தைபிலியும் அவளுடைய பூதமும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

0 comment

லுப்லினுக்கு அருகில் இருந்த லாஷ்னிக் நகரில் சயீம் நோசன், தைபிலி இணையர் வாழ்ந்தனர். அவர்களுக்கு வாரிசு இல்லை. மலட்டுத்தன்மை காரணமில்லை. தைபிலி கணவருக்காக ஒரு மகன், இரு மகள்களை ஈன்றளித்திருந்தாள். மூன்றுமே பரிபோயின: ஒன்று கக்குவான் இருமலுக்கும், ஒன்று விஷக்காய்ச்சலுக்கும், ஒன்று தொண்டை அடைப்பானுக்கும். அதன்பிறகு தைபிலியின் கருப்பை கண் மூடியது. பிரார்த்தனை, மந்திரம், கஷாயம் எதற்கும் பலன் இல்லை. துயரம் சயீம் நோசனை உலக வாழ்வில் இருந்து ஒதுக்கியது. மனைவியிடமிருந்து விலகினான். புலால் மறுத்தான். இரவிலும் வீட்டிற்கு வராமல் ஜபதலத்தில் இருந்த பலகையில் படுத்துறங்கினான். தைபிலிக்குச் சொந்தமாகப் பெற்றோர் அளித்த உலர் பொருட்கள் விற்கும் மளிகை இருந்தது. நாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்தாள். வலது பக்கம் அளவுகோலும் இடதுபுறம் கத்தரியும் முன்பக்கம் பெண்களுக்கான பிரார்த்தனை நூலின் இத்தியப் பதிப்பும் இருந்தன. சயீம் நோசன் நெட்டை, ஒல்லி. கரிய விழியன். குறுந்தாடி வைத்தவன். நல்ல நாட்களிலும் சிடுசிடுப்பானவன். சிறிய ஆகிருதி உடைய தைபிலி சிவந்த நிறமும் நீல விழியும் உருண்டை முகமும் கொண்டவள். ஆண்டவன் அளித்த கொடுந்துயரை மீறியும் சட்டெனச் சிரிப்பவளின் கன்னக்குழிகள் எழில் கொஞ்சுபவை. வேறு யாருக்காகவும் சமைக்கத் தேவையில்லாத போதும் நாள்விடாமல் அடுப்பையோ முக்கோணக் கற்களையோ ஒருக்கிக் கூழோ கஞ்சியோ சமைத்து உண்டாள். காலுறைகள், உள்ளாடை, வெள்ளைத் துணியில் பூந்தையல்கள் எனப் பலவகைத் தையல் செய்தாள். விதியைச் சொல்லி அரற்றுவதோ துயரத்திலேயே உழல்வதோ அவள் இயல்பல்ல.

ஒருநாள் சயீம் நோசன் தனது ஜப மேலாடை, மந்திர ஓலைகள் இருந்த தோல்பை, ஒற்றை மாற்று உள்ளாடை, ரொட்டிகள் அனைத்தையும் பையில் எடுத்து வீட்டைவிட்டுக் கிளம்பினான். அண்டை வீட்டார் எங்கே செல்கிறான் எனக் கேட்டதற்கு, ‘கண்கள் சுட்டும் திசையை நோக்கிப் போகிறேன்’ என்று பதிலளித்தான்.

தைபிலிக்குத் தன் கணவனின் புறப்பாடு தெரிவதற்குத் தாமதமானதால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அவன் ஏற்கெனவே கரையைக் கடந்திருந்தான். லுப்லினுக்குச் செல்ல மாட்டு வண்டியை ஏற்பாடு செய்ததாகத் தகவல் கிடைத்தது. அவனை அழைத்துவர ஒரு தூதுவனை அனுப்பினாள் தைபிலி. ஆனால் கணவரோ தூதுவனோ ஒருபோதும் மீள வரவில்லை. முப்பத்து மூன்று வயதில் தைபிலி கைவிடப்பட்ட மனைவியானாள்.

சில காலம் தேடியபிறகு எதிர்ப்பார்க்க ஏதுமில்லை என்று அவளுக்குப் புரிந்தது. குழந்தைகளை எடுத்துக்கொண்டது போலவே கடவுள் கணவரையும் எடுத்துக்கொண்டார். அவள் ஒருபோதும் மறுமணம் செய்ய முடியாது. தனிமையில் வாழ்ந்தாக வேண்டும். வீடு, கடை, உடைமைகள் அன்றி அவளுக்கென்று வேறொன்றும் இல்லை. அமைதியானவள், நல்ல மனம் படைத்தவள், நேர்மையாக வியாபாரம் செய்பவள் என்பதால் நகரத்து மக்கள் அவள் மீது இரங்கினர். ஏன் அவளுக்கு இத்தகைய கொடுமைகள் நிகழ வேண்டும் என்றே பலரும் கேட்டனர். கடவுளின் கணக்குகள் மானுடருக்கு மறைக்கப்பட்டவை.

நகரத்தில் வாழும் மணமான பெண்கள் பலரும் தைபிலிக்குச் சிறுவயதுத் தோழிகள். பகலில் பாத்திரப் பண்டங்களுடன் பரபரப்பாக வேலையில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் மாலையில் அரட்டைக்காக அமர்வதுண்டு. கோடையில் வீட்டுக்கு வெளியே இருக்கும் பலகையில் அமர்ந்து வம்பு பேசி, பல கதைகளைப் பகிர்வதுண்டு.

நிலவற்றுக் கறுத்திருந்த கோடை மாலையொன்றில் தைபிலி தன் தோழிகளுடன் பலகையில் அமர்ந்து தெரு வியாபாரியிடம் வாங்கிய நூலில் படித்த கதையைச் சொன்னாள். யூத இளம்பெண் ஒருத்தியின் கதை. அதில் வரும் பூதம் அவளுக்கு உவகை அளித்தது. இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். தைபிலி அந்தக் கதையை விரிவாகச் சொன்னாள். பெண்கள் ஒன்றாக நெருங்கி உட்கார்ந்து, கைகோர்த்து, தீய ஆவியைத் துரத்துவதற்காகத் துப்பி, அச்சம் கலந்து சிரித்தனர். 

அவர்களில் ஒருத்தி, ‘ஏன் அவள் தாயத்தைக் காட்டிப் பூதத்தைத் துரத்தவில்லை?’ எனக் கேட்டாள். 

’எல்லாப் பூதங்களும் தாயத்துக்குப் பயப்படாது’ என்று பதிலளித்தாள் தைபிலி. 

‘ஏன் புனித ராபியைச் சென்று பார்க்கவில்லை?’

‘ரகசியத்தை வெளிப்படுத்தினால் கழுத்தை நெறிப்பதாக அவளை எச்சரித்திருந்தது பூதம்.’ 

‘ஐயகோ கடவுள் நம்மைக் காக்கட்டும். இதைப் போல யாரும் கேள்விப்பட்டதே இல்லை!’ ஒருத்தி பதறிக் கத்தினாள்.

‘எனக்கு இப்போது வீட்டுக்குப் போகவே பயமாக இருக்கிறது’ என்றாள் இன்னொருத்தி.

‘உன்னோடு நான் துணை வருகிறேன்’ என்று ஆறுதல் சொன்னாள் மூன்றாமவள். 

அவர்கள் பேசியபோது ஆசிரியரின் உதவியாளன் அல்கொனான் அவ்வழியாகச் சென்றான். திருமண வைபவத்தில் கோமாளியாக வேண்டும் என்பதே அவனுடைய இலக்கு. ஐந்தாண்டுகளாக மனைவியை இழந்து வாழும் அவன் கூத்தாடி என்றும் பொய் வித்தைகள் செய்யும் விதூஷகனாகவும் சற்றே மூளை கழன்றவனாகவும் அறியப்பட்டிருந்தான். செருப்பு தேய்ந்து பிய்ந்திருந்ததால் அவனது நடையோசை யாருக்கும் கேட்கவில்லை. தைபிலி கதை சொல்லியபோது அவனும் நின்று ஒற்றுக் கேட்டான். இருளின் செறிவும் பெண்கள் மெய்மறந்து கதை கேட்டதும் அவனது இருப்பை மறைத்தன. அல்கொனான் குழப்பங்களை உருவாக்குபவன். கைவசம் நிறைய தந்திர உத்திகளை வைத்திருப்பவன். சடுதியில் ஒரு குறும்புத்தனமான திட்டம் அவன் மனத்தில் உருவானது.

பெண்கள் அனைவரும் போன பிறகு அல்கொனான் தைபிலியின் முற்றத்திலேயே பதுங்கினான். மரத்துக்குப் பின்னால் ஒளிந்தவன், சாளரத்தின் வழியே உள்ளே பார்த்தான். தைபிலி மெழுகுவத்தியை அணைத்துவிட்டு மஞ்சத்துக்குச் சென்றதைக் கண்டதும் வீட்டுக்குள் புகுந்தான். தைபிலி கதவுக்குத் தாழிடவில்லை. அந்த ஊரில் திருட்டு என்பதை யாரும் கேள்வியுற்றதே இல்லை. கூடத்தில் நின்றபடி தனது தளர்வான நீளங்கியை அவிழ்த்தான். விளிம்பைத் தளர்த்தி உள்ளிருந்த சட்டையைக் கழற்றினான். கால்சராயையும் கழற்றிவிட்டுப் பிறந்த மேனியாக நின்றான். கால் விரல் நுனிகளில் நடந்து தைபிலியின் மஞ்சத்துக்குச் சென்றான். உறங்கத் தொடங்கிய அவள் தன் முன் இருளில் அலையும் உருவத்தைக் கண்டாள். ஓசையெழுப்ப அஞ்சினாள்.

நடுங்கியபடி மெல்லிய குரலில் ‘யாரது?’ எனக் கேட்டாள்.

காற்றைக் கீறும் குரலில் பதிலளித்தான் அல்கொனான். ‘கத்தாதே தைபிலி. கத்தினால் உன்னைக் கொல்வேன். நானே அர்மிசா எனும் பூதம். இருளையும் ஆலங்கட்டி மழையோடு இடியையும் வன விலங்குகளையும் ஆளும் அரசன். இன்றிரவு யூதப் பெண்ணைக் காதலித்த ஆவியைப் பற்றிக் கதை சொன்னாயே, அது யானே. நீ தீவிர ஆர்வத்துடன் அந்தக் கதையைச் சொல்லிப் பாதாளத்தில் இருந்த என்னை எழுப்பினாய். அதைக் கேட்டதில் இருந்து உன் மேனி மீது பெரும் காமம் உண்டானது. என்னை எதிர்க்க முயலாதே. நான் நினைத்தால் என்னை எதிர்ப்பவர்களை இந்தப் பூமியின் மலைகளின் இருளைத் தாண்டி சாயிர் மலையுச்சிக்கு இழுத்துச்சென்று இச்சையைத் தீர்ப்பேன். அங்கே மானுடக் கால்தடமே பட்டது இல்லை. விலங்குகளே வர அஞ்சும். நிலம் இரும்பாலும் வானம் தாமிரத்தாலும் ஆகி இருக்கும். முள்ளிலும் தீயிலும் அதைச் சுருட்டி தேள்களும் நட்டுவாக்கிளிகளும் வாழும் இடத்தில் உடலை அரைத்துத் தூளாக்கி நிரந்தரமாக அழியச்செய்து பாதாளத்தில் கரைப்பேன். ஆனால் என் இச்சைக்கு இணங்கினால் உன் தலை மயிர்கூட விழாமல் காப்பேன். ஒவ்வொரு படியிலும் உனக்கு வெற்றியை, உவகையை அளிப்பேன்.’

இதைக் கேட்டதும் மூர்ச்சையானவள் போல அசைவற்றுக் கிடந்தாள் தைபிலி. படபடத்த இதயம் நின்றுவிடுமெனத் தோன்றியது. தனக்குச் சாவு நெருங்கியதாக நினைத்தாள். சில நொடிகளுக்குப் பிறகு சற்றே தைரியத்தை வரவழைத்து முனகினாள். ‘என்னிடம் என்ன எதிர்ப்பார்க்கிறாய்? நான் மணமானவள்!’

’உன் கணவன் இறந்துவிட்டான். நானே அவன் இறுதிச்சடங்கில் பின்தொடர்ந்து சென்றேன்.’ ஆசிரியரின் உதவியாளன் குரலை உயர்த்தினான். ‘ராபியிடம் சென்று மறுமணத்துக்கு நீ உகந்தவள் என்று என்னால் சாட்சியளிக்க முடியாது. ராபிக்கள் எங்களை நம்புவதில்லை. அதுமட்டுமின்றி ராபியின் அறை வாசலைக் கடக்கும் தைரியம் எனக்கில்லை. புனித ஓலைகளை அஞ்சுகிறேன். ஆனால் நான் பொய் சொல்லவில்லை. உன் கணவன் பெருந்தொற்று நோயில் சிக்கி இறந்தான். அவனுடைய சடலத்தின் நாசியைப் புழுக்கள் உண்டுவிட்டன. அவன் உயிரோடு இருந்தாலும் என்னுடன் நீ படுப்பதில் தடையேதும் இல்லை. சுல்கான் ஆருச்சின் சட்டம் எங்களுக்குப் பொருந்தாது.’

அர்மிசா இனிமையாகப் பேசியும் அச்சுறுத்தியும் தனது வற்புறுத்தலைத் தொடர்ந்தான். தேவர்கள் சாத்தான்களின் பெயர்களை எல்லாம் அழைத்து பயங்கரமான விலங்குகளையும் காட்டேரிகளையும் பட்டியலிட்டான். பூதங்களின் அரசன் அஸ்மோடியஸ் தனது ஒன்றுவிட்ட மாமன் என்று உறுதி வார்த்தை சொன்னான். தீய சக்திகளின் அரசியான லில்லித், தனக்காக ஒற்றைக் காலில் நடனமாடினாள் என்றும் தன்னை மகிழ்விக்கப் பல வித்தைகளைச் செய்தாள் என்றும் சொன்னான். பெண்களிடமிருந்து சிசுக்களைத் திருடும் ஷிப்தா என்ற அரக்கி நரகத்தின் அடுப்பில் கசகசா அப்பங்களைச் செய்து மந்திரவாதிகள், நாய்களின் கொழுப்பைக் காய்ச்சி, அதில் பரப்பித் தனக்காகத் தந்தாள் என்றான். சரசக் கதைகளையும் பழமொழிகளையும் பயன்படுத்தி தைபிலி புன்னகை செய்ய இணங்கும் வரை நெடுநேரம் ஏதேதோ பேசினான். அர்மிசா தைபிலியை நெடுங்காலமாக நேசிப்பதாக உறுதிமொழி பகர்ந்தான். சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் அவள் அணிந்த உடைகளையும் மேலாடைகளையும் வர்ணித்தான். மாவு பிசையும் போதும் சனிக்கிழமை உணவைச் சமைக்கும்போதும் குளியல் தொட்டியில் தன்னைக் கழுவும்போதும் கழிப்பறைக்குச் செல்லும்போதும் அவள் அகத்தில் உதித்த ரகசிய எண்ணங்களைச் சுட்டினான். ஒருநாள் காலை விழித்தபோது தன் முலையில் கருப்பாகவும் நீலமாகவும் இருந்த குறிகளைக் கண்டு பேய் கிள்ளியதால் உண்டானவை என்று கருதியதை நினைவூட்டினான். ஆனால் உண்மையில் அர்மிசாவின் உதடுகள் அளித்த முத்தக்குறிகள் அவை என்றான்.  

சிறிது நேரத்தில் தைபிலியின் படுக்கையில் அமர்ந்து அவளுடைய சம்மதத்தைப் பெற்றது பூதம். வாரம் இருமுறை, புதன், சனி இரவுகளில் அவளைச் சந்திக்க வருவதாகச் சொன்னான். தீய சக்திகள் புவியில் உலவ அவ்விரு இரவுகளே உகந்தவை. அவளுக்கு நிகழ்ந்ததை வெளியே சொன்னாலோ, சிறிய குறிப்பு காட்டினாலோ கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தான். அவள் தலைமயிரைப் பிடுங்கி, கண்களைத் தோண்டி, உந்திச் சுழியைக் கடிப்பதாகப் பயமுறுத்தினான். அளற்றின் கொடிய தனிமையில் அவளைத் தள்ளிவிடுவதாகச் சொன்னான். அங்கு சாணமே ரொட்டி, பரிசாரகம் செய்வது குருதி. அங்கே சல்மாவேத்தின் ஓலம் இரவு பகலாகக் கேட்கும். இந்த ரகசியத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் காப்பதெனத் தைபிலியைத் தன் அன்னையின் எச்சங்கள் மீது உறுதியளிக்கச் சொன்னான். தைபிலிக்குத் தப்பிக்க வழியே தெரியவில்லை. அவன் தொடையில் கைவைத்து உறுதியளித்தாள். அரக்கன் சொன்ன அனைத்தையும் செய்தாள்.

மனிதனல்லாது பூதமாக இருப்பதால் அர்மிசா அகல்வதற்கு முன்பு நீண்ட காமம் ததும்பும் முத்தத்தை அவளுக்கு அளித்தான். பதில் முத்தமளித்தபோது பூதத்தின் தாடியை அவள் கண்ணீர் நனைத்தது. தீய ஆன்மாவாக இருந்தபோதும் பூதம் அவளைக் கனிவுடன் நடத்தினான்.

அர்மிசா சென்ற பிறகு தலையணையில் விழுந்த தைபிலி விடியல் வரை அழுதாள்.

புதன், சனி இரவுகளில் அர்மிசா தவறாது வந்தான். தனக்குக் கொம்பும் வாலும் முளைத்த குட்டிச்சாத்தான் குழந்தையாகப் பிறந்துவிடுமோ என்று தைபிலி அஞ்சினாள். அவளுக்கு அவமானம் நேராது காப்பதாக உறுதியளித்தான் அர்மிசா. தூய்மையற்ற நாட்களில் புனிதக் குளியல் செய்வதைத் தொடரலாமா என்று அவள் கேட்டதற்கு தூய்மை அறியாத அமானுட உயிரினத்தைப் புணர்பவளுக்கு விடாய்ச் சட்டங்கள் எதுவும் பொருந்தாது என்றான்.

பழகிய எதனிடமிருந்தும் கடவுள் நம்மைக் காப்பார் என்ற சொலவடை உண்டு. தைபிலி அவ்விதமாகவே நடந்தாள். ஆரம்பத்தில் இரவுச் சந்திப்பாளர் தன்னைக் காயப்படுத்தக்கூடும் என்று அஞ்சினாள். தனக்குக் கொப்புளங்கள் உண்டாகலாம், சடை முடி முளைக்கலாம், தன்னை நாயைப் போலக் குரைக்க செய்து சிறுநீரைக் குடிக்க வைக்கலாம், தன்னைக் கீழ்மைப்படுத்தலாம் என்றெல்லாம் பயந்தாள். ஆனால் அர்மிசாவோ அவளைச் சாட்டையால் அடிக்கவோ கிள்ளவோ அவள் மீது துப்பவோ இல்லை. மாறாக அவளைத் தடவினான், அன்பான சொற்களால் காதைக் கடித்தான், நகைச்சுவை சொல்லி நயமாகப் பாடினான். சில நேரங்களில் பேய்களுக்கான விளையாட்டுகளையும் உளறல்களையும் செய்து அவளைச் சிரிக்க வைத்தான். காதுமடலை மடக்கி தோளில் காதல் கடிகள் போட்டான். காலையில் அவனது பற்தடங்கள் தன் தோலில் இருக்கக் கண்டாள். நிறைய முடி வளர்த்தால் தான் சடை பின்னித் தருவதாகச் சொன்னான். மந்திரங்களையும் கட்டுச் சொல்லையும் அவளுக்குக் கற்பித்தான். தவளைக் கூட்டம் பெருகிய சிதில நிலங்களிலும், சோடோமின் உப்புச் சதுப்புகளிலும் பனியுறை கடலின் குப்பைகளிலும் தனது இரவு நண்பர்களோடு பறந்தலைவதை விவரித்தான். தனக்குப் பிற மனைவிகள் உள்ளதை அவன் மறைக்கவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் அரக்கிகள். தைபிலி மட்டுமே அவனது மானுட மனைவி. அவர்களின் பெயர்களைத் தைபிலி கேட்டபோது சடுதியில் பட்டியலிட்டான்: நமா, மெக்லாத், ஆஃப், சுல்தா, லுச்சா, நஃப்கா, செயிமா. மொத்தம் எழுவர்.

நமா கரியவள், சினம் மிகுந்தவள். அவனோடு சண்டை போடும்போது விசத்தைக் கக்கி நெருப்பை உமிழ்து, மூக்கு வழியே புகைவிடுவாள். 

மெக்லாத்தின் முகம் அட்டையைப் போன்றது. அவள் நாவால் தீண்டியவர்கள் நிரந்தரமாகக் குறி பெறுவார்கள். 

ஆஃபுக்கு வெள்ளி, மரகதம், வைர அணிகளில் நாட்டம். முடியில் தங்கச் சுருளால் பின்னுவாள். கணுக்காலில் மணிகளையும் காப்புகளையும் அணிந்திருப்பாள். அவள் நடனமாடும்போது பாலைவனமெங்கும் மணிகள் ஒலிக்கும்.

சுல்தா பூனை வடிவினள். பேசுகையில் மியாவ் என்றே மிழற்றுவாள். நெல்லிக்காய் போலப் பச்சை விழிகள் அவளுக்கு. புணரும்போது கரடியின் ஈரலை மெல்லுவாள்.

மாப்பிள்ளை, பெண்களின் எதிரி லுச்சா. புதிதாக மணமான ஆண்களின் ஆண்மையைத் திருடுபவள். ஏழ்வகை ஆசிகள் பெற மணப்பெண் இரவில் தனியாக வரும்போது சுல்தா ஆடியபடியே வந்தால் அப்பெண்ணுக்குப் பேச்சு போய்விடும் அல்லது வலிப்பு உண்டாகும். 

நஃப்கா சிற்றின்பக்காரி. எப்போதும் அவனை ஏய்த்துவிட்டுப் பிற பூதங்களுடன் கலப்பாள். துடுக்காகவும் இழிவாகவும் பேசி அவன் மனத்துக்கு மகிழ்ச்சி அளிப்பதால் மட்டுமே அவளை இன்னும் துரத்தாமல் வைத்திருக்கிறான்.

செயிமா பெயருக்கேற்றபடி நமாவைவிடக் கொடூரமானவளாக இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் தலைகீழானவள். செருக்கற்ற அரக்கி. நோயுற்ற இல்லத்துப் பெண்மணிகளுக்கு மாவைப் பிசைவது, ஏழைகளின் வீட்டுக்கு ரொட்டிகளை எடுத்துச்சென்று அளிப்பது போன்ற பல நற்செயல்களைச் செய்பவள்.

இவ்விதமாக அர்மிசா தன் மனைவிகளைப் பற்றி விவரித்தான். தைபிலியிடம் அவர்களோடு தான் எப்படியெல்லாம் மகிழ்ந்து வாழ்கிறான் என்றும் கூரைகளில் ஒளிந்து விளையாடி, பலவிதமான கண்ணாமூச்சிகள் ஆடுவதையும் சொன்னான். கணவன் வேறு பெண்களோடு தொடர்புகொண்டிருப்பதை அறிந்தால் ஒரு பெண்ணுக்குப் பொறாமை மிகும். ஆனால் ஒரு மானுடப் பெண் எப்படி அரக்கிகள் மீது பொறாமை கொள்வது? இங்கு நடந்தது வேறு. அர்மிசாவின் கதைகள் தைபிலியை உற்சாகப்படுத்தின. அவனிடம் பல கேள்விகளைக் கேட்டாள். சில நேரங்களில் இறக்கப் பிறந்த மானுடர்களுக்குச் சொல்லக்கூடாத பல ரகசியங்களையும் அவன் சொன்னான். கடவுள், ஜின், கந்தர்வர்கள், தேவலோக மாளிகைகள், ஏழுவகைச் சுவணங்கள் அனைத்தைப் பற்றியும் சொன்னான். நரகத்தில் இருக்கும் கரிய தேவதைகள் ஆண், பெண் பாவிகளைக் கன்னெய்க் கலங்களில் போட்டு எப்படி வதைப்பார்கள் என்பதையும் கரிச்சட்டியில் எப்படி வறுப்பார்கள் என்பதையும், பனிக்குழிகளிலும், ஆணிப்படுக்கையிலும் படுக்கவைத்துத் தீயில் சுட்ட உலோகத் தண்டுகளால் எப்படி அடிப்பார்கள் என்பதையும் சொன்னான்.

நரகத்தின் வதைகளில் மிகப்பெரிய வதை கூசுவது என்றான் அர்மிசா. அங்கு லேகிஷ் என்ற குட்டிச்சாத்தான் இருக்கிறான். அவன் விபச்சாரி ஒருத்தியின் பாதத்திலும் அக்குளிலும் கூசிச் சிரிக்க வைத்தபோது அது மதகாஸ்கர் தீவுவரை எதிரொலித்தது.

இவ்விதமாகத் தைபிலியை இரவெல்லாம் மகிழ்வித்து வந்தான் அர்மிசா. அவன் இல்லாதபோது அவனுக்காக ஏங்கத் தொடங்கினாள் தைபிலி. கோடை இரவுகள் அவளுக்கு மிகச் சிறியனவாகத் தோன்றின.

காகம் கரைந்ததும் அகல்வான் அர்மிசா. குளிர்கால இரவுகளும் அவளுக்குப் போதவில்லை. அர்மிசாவை நேசித்தாள். ஒரு பெண் பூதத்தைக் காதலிப்பது தவறென்று உணர்ந்தபோதும் அல்லும் பகலும் அவன் வருகையை எதிர்நோக்கி ஏங்கினாள்.

பல ஆண்டுகள் மனைவி இன்றி வாழ்ந்ததால் தரகர்கள் அல்கொனானுக்கு மறுமணம் செய்ய முயன்றனர். அவர்கள் முன்வைத்த பெண்கள் யாவரும் கீழ்நிலை இல்லத்துப் பெண்களாக, கைம்பெண்களாக, மணம் முறிந்தவராகவே இருந்தனர். ஆசிரியரின் உதவியாளனுக்கு வரும் ஊதியத்துக்கு அந்த அளவே பெண் கிடைக்கும். அதுமட்டுமின்றி ஒன்றுக்கும் உதவாதக் கிறுக்கன் என்ற தனிச்சிறப்பும் அல்கொனானுக்கு உண்டு. அல்கொனான் பல்வேறு காரணங்களைச் சொல்லி அப்பெண்களைப் புறக்கணித்தான். ஒருத்தியை மிக அசிங்கமாக இருப்பதாகவும், ஒருத்திக்கு நாக்கு நீளமென்றும், ஒருத்தி தெருவில் திரிபவளைப் போல இருப்பதாகவும் சொன்னான். வாரம் ஒன்பது குரோஷன் சம்பாதிக்கும் ஆசிரியரின் உதவியாளன் எப்படி இந்த அளவுக்குத் தேர்ந்து புறக்கணிக்க முடியுமென தரகர்கள் வியந்தனர். எவ்வளவு காலம்தான் ஆண்மகன் தனியாக வாழ முடியும்? ஆனால் வற்புறுத்தலின் பேரில் யாரையும் மணப்பந்தத்தில் தள்ள முடியாது.

அல்கொனான் நகரத்தை வெறுமனே சுற்றி வருவதுண்டு. நெட்டையானான், ஒல்லியான தேகம் கொண்டவன். செம்மயிர்ப் பரட்டை தலை. கசங்கிய சட்டை. அடிக்கடி குரல்வளை மேலும் கீழும் எழும்பிக் குதிக்கும். திருமண வைபவக் கோமாளி ரெப் செகிலி சாவதற்காகக் காத்திருந்தான். அப்போதுதான், தான் அந்த வேலையைக் கைப்பற்ற முடியும் என்பது கணக்கு. ஆனால் ரெப் செகிலி சாகும் அவசரத்தில் இல்லை. இளமையில் இருந்ததைப் போலவே இப்போதும் உயிர்ப்புடன் இருந்த அவனிடமிருந்து தீராத நகைச்சுவைகளும் எதுகை மோனைத் துணுக்குகளும் சரளமாக ஊற்றெடுத்தன. ஆரம்பக்கல்வி கற்பவர்களுக்குத் தானே ஆசிரியராகலாம் என்று முயன்றபோது யாரும் அவனை நம்பிக் குழந்தையை அனுப்ப முன்வரவில்லை. காலை மாலைகளில் சிறுவர்களைச் செடருக்கு அழைத்துச் சென்றான். பகலில் ஆசிரியர் ரெப் இச்சிலியின் முற்றத்தில் அமர்ந்து மரச்சுட்டிகளைக் கூர்மையாக்கினான். அல்லது பெந்தகோஸ்த் சபையில் ஆண்டுக்கு ஒருமுறை அலங்காரம் செய்ய உதவும் தாள்களை வெட்டுவான் அல்லது களிமண்ணில் உருவங்களைச் செய்வான். தைபிலியின் கடைக்கு அருகில் இருந்த கேணிக்கு நாளுக்குப் பலமுறை செந்தாடி நனைய தண்ணீர் அருந்தவோ பீப்பாயை நிரப்பவோ வருவதுண்டு. அப்போதெல்லாம் தைபிலியை விரைவாகப் பார்த்துத் திரும்புவான். ஏன் அந்த மனிதன் இத்தனை வேலைகளைத் தனியாகச் செய்கிறார் என்று தைபிலி அவன் மீது இரக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு முறையும் அல்கொனான் தனக்குள் ‘தைபிலி, பாவி! உனக்கு மட்டும் உண்மை தெரிந்தால்!’ என்று சொல்வான்.

ஒரு முதிய கைம்பெண்ணின் வீட்டின் பின்புறத்தில் இருந்த கிடங்கில் அல்கொனான் வசித்தான். செவிடாகவும் அரைக் குருடாகவும் இருந்த அந்தக் கிழவி பிற யூதர்களைப் போல ஜபதலத்துக்குச் செல்லாத அவனை அடிக்கடி வைதாள். சிறுவர்களை வீட்டில் விட்டதும் சடுதியில் வீட்டுக்கு வந்து மாலை ஜபத்தைச் சொல்லிவிட்டு படுக்கைக்குச் செல்வது அவன் வாடிக்கை. சில நேரங்களில் நள்ளிரவில் எழுந்து எங்கோ செல்கிறான் அவன் என உணர்ந்தாள் கிழவி. இரவில் எங்கே உலவுகிறாய் என்று கேட்டதற்கு அல்கொனான் அப்படியேதும் இல்லை என்றும் அவள் கண்டது கனவாக இருக்கலாம் என்றும் பதிலளித்தான். மாலையில் பலகையில் அமர்ந்து பேசும் பெண்களின் அரட்டையில் காலுறையைத் தைத்தபடி அல்கொனான் நள்ளிரவில் அரைமிருகமாக மாறிவிடுகிறான் என்ற வதந்தியைக் கிளப்பினாள் கிழவி. யாரோ ஒருத்தி அவன் சக்கும்பஸ் என்ற பெண் அரக்கியுடன் கலவி கொள்கிறான் என்று சொன்னாள். இல்லாவிடில் எப்படி ஒருவன் மனைவியின்றி இவ்வளவு காலம் தனியாக வாழ முடியும்? செல்வந்தர்கள் யாரும் அவனை நம்பிப் பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஏழைகளின் பிள்ளைகளை மட்டுமே அவன் தற்போது செடருக்குக் கூட்டிச்செல்கிறான். அவனுக்கு நல்லுணவு அரிதாகவே கிடைத்தது. உலர்ந்த கொட்டைகளையும் விதைகளையும் சாப்பிட்டு பல பொழுதுகளைக் கழித்தான்.

அல்கொனான் மென்மேலும் உடல் மெலிந்தான். ஆனால் அவனுடைய பாதங்கள் எப்போதும்போலச் சுறுசுறுப்பாக இயங்கின. மெலிந்த நீளமான கால்களுடன் அவன் தெருக்களில் வழுக்கிச் செல்வதைப் பார்த்தால் பொய்க்கால் ஆட்டம் போலிருக்கும். அடிக்கடி தாகம் எடுக்கும்போதெல்லாம் அந்தக் கேணிக்கு வருவான். சில நேரங்களில் வியாபாரிக்கோ, குடியானவரது குதிரைக்கோ தண்ணீர் காட்டுவான். அவனுடைய மேலங்கி கிழிந்து கந்தலாக இருந்ததை ஒருநாள் தொலைவில் இருந்து பார்த்தாள் தைபிலி. அவனைத் தன் கடைக்கு அழைத்தாள். அவன் பதறினான். முகம் வெளிறியது.

‘உங்கள் மேலங்கி கிழிந்திருக்கிறது’ என்றாள் தைபிலி. ‘விரும்பினால் உங்களுக்குச் சில முழம் துணி தருகிறேன். மெதுவாக வாரம் ஐந்து காசு என்று திருப்பித் தந்தால் போதும்.’

‘வேண்டாம்.’

‘ஏன் வேண்டாம்?’ என்று வியப்புடன் கேட்டாள் தைபிலி. ‘தாமதமாகத் தந்தாலும் உங்கள் ராபி முன்னால் கேட்டுச் சங்கடப்படுத்த மாட்டேன். முடிந்தபோது கொடுங்கள்.’

‘வேண்டாம்.’ அவள் தன் குரலை அடையாளம் காணக்கூடும் என்று அஞ்சி அங்கிருந்து சடுதியில் அகன்றான்.

கோடை நள்ளிரவுகளில் தைபிலியைச் சந்திப்பது எளிதாக இருந்தது. கொல்லைப்புறமாக நுழைந்து உடலுக்குப் பின்னால் அங்கியைப் பிடித்துக்கொண்டு நிர்வாணமாக நடந்துவர முடிந்தது. குளிர்காலத்தில் தைபிலியின் கூடத்தில் நின்று உடையணிவதும் களைவதும் கடினமாக இருந்தது. புதிதாக பனிப்பொழிவு நடந்து முடிந்த இரவுகள் மிகக் கொடியவை. தைபிலியோ அவளது அண்டை வீட்டாரோ தன் பாதத்தடத்தைக் கவனிக்கக்கூடும் என்று கவலைப்பட்டான். சளி பிடித்து இருமினான். ஓரிரவு பல் நடுக்கத்துடன் தைபிலியின் மஞ்சத்தில் அமர்ந்தான். நெடுநேரம் அவன் உடல் சூடு கொள்ளவில்லை. தனது பித்தலாட்டத்தை அவள் கண்டுபிடிக்க நேரலாம் என்பதால் பல விளக்கங்களையும் புதிய சாக்குபோக்குகளையும் உருவாக்கிச் சொன்னான். ஆனால் தைபிலி அவனை ஒருபோதும் சந்தேகப்படவோ கூர்ந்து ஆயவோ இல்லை. பூதத்துக்கும் மனிதனுடைய பழக்கங்களும் பலவீனங்களும் இருப்பதாக முன்பிருந்தே நம்பினாள். அர்மிசாவுக்கு வியர்த்தது. தும்மினான், விக்கினான், கொட்டாவி விட்டான். சில நேரங்களில் அவன் மூச்சில் வெங்காய நெடியும், சில நேரங்களில் பூண்டு நெடியும் வீசியது. அவனது உடல் தனது கணவனுடையதைப் போலவே எலும்பாக, மயிர் நிறைந்து, குரல்வளையும் உந்திச்சுழியும் கொண்டிருந்தது. சில நேரங்களில் அர்மிசா வேடிக்கையான மனநிலையில் இருப்பதுண்டு. மற்ற நேரங்களில் அவனிடமிருந்து பெருமூச்சு வரும். வாத்தின் கால்கள் போல் அல்லாமல் மனிதனுடையவை போல நகங்களுடனும் கொப்புளங்களுடனும் இருந்தன அவனது கால்கள். ஒருமுறை தைபிலி அவற்றைப் பற்றிக் கேட்டதற்கு, ‘எங்களில் யார் மானுடப் பெண்ணுடன் புணர்கிறானோ அவனுக்கு மானுட ஆணின் தோற்றம் அமையும். இல்லாவிடில் அவள் பீதியில் இறந்துவிடுவாள்’ என்று விளக்கமளித்தான்.

தைபிலி அவனோடு நன்கு பழகிவிட்டாள். அவனை நேசித்தாள். அவனுடைய அமானுட கோமாளித்தனங்களுக்கு முன்புபோல் அஞ்சுவதில்லை. அவன் சொல்லும் தீராத கதைகளில் முரண்கள் இருப்பதைக் கவனித்தாள். எல்லாப் பொய்யர்களைப் போல அவனுக்கும் ஞாபகப் பிசகு இருந்தது. முன்பு அவளிடம் பூதங்கள் சாகாவரம் பெற்றவை என்று சொல்லி இருந்தான். ஆனால் ஓரிரவில் அவளிடம் ‘நான் இறந்தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டான். 

‘பூதங்களுக்குச் சாவே கிடையாதே.’

’ஆம். ஆனால் அவை மீள முடியாத அதல சிதல பாதாளத்தில் விழுவதுண்டு.’

அந்தக் குளிர்காலத்தில் நகரத்தில் பெருந்தொற்று பரவியது. ஆற்றிலிருந்தும் காட்டிலிருந்தும் சதுப்பிலிருந்தும் மோசமான காற்று. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் குளிர்க்காய்ச்சலால் நடுங்கினர். மழை பெய்தது. ஆலங்கட்டி மழை பெய்தது. வெள்ளம் அணையை உடைத்தது. சூறாவளி காற்றாலையின் ஒரு கையைப் பிய்த்தெறிந்தது. ஒரு புதன் இரவு, அர்மிசா தைபிலியின் மஞ்சத்துக்கு வந்தபோது அவன் உடல் தீயாய்க் கொதிப்பதை உணர்ந்தாள். பாதங்களோ பனியாக உறைந்திருந்தன. அவன் நடுங்கினான், முனகினான். அரக்கிகளின் கதைகளைச் சொல்லி அவளை மகிழ்விக்க நினைத்தான். அவர்கள் இளைஞர்களை எப்படியெல்லாம் மயக்குவார்கள், மற்ற அரக்கர்களோடு எப்படியெல்லாம் இன்பம் துய்த்து விளையாடுவார்கள் என்று சொன்னான். சடங்குக் குளியல் தொட்டியில் துள்ளி நீரை அள்ளித் தெறிப்பார்கள். முதிய ஆண்களின் தாடியில் விழியால் காண முடியாத நுண்ணிய காம அரசியை முடிவர். காமம் மிகுந்தாலும் அவளை அடையும் பலம் அவர்களிடம் இராது. அவனை இத்தனை பரிதாபத்துக்குரிய நிலையில் அவள் பார்த்ததே இல்லை. அவளுக்கு மனம் பதறியது. ‘ராஸ்பெர்ரிகளைப் பாலில் கலந்து தரட்டுமா?’ எனக் கேட்டாள்.

’அத்தகைய வைத்தியம் எல்லாம் எங்கள் இனத்துக்குப் பொருந்தாது’ என்று பதில் சொன்னான் அர்மிசா. ‘உங்களுக்கு நோய் வந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள்?’

’அரிக்கும் சொரிவோம்.’

அதன்பிறகு குறைவாகவே பேசினான். தைபிலிக்கு முத்தம் தந்தபோது அவன் மூச்சில் புளித்த வாடை. எப்போதும் காகம் கூவும் வரை அவளோடு இருப்பவன் அன்று மிக விரைவில் கிளம்பினான். கூடத்தில் செல்லும் அவன் அசைவுகளைச் செவியில் கவனித்தபடி அமைதியாகப் படுத்திருந்தாள் தைபிலி. சாளரம் பூட்டி இருந்தாலும் அவனால் புகுந்து பறந்து செல்ல முடியும் என்று சொல்லி இருந்தான். ஆனால் அன்று கதவைத் திறக்கும் ஓசை கேட்டது. தீய உயிரினங்களுக்காகப் பிரார்த்தனை செய்வது பாவமென்றும் அவற்றைச் சாபமிட்டு அவற்றின் நினைவுகளை அழிப்பதே சரியென்றும் அவளுக்குத் தெரியும். ஆயினும் அன்று அர்மிசாவுக்காகக் கடவுளிடம் வேண்டினாள்.

ஆதங்கத்தில் கத்தினாள். ‘ஏகப்பட்ட பேய்கள் இருக்கின்றன. அவற்றோடு இந்த ஒன்றும் இருந்துவிட்டுப் போகட்டும்.’

தொடர்ந்து வந்த சனி இரவு முழுவதும் காலை விடியும்வரை அர்மிசாவுக்காகக் காத்திருந்தாள் தைபிலி. அவன் வரவே இல்லை. மனத்துக்குள் அவன் சொன்ன மந்திரங்களைச் சொல்லி அவனை அழைத்தாள். ஆனால் கூடம் அமைதியாகவே இருந்தது. மரத்துப் போனவள் போலக் கிடந்தாள். துபால் கெயினுக்காகவும் எனோக்குக்காகவும் தான் நடனமாடியதாகவும் நோவாவின் படகில் அமர்ந்ததாகவும் லாத்தின் மனைவியின் மூக்கில் இருந்த உப்பை நக்கியதாகவும் அஹாசுரஸின் தாடியைப் பிடித்து இழுத்ததாகவும் முன்பு பெருமை பேசினான் அர்மிசா. நூறாண்டுகள் கழித்து அவள் ஒரு இளவரசியாகப் பிறப்பாள் என்றும் அவளைத் தனது அடிமைகள் சிட்டிம், டச்சிமின் துணையுடன் தான் கடத்திச் சென்று இசாவுவின் மனைவி பெஸ்மெத்துடைய மாளிகைக்குத் தூக்கிச் செல்லவிருப்பதாகவும் தீர்க்கதரிசனம் சொன்னான். ஆனால் அவன் இப்போது எங்கேயோ நோயுற்று, உதவ யாருமற்ற பூதமாக, தந்தை தாய், பணிவிடை செய்ய நேர்மையான மனைவி என யாருமற்ற அநாதையாகக் கிடந்தான். அவளருகே சென்ற முறை இருந்தபோது அவனுடைய மூச்சு எத்தனை சீரற்று வீசியது என்று நினைத்தாள். மூக்கின் வழிவந்த மூச்சு சீழ்க்கையொலி எழுப்பியது. ஞாயிறு முதல் புதன் வரை கனவில் வாழ்பவள் போல நாட்களைக் கழித்தாள் தைபிலி. புதன் நள்ளிரவு மணி அடிக்கும் வரை அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அர்மிசா அப்போதும் தோன்றவில்லை. தைபிலி முகத்தைச் சுவரை நோக்கித் திருப்பினாள். 

மாலையைப் போல இருண்டபடி தொடங்கியது அந்நாள். இருண்ட வானத்தில் இருந்து பனி தூசுப்படலம் போலக் கொட்டியது. போக்கிகளில் இருந்து புகை வெளியேற முடியவில்லை. கூரைகளின் மேல் கந்தல் துணியைப் போல விரிந்தது. அண்டங்காக்கைகள் வன்மையாகக் கரைந்தன. நாய்கள் குரைத்தன. துயர்மிகுந்த இரவுக்குப் பிறகு கடைக்குச் செல்ல தைபிலிக்கு மனமில்லை. இருப்பினும் உடையணிந்து கிளம்பினாள். பாடை தூக்கிகள் நால்வர் ஒரு பாடையை ஏந்திச் செல்வதைக் கண்டாள். பனி படர்ந்த சவச்சீலையைத் தாண்டி சடலத்தின் நீலப் பாதங்கள் வெளியே நீண்டிருந்தன. பிணத்தைத் தொடர்ந்து ஒரேயொரு மதகுரு மட்டுமே வந்தார். இறந்தது யாரெனத் தைபிலி கேட்டதற்கு ‘ஆசிரியரின் உதவியாளன் அல்கொனான்’ என்று பதிலளித்தார் அவர்.  

பொறுப்பற்று தனியனாக வாழ்ந்து தனியனாக இறந்த அல்கொனானின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர வேண்டுமென்ற விசித்திரமான எண்ணம் தைபிலிக்குத் தோன்றியது. இன்று கடைக்கு யார் வருவார்? வியாபாரத்தைப் பற்றி அவளுக்கு என்ன கவலை? தைபிலி அனைத்தையும் இழந்தவள். குறைந்தது ஒரு நற்செயல் செய்வதே சிறந்தது என்று எண்ணினாள். இடுகாட்டுக்குச் செல்லும் நீண்ட சாலையில் பின்தொடர்ந்து சென்றாள். சவக்குழி தோண்டுபவன் பனியை விலக்கி உறைநிலத்தில் குழி தோண்டும் வரை காத்து நின்றாள். ஆசிரியரின் உதவியாளன் அல்கொனானைச் சவச்சீலையிலும் தளர்வங்கியிலும் சுருட்டினர். விழிகளில் சில்லுகளை வைத்தனர். விரல்களிடையே மிர்டல் மலர்க்காம்பை வைத்தனர். இறந்தவர் அதைக் கொண்டு சவக்குழியைத் தோண்டி, காப்பர் வரும்போது அவரைச் சந்திக்கட்டும் என்பது நம்பிக்கை. குழியை மூடி கத்திஷ் பாடினர். தைபிலி உடைந்து அழுதாள். இந்த அல்கொனானும் அவளைப் போலவே தனிமையில் வாழ்ந்தவன். அவளைப் போலவே அவனுக்கும் வாரிசுகள் இல்லை. ஆசிரியரின் உதவியாளன் அல்கொனான் தனது இறுதி நடனத்தை ஆடிவிட்டான். அர்மிசாவின் கதைகளில் இருந்து இறந்தவர்கள் நேரடியாகச் சுவனத்துக்குச் செல்வதில்லை என்று தைபிலி அறிந்திருந்தாள். ஒவ்வொரு பாவமும் ஒரு பேயைத் தோற்றுவிக்கும். அவன் இறந்தபிறகு அந்தப் பேய்கள் அவனது குழந்தைகளாகச் சுற்றித் திரியும். தம் பங்குக்காக அவை திரும்பி வரும். இறந்தவனைத் தந்தை என்று அழைத்து அவனுக்கான தண்டனை முடியும் வரை அவனைக் கொடுவனத்தில் ஓடவிட்டுத் துரத்தி உருட்டி எடுக்கும். அதன் பிறகே நரகத்தில் வதைபட அவன் அனுப்பப்படுவான். 

அன்றிலிருந்து தைபிலி தனிமையில் வாழ்ந்தாள். இருமுறை – துறவியாலும் பூதத்தாலும் – கைவிடப்பட்டவள். விரைவாக முதுமை எய்தினாள். கடந்தகாலத்தில் எதுவும் அவளிடம் எஞ்சவில்லை, சொல்லவே முடியாத, சொன்னாலும் நம்பத்தகாத ஒரு ரகசியத்தைத் தவிர. உள்ளம் உதடுகளுக்கே சொல்ல முடியாத ரகசியங்கள் உண்டு. அவற்றின் பாரத்தைச் சவக்குழி வரை தாங்கியாக வேண்டும். அலரிநிரை அவற்றை முணுமுணுக்கும். காக்கைகள் அவற்றை உரைத்துக் கரையும். கல்லறைக் கற்கள் மெளனமாக அது பற்றிக் கற்களின் மொழியில் உரையாடும். இறந்தவர் ஒருநாள் விழிப்பர். ஆனால் அவர்களுடைய ரகசியங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார். அனைத்து தலைமுறைகளும் வாழ்ந்து தீர்த்த பின் வரும் தீர்ப்புநாள் வரை அவை அவருடனே உறையும்.

*

ஆங்கில மூலம்: Teibele and her demon by Isaac Bashevis Singer, The Collected Stories: A Library of America Boxed Set, November 2015 Edition.