பழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும்

0 comment

பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு “பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் உலகாயதம் என்கிற பூதவாதம், சாங்கியம் என்கிற எண்ணியம், வைசேடிகம் என்கிற சிறப்பியம், அளவியல் என்கிற நியாயவியல், ஆசிவகம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. தமிழகத்தின் பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் அறிவியல் அடிப்படையும், வைதீக எதிர்ப்பும்  உறுதியாக நிலை கொண்டிருந்தன. 1200 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு.1000-கி.பி.200), இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைதான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தது.

முனைவர். கா. இராசன் அவர்கள் தான் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில்புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற  அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் எனவும் தமிழ்ப் பிராமிக்கல்வெட்டுகள் அசோகன் காலத்திற்கு முற்பட்டவை என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை எனவும் கூறுகிறார்-(1). இந்த மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியதுதான் அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாக உடைய  ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ ஆகும்.

தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி அவர்கள்-(2). ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றிருக்கலாம். ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப்பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் காரணமாகவே மெய்யியல், இசை, இலக்கியம், வணிகம், தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றில் பண்டையத் தமிழர்கள் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைந்தனர்(3).

பண்டையத் தமிழ்ச் சமூகம்:

தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்திலிருந்து மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக் கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பே, தமிழ்ச் சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுப் புரட்சியைத்தோற்றுவித்துப் பலவிதங்களிலும் தன்னை வளர்த்துக்கொண்டது. அவை வளர்வதற்கான சமூகச் சூழல் தமிழகத்தில் இருந்தது. கி.மு. 1000க்கு முன்பே, நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணப் பொருட்கள், அவைகளின் திரவியங்கள் ஆகியவைகளின் உலகத்தேவையும், அவைகளால் உருவான  வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தது.  இக்கடல் வணிகம் கி.மு. 1000க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து இவை தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது எனலாம். தமிழகத்தில் வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள்,  சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் நிறைய சுதந்திரமான நகர்மைய அரசுகள் இருந்தன. இவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமாக ஆளப்பட்டதோடு, ஓரளவு சனநாயக உரிமைகளையும் கொண்டிருந்ததால்  இவை நாளடைவில் வளர்ச்சிபெற்ற வணிக நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும், வணிகமும் பெருகி வளர்ந்தன. இந்தநிலை கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை எவ்வித இடையூறும் இன்றி நீடித்து வளர்ந்து வந்தது.

ஆதலால் இக்காலகட்டத்தில் மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் முதலியன தொடர்ந்து இடைவிடாமல் வளர்ந்து வந்தன. இக்காலத்தின் தொடக்கத்திலேயே, அதாவது கி.மு. 7ஆம் 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப்(தொல்கபிலரின் எண்ணியம்)  பெற்றுக்கொண்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து மூவேந்தர்கள் தனித்தனி நகர்மைய அரசுகளை ஒழித்து அவைகளைத் தங்கள் ஆட்சிப்பரப்பில் இணைத்துக் கொள்ளும் பேரரசுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்நிலை கி.மு. 50 வரை தொடர்ந்து நடந்து வந்தது. அதே கால கட்டத்தில் சிறிது சிறிதாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களின், கிளை அரசர்களின் அரசுகளையும் பேரரசோடு இணைத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்து வந்தது. கி.மு. 50 வாக்கில் அவை உச்ச கட்டத்தை அடைந்து குடும்ப உறுப்பினர்களின் தனித்தனி அரசுகளும் இல்லாதொழிந்தன.

இவ்விதமாகச் சிறு சிறு நகர்மைய அரசுகள், குடும்ப உறுப்பினர்களின் அரசுகள், கிளை அரசுகள்,  வேளிர்களின் சிற்றரசுகள், முல்லைநிலச் சீறூர், மருதநில மூதூர், குறிஞ்சிநில குறுநில மன்னர்கள், பிற சிறுகுறு ஆட்சியாளர்கள் என இவைகளில் பெரும்பகுதி இல்லாதொழிக்கப்பட்டன. கொங்குப் பகுதியிலும், தொண்டை மண்டலத்திலும், தமிழகத்தின் வட பகுதிகளிலும் இருந்த சிறுகுறு அரசுகளின் பெரும்பகுதி கி.மு. 50 வாக்கில் இல்லாதொழிந்தன.  இதன்பின்னர்தான் சங்கம் மருவிய காலம் வருகிறது. இந்தச் சிறு குறு வணிக நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணகர்த்தாக்களாக இருந்தன என்பதை மனதில் ஆழப்பதியவைத்துக் கொள்வது மிகமிக முக்கியம்.

உருசிய அறிஞர் திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(4). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது  அறிவியலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போதுதான் அறிவியலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது.  மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு, நேபிள்சு போன்ற வணிக நகர அரசுகளில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகர அரசுகள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்க அறிவியலையும்  பொருள்முதல்வாத மெய்யியலையும் நீக்கிவிட்டு அவ்விடத்தில் அறிவியலுக்கு எதிரானவைகளையும், கருத்துமுதல்வாத மெய்யியலையும் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 சனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச்சிந்தனையை  ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை அங்கு உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைப்பள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத்துவங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத்தடுத்துவிடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைபள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. முடிய 1000 வருடங்களுக்கு மேலாக நகர்மைய அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாக அவை இருந்து கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவி வந்தது. அதனால்தான் எண்ணியம் போன்ற அறிவியலை அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், வைசேடிகம் எனப்படும் சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம்  போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின.

ஆகவே தமிழகத்தில் தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் அறிவியலை அடித்தளமாகக் கொண்ட, மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(5). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய அரசமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.

           “கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்

            பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்”-(6).

என்கிறார் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்ககாலப்புலவர் மருதன் இளநாகனார். “கயிற்றினால் பிணிக்கப்பட்ட குடத்துக்கண்ணே உள்ள ஆவண ஓலைகளை எடுத்துக்கொள்வதற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலாஞ்சினையை ஆய்வுசெய்தபின் அதனை நீக்கும் ஆவணமாக்களைபோல” என்பது இதன் பொருளாகும். இந்த ஆவணமாக்கள் என்பது அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்  ஆவர். ஆவண ஓலை அல்லது குழிசி ஓலை என்பது ஓட்டுச்சீட்டு ஆகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் எனவும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப் படுத்தப்படுகிறது.

ஆனால் இந்நிலை சங்கம் மருவிய காலத்தில் இல்லை. இந்நிலை கி.மு. 1000க்கு முன்பிருந்து, கி.மு. முதல் நூற்றாண்டுவரை இருந்த நிலை ஆகும். அரசனின் அதிகாரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே எல்லையற்ற அதிகாரமாகச் சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் முடிவில் அது நிறைவு பெற்றது. அரசன் வரம்பற்ற அதிகாரம் கொண்டவனாக மாறிப்போனான். ஆனால் சங்கம் மருவிய காலத்திலும் கிராமப்புற பேரூர்களிலும், சிற்றூர்களிலும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இருந்திருப்பர். வாரியங்களும் இருந்திருக்கும். ஆனால் அவை அரசனின் அதிகாரத்தைக்கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிற்காலச்சோழர்காலத்தில் இருந்த அதிகாரங்களே அவைகளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் சங்க காலத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள், அரசனின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டிருந்தனர். மெகத்தனிசின் கூற்று அதனை உறுதிசெய்கிறது.

ஆதலால் இந்த “மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு” என்பது குறைந்த பட்சம் கிறித்துவுக்கு முன்பே 1000 வருடங்களுக்கு மேலான  (ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்தது) ஒரு நீண்ட நெடிய மரபைக் கொண்டதாகும். அதனால்தான் கி.மு. 8ஆம் நூற்றாண்டுவாக்கில் தொல்கபிலரின் எண்ணியம் போன்ற  அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிபெற்ற சிந்தனைப்பள்ளி உருவாக முடிந்தது எனலாம். இந்தக் காலம் குறித்தப் புரிதல் மூலம், கி.மு. 1000 க்கு முன்பிருந்தே, அறிவியலையும், பொருள் முதல்வாத மெய்யியலையும்  அடிப்படையாகக் கொண்ட மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு, தமிழ்ச் சமூகத்தில் 1000 வருடங்களுக்கு மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கிவந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனையாளர்கள்:

பொருள்முதல்வாத மெய்யியல் பிரிவுகளில் ஒன்றான தொன்மையான சாங்கியம் என்கிற எண்ணியத்தைத் தோற்றுவித்த, கி.மு. 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்கபிலர்(சுமார் கி.மு. 750), ஒரு தமிழர். இவரது பிற்கால மாணவரான, புறம் 194ஆம் பாடலைப்பாடிய எண்ணியம் என்கிற எண்ணியத்தை இந்திய அளவில் ஒரு பெரும் சங்கமாக வளர்த்தெடுத்த, பௌத்த மரபில் பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் அழைக்கப்படுகிற பக்குடுக்கை நன்கணியாரும் ஒரு தமிழர்.

‘சிறப்பியம்’ என்கிற வைசேடிய கோட்பாட்டை ஆரம்பித்த கணாதர், உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கிய அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார், அளவியல் எனப்படும் நியாயவாதத்தை உருவாக்கிய கோதமனார், தற்செயல் கோட்பாட்டை உருவாக்கிய பூரண காயபர் ஆகிய அனைவரும் தமிழர்களே ஆவர். இவர்கள் உருவாக்கிய கோட்பாடுகள் அனைத்தும் அறிவியலையும், பொருள் முதல்வாத மெய்யியலையும் அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபிலிருந்து உருவானவைகளாகும். சங்ககாலத்துக்குப் பிந்தைய(கி.மு.50), தமிழ்ச் சமூகச் சூழலால் பலவீனமடைந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை, சங்கம் மருவிய காலத்துக்குப்பின்(கி.பி.250) பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இருந்த போதிலும் அதன்பின் பௌத்தமரபில் தோன்றிய தமிழர்களான, தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாகர், தருமபாலர், போதிதருமர் போன்றவர்களிடமும் மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபின் தாக்கம் முழுமையாக இருந்துள்ளது என்பதை மறந்துவிட முடியாது.

பேராசிரியர், முனைவர் க.நெடுஞ்செழியன்:

மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் மெய்யியல் சிந்தனையாளர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர், அசிதகேசகம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார் போன்றவர்கள் தமிழர்களே என அறுதியிட்டு உறுதி செய்ததில்  பேராசிரியர் முனைவர், க. நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மகத்தானது ஆகும்.   30 வருடங்களுக்கும் மேலாக மிக ஆழமான விரிவான ஆய்வுகளைச்செய்து தமிழ் இலக்கியங்களில் உள்ள மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனையாளர்களின் கோட்பாடுகளை எடுத்துச்சொல்லியதிலும், அவைகளை விரிவாகவும், ஆழமாகவும் விவாதித்ததிலும், முடிவு செய்வதற்கு வழி வகுத்ததிலும் அவரது பங்கு என்பது ஒப்பிடமுடியாத ஒரு மாபெரும் மகத்தான பணி எனலாம். அவர் இவை குறித்து 10க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். அவரது ஆய்வு நூல்களை அடிப்படையாகக்கொண்டே மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு சார்ந்த எனது கட்டுரைகளின் பெரும்பகுதி எழுதப்பட்டுள்ளது என்பதை நன்றியோடு குறிப்பிட்டுக் கொள்கிறேன். இவர்போக வானமாமலை, தேவிபிரசாத் சட்டோபாத்தியாய, பிரேம்நாத் பசாசு, இசுடிவன் ஆக்கிங் போன்றவர்களின் நூல்களும் எனது கட்டுரைகளுக்கு துணை புரிந்துள்ளன எனலாம்.

இந்தியத் தத்துவம் – பொருள்முதல்வாதம்:

“இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்” என்கிற நூலை பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில், இந்தியத்தத்துவம் குறித்தும், பொருள்முதல்வாதமாகத் தோன்றிய கபிலரின் எண்ணியமும், கணாதரின் சிறப்பியமும் எப்படி ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டன என்பது குறித்தும் அவர் எழுதியுள்ளார். இந்தியத்தத்துவத்தில் ஆன்மீக வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் நடைபெற்ற கடுமையான போராட்டத்தில்  பொருள்முதல்வாதம் தோற்றுப் பின் வாங்கியுள்ளது. இந்தியத்தத்துவங்கள் வைதீகத்தத்துவங்கள், அவைதிகத் தத்துவங்கள் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பூர்வ மீமாம்சம், வேதாந்தம், எண்ணியம், யோகம், நியாயம், சிறப்பியம் ஆகிய ஆறும் வைதீகத்தத்துவங்கள், உலகாய்தம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்றும் அவைதிகத் தத்துவங்கள் ஆகும். நம்முடைய தத்துவங்கள் வேதத்தைச் சார்ந்தோ அல்லது அதனை எதிர்த்தோ நிற்கின்றன. ஆனால் வேதத்தில் தத்துவம் என்பது மருந்தளவுக்கும் இல்லை-(7).

மீமாம்சம்:

யாக, யக்ஞங்களின் கூட்டுச் சடங்குகளை கர்ம காண்டம் என உபநிடதங்கள் தாழ்த்திக்கூறின. இதனைவிட பிரம்ம அறிவின் ஞானம் பெறுவதே உயர்ந்தது என அவை கூறின. யாக, யக்ஞங்கள் போன்ற கூட்டுச் சடங்குகளை, அசுவமேத யாகம், இராசசூயம் போன்ற ஆட்சியாளர்களுக்கான சடங்குகளைச்செய்து நல்ல ஊதியமும் செல்வமும் பெற்றுவந்த பூசாரிகளும் மந்திரவாதிகளும் இதனை எதிர்த்தனர். உபநிடதங்களின் பிரம்மத்தையும், ஆன்மாவையும், அவை பற்றிய புதிய அறிவையும் எதிர்த்து, வேதச் சடங்குகளை ஆதரித்த இவர்கள் மீமாம்சகர்கள் எனப்பட்டனர். வேதச் சடங்குகளை ஆதரித்த இவர்கள் முழுமுதல் கடவுட் கொள்கையை எதிர்த்ததால் இவர்கள் நாத்திகர்களாக ஆகிவிட்டார்கள். இவர்களின் தத்துவ நிறுவனர் மீமாம்ச சூத்திரம் என்கிற  நூலை எழுதிய ‘சைமினி’ ஆவார்-(8).

கபிலரின் எண்ணியம் – வானமாமலை:

கடவுள் இல்லை என மறுக்கிற நவீன சமணமும், பௌத்தமும் ஆன்மீக வாதங்களே ஆகும். பொருள்முதல்வாதமாகத் தோன்றிய எண்ணியமும், வைசேடிகமும் ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டுவிட்டன. அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதமாக இருந்த எண்ணியத்தை ஆன்மீகவாதமாக மாற்ற முயன்ற  ஈசுவர கிருட்டிணர் என்கிற தத்துவ ஆசிரியர், தாமே ஒரு நூலை எழுதி, பண்டையகாலத்தில் எழுதப்பட்ட நூலைத் தாம் கண்டெடுத்ததாகக் கூறி அதற்கு ஓர் உரையும் எழுதினார். அந்த நூலின் பெயர்தான் ‘எண்ணிய காரிகை’ ஆகும். 24 தாதுக்கள் எண்ணியத்தில் இருந்தன. 25ஆவது தாதுவாகப் புருடனைச்சேர்த்தனர். அந்த புருடனை சர்வ சக்தி வாய்ந்ததாக ஆக்கி எண்ணியத்தை ஆன்மீகவாதமாக ஒப்புக்கொள்ளச் செய்தனர்-(9). ஆனால் ஈசுவர கிருட்டிணர் எழுதிய  ‘சாங்கிய காரிகை’ என்கிற அந்தப் பொய்யான நூல் குறித்து, “எண்ணியத்தின் கருத்தியல் போதனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே” என்கிறார் மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா என்கிற தத்துவ ஆசிரியர் ஒருவர்(10). இப்படித்தான் பண்டைய நூல்கள் அழிக்கப்பட்டு, அதனிடத்தில் பொய்யான நூல்கள் உருவாகி, அவை அங்கீகாரமும் பெற்றன.

கணாதரின் சிறப்பியம் – வானமாமலை:

கணாதரின் சிறப்பியம் ஒரு பழமையான தத்துவம். கிரேக்கப் பொருள்முதல்வாதி கிராக்ளிடசு போல இவரும் அணுக்கொள்கையை விளக்கினார். காரணமின்றிக்காரியமில்லை என்பது இதன் அடிப்படைக் கொள்கை. நான்கு பூதங்களை சிறப்பியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் வெளியை ஒரு பூதமாக ஏற்றுக்கொள்வதில்லை. அணுக்கள் அழிவற்றவை. அவை படைக்கப்படுவதில்லை. இயல்பு, கூட்டு என்கிற இருவித இயற்கைப்பண்புகள் அணுவிற்கு உள்ளன. இவ்விரு இயற்கைப்பண்புகளால் அணுக்கள் கூடும்பொழுது உலகில் வேறுபட்ட குணங்களை உடைய பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. அணுக்கள் சேருகிறபொழுது உண்டாகிற ஓர் பண்புதான் அறிவுக்கூர்மை. நான்கு பூதங்களின் அணுக்கள் கூடும்பொழுது உருவாகும் உடலின் ஒரு பண்புதான் ஆன்மா. ஆன்மாவை உடலின் பண்பென  விளக்கும் கணாதர், பூதங்களின் அணுக்கள் பல்வேறு அளவுகளில் கூடும்பொழுது புதிய பண்புகள் தோன்றுகின்றன எனவும், அவை கூடுவதற்கு வேறு காரணம் தேவையில்லை எனவும் கூறுகிறார். ஆனால் அந்த வேறு காரணத்தைக்காட்டி, அணுவை இயக்கவைக்கும் சக்தி கடவுள் எனக்கூறி சிறப்பியம் என்கிற வைசேடிகத்தை நியாயவியலுடன் சேர்த்து பிற்காலத்தவர்கள் நியாய வைசேடிகமாக ஆக்கி, அதனை ஆன்மீகமாக மாற்றி விட்டார்கள் என்கிறார் வானமாமலை அவர்கள்-(11). தமிழ் மரபு ‘வெளி’ என்கிற ஆகாயத்தையும் சேர்த்து ஐம்பூதங்களைக் கொண்டது. கணாதரின் ஐம்பூதம், வடமரபில் நான்கு பூதங்களாக மாற்றப்பட்டுள்ளது.

பரபக்க உலகாய்தம் – வானமாமலை:

வானமாமலை அவர்கள் கபிலரின் எண்ணியத்தையும், கணாதரின் சிறப்பியத்தையும் தமிழர் தத்துவமாக அறிந்திருக்கவில்லை. இந்தியப் பொருள்முதல்வாதத்தைப் பற்றிப் பேசும் பொழுது இந்த இரண்டும் மிக முக்கியப் பொருள்முதல்வாதத் தத்துவங்களாக இருந்து ஆன்மீக வாதமாக மாற்றப்பட்டன என அவர் கூறுகிறார். பரபக்கம் என்பது எதிரியின் கூற்றாகச் சொல்லப்பட்டு அதற்கு விளக்கம் தரப்படும் ஒரு முறையாகும். அந்த விதத்தில் தமிழில் தத்துவ விடயங்களைப் பேசுகிற நூல்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் ஆகியவற்றில் உள்ள பரபக்க உலகாயத விடயங்கள் குறித்து அவர் பேசுகிறார். மணிமேகலை(கி.பி. 6ஆம் நூற்றாண்டு)  காலத்தில் அளவைவாதி, சைவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, எண்ணியவாதி, சிறப்பியவாதி ஆகிய தத்துவவாதிகள் இருந்தனர் என்பதன் மூலம்,  அக்காலத்தில் அளவையியல் என்கிற நியாயம், வைசேடிகம் என்கிற சிறப்பியம், சாங்கியம் என்கிற எண்ணியம், ஆசிவகம் முதலிய தமிழிய பொருள்முதல்வாத சிந்தனைப்பள்ளிகள் தமிழ் மக்களிடத்தில் நிலவி இருந்தன என்பதை மணிமேகலை உறுதி செய்கிறது. நீலகேசியார்(கி.பி. 7ஆம் நூற்றாண்டு) காலத்தில் மூன்று பௌத்தப்பிரிவுகள் இருந்தன. அதுபோக எண்ணியம், சிறப்பியம், பூதவாதம்(உலகாய்தவாதம்) ஆகிய மூன்று பிரிவுகள் இருந்தன-(12). சிவஞான சித்தியார் காலத்தில்(கி.பி. 13ஆம் நூற்றாண்டு)  இருந்த தத்துவங்கள் குறித்து அறிய இயலவில்லை. வானமாமலை அவர்கள் தனது நூலில் இந்த மூன்று தமிழ் நூல்களிலும் உள்ள பரபக்க உலகாயதம் குறித்து மிக விரிவாகப்பேசுகிறார்-(13).

ஆசிவகம் – வானமாமலை:

பரபக்க வாதங்களைக்கூறும் மணிமேகலை 4ஆவது தத்துவ வாதியாக ஆசிவகவாதியைப்பற்றிக் கூறுகிறாள். அவன் அணுக்கொள்கையை விளக்கி உயிரும் அணுவே எனக்கூறுகிறான் எனவும், ஆசிவகத்தை நீலகேசி புறச்சமயம் எனக் கூறி சமணத்தத்துவ நோக்கிலிருந்து விமர்சிப்பதால் இது சமணப்பிரிவாகக் கருதப்படலாயிற்று எனவும் ஆதலால் சைவ சிந்தாந்திகள் இதனைத் தவறாக சமணத்தின் ஒரு பிரிவான சுவேதாம்பரச் சமணம் எனக் கூறுவர் எனவும் இதனுள் பல பூதவாதக் கூறுகள் உள்ளன எனவும் ஆயினும் முற்றிலும் இதனைப் பூதவாதமாகக் கருதுவதற்கில்லை எனவும் வானமாமலை கூறுகிறார்-(14). ஆசிவகத்தைப் பற்றி வானமாமலை அவர்களுக்கு முழுமையானத் தரவுகள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. வட இந்திய மரபில் ஆசிவகம் குறித்துப் போதிய தரவுகள் இல்லை. மற்கலி கோசாலர், பூரணகாயபர், பக்குடுக்கை நன்கணியார் ஆகிய மூவரும் இணைந்து இதைத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தின் தனித்துவம் – வானமாமலை:

வட இந்தியாவில் நியாயம் என்கிற அளவையியல், சிறப்பியம் என்கிற வைசேடிகம் ஆகிய இரண்டையும் பிற்காலத்தில் நியாய-வைசேடிகம் எனும் ஆன்மீகமாக்கி வைதீகத்தின் ஒரு பிரிவாக மாற்றிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் நியாயம், சிறப்பியம் ஆகிய இரண்டும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரை தனிப் பொருள்முதல்வாதப்பிரிவாகவே இயங்கி வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இறுதியாக தமிழ் நாட்டு உலகாயதம் குறித்து மேலும் ஆராயப்படவேண்டும் எனவும், மருத்துவ நூல்கள், சித்த நூல்கள், இரசவாத நூல்கள், வைணவ, துவைத நூல்களின் பரபக்கக் கூற்றுக்கள் முதலியனவற்றையும் ஆராயவேண்டும் எனவும் அதன் மூலம்தான் தமிழ் நாட்டில் நிலவிய அறிவியல் கொள்கைகளின் அடிப்படை நமக்கு விளங்கும் எனவும் வானமாமலை அவர்கள் முடித்துள்ளார்-(15). அதாவது தமிழகத் திற்கான தனித்துவமான பொருள்முதல்வாத அறிவியல் கொள்கைகள் அல்லது தத்துவார்த்தக் கொள்கைகள் இருந்துள்ளன என்பதை அவர் உறுதியாக நம்பினார் என்பதை அவரின் இறுதிக்கூற்று உறுதிப் படுத்துகிறது. அதனைத் தான் ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ என நாம் கூறுகிறோம். அந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபிலிருந்து தோன்றியவைகள் தான் தொல்கபிலரின் சாங்கியம் எனப்படும் எண்ணியம், கணாதரின் சிறப்பியம் எனப்படும் வைசேடிகம் முதலியன ஆகும். ஆனால் நா.வானமாமலை அவர்களால் அவைகள் தமிழகத்தின் பொருள்முதல்வாதச் சிந்தனைகள்தான் என்பதை அன்று அறிய இயலவில்லை. இதற்கு, “டாங்கே தொடங்கி நா.வா. வரை வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை உடையவர்களாகவே இருந்துள்ளனர்”(16) என்கிற பேராசிரியர் வீ. அரசு அவர்களின் கூற்றில் உள்ள உண்மை காரணமாக இருக்கலாம். வீ. அரசு அவர்கள் கூறும் கண்ணோட்டமுள்ள பலர் இன்றும் அறியாதுதான் உள்ளனர்.

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா:

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் ஒரு புகழ்பெற்ற இந்தியத் தத்துவப் பேராசிரியர், மார்க்சிய அறிஞர். கணாதர் குறித்தும் அவரது சிறப்பிய நூல் குறித்தும் அவர் பேசுகிறார். கணாதருக்கு இன்னொரு பெயர் உலூகர் எனவும், அதன் பொருள் ஆந்தை எனவும் அவர் கூறுகிறார். பின் அந்த ஆந்தை என்கிற பெயர் குறித்துப் பல விடயங்கள் பேசப்படுகின்றன-(17). கணாதன் என்கிற தமிழ்ப்பெயர், கணி+ஆதன் எனப்பிரியும். அதில் உள்ள ஆதன் என்ற தமிழ்ச்சொல் ஆந்தை எனக்கொள்ளப்பட்டு, கணாதரின் பெயர் ஆந்தை எனப்படும் ‘உலூகர்’ எனக் கூறப்பட்டுள்ளது.

கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்யாயா:

கபிலர் என்பவரே இதனைத்தோற்றுவித்தவர் ஆவார். எண்ணியத்தத்துவம் மிகத்தொன்மையானது, அவற்றின் தாக்கம் மிகப்பரந்து பட்டது. பண்டைய இதிகாசமான மகாபாரதம், மருத்துவ நூலான சரக சம்கிதை, மனுசுருதி, பல்வேறு புராணங்கள் ஆகியன அனைத்தும் ‘கார்பி’ கூறுவது போல் எண்ணியக் கோட்பாடுகளாலேயே நிறைந்துள்ளன. உபநிடதங்கள் கூட எண்ணியம் அவைகளுக்கு முந்தையது எனக் காட்டுகின்றன. ஆனால் தொடக்க காலத்தில் எண்ணியத் தத்துவம் எப்படி இருந்தது என்பது இன்றைக்கும்கூடத் தெளிவில்லாமலேயே இருந்து வருகிறது. எண்ணியக் கொள்கைகளை விளக்குவதாக இரண்டு நூல்கள் உள்ளன. அவை கி.பி. 5ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சாங்கிய காரிகை, கி.பி. 1400 எனக்கருதப்படும் சாங்கிய சூத்திரம் ஆகிய இரண்டும் ஆகும். ஈசுவர கிருட்டிணருடைய சாங்கிய காரிகை விருப்பம்போல் திருத்தப்பட்டது என திபெத்திய சான்றுகளைக்காட்டி வாசுசிலியேவ் என்பவர் கூறுகிறார்-(18).

‘எண்ணியத் தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது, அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை, ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக அது பரிணாமம் பெற்று வருகிறது என்பது தான். மனித குலச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவ வாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள்’ என்கிறார் செர்பாட்சுகி(19). சாங்கிய காரிகைக்கு முந்தைய சான்று என்பது சரகர் எழுதியதாகக் கருதப்படும் சரக சம்கிதை என்கிற மருத்துவ நூல் ஆகும். சரகர், எண்ணியத்தின் ‘புருடன்’ குறித்து ஐந்து கருத்துக்களை முன்வைக்கிறார். அதில் பொருளாயாதத் தன்மைகொண்ட 24 தாதுக்களின் குவியல்தான் புருடன் என்கிற மூன்றாவது கருத்துக்கே சரகர் முக்கியத்துவம் அளிக்கிறார். ஐந்தாவது கருத்து புருடன் என எதுவும் இல்லை என்கிறது. ஆக பொருள்முதல்வாதத்திலிருந்து வேறுபடுத்தப்பட முடியாத பழைய எண்ணியக் கொள்கையை சரகர் கூறுகிறார் எனலாம்(20).

எண்ணியமும் பிரம்மசூத்திரமும்: சட்டோபாத்யாயா:

உபநிடதங்களில் உள்ள தத்துவக்கருத்துக்களைத் தொகுத்து, ஒழுங்கு செய்து 555 சூத்திரங்களைக்கொண்ட ‘பிரம்ம சூத்திரம்’ என்கிற நூலை பாதராயணர் எழுதினார். இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு என்கிறார் தாசுகுப்தா அவர்கள். இதன் சூத்திரங்களை உரையாசிரியர் உதவியின்றி படித்துப் புரிந்துகொள்ளமுடியாது.  கி.பி. 8ஆம் நூற்றாண்டு சங்கரர், கி.பி. 11ஆம் நூற்றாண்டு இராமானுசர் ஆகிய இருவரின் பிரம்ம சூத்திர உரைகள்தான் சிறந்தன ஆகும்(இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்). பிரம்ம சூத்திரம், எண்ணியத்தை முதன்மைவாதம் என்கிறது. அதாவது எண்ணியம்  முதன்மைப்பொருளை அடிப்படையாகக்கொண்டது. எண்ணிய வாதிகள் முதன்மைப்பொருள் இயற்கைவிதிகளின் காரணமாக மாறுதலடைந்து உலகம் தோன்றியது என்பர். எண்ணியம் இயல்புவாதம் என்கிற இயற்கை விதிக்கொள்கை எனவும் சொல்லப்படுகிறது. பௌத்த மதக் கோட்பாடுகள் எண்ணியத்திலிருந்து தோன்றியவை என்கிறார் அசுவகோசு அவர்கள். எண்ணியக் கொள்கைகள் வேதங்களுக்கு எதிரானவை என்கிறது பிரம்ம சூத்திரம். அதனால் கருத்துமுதல்வாதிகளான சங்கரர், இராமானுசர் போன்றவர்கள் எண்ணியத்தைத் தமது முதன்மை எதிரியாகக் கொண்டார்கள். சங்கரரின் பிரம்ம சூத்திர உரையில் எண்ணியத்தை மறுக்க மட்டும் 60 சூத்திரங்கள் உள்ளன. ஆனால் 43 சூத்திரங்களை மட்டும்கொண்டு பிற தத்துவங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. அதில் பௌத்தப்பிரிவுகளையும்  சமணத்தையும் எதிர்க்க முறையே 17சூத்திரங்களும், 4 சூத்திரங்களும் உள்ளன. சங்கரர் ‘முதன்மை மல்லனைத் தோற்கடித்ததன் மூலம் பிற மல்லர்களை நாம் ஏற்கனவே தோற்கடித்துவிட்டோம்’ என்கிறார்-(21). இங்கு முதன்மை மல்லன் என சங்கரர்  குறிப்பிடுவது எண்ணியம் ஆகும்

கபிலர் ஒரு அசுரர். அவரது எண்ணியத்தில் கடவுளுக்கு இடமில்லை. புருடன் என்பதற்கு ஆன்மா என்னும் பொருள் காலப்போக்கில் ஏற்பட்டது. உண்மையில் அதன்பொருள் அதுவன்று. புருடன் என்ற சொல்லுக்குத் தொடக்ககாலப் பொருள் ஆணின் உடல் என்பதாகும். இந்த பொருளில்தான் தொடக்ககால உபநிடத ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இவை பெல்வார்க்கர், இரானடே ஆகிய இருவரின் கருத்துக்கள் ஆகும்-(22).

கணாதரின் சிறப்பியம் – கோதமனாரின் நியாயம்: சட்டோபாத்யாயா:

சீன நாட்டைச்சேர்ந்த பௌத்தர்களின் மரபுப்படி கணாதரின் வைசேடிகம் என்கிற சிறப்பியம் என்பது பிற தத்துவங்களைக்காட்டிலும் உயர்ந்தது, சிறப்பானது என்கிற பொருளுடையது. இந்திய மரபுப்படி அது சிறப்புமிக்கது அல்லது தனித்தன்மையானது-(23). கணாதரின் வைசேடிக சூத்திரம், கோதமனாரின் நியாய சூத்திரம் ஆகிய இரண்டையும் குறித்துப் பேசவந்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் இவை பண்டைய காலத்தைச் சேர்ந்தவை அல்ல எனவும், இவைகளுக்கு அத்தகைய மரபு இல்லை எனவும் இவ்விரு தத்துவங்களில் காணப்படும் தனித்துவமான விடயங்கள் இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் கூறுகிறார். இவைகளின் அணுக்கொள்கை இவைகளுக்கு முந்தைய தத்துவ ஆசிரியர்களால் எடுத்துரைத்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் இந்த அணுக்கொள்கை போன்றே பொதுமைக்கொள்கை, முக்கூற்று முடிபுக்கொள்கை, உலகில் உள்ள எல்லாவற்றையும் தெளிவான வகைப் பிரிவில் பகுத்தல்  போன்றவைகளும் புதியவை எனவும் ஆனால் அவை கிரேக்கத் தத்துவ மரபில் வழக்கில் இருந்தவை எனவும் அதற்கான சமூகச்சூழல் அங்கு இருந்தன என்பதற்கு அங்கு ஆய்வுகள் நடந்துள்ளன எனவும் இந்தியாவில் அதுபோன்ற ஒரு ஆய்வு நடைபெறவில்லை என்பதால் இவை கிரேக்கத்தத்துவ  மரபிலிருந்து நேரடியாகக் கடன் பெற்றவை என கீத் போன்றவர்கள் கூறுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

கிரேக்கத் தத்துவத்தின் அணுக்கொள்கை, பொதுமைகள், முற்கூற்று முடிவுகள், வகைப்பிரிவுகள் முதலியகொள்கைகள், நியாய-வைசேடிக கருத்துக்களின் அச்சுநகலாக இருக்கவில்லை எனவும், இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிய திறந்தவெளி விவாதங்களின் விளைவாக நியாயத்தத்துவம் தோன்றியிருக்க வேண்டும் என செர்பாட்சுகி கருதுகிறார்  எனவும் அவர் கூறுகிறார். அனுபவமுறையிலான மூலமெய்ப்பொருள் ஆய்வு, அறிவுத்தோற்ற ஆய்வு ஆகியவற்றில் இவையிரண்டுக்கும் இணையாக வேறு நூல்கள் இந்தியத் தத்துவ மரபில் தோன்றவில்லை-(24). கணாதரின் சிறப்பியம், கோதமனாரின் நியாயம் ஆகியன தமிழகத்தில் தோன்றியவை. பண்டைய தமிழகத்தில் இவை தோன்றுவதற்கான வணிக நகர அரசுகளைக் கொண்ட சமூகச்சூழல் இருந்தது என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

நரிவெரூஉத் தலையார் (அசித கேசகம்பளி) :

இவர் தொடக்க காலத்தைச்சேர்ந்த பொருள்முதல்வாதி. புத்தரின் சம காலத்தவராக இருக்கலாம். “ஈகை என்றோ யாகம் என்றோ கொடை என்றோ எதுவும் கிடையாது. நற்செய்கை, தீச்செய்கை என்பவனவற்றிற்குப் பலனோ விளைவோ கிடையாது. மனிதன் நான்கு பூதச் சேர்க்கையால் உருவானவன்………..இந்தக்காணிக்கையும் இது தொடர்புடைய கொள்கைகளும் முட்டாள்தனமானவை. இதனால் பலனுண்டு என்று சொல்வது பச்சைப்பொய், வெட்டிப்பேச்சு. முட்டாள்களாயினும், அறிவாளிகளாயினும், வேறு யாராக இருந்தாலும் உடம்பு அழியும்போது அழிந்துபோகின்றனர். மரணத்திற்குப் பின் அவர்கள் இல்லாதுபோகின்றனர்” என தொடக்ககாலப் பௌத்த நூல் ஒன்று இவருடைய கருத்தை மேற்கண்டவாறு தொகுத்துக்கூறுகிறது-(25). இந்த அசித கேசகம்பளி என்பவர் தமிழில் நரிவெரூஉத்தலையார் எனப்படுகிற புறம் 5, 195 ஆகிய பாடல்களைப்பாடியவர் ஆவார். ஆகவே இவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் ஆகிறார். அசிதம் = நரி, கேசம்=தலைமுடி என மொழிபெயர்த்து நரிவெரூஉத் தலையார் என்கிற தமிழ்ப் பெயரை அசிதகேச கம்பாளர் என பெயர் மாற்றிவிட்டனர். இவர்தான் உத்தேசவாதம் என்கிற சிதைவுக்கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவார். இவரை மணிமேகலை ‘நரிமகன் அல்லனோ கேச கம்பாளன்’ எனச் சுட்டும். அசித கேசகம்பளி என வட இந்திய மரபில் சட்டோபாத்யாயா போன்றவர்களால் அழைக்கப்படும் இவரின் கோட்பாடுகள் அடிப்படையில் தமிழியப் பூதவாதம் எனப்படும் உலகாயதமாகத் திகழ்கின்றன என்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன் -(26).

தமிழ்ச் சித்தர்கள்- சட்டோபாத்யாயா:

தமிழ்ச் சித்தர்கள் குறித்துத் தனது உலகாயதம் என்ற நூலில் சட்டோபாத்யாயா அவர்கள் தரும் முக்கியத் தரவுகளின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் ஏராளமான சித்தர் கவிதைகள் உள்ளன. அவை சித்தர்கள் எனப்படும் தோன்றியர்களால் எழுதப்பட்டவை. தோன்றியம் என்பது தாந்திரீகம் ஆகும். 18 சித்தர்களில் இருவர் போகர், புலிப்பாணி எனப்படும் சீனர்கள். போகர் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவிற்கு வந்தார். அங்கு தோன்றியத்தைக் கற்றார். புலிப்பாணியும் போகருடன் தமிழ் நாட்டிற்கு வந்து தங்கிவிட்டார். இவர்கள் மந்திரம், மருத்துவம், இரசவாதம், இயற்பியல் முதலியன குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர். இவை தோன்றியக் கண்ணோட்டத்தில் தமிழில் எழுதப்பட்டவை. தமிழ்ச் சித்தர்களின் பலநூல்கள் தென்னிந்தியாவின் மடாலயங்களிலும், ஆவண நூலகங்களிலும் காணப்படுகின்றன. இவற்றைத் தகுந்த முறையில் பதிப்பித்து ஆய்வுசெய்தால் இந்திய விஞ்ஞானத்தின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான தரவுகள் நமக்குக் கிடைக்கும். தமிழ் நூல்களின்படி தோன்றியத்தின் மூலம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஆதிகால அறிவியல் கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன என்பதும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான விடயம் தோன்றியத்தில் உள்ளார்ந்து இருக்கிறது என்பதும் ஆகிய இரு முக்கிய காரணங்களுக்காகத் தமிழ் சித்தர்களின் நூல்கள் குறித்து நாம் ஆர்வம் காட்டுகிறோம். தமிழ்ச் சித்தர்கள் சங்கரரது கருத்துமுதல்வாதத் தத்துவத்தினை கடுமையாக எதிர்த்தனர். இவை தமிழ் சித்தர்கள் குறித்து சட்டோபாத்யாயா அவர்கள் கூறும் கருத்துக்களாகும்.-(27).

போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் எனக் கருதப் படுகின்றனர். அவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. அவர்கள் தங்கள் நூல்களை எல்லாம் தமிழில்தான் எழுதியுள்ளனர். இவர்களைக் குறித்த குறிப்புகள் எதுவும் சீனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பௌத்த மதம் சார்ந்த பல சீனப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் சீனப் பெயர்களாகத்தான் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்துக்களை, பயணத் தரவுகளைச் சீன மொழியில்தான் எழுதியுள்ளனர். சீனத்தில் அவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆதலால் போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் அல்ல எனவும், அவர்கள் தமிழர்கள்தான் எனவும் கூறலாம். சீனத்தோடு இவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகள் இருந்திருக்கலாம். அதை வைத்து இவர்களைச் சீனர்கள் எனக் கருதும் கருத்து உருவாகி இருக்கலாம். இவை பற்றி மேலும் ஆய்வுகள் தேவை. தோன்றியக் கருத்துக்கள் தமிழில் ஆரம்பகாலம்முதல் இருக்கின்றன என்பதும் அவை அறிவியல் மனப் பான்மையை வளர்க்கக் கூடியவை என்பதும் அவை சங்கரரது கருத்துமுதல் வாதத்தினை எதிர்த்தன என்பதும்  இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

பார்வை:

  1. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.
  2. அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.
  3. “ “    பக்: 52-64.  பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு- 2016, பக்: 115, 116.
  4. ’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’  இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.
  5. சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.
  6. மருதன் இளநாகனார் அகநானூறு- 77ஆம் பாடல், வரி: 7, 8.
  7. நா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்: 55-61.
  8.  “     “      பக்; 68-70;  தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்:118.
  9. நா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்: 72-75.
  10. இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. செயராசு, NCBH,  டிசம்பர்-2011, பக்: 68.
  11. நா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்:76-78.
  12. “ “      பக்: 79-86.
  13. “ “      பக்: 79-111.
  14. “ “     பக்:168.
  15. நா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்:111.
  16. தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், வீ. அரசு அவர்களின் அறிமுக உரை, பக்: 6 சூலை-2008.
  17. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்:50-53.
  18. “ “     பக்: 195, 196.
  19. “ “     பக்:  201
  20. “ “     பக்: 204, 205.
  21. “ “     பக்:  201-209;  உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH,  சூன் 2010, பக்: 486-513.
  22. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, சூன் 2010 பக்: 71-73, 522.
  23. “ “    பக்:267.
  24. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்:268-274.
  25. “ “     பக்: 313, 314
  26. க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 22, 23, 29.
  27. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, சூன் 2010 பக்: 456-458.