திருமண வீட்டுக்கென்று ஒரு தனிக் களை உண்டு. மெல்லச் சிணுங்கி, படபடத்து, ஓவெனச் சத்தமிட்டு ஒளி பெருக்கி எழுந்து நிற்கும் பூவாணம் போல, மாப்பிள்ளை வீட்டார் பூ வைத்துப்போன நாளிலிருந்து அவ்வீட்டிலும் நாளுக்கு நாள் உற்சாகம் கூட ஆரம்பித்தது. உள்நுழையும் ஒவ்வொருவரிடத்திலும் அவ்வுற்சாக ஒளியின் பிரதிபலிப்புகள். சுற்றிலும் கல்யாண வேலைகள். எதிர்ப்படும் எல்லோர் முகத்திலும் ஏதாவது ஒரு அவசரம். ஒருக்களித்துச் சாத்தப்பட்ட அவள் அறைக்கதவிடுக்கின் வழியே கசிந்த ஒளியை மறைப்பதும் விடுப்பதுமாய் நிழலுருவங்கள் குறுக்கு நெடுக்காக அலைந்துகொண்டிருந்தன. மணப்பெண் அறையை மட்டும் விட்டுவிட்டு, வீட்டின் மற்ற அறைகள் அனைத்திலும் வெள்ளையடிப்பதற்காகப் பொருட்களை அறைகளின் நடுவில் பரத்திப் போர்வையைப் போட்டு மூடி வைத்திருந்தனர். தீபாவளிப் பண்டிகை முடிந்ததும் பொதுவாக ஒருவிதச் சோர்வும் களைப்பும் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த வருடம் அவ்வீட்டில் அதற்கெல்லாம் இடமிருக்கவில்லை.
வீட்டில் அத்தனை பேரும் ஆளுக்கொரு வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு அலைந்துகொண்டிருக்கையில் தான் மட்டும் புதுப்பெண் சொகுசில் அறையில் முடங்கியிருக்க அவளுக்கு ஒரு மாதிரி சந்தோஷக் கூச்சமாயிருந்தது. முகூர்த்தக்கால் நடுவதிலிருந்து சாந்திக் கல்யாணம் வரையிலான நிகழ்வுகளுக்குச் சுப முகூர்த்த நேரங்கள் குறித்து வாங்கப்பட்ட தாள், மேசை மேல் வைக்கப்பட்டிருந்த கல்யாண வரவு செலவு நோட்டில் சொருகப்பட்டிருந்தது. அது காற்றில் படபடத்துச் சத்தம் எழுப்பியது. அவளுக்குள்ளும் அதே படபடப்பு. கல்யாணத்துக்கு இன்னும் சரியாக ஒரே வாரம். அடுத்த வாரம் இதே நேரம் மணப் பந்தலில் மாலையிட்டு அமர்ந்திருப்பாள். அந்தத் தாளை எடுத்துச் சாந்திக் கல்யாண நேரம் என்னவென்று பார்க்கலாமா என்ற குறுகுறுப்பு உள்ளே ஓடியது. அறையில் அவள் மட்டும்தான். வேறு யாருமில்லை. இப்போதெல்லாம் அவள் அறைக்குள் யாரும் சட்டென்று உரிமையெடுத்து உள்ளே வருவதில்லை. அறைக் கதவைப் பூட்டாமல் லேசாகச் சாத்தியிருந்தாலும்கூட வெளியிலிருந்தபடியே குரல் கொடுக்கிறார்கள். வேண்டியதைக் கேட்டுக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவளை எந்த வேலைக்கும் அழைப்பதில்லை. தின்பதற்குப் புட்டு, முறுக்கு, அதிரசம் என்று எதையாவது வந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் அத்தை. அதுவரை அவளுக்கு அவ்வீட்டில் வழங்கப்படாத சுதந்திரம், தனிமை, கவனிப்பு. எல்லாமே சற்று புதிதாக இருந்தது. ஒரே சமயம், சந்தோசமாகவும் சங்கடமாகவும் இருந்தது.
இவள் அந்தத் தாளை உருவிக் கையிலெடுத்தபோது வாணி இவள் அறைக்குள் தடாலடியாக நுழைந்தாள். வாணி, இவளுடைய பள்ளித் தோழி. இவள் அத்தாளை மடக்கிக் கையில் சுருட்டிக்கொண்டாள்.
“என்ன பிள்ளே, காதல் கடுதாசியா?”
“அய்யே இவ ஒருத்தி.. அதெல்லாம் ஒன்னுமில்லடி” என்றபடி வெட்கிச் சிரித்தாள்.
“அப்போ என்னன்னு காட்டு. பாக்குறேன்.”
“அதான் ஒன்னுமில்லன்னு சொல்றேனில்ல.”
“அப்போ காட்டு!”
“முடியாது.”
“அட என்கிட்ட கையை மட்டும் காட்டு..” என்று சொல்லிவிட்டு மெல்லிய குரலில், “மத்ததையெல்லாம் உங்க அவருக்கே காட்டிக்க” என்று சொல்லி அவளைச் சீண்டினாள்.
“எரும மாடே” என்று அவளைத் திட்டி, செல்லமாகத் தோளில் அடித்தாள்.
இவள் கையை விரித்ததும் அதை வாணி எடுத்துக்கொண்டாள்.
“ப்பூ.. இதுக்காடி இவ்ளோ பிகு பண்ண? நான்கூட ஏதாவது கசமுசாவா இருக்குமோன்னு என்னென்னவோ கற்பனை பண்ணிட்டேன் அதுக்குள்ள. ச்சை!”
“அடச்சீ… ஏன்டி உன் புத்தி எப்போப் பாரு அதையே சுத்திச் சுத்தி வருது?”
“அய்யோ யம்மா இவ சின்ன பப்பா.. இப்படி பேசுறவளுகதான்டி அடுத்த நாலாவது மாசம் வயித்தைத் தள்ளிட்டு வந்து நிப்பாளுக. எத்தனை பேரைப் பாத்தாச்சு” என்றாள்.
இதைச் சொல்லும்போது இருவரும் ஒருசேர அந்தக் காட்சியைக் கற்பனை செய்துவிட்டுச் சிரித்தார்கள்.
“யேய்.. சந்திராவைக் கல்யாணத்துக்குக் கூப்பிட்டாச்சு போல?”
“ஆமாடி.. அப்பா அம்மாவைப் போய் நான்தான் பத்திரிகை வைக்கச் சொன்னேன்.”
“ஏன்டி, மனசுல உனக்குப் பெரிய புத்தர்னு நினைப்பா?”
“விடுடி.. அம்மா இல்லாத பொண்ணு. சுருக்கு சுருக்குன்னு கோவப்படுவா. மத்தபடி நல்லவதான்.”
“அதுக்குன்னு அவ என்ன வேணா பேசுவாளா? சகிச்சுட்டுப் போறதுக்கும் ஒரு அளவு இருக்கு. நீ ரொம்பவும் இறங்கிப் போற.”
“அட விடுடி!” என்று வாணியைச் சமாதானம் செய்தாலும் பழைய நினைவுகளின் கனத்தால் அவள் முகம் சுண்டிப்போனது.
அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாமல் வாணி, “சரி, பூ வச்ச பிறகு உங்க ஆளு வந்தாரா? பாத்தியா?” என்று கேட்டாள்.
ஜாதகம் பொருந்தி வந்ததும் இரு வீட்டாரும் பெத்தநாச்சியம்மன் கோவிலில் வைத்துப் பார்த்துப் பேசி முடித்துக்கொண்டனர். அன்றே, இரு வீட்டிலும் செய்ய வேண்டிய செய்முறைகள், பண்ண வேண்டிய ஏற்பாடுகள், பகிர்ந்துகொள்ள வேண்டிய காரியங்கள், இன்ன பிறவற்றோடு திருமணத்தன்று காலையிலே நிச்சயமும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம் என்பதும் முடிவாகியது.
“இல்லடி, அதுக்குப் பிறகு நாளே குறைச்சலாத்தானே இருக்கு. நீயே பாக்குறதான, வீடே பரபரன்னு இருக்கு. என்னை இந்த ரூமைவிட்டு வெளிய வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இப்போன்னு பார்த்து தளபதி வேற ரிலீஸாகியிருக்கு” என்று சிரித்தபடி இழுத்தாள்.
“அது சரி, உனக்கு தளபதி பாக்க முடியலன்னு வருத்தம். அங்க உங்காளு முதல் நாளே குணாவுக்கு சாந்தி தியேட்டர் வரிசைல நின்றுருக்காரு தெரியுமா? அவரு எங்க செட்டாக்கும்.”
“ம்க்கும்ம்.. பெரிய பொல்லாத செட்டு. ஆனா, உனக்கு மட்டும் எப்படிடி எல்லா விசயமும் தெரியுது?”
“அதுக்குதான் வீட்டுல ஒன்னுக்கு இரண்டு மண்ட கிழவிக பட்டியக் கல்லே கதின்னு கெடக்குதுகளே. அதை விடு பிள்ள.. கொத்தானாரு ஆசாரியெல்லாம் எப்போ வரச் சொல்லிருக்கீங்க?”
“வெள்ளையடிக்கிற வேலைதான் நடக்குது. இதுக்கு எதுக்கு கொத்தானாரு ஆசாரியெல்லாம் வரச் சொல்லணும்?”
“இல்லடி, உங்க அவரு உசரத்துக்கு உங்க வீட்டு நிலை எப்படியும் அவருக்குத் தலை தட்டும். இனிமே அடிக்கடி வரப் போகன்னு இருக்கணும். சிரமம் இல்லையா? என்னங்கடா, வரப்போற மாப்பிள்ளைக்காக அதக்கூட மாத்த மாட்டீங்களா?”
“ஆமா இவருக்காக குடியிருக்கிற வீட்டு நிலைய இடிக்கிறாக. போடி போக்கத்தவளே! யேய் ஆமா, அவருகூட நின்னா நான் ரொம்ப குள்ளமா தெரிவேனா?”
“அய்யே அதெல்லாம் இல்லடி. அழகா இருப்பீங்க ஜோடியா. நான் சும்மா கேலிக்குச் சொன்னேன்.”
“நிஜம்மா?”
“சத்தியமாடி.. சொல்லப் போனா, பல விசயங்களுக்கு அதான் வசதியாம்” என்று குரலைத் தாழ்த்திச் சொல்லிக் கண்ணடித்தாள்.
“இவள!” என்று சொல்லி அவளை அடிக்க அந்த நோட்டை ஓங்கும்போதுதான் சாத்தியிருந்த கதவை மீறி அப்பா கத்திக்கொண்டிருந்த சத்தம் இவர்களை அடைந்தது. அவருடைய குரலே கட்டிப்போயிருந்தது.
இவர்கள் இருவரும் பேச்சை நிறுத்தி அமைதியாயினர். அதுவரை அங்கு நிலவிய கல்யாண வீட்டுச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமாக இருந்தது கோபத்தில் நடுங்கி ஒலித்த அக்குரல். இருவரும் அறைக்குள் இருந்தபடியே அவ்வுரையாடலை உற்றுக் கேட்டனர். குலதெய்வம் கோவிலுக்குப் பத்திரிகை வைத்துவிட்டு வந்த பிறகு மாப்பிள்ளை வீட்டார்களுக்குப் பத்திரிகை வைப்பது அங்கே வழக்கம். யார் யாருக்கெல்லாம் அவர்கள் தரப்பில் பத்திரிகை வைக்கப்பட வேண்டும் என்று விசாரிக்கவே அப்பா அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கே போகும்போதுகூடத் தீபாவளிப் பலகாரம், வீட்டுத் தோட்டத்தில் காய்த்த மாம்பழங்கள் என்று பார்த்துப் பார்த்து எடுத்துப் போனார். அவர் அம்மாம்பழங்களைத் தடவித் தடவிச் சொத்தை எதுவும் இருந்துவிடக்கூடாது என்று கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த காட்சி அவள் கண் முன்னே ஓடியது. அவரேதான் இப்போது பகை வீட்டிலிருந்து திரும்பியவரைப் போலக் கத்திக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வுரையாடலின் வழி அங்கே நடந்ததை அவர்களால் யூகிக்க முடிந்தது.
அது எங்கே சென்று முடியப் போகிறது என்பது அவர்களுக்கு விளங்கிவிட்டது. அவள் கண்கள் ரத்தச் சிவப்பில் குளமாயின. நடுங்கிக்கொண்டிருந்த அவள் கையை எடுத்து, வாணி தன் கைகளுக்குள் பொத்தியபடி இறுகப் பற்றிக்கொண்டாள்.
“மூணு பவுனு பெரிசில்ல. கடனை உடனை வாங்கியாவது போட்டுக் கொடுத்து அனுப்பிடுவேன். இன்னிக்கு இதுக்கு இவ்ளோ கணக்குப் பாக்கிறவன் வீட்டுக்கு எப்படி என் பொண்ணை அனுப்புறது? நாளைக்கு அவ திங்கிற அரிசியையும் ஒவ்வொன்னா எண்ணிப் பாத்தானுங்கன்னா!” என்று சொல்லி முடிக்கும்போது அவர் குரல் உடைந்திருந்தது.
*
முந்தைய நாள் மழையின் ஈரம் படிந்திருந்த மண்ணில் இருவரது செருப்புகளும் மாறி மாறிப் பதிந்து எழும்பிய ‘கருக் கருக்’ என்ற சத்தம் கேட்பதற்கு நன்றாகயிருந்தது காசிக்கு. ஆனாலும் அவருக்கு மழை பிடிக்காது. வேட்டி நுனியில் ஈரம் பட்டாலே உடனே மாற்றிவிட வேண்டும். வெயில் வருவதா வேண்டாமா என்பது போலப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தது. பள்ளி வாகனங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகள், பின்னால் தொங்கியபடி கீழே இழுக்கும் பெரிய புத்தகப் பைகளை நிலைக்குக் கொண்டுவர முன்புறமாக இழுத்து வளைந்து நின்றுகொண்டிருந்தனர். அவர்களைக் கடக்கும்போது பாண்ட்ஸ், கோகுல் சாண்டல் பவுடர் கலந்த வாசம் காற்றில் எழும்பி நாசியைத் துளைத்தது. தினம் தினம் போகவும் வரவுமாய் இருக்கும் தெருதான். எத்தனை ஆயிரம் தடவை இதே காட்சியைக் கண்டிருப்பார். இதுவரை இதையெல்லாம் நின்று நிதானித்துக் கவனித்திருக்கிறாரா? பெரிய விசயத்தைப் பற்றி யோசிப்பதைத் தள்ளிப்போட மனம்தான் எப்படியெல்லாம் தகிடுதித்தம் புரிகிறது!
பின்மதிய நேரத்தில் ஓய்வாக இருக்கும்போது போகலாமே என்று கூறியபோது சரவணன் மச்சான்தான் காலையில் போகலாம். அப்போதுதான் இன்னொருவரிடம் கலந்து பேசிச் சொல்கிறோம் என்று தட்டிக் கழிக்க முடியாது. வீட்டில் அனைவரும் இருப்பார்கள். அன்றைய பொழுதின் மனநிலையைப் புறச் செய்திகள் எதுவும் வந்து கெடுக்காமல் இருக்கும். காலையில் ஒன்றை முடியாது என்று முகத்துக்கு நேராகப் பேச வாய் வராது. போன காரியம் கூடி வர வாய்ப்புகள் அதிகம் என்றார். அவர் ஒரு விசயத்தைச் சொல்கிற விதத்தை யாரும் மறுத்துப் பேச முடியாது. அதற்காகத்தான் காசியே சரவணன் மச்சானைத் துணைக்கு அழைத்துப் போகிறார்.
அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்தனர். வாசல் நிலையில் தொங்கிக்கொண்டிருந்த சீலை வழியே வெயில் வடிந்து ஆரஞ்சு வண்ணத்தைக் கிரானைட் தரையில் பரப்பியது. அவர்கள் தறியில் செய்த சேலை ஒன்றை வெட்டி பார்டர் வைத்துத் தைத்து அழகான திரைச்சீலையாக மாற்றியிருந்தனர். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு மிசிங்கைப் பெருமாளே வீட்டுக்கு வந்து பத்திரிகை வைத்து அழைத்துவிட்டுப் போயிருந்தார். காசி, சக்கம்பட்டிக்கு வார வசூலுக்குப் போகும் புதன்கிழமையாகப் பார்த்து வந்துபோயிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஃபோனில்கூட ஒரு வார்த்தை அழைத்துச் சொல்லவில்லை என்பதால் மனைவியை மட்டும் போய் செய்முறை செய்துவிடச் சொல்லிவிட்டு அவர் போகவில்லை. அதன் பிறகு அன்றுதான் அவ்வீட்டு வாசலில் கால் வைக்கிறார்.
பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பெருமாளின் பெண்தான் வாசலுக்கு வந்து உள்ளே அழைத்து அவர்களை சோபாவில் அமரச் செய்தாள். அப்படியே ஜெயமணியின் சாயல். அச்சிறுபெண்ணைப் பார்த்ததும் காசிக்குத் திக்கென்று நெஞ்சடைத்தது. “அப்பா.. சரவண மாமா வந்திருக்காங்க” என்று குரல் கொடுத்தபடி உள்ளே சென்றாள்.
“பெருமாள் கொஞ்சம் முசுடுதேன். அதுவும் காரியக் கிறுக்கன். அஞ்சு ரூபா கொடுத்தாலும் அதுல அஞ்சு பைசாவாவது தனக்கு லாபமிருக்குமான்னு கணக்குப் பாக்காம எடுத்து நீட்ட மாட்டான். இதெல்லாம் நாஞ்சொல்லி உமக்குத் தெரிய வேண்டியதில்ல மாப்ள. ஊருக்கே தெரிஞ்ச ரகசியம் அது. ஆனா, அப்படியெல்லாம் இருந்தாதான் இன்னிக்கு நாலு காசு சேர்க்க முடியும். ஆனா, ஜேமணி அவன மாதிரி இல்ல. ரொம்ப தங்கமான பொண்ணு. இன்னிக்கு அவனும் ஊருக்குள்ள ஒரு ஆளா இருக்கான்னா அதெல்லாம் அந்தப் பிள்ள வந்த பிறகுதான். இளகின மனசு. அவம் தறிச்செட்டுல கண்டு போட்டுக்கிட்டிருந்த கண்மணி பிள்ளய ஸ்கூலுக்குப் போய் படிக்க வச்சு, காலேஜ் போடுறதுக்கும் காசு இவதான் கொடுத்திருக்கா. இன்னிக்கு அந்தப் பிள்ளதான் இவங்களோட மொத்த வரவு செலவையும் பார்த்துகிடுது. இதையெல்லாம் கணக்குப் பார்த்து செய்ஞ்சுருக்க மாட்டா அவ. ஜேமணி கொஞ்சம் நல்ல மாதிரி. அப்பிராணி. சாமி காரியத்துக்கு அவ்ளோ பண்ணியிருக்கா. நியாயஸ்தியும்கூட. எல்லாத்துக்கும் மேல, அங்க அவ வச்சதுதான் சட்டம். அவ சொல்லுக்கு மேல ஒரு சொல் கிடையாது கேட்டுக்கோ. வெளியே பார்த்தா அப்படித் தெரியாது. ஆனா, அது அப்படித்தான். நம்பு. இவன் ஒரு மாதிரி அப்படி இப்படிப் போக்குக்காட்டிப் பேசினாலும் அவ இதுக்கு ஒத்துப்பா. பழி பாவத்துக்குப் பயப்படுவா. குருநாதனைக் கும்பிட்டுக்கோ. எல்லாம் சரியா வரும். தைரியமா வாரும் மாப்ள. எல்லாம் நல்லபடியா முடியும்.”
இந்தப் பிரச்சினை குறித்து மிசிங்கைப் பெருமாளிடம் பேச வேண்டும் என்ற நிலையில் தயங்கி நின்ற காசியிடம் பேசிக் கரைத்துக் கூட்டி வந்தது சரவணன்தான். இது போன்று மற்றவர்களுக்கு உடன் நிற்பது, ஓடையைத் தூர் வாருவது, அம்மன் கொடைக்கு வரி பிரிப்பது, தெருப் பள்ளிக்கூடத்துக்குத் தேவையானவற்றை வசதியானவர்களாகப் பார்த்து நைச்சியமாகப் பேசி வசூல் செய்துகொடுப்பது போன்ற பொதுக் காரியங்களை எடுத்துச் செய்வதில் அவருக்கு அலாதி திருப்தி. ஊர் கமிட்டி மெம்பர் வேறு. இதெல்லாம் மற்றவர்களிடத்தில் அவருக்குத் தனித்த மரியாதையைப் பெற்றுக்கொடுத்தது.
ஹால் நல்ல வசதியாக இருந்தது. இருபதுக்கு இருபதடி இருக்கும் என்று காசியின் மனத்தில் கணக்கு ஓடியது. சோபாவுக்கு எதிரே பிளைவுட் அடித்து அலங்காரப்படுத்தப்பட்டிருந்த சுவரில் பெரிய எல்.இ.டி. டிவி மாட்டப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் கண்ணாடிக்குள் அலங்காரப் பொருட்களும் பரிசுக் கோப்பைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தரையில் நீர்ப் பளபளப்பில் வெள்ளை நிற டைல்ஸ். அத்தனை பளபளப்பிலும்கூட அது நடக்கும்போது வழுக்கிவிடாத தன்மையில் இருந்தது. இதைத்தான் ராஜஸ்தானிலிருந்து நேரடியாக வரவழைத்தது என்று அப்போதே பேசிக்கொண்டிருந்தார்கள். சாம்பிராணி காட்டியிருந்த புகை அடங்கி அதன் கருக்கிய வாசம் மட்டும் வீடெங்கும் நிறைந்திருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் தனிக் குளிர்ச்சி உள்ளங்கால் வழி உடம்பெல்லாம் பரவியது. ஹாலின் ஒரு மூலையில் மாடிப் படி. அதற்குக் கீழே வரிசையாக தறியிலிருந்து நெய்துவந்த புதுச் சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாடிப்படிகளில் பாலிஷ் செய்யப்படாத பச்சை மார்பிள் கற்கள் பாவப்பட்டிருந்தன. அதன் கைப்பிடி மரத்தால் செய்யப்பட்டு வார்னிஷ் போட்டுப் பளபளத்தது. அவர்கள் தலைக்கு மேலே ஒரு பெரிய அலங்கார விளக்கு தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு லாரி உள்ளே வந்து திரும்ப முடியாத தெருவுக்குள் இப்படி இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட வீடொன்று இருக்கும் என்று யாரும் யூகிக்கக்கூட மாட்டார்கள்.
காசிமுத்துக்குப் பரபரப்பான காலைப் பொழுதொன்றில் அப்படி இன்னொரு வீட்டில் போய் அமர்ந்திருக்க ஒரு மாதிரிச் சங்கடமாக இருந்தது. நெளிந்துகொண்டிருந்தார். சரவணனுக்குப் பழக்கப்பட்ட வீடு. அது அவர் அமர்ந்திருந்த தோரணையிலும் அத்தனை பெரிய வீட்டை உற்றுப் பார்க்காமல் செல்ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த விதத்திலுமே தெரிந்தது.
ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஜெயமணி வந்தாள். அவள் காசியை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதைச் சட்டென்று அவள் முகத்தில் தோன்றி மறைந்த சின்னத் திடுக்கிடலில், உள்ளமிழ்ந்து எழுந்தத் தொண்டைக் குழிவில் அவர் கண்டுகொண்டார்.
நீர்ச் சொம்பை யாரிடம் முதலில் கொடுப்பது என்ற தயக்கத்தில் இருவருக்கும் பொதுவாக, “தண்ணி” என்று சொல்லி நீட்டினாள்.
“சௌரியம்தானே?” என்று கேட்டுக்கொண்டு எழுந்து தண்ணீரை வாங்கி அண்ணாந்து ஒரு வாய் ஊற்றிவிட்டுக் காசியிடம் கொடுத்தார் சரவணன்.
“குளிச்சுட்டு டிரெஸ் மாத்திட்டு இருக்காக. இப்போ வந்திருவாப்புல. டீ போடுறேன்” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து விலகிப்போனாள்.
சற்று நேரத்தில் ‘மிசிங்கைப் பெருமாள்’ என்றழைக்கப்படும் பெருமாள்ராஜன், தூய வெள்ளை வேட்டிச் சட்டையில் வந்தமர்ந்தார். டீயை எடுத்துக்கொடுத்துவிட்டு ஜெயமணியும் அங்கேயே தரையில் அமர்ந்து மாடிப்படிக்குக் கீழே அடுக்கியிருந்த புதிய சேலைகளை இழுத்து வைத்து எதையோ நோட்டில் எழுதிக் குறிக்க ஆரம்பித்தாள். கண்ணும் கையும் அந்த வேலையிலிருந்தாலும் காது அவர்கள் பேச்சிலிருந்தது.
பெருமாள், சரவணனைப் பார்த்து, “ஒரு நிமிசம் மச்சான்” என்று ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் குவித்துக் காட்டி யாருக்கோ செல்ஃபோனில் அழைத்து, “காலைல மொத வேலையா லாரி ஆபிஸ் போய் பில்லைக் கொடுத்துட்டு வந்துடு. மசமசன்னு நின்னுட்டு இருக்காத. இடியே விழுந்தாலும் இன்னிக்கு பண்டல் போயாகணும். அவ்ளோ சோலி கிடக்கு. நேரமில்ல” என்று விரட்டி, எதிரிலிருந்தவரின் பதிலுக்குக் காத்திருக்காமல் அவ்வழைப்பைத் துண்டித்தார்.
‘நேரமில்லை’ என்ற சொல் வேண்டுமென்றே அழுத்திச் சொல்லப்பட்டதைப் போல காசிக்குத் தோன்றியது.
வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின், சரவணன் மச்சான் ஆரம்பித்தார்.
“மாப்ள, இந்நேரத்துக்கு நீங்களும் விசயத்தக் கேள்விப்பட்டிருப்பீங்க. காசி மாப்ள வீட்டை நம்ம முத்துச்செல்வம், அதான் பழைய பஸ்டாண்ட் பக்கத்துல ‘முத்து டிரேடர்ஸ்’ வச்சுருக்காரே, பட்டிக்காரரு, அவர் பத்திரம் முடிக்கிறார்.”
“ஆமாமா, நானும் கேள்விப்பட்டேன் மச்சான். நல்லது. என்ன, முடிக்கிறதுக்கு முன்னாடி இங்கயும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டிருக்கலாம்” என்றார் பெருமாள். பேசும்போது சரவணனைப் பார்த்தே பேசியவர், காசியிடம் முகம் கொடுக்கவேயில்லை.
வீட்டை விற்றே ஆக வேண்டிய நிர்பந்தம் சூழ்ந்தபோது காசிமுத்தின் வீட்டில் எழுந்த ஒரே நிபந்தனை இந்த வீடு எக்காரணம் கொண்டும் பெருமாள்ராஜனுடைய கைக்குப் போய்விடக்கூடாது என்பதுதான். காசியும் பெருமாளும் பங்காளி முறை. பெருமாள்ராஜனின் வியாபார சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்ட செங்கல் கற்கள் ஒவ்வொன்றும் காசிமுத்தின் வியாபாரத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டதான நம்பிக்கை காசி வீட்டாரிடத்தில் நிலவியது. இத்தனைக்கும் இருவரது அப்பாவழித் தாத்தாக்களும் உடன் பிறந்தவர்கள். கண்ணுக்குத் தெரியாதவர்களுக்கு வீட்டை முடித்துக்கொடுப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. பெருமாள்ராஜனுக்குக் கூடாது. அவ்வளவுதான். அது அவ்வீட்டார்களின் ஒருமித்த முடிவு. ஆனால், அதை விற்பதற்கு உதவி கேட்டுப் பெருமாள்ராஜன் வீட்டு வாசலிலே நிற்கும்படி நிறுத்தியிருந்தது.
“நீங்க கேக்குறதும் நியாயந்தான் மாப்ள. எப்படியோ விட்டுப்போச்சு. இப்போ வித்தும் போச்சு” என்றார்.
“சர்தான்.. நல்லபடியா முடிங்க. எனக்குமே இப்போ கொஞ்சம் காசு டைட்டுதான். கையக் கடிக்குது” என்றார். பண உதவி கேட்டு வந்திருப்பார்களோ என்றெண்ணி பேச்சின் நடுவில் இயல்பாகச் சொல்வதுபோல லாகவமாக இதையும் சொல்லிவிட்டார்.
“இல்ல. அதுலதான் உங்க உதவி தேவை. இதப் பத்தி நம்ம வடிவு எதுவும் சொல்லலியா?”
சேலையில் ஸ்டிக்கரை ஒட்டி அதன் மேல் எதையோ குறித்துக்கொண்டிருந்த ஜெயமணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சொல்லுச்சு சொல்லுச்சு” என்றார். அவள் அந்த நோட்டை மூடிவைத்துவிட்டு பெருமாள்ராஜனுக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டாள்.
“வடிவுக்கு இதுல எதுவுமில்ல போல. கையெழுத்து போட்டுக் கொடுக்க ஒப்புக்கிச்சு. நீங்களும் வந்து போட்டு முடிச்சுட்டா முத்து டிரேடர்ஸ் மறுநாளே பத்திரம் போட்டுக்க ரெடியா இருக்காங்க.”
“வடிவு உங்ககிட்ட அப்படியா சொல்லுச்சு. எங்கிட்ட வேற மாதிரி சொன்னதா ஞாபகம். என்ன சேமணி?” என்றார்.
அவள் எதுவும் பேசாமல் ஆமாம் என்பதுபோலத் தலையை அசைத்தாள். இடையில் என்ன நடந்திருக்கும் என்று மற்ற இருவராலும் யூகிக்க முடிந்தது.
“மாப்ள, இதுல வேற மாதிரி சொல்றதுக்கு எதுவும் இல்ல. சொத்து அவங்களோடது. அனுபவப் பாத்தியமே கிட்டத்தட்ட முப்பது வருசம். உங்க அப்பா எழுதிக்கொடுத்த பத்திரத்தில இருக்கிற சதுர அடி அளவுகூட ரொம்பச் சரியாத்தான் இருக்கு.”
“அப்புறம், இதுல நான் பண்றதுக்கு என்ன இருக்கு? தாராளமா பத்திரம் முடிச்சுக்க வேண்டியதுதானே?” என்று பெருமாள்ராஜன் சொல்லிய விதத்திலேயே அவருக்கு எல்லா விசயமும் தெளிவாகத் தெரியும் என்பது இவர்களுக்குப் புரிந்தது.
“மாப்ள, பத்திரம் எல்லாம் சரியாவே இருக்கு. பட்டாவிலதான் ஒரு சின்ன வில்லங்கம். இந்த வீடு இருக்கிற இடத்துக்கு 140/1, 140/2 -ன்னு இரண்டு பட்டா இருக்கு. மொத்த இடத்தையும் சரி பாதியா பிரிச்ச மாதிரி இரண்டு பட்டா. முன்னாடி ஒரு காலத்துல இது இரண்டு மனையா இருந்திருக்குமாட்டு இருக்குது. அந்த இரண்டுமே இன்னிக்கு வரை உங்க அப்பா முருகபூபதி பேருலதான் இருக்கு. அப்போ, பத்திரம் முடிக்கும்போது ஏதோ தவறுதலா பட்டா 140/1 மட்டும் பத்திரல போட்டிருக்காங்க. 140/2 விட்டுப் போச்சு. மூலப் பத்திரத்துல இடத்து அளவயெல்லாம் சரியாப் போட்டிருக்காங்க. பட்டா நம்பர்லதான் சின்ன விடுபடல் ஆயிப்போச்சு. முப்பது வருசம் முன்ன யாரு பட்டாவுக்கெல்லாம் இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்தா? நம்ம டீக்கடை சாமிராசு வீட்டுக்கெல்லாம் இன்னிக்கு வரை பட்டாவே கிடையாது. புறாவீட்டு வளசல்ல பாதி வீடுக புறம்போக்குலதான் இருக்கு. பட்டா என்ன பட்டா, பத்திரமே இல்லாத பயக எத்தனை பேருன்னு சொல்லட்டுமா? இப்போ வீட்டை முடிக்கிற முத்துச்செல்வத்தோட மூத்த பையன் ஒருத்தன் பி.இ. முடிச்சுட்டு பெல்ல வேலை பார்க்கானாம். அவந்தான் முழுப் பட்டாவையும் முதல்ல நம்ம காசி பேருல மாத்திட்டு வாங்கன்னு ஒத்தக் கால்ல நிக்கான். அதுக்காக எஸ்.எல்.ஆர். காப்பி போடும்போதுதான் இப்படி இதுக்கு பட்டா இரண்டா இருக்கிற விவகாரமே காசிக்குத் தெரிஞ்சுருக்கு. உங்களுக்குத் தெரியாதது இல்ல. இதை முடிச்சுட்டா இவரு கடனயெல்லாம் அடைச்சுப் போட்டு கால் வயித்துக் கஞ்சியானாலும் நிம்மதியாக் குடிக்கலாம்னு பாக்காப்ல. காசியோட பையன் இப்போ கோயம்புத்தூர்ல பி.இ. முடிக்கப் போறான். அவன் தலையெடுத்துட்டா அப்புறம் நட்டமா நின்னுக்கலாம். என்ன இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் அண்ணந் தம்பி முறைக்காரவுக. வேத்தாள் கிடையாது. என்னத்தா நான் சொல்றது?” என்று சொல்லி முடிக்கும்போது ஜெயமணியைப் பார்த்தார்.
சரவண மச்சான் பேசி முடித்ததும் அங்கே கரகரவென ஃபேன் ஓடும் சத்தம் மட்டும் கேட்டது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. காசிமுத்து, எதிரேயிருந்த ஷோகேஸில் சீசா போல ஆடியபடியே மாறி மாறித் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சிவப்புக் கொக்குப் பொம்மைகளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சமயத்தில் அவ்விரண்டில் ஒன்றுதான் தண்ணீர் குடிக்க முடிந்தது. அதுதான் அவற்றின் விதி.
அங்கே நிலவிய மௌனத்தைக் கலைத்து அழைப்பு மணி ஒலித்தது.
ஜோசஃப் நின்றுகொண்டிருந்தான். பெருமாளைப் பார்த்ததும் மடித்துக் கட்டியிருந்த அழுக்குச் சாரத்தைத் தளர்த்திக் கீழே விட்டான். அவர் அவனை உள்ளே வரச்சொல்லி அழைத்தார். நிலைப்படிக்கு அருகில் வந்து நின்றுகொண்டான்.
அவன் எதற்கு வந்திருப்பான் என்று நன்றாகத் தெரிந்தும் பெருமாள்ராஜன், “என்ன ஜோசஃப் காலங்காத்தால?” என்று கடுத்த குரலில் கேட்டார்.
“மொதலாளி, ஒரு அஞ்சு ரூபா அட்வான்ஸ்..” என்று இழுத்தவனைச் சட்டென்று இடைவெட்டி குரலை உயர்த்தி, “ஜோசஃப்பு, அட்வான்ஸ்ங்கிற பேச்சுக்கே இடமில்ல. இதுவரை நீ வாங்கினதே எம்பதாயிரத்துக்குப் போய்டுச்சு. அதையே கழிக்கிற வழியக் காணோம். எப்படியும் இன்னும் இரண்டு மாசத்துல கிறிஸ்மஸுன்னு வந்து நிக்கத்தான் போற. போப்பா.. போய் வேற வேலையப் பாரு.”
“மொதலாளி…”
“சல்லிப் பைசா கிடையாது. இந்த வாரம் சம்பளம் போடவே எனக்குக் கை கடிக்குது. வசூலும் சரியா இல்ல. இப்பத்தான் மச்சாங்கிட்டக்கூடச் சொல்லிட்டு இருந்தேன். அதுக்குள்ள இவன் அட்வான்ஸ் கேக்க வந்துட்டான். வாங்கிற சம்பளத்தெல்லாம் டாஸ்மாக்குக்கு கொடுத்துட்டு உப்புப் புளி வாங்கிறதுக்கு அட்வான்ஸ் கேட்டு வந்து நிக்கிறது. எல்லாவனுக்கும் இதே பொழப்புத்தான் மச்சான்” என்று சரவணன் பக்கமாகத் திரும்பி அங்கலாய்த்தார்.
“அய்யோ அதில்ல மொதலாளி, புள்ளக்கி ஃபீஸ் கட்டணும்.”
“தெனத்துக்கும் ஏதாவது ஒரு காரணம். புள்ள மேல அவ்ளோ அக்கறை இருக்கிறவனுக்கு காலு ஏன் ஆறு மணியானா சங்கரங்கோவில் முக்குக் கடைக்குப் போவுது?”
ஜோசஃப் பதில் பேசாமல் தலையைக் குனிந்து நின்றுகொண்டிருந்தான்.
“போ, போ.. இடத்தைக் காலி பண்ணு. காலைல மனுசனுக்கு ஆயிரம் வேல கிடக்கு” என்றார். அவன் நகராமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். பணத்தை வாங்காமல் போகமாட்டான் என்பது அவருக்குத் தெரியும். இப்படி அவசரத்துக்கு அட்வான்ஸ் வாங்காத ஆளே இல்லை. அட்வான்ஸைக் கழிக்காமல் அவர்கள் மற்றவர்களிடத்தில் வேலைக்குப் போக முடியாது. எனவே, மற்ற செட்டுக்காரர்கள் கூலியை ஏத்தித் தருவதாக ஆசை காட்டிக் கூப்பிட்டாலும்கூட யாரும் போக மாட்டார்கள். இதுவரை ஆளில்லாமல் ஒரு நாள் ஒரு தறி நின்றதில்லை பெருமாள்ராஜனுக்கு.
“வேணுமானா, தீபாவளி போனஸ்ல பிடிச்சுட்டுக் கொடுங்க முதலாளி. ஃபீஸ் கட்டாம ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு பிள்ள அழுவுது” என்று ஜெயமணியைப் பார்த்துக் கெஞ்சும் குரலில் கேட்டான்.
பெருமாள் மெதுவாக ஜெயமணியின் பக்கம் திரும்பி ஆலோசனை கேட்பதைப் போலப் பார்த்தார்.
ஜெயமணி ஜோசஃபைப் பார்த்து அமைதியான குரலில், “ஜோசஃப், போ. நீ போய்ட்டு ரோஸ்லினை வந்து வாங்கிக்கச் சொல்லு” என்று அவனைத் திருப்பி அனுப்பினாள். அவன் கண்கள் மின்ன அவ்விடத்திலிருந்து ஓட்டமும் நடையுமாக வெளியேறினான்.
இதைப் பார்த்ததும் சரவணனுக்கு இன்னும் கொஞ்சம் தெம்பு கூடியது. ஜோசஃப் கிளம்பியதும், “அதான் மாப்ள, இப்போ அப்பா உயிரோட இருந்திருந்தா ஒரு நிமிசம்கூட யோசிக்க மாட்டாப்ல. கையோட வந்து மாத்திக் கொடுத்திருப்பார். அப்பா இல்ல. சட்டப்படி நீங்களும் நம்ம வடிவும்தான் வாரிசு. நீங்க ரெண்டு பேரும் வந்து எழுதிக் கொடுத்திட்டா, இடத்தை முடிச்சிடலாம். காசிக்காக இல்லாட்டிலும் முருகபூபதி மாமாவுக்காக நீங்க இதைப் பண்ணலாம்.”
பெருமாள்ராஜன் எதையும் பேசாமல் அமைதியாக ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தார். இடைப்பட்ட நேரத்தில் ஜெயமணியும் அவர் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டு பெருமாள்ராஜனிடம் அவள் குறித்துக்கொண்டிருந்த நோட்டை எடுத்து நீட்டினாள். இந்த வீட்டைப் பொறுத்தவரை ஜெயமணியின் முடிவே இறுதியானது. அவள் உம் கொட்டாமல் பத்து பைசாகூட நகராது என்பது ஊருக்கே தெரியும். சாதாரணமாக நூலுக்குப் பசை போட்டுக் கொடுக்கும் தொழில் வைத்து நடத்திக்கொண்டிருந்த பெருமாள்ராஜனைத் தனியே தறி போட வைத்து, தறியைச் செட்டாக்கி, செட்டை இரண்டு நான்கென்று பெருக்கி இன்றைக்கு நூற்று இருபது தறிகளுக்குச் சொந்தக்காரனாக மாற்றி உட்கார வைத்திருக்கிற கெட்டிக்காரி. இப்போதும்கூடச் சக்கம்பட்டி, தேனி, அருப்புக்கோட்டை என்று தமிழ்நாட்டுக்குள் மட்டும் அனுப்பிக்கொண்டிருந்த சேலைகளை ஆந்திராவிலிருக்கும் ரெய்சூருக்கு அனுப்ப ஆரம்பித்திருப்பது ஜெயமணியின் திட்டம்தான் என்று பேச்சு. நூல் விலை கட்டுப்படியாகாத உயரத்துக்குப் போனபோதெல்லாம், மொத்த ரொக்கத்துக்கு எடுத்து விலையைக் குறைத்து வாங்கி, போட்டியாளர்களைவிடச் சேலைக்கு இருபது ரூபாய் குறைவாகக் கொடுக்க முடிந்தது பெருமாள்ராஜனால் மட்டுமே நடக்கிற காரியம் இல்லை. பெருமாள்ராஜன் தேர்ந்த வேலைக்காரர். இரவும் பகலும் அலுப்புப் பார்க்காமல் உழைக்கக்கூடியவர். பசைபோடும் காலத்தில் அவர் கை நூலைச் சுழற்றிப் பசையில் முக்கி வெளியேறும் வேகத்தைப் பார்த்தவர்கள் அவரை ‘மிசின் கை பெருமாள்’ என்ற பெயரிட்டு அழைத்தார்கள். வேலையும் மூளையும் சேரும்போது காசும் பணமும் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது.
“மச்சான்.. அப்பாவுக்காக நான் பண்ணித் தரலாம். அவங்களும் அதே மாதிரி பண்ணியிருந்திருக்கலாமே? அது யாரோட இடம்? எங்க பூர்வீகச் சொத்துதானே? ஏதோ நொடிச்ச காலத்துல எங்கப்பா அவங்க அப்பாவுக்கு கைமாத்திவிட்டார். அப்போக்கூட அவர் ஏன் வெளியாளுக்குக் கொடுக்கல? ஆனா, இவங்க கைமாத்தும்போது ஒரு வார்த்தை சொல்லிவிடலியே! முதல்லயே சொல்லியிருந்தா வேத்தாள் கொடுக்கிறதுக்கு மேல இரண்டு ரூபா வச்சு நான் கொடுத்திருக்க மாட்டேனா?”
“அது சரிதான் மாப்ள. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்தான். நடக்கல. முடிஞ்சதைப் பத்திப் பேசி இப்ப என்ன பிரயோஜனம் சொல்லுங்க.”
“அதையே நான் சொன்னா?”
“என்ன மாப்ள. இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசினா இதுக்கு ஒரு முடிவு ஆகுமா?”
“சரி, முத்து டிரேடர்ஸ் எவ்வளவுக்கு முடிக்கிறாங்க?”
சரவணன், காசியைப் பார்த்தார். காசி தலையை ஆட்டியதும், “எழுபத்து மூணு” என்றார்.
“ம்ம்.. சரி, அம்பதுக்கு நான் எடுத்துக்கிறேன். எனக்கு கொடுத்துடச் சொல்லுங்க.”
அதைக் கேட்டதும் காசி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார். அவரால் அதற்கு மேல் அங்கே உட்கார முடியவில்லை. கோபம் பொங்கி வந்தது. சரவணன் அவர் தொடையில் கை வைத்து அமர்த்தினார். இதையெல்லாம் கண்டும் காணாதது போல ஜெயமணி அமர்ந்திருந்தாள்.
“மாப்ள, விலை கேக்கிறதா இருந்தாலும் அதுல ஒரு நியாயம் இருக்கணும்ல?”
“சரியாத்தானே கேட்டிருக்கேன்? நிலத்துல பாதி எங்கப்பா பேருல இருக்கு. மீதிப் பாதிக்கும் கட்டடத்துக்கும் சேர்த்துதான் அம்பதுக்குக் கேட்கிறேன். நம்ம வேல்முருகன் இன்ஜினியரு எங்க இடத்தைக் கழிச்சுப் பார்த்துட்டு கணக்குப் போட்டு நாப்பத்து அஞ்சுதான் மதிப்பிட்டுக் கொடுத்திருக்காப்புல. நாந்தான் அதுக்கு மேல அஞ்சு கூடப் போட்டுச் சொல்றேன்” என்று டீப்பாய்க்கு அடியிலிருந்து எதையோ தேடி எடுத்து ஒரு தாளைச் சரவணனிடம் நீட்டினார்.
சரவணனுக்கே ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எப்படியும் தன்னிடம் வந்து நிற்க வேண்டிய நிலை வரும் என்பதைக் கணித்து, இதற்கென்று மெனக்கெட்டு தனியாக ஆளைப் பிடித்து வேலைபார்த்து வைத்திருக்கிறார் பெருமாள்ராஜன். இவர்கள் இருவரும் அதை எதிர்பார்க்கவில்லை.
“என்ன மாப்ள. பத்திரம் முடிக்கும்போது நடந்த ஒரு சின்ன தப்பு. அதுக்குப் போயி..”
“சின்னத் தப்பா? எங்க, போயி எஸ்.ஆர்.கிட்ட பத்திரம் முடிக்கிறபோ இதைச் சொல்லிப் பாருங்க. இல்ல, முத்து டிரேடர்ஸ்காரங்ககிட்டயே சொல்லுங்களேன். கவர்மெண்ட் பட்டா மச்சான். வேணுமின்னா இன்னும் இரண்டு சேர்த்து அம்பத்து இரண்டா தாரேன். அவ்வளவுதான். அதுக்கு மேல கட்டாது.”
“அடடே, அவருக்கு கடனே எழுபது இருக்கு. அதை அடைக்கத்தான் இவ்ளோ..”
அவர் பேசி முடிக்கும் முன்னரே கையை நீட்டிக் குறுக்கிட்டு, “மச்சான்.. அது என் பிரச்சினையில்லை. அதான் பையன் இருக்காப்லல்ல? மிச்சத்தை நாளைக்கு அவர் வந்து அடைக்கட்டும்.”
இதைக் கேட்டதும் காசியின் முகம் கறுத்துச் சுண்டியது. தன் பையனுக்குக் கடனைக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் தன் சுயமரியாதையை விட்டுவிட்டு இந்த வீட்டுப் படியேறி இவ்வளவு தணிந்து நிற்கிறார். சரவணன் காசியின் கைமேல் தன் கை வைத்து அழுத்திப் பிடித்து அவரை அமர்த்தினார்.
“மாப்ள, பட்டா ஆயிரம் சொல்லலாம். மனுசன்னா பேச்சு மாறக்கூடாதுல.”
“மச்சான், அதையேத்தான் நானும் சொல்றேன். மனுசன்னா பேச்சு மாறக்கூடாது. பத்திரத்துல பட்டா நம்பர் குறிக்கலன்னு நீங்க சொல்றீங்க. ஒரு வேள இடத்து அளவ மாத்திக் குறிச்சு பெரியவரு எங்க அப்பாவ ஏமாத்தி இருந்தா?”
“அட என்ன மாப்ள இப்படியெல்லாம் பேசிட்டு? அப்படி சதுர அடிகூட கவனிக்காமலா பண்ணுவாங்க யாரும்?”
இதைக் கேட்டதும் ஜெயமணி வெடுக்கென்ற குரலில், “அண்ணாச்சி, செத்த சும்மா இருங்க. அப்படிப் பார்த்தா, பட்டா நம்பர் பாக்காம விடுற ஆளா அவங்க அப்பா? கிராம் கிராமா அளந்து பாக்குறவரு அரை மனையை விட்டுருப்பாருன்னா நினைக்கீக? இந்தக் கதையெல்லாம் நம்பறதுக்கு வேறாளைப் பாக்கச் சொல்லுங்க!” என்று சொல்லிவிட்டு முகத்தை வெட்டித் திருப்பிக்கொண்டாள். அவள் குரல் உயர்ந்தும் கெட்டித்தும் அதுவரை சரவணன் பார்த்ததில்லை. அவரே பேச்சற்றுத் திகைத்துப் போய்ச் சமைந்திருந்தார்.
அதைக் கேட்டதும் காசிமுத்து வேறு எதையும் பேசாமல் தன் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார். சரவணன் மச்சான் கூப்பிட்ட குரலைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் வாசலைப் பார்த்து நடக்க ஆரம்பித்தார். ஆறரடி உயரம். மெதுவாகத் தளர்ந்த நடையில், அவர் தலையைக் குனிந்து வாசல் நிலையைத் தாண்டி அவ்வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் தலையைக் குனியாமல் நிமிர்ந்தே நடந்திருந்தாலும்கூட நிலைக்கும் அவர் தலைக்கும் ஓரடி இடைவெளி இருந்திருக்கும் என்பதை ஜெயமணி மனத்துள் கணக்கிட்டுக்கொண்டாள்.
வெளியில் வெயில் மறைந்து முற்றிலும் மேகம் சூழ்ந்து கறுத்திருந்தது. காசி அவ்வீட்டைவிட்டு வெளியேறவும் மழை பிடித்துக்கொள்ளவும் சரியாக இருந்தது. அவர் மழையைப் பொருட்படுத்தாமல் நனைந்தபடி ஆளரவம் ஒடுங்கியிருந்த அத்தெருவில் தனியாக நடந்து சென்றார்.