முனியும் முனியும் – நாஞ்சில் நாடன்

0 comment

அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க முச்சந்திகளில் நிற்பதில்லை. கோட்பாட்டுக் கூப்பாடுகளை எழுப்பி நிழற்படக் கலைஞர்களுக்கு முகம் காட்டி நிற்பதுவும் இல்லை. ஞாபக மறதி கால் பதிக்கும் என் வயதான மூளையில் உடனடியாகத் தோன்றும் பெயர்கள் எம். கோபலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன், சு. வேணுகோபால், கீரனூர் ஜாகிர் ராஜா, குமார செல்வா, எஸ். செந்தில்குமார் போன்றவர்கள்.

இப்படித் தொடங்கியாயிற்று கட்டுரையை. சரி, இருக்கட்டும், ‘முனிமேடு’ என்றால் என்ன பொருள்? சனிமூலை என்பது போல் முனிமேடா? முனி உறையும் மேடு எனலாமா? வட மாவட்டங்களின் கிராமங்களில், சில மரங்களைச் சுட்டி, புளியமரம், வேப்பமரம், வாகைமரம் போன்று, அந்த மரத்தில் முனி உறைகிறது என்பார்கள். இருட்டிய பிறகு, குறிப்பாக வெள்ளி செவ்வாய்களில், ஒத்தை செத்தையாக அந்த மரமிருக்கும் தலங்களின் அடுப்பத்தில் ஆண்களே கூட நடமாட அஞ்சுவார்கள். சிறுமியர், பருவத்துப் பெண்கள் பற்றிப் புகலவா வேண்டும்?

ஆக, முனி என்றால் நாம் என்ன அர்த்தப்படுத்திக் கொள்வது? வேதாளம், பைசாசம் அல்லது பேய் என்றா? ஆனால் முனியைத் தேவதை ஆக்கி, முனீசுவரன் என்றோம். ஐந்தாண்டுகள் முன்பு நண்பர் வீட்டுச் சிறப்பு ஒன்றுக்குப் போன நண்பர், கவிஞர், திறனாய்வாளர், கதாசிரியர் க. மோகனரங்கன், திருக்கோயிலூர் ஊரின் கோயில் வளாகம் ஒன்றில் இருந்த முனி ஒருவரின் உருவச்சிலையைப் படம் எடுத்து பதிவு செய்திருந்தார். அந்த முனியின் பெயர் கும்பமுனி. கையில் குண்டாந்தடியும் முகத்தில் கப்படா மீசையுமாக – குள்ளமாக, குட்டையாக நின்றிருந்தார். பீடத்தில் கும்பமுனி என்று எழுதப் பெற்றிராவிடின் தமிழ்நாட்டு அமைச்சரவையின் உறுப்பினர் என்று நினைக்க ஏதுவுண்டு.

ஆனால் கும்பமுனி எனும் பெயர் எழுதப் பெற்றிருந்த உருவம் கண்ட எனதாச்சரியம் அதுவல்ல.1998 – முதல் கும்பமுனி எனும் ஒரு கதாபாத்திரத்தைப் பிரதானமாக வைத்து இதுவரை இருபத்தைந்து கதைகள் எழுதி இருப்பேன். அவற்றுள் முதல் பத்தொன்பது சிறுகதைகளைத் தொகுத்து ‘வல்விருந்து’ எனும் தலைப்பில், நூலொன்று வெளியிட்டுள்ளது தமிழினி. ஒரே கதாபாத்திரத்தை வைத்து இத்தனை கதைகள் இந்திய மொழிகளில் வேறெவரும் எழுதியுள்ளனரா என்றறிய எமக்கு ஆவல் உண்டு.

முனியாண்டி, முனியன், முனியம்மா போன்ற பெயர்களை ஐம்பதாண்டுகள் முன்புவரை தமிழர் தரித்திருந்தனர். சுடலையாண்டி, விருமாண்டி, செல்லாண்டி போல முனியாண்டியும் தெய்வம் ஒன்றின் பெயராகத்தானே இருத்தல் வேண்டும்! மதுரை முனியாண்டி விலாஸ் எனும் சங்கிலி உணவகங்களின் பெயரின் முனியாண்டி உட்பட.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் கதை எழுதியவர்களும் சினிமா எடுத்தவர்களும் ரிக்க்ஷாக்காரனுக்கு, வேலைக்காரனுக்கு, காவல்காரனுக்கு, வேலைக்காரிக்கு, பூக்காரிக்கு முனியன், முனியாண்டி எனப் பெயர் சூட்டினர். ஆபீஸ் மேனேஜரின் செக்ரட்டரியாக இருப்பவள், எந்த நேரத்திலும் மேனேஜர் மடியில் ஏறி அமரத் தயாராக இருப்பவள், குட்டைப் பாவாடை போடுபவள், லிப்ஸ்டிக் பூசுபவள் பெயர் அன்றெல்லாம் ஸ்டெல்லா, மேரி, நான்சி என்றே இருக்கும். எப்போதும் வரலட்சுமி, காமாட்சி, செங்கமலம் என்று இருக்காது. அலுவலகம் கூட்டிப் பெருக்கித் துடைப்பவள் முனியம்மா. வாட்ச்மேன் முனிசாமி, ப்யூன் முனியன். இது அன்றைய எழுத்தாளர், சினிமாக்காரர் சமூக நீதி! எவ்வாறாயினும் இனி முனிகள் மரத்திலும் கோயிலின் வெளிச்சுவற்றிலும் குன்றுகளிலும் மேடுகளிலும் கிடங்குகளிலும் நீராடும் துறைகளிலும் ஏரியின் நடு மண்டபங்களிலும் மட்டுமே பேர் சொல்லி நிற்பார்கள்.

முனி எனும் தமிழ்ச்சொல்லின் பொருள் என்ன? எட்டு பொருள் தருகிறது பேரகராதி.

முதற்பொருள் இருடி, பிங்கல நிகண்டின்படி. அதாவது ரிஷியின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் Saint, Sage. கம்ப ராமாயணத்தில், பாலகாண்டத்தில், மிதிலைக்காட்சிப் படலத்தின் பாடல்:

முனியும் தம்பியும் போய், முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தியபின், இருட்
கனியும் போல்பவன், கங்குலும் திங்களும்.
தனியும், தானும், அத்தையலும் ஆயினான்”

 

என்று வரும்.

கௌசிக முனிவனும் தம்பி இலக்குவனும் தத்தம் இனிய துயிலிடம் சேர்ந்தபின் இருட்கனி போன்ற இராமன் இரவும் நிலாவும் தனிமையும் தானும் அழகிய தையலாகிய சீதையும் ஆயினான் என்பது பாடலின் பொருள். எனவே இங்கு முனி எனும் சொல் கௌசிக முனிவனைக் குறிப்பது. முனிவன், இருடி எனப்பொருள் தருவது.

முனி என்றால் Saint, Sage. இருடி என்றால் முனிவன் என்றாலும் Saint, Sage – ஞானிதான். கடவுள் என்றும் பொருள் கொள்கிறார்கள் முனிவன் எனும் சொல்லுக்கு. முழுமுதல் எனும் பொருளில் முனிவன் எனும் சொல்லை திருவாசகம் பயன்படுத்துகிறது. கம்ப ராமாயணத்தில், பாலகாண்டத்தில், மிதிலைக் காட்சிப் படலத்தில்,‘வந்து எதிர்த்த முனிவனை’ என்பார் கௌசிக முனிவனைக் குறிக்க. முனிவன் என்றாலும் முனிவர் என்றாலும் நடிகன் – நடிகர் அல்லது அமைச்சன் – அமைச்சர் என்பது போன்ற வேறுபாடுதான். முனிவர் எனும் சொல்லுக்கு பேரகராதி Hermits, Ascetics, இருடிகள் என்று பொருள் எழுதுகிறது. திருப்பாவையில் ஆண்டாள், ‘புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்’ எனத்தொடங்கும் பாடலில், ‘முனிவர்களும் யோகிகளும்’ என்பார். பதினெட்டு வகையான கணங்களுள் – தேவ கணம், அசுரகணம் போல – ஒரு கணத்தார் முனிவர் எனப்பட்டனர்.

முனிவன் எனும் சொல்லுக்கு இருடி எனும் பொருள் தொடர்பான வேறு சொற்கள் உண்டு. முனிவரன் என்றால் முனி சிரேட்டன், Eminent Sage.முனிவர் குழாம் என்றால் முனிவர் கூட்டம். முனிமரபு என்ற சொல் காணக்கிடைக்கிறது, இறைமை எனும் பொருளில். அஃதாவது முனிமரபு எனில் இறைத்தன்மை. பரிபாடல், ‘அடுமுனி மரபின் ஆன்றவர்’ என்று பேசுகிறது. செவ்வேளைப் பாடும் நப்பண்ணனார் பாடல். முனிமை என்றொரு சொல்லும் கண்டேன். தனி – தனிமை போல, முனி – முனிமை. முனிமை என்றால் Saintliness, முனிவருக்குரிய தன்மை. முனிவா என்றும் முனிவனே என்றும் விளிக்கும் திருவாசகம்.

முனி எனும் சொல்லுக்கு இரண்டாவது பொருளாக புத்தன் எனும் பொருள் தருகிறது யாழ் அகராதி. முனீந்திரன் என்றால் Eminent Sage, முனி சிரேஷ்டன், அருகன், புத்தன் என்றும் பொருள். மூன்றாவதாக, முனி எனும் சொல்லுக்கு அகத்திமரம் என்று பொருள் கூறுகிறது திவாகர நிகண்டு. நான்காவதாக, திவாகர நிகண்டு முனி எனும் சொல்லுக்கு ‘வில்’, அதாவது Bow எனப் பொருள் தருகிறது.

முனி என்றால் யானைக்கன்று, Young elephant எனுமொரு புதிய பொருள் தெரிந்துகொண்டேன். கம்பன் போதகம் எனும் சொல்லைப் பயன்படுத்துவார். கயந்தலை என்றொரு சொல் அறிவேன். முனி எனக்குப் புதிய அறிமுகம், யானைக்கன்று எனும் பொருளில். நற்றிணையில் ஓரம்போகியார் பாடல், ‘முனியுடைக் கவளம்’ என்கிறது. யானைக்கன்றின் கவளம் என்று உரை எழுதியுள்ளனர்.

முனி எனில் முனியன் – Devil, Goblin, பேய் என்பது ஆறாவது பொருள். முனியன் என்றால் ஒரு சிறுதெய்வம். இந்தப் பொருள் பெரும்பாலும் மக்கள் புழக்கத்தில் இருப்பது. இன்றும், ‘வெள்ளிகெழம ராத்திரி முனி அடிச்சிற்று’ என்கிறார்கள். சிறு தெய்வங்களில் சடை முனியைத்தான் புரோகிதக் கலாச்சாரம் ஜடாமுனி என்றது. வடை வடா என்றும் தோசை தோசா என்றும் ஆனதைப் போல. பொன்னமராவதி அருகே பூலாங்குறிச்சி ஊரில் இருக்கும் செம்மலையில் வாழும் முனியை செம்மலை முனி என்பார்கள். அவர் போலவே தூத்துமலை முனி என்றும் ஒருவர் உண்டு. கண்மணி குணசேகரனிடம் அல்லது செஞ்சி தமிழினியனிடம் கேட்டால் பல முனிகளின் பட்டியல் தருவார்கள். செம்மலை முனியும் தூத்துமலை முனியும் கூட்டாளிகள், சேர்ந்தே நடமாடுவார்கள் என்றார் நண்பர், இராணிப்பேட்டை ஆசிரியர், இலக்கியம் முனையும் ஷேக் ஃபரீத்.

அகராதிகள் ஏழாவது பொருளாகப் பேசுவது முனி என்றால் வெறுத்தல் To Dislike. தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா மெய்ப்பாட்டின் பிற நிலைக் களன்கள் பேசும்போது, முனிதல் எனும் சொல்லை வெறுத்தல் எனும் பொருளில் பயன்படுத்துகிறது. நாமின்று யாரையெல்லாம் முனிகிறோம் என்று பட்டியலிட்டால் பக்கங்கள் போதா!

முனிநன் என்றொரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஐங்குறுநூறு எனும் எட்டுத்தொகை நூலில். வெறுப்பவன் என்று பொருள். ‘நம் தோள் இடை முனிநர் சென்ற ஆறே!’ என்பது பாடல் வரி. பாலைத்திணை பாடிய ஓதலாந்தையார் பாடலில். பாடல் வரியின் பொருள், தலைவி தோழிக்குச் சொல்வதைப்போல, ‘நம் தோளை வெறுத்துப் பிரிந்து சென்ற தலைவனின் வழி’ என்பது.

குறுந்தொகையில், பாலைத்திணைப் பாடலாக ஔவையார்,

மலையுடை அருஞ்சுரம் என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே”

 

என்கிறார். ‘என் மார்பிடைத் துயின்று இன்புற வேண்டிய நம் தலைவர் அதை வெறுத்துப் பிரிந்து சென்ற வழி கடுமையானது’ என்பது பொருள். அதே பொருளில்தான் குறுந்தொகையில் பாலைத்திணையில் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் பாடல் வரியும், ‘நம் இன்துயில் முனிநர் சென்ற ஆறே’ என்கிறது.

சங்க இலக்கியத்தில் முனி எனும் சொல் வெறுப்பு எனும் பொருளிலும், சினக்க எனும் பொருளிலும் பல பாடல்களில் காணக் கிடைக்கிறது.

1.முனிகுவை – வெறுப்பாயாக – நற்றிணை 2. முனிகுவம் – வெறுப்போம் – பொருநராற்றுப்படை 3. முனிதகு – வெறுக்கத் தகுந்தது – அகநானூறு 4. முனிந்த – வெறுத்த – நற்றிணை 5. முனிந்தானை – வெறுத்தவனை – கலித்தொகை

முனி எனும் சொல்லின் இறுதி எட்டாவது பொருள் சினம் கொள்ளுதல், கோபங்கொள்ளுதல், To be angry with. பரிபாடலில் நல்லந்துவனார் வையையைப் பாடும்போது,முனியல், முனியல் என்பார். ‘கோபம் கொள்ளாதே, கோபம் கொள்ளாதே’ என்பது பொருள். குறுந்தொகையில் கபிலர் பாடல், ‘முனி படர் உழந்த’ என்று முதல் வரியில் பேசுகிறது. வெறுப்பும் துன்பமும் வருத்திய என்பது பொருள். நற்றிணையில் பெருந்தலைச் சாத்தனார் பாடல், ‘முனி படர் உழக்கும்’ என்று பேசும். பொருள் அதுவேதான், வெறுப்பும் துன்பமும் வருத்தும் என்பது. எனவே முனி எனும் சொல்லுக்கு சினம் என்பது ஒரு பொருளானால் வெறுப்பு என்பது இன்னொரு பொருள். கோபமும் வெறுப்பும் இரட்டைப் பிறவிகள் போலும்!

முனி எனும் சொல் சிறுதெய்வம் அல்லது பேய் என்ற பொருளில் அறிமுகம் ஆகும் முன்பே, வெறுப்பு எனும் பொருளை அறிந்து கொள்ளும் முன்பே, கோபம் அல்லது சினம் எனும் பொருள் எனக்கு அறிமுகம். பலமுறை சொல்லியிருக்கிறேன் என் அப்பா ஒரு ஓர்நேர் சம்சாரி என்று. ஓர்நேர் சம்சாரிகள் நாலைந்துபேர் சேர்ந்து கூட்டு ஏர் போவார்கள். மாற்று ஏராகவோ, பண ஏராகவோ கூடப் போவது உண்டு.

அப்பாவுடன் கூட்டு ஏர் அடிப்பவர்கள் சிவனுப் பண்டாரம், குரங்கு ராமையாப் பிள்ளை, சிதம்பரதாணு யோகீசுவரர். எல்லோரையுமே அப்பா அண்ணன் என்று விளிப்பார். நான் பெரியப்பா என்றும். இவருள் மூன்றாவது பெரியப்பாவை ஊரில் முனி சிதம்பரம் என்று விளிப்பார்கள். வெறுமனே முனி என்றாலும் அது அவரையே குறிக்கும். அந்த வயதிலேயே முனி என்றால் கோபம் என்பது தெரியும். ஏனெனில் கோபக்காரர் என்பதனால் அவருக்கு அந்த முன்னொட்டுப் பட்டப் பெயர். ‘ஆறுவது சினம்’ என்பார் ஔவையார். சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்பார் திருவள்ளுவர்.

கிட்கிந்தா காண்டத்தில், தானை காண் படலத்தில், குரங்குச் சேனையை விவரிக்கும் கம்பன், முனியும் ஆம் எனின் அரக்கனை முரண் அற முருக்கும்’ என்பார். இந்தக் குரங்குச் சீயங்களுக்கு சினம் ஏற்பட்டால் அரக்கன் குலத்தையே அழித்துவிடும் என்பது பொருள்.

கிட்கிந்தா காண்டத்தில், நாடவிட்ட படலத்தில், சுக்கிரீவன் வானரப் படைகளுக்கு சீதையைத் தேட தென்திசை நோக்கி வழி சொல்லும் தருணத்தில் பொதிய மலையையும் அகத்திய முனிவனையும் பேசுகிறார். அகத்திய முனிவனைத்தான் கும்பமுனி, குடமுனி என்கிறோம். கடல் குடித்த குடமுனி’ என்பார் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை. அகத்திய முனியின், பொதியமலையின், மகேந்திர மலையின் சிறப்புப் பேசும் பாடல் ஒன்று.

‘‘தென்தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன்
        தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்
       அம்மலையை இறைஞ்சி ஏகி
பொன்திணிந்த புனல்பெருகும் பொருநை எனும்
        திருநதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
        நெடுவரையும் கடலும் காண்டிர்”

 

என்பது முழுப்பாடல்.

‘தென் தமிழ்நாட்டு அகன்ற பொதியமலையில் அகத்தியத் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்வீர்களேயானால், அம்மலை என்றும் அம்மாமுனிவன் உறைவிடம் ஆகும். ஆதலினால் அம்மலையை வலம்வந்து வணங்கி அப்பால் ஏகுங்கள். பொன் நிரம்பிய புனல் பெருகும் தாமிரபரணி எனும் திருநதியும் கடந்து செல்லுங்கள். யானைக்கன்றுகள் வளரும் பெரிய தாழ்வரைகளை உடைய மகேந்திரமலையையும் தென்கூடலும் காண்பீர்கள்’ என்பது பாடலின் பொருள்.

தென்தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம். பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி. நாகக் கன்றுவளர் தடஞ்சாரல் மயேந்திர மா நெடுவரை. இது கம்பனின் கவித்திறன், மொழித்திறன், காட்சித் திறன். நாகம் எனும் சொல்லுக்கு தமிழில் அரவம், புன்னாகம் எனும் மரம், மலை, யானை முதலிய பல பொருள். ‘நாகமும் நாகமும் நாண நடந்தான்’ என்பார் கம்பன் இராமனை. மலையும் யானையும் வெட்கும்படியாக நடந்தான் என்ற பொருளில்.

நாம் கூறவந்த விடயம், முனிவன் எனும் சொல் பற்றி. முனி எனும் சொல்லுக்கான சினம் எனும் எட்டாவது பொருள் பேசிக்கொண்டு இருந்தோம். முனிக்கு வெறுப்பு என்ற பொருளும் கோபம் என்ற பொருளும். சங்க இலக்கியங்கள் சினம் எனும் பொருளிலும் முனி ஆண்டுள்ளன.

1.முனிதல் – சினத்தல் – அகநானூறு 2. முனிந்து – வெறுத்து, சினந்து – அகநானூறு, புறநானூறு, பொருநராற்றுப்படை 3. முனிய – வெறுக்க, சினக்க – அகநானூறு, கலித்தொகை 4. முனியல் – வெறுக்காதே, சினக்காதே – குறிஞ்சிப்பாட்டு, நற்றிணை, பரிபாடல் 5. முனியா – வெறுக்காமல், சினக்காமல் – கலித்தொகை, நற்றிணை 6. முனியாது – வெறுக்காது, கோபம் கொள்ளாது – அகநானூறு, புறநானூறு, நற்றிணை 7. முனியும் – சினக்கும் – புறநானூறு 8. முனியான் – வெறுக்க மாட்டான், சினங்கொள்ள மாட்டான் – ஐங்குறுநூறு, அகநானூறு 9. முனியேன் – கோபிக்க மாட்டேன் – புறநானூறு.

ஒருவர்மீது நமக்குத் தீராக் கோபம் இருக்குமானால் அதைக் குறிக்க முனிவறாமை எனும் சொல்லுண்டு நம்மிடம். நாற்பதாண்டு காலம் முக தரிசனம் இல்லாமலேயே இறந்துபோன இலக்கிய சகோதரர்களை அறிவேன் நான். தம்பியை சந்தித்தேன் என்றால் அண்ணன் ஒருவாரம் சரியாகப் பேசமாட்டார். செத்த துட்டிக்குப் போகாத, திருமணங்கள் நடக்குமானால் அன்று பார்த்து வெளியூர் போய்விடுகிற, செத்தாலும் கொள்ளி வைக்க மகன் வரக்கூடாது என்கிற, ஓடிப்போன – உடன் போகிய – Elope ஆன மகளை ஆணவக்கொலை செய்கிற கோபம் அது. சொத்து பிரிக்கிற போது, உலக்கையை நீளவாக்கில் பிளந்து பங்குவைத்த உடன் பிறந்தவர்களையும் அறிவேன். பிங்கல நிகண்டு அந்த சினத்தை முனிவறாமை என்கிறது.

ஒருவன் முதுமை அடைந்து உயிர் பிரியும் வேளையில் இருக்கும் வேதனைகள் எனப் பன்னிரண்டு சொல்வார்கள். அவை நெஞ்சு வேதனை, பல்வேதனை, மூல வேதனை என்பன அல்ல. மனவேதனை! அவற்றுள் ஒன்று தீராக்கோபம் என்னும் முனிவறாமை. செம்மூதாய் கி.ரா.வைக் கேட்டால் பிற வேதனைகளைப் பேசக்கூடும். முனிவறாமையின் எதிர்நிலை முனிவிலனாதல். கோபமற்றவனாக ஆதல். அஃதோர் பெருமாந்த நிலை.

முனிவு எனும் சொல் கிடக்கிறது பேரகராதியுள். முனிபு என்றாலும் முனிவுதான். கலித்தொகை முனிபு ஆள்கிறது. முனிவு எனும் சொல்லுக்குப் பேரகராதி பட்டியலிடும் பொருள்கள்:

Anger, Wrath, கோபம் ‘முனிவு தீர்ந்தேன்’ என்பார் கம்பன். Dislike, Aversion, வெறுப்புதொல்காப்பியத்தின் சொல்லதிகார நூற்பா, ‘முனைவு முனிவாகும்’ என்கிறது. உரை – முனைவு எனும் சொல் முனிவு. அதாவது சினத்தல், வெறுத்தல். Fatigue, களைப்பு, சடைவு, தளர்ச்சி. Suffering, வருத்தம், துன்பம். Endeavor, முயற்சி. தொழில் முனைவோர் என்கிறோம் அல்லவா? நுனி என்றொரு சொல் கேட்டிருக்கிறீர்களா? திருக்குறளில் வலியறிதல் அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்.

“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்”

 

என்பதந்தக் குறள். பிரித்து எழுதினால் – ‘நுனிக் கொம்பர் ஏறினார், அஃது இறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதி ஆகி விடும்’ என வரும். மரக்கொம்பின் நுனிவரை ஏறலாம். அதைத் தாண்டினால் உயிருக்கே இறுதி ஆகிவிடும் என்பது பொருள். செயலாற்றுவதற்கும் எல்லைகள் உண்டு என்பது அறிவுரை அல்லது நீதி. நுனி எனும் சொல்லை மக்கள் வழக்கில் முனி என்பர். நியாயம் எனும் சொல் ஞாயம் ஆவதைப்போல மொழி நடத்தும் Fermentation. மரங்களில் நாவல்பழம், புளியம்பழம், மாங்காய், கொய்யா, நெல்லிக்காய் பறிக்க ஏறும்போது பதறிக் கத்துவர் தாயர், “எலே! நீக்கம்புலே போவான்! முனியிலே போகாதலே!” என்று. எனவே நுனிக்கொம்பு என்பது எமக்கு முனிக்கொம்பு. “அன்னா அந்த முனீல ஒரு காய் கெடக்கு பாரு என்பார்கள்.

புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய பாடல் மிகப்புகழ் பெற்றது. பாடல் எண் 182. திணை பொதுவியல். துறை பொருண்மொழிக் காஞ்சி. அப்படி என்றால் என்ன என்று தப்பான வீட்டுக் கதவைத் தட்டாதீர்! இனி முழுப்பாடல்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டாலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்னமாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன்தாள்,
பிறர்க்கு என  முயலுநர் உண்மை யானே”

 

ஒன்பது வரிப்பாடல். எளிதான பொருள் சொல்ல முயல்வேன். இந்திரனுடைய அமுதமே கிடைத்தாலும் தனியே உண்ண மாட்டார்கள். முனிவு – வெறுப்பு – சினம் இல்லாதவர்கள். மனச்சோர்வு அற்றவர்கள். பிறர் அஞ்சும் தீய செயல்கள் செய்ய அஞ்சுபவர்கள். புகழ் என்றால் உயிரும் கொடுப்பார்கள். பழி என்றால் உலகமே கிடைக்கும் எனினும் பெற்றுக் கொள்ளார். சோர்வு, அயற்சி, மனக்கவலை இல்லாதவர்கள். அத்தகைய பண்புகளை உடையவராகத் தமக்கு என எதையும் முயல மாட்டார்கள். பிறருக்காகவே முயற்சி செய்பவர்கள். ஆகவே இவ்வுலகம் சிறப்பாக இருக்கிறது!

நான் வளர்ந்த காலத்து, இந்தப் பாட்டு கேட்காத அரசியல்மேடை இல்லை. மேற்கோள் காட்டாத சிந்தனைக்கொல்லர், நடமாடும் நூலகம், தென்னாட்டு சாக்ரடீஸ், ஒன்பான் தமிழறிஞர், சொல் முதலாளி இல்லை. பிறகு அவரே ஊரான் முதலை உப்புப் போடாமலேயே தின்றார்கள். இப்படி நாம் எழுதுவதுவே தொல்காப்பியர் சொன்ன பழிகரப்பு அங்கதம். ‘முனிவிலர்’ எனும் சொல்லைச் சுட்ட நாம் இப்பாடலை மேற்கோள் சொன்னோம்.

முனிவு என்றால் வெறுப்பு என்ற பொருளில் குறுந்தொகையில் பதுமனார் பாடிய நெய்தல் திணைப் பாடல் ஒன்றுண்டு.

“நள்ளென்று அன்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சா தேனே!”

 

என்பது பாடல்.

நள்ளிரவிலே யாமம் இருள் செறிந்துள்ளது. மக்கள் யாவரும் பேச்சடங்கி அவரவர் கூட்டினுள் ஒடுங்கி விட்டனர். வெறுப்பேதும் இன்றி பரந்த இவ்வுலகமும் உறங்குகின்றது. ஒற்றைத் தனியனாகிய நான் மட்டும் உறங்காமல் தனித்திருக்கிறேன் என்பது பாடலின் பொருள். பெண்ணின் தனிமை பேசுவது. இந்தக் குறுந்தொகைப் பாடலுடன் சேர்த்து வைத்துப் பார்க்கத் தகுந்த திருக்குறள் ஒன்றுண்டு. காமத்துப்பால் படர் மெலிந்திரங்கல் அதிகாரம்.

“மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை”

 

என்பது பாடல். இப்பேருலகின் உயிர்களை எல்லாம் உறங்க வைத்துக் காத்துத் தனித்திருக்கிறது இந்த இரவு. நான் மாத்திரமே இந்த இரவுக்குத் துணை என்பது பாடலின் பொருள்.

முனிவர் என்றால் அருந்தவத்தோர். துறவிகள். துறவி என்றால் எல்லாம் துறந்தவர். துறந்தார் எல்லாம் துறந்தாரில்லை. துறந்தாரெல்லாம் துறந்தாரில்லை என்ற பொருளுடைய கட்டுரை ஒன்றுண்டு நான் எழுதியது. பல சமயங்களில் நமக்கொரு கேள்வி வரும் முனிவருக்குக் கோபம், முனி வரலாமா என்று! துர்வாசனும் கௌசிகனும் கௌதமனும் கோபமுடைய முனிவருக்குச் சான்றாக நிற்போர். முனிவருக்கும் முனிவு என்பது நமக்கு முனிவேற்படுத்தும்.

வானிற்பறக்கும் எந்தப் புள்ளும் கருதிக்கூட்டி வஞ்சமும் காழ்ப்பும் கொண்டு எவர் தலையிலும் தோளிலும் எச்சம் இடுவதில்லை. பறக்கும்போது எச்சமிட்டு அது போக்கில் போய்விடும். அது தற்செயலாக நம் தலையிலோ முதுகிலோ தோளிலோ நெஞ்சிலோ வந்து விழும். நாறும்தான். நாறாமல் என்ன செய்யும்? என் வயதுக்கு இதுவரை எட்டுப் பத்துமுறை எச்சமிட்டிருக்கும்.

பிச்சைக்குப் புறப்பட்டுப் போகும் முனிவன் தலையில் கொக்கொன்று எச்சமிட்டு விட்டது. முனிவன் முனிந்து கொக்கைப் பார்க்க, கொக்கு கரிந்து விழுந்து சாகிறது. பிச்சை கேட்டு ஒரு வீட்டு வாசலுக்குப் போய் நிற்கிறான் முனிவன். எட்டிப் பார்த்த இல்லத்தரசி சொல்கிறாள், “கொஞ்சம் பொறு. வீட்டுக்காரருக்கு சோறு போட்டுக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று. முனிவர் முனிந்து பார்க்கிறார். இல்லத்தரசி முனிவனைப் பார்த்து முனிந்து கேட்கிறாள், “கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா? என்று. இதைத்தான் திருவள்ளுவர் ‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார்’ என்பார்.

‘முனியும் முனியும்’ என்ற இந்தக் கட்டுரையின் தலைப்பின் பொருள் முனி & முனி அல்ல. முனிவனும் முனிவான் என்று பொருள் தருவது.