கிருபாவின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய முழுத்தொகுப்புக்கு “நிழலன்றி ஏதுமற்றவன்” என்ற தலைப்பையே சூட்ட முயன்றபோது அவர் “சாந்தாகுருஸ்” என்றே அதற்குத் தலைப்பிடச் சொன்னார். அது தமிழ் வாசகர்களுக்குப் புரியாது என்றபோதும் பிடிவாதமாக அதிலேயே உறுதியாக நின்றார். “வாசகர்கள் அதன் அர்த்தத்தைத் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டார். அவர் ஏன் அச்சொல்லைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான மூலகாரணம் “கன்னி” நாவலில் இருக்கிறது.
ஜனவரி, 2022-இல் “சாந்தாகுருஸ்” நூல் விலையில்லாத அன்பளிப்புப் பதிப்பாகத் தமிழினியால் வெளியிடப்படும்.
கன்னி நாவலிலுள்ள சாந்தாகுருஸ் பகுதி இது.
*
கூன் குருடு நொண்டி முடமென இற்றுச் சருகான பெரும் மனிதத் திரள், நெடியதொரு கேலி தொனித்த கூட்டுச்சிரிப்பில் புகைந்து கலகலத்துக் கலைந்து மறைய, பதுமபீடிகை அங்கொரு ஆழி சூழ்ந்த தீவாயிற்று. அதன் நடுவே துலக்கமான செம்பவளப் பாறைப்பீடத்தில் துக்கமே உருவாகத் திடமிழந்த கதியில் உடல் நடுக்கத்தை அடக்க முனைந்தவளாக இளநங்கை ஒருத்தி அமர்ந்திருந்தாள். வளைகளற்ற அவள் கைகளில் ஒரு பாத்திரமிருந்தது. பிச்சைப்பாத்திரம் போலிருந்தது. வயிற்றோடு அதை அணைத்துப் பிடித்திருந்தாள். நாட்டையும் கோட்டையையும் முப்படைகளோடு மக்களையும் தானமிட்டுவிட்டு பிரதிப்பயனாக இச்சிறிய பிச்சைப்பாத்திரத்தைப் பெற்றுவந்த இளவரசியாகக் காட்சியளித்தாள். புலன்கள் ஐந்தும் உணர்ந்தறிய எத்தனையுண்டோ, அத்தனையழகும் பொருந்தியவளாக இருந்தாள். துயரத்தில் பூத்த தூயமலரென்று மனம் நினைக்கத் தகைந்தது.
“பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும் அஞ்சனஞ்சேராச் செங்கயல் நெடுங்கணும், முரிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும், குவிமுள் கருவியும், கோணமும், கூர்நுனைக் கவைமுள் கருவியும்…” பாடல் ஒலி நிழலாய் ஒளித்து மறைந்தது. எவ்வளவுதான் கூர்ந்து பார்த்து குறிப்புகள் தேடியும் அவளை அடையாளம் கண்டுகொள்ள வழியின்றித் தவித்தபோது காதருகே கிழட்டுப் பெண் குரல் சிரித்தது. பாண்டி எங்கே நின்றுகொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை.
“இவளை யாரென்று தெரியவில்லையா? நன்றாகப் பார். முடியவில்லையா? இப்போது ஞாபகம் வருகிறதா? வரவில்லையா… இவள்தான் மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி, மாயக்கள்ளி…”
வானத்தில் ஏழுவகை மேகங்கள் ஒரே நேரத்தில் சுற்றிச் சூழ்ந்து நேருக்கு நேர் மோதி பெரும் முழக்கம் உண்டானது. மின்னல் கொடிகள் கொதிநிலையில் நெளிந்து மறைந்தன. ஒளியும் இருளும் விரிந்தும் கருங்கியும் பிரிவதும் சேர்வதுமாகக் காட்சியை மாறி மாறிக் கிழிப்பதும் தைப்பதுமாக… எல்லாம் சீர்கெட்டுவிட்டிருந்தன. மழைத்துளிகளின் முதல் வரிசை விழத் தயாராகி உச்சியில் துடித்தது. ஆழியில் புயல் வளி முற்றி பேயாட்டம் போடத் தொடங்கியது.
கூட்டம் கூட்டமாகக் காகங்கள் பறந்து வந்து அவளைச் சூழ்ந்து நின்றன. அவள் முகத்தில் அச்சமயம் தன் சுய துக்கங்களிலிருந்து மீளும் தெளிவு தென்பட்டது. தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்ன உருண்டைகளை உருட்டியெடுத்து விசிறி காகக்கூட்டத்தைப் பசியாறச் செய்தாள். அவளைச் சுற்றி கருப்புக் கம்பளம் விரித்தாற்போல சூழ்ந்து பரவியிருந்த ஆயிரக்கணக்கான காகங்களில் ஒன்றுகூட கரைந்து குரல் எழுப்பவில்லை. காகங்கள் நீங்கிச் சென்றபின் சிதறிய சோற்றுப் பருக்கைகளைத் தின்பதற்காக, கொழுத்து பன்றிக்குட்டி அளவிருந்த எறும்புகள் சாரை சாரையாக வந்து பற்றியெடுத்தபடி புற்றுக்குத் திரும்பின.
“மக்தலேன்… மக்தலேன்…” என ஈனஸ்வரத்தில் விளிப்புக் குரல் கேட்டது. ஆண் குரல். அதைக் கேட்டதும் இளம்பெண் துணுக்குற்றாள். விலகிப் போயிருந்த வாட்டம் இரட்டிப்பாக இப்போது அவள் முகத்தில் குடிகொண்டது. அவள் எழுந்து சிறு தொலைவு நடந்து குரல் வந்த மரத்தடியை அடைந்தாள். அங்கே, அவன் நீள் முகமும் தாடியும் பச்சைக் கண்களுமாக மரத்தில் சாய்ந்து பாதி செருகிய விழிகளுடன் காயங்களில் குருதி கொப்பளிக்க உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அவன் வாய் நுரைத்து இரத்தம் பொங்கி வழிந்தது. ‘என்னோடு வா என்னோடு வா” என்று அவளை நா குழற அழைத்தான். மூடித்திறந்த அவன் கண்களில் வாழ்வும் சாவும் ஒன்றன்பின் ஒன்று நின்று உற்று உற்று அவளைப் பார்த்தன. துயருற்ற இளம்பெண் தன் ஆடை நுனியால் அவன் வாயை, முகத்தை, மார்பைத் துடைத்து நேர்த்திசெய்து தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவன் வாயில் புகட்டினாள். அப்போது அவளிடம் பொங்கிய பிரியத்தில் அவள் கையிலிருந்த அன்னமணிகள் நெற்பாலாகி அவன் நாவில் இறங்கியது. ‘வேண்டாம் வேண்டாமென’ அமுதத்தை வெளியே உமிழ்ந்தவன், “நீ என்னோடு வா நீ என்னோடு வா” என்பதையே மீண்டும் மீண்டும் புலம்பி மெல்லத் தொனி தாழ்ந்து அடங்கிப் போனான். மண்டியிட்டு அமர்ந்த நிலையில் நீர் சுரந்த கண்களை இறுக மூடி உதடுகளைப் பலமாகக் கடித்தவண்ணம் அண்ணாந்த முகத்துடன் விம்மினாள். துக்கத்தில் கசங்கினாள். அவள் முழு உடலும் விக்கலடித்தது போல் குலுங்கியது. இருளும் ஒளியும் சுருங்கி விரிந்தன. காற்று பிளந்து வீசியது.
அந்தக் குரல் மீண்டும் காதோரம் ஒலித்தது பரவசமாக . “அதோ அதோ அரசிளங்குமரன் வருகிறான். உதயகுமாரன் வருகிறான்.” ஆவேசமாக – “எங்கே போய்த் தொலைந்தாள் புதுப்பத்தினி, எங்க போனாலும் இன்னைக்கி இவா பாடு சட்டினி”. குரல் முறுகி சிரிப்பாகி அதிர்ந்தது.
சீற்றத்துடன் பாய்ந்த உரத்த காற்று செடிகொடிகளைப் பிடுங்கி எறியப் புறப்பட்டது போல் திருகிச் சுழித்தோடிப் பழுப்பிலைகளைப் பிய்த்தெறிந்தது. பழஞ்சருகுகளை வாரியிறைத்தது. மேகங்கள் மோதுவதும் முழங்குவதும் தொடர்ந்தது. மழைத்துளிகள் பாறையில் தெறித்துச் சிதறின.
உவவனத்துள்ளிருந்து குதிரைகள் வெளிப்பட்டன. குதிரைகளின் மேல் வேடர்கள் அமர்ந்திருந்தனர். உடல் வலிமையும் இளமையும் கூடி வார்த்தாற் போலிருந்த இளைஞன் வெள்ளைக் குதிரையில் முன்னால் வர பின்தொடர்ந்த குதிரைகளின் மேலிருந்தவர்கள் மாயமாகி மறைந்து போயினர். குதிரைகள் நிதானமாக நடந்தபோதும் தலைகள் மேலும் கீழும் பலமாக ஆடின. முகத்தில் வந்து மோதிய சருகுகளைத் தடுத்தாண்ட இடது கையை இறக்கியபோது வெள்ளைக் குதிரையிலிருந்த இளைஞனின் முழுக்கம்பீரமும் பளிச்சிட்டது. கூர் நாசியும் மீசையும் பரந்த நெற்றியும் செதுக்கிய முகமும், செருக்கும், பிடரி வரை வளர்ந்து படிந்து கிடக்கும் சிகையுமாக வந்தான்.
குதிரைகள் செம்பவளப் பாறையருகே வந்தபோது, இருள் மண்டிய முகத்துடன் இளம்பெண் எதிர்ப்பட்டாள். அவளைக் கண்ட இளைஞனின் கண்கள் சட்டென ஒளிர முகம் மலர்ந்தான். வெள்ளைக் குதிரை மீது அவனைக் கண்ட இளம்பெண் சில கணங்கள் அசையாமல் சிலைத்து நின்றாள். குதிரையிலிருந்து ஒரு துள்ளலோடு குதித்து இறங்கிய இளைஞன் அவளெதிரே மிக அருகே வந்து இரண்டு கைகளையும் அகல விரித்தான். “உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்தென்… நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி… வா.” அவள் கண்கள் அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து தேனுண்ணும் தும்பியாகப் படபடத்து அவன் முகமெங்கும் அலைந்தது. “உவவன மருங்கில் உன்பால் உள்ளம் தவிர்விலேன்.” விரித்த கைகள் விரித்தபடியிருக்க, அவள் அவன் மீது பாய்ந்து மார்பில் புதைந்துகொண்டாள். வலுவான கரங்கள் அவளை இறுகத் தழுவின. மற்ற குதிரைகள் திசைக்கொன்றாக நாற்புறமும் நழுவி மறைந்தன. மின்னல்கள் பதறி மின்னி மறைந்தன. ஒளி துடிதுடித்தது. அணைத்துக்கொள்ளத் தாவியபோது விடுபட்ட அமுதசுரபி கீழே விழுந்து உருண்டோடி பாறை பக்கத்தில் கிடந்தது. கைவிடப்பட்ட தகரக் குவளை போல்.
இளைஞனும் யுவதியும் தழுவித் திளைத்து மேலும் நெகிழ்ந்த போது தலையை நிமிர்த்திப் பார்த்த அவள் அவனுக்குப் பின்னால் கண்ட காட்சி பதற வைத்தது. வெள்ளைக் குதிரையின் முதுகில் ஒரு கொழுத்த கழுகு அமர்ந்திருந்தது. அதன் வாயிலிருந்து மனிதக் கண்ணொன்று அவளை வெறித்துப் பார்த்தது. ‘ஐயோ’ என அவள் கதறவும் கழுகு கண்ணை விழுங்கிவிட்டது. இளைஞனிடமிருந்து திமிறித் தன்னை விடுவித்தவள் மரத்தடிக்கு ஓடினாள். மரத்தடியில் கழுகுகள் கூடி நின்றன. அவளைக் கண்டதும் சற்று தொலைவு ஓடி பின் எழுந்து மறைந்தன. ஐந்து வயது பெறுமான சிறுவனுக்குரிய சின்ன மண்டையோடும் எலும்புக்கூடும் பச்சை இரத்தக் கறையுடன் மரத்தடியில் கிடந்தது. பதைப்புற்றவள் பாறையருகே ஓடி வந்தாள். இளைஞனைக் காணவில்லை. வெருண்ட கண்ணுடன் நின்றிருந்த வெள்ளைக் குதிரையின் உடலெங்கும் இரத்தத்துளிகள் தெறித்துக் கோடாக வடிந்து நின்றன. பாறையின் மறுபுறத்தில் இளைஞனின் உடல் கிடந்தது. பாத்திரத்தின் அருகே துணித்த தலை ஒருக்களித்துக் கிடந்தது. “போதி மாதவா…” என்று அலறியவாறு தலையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு அண்ணாந்தாள். அங்கே சிவந்த கண்களும் உருவிய பட்டயமுமாக ஆர்ச் ஏஞ்சல் கப்ரியேல் அந்தரத்தில் நின்றிருந்தான். கூடவே நீளும் குந்தம் ஏந்திய மிக்கேல் இளம்பெண்ணைப் பார்த்து, “ம்… புறப்படு என்னோடு” என்று அதட்டலாகக் கட்டளையிட்டான். அவள் கண்கள் மயங்கின. உடல் குழைந்தது. தரையில் விழுந்தாள். பாறையில் மோதவிருந்த அவள் தலையைத் தடுத்துக் காக்க பதைத்துப் பாய்ந்த பாண்டி கட்டிலிலிருந்து தரையில் விழுந்தான்.
*
பாண்டி ஊருக்குப் புறப்பட்டு விடைபெற்றுக்கொண்ட போது சில்லியா புரிந்தும் புரியாமலும் விழித்தாள். அமலா வந்திருந்தாள். அவளருகே மரிய புஷ்பமும் நின்றிருந்தாள். பாண்டி பையை எடுத்துக்கொண்டதும் விங்லிங், “மாமா டாட்டா… மாமா டாட்டா” என எழுப்பி பலமாகக் கையசைத்தான். அதைக் கண்டதும் திடுக்கிட்ட சில்வியா ஓடோடி வந்து பாண்டியின் கால்களைக் கட்டிப் பிடித்தவளாக “நானும் நானும்.. பாண்டி மாமா நானும்” எனக் கெஞ்சினாள்.
அமலா தூக்கி வைத்துக்கொண்டாள். சில்வியா பாண்டியின் முகம் பார்த்து வெடித்து அழத் தொடங்கினாள். யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நெஞ்சோடு அணைத்திருந்த அமலாவின் கைகளை மீறி உதறித் திமிறித் தாவி பாண்டியிடம் வர கைநீட்டினாள். பாண்டி மெல்ல மெல்ல நிலைகுலைந்து தடுமாற்றமடைந்தான். அழுகையும் கண்ணீரும் குரலும் தொற்று போல அவனைத் தீண்ட முயன்றது. வலிந்து தப்பித்தான். எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பேச்சில்லாமல் பார்த்தார்கள். விங்லிங் தொடர்ந்து டாட்டா காட்டிக்கொண்டிருந்தான். ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. வாசலருகே கிடந்த பொம்மைப் படம் வரைந்த கலர் செருப்பை மரிய புஷ்பம் கையிலெடுத்து அதைச் சில்வியாவிடம் காட்டி கால்களில் அணிவித்து அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள். சில்வியா கால்களை ஆவேசமாக உதைத்து மறுத்தாள்.
வேறு வழியின்றி அமலா “வா, நாமளும் மாமாகூட போவம்” என்றபடி பாண்டியோடு புறப்பட்டாள். புரிந்துகொண்ட பாண்டி சோர்வுடன் நடந்தான். சில்வியாவை ஏந்தியபடி அமலாவும் பின்தொடர்ந்து கடற்கரையோரத்துச் சாலைக்கு வந்தாள்.
பெண்கடல் கிழக்கே குடா போல் உள்வாங்கி வளைந்து நீண்டிருந்தது. ஏரிபோல் அமைதி. களைப்பில் தூங்கின சில வள்ளங்கள். கரையோர பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து கையைக் கட்டிக்கொண்டிருந்தாள் அமலா. பாண்டி கடலையே பார்த்திருந்தான். சில்வியா கீழே சிமிண்ட் தரையில் ஓடிக் குதித்துக்கொண்டிருந்தாள்.
“ஏண்டா பேயறஞ்சவன் போலயிருக்க? தூங்கலயா? எதுக்கு இவ்வளவு ஹைபர்- சென்சிடிவா இருக்க? இதுல கவிதை வேற. எல்லாத்தையும் ஊதி ஊதி பலூன் மாதிரி பெருசாக்கி பறக்க விட்டுக்கிட்டேயிருந்தா எப்படி? நிலத்துல நில்லு.. இந்தா சுத்திப் பாரு… எவ்வளவு பேரு நிம்மதியா வேலை செஞ்சிக்கிட்டிருக்காங்க. ஏதாவது வேலையில் எப்பவும் முழு கவனத்தோட இருந்தா ஞாபகங்கள் வராது. இல்லைன்னா தீர்மானங்கள்ல தெளிவா இருக்கணும். நான் நேற்று சமையலை முடிச்சி சாப்பிட்டுட்டு உனக்கு ஒரு கடிதம் எழுதி வச்சிட்டு பாட்டியோட சிலீப்பிங் பில்ஸ் ஒன்ன எடுத்துப் போட்டுட்டு நிம்மதியா தூங்கிட்டேன்.”
சவேரியார் குகைக்குப் பின்னிருந்து ஒரு வள்ளம் சிறகு விரித்து வடக்கே ஓடியது. வானம் கூராப்பாக இருந்தது. நாரைகள் சிலுவைய்யா கோவிலுக்கு மேலே தென்முகமாய் ஏகின.
“பம்பாய்க்குப் போ. பிஎச்டிய அப்புறம் பாத்துக்கலாம். தூரமாப் போறதுதான் இப்ப உனக்கு நல்லது. உலகம் பரந்து விரிஞ்சதுடா. கிணத்துத் தவளையா இருந்தா எப்படி? எவ்வளவு நாளைக்கு இப்படியே திரிவ? உன்னோட எதிர்காலத்தப் பத்தி நினைச்சுப் பாரு. என்னயப் பத்தி கவலைப்படாத. நான் சந்தோஷமா இருப்பேன். அடுத்த அகடெமிக் இயர்ல லெக்சரர் ஆயிடுவேன். ஏராளமான வேலைகள், திட்டங்கள் வச்சிருக்கேன். எனக்குப் பொழுதே காணாது.”
பஸ் வந்து வட்டமடித்துத் திரும்பி நின்றது. அமலா சில்வியாவைத் தூக்கிக்கொண்டு எழுந்தாள். பாண்டி எழுந்து, “அடுத்த பஸ்ஸில் போறேங்கா” என்றான்.
பஸ்ஸையும் தாண்டி பட்டறையில் கிடந்த வள்ளங்களுக்கருகே வந்தனர். காய்ந்து கிடந்த ஒரு வள்ளத்தினுள்ளே சில்வியாவை இறக்கிவிட்டாள். புது உலகைக் கண்ட ஆச்சரியத்தில் தொட்டி மீனாய் உள்ளே சுற்றிக்கொண்டிருந்தாள் அவள்.
“அப்புறம் இன்னொரு விஷயம். உனக்கு என்னப் பாக்குற போதெல்லாம் நேர்ந்துவிட்ட ஆடு மாதிரியே தோணுது. பாட்டி சொன்னாங்கிறதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. எல்லாம் தெரிஞ்சு நானே தெளிவான முடிவோடதான் வார்த்தைப்பாடுக்குப் போறேன். நேற்று அந்த முடிவு இன்னும் ஸ்ட்ராங்காயிருச்சு. அறிவுப்பூர்வமாகூட இல்ல, விவேகத்தோட எடுத்த முடிவு. ஐ யம் நாட் ரிலிஜியஸ். சேர்டன்லி நாட். நீ இவ்வளவு படிச்சும் இன்னும் விவரம் புரியாதவனா இருக்கியேடா.”
வானம் சாம்பல் பூத்திருந்தது. கடல் கருமை பூண்டிருந்தது. காற்றே இல்லை. அலைகள் எழச் சக்தியற்று அடங்கிக் கிடந்தன.
“மனுஷன் ஆதி மனுஷன்தான். உணர்வுகளும் ஆதி உணர்வுகள்தான். அறிவு ரொம்ப லேட்டாத்தான் வந்து கிடைச்சது. மனசுக்குள்ள அறிவைவிட உணர்ச்சிகள்தான் ஆதிக்கம் பண்ணுது. ஆனாலும் அறிவைத்தான் நீ நம்பணும். இல்லேனா ஆதிவாசி ஆகிருவோம்டா. ஏதேன் தோட்டம் ஒரு வறட்சியான கற்பனை. யூதர்களுக்கு கிரியேட்டிவிட்டி போதாது.”
சில்வியாவைத் தூக்கித் தோளில் வைத்திருந்தாள். அவள் தூங்கிப் போயிருந்தாள். வலையில் மீன் எடுக்க கரைக்கு வந்த செல்வம் அக்கா இவர்களைப் பார்த்து அருகே வந்து சில்வியாவை வாங்கிக்கொண்டு போனாள்.
அடுத்த பஸ்ஸும் போயிருந்தது. திலாக் கிணறுகளின் ஓரம் பையன்கள் கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர். கலங்கரை விளக்குக்கு அருகே மணல்குன்றுக்கு நேர் கீழே கடல் அறம் பாய்ந்து நீரிறங்கி நீண்ட திட்டு தெரிந்தது. சுற்றிலும் நீர் சூழ்ந்திருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று அங்கே போவோம் என்றான்.
காற்றின் திசைகளில் பாயும் பட்டத்தை விட்டுப்பிடிப்பது போல் அவன் கூடவே நடந்தாள். திலாக்கள் இறைப்பாரற்று ஏகாந்தமாய் நின்றிருந்தன. மணல் திட்டின் நடுவே நின்றபோது நாற்புறமும் கடல் சூழ்ந்திருந்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது.
“நடந்ததை நடந்ததும் மறக்கப் பழகு. நடக்கப் போறத எதிர்கொள்ள முயற்சி பண்ணு. நினைவுகளும் கற்பனைகளும்தான் உன் பிரச்சினை- அந்தந்தக் கணத்தில வாழணும்னு ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்றாரு. தமிழ்ல அவரு புத்தகங்கள் இருக்கும். வாங்கிப் படி. இந்தா…” கடிதத்தை நீட்டினாள். “அப்புறம் வாசி.”
கிழக்கே திரும்பிக் கடலைப் பார்த்தவாறே சொன்னாள். சொற்கள் தயங்கி மிக மெதுவாக வந்தன. “இனிமே எனக்கு ஃபோன் பண்ணாம இருக்கிறதுதான் உனக்கு நல்லது.”
பாண்டி அதிர்ந்தான். இந்த உதடுகள்தான் இதை உச்சரித்தனவா? அவன் கண்கள் பொங்கி வழிந்தன. இதே உதடுகள்தானா?
“அந்தச் சிலுவைய எடு” என்று உள்ளங்கையை விரித்தாள். அவன் பேசாமல் இருந்தான். கையை அவள் மடக்கவில்லை. பிறகு அவன் பர்ஸை உருவிப் பிரித்து தங்கச் சிலுவையை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கடலில் எறியக் கை ஓங்கியவளை அவன் குரல் தடுத்தது.
“வேணாங்க்கா.”
தயங்கினாள்.
“அது என் சாந்தாகுருஸ்.”
“இப்படியே இருந்தா பைத்தியமாயிருவடா.” கத்தினாள். உதடுகள் துடிக்க முகம் கலைய அழுகையை அடக்கியவாறு அழுத்தமாகச் சொன்னாள். “இல்லன்னா நான் சாகணும்.”
உயிரற்று நின்றிருந்தான். கண்ணீர் கூச்சமில்லாமல் வெதுவெதுப்பாக வழிந்துகொண்டிருந்தது. எரியும் கணங்களின் வெம்மையைத் தாங்க மாட்டாமல் தவித்தாள்.
“வா போகலாம்.”
அப்படியே நின்றிருந்தான்.
சட்டென்று திரும்பி கணுக்கால் அளவு நீரில் மணலில் கால் புதைய நடந்து நடந்து கரையை நோக்கிப் போனாள். கரையை அடைந்து திரும்பிப் பார்த்தாள். அப்போதும் அங்கேயே நின்றிருந்தான். அவளுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. கரைமணலில் அப்படியே அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்தாள். அழுகையில் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது.
“ஸாரிக்கா.”
அவள் நிமிரவேயில்லை. மெதுவாக அடங்கி இயல்பாகிச் சமநிலைக்கு வந்தாள்.
முகம் தூக்கிப் பார்த்தாள். அருகே நின்றிருந்தான். எதிரே கடல். “நீ நல்லா இருக்கணும்டா.”
எழுந்து அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று, “பை. விஷ் யு ஆல் த பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
அவளையே… போவதையே… பார்த்துக்கொண்டு நின்றான். கரையோரமாகவே நடந்து போனாள். ஊருக்கு அருகே போனதும் திரும்பிப் பார்த்தாள். ஊருக்குள் நுழைந்து மறைந்தே போனாள். பரந்து விரிந்த கடலின் முன்னே எல்லையில்லா வானத்தின் கீழ் நிழலன்றி ஏதுமற்று நின்றிருந்தான்.
*
மரண தண்டனையைக் காட்டிலும் சற்றே குறைவான தண்டனை பெற்றிருப்பது போலிருந்தது வீட்டைப் பிரிவதை நினைத்தபோது. ஊரை விட்டு வெளியேற இதைக் காட்டிலும் உத்தமமான சந்தர்ப்பம் வாய்க்காது. ‘பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிது அவாவுற்றனை நெஞ்சே’.
வாழ வேண்டுமென்றால் இந்த நினைவுகளிலிருந்து தப்பித்தாக வேண்டும். புது இடத்தில் இது மட்டுப்படலாம்.
‘நீ போவணும்னு முடிவெடுத்துட்டா போலே. உன் மனசுக்குப் பிடிச்சதை செய்யி, நாங்க இங்கினக்குள்ளதானே இருக்கோம். அம்ம ஐயாவை அப்பப்போ வந்து போய் கவனிச்சுக்கிறோம். நீ லீவு கிடைக்கும்போதெல்லாம் ஊருக்கு வந்துட்டு போ’ என்றாள் செல்வம் அக்காள். அவள் சமயோசிதத்தோடு பேசுவதாகப்பட்டது. முன்பெல்லாம் மணப்பாடு ஊரின் கம்பீரத்தை இரசிப்பதற்காகவே அடிக்கடி அக்காவைப் பார்க்கப் போவான். அந்த மாதிரி அழகான கடல்காட்சி வேறெங்கும் இல்லை. நினைவுகள் இருக்கும்வரை இனி அந்த ஊருக்குப் போக முடியாது என்றே தோன்றியது.
பீடி, சுருட்டு, கள்ளுச்சாராயமெல்லாம் சகட்டுமேனிக்குப் புழங்கும் ஊரில் கிருமமாக இருப்பது நம்ம கையிலதான் இருக்கு என்பதைத் தெளிவுபடுத்தினாள் அம்மா. எதைச் சொன்னாலும் அம்மா அச்சமயத்தில் மெலிதான படபடப்படைவதைக் காண முடிந்தது. அல்லது, பேசுவதில் அப்படி ஒரு சுறுசுறுப்பு. பாட்டி தன் கற்பனையில் என்ன வெளிச்சத்தைக் கண்டாளோ தெரியவில்லை, உற்சாகம் குன்றாமல் இருந்தாள். பெரிய நகரங்களுக்கு, தூரப் பிரதேசங்களுக்குப் போய்வருவதைப் பாக்கியமாக, கொடுப்பினையாக அவள் கருதியிருக்கலாம். வேளாவேளைக்கி சாப்பிட்டு உடம்பை நல்லபடியாகக் கவனித்துக்கொண்டால் போதுமானதாக இருந்தது பாட்டியின் கோரிக்கைகள்.
வழியனுப்புவதற்காக ரயிலடிக்கு அப்பா வந்திருந்தார். போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுதச் சொன்னார். பேசத் தேர்ந்தெடுத்த சொற்கள் ஒவ்வொன்றும் குரலைச் சிராய்த்து கொஞ்சமேனும் சேதப்படுத்தியது. அவனால் நம்பவும் நினைத்துப் பார்க்கவும் முடியாத காட்சி நெஞ்சைப் பிசைந்தது. அப்பாவின் கம்பீரம் தன்னால் குலைவதை அவனால் தாங்க முடியவில்லை. புறப்பட்டு சிறிது தூரம் உருண்டுவிட்ட ரயிலிலிருந்து குதித்துவிட எத்தனித்தான். வேண்டாம் வேண்டாம் என்பது போலப் பலர் அங்கே கையசைத்துக்கொண்டிருந்தனர். அவனோடு அப்பா ஒருபோதும் பேசியிராத பேச்சுக்குள்ளும் வராத சில வார்த்தைகள் அவர் கண்களில் நீராகி மின்னியது. உள்ளுக்குள்ளிருந்து பொங்கிப் புறப்பட்ட அழுகைக்காக அவன் தேம்ப எத்தனித்தபோது, ரயிலின் ஊளை பெரும் கேவலாகவும் கேலியாகவும் கிளை பிரிந்து ஒலித்தது.
மீந்து விடும் சொற்கள்
துளித்துளியாக இப்போதுதான் பெருகும் மழைக்குள் நுழையும் சரக்கு ரயிலின் முகடற்ற பெட்டிகளில் நிலக்கரித் துண்டுகள் நனைந்து ஒளிரும். கருமையுடன் சில எழுத்துகள் ஊர்ந்து சேர்ந்து வரிகளாகி வாக்கியங்களாகி இங்கே செல்கின்றன. வானம் நீண்டு படுக்கிறது பாதை வடிவில். குபுக்குபுக்கென்று வலியில் மனத்துக்குள் சுருண்டிருந்த தண்டவாளம் துடித்து தலையில் முனகுகிறது. வேகமுற்ற உன் சொற்கள், சிலைத்து தின்றுகொண்டிருக்கிறேன். கண்கள் புறக்கணித்த கண்ணீர்த் துளிகளாகத் தூறித் தூறி மழைக்கிறது தூர வானம்.
இரண்டு இரவுகள் மூன்று பகல்கள் வாழ்வில் முதல்முறையாக ஒரு ரயில் பயணம். அபூர்வமான அனுபவமாக அமைந்தது. களைப்பையும் உற்சாகத்தையும் ஒரே சமயத்தில் உணர முடிந்தபோதுதான் பாண்டி மனத்திற்கும் உடலுக்குமான கூறுபாடுகள் வேறுபடுவதைப் புரிந்துகொண்டான்.
“அது என் சாந்தாகுருஸ்” என்ற சொற்கள்தான் அவனை எழுப்பிவிட்டதா அல்லது அவன் எழுந்தவுடன் முதல் நினைவாக அதுவும் விழித்துக்கொண்டதா? அன்று அவனை அறியாமல் அவன் ஆழத்திலிருந்து கிளம்பிய சொற்கள் இன்றுவரை ஓராயிரம் முறை நினைவில் மீண்டுவிட்டன. ரயிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். எழுந்து ஜன்னல் வழியாகப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் இருமருங்கும் கற்பாறைக் குன்றுகள். பசுமையே இல்லை. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை.
மரம் ஒருபோதும் தன் நிழலை உணர்வதில்லை.
“நீ கவிஞன்தான்டா.”
ரயில் பாழ்நிலத்தினூடாக வெறுமையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. கானலில் விரிந்த கரிசல்மண். மரங்கள் எங்கெங்கோ நரங்கி நின்றன.
எப்படி இங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள்? மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் எப்படியாவது வாழும். உயிர்கள் வாழப் பிறந்தவை. வெயிலை அருந்தியும் அவை வாழும். ஏன், கனவின் காலடியில் கவிதையால் அர்ச்சித்து நான் வாழவில்லையா? எப்போதுமே நான் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில், தொழ விரும்பும் தூய்மையோடு இருக்கிறாள்.
“பியூரிடிக்கு ஒரு பவர் இருக்கு, எல்லா விதத்திலயும். வணங்கித்தான் ஆகணும். வேற வழியேயில்லை – குறிப்பா ஆண்களுக்கு.”
காலடிகளைச் சென்னியில் சூடவும் சித்தமாக இருக்கிறேன்.