தமிழ்ச் சிறுகதை இன்று: நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள்

0 comment

சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் இது. தூயன், சுரேஷ் பிரதீப் ஆகியோரது கதைகளைத் தொடர்ந்து வெளியாகும் மூன்றாம் பகுதி.

*

உலகெங்கிலும் மனித வாழ்வுக்கென பொதுவான அம்சங்கள் சில உண்டு. அவையல்லாமல் நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற எல்லைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் பொருட்டு உருவாகும் தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. அவ்வாறான தனித்துவமான குணாம்சங்களை சுட்டிக் காட்டுபவையே சித்துராஜ் பொன்ராஜின் கதைகள்.

சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரில் வசிப்பவர். உலகெங்கும் பயணிப்பவர். ஆங்கிலத்திலும் ஸ்பானிய மொழியிலும் எழுதுபவர். இந்த அம்சங்கள் அவர் தமிழில் எழுதும் கதைகளில் தனித்த சில குணங்களை சாத்தியமாக்குகின்றன. தமிழ்ச் சிறுகதைகளில் எளிதில் காணமுடியாத சில காட்சிகளை அவை நமக்குக் காட்டுகின்றன. அயலகத் தமிழ் என்பது ஈழத் தமிழர்களால் எழுதப்படுபவை என்ற நிலை மாறி மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து எழுதுவதையும் உள்ளடக்கியது என்ற நிலையை இன்றைய கணினி உலகம் நமக்குச் சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பணியின் பொருட்டு உலக நாடுகளெங்கும் பயணம் செய்யும், வசிக்கும் இளைஞர்கள் புனைவுலகுக்கு வந்ததன் பலனாக நிகழ்ந்தது இது. இக்கதைகள் தமிழ் புனைவுலகுக்கு புதியதொரு பரிணாமத்தைச் சேர்த்துள்ளன.

உலகளாவிய மானுட வாழ்வின் பல்வேறு விநோதங்களையும் வியக்கத்தக்க அம்சங்களையும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் நிறையவே அறிமுகப்படுத்தியுள்ளன. அனைத்து விதமான பேதங்களையும் எளிய அன்பின் வழியாக மனிதனால் கடந்துவிட முடியும் என்பதை அடிக்கோடிட்டு காட்டுபவை அவை. உரிய நிலமற்ற ஒருவன் உலகையே சொந்தமாக்கத் துடிக்கும் அவாவை வெவ்வேறு விதத்தில் வெளிப்படுத்தும் அ.முத்துலிங்கத்தின் கதைகளிலிருந்து இன்றைய அயல்நிலக் கதைகள் முன்னகர்ந்துள்ளன. இன்றைய உலகில் நவீனமடைந்திருக்கும் பார்வைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள சாதகமும் பாதகமுமான பல்வேறு கூறுகளையும் அவை மையப்படுத்துகின்றன.

மனித உறவுகள் சார்ந்த தீராத மர்மங்களைத் துலக்கவோ அல்லது சுட்டவோ எழுதப்பட்டுள்ள ஏராளமான கதைகளுக்கு நடுவே சித்துராஜின் கதைகளும் மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டவையே. ஆயினும் அவரது கதைகளிலிருந்து வெளிப்படும் உறவுகள் சார்ந்த திரிபுகளும் அவற்றின் விளைவுகளும் தமிழில் சொல்லப்படாதவை.

வழக்கமான ஆண்-பெண் உறவு சார்ந்த சிக்கலைப் பேசும்போது கூட பிறழ் உறவுகள் சார்ந்தும் மணமுறிவு குறித்துமான அழுத்தங்கள் கூடியுள்ள இன்றைய சூழலில் அனைத்துக்கும் மையமாகவுள்ள எளிய காரணத்தை சுலபமாக சுட்டிக்காட்ட முடிகிறது (சித்தன்). தன்பாலின உறவை மையப்படுத்திய கதையிலும் கூட தன்னை விட்டு விலக நினைக்கும் இணையை பலிகொள்ளும் அளவுக்கான வன்மத்தையும் அதற்கு காரணமான possessiveness-யும் நுட்பமாக சொல்ல முடிந்திருக்கிறது (இருட்டு மனிதர்கள்). கைநிறைய சம்பாதிக்கும் மகளின் தயவில் இருக்க நேரும் பெற்றோரின் மன உளைச்சல்களும் மகளினுடைய தீர்மானங்களைக் குறித்து உரத்து கேள்வி கேட்கமுடியாத தயக்கங்களும் வலி தருபவை. அவளுக்காக தங்களை நிறைய மாற்றிக் கொள்கிறார்கள். அனுசரிக்க கற்றுக் கொள்கிறார்கள். இதுவரையிலும் பேணிய சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் துறக்கவும் மாற்றிக்கொள்ளவும் தயாராகிறார்கள். உயிர்த்திருக்க வேண்டி அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை செறிவாகக் காட்ட முடிகிறது (சிரித்த முகமாய் சிங்கம்). வேறு இடமென்றாலும் தாலி, நீண்ட கூந்தல் போன்ற புராதன அடையாளங்கள் சிலவற்றை தன்னுணர்வின்றி பற்றிக்கொண்டிருக்கும் விநோதத்தையும் அதன் பொருளின்மையையும் மையப்படுத்த வாய்த்திருக்கிறது (வெற்றிலை, நீலம்).

மனித உறவு சார்ந்த பிறழ்வுகளும் உறவின் பொருட்டு நிகழும் அபத்தமான கொலைகளும் நிராகரிப்புகளும் துரோகங்களும் வேறொரு நிலவெளியில் காட்டப்பட்டாலும் உலகளாவிய தன்மைகொண்டதே எனும் இயல்பை அழுத்தமாகச் சொல்கின்றன இக்கதைகள்.

முக்கியமாக தமிழில் அவ்வளவாக பேசாப்பொருளாக உள்ள தன்பாலின உறவு சார்ந்த கதைகளைக் (கடல், சிரித்த முகமாய் சிங்கம், இருட்டு மனிதர்கள்) குறிப்பிட வேண்டும். ‘பசித்த மானிடம்’ நாவலில் கரிச்சான் குஞ்சு வெகுகாலத்துக்கு முன்பே கையாண்டிருந்த போதும் சிறுகதைகளில் அவை சொல்லும்படியாக வெளிப்படவில்லை. சித்துராஜின் கதைகளின் நிகழிடம் அந்நிய நிலம் என்பது இவ்வாறான தன்பாலின உறவு குறித்த கதைகளை எழுத வாய்ப்பாக அமைந்து போனது. வேறு பிரதேசங்களில் கலாச்சார இயல்பாக சொல்லப்படும் இத்தகைய உறவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தரும் நிறைவை விட அதனால் உருவாகும் பதற்றமும் வன்மமும் கவனிக்க வேண்டியவை என்பதை இந்த மூன்று கதைகளுமே கோடிட்டுக் காட்டுகின்றன.

காமத்தைக் கதைப்பொருளாகக் கொண்டபோதிலும் அதை ஒரு வசதியாகவோ வாய்ப்பாகவோ கொள்ளாமல் புனைவு தளத்துக்கு அவசியமான அளவிலேயே நிறுத்தியிருக்கிறார் சித்துராஜ். உடல் சார்ந்த தளத்தில் காமத்தை அணுகாமல் மனத்தின் பல்வேறு ஊசலாட்டங்களூடே கவனித்திருப்பதே இக்கதைகளுக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது (உண்ணாமுலை, நீலம், வெற்றிலை).

பிற மனிதனின் மேல் கொள்ளும் அக்கறையும் அன்பும் சிறு பிறழ்வின் வழியாக வன்முறையாகயும் வெறுப்பாகவும் திரிபுகொள்கிற மர்மத்தைத் தொட்டுக் காட்டும் விதத்தையும் இக்கதைகள் அணுகியுள்ளன.

காமம் சார்ந்த உறவுகளைக் கடந்தும் மனம் தரிக்கும் வேடங்களையும் சித்துராஜின் கதைகள் விலக்கிக் காட்டியுள்ளன. கலை மேதமை எந்த விதத்திலும் மனத்தின் மாசுகளை விலக்கவோ துடைக்கவோ உதவுவதில்லை என்ற இயல்பைச் சொல்லும் ‘கனமதுரம்’ அத்தகைய ஒன்று.

குடும்ப உறவுகளுக்குள் இயல்பாகவே உள்ளிருக்கும் மனச்சாய்வுகளை முன்வைக்கும் ‘சாவுக்காசு’ கதையின் பின்னணியில் இருக்கும் அப்பாவின் பழங்கதையுமே கூட தொகுப்பின் பிற கதைகளில் மையத்துடன் இணைந்திருப்பது தான்.

அன்னிய நிலம், கலாச்சாரம் சார்ந்த இக்கதைகளின் வழியே மனத்தை அணுகும் போது, மனிதனின் சிறுமையும் கீழ்மையும் எங்கும் ஒன்றுபோலத்தான் என்பது துலக்கமாகிறது. நிலம், பண்பாடு, கலாச்சாரம் வேறானாலும் அடிப்படை மனித குணங்களில் எந்த மாற்றமும் இல்லை.

அனைத்து சிக்கல்களின், துரோகங்களின், வன்முறைகளின் பின்னணியிலும் இருப்பது ‘உடல்’ அன்றி வேறில்லை என்பதை உரத்துப் பேசுகின்றன இக்கதைகள்.

இயல்பான நடையும் எளிய தெளிவான மொழியும் செறிவான சித்தரிப்பும் மிக்க இக்கதைகள் மனவோட்டங்களை, உணர்வுகளை, கொந்தளிப்புகளை உக்கிரமாக வெளித்தெரியும் கதைகளில் புறக்காட்சிகள் மங்கலாகவே தென்படுகின்றன. ஆனால் சிற்சில வரிகளில் வரையப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் கூட உயிர்ப்புடன் மேலெழுந்துள்ளன.

‘எனக்கு மட்டும் கைகொடுத்துவிட்டு வீட்டில் கொஞ்ச நேரத்துக்கு மெல்லிய வயோதிக வாசனையை அலைய விட்டுவிட்டுக் காணாமல் போனார்கள்’ (சாவுக்காசு), ‘இரட்டைக் குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் அவர் கண்கள் ஜெபமாலை மணிகளாய் மின்னின’ (நியாயத் தீர்ப்பு) போன்ற வரிகளில் சித்தரிப்பு நேர்த்தி வெளிப்படுகிறது.

‘கடல்’ சிறுகதையில் கடற்கரையில் களியாட்டத்தின் போது இளைஞர்கள் சிலர் ஒரு குரங்கை கயிறு கொண்டு இரும்புக் கதவில் கட்டி பீரை புகட்டி போதையுறச் செய்து இரும்புத் தடியால் அடித்துத் துன்புறுத்தும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். நிஷினோ எனும் கதாபாத்திரம் கதையின் இன்னொரு பாத்திரமான மிசுனோவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே இதைச் சொல்லிக் கொண்டிருக்கும். மனிதனுக்குள் உறைந்திருக்கும் வன்முறையின் சகிப்பின்மையின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் இக்காட்சியின் இறுதியில் மிசினோ சொல்வான் ‘எல்லாத்துக்கும் நடுவுல தான் கடல் இருக்கே. அதைத் தாண்டுறது கஷ்டம்.’ நடுவில் இருக்கும் கடலைத் தாண்டாத வரையிலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதில்லை. ஆனால், கடல்தாண்டநேரும் பல சமயங்களிலும் வெவ்வேறு காரணங்களுக்காக பலரும் போதையூட்டப்பட்டு இரும்புத் தடியால் அடிபடும் குரங்குகளாக மாற்றப்படுகிறார்கள். வன்முறைக்கு இலக்காகிறார்கள். அவர்களது ஓலம் சதா கேட்கிறது என்றாலும் யாரும் செவியுறுவதில்லை.