தீர்க்கதரிசி – கலீல் கிப்ரான்

1 comment

மக்களின் அன்புக்குப் பாத்திரமான, தனக்குத்தானே விடிவெள்ளியான திருத்தூதர் அல்முஸ்தஃபா, தான் பிறந்த தீவுக்குத் தன்னை மீள அழைத்துச் செல்ல வரும் நாவாயை எதிர்நோக்கி ஆர்பலீஸ் நகரத்தில் பன்னிரு ஆண்டுகளாகக் காத்திருந்தார்.

பன்னிரண்டாவது ஆண்டில் அறுவடைப் பருவமான ஈலூல் திங்கள் ஏழாம் நாளில் நகரின் புற மதில்களுக்கு அப்பால் இருந்த குன்றின் மீதேறி நின்றபடி, ஆழியில் மூடுபனியின் ஊடாக அசைந்து வரும் நாவாயைக் கண்டார் அவர்.

அவரது அகக்கதவுகள் திறந்துகொண்டன. உவகையூற்று கடற்திசையை நோக்கிப் பெருக்கெடுத்தது. விழிமூடி மோனத்தில் அமர்ந்தார்.

குன்றிலிருந்து இறங்கியபோது அவர் மனத்தில் மெல்ல மெல்ல அஞர் பெருகி அவரை வாட்டியது: ‘துயரின்றி நிம்மதியுடன் நான் இந்நகரை நீங்க ஒண்ணுமா? முடியாது. மனத்தில் சிறு வடுவும் இல்லாமல் இந்நகரை நீங்க இயலாது! இந்நகர மதில்களிடையே எத்தனை வலி மிகுந்த இரவுகளைக் கழித்திருக்கிறேன்! எத்தனை நீள்தனிமையை அளித்தன அவ்விரவுகள்! தன் வேதனையிடமிருந்தும் தனிமையிடமிருந்தும் வருத்தமின்றிப் பிரிந்துசெல்லுதல் எவருக்கும் இயல்வதல்ல.

இந்நகர வீதிகளில் நான் எத்தனை எண்ணத் திவலைகளைச் சிந்தியிருக்கிறேன்! என் ஏக்கத்திலிருந்து பிறந்து இக்குன்றுகளிடையே திகம்பரமாக உலவும் நினைவுக் குதலைகள்தான் எத்தனை எத்தனை! பாரமற்ற, உளைவற்ற மனத்துடன் இங்கிருந்து அகல்வது எப்படி இயலும்?

இன்று இவற்றை எல்லாம் நீங்குவது உடையைக் கழற்றுவதைப் போல எளிதன்று; மாறாக என் கையாலேயே என் தோலை உரிப்பதைப் போலக் கொடியது.

எண்ணங்களை மட்டுமின்றி, பசியும் தாகமும் கொண்டு வேட்கும் இனிய இதயத்தையே இங்கு விட்டுச்சென்றாக வேண்டும்.

மறுபுறம், நான் இங்கு இதற்கு மேலும் தொடர்ந்து வசிப்பதும் இயல்வதல்ல.

சகலத்தையும் தன்னை நோக்கிக் கைவிரித்து அழைக்கும் ஆழித்தாய் என்னையும் அழைக்கிறாள். நான் கலம் ஏறியாக வேண்டும்.

இங்கேயே தங்கிவிடுவது என்பது – தீநிசிக் காலத்தை எரித்துச் சூடேற்றும் எனும் போதும் – என்னை நானே வார்ப்படத்தில் உருக்கி உறைய வைப்பதாகிவிடும்.

இங்கிருக்கும் அனைத்தையும் என்னுடன் எடுத்துச்செல்வதே எனக்கு முற்றான உவகை. ஆனால் அது எப்படி முடியும்?

குரல் காற்றில் தனியாகத்தான் பறந்தாக வேண்டும். அது தன்னை உருவாக்கிய நாவையும் அதரங்களையும் தன்னுடனே தூக்கிக்கொண்டு பறக்க முடியாது.

உச்சிவானில் வெய்யோனுக்கருகே வட்டமிட்டுப் பறக்கும் வல்லூறு தன் குடம்பையை ஒழித்து நீங்கித்தான் பறக்கிறது.’

குன்றடியில் நின்று திரும்பியவர் மீண்டும் ஆழியின் திக்கில் பார்க்க, அதில் தனக்கான நாவாய் துறைமுகத்தை நெருங்குவதையும் அதன் அமர முனையில் மீகாமனோடு தன் தாய்நாட்டவர் நிற்பதையும் கண்டார்.

தனது இதயம் ஆர்ப்பரிக்க அவர்களை நோக்கிப் பேசலானார்: ‘என் மூதன்னையின் பிள்ளைகளே, அலையாழியை ஆள்பவர்களே!

எத்தனை முறை என் கனவுகளில் நீங்கள் கலம் செலுத்தி வந்தீர்கள்! இன்றோ ஆழ்கனவாம் விழிப்புநிலையில் கலமெடுத்து வந்திருக்கிறீர்கள்!

இதோ அணியமாகிவிட்டேன். என் பெருங்கனவின் பாய்மரங்கள் காற்றின் திசையையும் துணையையும் நோக்கி ஏங்கி நிற்கின்றன.

இங்கு நிலைத்த உறைகாற்று என் சுவாசத்தை ஒரேயொருமுறை மட்டும் நிறைக்கட்டும். நகரின் உள்முகத்தை ஒரேயொருமுறை என் கனிந்த விழிகள் நோக்கட்டும். அதன் பிறகு உம்முள் ஒருவனாக, கடலோடிகளோடு இன்னொரு கடலோடியாக மாறிவிடுவேன்.

ஆழ் கடலே, துயிலறியாத் தாயே!

ஆற்றுநீருக்கும் ஊற்றுநீருக்கும் வேற்று நீருக்கும் ஓய்வையும் அமைதியையும் நிம்மதியையும் அளிப்பது உனையன்றி வேறு எவர்?

அடியேனாகிய இவ்வோடைக்கு இன்னும் ஒரேயொரு சுழிப்புதான் எஞ்சியிருக்கிறது. இந்தப் பொழிலில் இவ்வோடை சலசலப்பது இதுவே கடைசி முறை.

அதன் பிறகு உன்னிடம் சேர்ந்துவிடுவேன். கரையற்ற ஆழியே, உன்னுள் கரைந்த துளியாக ஒன்றிவிடுவேன்.’

அவர் நடந்து வந்தபோது கழனிகளில் இருந்தும் திராட்சைத் தோட்டங்களில் இருந்தும் ஆடவரும் பெண்டிரும் வெளியேறி நகர்வாயிலை நோக்கி வருவதைத் தொலைவிலிருந்து கண்டார்.

அவர்கள் தன் பெயரையும் தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் நாவாயைப் பற்றியும் சொல்லி ஒருவருக்கொருவர் உரையாடுவதைக் கேட்டார்.

தனக்குள்ளேயே அவர் பேசிக்கொண்டார்: ‘பிரிவு நாளே கூடுகையின் தொடக்க நாளாக இருக்கலாகாதோ?

என் இறுதிநாளே எனது வாய்மையின் விடியலாக இருக்கக் கூடுமோ?

பாதி உழுத நிலத்தில் கலப்பையை விட்டு வந்த விவசாயிக்கும் திராட்சை ரசத்தைப் பிழியும் ஆலைச்சக்கரத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு வந்த தொழிலாளிக்கும் நான் எதைக் கொடுப்பேன்?

இவர்கள் அனைவருக்கும் பறித்துத் தரவல்லவாறு, தீராக் கனிகளை ஏந்தி நிற்கும் மரமாக என் இதயம் மாறாதோ?

என் அன்பு ஊற்றெனப் பெருகி அவர்களது கோப்பைகளை நித்தியமாய் நிரப்பாதோ?

பேரிசைக் கலைஞன் தீண்டிய யாழென, அவன் சுவாசக்காற்று புகுந்த குழலென, என் வாயிலாக ஏதேனும் ஒரு மாபெரும் அருட்சுடர் அவர்களுக்காக ஒளிராதோ?

அமைதியைத் தவத்தில் தேடுபவனன்றோ யான்? அந்த அமைதியைப் பங்கிட்டு இவர்களுக்கு அருள என்னிடம் திண்ணமாக ஏதேனும் இருக்கிறதா?

இது அறுவடை நாள் என்று கொண்டால், இதற்காக நான் விதை தூவியது எந்த நாளில்? நினைவில் தெளிவற்ற எந்தப் பருவத்தில்?

என் விளக்கை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தருணம் இதுவெனில், உள்ளே என் உள்ளொளியின் சுடர் இருக்காது.

என் கைவிளக்கை வெறுமையுடனும் இருளுடனும் மட்டுமே ஏந்துவேன்.

இரவின் தேவதை அதில் எண்ணெயூற்றி ஒளியேற்றட்டும்.’

இவற்றைச் சொற்களாகச் சொல்லிக்கொண்டார். ஆயினும் அவர் அகத்தினுள் இன்னும் பல எண்ணங்கள் சொல்லாகாமல் இருந்தன. அக ஆழத்தின் அரிய எண்ணங்களை அவராலேயே முற்றாகத் தன்னுணர முடியவில்லை.

அவர் நகரத்துக்குள் நுழைந்தபோது மக்கள் அனைவரும் அவரைச் சந்திக்க வந்து கூடினர். ஒற்றைக் குரலில் ஆர்ப்பரித்தனர்.

நகரத்தின் முதியவர்கள் முன்வந்து நின்று உரைத்தனர்: ‘அதற்குள் எம்மைவிட்டுப் பிரிந்து செல்லாதீர்கள். வைகறைக் கங்குலில் நீர்தான் இளஞாயிறைப் போல் தெள்ளொளி பகர்ந்தீர். கனவுகளுக்கான கனவை உமது இளமைதான் எமக்கு ஊட்டியது.

நீர் எமக்கு அந்நியரோ விருந்தினரோ அல்ல, மாறாகப் பெருநேசத்திற்குரிய புதல்வனாவீர்.

உம் முகத்தைக் காண முடியாதபடி எம் விழிகளுக்குத் தீராப்பசியை வழங்கிச் சென்றுவிடாதீர்.’

பின்னர் அந்நகரின் மதகுருக்கள் அவரிடம் உரைத்தனர்: ’ஆழியலைகள் நம்மிடையே பிரிவை உண்டாக்கி, நீர் எங்களிடையே வாழ்ந்த இனிய நாட்களை வெறும் நினைவலைகளாக மாற்றும் ஆபத்துக்கு இசைந்திட வேண்டாம்.

எங்களிடையே உலாவும் போது நீர் ஒரு தேவதை. உம் நிழலே எம் முகத்தை மிளிரச்செய்த ஒளி!

நாங்கள் உம்மை வெகுவாக நேசிக்கிறோம். அன்பு எப்போதும் விழிக்குப் புலப்படாத திரையால் மூடப்பட்டிருப்பது. நிறைவான நேசத்தினால் வாயடைத்திருந்த நாங்கள் முழுமையாக எங்கள் அன்பை உமக்குக் காட்டவில்லை.

இப்போது அது தங்கள் முன்பு கட்டின்றிக் கதறித் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

பிரிவுத் தருணம் வரும்வரை அன்பு தன் ஆழத்தை ஒருபோதும் உணர்வதேயில்லை.’

தொடர்ந்து பலரும் அங்கு வந்து அவரை வணங்கினர். அவர் யாருக்கும் பதிலளிக்கவில்லை. தலை குனிந்துகொண்டார். அண்மையில் நின்றவர்கள் அவரது கண்ணீர் வழிந்து மார்பில் சிந்துவதைக் கண்டனர்.

அவரும் மக்களும் ஆலயத்திற்கு முன்பிருந்த பெருஞ் சதுக்கத்திற்குத் திரளாக வந்தனர்.

ஆலயத்தின் உள்ளிருந்து அல்மித்ரா என்ற நங்கை அவர்முன் வந்து நின்றாள். அவள் குறிசொல்பவள். 

அவர் அவளைக் கனிவோடு நோக்கினார். அந்நகரத்தில் முதலடி எடுத்து வைத்தபோது அவரை நம்பிக்கையுடன் நோக்கி வணங்கிய முதல் பெண் அவளே.

அவள் அவரை வணங்கிச் சொன்னாள்: ’இறைத்தூதரே, நிர்வாணத்தைத் தேடும் சான்றோரே! தங்களது நாவாயின் வருகையையும் காலத்தின் பாதையில் நெடுந்தூரம் சென்று தேடியிருந்தவர் நீங்கள்.

இப்போது நாவாய் உங்களுக்காக இங்கு வந்துள்ளது. நீங்கள் செல்வதே முறை.

தங்களது உயரிய கனவுகள் குவிந்து நோக்கும் திசையில் உங்கள் இல்லத்துக்குச் சென்றேகவும். தங்கள் ஞாபகங்களில் படர்ந்திருக்கும் தாய்நாட்டைக் காண விழையும் அவா அரியது, மதிப்பிற்குரியது! உங்களைச் செல்லவிடாமல் எங்கள் அன்பும் தளையிடாது, எங்கள் தேவையும் குறுக்கிடாது!

ஆயினும் எங்களை விட்டுப் பிரிந்துசெல்லும் முன் தங்களிடம் கோருவதற்கு ஒன்றுள்ளது. தங்களது உள்ளொளியில் உதித்த அருளே அது. அந்நன்மொழிகளை எங்களுக்கு அருளுங்கள்.

நாங்கள் எம் குழந்தைகளுக்கு அதை நல்குவோம். அவர்கள் அதைத் தத்தம் சந்ததிகளுக்குத் தருவார்கள். இங்ஙனம் அத்தத்துவங்கள் வாழையடி வாழையாக அழியாமல் தொடரும்.

உங்கள் தனிமையின் விழியால் எங்கள் பகல்களை நோக்கினீர்கள். உங்கள் விழிப்பின் தீர்க்கத்தால் எங்கள் உறக்கங்களின் அழுகையையும் சிரிப்பையும் அறிந்தீர்கள்.

எனவே இப்போது எங்களை எங்களுக்கே அறிமுகப்படுத்துங்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஓடும் நதியில் தங்களுக்குப் புலப்பட்ட அரிய வாய்மைகளை எங்களுக்குக் கற்பியுங்கள்.’

அவர் பதிலிறுத்தார்: ‘ஆர்பலீஸ் நகரத்தோரே, உங்கள் உளத்தில் இப்போது ஊறும் ஒன்றைப் பற்றியல்லால் வேறு எதைப் பற்றி என்னால் பேச முடியும்?’

அல்மித்ரா அவரிடம் வேண்டினாள்: ”எங்களுக்குக் காதலைப் பற்றிச் சொல்லுங்கள்.”

தலை நிமிர்ந்து மக்களைப் பார்த்தார். அவர்கள் மீது அமைதி மெல்லிய படலமெனக் கவிந்திருந்தது. தன் அரிய குரலால் உரைக்கத் தொடங்கினார்.

காதல்

‘காதலின் பாதை கரடுமுரடாக, செங்குத்தான முகடுகள் உடையதாக இருந்தாலும் அது உங்களை அழைக்கும்போதெல்லாம் தவறாமல் பின்பற்றிச் செல்லுங்கள்.

காதல் தன் சிறகினால் உங்களை மூடிக் காக்கும்போது அதன் இறகுகளுக்கிடையே குறுவாள் மறைந்திருந்து குத்தினாலும் எதிர்ப்பின்றி இணங்குங்கள்.

பூம்பொழிலைச் சூறைக்காற்று சீரழிப்பதைப் போலக் காதலின் குரல் உங்கள் கனவுகளைச் சிதைத்தாலும் அதன் சொற்களை முழுமுற்றாக நம்புங்கள்.

காதல் உங்களுக்கு முடி சூட்டும்; உங்களைச் சிலுவையிலும் ஏற்றும். உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதைப் போலவே சிதைவுக்கும் அது வழிகோலும்.

அசைந்தாடும் உச்சந்தளிரைக் காதல் வெய்யோன் கதிரென எப்படி வருடித் தருகிறதோ அப்படியே உங்கள் அடி வரை பரவி ஆணிவேரைப் பிடுங்கும்.

தானியக்கதிர்களை ஒன்றாகக் கட்டுவதைப் போல காதல் உங்களை ஒருக்கித் தன்னோடு இறுக்கிக் கட்டிக்கொள்ளும்.

களத்தில் உங்களைப் போரடித்துத் தானியமாகப் பிரிக்கும்.

பதர்களைச் சிந்தவைத்து செழிப்பான தானியமாகத் தனியே பிரிக்கும்.

காதல் உங்களை நுண்மையான மாவாக அரைக்கும்.

நீங்கள் இளகிப் பதமாகும்வரை அது உங்களைப் பிசையும்.

அதன் பின் காதல் உங்களைத் தன் தூய எரியில் இட்டு இறையின் தூய விருந்துக்கு ஏற்ற உணவாகச் சமைக்கும்.

உங்களது இதயத்தின் மர்மங்களை உங்களுக்கே அறிவிக்கும் வண்ணம் காதல் இப்படிப் பாடாய்ப் படுத்தும். அவற்றை அறிவதன் வாயிலாக நீங்கள் வாழ்வின் இதயத்தில் ஒரு சிறு அறையாக உருமாற முடியும்.

ஆனால் நீங்கள் அச்சத்தின் காரணமாகக் காதலின் உவப்பையும் நிம்மதியையும் மட்டுமே விழைபவராயின், உடனே தங்கள் அம்மணத்தைப் போர்வையால் மூடிக்கொண்டு அன்பின் கல் அதர் நீங்கி வேறுபாதையில் விலகிச் செல்லுதல் நலம். பெரும்பொழுதுகளற்ற அச்சிறு உலகத்தில் நீங்கள் சிரிக்கலாம், ஆனால் அதில் முழுமை கூடாது. அழலாம், ஆனால் கசியும் கண்ணீர் ஆன்மத்துளியாக இராது.

காதல் சுழியத்தைத் தன்னுள்ளிருந்தே குயந்து எடுத்துத் தருகிறது. தனக்கே சுழியத்தைப் பரிசளித்துக் கொள்கிறது.

காதல் எதையும் உடைமையெனக் கொள்வதில்லை, தன்னை யாரும் உடைமை கொண்டாட ஒருபோதும் இசைவதுமில்லை.

காதலுக்குக் காதல் மட்டுமே போதுமானது.

நீங்கள் காதலிக்கும்போது ’எம் உள்ளத்தில் இறைமை இருக்கிறது’ என்று சொல்லலாகாது. மாறாக ‘இறைவனது உள்ளத்தில் யாம் இருக்கிறோம்’ என்று சொல்லுங்கள்.

காதலுக்குப் பாதை வகுக்க முயலாதீர்கள். காதல் உங்களை ஒரு பொருட்டாகக் கருதுமேயானால் அதுவே உங்களுக்கான பாதையை வகுத்து வழித்துணையாக வரும்.

காதலுக்குத் தன்னை முழுதாக நிரப்பிக்கொள்வதைத் தவிர வேறு விருப்பம் இல்லை.

ஆனால் நீங்கள் காதலால் ஆட்கொள்ளப்பட்ட பின்னரும் உங்களுக்குள் விருப்பங்கள் முளைக்குமாயின் அவை இத்தகையனவாக இருக்கட்டும்: ‘இரவின் ஒருமையில் மெல்லிசைப்பண் பாடுவதற்காக உருகி வழியும் அருவியென ஓர் உள்ளத்தைப் பெறுவீராக! 

அளப்பரிய காருண்யத்தால் எழும் வலியை அறிவீராக!

அன்பின் அறிதல் மிகுவதால் படும் காயங்களை எய்துவீராக!

விரும்பியும் மகிழ்ந்தும் குருதி சிந்தத் துணிவீராக!

இறக்கை முளைத்த இதயத்துடன் விழித்தெழுந்து அன்பைப் போற்ற இன்னொரு புதியநாள் கிட்டியதற்கு நன்றியுணர்வீராக!

நண்பகலில் இளைப்பாறியபடி காதலின் பரவசத்தை ஆழ்ந்து தியானித்து மனத்தில் அசைபோடும் வாய்ப்பைப் பெறுவீராக!

நன்றியுணர்வுடன் அந்தி மாலையில் இல்லம் திரும்புவீராக!

இதயத்தில் வீற்றிருப்பவரை எண்ணி, வாழ்த்தி, உதடுகள் போற்றிப் பாடியபடி துயில்வீராக!’

மனைநலம்

அல்மித்ரா அவரை நோக்கி, ”குருவே இணையரது மணவாழ்வைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்” என்றதும் அவர் பதிலளித்தார்: ‘நீங்கள் ஒருவருக்கொருவரெனப் பிறந்தீர்கள். காலத்தின் இருப்பு நீளும்வரை இணைந்தே இருப்பீர்கள்.

மரணத்தின் வெண்சிறகுகள் உங்கள் இருப்பைச் சிதறடிக்கும்போதும் இணைந்தே இருப்பீர்கள்.

ஆம், நித்திய இறைமையின் ஞாபகத்தில் மெளனமாய் நீடித்திருப்பீர்கள்.

இருப்பினும், உங்கள் பிணைப்புக்குள் சிறிது இடைவெளியும் இருக்கட்டும்.

விண்ணகத்தின் வளி உம்மிடையே உள்ள இடைவெளியில் நடனமாடட்டும்.

ஒருவர் மற்றவரிடம் களவு கொள்ளுங்கள். ஆயினும் காதலின் மிகுதியில் தளைப்படாதீர்கள்.

உங்களது ஆன்மாக்களின் கரைகளிடையே அலையும் கடலாக அக்காதல் இருக்கட்டும்.

ஒருவர் மற்றவரது குவளையை நிரப்பிக்கொள்ளுங்கள். ஆனால் ஒரே குவளையில் இருவரும் அருந்தாதீர்கள்.

ஒருவர் பிறருக்குத் தன் அப்பத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆனால் ஒரே அப்பத்தை இருவரும் உண்ணாதீர்கள்.

ஆடிப்பாடிக் களித்திருங்கள். ஆயினும் இருவரும் தனித்திருங்கள்.

இசை ஒருமித்து ஒலித்தாலும் யாழின் தந்திகள் பிரிந்திருப்பதைப் போல் தனித்திருங்கள்.

இதயத்தைப் பரிமாறிக்கொள்ளுங்கள். ஆனால் கிடைத்த இதயத்தைப் பற்றிக்கொள்ளாதீர்கள். வாழ்வின் கரம் மட்டுமே உங்கள் இதயத்தைப் பிணைக்க வல்லது.

நெருங்கி நில்லுங்கள், ஒட்டி நிற்காதீர்கள். சற்றே விலகி நிற்கும் தூண்களே ஆலயத்தை ஏந்தித் தாங்கும்.

பருத்த வேல மரங்களும் உயர்ந்த ஊசியிலை மரங்களும்கூட ஒன்றின் நிழலில் இன்னொன்று நின்று வளர முடியாது.’

மக்கட்பேறு

தன் மார்பில் மதலையை அணைத்தபடி நின்ற அன்னையொருத்தி அவரை நோக்கி, ”எங்களுக்குக் குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள் பெருந்தகையாளரே” என்றதும் அவர் பதிலளித்தார்: ‘உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.

வாழ்தலுக்கு ஏங்கியிருக்கும் வாழ்க்கையின் மகவுகளே அவர்கள்.

அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்களே அன்றி உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்லர்.

உங்களுடனேயே இருந்தாலும் உங்கள் உடைமைகள் அல்லர்.

நீங்கள் அவர்களுக்கு அன்பை அளிக்கக் கடவது, உங்கள் கருத்துகளை அல்ல.

ஏனெனில் அவர்களுக்கெனத் தனித்த கருத்துகள் உண்டு.

அவர்கள் உடல்கள் வசிக்க உறையுள் உருவாக்கித் தாருங்கள், உள்ளங்களுக்குச் சிறைகளை அல்ல. அவர்களுடைய உள்ளங்களோ நீங்கள் கனவிலும் தீண்ட முடியாத எதிர்காலத்தின் வீற்றிருக்கையில் அமர்வன.

நீங்கள் அவர்களை நேசிக்கலாம், பிழையில்லை. ஆனால் அவர்கள் உங்களைப் போலிருக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். வாழ்க்கை பின்னோக்கி நகர்வதுமில்லை, நேற்றின் குளத்தில் கசடாகத் தேங்கிவிடுவதுமில்லை.

உயிர்ப்பு மிகுந்த பாழிகள் உங்கள் பிள்ளைகள். அவர்களை ஏவும் வில்லாக மட்டுமே இருங்கள்.

பெருவில்லாளன் முடிவிலியின் பாதைக்குக் குறிவைத்து அம்பெய்துகிறான். அம்பு நெடுந்தொலைவு வேகமாகப் பாய வேண்டுமாறு தன் பலங்கொண்டு வில்லென உங்களை அவன் வளைக்கிறான்.

பெருவில்லாளனுடைய கைகளில் வளைபடுவதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

பறக்கும் பாழியை நேசிப்பதைப் போலவே தன் கையில் நிலைத்திருக்கும் வில்லையும் அவன் நேசிக்கிறான்.’

ஈகைத்திறன்

செல்வந்தர் ஒருவர், ”எங்களுக்கு ஈகையைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றதும் அவர் அருளினார்: ‘உங்கள் உடைமைகளை மட்டும் கொடுப்பீர்களேயானால் நீங்கள் அற்பக் கொடையாளர்கள்.

தன்னையே உவந்து அளிப்பவரே உண்மையான கொடையாளர்.

உடைமை என்பதென்ன? நாளைக்கு இவையெல்லாம் தேவைப்படும் என்று அஞ்சி சேமித்து வைக்கப்படும் பொருட்களன்றி வேறென்ன?

நாளை என்பதென்ன? திசையற்ற மணல்வெளியில் எலும்புகளைப் புதைத்து வைக்கும் அதீத சிரத்தையுள்ள நாய் பாதசாரிகளைப் பின்தொடர்ந்து செல்லும்போது அந்த எலும்புகளால் எவ்வாறு பயனடையும்? நாளை என்பதன் நிலையின்மை இத்தகையதே!

தேவை என்பதென்ன? தேவை குறித்த அச்சம் என்பதென்ன?

கேணி நிறைந்திருக்கும் போதும் தீராத் தாகம் எழுவது எத்துணை கொடியது?

தன் செல்வத்தில் இருந்து சிறிதே அளிப்பவர்கள் இருக்கிறார்கள். சுய விளம்பரத்துக்காகவும் சிற்றின்பத்துக்காகவும் கொடையளிக்கும் அவர்களது கீழ்மை, கொடையைக் கசடாக மாற்றுகிறது.

தம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளபோதும் அனைத்தையும் கொடுப்பவர்களும் இருக்கின்றனர்.

அவர்களே வாழ்வின் சாரத்திலும் ஈகையிலும் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களது வள்ளியப் பாத்திரம் ஒருபோதும் வற்றுவது இல்லை.

உவகையோடு ஈகை செய்வோர் உண்டு. அந்த உவகையே அவர்கள் பெறும் சன்மானம்.

மனக் கலக்கத்தோடு ஈகை செய்வோரும் உண்டு. அந்த மனக்கலக்கமே அவர்களுக்கான திருமுழுக்கு.

சிலரோ இன்பத்தைத் தேடாமலும் துன்பத்தை உணராமலும் ஈதலைப் பேரறமென்று கருதாமலும் கொடுக்கிறார்கள். அவர்களே மலர் முகை அவிழ்ந்து பரந்த மலைச்சரிவுகளை நறுமணத்தால் நிரப்புவதைப் போல உண்மையான ஈகையாளர்கள்.

இவ்வள்ளல்கள் கைவண்ணம் மூலமாகவே இறைமை ஞாலத்துடன் பேசுகிறது. அவர்களது விழிகள் மூலமாகவே உலகை கண்டு முறுவல் பூக்கிறது.

கேட்டபின் ஈவது நலமே ஆயினும் கேட்கும் முன்னரே குறிப்பறிந்து ஈவதே சாலச் சிறந்தது.

வசதி இருப்பவன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிடவும் இல்லாதவனைத் தேடியலைவது இன்னும் மகிழ்வளிப்பது.

கொடுப்பதற்கு இல்லை என்று மறுக்கத் தகுதியானது ஏதேனும் உண்டா?

உங்களிடம் உள்ள யாவும் ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டியனவே.

ஆதலால் இப்போது கொடுங்கள். உங்களது வள்ளியம் உங்கள் சந்ததியரது காலத்துக்கென தள்ளிப் போகாதவாறு உங்களது பருவத்திலேயே நிகழட்டும்.

“நான் கொடுப்பேன். ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்” என்று நீங்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

உங்கள் தண்டலை மரங்களும் கழனி மேயும் கால்நடைகளும் அப்படிச் சொல்வதில்லையே.

அவை யாவும் தான் வாழவே அளிக்கின்றன. அளிக்க மறுப்பவை யாவும் அழிந்துபோகும்.

இரவு பகலைப் பட்டறிய வாய்க்கப்பெற்ற ஒருவனுக்கு உங்களிடமிருந்து எல்லாவற்றையும் பெறத் தகுதியுண்டு.

வாழ்க்கைப் பெருங்கடலில் அள்ளி அருந்தத் தகுதியுள்ளவனுக்கு உங்களது சிற்றோடையில் தன் குவளையை நிரப்பிக்கொள்ள நிச்சயம் தகுதியுண்டு.

தன்னம்பிக்கையிலும் உள உறுதியிலும் ஈகையிலும் இரத்தலிலும் இருக்கும் மனவிரிவைக் காட்டிலும் பெரிய விரிநிலத்தைக் காண முடியுமோ?

கொடுக்கவிருப்பதாலேயே பெறுபவரது ஆசைகளை அம்மணமாக்கி, அவர்களது பெருமிதத்தைச் சிறுமைக்குள்ளாக்கி, தங்களது நெஞ்சைக் கிழித்துத் தம்மையே அளித்துவிடும்படி அவர்களுக்குக் கட்டளையிட நீங்கள் யார்?

ஈவதற்கும், ஈதலின் கருவியாக இருப்பதற்கும் முதலில் உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்க. 

வாழ்க்கையே வாழ்க்கைக்குக் கொடையளித்துக்கொள்கிறது என்பதே உண்மை. அதற்குச் சாட்சியாக இருப்பதை விடுத்துத் தானே கொடைவள்ளல் என்று செருக்கு கொள்வது மடமை.

பெறுபவர்களே! – நீங்கள் அனைவருமே ஒருவகையில் பெறுபவர்கள்தான் – நன்றியின் பாரத்தைச் சுமக்காதீர்கள். அது நுகத்தடியாக உங்களை அழுத்திவிடும்.

மாறாகப் புரவலர் பரிசினைச் சிறகைப் போல விரித்து அவர்களுக்கு நிகராகப் பறந்து செல்க!

ஏனெனில் கடனைப் பெரிதாய் நினைந்து துன்புறுவது நில மடந்தையை அன்னையாகவும் கடவுளைத் தந்தையாகவும் கொண்ட பெருவள்ளல் மீது அவநம்பிக்கை கொள்வதாகிவிடும்.’

ஆங்கில மூலம்: The Prophet by Kahlil Gibran, தமிழாக்கம்: கோ. கமலக்கண்ணன், தீர்க்கதரிசி, தமிழினி வெளியீடு.

1 comment

Radha February 12, 2023 - 7:08 pm

மயக்குறு நடை, தமிழாக்கம். கமலக்கண்ணனுக்கு வாழ்த்துகள்.

Comments are closed.