இந்த இரவு என்றில்லை, ஒவ்வொரு இரவுமே இப்படித்தான் இருக்கிறது. இரவைக் கழிக்க வேண்டும், பகலைக் கடக்க வேண்டும். இரவில் என்னவாகும் என்று இந்த நகரத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் பதற்றம். சாமானிய மக்களின் தினப்படி வாழ்வில் அரசியல் தீவிரமானால் அந்த நாட்டு மக்கள் நல்ல வாழ்க்கை வாழவில்லை என்று அப்பா சொல்வார். அப்பா கொந்தளிப்புகளை விரும்பாத மனிதர். இளம் வயதில் அவர் மீது எனக்கு அத்தனை எரிச்சல் இருந்தது. என்ன மனிதர் இவர்? சப்பாத்திகளும் வெண்ணெயும் முட்டைகளும் மேசையில் இருந்தால், பிள்ளைகளுக்குப் பள்ளிக்கட்டணமும் அம்மாவுக்கு ஒரு முத்தமும் தரமுடிந்தால், இவர் இயேசுவுக்கு முன் ஆயிரம் முறை மண்டியிட்டுக் கண்ணீர் சிந்துவார் என்று அண்ணன்களிடம் ஒருமுறை சொல்லிச் சிரித்திருக்கிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த நாடே அதைத்தான் நினைக்கிறது. தந்தைகளின் சொற்களைக் காலம் தன் நெஞ்சில் பொறித்து வைத்துப் பிள்ளைகளிடம் காட்டுமோ என்னவோ!
“மானசீகமான ஒரு நிலநடுக்கம் நாட்டில் நிகழ்ந்துவிட்டது,” என்று செர்கே இதே இடத்தில் சென்ற ஆண்டு ஒருநாள் சொன்னான்.
சட்டென்ற ஒரு அசைவை உணர்ந்தால்கூட நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்த மக்களுக்கு அது பெரும் பதற்றத்தை ஏற்படுத்துமாம். அதுபோல, இங்கு சிறிய சத்தத்தில் இருந்துகூட வன்முறை வெடித்துவிடும் என்று தினமும் பயம் காட்டிக்கொண்டே இருக்கிறது.
நிலநடுக்கத்தைத் தாண்டிவந்த மனிதர்கள் அதன்பின் சில காலங்களுக்கு நிலத்தில்தான் படுத்து உறங்க முடியும். வேறு சாதனங்களில் படுத்துறங்க முடியாது என்று அந்தப் பெரியவர் சொன்னார். அடித்த தாயையே கட்டிக்கொள்ளும் குழந்தையைப்போல என்று சொல்லிவிட்டுத் தன் நீண்ட தாடியை நீவியபடி பலமாகச் சிரித்தார். முதியவர்களுக்குப் போரைக் கண்டு பயமில்லை. இதை நேரடியாகக் காணக்காண வியப்பாக இருக்கிறது. நடக்கிறது நடக்கட்டும் என்று குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லிக்கொண்டு வீட்டிலேயே கிடக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பிருந்து பெண்கள் தெருக்களில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். எந்த ஆட்சி வந்தாலும் வீழ்ந்தாலும் காலங்காலமாகக் கணப்பின் முன் ரொட்டிகளைப் பங்கிட்டும் பஞ்சாலைகளின் தறிகளுக்கு முன்பும் நின்றவர்கள். இன்று குழந்தைகளின் பசி அவர்களை எரியச் செய்கிறது. பெண்கள் தெருவில் கூடிப் போராட்டத்தைத் தொடங்கியதும் அவர்களுக்குப் பின்னால் பீட்ரோகிராட் நகரமே திரளத் தொடங்கிவிட்டது. அவர்கள் தெருவில் இறங்கியது ஒரு காரணம் மட்டுமே. நகரவாசிகள் எப்போதிருந்தோ திரளாகக் காத்திருந்தார்கள்.
ஆனால் நான் இன்று எங்கும் இறங்கிப்போகாமல் என்னுடைய காரியாலயத்தின் மெழுகுவர்த்தியின் சிறுவெளிச்சத்தில் பதுங்கியிருக்கிறேன். மின்விளக்கை ஔிரச் செய்யாது இருளுக்குள் காரியாலயம் மூழ்கிக் கிடக்கிறது. எந்த நேரமும் புரட்சி வெடிக்கும் நகரமாகப் பீட்ரோகிராட் மாறி வெகுகாலமாகிவிட்டது. எதுவுமே நிலையாக இல்லை. எதுவும் உடைக்கப்படலாம், எரிக்கப்படலாம், கூட்டமாக மக்கள் கொல்லப்படலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பல இரவுகள் தூக்கம் வராமல் அரிதாக ஓர் இரவில் உடல் அயர்ந்து விழுந்தால் சற்று நேரத்தில் மனம் உசுப்பிவிட்டுவிடுகிறது. எங்கேயோ விழுந்துகொண்டிருக்கும் உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. இருளை விரட்டுவதற்குத் தெருவிளக்குகளின் ஔி வட்டமாய், நீள்வட்டமாய் சாலையில் விரிந்து கிடக்கிறது. சந்துக்குள் இருக்கும் இந்தக் காரியாலயத்திற்கு நான் எப்படிப் பாதுகாப்பாவேன் என்று தெரியவில்லை. என்னால் இதற்கு என்ன பாதுகாப்பைத் தந்துவிட முடியும்? சற்றுத் தள்ளியிருந்த சாலையில் மங்கலான வெளிச்சத்தில் பனியின் புகைத்திரை தெரிகிறது. குளிராடையுடன் கணப்பின் முன்னால் அமர்ந்திருந்த பெண்களுக்கு மூன்று நாட்களாகக் குளிர் ஒரு பொருட்டாக இல்லை. பெண்கள் தொடர்ந்து மூன்று நாட்களாகப் பஞ்சாலை வேலைக்குச் செல்லவில்லை. மாலையில் வந்துவிடுவதாகச் சொல்லிய செர்கே இன்னும் வரவில்லை. அவனுக்கு எதாவது நடந்திருக்குமா?
மனம் எதையாவது நினைத்துக் கண்டபடி கற்பனையில் சுழலத் தொடங்கியது. தனியாகக் கதவுகளை அடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தபோதும் வெட்டவெளியில் நிற்பதைப் போல இருக்கிறது. யார் இந்த நகரத்தை ஆள்கிறார்கள் என்றே தெரியவில்லை. இன்று சரியாகும், நாளை சரியாகும், இதெல்லாம் சிறிய சிக்கல்கள் என்று ஒவ்வொரு நாளையும் கடந்து வந்துவிட்ட பிறகும் எந்த நேரமும் நகரம் எரியக்கூடும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. இதுபோலத் தனிமை வாய்த்தால் எவ்வளவு எழுதலாம் என்று இளம் வயதில் லண்டனின் லாம்பெத் நகரின் வீட்டில் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். வீட்டில் என்னுடன் சேர்த்து எட்டு பேர். அந்த வீடு எப்போதும் அன்றாடத்தின் சுழலில் மூழ்கியிருக்கும். அம்மா என்னை அழைத்து எதையாவது பேசிக்கொண்டிருப்பாள். அவ்வளவு வீட்டு வேலைகளுக்கு இடையில் ஆறு பிள்ளைகளில் எனக்காக அவள் ஒதுக்கிய நேரம் அதிகம்தான். சமைக்கும்போது கணப்பின் முன் சிவக்கும் அவள் முகத்தால், மாவு பிசையும் சிவந்த மெல்லிய கைகளால் என்னைப் பொத்தி வைத்திருந்தாள். என்னிடம் பேசிக்கொண்டே இருப்பாள்.
அன்று மாலை மழை வரும் என்று நான் நினைக்கவில்லை. வழக்கம்போல மேகமூட்டமாக இருந்தது. அப்போது எனக்கு வயது பதினைந்திற்கு மேல் இருக்கும். வெளியே செல்வதற்கு அம்மாவிடம் அனுமதி வாங்கியிருந்தேன். அந்தச் சாலை முழுக்கச் சில்வர் பிர்ச் மரங்கள் நிறைந்திருக்கும். சிவப்பு நிறமான இலைகள் உதிர்ந்து கிடக்கும் அந்த வழியில் நடந்து சென்றுகொண்டே இருப்பேன். அங்கு வரும் காதலர்களைப் போலவே எனக்குள்ளும் ஒரு தீராத காதல் இருந்தது.
தினமும் ஒரு புத்தகத்துடன் அங்கு செல்வேன். ஆள் நடமாட்டமில்லாத தெற்குத் திசையில் உள்ள பொது இருக்கைகளுள் ஒன்றில் அமர்ந்துகொள்வேன். சில்வர் பிர்ச் மரங்கள் வரிசையாக நிற்கும். கையகலமான இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சளாக, செம்மஞ்சளாக, சிவப்பாக மாறிக்கொண்டிருக்கும். சில இலைகள் பச்சையாகவே இருக்கும். இலையுதிர் காலத்தின் தொடக்க மாதத்தில் ஒரே மரத்தில் பச்சையான கிளையையும் மஞ்சளான கிளையையும் சிவப்பான கிளையையும் மாறி மாறிக் காணலாம். அந்தி கவியும் பொழுதில் ஒற்றை மெழுகின் ஔி விரிவதைப்போல மேற்கு வானில் சட்டென்று மணிவெளிச்சம் விரிந்து அணையும். அந்த ஔியில் சில நிமிடங்கள் இந்தப் பிர்ச் மரங்களும் இலைகளும் ஔிகொள்ளும். மின்விளக்கு வெளிச்சத்தில் அந்த மரங்கள் வேறொன்றாக மாறும்வரை அமர்ந்திருப்பேன்.
இன்று பிர்ச் சாலைக்குச் செல்ல முடியாது. நின்றுவிடும் என்று நினைத்த மழை சற்று வேகமாகப் பெய்யத் தொடங்கியது. உள் அறையில் அம்மாவின் குரல் கேட்டது.
“இது மழை வரக்கூடிய சமயமில்லை.”
“என்னைச் சொல்வதைப்போல மழையைச் சொல்ல முடியுமா?” என்று சிரிக்கும் அப்பாவின் குரல் கேட்டது. அடுத்த அறையில் படுக்கையில் படுத்தபடி தம்பிகளுடன் கதை பேசிக்கொண்டிருக்கிறாள் அக்கா. இன்னொரு அறையில் அண்ணன்கள் இருவரும் கேலி பேசிச் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. குறுக்கும்நெடுக்குமாக வரவேற்பறையில் நடந்துகொண்டிருந்தேன்.
“வால்போல்…”
அம்மா என்னை அழைக்கிறாள். நான் பதில் சொல்லாததால் அறையில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே செல்கிறாள். இப்படித்தான் நான் எங்கு இருக்கிறேன் என்று அவ்வப்போது உறுதிசெய்துகொள்வாள்.
கண்ணாடி ஜன்னலில் இருந்து பார்வையைப் பக்கவாட்டில் அம்மாவின் புத்தக அலமாரியின் பக்கமாகத் திருப்பினேன். கண்ணாடிக் கதவுகள் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தன. அம்மாவின் இந்தச் சுத்தம் எரிச்சலைத் தருகிறது. உள்ளிருக்கும் புத்தகங்களும் அப்படித்தான். நீண்ட பேச்சுகளால் ஆன கதைகள் இவை. தெள்ளத்தெளிவாகச் சொல்லப்பட்ட, விவரிக்கப்பட்ட கதைகளைக் கொண்ட புத்தகங்கள். சம்பவங்களாக எதுவும் இருக்காது. எத்தனை புத்தகங்களை எடுத்து எடுத்து வைத்திருக்கிறேன்! கண்களைத் திருப்பினேன். மழைவிடுவதாக இல்லை. சாலையில் நகரும் தண்ணீரின் மீது துளிகள் விழுந்து தெறித்துக்கொண்டிருந்தன. சற்றுத் தள்ளி ஒரு சில்வர் பிர்ச் மரம். மஞ்சளில் இருந்து ஆரஞ்சுவண்ணத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் இலைகள். மரமே பூக்களால் நிறைந்திருப்பதைப்போல. உதிர்ந்திருந்த இலை ஒன்றைத் தண்ணீர் மெல்ல மெல்ல நகர்த்திக்கொண்டிருந்தது. கண்களை நிமிர்த்தினேன். வீடுகளுக்கு மேலே மழை பெய்துகொண்டிருந்தது. நகரமே அழுதுகொண்டிப்பதைப்போல. பகல் ஔி மெல்ல மாறிக்கொண்டிருந்தது. இனி வெளியில் செல்ல முடியாது.
அங்கே பிர்ச் மரங்கள் தனியாக மழையில் நனைந்துகொண்டிருக்கும். எழுந்து வரவேற்பறைக்குள்ளேயே நடந்தேன். மீண்டும் அம்மாவின் புத்தக அலமாரியின் புத்தகங்களின் நடு அடுக்கைப் பார்த்தேன்.
மங்கிய நீல நிறத்தில் மூன்று பழைய புத்தகங்கள் வரிசையாக இருந்தன. அவற்றின் பக்கவாட்டில் மங்கலான சிவப்பு எழுத்துகள். அந்தப் புத்தகங்களில் ஒன்றில் ‘டில்சிட்டிற்கு முன்பாக’ என்று இருந்தது. டில்சிட் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தேன். அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துத் திருப்பினேன். தரையில் விரிக்கும் மெத்தை ஒன்றை அலமாரியின் அருகில் அம்மா வைத்திருந்தாள். காப்பி நிறத்திலான அந்த மெத்தையில் குப்புறப் படுத்துக்கொண்டு புத்தகத்தை விரித்தேன்.
வரிகள் ஓடிக்கொண்டிருந்தன. நீள நீளமான அரிய பெயர்கள். விருந்து ஒன்று நடந்துகொண்டிருந்தது. பெரிய விருந்து மேசை. யார் யாரோ வந்துபோனார்கள்.
இளவரசி ஒருத்தி தன் தோழியின் கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறாள். பெண்களின் கடிதத்தில் மாஸ்கோவின் யுத்தம் பற்றிய அரசியல் பேச்சு இருக்கிறது. படை எல்லைப்புறத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது என்றே கடிதத்தில் தோழி எழுதியிருக்கிறாள்.
ஒருநாள் வீட்டில் சத்தம் அதிகமாக இருந்தது. நாற்காலியில் அமர்ந்து உணவு மேசையின் மீது கைகளால் ஊன்றியிருந்தார் அப்பா. தலையைத் தாங்கியவாறு குனிந்து அமர்ந்திருக்கிறார். அம்மா சிவந்த முகத்துடன் கைகளை இறுக்கிப் பிடித்தபடி சுடரும் மெழுகின் முன் நீண்ட பொழுதாக மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். நாங்கள் உள்ளறையில் இருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்ணன் இரு வெண்ணிறப் பீங்கான் கோப்பைகளில் இருந்த தேநீரில் ஒரு கோப்பையை அப்பாவிடம் கொடுக்கிறான். அம்மாவின் முதுகில் கை வைத்து எழுப்புகிறான். அவள் அவனின் தோளில் சாய்ந்து குலுங்கி அழுகிறாள். அப்பா எழுந்துவந்து அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு ஏதோ சொல்கிறார். நாவலின் வரிகள் என் மனதிற்குள் ஓடுகின்றன. அப்போதிலிருந்தே அந்த நாவல் நினைவில் எழும்பிக்கொண்டே இருக்கும்.
போரும் வாழ்வும் நாவல் அந்த இலையுதிர் காலம் முழுவதும் என்னுடன் இருந்தது. அதை முதலில் கைகளில் எடுத்து வாசித்த அந்த அந்திமழை நாளின் பரவசம் நீண்டு சென்றது. சில்வர் பிர்ச் மரம் இளமஞ்சள், மஞ்சள் ஆரஞ்ச், இளம் சிவப்பாக என் தலைக்கு மேல் மாறிக்கொண்டிருக்க, நான் நெப்போலியனுடன் அந்தக் குன்றின்மீது நின்று போர் நடப்பதைக் கண்டேன். சிவப்புநிற இலைகள் செறிந்து விழத்தொடங்கிய வாரம் அது. வாசிக்கும்போது புத்தகத்தின் மீது விழும் இலைகள் ஒன்றிரண்டைப் புத்தகத்தின் பக்கங்களிலேயே வைத்து மூடினேன். உதிர்ந்தவை போக மரத்திலேயே மிச்சமிருக்கும் இலைகள் செஞ்சிவப்பாய் இருப்பதைப் பார்த்துக்கொண்டு சிலநாட்கள் அமர்ந்திருந்தேன். தரையெங்கும் உதிர்ந்த இலைகள். அந்தி வானம் மஞ்சளாய், இளம்சிவப்பாய் மாறும் நேரத்தில் போரும் வாழ்வும் நாவலை முடித்திருந்தேன். மனத்தில் அத்தனை ஏக்கம். சுற்றிலும் சில்வர் பிர்ச் மரங்களின் சருகுகளும் உதிர்ந்த இலைகளும். நான் அமர்ந்திருக்கும் நீண்ட மர பெஞ்சின் அந்த நுனியில் நடாஷா புன்னகை செய்கிறாள்.
கனவில் கண்களை மூடினால் செவலை நிற, கறுப்புநிறக் குதிரைகள் காற்றில் பறந்தன. பியரின் விழிகளைக் காணமுடிகிறது. அந்த நீண்ட சோர்வான அந்தி முடிந்து கொந்தளிப்பான, களிப்பான, விரக்தியான, அருவருப்பான, உற்சாகமான அந்திகள் வந்துபோயின. சில்வர் பிர்ச்சின் இலை நிறங்களைப் போல மாறி மாறி மனத்திற்குள் அலையடித்தன. அம்மா என்னிடமுள்ள மாறுதலைக் கவனித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் படுக்கையில் படுத்திருந்த என் அருகில் வந்தமர்ந்தாள். அவளின் பழுப்புநிறக் கண்கள் விரிந்திருந்தன.
“நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா வால்போல்? தினமும் புத்தகத்துடன் வெளியில் செல்கிறாயே..”
“சில்வர் பிர்ச் சாலைக்குச் செல்கிறேன் அம்மா… போரும் வாழ்வும் நாவலை அங்கு கொண்டுசென்று வாசிக்கிறேன்.”
அம்மா என் தலைமுடியைப் பின்னால் ஒதுக்கிவிட்டுப் புன்னகை புரிந்தாள். பின் வலது தோளைத் தடவினாள். தேநீர் எடுத்துவருவதாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள். செல்லும் முன், “என்னுடைய புத்தகங்களை உனக்காக மட்டுமே விட்டுச்செல்கிறேன்” என்று புன்னகை செய்தாள். ஈரவிழிகளைச் சிமிட்டியபடி என் நெற்றியில் முத்தமிட்டாள். பனியைப் போல அவள் இதழ்கள் நெற்றியில் பதிந்திருப்பதை இப்போதும் உணர்கிறேன். அது எப்போதும் என்னுடன் இருக்கிறது. ஒரு முத்தத்தைக் காலத்தில் உடன் இருக்க வைத்தது இந்தப் புத்தகம்தான். அந்த முத்தம் எத்தனை ஆண்டுகளாக நாடு நகரங்கள் கடந்து என்னுடன் இருக்கிறது! அந்தப் புத்தகம் மனத்திற்கு அளித்த ஒன்றுக்கு நிகராக உடலிலும் ஓர் அழியாத பதிவைத் தந்திருக்கிறது.
மனம் உள்ளொடுங்கிக் கண்ணீர் வரும்போலத் தோன்றியது. வேறு பள்ளிக்கு மாற்றப்படும்போது ஏற்படும் துக்கம் போல ஒன்று. அதுகூட இல்லை, இது புதிய துக்கம். துக்கம் இப்படியா இருக்கும்?
இன்று இந்த அந்தியும் இத்தனை நீளமாக இருக்கிறது. ஒரு பிர்ச் மரம் இருந்தால்கூட இந்த அந்தியைக் கடந்துவிடலாம். மாஸ்கோ நகரமே புகையால் மூடிக்கிடக்கிறது. தல்ஸ்தோய் இதே போன்றதொரு சித்திரத்தை வார் அண்ட் பீஸில் எழுதியிருப்பார்.
‘எரிந்துகொண்டிருக்கும் கரியின் ஜூவாலைக்கு ஒரு கஜத்திற்கு மேலாக இருளின் கறுப்புத்திரை தொங்கிக்கொண்டிருந்தது. கீழே விழுந்துகொண்டிருந்த உறைபனியின் செதில்கள், அந்த வெளிச்சத்தில் படபடத்துக்கொண்டிருந்தன. நெருப்பின் மற்றொரு புறத்தில் அந்தச் சிப்பாய் நிர்வாணமாய் அமர்ந்து தனது மஞ்சள்நிற உடம்பிற்குச் சூடு காட்டிக்கொண்டிருந்தான்’ என்ற வரிகள் மனதில் வந்துநின்றன. மாஸ்கோ இன்னும் எரிந்து முடிக்கவே இல்லையா? இந்த வெண்பனி நிலத்திற்கு எரிதலில் அத்தனை இன்பமா? குளிரில் உறையும் இந்த நிலம் எரிதலை விரும்புகிறதா?
உறக்கம் இல்லாது பொழுது நீண்டுசென்றது. அரை மெழுகு உருகிக் கரைந்திருந்தது. சுடர் அசையாது நின்றது. அதையும் அணைத்துவிட்டால் முழு இருளாகும். ஆனால் அதையும் அணைத்துவிட்டு என்னால் நாளை இங்கிருந்து வீட்டிற்குக் கிளம்ப முடியாது. வீடு என்பது உண்மையில் வீடு அல்ல. இங்கு எப்படியோ அதே பதற்றம்தான். இன்னும் பெரிதாகப் பதற்றம் தலைதூக்கும். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாது பள்ளி செல்லாமல் வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிக்கிடக்கும் பிள்ளையைப் பார்ப்பதற்கு இங்கேயே இருந்துவிடலாம். போர்க்காலத்தில் வீட்டில் ஆண் என நான் என்ன பாதுகாப்பை அளிக்க முடியும்? சில நேரங்களில் அவளே என்னையும் சேர்த்து அணைத்து அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். மனத்தில் அத்தனை அடைசலாக இருக்கிறது. தினம் தினம் புதுப்புது சிக்கல்கள். ரொட்டி கிடைக்கவில்லை. பால் கிடைக்கவில்லை.
எழுதலாம், ஆனால் ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணங்கள் இல்லை. நாவல் ஒன்று இடையில் நிற்கிறது. இந்த இரவில் இதையெல்லாம் கடந்து என்னை யாரிடமாவது ஒப்படைக்கவில்லை என்றால் ஒருவேளை நான் தெருவில் இறங்கி ஒரு கல்லையாவது எடுத்து எறிந்து எதையாவது உடைக்க வேண்டும். குரலெடுத்துக் கத்த வேண்டும். இல்லை என்றால் என்னையே எதாவது செய்ய வேண்டும். இந்தக் கட்டடம் பற்றி எரிவதைப் பார்த்தால்கூட எல்லாம் சரியாகிவிடக்கூடும். முன்னால் சுடரும் சுடரை நோக்கி விரலை நீட்டினேன். மை படிந்த விரல்கள் நடுங்கின. ஒரு காகிதத்தையாவது எரித்துவிட வேண்டும் என்று துழாவினேன். மேசையில் ஒன்றும் இல்லை. அலமாரியைத் திறந்தேன். புத்தகங்கள் வரிசை கலையாமல் இருந்தன. ஒரு புத்தகத்தை எடுத்து மேசை மீது வீசினேன். கொஞ்சம் கனமான புத்தகம். டப் என்ற சத்தம். வீசிய பிறகு மேசை மீது விரிந்து கிடந்த புத்தகத்தைப் பார்த்ததும் அம்மாவின் நினைவு வந்தது.
உடனே வார் அண்ட் பீஸை தேடி எடுத்து அமர்ந்தேன். புத்தகத்தின் மீது விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஊன்றிக்கொள்ள இருள் நகர்ந்து சென்றது. நான் பனிநிலத்தில் வீரனாக, காவலனாக, இளவரசனாக, இளவரசியாக, தாயாக, படைத்தலைவனாக, சாதாரண பிரஜையாக, கிராமத்தானாக, காதலியாக, மனைவியாக அலைந்து திரிந்தேன். வாளால் வெட்டுப்பட்டு இறந்தேன். குதிரையாகப் பாய்ந்து ஓடினேன். பின் ஒரு தோட்டத்தில் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.
கடிதங்கள் நீள்கின்றன. கடிதம் எத்தனை நெருக்கமானது! முகம் பார்த்துச் சொல்ல முடியாதவைகளுக்குமானது. பேசிக்கொள்ள முடியாதவையே வாள்களாகி வெட்டுகின்றன. ஒரு எழுத்துத் தூதால் அந்த வாளைக் கீழிறக்க முடியலாம். ஒரு கடிதத்தின் மூலம் என்ன வேண்டுமானலும் செய்துவிட முடியும். முதுகில் வலி தொடங்கியிருந்தது. நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து வாசிக்கத் தொடங்கினேன்.
ஒரு கடிதத்துடன் நான் குதிரையில் சென்றுகொண்டே இருந்தேன். கோடையும் மழையும் பனியும் மாறி மாறி வந்தன. குதிரையிலேயே அமர்ந்திருந்ததால் முதுகிலும் தொடை தசைகளிலும் வலி தெறித்தது. நீண்ட பனிநிலங்களைக் கடந்துகொண்டிருந்தேன். புகைந்துகொண்டிருந்த சாலைகளின் குளிரில் என் குதிரை விரைந்தது. இடுப்பில் இருந்த கடிதத்தைத் தொட்டுப் பார்த்தேன். கடிதம் இல்லை. குனிந்து பார்த்தேன். புத்தகம் ஒன்று என் இடுப்பு வாரில் இணைக்கப்பட்டிருந்தது. வலியால் கால்களை நீட்டினேன். அது மரத்தில் இடிக்க, நான் விழித்துப் பார்த்தபோது ஜன்னலில் காலை நேரத்து வெளிச்சத்தில் அசைவுகள் தெரிந்தன. கைகளில் புத்தகத்துடனேயே உறங்கியிருந்தேன். வலதுகை மரத்துப் போயிருந்தது. கைகளைப் பிசைந்தபடி கண்களை மூடினேன். கால்களைத் தூக்கி மரப்பீடத்தின் மீது வைத்தேன். நெற்றியில் மெல்லிய குளிர் பரவியது. நண்பர்கள் வந்துவிடக்கூடும்.