மங்கோலியா. ஒரு காலத்தில் முக்கால்வாசி ஆசியாவைத் தன் ஆளுகையை ஏற்கவைத்திருந்த பழம் பெருமை கொண்ட நாடு. இன்று சுற்றிலும் தலையெடுத்துவிட்ட நாடுகளுக்கிடையே கைகால்கள் விரித்து விசால வெளியென தேமேனென்று அதோ அங்கே மேலே கிடக்கிறது. மங்கோலியாவை எவரும் இன்று பொருட்படுத்துவதில்லை. வர்த்தகம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. விடுமுறையில் சென்று பார்த்துவிட்டு வருவதில்லை. விவேக்கின் தந்தை மனிதருள் மங்கோலியா.
இந்திய விடுதலைக்கு முன்பே பிறந்தவர். இன்றைய இஸ்ரேலைவிட வயதானவர். பாகிஸ்தானைவிடப் பாங்கானவர். நேபாளத்தைவிட நேசமானவர். மாண்டிநீக்ரோ நாட்டைவிட வயதான பேரன் பேத்திகளைக் கண்டவர். உகாண்டா நாடு சர்வாதிகார இடிஅமினுக்கு உழைத்ததைவிட தன் சுங்க இலாகா மேலதிகாரிக்கு உக்கிரமாக உழைத்தவர். இரண்டு மாதங்களாகச் சிறுகச் சிறுக இயக்கங்கள் குறைந்து இதோ இந்தப் படுக்கையில் வாய் பிளந்து கண்கள் செருகி இன்றைய கிரேக்கத்தைப் போலக் கிடக்கிறார்.
இறந்துவிட்டார் என்று இன்னமும் சொல்வதற்கில்லை.
மூன்றரை மணி அலார்ம் அவருக்கு அருகே தனிக்கட்டிலில் உறங்கியிருந்த விவேக்கைத் தெருநாயும் தூங்கியிருந்த பிரும்ம முகூர்த்தத்தில் எழுப்பிவிட்டது.
கொட்டாவியை அடக்கப் பற்களைக் கடித்தவாறு மாத்திரை வில்லைகளை உறைகளிலிருந்து பிய்த்துச் சிறுதட்டில் பொருந்தா நிறங்களில் கூட்டிவைத்து பிளாஸ்கிலிருந்து வெந்நீரைக் கோப்பையில் ஊற்றிப் படுக்கையருகே மேசை மீது ஆறவைத்தான்.
“அப்பா… அப்பா…” அசைவற்றிருந்தவரை உடலில் எங்கே பிடித்து உலுக்கி எழுப்புவது எனப் புரியாமல் திகைத்தான். விழித்தாலும் எழுந்து மாத்திரைகளை விழுங்கும் தெம்பு உள்ளதா… அன்றிரவே அந்த வேலையை அவன் செய்கிறான். வாசுகி வற்புறுத்தி அவனைப் பெற்றோர் வீட்டிலேயே தங்கவைத்துவிட்டு வந்தனாவை கவனிக்க அவர்கள் அடுக்கக இல்லம் போய்விட்டாள். சென்ற ஒரு மாதமாக அவன் அம்மாவும் வாசுகியுமே அவரை கவனித்து வந்திருந்தனர், மருத்துவச் செவிலிகள் உதவியோடு.
படுக்கையில் கிடந்தவரின் தோளை உலுக்க முனைந்து உடைந்துவிடுமோ எனக் கன்னத்தில் தட்டினான். அறையின் மின்விளக்கை ஏற்றினான். கண்கள் எரிந்தன. அருகே கதவு திறந்து கழிப்பறைக் கைத்தொட்டியில் முகமலம்பினான். குளோரின்.
அசைவற்றிருந்தார். நலிந்த உடல் சதையற்று இருபரிமாணத் தோற்றம் காட்டியது. சுற்றியிருந்த காற்று அழுத்துவதிலேயே வைரமாகி விடுவார் போல.
இதே அறையில் இதே கட்டிலில் அவன் கிடந்திருக்கிறான் (மெத்தையும் உறையும் வேறு). சோம்பலாக. அப்பா அவனை இதே மூன்றரை மணிக்கு எழுப்பியிருக்கிறார். வாரத்தில் ஐந்து நாட்கள். இரண்டு ஆண்டுகள். தமிழர்களுக்கு என்றுமே அந்நியமான மத்திய அரசாங்க உயர்கல்வி நிறுவனத்தின் தேர்வில் தேறுவதற்கான ‘கோச்சிங் கிளாஸ்’ போவதற்கு.
இருபத்தியைந்து ஆண்டுகள் முன்னால் அவன் பொய்த்தூக்கத்தில் சோம்பிக்கிடக்க பத்தாங்கிளாஸ் பரிசான வட்டமுக சில்வர் முலாம் பச்சை ‘ரேடியம்’ முள் கடிகாரம் பத்து நிமிடங்கள் முன்னதாகவே அலார்ம் அடித்ததும் அவன் அப்பா தலையை வருடிக் காதில் ‘லீவு போட்டுர்ரியா… நேக்குமே தூக்கமாருக்கு…’ என்று குசுகுசுத்ததும் விலுக்கென எழுந்து கொண்டிருக்கிறான். லீவு போட்டால் என்றில்லை இன்னும் ஐந்து நிமிடங்களுள் எழுந்திருக்கவில்லை என்றால் அம்மா உள்ளே வந்து தொடையில் கிள்ளிச் சதையை எடுத்துவிடுவாள். அப்பாவின் தொடையை… ‘எழுப்ப வக்கில்லை காதுல என்ன ரகசியத்ரையமாக்கும் ஒதிண்டிருக்கேள்…’
இலவசமாய் உடன் கிடைக்கும் சின்னச் சின்ன பஞ்சவர்ண மிருக பொம்மைகளுக்காக பினாகா பற்பசையையே வீட்டில் வாங்கச்சொல்லி அதில் பல் தேய்த்துக்கொண்டே அந்தப் பற்பசை மட்டும் எவ்வாறு பிதுக்குகையில் ஊதா உடலோரத்தில் இரண்டு கருநீல வரிகளுடன் வெளிவருகிறது! அவ்வாறே சுருட்டி உள்ளே அமுக்கியிருப்பார்களா அல்லது கோடுகள் டியூபின் வாய் விளிம்பில் தீற்றியுள்ள கறைகளா அவை பேஸ்ட் தீரும் முன்னரே தீர்ந்துவிடாதா… சோம்பல் எண்ணங்களையும் நுரையுடன் கொப்பளித்துவிட்டு ஈரக்கைகளால் தலைமுடியைக் கோதாமல் பரட்டையாகவே விட்டு ஈரக்கால்களை அம்மாவின் வசவுகளிடம் மறைத்து நொடித்த கயிற்று மோடாவில் மடித்தமர்ந்து அவள் கொடுக்கும் நேற்றைய பாக்கெட் பாலில் புது டிகாக்ஷன் பொடி நெருடும் காபியை ‘எச்சபண்ணி’ குடித்துக்கொண்டே ‘கோச்சிங் கிளாஸ்’ கணக்கு நோட்டை போட்டு முடித்து இரவு எங்கே வைத்தோம் பேப்பர் கருப்பாகாம அழிக்க கிளாஸ் முடிந்து கடையில் ‘சென்ட்’ ரப்பர் வாங்கிக்கொள்ள வேண்டும்… யோசனைகளுடனே அகாலம் இரண்டரை மணிக்கு அப்பாவுடன் சேர்ந்து அம்மா குழாயடியில் சண்டையின்றி அடித்துப் பிடித்துச் சேர்த்த பிளாஸ்டிக் டிரம் நீரில் இருந்து ஒரு பக்கெட் சமையலறை காஸ் அடுப்பில் எவர்சில்வர் அண்டாவில் காய்ச்சிய வெந்நீரில் குளோரின் வாசனைக் குளியல்.
நான்கு மணிக்கு எதிர் வீட்டு சதீஷ் பக்கத்து வீட்டு கீதாகிருஷ்ணன் இருவரது அறைகளிலும் வெளிச்சம். கல்விக் கூட்டுக்களவாணிகள். அவர்களுக்கு இன்று வகுப்பு கிடையாது. ‘ரொட்டேஷன் பேஸிஸ்’ வகுப்புகள். படுபாவிகள் இன்னிக்கும் நமக்கு முன்னாடியே எழுந்துடறான்களே… உருப்படவே மாட்டீங்கடா. கிளாஸ் இல்லாட்டியும் இப்டி குத்து குத்துனு குத்தறீங்களேடா… சாயங்காலம் நாலு மணிக்கு டாண்னு கிரிக்கெட் விளையாட வந்துருவானுங்க… ஒண்ணுமே சொல்லாம. எப்படா தூங்கறீங்கன்னு கேட்டா மதியானம் லன்ச் சாப்டறதில்லையாம் கீதா. அப்போதான் சாயங்காலம் பிஸிக்ஸ் டியூஷன்ல விழிப்பா இருக்குமாம். ஓராங்கணித் தாழீ. தனித்திரு பசித்திரு விழித்திரு… அவனப்பா சொல்லிருக்காறாம். நமக்கு எல்லாமே திருதிரு… நோட்டுப் புத்தகத்தை கண்டெடுத்துக்கொண்டான். ஆர். விவேக். ரோல் நம்பர் 273. சி2 பேட்ச். இன்று சதீஷைவிட முன்னாடியே கோச்சிங் கிளாசில் எல்லாக் கணக்குகளையும் போட்டு டி.ஆர். சாரிடம் ஷொட்டு வாங்கிவிடவேண்டும்…
‘ஸ்வெட்டர் போட்டுண்டு போடாப்பா…’ கொட்டாவியை மென்ற வாய்ச் சொற்களாய் அம்மா ‘…திரும்பி வர்றத்துக்கு இருபது ரூவா ஆட்டோக்கு எடுத்துக்கோ… அவனோட சண்ட போடாத… பேமானி பொரம்போக்குன்னு காலவேளைலயே அவன் வாய்ல புகுந்து பொறப்படாம கிளாஸ் வுட்ட வொடன வந்து சேரு…’
‘ஸ்வெட்டர் போட்டுண்டா கிளாஸில் உள்ளே விட மாட்டா. குஷாலா வந்தா தூங்கிருவேன்னு டி.ஆர். சார் வெளியே அனுப்சுடுவாருமா.’
‘அப்ப ஸ்கார்பானு கட்டிண்டு போ. கொட்ற பனில… எடம் கெடைக்கணும்னு ஒப்பிலியப்பன சேவிச்சு நன்னா வேண்டிண்டு போடா கண்ணா. காது ரெண்டித்தியும் நன்னா போத்திண்டு போ…’
அவனுக்கு எதிரில் அப்பாவுடன் ஒரு வார்த்தை பேசமாட்டாள். அவருக்கான கட்டளைகள் ஏற்கெனவே இரவில் அவனது தனியறையினுள் கேட்காதவாறு பிறப்பிக்கப்பட்டிருக்கும். அந்த வயதிலேயே ஏதோ ஆபரேஷன் செய்து கொண்டிருந்தாள். யுடிரஸ் என்று ஒரு சொல் மட்டும் புரியாத புதிராய் நினைவில் தங்கியிருந்தது. சட்டகத்தில் மையச் சிவப்புக் குஞ்சத்துடன் வர்த்தக ருத்திராக்ஷம் தொங்கப் பின்புலத்தில் பொதுவாய் நீல நிறம் சிதறியிருக்கும் ஒப்பிலியப்பன் படத்தை (அதில் ஒப்பிலியப்பன் என்பவரது கரிய முகங்கூட சரியாகத் தெரியாது) விழுந்து வணங்கிவிட்டுக் குறுகலான வெராண்டாவில் சிவப்பு ரெக்சின் சோபா ஓரத்தில் முட்டி இடிக்காமல் குனிந்து அதனடியில் செருப்பை மண் தட்டி எடுத்து… அவசரமாய் அம்மா வருவதற்குள் மண்ணை சோபாவிற்கடியில் காலால் நெரடி… ஆங் ஸ்கார்ப் மறந்துட்டேனே… ஸ்கூட்டர்ல போறச்சே ஒரு வாட்டி பறந்து ரோட்டில் விழ அதைப் பொறுக்க இறங்கி நாய் துரத்தி ஆடுசதையை… ‘சரிம்மா வர்ரேன்… நீ இன்னும் ரெண்டுமந்நேரம் தூங்கு. பாக்கெட் பால் ஆறு மணிக்கு தான் வருவான்… அப்பா வலை கேட்டை உள்பக்கமாப் பூட்டிச் சாவிய எடுத்துனுட்டார்…’
கம்பளி மப்ளர் தலைக்குச் சுற்றி லாம்பிரெட்டா ஸ்கூட்டரை சாய்த்து நினைவுகளில் ‘கிக்ஸ்டாட்டரை’ உதைத்துக்கொண்டிருந்த அப்பா கட்டிலில் இன்று அதே மப்ளர் சுற்றிச் சலனமற்றிருந்தார். முகம் சரியாகத் தெரியாத ஒப்பிலியப்பன் போல. அருகே குவளை நீரும் தட்டில் மாத்திரைகளும் தெய்வம் தீண்டாத நைவேத்தியம் போல.
கட்டிலருகில் நாற்காலியை ஓசையின்றி இழுத்துப் போட்டு அமர்ந்து கால்களைக் கட்டிலின் மீதாய் நீட்டி விட்டத்தை வெறித்தான்.
வெளியே நாயொன்று ஓங்கி ஊளையிட்டது.
கோச்சிங் கிளாஸ் இருந்த தெருவின் திருப்பத்தில் தெருவிளக்கு எரியாது. இருட்டில் நாய்கள் துரத்துவது வழக்கம். ஸ்கூட்டரில் கால்களை மடித்து மேலே உயர்த்திக்கொள்ள வேண்டும். அப்பாவின் இடுப்பை கெட்டியாகப் பிடித்துக்கொள்வான். அதிகாலை நாலு மணிக்கும் ஐந்து நிமிடங்கள் தாமதம் என்றாலும் அப்பாவை வாய்க்கு வந்தபடி இரைவான் டியுட்டோரியல் நிர்வாகி. ‘…ஏன் சார் பையன் படிப்புல அக்கறையே இல்லையா… இதுக்கே இத்தினி லேட்டு… கான்சலேட் வாசல்ல கியூல அவனவன் மொத நா ராவே துண்டப் போட்டு படுக்கறான்… இந்த மெதப்பெல்லாம் அப்ப தெரியும்…’ ஸ்கூட்டரில் போகையிலேயே விவேக்கிற்கு தெரிந்துவிட்டது ‘அப்பா இன்னிக்கும் லேட்டு… நீ கீழேயே நில்லு… உள்ள விட ரொம்ப பிகு பண்ணிண்டான்னா வந்துர்றேன்…’ கியர் மாறுவதற்குச் சிடுசிடுத்த ஸ்கூட்டரை ஓட்டியவாறு திரும்பி மப்ளரினூடே இரைந்தார் ‘ரொம்ப திட்டினான்னா சொல்லு நான் மேல வர்றேன்… வந்து ஒரேடியா கிளாஸ்லேந்து எடுத்துர்றேன்… இந்த வருஷம் பீஸை இன்னும் கட்டலை…’ எதிர்க் காற்றில் மப்ளர் பறக்க அப்பா சிரிக்கையில் அந்த அதிகாலை வெளிச்சத் தீற்றலிலும் எத்தனை அழகான வரிசையான பற்கள் என்று விவேக் வியந்திருக்கிறான். சுருட்டை முடி அலைய ‘காதலிக்க நேரமுண்டு’ ரவிச்சந்திரன் போல…
இன்று உணவையே கரைத்து ஊட்டுகிறார்கள். பற்களற்ற வாய் உறிஞ்சவும் மறந்து முடியுதிர்ந்த தலை துவண்டு சரிகிறது.
நமக்கும் மூப்புண்டு. இதே நிலையில்… நொடியில் பயப் பந்தொன்று உருவேறி வந்து தொண்டையடைக்க விதிர்த்து விழித்தான். பார்த்துக்கொள்ளப் பிள்ளையுமில்லை. பெண் மட்டுமே… எச்சை விழுங்கினான். தலையணை எடுத்துவந்து நாற்காலியில் சரிந்து முகத்தின் மீதாய் வைத்தழுத்தி மறைத்துக்கொண்டான். உருவான இருட்டில் உறங்க முனைந்தான்.
‘…அப்பா… நேர பாருங்க… இரைஞ்சு பேசாதீங்க… வேகமாப் போங்க…’ பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் தந்தையின் முதுகின் மீதாய் முகத்தையழுத்தி மறைத்துக்கொண்டான்.
டி.ஆர். சார் எனப்பட்ட ராகவாச்சாரி வாத்தியார் அப்போதுதான் வெள்ளைக் கதர் வேட்டி வெள்ளை முழுக்கை கதர் சட்டை வெள்ளைக் கேசத்தில் எட்டு வைத்துத் தெருவோரமாய் நடந்து வந்து கொண்டிருந்தார். அன்றைய வகுப்பு ஆசிரியர். முயற்சி திருவினையாக்கும் என்பதை மட்டும் நம்புபவர். அவரே இன்று தாமதம்.
அவரைக் கடந்ததும் பின் சீட்டில் எக்கி முக்கால் எழுந்து அப்பாவின் காதில் இரைந்து குசுகுசுத்தான் ‘… அப்பா இன்னிக்கு எனக்கு கிளாஸ் நிச்சயம் உண்டு. ஸ்லோவாவே போ. டீயார் சாரே லேட்டு…’ டியூட்டோரியல் மையத்தின் முன்னர் இறக்கிவிட்டு அப்பா சொன்னார் ‘…நல்ல மனுஷன். ஆனா இவரை ஒரு வாட்டியாவது நம்ம ஸ்கூட்டரைத் தொரத்தற இந்த நாய்ல ஒண்ணு கடிச்சா நல்லது. அப்போதான் கிளாஸை இப்டி ப்ரம்ம முகூர்த்தம் அதுயிதுன்னு அகாலமாய் நாலு மணிக்கு வைக்க மாட்டார்.’ போய்விட்டார்.
விழித்துக்கொண்டான்.
அதிகாலை நாலு மணி. பிரும்ம முகூர்த்தம். அப்பா இறந்து விட்டிருந்தார்.
அக்கணத்தில் விவேக் தன் இழப்பை அனுபவித்திராத வெற்றிடமாய் உணர்ந்தான். அன்று ஸ்கூட்டர் பின்னிருக்கையில் கட்டிப் பிடித்த அவன் கைகளுக்கிடையில் அவன் அப்பாவின் இடை இன்று சிக்கவில்லை. காலைக் குளிரிலும் குதித்தோடும் கரடுமுரடான பயணத்திலும் அதன் வெதுவெதுப்பில் ஆதுரமாய்ச் சாய்ந்து கொள்ள அவன் அப்பாவின் முதுகு… இன்று மரணித்து மல்லாந்திருந்தது. வருடிய விரல்கள் சில்லிடத் தொடங்கியிருந்தன.
உள்ளறையில் ஓரமாய் அடுக்களையருகே தரையில் புரண்டிருந்த அவன் அம்மா பழக்கத்தில் விழித்து அரவம் கேட்டு அறையினுள் வெளிச்சம் பார்த்து விந்தியவாறே வந்தவள் கவனித்துக் குரலெடுத்தாள். எதிர்பார்த்திருந்தாலும் துணையின் நிரந்தரப் பிரிவு நெஞ்சையடைக்கும் சம்பவந்தானே.
“போய்ட்டாரா போய்ட்டாரா… அய்யோ…” அகல விழித்தவாறு வாயைக் கையினால் பொத்தியவாறு வந்தவள் தப்பு தப்பு என்பதுபோல கன்னத்தில் இரு கைகளாலும் தட்டிக்கொண்டே அய்யோ சொன்னதற்கு ஏதோ தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டாள். “… நேக்கு தோணித்துறா… நேத்தே ராத்திரி தோணித்து. ஒன்னப் பாக்கணும்னே உசிர கைல புடிச்சிண்டிருந்துருக்கேர். நீ வந்து அவரோட இருக்கணும்னு…” புடவைத் தலைப்பை வாயில் பொத்தியவாறு விசும்பினாள். நெற்றிச் சுருக்கங்களில் நரைத்து விரிந்த தலைமுடியில் சோகத்தை விட அயர்ச்சியே தென்பட்டது. சட்டென்று சவத்தினருகே வந்து தொடையைத் தொட்டாள். பழைய நினைவுகளை அப்போதே அசை போட்டிருந்த விவேக்கிற்குத் தந்தையை அன்று செய்ததைப் போல இன்றும் எழுந்துகொள்ளச் சொல்லி அங்கு கிள்ளப் போகிறாளோ என்று தாறுமாறாக எண்ணங்கள் மின்னலடிக்கையில் சவத்தின் வேஷ்டியைச் சரி செய்தாள். படுக்கையைச் சுற்றி வந்து கால்மாட்டருகே அமர்ந்துகொண்டாள். “…அவ போனதுமே போய்ட்டார் பாரு. இரு வாசல்லேந்து வேப்பிலை பறிச்சிண்டு வர்றேன்…” எழுந்திருக்க முனைந்து மீண்டும் அமர்ந்தாள். “அய்யோ… படபடங்கறது. இந்நேரம் பாத்து விட்டுட்டுப் போயிட்டா பாரு. கொழந்தையையும் இங்கயே தங்க வெச்சிண்டா என்னவாம்… ஊரொலகத்துல எழுதாத பரிட்சை…”
“பிளாஸ்குலேந்து வெந்நீரைக் குடிம்மா. நீ வேற இந்நேரத்துல… கொயட் இட் டௌன். போயிடுவாருனு ஒரு வருஷமா தெரியும். ப்ரோஸ்டிரேட் கேன்சர் வாழவைக்குமா…”
“சரிடா… நாம் பேசலை. கொரலை ஒசத்தாதறா… ஒம் பொண்டாட்டி கிட்ட நீயே போன் பண்ணிச் சொல்லிடு. நாம் பண்ணா எடுக்க மாட்டா. அவளையும் கூட்டிண்டு வரச் சொல்லு. பரிட்சைக்குப் போகாட்டி ஒண்ணும் குடிமுழுகிறாது… பத்து நா தீட்டு…” அழவில்லை. வைணவ பண்பாட்டு மடிசாராக அணியாமல் அவ்வயதிலும் ‘மாடர்ன்’ ஆறுகெஜமாகச் சுற்றியிருந்த புடவையைச் சரி செய்துகொண்டே எழுந்து அடுக்களைக்குச் சென்றாள்.
போர்வையால் தந்தையின் உடலைப் படுக்கையில் மூடியவன் அறையின் ஜன்னல் கதவுகளைத் திறக்க வேண்டுமா மூட வேண்டுமா என்று திகைத்தான். திறந்தால் காற்று வரும். சவம் இருக்கும் அறையில் சுகாதாரம். மூடினால் மரியாதை. பூச்சி பொட்டு உள்ளே வராது ஈக்கள் மொய்க்காது. ஆனால் அப்பாவிற்குப் பிடிக்காது. ஜன்னலைப் பாதி மூடி மின்விசிறியின் சுழல்வேகத்தை அதிகரித்துவிட்டு வரவேற்பறையை நாடினான்.
கொட்டாவி வந்தது. தெருநாயின் ஊளை நின்றிருந்தது.
சில மாதங்களாய் எதிர்பார்த்திருந்ததால் மனம் தயார் செய்துகொண்டுவிட்டதில் அதிர்ச்சியோ அழுகையோ இழப்பின் சோகமோ பிரிவின் துயரமோ நினைவுகளின் அழுத்தமோ… எதுவும் உடனடியாகத் தாக்கவில்லை. வெறுமையாக உணர்ந்தான். அவன் அருகில் சந்திக்கும் முதல் சாவு என்றாலும் அவன் தந்தையினதே என்றாலும் உணர்வுகள் முட்டவில்லை. ஏதோ பொருளற்ற அனுபவம் போல… மனத்தில் மகிழ்ச்சி வியாபிக்க வேண்டிய இடத்தில் அது இல்லை என்று மட்டும் உணர்ந்தான். அதற்குக் காரணம் தந்தையின் இறப்பு மட்டுமில்லையே…
வாசுகியை மதிபேசியில் அழைத்தான்.
அழவேண்டிய அவன் ஆளுமையை செயல்திறனாளி மேலாளர் ஆட்கொண்டார்.
காலை ஏழு மணி.
கூடத்தில் கூட்டம். கண்ணாடிப் பேழையினுள் சவம்.
மின்னுயிர் மாய்த்துக் கூரையில் மின்விசிறி மிகைத்துச் சுழன்றிருந்தது.
பஞ்சகச்சத்தில் வெற்று மார்பில் விவேக் வேளை கெட்டு இன்னொரு காபி அருந்திக் கொண்டிருந்தான். உறக்கமற்ற கண்கள் சிமிட்டினாலே எரிந்தன. அனைத்து அறைகளிலும் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருக்க, சிறுவயதில் கண்ட முகங்கள் சுற்றிலும் வயோதிகமாய் வளையவர, பெற்றோர் வீட்டிலேயே அந்நியமாய் உணர்ந்தான்.
வெங்கட் வந்திருந்தார். வேட்டி சட்டையில். குளித்திருந்தார். வங்கிக்கு விடுப்பு சொல்லியிருந்தார். அவன் அம்மா கைபிடித்து வருத்தப்பட்டார்.
வருண் வந்திருந்தான். வைதேகியுடன். பேண்டு சட்டையில். குளித்திருக்கவில்லை.
வாசுகி உள்ளுக்கும் வெளிக்குமாக ஓடிக்கொண்டிருந்தாள். உறவினர்களைச் சமாளித்தபடி. அவன் தந்தையின் இறுதி நேரத்தை அவனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவர்களிடம் ஒவ்வொரு முறைக்கும் கூட்டிப் பெருக்கிச் சொல்லிக்கொண்டிருந்தாள். அழகிய அவள் வதனம் கண்கள் விரிய உதடுகள் துடிக்க விவரிக்கையில் கேட்பவர் உச் கொட்டி உருக்குலைந்தனர். அவ்வாறே அங்கு காட்டிக்கொள்ள முயன்றனர். சட்டென அவனிடம் வந்து நின்ற வாசுகி பரபரத்தாள்.
“ஐஸ் பாக்ஸ் வேலை செய்யமாட்டேங்கறது. வந்தனா காத்தாலேந்து ஒண்ணும் சாப்பிடலை. இங்க இப்ப எதுவும் செய்யக்கூடாதாம்…” பிணம் வைக்கப்பட்டிருந்த குளிர் பெட்டகத்தைக் குறிப்பிடுகிறாள் என்று விவேக்கிற்குப் புரிவதற்குள் அடுத்த காரியத்தை அவனிடம் சொல்லியிருந்தாள். “…ஒங்கம்மா நல்லநாள்லயே சாப்பிடக் கொடுக்கமாட்டா… ஒங் கொழந்தைக்கு எப்ப பசிக்கும்னு நேக்கெப்படித் தெரியும்பா. வந்தூக்கு மட்டுமானு பீட்சா மாதிரி ஆர்டர் பண்ணிருங்களேன். ஒங்க போன்லேந்தே… நாயிந்த ஐஸ் பாக்ஸை மாத்தப் பாக்கறேன். பிரெண்ட் ஒருத்தி ஹஸ்பெண்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் சப்ளை செய்ற பிசினஸ்…” அவன் பதிலுக்கோ சந்தேகங்களுக்கோ காத்திராமல் தோழியோடு பேசப் போய்விட்டிருந்தாள் “…வைதேகி… நம்ம வைனிகா நம்பர் இருக்கா… பாத்துச் சொல்லு…”
வந்தனா உள்ளறையில் படுக்கையின்மீது ஓரமாய் அமர்ந்திருந்தாள். கையில் விரிந்த புத்தகம். ஏதோ தேர்வு மும்முரம். தூங்கவில்லை. அழுதிருந்தாள். தாத்தா செல்லம்.
கையிலிருந்த மதிபேசியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி தயங்கினான். பஞ்சகச்சத்தில் பீட்சா ஆர்டர் செய்வதா… இந்த சமயத்தில் அவன் கொண்டுவந்தால் இங்கிருப்பவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள்…
“யோவ்… வைனிகா. சௌக்யம்ஸ்யா. அப்பா தான்…” அருகில் நின்றவாறு வாசுகி அவள் மதிபேசியில் பள்ளித் தோழியை அழைத்திருந்தாள். மாமனாரின் இறுதிக்கட்ட உடல் அவதிகளை விளக்கினாள். “…ஒன் ஆளுகிட்ட சொன்னா ஐஸ் பாக்ஸ் ஒண்ணு… அவசரமா வேணும். கெடைக்கும்ல…” வைனிகா பத்து நிமிடங்களில் கூப்பிடுகிறேன் என்றாளாம். கணவன் எண்ணிற்குச் செய்யச் சொல்லி விவேக்கின் மதிபேசியை வாங்கிக்கொண்டாள். “பீட்சா சொல்லிட்டீங்களா…” “இல்லையே… நீ அதுக்குள்ள போனை வாங்கிண்டயே…” “பச்… சட்டுனு… மேனேஜர்னு பேருதான். குழந்தை பசியால வாடிருக்கா. நானே பண்றேன்…” வாசுகியே அவன் மதிபேசியில் பேசினாள். ‘நாள்முழுதும் சேவை’க் கடையில் ‘பீட்சா ஆர்டர்’ செய்தாள். அதற்குள் சொன்னபடி வைனிகா அழைத்திருந்தாள்.
“சொல்ட்டேய்யா. இந்த நம்பர நோட் பண்ணிக்கோ. செந்தில்னு ஒருத்தன் பேசுவான். அவன்ட்ட என் ஆளு பேர சொல்லு. பாக்ஸ் வரும். அரை மணில. டிஸ்கௌண்ட் கொடுப்பான்…” வாசுகி அவளுக்கு நன்றி கூறினாள். “சீ சீ இதுக்கு போயி எதுக்குடி. நீ எனக்கு ஸ்கூல்ல பண்ணத்துக்கு நா செய்றதுலாம் தம்மாத்தூண்டு. எனி டைம்…” வாசுகிக்கு அந்நேரத்திலும் சிரிப்பு வந்தது. வைனிகாவிற்குத் தேர்வில் பாடங்களைப் படிக்கப் பள்ளியில் உதவியிருக்கிறாளாம். வைனிகாவே அவள் கையைப் பிடித்துக்கொண்டு சமீபத்தில் வாட்ஸாப் குழுவினரோடு சந்திக்கையில் சொன்னது. வாசுகிக்குத் தான் ‘உதவியது’ மறந்தே விட்டிருந்தது. “அடிப்பாவி. பரிட்சைல பாஸ் பண்றதும் உயிர் போற விஷயமும் ஒன்னாடி…” “எனக்கு பரிட்சை மரண அவஸ்தை தாம்பா.” மதிபேசியை விவேக்கிடம் கொடுக்கப் போவதற்குள் அது புதிய எண்ணிலிருந்து அழைக்க, எடுத்தவளிடம் “ஹாய் விவேக்… ஹவ்…” எனத் தொடங்கிய குரலை எங்கோ கேட்டிருக்கிறோமே என்று வாசுகி அனுமானித்தவாறே “ஹலோ… யெஸ்…” என்றதும் மௌனமாகிப் பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டது. “…யாருனு தெரியலை… வெச்சுட்டா… ஆபிஸ்லேந்து இருந்தா பேசிக்க வேணாம்… நீங்கதான் அப்பாவோட போணும்…” அவனிடம் மதிபேசியைக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கப் போய்விட்டாள்.
வாத்தியார் சுவாமிகள் மேலும் சிலருடன் பிணத்தைச் சுற்றி அரிசி தருப்பை சொம்பு குடகாத்திரம் நீர் என வைத்து ஏதோ காரியங்கள் செய்துகொண்டிருந்தார். என்ன பயன் பொருள் என விவேக்கிற்குப் புரியவில்லை. கேட்டால் ஏதோ காரணங்கள் சொல்லி விளக்குவார். அவருக்கும் புலனாகாத அவன் அப்பாவின் ஆத்மாவைப் போகிற வழியில் வேறு எங்கும் பிராக்கு பார்த்துக்கொண்டு நிற்காமல் நேராக வைகுந்தத்திற்குப் போவதற்கு ஆவன செய்வதாய். எவ்விளக்கமும் பகுத்தறிவிற்குள் வராது. பிணமும் எழுந்திருக்காது.
வீடு உறவு நட்பு என்பதால் அங்கிருப்பவருடன் இணக்கமாய் இருப்பதற்காகவே இவற்றிலெல்லாம் புகுந்து புறப்படுகிறான். அலுவலில் சரஸ்வதி பூஜை நடத்தி அவன் கணினி மீதும் சந்தனக் குங்குமப் பொட்டு வைக்கையில் நிர்வாகி என்பதால் அந்த அபத்தத்தைப் பொறுத்துக்கொண்டு வருடாந்திரமாய் ஷு கழற்றி சாக்ஸ் கால்களுடன் தீபாராதனைத் தட்டை தீ படாமல் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வதைப் போல…
வருண் செய்ய மாட்டான். அழுத்தினால் லீவு சொல்லிவிட்டு வீட்டிற்குப் போய்விடுவான். அவனுக்கென்ன நிர்வாகப் பொறுப்பா… இங்கு இன்று வந்ததே ஆச்சர்யம்தான். வைதேகியே கூட்டிவந்திருப்பாள். அவள் சவாரிக்கென.
புதிய ஐஸ் பெட்டி வந்தது. அப்பா புதிய குளிர் சிதைக்கு மாற்றப்பட்டார். உடன் வந்த செந்தில் எனப்பட்டவன் ஐஸ் பெட்டி இயங்க மின்சார இணைப்பு தேவை என்பதால் அப்பாவைக் கூடத்தின் மையத்திலிருந்து சுவரோரமாய்க் கோணலாய் இழுத்து விட்டான். அவன் பிழைப்புக் கவலை அவனுக்கு. தென்னையோலைப் பாடை வந்ததும் அதற்கு மாற்றி மந்திரங்கள் சொல்கையில் மட்டும் மீண்டும் கூடத்தின் மத்தியில் கிடத்திக் கொள்ளலாம் என்றார் வாத்தியார் சுவாமிகள். அவர் பிழைப்புக் கவலை அவருக்கு. மரியாதைக்கு துக்கம் விசாரித்துவிட்டு அறிமுகமற்ற ஒருவர் உரிமையாய் அருகிலமர்ந்து அவனிடம் ‘ஐடி பணி’யில் வேலை நிலவரம் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். அவர் மகனின் பிழைப்புக் கவலை அவருக்கு…
எழுந்து உள்ளே செல்ல மனம் விழைந்தாலும் விவேக் தயங்கினான். இடையில் பஞ்சகச்சம் சரியாக நிற்காமல் நழுவிவிடுமோ… திருமண மேடைக்குப் பிறகு இன்றுதான் கட்டுகிறான். கட்டிவிடப்பட்டிருக்கிறான். நெற்றியில் நாமம். மார்பில் புதிதாய் இரட்டை முப்புரிநூல். பிரும்மசாரிக்கென்றால் ஒன்று சம்சாரிக்கு என்றால் இரண்டல்லவா. வலக்கைப் பெருவிரலில் மோதிரமாய்ச் சுற்றிய தருப்பை. அவர்கள் வேண்டுதல் என்று அவனுக்கல்லவா மொட்டை போடுகிறார்கள்.
வளைமுக்கோணங்களாய்ப் பிய்த்து உண்ண வேண்டிய வட்டமான பீட்சா என்கோணச் சூடு வெளியேறாத அட்டைப் பெட்டியினுள் வந்தனாவிடம் வந்து சேர்ந்தது. பத்து நிமிடங்கள் முன்னதாகவே பீட்சாவை வழங்க முடிந்ததற்கு ஏற்கெனவே கிரெடிட் கார்ட்டில் காசு கழித்திருந்த உணவு ‘ஆப்பு’ மதிபேசியில் தன்னைத் தானே வாழ்த்துமடலில் பாராட்டிக்கொண்டு மகிழ்ச்சியில் துள்ளியது. மதிபேசியை அவசரமாய் வாயடைத்தான்.
பகலுணவிற்குப் படுக்கையறையில் பல் விலக்காமல் பீட்சா சாப்பிட்டுக்கொண்டு பக்கத்திலேயே பாரம்பரியம் பண்பாடு எனப் பிணத்திற்கு நாமமிட்டுத் தென்னையோலைப் பாடையில் கிடத்திப் பயித்தியம் போல அதனுடன் பலனற்ற மந்திரங்கள் பேசி…
வாசலில் விவிதா வந்தாள்.
அந்தக் கணமே மனத்தில் ஆங்காங்கே தேங்கியிருந்த சோகக் குட்டைகளையெல்லாம் சமன்செய்து மூழ்கடித்துப் பரவச வெள்ளமொன்று குபுகுபுத்து விரவியது. ஆகியன் லாயங்களைச் சுத்தம் செய்ய ஹெர்குலிஸ் திருப்பிவிட்ட நதி வெள்ளம் போல…
கடந்த ஒரு மாதமாய்ப் பார்க்கவில்லை பேசவில்லை. அன்று அவள் எதிர் வீட்டைக் காலி செய்துகொண்டு சென்றதிலிருந்து. இன்று அவளாகவே… அதுவும் அவன் பெற்றோர் வீடு தேடி… விஷயம் தெரிந்துதான் வந்திருக்கிறாள். முதல் முறையாகப் புடவையில் காண்கிறான். யார் சொல்லியிருப்பார்கள்… வாசுகி… வைதேகி…
எழுந்து சென்று அவளை வரவேற்க இன்முகம் காட்டி கை குலுக்க எத்தனித்து… மரணத்தையும் மதிமயக்கத்தையும் உணர்ந்தான். பேண்ட் பாக்கெட்டுகளில் கைகள் நுழைத்தவாறு தலையைச் சிலுப்பிக்கொண்டு ‘ஸ்டைல்’ என்று வழக்கமான விந்தலுடன் ஆடியாடி கேமிராவிற்கு முன் போகையிலேயே செய்யவிருப்பது சோகக்காட்சி என்று அறிவுறுத்தப்பட்ட நடிகன் போலானான். உறைந்த முறுவலுடன் இடையில் நழுவும் பஞ்சகச்சத்தைப் பிடித்தவாறு பாதிவழியில் பிணத்திற்கு அருகே சமைந்து நின்றான்.
விவிதா நேராக அவனருகில் வந்தாள். உடற்சூடுணர நின்றாள். மன்னித்துக்கொள் என்றாள் ஆங்கிலத்தில். “போன் பண்ணேனே இப்ப… நீ வெச்சுக்கலியா…” அவனின் ‘எப்ப…’ எனும் கேள்விக்குறியான முகத்தைக் கவனித்துத் தொடர்ந்து பேசினாள். “அவருடன் கழித்த மகிழ்ச்சியான பொழுதுகைளை நினைவுகளில் முன்னிறுத்திக்கொள்வதே நமக்கு நல்லது. அவர் உலகிற்கு யார் என்ன என்பது இப்போது முக்கியமில்லை. சொல்லப்போனால் அவர் ஆளுமை என்னவென்பதுமே முக்கியமில்லை. நம்மோடு உறவாடுகையில் என்னவாக இருந்தார் என்பதே நமக்கான உண்மை. இல்லையா… அதை வேறு எவராலும் மாற்றிக் கூற இயலாதே. மனித உறவுகளின் விநோதமும் விலையற்ற நிலையும் அதுதானே…” சன்னமாய்ப் பேசிக்கொண்டிருந்தாள். பேசியவை தந்தையைப் பற்றியும் உறவுகளைப் பற்றியும் தனக்கே சொல்லிக்கொண்டிருந்தவை. அப்படித்தான் பேசியவளுக்குத் தோன்றியது. அவளுமே தந்தையைச் சமீபத்தில் இழந்தவளல்லவா.
அவன் கேட்டதில் ஆழமான பொருள் இருந்தாலும் விவேக்கிற்குத் தென்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு நெருக்கத்தில் விவிதாவின் சுவாசக் காற்று காமக் கனலையே ஊதி வளர்த்தது. சட்டென தன் வெற்று மார்பு நிலை அவனுக்குக் கூச்சமூட்டியது. அன்றைக்கு மட்டும் நாமமிட்ட அவன் நெற்றி அவள் ஏளனத்திற்குரிய அம்சமோ… பருத்திப் பஞ்சகச்சத்தினுள்ளே அரையுள்ளாடை நாகரீகமற்று அவள் கண்களில் வெளிப்படுமோ…
“எப்டி வந்தாய்…” அவள் முகத்தில் நிலைத்துப் பொருத்தப் பார்வையை மன்றாடினான்.
“என் காரில். டிரைவரோடு. அதைக் கேக்கறியா ஏன் வந்தேனு…” ஏறெடுத்தாள்.
“சே சே. நீ வர்றதுக்கென்ன… தாராளமாய்… எப்போ வேணும்னாலும் வா. நடூல காணலையே…” பார்வை கழுத்துக்குழிவில் இறங்கி…
“இப்ப கூட வைதேகி சொன்னதுனாலயே வந்தேன். தந்தை பிரிவு. எனக்கும் சமீபத்தில் அதே இழப்பு. அங்கதான் போக முடியலை… அதான் இங்க வந்துட்டேன். மன்னித்துக்கொள்… வாசுகிக்கு நாம் பழகுவது பிடிக்கலையோனு…”
“இருந்தாலென்ன. பிடிக்கலைன்னா என்ன இப்ப. எனக்குப் பிடிச்சிருக்கு உன்னை… எல்லோரும் ஒரு நா சாகப்போறோம் தானே…” அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
“அப்பாவை ரொம்ப பிடிக்குமோ…” ஒருக்கணம் அவனோடு நெருக்கமாய் வந்தவள் விலகிக்கொண்டாள் “…பதில் சொல்ல வேண்டாம். எனக்கே தெரியும்…” அவன் கைகளை விடுவித்துக்கொண்டு பேசினாள் “…ஏன் மூக்கு காதுல பஞ்சு வெச்சு மூடலையா…”
அப்போதே கவனித்தான். ஆமாம். தோன்றவே இல்லை. முன்பின் சாவோடு நேரடி அனுபவமிருந்தால்தானே… ஐஸ் பெட்டி மாத்த பீட்சா வாங்க-னு அவ்ளோ பேசினாளே இதை கவனிக்கலை பாரு வாசுகி… மனத்திற்குள் ஏனோ கருவினான். “ஐஸ் பெட்டிலேந்து வெளிய எடுத்து வெச்சா உள்ளேந்து திரவங்கள் உருகிக் கசியும்… இடுகாடு போவதற்குள் பிரச்சனையாயிடும்… உயிர் போயிட்டா உடலில் எதுவும் தங்காது. கமான் தெற…” அவனிடம் ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே விவிதா எவருக்கும் காத்திராமல் தன் கைப்பையிலிருந்து பஞ்சுச் சுருளை விரித்துப் பிய்த்துத் தயாராகி நிற்க அவனும் சுற்றிலும் கூட்டத்தைக் கவனித்தவாறே பெட்டியின் கண்ணாடியை ஒருபுறமாய் உயர்த்தினான்.
விவிதா அவன் அப்பாவின் மூக்கிலும் காதுகளிலும் பஞ்சடைத்தாள்.
மண்டியிட்டிருந்தவளின் செயல் நேர்த்தியில் சேலைத் திறப்புகளில் தென்பட்ட தேகக்கட்டின் உயிரோட்டம் விவேக்கின் மனத்தில் தேங்கியிருந்த தந்தையின் பிரிவுத் துயரைத் துரிதமாய்த் துலக்கத் தொடங்கியது.
ஆபீஸ் போறச்சே விஷயம் கேள்விப்பட்டு இங்க வரேன்னில்ல சொன்னா… இந்தப் புடவையிலா ஆபீஸ் போறா… ஐஸ் பெட்டியின் கண்ணாடியை மூடிவிட்டு அவளையே கவனித்தான். அன்று பல்லவபுரம் பேருந்தில் பட்டும் படாமல் கவனித்ததை… காது மடலினருகில் தொடங்கிக் கழுத்தின் பின்பகுதியில் தோளினருகே முதுகின் ஒருபுறமென இறங்கி இடையின் மடிப்புவரை பச்சை குத்தியிருந்தாள். ரவிக்கையும் சேலையும் ஆங்காங்கே மறைத்துக்காட்ட ஏதோ பச்சைக் கொடி வளர்த்து ரோஸ் நிறமாய்ப் பூத்துக் குலுங்கியிருந்தாள். கொடிவேர் இடைச் சேலை மடிப்பினுள் மறைந்து… எங்கிருந்து தொடங்கும்… விவேக் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
“ஏய்யா வாசுகி… நீயுங் கவனிக்கலையா…” ஐஸ் பெட்டியிடமிருந்து எழுந்து வந்த விவிதா அங்கு வந்த வாசுகியிடம் கேட்டாள். அதுவரை பிணத்தின் மூக்கு காதுகள் மூடப்பட்டிருக்கவில்லையே… அழையா விருந்தாளியாய் வந்ததும் வராததுமாய் விவிதா அவளைக் கேட்டதில் வாசுகிக்கு எரிச்சலானது. அதுவும் அந்தக் குரலையே விவேக்கின் மதிபேசியில் சற்று முன்னர் கேட்டிருந்தாள் என்பது உறைத்ததும் ஆத்திரம் பற்றியது.
“நேக்கும் அப்பா செத்திருந்தா தெரிஞ்சிருக்கும்… என்னத்தைக் கண்டேன்…”
சமநிலையில் அவ்வாறான கடுஞ்சொல்லை வாசுகி சொல்லியிருக்க மாட்டாள். விவிதா துணுக்குற்றாலும் பதில் சொல்லவில்லை.
அதற்குள் விவேக்கின் அம்மா “நீ வந்துதான் கவனிக்கணும்னு இருத்திருக்குமா… எங்குளுக்குத் தோணலை பாரு. வா… இப்டி ஒக்காரு…” என்றவாறு விவிதாவை அவளருகில் அமர்த்திக்கொண்டாள். “…யாரு நீ. விவேக் ஆபீஸ்லேந்து வர்றியா… பாத்ததில்லையே… நீ கரெக்டா பொட்டு இல்லாம பூ வெச்சுக்காம தலையை விரிச்சுனுட்ட… எங்காத்துல ஒண்ணு இருக்கே… தனக்காவும் தெரியாது நாஞ் சொன்னாலும் கேக்காது…”
வாசுகிக்கு மாமியார் மீது கோபம் பொங்கியது. விவிதா ‘பாய் கட்’ செய்து கொண்டிருக்கிறாள். தலைமுடி விரிந்து கிடக்காமல் வேறு எப்படி இருக்கும். அவ நல்ல நாள்லயே பொட்டு இட்டுக்க மாட்டா தவிர ‘பாய் கட்’ குட்டைத் தலைமுடியில் பூச்சூடினா நிக்குமாக்கும்…
“அம்மா… என்னால நெத்திய அழிச்சுக்க முடியாதுமா. எங்காத்து வழக்கத்துல கிடையாது. எங்கம்மா இப்ப இங்க வருவா வேணும்னா கேட்டுக்கோங்கோ… தலைமுடியைக் குட்டையா வெட்டிக்கறது புடிச்சிருந்தா நீங்க செஞ்சுக்கோங்கோ…” குரலை உயர்த்தாமல் ஆனால் படபடவென சொல்லிவிட்டு வாசுகி பதிலுக்குக் காத்திராமல் வந்தனா இருந்த படுக்கையறையினுள் சென்றுவிட்டாள்.
புதிய ஆடைக்குப் பிணத்தை மாற்றிப் பாடையில் கிடத்திக் கால் கட்டை விரல்களிரண்டையும் சேர்த்துக் கட்டி… வாத்தியார் சுவாமிகள் விவேக்கையே உடலின்மீது பன்னிரண்டு திருமண் போட்டுவிடச் சொன்னார். வாசுகியைக் காணாததில் வைதேகி உள்ளிருந்து எடுத்துவர விவிதாவே தன் உள்ளங்கையில் திருமண் கட்டியைக் குழைத்துக் களிம்பாக்கியிருந்தாள். அவள் அப்பாவிற்கு அவள் செய்திருக்க வேண்டியது. நினைத்துக்கொண்டாள்.
நீட்டிய அவள் கைபற்றி வெள்ளி ஈர்க்கில் திருமண் களிம்பை வழித்தெடுத்து விவேக் தன் தந்தையின் உடலருகே அமர்ந்தான். அன்றாடம் அவன் செய்திருந்தால் தெரிந்திருக்கும். திகைத்தான். எங்கு தொடங்குவது… “மொதல்ல நெத்தி அப்பறம் தோள்… அப்பாக்கு வலப்பக்கமா தொடங்கு…” வெங்கட் வழிநடத்தினார்.
கவனித்திருந்த வருண் வாசல்புறம் சென்றான். கூடவே வைதேகி வாத்தியார் சுவாமிகளுடன் வந்தாள். “நாலு பேரு வேணும். பிராமணாள்னா க்ஷேமம். யௌவனமா இருக்கணும்… ஒங்கள மாதிரி…” வாத்தியார் சுவாமிகள் வருணிடம் பேச அவன் கேள்வியாய் வைதேகியைப் பார்த்தான்.
“சுடுகாட்டுக்குத் தூக்கிண்டு போகடா… என்ன முழிக்கற…” வைதேகி குசுகுசுக்க இப்போது வருண் திகைத்தான்.
“பிணத்தையா… ரோட்டிலயேவா… எவ்ளோ தூரம்… தேகி… எனக்கு இதெல்லாம்…”
“இடியட். கீழே வண்டி வரும். அதுல வெச்சு. பக்கத்துலதான். எலக்ட்ரிக் கிரிமடோரியம். நீ மாடிலேந்து இறக்கி வண்டில வை போதும். அப்பறம் அங்க போயி பாத்துக்கலாம். வெட்டியான் இருப்பான்…” அவன் மண்டையாட்டுவதை கவனித்து அதட்டலாய் இரைந்தாள் “…இங்க எல்லாங் கிழங்கட்டை… வேற யாரு செய்வா… இதுலயாது என்னை திருப்தி செஞ்சா என்னவாம் குறைஞ்சா போயிரும்…”
“கூப்டறச்சே வந்தா போதும். வேஷ்டிக்கு மாறிக்கோங்ஙோ. மஞ்சள் வஸ்திரம்… நெத்திக்கிட்னுடுங்கோ… இன்னும் ஆரு வராளோ அவாள்ட்டையும் சொல்லி ஆயத்தம் பண்ணிடுங்கோ…” வாத்தியார் சுவாமிகள் இப்போது வருணைப் பொருட்படுத்தாமல் விரிவாக வைதேகியிடமே அவரின் தேவைகளைச் சொல்லிவிட்டு அகன்றார்.
“இதுக்குதான் கிளம்பறச்சயே சொன்னேன்… வேஷ்டியக் கட்டிண்டு வான்னு. ஒடனே அதைச் சாக்கா வெச்சு இப்ப வீட்டுக்கு ஓடிறாத… இங்கயே உள்ள இருக்கும். கேக்கறேன்… வெங்கட் சாரையும் ஒரு கை கொடுக்கச் சொல்றேன்…”
வெளியே வந்த வெங்கட் கலவரமாயிருந்தார். உள்ளே வைதேகி அவரிடமும் ‘தோள்’ கொடுக்க விண்ணப்பித்திருக்க வேண்டும். அவனிடம் தன் நிலையை விளக்க முனைந்தார். “டேய்… என்னடா இக்கட்டு. முன்னபின்ன நான் செஞ்சதில்லை. இதென்ன பெருமாள ஏள பண்றா மாதிரியா… தீட்டு வேற…” அவருடைய கலவரம் கண்டு வருணுக்குத் தெம்பு வந்தது. “குரு… புறப்பாட்டுக்கு மட்டும் பலமிருக்காக்கும். கொஞ்சம் வெளில வாங்க…” அவரைத் தோள் பிடித்து எளிதாய் அவனோடு இழுத்துக்கொண்டு போனான். என்ன எங்கே… என்று வந்தவரை “…கேள்வியெதும் கேக்காம நான் சொய்யப்போறதை நீங்களும் செய்ங்க…”
இருவரும் படிகளிறங்கித் தெருவை நாடினார்கள்.
பேசிக்கொண்டே விவேக்கின் பெற்றோர் வசித்த அடுக்கத்தின் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி முன்னே பாதுகாப்பாய் இரும்பு கிரில் வைத்துத் தடுத்திருந்த அரசாங்க மதுக்கடையை அடைந்திருந்தார்கள்.
“இங்க எதுக்குடா… காலங்காத்தாலே… கருமாந்திரம்…”
“குரு… நானே பயந்தாங்கொள்ளி. இன்னிக்கு நீங்க வேற. எனக்கு வைப்லேந்து லைப் வரை எல்லாமே இப்டிதான் பாத்துக்கோங்க. பாக்கதான் இப்டி கிங்கரனாட்டம்-கீறேன். படுக்கைல… படுக்கறதுக்கு முன்னாடி போர்னோ விடியோ வேண்டிருக்கில்ல. சொல்லிக்காட்டிட்டா பாத்தீங்களா… இதுலயாச்சும் திருப்தி செய்யணுமாம். போவட்டும். இப்ப பிணத்தை நெருங்கறதுக்கு முன்னாடி… போதை தேவை. சரக்கடிச்சதுமே தெம்பாயிருவேன் குரு. ஒங்களுக்கும் இந்தச் சிறியோனின் அறிவுரை. குவாட்டர் அடிச்சீங்கனு வைங்க… சும்மா கும்னு… போதைல சுத்தி ஒலகமே கொஞ்சம் மரியாதையா விலகியே நிக்கும். யாரு என்ன பேசினாலும் காதுல லேட்டாதான் வுயும்… கவலப்படாம காரியத்தை… பச்… காரியமென்ன கருமாதியவே செய்லாம். ரெண்டு ரௌண்டு உள்ள போச்சுனா பொரட்டிப் போட்டு… சுடுகாடு வரைக்கும் நானே தூக்கினு போயிருவேன்…”
வாங்கிய இரண்டு பாட்டில்களையும் மூடி கழற்றி ‘மிக்ஸ்’ செய்து மதுக்கடை வாசலிலேயே சந்து மறைவில் கடகடவென வருண் மாந்தினான். அதிகமாகிவிடப் போகிறதே எனத் தடுக்கும் பொருட்டு அவன் கையிலிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிய வெங்கட் என்ன நினைத்தாரோ கட்டியிருந்த பஞ்சகச்சத்தின் மேல் வஸ்திரத்தை ஒருகையால் பிரித்து உயர்த்தி முகத்தை ஒருபுறம் மறைத்தவாறு மதுவைத் தனக்குள்ளும் சரித்துக்கொண்டார்.
“அய்யரப் பாருடா மேல ஊத்திக்காம சொட்டுகூட சிந்தாம எத்தினி நேக்கா எச்ச படாம அடிக்குறாரு…”
தெருவின் திருப்பத்தில் நின்றிருந்த ஆட்டோக்களினுள் ஓட்டுநர் இருவர் தங்கள் தோள் தட்டி உரக்கச் சிரித்துக்கொண்டனர். பேண்ட் சட்டையில் வருண் அருந்துகையில் சும்மா கிடந்தவர்கள் வெற்றுடலின் குறுக்கே நெற்றிப்பரப்பில் நெடுக்கே என வெளிப்படையாக வைணவ சின்னங்களுடன் இருந்த வெங்கட்டை நக்கல் செய்தனர். கபடமே என்றாலும் வேடம் வழுவா விதிமுறை உண்டன்றோ.
“அப்பாரு புட்டுகினு போய்கினாரு பிரதர்… அதான் காலைலவே. சுடுகாட்டுக்கு இஸ்துகினு போவணும். ஒரு கை குறையுது. வர்து… மின்னிலாம் ஓயாமேரிதான். இப்பதான் வட்டத்துக்கு வட்டம் வந்துருச்சே… சுருக்க ரிட்டனாயிரலாம். பிரசவத்துக்கு இலவசம். சாவுக்கு என்ன… மீட்டருக்கு மேலயா கீழயா…” வருண் கையில் மதுப்புட்டியோடு விடைத்து நின்று பேச ஆட்டோ ஓட்டுநர்கள் அமைதியாகி எழுந்து நின்றனர். ஆனால் சவாரிக்கு வரவில்லை. பிணத்தை ஆட்டோவினுள் படுக்க வைக்க முடியாதே…
“சரிதான்… சவாரிக்குனு ஒன் ஆட்டோல ஒக்காந்தேவா சாவ முடியும்…” வருண் நகர்ந்து அவர்களைக் கடந்திருந்தான். உடன் வந்த வெங்கட் தன்னை நக்கல் செய்த அவர்களுக்கும் கேட்கும் விதமாய் உரக்க வருணிடம் பொருமினார். “மஞ்சசீச்சுவர்ணத்தோட ஸ்பெஷ்டமா நாமம் போட்டுண்டிருக்கேன்… அய்யங்காரப் போயி அய்யர்னுட்டு. அசமஞ்சங்கள்…”
“அதுவா இப்ப முக்கியம் குரு… வுடுங்க. நான் நெத்தில பட்டை போட்டதாலயா இப்ப பட்டை சாராயம் அடிக்கிறேன்… அவனுங்களப் பொறுத்தவரைக்கும் நீங்க நானு… நாம எல்லாருமே அய்யருங்க தான குரு…”
“அப்ப அய்யங்கார் இந்த மாதிரி பப்ளிக்கா தண்ணியடிச்சாலுமே இவுங்ககிட்டலாம் கெட்ட பேரு அய்யருக்குதான்னு சொல்லு…”
வருணுக்கு மதுவகத்தில் அவரைச் சத்தாய்த்த தனது முந்தைய சைவ வைணவக் கிண்டலை அவர் தன்னிடமே இப்போது தலை மாற்றி அடிக்கிறாரோ என்றிருந்தது.
“சரக்கு உள்ள போனதுமே… இந்த உள்குத்து புத்தி இருக்கறவறைக்கும் பகை நம்மாளுக்கு வெளிலேந்து வரவேணாம் குரு…”
விவேக்கின் பெற்றோர் வீட்டை அவர்கள் மீண்டும் அடைகையில் அங்கு பிணத்தை இடுகாடு எடுத்துச் செல்ல ஆயத்தங்கள் பரபரத்திருந்தன. அடுக்கக அக்கம்பக்கத்தினர் சிறு கூட்டமாகியிருக்க உள்ளே டெம்போ போன்ற வண்டியொன்று வாசலடைத்து நின்றிருந்தது. மூன்று மாடி மேலிருந்து பாடையில் தூக்கி வந்து இதற்குள்ளா ஏற்ற வேண்டும்… வருண் தெம்பாய் மாடிப்படியேறினான்.
வருண் சொன்னதைப் போலவே கூட்டத்தின் பல குரல்களும் ஒரு சுற்று வெளியிருந்தே சன்னமாய் தனக்குள் ஒலிப்பதை வெங்கட் உணர்ந்தார். படிக்கட்டில் சற்றே தள்ளாடினார். இருமினார். ஏதோ ‘லோக்கல்’ சரக்கு…
இருவரும் வீட்டினுள் நுழைகையில் மின்விசிறி நிறுத்தப்பட்டு வீடே வியர்த்திருக்க தீச்சட்டி கொளுத்தப்பட்டு அருகே புகைந்திருக்க பாடையிலிருந்த பிணத்திற்கு முன்னால் விடைபெறும் வகையில் பெண்கள் சேவித்துகொண்டிருந்தார்கள். அருகே வாசுகி வைதேகி விவிதா உட்படப் பெண்கள் அணிவரிசையில். அதே காரியத்தைச் செய்வதற்கு. ஓரிருவர் சேலைத்தலைப்பால் வாய்பொத்திக் கண்கலங்கியிருந்தனர். ஆண்கள் அடுத்த வெளிச்சுற்றில் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு இரு கை கட்டி யாராவது எதையாவது சொன்னால் செய்யக் காத்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும் வைதேகி ஓடி வந்தாள். “எங்க போய்ட்ட… சொன்னேன்ல… வா இப்டி…” தரதரவென அவனைக் கை பிடித்து உள்ளறைக்கு இழுத்துச் சென்றாள். வேட்டி தயாராயிருந்தது. பிரித்து உதறினாள். “கட்டிக்கோ…” “சரி. நீ போ…” “ஆமா… நா பாக்காததையா… இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்லை. நெத்திக்கு இட்டுக்கோ…” அவன் சட்டையைக் கழற்றுகையில் திரண்ட தோளோடு வெற்று மார்பை கவனித்து அலறினாள். “அடப்பாவி. பூணூல் எங்கே…” “என்ன புதுசா கேக்கறே… என்னிக்குப் போட்னுகிறேன்…”
அதற்குள் வெங்கட் தன் பஞ்சகச்சத்தை இறுக்கிக்கொள்ள அறையினுள் வந்ததால் வைதேகி தலையிலடித்துக்கொண்டு ‘இரு வர்றேன்…’ எனக் கருவியவாறே அகன்றாள்.
வெற்று மார்புடன் மூளியான நெற்றியோடு வேட்டிக்கு மாறியிருந்த வருணைக் கவனித்த வெங்கட் அவர் பங்கிற்குக் கடிந்தார். “பூணூல் இல்லையாக்கும். கழற்றி ஆணியில் மாட்டி வெக்கறது ஸ்டைலாக்கும். நீ ஓட்டல்ல கறி மாமிசம் சாப்பிடு போகட்டும். அதுக்குனு நம்ம பாரம்பர்யத்தையெல்லாம் விட்டுடணுமா… போட்டுண்டா என்னவாம். அமெரிக்கால இருக்கற என் மாப்பிளையே மூணு வேளை சந்தியாவந்தனம் செய்றான் தெரியுமோ… வாட்ஸாப்ல பொண்ணு நேத்துதான் போட்டோ அனுப்பிருக்கா…”
“குரு… இந்த அறிவுரை இப்ப தேவையா…” ஏற்கெனவே கடுப்பாகியிருந்தான் வருண். தவிர வைதேகி அவனை மீண்டும் மீண்டும் வெறுப்பேற்றும் வகையில் பேசுவது அங்கு வந்திருந்த அவள் தோழி விவிதாவினாலோ என்றிருந்தது உள்ளுணர்வு.
“இது அறிவுரை இல்லை. ஒவ்வொரு இந்துவின் கடமை. மறந்துவிட்டதால் அதை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.” வெங்கட் ஏனோ ஆங்கிலத்தில் இரைந்தார்.
“இப்ப என்ன செய்னொங்கறீங்க குரு… எனக்குப் பூணூல் புனஸ்காரத்திலலாம் சின்னப்பலேந்தே நம்பிக்கையில்லை. கழட்டிப் போட்டுட்டேன். இந்து இல்லேன்னா வுடுங்க. அதுக்குனு இப்ப என்ன சாத்தான் கிட்ட வேதம் படிச்சட்டனா இல்லை நமாஸை தப்பா செஞ்சிட்டனா… இல்லை சமணத் துறவியாகி மயில் பீலியை மறந்து வெச்சிட்டனா இல்லை திடுதிப்புனு ரோட்டுல நடக்க சொல்ல புத்தராகிப் பேரறிவுக்காகப் பொண்டாட்டி புள்ளைய அம்போனு விட்டுனு வந்ட்டனா… இதெதுவும் எனக்குப் புரியலை என்னை வுட்ருங்கனுதான நானுஞ் சொல்றேன். பூணூல் இல்லாம தூக்கினா பொணம் சுடுகாட்டுக்கு எங்கூட வராதுனா தூக்கலை. வீட்டுக்குப் போயிரட்டா…”
“சீ… அபிஷ்டு. என்ன பேச்சிது. தண்ணியடிச்சதுல பேத்தாதே. பரமபதிச்சிருக்கறது யாரு. பிராமின்ஸ் தான் பாடையை எடுக்கணும். தெரியுமோல்யோ. நானே அதுக்குதான் சரின்னேன். அவசரத்தில் உதவாதவன் அந்தணனில்லை…”
அதற்குள் வைதேகி மீண்டும் உள்ளே வந்தாள். கையில் புடவைத் தலைப்பில் மறைத்துத் திரியாக டுவைன் நூல் சிக்கல். மஞ்சள் தடவியிருந்தாள். வருணின் கையில் திணித்தாள். “மாட்டிக்கோ. எப்டி போட்டுக்கம்ணு தெரியுமா… இல்லை… வெங்கட் சார்…”
“நான் பாத்துக்கறேம்மா… நீ போ… பொம்னாட்டி நீ எதுக்கு…” திடீரென எங்கிருந்து பூணூல் கிடைத்தது என்று அவளிடம் கேட்டுக்கொள்வதை கவனமாய் தவிர்த்தார்.
டுவைன் நூல் சிக்கலைப் பிரித்து மூன்று திரியாக்கி பிரும்ம முடிச்சின்றி மார்பின் குறுக்காய் வருண் ஒற்றை வட ‘பிரும்மச்சாரி பூணூல்’ போட்டுக்கொண்டான். அதற்குள் வாத்தியார் சுவாமிகள் வெளியே பரபரத்தார். வெளியே செல்லவிருந்தவனை வெங்கட் பிடித்திழுத்தார். “நெத்திக்கு இட்டுக்கலையா…” அவன் வீட்டு பாத்ரூமில் கண்ணாடியருகே திருநீறு டப்பியிருக்கும். இங்கு… “குரு… எனக்கும் ஒங்க அந்த நாமத்தையே போட்டு விடுங்க. என்ன இப்ப பாழாப்போச்சு. அதான் அங்க சொன்னீங்கல்ல… அய்யங்காரு தப்பு செஞ்சாலும் அய்யருக்குதானு. என் கணக்குலயே இதையும் எழுதிக்குங்க…” கோணலாய்ச் சிரித்தான்.
‘தெளிவான போதை…’ மனத்தினுள் கருதியவாறே அவனுக்கு நெற்றியில் வைணவ சின்னம் சாற்றினார் வெங்கட்.
உள்ளே நடந்துகொண்டிருந்தவற்றை அறியாமல் விவேக் கூடத்தின் ஓரத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவன் முன்னே அறை மையத்தில் இப்போது விவிதா மண்டியிட்டுச் சேவித்துக்கொண்டிருந்தாள். அவளையே கவனித்திருந்தான்.
சேவித்தல் மதிப்பான செயல். மரியாதையை வெளிப்படுத்தும் செயல். ஆணவத்தை அளந்து கட்டுக்குள் வைத்திருக்க உதவும் செயல். மார்பு தலை கைகால்கள் முழங்கால் மூட்டுகள் உடல் தவிர வாக்கு (வாய்) மனது (ஆணவம்) ஆகிய எட்டையும் நிலத்தில் இட்டு வணங்கும் சாஷ்டாங்கப் பிரணாமத்தை நாம் செய்யத் தயார் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தகுதியானவரிடமே அதைச் செய்ய வேண்டும். வெங்கட் என்றோ விளக்கியிருந்தார். விவேக்கிற்கு இவ்வாறெல்லாம் இல்லையெனினும் வீட்டுப் பெரியவர்களை மகிழ்விக்கும் செயல் என்பதால் சிரம் நிலம் தொட்டு வணங்குவதைச் செய்வதில் தயக்கங்களில்லை. அந்த சில நொடிகளுக்கு மேல் அச்செயலை யாருக்கு எவ்வாறு எங்கு செய்தோம் என்றெல்லாம் மனத்தில் வைத்திருந்ததுமில்லை. ஆனால் விவிதா அன்று அவன் தந்தையின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முன்னர் மரியாதை நிமித்தம் சேவிக்கையில்…
காமம் மனத்தில் கொப்பளித்து வியாபித்தது.
மாரன் மனம் வைத்ததில் அவர் தந்தையின் மரணப் படுக்கையில் மகாத்மாவே மனைவியை நாடிவிட்டிருக்க மத்தியமன் விவேக் எம்மாத்திரம்.
சேலை மூடிய விவிதாவின் பின்னெழில் குனிந்து நிமிர்ந்து முன்னுக்கும் பின்னுக்குமாய் அசைந்தோடி அதிர்ந்து புடைத்து விடைத்து வெகுண்டு… பார்வையை அவ்வின்புறப் பின்புறக் காட்சியிலிருந்து அகற்ற இயலாது திணறினான். இமை படபடத்து இதயம் தத்தளித்து இயக்கம் இழந்து சுரந்த வாய் எச்சில் விழுங்க மறந்து விழித்து வியர்த்துத் தலைகுனிந்தான். பின் எச்சை விழுங்கி நிமிர்ந்தான். பின் பரபரத்து மதிபேசியெடுத்து புகைப்படமெடுத்… சே இல்லை செய்யாதே. சுதாரித்தான். மீண்டும் மதிபேசியைத் தொடையின் மீதாய் வைத்… சுற்றம் ஏன் எடுத்தான் என யோசித்துத் தெளிந்து அவன் வக்ர மனத்தின் செய்கையை அனுமானித்துவிட்டால்… எழுந்து நின்று பதற்றத்தை விழுங்கி வேண்டுமென்றே யாரோ அழைத்திருந்ததுபோல மதிபேசி இருந்த கையைக் காதில் வைத்து ஓசையின்றி வாயசைத்தான் பார்வையை அறைமுழுவதும் ஓட்டியவாறு. யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று கவனித்தவாறு… இல்லை… அவரவர் தமதமதறுவைப் பேச்சுகளில்… மீண்டும் அமர்ந்து மதிபேசியை இடைப் பிளவில் பஞ்சகச்சத்தினுள் சொருக முயல்கையில் பார்வைப் புலத்தில்… விவிதா இன்னமும் சேவித்துக்கொண்டிருந்தாள். எத்தனை முறை… பன்னிரண்டா… இவள் எதற்கு என் அப்பாவின் உடலை இன்று சேவிக்கிறாள். சாஷ்டாங்கப் பிரணாமம் பெண்களுக்கில்லை. வெங்கட் சொல்லியுள்ளார். பஞ்சாங்கப் பிரணாமமே. பெண்களின் மார்பகங்களும் கருப்பையும் நிலத்தில் படக்கூடாதாம். உயிரை உருவாக்குமிடமும் அதற்கு உணவிடும் இடமும் நிலத்தைத் தொடக்கூடாதாம். ஏன்… பகுத்தறிவு ஏற்கும் விளக்கங்கள் வழங்கப்படவில்லை.
பார்வையில் விவிதாவைக் கடந்து அவன் தந்தையின் உடல் சேர்த்து அறையில் கண்டவை எதுவும் மனத்தினுள் புலனாகவில்லை. வருண் வெங்கட் போல அவன் அரசாங்க மதுக்கடைச் சாராயம் அருத்தியிருக்கவில்லை. ஆனால் மோக மதுவின் போதை விளைவென அவனைச் சுற்றிலும் குரல்கள் விலகி தூரத்தில் ஒலித்தன.
அப்பா… எத்தனை பிரும்மாண்டமான… வாசுகியைவிடப் பெரியவை… சேவிக்கும் அவள் முதுகில் மூச்சுக் காற்றாய்த் தொடங்கி வாட்டமாய் மண்டியிட்டு மறுப்பின்றி வரவேற்கும் இடைபிடித்து இடைவெளி இழுத்துக் குறைத்து இழுத்தமர்ந்து உந்தி துடித்து உன்மத்தமாய் அவள் தேகத்தை மோதியுந்த சேவிக்கும் அவள் முகம் நிலத்தில் முண்டித் திரும்பி வாய்பிளந்து அவனை மோகித்து அரைக்கண் நோக்க… பின்புறத்திலிருந்து அவளைப் புணர்வதற்குப் பிறவிப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
ஆண்மையின் இறுக்கம் அதிகமாக அமர்ந்த நிலையில் இருக்கையில் கால்களைப் பரப்பிக்கொண்டான். பஞ்சகச்சம் வசதியான ஆடையே…
சேவித்துக்கொண்டிருந்த விவிதாவிற்கு உள்ளத்தில் குறுகுறுப்பு உருவானது. அதுவரையில் விவேக்கின் தந்தையின் உடலை முன்வைத்து அவள் தனது தந்தைக்கான பிரிவு வந்தனங்களையும் மரியாதைகளையுமே மனத்தளவிலும் நிறைவேற்றுவதாகக் கருதிக்கொண்டிருந்தாள். இன்னொரு வாய்ப்பு கிட்டுகையில் பெற்றோரிடம் நன்னடத்தையைக் காட்டிக்கொள்ள முயலாதோர் நம்மில் உண்டோ…
பின்னால் அவளையே கவனித்திருக்கும் விவேக்கின் பார்வையும் அதன் தூரம் துறந்த தொடுகையும் சார்ந்த ஆணின் காமக்கழிவினங்களும் மனத்திரைக் காட்சிகளாகப் புலனாகின. ஆணுறை அணிந்த ஆச்சார வகையிலிருந்து ‘ஆனல் செக்ஸ்’ வரை அனைத்தையும் அனுபவித்தவளே. பாரம்பர்யம் என்கையில் பரிசுத்தமாகத் தோன்றும் பெண்களின் சேவித்தல்முறை படிதாண்டி பண்பாடு களைந்ததும் பரிணாமச் சிதைவில் கவனிக்கும் எந்த ஆணிடமும் ஆதிமனித உணர்வுகளை எழுப்பிவிடக்கூடியதே. ஆப்பிரிக்க நியாண்டர்தல் சேர்த்து ‘டாகி ஸ்டைல்’ விரும்பாத ஆண்மகனா… அவள் அறியாததா…
இன்னொரு தருணத்தில் இன்னொரு வீட்டில் இன்னொரு வயதில் எழுந்து சென்று கன்னத்தில் அறைந்திருப்பாள். இன்னொரு தருணத்தில் தாயைத் தவிர வேறு ஒருவரையும் சேவித்தே இருக்க மாட்டாளே. இவ்வளவு கடந்து வந்துவிட்ட இன்று அவ்வகைப் பண்பாடும் அதைப் பேணிப் பாதுகாத்துப் போற்றும் வாழ்வியல் புலமும் அவளுக்கு அமெரிக்காவிலும் வாய்த்திருக்கவில்லையே. தேவையுமில்லை. கோபம் இரைத்தது. என் வாழ்க்கை என் கைகளில் என் கைகளில் மட்டுமே வேறு ஒருவரும் தேவையுமில்லை…
முயன்று முங்கியெழுந்து மீண்டுமொருமுறை உடலை இடையில் வளைத்து மடிப்புகளுடன் புடவையினுள் பருத்து அகன்ற பின்னழகு எழிலாகச் சேவித்தாள். நிமிர்ந்து தொடையின் வாளிப்பு வெளிப்பட ஒரு கால் மண்டியிட்டு எதிரே சவமாகியிருந்த இன்னொரு தந்தையை வணங்கினாள். இடையைச் சுற்றி இறுகியிருந்த தலைப்பு இளகி இடங்கொடுத்து நாபியை நோக்கி மடிப்புகளாய் வளைந்திறங்க எழுந்து புடவைக் கொசுவத்தைச் சரிசெய்து கூட்டிப் பிடித்தவாறு இடையாட அப்பொழுதுதான் திரும்பி அவனைக் கவனிப்பதுபோல அறையின் மறுகோடியில் எழுந்து நின்ற விவேக்கை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
பிரிவில் அவனுடன் ஒன்றுபட்டதாகக் கருதிக்கொண்டதில் அவள் மனத்தில் விலகலில்லை. தன் மனம் அனுமதித்துவிட்ட அவனது தகாத பார்வை மீதாய் அன்று சினமில்லை. வரித்தவன் வெறிக்கையில் பெண்மைக்கு வெறுப்பில்லையே.
சேவித்து முடித்து அழுதுகொண்டிருந்த வந்தனாவைச் சமாதானப்படுத்தி வாசுகி உள்ளே அழைத்துச் சென்றாள். வந்திருந்த தன் பெற்றோரை உணவளித்து வழியனுப்ப வேண்டுமென்பதால் அவள் விவேக்குடன் இடுகாடு வரவில்லை என்று சொல்லிவிட்டாள். வருணை முறைத்து கண்ஜாடை காட்டிவிட்டு வைதேகியும் தோழியை கவனிக்க உடன் சென்றாள். ஓரிருவர் பாடையை யார் எடுக்கப் போகிறார்கள் படிகளில் எவ்வாறு கீழே கொண்டு செல்லப் போகிறார்கள் என்று விளக்கங்கள் கோரி பதில்கள் வழங்கி அதனருகில் வெட்டியாய் வளைய வர வருணும் வெங்கட்டும் வேட்டிகளை வரிந்துகொண்டு வந்தனர்.
பிள்ளை கொள்ளி போட மட்டுமே என்று விவேக்கைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அந்தணர்கள் என அறியப்பட்ட நால்வர் சுமக்க விவேக்கின் தந்தை இடுகாட்டிற்குச் செல்வதற்குப் படியிறக்கப்படலானார்.
பிணம் உயிருடலைவிட கனத்தது. முதல் மாடி இறங்குவதற்குள் ஒருவர் கழன்றுகொள்ள வெங்கட்டிற்கு வியர்த்து வெலவெலத்து விட்டது. நாச்சியார் கோயில் கல்கருடன் போல படிகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் பிணத்தின் கனம் அதிகரிப்பதாய் அவருக்குத் தோன்றியது. படபடவென்றாகி ஒரு கட்டத்தில் அடுத்த கால் எடுத்துப் படியிறங்குவதற்குள் பாடையில் கைப்பிடி நழுவி… உடல் அபாயமாகச் சரிய… அய்யோ பாத்து பாத்து… ஓரிருவர் அலற பின்னால் கருப்பாய் மத்திய வயதில் சந்தனப்பொட்டில் சாதா சட்டை பேண்டில் படியிறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பாய்ந்து பாடையைத் தாங்கிக்கொண்டார்.
“சரியான சமயத்தில் கைகொடுத்து உதவிட்டீங்களே… தேங்ஸ்… நீங்க யாரு… உறவா…” வியர்வையை கைக்குட்டையால் துடைத்தவாறு அருகில் படியில் அமர்ந்துகொண்டுவிட்ட வெங்கட் வினவினார்.
“சாவுல உதவச் சகலையாவா இருக்கோணும். மனுசனுக்கு மனுசன் அவசரத்துல உதவலைனா எப்புடி… இதிலென்ன கண்டீஹ. நாணு… மருந்து கம்பேனி. பக்கமாதேங். அடுத்த தெருவுல. அண்ணாச்சி மெடிக்கல்ஸ். எங்கிட்டல்ல இவுஹ இம்பூ..ட்டு நாளா மருந்து வாங்கினுருந்தாவ. பொழச்சுருவாஹன்னே யிருந்தேன். பொசுகுனு போயிட்டாவ. மனசு கேக்கலை. கடையப் பூட்டிட்டு வந்ட்டேன். நீங்க ரெஸ்ட் எடுங்கண்ணே… நானே இறக்கிடறேன். நம்மாளு இவுரு.” திணறலாகப் பேசிக்கொண்டே படியிறங்கினார்.
ஒரு பக்கம் பொய்ப் பூணூல் ‘பிரும்மச்சாரி’ வருணும் மறுபக்கம் முகாந்திரம் தெரியாத மருந்து கம்பெனிக்கார அண்ணாச்சியுமாய்ப் பாடையை சில மாடிகள் படிகளில் சிரமத்துடன் இறக்கி வண்டியேற்றி விட்டார்கள்.
“நானும் வர்றேன். அதான் கார் இருக்கே… இங்க என்ன செய்றது…” வாசலில் விவேக் கை பிடித்து விவிதா கோரினாள். ஆண்டுகள் முன்னால் அவள் அம்மா இறந்ததும் பெண்கள் இடுகாட்டிற்குப் போகக்கூடாது என்பதை அவளுக்காக வாதிட்டு மீறியவர் இல்லையா அவள் தந்தை. அவருடன்தான் போக முடியவில்லை…
காரோட்டி வேதமூர்த்தி ஒன்றும் பேசாமல் கதவுகளைத் திறந்துவிட்டுக் காத்திருந்தான்.
அவன் நடத்தும் ‘மூகாம்பிகா டிராவல்’சில் மூன்று கார்களே. ஒன்றை விவிதாவிற்காக அவனே ஓட்டி வருகிறான். ஒட்ட வெட்டிய நரைத் தலை. வெயில் வியர்ப்பில் மங்கியிருந்த நெற்றித் திருநீறு நடுவே கருத்திருந்த குங்குமப் பொட்டு. மணிக்கட்டில் சிவப்புக் கயிறில் தாயத்து. கழுத்தில் ருத்திராக்ஷம். வாசம் வராத வெள்ளைச் சீருடை. அவள் கம்பெனி சொல்லி வைத்திருந்த ‘ஏஜென்சி’யில் இருந்து பரிந்துரைத்ததாக வந்தவனிடம் ‘குடிப்பியா…’ என்று கேட்டதற்கு ‘கார் ஓட்டும்போது செய்ய மாட்டேம்மா…’ என்று அவன் அளித்த உண்மையான பதில் அவளைச் சாதகமான முடிவெடுக்க வைத்தது. ஐடி கம்பெனிகளில் வழக்கமாக மாத வாடகை அல்லது ஆறு மாத ‘காண்டிராக்ட்’ என்றே அமர்த்திக்கொள்வார்களாம். ஒரு வருடம் முழுவதுமாக விவிதா தனக்கென வேதமூர்த்தி காரை ஒப்பந்தம் செய்திருந்தாள்.
அவர்கள் இருவரும் பின்னால் ஏறிக்கொண்டதும் ஓசையின்றி மூடிக் கிளம்ப ஆயத்தமாகையில் ஆசுவாசமாய் வெங்கட் வெளியே வந்தார். இருமினார். சைகை செய்து அவரும் விவிதாவின் காரில் ஓட்டுநருக்கு அருகிருக்கையில் ஏறிக்கொண்டார்.
அவர்களுடன் காரில் ஏறுவதைத் தவிர்க்க வருண் தான் பாடையுடன் சவ வண்டியிலேயே வருவதாய் அதில் ஏறிக்கொண்டான்.
தந்தையின் பூதவுடலைத் தகனம் செய்ய வேதமூர்த்தி அழைத்துச் செல்ல விவிதாவின் துணையோடு விவேக் ஆயத்தமானான்.
கார்காலக் கனலோன் காமத்தீயைக் கட்டுப்படுத்தக் கார்முகிலினுள் கதிர்மங்கியிருந்தான்.
பின்மதியம் போக்குவரத்து புகைத்துப் பணிந்திருந்தது. பிணத்தின் கால்மாட்டருகே வெற்று மார்பில் கால்களை வெளியே தொங்கவிட்டிருந்த வருணை போக்குவரத்துப் பாதசாரிகள் விநோதமென நோட்டம்விட டெம்போ குதித்து விரைந்தது.
இடுகாட்டில் சவத்தைத் தகனம் செய்வதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்தன. பாடையை உடலுடன் மோடையில் வைத்து அதைச் சுற்றி வந்து விவேக்கை மந்திரங்கள் சொல்லச் சொல்லி வாய்க்கரிசி போட வைத்தார் வாத்தியார் சுவாமிகள்.
மின்சாரச் சிதையினுள் அனுப்புவதற்குத் தண்டவாளத்தின் மீதாய் விவேக்கின் தந்தை பாடையிலிருந்து எடுத்து இரும்புச் சட்டகத் தட்டில் கிடத்தப்பட்டிருந்தார். விராட்டிகளினால் முகம் தவிர உடலின் ஏனைய பாகங்கள் மூடப்பட்டிருந்தார். திறந்திருந்த வாயினுள் விவேக் போட்டிருந்த அரிசிக் கவளம் வெளிறிச் சிரித்தது. வெட்டியான் சாராய நெடியுடன் இரும்புச்சட்டகத்தின் பக்கவாட்டில் அதை உலையினுள் உந்தித்தள்ளும் நெம்புகோலைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். இன்னொருவன் மின்சார இணைப்பை பலங்கொடுத்து அடித்து டிரான்ஸ்பார்மருடன் பொருத்தினான். பொறி பறந்தது. மின்சிதை இப்போது ஓங்கிக் கனன்றது. ஊனைப் புசிக்க உற்சாகமாய் ஊளையிட்டது.
சற்று தள்ளி வருண் நின்றிருந்தான். சிதையருகே விவேக். அவனருகே பின்னால் விவிதா.
மின்சிதை உடலைப் பொசுக்கும் பதத்திற்கு வந்துவிட்டதை வெப்பமானியில் கண்டு வெட்டியான் ஆமோதிக்க வாத்தியார் சுவாமிகள் சமிக்ஞை செய்ய இன்னொருவன் சட்டென நெம்புகோலை பலங்கொண்டு நிமிர்த்த தண்டவாளத்தில் விராட்டிகள் சரிய கடகடவென உருண்டு இரும்புத் தட்டு முன்னேறி கனன்று அப்போதே பிளந்திருந்த சிதைவாயின் தீநாவினுள் விவேக்கின் தந்தையின் உடலை உணவென உந்தித் தள்ளிவிட்டுத் தான் மட்டும் காலியான தேக்கரண்டியாய் எதுக்களித்துப் பின் திரும்ப…
தந்தையின் உடல் சிதையினுள் சரிவதைக் கண்டவனுக்குப் பொறுக்கவில்லை. அதிகாலைக் குளிரில் ஸ்கூட்டரில் விரைகையில் ஆதரவளித்த அதன் வெதுவெதுப்பான முதுகும் அவனுக்கு ஐஐடி-யில் இடம் கிடைத்த பெருமிதத்தில் விம்மியிருந்த அதன் மார்பும் இன்று வெந்தணலில் விறகோடு விரயமாவதை விவேகத்தைப் பெயரிலேயே கொண்டவனாலும் பொறுத்திருக்க முடியவில்லை. ஓ-வென அலறியவாறே விவேக் தந்தையின் உடலுடன் சிதையினுள் பாயப்போனான். பாய்ந்துமிருப்பான். ஏய்… வாட்… என்ன… என விவிதா அலற வெங்கட் செய்வதறியாமல் சமைய வருணின் பலமான கைகள் விவேக்கைப் பின்னாலிருந்து அலாக்காய்த் தூக்கி இழுத்து அப்புறமாய்க் கடாசின. சிதறித் தடுமாறி சீற்றமும் விசும்பலுமாய்ச் சுதாரித்து எழுந்தவனை விவிதா தாங்கிக்கொண்டாள். அவள் தோள்களில் தேம்பியவாறே சரிந்தான் விவேக். நொடிகளில் வெங்கட் அவன் தோளை ஆதரவாய் வருடிக்கொண்டிருந்தார். பழகிவிட்ட காட்சியின் மரத்தலுடன் வெட்டியான் துணி சுற்றிய முகத்தை எட்டி அதன் வெப்பத்திற்குப் பழகிவிட்ட இடுங்கிய கண்களால் சிதையினுள் பிணம் முழுவதுமாகச் சென்றுவிட்டதா என்பதை கவனித்திருந்தான்.
முழுவதும் எரிந்து முடிக்க அரை மணியாகும். சாம்பலை எடுத்துக் குவளையில் தந்து விடுவார்கள். கடலில் கரைக்க… மனிதருள் மங்கோலியா மனிதனின் மாமறதியில் மங்கி மறைந்திடுவார்.
வருண் வெளியே வந்து நின்றுகொண்டான். இங்கே சிகரெட் குடிக்கலாமா…
அனைவரையும் வெளியே காத்திருக்கச் சொன்னார் வாத்தியார் சுவாமிகள். பாடையை எடுத்து வந்த வருணிற்கும் எடுத்து வந்ததாய்ப் பெயர் பண்ணிய வெங்கட்டிற்கும் விவேக்கை ‘தட்சிணை’ வழங்கச் சொல்லிப் பணித்தார். அஸ்தி கரைத்து விட்டு விவேக் வெங்கட் இருவரிடமும் வீட்டிற்குப் போய் குளித்துச் சவரம் செய்து கொள்ளச் சொன்னார். விவேக்கிற்கு அடுத்த பத்து நாள் தீட்டு என்றார். வருணிடம் “பிரும்மச்சாரி நீர்… உமக்கு ஒருநா கூட தீட்டில்லை. ஆத்துக்கு போயி குளிச்சுட்டு திவ்யமா அடுத்த வேலயப் பாக்கலாம்…” என்றார்.
ஒற்றைவடப் பூணூலைப் பார்த்து ஏமாந்து நான் பிரும்மச்சாரினு நெனச்சிட்டீங்களா… அப்ப இதையும் கழற்றி வெச்சிட்டா குளிக்கவும் வேண்டாமா… அங்கே மாடிப்படில பாடையத் தூக்கக் கைகொடுத்த ‘நான்-பிராமின்’ அண்ணாச்சி போல… கேட்க வந்ததை வெளியே சொல்லப் பிடிக்காமல் வாத்தியாருக்கு சல்யூட் அடித்துவிட்டு வருண் நகர்ந்து நின்று கொண்டான்.
காத்திருக்கையில் இருமித் தலை சொறிந்திருந்த வெட்டியான்களை விவிதா முன்னிலையில் தாராளமாய் ‘கவனித்தான்’ விவேக். அவர்கள் சிரித்துச் சலாமிட்டனர்.
“நமக்கே இப்டி இருக்கே… வீட்லேந்து பெண்கள் வந்திருந்தா… தாங்கிருக்க முடியாது அவங்களால…”
சிதையினுள் பாயப் போனதற்கு அங்கிருந்த அனைவருமே அவனைப் போலவே உணர்வுகளைச் சமாளிக்க முடியாத பலவீனர்கள் என்கிற விதமாக விவேக் சமாதானம் சொல்லிக்கொண்டான். உடனிருந்த விவிதாவை வீட்டுப் பெண்களுடன் சேர்க்கவில்லை. துயர் துலங்கிச் சுற்றத்திலிருந்து தன்னை ஏற்றிவைத்துக்கொள்ளும் வழக்கமான மேலாளர் மனநிலைக்கு வந்துவிட்டான் என்றானது வருணிற்கு. எரிச்சல் அதிகரித்தது.
இடுகாட்டின் பெயர்ப் பலகையில் ஒருபுறம் பெரிய வெண் தாடி காவித் தலைப்பாகையுடன் கண்கள் விரியச் சிரித்திருந்த சாமியார் படத்தைக் காட்டி வெங்கட் வருணிடம் பேச்சு கொடுத்தார். “கார்பரேட் சாமியார்கள்னு கிண்டலடிப்பியே… இவுரு தான் பாரு ஓசைப்படாம இப்டி நல்ல காரியம் செஞ்சுருக்கார். இல்லாட்டி சுடுகாடு இத்தனை சுத்தமா இருக்குமா. அரை மணிக்குள்ள தகனந்தான் செஞ்சுற முடியுமா…”
“குரு… இப்ப எதுக்கு தொடங்குறீங்க… வுடுங்க…” வருண் மனத்தினுள் சடசவென எண்ணங்கள் களேபரமாயின.
விவேக் மாதிரி ஒரு கார்பரேட் கிங்பின் நேரடியாகத் தன் கம்பெனியின் பணபலத்தை வெச்சு ஏன் இந்த இடுகாட்டை கட்டிக் கொடுக்கக் கூடாது? யாரும் கேட்பதில்லை. அதற்கே இங்கு மதம் பிடித்த சாமியார் தேவைப்படுகிறார். பிரைவேட் என்பதால் விவேக் மாதிரி ஆளு மனசு வெச்சு முனைஞ்சா எல்லா ஜாதி மதத்துக்கும் பொதுவான இடுகாடு செய்ய முடியுமே. அது என்ன இந்து இடுகாடு… ஐம்பது வயசு வரைக்கும் தொடர்ந்து ஐடி பணியாளரா இருந்தாலே ஒருத்தன் பிணந்தான். நேர ஆபீஸ்லேந்து விவேக் கட்டுற இடுகாட்டுல வந்து படுத்துக்கலாம். அவனை விடுங்க… ரொம்ப பிஸி-ம்பான். ரிடையரானப்பறம்… அப்டீம்பான். உங்க மாதிரி நல்லவங்க நாலு பேரு மால்யா போன்ற சாராயங் காச்சுறவனுக்கும் நிரவ் மோடிக்கும் லோன் கொடுக்காம மாநகர் வளர்ச்சிப் பணினு இந்த மாதிரி இடுகாடு கட்ட பேங்குல வருடாந்திர மான்யம் ஒதுக்கலாமே… வங்கியில் மக்கள் பணம் வைக்கணும்னா வங்கியோட நல்ல காரியப் பட்டியலுக்கு சிறு தொகையை வருடாந்திர வட்டிலேந்து எடுத்துக்கொள்ளும்னு முன்னறிவிச்சுடலாமே. பொதுமக்கள் அத்தனை முட்டாள்களா… ஒழுங்கா நடக்கற நல்ல காரியங்களுக்கு உதவ மாட்டேங்கறதுக்கு. செய்ய மாட்டாங்க. கேட்டா பவர் இல்ல… அரசாங்கம் குறுக்கிடும்… இப்டி எதையாச்சும் சொல்வாங்க. நல்லதுக்கு உதவாமல் இருக்கப் பணத்தப் பூட்டிவைக்க ஆயிரம் சட்டம் போட்டுகினு எந்தப் புண்ணாக்குக்கு நம்ம நிலைக்கு அரசாங்கத்தையும் அரசியல்வாதியையும் மட்டுமே குறை சொல்றாங்க… நல்ல மதங்கறது மனசுலயும் பேச்சுலயும் இருந்தா பத்தாது குரு… நல்ல செயல்ல இருக்கணும். தெறித்தோடும் சிந்தனையைக் கட்டுப்படுத்த முயன்றான். யோசித்த எதையும் எதிரில் வெங்கட்டிடம் பகிரவில்லை. இந்நேரத்தில் எதற்கு வீண் சண்டை வாக்குவாதம்…
“…விவேக் மாதிரி படித்த கார்பரேட் முட்டாள்களும் ஒங்கள மாதிரி அந்தண அப்பிராணிகளும் இருக்கவரைக்கும் கார்பரேட் சாமியார்கள் காட்டுல என்னிக்கும் மழைதான். என்ன மாதிரி தறுதலைக்குதான் இன்னி தேதில நாட்டுல நல்ல காலமில்லை. நான் கிளம்பறேன் குரு…”
“ஏய்… ஏன்… சமுத்திரத்துல அஸ்தி கரைக்க வரலியா… கிளம்பறேங்கற. இவ்ளோ செஞ்சே… விவேக் ஏதாவது நினைச்சுக்கப் போறான்டா…”
“இல்லை. அதான் வீட்லேந்து கொண்டுவந்து தகனம் செஞ்சுட்டம்ல. தேகி சொன்னதை செஞ்சுட்டேன். அஸ்தி கரைக்க கடலுக்கில்ல… விவிதா கார்ல போவணும்பீங்க. நமக்கு ஒவ்வாது. வேட்டிய அவுத்து வேலில போற ஓணான் மேல போர்த்துவானேன்… வர்ட்டா…”
அவன் தலைகீழ் உவமையில் வெங்கட் குழம்பி நிற்க அவர் பதிலுக்குக் காத்திராமல் விவேக்கிடமும் விவிதாவிடமும் முறையாக விடைபெறாமல் இடுகாட்டிற்கு வெளியே தெருவிற்கு வந்த வருண் கடந்து சென்ற ஆட்டோவைக் கைதட்டி நிறுத்தி ஏறிக்கொண்டான். ஆட்டோவின் முறுக்கேறிய மப்ளர் சீற்றம் அவன் மனமென்றானது. அது வயிறெரிந்து கக்கிய வெண்புகைத் திரையினுள் விரைந்து மறைந்தான்.
*
அருண் நரசிம்மன் எழுதிய ‘இல்புறம்’ நாவலிலிருந்து ஒரு பகுதி. தமிழினி வெளியீடு.