ஆண்டின் இருண்ட, ஒலியற்ற ஒரு நாளின் இறுதிப்பொழுது; மேகங்கள் சொர்க்கத்தின் நுனியில் தவழ்ந்துகொண்டிருந்தன. மிகக்குறைந்த ஜீவனும் அழகும் கொண்ட நகரைப் பகல் முழுதும் குதிரையில் அமர்ந்தபடி சவாரி செய்த பின் அஷரின் இந்த வீட்டை அந்தியில்தான் கண்டடைய முடிந்தது.
அது எப்படி இருந்தது என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் முதல் பார்வையிலேயே அது என் ஆன்மாவைத் துயரத்தால் நிறைத்தது. அந்த வீடு, அதைச் சுற்றியுள்ள நிலம், குளுமை பரவிய கட்டிடச் சுவர்கள், விழிகளின் வடிவத்திலிருந்த வெறுமையான சாளரங்கள், உயிரற்ற சில மரங்கள் என என் கண்முன்னே அந்த வீட்டைப் பற்றிய காட்சி விரிகிறது. மண்ணுலகத் தொடர்பு சிறிதும் இல்லாதான உணர்வை ஏந்தி முற்றும் துயரடைந்த என் ஆன்மாவுடன் அந்த வீட்டைப் பார்க்கிறேன். சில்லிட்டு நோய்மையுற்று இருக்கிற என் இதயத்தின் கனத்தை எதைக் கொண்டு குறைப்பதெனத் தெரியவில்லை. அஷரின் அந்த வீட்டின் காட்சி ஏன் என்னை இவ்வளவு அச்சமூட்டுகிறது? எது என்னை இப்படிப் பயப்பட வைக்கிறது என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கேள்விக்கான பதிலை என்னால் அறிய முடியவில்லை.
வீட்டின் பின்புறம் அமைதியில் உறைந்திருந்த கறுத்த குளத்தினருகே என் குதிரையை நிறுத்தினேன். அந்தக் குளத்துநீரில் உயிரற்ற மரங்களும், விழி வடிவ வெறுமையான சாளரங்களும், அந்த வீடும் பிரதிபலிப்பதைப் பார்த்தேன். துயரமும் இருளும் நிறைந்த இந்த வீட்டில் நான் பல வாரங்களைக் கழிக்கவேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தேன். அந்த வீட்டின் எஜமானன் ரோடரிக் அஷர். நாங்கள் சிறுவர்களாக இருந்த காலந்தொட்டே நண்பர்கள். ஆனாலும் நாங்கள் சந்தித்துப் பல வருடங்களாகிவிட்டிருந்தன. அவனிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதற்கான என்னுடைய பதில் என் வருகையாயிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தன் நோயை, மன நலமின்மையை, தனக்கிருக்கும் சிறந்த ஒரே நண்பனாகிய என்னைச் சந்திப்பதற்கான ஆசையை அதில் எழுதியிருந்தான். அது சொல்லப்பட்ட விதமும் அதிலிருந்த ஜீவனும் என்னை மறுத்துப் பேசவிடவில்லை.
சிறு வயதில் நாங்கள் ஒன்றாக இருந்தபோதும் என் நண்பனைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய குடும்பத்தினர் கலைகளில் நுண் பார்வை கொண்டவர்கள். அத்துடன் ஏழைகளுக்கு உதவுபவர்களாகவும் இருந்ததால் புகழ் பெற்று விளங்கினர் என்பதுமட்டுமே எனக்குத் தெரியும். நிறைய கிளைகள் கொண்ட பெரிய குடும்பமாக அது இல்லை என்றும் நான் அறிந்திருந்தேன். குடும்பப் பெயர் எப்போதும் தந்தையிடமிருந்து மகனுக்கு வந்தபடி இருந்தது. அஷரின் வீடு என்று சொல்லும்போதெல்லாம் மக்கள் அக் குடும்பத்தினரையும் அந்த வீட்டையும் இணைத்தே குறிப்பிட்டனர்.
ஏரி நீரில் தெரியும் வீட்டின் பிம்பத்தை இப்போது மறுபடி பார்க்கிறேன். என் சிந்தனையில் ஒரு வினோதமான யோசனை வளர ஆரம்பிக்கிறது. அது எவ்வளவு வினோதமானது என்றால் அது என் மீது சுமத்துகின்ற உணர்வுகளின் அழுத்தம் தாளமுடியாத அளவுக்கு. அந்த வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் வீசும் காற்று வேறு மாதிரியாக இருப்பதாக நான் நிச்சயமாக நம்பினேன். அது சொர்க்கத்திலிருந்து வரும் காற்று இல்லை. இறந்துபோன அழுகிய மரங்களிலிருந்தும், சாம்பல் நிறச் சுவர்களிலிருந்தும், அமைதியான ஏரியிலிருந்தும் எழுகிற காற்று. மெதுவாக நகர்கிற சாம்பல் நிறத்துடைய அந்தக் கனத்த காற்று ஆரோக்கியமற்ற நோய்மையுற்ற ஒன்றாக இருப்பதை என்னால் பார்க்கமுடிந்தது. கனவாக இருக்க வாய்ப்புள்ள ஒன்றிலிருந்து என்னுடைய ஆன்மாவை இறுக்கியபடி அந்தக் கட்டிடத்தை இன்னும் கவனமாகப் பார்த்தபோது, கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தது அதனுடைய வாழ்நாள் தான். அதன் எந்தச் சுவரும் இன்னும் விழுந்துவிடவில்லை என்றாலும் கற்கள்மட்டும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டன. கட்டிடத்தின் முன் பக்கத்திலிருந்து தோன்றும் விரிசலான இடைவெளி சுவர் உச்சியில் தொடங்கி இறுதிவரை நீண்டு, பிறகு ஏரியின் கருத்த நீரில் மறைந்து போவது, கவனமாகப் பார்வைக்கு நிச்சயம் தப்பாது.
2
நான் சிறுவயதில் அறிந்திருந்த ரோடரிக் அஷர் இப்போது உடல்நலம் குன்றியிருப்பதால் தன்னைச் சந்தித்து உதவுமாறு என்னை அழைத்திருந்தான். நான் அங்கு சென்று சேர்ந்த போது கல்லால் கட்டப்பட்ட புராதனமான அந்தப் பெரிய வீடும், அந்த வீட்டின் முன் இருந்த ஏரியும் விசித்திரமானவையாகவும் அச்சம் தருபவையாகவும் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அஷரும் கூட அப்படித்தான் காணப்பட்டான். அவன் தோற்றம் ஒரு இயல்பான மனிதனைப் போலில்லாமல் சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்த ஒரு ஆவியைப் போல இருந்தது. தனக்கிருந்த நோயால் நிச்சயமாக “நான் இறந்துவிடுவேன்” என்றவன், தன்னுடைய நோயின் பெயர் ‘அச்சம்’ என்றும் குறிப்பிட்டான். “என்னுடைய அச்சம் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றியல்ல; எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றியே. எனக்கு வலியைப் பற்றிய அச்சமில்லை; அதன் விளைவுகளைப் பற்றிதான் – பயத்தைப் பற்றி மட்டுமே. அந்த பயங்கரமான அச்சம் என்கிற எதிரியுடனான கடைசி யுத்தத்தில் என்னுடைய உயிரை, மனதை என் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக நான் இழக்கிற காலம் விரைவில் வந்துவிடும் என்பதை உணர்கிறேன்” என்றான்.
தொடர்ச்சியோ நிச்சயமோ அற்ற ஆனால் அர்த்தம் நிறைந்த சொற்களின் மூலமாக அஷரின் மனநிலையைப் பற்றிய மற்றொரு விசித்திரமான உண்மையையும் நான் மெதுவாக அறிந்துகொண்டேன். அவனுக்கு அவன் வாழ்ந்த வீட்டைப் பற்றி மிகுந்த அச்சம் இருந்தது. பல வருடங்களாக அந்த வீட்டை விட்டு வெளியே போகவேயில்லை.அந்த வீடு, அதன் சாம்பல் நிறச் சுவர்கள், வீட்டைச் சுற்றியுள்ள அமைதி, உறைந்து போயிருந்த அந்த ஏரி இவையெல்லாம் பல வருடங்களாகத் தன்னுடைய ஆன்மாவின் மீது ஒரு வலுவான கட்டுப்பாட்டைச் செலுத்துவதாக அவன் உணர்ந்தான்.
தன்னைச் சூழ்ந்திருக்கும் பெருத்த சோகத்துக்கான முக்கியக் காரணம், வெளிப்படையாகத் தெரியாத ஒரு காரணம், பல வருடங்களாக தனக்கான ஒரே துணையாகவும் நோய்வாய்ப்பட்டும் இருக்கின்ற தனக்கு நெருக்கமானவளும் அன்பு மிகுந்தவளுமான தன்னுடைய சகோதரியை நோக்கி வந்து கொண்டிருக்கிற மரணம்தான் என்றான். இக் குடும்பத்தின் மிச்சமிருக்கிற ஒரே உறுப்பினர் அவள் தான். “அவள் இறக்கிற போது” என்று அவன் சொன்னதும் எனக்கு ஏற்பட்ட துயரத்தை எப்போதும் மறக்கமுடியாது . “அவள் இறக்கிறபோது இந்த பழம்பெரும் குடும்பத்தின் கடைசி ஆளாக, இந்த அஷர் வீட்டின் கடைசி ஆளாக நான்மட்டுமே இருப்பேன்” என்றான்.
அவன் பேசிக்கொண்டிருக்கையில் மேடலின் என்று அழைக்கப்பட்ட அவன் சகோதரி அந்த அறையின் நீண்ட மூலையைக் கடந்து சென்றாள். நான் அதை முதலில் கவனிக்காமல் அமர்ந்திருந்தேன். பிறகு பெரும் வியப்புடனும் அச்சத்துடனும் அவளை நான் பார்த்தேன். ஆயினும் என்னால் அந்த உணர்வுகளை முழுமையாக விளக்கிச் சொல்ல முடியவில்லை. என் கண்கள் அவளைத் தொடர்ந்தன. அவள் கதவருகே வந்து அதை மூடிவிட்டுச் சென்றபோது என் கண்கள் அவளுடைய சகோதரனுடைய முகத்தை நோக்கித் திரும்பின. ஆனால் அவன் தன்னுடைய முகத்தை தன் கைகளில் ஏந்தியபடி இருந்தான். மெல்லிய விரல்களின் இடையே அவன் கண்ணீர் முன்னெப்போதையும்விட வெண்ணிறமாக வழிவதைத்தான் என்னால் அப்போது பார்க்கமுடிந்தது.
மேடலினின் நோய் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாததாக இருந்தது. அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவளுடைய உடல் நாளுக்கு நாள் மெலிந்து வலுக் குறைந்தபடி இருந்தது. மரணமொத்த ஒரு துயிலுக்குள் அவள் அடிக்கடி ஆழ்ந்து கிடந்தாள். படுக்கையில் கிடக்குமாறு இதுவரை அவள் வற்புறுத்தப்படவில்லை. ஆனால் அவளை அழிக்க முயல்பவரின் ஆற்றல் அந்த வீட்டுக்குள் நான் நுழைந்த அந்த மாலை நேரத்தின்போது மிக அதிகமாக இருந்ததாக அஷர் அன்று இரவு என்னிடம் சொன்னான்.
தொடர்ந்து வந்த பல நாட்களில் அவளுடைய பெயர் எங்கள் இருவராலும் உச்சரிக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் என்னுடைய நண்பனை அவனுடைய சோகத்தில் இருந்தும் விரக்தியில் இருந்தும் மீட்டெடுக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக ஓவியங்கள் வரைந்தோம்; சில சமயங்களில் ஏதோ கனவில் இருப்பதைப் போல அவன் வாசித்த இசையில் மூழ்கினோம். இப்படியாக எங்களுக்குள் ஒரு இதமான அன்பு நிறைந்த நட்பு வளர ஆரம்பித்தது. இருளை மட்டுமே சுரந்து உலகின் எல்லாப் பொருட்களுக்கும் முடிவற்ற துயரத்தைப் பரப்புகிற ஒரு மனதுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வர முயற்சிக்கும்போது அதில் உள்ள ஒருவிதம் பயனற்ற தன்மையை நான் அப்போது தெளிவாக உணர்ந்தேன்.
அஷருடன் நான் செலவிட்ட மணித்துளிகளை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனால் நாங்கள் இருவரும் செய்த விஷயங்களின் உண்மையான இயல்பைப் பற்றிய தகவல்களைத் தருவதில் என் முயற்சி தோல்வியையே தரும். அந்த வீட்டில் இருந்த எல்லாப் பொருட்களின்மீதும் ஒரு விசித்திரமான ஒளி பரவி இருந்தது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் வரைந்த ஓவியங்கள் என்னை நடுக்கமுறச் செய்தன. அவற்றைப் பற்றி பேசுவது எழுதப்படக் கூடிய சொற்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. ஒரு எண்ணத்தை ஒரு மனிதனால் வரைய முடியும் என்றால் அந்த மனிதனின் பெயர் ரோடரிக் அஷராகத் தானிருக்க முடியும்.அந்த ஓவியங்களில் இருந்து அச்சமும் வியப்பும் பீறிட்டன.
அந்த ஓவியங்களில் ஒன்றைக் குறித்துச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பலவீனமான சொற்களால்மட்டுமே அதைச் சொல்ல இயலும். அது இறந்தவர்களை வைக்கக்கூடிய பிணவறையின் உட்புற வடிவத்தை, வெண்ணிறத்தாலான காலியான குட்டைச் சுவர்களைக் காட்டியது. பூமியின் மிக ஆழத்தில் அது இருப்பதாக எனக்குத் தோன்றியது. அந்த ஓவியத்தில் கதவுகளோ சாளரங்களோ ஒளியோ நெருப்போ எதுவுமில்லை. ஆனால் ஒளியின் நதி கோரமான பிரகாசத்துடன் அதனூடாகப் பாய்ந்து அதை நிறைத்தது.
அஷர் கேட்கும் அத்தனை வகையான இசையையும் அவனுடைய வலியை அதிகப்படுத்துவதாக மாற்றிய அவன் புலன்களில் இருந்த நோய்த் தன்மையைப் பற்றி நான் முன்பே சொல்லியிருந்தேன். மகிழ்வுடன் அவன் கேட்கக்கூடிய இசைக் குறிப்புகள் வெகு குறைவு. அவன் வாசித்த இசை மற்ற எல்லாவிதமான இசையைவிட வித்தியாசமாக இருந்ததற்கு ஒரு வேளை இதுதான் காரணமாக இருக்கும். ஆனால் அவனுடைய இசையின் அழுத்தமான அழகைப் பற்றி என்னால் விளக்கமுடியாது. என்னால் சுலபமாக நினைவுகொள்ளக் கூடியது அவனுடைய பாடல்களில் இருந்த ஒரு சொல்லான “பேய் பிடித்த மாளிகை” என்பதுதான். தன்னுடைய மனம் பலவீனம் அடைந்து வருவதை அவன் அறிந்தே இருக்கிறான் என்பதை நான் அப்போது முதல் முறையாகப் பார்த்தேன் என்றும் நினைத்தேன். அந்தப் பாடல், ‘ஒரு பெரிய வீட்டில் அதாவது மாளிகையில் ஒரு அரசன் வசித்தார் என்றும், அந்தப் பசுமையான பள்ளத்தாக்கில் எல்லாமே ஒளியும், நிறமுமாக, அழகானதாக இருந்ததாகவும் காற்றுகூட மணமுள்ளதாக இருந்ததாகவும்’ சொன்னது. அந்த மாளிகையில் இரண்டு ஒளிபொருந்திய சாளரங்கள் இருந்தன. அவற்றினூடாக வந்த இசையை மகிழ்ச்சியான பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் கேட்டதுடன், புன்னகையுடன் அரசரைச் சுற்றி நகர்ந்தபடி இருக்கிற பூதங்களையும் கண்டார்கள். அந்த மாளிகையின் கதவு விலை உயர்ந்த சிகப்பு வெள்ளையால் ஆன பொருட்களால் செய்யப்பட்டிருந்தது. அதனூடாக உள் நுழையும் சில ஆவிகளின் ஒரே பணி தங்களுடைய இனிமையான குரலால் அரசர் எவ்வளவு அறிவானவர் என்பதைப் பாடுவதே.
ஆனால் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. பாடல் தொடர்ந்து ஒலித்தது. ஆனால் இப்போது பள்ளத்தாக்கில் நுழைபவர்கள் சாளரங்களின் வழியாக ஒரு சிவப்பு நிற ஒளியைப் பார்க்கிறார்கள். அந்த ஒளி குழப்பமான இசைக்கு நடனமாடுகிறது. கதவுகளின் வழியே நிறமற்ற பயங்கரமான பூதங்களின் நதி தெரிகிறது. அவை லேசாகப் புன்னகைக்காமல் எப்போதும் இளித்தபடியே வெளியேறுகின்றன.
இந்தப் பாடல் குறித்த எங்களின் பேச்சு வேறு ஒரு விசித்திரமான எண்ணத்தை அஷரின் சிந்தைக்குள் கொண்டு வந்தது. அவன் தாவரங்களால் உணரவும் சிந்திக்கவும் முடியும் என்று நம்பினான். தாவரங்கள் மட்டுமல்லாது கற்களும் தண்ணீரும் கூட அத்தகைய திறமுள்ளவை என்று நம்பினான். தன்னுடைய வீட்டின் சாம்பல் நிறக் கற்கள், சிறிய அந்தக் கற்களின் மீது வளர்கிற தாவரங்கள், இறந்து கொண்டிருக்கிற மரங்கள் ஆகிய யாவும் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவன் இன்றைக்கு இருக்கின்ற நிலைக்கு அவையே தன்னை ஆளாக்கியதாகவும் நம்பினான்.
பலகாலமாக அவன் வாசித்து வந்த நூல்கள் எல்லாமே நோயுற்ற ஒரு மனிதனின் ஆக்ரோஷ இயல்போடு இருந்திருக்கும் என்றும் தீர்மானமாக எனக்குத் தோன்றியது. அஷர் அவற்றில் சிலவற்றைப் பல மணி நேரங்கள் தொடர்ந்து வாசித்திருக்கிறான். மறந்துபோன ஒரு தேவாலயத்தைப் பற்றி எழுதப்பட்ட மிகப் பழைய நூலான ‘இறந்தவர்களின் மீதான பார்வை’ என்கின்ற நூலைப் படிப்பதில் தான் அவனுடைய மனம் தீவிர மகிழ்ச்சி அடைந்தது.
ஒரு நாள் மாலை, “மேடலின் உயிருடன் இல்லை” என்று சொன்னவன், அவளுடைய உடலை அந்தக் கட்டிடத்தின் சுவர்களில் உள்ள பெட்டகங்களில் ஒன்றில் சில காலம் வைக்கப் போவதாக சொன்னான். அவளுடைய நோயின் தன்மை, விந்தையுடனும் ஆர்வத்துடனும் மருத்துவர்கள் எழுப்பக்கூடிய கேள்விகள் மட்டுமின்றி, அவனுடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிடத்தப்பட்டுள்ள இடுகாடு அவ் வீட்டிலிருந்து தொலைவில் இருப்பது இருப்பதாலேயே தான் இதைச் செய்ய முடிவெடுத்ததாக அவன் சொன்னான். இக் காரணங்கள் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருந்ததை உணர்ந்தேன்.
நாங்களிருவரும் அவளுடைய உடலை அந்த வீட்டின் ஓய்வறைக்குக் கொண்டு சென்று, மிகவும் சிறியதாகவும் இருளடைந்தும் காணப்பட்ட ஒரு பெட்டகத்தில் அதை வைத்தோம். கடந்த காலத்தில் வினோதமான, குருதி வழிகிற காட்சிகளை அது கண்டிருக்கவேண்டும். அது அந்தக் கட்டிடத்தின் வெகு ஆழமான ஒரு பகுதியில் இருந்தது. முன்பு நானே அங்கு தூங்கியிருக்கிறேன். அதன் கதவு இரும்பால் செய்யப்பட்டு வலிமையுடையதாக இருந்ததால் திறந்து மூடும் போதெல்லாம் மிகப் பலமான ஓர் ஓசையை எழுப்பியது. மேடலினின் உடலை அந்த பயங்கரமான அறைக்குள் வைத்தபோது முதல்முறையாக அண்ணனுக்கும் தங்கைக்கும் இருந்த மிகப்பெரிய ஒற்றுமையை நான் பார்த்தேன். அஷர் தாங்கள் இரட்டையர் என்றும் இருவரும் ஒரே நாளில் பிறந்ததாகவும், அதனாலேயே அவர்கள் இருவருக்கும் இடையே சிறந்த புரிதலும் மிகப் பலமான பிணைப்பும் இருந்ததாகவும் சொன்னான். அவளுடைய முகத்தை இறுதியாக ஒருமுறை நாங்கள் பார்த்தோம். நான் வியப்பால் நிறைந்தேன். மேடலின் அங்கு படுத்துக் கிடந்தது இறந்ததைப் போல் அல்லாமல் தூங்குவதைப் போல இருந்தது. இறப்புக்குப் பிறகும் பார்ப்பதற்கு மென்மையாகவும் இதமாகவும் இருந்தாள். எங்களைச் சுற்றி இருந்த கற்கள் மட்டுமே சில்லிட்டுக் கிடந்தன.
3
ரோடரிக் அஷர் என்கிற என் நண்பனை, மரணம் காற்றில் ஊசலாடுவது போன்ற உணர்வைத் தருகிற, கற்களால் ஆன அவனுடைய பழைய வீட்டில், அதாவது அவனுடைய மாளிகையில் நான் சந்தித்தேன். அவனுடைய மனதையும் இதயத்தையும் பயம் எப்படி அழுத்திக்கொண்டிருந்தது என்பதைக் கண்டேன். அவனுடைய ஒரே சகோதரி மேடலினுடைய உடலை குளிர்ந்தும், இருண்டும் அச்சமூட்டும்படியும் இருந்த ஒரு பெட்டகத்தில் நாங்கள் வைத்தோம். நான் அவளுடைய முகத்தைப் பார்த்தபோது அவர்கள் இருவருக்கும் இடையேயான மிகப் பலமான ஒரு ஒற்றுமையைக் கண்டேன். “நிச்சயமாக! ஏனெனில் நாங்கள் ஒரே நாளில் பிறந்தோம்; எங்களுக்கு இடையேயான பிடிப்பு மிக உறுதியானது” என்றான் அஷர். அச்சமும் வியப்பும் எங்கள் இதயத்தைச் சூழ்ந்ததால் எங்களால் அவளை நீண்ட நேரம் பார்க்க முடியவில்லை. அவளுடைய உதடுகளில் இன்னும் சிறிது நேரம் நீடிக்கக் கூடிய புன்னகை இருந்தது. நாங்கள் அந்த இரும்புக் கதவை மூடிவிட்டுவந்து பெட்டகத்தைவிட அதிக சோகம் சூழ்ந்திருந்த அறைகளுக்குத் திரும்பினோம்.
இப்போது என்னுடைய நண்பனின் நோயுற்ற மனதில் ஒரு மாற்றம் வந்தது. அவன் வேக வேகமாக அடியெடுத்து வைத்தபடி ஒவ்வொரு அறையாகச் சென்றான். அவனுடைய முகம் முன்பைவிட மேலும் வெளிறிப்போய் பயங்கரமாக ஆனது. அவன் கண்களில் இருந்த ஒளியைக் காணவில்லை. அவன் குரலில் இருந்த நடுக்கம் மிகப்பெரிய அச்சத்தைக் காட்டியது. சில சமயங்களில் நான் கேட்க இயலாத ஏதோ ஒரு ஓசையைத் தான் கேட்பது போன்ற பாவனையில் வெறுமையைப் பார்த்தவாறு பல மணிநேரங்கள் அவன் அமர்ந்திருந்தான். நிச்சயமாக அவனுடைய நிலை என் மீது மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவதாக நான் உணர்ந்தேன். அவனுடைய ஆவேசமான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிலைகொள்வதை நான் உணர்ந்தேன்.
மேடலினை அந்தப் பெட்டகத்தில் வைத்ததற்குப் பின் வந்த ஏழாவது அல்லது எட்டாவது நாளின் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது அந்த உணர்வுகளின் முழு வலிமையை நான் உணர்ந்தேன். மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தன; உறக்கம் வரவில்லை. என்னுடைய மனம் தளர்வடைவதை எதிர்த்துப் போராடியது. நான் இவ்வாறு நினைப்பதற்குக் காரணம் சோகம் சூழ்ந்த அந்த அறையும், கறுத்த சுவர் ஓவியங்கள் காற்றில் மேலெழுந்து சுவர்களின் மீது அசைவதும் தான் என்று நம்ப விரும்பினேன். ஆனால் என்னுடைய முயற்சிகள் வீணாகின. என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நடுக்கம் என்னுடைய உடலில் நிறைந்தது. காரணமற்ற ஒரு அச்சம் என் இதயத்தைப் பீடித்தது. புயலின் போது அமைதியுற்று இருந்த சில மெல்லிய சப்தங்களைக் கேட்பதற்காக என்னுடைய அறையின் இருட்டைப் பார்த்தபடி என்னையறியாமல் நான் எழுந்து உட்கார்ந்தேன். ஒரு பயங்கரமான உணர்வு அழுத்தத்துடன் என் மீது படர்ந்தது. நான் உடை அணிந்து கொண்டு பதட்டத்துடன் அறையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன்.
அவ்வாறு நான் நடந்துகொண்டிருந்த சிறிது நேரத்தில் ஒரு மெல்லிய காலடியோசை என் அறையை நோக்கி வந்தது. அது அஷரின் காலடிச் சத்தம் என்று நான் அறிந்திருந்தேன். ஒரு வினாடியில் வழக்கம்போல வெளிறிய முகத்துடன் இருந்த அவனைப் பார்த்தேன். அவன் கண்களில் ஒரு ஆவேசச் சிரிப்பு இருந்தது. ஆனாலும் அவனுடைய துணை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. “நீ இதைப் பார்க்கவில்லையா?” என்று கேட்டான். வேகமாக என்னை ஒரு சாளரத்துக்கு அருகே அழைத்துச் சென்று அதைத் திறந்தான். புயல்.
உள்நுழைந்த காற்றின் வேகம் எங்களிருவரையும் கிட்டதட்ட மேலே தூக்கியது. அது நிச்சயமாக ஒரு புயல் நிறைந்த அழகிய இரவு. ஆனால் அது ஆவேசமும் விசித்திரமுமாக இருந்தது. கீழே தொங்கியபடி வீட்டை அழுத்திக் கொண்டிருப்பது போல் தோன்றிய மேகங்கள் தொலைவுக்குச் செல்லாமல் எல்லா திசைகளிலிருந்தும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் பறந்தபடியும், திரும்ப வந்தபடியும் இருந்தன. நிலவின், விண்மீன்களின் ஒளியைத் தங்களுடைய வலிமையான தன்மையால் துண்டித்தன. ஆனாலும் எங்களால் அவற்றைப் பார்க்க முடிந்தது. ஏனெனில் அவை கறுத்த ஏரியில் இருந்தும் அந்த வீட்டின் கற்களில் இருந்தும் எழுந்த காற்றால் ஒளியூட்டப்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம்.
“நீ இதைப் பார்க்க கூடாது! பார்க்க மாட்டாய்! ” என்று அஷரிடம் சொல்லியபடி அவனை அங்கிருந்த இருக்கைக்கு நான் கூட்டிச் சென்றேன். “உன்னை வியப்பில் ஆழ்த்துகிற இந்தக் காட்சி மற்ற பல இடங்களில் பார்க்கப்பட்ட ஒன்றே. நிச்சயமாக இந்த ஏரி தான் காரணம். இந்த சாளரத்தை மூடி விடுவோம்; காற்று ஈரமாக இருக்கிறது. உனக்கு மிகப் பிடித்த கதைகளில் ஒன்று இங்கே இருக்கிறது. நான் அதை வாசிக்கிறேன். அதை நீ கேள். அச்சம் நிறைந்த இந்த இரவை நாம் ஒன்றாகக் கடந்து உயிரோடு இருப்போம்” என்றேன்.
நான் தேர்ந்தெடுத்த அந்தப் பழைய நூல் முட்டாள்கள் படிப்பதற்காக ஒரு முட்டாளால் எழுதப்பட்டது. உண்மையில் அது அஷருக்கு பிடித்தமான ஒன்று அல்ல. ஆனால் அதுதான் சுலபமாக என் கையில் கிட்டியது. அவன் அமைதியாக நான் படிப்பதைக் கேட்பது தெரிந்தது. நன்கு குடித்திருந்த உடல் பலம்பொருந்திய ஆள் ஒருவன் கதவை உடைக்கத் தொடங்குகிறான். காய்ந்த மரம் உடைகின்ற ஓசை அவனைச் சுற்றி இருந்த காடு முழுக்கக் கேட்பதாக இருந்த கதையின் ஒரு பகுதியை நான் இப்போது வந்தடைந்தேன்.
திடீரென,நான் அப்போது படித்துக்கொண்டிருந்த கதையில் இருப்பதுபோலவே சில ஓசைகள் வீட்டின் தொலைவான இடங்களிலிருந்து எனக்குக் கேட்கத் தொடங்கவும், நான் வாசிப்பதை நிறுத்தினேன். அந்த ஓசைகளின் மீது எனக்கு இருந்த ஈர்ப்பே அவற்றைக் கவனிக்க வைத்ததேயல்லாமல் வலுத்துக் கொண்டிருந்த புயல் எனக்கு அச்சமூட்டவில்லை.
நான் கதையைத் தொடர்ந்து வாசிக்கிறேன். இப்போது அந்த ஆள் உடைக்கப்பட்ட அந்தக் கதவின் வழியாக நுழைகிறான். இத்தகைய பழங் கதைகளில் வழக்கமாகக் காணக்கூடியது போலவே இதிலும் ஒரு விநோதமான பயங்கரமான விலங்கு தோன்றுகின்றது. அவன் அதைத் தாக்குகிறான். பிறகு அவன் தன் காதுகளைத் தன் கைகளால் மூடிக்கொள்ளும் அளவுக்குப் பெரும் அலறலுடன அது வீழ்கிறது. இங்கு நான் மறுபடி கதை வாசிப்பதை நிறுத்தினேன்.
சந்தேகமே இல்லை. இம்முறை அக் கதையில் நடந்ததுபோலவே அந்த விலங்கின் அழுகையைப் போன்ற ஒன்றை நிச்சயமாக நான் சற்றுத் தொலைவில் கேட்டேன். நான் உணர்ந்த எதையும் என் நண்பன் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக நான் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். அந்த ஓசையை அவன் கேட்டானா என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் அவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. நான் அவனை நன்றாகப் பார்க்க முடியாதபடி அவன் இப்போது தன்னுடைய நாற்காலியை மெதுவாக நகர்த்தி இருந்தான். தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் போல அவனுடைய உதடுகள் அசைவதை நான் பார்த்தேன். பிறகு அவனுடைய தலை முன்னோக்கிச் சரிந்தது. ஆனால் அவன் உறங்கவில்லை என்று நான் அறிந்திருந்தேன். ஏனெனில் அவனுடைய கண்கள் திறந்திருந்தன. அத்துடன் அவன் தன்னுடைய உடலை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அசைத்தபடி இருந்தான்.
நான் மறுபடி கதையைப் படிக்கத் தொடங்கினேன். இப்போது அக் கதையில் எழுதப்பட்டிருப்பதுபோலவே ஒரு கனமான இரும்புத் துண்டு, மணியோசையின் சத்தத்தை ஏற்படுத்தியபடி கல் தரையின் மீது விழுந்தது. இந்தச் சொற்கள் என் உதடுகளில் இருந்து உச்சரிக்கப்பட்ட அந்த கணத்தில் மிகத்தெளிவாக ஆனால் சற்றுத் தொலைவிலிருந்து பலத்த மணியோசை போன்ற சப்தம் கேட்டது . ஏதோ நிஜமாகவே ஒரு இரும்புத்துண்டு தரையின் மீது விழுந்ததைப் போலவும் அல்லது ஒரு இரும்புக் கதவு அப்போதுதான் மூடியது போலவும் ஓசை கேட்டது. நான் என்னுடைய கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தேன். அஷர் இப்பக்கமும் அப்பக்கமுமாய் அசைந்தபடி அமர்ந்தே இருந்தான். அவனுடைய கண்கள் தரையை நோக்கித் திரும்பின. நான் நாற்காலியை நோக்கி வேகமாகச் சென்று என் கையை அவன் தோளின்மீது வைத்தபோது அவனுடைய முழு உடலும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். நோய்மையுற்ற ஒரு புன்னகை அவனுடைய உதடுகளைத் தொட்டுக்கொண்டிருந்தது. மிக மெல்லிய வேகமான தளர்வான ஒரு குரலில் நான் அங்கே இருப்பதே தெரியாதது போல அவன் பேசினான்.
“ஆம்! நான் அதை கேட்டேன். பல நிமிடங்கள், பல மணி நேரங்கள், பல நாட்கள் நான் அதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதைப்பற்றிப் பேசத் துணியவில்லை. அவளுடைய வாழ்வை நாம் பெட்டகத்தில் வைத்துவிட்டோம். நான் சொன்னேன் இல்லையா என்னுடைய புலன்கள் மிகக் கூர்மையானவை என்று? அவளுடைய அசைவுகளைப் பல நாட்களுக்கு முன்பே நான் கேட்டேன். ஆனால் அதைப் பற்றிப் பேச எனக்குத் தைரியமில்லை. இப்போது நீ வாசித்த இந்தக் கதை – ஆனால் அந்த ஓசைகள் அவளுடையவை. நான் எங்கே ஓடுவேன்? அவளை இவ்வளவு சீக்கிரம் அங்கே ஏன் வைத்தேன் என்று கேட்டபடி அவள் வருகிறாள். அவனுடைய காலடி ஓசையை நான் மாடிப்படிகளில் கேட்கிறேன். அவளுடைய இதயத்தின் பலத்த ஓசையை நான் கேட்கிறேன்” என்று சொன்னபடி அவன் துள்ளி எழுந்து தன்னுடைய ஆன்மாவைத் தருவது போல அழுதபடி “இப்போதுகூட அவள் கதவருகில்தான் நிற்கிறாள்” என்றான்.
அவன் சுட்டிக்காட்டிய அந்தப் பெரும் கதவு இப்போது மெல்லத் திறந்தது. ஒருவேளை அது காற்றின் வேலையாகக்கூட இருக்கலாம். ஆனால் இல்லை. அந்தக் கதவுக்கு வெளியே ஒரு உருவம் நின்றிருந்தது. அந்த உயரமான உருவம் அணிந்திருந்த சாம்பல் நிற உடைகள், மேடலினுடையது. அவளுடைய வெண்ணிற உடையின் மீது குருதி படிந்திருப்பது தெரிந்தது. தப்பிப்பதற்கான கடுமையான முயற்சிகள் அந்த உருவத்தின் ஒவ்வொரு பாகத்திலும் தெரிந்தது. நடுங்கியபடி கதவின் அருகே சில நொடிகள் நின்றவள் பிறகு ஒரு மெல்லிய அழுகையுடன் தன்னுடைய சகோதரனின் மீது வலியுடன் விழுந்தாள். முன்பே இறந்துபோன தன்னோடு சேர்த்து அவனைத் தரையில் தள்ளினாள்.
இறுதியில் தன் சுய அச்சத்தினால் அவன் கொல்லப்பட்டான். நான் அந்த அறையிலிருந்து, அந்த வீட்டிலிருந்து ஓடத் தொடங்கினேன். நான் பாலத்தைக் கடக்கும்போது புயல் தன் முழுமையான பலத்துடன் என்னைச் சூழ்ந்தது. திடீரென ஒரு பேரொளி என் காலருகே, தரையில் நகர்ந்தது. அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று நான் திரும்பிப் பார்த்தேன். ஏனெனில் எனக்குப் பின்னால் அந்தப் பெரிய வீடும் அதன் இருளும் மட்டுமே இருந்தன. அந்த ஒளி, முழு நிலவின் ஒளி; குருதியால் சிவந்த நிலவு. முதன்முதலாக நான் அந்த மாளிகையைப் பார்த்தபோது சுவரின் முன் பக்கத்தில் இருந்த விரிசலில் இப்போது நிலவு ஒளிர்ந்துகொண்டிருந்தது. அந்தச் சிறிய விரிசல் இப்போது அகன்று விரிவதை நான் பார்த்தேன். ஒரு பலத்த காற்று என்னை நோக்கி வேகமாக வந்தது. நிலவின் முழு முகம் தெரிந்தது. பெரும் சுவர்கள் உடைந்து விழுவதை நான் பார்த்தேன். புயலின் நீண்ட கூக்குரல் ஓசை கேட்டது. ஆழ்ந்த கரிய அந்த ஏரி மிச்சமிருந்த அஷரின் வீட்டைத் தன் கருமையுடன் சேர்த்தணைத்து மூடிக்கொண்டது.
*
ஆங்கில மூலம்: The Fall of the House of Usher by Edgar Allan Poe, The Fall of the House of Usher and Other Writings, Published by Penguin Classics, March 2003 Edition.