துயர் நிரம்பிய மனித மனம் பதில்களே இல்லாத எண்ணுக்கணக்கற்ற கேள்விகளால் நிறைந்தது. அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடிச்செல்கின்ற போது இன்னும் குழப்பமான சிக்கல்களுக்கு மனதைப் பறிகொடுப்பது அநேகரது அனுபவம். பதில்தேடும் ஆழ்துளைப் பயணங்களில், மனிதன் ஏதோவொரு புள்ளியில், தான் தேடிய விடுதலையை, மகிழ்ச்சியை, சிலவேளைகளில் குழப்பத்திற்கான வேர்களைக் கண்டடைகிறான். அந்த விடுதலையை அருளக்கூடிய அந்தரங்கம் அநேக தருணங்களில் அச்சம் தரக்கூடியது. பிரகாசம் குறைந்தது. ஆனால், உண்மையானது. உருவகங்களிலிருந்து துலக்கி தூய பொருளை முன்வைக்கக்கூடியது.
இவ்வாறு, அகத்துக்கும் புறத்துக்குமான போராட்டத்தை, புதுமைக்கும் பழமைக்குமான வேறுபாட்டை, நன்மைக்கும் தீமைக்குமான முரண்பாட்டினை, இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனித அகங்காரத்தை தர்க்கப்பூர்வமாக தரிசனமளித்ததன் மூலம் மானுட குலத்துக்கே தன் எழுத்துகளினால் சிகிச்சையளித்தவர் லேவ் தல்ஸ்தோய்.
தல்ஸ்தோய் தன் எழுத்துகளில் அடைந்த உச்சமும் படைப்பூக்கத்தில் கண்டுகொண்ட ஞானமும் இலக்கியத்தில் காலத்துக்கும் வற்றாத பெருநதியைத் தந்தது.
தல்ஸ்தோயின் இந்தப் படைப்பூக்க உச்சநிலையில் அவரது தனிப்பட்ட வாழ்வியல் போராட்டங்கள் பெருமளவில் செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. முடிவுறாத சிக்கல்களுடன் அவர் அனுபவித்த அக வலிகள் பெருவீச்சுடைய படைப்புகளாக தோன்றியிருக்கின்றன. தனது எழுத்தின் மூலம் தன்னுடைய காயங்களை மேலும் வலி தரக்கூடியவையாகவும் சிகிச்சையளிப்பவையாகவும் உருமாற்றும் விதத்தில் தல்ஸ்தோய் பயணித்திருக்கிறார். தன்னைக் கண்டடைவதற்கான தேடல் மிகுந்த ஆன்மீகப் பயணங்களாக தன் எழுத்தைக் கருதி, முற்றிலும் மாறுபட்ட தல்ஸ்தோயை முன்னிறுத்தி, பல தடவைகள் அதிர்ச்சியளித்திருக்கிறார்.
இந்த அக – புற எழுச்சியையும் வீழ்ச்சியையும் உலகமே அதிர்ச்சியடையும் வகையில் தல்ஸ்தோயினால் எழுதப்பட்ட நாவல்தான் ‘The Kreutzer Sonata‘. இந்த நாவலை எழுதிய பின்னர் அவரே மறுக்குமளவுக்கு – எழுதியதற்கு பொறுப்பேற்பதலிருந்து பின்னடிக்குமளவுக்கு – அது இலக்கியத்தில் பேரதிர்வை ஏற்படுத்தியது.
தல்ஸ்தோயின் ஆரம்பகால எழுத்துகள் எவ்வாறு அன்பையும் தியாகத்தையும் வாழ்வின் மீதான கனிவையும் மெய்ஞானத்தையும் பிரகாசமான பயணங்களுக்கான வழிகளையும் திசை காட்டியதோ, அதுபோல அவரது இறுதிக் காலகட்டம், மிகுந்த குழப்பங்கள் நிறைந்த வாழ்வியல் தரிசனங்களை முன்வைத்திருக்கிறது. வெறுப்பிலிருந்து தெறித்த எண்ணங்களினால் திரண்டிருக்கிறது. அன்பின் உச்சம் வன்முறைதான் என்பது போன்ற அரைமிருகத்தனமான தத்துவங்களைப் பகிர்ந்திருக்கிறது.
அவ்வகையானதொரு துயர்திளைப்பே த க்ராய்ட்சர் சொனாட்டா புதினம்.
ஆன்னா காரனீனா என்ற வடிவமைதி கொண்ட தனது படைப்பில் எவ்வாறு காதலை மையமாகக் கொண்ட ஒரு பெண்ணின் அக உலகினை உணர்ச்சிச் சித்திரமாக தல்ஸ்தோய் நேர்த்தியாக வரைந்திருந்தாரோ – த க்ராய்ட்சர் சொனாட்டா நாவலில் ஒரு ஆணின் மனப்போராட்டத்தை – குற்றவுணர்ச்சியில் தத்தளிக்கின்ற ஆண் மன உலகத்தினை – குறுக்குவெட்டாகக் காண்பித்திருக்கிறார்.
மனைவியைக் கொலைசெய்த ஒருவன் ரயில் உரையாடலொன்றில் தனது குற்றத்துக்கான நியாயங்களை முன்வைப்பததோடு ஆரம்பிக்கின்ற இந்த நாவல், ஓர் ஆணின் தரப்பில் மறுக்கப்பட்ட நியாயங்களைக் கொந்தளிப்போடு எழுதுகிறது. தனது குற்றங்களுக்கான நியாயங்களை அடுக்கிச்செல்கிறது. பல அகால விதிகளை முன்வைத்து அவற்றைத் தர்க்கப்பூர்வமாக நியாயப்படுத்த முயற்சிக்கின்றது.
இந்த நாவலை தல்ஸ்தோய் எழுதிய காலப்பகுதியில், அதனையொட்டிய சம்பவங்கள் அக்காலத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாமே தவிர, இன்று அந்த வாழ்வின் வழியாக பலர் இடர்களின்றி மூழ்கி எழுந்து மீண்டுகொள்கிறார்கள்.
ஆனால், இன்றும் இப்படைப்பு தல்ஸ்தோயின் முக்கியப் பிரதிகளில் ஒன்றாக முன்நிறுத்தப்படுவதற்குக் காரணம், தல்ஸ்தோயின் முரண்பட்ட படைப்பு மனதின் வழியாக இந்தப் பிரதி பிரசவமானதுதான். கூடவே, அறியப்படாத தல்ஸ்தோயின் ஆண் உலகத்தின் கறுப்புக் காரணங்களை அறிவதற்கும் இந்த நாவல் உசாத்துணையாகியிருக்கிறது.
இந்த நாவல் தல்ஸ்தோயின் வாழ்வை மாத்திரமல்ல, அவரது வாசகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படைப்பு. இந்த நாவல் வெளிவந்தபோது ரஷ்யாவும் அமெரிக்காவும் இதனைத் தடைசெய்தன.
கொலையை நியாயப்படுத்தும் பிரதி என்பதற்கு அப்பால், பிரம்மச்சரியத்துக்கான பேராதரவுக் குரலை பெருங்குரலெடுத்துக் கூவும் இந்தப் படைப்பு, நவீன குடும்ப முறைமைகளுக்கும் நாகரீகமடைந்து வரும் சமூகச் சட்டகங்களுக்கும் எதிரானது என்று வாதிடப்பட்டது.
வயதில் இளைய பெண்ணைத் திருமணம் செய்துகொள்கின்ற Pozdnyshev என்ற கதாபாத்திரத்திற்கு காமமே மூச்சு. காமமே வாழ்வு. காமமே தவம். காமமே வாழ்வின் வரம். பெண் என்ற உயிரினம் ஒன்றுதான் ஆணின் காமத்துக்கான ஒற்றைத் தீர்வாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கும்போது, அதனை அவள்தான் எத்துயர் நேரினும் தரவேண்டும் என்பது தல்ஸ்தோயின் பாத்திரம் முன்வைக்கின்ற வாதம்.
இது கிட்டத்தட்ட ஆன்னா காரனீனாவில் ஆன்னாவின் காதலோடு அருகாக வைத்து ஒப்பீடு செய்யக்கூடியது. அங்கு ஆன்னா தனது காதலை இவ்வாறு ஓர்மத்தோடு முன்னிறுத்துகிறாள். திருமணம் என்ற உறவுக்குத்தான் காதல் சொந்தமானதா என்பதை சோதனை செய்வதற்காக ஆன்னாவின் மனம்கொள்ளும் துணிச்சல் வெரான்ஸ்கியுடனான பயணத்துக்குள் நுழைகிறது. அந்தக் காதலுக்காக வாழ்வில் எவ்வளவு விலை கொடுப்பதற்கும் ஆன்னா தயாராகிறாள்.
ஆனால், கணவன் காரனீனானால் ஈற்றில் அவள் தீராத குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறாள். திருமணத்திலிருந்து வெளியேறி, காரனீனாவின் பெயருக்குத் தீராத களங்கத்தினை ஏற்படுத்தி, ஓடிச்சென்றவனுடன் குழந்தையைப் பெற்றுக்கொண்டு, அந்த நகரத்தில் யாருமே அருகில் அமர்வதற்குக்கூட விரும்பாத நடத்தை கெட்டவளாக முத்திரை குத்தப்படுகின்றபோதும், அவளைக் காரனீனா மன்னிப்பதுதான், ஆன்னாவினால் ஏற்றுக்கொள்ளவே இயலாத பெருஞ்சுழலில் தள்ளிவிடுகிறது. அதனை ஜீரணிப்பதற்கு, காரனீனாவினால் தான் அடைகின்ற குற்றவுணர்ச்சியிலும் பார்க்க பல மடங்கு காதலை வெரான்ஸ்கியிடம் எதிர்பார்க்கிறாள். அதனைத் தரக்கூடிய தகுதியுடன்தான் இருக்கிறானா என்று அடிக்கடி சோதித்துப் பார்க்கிறாள். அதில் அவளுக்கான திருப்தி கிட்டவில்லை. ஒருபக்கம், காதலினால் ஏமாற்றப்படுவதாக முடிவெடுக்கின்ற அதேவேளை, மறுபக்கம் தனது கணவனின் மன்னிப்பு என்ற பெருங்கொடுமையினால் ஆழமாக இரணப்படுகிறாள். இறுதியில், தான் அனுபவிக்கும் குற்றவுணர்வினை மேவுகின்ற ஒரு காதலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ரயில் சில்லுகளுக்குள் தன்னை எறிந்து மாய்த்துக்கொள்கிறாள்.
இதில் தல்ஸ்தோய் ஆழச்சென்று நுட்பமாக விவரித்திருக்கும் பெண் மனதுக்கும் த க்ராய்ட்சர் சொனாட்டா நாவலில் உள்ள ஆணின் உலகத்துக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம்.
பெண் எப்போதும் தனது காதலை ஆணின் காதலைவிட ஒப்பற்றதாக எண்ணுபவள். தனது காதலை ஆணால் எப்போதுமே சமன்செய்ய முடியாது என்ற உறுதியான முடிவு எல்லாப் பெண்களுக்குள்ளேயும் உள்ளது. விகிதாச்சாரங்கள் வேறுபடலாமே தவிர, ஆனால் விதியில் ஒருபோதும் மாறுதல் நிகழ்வதில்லை. தங்கள் காதலை ஓர் ஆண் மேவிச்செல்வதற்கு செய்யும் எத்தனிப்புகளை பெண்கள் இரசிப்பார்களே தவிர, அனுபவிப்பதில்லை. அவர்கள் எப்போதும் ஆத்மார்த்தமாக அனுபவிப்பதும் கொண்டாடுவதும் தங்களது காதலைத்தான். அதற்கான ஒத்துழைப்பினைத்தான் ஆண்களிடம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த ஒத்துழைப்பினை அவர்கள் கொண்டாடுகிறார்கள். இது ஒருவகையில், இயல்பான பெண்மனம்.
ஆனால், பெண்களின் காதலை விஞ்சிவிடுவதில்லை என்ற இழப்பு, ஆண்களுக்கு ஒருபோதும் குற்றவுணர்வினை ஏற்படுத்துவதில்லை. வாழ்வில் தீராத அகப்போராட்டத்துக்குள் தள்ளிவிடுவதில்லை. மனங்களில் உபவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆண்களுக்கு இந்தப் போராட்டம் எங்கு இடம்பெறுகிறது என்று நுணுக்கமாக நோக்கினால், அது காமத்தில்தான் வெடிக்கிறது.
இவ்வாக்கத்தில் காதலுக்கும் காமத்துக்கும் வழங்கப்படுகின்ற விளக்கங்களில் தனது கதாபாத்திரங்களின் வழியாக இந்த மைய வலியை தல்ஸ்தோய் மிக நுட்பமாக முன்வைக்கிறார்.
தன்னைத் திருணம் செய்துகொள்கின்றவளிள் இளவயதுக் கனவுகள் குறித்து கதாநாயகனுக்கு எந்தக் கரிசனையும் இல்லை. அவளின் எதிர்பார்ப்பில் எந்தக் களிப்பும் இல்லை. தனது காமத்தினை அவளில் ஏவி தீர்த்துக்கொள்வதில்தான் சதா செயல்கொள்கிறான். ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்ற நாயகியின் உடல், இனி குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆரோக்கியத்துடன் இல்லை என்று மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்ட பின்னர், அவள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பிக்கிறாள்.
கவலைகளுக்கு, மன அழுத்தங்களுக்கு, கண்ணீருக்கு என எல்லாவற்றுக்குமான காரணங்களையும் தன்னிடமிருந்து தொடர்ந்து மறைத்துவந்த தனது மனைவி தற்போது, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பிப்பது, ஏதோவொரு வகையில் தனது காமத்திற்குப் போடுகின்ற தடையென்று Pozdnyshev எண்ணுகிறான். அவளது ஊமை யுத்தத்தினால் கடும் சீற்றத்துக்குள்ளாகிறான். பெண்ணுக்கான வரையறைகளாக தான் எதிர்பார்க்கும் எல்லைகளுக்கு வெளியே, தன்னை ஏமாற்றிக்கொண்டு, அவள் சென்றுவருவதாக Pozdnyshev நம்புகிறான். அவளது இருப்பு, ஆண் என்ற தனது ஆற்றலுக்கே சவால்விடுவதாக கொதிக்கிறான்.
அதற்கான காரணங்களை அவளுக்குள் தேடுகின்றபோது, தனது நண்பனொருவனுடன் அவள் வயலின் பழகுவதும் தத்துவம், இசையென்று எந்நேரமும் பேசுவதும் அவளை வெறுப்பதற்கான வாய்ப்புகளாக அவனுக்குக் கிடைக்கிறது. தனது மனைவியின் மீதான கோபம் கொலைவெறியாக மாறுகிறது. அவளை முற்றாக வெறுக்கிறான். அவளை வெறுமனே நிராகரித்து, இவ்வுலகில் வாழ அனுமதிப்பதிலும் பார்க்க, கொலைசெய்வதே உரிய தீர்வென்று எண்ணுகிறான். இறுதியில், அவளைக் கூர்வாளினால் குத்திக் கொலைசெய்கிறான்.
அந்தக் கொலையைக்கூட Pozdnyshev மிக நிதானமாக நிகழ்த்துகிறான். சம்பிரதாயமாக கூறப்படும் காரணங்களுக்குள் தனது நாயகனை தல்ஸ்தோய் மறைக்கவில்லை. சுயநினைவு தடுமாறிய நிலையிலும் உணர்வு மேலீட்டினாலும் அவன் அந்தக் கொலையைச் செய்துவிட்டதாக சமாளிக்கவில்லை. தனது மனைவி இந்த உலகத்தில் வாழ்வதற்கு எந்தத் தகுதியமற்றவளாக தன்னால் தீர்மானிக்கப்படுகின்றபோது, அவளை இவ்வுலகிலிருந்து அகற்றுவதற்கு தனக்குப் பூரண சுதந்திரமும் நியாயமும் உண்டென்பதை பரிபூரணமாக உணர்ந்துகொண்டுதான் அந்தக் கொலையைச் செய்கிறான்.
“When people say that they do not remember what they do in a fit of fury, they talk nonsense. It is false. I remember everything. I did not lose my consciousness for a single moment. The more I lashed myself to fury, the clearer my mind became, and I could not help seeing what I did. I cannot say that I knew in advance what I would do, but at the moment when I acted, and it seems to me even a little before, I knew what I was doing, as if to make it possible to repent, and to be able to say later that I could have stopped.”
கொலைக்குப் பிறகு தல்ஸ்தோய் கூறும் நியாயங்கள், காரணங்கள் போன்றவை இரண்டாம் கேள்விக்கு இடமின்றி நிராகரிக்கப்பட வேண்டியவை என்றாலும், அவரது கேள்விகள் சமூகத்தின் பாரம்பரியமான குறை விளக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள், தீராத் தவறுகள் ஆகியவற்றின் கழுத்தை நெருக்குபவையாக அமைகின்றன.
அன்பு, காதல் என்பவற்றிற்கு சமூகம் எழுதி வைத்திருக்கும் விதிகளையும் அவற்றின் உண்மையான அர்த்தமாக பாவனை செய்துகொள்ளும் படிமுறைகளையும் தல்ஸ்தோய் அடியோடு நிராகரிக்கிறார். காதலைப் புரிந்துகொள்வதற்கு முன்னரே – அதன் அர்த்தத்தினை அனுபவிப்பதற்கு முன்னரே – கவித்துவமாக அதனை எழுத்துகளில் முன்னிறுத்தியும் கற்பனைகளின் வழியாக அதனை நம்ப வைப்பதிலும் சமூகம் வெற்றிகண்டுவிட்டது. ஆகவே, காதலின் நிகருணர்வை அனுபவிப்பவனையும் அதன் விழுமியங்களைக் கொண்டாடுபவனையும் சமூகம் வெளியே நிறுத்திவிடுகிறது என்கிறார்.
திருமணத்திற்கான முக்கிய முதலீடு காதல்தான் என்று சமூகம் கட்டிவைத்திருக்கும் அபத்தத்தினை ஊதியெறிகிறார் தல்ஸ்தோய். ஆணும் பெண்ணும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டால், அவர்கள் காதலுடன்தான் வாழ்கிறார்கள் என்றொரு பெருங்கேவலமான சமன்பாட்டினை இந்தச் சமூகம் தொடர்ந்து சமைத்துச் சமைத்து தலைமுறை தலைமுறையாக கடத்திவருவதை வெறுப்புடன் நிராகரிக்கிறார்.
அன்பையும் வெறுப்பையும் தத்துவரீதியாக சரிவரப் புரிந்துகொள்ள முடியாத சமூகம், குழப்பங்களுக்குள் புதைந்துகிடந்து வதைபடுகிறது என்கிறார். அதை எழுதும்போது இப்படிச் சொல்கிறார் –
“…period of intense love was followed by a long period of anger; a period of mild love induced a mild irritation. We did not understand that this love and this hatred were two opposite faces of the same animal feeling. To live thus would be terrible, if one understood the philosophy of it. But we did not perceive this, we did not analyze it. It is at once the torture and the relief of man that, when he lives irregularly, he can cherish illusions as to the miseries of his situation. So did we.”
இதன் வழியாக பெண்களின் அன்பு மீதும் காதல் மீதும் நாவல் முழுவதிலும் மூர்க்கமான விமர்சனங்களை முன்வைக்கிறார். பெண்கள் தங்களது தெரிவுகளை அதிகமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காக, பல எண்ணிக்கையிலான ஆண்களைக் கவர முயற்சிக்கிறார்கள். எல்லாப் பெண்களினதும் ஒற்றை நோக்கம் அதுவே என்கிறார். அந்தத் தெரிவுதான் தங்களது கணவரை ஆள்வதற்கான ஆற்றலை வாழ்நாள் முழுவதும் வழங்குகிறதென
பெண்கள் நம்புவதாக தல்ஸ்தோய் குறிப்பிடுகிறார்.
“Since to them the attraction of the greatest number of men is the ideal of life (young girls and married women), and it is for this reason that they have no feeling stronger than that of the animal need of every female who tries to attract the largest number of males in order to increase the opportunities for choice. So it is in the life of young girls, and so it continues during marriage. In the life of young girls it is necessary in order to selection, and in marriage it is necessary in order to rule the husband.”
தனது அன்புக்கு நிறைவானவளாக இல்லை என்ற வெறுப்பின் உச்சத்தினால் மனைவியைப் படுகொலை செய்த ஆணின் நியாயங்கள் எவ்வளவு பெறுமதியானவை என்ற கேள்வி இங்கு எழுந்தாலும், பெண்கள் மீதான தல்ஸ்தோயின் வெறுப்பு அவரது எல்லாப் பிரதிகளிலும் அரூபமானது.
இந்த இடத்தில், ஆன்னா காரனீனாவையும் த க்ராய்ட்சர் சொனாட்டா நாவலையும் சமாந்தரமாக வைத்துப் பார்க்கும்போது, தல்ஸ்தோயின் ஆழ்மனதில் பெண்களின் மீதான தீராத வெறுப்பு கொதிநதியாக ஓடிக்கொண்டிருந்திருப்பதை அவதானிக்கலாம். அவரது கடைசி நாவலான ஹாஜி முராதிலும்கூட ஓர் ஆண்மகனின் கட்டுப்பாட்டில் இல்லாத பெண் அசட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுவாள் என்றும் அவள் ஆபத்தானவள் என்றும் குறிப்பிடுகிறார்.
அதற்குக் காரணங்கள் அவரிடம் இல்லாமலும் இல்லை. அவரது தனிப்பட்ட வாழ்வில், மனைவி சோபியாவை தல்ஸ்தோய் படிப்படியாக முழுமனதோடு வெறுத்தார். கடைசிக் காலம் வரைக்கும் அவருக்குக் காமம் பெருந்தேவையாக இருந்துகொண்டேயிருந்தது. இருந்தாலும், சோபியாவின் படோபாகார குடும்பப் பின்னணியையும் அதன்வழியான அவரது அரசியல் – இலக்கிய அணுகுமுறைகளையும் – தல்ஸ்தோய் பரிபூரணமாக வெறுத்தார். அவர் இறக்கும் தறுவாயில்கூட, சோபியாவைப் பார்க்க விரும்பவில்லை.
தல்ஸ்தோய் தொடர்பான வரலாற்றுப் பார்வைகள் பலவிதமானவை. நாடுகள் சார்ந்தும் படைப்பாளிகள் சார்ந்தும் திரிபுகள் சார்ந்தும் பல்வேறு அரசியல் சார்புகள் நிறைந்தவை. சோபியாவை தல்ஸ்தோயின் கேடுகெட்ட மனைவியாகச் சித்தரித்து அந்தப் புனைவை காலத்தின் கைகளில் ஒப்படைத்தவர் செகாவ்தான் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை உள்ளது. அதேவேளை, ஆன்னா காரனீனாவிலும் போரும் வாழ்விலும் சோபியாவை நாயகியாக உருவகித்து உருகிய தல்ஸ்தோய், கடைசிக் காலத்தில் எழுதிய நாவலுக்கும் சோபியாவையே நாயகியாக உருவகித்தார். மொத்தத்தில், சோபியாதான் அவருக்கு எப்போதும் படைப்புலக நாயகியாகவே தேவைப்பட்டார் என்ற எதிர்க்குரல்களும் உண்டு.
ஆனால், தல்ஸ்தோயினுள் நிகழ்ந்துகொண்டிருந்த இந்தக் கடுமையான அலைக்கழிப்பும் கேள்விகளும் கோபமும் போராட்டமும்தான், புற உலகில், பெருவீச்சான பாத்திரங்களையும் அவற்றின் உணர்வுகளையும் நுட்பமாக உருவாக்கியது.
நாவல் வெளிவந்தபோது, தல்ஸ்தோயின் மனைவி மீதுதான் எல்லோரும் கரிசனையடைந்தார்கள். தல்ஸ்தோய் தனது சொந்தக் கதையைத்தான் எழுதியிருக்கிறார் என்று திகைத்துப்போய் சோபியாவுக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால், இந்த ஆறுதல்களினால் சோபியா பதறினார். தனது தரப்பினைச் சொல்லமுடியாத நிலையில், தல்ஸ்தோயினால் இலக்கிய உலகம் நம்பவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உடைந்தார்.
நாவல் தன்னைப் பற்றியது அல்ல என்பதை உறுதிசெய்வதற்கு, அதன் மீதான தடையை நீக்குவதே ஓரளவுக்காவது உகந்த வழியாக இருக்க முடியும் என்று ரஷ்ய மன்னரிடம் கோரிக்கை வைத்தார். நாவல் மீதான தடையை நீக்கக் கேட்டார். தடை நீங்கியது.
அதன்பின்னர், சோபியா நாவலுக்கு எதிர்நாவல் எழுதினார். தல்ஸ்தோய் நாவலில் குறிப்பிட்டதைப் போலவே, வயதுகூடிய ஆணைத் திருணம் செய்துகொள்ளும் இளம்பெண் ஒருத்தி, தன்வாழ்வில் எதையெல்லாம் தியாகம் செய்கிறாள், எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறாள் என்பதையும் எழுதினார். ‘Whose Fault?’ என்ற இந்த நாவல் 2010ஆம் ஆண்டுதான் ஆங்கிலத்தில் வெளியானது.
இது தல்ஸ்தோயின் தனிப்பட்ட உளக்கொந்தளிப்புகளை வெளிக்கொண்டுவந்த ஒரு பிரதி என்பதற்கு அப்பால், நாவல் ஆழமாக உரையாடுகின்ற இன்னொரு விடயம் பிறிதொரு தரப்பிலிருந்து ஒரு நிகழ்வுக்கான நியாயத்தைச் செவிமடுக்கக் கோருவது. இது தத்துவார்த்த ரீதியிலும் உளவியல் ரீதியாகவும் நாவலுக்குள் கேட்டபடியிருக்கும் காத்திரமான குரல். வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சமன்பாட்டினை நாவல் முழுவதிலும் கடுமையாக தல்ஸ்தோய் எதிரொலிக்கிறார். இதனை அழுத்திச் சொல்வதற்காக, கொலையாளியின் குற்றத்தில்கூட ஒரு நியாயம் இருக்கும், அதனைச் செவிமடுக்க வேண்டும் என்ற இடத்திற்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறார்.
The Kreutzer Sonata நாவல் மூலம் ‘இலக்கியத்திற்கு அறம் ஒரு அளவுகோல் அல்ல’ என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தல்ஸ்தோய் அழுத்திச் சொல்லியிருப்பது, நவீன இலக்கியத்தில் அவருக்கான இருப்பு அன்றைக்கே உறுதிசெய்யப்பட்டுவிட்ட உண்மையைத் துலக்கியிருக்கிறது.
1 comment
[…] கொலையின் நறுமணம்: The Kreutzer Sonata – ப.தெய்வீகன் […]
Comments are closed.