றிலும் நாதஸ்வரத்தைத் துறந்து சப்ளையராக மாறிவிடுவதே இயல்புத்தன்மை குறைவதற்கு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. அச்சகத்துக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த தொடர்பு அளவுக்கு இல்லாவிட்டாலும், ஆப்பிளுக்கும் நியூட்டனின் கண்டுபிடிப்புக்கும் இருந்த அளவுக்காவது சாமிநாதனுக்கும் நாயனத்துக்குமான தொடர்பை தொடர்ந்து காப்பாற்றியிருந்தால் இறுதிக்காட்சி மாய்ஜாலமாகத் தோன்றியிருக்காது.
எப்படியாக இருந்தாலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரை என்றென்றும் வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கதை எழுதினால் அது பெரும் வெற்றியே. சாமிநாதன் என்ற பெயரை இந்தக் கதையை வாசித்தவர்கள் யாராலும் மறக்கமுடியாது என்றே நம்புகிறேன்.
வணக்கம். சிறப்பு சார். கதை யூகிக்க முடியாமல் கூடவே அழைத்து செல்கிறது சிறப்பு. Sympathy, Empathy இரண்டையும் கதையில் கொண்டுவந்தது அருமை. உன்னாலும் முடியும் என்ற அறிவுரையோடு எல்லோரையும் அரவணைக்கிறது சிறுகதை. நன்றி சார்.
கதையின் ஜீவன் கலையாக இருப்பது அற்ப்புதம். செந்தில் இன்னும் பல படைப்புக்களை படைக்க எல்லாம் வல்ல எனது அண்ணாமலை அண்ணல் அருள எனது பிரார்த்தனைகள்.
[…] https://tamizhini.in/2023/01/30/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%… […]
Comments are closed.