வட்டிலில் மீந்த மோர் சோற்றைக் குடிப்பதற்காக அப்படியே கையில் ஏந்தி முகத்தை அதற்குள் செலுத்தினார் அப்பா. வட்டிலின் விளிம்பைக் கவ்விய உதடுகள் மோர் சோற்றின் உப்புக்கும் புளிப்புக்கும் அடிமையாகிவிட்டதைப் போலச் சப்புக்கொட்டி உறிஞ்சியபடி இருந்தன. நான் பார்த்தேன். கண்ணருகே உற்றுப் பார்த்தபடி ரசித்து ரசித்து அதை உறிஞ்சுகிற அப்பாவின் முகத்தை. அது எனக்கு எப்போதும் அருவருப்பான ஒரு தோற்றமாகவே தோன்றும். அந்தக் கண்களில் அப்போது முழு முற்றாக வந்துவிடுகின்ற யாரோ ஒருவரைப்போன்ற வேட்கையை நான் கூசினேன். பள்ளி முடித்து வீடு திரும்பும் மாலைகளில் சில நாட்கள் அம்மா குளித்திருப்பாள். அப்பா தனது முடி நிரம்பிய நெஞ்சுமுழுக்க பவுடரை அப்பியபடி கையில் ஏதேனும் பழைய பேப்பரை வைத்து விசிறியபடி படுத்திருப்பார். தம்பிக்கு என அவர் விரும்பி வாங்கி வருகின்ற சந்திரகலா மூலையில் சிறிய கிண்ணியில் வைக்கப்பட்டிருக்கும். தம்பி ஓடுவான். நான் மெல்லச் சுவரையொட்டி நடந்தபடி அதுவரை தம்பியோடு குரல் அதிர சிரித்துப் பேசி வந்த முகத்தை இழந்தவனாக பைக்கட்டை வைப்பதற்காகச் செல்வேன். தாறுமாறாய்க் கிடக்கும் போர்வையைக் காலால் சுருட்டி எடுத்துப் பாதத்திற்குத் தலைகாணியைப் போல வைத்துவிட்டு, ”மிதிச்சு விடுறா” என்பார். அம்மா வெளியே துணிகளை அலசியபடி, ”செய்… கண்ணு…” என்பாள். சந்திரகலாவை மேலும் மேலும் சிறிய துண்டுகளாக உடைத்தபடி தம்பி அவள் முன் அமர்ந்திருப்பான். சிறிய வேண்டாவெறுப்போடு அப்பாவின் பாதங்களை நான் மிதித்துவிடுவேன். அப்பாவின் கை இன்னமும் தனக்குத்தானே விசிறிக்கொண்டிருக்க, மெல்ல கண்கள் சொருக, ஞாபகத்தில் எதையோ அசை போட்டதன் எச்சில் அசிங்கமான சிரிப்பாகக் கடைவாயினோரம் வழிந்துகொண்டிருக்கும். தட்டைத் தூக்கி முகத்தை மறைத்தவாறு கண்கள் மட்டும் தெரிய மோர் சோற்றை உறிஞ்சுகிற இதே யாரோ ஒருவனைப்போல அப்போது அப்பா இருப்பார். பித்தவெடிப்பும் முரட்டுத்தனமும் பாய்ந்த அவரது பாதங்களின் மீது நான் மிதித்துக்கொண்டிருப்பேன்.

”இன்னும் கொஞ்சம் சாதம் எடுக்கட்டுமா?” என்றார் அந்தப் பெண். ஊரில் கொடைக்குக் காரில் வந்திறங்குகின்ற டாக்டரம்மாவின் குடும்ப உறுப்பினர்கள் அணிந்திருப்பதைப் போன்ற நகைகளையும் சேலையையும் அவர் இயல்பாகச் சாதாரணமாகவே போட்டிருந்தார். அப்பா ஸ்டூலில் உட்கார்ந்து சாப்பிடுவதை இப்போதுதான் பார்க்கிறேன். அவர் இன்னமும் தட்டில் இருந்து வாயை எடுக்கவில்லை. போதும் என்னும் விதமாக இடதுகையை உயர்த்தினார். அப்பாவிற்கு உடல் முழுக்க முடிகள் அதிகம். ஒரு பொட்டு சோப்பை வைத்து உடல் முழுக்க அவர் தேய்க்கும்போது அந்த முடிக்கற்றைகளின் மேலே நுரை பூவாகப் பூத்தச் சிதறும். பெரும்பாலும் வீட்டு வாசலிலேயே அவர் குளிப்பார். வெள்ளைக் கரடி போல குதூகலச் சிரிப்போடு அவர் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அம்மா சமயங்களில் திட்டுவாள். நானும் தம்பியும் நுரை முகமூடிக்குள் இருந்து கண்களை வழித்தபடி சட்டெனத் திறந்து கண் சிமிட்டிக் காட்டும் அப்பாவின் விளையாட்டைச் சிரித்தபடி பார்ப்பவர்களாகச் சுவரோரம் உட்கார்ந்திருப்போம்.

சோறு போதும் எனத் தடுத்த அப்பாவின் இடதுகையின் முடிகளுக்குள் நிறம் இழந்த செயின் வாட்ச் தடுக்கித் தொங்கியது. கரண்டியைப் பானைக்குள் போட்டுவிட்டு முடிப்பிசிறில் தொங்கிய வாட்ச்சை மெதுவாக நீவி வெளியே எடுத்துவிட்டார் அந்தப் பெண். மீசை மயிர் நுனிகளில் மோர் அப்பியிருக்க, அப்பா என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தக் கண்களில் அப்போது, குன்றிய மனிதனின் சாயல் லேசாக வந்துபோனது.

எனக்கு நீண்ட நேரமாகவே சிறுநீர் நெருக்கிக்கொண்டிருந்தது. இப்போது நான் படுக்கையில் மூத்திரம் போவதை அடக்கப் பழகியிருந்தேன். அதுபோலவே, தெரியாத இடத்தில் ஒன்றுக்குப் போவதும் வெட்கமான விஷயமாக இருந்தது. அப்பா சாப்பிட்டுக் கை கழுவிக்கொண்டே என்னைப் பார்த்து, ”நீயும் சாப்பிடுறா” என்றார். நான் அவதியாய்த் தலைசைத்து மறுத்தேன். அந்தப் பெண் அறைக்குள் சென்று திரும்பி வந்தார். ஒரு கட்டைப் பையில் அழகாக மடித்து வைக்கப்பட்ட புடவைகள் இருந்தன. இன்னொரு கையில் பிடித்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை என்னிடம் நீட்டினார். நான் வாங்கிக்கொண்டேன். அப்பாவினருகே அந்தக் கட்டைப்பையை வைத்தார்.

”ஒன்னு ரெண்டுவாட்டி உடுத்தினதுதான், வீட்ல குடுங்க,” என்றார். அப்பா கையை வேட்டியில் துடைத்தபடி அந்தப் பையைப் பார்த்துத் தலையாட்டினார். வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அப்பாவும் நானும் கோவில் மண்டபம் போலிருந்த அந்த வீட்டின் டிவி இருக்கும் அறையில் வந்து அமர்ந்துகொண்டோம்.

முகத்திலும் கழுத்திலும் வழிந்த வியர்வையைத் தேங்காய்ப்பூ டவலில் துடைத்தவராக அந்த மனிதர் வீட்டினுள் வந்தார். அப்பா எழுந்து நின்று வணக்கம் வைத்தார். சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களில் ஒன்றில் அந்த பெண்ணோடு இந்த மனிதர் இருக்கின்ற புகைப்படம் நெடுங்காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மனிதரின் முகமும் உடலும் அடைந்திருக்கிற இந்தச் சிதிலங்களில் கொஞ்சம்கூட அந்தப் பெண்ணிடம் நிகழாமல் இருப்பதை இன்னொரு முறை அந்தப் பெண்ணைப் பார்த்து ஒப்பிட்டுக்கொண்டேன். அப்பாவை மெலிதான யோசனையோடு பார்த்தவாறு அவர் வணக்கத்தைப் போலொரு வணக்கம் வைத்தார்.

அவரின் கையில் அசங்கிப் போயிருந்த டவலையும் சாவிக்கொத்தையும் வாங்கியபடி, ”ஜமுனாவோட வீட்டுக்காரர்… அவங்க மூத்த பையன்…” என அந்தப் பெண் புன்னகையோடு கூறினார். அவருக்கு இன்னமும் பிடி கிடைக்கவில்லை. அப்படியா எனும்விதம் தலையசைத்தபடி, ”எப்ப வந்தீங்க…சாப்ட்டீங்கதான… கலா, இன்சுலின் எடுத்துட்டு வா, உட்காருங்க இந்தா வந்துடுறேன்” என்றபடி அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்று சாத்திக்கொண்டார்.

”நாளாச்சுல்ல, அதான் மறந்திருப்பாரு… இருங்க.”

அவரது கை எங்களிடம் பேசினபடி சுவரோரம் இருந்த மரமேஜையைத் திறந்து சிறிய மருந்துப் புட்டியைத் துழாவி எடுத்துக் கொண்டது. பிறகு அவரும் அந்த அறைக்குள் நுழைந்துகொண்டார். நானும் அப்பாவும் மட்டும் இன்னமும் அங்கே நின்றுகொண்டிருந்தோம். ஜன்னல் கம்பிகளின் நடுவே பூ வேலைப்பாடு கொண்ட ஒரு பகுதியின் மீது விழுந்த வெயில் அந்த அறையின் தரையில் நிழற்பூவை வரைந்திருக்க, நான் அதனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா அவஸ்தையாக நின்றுகொண்டிருப்பது போல் ஒரு உணர்வு. நான் அவர் பக்கம் திரும்பினால் ஒருவேளை என்னைப் பார்த்துச் சிரித்து சமனடையக்கூடும். எனக்குள் அப்போது அப்பா இவ்வளவுதானா என்கிற ஒரு விதமான, நானே அச்சமும் வருத்தமும் அடையக்கூடிய ஓர் எண்ணம் ஓடியடங்கியது. அவரை மேலும் பலவீனனாக, நான் வெறுக்கின்ற அந்தச் சிரிப்பை உமிழ்கின்ற முகம் கொண்டவராகக் காட்ட நேரிடுகின்ற அந்தப் பார்வைச் சந்திப்பை நான் ஜன்னல் வெளிச்சங்களை வேடிக்கை பார்ப்பது போல நடித்தபடி தவிர்த்தேன்.

காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். நான் இப்போதுதான் முதல்முறையாகக் காரில் செல்கிறேன். கால்மிதியாக அதில் விரிக்கப்பட்டிருந்த புத்தம்புது துணியில் எனது சிரங்குப் பாதங்களை வைக்கக் கூச்சமாக இருந்தது. வெளியே கடைவீதிகளின் முகப்புகள் தீப்பெட்டிப் படங்களைப் போலச் சட்சட்டெனத் தெரிந்து மறைந்துகொண்டிருந்தன.

”இப்ப எப்படிப் போய்க்கிட்டு இருக்கு வியாபாரம்லாம்?”

முன்னிருக்கையில் அமர்ந்தவராகச் சாலையைப் பார்த்துக்கொண்டே அந்த மனிதர் கேட்டார். அப்பா டிரைவரின் தலை வரை நீண்டிருந்த இருக்கையைப் பற்றிக்கொண்டு, முன் நகர்ந்து அந்த மனிதனின் முகத்தைப் பார்த்தபடி, ”திருமங்கலத்துக்கு அங்க பரவாயில்லீங்க… நல்ல வெய்யில் காலத்துல ஒன்னு ரெண்டு லைன் எச்சு போவேன். ஐப்பசின்னாதான் முடைவிழும்…”

“பத்து பர்லாங்கு போவீங்களா தெனமும்…”

”சேமனூரே பதினாறு பர்லாங்குங்களே… எட்டிவயல் போய்ட்டு வர்றப்பலாம் ராவாகிரும்…”

அப்பா மயிரடர்ந்த தனது கரத்திலிருந்த செயின் வாட்சைப் பெருமிதமாக அப்போது மேலேற்றி விட்டுக்கொண்டார். அந்த மனிதர் வெறுமனே தலையை மட்டும் அசைத்தார்.

”பாட்டிலுக்கு எவ்வளவு கமிஷன் போடுறான் பட்டாணி இப்பெல்லாம்?”

”அது தொலைவைப் பொறுத்துங்க. கலர்க்கு இரண்டு ரூவா… சோடானா ஒரு ரூபாய் போடுறாப்டி. ஆனாலும் நமக்குலாம் ரொம்ப நெருக்கியெடுத்து கணக்குப் பார்க்க மாட்டாப்டி. அடைமழை காலம்னா பீவி ரெண்டு மூட்டை அரிசி தூக்கிக்கச் சொல்லும், பாய் ஒரு மாதிரி நம்மளை அனுசரிச்சுக்குவாப்ல.”

அவர் தலையசைத்துக்கொண்டார்.

“பின்ன இப்ப இந்தமாதிரி ஆள் கிடைக்கணும்ல… எவன் நிக்குறான் ஒரே வேலைல… எட்டணா கூட விட்டெறிஞ்சா ஓடிர்றானுக…”

டிரைவர் இன்னும் இறுக்கமான முகத்தோடு ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த கைகளை ஏதோ சண்டை போடுவதைப் போல இறுக்கிப்பிடித்திருந்தான்.

”இப்ப எல்லாப் பக்கமும் அப்படித்தானுங்களே, நாம பழைய அகல கேரியர் சைக்கிள் காலத்து ஆளு… அதான் அப்படிலாம் சுதாரிக்கத் தெரில்ல.”

”அதென்ன பெரிய புத்திசாலித்தனம்? நாலுவாட்டி காசுக்கு வேலையை விட்டுட்டு மாறி மாறி ஓடுறவனுக்கு கையிலிருக்க சரஸ்வதி வேசியா போய்டுவா இல்லியா… விசுவாசம்னா இப்ப ஏமாளித்தனம்னுவானுக லூசுத்தாய்லிக.. விசுவாசம்னா நெல்லுமணி நெல்லுமணியாத்தான் சோறு போடும். கையிலிருக்க சரஸ்வதிக்கு அது அமிர்தம். அவ வளர்ந்து ஐசுவரியத்தை மட்டுமா திருப்பித் தருவா.. ஏத்தத்துலயும் இறக்கத்துலயும் ஒருத்தனுக்காகவே நின்னோம்ங்கிற ஒரு வெறைப்பை மூங்கிலாட்டம் மனசுக்குத் தந்துட்டுப் போவா. அதாம் விசுவாசம் ஒருத்தனுக்குத் தர்ற விஷயமே. இல்லியா…”

அவருக்கு மூச்சு வாங்கியது. பின்னந்தலையில் மயிர்க்கால்களுக்கிடையே வியர்வைப் புள்ளிகள் அரும்பி எழுந்து பின்னங்களுத்து முழுக்க சொதசொதவென ஈரமாகிவிட்டது. டவலால் மென்மையாக அதனை ஒற்றி எடுத்துக்கொண்டார். அப்பா எதுவும் பேசாமல் அமைதியானார்.

கார் தெப்பக்குளத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. அவருக்கு இன்னமும் வியர்வை வழிவது நிற்கவில்லை. ஒற்றிக்கொண்டே வந்தார். நெடுந்தொலைவுக்குச் சைக்கிளில் அப்பா சோடா விற்றுவிட்டு வீடு திரும்பும்போது அவரது சட்டையெல்லாம் மழையில் நனைந்த காகிதம் போல உடம்பு முழுக்க ஒட்டிக் கிடக்கும். பக்கத்தில் செல்லும்போது வியர்வையுடன் வெக்கையும் உப்பு மணமுமாக இருக்கும். கங்காக விளைந்துவிட்ட கரிக்கட்டையை அடுப்பில் இருந்து வெளியே இழுத்துவிட்டிருப்பதைப் போல அப்பா நின்றபடி மூச்சு வாங்குவார். பின்னங்கால் குதிரைச்சதை மீது சைக்கிள் மிதித்து மிதித்து வார்பிடித்து விட்டதைப்போல நெடுநரம்புகள் திண்ணென்று எழுந்து நிற்கும். ஆனால் இந்த மனிதரின் வியர்வையில் மோசமான அழுகல்நெடி வீசிக்கொண்டே இருந்தது. உடம்புக்குள்ளிருந்து கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறுவதைப் போலக் கட்டற்ற வியர்வை வழிந்துகொண்டிருந்தது. அப்பா முகத்தில் ஒரு மிதமான புன்னகையோடு கேட்டார்.

”இதுக்கு நாட்டு மருந்து எல்லாம் இருக்குங்களே… இங்கன கம்பம் பக்கத்துலகூட சில நாட்டு மருத்துவங்க இருக்காங்க. வெறும் பச்சிலைச்சாறு பத்தியம்தான்.”

அந்த மனிதரின் முகம் இறுகிவிட்டிருந்ததை பின்புறம் வரை உணர முடிந்தது. அவர் பதிலாக எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு, ”டவுனுக்கு அடிக்கடி வர்றது உண்டோ…”

”எப்பமாச்சுங்க… பரமக்குடில பாட்டில் இல்லைன்னா இங்க வர்றது.”

ஆனால் அப்பா போன தீபாவளியிலிருந்து இங்கேதான் மாதம் ஒருமுறையோ இரண்டு முறையோ வந்துவிட்டுத் திரும்புவார். எனக்கு நன்றாகத் தெரியும். மிச்சச் சில்லறைக் காசுகளோடு பஸ் டிக்கெட்டும் வீட்டு டப்பாவில் கிடக்கும்.

”ம், கலாவோட அப்பாவுக்கு உங்க அம்மா கூடப்பொறந்தவங்க…இல்ல?”

”ஆமாங்க, மாமா பொண்ணு. அப்பவே நல்லாப் படிக்கும். கலெக்டர் கையாலெல்லாம் அவார்ட் வாங்கிருக்கு. எப்பயாச்சும் நல்லது கெட்டதுக்கு மட்டும்தான் வரும். படிக்குறதுக்காகவே மாமா ஹாஸ்டல்ல போட்ருந்தாரு…”

எங்களைத் தெப்பக்குளத்தருகே இறக்கிவிட்டுக் கார் போய்விட்டது. அப்பா சிறிது நேரம் யோசனையாகப் புகைக்கு நடுவே மறைகின்ற அதன் முதுகுப் பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார். உதட்டில் ஒருமாதிரி கடுகடுப்பான சிரிப்பு சிறிதுநேரம் தங்கி மறைந்தது. இரண்டு கையிலும் அந்தப் பெண் கொடுத்த துணிகள் அடங்கிய பையைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

மதியநேரத் தெப்பக்குளத்து நீரின்மீது ஏறுவானம் கவிழ்ந்திருக்க, அப்பாவும் நானும் எதற்கென்றே தெரியாமல் அந்த மதிய வேளையில் தனியாக நின்றுகொண்டிருந்தோம். அப்பா எதையோ எதிர்நோக்கி நிற்பவராகத்தான் இருந்தார். சிறிது நேரம் சென்ற பின் ஒவ்வொரு ரிக்‌ஷாவாக வர ஆரம்பித்தன. அனைத்தும் உடைந்த அப்பளம் போலக் கூரை தொய்ந்த உடலோடு கழுதைக்காலைப் போல அகட்டிய வடிவில் ஒழுங்கற்று சாலையில் உருண்டபடி வந்தன. அனைத்தின் கிழிந்த முதுகுப்பகுதியிலும் தவறாது ஒரு எம்ஜியார் படம், சிவாஜி படம், ஒன்றில் ஜெய்சங்கர் படம்கூட இருந்தது. அப்பா உற்சாகமாகிக்கொண்டிருந்தார். ரிக்‌ஷாக்காரர்களில் ஒருவனை நோக்கிக் கையசைத்தார்.

”ஸ்டீபா… இன்னிக்கு வண்டி இருக்கா?”

அந்த ரிக்‌ஷாக்கார மனிதனுக்குச் சட்டென அடையாளம் பிடிபடவில்லை. அப்பாவின் உற்சாகமான கையசைப்பிற்குப் பதில் சிரிப்புகூட எழுப்பாமல் அருகே வந்தார். கண்ணைச் சுருக்கியபடி கிட்டே வந்தவர், “ஏலே…காசி, கரெக்ட்டா நூல் பிடிச்சு வந்திருக்கியே… பரவாயில்லை. இன்னிக்கு வண்டி இருக்குன்னு ஏட்டு சொன்னாப்ல. யாரு இது மைனரு…மகனா?”

ஸ்டீஃபனின் வாய் விளிம்புகளில் வெளுத்த புண்கள் இருந்தன. அப்பா சிரித்தபடி தலையாட்டிக்கொண்டார்.

நடனநாயகி கோவில் முற்றத்தில் இருந்த பெரிய வேப்பமர நிழலில் அந்த ரிக்‌ஷாக்காரர்களோடு நாங்களும் அமர்ந்திருந்தோம். ஓலைத் தொப்பி போட்ட வெள்ளைக்காரர்கள் எங்களைக் கடக்கும்போது தவறாமல் புகைப்படம் எடுத்துச் சென்றனர். நிறைந்த தெப்பக்குளத்து நீரின்மீது மேகங்கள் உடைந்தபடி இருக்கின்ற சித்திரத்தை நான் பார்த்தவாறு இருந்தேன். அங்கே குழுமிய பல ரிக்‌ஷாக்காரர்களுக்கும் அப்பாவை நன்கு தெரிந்திருந்தது. தன்னிச்சையாக அவர்கள் நீட்டிய பீடியை மறுதலித்தவாறு அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார். வந்திருந்த ரிக்‌ஷாக்காரர்களில் ஒருவர் பாதி தின்ற பன்னை என்னிடம் நீட்டினார். நான் அப்பாவைப் பார்த்தேன். அவர் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்தார்.

”எடுத்துக்கோ” என்றார் அந்த ரிக்‌ஷாக்காரர். நான் வெறுமனே கையில் வாங்கி வைத்துக்கொண்டு அப்பா பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த வயதான போலீஸ்காரர் டிவிஎஸ்ஸில் வந்து இறங்கும்போது கூட்டமே பரபரப்பாகிவிட்டது. அவர் வண்டியைப் பூட்டியபடி திரும்பிய பக்கத்திலிருந்து எழுந்த முகங்கள் எல்லாம் அவருக்கு வணக்கம் வைத்தன. வண்டிக்குள் வைத்திருந்த காகிதக் கற்றைகளைக் கையில் எடுத்தவாறு கூட்டத்தை நோட்டம்விட்டார். எனக்குப் பன் தந்த ரிக்‌ஷாக்காரன் கையில் ஒரு பழைய துணியோடு அவரது டிவிஎஸ்ஸின் முன்னாள் அமர்ந்து அதன் உடலைத் துடைக்க ஆரம்பித்தான். போலீஸ்காரர் தலையாட்டியபடி அங்கிருந்து தெப்பக்குளத்துச் சுவரில் அமர்ந்துகொண்டு, ”மொத்தமே எட்டு கேஸ்தாண்டா இன்னைக்கு. ஊரே வந்திருக்கீங்க…” எனச் சலித்துக்கொண்டார். அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த ஸ்டீபன் பீடி முனையைத் தரையில் நசுக்கிவிட்டு, உதட்டைத் தாழ்த்திப் புகையை வெளியேற்றியவாறு போலீஸ்காரர் அருகில் சென்றார்.

”ஐயா, இன்னிக்கு என் கோட்டாவை காசிக்குக் குடுத்துருங்க. மவனோட வந்து நிக்குறான்…”

அந்தப் போலீஸ்காரர் கேட்டதாகவே தெரியவில்லை. குனிந்தவாறு காகிதக் கட்டுகளைச் சீராக அடுக்கியபடி, ”பெரிய சர்க்கார் உத்தியோகம்… இவர் கோட்டாவை இவருக்குப் பட்டா எழுதித் தராரு… உக்கார்றா லூசுக்கூதி…”

ஸ்டீபன் அங்கிருந்து திரும்பிப் பார்த்து, எங்களை நோக்கிச் சிரித்துக்கொண்டார். அப்பாவின் முகத்தில் சிரிப்பும் இல்லாத கோபமும் இல்லாத ஏதோ ஒரு திரை ஆடியது. என்னைப் பார்க்காமலேயே, “பைக்கட்டோட சுவரோரம் போய் உட்காருடா, அப்பா வரேன்” என்றார்.

சுவருக்கருகே தரையில் வரிசையாக வெண்மணல்களைக் குவியல்குவியலாக வெளியே தள்ளியபடி சித்தெறும்புகள் சாரையாகச் சென்றுகொண்டிருந்தன. நான் கொஞ்சம் தள்ளி மரத்தின் மூட்டில் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் கழித்து மிகவும் பழுதாகிப்போன, பார்ப்பதற்குப் பழைய இரும்புக் குவியலைப் போலிருந்த வேன் வந்து நின்றது. அதன் நெற்றியில் ’நடமாடும் நீதிமன்றம்’ என்னும் எழுத்துகள் தேய்ந்திருந்தன.

அப்பாவோடு, மற்ற ரிக்‌ஷாக்காரர்களின் கும்பல் அந்த வேனின் பின்புறக் கதவருகே போய் முண்டி நின்றனர். கூட்டத்திலிருந்த சிலரைப் போலீஸ்காரர்கள் தனியே அழைத்து ஏதோ விவரங்களைக் கமுக்கமான முகபாவனைகளோடு கூறிக்கொண்டிருந்தனர். அப்பாவும் அந்தக் கூட்டத்தில் நின்றார். நான் வசதியாகப் பார்ப்பதற்கு விரும்பிச் சற்றுத் தள்ளி கால் விரல்களைச் சொரிந்தபடி சென்று அமர்ந்தேன்.

வேனின் பின்கதவு திறக்கப்பட்டது. உள்ளே பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியர் அறையில் இருப்பதைப் போல மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டு சிலர் ‘ப’ வடிவத்தில் அமர்ந்திருந்தனர். வேனின் கூரையிலிருந்த கவிந்த வெக்கை அவர்களை நோயாளிகளைப் போலச் சோர்வுறச் செய்திருந்தது. டைப்ரைட்டரைத் தட்டியபடி இருந்த ஒரு பெண்ணும் அதில் இருந்தார். பாதி சாப்பிட்டதோடு அவசரமாக மடித்து சொருகப்பட்ட உணவுப் பொட்டலத்தின் வாழைநுனி அவரது தொடைக்கருகே தெரிந்தது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவர்கள் ஒவ்வொரு பெயராக உரக்கக் கூவி அழைத்தனர்.

”கனகராஜ்…”

கூட்டத்தில் சிறிய சலசலப்பிற்குப் பிறகு ரிக்‌ஷா ஓட்டிகளில் ஒருவனான அல்லா பிச்சை, “ஐயா” என்றபடி மேலே ஏறி நின்றான்.

உள்ளிருந்த வயதான நீதிபதி, “கனகராஜா?” எனக் கேட்டார்.

”ஆமாங்க.”

”ஒன் வே யில வண்டி ஓட்டுனயா?”

”சரிங்க.”

”அது தப்பு, இனி செய்யக்கூடாது… அபராதம்…”

”ஆமாங்க… ஆமாங்க…” அல்லா பிச்சையின் விரல் ரேகை வாங்கப்பட்டது. மீண்டும் ஒரு தடவை கும்பிட்டவாறு அவன் கீழே இறங்கினான்.

”ராவுத்தரே, பைக்ல எத்தனை கியர் இருக்கு தெரியுமா?”

டைப்ரைட்டர் பெண் குனிந்து சிரித்தாள். அல்லா பிச்சை பதிலுக்கு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிச் சிரித்தபடி கூட்டத்தை விலக்கி வெளியே வந்தான்.

அங்கிருந்து நேராக வந்து துண்டால் தரையைக் கூட்டியபடி என் அருகே அமர்ந்துகொண்டான்.

“தமாசா இருக்குல்ல…” என்றவாறு என் தொடைகளில் அடித்தான்.

அடுத்து அப்பாவின் முறை வந்தது. அப்பாவும் அதே போலக் கைகட்டி நின்றார். அவரது பெயர் அதுதானா எனக் கேட்டனர். அவர் தலையசைத்தார். அந்த முன்பின் கேட்டிராத பெயரை அப்பா தனதுதான் என்று ஏற்றுக்கொண்டவுடன் முகத்திலும் உடலிலும் வேறு ஒரு மனிதனாகத் தன்னை மாற்றிக்கொண்டார். அதனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த எனக்குள், சிறிது நேரத்திலேயே, அந்த அந்நிய மனிதனிடம் அப்பா கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து மறைந்துவிட்டதைக் கண்டு திடுக்கிடல் ஏற்பட்டது. மோர் சோற்றை உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்த அப்பாவின் மணிக்கட்டு மயிர்க்கால்களுக்கிடையே, தங்க வளையல்கள் அணிந்த அந்தக் கை வாட்ச்சைச் சரி செய்துவிட்டபோது அப்பாவின் கை வேறொன்றாகத் தெரிந்தது திகுதிகுவென எரிந்தபடி நினைவிலெழுந்தது.

பைகளைக் காலிடுக்கில் வைத்துக்கொண்டு அப்பாவும் நானும் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தோம். காற்று உப்பியெழச் செய்கின்ற பித்தான்கள் கழட்டிய சட்டையோடு அப்பா உறங்கிக்கொண்டிருந்தார். சாயங்காலத்தின் தூர பனைக்கூட்டங்கள் எரிந்து நிற்கின்ற தீக்குச்சிகளென நகர்வதைப் பார்த்தபடி நான் வந்துகொண்டிருந்தேன். அம்மாவையும் தம்பியையும் உடனே பார்க்க வேண்டுமென மனம் தளும்பிக்கொண்டிருக்க, அப்பாவின் பக்கம் திரும்பிப் பார்க்கத் தோன்றாமலே, அவர் இங்கிருந்து மறைந்து போய்விட்டால் எவ்வளவு இதமாயிருக்குமென மனம் நினைத்துக்கொண்டது. மஞ்சூர் குறித்து அன்றெல்லாம் தினமும் பேப்பரில் ஏதேனும் செய்திவரும். காரணம், தினசரி சாயங்காலத்தில் அங்கே ஏதேனும் ஒரு வீட்டின்கூரை தானாகப் பற்றிக்கொள்ளும். மணியண்ணன் சலூனில் வருகின்ற பேப்பரில் அந்த அமானுஷ்ய நிகழ்வைப் பற்றித் தினசரி ஏதேனும் எழுதியிருப்பதை வாசித்துவிட்டு அம்மாவிடம் ஓடிவந்து கூறுவேன். ராமநாதபுரத்தின் வெயிலும் வெக்கையும் வாழைமரத்தைக்கூட எரியச் செய்துவிடுகிற அளவிற்குப் பொருத்தி எடுப்பவை. சாலையில் நிரந்தரமாகவே இரண்டு தீயணைப்பு வண்டிகள் நின்றிருந்தன.

அப்பா எனது நெஞ்சருகே தலையைக்குனிந்து சன்னல் வழியாகப் பார்த்துவிட்டு, “மஞ்சூரா…” என்றார். நான் ஒன்றிரண்டு நரைமுடிகளோடு ஒரு புதரைப் போலப் பொதிந்திருந்த அவரது தலைமுடிகளைப் பார்த்தவாறு இருந்தேன்.

“அதைப் படிச்சியாடா… எவனோ சாணிக்குள்ளார பாஸ்பரஸைப் பொதிஞ்சு வெச்சு கூரைமேல அடிச்சிட்டுப் போயிடுறானாம், அதான் காரணமாம். இவனுக பேய் பூதம்னுகிட்டு ஊரையே அல்லறை சில்லறையாக்கி வெச்சிருக்கானுக…”

எப்போதாவது அப்பா என்னிடம் இப்படி நான் வியந்துகொண்டிருக்கும் விசயங்களின் கருவேலம் முட்களை விலக்கியபடி, புதர்களுக்குள் பொன்னிறமாகப் பூத்து நிற்கும் பூசணிப்பூக்களைக் காட்ட அழைத்துச் செல்கிறவராக இணைந்துகொள்வதுண்டு. நான் அந்தக் குரலின் மீது அப்போதெல்லாம் மிக சந்தோசமாக அச்சம் அகன்றவனாக ஒட்டிக்கொள்வேன். எங்கள் வீடு மிகச்சிறியது. வானத்தில் வெள்ளி இறைந்துகிடப்பதைப் பார்த்தபடி வாசலின் வெற்றுத்தரையில் சாக்கு விரித்துப் படுத்துக்கொண்டிருக்கும்போது அப்பாவின் அந்தக் குரல் ஏதேனும் கதையைச் சொல்லியபடி அல்லது சைக்கிளில் அவர் அலைந்த நிலப்பரப்புகளின் காட்சிகளைச் சொல்லியபடி என்னையும் அதன் முதுகிலேற்றிக் கூட்டிச்செல்லும். அம்மாவும் தம்பியும் எப்போதோ உறங்கியிருப்பார்கள். நானும் அப்பாவின் குரலும் மட்டும் வானத்துக் கருமை நிறக் கடலுக்குள் அப்போது போய்க்கொண்டிருப்போம். ஒரு பெரிய மீனைப்போல அந்த இருளுக்குள் வெளிச்சத்தை உமிழ்ந்தபடி அப்பாவின் குரல் என்னை முதுகிலேற்றிக் கூட்டிச்செல்லும் சில வேளைகளில் அப்படிப் பேசிக்கொண்டே அப்பாவின் குரலும் மெல்ல முழுகத் தொடங்கும். அப்போது எதோ நட்சத்திரத்தின் விளிம்பில் என்னைக் கரையிலேற்றித் தனியனாக விட்டுவிட்டு மறைந்துவிடுகின்ற அந்த மீனை நோக்கி நான் பரிதவிப்புடன் கத்திக்கொண்டே ஓடிவருவேன்.

அப்பா திரும்பவும் சீட்டில் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டார். பிறகு யாரோ ஒருவரின் குரலைப் போல என்னிடம், “ஏண்டா தூங்கலையா… ம்?” என்றார். பிறகு எனது பதிலை எதிர்பாராதவராக, “இன்னிக்குப் போய்வந்த எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்ல வேணாம். புரியுதா? என்றார்.

ஒரு பாறைக்குப் பின்னிருந்து கண்களை மட்டுமே மேலேற்றி நோட்டம்விடுகின்ற ஊர்ந்து செல்லும் ஏதோவொன்றைப் போல எனது முக அசைவை, அப்போது மூடிய இமைகளுக்குள் உருள்கின்ற அவரது கண்கள் பார்த்துக்கொண்டிருப்பதை உள்ளூரக் குளிர்ந்தவனாகப் பார்த்துவிட்டுச் சட்டென ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டேன்.

அந்தச் சேலைகளை யானைக்கல் பாலத்திற்குக் கீழே பாதிவிலைக்கு வாங்கி வந்ததாக அப்பா சொன்னபோது அம்மா அதைப் பற்றிப் பெரிதாக யோசிக்காதவளாக அதன் நிறங்கள் பற்றியும் துணியின் மென்மை பற்றியும் பேசிக்கொண்டிருந்தாள். அப்பா அவளது கவனத்தை வேறு ஏதேதோ கேட்டு மாற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி, நான் தம்பியைக் கூட்டிக்கொண்டு பொட்டலுக்கு விளையாடுவதாகச் சொல்லி வெளியே வந்தேன்.

எனக்கு நன்றாகத் தெரியும். அதன்பிறகு வந்த நாட்களில் அம்மா இரண்டுமுறை மட்டுமே அந்தச் சேலைகளைக் கட்டினாள். ஏனெனில் எதற்கு அழுதோம் என்பதே மறந்துபோகாத இரண்டு அழுகைகள் என்னிடமிருந்து வந்த தினங்கள் அவை.

பாதித் துவைத்து மீதம் வைக்கப்பட்டிருந்த ஈரத்துணிகளை உழப்பிக்கொண்டு தம்பி வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். அன்று பள்ளி சீக்கிரம் விட்டிருந்தார்கள். நான் தம்பியருகே நின்று சோப்புக் கரைசலை நன்றாகக் கிண்டி அதில் மேலெழுந்துவந்த நுரைக்குமிழிகளை அவன்முன் ஊதிப் பறக்க விட்டேன். தம்பி கைதட்டுவதைப் போல ஒவ்வொரு குமிழாக உடைத்துக்கொள்ள ஆரம்பித்தான். வீட்டினுள் அப்பா வழக்கம்போல அந்த மதியத்தில் நெஞ்செங்கும் பவுடர் போட்டுக்கொண்டு புத்தகத்தால் விசிறிக்கொண்டபடி படுத்திருந்தார். அம்மா அந்த மதியத்தில் குளித்திருப்பாள் போல. மர பீரோவின் ஒருபக்கக் கதவால் தன்னை மறைத்துக்கொண்டே புடவைகளைத் தேடியபடி, “என்னடா அதுக்குள்ள…” என்றாள்.

மீன்களைப் போலப் பீரோ வரை நடந்துசென்றிருந்த ஈரப்பாதத் தடங்களைப் பார்த்தவனாக நான் பதில் பேசாமல் பையை மூலையில் போட்டேன். அந்த மூலையில் எப்போதும் பழந்துணிகளை அம்மா போட்டு வைப்பாள். அதில் அவள் அப்போதுதான் குளிப்பதற்கு முன்பாகப் போட்டிருந்த சேலை சுருண்டு கிடந்தது. அங்கே என் அம்மாவின் அழுக்கு உடைகள் எப்போதுமே பளீரிடாத வண்ணங்களோடு, ஈரவாடையோடு தூக்கத்தினூடே உருண்டுசென்று நான் புதைந்துகொள்ளும்போது அவளது கையைப் போல வெம்மையுடன் என்னைச் சூழ்ந்துகொள்ளும். அந்த இடத்தில் இந்தத் தேன்நிறச் சேலை எனக்கு மட்டுமே தெரிந்த மூச்சுத்திணறச் செய்கின்ற ரகசிய உடலாக நெளிந்துகிடந்தது.

“மழைக்கோசரம் லீவு விட்டாங்களாடா?” அம்மாவின் கை ஜாக்கெட்டில் தன்னை நுழைத்துக்கொண்டு மரபீரோ கதவிற்கு வெளியே நீண்டுவர, வாயில் துணியின் முனையைக் கவ்வியவாறு, பதில்கூறாமல் மூலையை வெறித்திருக்கும் என்னை எட்டிப் பார்த்தாள்.

”காது கேட்கலியாடா…”

அப்பா வீசிக்கொண்டிருப்பதை நிறுத்தாமல் கண்களை மேலேற்றி என்னைப் பார்க்க, எனக்குள் பதற்றமும் அழுகையும் கூடிவந்தன. அம்மா சட்டென எட்டிவந்து என் தலையில் ஒரு அடி வைத்தாள். அது சிறிய அடிதான். ஆனால் நடுங்கிக்கொண்டிருக்கும் என் கால்களை வெட்டிவிட்டதைப் போல நான் மேலும் அந்த மூச்சுத்திணறலுக்குள் போய் விழுந்தேன். பிறகு, உச்சமான குரலில் ஓலமிட்டவனாக வாசலுக்கு ஓடினேன். தம்பி விரலில் நீர்க்குமிழி ஒட்டியிருக்க என்னைப் பார்த்தான். எனது அலறலில் அவனது சிரிப்பு வடிந்துகொண்டிருந்தது.

காரணம் ஏதுமில்லாமல் அவனை எட்டி உதைத்தேன். சகதியில் தனது குட்டி உடலோடு தெறித்து விழுந்த அவன் உடைந்து உடைந்து வீறிட ஆரம்பித்தான். அழுதுகொண்டிருக்கும் எனது உடலுக்குப் பின்பாக அப்பாவின் நிழல் ஒரு பூதத்தைப்போல ஆவேசமாகப் பெருகிவந்து என்னை நிறைத்தது. அவரது முதல் அறை என்மீது பதிந்தபோது நான் மயங்கிவிழுந்தேன்.

அதன்பிறகு வந்த நாட்களில் அம்மா எப்போதும்போல மருதாணி வைத்த குளிர்ந்த விரல்களால் எனது பூனைமீசை முடிகளைக் கிள்ளி மகிழ்கிறளாகவே இருந்தாள். நான் அவளைப் பின்னால் அமரவைத்து சைக்கிள்விடப் பழகியிருந்தேன். அதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி இருந்தது. உந்தி அழுந்திச் செல்கின்ற எனது சிறிய தோளைப் பற்றிக்கொண்டு அடக்கமாட்டாத சிரிப்புச் சப்தங்களோடு வருவாள். அன்றும் நாங்கள் குளிக்கச் சென்றிருந்தோம். இருட்டும்வரை ஊருணியில் ஆட்டம் போட்டுவிட்டு, இரண்டு சைக்கிள்களில் அப்பாவும் நானும் வந்துகொண்டிருந்தோம். அம்மா என் பின்னே அமர்ந்திருந்தாள். விளையாட்டாகத் தம்பியைச் சிறிய வாளிக்குள் அமரவைத்து அப்பா கேரியரில் வைத்து வந்துகொண்டிருந்தார். கள்ளிகள் நிமிர்ந்து நிற்கின்ற வறண்ட தடங்களில் எங்களது சிரிப்புகள் காற்றில் சிதறி அந்த நிலத்தின்மீது பூக்களைப்போலப் பரவி விழுந்தன. பனைமரங்கள் வரிசையாக நிற்கின்ற மேட்டினருகே, நான் எக்கி அழுத்தி மேலேறி வந்து நின்றுகொண்டேன். அங்கிருந்து சரசரவென உள்வாங்குகிற இறக்கத்தின் கீழே வீடுகள் கிண்ணத்தில் மிதப்பதைப் போலத் தெரிந்தன. அப்பா என்பின்னே வந்தவர் எதற்கோ தாமதித்து, பின் பார்வையில் நிழலசைவாகத் தெளிந்து வர ஆரம்பித்தார். பின்னால் வாளிக்குள்ளிருந்து தம்பி உற்சாகக் குரலெழுப்புவது அசைவுகளாகப் பட்டது.

அம்மா, “இறக்கம்டா… கவனமா ஓட்டு” என்றாள்.

ஈரம் உலர்ந்துவிட்ட அவளது சிகைகள் காற்றில் விரல்களைப்போல அவள் முகத்தில் தவழ்ந்துகொண்டிருந்தன. இருளுக்குள் நீந்திவருகிறவராக அப்பா மேட்டிற்கு வந்து காலூன்றி நின்றார். பிறகு மூச்சிரைத்தவராக, “ஈரத்துணியைக் கீழே போட்டுட்டான் சின்னவன். இருட்டுல தேடி எடுத்தாந்தேன்…” என்றார். அவரது தோளில் முறுக்கிய ஈரச்சேலை மண் ஒட்டிக்கிடந்தது. எனக்கு அந்தச் சேலையைத் தெரியும். அம்மா என் பின்னால் அமர்ந்தபடியே, எட்டி அதன்மீதிருந்த மண்ணைத் தட்டிவிட முயன்றாள்.

“பூராம் மண்ணா இருக்கு… வீட்ல போயி ஒருவாட்டி அலசிப் போட்டுக்கலாம்…”

அப்பாவின் முகத்தைப் பாராமலே, அந்த இருளுக்குள் மெல்லிய சாம்பல் சிரிப்போடு அவள் அதனைக் கூறுவதை நான் உள்ளுக்குள் பார்த்தேன். அப்பா உள்ளூரப் பொங்குகிற பிரியத்தை அந்த இருளில் மறைக்க மறந்தவராக, நான் பார்த்திராத ஒரு சிரிப்போடு அதைத் தோள் மாற்றிப் போட்டுக்கொண்டார். ஏதுமறியாத அம்மாவின் சிரிப்பு தெருநாய்க்குட்டியின் தனிமையோடு அவரைச் சுற்றிக்கொண்டிருந்தது. சத்தமே இல்லாத அழுகை என்னிடம் ஊறி எழுவதை அப்போதுதான் நான் முதன்முதலாகக் கண்டேன்.

அம்மாவின் சிரிப்பை அப்படித் தனியாக விடமுடியாதவனாக, அப்பா எதிர்பார்க்கும் முன்பாகவே இறக்கத்தில் வெகுவேகமாகச் சைக்கிளை மிதித்து இறக்கினேன். தூரத்து இருளுக்குள் கிடந்த மஞ்சூரின் ஏதோ ஒரு வீட்டுக் கூரையில் அன்றைய நெருப்பு உக்கிரமாகப் பரவி ஏறிக்கொண்டிருப்பதை எனது தோளை உலுக்கிக் காட்டினாள் அம்மா. காரிருள் வானத்தின்மீது நெருப்பின் வெளிச்சம் ஒரு படலம்போல மிதந்துகொண்டிருந்தது. அம்மா அதை அப்பாவிடமும் கூற முயன்று திரும்பியபோது, பனைமர மேட்டில் இன்னமும் தன்னை மறந்தவராக தனது தோளில் கிடக்கின்ற ஈரஞ்சொட்டும் அந்தப் புடவையிலிருந்த மணலைக் குறுஞ்சிரிப்போடு நீவி அவர் உதறிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

1 comment

இரா.விஜயன் September 29, 2023 - 4:21 am

அப்பாவின் ரகசியத்தை அரைகுறையாகத் தெரிந்து கொண்ட பதின்ம வயதை எட்டிய பையனின் மனப் போராட்டங்களை அப்பட்டமான மொழியில் வடித்துத் தந்திருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

Comments are closed.