தூய அடிபணிவின் மகிழ்ச்சியற்ற தருணங்கள்: மாஜிதாவின் ‘பர்தா’

0 comment

முஸ்லிம் பெண்களின் ஆடை (குறிப்பாக பர்தா, அபாயா போன்ற ஆடைகள்) குறித்த பார்வைகள் முஸ்லிம் சூழலில் தூய அடிபணிவிற்கான மதப் புனித ஆடையாகவே கருதப்பட்டு வருகிறது. அதன் மீது எந்தவொரு மாற்றுப் பார்வையும் ஏற்புடையதல்ல எனும் கருத்துநிலை தீவிரமாக உறைந்துள்ள ஈழத் தமிழ் முஸ்லிம் சமூக அமைப்பிலிருந்து எழுந்த மாஜிதாவின் பர்தா ஒரு புதிய உடைப்பாகக் கவனத்தை ஈர்க்கும் படைப்பு முயற்சியாகத் தோன்றுகிறது. சென்ற வருடம் வெளியான தமிழ் நாவல்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகப் பிரதிகள் விற்பனையான நாவல்களின் பட்டியலில் பர்தாவுக்கும் ஓர் இடம் உருவாகி இருக்கிறது. இது தமிழ்ச் சூழலில் இந்நாவலின் பேசுபொருள் மீதான கவனக்குவிப்பின் விரிந்த தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் முஸ்லிம் சூழலிலிருந்து பொதுவாகச் சில இலக்கியக் குரல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் முஸ்லிம் பண்பாட்டுச் சூழல் குறித்த திறந்த உரையாடல் நிகழச் சாத்தியமற்ற வகையில் அந்த வெளி மூடுண்டு கிடப்பதையே காண்கிறோம். குறிப்பாக, பண்பாட்டு அடையாளங்கள் குறித்த சுய விசாரணையுடன் கூடிய பார்வைகள் இந்தச் சூழலிலிருந்து வெளிவருவது மிக அரிதானதாகவே இருக்கிறது. பர்தா குறித்து முஸ்லிம் பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்று நமக்குள் எழும் கேள்விக்கான பதிலை நோக்கி நாவல் நம்மை அழைத்துச் செல்கிறது. உண்மையில் இதற்கான பதில் நாவலில் நேரடியானதாகவோ அல்லது ஒருமையிலோ இல்லை. பதில்களாக அவை கிளைத்துச் செல்கின்றன.

பொதுவாக முஸ்லிம் சூழலில் முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்த கலாசார உரையாடல்கள் புனிதப்படுத்தப்பட்டவையாக, மாற்றுச் சிந்தனைகளுக்கான எந்த வாய்ப்புகளுமற்றதாகச் சுருங்கிவிட்டது. எல்லாப் பெண்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பி உடுக்கப்பட்டுவிட்ட ஒரு ஆடையாகப் பர்தாவை நாம் எண்ணிக்கொண்டாலும் அதற்குள்ளே சில கசப்பான உண்மைகளும் திரையிடப்பட்டிருக்கின்றன என்ற அழுத்தமான கருத்தை இந்நாவல் திறந்த வெளிக்குக் கொண்டுவருகிறது.

மாஜிதாவின் முதல் நாவல் இது. முஸ்லிம் பெண்களின் பர்தா விசயத்தில் மாஜிதா எந்தத் தரப்பு என்பதைக் கவனத்திற்கொண்டே தமிழ் முஸ்லிம் இலக்கியச் சூழலில் பெரும்பாலானவர்களால் இந்நாவல் எதிர்கொள்ளப்படுகிறது. முஸ்லிம் இலக்கிய, பண்பாட்டுச் சூழலுக்கு வெளியிலும் இந்நாவல் மீதும் அதன் பேசுபொருள் மீதும் கவனயீர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்தப் பார்வைகள்கூட இந்நாவலின் இலக்கிய அந்தஸ்தையும், புனைவுத் தரத்தையும் தூக்கி மதிப்பீடு செய்யும் தளத்திலேயே நிற்கின்றன. அதைத் தாண்டி அந்தப் பார்வைகள் நாவலின் கலாசார, அரசியல், பெண்ணியத் தளங்களை நோக்கி விரிவுகொள்ளவில்லை.

மாஜிதா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரது சொந்த இடம் கிழக்கிலங்கையின் ஓட்டமாவடி. அவரது ஊருக்கு முதன்முதலில் எப்படி பர்தா அறிமுகமானது என்பதைப் பற்றிய சமூக வரலாற்றுச் சித்திரமாகவே முதலில் இந்த நாவலை அணுக விரும்புகிறேன். அதற்கான சாத்தியப்பாட்டை நாவலின் கதை நமக்கு அளிக்கிறது.

நாவலின் மையக் கதாபாத்திரமான சுரையா, தான் வாழும் சமூகச் சூழலில் எப்படி பர்தா அறிமுகமாகிறது என்பதை உன்னிப்பாக அவதானிக்கிறாள். அதன் அங்கமாகத் தானும், பிற பெண்களும் எப்படி மாற்றப்பட்டோம் என்பதை அவளது அனுபவங்களினூடே கதைக்குள் திடமாக முன்வைக்கிறாள். அப்போதைய முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான புறச்சூழல் இவ்வளவு சர்ச்சைக்குள்ளானதாக இருக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, இஸ்லாமியர் சிறுபான்மையாக வாழும் எந்த நாட்டிலும் அப்படியொரு சூழல் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். இன்று உலகளவில் அது பெரும் சர்ச்சையான ஒன்றாக மாறி இருக்கிறது. முஸ்லிம் பெண்களின் அபாயா, பர்தா போன்ற கலாசார ஆடைகள் மட்டும் ஏன் சர்ச்சைக்குள்ளாகின்றன என்ற கேள்வி முஸ்லிம் சமூகச் சூழலில் நிலவிக்கொண்டே இருக்கிறது. பெண்களின் பர்தா, அபாயா போன்ற கலாசார ஆடைகளில் முஸ்லிம்களிடையே மிக இறுக்கமான பிடிவாதம் தொடர்வதே இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்றொரு சுய விமர்சனத்தை நாவல் முன்வைக்கிறது.

குடும்பம், பள்ளிக்கூடம், அலுவலகம், சமூக இயக்கங்கள் என எல்லா மட்டங்களிலும் பர்தாவுக்கான பிரச்சாரத்தையும், பர்தா அணிவதை நடைமுறைப்படுத்தும் திட்டங்களையும் ஆண்கள் முன்னெடுக்கின்றனர். இதில் குறிப்பாக நாவலின் மையக் கதாபாத்திரமான சுரையாவின் தந்தை ஹயாத்து லெப்பை முன்னணியில் நிற்கிறார். பொதுவாக ஊரில் தலையெடுக்கிற எந்த விடயத்திலும் தலைமைப் பொறுப்பு தன்னிடம் வரவேண்டும் என எதிர்பார்க்கும் ஒருவராக நாவலில் அவர் அறிமுகம் செய்யப்படுகிறார். இத்தகைய தன்முனைப்பு கொண்டவர்கள் எதையும் புரிந்து செயற்படும் திறனற்றவர்கள் என்பதை இவர்களைப் பயன்படுத்துகிறவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். பர்தாவை இலங்கை முஸ்லிம் பண்பாட்டிலும் ஒட்டிவிடும் சிலரது நிகழ்ச்சி நிரலுக்குள் ஹயாத்து லெப்பையும் உள்வாங்கப்படுகிறார். அவருக்கு ஊரில் ஒரு தலைமைத்துவம் கிடைத்தால் போதும். எதையும் ஆழ்ந்து சிந்தித்துப் புரிந்து முடிவெடுக்கும் ஒருவர் அல்ல அவர்.

பர்தா நாவலில் சுரையாவின் ஊருக்கு முதன்முதலாக இந்த ஆடையைப் பாடசாலை, அரச அலுவலகங்கள் ஊடாகவே கொண்டுவரும் திட்டத்தை ஊர் மத்திச்சத் தலைமைகளான ஆண்கள் வகுத்துச் செயற்படும்போது, மீராசாஹிப் போன்ற அதிபர்கள் அதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இந்தப் பண்பாட்டை இங்கு கொண்டுசேர்ப்பதில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பங்கையும், முஸ்லிம் இயக்கங்களின் பங்கையும் மாஜிதா நாவலில் கவனப்படுத்துகிறார். ஜலால்தீன் போன்ற அரசியல்வாதிகள் அதன் குறியீடாக வருகின்றனர்.

முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்குத் திக்விஜயம் செய்யும் ஜலால்தீன் பர்தாவைக் கட்டாயப்படுத்திச் சொற்பொழிவாற்றுகிறார்.

“இப்போது ஈரான் அரசாங்கம் நம்மட நாட்டுல இருக்கிற முஸ்லிம் பெண்களுக்கு நல்லதொரு விடயத்த அறிமுகம் செய்திருக்கிறது. அதுதான் பர்தா. பெண்கள் கட்டாயம் பர்தா போடணும். இஸ்லாத்தில் அது கட்டாயக் கடமை. இதைப் பிள்ளைகள் மட்டும் போட்டால் போதாது. எல்லா டீச்சர்மாரும் போடணும்” என்று வலுத்த குரலில் ஆணையிடும் போதும்,

“போன வருஷம் ஈரானுக்குப் போன நம்மட ஊர் சபீக் மௌலவி இண்டைக்கு ஸ்கூலுக்கு வந்தாரு. இனிமேல் பொம்புளப் புள்ளயல் இந்த உடுப்பத்தான் உடுக்கணுமாம். இல்லாட்டி அல்லாஹ்விடம் தண்டனை கிடைக்குமாம்”

என அனீஸா பர்தாவை அணிந்துகொண்டு வந்து உம்மாவிடம் சொல்லும்போதும் அந்த ஆடை இலங்கை முஸ்லிம் பண்பாட்டில் எப்படிப் புதிதாக வந்து ஒட்டிக்கொள்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளும் தருணமாக இருக்கிறது. பாடசாலையிலிருந்து பர்தா அணிந்து வரும் தனது சகோதரி அனீஸாவைப் பார்த்து, “இதுக்குப் பெயர் என்ன?” என்று சுரைய்யா கேட்கும்போது பாரம்பரிய முஸ்லிம் பண்பாட்டுக்கு அதன் அந்நியத்தை உணர்கிறோம்.

விவசாயக் கந்தோரில் ஹயாத்து லெப்பையின் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆயிஷா அவரது வற்புறுத்தலின் பேரில் பர்தா அணிந்துகொள்கிறாள். புதிதாகப் பர்தாவை அணிந்துகொண்ட அவள் அதனை அசூசையாக உணரும்போது தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொள்கிறாள். அதை அவள் விரும்பி அணிந்தாளா என்று அவளது சக பெண் ஊழியரான வேணி கேட்கும்போது, “இதைப் போடாட்டி இங்க எப்புடி வேல செய்றது?” என ஆதங்கமாகச் சொல்கிறாள்.

ஊரில் பெண்களுக்குப் பர்தா அறிமுகமாகும் காலப்பகுதியில் ஆண்களுக்கான கலாசார ஆடைகள் குறித்து எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் துயரமானது. இது பால்நிலை சார்ந்து முஸ்லிம் பண்பாட்டுச் சூழலில் நிலவும் பாரபட்சமின்றி வேறென்ன? அநேகமாக எல்லாப் பண்பாடுகளிலும் பெண்கள் இப்படி கலாசாரத் தளத்தில் வஞ்சிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

பர்தா இலங்கை முஸ்லிம் பண்பாட்டில் ஈரானிலிருந்து வந்துதான் ஒட்டிக்கொண்டதா என்றால் முழுமையாக அப்படிச் சொல்ல முடியாது. இலங்கையின் பல்வேறு முஸ்லிம் ஊர்களுக்கும் அது வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து ஒரு Exotic பண்பாட்டு அடையாளமாகக் கலந்துவிட்டிருக்கிறது. மாஜிதாவின் ஊருக்கு அது ஈரானிலிருந்து இறக்குமதியாகி இருக்கிறது. இதனை இங்கு இறக்குமதி செய்தவர்களுக்குப் பொருளாதார நன்மைகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

பொதுவாக, இலங்கை முஸ்லிம் பண்பாட்டுச் சூழலில் சில இஸ்லாமிய இயக்கங்களைத் தொடக்கியவர்கள் உண்மையில் காண விரும்பியது கலாசார மாற்றம் அல்ல. தங்களது தனிப்பட்ட பொருளாதார மாற்றத்தையே அவர்கள் முதலில் விரும்பி இருந்தனர். இங்கு இஸ்லாமிய இயக்கம் நடத்தியவர்கள் யாரும் நஷ்டமடைந்ததில்லை. மறுதலையாக, ஒருசில இயக்கங்களால் முஸ்லிம் சமூகம் பண்பாட்டுரீதியாக நஷ்டமடைந்தது என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. பாரம்பரிய முஸ்லிம்களின் பண்பாட்டு மரபுகள், வழக்காறுகள் அரபுத்தூய்மைவாத பண்பாட்டுத் திணிப்புகளின் மூலம் பலாத்காரமாக ஆண்களால் அழிக்கப்பட்டதையும் மாஜிதா நாவலில் நினைவுகூர்கிறார். திருமண வைபவத்துக்காகக் குலவை இடும் பெண்களை ஈஸா மிக மோசமாகத் திட்டுகிறான். ஈஸா மதரசாவில் ஓதிவிட்டு வந்த பிறகுதான் பாரம்பரிய முஸ்லிம் பண்பாட்டை மறுத்து தூய்மைவாத அரபுப் பண்பாட்டுப் போராளியாக மாறுகிறான்.

“ஈஸாவின் மூளையை அந்த மதரசா மௌலவிமார்கள் குழப்பிப் போட்டாணுவள்“ என அவனைக் குறித்து நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. இத்தகைய மூளை குழப்பப்பட்டவர்கள் எந்த சுயவிசாரணையுமற்றவர்கள். மூர்க்கமான பிடிவாதக்காரர்களாக, தூரநோக்குகளற்று உஸ்தாதுகளின் (மௌலவிமார்) உள்ளரசியல் புரியாமல் அவர்களின் பொருளாதார, கலாசார நலன்களுக்கான கருவிகளாக மாறுகின்றனர். பராஅத் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளை அழித்ததன் மூலம் இவர்கள் எதனைச் சாதித்தார்கள் என்ற கேள்வி நாவலின் ஒரு கட்டத்தில் நமக்குள் எழுகிறது.

சுரையா சிறுமியாக இருக்கும்போதே அவளது விருப்பத்துக்கு எதிராக அவளது தாய் பீவியால் பர்தா அவள் மீது திணிக்கப்படுகிறது. அதை எதிர்த்து சுரையா குரல் எழுப்பும்போது தந்தை ஹயாத்து லெப்பை காரமான காய்ந்த கொச்சிக்காய்களை அவளது வாய்க்குள் போட்டு சப்ப வைக்கிறார். பின் அந்தச் சாற்றை எடுத்து அவள் வாயில் தேய்க்கிறார். இந்தப் பாசிச மனநிலைகொண்ட மனிதர்களால் இந்தப் பர்தா சில சந்தர்ப்பங்களில் வன்முறை மூலமே சாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாவல் உரத்துச் சொல்கிறது. இந்த விசயத்தில் பெண்களிடம் ஒரு தூய பணிவை ஆண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிய வருகிறது. மதம், பண்பாடு என வரும்போது பெண்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டு, ஆண்களின் கலாசாரக் கண்டுபிடிப்புகளின் பரிசோதனைக் களம் எனும் பாத்திரத்தையே அவர்கள் வரலாற்று நெடுகிலும் வகித்து வந்திருக்கிறார்கள். அவர்களது சுயம் கணக்கெடுக்கப்படாமல் அவர்களின் எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு ஒருவித சோக நாடகீயத்தன்மையாக (tragedy) பெண்களது வாழ்வு மாற்றப்படுகிறது. இந்த வரலாற்றுத் துரோகத்துக்கு எதிரான ஒரு பெண்ணின் சலித்த குரலை இந்நாவல் நெடுகிலும் என்னால் கேட்க முடிந்தது.

நாவலின் பத்தாவது அத்தியாயம் மறைத்தலின் அழகு கல்குடா முஸ்லிம்கள் மத்தியில் புதிதாக முளைத்த இஸ்லாமிய இயக்கங்கள் குறித்துக் கதையாடுகிறது. அந்த இயக்கங்களுக்கு பெரிதும் புனைபெயர்களே வழங்கப்பட்டிருக்கின்றன. மாஜிதாவின் சமூகச் சூழலலோடு அணுக்கமானவர்களுக்கு மட்டுமே அதைப் பிசிறுகளின்றிப் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். மற்ற வாசகர்களுக்கு இந்த இடம் புரிதலுக்குச் சற்று சவாலான இடம்தான். சமூகத்தில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் அவர்கள் காண விழைந்த மாற்றம் என்ன என்பதில் எந்தத் தெளிவுமற்ற இயக்கங்கள் அவை. குறிப்பாக, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் இயங்கிய இஸ்லாமிய இயக்கங்களின் கொள்கையை அப்படியே கண்மூடித்தனமாக அந்தச் சூழலிலிருந்து மிகவும் வேறுபட்ட இந்தச் சூழலுக்குக் கொண்டுவர முயன்றனர். இது எப்படி இங்கு வெற்றிபெறும் என்ற எந்த அடிப்படையான கேள்விகளைக்கூட அவர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளவில்லை. அதனால்தான் அந்த இயக்கங்களால் இன்றுவரை முஸ்லிம் சமூகவெளியில் எந்தப் புரட்சிகரமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இலங்கை முஸ்லிம் சமூகவெளியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அரச கல்வி நிறுவனங்கள், ஏனைய திட்டங்களினூடே நிகழ்ந்து வந்தவைதான். இதில் எந்த இஸ்லாமிய இயக்கத்துக்கும் பங்கில்லை. வெறும் சமூக மரபு சார்ந்த சில்லறைப் பிரச்சினைகளில் மக்களை மோதவிட்டதைத் தவிர வேறு எந்த உருப்படியான காரியத்தையும் அவர்களால் செய்யவும் முடியவில்லை, சாதிக்கவும் முடியவில்லை.

இஸ்லாமிய இயக்கம் ஒன்று பெண்களுக்கான மதப் பிரச்சாரத்தை ஓர் ஆணைக் கொண்டு பெண்களுக்கும் அவருக்குமிடையில் ஒரு திரையைப் போட்டுக்கொண்டு மேற்கொள்வதை நாவலில் ஓரிடத்தில் மாஜிதா சித்தரிக்கிறார். இதுவே அவர்களிடம் எந்த முற்போக்கான திட்டங்களும் இல்லை என்பதைக் காட்டிவிடுகிறது. அவர்களின் முற்போக்குச் சிந்தனை என்பது பர்தாவைக் கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டும் அணியாமல் நீலம், பச்சை, பின்ங் போன்ற நிறங்களிலும் அணியலாம் என்று கண்டுபிடித்துச் சொன்னதுதான். அதுதான் அவர்களால் இங்கு நிகழ்த்தப்பட்ட பெரும் சமூகப் புரட்சியாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. பாடசாலைகளில் புஹாரி போன்ற அதிபர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று பெண்கள் முகமும் மூட வேண்டும் என்கிற திட்டத்தைக் கொண்டுவருகின்றனர்.

சுரையாவின் வாழ்க்கையில் அவளால் எப்போதும் விரும்பப்படாத துயரமாகப் பர்தா பின்தொடர்கிறது. கொழும்புப் பல்கலைக்கழகம் சென்றும் அங்கும் பர்தா விடயத்தில் அவளது தெரிவுச் சுதந்திரம் முஸ்லிம் மஜ்லிஸினால் மூர்க்கமாக மறுக்கப்படுகிறது. பர்தா தொடர்பில் அங்கு முஸ்லிம் மஜ்லிஸ் கடைபிடிக்கும் இறுக்கமான சட்டங்களால் அயர்ச்சியடைகிறாள். ஆனால் சுரையா தன் தெரிவுச் சுதந்திரத்தையே முன்னிறுத்தி முடிவெடுக்கிறாள். ரெகிங் காலப்பகுதியில் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் ஹாஸிமிடம் அவள் தைரியமாகப் பர்தாவிலிருந்து தனது விலகலைச் சொல்கிறாள். அவன் சீறுகிறான். “பெண்கள் இஸ்லாத்தில் கட்டாயம் தலையை மறைக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா? ரெகிங் முடிஞ்சாலும் நீ கட்டாயம் பர்தா போடத்தான் வேணும்”.

“நாங்க மட்டுந்தான் பர்தா போடனுமா? நீங்களும் ஜூப்பாவும் தொப்பியும் போட்டு வாங்களம்.” சுரையாவின் எதிர்வினை அதிகாரத்தை மிகக் கடுமையாகத் தொந்தரவு செய்கிறது. ஆனால் சுரையாவின் இந்தக் குரலைக் கலாசாரத்துக்கு எதிரான குரலாகப் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சுரையா ஹாஸிமை நோக்கிச் சொல்லும் வார்த்தைகள் பண்பாட்டுக்கு எதிரானதல்ல. கலாசார அடையாளம் பெண்ணுக்கு மட்டுமே ஆனதல்ல என்பதைத்தான் அது சொல்கிறது. சுரையா சிறுமியாக இருக்கும் போதிருந்தே பர்தா மீது அவளுக்கு ஏன் இந்த வெறுப்பு? அதன் கலாசார அடையாளத்தால் ஏற்பட்ட வெறுப்பாக நான் சொல்ல மாட்டேன். அது பெண்களிடம் எந்த உரையாடலுமின்றி அவர்களின் விருப்பு வெறுப்புகள் எதுவும் கவனத்திற்கொள்ளப்படாமல் ஆண்களால் ஒருதலைப்பட்சமாகத் திணிக்கப்பட்டதனால் உருவான எதிர்ப்பாகவே தெரிகிறது. பெண்ணியச் சிந்தனையாளர் லாரா மல்வே சொல்வதைப் போல பெண் அர்த்தத்தை உருவாக்குகிறவளாக இல்லாமல் அர்த்தம் சுமப்பவளாக அவளுடைய இடத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறாள். மாஜிதாவின் பர்தா நாவலின் மையத் தொனியையே லாரா மல்வேயின் இந்த வரிகளுக்குள் நான் கண்டடைந்தேன். மாஜிதா இங்கு கேள்விக்குள்ளாக்குவது பெண் தனது கலாசார அடையாளம் சார்ந்து ஆணின் சுட்டுவிரல் முடிவையே எதிர்பார்த்திருக்க வேண்டியிருப்பதன் அவலத்தை, பெண் கலாசார அர்த்தத்தை உருவாக்குகிறவளாக இல்லாமல் அர்த்தத்தை சுமப்பவளாக இருப்பதன் அவலத்தை. அப்படிப் பார்க்கையில் அவர் நிராகரிப்பது பர்தாவை அல்ல என்று நான் நம்புகிறேன். எனது இந்த நிலைப்பாட்டுக்கு வலுசேர்க்கும் பொருட்டு நாவலின் கடைசி அத்தியாயத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுவேன்.

சுரையாவின் தாய் பீவி சுரையாவின் மகளான லண்டனில் வளர்ந்த தனது பேத்தி றாபியாவுக்குப் பர்தாவை நீட்டுகிறாள். றாபியா அதை வாங்கிக்கொள்ளும்போது அவள் சுரைய்யாவைப் பார்க்கிறாள். சுரைய்யா, “உனக்கு விருப்பமானதை உடு” என்பதைப் போல அவளைப் பார்க்கிறாள். இந்த இடத்தில் றாபியாவுக்குக் கைமாறப்படும் பர்தா ஓர் ஆண் பெண் மீது நிகழ்த்தும் கலாசாரப் போராகவோ அடக்குமுறையாகவோ உருப்பெறவில்லை. அது மூத்தத் தலைமுறையிலிருந்து இளைய தலைமுறைக்குக் கைமாறப்படும் கலாசாரப் பரிவர்த்தனையாவே உருப்பெறுகிறது. அன்பின் நிமித்தம் அதை அங்கீகரிக்கவோ, அல்லது நிராகரிக்கவோ முடியுமான ஒரு சமநிலை அதிகாரத்தில் றாபியாவை நிறுத்தி இருக்கிறது. சுரையா அதைத் தனிமனித சுதந்திரமாகவே பார்த்து வந்திருக்கிறாள். ஒரு பண்பாட்டு அடையாளம் ஒரு சமூகத்தில் ஆழமாக வேறூன்றிவிட்டால் அதைத் தகர்ப்பமைப்பு செய்வது மிகவும் கடினமானது என்ற புரிதலும் இன்னொரு பக்கம் சுரையாவுக்குள் முகிழ்த்திருக்கிறது. ஆனால் எந்தப் பண்பாட்டு அடையாளமும் ஒரு பெண்ணின் இயலாமையின் மீது கட்டியெழுப்பப்படும் கலாசாரச் சின்னமாக இருக்கக்கூடாது என்கிற உறுதியான நிலைப்பாடும் அவளிடம் இருக்கிறது.

பெண்ணியப் பார்வைகளுக்குள்ளிருக்கும் மிகைநிலைக் கதையாடல்களை இந்நாவலில் மாஜிதா கட்டமைக்கவில்லை. ஏனெனில் பெண்ணின் சுயம் துறந்த பண்பை அவரது படைப்புலக மனிதர்கள் நமக்கு வலியுறுத்துவதில்லை. அவர்கள் பெரும்பாலும் இயல்பாக இருக்க விரும்புகிறவர்கள். சுரையாவோ, அமீனா டீச்சரோ, பல்கலைக்கழகத்தில் ஹீராவோ பர்தாவை அங்கீகரிக்க மறுப்பதன் பின்னால் எந்தச் செயற்கையான மிகைக் கட்டமைப்புகளோ, போலியான சூழ்நிலைகளோ, கருத்தியல் பின்னணிகளோ இல்லை. அது அவர்களது வாழ்வின் இயல்பான சூழலிலிருந்து உருவாகும் ஒருவித ஒவ்வாமையின் விளைவுதான்.

மாஜிதாவின் இந்த நாவலை ஒரு கலைப்படைப்பாக அணுகி அதன் வெற்றி, தோல்வி குறித்தும் உரையாட விரும்புகிறேன். முஸ்லிம் பெண்கள் மீது ஒரு கலாசார ஆடையாகப் பர்தா எப்படி அவர்களின் மீது போடப்பட்டுவிடுகிறது என்கிற வரலாற்றுச் சித்திரிப்பு அனுபவத்தை இந்நாவல் நமக்குத் தருகிறது என்ற வகையில் அது ஒரு கலைப்படைப்பின் பணியாகத் திருப்தியுறக்கூடியதுதான். ஆனால், ஒரு கலைப்படைப்பின், அதுவும் இலக்கியப் படைப்பின் அவசியமான மற்ற அம்சங்களின் அடிப்படையில் இந்தப் படைப்பு அடைந்திருக்கும் உயரம் என்ன என்பதிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

நல்ல கலைத்துவமான படைப்பைத் தருவதற்கான ஆற்றலையும் மொழியையும் மாஜிதா கொண்டிருப்பது இந்த முதல் நாவலிலேயே நமக்குப் புலனாகிறது. எத்தனையோ ‘முதல்’ நாவல்கள் நமக்கு எந்த நம்பிக்கையையும் தராத தமிழ்ச்சூழலில் மாஜிதா இந்த நம்பிக்கையைத் தருகிறார். அவருக்குள் ஒரு நீண்ட இலக்கியப் பின்புலம் இருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அவருக்குள்ளிருக்கும் கலைத்துவமான படைப்பாளி தனிமனிதச் சுதந்திரத்திலும் (குறிப்பாகப் பெண்களின்), அது நிலவுவதற்குத் தேவையான சமூகச் சூழல் மீதும் எடுத்துக்கொள்ளும் கவனம் போன்று அந்தச் சமூகச் சித்திரத்தை எல்லாத் தகைமைகளும் கொண்ட ஒரு கலைப்படைப்பாகச் சமூகத்தின் முன்னால் நிறுத்துவதற்காக அவர் எடுத்துக்கொண்ட கலைசார்ந்த உழைப்பில் போதாமை வெளிப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

இலக்கியப் படைப்பு என்பது மொழி சார்ந்தது. மொழியாலேயே உருவாக்கப்படுவது. எனவே அதன் வெற்றியில் மிகப்பெரிய இடம் படைப்பாளி கையாளும் மொழிக்கு இருக்கிறது. படைப்பின் அடித்தளமே மொழியின் அழகியலையே சார்ந்திருக்கிறது. படைப்பின் மொழி எனப் பேசும்போது விவரண மொழி, பேச்சு மொழி, பிராந்திய தனித்துவ மொழிக் கூறுகள், குறியீடுகள், உருவகங்கள், சொலவடைகள், படிமங்கள் என அதன் கூறுகள் விரிவுபட்டவை. அற்புதமான கலைப்படைப்பாக ஒரு நாவல் மேம்படுவதற்கு இந்த மொழிக்கூறுகளின் செழுமையான பிரயோகம் முக்கியமானது. பர்தாவுக்குள் இந்தக் கூறுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படவில்லை. புனைவின் விவரண மொழி அழகியல் தன்மையோடு மாஜிதாவால் பயன்படுத்தப்பட்ட அளவுக்கு வட்டார மொழியை அவர் சரியாகக் கையாளவில்லை. ஓட்டமாவடி மண்ணுக்கே உரித்தான வட்டார மொழிக்கூறுகள் அதன் அசல் தன்மையோடு உரையாடல்களில் வெளிப்படாமை இந்நாவலின் கலைசார்ந்த தோல்வியாகும்.

மண்சார்ந்த மொழிப் பிரயோகங்கள் போன்றே குறியீடுகள், உருவகங்கள், சொலவடைகள் ஓர் இலக்கியப் பிரதியைக் கலைப்படைப்பாக மாற்றுவதில் பங்காற்றுகின்றன. பர்தாவுக்குள் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு வாழ்வியலை, மரபுகளைப் பேசும் இடங்கள் சில வருகின்றன. அந்த இடங்களை இந்த மொழிக்கூறுகளைக் கொண்டு இன்னும் கூடுதல் அழகியல் உணர்ச்சியோடு முன்வைத்திருக்க முடியும்.

விவரண மொழிக்கும் பேச்சுமொழிக்கும் இடையிலான துல்லியமான வேறுபாடுகள் பெரும்பாலான இடங்களில் பிசகி நிற்கிறது. பேச்சுமொழி பல இடங்களில் அசலாக வெளிவரவில்லை என்ற குறை எனக்குண்டு. மண்ணும் மக்களும் கதைக்குள் கொண்டுவரப்பட்டால் அவர்களின் மொழியும் அதே தீவிரத்தோடு பாத்திரங்களின் வாயில் சொட்ட வேண்டும். அதுதான் அந்தக் கதைக்கு இயல்பானது. இல்லாவிட்டால் கதையின் அசல்தன்மையைப் பேச்சுமொழி கெடுத்துவிடும். கதாபாத்திரங்கள் கதைச் சம்பவங்களோடு இயல்பாகப் பொருந்தி வராதவர்களாக வாசக மனம் உணரத் தலைப்பட்டுவிடும். அது நாவலின் கலைரீதியான தோல்வியாகும்.

பெரிய சுத்திவளைப்புகள், மர்மச் சம்பவங்கள், ஆழ்ந்த உருவகங்கள் என எதுவுமற்ற நேரடியான, மிக எளிமையான கதைக்கூறலைத்தான் இந்நாவலில் மாஜிதா பின்பற்றி இருக்கிறார்.

முஸ்லிம் பண்பாட்டுக்குள் உள்ளுறைந்திருக்கும் பால்நிலை அடிப்படையிலான அசமநிலையையும், அதன் மீது பூசப்பட்டிருக்கும் புனிதச் சாயத்தையும் எந்தத் தயக்கமுமற்று கேள்விக்குள்ளாக்குவது, இலங்கை இஸ்லாமியச் சமூக அமைப்பில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்களின் அழிச்சாட்டியமான கொள்கைகளையும், இலங்கைச் சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்திவராத அவர்களின் தினவெடுத்த செயல்களையும் துணிச்சலாக மறுக்கும் இடங்கள் போன்றவற்றை நாவலின் முக்கியமான பக்கங்களாகப் பார்க்கிறேன். பர்தாவை ஒரு தனிமனித அனுபவமாகத் தொடங்கி அதனை ஒரு சமூக அனுபவமாக மாற்றிக்காட்டுவதிலும் மாஜிதா வெற்றி பெற்றிருக்கிறார். அது நல்ல நாவலாசிரியருக்கான தொடக்கமும்கூட.

*

பர்தா (நாவல்), மாஜிதா, எதிர் வெளியீடு, விலை ரூ. 200