தனது எழுபத்தைந்தாவது அகவையை அடைந்தபோது தனக்கு விடப்பட்ட கொலை மிரட்டல்களை எல்லாம் கடந்து வந்துவிட்டதாக நம்புவதற்குச் சல்மான் ருஷ்டிக்கு (Salman Rushdie) காரணங்கள் வலுத்திருந்தன. நெடுங்காலம் முன்பு – 1989ம் ஆண்டு காதலர் தினம் – ஈரானிய உயர்மட்டத் தலைவர் அயாதுல்லா ருஹோல்லா கோமினி, ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ (The Satanic Verses) நாவலை மத நிந்தனைப் படைப்பு என்று குறிப்பிட்டு அதன் படைப்பாளர் உள்ளிட்ட பதிப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் கொலைத் தண்டனை வழங்கி ஃபத்வா என்ற செயலாணையை வெளியிட்டார். லண்டனில் வசித்துவந்த ருஷ்டி தனது அடுத்த பத்தாண்டில் காவலர் பாதுகாப்பிடையே ஒரு இல்லத்து அகதியாக வாழ்ந்தார். 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூயார்க்கில் வசிக்கத் தொடங்கிய பிறகு அவர் சுதந்திரமாகவும் அவ்வப்போது காவலர் பாதுகாப்பின்றியும் பயங்கரவாத அச்சுறுத்தல் தன்மீது ஏற்றப்படுவதை மறுத்தும் வாழத் தொடங்கினார்.
வெளிப்படையான மிரட்டல் தொடர்ந்து நீடித்த காலத்தைவிடத் தற்போதைய இணைய வெறிக்காலத்தின் அச்சுறுத்தல் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்கள் பலர் முன்னிலையில் 2012-இல் நடைபெற்ற வருடாந்திர இலையுதிர் காலக் கூடுகையில் செய்தியாளர்கள் குழுவில் நானும் இருந்தேன். சிறிய கூட்டமொன்றில் ஈரான் குடியரசு தலைவர் மஹ்மூத் அஹமதிநெஜாத் (Mahmoud Ahmedinejad) அவர்களிடம் ஈரானிய நிறுவனம் ஒன்று ருஷ்டியின் தலைக்கு விதித்திருந்த பல கோடி சன்மானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதா என்ற கேள்வியை முன்வைத்தேன். அஹமதிநெஜாத்தின் முகத்தில் வன்னகை மின்னியது. ‘சல்மான் ருஷ்டியா, அவர் எங்கே இருக்கிறார்?’ எனக் கேட்டார். ‘அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லையே. அவர் அமெரிக்காவில் இருக்கிறாரா? ஒருவேளை அங்கு இருப்பாராயின் அதுபற்றி நீங்கள் ஒளிபரப்பாமல் இருப்பதே அவருக்குப் பாதுகாப்பு.’
ஓராண்டுக்குள் அஹமதிநெஜாத் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். முல்லாக்களின் ஆதரவுகளும் விலகின. ருஷ்டி தளைகளற்ற மனிதனாகத் தொடர்ந்து வாழ்ந்தார். ஆண்டுகள் கழிந்தன. தொடர்ந்து நூல்கள் எழுதினார், கற்பித்தார், சொற்பொழிவு ஆற்றினார், பயணம் செய்தார், வாசகர்களைச் சந்தித்தார், மணமுடித்தார், மணமுறிவு செய்தார். தன்னைத் தத்தெடுத்த நகரின் நிரந்தர வசிப்பாளனாக ஆனார். தன் அடையாளங்களை மறைக்கும் அவசியம் ஏற்படுகையில் மட்டும் பேஸ்பால் தொப்பியை அணிந்தார்.
நியூயார்க்கில் வாழ்ந்த முதல் சில மாதங்கள் குறித்து ‘என்னருகில் இருப்பது குறித்து மக்கள் அஞ்சினார்கள். அதை நிறுத்துவதற்கு ஒரே வழி நான் அஞ்சாமல் இருப்பதே என்று கருதினேன். அவர்களுக்கு அஞ்ச ஏதுவுமில்லை என்று நான் காட்ட வேண்டும்’ என்று சொன்னார். ஓரிரவு அவர் தன் நண்பரும் முகவருமான ஆண்ட்ரூ வைலியுடன் (Andrew Wylie) இரவுணவுக்காகக் கிழக்கு ஹாம்டனில் உள்ள ஆடம்பரமான விடுதியான நிக் & டோனிக்குச் சென்றார். ஓவியர் எரிக் ஃபிஷே (Eric Fischl) அவருடைய மேசைக்கு வந்து ‘நாங்கள் அனைவரும் பீதியாகி விடுதியை விட்டு வெளியேறுவதுதானே சரியானது?’ என்று கேட்டார்.
’நான் இரவுணவுக்காக வந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி எதுவும் செய்யலாம்’ என்று பதிலளித்தார் ருஷ்டி.
ஃபிஷே அவரை அவமதிக்கும் எண்ணத்துடன் சொல்லவில்லை என்றாலும் செய்தி ஊடகங்களில் ருஷ்டியைப் பற்றிய பத்திகள் சிலவற்றில் ஏளனமான தொனியே இருந்தது. உதாரணமாக, டைம்ஸ் இதழில் ‘நியூயார்க் இரவு வாழ்க்கையின் களைப்பேறாத காட்சியின் இருப்பு’ என்று லாரா எம். ஹோல்சன் (Laura M. Holson) குறிப்பிட்டிருந்ததைச் சொல்லலாம். ஒருவேளை சோல்சென்சைன், போனோவுடன் மேடையேறி இருப்பாரா அல்லது மோம்பாவுடன் நடனமாடி இருப்பாரா?
ருஷ்டிக்குக் கரவு வாழ்க்கை என்பது சிறைப்பாடுதான். அவர் தன் விருப்பத்திற்கேற்ப வாழும் சமூக மனிதன். அவர் ஃபத்வாவை அபத்தமானது என்று நிரூபிக்க முயன்றிருக்கிறார். ஆறாண்டுகளுக்கு முன்பு அவர் ‘Curb Your Enthusiasm’ என்ற தொடரின் அத்தியாயத்தில் தோன்றியபோது லேரி டேவிட் (Larry David) தனது ‘ஃபத்வா – இசைப்படம்’ என்ற வெளியாகவிருந்த படைப்பில் அயாதுல்லாவை ஏளனம் செய்ததற்காக ஈரானிலிருந்து நிறைய மிரட்டல்களைப் பெற்றிருந்தார். டேவிட் பீதியிலிருந்தபோது ருஷ்டியின் பாத்திரம் கொலை மிரட்டலின் நிழலிலேயே வாழும் வாழ்க்கை பீதியூட்டுவதாக இருக்கும்போதும் அது பெண்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கிறது என்று சொல்கிறது. அவர், ‘பெண்கள் உன்னை மொய்ப்பதற்கு நீ காரணமல்ல. உன்னைச் சுற்றி மன்மத வளையமாக மின்னும் ஃபத்வாதான் காரணம்!’ என்பார்.
பொதுமக்களை அணுகும் ஒவ்வொரு முறையும் ருஷ்டி தான் வாழ்வதோடு மட்டும் நில்லாமல் தன் நகரில் தன் மேசையில் அமர்ந்தபடி வாழ்வாங்கு வாழப் போவதாகவும் காட்டியபடி இருந்தார். 2012ல் வெளியான ‘ஜோசப் ஆண்டன்’ என்ற படர்க்கைத் தன்வரலாற்று நூலில் ‘முழுமையான பாதுகாப்பு என்று ஒன்று இல்லை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ‘வெவ்வேறு அளவிலான பாதுகாப்பின்மை மட்டுமே இருக்கிறது. ஒருவன் அதைச் சேர்த்தே வாழப் பழக வேண்டும்.’ இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படைகளும் ஹெஸ்பொல்லாவும் கூட்டு முயற்சிசெய்து தன்னைக் கொல்ல வேண்டியதில்லை, மாறாகத் தனிமையில் இருக்கும் மனம் பிறழ்ந்த ஒருவன் மிக எளிதாக அதைச் செய்ய முடியும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ‘அந்தச் சம்பவம் நிகழ்ந்து வெகு காலமாகிவிட்டது. உலகம் தொடர்ந்து இயங்குகிறது’ என்று என்னிடம் சொன்னார்.
கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸ் (Rachel Eliza Griffiths) உடன் செப்டம்பர் 2021-இல் ஐந்தாவது மணம் செய்துகொண்டார் ருஷ்டி. இருவரும் ஆறாண்டுகளுக்கு முன்பு PEN நிகழ்வில் முதல்முறை சந்தித்தனர். இனிய தாம்பத்யம். பெருந்தொற்று காலத்தை இருவரும் பயனுள்ள முறையில் கழித்தனர். கடந்த ஜூலையில் தனது புதிய நூலான ’வெற்றி நகரம்’ (Victory City) புதினத்தின் இறுதித் திருத்தங்களைச் செய்தார் ருஷ்டி.
இந்நாவலுக்கான ஊக்கிகளுள் ஒன்று சில தசாப்தங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் உள்ள ஹம்பி என்ற நகரத்துக்கு அவர் பயணம் மேற்கொண்டது. ’வெற்றி நகரம்’ மீளுருவாக்கம் செய்யப்பட்ட சமஸ்கிருத புராணத்தின் வடிவில் எழுதப்பட்டுள்ளது. நாவலில் பம்பா கம்பன என்ற இளைஞிக்குத் தன் தாயின் மரணத்தைக் கண்டபிறகு கிட்டும் தெய்வீக ஆற்றலைக் கொண்டு பிஸ்நாகா என்ற சிறந்த பெருநகரத்தை நிர்மாணிக்கிறாள். அதில் ஆணாதிக்கச் சட்டங்களைப் பெண்கள் எதிர்க்கின்றனர், மத நல்லிணக்கம் நிலவுகிறது – குறைந்தது தற்காலிகமாகவேனும். இந்து மதப் புராணம், தெற்காசிய வரலாறு குறித்த ருஷ்டியின் வாசிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த மீபுனைவு நூல் மரபின் ஆழங்களைப் பேசுகிறது.
ருஷ்டி, ‘விஜயநகரின் முதல் அரசர்கள் தம்மை நிலவிலிருந்து பிறந்தவர்கள் என மிகுந்த தீர்க்கத்துடன் முன்வைக்கின்றனர்’ என்றார். ‘ஹரிஹரரும் புக்கரும் தம்மை நிலவுப் பேரரசின் உறுப்பினர்கள் என்று சொல்வதன் மூலம் புராணத்தின் பெருநாயகர்களோடு தம்மையும் அடையாளப்படுத்துகின்றனர். அது அக்கிலிஸ் அல்லது ஆகமெம்னான் ஆகியோரின் குடும்ப மரபில் பிறந்தவன் என்று சொல்வதை ஒத்தது. எனக்குத் தோன்றியது என்னவென்றால், ”ஓ! உன்னால் அப்படிச் சொல்ல முடியுமென்றால் என்னாலும் எதையும் சொல்ல முடியும்!”’
இவை அனைத்தையும் கடந்து இந்நூல் பம்பா கம்பனா என்ற கதாபாத்திரத்தால் மிதக்கிறது. ருஷ்டி அப்பாத்திரம் தன்னுள் சடுதியில் உதித்ததாகவும் கதைக்குத் தேவையான திசையைச் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டார். ருஷ்டிக்கு ஒரு நாவலை எழுதும்போது அதில் ஒரு ‘உலகைப் படைப்பதே’ மிகுந்த உவகை அளிக்கக்கூடியது. அந்த உலகை உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்தைப் படைப்பதும் அத்தகையதே. ‘நான் அதை உருவாக்கினேன் என்றாலும் அவளும் சேர்ந்தே அதைப் படைத்தாள்.’ இந்த உவகை தொற்றக்கூடியது. ‘வெற்றி நகரம்’ ஆழ்ந்து உவக்கத்தக்க நாவல். அதுமட்டுமின்றி ஒரு உறுதிப்பாடு. பெருநகரம் சிதிலமடைந்த இறுதிப் பகுதியில் எஞ்சியிருப்பது கதைசொல்லியின் குரல் அல்ல, அவளுடைய சொற்களே:
பம்பா கம்பனா ஆகிய நான் இந்நூலின் ஆசிரியர்
பேரரசுகள் தோன்றி வீழ்ந்ததை நான் கண்டிருக்கிறேன்
இந்த அரசர்கள், அரசிகள் இன்று எப்படி நினைவுகூரப்படுகிறார்கள்?
வெறும் சொற்களாக எஞ்சியிருக்கிறார்கள்…
நானுமே இப்போது ஏதுமில்லை.
சொற்களின் நகரம் மட்டுமே மீதம் இருக்கிறது.
சொற்கள் மட்டுமே வெற்றியாளர்கள்.
இவற்றை நம்பிக்கையின் சொற்களாக வாசிக்காமல் இருப்பது இயலாதது. அவர் மீது ஏவப்பட்ட வசை மிரட்டல்களையும் கடந்து அவர் தொடர்ந்து எழுதிவரும் பண்பைக் கண்டு ருஷ்டியின் நண்பர்கள் வியக்கின்றனர். அவரது நிலையில் தான் இருந்திருந்தால் ‘இப்போது இமைகளும் நாசி மயிறும் உதிர்ந்த முன்னூறு பவுண்டு எடைமிக்க அழுமூஞ்சியாக இருந்திருப்பேன்’ என்கிறார் மார்டின் ஆமிஸ் (Martin Amis). ஆனால் ஃபத்வா விதிக்கப்பட்டதிலிருந்து கணக்கெடுத்தால் ‘வெற்றி நகரம்’ ருஷ்டியின் பதினாறாவது நாவல்.
இறுதி வரைவு அவருக்குத் திருப்தியளித்தது. அதை வாசித்த நண்பர்களிடமிருந்து நேர்மறை குறிப்புகள் வந்தன. (என்னிடம் நாவலாசிரியர் ஹரி குன்ஸ்ரூ (Hari Kunzro) அவரது படைப்புகளுள் நீடித்து நிலைக்கும் படைப்பாக ‘வெற்றி நகரம்’ இருக்குமெனத் தெரிவித்தார்.) பெருந்தொற்றின்போது ருஷ்டி டிராயின் ஹெலன் பற்றி ஒரு நாடகத்தை எழுதி முடித்திருந்தார். அடுத்த நாவலுக்கான கருவுடன் விளையாடிக்கொண்டிருந்தார். தாமஸ் மன்னின் ‘The Magic Mountain’-ஐயும் காஃப்காவின் ‘The Castle’-ஐயும் மீள வாசித்தார். ஆல்ஃப் மலைத்தொடரில் இருக்கும் உடல்நல இல்லம், தனித்திருக்கும் சட்டமன்றம் என வழமை மீறிய தனித்து வாழும் உலகங்களுக்கான இயல்பான மொழிநடையைக் கொண்டிருந்தவை அவ்விரு நாவல்கள். அவற்றை ஒத்த களத்தை – ஒரு கற்பனையான கல்லூரியை உருவாக்க நினைத்தார் ருஷ்டி. அதற்கான குறிப்புகளைச் சேகரித்தார். அதற்கிடையில் அமைதியான கோடையையும் அதற்குப் பிறகு ‘வெற்றி நகரம்’ குறித்து பிரச்சாரம் செய்வதற்கான குளிர்காலத்தையும் எதிர்நோக்கி இருந்தார்.
ஆகஸ்டு 11ஆம் நாளன்று தென்மேற்கு நியூயார்க் மாகாணத்தின் ஏரிக்கரை நிலத்தில் அமைந்திருந்த சடாகுவா நிறுவனத்தில் (Chautauqua Institution) பேசுவதற்காக ருஷ்டி வந்துசேர்ந்தார். அங்கு ஒவ்வொரு கோடையிலும் ஒன்பது வாரங்களுக்குத் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் புத்துணர்ச்சிமிக்க காற்றைச் சுவாசிக்கவும் ஆர்வமிக்க குழுவினர் வந்து பேருரை, பாடம், திரைப்படம், நடிப்பு, வாசிப்பு எனப் பல்வேறு துறையில் கற்றறிந்து செல்வார்கள். 1874 முதல் சடாகுவா இயங்கி வருகிறது. ‘நான் போரை வெறுக்கிறேன்’ என்ற புகழ்பெற்ற உரையை 1936ஆம் ஆண்டு ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இங்குதான் ஆற்றினார். சில ஆண்டுகளாக ருஷ்டிக்கு கொடுங்கனவுகள் வரத்தொடங்கி இருந்தன. இங்கு வரும் ஈரிரவுகளுக்கு முன்புதான் அடிமை வீரனைப் போன்ற ஒருவன் கூரிய ஆயுதத்தால் தன்னைத் தாக்குவதாக அவர் கனவு கண்டிருந்தார். நள்ளிரவு அபசகுணங்கள் ஏதும் அவர் வீட்டைவிட்டுக் கிளம்புவதைத் தடுக்கப்போவதில்லை. சடாகுவா ஒரு முழுமையான நிகழ்விடம். சமையல் நிகழ்ச்சி, மாயாஜால மேடைகள், ஞாயிறு பள்ளி என எல்லாம் அங்கு உண்டு. ஒரு கொடையாளர் என்னிடம் ‘பூமியில் மிகப் பாதுகாப்பான இடம்’ என்று அதை வர்ணித்திருந்தார்.
தனது நண்பர் ஹென்றி ரீஸுடன் (Henry Reese) மேடையேறுவதாக ருஷ்டி ஏற்றிருந்தார். பதினெட்டாண்டுகளுக்கு முன்பு, நாடு கடத்தப்பட்ட படைப்பாளர்களுக்கு உதவுவதற்காக பிட்ஸ்பர்கில் புகலிட நகர் என்ற ஒன்றை உருவாக்கும் பொருட்டு நிதி திரட்டினர்; அதற்காக ரீஸுக்கு ருஷ்டி உதவி இருந்தார். ஆகஸ்டு 12 அன்று ரீஸுடனும் வேறு சில கொடையாளர்களுடனும் அதீனியம் விடுதியின் வெளிப்புற மேசையில் அமர்ந்து ருஷ்டி காலையுணவு உண்டார். அப்போது அவர் நகைச்சுவைத் துணுக்குகளையும் கதைகளையும் சொல்லி வந்தார். சில நேரங்களில் தான் அமேசான் தளத்தில் நூல்களை வாங்கியதாகவும் அதுகுறித்து தாழ்வுணர்ச்சி கொண்டதாகவும் தெரிவித்தார். போலிப் பெருமிதப் பாவனையுடன் நூல்களில் வேகமாகக் கையெழுத்திடும் தன் திறமையைச் சுட்டியவர், தன்னைவிட ஆமி டேன் (Amy Tan) வேகமானவள் என்று சொன்னார். ‘ஆனால் அவளுக்கு ஒரு அனுகூலம் இருக்கிறது. அவள் பெயர் மிகச் சிறியது.’
ஆயிரத்துக்கும் மேலானோர் நிறைந்த கூட்டம். திறந்த வெளி அரங்கு. டி சட்டையும் அரைக்கால் சராயும் அணிந்தால் போதுமென்ற தெளிந்த தட்பவெப்பநிலை. நிகழ்விடத்திற்குச் செல்லும் பாதையில் ரீஸ், ருஷ்டியைத் தன் தொண்ணூற்று மூன்று வயது அன்னையிடம் அறிமுகப்படுத்துகிறார். இருவரும் ஒன்றாக ஓய்வறைக்குச் சென்று அவர்களுடைய சொற்பொழிவைத் திட்டமிடுகின்றனர். சமகால இலக்கியத்தின் கற்பனைக் கூறுகளில் பண்பாட்டுக் கலப்பு குறித்துப் பேச வேண்டும், சில படவில்லைகளைக் காட்டி புகலிட நகரைப் பற்றி விவரிக்க வேண்டும். இறுதியாக கேள்விகளுக்கான பகுதி.
முற்பகல் 10.45 மணிக்கு ருஷ்டியும் ரீஸும் மேடையேறித் தத்தம் மஞ்சள் இருக்கைகளில் பொருந்தி அமர்ந்தனர். பக்கத்தில் சடாகுவாவின் கலை இலக்கிய நிகழ்ச்சியின் இயக்குநரான கவிஞர் சோனி டோன் ஐமே (Sony Ton Aime) அமர்ந்திருந்தார். அவர் எழுந்து சொற்பொழிவு குறித்து அறிமுகம் செய்யும் விதமாக விரிவுரைக்கான சாய்வு மேசையை நோக்கிச் சென்றார். 10.47-க்குக் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கறுப்புச் சட்டையணிந்த இளைஞன் ஒருவன் கையில் கத்தியுடன் இடைகழிப்பாதை வழியாக ஓடிவந்து மேடையில் ஏறினான்.
பம்பாயில் அரபிக் கடல் தெரியும் கோணம் கொண்ட ஒரு மலைவீட்டில் ருஷ்டி வளர்ந்தார். இஸ்லாமியக் குடும்பம் என்றபோதும் மதச்சார்பின்மை கொண்ட குடும்பம் அவருடையது. அவர்கள் சிறிய காலமே என்றபோதும் செல்வந்தர்களாக இருந்தனர். சல்மானின் தந்தை அனிஸ் அஹமத் ருஷ்டி (Anis Ahmed Rushdie) நெசவாளராக இருந்தார். மகனது சொற்களில் குறிப்பிட்டால், ‘நான்கு வயதுக் குழந்தையின்’ வியாபார புத்திக்கூர்மையே அவருக்கு இருந்தது. ஆனால் அவரது அனைத்துக் குறைகளையும் மீறி ருஷ்டியின் தந்தை அவருக்குக் ‘கிழக்கின் மகோன்னதக் கதைகளை’ வாசித்துக் காட்டினார்; ஆயிரத்தோரு இரவுகள் நூலின் ‘ஷெஹர்ஷாதே’வும் அதில் அடங்கும். அதுமட்டுமின்றி சமஸ்கிருந்தத்தின் பஞ்சதந்திரக் கதைகளையும் நபி முகமதுவுடைய மாமா அமிர் ஹம்சாவின் சிந்தனைகள் போன்றவற்றையும் சொன்னார். சல்மானுக்குக் கதைகள் மீது தீவிரப் பற்று உண்டானது. அவையே அவர் மதித்துப் பாதுகாத்த விலைமதிப்பற்ற சொத்து. அவர் புத்தகக் கடையில் மணிக்கணக்கில் அமர்ந்து ராமாயண மகாபாரத இதிகாசங்களையும் கிரேக்க ரோமானியக் காப்பியங்களையும் பெர்டி ஊஸ்டர், ஜீவ்ஸ் ஆகியோரின் சாகசங்களையும் கரைத்துக் குடித்தார்.
இளம் ருஷ்டிக்கு எதிலும் அச்சமில்லை. மதநூல்களில் கருக்கொண்ட கதைகள் மீதும்கூட! ஆயினும் ஓரளவு அவற்றை நம்பினார். பலகடவுள் தன்மை கொண்ட மரபுகளில் கடவுளர் மோசமாகவும் விசித்திரமாகவும் பிறழ்வாகவும் இருப்பதை எண்ணி வியந்தார். இந்துப் புராணத்தில் வரும் சமுத்திர மந்தனம் அவரை மிகவும் ஆட்கொண்டது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து சாகாவரம் தரும் அமிர்தத்தை எடுப்பது குறித்த கதை அது. ருஷ்டி இரவில் நிமிர்ந்து விண்மீன்களை நோக்கி, ‘இப்போது நான் வாயைத் திறந்தால் ஒரு துளி அமுதம் என்னுள்ளும் புகுந்து நான் மரணமற்றவனாவேன்!’ என்று கற்பனை செய்து சொல்லிக்கொண்டதுண்டு.
பிற்காலத்தில் வாய்மொழி மரபுகள் வாயிலாகவும் ருஷ்டி கற்றதுண்டு. கேரளாவுக்குச் சென்ற பயணத்தில் அவர் சில தொழில்முறை கதைசொல்லிகள் பணம் கட்டி அமர்ந்திருக்கும் ஒரு பெரிய கூட்டத்தின் முன் நின்று மணிக்கணக்காகக் கதையைத் திரிப்பதைக் கண்டார். அந்தக் கதைசொல்லிகளின் பாணியே ருஷ்டியை மிகவும் கிளர்த்தியது. வட்டவடிவமாகவும் விலகிச் செல்வதுமாகவும் முன்னேறிச் செல்வதுவாகவும் இருந்தது அப்பாணி. அவர், ‘அவர்களிடம் மூன்று நான்கு கதை விதப்பு முறை கைவசம் இருக்கிறது. எப்போது கேட்டாலும் அவற்றைப் பயன்படுத்தி நூற்று எடுக்கிறார்கள்’ என்றார். அவையும் அவரது கற்பனைத் திறனைத் தூண்டி பிற்காலத்தில் நாவல்களுக்கான அசாத்தியமான களங்களை அடைய அவருக்கு உதவி இருக்கிறது.
பதிமூன்றாம் அகவையில் ருஷ்டி, ரக்பி என்ற நூற்றாண்டு பழைய ஆங்கிலேய தங்குபள்ளிக்கு அனுப்பப்பட்டார். அந்நாளில் தங்குபள்ளியில் சேர்பவரிடம் மூன்று குறைபாடுகள் வழமையாக இருக்கும்; அவை ‘வெளிநாட்டவனாக இருத்தல், அறிவாளியாக இருத்தல், விளையாட்டில் சோபையாக இருத்தல்’ என்று குறிப்பிட்டார் ருஷ்டி. அவரிடம் இம்மூன்று குறைகளும் இருந்தன. பல்கலைக்கழக மாணவனாக இருந்தது குறித்து மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கிறார். கேம்பிரிட்ஜில் கிங்க்ஸ் கல்லூரியில் பலமுறை ‘Howards End’, ‘A Passage to India’ ஆகிய புதினங்களின் ஆசிரியரான ஈ.எம். ஃபாஸ்டரைச் (E. M. Forster) சந்தித்திருக்கிறார். ‘நானொரு எழுத்தாளனாகும் முனைப்புடன் இருப்பதை அறிந்ததும் அவர் மிகவும் ஊக்குவித்தார்’ என ருஷ்டி குறிப்பிட்டுள்ளார். ‘அவர் சொன்ன ஒன்றை நான் பொக்கிஷமாகக் காத்துவருகிறேன். இந்தியாவின் மகத்தான நாவல் இந்தியாவிலிருந்து வந்து மேற்கத்திய கல்வி பெறும் ஒருவரால் எழுதப்படும்!’
’நான் Passage to India-வை மிகவும் மதிக்கிறேன். ஏனெனில் எதிர்காலனியாக்கச் சிந்தனைகள் வெகுவாக புழக்கத்தில் இல்லாத காலத்தில் ஒரு எதிர்காலனியாக்க நூலாக அது இருந்ததே. அதில் இருந்த ஃபாஸ்டர்தனமான குளிர்ந்த, பவ்யமான மொழிநடை மட்டுமே எனக்கு உவப்பில்லை. இந்தியாவில் இல்லாத ஒன்று எனில் அது குளிர்மைதான் என்று எனக்குத் தோன்றியது. கொதிக்கும் சூழல், இரைச்சல், கும்பல், பெருக்கம் என இருக்கும் தேசமது. அதை ஒத்த ஒரு மொழியைக் கண்டடைவது எப்படி?’
இளங்கலை மாணவனாக ருஷ்டி வரலாறு படித்தார். குறிப்பாக அவரது ஆர்வம் இந்தியா, அமெரிக்கா, இஸ்லாம் ஆகியவற்றை நோக்கி இருந்தது. அப்போது அவருக்குச் ‘சாத்தானின் செய்யுள்கள்’ என்ற பகுதியைப் பற்றி அறிய நேர்கிறது. ஒருமுறை முகமது நபி சாத்தானால் பீடிக்கப்பட்டிருந்தார் என்றும் மூன்று தேவதைகளை வணங்குவதாக அறிவித்தார் என்றும் விண் தூதர் காப்ரியேலுடைய இடையீட்டால் மனம் தெளிந்தார் என்றும் குறிப்பிருந்தது. ஆனால் இந்தப் பகுதி புனித நூலிலிருந்து அகற்றப்பட்டது. இந்தக் கதை நிறைய கேள்விகளை எழுப்பியது. மூன்று தேவதைகள் பற்றிய அச்செய்யுள்கள் மெக்காவில் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகவே இருந்தது, உடனடியாக அது நீக்கப்பட்டதன் காரணம் என்ன? அவை பெண்கள் என்பதாலா? முகமது பன்கடவுள் மதத்தோடு மோகம் கொண்டிருந்தாரா? அப்படியானால் இறைவாக்கு என்பதே பொய்யா? சாத்தானின் செயலா? ‘எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்’ என்றார் ருஷ்டி. ‘நல்ல கதை.’ அதைப் பயன்படுத்திக்கொள்வதற்காகக் கோப்பில் சேகரித்து வைத்தார். ‘பின்னாளில் அது எத்தனை நல்ல கதை என்பதை அறிந்துகொண்டேன்.’
கேம்பிரிட்ஜில் பட்டம்பெற்று லண்டனுக்குக் குடிபெயர்ந்ததும் ருஷ்டி எழுத்தாளனாவதற்கு அணியப் பணிகளைச் செய்தார். கதைகளையும் புதினங்களையும் எழுதினார். கூடவே தன் பணிகள் மீதான தீவிர விமர்சனங்களையும் எழுதினார். அவை குறித்துப் பின்னாளில் ‘உடனடியான சுய இன்பம் போன்ற மகிழ்ச்சியையும் அதைத் தொடர்ந்து அவமான வலியையும் தந்தன’ என்று குறிப்பிட்டுள்ளார். நிறைய அச்சு தட்டுதல், வரைவை முடித்தல், பின்னர் படைப்புகளை ஓரத்தில் எறிதல் எல்லாம் நிகழ்ந்தன. ‘The Antagonist’ என்ற ஒரு நாவல் தாமஸ் பிஞ்சோனுடைய பாதிப்பு மிகுந்தது. அதில் ஆகஸ்டு 14-15, 1947 அன்று நள்ளிரவில் பிறந்த சலீம் சினாய் என்ற இரண்டாம் நிலை பாத்திரம் இருந்தது. (கோப்புச் சேகரிப்பில் இன்னும் ஒன்று கூடிற்று.) இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனம் செய்த இந்திரா காந்தியை நோக்கி எழுதப்பட்ட ‘Madame Rama’-வும் இன்னொரு வீண் அம்பாகி வீழ்ந்தது. ருஷ்டியின் முதல் நாவல் ‘Grimus’ 1975ல் பதிப்பிக்கப்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் சூஃபி உரைநடைக் கவிதையான ‘பறவைகளின் கூட்டுரை’ என்ற கவிதையின் அடிப்படையில் எழுதப்பட்ட அறிபுனைவு – மிகுபுனைவு வகைமை நூலாகும் அது. உர்சுலா கே.லி.குவின் உள்ளிட்ட சிலரது கவனத்தையும் பாராட்டையும் அந்நூல் பெற்றபோதும் மேம்போக்கான விமர்சனங்களும் குறைவான விற்பனையுமே அந்நூலுக்குக் கிடைத்தது.
தீராது நீண்ட இந்தத் தகுதிகாண் பருவக் காலத்தைக் குறைக்கும் பொருட்டு F.Scoot Fitzgerald, Joseph Heller, Don Delilo ஆகியோரைப் போல ருஷ்டியும் விளம்பரத் துறையில் – அதிலும் முதன்மை நிறுவனமான Ogilvy & Matherல் – பணியில் இணைந்தார். அவர் Daily Mirror, Scotch Magic Tape, Aero Chocolate bar போன்றவற்றின் தனித்தன்மைகளைப் புகழ்பாடி எழுதினார். அந்தப் பணி மிக இலகுவாக இருந்தது. அவருக்கு வார்த்தை விளையாட்டு, பகடி, அபத்த நகைச்சுவைப் பாடல், உவமை போன்றவை தண்ணீர்பட்ட பாடு. தனது முப்பதாவது அகவையை நெருங்கும்போது அவருடைய மிகச் சிறந்த சாதனையாக அறியப்பட்டது Aero-வுக்காக அவர் செய்த பிரச்சாரத்தில் எழுதிய கடிதம்தான். ‘உங்களுக்குக் கிடைக்கும் குமிழ்மை மிகுந்த பால் சாக்லெட்!’ அவர் அந்த மிட்டாய்த் துண்டினை ‘அற்புதக் குமிழ்’, ‘அருஞ்சுவைக் குமிழ்’, ‘தவிர்க்க முடியாத குமிழ்’ என்றெல்லாம் எழுதினார். கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் ‘இங்கு கிடைக்குமிழ்..’ (Availabubble here) என்று எழுதி வைத்தார்.
ஆனால் விளம்பரத் துறை ஒருபோதும் அவருடைய கனவாக இருந்ததில்லை. இப்போது செய் அல்லது செத்து மடி என்கிற அடிப்படையில் தன் எழுத்து வேலைகளில் மும்முரமானார். இந்தியாவில் ஒரு நீண்ட பயணம். துணைக்கண்டத்தில் தீராத பேருந்துகளிலும் எண்ணற்ற உரையாடல்களிலும் மூழ்கியவருள் ஏதோவொன்று புத்துயிர்ப்பு கொண்டது. அவர் சொற்களில் ‘ஒரு உலகம் வெள்ளமெனத் திரண்டு மீள வந்தது’ என்கிறார். இங்குதான் அவர் எதிர்பார்த்த கொதிக்கும் இரைச்சல் மிக்க பாம்பே ஆங்கிலம் காணக் கிடைத்தது. 1981-இல் ருஷ்டி தன் முப்பத்து மூன்றாம் வயதில் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ (Midnights Children) என்ற தன்வரலாற்று தேசிய நூலை வெளியிட்டார். அது பம்பாயின் இதிகாசமாகவும் சுதந்திர இந்தியாவின் எழுச்சி குறித்த நூலாகவும் இருந்தது. நாவலின் தொடக்கம் தனித்துவமிக்க ஒரு குரல் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொள்வதாக இருந்தது எனலாம்:
”நான் பம்பாய் நகரில் பிறந்தேன்.. முன்னொரு காலத்தில்! அப்படி நிறுத்திக்கொண்டால் போதாது. பிறந்த நாளைச் சொல்லாமல் இருக்க முடியாது. நான் மருத்துவர் நார்லிகர் மருத்துவமனையில் 1947, ஆகஸ்டு திங்கள் 15 அன்று பிறந்தேன். நேரம்? நேரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது இரவில். அப்படிச் சொல்வதும் போதாது, இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும். நள்ளிரவின் புள்ளியில் என்பதே உண்மை. நான் இவ்வுலகுக்கு வருவதை கடிகாரமுட்கள் கைதட்டி வரவேற்றன. சொல்லி விடு, சொல்லி விடு: இந்தியாவுக்குச் சுதந்திரம் கிட்டிய அதே கணத்தில் நான் இவ்வுலகில் பிறந்தேன். பெருமூச்சொலிகள். சாளரத்துக்கு வெளியே வாண வேடிக்கைகள், மக்கள் கூட்டம்… சலீம் சினாய் ஆகிய நான் – பின்னாட்களில் சளிமூக்கு, கறமூஞ்சி, சொட்டை, தும்மலான், புத்தா, நிலவுத் துண்டு என்றெல்லாம் அழைக்கப்பட்டேன் – ஊழின் பிடியில் நன்கு சிக்கினேன்.”
ஒருவேளை, சால் பெல்லோவின் (Saul Bellow) ‘The Adventures of Augie March’–ஐ இதன் வேறுபட்ட எதிரொலி எனக் கருதலாம்: ‘நான் சிகாகோவில் பிறந்த அமெரிக்கன். சிகாகோ மந்தமான நகரம். நான் கற்பித்துக்கொண்ட வழிகளைப் பின்பற்றி சுதந்திரமாக என் பாணியில் வெற்றிபெறும் பொருட்டு முன்னகர்கிறேன்..’ ருஷ்டி தனது முந்தைய வரைவுகளில் பயன்படுத்திய படர்க்கை விதப்பு முறையிலிருந்து நாயகனுடைய தன்மை விதப்பு கோணத்திற்கு மாறியதும் நாவல் எழத் தொடங்கியது. ருஷ்டி சடுதியில் தன்னை உருவாக்கிய உலகத்திற்குள் நுழைந்தார். ஃபாஸ்டர் வேறு ஒரு பணியில் இருந்தார். ருஷ்டியோ ஒரு மகத்தான இந்திய நாவலை எழுதியிருந்தார். அது தன்னிலிருந்து உருவான பலமொழிக் கலவையும் நகைச்சுவையும் இரைச்சலும் மிதமிஞ்சலும் அரசியல் ஏமாற்றங்களும் நிறைந்த தனது நாட்டை விவரிப்பதாக இருந்தது. அவர் என்னிடம் ‘பம்பாய் என்ற நகரம் கைப்பற்றப்பட்ட நிலத்தில் – அதாவது கடலிடமிருந்து கைப்பற்றப்பட்ட இடத்தின் மீது கட்டப்பட்டது. நான் இந்த நூலையும் ஒரு கைப்பற்றல் என்றே கண்டேன்’ என்று சொன்னார்.
நள்ளிரவின் குழந்தைகள் மாயங்கள், புராணங்கள் மிதமிஞ்சி இருக்கும் அதீதத்தின் நாவல். சலீம் தன்னைப் போலவே ஆயிரக்கணக்கான வேறு பிள்ளைகளும் தான் பிறந்த அதே தருணத்தில் பிறந்திருப்பதை அறிந்துகொள்கிறான். அத்தோடு இந்த ஆயிரத்தோரு கதையாளர்களும் சேர்ந்தால் துணைக்கண்டத்தின் செஹர்சாதேவாக விரியமுடியும் என்பதையும். சலீமுக்குப் பல்வேறு அடிமை நீங்கிய நாடுகளின் வலிகளும் முரண்களும் பல்வேறு ஒலிக்குவைகளாக, தொலைபுலனின்றி அறிதலின் (Telepathy) மூலமாக ஒத்திசைவு கொள்கின்றன. அவன், ‘நான் ஒரு ரேடியோவின் பெற்றியைப் போன்றவன். என்னைச் சுற்றி ஓசைச்செறிவை அதிகரிக்கவும் குறைக்கவும் இயலும்’ என்கிறான். ‘என்னால் தனித்தனிக் குரல்களை அடையாளம் காண முடியும். மன இச்சையைப் பயன்படுத்தி என்னால் புதிதாகக் கண்டறிந்த செவியை அணைத்து வைக்கவும் முடியும்.’
இந்நாவல் விரைவிலேயே செவ்வியல் தகுதியை அடைந்தது. Times இதழில் ஜான் லியோனார்டு (John Leonard) ‘நம் மடியில் ஒரு இதிகாசம் கிடக்கிறது’ என்றார். குந்தர் கிராஸின் (Gunter Grass) ‘The Tin Drum’ உடனும் காப்ரியேல் கார்சியா மார்கேஸின் (Gabriel Garcia Marquez) ‘One Hundred Years of Solitude’ உடனும் ஒப்பீடு செய்யத்தக்கது என்பது தெளிவு. தெள்ளியதை வணங்கி வரவேற்கிறேன்.’ நள்ளிரவின் குழந்தைகள் 1981-இல் புக்கர் விருது பெற்றது. பல்லாண்டுகள் கழித்து, ‘புக்கரின் புக்கர்’ என்ற சிறப்பிலும் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றது. ஏறத்தாழ எதிர்மறையான விமர்சனங்களுள் ஒன்று ருஷ்டிக்கு அவருடைய தந்தையிடமிருந்து கிட்டியது. அவரது நாவல் வாசிப்பு ஏற்க முடியாத உணர்வை அளித்தது. நாயகனின் தந்தை – தன்னை ஒத்திருந்த கதாபாத்திரம் குடிகாரனாக இருந்ததை அவரால் மகிழ்ந்து வரவேற்க இயலவில்லை. ‘சில நேரங்களில் மடியில் இருக்கும் குழந்தை ஈரம் செய்துவிடும், அதை மன்னித்துதான் ஆக வேண்டும்’ என்று அவர் ருஷ்டியிடம் சொன்னார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது மரணத் தறுவாயில்தான் மனத்திலிருந்ததைத் தெளிவாகச் சொன்னார்: ‘நான் கோபத்தில் இருந்தேன், ஏனெனில் நீ எழுதிய ஒவ்வொரு சொல்லும் உண்மைதான்!’
நள்ளிரவின் குழந்தைகள் வெளியான புதிதில் கிராந்தா (Granta) என்ற காலாண்டிதழை நிறுவியிருந்த பில் புஃபோர்டு (Bill Buford) என்ற அமெரிக்கர் ருஷ்டியை ஒரு முடிச்சீரகத்தின் மாடியில் வாசிப்பளிக்க அழைப்பு விடுத்தார். ருஷ்டி, ‘அங்கு யாரெல்லாம் வருவார்கள் என்பதை நானறியவில்லை’ என்றார். ‘அரங்கு நிறைந்திருந்தது. தூண்களிருந்த இடமெல்லாம் கடும் நெருக்கடி. பெரும் விழுக்காட்டினர் இந்திய வாசகர்கள். நான் நம்பமுடியாதபடி உணர்ச்சியவப்பட்டிருந்தேன். சீராக உடையணிந்திருந்த நடுத்தர பெண்மணி ஒருவர் வாசிப்பு முடிந்ததும் எழுந்து நின்று – அது கேள்வி பதில் பகுதிபோன்றது – ”திரு. ருஷ்டி அவர்களே நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் என் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள்” என்றார். அவருடைய சொல் என்னை அழவைக்கப் பார்த்தது.’
நள்ளிரவின் குழந்தைகள், அதைப் போலவே தடையற்று விரியும், அன்றைய பாகிஸ்தானைக் களமாகக் கொண்ட அதற்கடுத்த படைப்பான ‘வெட்கம்’ (Shame) இரண்டும் இந்திய பாகிஸ்தான் ஆட்சியாளர்களை வெறியேற்ற ஆவன செய்தன. இந்திரா காந்தி ருஷ்டியையும் நாவலின் பதிப்ப உரிமையாளரான ஜொனாதன் கேப்பையும் (Jonathan Cape) மானநட்ட வழக்கில் நீதிமன்றத்துக்கு இழுத்தார். பாகிஸ்தானில் முகமது சியா உல் ஹக்கின் ஆட்சியில் ‘வெட்கம்’ நாவல் தடைக்குள்ளானது. அரசியல் மட்டுமே அவருக்கு எதிரி என்று நினைப்பது சரியானதாக இராது. நவீன நாவலில் வரலாற்றைப் புனைவாக்குவது குறித்து ருஷ்டி மிலன் குந்திராவைப் (Milan Kundera) பின்தொடர்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் இரண்டு வேறுபட்ட விதப்பு முறைகள் உள்ளன: ஒன்று Samuel Richardson எழுதிய ‘கிளாரிஸ்ஸா’வின் முறையான எதார்த்தவாதம், இரண்டாவது Laurence Sterne எழுதிய ‘Tristram Shandy’-யில் உள்ள எதார்த்தமின்மையும் விசித்திரவாதமும். ருஷ்டி இரண்டாவது முறைமையை நோக்கி அதிகம் சாய்ந்தார். அதீத புனைவுத்தன்மை மிகுந்த அந்த வகை மரபில் சிலரே இயங்கி வந்துள்ளனர். அவருடைய இளமைக்கால வாசிப்பு Franz Kafka-வை நோக்கி ஆழ்ந்திருந்ததோடு, James Joyce, Italo Calvino, Isaac Bashevis Singer, Mikhail Bulgakov என நாட்டுப்புறக் கதைகளையும், உருவகங்கள், உள்ளூர்ப் புராணங்கள் ஆகியவற்றைப் பின்பற்றி தமக்குத் தேவையான ‘பழமை, பகடி, வெளிப்படைத்தன்மை, விளையாட்டு’ வகை எழுத்தை உருவாக்கிய படைப்பாளிகளையும் பின்தொடர்ந்தார்.
மறுபுறம் இளம் எழுத்தாளர்கள் நள்ளிரவின் குழந்தைகள் நூலிடமிருந்து நிறைய ஊக்கம் பெற்றனர். குறிப்பாக, அடிமையாதிக்கத்தாலும் புலம்பெயர்வாலும் பாதிக்கப்பட்ட வாழ்க்கைப் பின்னணி கொண்டவர்கள். அத்தகையோருள் ஒருவரான சேடி ஸ்மித் (Zadie Smith) தனது 24ஆம் அகவையில் 2000த்தில் தனது முதல் நாவலான ‘White Teeth’-ஐ வெளியிட்டார். ஸ்மித் என்னிடம், ‘நான் அகவை முதிர்வதற்குள் அந்நூல் தனித்துவமான இடம்பெற்றுவிட்டது’ என்றார். ‘உண்மையைச் சொல்லவேண்டுமெனில் அதை ஒரு சின்னமாகக் கொண்டாடுவதில் எனக்கு ஏற்பில்லை, அது என்னை அச்சுறுத்துகிறது. பதினெட்டு வயதில் ஒருவழியாக அதை வாசித்துவிட்டேன். அதன் முதல் இருபது பக்கங்கள் வேறெந்த நூலைவிடவும் என்னுள் அதிகமான ஆதிக்கத்தைச் செலுத்தின எனில் மிகையன்று. அடைக்கப்பட்ட ஆற்றல்! அப்படித்தான் என் எண்ணத்தைச் சிறப்பான வகையில் சொல்ல முடிகிறது. அந்த ஆற்றலை நான் உள்ளுணர்ந்தேன். ‘பேரரசர் மீண்டும் எழுதுகிறார்’ என்றுதான் நாங்கள் ருஷ்டியைப் பற்றிச் சொல்லிக்கொள்வோம். அவரது அரசாங்கத்தின் தொலைதூரக் குழந்தைகளுள் ஒருத்தி நான். ருஷ்டி அளவுக்குக் கதைசொல்லும் ஆற்றல் மிக்கோர் சூழவே நான் வளர்ந்தேன். ‘அவர் எட்டி உதைத்தார், எங்களுக்கான கதவு திறந்தது’ என்ற சொற்றொடரை நான் பொதுவாக விரும்புவதில்லை என்றாலும் சல்மானின் கதையில் அதுவே உண்மை.
அக்காலகட்டத்தில் இத்தகைய தாக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறோம் என்பது ருஷ்டியே அறியாதது. ‘நான் சில பிறழ்வான ஜென்மங்கள் மட்டும் இந்த நூலை வாசிக்கும் என்றே நினைத்தேன்’ என்கிறார் சல்மான். ‘இந்த நூலில் அநேகமாக வெள்ளைத்தோல் வாசிகளே இல்லை. அதுமட்டுமின்றி விசித்திரமான ஆங்கில மொழிநடை புழங்கி வருகிறது.’
நான் முதன்முதலில் ருஷ்டியை நியூயார்க்கில் 1986-இல் நடந்த PEN சர்வதேசக் கூட்டத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பரபரப்புக்கிடையே சந்தித்தேன். அங்கு கூடிய கூட்டம் குறித்து Washington Post-க்காகச் செய்தி சேகரித்தபோது நாற்பத்தைந்து நாடுகளிலிருந்து கூடியிருந்த பரவலான கூடுகையில் அநேகமாக ருஷ்டியே இளமையான புகழேந்தியாக இருந்தார். புதுமுகங்களுக்கே உரிய துறுதுறுப்புடன் மேதைகள் தம் செயல்களை ரசித்துப் பார்த்தார் ருஷ்டி. சால் பெல்லோ மீது குந்தர் கிராஸ் டியுடோனிய இடி மின்னல்களை ஏறிவதையும் ரொனால்டு ரீகனுடைய மாநிலங்களவைத் தலைவரான George Shultz-ஐ அந்தக் கூட்டத்தில் பேச அழைத்ததற்காக PEN Internationalன் தலைவர் நார்மன் மெய்லரை (Norman Mailer) ஈ.எல்.டாக்டரோவ் (E.L. Doctorow) வசைபாடுவதையும் இன்னும் அதிகளவில் பெண்களை அழைத்திடாமைக்காக மெய்லரைக் கிரேஸ் பேலி (Grace Paley) கடிந்துகொள்வதையும் அவர் கண்டார். ஒரு பிற்பகலில் ருஷ்டி தெற்கு மத்திய பார்க்கில் வெளியே மாநாட்டிலிருந்து சிறு விடுப்பு எடுத்துக்கொண்டு டைம்ஸ் இதழின் புகைப்பட நிபுணர் ஒருவரைச் சந்தித்தார். அவர் இவரை ஒரு குதிரை வண்டியில் ஏறிப் படத்துக்காகத் தோரணை காட்டச் சொன்னார். ருஷ்டி, செஸ்லா மிலோஸுக்கும் (Czesla Milosz) சூசன் சோண்டாகுக்கும் (Susan Sontag) இடையே அமர வேண்டியதாயிற்று. ‘என் வாழ்வில் முதல்முறையாக என் நாக்கு இழுத்து கட்டப்பட்டதைப் போல உணர்ந்தேன்’ என்று குறிப்பிட்டார்.
ஆனால் PEN மாநாடு ஒரு திசைதிருப்பல். இடையில் ‘The Jaguar Smile’ என்ற பக்கவாட்டுத் திட்டம் ஒன்று இருந்தது. அது நிகாரகுவாவில் நடந்த சந்தினிஸ்தா புரட்சி பற்றியது. ருஷ்டி ‘The Satanic Verses’-இன் வரைவோடு போராடிக்கொண்டிருந்தார். உரைநடை, ‘நள்ளிரவின் குழந்தைகள்’, ‘வெட்கம்’ ஆகிய இரு நாவல்களைவிட எந்த விதத்திலும், குறிப்பாக மயக்குறு நடையிலும் பரவசத் தொடர்களிலும் குறைவின்றியே இருந்தது. எனினும் கதைக்களம் லண்டனாக இருந்தது. அவர் ‘என் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் ஆண்டுகளுக்கொரு முறை என்னால் நள்ளிரவின் குழந்தைகள் நூலின் வெவ்வேறு வடிவங்களை எழுத முடிந்தது’ என்றார். ‘அது விற்றிருக்காது இல்லையா? ஆனால் நான் செய்திராத ஒன்றைச் செய்து பார்க்க வேண்டும் என்று எப்போதும் ஆசைப்பட்டேன்.’
செப்டம்பர் 1988-இல் ‘சாத்தானியச் செய்யுள்கள்’ வெளியானது. ஏற்கெனவே இந்திரா காந்தியையும் சியா உல் ஹக்கையும் தான் சினம்கொள்ளச் செய்திருந்ததால் தற்போது இஸ்லாமிய வரலாற்றையும் பல்வேறு மத கோட்பாடுகளையும் இந்நாவலில் பயன்படுத்தியிருக்கும் விதம் பல இஸ்லாமிய எழுத்தாளர்களையும் காயப்படுத்தும் என்பதை ருஷ்டி முன்னரே உணர்ந்திருந்தார். நபியை இந்நூலில் முழுமையற்றவராகக் காட்டினாலும் ஊக்கமிக்கவராகவும் தண்டனைக்கு முன்பு தைரியமாக நிற்பவராகவுமே படைத்திருந்தார். அது இந்த நவீன உலகின் புலம்பெயர்வு நிகழ்வுகளுக்கான ஒரு குறியீட்டுத்தன்மையையே நோக்கமாகக் கொண்டிருந்தது. ருஷ்டி ’சாத்தானியச் செய்யுள்களை’ நமது கலப்பு உலகின் காதல் கீதமாக எண்ணினார். இருமை, தூய்மையின்மை, இனக்கலப்பு, புதிய எதிர்பாராத மானுட வகைமைகள், பண்பாடுகள், கருத்தாக்கங்கள், அரசியல், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் கொண்டாட்டமாகக் கருதினார். சர்ச்சை என்ற தொனியைவிட ஒரு சமூகப் புதினமாக, ஆங்கிலேயே ஆசிய மக்களின் புதினமாக இஸ்லாமைப் பிரம்மாண்டமான மீளுருவாக்கம் செய்யும் புதினமாகவே அதை உருவாக்கினார்.
ஏதேனும் சர்ச்சைகள் உண்டானால் அவை விரைவில் நீங்கிவிடும் என்றே கருதினார். அது வெளியாகும் முன் சிராபனி பாசு (Shrabani Basu) என்ற இந்தியச் செய்தியாளரிடம், ‘ஒரு நூல் கலவரத்தை உருவாக்குமென்பது அபத்தமான கருத்து’ என்று குறிப்பிட்டார். மூன்றாண்டுகளுக்கு முன்பு சில ஆங்கில, அமெரிக்க இஸ்லாமியர்கள் ’My Beautiful Laundrette’-க்கு எதிராக அமைதியான முறையில் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மரியாதையற்ற திரைக்கதையை எழுதிய ஆங்கிலேய பாகிஸ்தானிய எழுத்தாளர் அனீஃப் குரேஷிக்கு (Hanif Kurieshi) எதிராக அவர்கள் போராட்டம் செய்தபோதும் விரைவில் அது மறைந்தும் போனது. பாகிஸ்தானை வசைபாடும் இனவாத யுகத்தில் வேறென்ன கிடைக்கும்? ருஷ்டி மதவெறியைப் பற்றி பேசுவதற்காக லண்டனில் கொண்டாடப்படுகிறார். 1982-இல் அலைவரிசை 4-இல் அவர் ‘பிரிட்டிஷ் சமூகம் தனது ஏகாதிபத்திய களங்கத்தை ஒருபோதும் நீக்க முடியாது என்று கருதுகிறது. அது இன்னும் பேன்களையும் புழுக்களையும் உற்பத்திச் செய்த வண்ணமே இருக்கிறது. மனசாட்சி இல்லாத சுயநலவாதிகள் தம் தேவைக்காகச் சுரண்டும் பொருட்டு அது காத்திருக்கிறது’ என்றார்.
இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாகவே பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் அரசு ’சாத்தானியச் செய்யுள்களைத்’ தடைசெய்தது. அப்போது இந்தத் தணிக்கை வெறுப்பு எப்படிப் பரவும் என்பது புரியவில்லை. ஐக்கியப் பேரரசில் இப்புதினம் புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலுக்குத் தேர்வுசெய்யப்பட்டது. (வென்ற புதினம் Peter Carey-ன் ’Oscar and Lucinda.’) ’சாத்தானியச் செய்யுள்கள்’ ஈரானிய பத்திரிக்கை உலகிலும் விமர்சனம் செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் இந்நூலைத் தடைசெய்யவும் அது குறித்து வெறுப்புணர்வைக் கிளறவும் செய்த முயற்சிகள் ஆரம்பத்தில் பெரிதும் பலனளிக்கவில்லை. ஆனால் விரைவில் அணை உடைந்தது. காஷ்மீரத்திலும் இஸ்லாமாபாத்திலும் கடுமையான கலவரங்கள் நிகழ்ந்தன. எதிர்ப்புப் பேரணிகள், பிராட்ஃபோர்ட், லண்டன், ஒல்டாம், போல்டனில் நூல் எரிப்புகள், நியூயார்க்கில் இருந்த வைக்கிங் பென்குவின் பதிப்பகத்தாருக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்.
டெஹ்ரானில் அயதுல்லா கொமினி கடும் சிக்கலில் தடுமாறி வந்தார். ஈராக்குடனான எட்டாண்டு போருக்குப் பிறகு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து ’விடமேற்றிய கிண்ணத்தைப்’ பருகியாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. சதாம் ஹுசேனுடன் அமைதி ஒப்பந்தத்தினை ஏற்றார். போராட்ட அரசியலுக்கான புகழ் மங்கத் தொடங்கியது. கொமினியின் மகன் தன் தந்தை ஒருபோதும் ‘சாத்தானியச் செய்யுள்களை’ வாசித்ததில்லை என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அவரைச் சூழ்ந்திருந்த முல்லாக்கள் அயதுல்லாவின் ஆளுமையை மீண்டும் நிறுவுவதற்கான வாய்ப்பாக இதைக் கண்டனர். தனது தேசத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஷியாக்களையும் கடந்து அவரது புகழைப் பரப்பத் திட்டமிட்டனர். கொமினி ருஷ்டிக்கு மரண தண்டனை அளிக்கும் ஃபத்வாவை வெளியிட்டார். ‘From Fatwa to Jihad’-இல் கேனன் மாலிக் (Kenan Malik) எழுதியதைப் போல இந்தச் செய்கை, ‘வலிமையைவிட வலிமை இன்மையையே பறைசாற்றியது.’ இது மதத்தைவிட அரசியல் சார்பே அதிகம் கொண்டிருந்தது.
BBC-யிலிருந்து ருஷ்டியைத் தொடர்புகொண்ட ஒரு செய்தியாளர், ‘அயதுல்லா கொமினியால் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.
ருஷ்டி தான் ஒரு சடலம் என்று நினைத்தார். அவ்வளவுதான். ஒருநாளோ, இரு நாள்களோ! தனது எஞ்சிய வாழ்வை ஒரு கதைசொல்லியாக வாழ முடியாது. அவர் ஒரு கதையாகவோ, முரணாகவோ, ஒரு செய்தியாகவோ மாறிவிடுவார்.
சில செய்தியாளர்களுடன் பேசிய பிறகு ருஷ்டி தனது நெருங்கிய நண்பரான புரூஸ் சாட்வினுடைய (Bruce Chatwin) நினைவுக்கூட்டத்துக்குச் சென்றார். அங்கு அவருடைய நண்பர்கள் பலரும் இருந்தனர். சிலர் அனுதாபங்களைக் கூறினர். சில புத்திசாலித்தனமான தீர்வுகளைச் சொல்லி ஆறுதல் தெரிவித்தனர். பால் தேரூ (Paul Theroux) ’அடுத்த வாரம் நாங்கள் உங்களுக்காக இங்கு வருவோம்’ என்றார். ஆரம்ப நாள்களில் ருஷ்டிக்கு எழுதிய கடிதங்களில் தேரூ ஃபத்வாவை ’மோசமான நகைச்சுவை, அது ‘The Comedians’ என்ற நூலை எழுதியதற்காக கிரஹாம் கிரீன் (Graham Greene) மீது Papa Doc Duvalier சாபமிடுவதைப் போன்றது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். நினைவேந்தல் முடிந்ததும் மார்டின் ஆமிஸ் ’ருஷ்டியைக் கொல்லுங்கள்; உத்தரவிடுகிறார் அயதுல்லா’ என்று தலைப்பிட்டிருந்த செய்தித்தாளை எடுக்கிறார். ருஷ்டி இப்போது ’முதல் பக்கத்துக்குத் தாவிவிட்டார்’ என்று நினைக்கிறார் ஆமிஸ்.
அடுத்தப் பத்தாண்டுகளுக்கு ருஷ்டி லண்டன் பெருநகர காவல்துறையின் சிறப்புப் பிரிவின் அதிகாரிகளால் நிலவறையில் பாதுகாப்புடன் வாழ்கிறார். தலையங்கங்களும் அச்சுறுத்தல்களும் குறைவதாக இல்லை. மக்கள் நலமாக நடக்கிறார்கள், மோசமாகவும் நடக்கிறார்கள். தொடர்ந்து Buford, Amis, James Fenton, Ian McEwan, Nigella Lawson, Christopher Hitchen உள்ளிட்ட பல நண்பர்களும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்தபோதும் சிலர் இந்த ஃபத்வா ருஷ்டி தன் தலையில் தானே வாரிப் போட்டுக்கொண்ட ஒன்று என்றும் வாதிட்டனர். ஆமிஸ் சென்ற இரவு விருந்தில் இளவரசர் சார்லஸ் நேரடியாகவே தனது எரிச்சலை வெளிக்காட்டினார்: ‘மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகளைப் பகடி செய்தால் வேறென்னப் பலன் கிடைக்குமென நீனைக்கிறீர்கள்?’ ஜான் லே காரி (John le Carre) ருஷ்டியிடம் தன் நூலை, அமைதிக் காலம் வரும்வரை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினார். ரோல்ட் தால் (Roald Dhal) அவரை ’ஆபத்தான சந்தர்ப்பவாதி’ என முத்திரை குத்தினார். ’அவர் தான் செய்யும் ஒவ்வொன்றையும் தெரிந்தே செய்தார் என்பதை மறுத்து வாதிடவே முடியாது.’ பாடலாசிரியர் – பாடகர் கேட் ஸ்டீவன் (Cat Stevens) Peace Train என்ற பாடலால் புகழ்பெற்றவர் இஸ்லாமுக்கு மதம் மாறியிருந்தார். அவர், ’குரான் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்கிறது. ஒருவன் நபியை அவமதித்தால் அவன் கொல்லப்பட வேண்டும்’ என்றார். Germaine Greer, George Steiner, Auberon Waugh எனப் பலரும் தத்தம் மறுப்புகளை வெளிப்படுத்தினர். அவ்வாறே பிரிட்டிஷ் வெளித்துறைச் செயலரும் காண்டர்பரியின் தலைமை ஆயருமான Jimmy Carter-உம் பதிவு செய்தார்.
ருஷ்டியின் எதிர்ப்பாளர்கள் மத்தியில் அவர் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துபவராகவும் அதற்கும் மேலாக அரசு அவருக்குத் தரும் விலைமிகுந்த பாதுகாப்புக்கு நன்றி உணர்வைக் காட்டாதவராகவுமாக அவர் மீதான எதிர்மறை பிம்பம் மேலும் மேலும் வலுவடைந்தது. ஹூ டிரெவர் ரோபர் (Hugh Trevor – Roper) என்ற வரலாற்றாசிரியர், ’சில பிரிட்டிஷ் இஸ்லாமியர்கள் அவரது வருத்தமளிக்கும் நடத்தையைத் தடுக்கும் விதமாக இருண்ட தெருக்களில் அவருக்குச் சில நன்னடத்தைகளைச் சொல்லித் தருவார்களேயானால் அதுகுறித்து நான் ஒரு துளிக் கண்ணீரும் சிந்தமாட்டேன். அதன் பிறகேனும் அவருடைய பேனாவைக் கட்டுக்குள் வைக்க அவர் கற்றுக்கொண்டால் சமூகம் பலனடையும், இலக்கியம் துன்பப்படாது’ என்று குறிப்பிட்டார்.
கொமினியின் கொடூரமான பிரகடனத்தால் விளைந்த அச்சம் காரணமாகப் பலரும் வேதனையைப் பட்டறிந்தனர். தனித்தனி நிகழ்வுகளாகப் பார்த்தால், ஜப்பானில் இந்நாவலை மொழிபெயர்த்த ஹிதோஷி இகரஷி (Hitoshi Igarashi), இத்தாலியில் மொழிபெயர்த்த எடூத்ரே காப்ரியோலோ (Etootre Capriolo) இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இகரஷிக்குக் கடுமையான காயம். இந்நூலின் நார்வேஜிய பதிப்பாளர் வில்லியம் நைகார்டு (William Nygaard) பலமுறை குண்டடிபட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லண்டனிலிருந்து பெர்க்கிலி வரை இருக்கும் நூல் விற்பனையகங்களுக்குக் குண்டு வைக்கப்பட்டது. இதற்கிடையில் வருடாந்திர இலக்கிய நோபல் பரிசை அறிவிக்கும் நிறுவனமான ஸ்டாக்ஹோமில் உள்ள Swedish Academy ருஷ்டிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட மறுத்தது. அந்த மெளனம் தசாப்தங்களாக உடையாமலேயே தொடர்ந்தது.
ருஷ்டிக்குப் பத்துவித வேதனைகள். மரியானே விக்கின்ஸ் (Marianne Wiggins) என்ற நாவலாசிரியருடனான திருமணப் பந்தம் முறிந்தது. தனது இளம் மகன் ஜாஃபருடைய பாதுகாப்பு குறித்த கவலை அவரை அரித்தது. ஆரம்பத்தில் – ஃபத்வா அறிவிக்கப்பட்ட தினத்தன்று “வெளிப்படையாகச் சொன்னால் நான் இன்னும் காத்திரமான விமர்சன நூலை எழுதியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்” என்று செய்தியாளர் ஒருவரிடம் – வீரமான மொழியை உபயோகித்தவர்தான் ’கொடுங்கனவை வாழ்ந்து வருகிறேன்’ என்று தன் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டார். ’சாத்தானியச் செய்யுள்கள்’ அடிப்படையில் தன் நிலத்திலிருந்து வேரறுக்கப்பட்டவர்களின் வலியைச் சொல்லும் கருணை மிகுந்த நூலே என்றபோதும் அத்தகையோரால் அவரது கொடும்பாவி எரிக்கப்படுவதை ருஷ்டி மாலைச் செய்திகளில் பார்க்க நேரிட்டது. அவர் என்னிடம், ‘இந்த முரணிலை என் வாழ்க்கைக் கதையின் ஒரு அங்கமாகிவிட்டது’ என்றார்.
ஆனால் அது இன்னும் பெரிய முரணின் அங்கம். ’சாத்தானியச் செய்யுள்கள்’ வெளியானது உலக அளவில் சுதந்திர உணர்வு பெருகி உச்சத்திலிருந்த காலகட்டத்தில். 1989ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பொதுவுடைமைவாதக் கட்சியின் ஆட்சித் தேசமான சோவியத் ஒன்றியம் வெடித்துச் சிதறியது. ஆயினும் ருஷ்டியின் நிலைமை பல்படித்தான பண்பாட்டுத் தன்மையின் தடுமாற்றம், பேச்சு விடுதலைக்கான வரையறைகள், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சியும் அதற்கான எதிர்வினைகளும் என வரலாற்றுப் போக்குகளின் வருங்காலத்திற்கான கட்டியம் கூறுதலாக அமைந்தது.
சில இளம் எழுத்தாளர்களுக்கு இந்தப் படைப்பு செறிவான தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது PEN அமெரிக்காவின் தலைவராக இருக்கும் அயாத் அக்தர் (Ayad Akhtar) என்ற நாவல் – நாடகாசிரியர் மில்வாக்கியில் இருக்கும் இஸ்லாமியக் குழுமத்தில் வளர்ந்தவர். அவர் தனது நண்பர்களும் குடும்பத்தினரும் ’சாத்தானியச் செய்யுள்களால்’ எத்தனை புண்பட்டனர் என்பதை நினைவு மீட்டுகிறார். அதேசமயம் அந்நாவல் தன் வாழ்வை எவ்விதம் மாற்றியது என்பதையும். ‘நான் வாசிப்பதை நம்பமுடியாத ஒரு அனுபவம் அந்நாவலில் இருந்து கிடைத்தது. அதன் அழகையும் தீவிர இஸ்லாமிய நம்பிக்கையாளர் என்பதால் விளைந்த அதன் அதீத மரியாதை இன்மையையும் உணர்ந்தேன். நூலை வாசித்து முடிக்கையில் நான் வேறொரு மனிதனாக மாறி இருந்தேன். அது ஒரு இளம் ஐரிஷ் நாட்டு கத்தோலிக்கன் தன் இருபதுகளில் A Portrait of the Artist as a Young Man நாவலை வாசிப்பதைப் போன்றது.’
எண்பதுகளின் பிற்பகுதியின் அலைகளுக்கிடையே இந்நூல் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அதைக் கேலிச்சித்திரமாகவும் வெறுப்பு விமர்சனத்தினாலும் மட்டுமே மக்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். தெற்காசியர்கள் லண்டனில் வாழும் வாழ்வின் சிடுக்குகளை எழுத வந்த நாவலாசிரியர், இப்போது அந்நகரத்திலும் உலகெங்கும் இருக்கும் மசூதிகளிலும் கடும் கயவனாகவும் துரோகியாகவும் கட்டமைக்கப்படுகிறார். இந்தக் கொந்தளிப்பைச் சற்றே அமைதிப்படுத்தும் நோக்கோடு உள்ளூர் இஸ்லாமியத் தலைவர்களுடன் ருஷ்டி ஒரு சந்திப்பை மேற்கொண்டு இஸ்லாம் மீதான தனது நம்பிக்கையைப் பறைசாற்றுகிறார். அது உண்மையான நம்பிக்கை என்பதையும் அவர் காரணத்தோடு குறிப்பிட்டார். அவருக்கு இயற்கைமீறிய செயல்பாடுகள் மீதோ இனத்தின் அடிப்படைவாதம் மீது உவப்பு இல்லாதபோதும் இஸ்லாமியப் பண்பாட்டின் மீதும் அதன் வரலாற்றின் மீதும் மதிப்பு இருந்தது. அவர் நாவலில் வரும் எந்தக் கதாபாத்திரமும் இஸ்லாம் மீதோ முகமது நபி மீதோ ஏளனமான விதத்தில் எதையேனும் குறிப்பிடுவதாக வரும் எந்தக் குற்றச்சாட்டையும் தான் ஏற்கவில்லை என்றும் ‘இருப்பினும் அதில் புண்படுவதற்கான ஆபத்துக் கூறுகள் இருக்கலாம் என்பதால்’ அந்நூலின் பதிப்பை நிறுத்திக்கொள்வதாக உறுதியளித்தார்.
அப்போது அயதுல்லா கொமினி இறந்து அவரது இடத்தில் இருந்த அயதுல்லா அலி காமினி இதைச் சற்றும் ஏற்கவில்லை. ’தன் தவறுகளுக்கு மன்னிப்பு கோரினாலும் தன் வாழ்நாளில் மிகச் சிறந்த பக்தியாளனாக மாறினாலும் ருஷ்டி மீதான ஃபத்வா விதித்தது தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்று குறிப்பிட்டார். டெஹ்ரானில் இருந்து வெளியாகும் ஒரு செய்தித்தாள் ருஷ்டியிடம் ‘மரணத்துக்குத் தயாரக இரு’ என்று அறிவுறுத்தியது.
அவர் கீழ்மைப்படுத்தப்பட்டார். தனது தலைக்குக் கெடு விதித்தவர்களது சினத்தை அமைதிப்படுத்த அவர் முயன்றது பிழையாகிவிட்டது. அவர் மீண்டும் அதைச் செய்யப்போவதில்லை. ஜோசப் ஆண்டனில் (Joseph Anton) அவர் இப்படிச் சொல்கிறார்:
”தன்னை ஒருபோதும் சிலர் விரும்பப்போவதில்லை என்பதை அவன் புரிந்துகொண்டாக வேண்டும். அவன் எத்தனை நிதானமாகவும் கூருணர்வுடனும் படைப்பை உருவாக்கிய நோக்கத்தைத் தெளிவாக விளக்கினாலும் அவர்கள் அவனை ஏற்கப் போவதில்லை. பகுத்தறியாத, ஐயமற்ற நம்பிக்கையால் மட்டுமே சிந்திக்கும் மூளையை ஒருபோதும் விளக்கத்தினால் சம்மதிக்க வைக்க இயலாது. அவனைப் பேயாகச் சித்தரித்தவர்கள், ‘இதோ பாருங்கள், அவன் பேய் இல்லை…’ என்று ஒருபோதும் சொல்லப்போவதில்லை. அவன் இப்போது எதற்காகப் போராடுகிறான் என்பதைத் தெளிவாக அறிய வேண்டும். பேச்சு விடுதலை, கற்பனைக்கான விடுதலை, அச்சத்திலிருந்து விடுதலை ஆகியவற்றோடு பழமையழகு மிகுந்த தனது கலையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அவனுக்கு வேண்டும். அதுமட்டுமின்றி சமய நம்பிக்கையின்மை, சமயச் சாடல், ஐயம், பகடி, நகைச்சுவை, புனிதமற்ற மகிழ்ச்சி ஆகியவையும்தான். அவன் இனி ஒருபோதும் இவற்றைத் தற்காத்துக்கொள்வதிலிருந்து சற்றும் பிறழப் போவதில்லை.”
1989-லிருந்து ருஷ்டி தன் உயிருக்கு எதிரான அச்சுறுத்தல்களை மட்டுமின்றி தனது குணநலன் குறித்து செய்திகள், அவற்றுக்கு அப்பால் தொடர்ந்து வந்த அவதூறுகள் ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்கொண்டாக வேண்டிய நிலை. ‘ஒரு காலகட்டத்தில் நான் எத்தகைய கீழ்மையான மனிதன் என்று ஒரு ”நான்” பிம்பம் கட்டமைக்கப்பட்டு சுற்றலில் இருந்தது.’ “கொடியவன்”, “செறுக்கன்”, “மோசமான எழுத்தாளன்”, “அவன் நூலுக்கு எதிராகப் போராட்டம் நடக்கவில்லை எனில் யாருமே இவனை வாசிக்கப்போவதில்லை” என்றெல்லாம் அவை இருந்தன. அந்தப் பிழையான “நான்” பிம்பத்துக்கு எதிராக நான் போராட வேண்டியிருந்தது. என் அம்மா துயரத்தைச் சமாளிக்கும் ஒரு உத்தியாக மறதியை எனக்குச் சொல்லி இருந்தார்: ”சிலருக்கு நினைவு இருக்கிறது, எனக்கு இருப்பது மறதி மட்டுமே.”’
ருஷ்டி தொடர்ந்தார். ‘இந்தச் செயல்பாடுகள் பல்வேறு வழிகளில் என்னுள் இருக்கும் கலைஞனை அழித்தொழிக்க வாய்ப்புகள் உள்ளன என்று நினைத்தேன்.’ அவரால் ஒட்டுமொத்தமாக எழுத்திலிருந்து விலகி இருக்க முடியவில்லை. அவர் “பழியீட்டு நூல்களை” எழுதலாம், ஆனால் அது அவரைச் சூழ்நிலைக்குப் பிறந்த ஜென்மமாக்கிவிடும். ஒருவேளை அவர் “புனித நூல்களை” எழுதினால் அதில் மக்கள் எப்படியெல்லாம் புண்படக் கூடும் என்ற கணிப்புடன் நாசூக்காக எழுதப்பட்ட மேலோட்டமானவையே எஞ்சும். எது எப்படி இருந்தாலும் ஃபத்வா தன் இலக்கியப் பயணத்தை முடக்கிவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ’ஒரு வேற்றுக்கிரகவாசி இங்கு வந்து எனக்கு நிகழ்ந்த எதையும் கேள்வியுறாத சூழலில் என் நூலை ஒரு அடுக்கிலிருந்து எடுத்துக் காலவரிசைக்கிரமமாக வாசிப்பாரேயானால், அந்த வேற்றுக்கிரகவாசி இந்த எழுத்தாளருக்கு 1989-இல் கொடுமை ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்ற முடிவுக்கு வருவாரென எனக்குத் தோன்றவில்லை. நூல்கள் தமக்கே உரித்தான ஒரு பயணத்தில் இருக்கும். அதுதான் உண்மையில் மனத்திடத்தின் வெளிப்பாடு.’
ருஷ்டியின் நெருங்கிய வட்டத்திலும் வெளியேயும் இருக்கும் சிலர் இந்த இடைப்பட்ட தசாப்தங்களில், சுய தணிக்கை, புண்படுத்தி விடுவோமோ என்ற அச்சம் ஆகியவற்றின் காரணமாக நிலைமையே வேறாகிவிட்டது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். அவரது நண்பர் அனீஃப் குரேஷி, ‘ஒருவருக்கும் சாத்தானியச் செய்யுள்களைப் போன்ற ஒரு நூலை எழுதவோ வெளியிடவோ இன்று திராணி கிடையாது’ என்றார்.
ஃபத்வா நிலவரம் உச்சத்தில் இருக்கும்போது ருஷ்டி தன் மகன் ஜாஃபருக்கு வழங்கிய சத்தியத்தை நிறைவேற்றும் விதமாக அவனது பால்யத்தில் தான் சொல்லிய கதைகளைத் தொகுத்துக் கதைகளின் நூலாக ஒன்றை எழுதிவிட நினைத்தார். “Haroun and the Sea of Stories” என்ற அந்நூல் 1990-இல் வெளியானது. (Haroun என்பது ஜாஃபரின் நடுப்பெயர்.) அந்நூல் பன்னிரண்டு வயதான சிறுவன் தன் தந்தையின் கதைசொல்லும் ஆற்றலை மீட்டுத்தருவது குறித்த முயற்சியைக் கருவாகக் கொண்டிருந்தது. ருஷ்டி எழுதுகிறார்: ‘ஒரு சிறு முன்னறிவிப்பும் இல்லாமல் கரைந்துபோகும் ஆற்றல் உடையது அதிர்ஷ்டம்.’ அப்படித்தான் கதைசொல்லியாகிய உளறல்களின் மன்னர் ரஷிதுக்கும் நிகழ்ந்தது. அவரது மனைவி அவரை நீங்கிச் சென்றதால் தனது கதைசொல்லும் ஆற்றலை இழந்துவிடுகிறார். அவர் வாயைத் திறந்தால் அவரால் ’அர்க், அர்க், அர்க்’ என்று மட்டுமே உச்சரிக்க முடிகிறது. அவரது விரோதி அமைதி நிலத்தின் சர்வாதிகாரியான ஒரு சமயத்தலைவர். அவர் கதைகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் கடுமையாக எதிர்ப்பவர். தனது குடிமக்கள் மீது அமைதிச் சட்டங்களை ஏவுகிறார். அவரது பக்தர்களில் சிலர் மேலதிகப் பக்திச் சிரத்தையுடன் தமது உதடுகளை வலுவான நூலால் தைத்துக்கொள்கின்றனர். இறுதியில் மகனே அவரைக் காக்கிறான், கதைகள் முற்றதிகாரத்தை வெல்கிறது. ஹரோன், ”என் தந்தை ஒருபோதும் ஊக்கம் தளரமாட்டார்” என்று முடிக்கிறான். “அவரது கதையென்னும் நீர்ப்போக்கினை உங்கள் யாராலும் தடைபோட முடியாது.” இவ்விதமாகத் தனது கொடுங்கனவாகிப் போன வாழ்க்கைப் பகுதியில் ருஷ்டி மிக ரசிக்கத்தக்கத் தனது நூலை எழுதுகிறார். அது கலையின் இன்றியமையாமையையும் அதன் நெகிழ்வுத்தன்மையையும் பற்றிய உருவகமாகியது.
சொல்லியே தீர வேண்டுமென ருஷ்டி நினைத்த கதைகளுள் அவருடைய வாழ்க்கைக் கதையும் ஒன்று. இதற்கு உண்மைத் தகவல்களைத் தரும் தொனி தேவைப்பட்டது. ’ஜோசப் ஆண்டன்’ என்ற தனது வாழ்க்கைக் குறிப்பு நூலைப் பத்தாண்டுகளுக்கு முன் அவர் வெளியிட்டபோது தன்னைப் பிறர் அனைவரை விடவும் காத்திரமான முறையில் சுய விமர்சனம் செய்துகொள்ளவும் ஆய்ந்து தெளியவும் தவறவில்லை. அது அப்படித் துல்லியமாக வெளிப்படவில்லை. ருஷ்டியின் பின்னால் முழுமையாக நின்று தம் பதிப்பகப் பணியாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு தரும் விதமாக சில சமரசங்களை – குறிப்பாக தாளட்டைப் பதிப்புகளைத் தாமதமாக்கியது போன்ற – மேற்கொண்டதற்காக அவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவிகள் முறையே Marianne Wiggins, Elizabeth West, Padma Lakshmi ஆகியோர் மீது கருணையே இல்லாமல் சாடினார். அவரது சிறப்புகளுள் ஒன்று பொதுக்கூட்டங்களில் கண்ணியம் காப்பது அல்ல; அந்தரங்கமான கேள்விகளுக்கும் இலக்கியக் குற்றச்சாட்டுகளுக்கும் முன்கோபத்துடன் பதிலளித்துள்ளார். சில விதங்களில் ’ஜோசப் ஆண்டன்’ எனக்கு Solzhenitsyn உடைய தற்குறிப்பு நூலான ’The Oak and the Calf’-ஐ நினைவூட்டுகிறது. இரு எழுத்தாளர்களும் ஒரே விதமான குணநலங்களைக் கொண்டவர்கள் என்பதாலோ அரசியல் காரணமாகவோ இதைச் சொல்லவில்லை. மாறாக இரண்டு நூல்களுமே அதிதீவிர தைரியத்தின் வெளிப்பாடாக இருக்கும் அதேசமயத்தில் மனிதாபிமானத்துடனும் – சில நேரங்களில் வீராவேசத்துடனும் சில நேரங்களில் சிடுசிடுப்புடனும் – இருக்கின்றன.
’ஜோசப் ஆண்டன்’ நாவலின் இறுதியில் ஒளியை நோக்கித் தீர்மானத்துடன் நிகழும் ஒரு அசைவு இருக்கிறது. (தலைப்பு அவருடைய ஃபத்வா காலகட்டத்திற்கான கரவுப் பெயர். அவரது விருப்ப எழுத்தாளர்களான Conrad, Chekhov இருவரின் முதற் பெயர்களின் கூடுகை.) அவர் எழுதிய இறுதிப் பக்கங்களில் தனது ’சிறிய போரானது ஒரு முடிவுக்கு வருகிறது’ என்று குறிப்பிடுகிறார். மகிழ்ச்சிக் குறிப்புடன் அடுத்த நாவலுக்கு ஆயத்தமாகிறார்:
இறுதியில் அவன் யார், கதைகளைச் சொல்பவன், வடிவங்களை உருவாக்குபவன், இல்லாதவற்றைப் படைப்பவன். கருத்துகளையும் சமயத் தர்க்கங்களையும் முன்வைத்தபடியே இருக்கும் உலகில் இருந்து விலகிக்கொள்வதே நல்லறிவு. தான் விரும்பிய உலகைப் படைப்பதை நோக்கி அந்த ஆற்றலைச் செலுத்த வேண்டும். கலை அவனது இளம்பருவத்திலிருந்தே அவனது உள்ளத்தை, மனத்தை, ஆன்மாவை முற்றாகக் கோரியது. கண் மா கண் – இருந்தும் இலாததாகிய அந்தப் பிரபஞ்சத்தில் மீண்டும் வாழ முனைவதே சிறந்தது. நம்ப வைக்கும் புனைவு நதியின் மீது உண்மையின் பயணத்தை மேற்கொள்வதே சரியானது.
ருஷ்டி இந்தக் கலகங்களைப் புறந்தள்ளிவிட்டு நியூயார்க் சென்று குடியேறினார்.
ஆகஸ்டு 11ஆம் தேதி சடாகுவா நிறுவனத்தில் விண்மீன்களைப் பார்த்தபடியே தரையில் கிடந்து உறங்கினான் 14 வயது ஹதி மதார். அவனது பெற்றோர் ஹாசன் மதார், சில்வனா ஃபார்தோஸ் இருவரும் லெபனான் நாட்டின் இஸ்ரேலிய எல்லைக்கு வடக்கே உள்ள யாரோன் (Yaroun) என்ற கிராமத்திலிருந்து கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்து ஹதியை ஈன்றனர். 2004-இல் அவர்களுக்கு மணமுறிவானது. ஹாசன் மதார் லெபனானுக்குத் திரும்பினார்; சில்வன ஃபார்தோஸ், மகன், இரட்டைப் பெண் குழந்தைகள் அனைவரும் நியூ ஜெர்சியில் குடியேறினர். சமீப ஆண்டுகளில் மன்ஹாட்டனில் ஹட்சன் நதிக்கரையில் அமைந்துள்ள துணை நகரில் ஃபேர்வியு (Fairview) என்னுமிடத்தில் இரண்டடுக்கு இல்லத்தில் இக்குடும்பம் வாழ்ந்து வருகிறது.
2018-இல் மதார் தனது தந்தையைச் சென்று சந்திக்கிறான். ஆரம்பத்தில் அந்தப் பயணம் தடைபட்டிருக்கிறது. ஃபார்தோஸ் Daily Mail இதழின் செய்தியாளரிடம் ‘அங்கு சென்ற உடனேயே அவன் என்னை அழைத்தான் திரும்பிவர விரும்பினான்’ என்று தெரிவித்திருக்கிறார். ‘ஏறத்தாழ அங்கு 28 நாட்கள் தங்கி இருந்த அவனது பயணம் தந்தையுடன் சிறப்பாக அமையவில்லை. மாறாக அவன் மிகத் தனியனாக உணர்ந்தான்.’
நியூ ஜெர்சிக்குத் திரும்பியதும் மதார் தீவிர இஸ்லாமியப் பற்றாளனாக மாறினான். அனைத்திலிருந்தும் விலகித் தனித்திருந்தான். தன்னைச் சரியாக மத வழக்கங்களைப் பயிற்றுவித்து வளர்க்காததால் தன் தாயைக் கடுமையாக விமர்சித்திருக்கிறான். ஃபார்தோஸ், ‘அவன் ஊக்கத்துடன் திரும்பி வந்து பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் பட்டம் பெறுவான் என்றே எதிர்பார்த்தேன்’ என்றார். மேலும் மதார் நிலவறையிலேயே வாழ்ந்ததாகவும் இரவெல்லாம் அங்கே தங்கி வாசித்தும் காணொளி விளையாட்டுகள் ஆடிக் கழித்ததாகவும் பகலெல்லாம் உறங்கியதாகவும் அவர் தெரிவித்தார். அருகில் இருக்கும் மார்ஷல் என்ற பலசரக்கு நிறுவனத்தில் வேலையில் இணைந்தவன், இரண்டு மாதங்களில் வேலையைக் கைவிட்டான். வாரக்கணக்கில் தன் தாயிடமும் தங்கையிடமும் ஒரு சொல்கூடப் பேசாமல் கழித்தான்.
மதார் மிக அரிதாகவே தன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். வடக்குப் பெர்கனில் இருக்கும் குத்துச்சண்டை குழுமத்தில் இணைந்தான். இரண்டு கி.மீ. தொலைவில் இருந்த அந்த இடத்துக்கு மாலை வகுப்புகளுக்குச் சென்றான். கயிறு குதித்தல், விரைவுக் குத்து, எடைமிகுந்த குத்து, பயிற்சிக் குத்துகள் அனைத்தையும் செய்தான். அவனது திறமை யாரையும் ஈர்க்கும்படி இல்லை. தனது உடற்பயிற்சிக் கூடத்துக்கு வரும் அனைவருக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளிப்பது பயிற்றுநர் டெஸ்மண்ட் பாயலின் (Desmond Boyle) நோக்கம். ஆனால் மதாரை அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பாயல் என்னிடம் ‘அவனைப் பற்றிச் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவன் முகத்தைப் பார்க்கையில் அது அவனுடைய மோசமான நாள் என்றே தோன்றும்’ என்று குறிப்பிட்டார். ‘எப்போதும் தனது நாயைப் பறிகொடுத்துவிட்டு வந்தவனைப் போன்ற சோகக் களை அவன் முகத்தில் நிறைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் துயரும் கவலையும் மீறும் தோற்றம். அவன் இங்கு வந்துசேர்ந்த சில நாள்களுக்குப் பிறகு அவனை அணுகிப் பார்த்தேன். அவன் வெகுவான மென்குரலில் ஏதோ பதில் பேசினான்.’ வகுப்பில் இருக்கும் அனைவரிடமிருந்தும் தள்ளியே இருந்திருக்கிறான். பாயலின் கூற்றுப்படி தனித்த ஓநாய் என்பதற்கான வரையறையே மதார்தான். ஆகஸ்டின் தொடக்கத்தில் மதார் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து நின்றுகொள்வதாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறான். அவன் பெயருக்கு அருகே கடிதத் தலைப்புக்கோட்டில் இன்றைய ஈரானின் உயர்தலைவரது படம் இருந்தது.
சடாகுவாவில் ருஷ்டியின் நிகழ்ச்சி நடக்க இருப்பதை மதார் டிவிட்டர் மூலமாக அறிந்தான். ஆகஸ்டு 11ஆம் தேதி பஃபல்லோவுக்குப் பேருந்தில் ஏறி அங்கிருந்து ஒரு அரைவாடகை வண்டி எடுத்து வந்துசேர்ந்தான். ருஷ்டியின் நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு எடுத்துக்கொண்டு நேரத்தைக் கழித்திருக்கிறான். New York Post இதழுக்கு அளித்த சிறு பேட்டியில் ‘நான் நெடுநேரம் அங்கே அலைந்தேன்’ என்று சொன்னான். ‘ஒன்றுமே செய்யாமல் நடந்தபடியே இருந்தேன்.’
சேடி ஸ்மித்தின் ‘வெண்பற்கள்’ என்ற நூலில் தீவிர போராட்ட குணமுள்ள இளைஞன் மில்லத் (Millat) கெவின் (KEVIN – Keepers of the Eternal and Victorious Islamic Nation) என்ற குழுவில் இணைகிறான். ஒத்த எண்ணங்களுடைய நண்பர்களோடு சேர்ந்து தம் சமூகத்தோரைப் புண்படுத்தும் நாவலுக்கும் அதன் படைப்பாளிக்கும் எதிராக நடக்கும் பேரணியில் கலந்துகொள்கிறான். ஃபின்ஸ்பரி பூங்காவில் அமர்ந்து எதிர்ப்புக் கோசங்கள் எழுப்புகையில் அவனிடம் ”அதை நீ படித்தாயா?” என்று ரணில் கேட்கிறான். ஒரு மெளனம் நிலவுகிறது. மில்லத், ”நான் அதைச் சரியாகப் படிக்கவில்லை, சரியாகப் படிக்கவில்லை என்றபோதும் அந்தக் கருமத்தை முழுமையாக அறிவேன், இல்லையா?” என்றான். இங்கு சொல்லவருவது என்னவென்றால் மில்லத் அதை வாசிக்கவில்லை. மதாரும் அப்படியே. அவன், ’சாத்தானியச் செய்யுள்கள்’ நாவலில் சில பக்கங்களை மட்டுமே வாசித்திருக்கிறான். ருஷ்டியின் காணொளிகள் பலவற்றை யூ டியூப் தளத்தில் பார்த்திருக்கிறான். Post இதழாளரிடம் ‘எனக்கு அவ்வளவாக அவரைப் பிடிக்கவில்லை’ என்று குறிப்பிடுகிறான். ‘அவர் இஸ்லாமைக் கீழ்மைப்படுத்தியவர், அவர்களது நம்பிக்கைகளையும் மதக் கோட்பாடுகளையும் தாக்கியவர்.’ அவன் எழுத்தாளரை ‘கபடதாரி’ என்ற சொல்லால் சுட்டுகிறான்.
சடாகுவாவில் ஒருங்கிணைக்கப்பட்டதைப் போன்ற நிகழ்வுகளுக்கு ருஷ்டி பழக்கப்பட்டவர். எண்ணற்ற வாசிப்புகள், சொற்பொழிவுகள், வகுப்புகளை மகிழ்ந்து நிகழ்த்தியவர். மேடையில் அவருடன் துணையிருந்த ஹென்றி ரீஸுக்கு இத்தகைய நிகழ்ச்சிகளில் பழக்கம் அதிகமில்லை. தன் பதற்றத்தைக் குறைக்கும் பொருட்டு ரீஸ் ஆழமாகச் சுவாசித்துவிட்டு கூட்டத்தை நோக்கினார். அது அமைதியானதாக, நட்புணர்வோடு எதிர்பார்ப்பை முன்னிறுத்திய முகங்களால் ஆகி இருந்தது. சடுதியில் ஒரு இரைச்சல் – விரைவடிகள், மென் இருமல், மூச்செறிவு, தீவிர நடை இயக்கம். ஒலியைக் கேட்டு ரீஸ் ருஷ்டியை நோக்கித் திரும்பியபோது கறுப்பு உடை அணிந்த ஒருவன் அவரை முழுமையாக ஆக்கிரமித்திருந்தான். ஆரம்பத்தில் அதை வில் ஸ்மித் மேடையில் அறைந்ததைப் போல ஒரு போலிக் குறும்பென்றே தான் நினைத்ததாக ரீஸ் சொன்னார். அதன்பின் ருஷ்டியின் கழுத்திலிருந்து குருதி வழிந்து சடகுவா சின்னத்தின் பின்னணியில் சிவந்து பரவியதைக் காண்கிறார். ‘அப்போதுதான் உண்மையில் அங்கு கத்தி இருப்பது தெரிந்தது. முதலில் அடிப்பதைப் போல மட்டுமே தோன்றியது. ஒரு நொடி நான் உறைந்தேன். பிறகு அந்த ஆளை நோக்கிச் சென்றேன். அனிச்சையாக. ஓடிச்சென்று பின்னாலிருந்து அவனை இழுத்து அவன் கால்களை மடக்கிப் பிடித்தேன்.’ மதார் ருஷ்டியைப் பத்துப் பன்னிரு முறை குத்தினான். இப்போது ரீஸை நோக்கித் திரும்பி அவரையும் குத்தினான். அவர் விழிக்கு மேலே இரத்தக் கசிவு ஏற்பட்டது.
அன்று காலை ருஷ்டியோடு காலையுணவு உண்ட மருத்துவர் ஒருவர் இரண்டாம் வரிசையில் இடைகழியில் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து படிகளில் விரைந்தோடி கைக்கலப்பு நிகழ்ந்த இடத்தை அடைந்தார். தன் பெயரை வெளியிட விரும்பாத அம்மருத்துவர் என்னிடம் நிச்சயமாக மதாரைத் தடுத்ததன் மூலம் ரீஸ்தான் எழுத்தாளரின் உயிரைக் காத்திருக்கிறார் எனக் குறிப்பிட்டார். நியூ யார்க் மாகாண காவலர் மதாருக்கு விலங்கு அணிவித்து மேடையிலிருந்து அகற்றினர்.
தரையில் மல்லாந்து கிடந்த ருஷ்டிக்கு இன்னும் நினைவு இருந்தது. கழுத்தின் வலப்புறம் ஏற்பட்ட குத்துக் காயத்திலிருந்தும் இடது கை, வயிறு, விலாப்பகுதிகளில் இருந்தும் குருதி கசிந்தது. தீயணைப்புத் துறை வீரர், நான்கு மருத்துவர்களோடு (உணர்வு நீக்கி, கதிரியக்கம், உள்ளுறுப்பு, மகப்பேறு துறை மருத்துவர்கள்) இப்போது ருஷ்டியின் அருகே இருந்தார். இரு மருத்துவர்கள் ருஷ்டியின் கால்களை ஏந்தி அவரது உடலுக்கு மீண்டும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முயன்றனர். தீயணைப்புத் துறை வீரர் ஒரு கையால் ருஷ்டியின் வலது கழுத்தை அடைத்தபடி மறுகையை விழியருகே வைத்தார். தீயணைப்புத் துறை வீரர் ருஷ்டியிடம் ‘நாங்கள் ரத்தக் கசிவை அடைக்க முயல்கிறோம், அதனால் கண்ணைச் சிமிட்டாதீர்கள், மூடியே வையுங்கள்’ என்றார். ருஷ்டி அதற்கு ‘ஓ.கே. ஏற்கிறேன். எனக்குப் புரிகிறது’ என்று எதிர்வினை அளித்தார்.
ருஷ்டியின் இடது கையில் கடுமையான ரத்தக்கசிவு. ஈரிணை கத்தரிக் கோல்களைக் கொண்டு ஒரு மருத்துவர் ருஷ்டியின் மேற்சட்டையைக் கிழித்துவிட்டு தூய்மையான கைக்குட்டையால் அவரது காயத்தை அடைக்கும் விதமாக இறுகக் கட்டினார். சில நொடிகளிலேயே கைக்குட்டை நனைந்து போனது. ‘நாசமாய்ப்போன’ ரத்தம் வந்தபடியே இருந்தது என்று மருத்துவர் பின்னர் குறிப்பிட்டார். யாரோ அவரிடம் தாளால் ஆன துவாலைகளைத் தந்தனர். ‘என்னால் முடிந்தவரை அத்திசுத் தாள்களை வைத்து அழுத்தினேன்.’
ருஷ்டி, ‘என் இடது கைக்கு என்ன ஆயிற்று?’ எனக் கேட்டார். ‘அது கடுமையாக வலிக்கிறது!’ அவரது இடது இடுப்புக்கு அருகே குருதி வழிந்து குளமாகி இருந்தது.
அவசர சிகிச்சை மருத்துவத் தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்துசேர்ந்தனர். ருஷ்டிக்கு நாளவழி ஊட்டம் ஏற்றப்பட்டது. அவரைத் தூக்குப் படுக்கையில் கிடத்தினர். அரங்கிலிருந்து இழுத்துச்சென்று அவரை வானூர்தியில் ஏற்றினர். பென்சிலேவானியாவில் ஈரியில் (Erie) இருக்கும் பிட்ஸ்பர்க் மருத்துவ மையப் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டாம் நிலை காயச் சிகிச்சை நிலையத்துக்கு அது சென்றது.
ருஷ்டி சடாகுவாவுக்குத் தனியாகவே வந்திருந்தார். நியூ யார்க்கில் அவர் மனைவி ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸ்க்கு நண்பகல் நேரத்தில் அவரது கணவர் தாக்கப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்துத் தொலைபேசிச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக ஈரிக்கு விமானம் மூலம் வந்துசேர்ந்தார். அவர் வந்துசேர்ந்தபோது ருஷ்டி அறுவை சிகிச்சை அறையிலேயே இருந்தார்.
சடாகுவாவில் மக்கள் குழப்பத்துடன் நடந்தவண்ணம் இருந்தனர். ருஷ்டியைக் காக்க மேடையேறிய மருத்துவர் ஒருவர் ‘சடாகுவாவில் நான் மிக அமைதியாக உணர்ந்துவந்த இடங்களுள் முதன்மையானது. ஒரு நொடியில் இது கொடுங்கனவைப் போல் நிகழ்ந்துவிட்டது. அதன் பிறகு உண்மையாக நிற்கிறது. இந்நிகழ்வு ஒரு புரிதலையும் தரவில்லை. பிறகு மெல்ல மெல்ல உலகில் மிகத் தெளிவான ஒன்றாக மாறியது’ என்றார்.
ருஷ்டி ஆறு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். நலவிடுப்புக்குப் பின்னர் பெரிதும் இல்லத்திலேயே இருந்தார். மருத்துவர்கள் நாளுக்கு இரண்டு அல்லது மும்முறை அவரை வந்து சந்தித்தனர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் பாதுகாப்பு இன்றி வாழ்ந்து வந்தவர், அதுகுறித்து மீளச் சிந்தித்தாக வேண்டும்.
கிறித்துமஸ் தினத்துக்கு முன்பு குளிர்ந்த மழைக் காலையில் ருஷ்டியின் இலக்கியப் பிரமுகர் ஆண்ட்ரு வைலியின் அலுவலகத்துக்கு அவரைச் சந்திப்பதற்காக வந்துசேர்ந்தேன். சற்று நேரங்கழித்து அலுவலகக் கதவு திறக்கக் கேட்டேன். ருஷ்டி தனது பம்பாய், லண்டன், நியூ யார்க் நகரங்களின் கலவையான ஆங்கிலத் தொனியில் பல மாதங்களாகத் தான் பார்க்காதிருந்த பிரமுகர்களுக்கும் உதவியாளர்களுக்கும் முகமன் சொல்வதைக் காண முடிந்தது. அவர் கூடமெங்கும் நடந்துவரும் காட்சியே சிலிர்ப்பு உண்டாக்கியது. கத்திக் குத்துக்குப் பிறகு நாற்பது பவுண்டு உடல் எடை குறைந்து காணப்பட்டார். அவரது கண்ணாடியின் வலது லென்ஸ் கருமையாக்கப்பட்டிருந்தது. தாக்குதலால் அக்கண் குருடாகியிருந்தது. தற்போது iPad-இல் இயல்பாக வாசிக்கும் அவர் தன் தேவைக்கேற்ப ஒலியையும் எழுத்துரு அளவையும் மாற்றிக்கொள்ள முடியும். அவரது முகத்தின் வலப்புறம் வடு இருக்கிறது. வழக்கம் போலச் சரளமாக அவர் பேசினாலும் கீழுதடு ஒருபுறம் நோக்கி இழுக்கிறது. அவரது இடது கையின் அல்னார் நரம்பு கடுமையாகச் சிதைந்திருக்கிறது.
தனது பிரமுகரின் மேசைக்கு அப்பால் இருந்த இருக்கையில் தன் மேற்சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அமர்ந்தார் ருஷ்டி. அவரது மனநிலை குறித்து வினவினேன்.
அவர் வறண்ட தொனியில், ‘அதாவது, இதைவிடச் சிறப்பாக நான் இருந்ததுண்டு’ என்றார். ‘ஆனால் நடந்ததைப் பொறுத்துப் பார்த்தால் நான் நலமாகவே இருக்கிறேன். மோசமான நிலையில் இல்லை. பெரிய காயங்கள் ஆறிவிட்டதை நீங்களே பார்க்கலாம். கட்டைவிரல், சுட்டு விரல், உள்ளங்கையின் கீழ்ப்பாகத்தில் எல்லாம் உணர்ச்சி மீண்டிருக்கிறது. நிறைய கைக்கான பயிற்சிகள் செய்கிறேன், நான் நன்றாகச் செய்வதாகச் சொல்கிறார்கள்.’
‘உங்களால் அச்சுதட்ட முடியுமா?’
‘அத்தனை நன்றாக முடியாது. விரல்நுனிகளில் உணர்ச்சி அற்று போயிருக்கிறதே.’
‘எழுதுவது பற்றி என்ன நிலை?’
’மிக மெதுவாக எழுதுகிறேன். ஆயினும் முன்னேறிவிடுவேன்.’
நல்லுறக்கம் வாய்ப்பது எளிதாக இல்லை. ‘கொடுங்கனவுகள் வருகின்றன. இந்தச் சம்பவம் அப்படியே வரவில்லை என்றபோதும் அச்சமூட்டுவதாக அவை உள்ளன. மெல்ல மெல்லக் குறைந்தும் வருகின்றன. நான் நலம். எழுந்து சுற்றி நடந்துவர முடிகிறது. நலம் என்றால் என் உடம்பின் பல அங்கங்களுக்கும் அடிக்கடி தொடர் கவனிப்பு தேவைப்படுகிறது என்றே பொருள். அது மிகப் பெரிய தாக்குதல்.’
ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ருஷ்டி அலுவலகத்தைப் பார்த்துப் புன்னகை செய்தார். ‘திரும்பி வந்தது சிறப்பானது. இது மருத்துவமனை அல்லாத ஓரிடம் என்பதும் நான் அடிக்கடி வர விரும்பும் இடம் என்பதும் மகிழ்ச்சி. இந்த அலுவலகத்திற்குத் தசாப்தங்களாக வருவதால் மிகவும் பழகிய இடம். இங்கு இலக்கியம் பேசவும் நூல்களைப் பற்றியும் ‘வெற்றி நகரம்’ புதினம் பற்றியும் எனக்கு இன்றியமையாததாகத் தோன்றும் பல்வேறு விசயங்களைப் பற்றியும் இங்கு உரையாடி இருக்கிறேன்.’
இந்தச் சந்திப்பிலும் அதைத் தொடர்ந்த உரையாடல்களிலும் ருஷ்டியின் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ருஷ்டி முரணாகப் பேசுவதை உணர்ந்தேன். அவரது உள்ளுணர்வு அடுத்த பணிகளைச் செய்ய – இலக்கியம் பற்றி, தன் நூலைப் பற்றி, நீண்ட ஃபத்வா காலத்தைப் பற்றி, இந்த தாக்குதலைப் பற்றி எல்லாம் அவர் பேச விழைந்ததும் வெளிப்படையாக அவர் பேச விழைந்ததற்கும் இடையே முரண் இருந்தது. சற்று நேரம் கழித்து ‘உண்மையில் PTSD என்ற ஒன்று இருக்கிறது தெரியுமா’ என்றார். ‘அதுகுறித்து எழுதுவது மிகக் கடினம் என்று உணர்ந்திருக்கிறேன். அதை எழுத அமரும்போதெல்லாம் ஒன்றுமே நிகழாது. எழுதி இருக்கிறேன் என்றபோதும் அது வெற்றுப் பேச்சாகவும் குப்பைகளாகவும் இருப்பதால் மறுநாளே அவற்றை அழித்துவிடுவேன். இன்னும் அந்தக் கானகத்திலிருந்து வெளியேற என்னால் முடியவில்லை.’
தொடர்ந்து, ‘நான் எனக்குள் எழுத்தாளர் அடைப்பு என்ற பதத்தை ஒருபோதும் அணுகவிட்டதில்லை’ என்றார். ‘மூளையில் ஒன்றுமே இல்லாத ஒரு நிலை அனைவருக்கும் வரும். நீங்கள் சரி வேறொன்றுமே இனி வராது போல என்று நினைப்பீர்கள். எழுபத்தைந்து வயதில் இதுவரை 21 நூல்கள் எழுதிவிட்ட பட்டறிவின்படி ஒருவருக்கு நிச்சயம் ஏதேனும் வரும் என்பது எனக்குத் தெரியும்.’
’கடந்த மாதங்களில் அப்படி ஏதும் ஏற்பட்டதா?’
ருஷ்டி புருவம் உயர்த்தினார். ‘இல்லை. அதாவது நான் முயன்றேன், ஆனால் ஏதும் தோன்றவில்லை’ என்றவர், சற்று நேரம் கழித்து, ‘இப்போதுதான் சாறுகள் ஊறத் தொடங்கியிருப்பதை உணர்கிறேன்.’
’பல்லாண்டுகளாக அச்சுறுத்தல், விலக்கம், கொலை ஆபத்தைச் சிந்தித்தபடியே அவற்றையும் மீறி தொடர்ந்து வாழ்வது எத்தகையது? உங்கள் மீதான கொலை வெறித் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய பிறகு எப்படி நலம் மீள்வது? மீண்டு அப்படியேதும் நிகழாததைப் போல வாழ எப்படி முயல்வது?’
தாக்குதலுக்கு முன்பிருந்தே அவருக்குத் தெரிந்த ஒரு மருத்துவச் சேவையாளருக்குத் தன் நன்றியுணர்வைத் தெரிவித்தார். ‘அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. அவருக்கு என்னைத் தெரியும், எனக்காக நிறைய உதவி இருக்கிறார். நான் எதையும் முழுமையாகப் பேசுபவன்.’
நெடுங்கால மனத்தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சு இருந்தது. ‘நான் எப்போதும் ஒரு பாதிக்கப்பட்டவனின் மனநிலையை ஏந்திவிடக்கூடாது என்பதற்காகக் கடுமையாக முயன்றிருக்கிறேன்’ என்றார். ‘ஆனால் இப்போது நீங்கள் என் முன் அமர்ந்து என்னை யாரோ கத்தியால் குத்தினார்கள் என்கிறீர்கள். பரிதாபத்துக்குரிய நான்.. இதுகுறித்து நான் சில நேரங்களில் சிந்திப்பதுண்டு.’ சிரித்தார். ‘வலிக்கிறதுதான். ஆனால் நான் எதை நினைக்கவில்லை எனில் மக்கள் நூலை வாசித்துச் சிந்திப்பார்கள் என்பதைத்தான். அவர்கள் கதையால் ஆக்கிரமிக்கப்பட்டு கரைந்திட வேண்டும் என்பதே என் விருப்பம்.’
அவருடைய தொடர்ந்த இருப்பின் காரணமாக களைத்துப் போன பலர் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததை நினைவுகூர்ந்தார். ’மக்களுக்கு இது பிடிக்கவில்லை. நான் இறந்திருக்க வேண்டும் அவர்களுக்கு. நான் இப்போது ஏறத்தாழ இறந்தவன் என்பதால் பலரும் என்னை நேசிக்கிறார்கள்.. அப்போது அதுதான் நான் செய்த பிழை. நான் உயிர் வாழ்ந்தது மட்டுமில்லாமல் சிறப்பாகவும் வாழ முயன்றேன். பெரும் பிழை. பதினைந்து கத்திக் குத்துகள் வாங்கிப் பாருங்கள், சிறப்பான பாராட்டுகள் கிட்டி இருக்கும்.’
அவர் மருத்துவமனைப் படுக்கையில் கிடந்தபோது எண்ணிறந்த செய்திகளும் மின்னஞ்சல்களும் அவர் நலம் கோரி அன்பைப் பொழிந்தன. Chimamanda Ngozi Adichie என்ற நைஜீரிய நாவலாசிரியர் என்னிடம் ‘நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன்’ என்றார். ‘அவர் உயிருக்கு இன்னும் ஆபத்து இருப்பதையே என்னால் நம்ப முடியவில்லை. இரண்டு நாள்களாக மிகுந்த கவனத்துடன் இருந்தபடியே உலகெங்கும் இருக்கும் எனது நண்பர்களுக்குச் செய்திகள் அனுப்பிக்கொண்டும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை இணையத்தில் அறிந்தவாறும் இருக்கிறேன்.’ நியூ யார்க் பொது நூலகத்தின் படிகளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாசிப்பு நிகழ்ந்தது.
சில எழுத்தாளர்களுக்கு இந்தத் தாக்குதல் சிலவற்றின் மீது தீவிர கவனத்தை அளித்தது. ஆயாத் அக்தர் என்னிடம், ‘சல்மான் மீதான இத்தாக்குதல் எனக்கு நிறைய விசயங்கள் குறித்த தெளிவைத் தந்தது’ என்றார். ‘பேச்சினால் உண்டாகச் சாத்தியமுள்ள தீய விளைவுகளுக்கும் கற்பனைக்கான விடுதலைக்கும் இடையே ஒரு தெளிவான கோட்டை நான் வரைந்து வைத்துள்ளேன். அவை விகிதாச்சாரமானவை என்றபோதும் அவற்றை ஒரே பத்தியில் வைக்கத் தேவையில்லை.’
ஏறத்தாழ கொலையுண்ட பிறகு உண்டான நலம் விரும்பிக் குறிப்புகளால் ருஷ்டி கலக்கமடைந்தார். ‘இதனால் பலரும் கருணை கொள்ளத் தொடங்கியது நல்லதுதான் இல்லையா?’ என்றார். ‘நான் கொலையுண்டாலோ அல்லது குற்றுயிராய்க் கிடந்தாலோ மக்கள் எப்படி எதிர்வினை செய்வார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை.’
இருப்பினும் அவர் ‘நான் நல்லூழ் கொண்டவர்’ என்றார். ‘நான் சொல்ல விரும்பவது என்னவென்றால் எனது முதன்மையான உணர்வு நன்றியுணர்வே!’ அவருக்கு ஆதரவளித்த பலருக்கும் அவர் நன்றியுடன் இருந்தார். மருத்துவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பணியாளர்களுக்கும் தீயணைப்பு வீரருக்கும் ஈரியில் இருந்த அறுவை மருத்துவர்களுக்கும் அவர் நன்றியுணர்வைத் தெரிவித்தார். ‘ஒருநாள் நான் வெளியே வந்து அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வேன்.’ லண்டனில் வாழ்ந்துவரும் தனது மகன்கள் ஜாஃபர், மிலன் இருவருக்கும் தன் மனைவி ரேச்சலுக்கும் நன்றி தெரிவித்தார். ’நான் ஏதுமியலாதவனாய் ஆன பிறகு அவள்தான் என்னைக் கவனித்தாள்.’ மருத்துவர்கள், காவலர்கள், விசாரணை அலுவலர்கள் அனைவரையும் சமாளித்தபடியே பென்ஸ்லாவானியாவிலிருந்து நியூ யார்க் வரை அடிக்கடி போக்குவரத்தும் மேற்கொண்டிருக்கிறார். ‘நான் குற்றுயிராகக் கிடந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் பாரத்தையும் மீறி அவள் இவை அனைத்தையும் செய்து வந்தாள்.’
நியூ யார்க் வந்த பிறகு தனது பாதுகாவலை மறுத்ததன் வாயிலாகப் பிழை செய்ததாக அவர் நினைக்கிறாரா? ‘நானும் அந்தக் கேள்வியை எனக்கே கேட்டுக்கொள்கிறேன். ஆயினும் எனக்குப் பதிலில்லை’ என்றார். ‘எனக்கு இன்னொரு இருபதாண்டு வாழ்க்கை இருந்தது. எனவே அது பிழையா என்ன? நான் நிறைய நூல்களையும் எழுதினேன். ‘சாத்தானியச் செய்யுள்கள்’ எனது ஐந்தாவது நூலாக வெளியானது, நான்காவது புதினம். இது எனது இருபத்து ஒன்றாவது நூல். எனவே என் எழுத்து வாழ்வின் மூன்று கால் பாகங்கள் ஃபத்வாவுக்குப் பிறகே நடந்திருக்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கை குறித்து வருந்த முடியாது.’
’இந்தத் தாக்குதல் குறித்து யாரைப் பழி கூறுகிறீர்கள்?’
’நான் அவனைத்தான் பழி சொல்வேன்’ என்றார்.
’வேறு யாரையேனும்? சடகுவா காவலர்களுடைய கவனமின்மை அவனது ஊடுருவலுக்குக் காரணமா?’
‘நான் பல்லாண்டுகளாகவே குற்றம் சாட்டுவதையும் வெறுப்பையும் தவிர்க்கக் கடுமையாக முயன்று வருகிறேன்’ என்றார். ‘அது சரியான வழி இல்லை என நினைக்கிறேன். இவற்றையெல்லாம் கடப்பதற்கு நான் பயன்படுத்திய உபாயங்களுள் ஒன்று பின்னோக்கி எதையும் பார்க்காமல் தொடர்ந்து முன்னோக்கியே வாழ்வைப் பார்த்தது. நேற்று நடந்ததைவிட நாளை நடக்கவிருப்பது முக்கியமானது.’
’வெற்றி நகரம்’ நூலின் வெளியிடலே அவருடைய முதன்மைக் கவனமாக இருக்கிறது. புதினத்தை எப்படி வெளியிடுவது என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அது கத்திக் குத்தலின் முப்பட்டகம் வாயிலாகக் காணப்படுமா? ’சாத்தானியச் செய்யுள்கள்’ நூலுடன் இணைந்தே வந்த ‘கருணை அலையை’ அவர் நினைவுகூர்ந்தார். ஃபத்வாவினால் அந்நூலின் விற்பனை பலமடங்கு பெருகியது. கடந்த கோடையில் அவர் கத்திக்குத்து பட்ட பிறகு மீண்டும் அதன் விற்பனை பெருகியது.
அவர் தனது புதிய நாவல் இந்தியப் புராணங்களிலும் வரலாற்றிலும் வேர்கொண்டிருப்பதைப் பற்றிப் பேச மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார். தனது முதன்மைப் பாத்திரத்தைக் கண்டடைந்த உடனே ’நள்ளிரவின் குழந்தைகள்’ நாவலைப் போலவே எப்படி எழுத்து வேகம் இதில் அதிகரித்தது என்பதையும் அதிகாரத்தின் பிறழ் ஆளுகையைத் தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேன்மைவாத ஆட்சிக்காலத்துடன் பொருத்திக்கொண்டு பிரிவினைவாத சாபத்தின் இரட்டை நிலை குறித்த உருவகக் கதையாக இதை எப்படி வாசிக்க இயலும் என்பதையும் பேசினார். ஆயினும் மீண்டும் ருஷ்டி தனது புதிய நாவலுக்கான கவனத்தை ஈர்க்கும் போட்டியில் இயல்பு வாழ்க்கையின் கொடுமைகளை எதிர்கொண்டே ஆக வேண்டும். ‘ஓரளவுக்கு இது என் குறித்த பார்வையைத் திசைதிருப்பலாம். என் வாழ்க்கையைவிட எனது நூல்கள் மிகவும் ரசிக்கத் தகுந்தவை என்றே நான் எண்ணி வந்திருக்கிறேன். கெடுவாய்ப்பாக இந்த உலகம் அக்கருத்தை ஏற்கவில்லை.’
மேவில் (Mayville) கிராமத்தில் உள்ள சிடாகுவா சிறையில் ஹதி மதார் அடைக்கப்பட்டுள்ளான். இரண்டாம் நிலை கொலை முயற்சி (Second-degree murder) குற்றத்துக்காக இருபத்தைந்தாண்டுகள் வரை சிறையில் இருக்கும் நிலை வரலாம். ஹென்றி ரீஸ் மீதான தாக்குதலுக்காக அவன் மீது இரண்டாம் நிலைத் தாக்குதல் வழக்கும் உள்ளது. அதற்கு ஏழாண்டுகள் மேலதிகச் சிறை வழங்கப்படலாம். அடுத்த ஆண்டு வரை வழக்கு விசாரணை நடைபெறாது.
சடாகுவா மாவட்ட வழக்குரைஞர் ஜேசன் சிமிட் (Jason Schmidt), ’நன்கு யோசித்துப் பார்த்தால் இது ஒப்புநோக்கில் எளிய வழக்காகவே உங்களுக்குத் தெரியும்’ என்றார். ‘இது இதற்கு முன் குற்ற நீதிமன்றத்துடன் தொடர்பே இல்லாத தனியொருவர் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, தூண்டுதலற்ற முறையில் நிகழ்ந்த தாக்குதல் என்பதை நாம் அறிவோம்.’ இந்தக் குற்றத்துக்கு நூற்றுக்கணக்கான நேரடி சாட்சியங்கள் இருந்தன என்பது வழக்கறிஞரின் பணியை மிக எளிமையாக்கிவிட்டது.
மதாருக்காக வழக்குரைஞர் நாதேனியல் பரோன் (Nathaniel Barone) பொறுப்பேற்றிருக்கிறார். கத்திக் குத்துக்குப் பின்னால் நடந்த நீதிமன்ற விசாரணையில் பரோன் கைவிலங்கு பூட்டி, சிறைக்கான அகன்ற கறுப்பு வெள்ளைப் பட்டைகள் சட்டையணிந்த மதாருடன் வந்தார். முழு அங்கி அணிந்திருந்த பரோன் தனது கட்சிக்காரருடன் நின்றார். அவர் தெளிவாகக் காணப்பட்டார். வாதித்து வெல்லவே முடியாத வழக்கு என இதுகுறித்து நான் சொன்னபோது அவர் அதற்கு மறுவாதம் புரியவில்லை. ‘அனைவருமே “இந்தப் பையனுக்கு வாதிட என்ன இருக்கிறது? அவன் செய்த குற்றத்தை அனைவருமே பார்த்தார்களே” என்கிறார்கள்!’ என்றார். பரோன் தன்னிடம் நூற்றுக்கணக்கான சாட்சிகள் கோப்பில் இருந்தாலும் அவற்றை உளவியல் ரீதியாகவும் அடிப்படைவாதப் பரவல் ரீதியாகவும் தான் அணுக இருப்பதாகச் சொன்னார். அவர் New York Post இதழுக்கு மதார் அளித்த பேட்டியை ஒளிபரப்புவதற்கான அனுமதி குறித்தும் வாதிட இருப்பதாகச் சொன்னார். போதிய ஆதாரமில்லாமல் போலியான முறையில் அது சேகரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார். (உரிய இதழியலாளர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் எனவும், திரு. மதார் தான் ஒரு செய்தியாளரிடம் உரையாடுவதை அறிந்தே பேசினார் எனவும் The Post உறுதியளிக்கிறது.)
மதார் யாருடைய தூண்டுதலின் பேரிலோ அறிவுறுத்தலின் பேரிலோ இயங்கினானோ இல்லையோ ஈரானியத் தேசிய ஊடகம் தொடர்ந்து அவன் ருஷ்டியைக் கொலை செய்ய முயன்றது குறித்து தனது ஏற்பை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் இஸ்லாமியப் புரட்சிப் படையின் தலைவர் ஹோச்சீன் சலாமி (Hossein Salami) மதார் ‘வீரத்துடன்’ நடந்துகொண்டுள்ளதாகச் சொன்னார்; அதுமட்டுமின்றி 2015-இல் இஸ்லாமியர்களைத் தாக்கிய ஃபிரான்சின் பகடி இதழ் சார்லி ஹெப்தோ (Charlie Hebdo) ருஷ்டியின் விதியைக் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அயதுல்லா காமினியைக் கேலி செய்வதைத் தொடரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மதாரின் தாயையும் செய்தி ஊடங்களுக்கு அவர் தனக்கும் தன் மகனுக்கும் இடையேயான உருக்குலைந்த உறவு குறித்து வழங்கிய பதில்களையும் பொறுத்தவரை பரோன், ‘ஒரு கட்சிக்காரரின் தாயிடமிருந்து வரும் குறிப்புகள், விபரங்களை எப்போதும் கூரிய கவனத்துடன் அணுக வேண்டியது அவசியம் என்பதை உலகறியும். சில நேரங்களில் அவை எதிர்மறையாகப் புரிந்துகொள்ளப்படலாம்’ எனச் சொல்கிறார். ஆனால் அவர் மதாரின் தாய் சொன்னவற்றை நேரடியாக மறுக்கவில்லை.
பரோன் மதாரை அவனது சிறையறையில் சந்தித்தபோது அவன் ஒத்துழைப்பை அளித்திருக்கிறான். ‘திரு. மதாருடன் எனக்கு ஒரு சிக்கலும் இல்லை’ என்றார் பரோன். ‘அவர் மரியாதையாகவும் கனிவாகவும் என்னுடம் விவாதிக்கிறார். அவர் நேர்மையான இளைஞர். எந்த இயல்பான இளைஞரைச் சந்திப்பது போலவே இருந்தது. அவரைத் தனியாக அடையாளம் காண ஏதுமில்லை.’
மதார் சிறை வரிசைகளில் இருந்து தனியே ‘தனி இடத்தில்’ வைக்கப்பட்டிருக்கிறான். அவன் பெரிதும் தனது நேரத்தைக் குரானையும் இதர புனித வாசிப்பையும் மேற்கொண்டு கழிக்கிறான். பரோன், ‘அவரைப் புரிந்துகொள்ள நான் முயல்கிறேன். அது எளிமையாக இல்லை’ என்றார். ‘சிறையில் அமர்ந்திருப்பதன் யதார்த்தம் எளிதில் ஒரு நம்பிக்கையைத் தரும். ஒருவருக்கு உதவாத நிகழ்வுகள் மீது தெளிவு வரும். ஆனால் நான் எப்போதும் கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையைத் தருவேன்.’ அவர் என்னிடம், ‘மதார் இந்நிகழ்வை எளிதாகக் கடக்கவில்லை’ என்று உறுதியளித்தார். ’சிலர் இதைப் போன்றவற்றைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்.’
’ஏதேனும் வருத்தம் தெரிவித்தாரா?’ என்ற கேள்விக்கு, ’இப்போதைக்கு அதுகுறித்து சொல்ல முடியாது’ எனப் பரோன் பதிலளித்தார்.
ருஷ்டி மதாரைத் தானொரு ‘முட்டாளாகக்’ கருதுவதாக என்னிடம் சொன்னார். பிறகு தீவிர சிந்தனைக்கு ஆட்படாத மெளத்தில் இருந்து ‘நான் அவனைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்றே தெரியவில்லை, ஏனென்றால் அவன் யாரென்றே எனக்குத் தெரியாது’ என்றார். எழுத்தாளர் ஒரு பாத்திரத்துடன் போராடுவதை – மக்கள் தத்தம் எதிரிகளுடன் போராடுவதைப் போல – சீர்தூக்கிப் பார்த்தால் மனத் தளர்வு தரும் விதத்தில் ஆவியாகி விடுகின்றனர். ‘அவன் முட்டாள்தனமாக தந்த பேட்டியை மட்டுமே நான் பார்த்தேன். அது முட்டாள்கள் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது. விசாரணைக்கு இன்னும் நெடுங்காலம் இருப்பதை நான் அறிவேன். அடுத்த ஆண்டு வரை அது நிகழப் போவதில்லை. அதற்குள் அவனைப் பற்றி மேலதிகமாக நான் எதையேனும் அறிந்துகொள்வேன் என நினைக்கிறேன்.’
ருஷ்டி கடந்த சில மாதங்களாக உடல் தேற்றுவதில் காலம் கழித்து வருகிறார். மோசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அவர் பங்கை நிறைவேற்றி இருக்கிறார். ‘The White Lotus’, (கொடூரம்!) அல்லது ‘Meghan and Harry என்ற நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம்’ (அற்பத்தின் உருவம்) போன்றவற்றில் எதையேனும் அல்லது எவரையேனும் அவரால் விரும்ப முடியவில்லை. உலகக் கோப்பைப் போட்டிகள் சற்றே மகிழ்ச்சியை நீட்டித்தன. மொராக்கர்களின் முன்னேற்றம் அவரை ரசிக்கத் தூண்டியது. இயற்கை மீறிய ஆட்டத்தை ஃபிரான்சின் Mbappe-விடமும் அர்ஜெண்டினாவின் Lionel Messi-யிடமும் கண்டார். ஈரானில் நிகழும் போராட்டங்களுக்கு ஆதரவளித்த விளையாட்டு வீரர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். அது டெஹ்ரானில் நிகழும் ஆட்சி குறித்த திருப்புமுனையாக அமையக்கூடும் என்று நம்பினார்.
’வெற்றி நகரம்’ நாவலுக்காக நூல் பிரச்சாரப் பயணத் திட்டம் ஏதுமில்லை. அவர் உடல்நலம் தேறி போதிய பாதுகாப்பு கிடைத்தால் லண்டனுக்குச் சென்று தனது ‘ஹெலன்’ என்ற நாடகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கலாம் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. ‘நான் உம்மிடம் மனம் திறந்து உண்மையைச் சொல்கிறேன். இப்போதெல்லாம் நீண்டகாலத் திட்டங்கள் எதையும் நான் செய்வதில்லை. ஒவ்வொரு அடியாகச் சிறிது சிறிதாக திட்டமிடுகிறேன். வீழும் வரை முன்னேறி நட! – அவ்வளவுதான்.’
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜூம் செயலி வழியாக நாங்கள் உரையாடியபோது அவர் ‘தனக்குச் செய்ய ஏதுமில்லை. எனக்கு இன்னொரு மாற்றுத் திறன் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது, ஆனால் அப்படி ஏதுமில்லையே. Gunter Grass போன்ற எழுத்தாளர்கள் மீது எனக்குப் பொறாமை இருக்கிறது, அவர் விஷுவல் கலைஞனாகவும் இருந்தார். நாள் முழுவதும் சொற்களோடு சமரிடுவது எத்தனை இனிமையாக இருக்கும் என்று நினைப்பேன், அதன்பிறகு எழுந்து தெருவில் நடந்து கலை அரங்குவரை நடந்து வேறொன்றாக மாறிப் போவேன். என்னால் முடியவில்லை. அதனால் இதையெல்லாம் செய்கிறேன். என் நேரத்தை அளிப்பதற்குத் தகுதியான கதை கிடைக்கும்போது நிச்சயம் அதற்கான நேரம் அளிப்பேன். என் மூளையில் ஒரு நூல் உருவாகும்போது எஞ்சிய உலகம் முழுவதும் சரியான வடிவத்தை அடைந்துவிடுவதாகத் தோன்றுகிறது’ என்றார்.
தான் மேசையில் இருந்தபடி தடுமாறுவது ‘மனவுளைச்சல்’ அளிக்கிறது என்று ஏற்றுக்கொண்டார். கதைகள் தனக்கு வருமோ வராதோ என்ற கவலை அவருக்கு இருக்கிறது. ஆயினும் அவர் அங்கிருந்தபடியே காலத்தைச் சமாளிக்கிறார்.
தனது படிப்பறையைச் சுற்றிப் பார்த்தபடி சுவருக்கு இணையாக இருக்கும் நூல்களை நோக்கிக் குறிப்புணர்த்துகிறார். ‘அனைத்தும் நலமென்றே நினைக்கிறேன். இங்கு அமர்ந்திருக்கும்போது நான் சிந்திக்க ஏதேனும் தேவைப்படுகிறது’ என்றார். ‘ஏனெனில் அது வெளியுலகத்திலிருந்து வருவது. உள்ளிருக்கும் உலகம் வெளியுலகத்தோடு தொடர்புகொண்டது என்பது உண்மைதான் என்றபோதும், நீங்கள் படைப்புத் தொழிலில் இருப்பவர் எனில் அத்தொழில் எங்கிருந்தும் எதிலிருந்தும் கச்சாப் பொருளை எடுத்துக்கொள்ளும்.’
காஃப்கா, தாமஸ் மன் இருவரிடமிருந்தும் ஊக்கம் பெற்ற ஒரு நாவலை எழுதுவதைத் தற்போதைக்கு அவர் தள்ளிவைத்திருக்கிறார். ‘ஜோசப் ஆண்டனுக்குத்’ தொடர்ச்சியாக ஒருநூலை எழுத எண்ணம் கொண்டிருக்கிறார். முதலில் இந்த எண்ணம் அவருக்கு எரிச்சல் அளித்திருக்கிறது. ’ஏனென்றால் அது என் மீது அழுந்தித் திணிக்கப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தேன். தாக்குதலே என்னைத் தாக்குதல் பற்றி எழுதத் தூண்டுவதாக உணர்ந்தேன்.’ சமீப வாரங்களில் அந்த எண்ணம் தானாக உருப்பெற்று வளர்ந்திருக்கிறது. ருஷ்டியின் நூல்கள் ஐமாக்ஸ் அளவில் பெரும் தயாரிப்புச் செலவில் உருவாக்கப்படுவதற்கு நிகரானவை. ஆனால் சடாகுவாவில் நிகழ்ந்த தாக்குதல், ஒருசில நொடிகளில் நிகழ்ந்தது என்பதாலேயே அவர் மிகவும் ‘நுண்ணோக்கிப் பார்வை’யைக் கற்பனை செய்கிறார்.
குரல் முற்றிலும் வேறாக இருக்கும். ‘ஜோசப் ஆண்டன்’ நூலில் பயன்படுத்திய சற்றே சேய்மை மிகுந்த படர்க்கைக் குரல் இங்கு சரி வராது. ‘இது எனக்குப் படர்க்கைக் குரலாகத் தோன்றவில்லை’ என்றார் ருஷ்டி. ‘ஒருவன் உங்கள் மீது கத்தியால் குத்துவது என்பது தன்மை விதப்புக் கதை. அது ஒரு ”நான்” கதை!’
*
The Defiance of Salman Rushdie எனும் தலைப்பில் பிப்ரவரி மாத நியூ யார்க்கர் இதழில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.