ஆகஸ்ட் 8ம் தேதி, 2008ம் ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வசந்தகுமார் அண்ணாச்சி சொன்னதால், “கன்னி” நாவலை வாங்கிச்சென்று அன்றிரவே படிக்க ஆரம்பித்தேன். ஏலான் ஆசாரியின் மரணத்தைச் சத்ராதிகள் செய்தனவா அல்லது அறிவியல் தர்க்கமுறைப்படி இதய அடைப்பால் ஏற்பட்டதா எனத் தீர்மானமாக முடிவெடுக்க முடியாதவாறு இரு பக்கங்களையும் திறந்து வைத்திருந்த எழுத்து உத்தி என்னை உள்ளீர்த்தது. அதன்பின் சித்தப்பிரமை அடைந்துள்ள பாண்டி, கடலை ஒரு பெரும் படிமமாகவும் தேவமைந்தனை ஒரு ஆட்டிடைக் கிழவனாகவும் பார்த்த விவரிப்பு, மனக்கிலேசமடைந்தவனின் எழுத்தாக இதுவரை படித்ததாக இல்லாமல் புதிதாக இருந்தது.
அதிலும் சந்தனப்பாண்டி போன்றே ஊரைவிட்டுப் போய் மைனராகத் திரும்பிவந்த சூசை மணி, திருமணத்தன்று நொண்டி இசக்கியால் சித்தச் சேதப்பட்டதை எண்ணி மறுகும் பாண்டியின் பாட்டி பாக்கியத்தின் துக்கத்தையும் காதலையும் பூடகமாய்ச் சொல்லிச்சென்ற அனாயசம் நாவலை ஒரே மூச்சில் படிக்க வைத்தது. இரவெல்லாம் படித்து விடியற்கங்குலில் முடித்து மிகப்பெரிய மனவெறுமைக்கு ஆளானவன், காலை பதினொரு மணிக்கு மறுபடியும் போய் வசந்தகுமார் அண்ணாச்சியிடம் இதை எழுதியவரைப் பார்க்க வேண்டுமே என்றேன். “இத்தனை நாள் இருந்துட்டு கண்காட்சி முடியப் போறதால காலையிலதான பொறப்பட்டு சென்னைக்குப் போறான்” என்றார். எனது துரதிர்ஷ்டத்தை நொந்துகொண்டு நாவலைப் பற்றி விலாவரியாகக் கொந்தளித்ததை க.சீ.சிவக்குமார் எங்கள் அருகிலிருந்து சிரக்கம்பம் செய்து கேட்டுக்கொண்டிருந்தார்.
அதன்பின் கிருபாவின் கவிதைத் தொகுப்புகளைத் தேடிப் படித்தபோது அவரது உள்ளார்ந்த வாதையும் லௌகீகத்தின் மேல் இருந்த துறப்பு மனப்பான்மையும் புரிந்தது. யாதனின் யாதனின் நீங்கியானாகத் தன் வாழ்வைக் கொண்டுசென்ற போக்கும், எல்லாக் காலகட்டத்திலும் அவரது தேவைகளைப் பூர்த்திசெய்த நண்பர்களைப் பற்றியும் கேட்டறிந்துகொண்டேன்.
கிருபாவின் இறப்பை முன்வைத்து, படைப்பாளியைக் கைவிட்ட சமூகத்தையும் குடி போன்ற லாகிரி வஸ்துகளைத் தவிர்த்து கவிஞன் எப்படி வாழ வேண்டும் எனவும் பாடமெடுக்கிறார்கள். புணர்ச்சியின் உச்சமாகச் சில நொடித் துளிகளைத்தான் இயற்கை சாதாரண லௌகீக மனிதனுக்கு அருளியுள்ளது. ஆனால் அதீதமான படைப்பாளி இதே மாதிரியான படைப்பு உச்சத்தில் அநாதி காலம் நீடிப்பதற்குச் சன்னதப்படுகிறான். அதற்கான அல்லல் அவனது தனித்த நரகம். அப்படிப்பட்டவனைச் சாதாரண லௌகீகக் கூட்டில் அடைக்க முற்பட்டால் அதை எங்ஙனம் அவன் சகித்துக்கொள்வான்? இங்கு வந்துவிட்டதால் அவனது உலகமும் நம்முடையதும் ஒன்றல்ல. அவன் உலவும் பிரபஞ்சமே வேறு. இத்தனைக் காலம் நம்மோடு அவனிருந்ததைத்தான் கொண்டாடிக்கொள்ள வேண்டும்.
கன்னி புதினத்தின் படைப்பாக்கம் அதுவொரு கவி எழுதிய நாவல் என்பதைத் துலாம்பரமாக வெளிக்காட்டுகிறது. மயிற்பீலியாக இருந்தாலும் அதன் சுமை அதிகரிக்கும்போது அச்சு உடைவதைப் போல எட்ட முடியாத கள்ளங்கபடற்ற கம்பீர ஆளுமையைக் காதலால் அடைய முடியாத துயரம் கடலளவு பாண்டிக்கு…
“உயிர் பிரியும் கணத்தில்
தம் காயங்களைக் கடைசியாய்ப்
பார்வையிட்ட மெசியாவின் கண்களைப்
பல நூற்றாண்டுகள் கழித்து இன்று சந்தித்தேன்.
கடற்கரையில் மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு மத்தியில்
மண்டியிட்டுத் தன் வயிற்றில் இறங்கி
முழு வட்டமடித்த கத்தியைத்
தலைதூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை.”
தேவகுமாரனின் வாதையை உணர்ந்த ஆமையின் கடைசிக் கணங்களையும் உயிர்வலியையும் வாசகருக்குக் கடத்தும் சந்தனப்பாண்டியின் கூற்றாகக் கிருபா நம்மை வதைக்கிறார்.
ஊட்டி நித்யா குருகுலக் கவிதையரங்கில் கவிதை திறக்கும் மந்திரக்கணத்தைப் பற்றி ஜெயமோகன் சொல்லும்போது, கவிதை வரிகளை ஒருமுறைக்கு இருமுறை மனம் தோய்ந்து படித்த பின்னர் அதன் உள்ளுறையைக் கிரகிக்க முயலவேண்டும் என்றார். இந்தக் கவிதையில் சிலுவையில் அறையப்பட்டவரின் மரணவலியோடு ஆமையின் வாதையை ஒப்பிட்டபோது சிலீர் என என்னுள்ளே எதுவோ உடைந்து பெருகியது. மாலைநடையில் நாஞ்சிலோடு உடன் வந்த கவி.சுகுமாரன், கவிதையை உணர்ந்தால் போதும், விவரிக்கத் தேவையில்லை என்றார்.
நாவலின் கட்டுமானம் பின்நவீனத்துவப் பாணியில் முன்னும் பின்னுமாகச் சம்பவங்களைச் சொல்லிச்செல்வதும் சித்தசுவாதீனமற்ற நிலையை விவரிக்கும் பாகமும் இதுவரை தமிழ் இலக்கியச் சூழலில் சொல்லாதபடிக்கு புதிய கட்டற்ற படிமங்களைக்கொண்டு காட்சிப்படுத்தும் வகையாக இருப்பது வாசகர்களைச் சற்றே சிரமப்படுத்தும். ஆனால் எந்தத் துறையிலும் முன்னத்தி ஏர்கள் வித்தியாசமாகத்தான் உணரப்பட்டுள்ளன. அந்தச் சவாலை மீறி உள்நுழையும் வாசகர்கள், மாசுமறுவற்ற பரிசுத்தத்தின் பிழம்பாக உள்ளவளுக்கும் சந்தனப்பாண்டிக்கும் இடையே மிளிரும் பாசம், நேசமாகப் பரிமளிக்கும் சுகந்தத்தை சுவாசிப்பார்கள்.
இந்தப் பாகங்களில் கிருபாவின் தமிழ் அருவியாகக் கொட்டிக்கொண்டிருப்பதால், அவர் கெக்கொலி கொட்டி, மற்றவர்கள் ஏன் கட்டாந்தரையில் ஊற்று தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என வினவுகிறார். குழந்தைமையிலிருந்து புத்திளம் பருவம் வரும் பாண்டிக்கும் அமலாவிற்கும் அதை முகம்கொண்டு நேர்நோக்கும் பார்வைக்கோணத்தில் பாரதூரமான வித்தியாசங்கள். ஓர் ஆண் யௌவனப் பெண்ணின் சிநேகிதத்தை அணுகுவதற்கும் ஒரு பெண் அதை அணுகுவதற்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கிருபா வார்த்தைகளால் இன்றி வாசகரையே யூகிக்க வைக்கிறார். பாண்டி அமலாவிற்கு சைக்கிள் கற்றுக்கொடுப்பதிலும் ஆலமர விழுதில் ஊஞ்சலாட வைப்பதிலும் தளிர்ப்பது, பாண்டியை நாகர்கோவில் கன்னிகாமடத்திற்குப் போகவைக்கவும் அதன்பின் வருடாவருடம் கன்னியாகுமரிக்குப் போய் அலைவளையல்களாகப் படையலிடவும் வைக்கிறது. மேலும் கிருஷ்ணன் கோவில் பார்வையிடலும் திருச்செந்தூருக்குப் பைக்கில் பயணப்படுவதும் நேசத்தின் பொற்கணங்கள். ஆனால் தனது வழியைத் தேர்ந்த அமலா, பாண்டி தொழ விரும்பும் தூய்மையோடும் நிமிர்ந்து பார்க்கும் உயரத்திலும் தடுமாறாமல் இருக்கிறாள். மிட்டாயைக் கண்ணால் மட்டும் பார்த்த குழந்தை, அதைச் சுவைக்க முடியாத கொடுமை.
தீவிரத்தன்மையோடும் பூஜிப்பு மனத்தோடும் காத்திரமான ஒற்றைப்படையான வீச்சோடும் நேசித்த பாண்டியின் நிலை சித்த முறிவு. இந்த அளவு தீர்க்கம் எப்போதும் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். அதில் தட்டுத்தடுமாறி மீண்டெழுந்தவனுக்குச் சாராவும் கிடைக்காத நிலை சூன்யத்தை ஏற்படுத்துகிறது. முழுவதுமாகப் படித்தபின் ஏற்படும் நிராசை நெஞ்சைக் கடுக்க வைத்து உயிர்வலியைக் கூட்டுகிறது.
“வானத்தின் கன்னத்தில்
முத்தங்கள் கலைகின்றன
கனவுகள் இருள்கின்றன
நிழலன்றி
உடைமை
ஏதுமற்று
நான்
நட்சத்திரங்களால் நிரம்பியிருப்பது
யாருடைய
பிச்சைப் பாத்திரமாய்?”
கன்னி நாவலில் அமலா, அமலம், அமலோற்பவம் எனும் பரிசுத்தத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் தகிப்பால் அருகே நெருங்க முடியாத தவிப்பையும் மறுகி மறுகிச் சொல்கிறான் பாண்டி. “பியூரிடிக்கு ஒரு பவர் இருக்கு, எல்லா விதத்திலயும். வணங்கித்தான் ஆகணும். வேற வழியேயில்ல- குறிப்பா ஆண்களுக்கு” என மக்தலேனாகவும், அமுதசுரபியேந்திய மணிமேகலையாகவும், சந்தன நிறத்தில் வாளிப்பான உயரத்தில் பொங்கும் புதுப்பொலிவோடு அமலா அக்காவாகவும் அவள் இருக்கும்தோறும் அவனுக்குத் தோல்விதான்.
தமிழ்ப் படைப்புலகில் ஆகச்சிறந்த பெண்களென 1. அமலா 2. நீலி 3.யமுனா ஆகியோரை வரிசைப்படுத்துவேன். உடல்சார்ந்த காதல் Earthly love-ஆக இருக்கும் பட்சத்தில், Platonic love-ஆக உடல் இச்சைகளுக்கு ஆட்படாமல் மனமொப்பிய ஈர்ப்பாக இருப்பதால் அமலாவின் மேல் பாண்டி கொண்ட காதலையே முதன்மையென்பேன். இதே முறைமையே காடு நாவலில் வரும் கிரி, நீலி மேல் வைத்த காதல். மூன்றாவதாக, “இதுக்குத்தானே?” எனக் கேள்வி கேட்ட ‘மோகமுள்’ யமுனா.
கன்னி நாவலில் தூயதின் பிரதிபலிப்பும் காமத்தின் ஊற்றுக்கண்களுமாகப் பிரேமா ராணியக்கா, பூச்சிக்காட்டாள், ஜூலி, மெல்கி என வேறொரு வரிசை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், நடுவாந்திரமாக, கேத்தரீன், விஜிலா, மணப்பாட்டுக்கார மரிய புஷ்பம் எனப் பரிசுத்தத்தின் ஜாஜ்ஜுவல்லியத்துக்கு எதிர்ப்புற வர்ணங்களாகவும் மட்டுப்பட்ட ஜொலிப்பாகவும் ஒரு வரிசை வைக்கப்பட்டுள்ளது.
பாண்டியும் அமலாவும் குழந்தைகளாயிருந்து வளருந்தோறும் அவர்களது எண்ணவோட்டங்களும் வாழ்வின் மீதான பார்வைகளும் மாறுவதையும், மாற முடியாமல் மீறுவதைக் கடிவாளம் போட்டு அடக்குவதையும் இவர்களிருவரின் கன்னியாகுமரி பயணங்களிலிருந்தும் முத்தாய்ப்பாக மணப்பாட்டு புனித சேவியரின் குகையில் நிகழும் சம்பவத்திலும் பிரான்சிஸ் கிருபா படிப்படியாக விவரிக்கிறார்.
பாண்டி ஆதிமனித வேட்கையோடு ஆகர்ஷிக்க முயலும்போது அமலா கத்தி மேல் நடப்பதுபோல் அவ்வீர்ப்பை விலக்குவதால்தான் அவள் Immaculate. பாண்டியோடு கிருஷ்ணாபுரம் கோவிலில் கழிக்கும் Quality time-ஐக் கேள்வி கேட்கும் கேத்ரீனுக்கு மொபைல் எஸ்.எம்.எஸ்ஸில் ‘On cloud nine’ எனப் பதிலளிக்கும் அமலா மானுஷ்யமானவள். பியூரிட்டிக்கு ஒரு பவர் இருக்கு எனச் சொல்பவள் அமானுஷ்ய சம்மனசானவள். இவ்வளவு அபூர்வப் பொக்கிஷத்தைக் கண்ணால் மட்டும் தரிசித்து, பின் அதைத் தொலைத்த பாண்டி, சித்தப்பிரமை அடையாவிட்டால்தான் ஆச்சரியம். மௌல்வி மூலமோ தேவ கிருபையாலோ அல்லது பம்பாயின் தூரத்தாலோ குணப்பட்டவனுக்கு, அவனது பேரழகு அத்தையின் சாயலில் இருக்கும் சாராவை அறிமுகப்படுத்திய விதி, அவளையும் கன்னியாஸ்த்ரீகளின் பயிற்சி எனப் பாண்டிக்கு என்றுமே எட்டாத தூரத்தில் வைத்த குரூர விளையாட்டை என்னவென்று சொல்ல…
கன்னி நாவல், நாவலாக உருக்கொள்ளவில்லை எனச் சிலர் விமர்சித்ததைக் கேட்டிருக்கிறேன். காதல்கொண்ட மனத்தால்தான் காதலின் வகைமாதிரிகளையும் புதிர்களையும் புரிந்துகொள்ள முடியும். உள்ளொடுங்கிய Introvert-களின் காதல் அதிரடி முடிவுகள் ஏதும் எடுத்துவிட முடியாதபடி இப்படித்தான் அமைந்திருக்கும். வாழ்வில் காதலின் வானவில் படறாத புண்ணியவான்கள் தங்களின் தர்க்கத்தாலும், ஒரு படைப்புக்குத் தங்களை ஒப்புக்கொடுக்காததாலும் அதன் உள்ளொடுங்கிய ஜீவனைத் தரிசிக்க முடியாமல் போவது இதனால்தான். கள்ளன் போலீஸ் விளையாட்டிலும், சதுரங்க விளையாட்டிலும் தோற்றுக்கொண்டே இருப்பதற்கான காரணம் இதுதான்.
இவ்வளவு பெரிய பரிசுத்ததிலிருந்து, பெரும் பொருள் கூடிய சொற்களிலிருந்து, அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்புவதைக் கண்டு விம்மியழத்தான் தோன்றுகிறது.
1 comment
சிறப்பான பதிவு
Comments are closed.