இசையின் முகங்கள் (பகுதி 5): ஹரிஹரன்

by ஆத்மார்த்தி
0 comment

“ஹரிஹரன் என்னிடம் கேட்டால் என் வலது கையை வெட்டித் தருவேன்”, “என் உயிரையே தருவேன்” என்றெல்லாம் சொன்னவர்களைச் சந்தித்திருக்கிறேன். தொண்ணூறுகளின் ஆகச்சிறந்த பாடகர் என்று முதன்மையாக ஹரிஹரனைக் குறிப்பிட்ட பிறகுதான் வேறு யாரைப் பற்றியும் யோசிக்கவே முடியும். ஒன்பது மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கும் ஹரிஹரன் ஹிந்துஸ்தானி இசையில் தனக்கெனத் தனித் தடங்களை ஏற்படுத்தியவர். தொழில்முறைப் பாடகர்கள் யாரை விடவும் மிக அதிகமான சூப்பர் ஹிட் பாடல்களைச் சினிமாக்களில் பாடியவர்.

ஹரிஹரனின் குரல் மெடாலிக் தன்மையும் நம்ப முடியாத மென்மையும் இணைந்தொலிப்பது. ஒரு மாதிரி அந்தரங்கத்திலிருந்து பகடியை நோக்கி உடனே மாறுகிற குரல்வகை அவருக்கு வாய்த்தது. நவரசங்களையும் அநாயாசமாகப் பிறப்பித்து விடக்கூடிய குரல் அது. கண்ணீர் என்றால் கடுமையான கண்ணீரையும் புன்னகை என்றால் குதூகலத்தின் உச்சத்தையும் உரசிப் பார்க்க முடிவதான ஆச்சரிய இயல்பு அந்தக் குரலின் பெருமிதம்.

தேன்கூட்டைக் கலைத்தல் என்பது சரியான உதாரணம் ஆகாது. எறும்புப் புற்றைத் தெரியாமல் கால் மிதித்துக் கலைக்க நேர்கையில் அடுத்த ஒரு நிமிடத்துள் ஆனமட்டிலும் இரண்டு கால்களிலும் எக்கச்சக்கமான எறும்புகள் ஏறிக்கொண்டே கடிக்கவும் தொடங்கும். உடனே என்ன செய்தாவது முந்தைய நிம்மதிக் கணத்தின் நிலத்தைச் சென்றடைய உடலும் மனமும் ஏங்கும். காலால் காலைச் சுரண்டி எங்காவது தண்ணீர் வசப்படுகிறதா எனப் பார்த்து ஒருவழியாக அத்தனை எறும்புகளையும் உதிர்த்து முடிப்பதற்குள் சிறு சிறு வீக்கங்களுடன் போதுமடா சாமி என்று கையெடுத்துக் கும்பிடப் பார்க்கும் கால்கள். அப்படியான வினோதமான உடனடித் தன்மையோடு தன் குரலை மாற்றி மாற்றி ஆட்டம் காட்டத் தெரிந்தவர் ஹரிஹரன். அவரளவுக்குத் தன் குரலைத் தன் பேச்சுக்குக் கட்டுப்படுகிற செல்ல நாய்க்குட்டி ஒன்றெனப் பழக்கி வசம் செய்து வைத்திருந்த இன்னொரு பாடகரைச் சொல்லவே முடியாது. எந்தத் தொழில்முறைப் பாடகருக்கும் அவர்களது பெருமிதமாகவே அவர்தம் குரல் வினைபுரியும் என்பது மெய்தான். ஆனால் அசிரத்தையுடன் குரல் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல் போகிற போக்கில் அதை எடுப்பதும் வளைப்பதும் எடுத்தாள்வதும் நிறுத்தித் திருப்பிக் கட்டுப்படுத்திப் பெருக்கெடுக்கச் செய்து வித்தகம் புரிவதெல்லாமும் எல்லார்க்குமான திறமை அல்ல. அது வெகு சிலருக்கே வாய்த்த நல்வரம். ஹரி அப்படியான வரங்களின் மொத்தக் குத்தகைதாரர் என்றாலும் பொருந்தும். குரலா அது..? குழைந்து சரியும் மலைநதிப் பயணம்.

சார்பற்ற உலர்தன்மை ஹரியின் குரலியல்புகளில் கவனிக்கத் தகுந்த மற்றொன்று. அவரால் எந்த உணர்வையும் அப்படியே பிழிந்து தரவும் சட்டென்று விலகி வெளியேறவும் ஒருங்கே முடிந்தது. இது உண்மையில் சாஸ்த்ரிய சங்கீத விற்பன்னர்கள் கைக்கொள்வது. திரும்பத் திரும்ப மேற்கொண்ட பயிற்சியின் விளைவாக ஏற்படக்கூடிய வித்வமேன்மை இது. ஹரி இதனைத் திரைப்பாடல்களில் அனேக வாய்ப்புகளில் மெய்ப்பித்தார். பாடல் கலையில் ஹரிஹரன் தன்னியல்பாகவும் எளிமையாகவும் செய்து காண்பித்த மற்றொரு மாற்றம் அதுவரை வேறு யாருக்கும் வசப்படாத ஒன்று. இதுவும் ஹரி எடுத்த எடுப்பிலேயே எல்லோர்க்கும் விருப்பத்திற்குரிய பெருங்குரலாளராக மாறுவதற்கான காரணமாக விளங்கி இருக்கக்கூடும். அதென்னவென்றால் பாடல் பதிவாகிக் கேட்கும் அத்தனை தருணங்களிலும் தன்னை அதனூடே ஒட்டிக்காட்டுகிற ஹரி, திரையில் காண வாய்க்கையில் முற்றிலுமாக நடிக பிம்பத்துக்குள் பொருந்தி ஒலிக்க முனைந்ததுதான். இதனைச் சிலர் மறுக்கவும் கூடும். பாடகர் தெரிந்தால் பாடலைக் கேட்கையிலும் பாடலைப் பார்க்க நேர்கையிலும் ஒருங்கே தெரிவதும் அல்லது மறைவதும்தானே அய்யா நியாயமாக இருக்கும்? மந்திரவாதம் போல் கேட்கும் போது தெரிவதும் பார்க்கும் போது தன்னை முற்றிலுமாக அழித்துக்கொள்வதுமான குறளி வேலையை ஹரிஹரன் செய்து காட்டினார் பாருங்கள், அனாயாசம் இல்லையா?

மேலும் இயல்பு வாழ்வில் கேட்க வாய்க்கும் சாமான்ய குரல் வகைமைகள் எதிலிருந்தும் விலக்கம்கொண்ட வேறொரு குரலாக ஹரிஹரன் விளைந்தார். அவருடைய குரல் புதியது மட்டுமின்றிப் புதிர் நிறைந்ததாகவும் ஒலித்தது. பல சொற்களை அழகாக மட்டுமின்றித் தன் கையொப்பத்தின் நெளிவு சுழிவொன்றைப் போலவே தனதாக்கிக் காட்டிப் பித்தூட்டிய கலைஞராக இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாகச் சொல்வதானால் கோமாளியாக மாறுவேடம் பூண்டு வலம்வருகிற ராஜா ஒருவனது புன்னகையைப் போல் மர்மமும் கர்வமும் நிரம்பிய புதுவகை அன்பொன்றை உருக்கொடுத்துப் பாடியவர் ஹரிஹரன். எத்தனை மெய்யோ அத்தனை ரசவாதம், எத்தனை எளிமையோ அத்தனை மாந்திரீகம் எனக் கலவையான பேரெழிலாக அவரது குரல் நவஜாலம் புரிந்தது. தன்னை நிராகரிப்பவர்களையும் விரும்பச் செய்கிற மந்திரம் மிக்க குரல் அவருடையது. பாவனை, ஜோடனை, அலங்காரம், பிரம்மாண்டம். இத்தனைக்கும் நடுவில் எதோ ஒரு சின்னஞ்சிறிய இருள் புள்ளி ஒன்றில் உயிரைப் பிசைந்து தந்துவிடுகிற வல்லமை அவரது தனித்துவமாய் இருந்தது. அப்படிப் பல பாடல்களைக் கோத்தெடுத்துத் தன்மாலை செய்தவர் ஹரிஹரன். மொழிகளைப் புழங்குவதில் அவர் காட்டிய நேர்த்தியும் குரலை மேலாண்மை செய்வதில் அவர் கொண்டிருந்த ஒழுங்கும் அவரது பெயர் சொல்லும் பாடல்கள் பலவற்றைப் படைத்தன. ஒவ்வொரு இசைஞருடனும் தனதான முத்திரையைப் பதித்தார் ஹரிஹரன்.

ஏ.ஆர்.ரகுமான் ஹரிஹரன் இணை பல மாயங்களைப் பிறப்பித்திருக்கிறது. ரோஜா ரகுமானின் முதல் படம். “தமிழா தமிழா நாளை நம் நாளே” பாடலை ஹரிஹரன் பாடியிருந்தார். படத்தில் அந்தப் பாடல் முழுமையாக இடம்பெறவில்லை. அந்தப் படத்துக்கப்பால் புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, உழவன், திருடா திருடா, வண்டிச்சோலை சின்ராசு, டூயட், சூப்பர் போலீஸ், கிங் மாஸ்டர், மே மாதம், காதலன், பவித்ரா, கருத்தம்மா, புதிய மன்னர்கள் போன்ற 15 படங்களில் ஹரிஹரன் பாடவில்லை. தன் 17ஆவது படமான பம்பாய் படத்தில்தான் ஹரிஹரனைப் பாடச்செய்தார் ரகுமான். ரகுமானுடன் ஹரிஹரன் இணைந்த பல பாடல்கள் விதவிதமான வகைப்பாடுகளுக்குள் நின்றொலிப்பவை.

பம்பாய் படத்தின் கானமுகவரி என்றே “உயிரே உயிரே” பாடலைச் சொல்வேன். இதே படத்தில் “குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்” என்ற வேகப்பாட்டு ஒன்றையும் ஹரி பாடினார். உயிரே உயிரே காதலின் மின்னலுட்புறம் போல் ஒலித்த பாடல். பிரிதலின் வலியைப் பெருக்கி ஆடி கொண்டு பார்க்க விழைந்தது காதல். அதனை இசையினூடாகப் பாட விழைந்தது சூழல். இவ்விரண்டையும் குரல்வழியாகப் பெயர்த்தெடுத்து உருக்கொடுத்தது ஹரிஹரன் சித்ரா இணை.

எண்பதுகளில் தோன்றிய பாடல் வான்மீன் சித்ரா. தன்னோடு பாடுகிறவர் எத்தனை பெரிய மேதைமை கொண்டிருந்தாலும் சித்ரா தன்னுடைய பாடலாக மாற்றிக்கொள்வதில் சமர்த்தர். சோகத்தை அல்ல கண்ணீரை, வேதனையை அல்ல அதன் கனத்தை, துக்கத்தை அல்ல அதன் இருண்மையை, இன்னபிறவற்றை எல்லாம் தன் குரலால் எழுப்பிவிடக்கூடிய ஆற்றல் கொண்டவர் சித்ரா. அவரோடு ஹரி பாடிய முதல் தமிழ்ப்பாடல் அதுவரையிலான ஹரிஹரன் பாடல்களிலேயே மாபெரும் வெற்றியைப் பெற்றது. சித்ராவின் சரித்திரத்தில் இந்தப் பாடலையும் அவர் வழக்கம் போல் தன் பாடலாக மாற்றிக்கொண்டார் என்பதில் மாற்றமில்லை எனினும் இது ஹரிஹரன் பாடல் என்று எல்லோர் மனங்களிலும் பதிந்தும் போனது.

அந்தப் பாடலை சித்ரா மொழிகளில் வாய்க்காத மௌனமொன்றைக் குரல்வழிப் பெயர்த்தாற் போன்ற தொனியில் எடுத்தாண்டார். ஹரிஹரன் அதே பாடலின் தனக்கு வழங்கப்பட்ட பகுதியைக் காதலின் கம்பீரத்தைக் குழைத்துப் பொழிந்தார். ஒரு கிறக்கமான அந்தரங்கத்தை முதன்முதலாகத் துக்கம் வழிகிற சோகப் பாடலொன்றில் படர்த்த முடியும் என்பதை மெய்ப்பித்தவர் ஹரிஹரன். அந்தப் பாடலைத் தன்னைத் தவிர வேறாராலும் அப்படிப் பாடவே முடியாது என்பதை அழுத்தமும் திருத்தமுமாகப் படைத்துக் காட்டினார் ஹரி.

இன்று வரை மேடைக் கச்சேரிகளில் பலரும் ஒருவர் பாடியதைப் பிறர் வாங்கிப் பாடுவது இயல்பாக நடந்தேறுகிற ஒரு ஏற்பாடுதான். மேடையில் பாடல்களை நிகழ்த்துவது கலையின் கடினமான வெளிப்படு தருணம். அதன் எத்தனையோ மாற்றங்களில் சிற்சில அனுமதிக்கப்பட்ட சமரசங்களும் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் சில பாடல்களை மேடை நிகழ்வுகளில் பாட முடியாமற் போவதற்கு அதனுள்ளே இடம்பெற்றிருக்கக் கூடிய ஆர்கெஸ்ட்ரேஷன் எனப்படுகிற இசைக்கோர்ப்பு காரணமாக அமையலாம். பெருகிப் புழங்கியிருக்கும் வாத்தியங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பின்புலக் காரணங்கள் அத்தகைய மாற்றங்களை நிர்பந்திக்கலாம். ஆனால் அவற்றைத் தாண்டிய வேறொன்றாக ஹரிஹரன் பாடிய பல பாடல்களை வேறொருவர் பாடும் போது அந்தப் பாடலின் ஜீவன் எதோவொரு வழியில் குறைந்து சிதைவதாக இரசிகர்களை எண்ண வைத்தது அவரது தனித்துவம்.

“காதல் இருந்தால் வந்து என்னோடு கலந்து விடு” என்பதில் உள்ள காதல் என்ற சொல்லை ஹரி தன் உதடுகளினூடே பிறப்பிப்பதைப் போல் வேறொருவரால் இயலாது. இதைப் பல மேடை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிப் போட்டிகள் எனப் பல முறைகள் உணர்ந்திருக்கிறேன். இது ஒரு தருண உதாரணம். அவர் பாடல்கள் ஒவ்வொன்றுமே இதற்கான சாட்சியம் சொல்லுபவைதான்.

பொறாமைப்படவும் இயலாத பிரமித்தலை ஏற்படுத்துகிற கலைஞாயிறு ஹரிஹரன். அவரை அறிந்துகொண்ட தருணம் தொட்டு இன்று வரைக்கும் அந்த வியப்பு அப்படியே தொடர்ந்துகொண்டிருக்கிறது. குளிர்பதனப் பெட்டியில் வைத்து எடுக்கிற பண்டம்கூட சற்று உறைந்து காணப்படும். இத்தனை வருடங்களாக ஒரு குரல் அப்படியே இருக்கிறது, இருக்க முடிகிறது என்பதை நிரூபிக்கிறது என்றால் அது ஹரிஹரனின் குரல் மாத்திரம்தான். ஹரிஹரன் அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த அத்தனை குரல்களும் புதிய வேறொன்றாக மாற்றமாக விளைந்த பாடகர். ஒரு பெரிய காலம் இசையுலகில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எல்லா இசையமைப்பாளர்களுடனும் இணைந்து பணிபுரிந்து தனக்கென்று பேர் சொல்லக்கூடிய பல பாடல்களைப் பாடியவர் ஹரி.

ரஹ்மானுக்கும் ஹரிக்குமான டிஸ்கோக்ராஃபி இனிமையான பல கானப்பேழைகளைக் கொண்டிருக்கிறது. சுஹாசினி மணிரத்னம் இயக்கிய படம் இந்திரா. இதில் “நிலா காய்கிறது நேரம் தேய்கிறது” என்ற பாட்டை ஹரிணி ஒரு வெர்ஷனும் ஹரி இன்னொரு வெர்ஷனும் பாடினர். ஹரிணியின் குழந்தைமை ததும்புகிற பாடல் சன்னத்தூறல் என்றால் ஹரியின் தேன்மழைப் பொழிதலாகவே அந்தப் பாடலின் அடுத்த வெர்ஷன் ஒலித்தது. இரண்டையும் அடுத்தடுத்துக் கேட்பவர்கள் சிறு அலுப்பையும் உணரவிடாமல் பார்த்துக்கொண்டதில் பாடிய குரல்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பது சொல்ல வேண்டிய விஷயம். பின்னிசைச் சரடு கொஞ்சமும் மாற்றம் கொண்டிருக்கவில்லை என்பதற்கு அப்பால் குரல்கள் அவ்வண்ணம் காற்றளந்தன.

ராம்கோபால் வர்மா இயக்கிய ரங்கீலா அடைந்த இந்தியளாவிய வெற்றியில் அதன் பாடல்களுக்குப் பங்கு பெரியது. ஸ்வர்ணலதாவும் ஹரிஹரனும் சேர்ந்து “ஹே ராமா ஏ க்யாஹூவா” என்ற பாடலைத் தந்தனர். இரு குரல்கள் ஒரு பாடலில் எத்தனை தூரம் உருகவும் உருக்கவும் திளைக்கவும் தெளியவும் விலகவும் கலக்கவும் முடியும் என்பதற்கான சான்றுப் பாடல் இது. இன்றும் கேட்கையில் அதே புதியவொன்றின் தன்மையோடு ஒலிப்பது இதன் கூடுதல் விசேஷம். இந்தப் பாட்டு மொழிகளைக் கடந்த காவிய ஆன்ம அடைதல் ஒன்றைக் கேட்போரிடத்தில் சாத்தியம் செய்தது.

இந்தியனுக்காக “டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா” பாடலை ஹரிணியோடு இணைந்து பாடினார் ஹரிஹரன். முதல் வரியின் பெருவெற்றி எல்லோரையும் இந்தப் பாடலின் புறம் திருப்புவதை எளிதில் நிகழ்த்திற்று. மொத்தப் பாடலையும் தன் ஐஸ்பெட்டிக் குளிர்குரலால் வருடித் தந்தார் ஹரி. கமல்ஹாசனுக்கு அதுவரை வழங்கப்பட்ட பின்புலக் குரல்களின் வரிசையில் சேராத வேறொன்றாய்த் தனியே ஒலித்தது இந்தப் பாடலின் கனமிகுதி.

ரஜினிக்கு ரஹ்மான் இசைத்த முதற்படமான முத்து உண்மையிலேயே ரஜினிக்குப் பாடல் பாடுவது ஒருவகையில் சுலபம், இன்னொரு வகையில் மகா கடினம். எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், மனோ என ஒவ்வொருவருக்கும் தனித்து பெருவிருப்பப் பட்டியல் ஒன்றை ரஜினி இரசிகர்கள் எப்போதும் தாங்கி வருபவர்கள். அந்த வரிசையில் ரஜினிக்கு ஹரிஹரன் பாடிய முதல் பாடல் ஒரு பின்புலப் பாடலாக உதட்டசைவின்றி, அதுவும் சோகப்பாடலாக, அமைந்தது தற்செயலானது. இதில் ஹரி பாடிய “விடுகதையா இந்த வாழ்க்கை” அந்தப் படத்தின் அத்தனை மற்றப் பாடல்களையும் தாண்டித் தனியோர் இடத்தில் ஒலித்தது. “ஒருவன் ஒருவன் முதலாளி” அடைந்த வான்புகழுக்கு அப்பால் “குலுவாலியிலே” பாடலின் வினோதமான உதித் நாராயணனின் பாடலும் மனோவின் “தில்லானா தில்லானா” ஆகட்டும் இரண்டும் நின்றொலித்தன. இத்தனை பாட்டுகளைத் தாண்டித் தனக்கு வழங்கப்பட்ட ஒற்றையை எழுப்பி நிறுத்தியது ஹரிஹரனின் மேதைமை. “உனது ராஜாங்கம் இதுதானே, ஒதுங்கக்கூடாது மன்னவனே” என்றெல்லாம் எடுத்து வருபவரின் குரல் சட்டென்று யூ டர்ன் அடித்துக் குழையும் இடத்தில் இரசிகக்கூட்டம் கண்கலங்கி மனம் நெகிழ்ந்தது. ஹரியின் தனித்த இரசவாதம் இது.

மிஸ்டர் ரோமியோ படத்தில் உதித் நாராயணனோடு சேர்ந்து “ரோமியோ ஆட்டம் போட்டால்” பாடலைப் பாடினார் ஹரி. எம்ஜி.ஆர் எனும் பிம்பத்துக்கான குரல் சாயலோடு படைக்கப்பட்டது இந்தப் பாடல். இதனை அடியொற்றி மணிரத்னத்தின் இருவர் படத்தில் இடம்பெற்ற “கண்ணைக்கட்டிக் கொள்ளாதே” பாடல் கதைப்படி எம்ஜி.ஆரை நினைவுறுத்துகிற ஆனந்தன் எனும் பாத்திரத்துக்கானது. அதனையும் நசிவற்ற நற்குரலால் பாடி அயர்த்தினார். காதல் தேசம் படத்தில் கல்லூரிச்சாலை பாடல் ரஹ்மான் ஹரி இணையின் மற்றொரு பாடல். இந்த சீஸனில் அனேகமாகத் தமிழில் இயங்கிக்கொண்டிருந்த அத்தனை இசையமைப்பாளர்களின் முதன்மை விருப்பத் தேர்வாக ஹரியின் குரல் மாறியிருந்தது. தமிழிலும் தகர்க்க முடியாத தவிர்க்க முடியாத பாடகராக வலம் வரத்தொடங்கினார் ஹரிஹரன்.

பிரபுதேவாவுக்கு லவ் பேர்ட்ஸ் படத்தில் “மலர்களே மலர்களே” பாடலைச் சித்ராவோடு பாடினார். மின்சாரக் கனவு படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் “தங்கத் தாமரை மகளே” பாட்டுக்காகத் தேசியவிருது கிடைத்தது. அந்தப் படம் ஆடியோ ப்ளாஸ்ட் என்ற வகையில் சிகரம் தொட்ட பாடல்கள் அதன் அடையாளமாகவே மாறியது. அத்தனை பிரபலப் பாடல்களுக்கும் நடுவே இன்றும் நின்றொலிக்கும் காதலின் மனமுகிழ் மேளாவாகவே ஒரு பாடலைச் சுட்டிக்காட்ட முடிகிறது. ஷ்ரேயா கோஷலும் ஹரியும் பாடிய “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடல்தான் அது. அந்தப் பாடல் இளைய தலைமுறையினரின் மத்தியில் கொடும் காய்ச்சலைப் போலப் பரவிற்று. திசைகளெல்லாம் ஒலித்துத் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தது. அந்த ஆண்டின் பாடல்களில் முதலாவதாக மாறிற்று.

ப்ரவீன் காந்த் இயக்கிய ரட்சகனில் “சந்திரனைத் தொட்டது யார் ஆர்ம்ஸ்ட்ராங்கா” என்றாரம்பிக்கும் பாடலும் முக்கியமானது. சுஜாதா மோகனுடன் பாடிய டூயட் இது. சங்கமம் படத்தில் “ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க” என்ற வித்தியாசத் தெம்மாங்குப் பாடலைப் பாடினார் ஹரி. மெச்சத்தக்க உச்சம் ஒன்றைத் தன் குரலால் தொட்டடைந்திருப்பார் ஹரிஹரன். படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சூழலொன்றைப் பிரதிபலிக்கிற பாடலாகவும் இது அமைந்தது. ஜீன்ஸ் திரைப்படத்தில் ஒரு பாடல் “அன்பே அன்பே கொல்லாதே”. இந்தப் பாடலைப் பொறுத்தவரை இல்லாத ஒருத்தியை அவள் இருப்பதாக எண்ணிக்கொண்டு தன் மனத்தைத் திறந்து அவள் வரப்போவதாக நம்பி தன்னை மெழுகு செய்து உருக்கி உருகி ஒளிகொண்டு தீபமாய் மாறத் தலைப்பட்ட ஒருவனது மன வாதையை அழகுறப் பாடினார் ஹரிஹரன். காதலர் தினத்தில் “ரோஜா ரோஜா” பாடலின் சோக வெர்ஷன் ஒன்றினை ஹரி பாடியிருந்தார். ஜோடி படத்தில் “ஒரு பொய்யாவது சொல் கண்ணே” என்ற பாட்டு மெச்சத்தக்க காதல் லாலியாக ஒலித்தது. “தாளம்” மொழி மாறித் தமிழ் பேசிய இந்திப் படம் “தால்“. இதிலும் ஹரியின் கணக்கு ஒன்று கூடிற்று. அலைபாயுதே படத்தின் “பச்சை நிறமே”, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் “சுட்டும் விழி” எனத் தொடங்குகிற இன்னொன்று என ஹரி ரஹ்மான் கூட்டு தொடர்ந்துகொண்டிருந்தது. மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் “சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி” ஹரி, சுஜாதா மோகன், கார்த்திக், திப்பு எனப் பலரும் சேர்ந்து பாடிய கொத்துமலர். அதீதத்தைச் சற்று மட்டுப்படுத்தினாற் போல் முன்பின் முரணாகப் பயணிக்கிற மெட்டு வினோதங்களை ஒற்றிக் கலந்து உருட்டினாற் போன்ற வாத்திய ஓட்டம். இத்தனைக்கும் நடுவாந்திரம் யூகிக்க முடியாத இணைப்பிசைச் சரளிகள் என ரஹ்மானின் அற்புதங்களில் ஒன்றாக இந்தப் பாடல் அமைந்தது. தெனாலி, சிவாஜி தி பாஸ், பரசுராம், உதயா, நியூ போன்ற படங்களிலும் ரஹ்மானுக்காகப் பாடியிருக்கிறார் ஹரிஹரன்.

ஹரிஹரன் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார். தொழில்முறைப் பாடகர்கள் பலரைக் காட்டிலும் எளிய ஓடுபாதையில் விண்ணேகி உச்சம் தொட்டதைப் போலத் தோன்றினாலும் அவருடைய பாடல்கள் பலவிதமான அனுபவத் தூறல்களின் மழைமொத்தம். எந்த மொழியில் பாடினாலும் அந்த நிலத்தின் தன்மை, மொழியின் ஆன்மா- இவற்றை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு பாடுவதில் விற்பன்னர் என்று அவரைச் சொல்வது மெத்தப் பொருந்தும். பாடல் என்பதைச் சூழலிலிருந்து பெயர்த்தெடுக்காமல் பொதுவானில் அதற்கான மினுங்கலையும் இரத்து செய்யாமல் இரட்டைத் தோன்றலையும் மிகச்சரியாகப் பரிமளிப்பது அரிய கொடுப்பினை. அதனை மற்ற யாரை விடவும் நுட்பமாகச் செய்து காட்டியவர் ஹரிஹரன். அவர் தமிழில் 90களின் மத்தியில் அறிமுகமானதிலிருந்து சற்றேறக் குறைய பதினைந்து வருட காலம் மிக அதிகம் பாட வாய்ப்பு பெற்ற பாடகராகத் திகழ்ந்தார். அனேகமாக அந்தக் காலகட்டத்தில் இசையமைத்த எல்லோரின் இசையிலும் ஹரிஹரனுக்குப் பேர் சொல்லும் பல பாடல்கள் அமைந்தன. இந்திய மொழிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைப் போலவே டூயட், தனிப்பாடல் அதாவது ஸோலோ என இரண்டு வகையிலும் அதிகப் பாடல்களைப் பாடியவர் ஹரிஹரன்.

இளையராஜாவுடன் ஹரியின் முதல் இணைவு காதலுக்கு மரியாதை படத்தில் அமைந்தது. “என்னைத் தாலாட்ட வருவாளா” என்ற அந்தப் பாடல் தொண்ணூறுகளின் பிற்பாதியில் இளையராஜாவின் மாபெரும் எழுச்சிப் பாடல் என்று சொல்லத்தக்க பெருவெற்றியைப் பெற்றது. அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழில் பாடியிருந்தார் ஹரிஹரன். தென் மொழிகள் எல்லாவற்றிலும் சேர்ந்து நோக்கினால் நானூறு பாடல்களாவது இருக்கக்கூடும். அத்தனையிலும் சேராத புத்தம் புதிய வேறோரு பாட்டாக “என்னைத் தாலாட்ட வருவாளா” அமைந்தது. அந்தப் பாடல் ஒரு ஸ்பின் சோலோ. சுழன்று திரும்பித் தொடங்கி முற்றிக் கலைந்து பெருக்கெடுக்கும் இசையுருவ நதியோட்டம் அந்தப் பாடலின் நகர்தளமாயிற்று. எங்கோ சன்னதத்தின் ஆழத்தில் நின்றொலிக்கும் அதன் மைய இசையும் கேட்கிறதா என்று ஐயம் கொள்ளத்தக்க பவதாரணியின் தொடக்க ஹம்மிங் தூவலும் பாடலுக்குள் புகும் முன்பே ஒரு ஆன்ம அலசலை நிகழ்த்தித் தந்தன. பாடல் ஒரு நம்பக மந்திரத்தின் உச்சாடனமென ஆழத்திலிருந்து பாடுகிறாற் போல் ஒலித்தது. தேவைப்பட்ட தொனியை மிக அழகுற நிகழ்த்திக் காட்டினார் ஹரி. நின்று நின்று ததும்புவதாகட்டும் அடங்கிப் பெருகியதாகட்டும், வெகு நாட்களுக்கு அப்பால் முந்தைய அலைகளை எல்லாம் மீறி வான்தொட்ட பேரலையாய் நிகழ்ந்தது இந்தப் பாடல். காதலின் தனியாவர்த்தன நேர்த்திக்கடன் ஒன்றாகவே எல்லோர் மனங்களிலும் ஆழப் பதிந்தது.

நிலவே முகம் காட்டு படத்தில் “தென்றலைக் கண்டுகொள்ள மானே” என்ற பாடல் பெருவாரிச் சாலைகள் இரவின் பிடிக்குள் சுருண்டு அடங்குகையில் எதோவொன்றில் மாத்திரம் வெளிச்சக்கீற்று தென்படும் முரணழகைத் தனதே கொண்ட தொனியில் இந்தப் பாடல் முழுவதையும் பாடினார் ஹரி. சூன்யத்தின் இருளுக்குள் சிக்கித் தவிக்கிற மனித மனத்தின் தன்னியல்பை இசைத்தாற் போல் இதற்கான பின்னிசையை நல்கினார் ராஜா. பொண்ணு வீட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற “நந்தவனக்குயிலே இன்னிசை நீ பாடு” என்ற பாடல் அறியாமனம் ஒன்றின் வெள்ளந்தித் தெம்மாங்கெனக் காற்றை நிறைத்தது. “ஆயிரம் கோடி சூரியன் போலே” பாடலை வினீத் வாயசைக்க கரிசக்காட்டுப் பூவே படத்துக்காக இசைத்தார் ராஜா. கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான உணர்தல் கலப்பொன்றைக் குரல் வழி பெயர்த்தார் ஹரி. ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் நடிக்க ஹரி பாடிய “குயிலுக்குக் கூக்கூ” பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.

வினயன் இயக்கிய காசி மலையாளத்திலிருந்து தமிழில் மீவுரு செய்யப்பட்ட படம். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் ஹரிஹரனைப் பாடச்செய்தார் இளையராஜா. கதையின் நாயகன் கண்பார்வைத் திறன் அற்றவன். மனதின் பார்வையால் உலகங்களை அளப்பவன். தன் குரலால் சொலற்கரிய உணர்தலைப் பாடற்படுத்தினார் ஹரிஹரன். “நான் காணும் உலகங்கள்” பாடலை முதல் வரியைத் திகைப்பாக்கி அடுத்த வரியைக் குதூகலம் செய்து வினோதமான இரசவாதம் ஒன்றினைச் செய்து காட்டினார். அந்தப் படத்தில் “என் மனவானில் சிறகை விரிக்கும்”, “புண்ணியம் தேடி காசிக்குப் போவார்”, “ரொக்கம் இருக்கிற மக்கள்” என எல்லாப் பாட்டுமே தேன்தான், தித்திப்புதான் என்றானது. இதைப் போலவே என் மனவானில் படத்திலும் ராஜா இசையில் மூன்று பாடல்களைப் பாடினார் ஹரி. “என்ன சொல்லிப் பாடுவதோ” பெருங்கவனம் ஈர்த்த பாடல்வனம்.

மனசெல்லாம் படத்தில் ஒரு அற்புதமான ப்ரியத் தேடல் ஒன்றினைப் பாட்டில் வடித்தார் ஹரிஹரன். “நீ தூங்கும் நேரத்தில்” என்ற பாட்டு இரவை மடியாக்கித் தாலாட்டித் தூக்கந்தரும் தாயன்பின் பாடலுரு என்றால் தகும். ரமணா படத்தில் “வானவில்லே வானவில்லே” இன்றைக்குக் கேட்டாலும் மனத்தின் வெம்மை அத்தனையையும் கலைத்துக் குளிர்மை பொங்கும் விசித்திரமான மெல்லிசைப் பாடல். இதனை இவன் கண் விடல் என்ற கூற்று யார்க்கெல்லாம் பொருந்துமோ இசைஞானி இசையில் ஹரிஹரன் பாடிய பாடல் அத்தனைக்குமான பத்திரவார்த்தை அதுவாகக் கூடும்.

எண்ணிக்கையில் குறைவென்றாலும்கூட அர்த்தச் செறிவும் இசையின் பல்வேறு வகைமைகளின் பரீட்சார்த்தமும் பொங்கிப் பெருக்கெடுக்கும் விதவிதமான பாடல்களை இளையராஜா இசையில் ஹரிஹரன் பாடியிருக்கிறார். இருவரின் சரிதத்திலும் இடம்பெறத்தக்க அர்த்தப்பூர்வ இசைக்கூட்டு என்பது நிச்சயமான உண்மை.

தேவா அறியப்பட்டு நிதானமான வெற்றியை அடைந்த படம் அண்ணாமலை. அதற்கு முன்பே வைகாசி பொறந்தாச்சு, சூரியன், வசந்தகாலப் பறவை எல்லாம் வந்திருந்தன என்றாலும் அண்ணாமலைக்கு அப்பால் தேவாவின் இசை வாழ்க்கை டாப் கியரில் பறந்தது. ஆசை அஜீத்குமார் நடிப்பில் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான படம். அதில் ஹரிஹரன் “கொஞ்ச நாள் பொறு தலைவா” என்ற பாடலைப் பாடினார். உண்மையில் பதின்ம வயதினருக்குத் தாலாட்டுப் பாடுவதுதான் கடினமான விசயம் என்பது என் எண்ணம். அபாரமான விழிப்புநிலையை எப்போதும் முன்னெடுக்க விரும்புகிற இளமனங்களைத் தாலாட்டித் தூங்க வைத்தது இந்தப் பாடலின் பெரிய வெற்றி. இதற்கடுத்து கல்லூரி வாசல் படத்தில் “என் மனதைக் கொள்ளையடித்தவளே” என்ற பாடல் கவனிக்க வைத்தது. கமல் படமான அவ்வை ஷண்முகி படத்தில் “காதலி காதலி” என்று உருகினார் ஹரி. அடுத்து வந்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் “உன் உதட்டோரச் செவப்பே” பாடல் மனதைக் கிள்ளி மருதாணி அரைத்துப் பூசிக்கொண்டது. அந்த வருடத்தின் அதிரிபுதிரிகளில் ஒன்றாக எல்லோராலும் விரும்பப்பட்டது. மெலடி என்றாலே அதற்கு முன்பிருந்த இலக்கணங்களை உரசிப் பார்த்த பாடல்களை ஹரி தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டிருந்தார். அவரது தனித்துவ பலம் மென் மெலடிப் பாடல்களின் வித்தியாசங்களாகப் பெருக்கெடுத்தது. கனகாத்திரம் முடிவடையும் இடத்திலிருந்து ஒரு மென்மையைப் பூக்கச்செய்து அதனைத் தன் தொனியாக்கிப் பாடுவது ஹரிஹரனின் சிறப்பம்சம். அதனை நன்கு உணரச்செய்த பாடல்களில் இதுவொன்று.

தேவாவும் ஹரிஹரனும் சாக்லேட் கூட்டணி என்றால் தகும். “ஒரு மணி அடித்தால் கண்ணே” பாடல் காதல் வாழ்க படத்தில் முரளியின் தொடர்பிம்பச் சோகச்சித்திரம் ஒன்றின் கூடுதல் வர்ணக்குழைதலாகவே விளைந்தது. பெரிய தம்பி படத்தில் “தாஜ்மஹாலே” பாடலில் காதலின் தாளங்களைத் தன் குரலால் உருக்கித் தட்ட முனைந்தார் ஹரி. அந்தக் காலகட்டத்தில் “ஹரிஹரனா கூப்பிடு”, “ஒரு சோலோ மெலடியைத் தட்டிவிடு” என்றாற் போல் பல படங்களின் ராசிப்பிள்ளையாகவே அவர் கருதப்பட்டார். பாடல்களும் தொடர்ந்து பிரபலமாகியதும் அந்த வண்டியின் ஓட்டத்தைத் திசைமாற்ற விடாமல் தடுத்திருக்கக்கூடும். சிஷ்யா படத்தில் “யாரோ அழைத்தது போல்” என்ற பாடல் அந்த வகையிலானது. நேருக்கு நேர் படத்தில் “எங்கெங்கே எங்கெங்கே” என்ற டூயட் ஒரு ஹிட் என்றால் “அவள் வருவாளா” என்று ஹரிஹரன் கூவிக் கேட்ட கேள்வி காதலர் தேசத்தின் அத்தனை நெஞ்சங்களிலும் ஆணி போல் இறங்கிற்று என்றால் அதுதான் நிஜம். ஒரு மாதிரி மென் சோகமும் விரைவும் மாறி மாறிக் கிளைத்துப் பிரிகிற பாடல் அது. அத்தனை காற்றையும் ஆண்டது.

எதைத் தொட்டாலும் பொன் என்பார்கள் இல்லையா அப்படித்தான் ஹரி-தேவா இணையும். ஆஹா படத்தில் “முதன்முதலில் பார்த்தேன் காதல் வந்தது” என்று தொடங்குகிற பாடல் ஒரு லவ்-லாலி. நினைத்தேன் வந்தாய் படத்துக்காக “வண்ண நிலவே வண்ண நிலவே” என்று உருகிக் குழைந்தது குரலூற்று. ஆனந்த மழை தெலுங்கிலிருந்து மொழிமாறி வந்த தெம்மாங்கு. இதில், “ஒரு நாள் உனை விழிகள் பார்க்க” என்று தொடங்குகிற ஆனந்தச் சித்திரவதை ஒன்றைப் பாடித் தந்தார் ஹரி. இந்தப் பாடல் ஒரு தலைக்காதலின் சொல்ல முடியாத வாதையின் தூக்க முடியாத பாரமொன்றைப் பாடலின் வழியே பெயர்த்துத் தந்தது. அத்தனை காரணமுமாய் ஹரிஹரனின் குரல் நின்றது. உன்னைத் தேடி படத்தில் “மாளவிகா மாளவிகா” என்று பெயர்ச்சொல்லில் தீ மூட்டிப் பூ மீட்டினார் ஹரி. நினைவிருக்கும் வரை படத்தில் “ஓ வெண்ணிலா” என்ற பாடலினூடே காதலெனும் உணர்வின் உச்சத்தைப் பிழிந்தெடுத்தார் ஹரிஹரன். இசைவழி வலி பெயர்த்தார் தேவா. வாலி படத்தில் இடம்பெற்றது பொய்மையின் சத்தியமாய் ஒரு பாடல், “சோனா..ஓ சோனா” அந்த வருடத்தில் அதனளவு வானளந்த பாடல் வேறில்லை. பம்மல் கே சம்மந்தம் படத்தில் “சகலகலா வல்லவனே” என்ற பாடல் கமலுக்காக ஹரிஹரன் உருகித் தந்த நேச சாட்சியம்.

இதே ஜோடி முகவரி, குஷி, இனியவளே, வேட்டிய மடிச்சுக் கட்டு, உன்னுடன், புதுமைப்பித்தன், சின்ன ராஜா, நெஞ்சினிலே, ஆனந்தப் பூங்காற்றே, கண்ணோடு காண்பதெல்லாம், கனவே கலையாதே, மின்சாரக் கண்ணா, அழகர்சாமி, ஊட்டி, ஹலோ, அப்பு, கண்ணால் பேசவா, உயிரிலே கலந்தது, சீனு, ஏழையின் சிரிப்பில், சிட்டிசன், லவ்லி, என்புருஷன் குழந்தை மாதிரி, அழகான நாட்கள், ரெட், சொக்கத் தங்கம், தம், காதல் சடுகுடு, விரும்புகிறேன், சூரி, எங்கள் அண்ணா, வியாபாரி, ஆறுமுகம், சூரியன் சட்டக்கல்லூரி எனப் பல படங்களில் இணைந்து பாடல் வனைந்தது.

ஹரிஹரன் தேவா காலத்தால் அழியாத பல பாட்டுகளைப் பொட்டலம் கட்டிக் காற்றில் எறிந்தவர்கள். பாட்டத்தனையும் பனியாய்ப் பூவாய்த் தேனாய் மும்மாரிப் பொழிதற் துளிகள் என்றால் மிகையில்லை.

கார்த்திக் ராஜா இசையில் ஆல்பம் படத்தில் “செல்லமே செல்லம் என்றாயடி” பாடல் நீரற்ற நதி. காதலா காதலாவில் “லைலா லைலா” பாடலைக் கேளுங்கள். கிணற்றில் தொலைத்த பொருளை மீட்டெடுக்க ஒரு வஸ்துவைப் பயன்படுத்துவார்கள். அதைக் கயிற்றோடு பிணைத்து உள்ளே துழாவித் திரும்ப அள்ளும் போது தொலைத்ததைத் தவிரவும் பல்வேறு சங்கதிகளைக் கொண்டுவந்து தரும். அப்படியான அளைதலைப் போலத்தான் இந்தப் பாடலைப் பாடினார் ஹரி. அத்தனை ஆழத்தில் அந்தக் குரலால் இயங்க முடியும் என்பதை யூகித்ததற்கே கார்த்திக் ராஜாவைப் போற்றலாம். அந்தப் பாடலின் இசையைத் தவிர்த்து குரலை மட்டும் நம்மால் இலயிக்கவே முடியாத வண்ணம் இசையும் குரலும் அப்படிச் சேர்ந்து இயைந்து குழைந்து பெருகும். அழகான பாடல் இது.

“கொஞ்சும் மஞ்சள் பூக்கள்” பாடல் உல்லாசம் படத்துக்காக உருவானது. அந்த ஆண்டு கலக்கல் பாடலாக அதைத்தான் சொல்ல முடியும். அப்படி ஒலித்தது அந்தப் பாட்டு. நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் இரண்டு ஹிட் பாடல்கள்- “இந்தச் சிறுபெண்ணை அங்கு பார்த்தேன்”, “கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா” என்று இரண்டுமே பெரிதாய் ஒலிவலம் வந்தவை. அடுத்தது டும் டும் டும் படத்துக்காக “ரகசியமாய் ரகசியமாய்” பாடல். காதலின் அத்தனை அர்த்தங்களையும் ஒரே இடத்தில் குவித்துப் பார்க்கும் நேசவெறியைப் பாடலூடாய்ப் பெயர்த்துத் தந்தார் ஹரி. டும்டும்டும் படமே ஒரு கலாபூர்வச் சிற்பம். காலத்தின் அழியாத கல்வெட்டுச் சொல் போல எஞ்சியுயிர்க்கும் அற்புதம். அதன் மேன்மைக்குரிய பாடல் வைரமாகவே நா.முத்துக்குமாரின் ஒளிரும் சொற்களில் அமைந்த இந்தப் பாடலைச் சொல்ல வேண்டும். ஹரிஹரனும் சாதனா சர்கமும் குரலால் வாழ்ந்து காட்டிய அதிரூபப் பாடல் இது. சொற்பமே கார்த்திக்ராஜா இசையில் பாடினார் என்றாலும் ஹரிஹரனின் செல்வந்தப் பாடல்கள் அவை என்று தைரியமாய்ச் சொல்லலாம்

யுவனின் முதல் படத்தில் முதல் பாடலே ஹரிஹரன் பாடியதுதான். “ஆல் தி பெஸ்ட்” என்று அர்த்தத்தோடு யுவனின் கானக்கணக்கைத் தொடங்கித் தந்தவர் ஹரி. அந்தப் பாடல் நன்கு பிரபலம் அடைந்தது. வஸந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே” பாடல் தனக்கேயுரிய ஸ்டைலில் அதனை அடித்து நொறுக்கினார் ஹரி. இதே படத்தில் “இரவா பகலா குளிரா நிலவா” பாடல் மென்மழைத் தூவானத்தின் சாட்சிய கானமாய் ஒலித்தது. பழனிபாரதியின் வரிகளுக்குக் குரலால் உயிரள்ளித் தந்தார் ஹரி. உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் “வெண்ணிலா வெளியே வருவாயா” பாடல் கார்த்திக் வாயசைப்பில் வானளைந்த பாடல். பெருவலம் வந்தது. ரிஷி படத்தில் “வா வா பூவே வா” உள்ளிட்ட இரு பாடல்களைப் பாடினார் ஹரி. அஜீத்தை உச்சத்திற்குக் கொண்டுசென்ற படங்களில் ஒன்று தீனா. காதலின் வதங்கலைச் சொல்லும் “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” பாடலை ஹரி பாடிய விதம் கானவழிக் காவியம். குரலூடாடிய வண்ணமயம். சொல்லித் தீராத ஆச்சரியம். யாரடி நீ மோகினிக்காக மனத்தை உருக்கி மழையினூடே வார்த்தாற் போல் ஈரமும் சாரமுமாய்ப் பாடிய பாடல் “வெண்மேகம் பெண்ணாக உருவானதோ” இந்தப் பாடல் வான் தாண்டிய குரல்கலம் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அத்தனை பிரபலம்! மௌனம் பேசியதே, வேலை, பாப்கார்ன், மனதைத் திருடி விட்டாய், புதிய கீதை, எதிரி, பேரழகன், தாமிரபரணி, மச்சக்காரன், பதினாறு போன்ற படங்களிலும் யுவனோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார் ஹரிஹரன்.

வித்யாசாகருக்கும் ஹரிஹரனுக்குமான புரிதல் வித்தியாசமானது. இந்த இசையிணை பல இரசிக்கத் தகுந்த பாடல்களை உருவாக்கி இருக்கிறது. “ஒரு தேதி பார்த்தா” பாடல் விஜயின் வரைபடத்தில் ஆரம்பகால ஹிட்களில் ஒன்று. கோயமுத்தூர் மாப்பிள்ளைக்காகப் பாடினார் ஹரி. ப்ரியம் படம் அருண்குமாரின் ஆரம்பகாலப் படங்களிலொன்று. படம் பெரிதாய் ஜெயிக்கவில்லை. பாடல்கள் அதகளம் செய்தன. அந்த ஆண்டின் அத்தனை உதடுகளும் உச்சரித்தே ஆகவேண்டும் என்று ஆணை பிறப்பித்தாற் போல இந்தப் படத்தின் பாடல்கள் வலம்வந்தன. “உடையாத வெண்ணிலா” பாடல் அதன் டைட்டில் சாங். அதனைப் பாடினார் ஹரி. உமா ரமணனோடு ஹரி பாடிய “பூத்திருக்கும் வனமே வனமே” பாடல் ஒரு கானமஞ்சரி. மெச்சத்தக்க வகையில் பாடினார் ஹரி. நிலாவே வா படத்தில் “நீ காற்று நான் மரம்” என்ற பாடல் காதலின் புதிய ஆகமமாகவே ஒலித்தது என்றால் நிஜம். விஜய் தன் நடிக வாழ்வில் அடுத்த நிலையை அடைந்திருந்த சமயம் அது. அஜீத்துக்கு உயிரோடு உயிராக படத்தில் “அன்பே அன்பே நீ என் பிள்ளை” பாடலும் அதே வகைமைதான். இரண்டு பாடல்களையும் சித்ராவோடு சேர்ந்து பாடினார் ஹரி. வேதம் படத்தில் “மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே” என்ற பாடல் வித்தியாசமாய் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அள்ளித் தந்த வானம் படத்தில் “தோம் தோம் தித்தித்தோம்” என்ற பாடல் மறக்க முடியாத மற்றொன்று. லிங்குசாமியின் ரன் திரைப்படத்தில் “பொய் சொல்லக்கூடாது காதலி” என்ற பாடலை, அன்பு படத்தில் இடம்கொண்ட “தவமின்றிக் கிடைத்த வரமே” பாடலை, மேலும் வில்லன் படத்தில் “ஒரே மனம் ஒரே குணம்” பாடலை  அவை வெளிவந்த நாட்களில் உச்சரித்துப் பார்க்காத உதடுகளே இல்லை எனலாம்.

பரத்வாஜ் மெலடி பாடல்களுக்காகப் பெரிதும் கொண்டாடப்படும் இசைஞர். அவருடைய பாடல்கள் ஒருவிதமான மனோநிலையைத் தயாரித்து அதன் மீது பயணம் செய்பவை. “வானும் மண்ணும் ஒட்டிக்கொண்டது” பாடலை இந்த இணையின் மகாவெற்றிப் பாடலாக முன்வைக்கலாம். இன்றும் கேட்க இனிக்கும் பாடல் இது காதல் மன்னன் படத்துக்காக ஹரிஹரன் பாடியது. மொட்டுகளே மொட்டுகளே (ரோஜாக்கூட்டம்), உன்னைப் பார்த்த கண்கள் (ரோஜாவனம்), இதற்குப் பெயர்தான் (பூவேலி) போன்ற படங்களிலும் இந்த இணை உருவாக்கிய பாடல்கள் உள்ளன.

எஸ்.ஏ.ராஜ்குமார் தனித்த நகர்பாதையில் ஒலித்து அடங்கவல்ல மென்மெலடிப் பாடல்களை உருக்கொடுப்பதில் விற்பன்னர். சூர்யவம்சம் படத்தில் “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” கடலாழம் வானுயரம் இரண்டையும் ருசித்த பெருவெற்றிப் பாட்டு. இதே படத்தில் “காதலா காதலா” என்ற டூயட்டும் உண்டு. மம்முட்டி நடிப்பில் மறுமலர்ச்சி படத்தில் “நன்றி சொல்ல உனக்கு” சூப்பர் ஹிட் அடித்த பாட்டு. அவள் வருவாளா படத்துக்காக “வந்தது பெண்ணா” பாடினார் ஹரி. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் “ஏதோ ஒரு பாட்டு”, “தொட்டபெட்டா” இரண்டுமே சிறந்தன. துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கான “தொடு தொடு எனவே”, “இருபது கோடி நிலவுகள் கூடி” ஆகிய இரண்டுமே கனகாத்திர மின்னல்கள். “என் கண்ணாடித் தோப்புக்குள்ளே” என்று தொடங்குவது மலபார் போலீசுக்காகப் பாடித் தந்த மதுரகானம். நீ வருவாய் என படத்தில் அட்டகாசம் செய்த “ஒரு தேவதை வந்துவிட்டாள்” பாடலும் மனத்தை நீவி வருடும் மெல்லிசைப் பாட்டொன்றுதான்.

செல்லமே படத்தில் “ஆரிய உதடுகள் உன்னது” என்ற பாடல் புகழ்ப்புழுதி கிளப்பி ஒலித்த பெரும்பாடல். ஹாரிஸ் ஜெயராஜூடன் இணைந்து பல மலரணைய பாடல்களை உருத்தந்தார் ஹரிஹரன். துப்பாக்கியில் “குட்டிப்புலிக் கூட்டம்”, “வெண்ணிலவே” ஆகிய இரண்டு பாடல்களும் இனித்தொலித்தன. வாரணம் ஆயிரம் படத்தில் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” மறக்கவிடாத மாயவலி ஒன்றாகவே மனத்தைத் துளைத்தது. பீமா படத்தில் “முதல் மழை என்னை நனைத்ததே”, “இரகசியக் கனவுகள்” என இரண்டு பாட்டுகள் ஐஸாய் உருகி வழிந்தோடிப் பனி நதிகளாய்ப் பெருகின. தேவ்-அனகா, அனேகன்- தொடுவானம், இரண்டாம் உலகம்- ராக்கோழி ராக்கோழி, என்றென்றும் புன்னகை- என்னை சாய்த்தாளே, கோ -அமளி துமளி ரசவளி, சத்யம் -ஆறடிக் காத்தே, அயன்- பளபள என்று இவர்கள் இருவரின் இரசவாதப் பட்டியல் பெருக்கெடுத்தது.

சிற்பி இசையில் “நான் வானவில்லையே பார்த்தேன்”“குமுதம் போல் வந்த குமரியே” ஆகிய இரண்டு பாடல்களுமே மூவேந்தர் படத்தில் இனித்து ஒலித்த தித்துப்புப் பாடல்கள். ஜானகிராமன், பூச்சூடவா, ராசி, பெரிய இடத்து மாப்பிள்ளை, கண்ணன் வருவான் உள்ளிட்ட படங்களில் சிற்பியோடு சேர்ந்தொலித்தார் ஹரிஹரன்.

மற்றவர்களைப் பொறுத்தமட்டிலும் சொல்லாமலே படத்தில் “சொல்லாதே சொல்லச் சொல்லாதே” பாடல் மறக்க முடியாதது. இதற்கு இசை பாபி. அமிர்தம் என்ற படம் பவதாரணி இசையில் “என் காதலே” ஒரு இனிய எண்ணாய் ஒலித்தது. டி.ராஜேந்தரின் இசையில் மோனிஷா என் மோனலிசாவுக்காக “உயிரே வா உறவே வா” பாட்டை யாருக்குத்தான் பிடிக்காது? ஒவ்வொரு சொல்லையும் தன் குரலால் வருடியபடி கண்ணீருக்கு முந்தைய கணத்தின் கனமத்தனையும் பாடலில் விரவித் தந்தார் ஹரி. பல்லவியின் இறுதியில் “உண்மைக்காதல் தோற்குமா உந்தன் மனம் என்னை ஏற்குமா” என்ற இடத்தைக் கடக்கும் போது காதலின் வாதையைப் பன்மடங்கு பெருக்கி ஒலித்தார் ஹரி.

பகடிப் படமான தமிழ்ப்படத்தில் “ஓ மஹ ஸீயா ஓ மஹ ஸீயா” பாடலை பொய்யை நெய்யாக்கி உருகினார் ஹரி. தெறி படத்தில் “என் ஜீவன்” பாடலை சைந்தவியுடன் பாடினார். இதற்கு ஜிவி ப்ரகாஷ் இசைத்திருந்தார். டி.இமான் இசையில் விஸ்வாசம் படத்தில் “வானே வானே” பாடலை ஷ்ரேயா கோஷலோடு இணைந்து தேன் கலந்த தென்றலாய்த் தெளித்தார் ஹரி. “நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி” என்று பாடும் போது அத்தனை பாந்தமாய் ஒலித்தது. மாறாப் பொன்னழகாய் ஹரிஹரனின் குரல் காலவெள்ளத்தை எதிராடி ஒலிக்கிற பேரழகுப் பாடல் இது.

“மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி” ரஞ்சித் பரோட் இசையில் வி.ஐ.பி.க்காக ஹரி பிளந்து கொடுத்த அன்புப் பாளம். இன்றெல்லாம் கேட்டாலும் அலுக்காத பேரிசையும் நற்குரலுமாய்க் கிளைத்துப் பெருக்கெடுக்கும் ஆனந்தவெள்ளம் இந்தப் பாட்டு. கிடைக்காமல் கிடைத்த காதலை, பேரன்பின் பெருமலர் ஒன்றை, தாளவொண்ணாத சருகுத் தருணம் ஒன்றை கண்கள் நிறைய நெஞ்சம் உருக குரலால் சாட்சி சொன்னாற் போல் பாடித் தந்தார் ஹரி. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தீர்க்கும் பிரபுதேவாவுக்கு ஹரிஹரனின் குரல் சரிநிகர் சமம் என்றாகி ஒலித்தது.

கமல் நடிப்பில் அயர்த்திய தசாவதாரத்தில் “கல்லை மட்டும் கண்டால்” என்ற பாட்டை ஹிமேஷ் ரஷேமியா இசையில் நெக்குருகினார். பெரியண்ணா படத்தில் பரணி இசையில் “நிலவே நிலவே” என்று தொடங்கும் பாடல் பானகம் தெளித்துப் பன்னீர் வார்த்த பாடல்களிலொன்று. டபுள்ஸ் படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் “நான் இப்போ ஊரைச் சுற்றும் காற்று” என்று இரசிக்க வைத்தார் ஹரி. சிவாவின் இசையில் பூமகள் ஊர்வலம் படத்தில் “மலரே ஒரு வார்த்தை பேசு” என்ற பாட்டில் பட்டையைக் கிளப்பினார்.

1998 ஆமாண்டில் வைரமுத்து எழுத்தில் உத்பல் பிஸ்வாஸ் இசையமைப்பில் காதல் வேதம் என்றோர் ஆல்பம் வந்தது. இதன் டூயட் பாடல்களை சுஜாதா மோகன் பாடினார். ஹரிஹரன் சிகர உச்சத்தில் இருந்த போது வெளியான ஆல்பம் இது. திரை சாராத வெளியின் மிக முக்கியமான விளக்காகவே இதனைச் சொல்ல முடியும். எட்டுப் பாடல்களை இதற்காகப் பாடினார் ஹரி. அத்தனையுமே ஜீராஜிலேபி வகை காதல் லாலிகள். கேட்பவரைக் கண் விரியச் செய்யும் கான வழித் தீ நடன முத்திரைகள். கேட்கத் தீராத இன்பமாக இதனைப் புரிந்தார் ஹரி. காதல் வேதம் ஆல்பத்தைப் பொறுத்தவரை அது ஹரிஹரன் பாட ஹிந்தியில் “Halka Nasha” என்ற பெயரில் ஆல்பமாக வெளிவந்து தமிழில் மொழி மாறி உருவானது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன் ஆகிய மூன்று பிரம்மாண்டக் குரல்களுக்கு அப்பால் 90களில் பாடவந்து 90களின் மொத்தப் பாட்டுலகைத் தன்னால் ஆனமட்டிலும் சலனிக்கச் செய்த பாடகர் ஹரிஹரன். மறக்க முடியாத பாடல்களை மேற்சொன்ன வெல்ல முடியாத பாடகர்களின் படர்க்கையில் ஓடிச்சென்று சாத்தியம் செய்தது உண்மையிலேயே சாதனை. புதிய குரல்களைத் தேடுவது எப்போதும் திரையுலகில் இருக்கக்கூடிய ஆகம முறைதான் என்றாலும் ஹரிஹரன் நிஜமாகவே ஒரு மின்னல் போலத் தோன்றினார். புயல் போல நிகழ்ந்தார். அவர் அகழ்ந்த புகழ்நிலம் அளப்பரியது. தான் பாடிய அனேகப் பாடல்கள் பிரபலமான திரும்பத் திரும்பக் கேட்கச் செய்த பாடல்கள் என்பது எண்ணிக்கையினூடாகச் சிரமமாய்த் தோன்றவல்ல காரியம். பாடல்கள் கூடக்கூட இந்த வெற்றிகர சதமானம் குறைந்துகொண்டே வருவது இயல்பான மாற்றம். ஹரிஹரன் பாடியவற்றில் எண்பது சதவீதப் பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்களாகவே அமைந்தது தற்செயல்-அதிர்ஷ்டம் என்றெல்லாம் சொல்லித் தீர்த்துவிட முடியாது. அது பாடல் சரிதத்தில் அபூர்வமான சாதனை.

ஆண் குரலின் ஆகச்சிறந்த கம்பீரத்தைக் குரலினூடாகப் பிறப்பிப்பதில் வல்லவராக ஹரிஹரன் திகழ்ந்தார். சட்டுச் சட்டென்று மாறித் தழுதழுத்துக் கலைந்து கலைத்துப் பெருக்கெடுத்து மீண்டும் ஓங்கி வானளைந்து ராஜ நடனம் செய்கிற நம்ப முடியாத பேராச்சரியம் அவருடைய குரல் வாகு. அவரால் எத்தனை கனமான பாடலிலும் மிருது சேர்க்க முடியும். எந்த ஒரு ஸ்தாயியிலிருந்தும் சட்டென்று கீழிறங்க முடியும். எம்மாதிரிக் குறுகலான சந்தடி மிகுந்த பாடல் நடுவிலிருந்தும் விண்ணேகிக் கூர் நாசி கொண்டு வானைக் கிழித்தெறிய முனையும் வல்லமைப் பறவை ஒன்றாக மாயவாதம் புரிய முடியும். பகடியும் எள்ளலும் வேண்டுமட்டும் உண்டுபண்ண முடிந்த அதே குரலால் வாதையை, தோல்வியின் தாளவொண்ணாத சிடுக்குத் தருணத்தை, இயலா மௌனத்தை, தேம்பவும் கதறவும் இயலாமல் தனக்குள் புதைத்துக்கொள்ள நேர்கிற சுய வதங்குதலை இன்ன பிறவற்றை எல்லாமும் குரலாக்கிப் பாடலினூடே பிறப்பித்துக் காட்ட முடியும். தீராத ஆலாபனை என்று ஹரிஹரனைப் பார்க்கும் போது ஒரு தடவை தோன்றியது.

என் சினேகிதன் பரணிக்கு மிகவும் பிடித்தமான குரல் என்று ஹரிஹரனைச் சொல்லும் போது எப்போதும் ஒரே ஒரு பாடலைச் சொல்லமாட்டான். அந்தக் காலத்தில் எது மேலோங்கி நிற்கிறதோ அந்த ஹரிஹரன் பாடலைத்தான் தனக்கு மிகவும் பிடித்ததாகச் சொல்வான். அப்படித்தான் விஸ்வாசம் படத்தின் “நீதானே” பாடலைக் கேட்டுவிட்டு நெடுநாட்களுக்குப் பிறகு ஒரு இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான். தூரம், காலம், நேரம், உலகம், வாழ்வு, வயது என எத்தனையோ மாறிவிட்டிருக்கிற வாழ்க்கையினுள்ளே மாறாத சிலவும் அப்படியே தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்றான். ஆமாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அப்படியான மாறாத சிலவற்றுள் ஃப்ரீஸரில் வைக்கத் தேவையற்ற புத்திளம் ஹரிஹரனின் குரல்வாகைச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. மாறாத சிலவற்றின் குரலும் அதுதான் இல்லையா..? ஹரிஹரன் அளக்கவும் கலைக்கவும் இயலாத குரல் பேருரு. எப்போதும் ஒலிக்கும் குரல்.

வாழ்க இசை!

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்
  2. வீ.குமார்
  3. ஷ்யாம்
  4. மலேசியா வாசுதேவன்