இருதயம்: மனம் சார்ந்த நம்பிக்கை பற்றி – ஷிஞ்சின் நோ மீ

0 comment

மகத்தான பாதை கடினமானதல்ல

தன் விருப்பற்ற எவர்க்கும். 

ஏக்கம் வெறுப்பு இரண்டும் இல்லாமல் போனால்

எவ்வொன்றும் தெளிவோடும் வேடமற்றும் இருக்கும்.

ஆகச்சிறிய பற்றைப் பிடித்துக்கொண்டால்கூட

சுவர்க்கமும் பூமியும் எல்லையற்றுப் பிரிந்து போகும்.

மெய்மையைக் காண நீங்கள் விரும்பினால்

எந்தக் கருத்தையும் ஏற்றோ மறுத்தோ பற்றிக்கொள்ளாதீர்கள்

ஒருவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்கிற போராட்டம்

மனதின் ஒருவித நோயாகும்.

ஒன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாதபோது

மனதின் அடிப்படையான அமைதி குலைவுற்றுப் போகும்.

அப்பாதையோ பரந்த வெளியாய்ப் பூரணப்பட்டு இருக்கிறது

அதில் எதுவும் குறைவுற்றும் இல்லை, எதுவும் மிகுந்தும் இல்லை.

நிஜத்தில், ஒன்றை ஏற்கும் அல்லது மறுக்கும் நமது தேர்வால்தான்

காரியங்களின் உண்மையான இயல்பை நாம் காண்பதில்லை.

வெளிக் காரியங்களிலோ அல்லது உள்ளே உணரப்படும்

சூன்யத்திலிலும் கட்டுண்டு போகாமல் வாழுங்கள்.

கையெடுக்கும் முயற்சிகளின்போது அமைதியைக் கொண்டிருங்கள்.

நிகழ்வின் ஓர்மையில் (Oneness),

தவறான கண்ணோட்டங்கள் தாமாகவே மறைந்துபோகும்.

தன்னியல்பில் நிகழட்டும் என்பதன் பொருட்டு

காரியத்தைச் செய்யக் கூடாமல் விட்டுவிட்டால்,

உங்களின் அப்படிப்பட்ட முயற்சியே செயலால் நிரம்பிப்போகிறது.

இரு நிலைகளில் ஏதாவதொன்றைப் பற்றி இருக்கும்வரை

உங்களால் ஓர்மையைப்பற்றி ஒருபோதும் அறியமுடியாது.

தனித்தொரு பாதையில் வசிக்காத எவரும்

செயலாலும், செயற்துறப்பாலும், வலியுறுத்துவதாலும், மறுப்பதாலும்

தோற்றுப் போகின்றார்.

காரியங்களின் நிதர்சனத்தை மறுப்பதென்பது

அவற்றின் உண்மையை மறுப்பதாகும்;

காரியங்களின் சூன்யத்தன்மையை வலியுறுத்துவது என்பதும்

அவற்றின் உண்மையைத் தவறவிடுவதாகும்.

அதைப்பற்றி எவ்வளவு அதிகமாகப் பேசுகிறோமோ

உண்மையிலிருந்து மேலும் அவ்வளவு விலகிச் செல்கிறோம்.

வாதிடுவதையும் தருக்கத்தையும் நிறுத்துங்கள்.

அப்போது உங்களால் புரிந்துகொள்ள முடியாததென்று ஏதும் இருக்காது.

வேர்ப்பகுதிக்குத் திரும்புவது என்பது அர்த்தத்தைக் கண்டடைவதாகும்.

ஆனால் காட்சிப்படுவனவற்றைத் தொடர்வது மூலத்தைத் தவறவிடுவதாகும்.

உள்ளொளி நிகழும் தறுவாய் என்பது

காட்சிப்படுவனவற்றையும் சூன்யத்தன்மையையும் தாண்டிச் செல்வதாகும்.

மாற்றங்கள் நிகழ்வதாய்த் தோன்றும் சூன்யமான இவ்வுலகில்

நிஜம் என்று நாம் சொல்வது வெறும் அறியாமையாலேயே ஆகும்.

உண்மைக்கு வக்காலத்து வாங்காதீர்கள்,

கருத்துகளைப் பற்றிக்கொள்வதை நிறுத்துங்கள்.

இருமை நிலைகளில் ஒட்டிக் கொள்ளாதிருங்கள்.

கவனமுடன் அத்தகு பிரயத்தனங்களைத் தவிருங்கள்.

இதுவென்றும் அதுவென்றும், சரியென்றும் சரியில்லை என்றும்

பற்றிக் கொண்டிருந்தால், குழப்பத்தில் 

மனத்தின் சாராம்சத்தை இழக்க நேரிடும்.

எல்லா இருமைகளுமே மனத்திலிருந்து தோன்றினாலும்

ஓர்மை என்ற அம்சத்தைக்கூடப் பற்றிக்கொள்ளாதீர்கள்.

சலனமற்ற பாதையில் மனம் நிலைத்திருக்கும் வேளையில்

உலகின் எவ்வொன்றும் நம்மைக் காயப்படுத்த முடியாது.

ஒரு காரியம் இனி ஒருபோதும் நம்மைக் காயப்படுத்த முடியாது என்றால்

அது தனது பழைய வழிகளில் அமைந்திருக்கவில்லை என்றாகிறது.

இருமை எண்ணங்கள் எழவில்லை என்றால்

பழைய மனம் உயிர்ப்புடன் இல்லை என்றாகிறது.

எண்ணம் சார்ந்த பற்றுப்பொருட்கள் அழிந்துபோனால்

எண்ணும் தனிநபரும் அழிவுற்றுப் போகிறார்;

மனம் அழிவுறும் போதில் பற்றுப்பொருளும் அழிவுறுகிறது.

காண்பவை பற்றுப்பொருட்களாய் இருப்பதற்கு 

தனி நபரேதான் காரணம்;

மனம் என்ற ஒன்று இருப்பதற்கு பற்றுப்பொருட்களே காரணம்.

இவ்விரண்டின் சார்புநிலையையும், சூன்யத்தின் ஒற்றுமை எனும்

அடிப்படை நிதர்சனத்தையும் புரிந்துகொள்ளுங்கள்.

அச்சூன்யத் தன்மையில் இரண்டும் பிரித்தறிய இயலாதிருக்கிறது.

அவ்வொவ்வொன்றும் முழு உலகையும் தம்முள் கொண்டுள்ளது.

நுண்மையானது, நயமற்றது என்று எதிர்மறையில் 

ஒட்டிக் கொள்ளாதிருந்தால்

தனிப்பட்ட கருத்துக்கோ முன்முடிவுக்கோ விழைவுற மாட்டீர்கள்.

மாபாதையில் பயணிப்பதென்பது

கடினமானதுமல்ல எளிதுமல்ல;

எனினும் வரம்புக்குட்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்போர்

அச்சத்துடனும் தீர்மானமற்றும் இருப்பர் –

எவ்வளவு அதிகம் அவசரப்படுகிறார்களோ அவ்வளவு மெதுவாக செல்வர் –

பற்றுதலுக்கு முடிவென்பதே இல்லை:

உள்ளொளி அடைதல் எனும் கருத்தில் பற்று கொண்டிருந்தாலும் வழி தவறிவிடுவர்.

காரியங்களை அவற்றின் வழியில் விட்டுவிடுங்கள்;

அப்போது அங்கே வருவது என்றும் போவது என்றும் எதுவுமற்று விடும்.

காரியங்களின் தன்மைக்கு வழிவிடுங்கள்,

அப்போது நீங்கள் சலனமற்று சுதந்திரமாக நடப்பீர்கள்.

எண்ணம் கட்டுண்டு இருந்தால் உண்மையும் மறைபட்டிருக்கும்,

ஏனெனில் அங்கே எல்லாமும் தெளிவற்றும் கலங்கியும் காணப்படும்,

எதைப்பற்றியும் தீர்ப்பு கூறும் சுமைமிகு பண்பு

கலவரத்தையும் அயர்வையுமே கூட்டிவரும்.

இருமை கொண்ட பிரித்துணர்வால் பெறப்படும் பயன் யாது?

தனித்தொரு பாதையில் பயணிக்க விரும்பினால்

புலன்களாலும் கருத்துகளாலும் காணும் இவ்வுலகைக் கூட நீங்கள் வெறுக்காதீர்கள்.

உண்மையில், அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதென்பது

உண்மையான உள்ளொளி அடைதலுக்கு நிகரானது.

புத்திசாலிகள் குறிக்கோள்களால் உந்தப்படாதவர்கள்; 

அறிவிலிகளோ தமக்குள் பதறுகின்றனர்.

இங்கே ஒரேயொரு தர்மமே உள்ளது; நிறைய அல்ல;

அறியாமையில் உழல்பவரின் பற்றுத்தேவைக்கெனவே 

பற்றுப்பொருட்கள் எழுகின்றன.

பிரித்தறியும் சாதாரண மனத்தால் மாமனத்தைத் தேடுவது

எல்லா தவறுகளிலும் பெருந்தவறாகும்.

மாயையிலிருந்தே ஓய்வும் சலனமும் உருப்பெறுகின்றன;

உள்ளொளியில் விருப்பென்றும் வெறுப்பென்றும் பற்றுகளில்லை.

எல்லா இருமைகளும் அறியாமையின் வார்ப்புகளே.

அவை கனவைப் போன்றவை அல்லது காற்றில் பூக்களைப் போன்றவை:

அறிவிலிகள் அவற்றைப் பற்றிக்கொள்ள விழைகின்றனர்.

லாபம், இழப்பு, சரி, சரியல்ல போன்ற 

மாய எண்ணங்களின் பற்றுதல்களுக்கு அப்பால் செல்லுங்கள்.

கண்கள் ஒருபோதும் தூங்கவில்லை என்றால்

எல்லாக் கனவுகளும் இயல்பாக நின்றுவிடும்.

மனம் பிரித்துப் பார்க்கவில்லை என்றால்

பத்தாயிரம் விஷயங்களும் அவ்வவ்வாறே இருக்கும், 

ஒரே சாராம்சத்துடன்.

இந்த ஒரே சாராம்சம் எனும் ரகசியம் புரியவேண்டுமாயின்

எல்லாக் கட்டுகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.

அனைத்தும் ஒரே சமத்துவத்துடன் பார்க்கப்படின்

காலம் தாண்டிய சுய-சாராம்சம் அடையப்படும்.

காரண காரியமற்ற அந்நிலையில்

எந்த ஒப்பாய்வும் மதிப்பீடும் சாத்தியமில்லை.

இயக்கத்தை நிலையானதென்றும்

நிலையானதை இயக்கமென்றும் கருதினால், பின்னர்

இயக்கம் நிலைப்பு எனும் இருமை மறைந்துபோகும்.

அத்தகு இருமைத் தன்மை நீங்கினால்,

ஒர்மை என்பதே கூட அங்கே இருக்க முடியாது.

இந்த இறுதியான முடிவில்

எந்த ஒரு விதிமுறையும் விவரிப்பும் அடங்காது.

‘இவ்வாறானது’ (Suchness) எனும் பண்பைக் கொண்ட இவ்வுலகில்

சுயமும் இல்லை, சுயமற்று வேறெதுவும் இல்லை.

இந்நிதர்சனத்தோடான ஒத்திசைவிற்கு 

நேரடியான தொடர்பேற்பட வேண்டுமாயின், 

சந்தேகங்கள் எழுகையில் 

வெறுமனே, இரண்டல்ல; என்று கூறுங்கள்.

இந்த ‘இரண்டல்ல’ என்பதில் எதுவும் பிரிதுற்று இல்லை, 

எதுவும் ஒதுக்கப்படவுமில்லை.

எங்கு, எப்போது என்பதெல்லாம் தவிர்த்து 

கண்டுணரும் உள்ளொளி என்பது

உண்மைக்குள் நுழைவதென்பதாகும்.

காலம், வெளி கடந்த இவ்வுண்மை விரிவதும் சுருங்குவதுமில்லை.

அதில் ஒரேயொரு எண்ணம் என்பது பத்தாயிரம் வருடங்களாகும்.

சூன்யம் இங்கே, சூன்யம் அங்கே,

ஆனால், முடிவற்ற பிரபஞ்சம் உங்கள் கண்களின் முன்னே 

எப்போதும் நின்றிருக்கும்.

முடிவற்று பெரிதாகவும், முடிவற்று சிறிதாகவும், 

வேற்றுமைகளற்று இருக்கும்.

ஏனெனில், எல்லா விவரணைகளும் அழிவுறுவன, 

எந்த எல்லைக்கோடுகளும் கட்புலனாவதில்லை.

இருப்பும் இருப்பற்றதும் அப்படியே தான்: 

இருக்கிறது, இருக்கவில்லை என்பதும்.

சந்தேகத்தாலும் தருக்கத்தாலும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

அவற்றால் யாதொரு பயனுமில்லை.

ஒரு காரியம் என்னவெனில்,

அனைத்தும், பற்றுதலின்றி 

தமக்குள் ஒன்றோடொன்று கலந்து இயங்குகின்றன.

இதைக் கண்டுணர்ந்து வாழ்வதென்பது

பூரணப்பண்புக்கு அப்பாற்பட்டு 

யாதொரு பதற்றமும் அற்று இருப்பதாகும்.

அப்படியான விசுவாசத்தில் வாழ்வதே 

இருமையற்ற பாதையைத் தருவிக்கும்.

ஏனெனில் இருமையற்றது என்பதே 

நம்பிக்கை எனும் மாமனத்தின் சாரம்.

சொற்கள்!

இருமைகொண்ட மொழியைத் தாண்டியதே அப்பாதை,

அதில் நேற்றென்றும் இல்லை.

நாளையென்றும் இல்லை.

இன்றென்றும் இல்லை.

*

மூன்றாம் சீன ஜென் குலபதி ஜியான்சி செங்ஸ்டனின் கைப்பிரதியிலிருந்து, ஷிஞ்சின் நோ மீ எனும் ஜென் குருவால் Royal Asiatic Society Archives-யிலிருந்து பெற்று மொழிபெயர்க்கப்பட்டது.