தமிழ் சினிமாவிற்கும் தமிழர்களின் வாழ்க்கைக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பதில்லை. தமிழ்ச் சமூகத்தின் உணர்ச்சிகரமான பல்வேறு மாறுதல்களை தமிழ்த் திரைப்படங்கள் பதிவு செய்யவும் இல்லை. விதவையான பின் சர்வ சாதாரணமாக அறுத்துக் கட்டும் பழக்கமுடைய பல சாதிகள் இங்குண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் பிராமணரல்லாத பல பெண்களும் இரண்டாயிரம் வரையிலும் கூட வெள்ளைச் சேலைகளோடு தான் பவனி வந்தார்கள். திராவிட இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வந்த காலத்தில் அதன் அடையாளமாகக் கருதப்பட்ட எம்ஜிஆர் சம்பந்தமே இல்லாத கூத்துக்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவர் விஞ்ஞானியாகி அகில உலக மாநாட்டில் கலந்து கொள்வதை இன்று ஒரு சிறுவனிடம் காட்டினால் கூட பயங்கரமாகச் சிரிப்பான். நாமோ ஓட்டுப் போட்டு முதலமைச்சராக்கி விட்டோம். வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நண்பரிடம் சில எம்ஜிஆர் படங்களை போட்டுக் காட்டினேன். அவர் இரண்டே இரண்டு கேள்விகளைக் கேட்டார். 1.இவர் கட்டிப் பிடிக்கும் பெண்களில் யார் தங்கை? யார் காதலி ? 2. அந்தக் காலத்திலேயே முழுநீள காமெடி படம் எடுத்திருக்கிறீர்களே, நன்றாக ஓடியதா?. எம்ஜிஆர் சினிமாவை விட்டுப் போய் முதலமைச்சராகி, அமெரிக்காவில் படுத்துக் கொண்டே ஜெயித்து, கல்லறைக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிற ஒரு வாட்ச்சோடு மெரீனாவில் துயில் கொண்டு விட்ட பிறகும் தமிழ் சினிமா மாறவேயில்லை.
நான் சிறுவனாக இருந்த போது ரஜினியும் கமலும் தான் பிரதான நாயகர்கள். என் நண்பர்களில் பலரும் ரஜினி, கமல் ரசிகர்கள். நிறைய டி. ஆர் ரசிகர்களும் இருந்தனர். அவர்களில் நான் மட்டும் தான் விஜயகாந்த் ரசிகன். கேப்டன் பிரபாகரன் பார்த்த போது வீரப்பனை நிஜமாகவே சுட்டுக் கொன்று விடுகிற ஆற்றல் விஜயகாந்துக்கு உண்டென்றே நம்பிக் கொண்டிருந்தேன். 90 களின் காலகட்டத்தில் ரஜினி தன்னுடைய இமேஜை வேறுவிதமாக உருவாக்க முனைந்திருந்தார். எண்பதுகளில் வெளிவந்த பெரும்பாலான ரஜினியின் படங்கள் அமிதாப் பச்சன் போன்ற ‘கோபக்கார இளைஞனை’ தமிழில் பிரதியெடுத்தன. 90 களின் காலகட்டத்தில் அவை எடுபடாது என்று எப்படியோ ரஜினியின் இயக்குநர்கள் புரிந்து கொண்டனர். அந்தக் கோபத்தை அவரிடமிருந்து விஜயகாந்தும் அர்ஜூனும் சிந்தாமல் சிதறாமல் வாங்கிக் கொண்டார்கள். பின்னால் சரத்குமாரும் இந்த ஜோதியில் வந்து ஐக்கியமானார்.
இவர்கள் தேசிய கொடிகளைத்தான் கதாநாயகிகளை விட தீவிரமாகக் காதலித்தனர். ஒரு படத்தில் தங்கையை கற்பழிப்பதை நேரில் பார்த்த பிறகும் கூட சரத்குமார் அசையாமல் தேசிய கீதத்திற்காக நின்றிருப்பார். தேசிய கீதம் முடிந்த பிறகுதான் காப்பாற்றப் போவார். எங்கள் ஊரின் மிலிட்டரி ரிடர்ன் நவநீதண்ணே இதைப் பார்த்து விட்டுச் சொன்னார் ‘சைனாக்காரனை, பாகிஸ்தான்காரனையெல்லாம் பெறகு பார்த்துக்கலாம். முதல்ல இவனுகளை சுடனும் மாப்ள.’ அந்த அளவுக்கு அவர்கள் தேசப்பற்றில் ஊறி நம்மை சோதித்துக் கொண்டிருந்த காலம் அது. அவர்கள் காஷ்மீர் பார்டர் போல் செட் போட்டு ஜெனரல் மானெக்ஷாவை விட அதிகமான எண்ணிக்கையில் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். விஜயகாந்த் ஒரு படத்தில் கூரையில் சொருகிய அரிவாளை தூக்கிக் கொண்டு காஷ்மீர் தீவிரவாதிகளை துவம்சம் செய்யப் புறப்படுவார். கமல் அப்போது நிறைய சோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவர் முகமும் தயாரிப்பாளர்களின் முதலும் கதாநாயகிகளின் உதடும் அவருடைய தீவிரமான சோதனை முயற்சிகளால் அவ்வப்போது பாதிக்கப்பட்டன. இந்தத் தருணத்தில் ஆர். வி. உதயகுமார், கே.எஸ். ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள் வந்து சேர்ந்தார்கள். பி.வாசுவையும் சில இடங்களில் இவர்களோடு சேர்த்துக் கொள்ளலாம். தூளியும் ஆழியும் தெரிந்த சின்னத்தம்பிக்கு ‘தாலி’ தெரியாது என்கிற ஒன்லைனை வைத்து ஒரு வெற்றிப்படமே கொடுத்தவரல்லவா அவர்? இவர் தொடங்கி வைத்த தாலி செண்டிமெண்ட் பிறகு வேறு சில படங்களில் மிகப்பெரிய தேசியப் பிரச்சினையாக கவனம் பெற்றது. அதே குஷ்பூ பின்னாளில் 108 அம்மன்களை சித்ராவின் உதவியோடு அதட்டிக் கூப்பிட்டு தன் தாலியைக் காட்டிக் கொண்டிருந்தார். ‘தமிழர் திருமணத்தில் தாலி’ புத்தகம் எழுதிய புண்ணியவான் 90 களில் வெளிவந்த திரைப்படங்களைப் பார்த்திருந்தால் சாருவைப் போல் தன் புத்தகத்தை தானே கிழித்துப் போட்டிருப்பார். ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினி கணவனோடு படுக்கிற போது உறுத்துகிறது என்பதற்காக தாலியைக் கழட்டி ஆணியில் வைக்கும் வரை இவர்கள் நம்மை விதவிதமாக வன்கொடுமை செய்து தீர்த்து விட்டனர். பல வருடங்களாய் தொடர்ந்த இந்தக் காவியத்திற்கு அடி எடுத்துக் கொடுத்த பெருமை பி.வாசுவையே சேரும்.
ஆனால் கே.எஸ். ரவிக்குமார், ஆர். வி உதயகுமார் ஆகிய இருவர் பற்றி தனியாகப் பேச வேண்டும். ஏனென்றால் இவர்களின் படங்கள் காலத்தை பின்னோக்கி அழைத்துச் சென்ற படங்கள். அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலரின் கதைகளிலும் ஜமீன்தார்கள், பண்ணையார்கள் ஆகியோர் எதிர்மறையாகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். அபூர்வமாக சில கதைகளில் மட்டுமே கலையமைதி கை வரப்பெற்று பிற கதைகள் தட்டையாக இருந்தாலும் கூட அந்தச் சித்தரிப்பின் தேவை மிக முக்கியமானது. நல்லது, கெட்டதுகளை மாறி மாறிச் செய்கிற இயல்பினைக் கொண்ட இந்திரா காந்தி, மன்னர்களுக்கான மானியத்தைக் கூட ஒழித்து அவர்களை கிட்டத்தட்ட இல்லாமலாக்கி விட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு ‘நிலபிரத்துவம்’ ஒழிக்கப்பட்டு நாம் சோசலிசத்தை நோக்கி நகர வேண்டும் என்பதே நேருவின் கனவாக இருந்தது. ஆனால் அவர் ஆசைப்படி நாம் சோசலிசத்தை நோக்கி நகராவிட்டாலும் யதார்த்தத்தில் அரசின் கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘முதலாளித்துவத்தை’ நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தோம். எந்த வகையிலும் நம் லட்சிய உருவகமாக ‘நிலபிரபுத்துவம்’ இல்லை. எம்ஜிஆரின் படங்களில் கூட இதே கருத்தாக்கத்தின் நீர்த்துப் போன வடிவத்தைப் பார்க்கலாம். அவர் படங்களில் ஜமீன்தாராக, பண்ணையாராக நம்பியார் போன்ற வில்லன்களே வருவார்கள். எம்ஜிஆர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சிறு விவசாயியாகவோ, கூலியாகவோ வருவார். ஒரு விவசாயிக்கு உரிய எந்த சாயலும் இல்லாமல் காம்ப்ளான் குடித்து வரப்பில் வளர்ந்த அமூல் பேபியைப் போல பாட்டுப் பாடி புரட்சியைத் தூண்டுவார். பண்ணையாரின் மகள் நகரத்தில் படித்து விட்டு கிராமத்திற்கு வருவார். அவரை ஆற்றிலோ, சேற்றிலோ தள்ளி விட்டு அவர் உடை ஈரமாக இருக்கும் அந்தத் தருணத்தில் தமிழ்ப்பண்பாடு கலாச்சாரம் குறித்த சிறப்பு வகுப்புகளை எடுத்து அவரைத் திருத்தி விடுவார். தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்து கொண்ட அந்தப் பெண் அரைகுறை ஆடையோடு எம்ஜிஆரின் மசாஜ் சர்வீஸிற்கு தம்மை ஒப்புக் கொடுப்பார். நாமும் அதைக் காதலென்றே நம்பி விடுவோம். ஆனால் ஆண்ட்ரோஜன் ஹார்மோனாலும் கூட அவரது ஆக்ரோஷத்தை நிறுத்தி விட முடியாது. பாடல்களின் வாயிலாக உலகத் தொழிலாளர்களை நோக்கி அறைகூவிக் கொண்டேயிருப்பார். அந்தப் புரட்சி இடையிலோ, இறுதியிலோ நடந்து விடும். ஆம்; அந்தப் பண்ணையாரின் மகளை விவசாயத் தொழிலாளியான எம்ஜிஆர் மணந்து கொள்வார். வேறொரு படத்தில் பண்ணையாருக்கு பதிலாக ஆலை முதலாளி வருவார். ஆனால் கதை இதேதான். நிறைய அபத்தங்கள் இருந்தாலும் கூட அந்தப் படங்கள் சமூகத்தை பின்னோக்கி இழுக்கவில்லை.
இவர்களின் படங்களோ எம்ஜிஆர் படங்களுக்கு நேர் எதிர் திசையில் பயணித்தன. இந்தியா சுதந்திரம் அடையப் போகிற தருணத்தில் வெள்ளைக்காரர்களின் ஆங்கில அறிவையும் பாரில் மது குடிக்கும் ஸ்டைலையும் ஆங்கில நடனத்தின் அழகையும் பாராட்டி ஒரு படம் வந்தால் எப்படியிருக்குமோ அதற்கு நிகரானது தான் இது. எனக்கு சின்னக் கவுண்டர் தொப்புளில் பம்பரம் விடுவதோ, எஜமான் வைதீஸ்வரிக்காக பட்டாம்பூச்சி பிடிக்கப் போவதோ பெரிய பிரச்சினை இல்லை. தமிழ்ச் சமூகத்தின் சின்னச் சின்ன முட்டாள்தனங்களுக்கான திரை வடிவம் என்றே அதனை எடுத்துக் கொள்கிறேன். எஜமான் படம் வந்த போது எங்கள் ஊருக்கு பாரதி கிருஷ்ணகுமார் வந்திருந்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நினைவிலிருக்கின்றன. ‘பொண்டாட்டி வயித்துல இருக்கிறது புள்ளையா தலகாணியான்னு தெரியாத ஒருத்தனுக்கு எப்படிடா புள்ள பொறக்கும்?’. எஜமான் படத்துக்கான தலைசிறந்த விமர்சனம் அதுதான்.
இவர்களின் படங்களில் நான்கு விதமான பிரச்சினைகள் இருந்தன. பண்ணையார்கள் போன்ற நில உடைமையாளர்கள் மீது வலிந்து திணிக்கப்படுகிற புனித பிம்பங்கள், படிக்க வாய்ப்பு கிடைத்த பெண் சமூகத்தை ஆணின் அடிமையாக சித்தரித்தல், சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகத்தாலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மாபெரும் தலைவர்களாலும் நமக்கு வந்து சேர்ந்த நீதித்துறை, சமூகநீதி, அரசியல் சட்டம் ஆகியவற்றைப் புறந்தள்ளி கிராமப்புறத்தின் தனிநபர் நீதியை முன்னிறுத்துதல், சாதி சார்ந்த மதிப்பீடுகளை முன்னிறுத்தி இடைச்சாதிகளின் பெருமை பேசுதல் (பாராளும் வம்சம் இது என்று ஒருவர் மீசை முறுக்க கோவணம் அணிந்த பலர் ‘சாமி’ என்று சொல்வதுதான் என் பார்வையில் குழந்தைகள் பார்க்கக் கூடாத ஆபாசப்படம்) ஆகியவை இப்படங்களின் பிரச்சினைகள். ஒரு வணிகப் படத்திற்கு தர்க்கங்கள் தேவையில்லை என்றாலும் கூட பல்லாண்டுகளாக முயன்று பெற்ற மதிப்பீடுகளை அவை புறந்தள்ளி பின்னுக்கிழுப்பது கண்டிப்பாக விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றே.
‘சின்னக்கவுண்டர்’ படத்தில் விஜயகாந்த் ‘குஸ்தி வாத்யார்’ பற்றி தீர்ப்புச் சொல்வதை ஒரு மாவட்ட நீதிபதி காரில் உட்கார்ந்தபடி பார்த்து வியப்படைவதாக ஒரு காட்சி வரும். இந்திய நீதித்துறையை இதை விடக் கேவலமாக யாரும் அவமானப்படுத்தி விட முடியாது. என்னுடைய மாமா ஒருவர் வக்கீலாக இருக்கிறார். இந்த ஒன்றுக்காகவே விஜயகாந்த் பற்றி நீண்ட காலம் பேசாமல் இருந்தார். ஊர்விலக்கம் போன்ற முட்டாள்தனமான நிகழ்வுகளை வெள்ளையர்களே தடை செய்து விட்ட பிறகு அவை படங்களில் திருப்புமுனைக் காட்சிகளாக இடம்பெற்றதெல்லாம் சகிக்க முடியாத கொடுமை.
புள்ளை பெறுவதுதான் ஆண்மை என்றும் வீட்டுக்கு வந்த மருமகள் எல்லோரிடமும் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த இயக்குநர்கள் வீதிகளில் நின்று கூவினார்கள். நூற்றுக்கணக்கானவர்களோடு நடந்து வரும் தொழிலதிபர் நாட்டாமையின் முன்னால் கை கட்டி வாய் புதைத்து நிற்பார். முதலாளித்துவம் நிலபிரபுத்துவத்தின் முன்னால் அப்படிக் கை கட்டி நிற்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்குநர்களின் ஆழ்மன ஆசை. படித்தவர்கள் கெட்டவர்கள்; படிக்காதவர்கள் நல்லவர்கள். இதுதான் இவர்கள் கண்டறிந்த ஒரே உலக நீதி. படித்தவர்கள் பெண்களாக இருந்தால் ஆள் மயக்கும் மோகினிகளாகவே இருப்பார்கள். நாட்டாமை டீச்சர் சிறந்த உதாரணம். ஆளை மயக்கும் படித்த பெண்ணை பொன்னம்பலம் போன்ற கெட்டவர்கள் கற்பழித்து விடுவார்கள். அதற்காகத்தான் பெண்ணுக்குத் தேவையான அடக்க ஒடுக்கம் பற்றி குஷ்பூ மீனாவுக்கு பாடம் நடத்துவார்.
இவர்களின் படங்களில் ஒன்றிரண்டு விஷயங்கள் முற்போக்காகச் சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு இன்னொருவருக்கு சின்ன வீடாகி விட்ட பெண்ணின் மகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள் ‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதே படத்தில் முதலாளி மகளை பெண் கேட்கப் போனதற்காக அவன் அம்மாவை அடித்தே கொல்கிற காட்சி சாதாரணமான ஒன்றாக கடக்கப்பட்டு விடும். அதன் பின்னான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் சம்பந்தப்பட்ட தனிமனிதனுடையதாக மட்டுமே காட்டப்படும். பிறகு கார்த்திக்கே தன் நிலையை உணர்வது போலத் தான் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். சாதி மேலாண்மை, குடும்ப கௌரவம், அந்தஸ்து இவற்றைக் காப்பதற்காக கொலை வரை கூடச்செல்லலாம் என்கிற சித்தரிப்பே அங்கு இடம் பெற்றிருக்கிறது. இதே கதைதான் சூரிய வம்சத்திலும். இரவெல்லாம் படித்து ஒரே ஒரு பாட்டில் கலெக்டராகி விட்டாலும் பேனாவைக் கீழே போடுவது போல் நாட்டாமையின் காலில் விழுந்தால்தான் அவள் நல்ல பெண்.
சின்னக்கவுண்டர் படத்தில் படித்து விட்டு ஊருக்கு வருகிற ஒருவனின் பெட்டியைத் தூக்கி வந்து அவருக்கு சின்னக்கவுண்டர் பாடம் எடுப்பார். ‘உன்னை படிக்க வெச்ச எங்கப்பாரு என்னை படிக்க வெக்கல பார்த்தியா’ என்ற வசனத்தை சின்னக்கவுண்டர் ஏதோ கீதை ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிச் சொல்லுவார். அப்பாரு அனுப்பலையா அல்லது மைனர் குஞ்சுகளுக்கு மற்ற இடங்களைப் போல் மூளை வேலை செய்வதில்லையா? எப்படி இருந்தாலும் இந்த இயக்குநர்களுக்கு பொன்னம்பலம், நெப்போலியன் போல கல்வியும் ஒரு வில்லன்தான்.
இன்னொரு படத்தில் பணக்காரத் தந்தையே மகனை அடிமையாக வளர்க்கும்படி சொல்வார். அது பணத்திற்கு எதிரான ‘ஆன்மீகச் சிந்தனை(?)’ மாதிரி தோன்றினாலும் எஜமான விசுவாசத்தால் செய்யும் தியாகமாகவே நம் மனதில் பதிந்தது. போதாக்குறைக்கு படத்தில் வரும் மைனர் நாடக நடிகைகளை தேடித் தேடி சைட் அடிக்கிற கோவலன் காலத்து ஆசாமியாக சித்தரிக்கப்பட்டிருப்பார்.
இந்தப் படங்களோடு ஒப்பிட்டால் இதே தன்மையோடு எடுக்கப்பட்ட தேவர் மகனின் தனித்துவம் புரியும். அந்தப் பாடல், படத்தின் தலைப்பு, அந்தப் படம் புரிந்து கொள்ளப்பட்ட விதம் ஆகியவற்றின் மீது எனக்கும் எதிர்மறையான பார்வையே உண்டு. ஆனால் கல்வியை முன்னிறுத்துதல், தனிநபர் பஞ்சாயத்திற்கு எதிரான குரல், ஜனநாயக அமைப்புகளின் மீது நம்பிக்கை, வன்முறைக்கு எதிரான பார்வை ஆகியவற்றைப் பொறுத்தவரை அந்தப் படம் முற்போக்கானதுதான். பெண் சம்பந்தப்பட்ட பார்வையில் மட்டும் அந்த முற்போக்கு இல்லை. (கமல்ஹாசனின் பெண் விடுதலை எப்போதும் உதட்டு முத்தத்தில் துவங்கி, சேலையைக் கழட்டி ரவிக்கையில் டார்ச் அடிக்கும் போது ஒளிர்ந்து, பின்புறத்தைக் கடித்ததும் முடிந்து விடுகிற ஒன்றுதானே?) ஆனாலும் நாம் இன்றுவரை ‘தேவர் மகனை’ மட்டுமே திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த படங்கள் வெளிவந்த காலங்களில்தான் சாதாரண குடும்பங்களைச் சார்ந்த நிறைய பிள்ளைகள் கல்லூரிகளுக்குப் போனார்கள். அலுவலகங்களில் கணிப்பொறி வந்தது. மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தன. ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டால் பெண்ணின் கற்பு போய் விடாது என்ற உண்மையை பெற்றோர்கள் உணர ஆரம்பித்திருந்தார்கள். காதலிப்பதை தைரியமாக பலரும் வீட்டில் சொல்லி அதில் சிலருக்கு காதல் கல்யாணமும் வாய்த்தன. மணப்பெண்கள் மண்டபங்களில் அழுவதை நிறுத்தியிருந்தார்கள். அதற்கு பதிலாய் திருமணத்துக்கு முதல்நாள் நண்பர்களோடு தண்ணி போட்டு சில மணமகன்கள் அழ ஆரம்பித்திருந்தனர். ‘தாடி’ என்பது காதல் தோல்விக்கான அடையாளமாக இல்லாமல் ஸ்டைலான ஒன்றாக உருமாறியிருந்தது. ஒருவர் போன பிறகும் இன்னொருவரைக் காதலிக்கிற வழக்கம் ஆரம்பமாகியிருந்தது. குதிரை வண்டிகள் நிற்கிற இடங்களில் ஆட்டோக்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. மக்கள் ஹோட்டல்களில் குற்றவுணர்வின்றி சாப்பிடப் பழகியிருந்தார்கள். வீடுகளில் குடியேறி விட்ட வாஷிங் மெஷின், கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் தயவால் இல்லத்தரசிகள் தனியார் தொலைக்காட்சிகளில் படமோ,பாட்டோ பார்த்துக் கொண்டே பரபரப்பில்லாமல் பொறணி பேசினார்கள். ‘பஞ்சாயத்து’ என்பது அலுவலகமாக மட்டுமே பார்க்கப்பட்டது. மிக முக்கியமாக பண்ணையார்கள், ஜமீன்தாரர்களின் வெள்ளையடிக்காத அழுக்கு வீடுகள் இரவுகளில் மேட்டர் பண்ணுவதற்கும் பகல்களில் ஒளிந்து விளையாடுவதற்குமே பயன்பட்டன.
இந்தப் படங்கள் நன்றாக ஓடி விட்டதால் மக்கள் அந்த மதிப்பீடுகளை ஏற்று வாழ்க்கையில் பின்பற்றினார்கள் என்று நான் நம்பவில்லை. தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். ஏனென்றால் இதே காலகட்டத்தில் இது மாதிரியான படக்காட்சிகள் வேறுசில படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் கடுமையாகக் கிண்டலடிக்கப்பட்டன. மிகச்சிறந்த உதாரணம் விவேக்கின் ‘மைனர் குஞ்ச சுட்டுட்டேன்’. அவற்றையும் மக்கள் கொண்டாடத்தான் செய்தார்கள். ஆனால் இந்தப் படங்கள் சமூகத்தின் பொதுப்புத்தி மாறாமல் பழைய நிலையிலேயே இருப்பதற்கு உதவி செய்தன. உதாரணத்திற்கு ஒரு தந்தை மகளை கல்லூரி வரை அனுப்பி படிக்க வைத்துக் கொண்டே நண்பர்களிடம் ‘பொம்பள பொம்பளயா இருக்கனும்’ என்று கதைப்பதற்கு இது போன்ற படங்கள் உதவி செய்தன.
சினிமாவால் சமூகம் பெரிதாக மாறி விடும் என்றோ சினிமாவை வைத்தே சமூகத்தைப் புரட்டிப் போடலாம் என்றோ நான் நம்பவில்லை. ஆனால் சினிமா ஒரு கலையாகப் பார்க்கப்பட வேண்டும் என்றால் அதற்குள் சமகால வாழ்க்கையும் பண்பாடும் இருக்க வேண்டும். அந்த வகையில் எழுபது, எண்பதுகளில் நிகழ்ந்த சிற்சில மாற்றங்களையும் தூர எறிந்து விட்டு தொண்ணூறுகளின் சினிமா ஒரு பொய்யான உலகத்தை சிருஷ்டித்து அந்தப் பொய்யிலே இளைப்பாறிக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் நாம் முதலமைச்சர்களை முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கண்டெடுப்பதற்குப் பழகினோம் என்பது கண்டிப்பாக தற்செயலான ஒன்றல்ல. அந்த ‘நாட்டாமை’ படங்களிலெல்லாம் தவறாமல் பஞ்சாயத்திருக்கும். பஞ்சாயத்தில் ஒரு செம்புமிருக்கும். அந்தச் செம்பு ரொம்பப் பழசு என்று இப்போதாவது கூட நாம் உணர்ந்தால் போதும்.