விஜயா பதிப்பக வாசகர் வட்டமும் சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘கி.ரா. விருது’ பெற்ற கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துகள்.

*

செம்மேகமாய் திரண்டு வந்தது மேலைக்காற்று. மூச்சு வாங்கக்கூட இடைவெளி கொடுக்காமல் நிறைமுக்காடாய் போர்த்திதான் பார்த்தாள், கருவறைக்குள் முடங்கிக்கிடந்த அங்காளம்மை. ஆனால் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு படுதாவைப் போல் படிந்தது மேற்கே மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்மேட்டின் புழுதி. மூக்கைப் பொத்துவதற்குள், நாசியில் நுழைந்து நடுமண்டைக்கும் ஏறிவிட்டது.

அங்காளம்மைக்கு நெஞ்சை அடைக்கிற மாதிரியிருந்தது. மூக்கினுள் நாவராஞ்சி முள் அறுவுகிறமாதிரி வேதனை. அடுத்து மண்டைக்குள் வண்டு புகுந்தது மாதிரி ஒரு குடைச்சல், கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. அடுத்தடுத்து நில்லாமல், இளைத்த தேகத்தில் சம்மட்டியால் அடிப்பது போன்று தும்மல்கள். தும்மல் சத்தத்தில் கோயிலின் இடுக்குகளிலிருந்த புறாக்கள் பறாச் பறாச்சென்று பறந்தோடின. எழுந்து குந்தினாள்.

விலாக்களில் வலித்தது. மரணத்தைத் தொட்டு மீண்ட மாதிரியான தவிப்பு. நெஞ்சை நீவிக்கொண்டாள். இடைஞ்சலாய் கையில் சிக்கிய காசுமாலையை உருவி எறிந்தாள். ”இதான் இப்ப கொறைச்சலா இருக்கு.” கண்ணீரையும் மூக்கில் வடிந்த தண்ணீரையும் துடைத்துக்கொள்ள முந்தானையை அவிழ்த்து உதறியபோது கிளம்பிய புழுதிப்படலம், திரும்பவும் அவளை தும்மலுக்கு இட்டுச் சென்றது.

தொண்டை வறண்டு போயிருந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் என்று எழுந்தாள். நடக்க முடியவில்லை. மெல்ல பக்கச் சுவரைப் பிடித்துக்கொண்டு வந்து வாசல் படிக்கல்லில் குந்தினாள். வாயெல்லாம் கசந்தது. காறித்துப்பினாள். பகலைப் போல் அடித்துக்கொண்டிருந்த வெளிச்சத்தில், சேற்று நிறத்தில் சளி குனுக்காய் ஓடி விழுந்தது.

ஆளரவம் முற்றிலும் அற்றுப்போன நள்ளிரவு. கோயிலின் முகப்பு வெளிச்சத்தில், எதிரில் நின்றிருந்த இலுப்பை மரங்களின் நிழல், கிழக்கே வானாதிராயபுரம் போகிற பாதையை மூடிக் கிடந்தது. தெற்கில் உயர்ந்த மதிற்சுவருக்கு அப்பால், கரிமேடு. உயரமான இயந்திரம், பெடரிலிருந்து நிலக்கரி கொட்டிக்கொண்டிருந்தது. சன்னமாய் மின்மினிப் பூச்சிகளாய் நிறைய வெளிச்சப் புள்ளிகள்.

சுவரோரம் இருந்த பீலியில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. ராப்பகல் என்றில்லாது, எப்போதும் தண்ணீருக்குப் பஞ்சமில்லாத குழாய். நிலக்கரி வெட்டுகிற இடத்தில் இடைஞ்சலாய் இருக்கிறதென உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர். உபயதாரர் ‘என். எல்.சி நிர்வாகம்’ என சுவரில் பெயர் எழுதி வைத்துக்கொண்டு மூக்கை நீட்டி ஒழுகிக்கொண்டிருக்கிறது.

மூச்சு வாங்கியபடி எழுந்துபோனாள். திறந்து இரண்டு கை வாங்கிக் குடித்தாள். முகத்தைக் கழுவி, முடியை உதறி, கொண்டை போட்டாள். முடி கொள்ளாது செம்பட்டை பாய்ந்த புழுதி கைகளில் ஒட்டியது. கழுவியபடி நிமிர்ந்தாள்.

தண்ணீர் கொட்டிய சத்தத்தில், பக்கத்தில் நின்றிருந்த மிகப்பெரிய குதிரை, விழித்துக்கொண்டிருப்பதை உறுதி செய்வதாய் கனைத்தது. கனைத்த அதிர்வில் மேலே படிந்திருந்த புழுதிப் படிவு பொலபொலவென இறங்கியது. சலங்கைகள் இலேசாய் அசைந்தன. கூழைப்பாம்பைப் போல் மொட்டையாய்த் தொங்கிக்கொண்டிருந்த வாலை ஆட்டிக்காட்டியது.

தெற்கு மேலூரில் கம்பும் மள்ளாட்டையும் கணக்கற்று விளைந்த ஆதிகாலம். விளைந்ததில் பாதிக்குமேல் கூட அங்காளம்மனுக்குக் கொடுக்க தயாராயிருந்த தாராள பக்தி. விதை மணிகள் அங்காளம்மையின் காலடிக்கு வந்த பிறகுதான் நிலத்துக்குப் போகும். அங்காளம்மையும் வஞ்சனையில்லாமல் பொன்னாய் விளைவித்தாள். வாக்கு தவறாத மக்கள். அறுவடையின் முதல் செலவு அவளின் உண்டியலுக்குத்தான். எள்ளோ மள்ளாட்டையோ காணம் ஆடினால், முதலில் இவள் விளக்குக்கு எண்ணெய்யாக வந்துதான் எரியும்.

அங்காளம்மை வாரி வழங்கியதில் மகிழ்ந்து சிறிய கோயிலை இடித்துவிட்டு பெரிதாகக் கட்ட முடிவெடுத்தார்கள். செங்கல்லும் சுண்ணாம்பும் வண்டிவண்டியாய் வந்திறங்கின. ”வூட்டு வேல அப்பறம், கோயில் வேலதான் முக்கியம்.” கடைக்கால் பறித்து, பொதவடை போட்டு மடமடவென எழுந்தது கோயில். முன்னாலிருந்த இலுப்பைத் தோப்பில் நேர்த்தியான ஒரு மரத்தை வெட்டி, சாமிக்கு சகடை வேலையும் கூடவே நடந்துகொண்டிருந்தது.

‘சுத்துப்பட்டுல இந்த மாதிரி கோயிலே இல்ல…” ஊரார்கள் பேசும்போது அங்காளம்மைக்குப் பெருமை தாங்கவில்லை. பேச்சைக் கேட்கக் கேட்க, தன்னுள் மேலும் கூடுதலாய் சக்தி இறங்கிக்கொண்டதாய் கர்வம். ”சகட கெடக்கட்டும். சாமிக்கி பெரிய குதிரைவோ ரெண்டு இருக்கணும். அதோட சுத்துப்பட்டுல எங்கியும் அந்த ஒசரத்துக்கு வேற குதிரை இருக்கக்கூடாது.”

கால்கள் உயரமே ஒரு ஆள் உயரத்திற்கு மேல் இருக்கும். வலுத்த குதிரை நாலைந்து மைல் தூரத்தில் இருக்கிற வடலூரைக்கூட நாலே தாண்டுதலில் தொட்டு விடும். சிலிர்த்துக்கொண்டு நின்ற குதிரையை அந்த வழியாய் வந்த வண்டியில் பூட்டிய மாடுகள் பார்த்து விட்டு மிரண்டன. எப்பேர்பட்ட கொம்பாதி கொம்பன் மாடும், அந்தக் குதிரையைக் கடந்து ஒரு அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. குதிரையின் பார்வையில் படாமல் கோயிலைச் சுற்றிக்கொண்டு வண்டிப் பாதை போகிற மாதிரி ஆகிவிட்டது.

அதைப்போலவே அடுத்த குதிரையையும் செய்யவேண்டும் என கடைக்கால் வெட்டி, கல்லை எடுத்து வைத்தார்கள். திடீரென்று திசையெல்லாம் அதிர்கிற மாதிரி கனைப்புச் சத்தம். பீதியில் உறைந்து போய்விட்டார்கள். பக்கத்தில் ஏற்கனவே வேலை முடிந்து நின்றிருந்த குதிரைதான் கனைத்தது. மீண்டும் கல்லை எடுத்தார்கள். வேலையைத் தொடர விடாதபடி திரும்பவும் ஆங்காரமாய் கனைப்புச் சத்தம்.

அங்காளம்மன் போலவே குதிரைக்கும் கர்வம். ”தன்னைப் போல் வேறெதுவும் இருந்துவிடக் கூடாது.’

அடுத்த குதிரை முயற்சியை அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனாலும் அளவுகடந்த ஆங்கார சக்தியோடு, அந்தக் குதிரை இருந்தால் ஆபத்து என்று அதன் வாலை வெட்டி வேகத்தைக் கட்டுப்படுத்தினார்கள். அது நாளிலிருந்து, ஒற்றைக் குதிரை மொண்ணை வாலோடுதான் நின்று கொண்டிருக்கிறது.

அங்காளம்மன் கால்களை நீட்டி ஆச்சலாய் படிக்கல்லில் குந்தினாள். மூச்சு வாங்குவது குறைந்து போயிருந்தது. ஈர முகத்தில் காற்று பட்டதும் சிலிர்த்தது. முந்தானையைத் தலைக்கும் சேர்த்து வளைத்து முக்காடாய்ப் போர்த்திக்கொண்டாள்.

தலைக்கு மேல் குழல் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வண்டுகள் மேலிருந்து பொலபொலவென விழுந்த வண்ணமாயிருந்தன. உள்ளங்கையால் விளக்கு ஒளிர்வை மறைத்தவாறு நிமிர்ந்து பார்த்தாள். விளக்குப் பட்டியில் ‘என்.எல்.சி’ என எழுதப்பட்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் விளக்குகள். பட்டிகளிலெல்லாம் ‘என்.எல்.சி’ யென ஒவ்வொன்றிலும் உபயப் பதியம். அவைகளை பார்க்கப் பார்க்க அங்காளம்மைக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

தண்ணீர் உபயம், தாம்பாளத்தட்டு உபயம், கோயில் வர்ண உபயம், விளக்கு உபயம், அர்ச்சனை உபயம், அய்யர் உபயம்… என எல்லாமும் என்.எல்.சியாக இருந்ததில், ஏதோ நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் குடைக்குள் இருப்பது போன்று ஓர் அடக்கம், அங்காளம்மைக்கு. ஒரு பெரிய இயந்திரத்தைப் பராமரிப்பது போல் தன்னையும், தன் கோயிலையும் என்.எல்.சி நிர்வாகம் பராமரிப்பதாய் ஒரு தற்குறைச்சல். மேற்கில் மண்மேடும் தெற்கில் கரிமுட்டும் சூழ கொட்டி அடைத்துவிட்டு, பல் பிடுங்கிய பாம்புக்கு பால் வார்க்கும் விதமாய் இந்த வண்ணப்பூச்சும், தண்ணீரும் வெளிச்சமும். வகைதொகை தெரியாமல் சிக்கிக்கொண்டது மாதிரியான விசனத்தில் அங்காளம்மை பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்தாள். படுத்தால் மட்டும் தூக்கம் வந்து விடப்போவதில்லை. மொக்கு மொக்கென்று கிடக்க வேண்டியதுதான். நரகமாய்க் கழிந்துகொண்டிருக்கிறது பொழுது. அவளையும் அறியாமல் அவள் வாய் முணுமுணுத்தது. ”நாம தப்பு செஞ்சிட்டம். நம்ப சனங்க கூட போவாதது ரொம்ப தப்பு. அண்ணன் வீரனாரு பேச்சக் கேட்ருக்கணும்.”

எழுந்து காலாற வெளியில் போய்விட்டு வந்தால்தான் நெஞ்சில் இருக்கிற கனம் குறையும் என்கிற மாதிரி பட்டது. ஆனால் எங்கு செல்வது? எட்டியவரை மக்கள் இல்லை. மரங்கள் இல்லை. பயிர்பச்சை இல்லை. தோப்புத்துரவு இல்லை. மேற்கில் மண்மேட்டு மலையில் ஏறி, பக்கத்தில் அதலபாதாளமாய் வெட்டி வைத்திருக்கும் முதல் விரிவாக்க சுரங்கத்தில் வேண்டுமானால் குதித்துத் தொலையலாம். தெற்கில் கொட்டி வைத்திருக்கும் கரிமேட்டில் விழுந்து புரண்டு கண்மண் தெரியாமல் காலு கையை உடைத்துக் கொள்ளலாம்.

பின்னுக்கு நகர்ந்து திரும்பி, சுவரில் சாய்ந்து குந்தினாள். கண்களில் தாரை தாரையாய் வடிந்துகொண்டிருந்தது. உள்ளுக்குள் குமுறியது. எவ்வளவு பாசமான மக்கள். கொல்லைக்குப் போகும்போது கும்பிடுவார்கள். வேர்வையும் சாறுமாய் திரும்புகாலில் கும்பிடுவார்கள். இவளில்லாமல் எந்தக் காரியம் நடந்தது அவர்களுக்கு? பிறந்த முடி எடுக்க, பச்சைக் குழந்தையைத் தூக்கிவந்து காலடியில் போடுவார்களே!

சத்தமில்லாமல் உடைந்து கசிந்துகொண்டிருந்தாள். எல்லாவற்றையும் மறந்து, இவ்வளவு இறுமாப்பாய் இருந்து என்ன சாதித்துவிட்டோம்? பிணத்திற்கு அலங்காரமாய், என்.எல்.சி நிர்வாகத்தின் தயவில் இந்தப் பகட்டும் படோபடமும். நினைக்க நினைக்க மேலும் மேலும் நொறுங்கிக்கொண்டிருந்தாள்.

1979ஆம் ஆண்டு, தெற்கு மேலூரில் இடியாய் இறங்கியது சேதி. ”நம்ப ஊர என்.எல்.சி எடுக்கப்போவுதாம்.” திக்கென்று ஒரு திகில் நெஞ்சுக்குழியில் அடைத்துக்கொண்டது எல்லோருக்கும். குடித்துக்கொண்டிருந்த தண்ணீரின் மிடறு, தொண்டைக் குழிக்குள் இறங்கவில்லை. உருண்டையாய் திரண்ட சோறு, கை நழுவி தட்டிலேயே விழுந்தது. கவலையில் தண்ணீரோடு மேலே வந்த சால், பாதிக் கிணற்றில் அப்படியே நின்று தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தது.

”என்னாது, நம்ப ஊரையா எடுக்கப் போறாங்க?”

வெகுதொலைவிற்கு மேற்கே இருந்த முதல் சுரங்கத்தின் கரிஎடுப்பு, அப்படியே தெற்கே கம்மாபுரம் பக்கம்தான் நகர்ந்து போகும் என்று நிம்மதியாய் இருந்தவர்கள் நிலைகுலைந்து போனார்கள். முதல் சுரங்க விரிவாக்கம் என்று தனியாய் கிழக்கே ஆரம்பித்தது திட்ட அமலாக்கம். தெற்கு மேலூரை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்.

”இந்த மண்ண வுட்டுட்டுப் போயி, நாங்க எனுமா பொழைப்பம்? எங்க கைய கால ஒடைச்சி அனுப்பிட்டு, அப்படி என்னா வாரியடிச்சிக்கப் போறிங்க?” கண்ணீரும் கம்பலையும் எடுபடவில்லை.

“எங்கள கொன்னு போட்டுட்டு வேண்ணா எங்க மண்ண எடுத்துக்குங்க.” மறியல்கள், போராட்டங்கள். படித்து, பட்டம் வாங்கி, பணிக்கு வந்திருந்த பெரிய அதிகாரிகள் அவற்றை முறியடித்தனர். காக்கிகளின் கைவரிசையில் போராட்டம் கலகலத்துப் போனது.

“ஏம் மண்ணு போச்ச… ஏம் ஊரு போச்ச போச்ச…” புலம்பல்கள் நீடிக்கவில்லை. அழுது ஓய்ந்த வேளையில் பிச்சையாய் கையேந்தினார்கள். “ஏக்கருக்கு பின்னம் பத்து ரூவா கூட்டிக்குடுங்க. எங்குளுக்கு குடியிருக்கிறது மாத்து எடம் குடுங்க…”

வெட்டப்போகிற ஆட்டிற்கு முன்னால் காட்டப் பெறும் பச்சைத்தழையாய் வார்த்தைகள்.  ”ஒங்களுக்கு மாளிக கட்டி வைச்சிருக்கறம். இத விடவும் பவுனு மாதிரி காணிபூமியிருக்கு. கை நெறயா. பணம் தர்றம்.” கும்பலாய் ஓட்டிக்கொண்டுபோய் விருத்தாசலம் பக்கம் விஜயமாநகர காட்டில், ரூபநாராயண நல்லூர் பீவேலந்தோப்பில், இந்திரா நகர் முந்திரிச் செடியில் இறக்கிவிட முடிவெடுத்திருந்தார்கள்.

விடிந்தால் நடையைக் கட்ட வேண்டியதுதான். மூட்டை முடிச்சுகள் காத்துக்கிடந்தன. மனம் முழுக்க மண் மட்டுமே நிறைந்து கிடந்த தாங்கவியலா துக்கத்தில் மக்கள் அங்காளம்மனை மறந்து போனார்கள்.

கொட்டி ஆற்றவியலாக் குமுறலோடு, வீரனார் கால்நடையாக நடந்து வந்து அங்காளம்மன் கோயில் கதவைத் தட்டினார். திறந்த அங்காளம்மன் முகத்தில் எள்ளும் கொள்ளும் பொறிகிற கோபம், “வா… அண்ண…”

விறைப்பாய் போய்க் குந்தியவள் வெகுநேரம் வரை எதுவும் பேசவில்லை. வீரனார்தான் கேட்டார், “அப்பறம் என்னாம்மா முடிவெடுத்துருக்க?”

”எதப் பத்தி..” வார்த்தை நறுக்கித் தெறித்தது.

”ஊர வுட்டு நம்ப சனமெல்லாம் போவுது. நாம மட்டும் இருந்து என்னா பண்ணப் போறம்? நாம்பளும் மக்களோட மக்களா போய்ச் சேருவம்…” அவருக்கு குரல் கரகரத்தது.

அங்காளம்மனுக்கு குரல் எகிறியது. இருட்டில் தீப்பிழம்பாய் முகம் சொலித்தது. ”எது நம்ப மக்க… எது நம்ப சனம்? நன்றி கெட்டதுங்க… அது அது ஏம் மண்ணு போச்சு. ஏம் ஊரு போச்சன்னுதான் பொலம்பிக்கிட்டு சூத்து மண்ண தட்னபடி கௌம்புது. ஒண்ணுனாச்சும் ஏஞ் சாமி போச்ச, ஏஞ் சாமிய வுட்டுட்டுப் போயி என்னா பண்ணுவம்னு நெனைச்சிப் பாக்குதா? எம்மாம் நல்லது பண்ணியிருப்பம்? ராக்கண்ணு பகல் கண்ணு முழிச்சி இந்த கொல்ல வெளிய எப்படி காபந்து பணியிருப்பம்? ஒரு மானுடம் நெனைச்சிப் பாக்குதா”

வீரனார் சமாதானப்படுத்தினார். ”வுடும்மா அது அது கொறையதான் அதுவோ பாக்கும். அதுவுமில்லாம அதுங்க கொறையதான் நாம தீர்த்து வைச்சிருக்கம், நம்ப கொர அதுவுளுக்கு எப்பிடி புரியும்? நாமதான் எறங்கிப் போவுணும்.”

“எதுக்கு எறங்கி போவுணுங்கறன்? கொல்ல வெளையலன்னு வந்து கால்ல வுழுல? ஆட்டு மாட்டக் காணம்னு வந்து நிக்கில? இப்ப ஏம் ஊரு, வூடு, வாசல எடுக்கறாங்க காபந்து பண்ணுன்னு எது வந்து நம்ப கால்ல வுழுந்திருக்கு.” ஆத்திரத்தில் எகிறுகிறாள்.

”வுழுந்தா மட்டும் நாம என்னா பண்ணிட முடியும்? தனி மனுசன் வந்து ஆக்ரமிப்பு பண்றான்னா சொல்லு, இது அரசாங்கம். யாருகிட்டப் போயி என்னா கேப்ப, என்னா செய்வம்? ஒண்ணும் யோசிக்காதம்மா. நம்ப மக்க, நாம பாத்து வளர்ந்த புள்ளிவோ. நாமதான் அதுவோகூட எறங்கிப் போவணும், போற எடத்துல அதுவுளுக்கு ஒரு ஆதரவா நாமதான் கூட தொணையா இருக்கணும். வாம்மா போலாம். முனியப்பா, அய்யனாரு, சடைச்சி, மாலக்காரி எல்லாரும் சனங்க கூட போவத் தயாரா கௌம்பி இருக்காங்க, நாம்பளும் போய்டுவம் வாம்மா…” அழுதுவிடுவார் போலிருந்தது.

கறாராய் சொன்னாள். ”நா வல்ல. நீங்க போவலாம்.”

“இல்லம்மா யோசிச்சி சொல்லு. நம்ம காலடியில கெடந்த சனங்கள வுட்டுட்டு நீ மட்டும் எப்பிடி தனியா இருப்ப?”

அங்காளம்மன் ஆங்காரமாய் சிரித்தாள். “இந்த நன்றி கெட்ட சனங்ககூட இருக்கறத விட தனியா இருக்கறதே மேலு, நா இருப்பன். தன்னப்போல ஒரு உருவம் இருக்கக் கூடாதுன்னு கனைச்சி, காரியத்த நிறுத்தி தனியாவே நிக்கிது பாரு ஏங் குதிர. ஏங் குதிரைக்கே அந்த தெம்பு இருக்குதுன்னா, எனக்கு என்னா? நா இருப்பன். நீங்க ஒங்க சனங்க கூட போயி எந்த மரம் மட்டையிலாவது தொங்கிகிட்டு இருந்துட்டு, கனவுல போயி எனக்கு ஒரு கோயிலு கட்டுங்கன்னு கெஞ்சுங்க…”

வெகுகாலம் வரை கோயிலை விட்டு அங்காளம்மன் வெளியே வருவதில்லை. நாட்கள் ஆக ஆக, மக்கள் மீதான வெறுப்பு குறையாமல், புறக்கணித்துப் போய்விட்ட காந்தாளம். கருகருவென வளர்ந்துகொண்டிருந்தது. எப்போதாவது அடர்ந்த இருள் வேளையில் வெளியே வருவாள். உதிர்ந்து கிடக்கும் இலுப்பை சருகுகளை மிதித்தபடி குதிரையில் எறுவாள். மரமட்டையற்று, வீடுகளற்று மயானமாய்க் கிடக்கும் வெளியில் வெறிகொண்ட மாதிரி வளையம் வருவாள். மேற்கே வானத்தை முட்டிக்கொண்டு நிற்கும் புகை போக்கிகளின் நுனியில் மின்னி எரியும் வெளிச்சங்களைப் பார்ப்பாள். கீழே கணக்கற்று எரியும் விளக்குகளை கோபத்தோடு பார்ப்பாள். இந்த வெளிச்சமும் கரியுந்தானே, இந்த மக்களை நம்மை மறக்கவிட்டு ஓடச்செய்தது? வெறுப்பில் சவுக்கை விளாசுவாள். கீரிகளும் பாம்புகளும் குறுக்கிடும் பாதையைக் கடந்து கோயிலை அடைவாள்.

கேட்பாருமில்லை பார்ப்பாருமில்லை. நாளாவட்டத்தில் பாழடைந்து கிடந்தது கோயில். எப்போதாவது மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள் கடந்து போகும். பூதங்கள் குடியிருக்கும் கோட்டையைப் பார்ப்பதுபோல், கோயிலைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அரிதாய், இளைப்பாறலாய் பாட்டில் சரக்கை வாங்கி வந்து இளைஞர்கள் இலுப்பைமர நிழலில் குந்தி அடித்தார்கள். செங்கல்மங்கல் இருட்டில் ஒப்பந்த வேலைக்குப் போய்விட்டு வரும் இளசுகள் சோடியாய் கோயில் மறைவில் ஒதுங்கவும் செய்தார்கள். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு குமுறியபடிதான் குந்தியிருந்தாள் அங்காளம்மை.

திடுமென ஒருநாள், கனத்த உச்சிப்பகல். கோயிலுக்கும் பின்னால் இரைச்சலும் கூச்சலுமாய் கேட்க, அதிர்ந்து போய் சாளரத்தால் பார்த்தாள். கோயிலை ஒட்டி மேற்கே கனரக வாகனங்களும் பெரிய பெரிய அதிகாரிகளுமாக கூட்டம். கூட்டத்திற்கும் பக்கத்தில் நீளமான, உயரமான சற்றே சாய்வான ஏணி போன்று இயந்திரத்திலிருந்து தண்ணீர் கொட்டுகிற மாதிரி மண் சரமாரியாய் வந்து விழுந்துகொண்டிருந்தது. கோயிலுக்கும் தென்மேற்கில் முதல் சுரங்கத்தின் கூடுதல் விரிவாக்கப் பணிகள் ஆரம்பித்து, மண்ணைக் கோயிலுக்குப் பக்கத்தில் கொண்டுவந்து கொட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது.

அங்காளம்மனுக்கு ஆத்திரமான ஆத்திரம். மக்கள் புறக்கணித்துப் போன வெறுப்பு, தனித்த வாழ்வு. சற்றும் பயமில்லாமல் கோயில் ஓரத்தில் வந்து கொட்டிக் குவிக்கிற மண். உடம்பு கொதித்தது. உக்கிரமாய் கோபத்தின் உச்சிக்குப்போய், சாளரத்தால் மண்கொட்டும் பெடர் இயக்குகிறவனை எரிக்கிற மாதிரி பார்த்தாள். அவ்வளவுதான். குண்டடிபட்டு வீழ்கிற ஒரு பறவையைப் போல், பெடர் கூண்டுக்குள் இருந்து, இயக்குகிறவன் கீழே விழுந்து அலறினான். ”கோயில் பக்கத்திலேர்ந்து எதோ மின்னல் மாதிரி வந்தது. அதுலேர்ந்து எங் கண்ணு ரெண்டும் தெரியல… அய்யோ ஏங் கண்ணு போச்ச… கண்ணு போச்ச…” கத்திப் புலம்புகிறான்.

ஆட்டம் கண்டுபோய்விட்டது அதிகாரிகளுக்கு. மீண்டும் பெடர் மீது ஏறி கண்களை இழக்க எவரும் தயாராய் இல்லை . எல்லோரும் கூண்டோடு கைலாசமாய் அங்காளம்மன் காலடியில் வந்து விழுந்தார்கள். உயரதிகாரிகளுக்கும் சேதி போனது. மிரண்டு போனவர்கள் அம்மனை சாந்தப்படுத்த ஆயத்தமானார்கள். மளமளவென்று நடந்தது பூசை. தடபுடலான ஏற்பாடு. ”இன்னையிலேர்ந்து ஓங் கோயில நாங்க பாத்துக்கிறம். எந்தக் காலத்திலியும் ஓங்கிட்ட எடைஞ்சலுக்கு வரமாட்டோம். வெட்ற மண்ண எட்டத்தக் கொட்டிக்கிறம். எங்க புள்ள பொண்டாட்டிவோ அநாதியா போவாம, எங்கள காபந்து பண்ணு.”

உச்சத்து அதிகாரிகள் எல்லாம் காலடியில் விழுந்ததில், அரசாங்கமே காலடியில் விழுந்தது போன்ற பூரிப்பு அங்காளம்மைக்கு. புதுவண்ணம் பூசிக்கொண்டது கோயில். கொட்டிக்கொண்டேயிருக்கிறது தண்ணீர். தடையற்ற மின்வெளிச்சம், நேரம் தவறாத பூசை. ஒளிரும் பால் வண்ணப்பூச்சில் மிளிர்ந்தது குதிரை. அங்காளம்மன் கோபத்தை சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு மகிழ்ந்துபோனாள்.

எந்தக் குறையும் வைக்கவில்லை. சொன்ன மாதிரியே சற்று மேற்கே தள்ளி மண்ணைக் கொட்டிக்கொண்டார்கள். அங்காளம்மை மேற்குப் பக்கம் திரும்புவது கூட இல்லை. புது இரத்தம் பாய்ந்த பொலிவில் கோயில். பக்தி மேலோங்கி நெய்வேலி வாழ் ‘டவுன்ஷிப்’ பெண்களும் ஆண்களுமாய் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார்கள். பழைய கௌரவமும் கவனிப்பும் கூடிக்கொண்டதாய், அங்காளம்மனுக்கு மன நிறைவு. சுகபோகமாய் ஓட்டிக்கொண்டிருந்தாள்.

ஆரம்பத்தில் இலேசாய் காற்றடிக்கும்போது வந்து பாவிய புழுதியை அவ்வளவாய் அவள் கண்டுகொள்ளவில்லை. போகப்போகத்தான் அதன் விபரீதத்தை உணர்ந்தாள். பூசை அலங்காரம் என எந்நேரமும் பூரிப்பு மழையில் கிடந்தவள், ஒரு நாள் உச்சிப்பகலில் கடந்து, வெளியே வந்து பார்த்தவள், திகைத்துப் போய் நின்றுவிட்டாள்.

கோயிலுக்குப் பின்னால் ஒரு பிரமாண்ட மலைத்தொடரைப்போல் உயர்ந்து கிடந்தது மண்மேடு. ”எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய…” யோசித்துக்கொண்டு இருக்கும்போதே திடீரென தென்மேற்கில் வானத்துக்கும் பூமிக்குமாய் புழுதிப்படலம்.

அதிர்வோடு நின்றுகொண்டிருக்கும்போதே, சரசரவென ஒரு சத்தம். அவள் எதிர்பார்க்கவில்லை. தூரத்தில் தெரிந்த புழுதி மேகம், பக்கென்று பக்கத்தில் வந்தது ‘மூக்கர காற்று’. இலுப்பை மர உயரத்துக்கு பம்பரமாய் சுழன்றபடி வந்தது, இவள் சுதாரிப்பதற்குள், இவளை நடுவில் வைத்து கரகரவென ஒரு சுற்றுச் சுற்றியபடி கோயில் பக்கம் நகர்ந்தது.

அங்காளம்மன் மயக்கத்தில் தடுமாறினாள். மையமாய் வைத்து சுழற்றிவிட்டுப் போன காற்று, தன்னுடைய அனைத்து சக்திகளையும் பிடுங்கிப் போய்விட்டது மாதிரியான வெறுமை. திடுமென நாசியை நெருடி, மண்டை சிதறியது போன்று ஒரு தும்மல், தொடர்ந்த அடுத்தடுத்த தும்மல்களில், ஈடுகொடுக்க முடியாமல் உடம்பு நடுங்கியது. தன்னிடமிருந்த தீரம், வீரம், கோபம் எல்லாமும் தும்மல்களில் போய்விட்டது மாதிரியான சடசடப்பு. வெலவெலத்துப் போய் கோயிலுக்கு வந்தாள். ஒரு குடிசையைப் போல் சிறுத்துத் தெரிந்தது கோயில்.

காலம் ஓடிக்கொண்டிருந்தது. காற்றடிக்கும் போதெல்லாம், புழுதி ஏறலில் தும்மல். கலகலத்துப் போய் குந்தியிருந்தாள். நாளுக்கு நாள் எகிறும் கவனிப்பில், நல்ல நாள் பெரிய நாளில் என்.எல்.சியின் சிறப்பு ஏற்பாட்டில் அவளுக்கு நாட்டமேயில்லை. அதுவுமில்லாமல் வந்து குவிகிற என்.எல்.சி.காரர்களின் மினுக்கி மனைவிமார்களில் எவளுக்குமே பக்தியில்லை. வாங்கிய புதுப்புடவைகளைக் கட்டி வந்து, குந்திப் பேசும் கதைகளில் துணுக்குற்றுப் போனாள்.

கடந்துவிட்டது. கோயிலை ஒட்டி தெற்கிலும் நிலக்கரியைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பித்தார்கள். ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்டதை உணர்ந்தாள். மேற்கில் அகலமான சாலை. எந்நேரமும் கனரக வாகனங்களின் இரைச்சல், புழுதிக்காற்று. தெற்கில் மண்மேடு. புழுதியைவிடவும் கொடுமையான கரிக்காற்று.

புழுதியும் கரியுமாய் சூழ்ந்துகொண்டதில் தும்மித் தும்மி பாறையைப் போல நெஞ்சு அழுத்திக்கொண்டிருந்தது. நாட்கள் போகப் போக நலிந்து தெம்பற்று இப்போதெல்லாம் அடிக்கடி சொல்லிக்கொள்கிறாள். ”நாம தப்பு செஞ்சிட்டம்.”

எவ்வளவு நேரம் குந்திக்கிடந்தாள் எனத் தெரியவில்லை . கிழக்கே வாணாதிராயபுரத்துப் பக்கம் தலைக்கோழி கூவியதும் கண்களைத் துடைத்தபடி பெருமூச்சு விட்டாள். குந்தியே கிடந்ததில் இடுப்பு வலித்தது. அதைவிடவும் இருபத்து ஒன்பது ஆண்டுகள் கடந்தும் காலடியில் தவழ்ந்த மக்களைப் பாராமல் இருந்து கொண்டிருக்கிறோமே என்கிற துயரமே அரியாய் அரித்துக்கொண்டிருந்தது.

தூரத்தில் மழை பெய்வதாய் ஈரவாசம். திரும்பினால், கிழக்கே மின்னியது. எழுந்து உள்ளே போகலாம் என எழுவதற்குள் திடுமென காற்று. சளார் சளார் என சருகுகள் வந்து முகத்தில் அறைந்தன. சுவரைப் பிடித்தபடி நின்றாள். கரகரவென தலை சுற்றியது. மயக்கத்தோடு நின்றவளின் மேல் கனத்த சுவரைப்போல், சாரலுடன் வந்து மோதியது கரிப்புழுதி. தும்மல் வெடித்தது.

தும்மலோடு தட்டுத்தடுமாறி கோயிலுக்குள் அடி எடுத்து வைத்த நேரம், மின்சாரம் நின்றுபோய் எங்கும் இருட்டு. நடுங்கும் கால்களுடன் துழாவியபடி அடி எடுத்து வைத்தபோது, எதிலோ கால் இடறி கவுந்தாங்கிடையாய் விழுந்தாள். நெற்றி பிளந்த மாதிரி கண்ணுக்குள் மின்னல் வெட்டியது.

தடுமாறி எழுந்து, இருட்டில் நகர்ந்து சுவரில் சாய்ந்து குந்தினாள். நெற்றியைத் தொட்டுப் பார்த்தபோது விரல்கள் நடுங்கின. முகத்திலும் விரல்களிலும் இறங்கிய ஈரத்தில் உதிரவாடை, இரத்தம். உடைந்து அழுகிறாள். ஆண்டாண்டு காலமாய் தனித்துக் கிடக்கிற அவலம், ஆத்திரம். வெடித்து கோவென்று அழுகிறாள்.

”ஏம் மக்க மனுசாளு கூட இருந்தா, எனக்கு இந்த கதி வருமா? எனக்கு இந்த கதி வருமா…”

வெளியே இடியும் மின்னலும் சாரலுமாய் வானம் கரந்துகொண்டிருந்தது.