கைப்பிடி தானியத்துக்கு
நூறாக வந்தமர்கின்றன
சிட்டுக்குருவிகள்.
ஓ… நூறும் ஆயிரமும்
எண்ணக் கூடியவைதாம்.
பிடிக்குள் இருப்பதுதான்
மிரளச் செய்கிறது.
*
விழாக்களுக்காகத்
தங்களை அலங்கரித்துக்கொள்பவர்களால்
ஒவ்வொரு கணத்தின்
மலர்ச்சிக்காகவும்
சிலிர்த்துக்கொள்ள
முடிகிறதா…
ஒப்பனை நேர்த்தி
எக்கணம் வரை…
*
தனது பட்டத்தைத்
தனது வானத்தில்
பறக்கவிடுகிறாள்
குழந்தை.
காற்று அலைக்கழித்தாலும்
கைகொட்டிச் சிரிக்கிறாள்.
வாலறுந்து கிழிந்து
கிளையில்
சிக்கிக் கிடந்தாலும்
துளியும் கவலையில்லை.
பட்டத்தின் பட்டம்
நூறாயிரம் அவளிடம்.
செய்யச் செய்யக்
கிழியட்டும் என்கிறாள்
கிழியக் கிழியக்
கொண்டாட்டம்
ஏகாந்தம்.
*
இருட்டுக்குள்ளிருந்து
ஒளிக்குப் பிறந்தவர்களாய்
நாம் அலைந்துகொண்டிருப்பது
பெருங்கதை.
கூட்டிய சருகுகளை
அள்ளுவதற்குள்
காற்று கலைத்துப்
பறக்கச் செய்கிறது.
தொட்டாற்சிணுங்கியை
மேய்ந்துகொண்டிருக்கும்
கன்றுக்குட்டியைத்
தடவிக்கொடுக்கிறேன்.
கண்டுகொள்ளாமல்
வெட்டுக்கிளியையும்
சேர்த்தே மெல்லுகிறது
அழகின் சிகரம்.
*
இந்தச் சிறு நீலப் பறவையின்
கண்ணியத்துக்கு
என்ன குறைச்சல்.
ஆயிரம் இதழ்
தாமரைக்குச் சற்றும்
குறைவில்லாத
பேரழகு.
புண்ணியம்.
முழுமையின் பாகமாய்
களங்கமின்றிக்
குறும்புதரில்
அமர்ந்திருக்கிறது.
காட்சிக்கு ஈடாய்
நீல வானம்
முழுக்கத் தர வேண்டியிருக்கும்.
*
குன்றின்மேல் ஏறி
நின்று அறிவிப்பதற்கு
எதுவுமில்லை.
நேற்று எனக்கு
ஏற்பட்ட சிராய்ப்பு
இன்று உங்களுக்கு.
தப்பிப் பிழைத்தது
தெறித்து ஓடுகிறது.
ஏணியில் ஏறியேறிப்
பாம்பிடம் கடிபட்டுத்
தாயத்தை உருட்டுகிறோம்.
சாபம் நீங்க முனிவனைத்
தேடுகின்றனர் சிலர்.
தீவட்டியை ஏந்தியபடி
தங்கச் சுரங்கத்தில்
வியர்த்துக் கொட்டுகிறது.
*
அன்பின் தாவரத்தில்
அடிக்கடி மொட்டு வைக்கிறது
மணம் கமழ்கிறது.
எப்போது இது இப்படி
நிகழுமென்று தெரியாது.
சட்டென்று வாடிக் கிடக்கிறது.
ஆசி வழங்கும்
தெய்வங்களைக் காணோம்.
இதுவும் அப்படியாய்
இறுதியில் பிழைத்துக் கொள்கிறது.
தழைக்கத் தொடங்குகிறது.
அடிக்கிழங்கிலிருந்து
புதுப்புது முளைகள்.
அன்பின் பெருந்தன்மை.
ஆசீர்வாதம்.
*
முறியாத கிளையில்
மறைவான இடத்தில்தான்
கூட்டுக்குள் முட்டைகள்.
தெய்வீக ஞானம்
புயலாக வீசாது.
உடும்பாக ஏறாது.
கிளையை முறித்துப் போடாது.
இது எதுவோ
கீச்சுக்குரல்
கேட்பதற்குள்
ஏறிவிடுகிறது
விழுங்கிவிடுகிறது.
*
அது நம்மைச்
சாய்த்து விடுகிறது.
அன்பு எப்போதும்
நம்மைக் கிடத்தி
மூச்சுமுட்டச் செய்கிறது.
ரோஜாக்களைத்
தவிர்க்க முடியாமல்
நாம் படும் பாடு
பரிதாபத்திற்குரியது.
அலையின் எழுச்சி
மீன்களின் துள்ளல்
மின்னலின் தாக்கம்
அதுவேதான்
அன்பிலும்.
*
அலாதியாகப்
பூத்துக் கிடக்கும்
சாமந்திப் பூக்களைப்
பார்ப்பதற்காக
வருகிறார்கள்.
பாதியில் கவனம்
கிளைகளில்
நெல்லிக்காய்கள் மீது
தாவுகிறது.
அரிப்பு ஏற்படுத்தும்
விஷச் செடிகள்.
களைகள் பற்றிப்
புலம்புகிறார்கள்.
மழைக்காலத்தில்
நத்தைகள் குறித்தும்
கோடையில்
கொசுக்கள் குறித்தும்…
போகும்போது
சாமந்தியைத்
தடவிச்செல்கிறார்கள்.