‘அவன் என்னை அடிக்க வரான் சார்’

by மானசீகன்
17 comments

‘அவன் என்னை அடிக்க வரான் சார்’. இந்த வார்த்தைகளைக் கேட்காத மாணவர்களே இருந்திருக்க முடியாது. வகுப்பறைகளில், காலை வழிபாட்டில், மைதானங்களில், ஆண்டு விழாக்களில், ஏன் கல்விச் சுற்றுலாக்களில்கூட இப்படியொரு சொற்றொடரைக் கேட்டுக் கேட்டு ஆசிரியர்களுக்குக் காதே புளித்திருக்கும். உப்புப் பெறாத பிரச்சினைக்கு உச்ச நீதிமன்ற வக்கீல்கள் மாதிரி இரண்டு பேரும் மாற்றி மாற்றிப் பேச, கடைசியில் வாத்தியாரின் அடியோடு பஞ்சாயத்து கலையும். ஆனால், முதன்முறையாக ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டு பயந்து விடுமுறை போட்டுவிட்டு கல்வி அதிகாரியின் அறை வாசலில் நின்று இந்தச் சொற்றொடரைக் கண்களில் பயத்தோடும் உடல் முழுவதும் வழிகிற இளிவரல் உணர்வோடும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் அவமானகரமான நிகழ்வு இதுவன்றி வேறென்ன இருக்க முடியும்?

‘ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது’ என்கிற சொற்றொடரை நாம் அனைவரும் ‘உருவாக்கம்’ என்றே பொருள் கொள்கிறோம். ஆழ்ந்து யோசித்தால் வேறொன்றையும் அவதானிக்க முடியும். ஒரு சமூகத்தின் செல்திசைக்கான தொடக்க அறிகுறிகளை நாம் வகுப்பறைகளில் இருந்தே கண்டுணர முடியும். கடந்த சில மாதங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் படிக்கிற அரசுப் பள்ளி மாணவர்களின் தொடர் அட்டகாசங்கள் காணொளிகளாக வந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

இந்த விஷயத்தை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலிருந்தும் புரிதலில் இருந்தும் அணுகுகிறார்கள்.

1. ‘ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது’ என்று அரசு கையைக் கட்டிப்போட்டதால்தான் இப்படி நிகழ்கின்றன.

2. பெற்றோர்களுக்கு ஒழுங்காகப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லை. அதனால் பல பிள்ளைகள் ரௌடிகளாகவே மாறிவிட்டார்கள்.

3. அர்ப்பணிப்பு உணர்வில்லாத ஆசிரியர்களால்தான் இப்படிப்பட்ட மாணவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

4. கொரோனோவால் ஏற்பட்ட மனரீதியான பாதிப்புகள்தான் இதற்குக் காரணம். மனநல ஆலோசனை தந்தால் எல்லாம் சரியாகிவிடும். அமைச்சரே அப்படி யோசித்துதான் ‘ஆசிரியர்களே இரண்டாம் பெற்றோர்களாகி கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார்.

5. எல்லாக் காலத்திலும் மாணவர்கள் இப்படித்தான். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது. இவற்றையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

மேற்கண்ட ஐந்து பார்வைகளிலும் கொஞ்சம் உண்மை இருக்கலாம். ஆனால், இந்தப் பிரச்சினையை இப்படியொரு சிறிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது என்பதே உண்மை. இந்தப் பிரச்சினை இப்போது புதிதாகத் தொடங்கவில்லை என்பதைப் பலரும் உணர்வதேயில்லை. என் கணிப்பில் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கல்விக்கூடங்களில் ‘மாணவ மனநிலை’ இப்படித்தான் இருக்கிறது. இப்போதுதான் ஓரளவு பொதுக் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதை நோய் என்று கருதுவதைவிட, வரப்போகிற மாபெரும் நோய்க்கான அறிகுறி என்பதே உண்மை.

நான் ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை ஊராட்சிப் பள்ளியிலும், நான்கிலிருந்து ஆறு வரை அரசு உதவிபெறும் பள்ளியிலும், ஆறிலிருந்து பனிரெண்டு வரை அரசுப் பள்ளியிலும் படித்தவன். கிராமப்புறக் கல்லூரியிலும் நகர்ப்புறக் கல்லூரியிலும் படித்துவிட்டு பத்தொன்பது ஆண்டுகளாக அரசு உதவிபெறும் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழகத்தின் முக்கியமான பல கல்வி நிறுவனங்களுக்குப் பேச்சாளராகச் சென்று வருகிறேன். இந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பரிணாமங்கள் அடைந்து மாறி வந்திருக்கிற மாணவ உளவியலின் சாட்சியாக நானே இருக்கிறேன். கிராம, நகர்ப்புற வேறுபாடுகளும் அரசுப் பள்ளி, தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவ நடத்தைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.

சிலர் நினைப்பது போல, ‘காலமாற்றம். அப்படித்தான் இருக்கும். அடுத்த தலைமுறையின் மனப்போக்கு ஆசிரியர்களுக்குப் புரியவில்லை. இது வெறும் தலைமுறை இடைவெளி’ என்கிற வாதம் கொஞ்சம்கூடச் சரியில்லை. ஏனென்றால் திடீரென்று நிகழ்ந்த பெருமாற்றத்தைக் கடந்த ஏழு ஆண்டுகளாகவே அவதானித்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக இது வெறும் தலைமுறை மாற்றம் இல்லை. அதனை முழுமையாக உணர்ந்தவர்கள் கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே. பிறருக்கு அது இன்னும் முழுமையாகத் தெரியாது.

எல்லாக் காலத்திலும் மாணவர்களில் பல தரப்புகள் இருக்கும்.

1. படிப்பைத் தவிர வேறு எதையும் யோசிக்காத மாணவர்கள். எப்போதும் இவர்களின் சதவீதம் மிகவும் குறைவாக இருக்கும்.

2. எந்த இலக்கும் இல்லாமல் கடமைக்காகக் கற்க வருகிறவர்கள். அவர்கள் பள்ளி இறுதியிலோ கல்லூரியிலோ அல்லது அதற்குப் பிறகோ திடீர் ஞானஸ்நானம் பெற்று ஓடத் தொடங்குவார்கள். இவர்களின் எண்ணிக்கைதான் எல்லா இடங்களிலும் அதிகம்.

3. விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றில் தனித்திறமை கொண்டவர்கள். இரண்டாம் வகை மாணவர்கள் பெரும்பாலும் இவர்களுக்குப் பின்னால்தான் நட்புகளாகி அலைவார்கள்.

4. சக மனித உறவுகளே முக்கியம் என்று கருதுகிற மாணவர்கள். சக மாணவர்களிடம் மட்டுமல்ல, ஆசிரியர்களிடமும் இவர்கள் உயிரைக் கொடுத்துப் பழகுவார்கள். எண்பதுகளில் ஆரம்பித்து இரண்டாயிரங்கள் வரை இப்படிப்பட்ட மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் நுட்பமான உழைப்புச் சுரண்டலை நிகழ்த்தி வந்தார்கள். இந்த இனமே இப்போது ஏறக்குறைய அழிந்துவிட்டது.

5. பிறழ் நடத்தை கொண்ட மாணவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி நிறுவனங்களில் ஐந்தாம் வகையினரைத் தவிர பிறரின் உடல்மொழி ஒரே மாதிரிதான் இருக்கும். ஐந்தாம் வகையினரின் உடல்மொழி மட்டும் தனித்து வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் கல்லூரிகளில் கண்டு நான் அதிர்ச்சியடைந்த முதல் விஷயம் இந்த உடல்மொழி மாற்றம்தான். அனைத்து வகை மாணவர்களின் சாதாரணமான உடல்மொழிகூட பிறழ் நடத்தை கொண்ட மாணவர்களிடமிருந்து பெரிதாக வேறுபடவில்லை. ஒரே வித்தியாசம்தான். அங்கே திரி பற்ற வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே இன்னும் அது நிகழவில்லை.

நீங்களே நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். வகுப்பறையில் ஒரு மாணவன் சொல்லக் கூசும் கெட்ட வார்த்தைகளோடு ஆசிரியரை அடிக்கப் போகிறபோது சிலர் அவனோடு சேர்ந்துகொள்ள, பலர் எந்தச் சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்ப்பதை நீங்கள் எந்தக் காலத்தில் பாரத்திருக்கிறீர்கள்‌? அதுதான் இப்போது நிகழ்ந்திருக்கும் மிக முக்கியமான வேறுபாடு. முன்பெல்லாம் பிறழ் நடத்தை கொண்ட மாணவர்கள் தனித்தீவாக இருந்தார்கள். இப்போது அவர்கள் மையத்திலேயே இருக்கிறார்கள். மற்ற அனைவரும் அதனை இரசிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

இன்னொரு வாதத்தையும் இங்கே பார்க்க முடிந்தது. வெளிவந்த காணொளிகள் அனைத்துமே முழுக்க முழுக்க அரசுப் பள்ளிகள் தொடர்பானவை. கொரோனா காலத்தில் தனியார்ப் பள்ளிகள் அடித்த கல்விக்கட்டணக் கூத்தால் அரசுப் பள்ளிகளை நோக்கி நகரந்தவர்களைத் திசை திருப்புவதற்காக இந்தக் காணொளிகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்று சிலர் குறிப்பிட்டிருந்தனர். உண்மை அதுவல்ல. இது மாதிரி வெளியான பல காணொளிகள் இணையவெளியில் கொட்டிக் கிடக்கின்றன. அவை ஆசிரியர்கள் எடுத்தவைகூட அல்ல. மாணவர்களே பெருமையோடு எடுத்து, ‘கெத்து’ என்கிற பெயரில் இன்ஸ்டாவிலும் புலனத்திலும் (WhatsApp) பகிர்ந்தவைகளில் சில வைரலாகி நம் பார்வைக்கு வந்திருக்கின்றன. தனியார்ப் பள்ளிகளின் காணொளிகள் ஏன் கிடைக்கவில்லை என்றால் அந்த மாணவர்கள் அரசுப்பள்ளி மாணவர்களைப் போல நடந்துகொள்ளவில்லை என்பதால் அல்ல. அங்கிருக்கும் அதீத கட்டுப்பாடு அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது. அவர்களின் உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பற்றிய பார்வையை நீங்கள் அறிய நேர்ந்தால் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருந்தபடி தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த மாற்றம் திடீரென்று நிகழ்ந்தது அல்ல. உலகமயமாக்கலில் தொடங்கி, இரண்டாயிரங்களுக்குப் பிறகு நிகழ்ந்த மதிப்பீடுகளின் மீதான அக்கறையின்மையில், இரசனை வீழ்ச்சியில் மையம் கொண்டு, அடையாள அரசியலின் எதிர்குணங்களால் கூர்மையடைந்து, தகவல் தொழில்நுட்பத்தின் உச்ச வளர்ச்சியான மிகை திறன் அலைபேசியால் (smart phone) இந்த இடத்திற்கு வந்திருக்கிறது. இவை அனைத்துக்குமே மாணவர்களின் பிறழ் நடத்தைகளில் பங்கிருக்கிறது.

ஆசிரியர்களைவிடப் பலமணி நேரம் இவர்களோடு நேரத்தைச் செலவழிக்கிற பெற்றோர்களுக்கு ஏன் இந்த மாற்றம் தெரியவில்லை என்கிற கேள்வி முக்கியமானது. உலகமயமாக்கலுக்குப் பிறகு வெற்றி மட்டுமே குழந்தை வளர்ப்பின் ஒரே இலக்காக நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. தன் பிள்ளை குறித்துக் கூறப்படும் எந்தப் புகாரையும் தாங்கள் அடைய வேண்டிய வெற்றிக்கான தடையாக மட்டுமே பெற்றோர்கள் கருதுகிறார்கள். அவர்களின் அதீதமான சுயநலம் மிக முக்கியமான காரணம். அரசு ஊழியர்கள் அல்லாத (பணக்காரர்கள் உட்பட) அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைக்குப் பிந்தைய அரசுச் சம்பளத்தின் மீது கடுமையான காழ்ப்புணர்வு இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் அதனைச் சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தப் பிள்ளைகள் அவற்றைக் கேட்டே வளர்கிறார்கள். பெற்றோர்களுக்கு இப்போது ஆழ்மனதில், ‘நீ எம் பிள்ளைய கண்டிச்சு திருத்தவெல்லாம் வேணாம். பாடம் சொல்லித் தந்தால் போதும்’ என்கிற பார்வையே ஆசிரியர்கள் குறித்து இருக்கிறது. இணைய வழியிலான கல்வியைப் பார்த்த பிறகு, ‘நீ அதுக்கும்கூட தேவையில்லை. மெட்டீரியலை அனுப்பிட்டு பாஸ் போடு. அதுக்குத்தானே அவ்வளவு சம்பளம்?’ என்கிற இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள்.

ஒரு பதின்பருவத்து இளைஞனின் மனதை, வாழ்க்கை குறித்த பார்வையை, திறன்களைத் தம்மோடு இணைந்து வளர்த்தெடுக்கிற பங்காளிகளே ஆசிரியர்கள்’ என்கிற புரிதல் கடந்த தலைமுறையில் படிக்காத பெற்றோர்களுக்கே இருந்தது. அதனால்தான் அவர்கள் ஆசிரியர்களை அந்த அளவுக்கு மதித்தார்கள். ஆசிரியர்களுக்குத் தாம் தருகிற மரியாதையே தம் பிள்ளைகளின் வாழ்வில் உயர் விழுமியங்களாக மாறும் என்கிற உணர்தல் அவர்களிடம் இருந்தது‌. இன்றைய பெற்றோர்களோ காசு கொடுத்தால் கத்திரிக்காயையும் முருங்கைக்காயையும் பையில் அள்ளிப்போடுகிற காய்கறிக் கடைப்பையனைப் போல ஆசிரியர்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘இந்தா ஃபீஸூ.. மரியாதையா மார்க்கைப் போடு’ என்பது மட்டுமே ஆசிரியர்களுடனான அவர்களின் ஒற்றைப்படையான உறவாக மாறிவிட்டது. நானே பலமுறை ஆன்லைன் தேர்வுகள் தொடர்பாகப் பெற்றோர்களின் இந்த அணுகுமுறையை அலைபேசி வாயிலாக உணர்ந்திருக்கிறேன்.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை இப்போது விளிம்புநிலை மக்களே பெருவாரியாகப் படிப்பதால் இதே மனநிலை கூடுதல் உக்கிரத்தோடு பெற்றோர்களிடம் பிரதிபலிக்கிறது. ‘ஓட்டுக்குத் துட்டு’ என்பதே நடைமுறையாகிவிட்ட பிறகு அவர்களுக்கு அரசு தொடர்பான எல்லா விஷயங்களிலும் சுத்தமாக மரியாதை போய்விட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் அவர்கள் அப்படியே அணுகுகின்றனர். அந்த மனநிலையே மாணவர்களைக் கத்தியோடு வகுப்பறைக்கு வர வைக்கிறது. பெஞ்சை உடைக்கும் காணொளியை எடுக்க வைக்கிறது. பாடம் நடத்தும் பெண் ஆசிரியர்களின் சேலை விலகலைப் படம் பிடித்து புலனத்தில் அனுப்பத் தூண்டுகிறது.

அரசுப் பள்ளிகளில் சாதி முக்கியமான பங்காற்றுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சாதிக் கயிறு கட்டாமல் எந்த மாணவனும் வருவதில்லை. அவன் விரும்பியோ விரும்பாமலோ சாதிச் சங்கக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். ‘நட்புன்னா கெத்து’ என்று இந்தத் தலைமுறை சொல்வது, ‘உவப்பத் தலைகூடி உள்ளப் பிரியும்’ மானுடப் பேரன்பை அல்ல. சொந்தச் சாதிக்காரப் பசங்களோடு செய்யும் அற்பத்தனங்களை இவர்கள் வெளியில் ‘நட்பு’ என்று பறைசாற்றிக்கொள்கிறார்கள். திருவிழாக்களில் நடனமாடி எதிர்சாதியினரைச் சீண்டுகிறார்கள். புலனங்களில், பெண் பிள்ளைகள் உட்பட, சாதித் தலைவர்களை முகப்புப் படங்களாக வைத்து, சாதிப் பெருமிதம் பற்றிப் பேசி, காணொளிகளைப் பகிர்கின்றனர். பிற ஆசிரியர்கள் மூலமாகவோ தெருவில் இருக்கும் மூத்த அண்ணன்கள் மூலமாகவோ இவர்களுக்கு ஆசிரியர்களின் சாதி தெரிந்துவிடுகிறது. தங்களோடு பிரச்சினைக்கு வராத சாதிக்காரர் அல்லது வெளியூர்க்காரர் என்று தெரிந்துவிட்டால் அதீத தைரியத்தோடு அவர்களைச் சீண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த ஆசிரியர்கள் அரசுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல, மாணவர்களின் சாதி அடையாளங்களுக்கும் உள்ளூர் பெரும்பான்மைவாதத்துக்கும் பயந்து அமைதியாக வேண்டியிருக்கிறது. பிறழ் நடத்தை கொண்ட மாணவர்களை ஆசிரியர்கள் சிறிய அளவில் தண்டிக்க முற்பட்டாலும் ஆண்ட பரம்பரையோ ஒடுக்கப்பட்ட பரம்பரையோ மீசையை முறுக்கியபடி பள்ளி வளாகத்தைப் போர்க்களமாக்கி விடுவர் என்பதை ஆசிரியர்கள் உணரந்து நீண்ட நாட்களாகின்றன.

அரசு மாணவர்களை அடிக்கக்கூடாது என்று கலைஞர் சட்டம் போட்டது சரிதான். உண்மையில் கடந்த காலங்களில் பல ஆசிரியர்கள் ஹிட்லர்களின் வதைமுகாம் அதிகாரிகளைப் போலவே நடந்துகொண்டார்கள். அவர்கள் தப்பித்தது மாணவர்களின் கூடுதலான பயத்தாலும் அன்றைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த அதீத வழிபாட்டுணர்வாலும்தான். ‘அவர்கள் அடித்ததால்தான் நாங்கள் உருப்பட்டோம்’ என்று சிலர் இங்கே உருட்டுவது மிகப்பெரிய அபத்தம். அடிக்காவிட்டாலும் உருப்பட வேண்டியவர்கள் உருப்பட்டிருப்பார்கள். அடி வாங்கியிருந்தும் நாசமாய்ப் போனவர்கள் உண்டுதானே? ஆசிரியர்கள் அடித்ததாலேயே பள்ளிகளை விட்டு ஓடியவர்களும் உண்டு. ஆனால், ‘என்ன எழுதினாலும் தேர்ச்சி பெறலாம். என்ன செய்தாலும் அவனைப் பள்ளியைவிட்டு நீக்கக்கூடாது’ என்கிற விதிகள் சரியானவையல்ல. அவை சட்டங்களாக அப்படியே இருந்தாலும் நடைமுறையில் தேவையான நெகிழ்வுகளோடு இருந்திருக்க வேண்டும். எந்த அமைப்பிலும் வழிகாட்டுகிறவர்களின் கைகளில் ‘பிடிமானம்’ இருந்தால்தான் அமைப்பு சரியாக இயங்கும்.

திரைப்படங்கள், மிகைதிறன் அலைபேசிகள் ஆகியவை மாணவர்களின் உளவியலில் ஏற்படுத்தியிருக்கிற மாற்றத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாக் காலத்திலும் தமிழ்ச் சமூகம் திரைப்பட மோகம் கொண்டதாகவே இருந்தது, இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்போதும் இப்போதும் வெளிவருகிற பல திரைப்படங்கள் தமிழர்கள் வாழ்வுக்குக் கொஞ்சமும் பொருந்தாத அபத்தங்களும் குப்பைகளும்தான். ஆனால், அன்று, அதனால் உருவாகும் விளைவுகளைச் சமப்படுத்த குடும்பங்களில், பள்ளிகளில், சமூகத்தில், சில விழுமியங்களும் இலட்சியங்களும் நிலைபெற்றிருந்தன. திரைப்படங்களிலும் போலியாகவேனும் அவை இடம்பெற்றன. அன்று எம்.ஜி.ஆர் தம்மோடு நடிக்கும் நாயகிகளின் உடலில் நிகழ்த்தும் மசாஜ் சர்வீஸை இரகசியமாக இரசிக்கிற ஒரு மாணவன் பொதுவெளியில் அதைச் சொல்ல முடியாமல் புரட்சி வசனங்களையும் பட்டுக்கோட்டையார் பாடல்களையும்தான் பேசியாக வேண்டிய சூழல் இருந்தது. இன்று எவருக்கும் எந்த விழுமியங்கள் மீதும் நம்பிக்கை இல்லை. இலட்சியவாதம் நம்மைவிட்டு முழுமையாக விடைபெற்றுவிட்டது. நுண்ணுணர்வே இல்லாத அரைகுறையான செக்ஸ் காட்சிகளும், மோகத்தைத் தூண்டும் பாடல் வரிகளும், இரட்டை அர்த்த வசனங்களும், கேவலமான நகைச்சுவைக் காட்சிகளும், அதீதமான வன்முறையும் தொடர்ந்து காட்சிகளாகப் படிகிறபோது மனதில் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. வாசிக்கும் ஆர்வம் தொண்ணூறுகளிலேயே போய்விட்டாலும் மிகை திறன் அலைபேசிகள் அவர்களின் உடற்செயல்பாடுகளையும் கேட்கும் திறனையும் முழுதாக அழித்திருக்கின்றன‌.

இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழகம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த வளர்ச்சி தேர்ச்சி விகிதத்தில், பொருளாதார, தொழில் முன்னேற்றத்தில், மருத்துவக் குறியீடுகளில் மட்டுமே நிகழந்திருக்கிறது. பண்பாடு, வரலாற்றுப் பிரக்ஞை, கலை, இலக்கிய இரசனை, மானுடம் குறித்த விரிந்த பார்வை, அறிவியல் பார்வை, சமத்துவம் ஆகியவற்றில் நாம் பல ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். பண்பாட்டு ரீதியாக வளராமல் பொருளாதாரத்தில் மட்டும் திடீரென்று தன்னிறைவு பெற்றுவிட்ட சமூகம் உணரும் தத்தளிப்புகளைத்தான் நாம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அந்தத் தத்தளிப்புகளால் நிகழ்ந்த உளவியல் பாதிப்பைத் தம் மோசமான உடல்மொழிகளால் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிற முதல் தலைமுறையை இப்போது ஆசிரியர்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்‌.

எல்லாக் காலத்திலும் பாலியல் மீறல்கள் உண்டு. அதற்கு எந்தச் சமூகமும் துறையும் விதிவிலக்கில்லை. ஆசிரியர் சமூகமும் அப்படித்தான். தகவல் தொடர்புச் சாதனங்கள் வரும்வரை உள்ளூரில் மட்டும் காற்று வாக்கில் பேசி மறந்துவிடுகிற சில கதைகளை இப்போது தமிழ்நாடே காணொளிகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவை கூடுதலாகிவிட்டன என்றுகூடச் சொல்ல முடியாது. கூடுதலாக வெளிப்படுகின்றன. எல்லாத் துறைகளிலும் நிகழும் பல பாலியல் மீறல்கள் இன்று பொதுவெளிக்கு வந்துவிடுகின்றன. ஆனால் பிற துறைகளில் இருப்பவர்களின் பாலியல் மீறல்கள் சில நாள் அவமானங்களாக மட்டுமே முடிந்து போகின்றன. சிலர் அது மாதிரித் தருணங்களில்கூட மற்றவர்களால் ஹீரோவாகப் பார்க்கப்பட, அவரும் கெத்தோடு அலைவார். ஆனால் கல்வித்துறையில் இது வேறொரு அவலத்தைக் கொண்டுசேர்க்கிறது. ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மீது சமூகம் வைத்திருந்த அதீத மரியாதையால் தார்மீக ஆவேசம் கொண்டு அவர்கள் அத்தகைய ஆசிரியர்களைத் திட்டுவதை இந்த மாணவர்கள் தம் நடத்தைப் பிறழ்வுகளுக்கான கூடுதல் நியாயங்களாகக் கற்பனை செய்துகொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் மரியாதைக் குறைவாகப் பேசுகின்றனர்.

பெற்றோர்களின் அதீத சுயநலத்தால் நிகழ்ந்த இன்னொரு விஷயம், கலை, இலக்கியம், விளையாட்டு சார்ந்த துறைகளில் முன்பிருந்த எண்ணிக்கையில் இன்று மாணவர்கள் ஈடுபடுவதில்லை. அப்படியே ஈடுபட்டாலும் பழைய திறன்களோடும் ஈடுபாட்டோடும் அவர்கள் இருப்பதில்லை. மடைமாற்றப்படாத பெரும்பாலான பதின் பருவத்தினரின் ஆற்றல் இந்த மாதிரி வீணான செயல்களில் கழிகிறது என்பதே கசப்பான உண்மை. மாணவிகளைவிட மாணவர்களின் பங்களிப்பு அதிர்ச்சியளிக்கும் அளவுக்குக் குறைவாக இருக்கிறது. இன்று உலகளாவிய அளவில் இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு வேறொரு பிரச்சினையும் இருக்கிறது. அவர்கள் கும்பலில் மட்டுமே இயல்பாக இருக்கிறார்கள். தனித்திறன்களில் பெண்களோடு ஒப்பிட்டால் படுமோசமாகச் சொதப்புகிறார்கள். இரசனை வீழ்ச்சியும் பெண்கள் குறித்து திரைப்படங்களால் உருவான ஆபத்தான பார்வையும் ஆண் மாணவர்களைப் படுமோசமானவர்களாக மாற்றியிருக்கிறது. பெண்களின் மீதான மரியாதையும் இரசனையும் நுண்ணுணர்வுகளுமே அந்த வயதில் மாணவர்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களை நோக்கிச் செலுத்தும். உடல்மொழியை நேராக்கும். ஆனால் மிகைதிறன் பேசிகளாலும் திரைப்படங்களாலும் அவர்கள் காண நேர்கிற நிர்வாணக் காட்சிகளும் ஆணாதிக்கச் சிந்தனைகளும் அவன் சமநிலையைக் குலைத்து எப்போதும் பெண்கள் முன்னிலையில் பதற்றமோ வன்முறையோ கொண்டவனாக மாற்றியிருக்கிறது. பெண்களை இரசனையால் ஈர்க்க நினைக்கிற ஆண், ஆசிரியர்களின் பாராட்டுகளுக்கான செயல்முறைகளில் ஈடுபாடுவான்‌. அவளை வன்முறையால் வெல்ல நினைக்கிற ஆண், அதன் மாதிரியைக் கூட்டமாகப் போய் ஆசிரியர்களிடம் காட்டி, பெண்கள் முன்னிலையில் தங்கள் ‘வீரத்தை’ நிரூபிக்க எண்ணுகின்றனர். மிகக் கேவலமான வீழ்ச்சி இது. இந்த மனநிலை கொண்ட பதின்பருவத்து இளைஞர்களின் எண்ணிக்கை இவ்வளவு கூடுதலாக இருப்பது ஒரு தேசத்திற்கே ஆபத்து.

இந்த உண்மைகள் எதுவுமே புரியாமல் கல்வித்துறைக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத சிலர் முகநூலில் வசதியாக உட்கார்ந்துகொண்டு தாம் படித்த அரைகுறையான முற்போக்குக் கருத்துகளை 2k kids மீது வலிந்து ஏற்றி வைத்து ஆசிரியர்களையும் கடந்த தலைமுறையையும் ‘கிரிஞ்ச்’, ‘பூமர்’ என்று கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர். (அவர்களும் அதே தலைமுறைதான்) நீங்கள் பேசும் எந்த விஷயத்தின் நிஜமான பொருளும் அவர்களில் 95% பேருக்கு ஒருபோதும் புரியாது. ஆனால் நீங்கள் கலாய்த்தால் உங்களுடன் சேர்ந்துகொண்டு ‘செம செம’ என்று கை தட்டுவார்கள். யாராவது தனியே அழைத்துப் போய் ‘என்னடா செம?’ என்று கேட்டால், ‘அந்த ஆண்ட்டி லிப்ஸைச் சொன்னேன்’ என்று கூசாமல் பதில் சொல்வார்கள். இவர்களிடம் இருப்பது லும்பன்தனமின்றி வேறில்லை.

இவர்களின் வயது கருதி ‘மைனர்கள்’, ‘குழந்தைகள்’ என்கிற ரீதியில் யோசிப்பதுகூட சரியான விஷயம் இல்லை. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை இப்போதைக்கான முதல் தீர்வு, ‘கல்விக்கூடங்களில் அத்துமீறினால் நமக்கு நல்லதில்லை’ என்கிற பயத்தை இவர்களுக்கு உருவாக்க வேண்டும். (அடிக்கலாம் என்று கூறவில்லை) தவறு செய்தால் எந்த நிமிடமும் வெளியேற்றப்படுவோம் என்கிற அச்சம் இவர்களுக்கு மட்டுமல்ல, இவர்களை இப்படித் தண்ணீர் தெளித்துவிட்டிருக்கும் பெற்றோர்களுக்கும் வர வேண்டும். எந்த விழுமியங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இது மாதிரியான அதீத பயமுறுத்தல்களுக்கும் தண்டனைகளுக்கும் மட்டுமே கட்டுப்படுவார்கள். ஆனால் கண்டிப்பாக இது நிரந்தரத் தீர்வல்ல. கொதிநிலையைக் கொஞ்ச நாட்கள் ஆறப்போடலாம். இன்னும் மோசமாகிவிடாமல் தப்பிக்கலாம், அவ்வளவுதான். அந்த இடைவெளியில் மொத்தச் சமூகத்திலும் ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே இருபது ஆண்டுகளுக்குப் பிறகாவது நாம் இழந்ததைப் பெற முடியும். இந்த உண்மையை உணராமல் குழந்தைகள், இரண்டாம் தாய் கவுன்சிலிங், மானே தேனே என்று பேசுகிற பேச்சுகள் எல்லாம் எதற்கும் உதவப் போவதில்லை. கத்தியோடு துரத்துகிறவனின் கையிலிருப்பதை முதலில் பிடுங்கி எறியுங்கள். பிறகு, சாவகாசமாக, பயந்து ஓடி வருகிறவனுக்குப் பாடம் நடத்தலாம்.

17 comments

மிருதுளா April 26, 2022 - 11:25 am

உண்மை sir

மிருதுளா April 26, 2022 - 2:11 pm

ஒரு பேச்சாளராக, பள்ளி கல்லூரி மாணவர்களிடத்தில் பேசும்பொழுதும், ஆசிரியர் பணியில் இருக்கும் என் நண்பர்களிடம் பேசும்பொழுதும் அவர்கள் அனுபவத்திலிருந்தும் நான் இதை உணர்ந்திருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக இந்த விஷயத்தை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரைகளில், இதுவே சரியான பார்வைகொண்ட ஒரு கட்டுரையாக அறிகிறேன். பேராசிரியரின் அனுபவமும் எழுத்தும் சரியாக விஷயத்தை அவர் விளக்கியிருக்கும் பாங்கும் சிறப்பு.
காலத்தின் தேவை இதுபோன்ற சிந்தனைகளே.

Yasmin April 26, 2022 - 2:25 pm

அருமை அருமை.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. தமிழக அரசுக்குப் புரியட்டும்..

Murugesan April 26, 2022 - 2:45 pm

மிக முக்கியமான கட்டுரை.. அனைவருக்கும் சென்று சேரும்படி செய்வது அவசியம். முக்கியமாக கல்வித்துறைக்கும், கல்வி அமைச்சருக்கும் கொண்டு சேருங்கள்..

திருப்பதி வாசகன் April 26, 2022 - 2:59 pm

முழுமையான அலசல்… விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள் மட்டுமே படிக்குமிடமாக அரசு பள்ளிகளை மாற்றிய சமூகம் இதற்கான விலையையும் கொடுக்கத்தான் போகிறது

அனு April 26, 2022 - 3:07 pm

ஆழமான அலசல் Sr.
அத்தனையும் உண்மை. நானும் இதையே அடிக்கடி யோசித்திருக்கிறேன்.
நீங்கள் தெளிவாய் எழுதிவிட்டீர்கள்.
சமகால பிள்ளைகள்… மக்கள்.. அத்தனை பேரின் மனநிலைகளும் உண்மையில் மிக மோசமாய்த்தான் இருக்கிறது.

மிக அச்சம் தரும் வகையிலும் ????

கவிஞர் செ.திராவிடமணி April 26, 2022 - 7:22 pm

முன்பெல்லாம் பிறழ் நடத்தை கொண்ட மாணவர்கள் தனித்தீவாக இருந்தார்கள். இப்போது அவர்கள் மையத்திலேயே இருக்கிறார்கள். மற்ற அனைவரும் அதனை இரசிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

உண்மை. உண்மை.

Jayalakshmi April 26, 2022 - 11:00 pm

விரிவான அலசல்… அரசு குழு அமைத்து விவாதித்து நல்ல தீர்வு காண வேண்டும்….
மாணவர்களுடத்திலும், பெற்றோர்களிடத்திலும் தவறு செய்தால் கிடைக்கும் தண்டனை பற்றிய பயத்தை உண்டு பண்ண வேண்டும்.

தீபப்பிரசாத் April 27, 2022 - 3:45 pm

அற்புதமான கட்டுரை சார்.
1. தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்கின்ற அச்சத்தை ஏற்படுத்துதல்
2. கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் ஈடுபடுத்துதல்
3. பண்பாடு சார்ந்த அறிவை வளர்துக்கொள்வதற்கான வழிகளை செயல்படுத்துதல்
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இவ்வழிமுறைகள் அற்புதம் சார்.

Abinaya April 27, 2022 - 6:44 pm

ஆழமாக அலசி மிக தெளிவாக எழுதப்பட்ட அருமையான கட்டுரை சார்.சிறப்பான சரியான தீர்வும் தந்துள்ளீர்கள் சார்.தற்சமயம் எல்லோரும் புரிந்து கொள்ள மிகவும் அவசியமான கட்டுரை சார்.

LAKSHMI April 27, 2022 - 8:30 pm

சிறப்பான பதிவுங்க கவிஞர். பாராட்டுகள். அற்புதமான தீர்வும் கூறியிருப்பது அற்புதம்

Rengaraj April 28, 2022 - 9:48 am

“இதுவும் கடந்து போகும்” என்று தான் அரசு செயல்படுமே தவிர வேறு செயல்பாட்டினால் செயல்படாது.மாறும் என்ற நம்பிக்கையில்….
மிகச் சிறப்பான பார்வை

Chitra April 28, 2022 - 9:43 pm

அருமையான பதிவு முற்றிலும் உண்மையான கருத்து. மாணவர்கள் பண்டைய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும் அதில் இருந்த குரு மாணவர்களுக்கான உறவு முறை குறித்தும் மிகத் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான செயல்கள் அனைத்தும் ஆசிரியர்களின் தெளிவான வழிகாட்டலால் தான் வரலாற்றில் நிறைந்துள்ளது மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பாடத்திட்டத்தில் moral ethics பற்றிய பாடத்தை மாணவர்கள் படிப்பதோடு இல்லாமல் அதனை செயல் முறை வாயிலாகவும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்தால் நல்லதொரு தீர்வு ஏற்படும் என்று தோன்றுகிறது. மேலும் பள்ளிகளில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை வருடம் தேர்ந்தெடுத்து நல்ல ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கொடுப்பதை போல நல்ல மாணவர் விருதும் அவர்களுக்கு பாராட்டுதலும் கொடுத்தால் அவர்களுடைய ஆக்கப்பூர்வமான செயல்கள் அதிகமாகும்

Parivel.Ga April 29, 2022 - 6:25 pm

சரியானப் பார்வை, மொத்த மக்களின் மனநிலை தான் தற்காலத்திய திரைப்படங்களும், மாணவர்களின் செய்கைகளும், மக்கள் எவ்வழியோ மன்னவன் அவ்வழி

மாற வேண்டும்.

Ravichandran RJ April 30, 2022 - 4:20 pm

நிறைய நேரம் எடுத்துக்கொண்டு அலசியிருக்கிறீர்கள். ஆசிரியர்களின் சார்பாக நன்றி உங்களுக்கு.

மாணவர்களின் இந்த மாறிப்போன போக்கை, “எனக்குத் தெரிந்து எட்டு ஆண்டுகளாக” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது மிகவும் சரி. அது 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை All pass என்று அரசு அபத்தமாக அறிவிப்பு செய்த காலகட்டம். அந்த All pass கும்பல் தான் இன்றைய அடாவடிகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறார்கள்.

இந்த தேசத்தை புரையோடிய கூட்டமாக மாற்றவேண்டுமென்றால், பள்ளிக்கூடங்களில் புண்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு (ஆசிரியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும்) சில சட்டங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றனவா? அல்லது நாளை நடக்கப் போவதை இன்று கணிக்க முடியாதவர்கள் சொல்வதெல்லாம் இங்கு சட்டமாகிக் கொண்டிருக்கிறதா புரியவில்லை.

ஆசிரியர்களின் கையிலிருந்த கண்டிப்பு முறைகளை பிடிங்கிக் கொண்டு, மாணவர்களை வழிநடத்தச் சொல்வதென்று, மண்வெட்டியை கையில் எடுக்காமல், மண்ணைப் பிளக்காமல் மகசூல் தரச்சொல்வதற்கு ஒப்பானது.

டார்வின் சொன்னதை சரியாகப் புரிந்து கொண்டால், எல்லா மாணவர்களும் கல்தான், ஆசிரியர்கள் சிற்பிகள்.

உளியில்லாமல் செதுக்கு என்பவர்கள், டார்வின் சொன்னதையோ / மாணவர்களுக்கு நடத்தைகளைக் கற்றுத்தருவது பற்றிய உளவியல் கருத்தையோ / மரபு அல்லது சூழல் – மாணவர்களின் நடத்தைகளோடு தொடர்புடையது என்பது பற்றிய சிந்தனை இல்லாதவர்கள்.

மீண்டும் உங்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். “படிக்க வேண்டியவர்கள் படிக்கும் வரை”.

Anantharaja R May 1, 2022 - 7:11 pm

???????????? சிறப்பான அவசியமான எழுத்து ???????????????? நன்றி ????

Kasturi G May 1, 2022 - 8:29 pm

Writer Mr Mana Seegan has written this piece on status of affairs of students with a incisive look into what is happening at large. I am sure, many of the readers would endorse the views expressed by the writer without any hesitation.
Thanks

Comments are closed.