சகலமுமாகி விட்ட பூதம்

by மானசீகன்
0 comment

மனித இருப்பே இரண்டே இரண்டு சொற்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒன்று அன்பு ; மற்றொன்று அதிகாரம். நாம் அன்பை பிறரிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டே அதிகாரத்தை இன்னொருவருக்குப் பரிசாகத் தருகிறோம். இந்த முரண்தான் நம் வாழ்வின் மிகப்பெரிய சிக்கல். உண்மையில் மனிதகுலம் கண்டடைந்திருக்கிற நாகரிகம் என்பதே அதிகாரத்தின் கை மாறல்தான்.

எல்லா மதத் தொன்மங்களிலும் இதற்கான தடத்தைப் பார்க்க முடியும். பழமோ , பாம்போ அங்கே ஒரு பிரச்சினை அல்ல. அதிகாரத்திற்குக் கட்டுப்படாமைதான் ஏதேன் தோட்டத்தில் இருந்து மனிதனை வெளியேற்றியிருக்கிறது. அதற்கு அவன் தானாக உருவாக்கிக் கொண்ட அல்லது உருவகித்துக் கொண்ட அன்பு காரணமாய் இருந்திருக்கிறது. அடி முடியைக் காண முடியாத பிரம்மாவும் விஷ்ணுவும் சைவ அதிகாரத்தின் சாட்சிகள். அந்த வெற்றியை உருகி உருகிப் பாசுரமாகப் பாடுவது கடவுளின் மீதான பேரன்பாகக் கட்டமைக்கப்படுகிறது .

மிக நுணுக்கமாகப் பார்த்தால் கற்பு, பண்பாடு, திருமணம், ஒருவனுக்கு ஒருத்தி ஆகிய  கோட்பாடுகளால் அதிகாரம் அன்பை தன் மற்றொரு பகுதியாக மாற்றிக் கொண்டு விட்டது. அதாவது உனக்கு அன்பு வேண்டும் என்றால் அதிகாரப் படிநிலையின் ஏதோ ஒரு இடத்தில் நீ இருந்தாக வேண்டும். ‘வினையே ஆடவர்க்கு உயிர், வாள்நுதல் மகளிர்க்கு அவ்வாடவர் உயிர் ‘ என்பது காதலை அதிகாரம் கைப்பற்றிய வரலாற்றைச் சொல்கிற எளிமையான சொல்லாடல்தான். இந்த இடத்தில்தான் அதிகாரம் ஆண்பாலாக, உயர் வர்க்கமாக, மேல் சாதியாக தன்னைக் கட்டமைத்துக் கொண்டது. பெண்ணை அன்பின் உருவாகச் சித்தரித்து அவளை தியாகத்தின் மூலமாகவும் கீழ் வர்க்கத்தினரை ‘விசுவாசத்தின்’ மூலமாகவும் தனக்குள் கொண்டு வந்தது.  இதனை நாம் தட்டையாக அர்த்தப்படுத்திக் கொண்டு இதனை யாரோ ஒருவரின் அல்லது ஓர் இனக்குழுவின், பாலினரின் சதியாக மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. பிரபஞ்சம் வெடித்ததற்கும் அமீபா பிறந்ததற்கும் பின்னால் எப்படி எந்த சதியும் இல்லையோ அது போன்றதே இதுவும். இதன் நோக்கங்களை சந்தேகித்து பழியை யார் மீதும் போட முடியாது. விளைவுகளை மட்டுமே மதிப்பிட முடியும்.

நன்றாக கவனித்துப் பார்த்தால் அதிகாரம் நன்கு நிலை பெற்ற பிறகே  ‘அறம்’ தோன்றியிப்பதை உணர முடியும். அறத்தை அதிகாரத்தின் எதிர்சக்தியாக நாம் கணித்து விட முடியாது. வெளிப் பார்வைக்கு அப்படித் தோன்றலாம். நிஜத்தில் அது அதிகாரத்துடன் உரையாடி அதன் இருப்பை தக்க வைக்கிறது. அறம் இல்லாமல் போயிருந்தால் ‘அதிகாரம்’ அழிந்திருக்கும். நாம் மீண்டும் அந்த பொதுவுடைமை சமூகத்திற்கோ , ஏதேன் தோட்டத்தின் கனவுகளுக்கோ திரும்பியிருப்போம். அப்படி நிகழாமல் தடுத்தது அறம் மட்டுமே. ஒரே நேரத்தில் அது அதிகாரத்தின் பேருருவத்தை மட்டுப்படுத்திக் கொண்டே அது செத்துப் போய் விடாமல் ஆக்ஸிஜனும் அளித்திருக்கிறது.  இது ஆச்சர்யமான முரண். நோயை உருவாக்கும் கிருமியே அந்த நோயின் கொடுந்தீங்கிலிருந்து காப்பாற்றுவதற்கு நிகரானது இது. இப்படிச் சொல்வதால் நான் அறத்தை சிறுமைப்படுத்துவதாக பொருள் கொள்ள வேண்டாம். வரலாற்றில் அதன் நிஜமான இடத்தைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். அவ்வளவே.  ‘யாதும் ஊரே ;  யாவரும் கேளிர்’ என்கிற தொடரை நாம் தமிழர் மெய்யியலின் அன்பு சார்ந்த உச்சமாகவே கருதி வருகிறோம். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அதன் மீது வேறொரு பார்வையை முன்வைக்கிறார். சிற்றரசுகள் பேரரசுகளாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்ட வேறொரு தேசத்தின் குடிகளை உளவியல் ரீதியாக தம் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்காக பேரரசுகள் கண்டறிந்த அறமாகவே அதனை மதிப்பிடுகிறார். இதுதான் சரியான பொருள் என்று நான் வாதாடவில்லை. ஆனால் இதனை ஏற்பதற்கான வரலாற்று நியாயங்கள் அப்படியே இருக்கின்றன.

‘முற்றுநீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்’ என்று பாடிய நக்கீரனும் , ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே ‘ என்று முழங்கிய ஔவையும், ‘மன்னவனும் நீயோ?  வளநாடும் உனதோ ?  உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்?’ என்று சுயமரியாதையின் உச்சத்தில் நின்று கூவிய கம்பனும் கண்டிப்பாக அதிகாரத்தின் எதிர்க்குரல்கள்தாம். ஆனால் அதிகாரம் நுட்பமானது. எதிர்க்குரல்களையும் தின்று செரிக்கிற பெரிய வயிறு அதற்குண்டு. போர்ப்பறைகளையும் ஊதுகுழல்களாக அதனால் மாற்றி விட முடியும். அந்த விஷயம் போர்ப்பறைகளுக்கே தெரியாது என்பதுதான் மற்றொரு ஆச்சர்யம் . இந்த இடத்தில்தான் நாம் இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அறம் என்பது பிரபஞ்ச நீதியிலிருந்து வேறுபட்ட ஒன்று. அது முழுக்க முழுக்க மனிதர்களின் எதிர்வினை. எப்போதாவது பிரபஞ்ச நீதி அறமாக ஒலிக்கும். ஆனால் கவனியுங்கள். அவற்றில் தீர்வு இருக்காது. தீர்வை முன்வைக்கிற அறம் ஏதோ ஒரு விதத்தில் அதிகாரத்தின் துணையாகி விடும். இல்லையென்றால் அதிகாரம் கை மாறுவதற்கு அது துணை நிற்கும். பிரபஞ்ச நீதி அப்படியல்ல.

‘பரந்து கெடுக உலகியற்றியான் ‘ என்கிற சீற்றத்தில் எந்தத் தீர்வும் இல்லை. அது ஒரு தரிசனம் மட்டுமே. தரிசனங்கள் தீர்வுகளாக தொகுக்கப்படுகிற போதுதான் அவை ஏதோ ஒரு தரப்பின் அதிகாரத்திற்கு பக்கவாத்தியமாகி விடுகின்றன. புனிதநூல்களில் வெளிப்படும் அறம் வெளிப்பார்வைக்கு மனதை செம்மைப்படுத்த உதவுகின்றன. ஆனால் அவை தம் ஆழத்தில் அதிகாரத்தின் துணைக்கருவியாகவே உருமாறி நிற்கின்றன. நெருப்பால் சுடப்படும் பொலிவற்ற  இரும்பு அழகான வாளாகிறது. அந்த வாள்தான் ரத்தபலி கேட்கிறது. நெருப்பின் நோக்கம் இரும்பை செம்மைப்படுத்துவது என்றாலும் அதன் விளைவு யுத்தம்தான்.

எல்லா அமைப்புகளிலும் அதிகாரம் இருக்கும். ஆனால் அதன் துணை விளைவாக அன்பால் நெய்யப்பட்ட அமைப்பாக நாம் குடும்பத்தைக் கருதிக் கொண்டோம். அது நிஜத்தில் அப்படி இல்லையென்றாலும் கூட அந்த பாவனை வெகு நீண்ட காலம் ஆண்களுக்கான ஆறுதலாக நீடித்தது. அமைப்பின் அதிகாரம் சாதாரணர்களிடம் ‘பொதுநலத்தை’  வேண்டி நிற்கும். ‘நாட்டுப்பற்று’ ‘ இனம்’ ‘குடி’ ‘மதவிசுவாசம்’ ‘புரட்சி’ என்று அவை விதவிதமான பெயர்களில் நம்மிடம் நம்மை பலி கேட்கும். மிகப்பெரிய பொதுநலமாகக் கருதப்படும் இவை அதிகார வேட்கையின் அப்பட்டமான சுயநலன்கள். இதற்கு நேர்மாறான  தளத்தில் குடும்பம் நிலைபெற்றிருக்கும். பொதுநலத்தில் நாம் முழுமையாக  ஈடுபட முடியாமல் நம்மைத் தடுக்கும் சுயநல சக்திகளாக இவையே கருதப்படும். வேறொரு அர்த்தத்தில் அதுவே நிஜமான பொதுநலமாக மன ஆழத்தில் இருக்கும். இதை இப்படி விளக்கலாம். தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்பதன் வாயிலாக ஒருவன் சமூக மனிதனாகிறான். அப்படிச் செய்வதுதான் பொதுநலன் என்கிற கருத்தாக்கம் அவனை உந்தித் தள்ளுகிறது. அதன் வாயிலாக அதிகார அடுக்கில் அவனும் ஒரு கண்ணியாகிறான். இதற்கு நேர்மாறாக குடும்பத்தின் மீது பற்றுக் கொண்ட ஒருவன் இதனைப் புறக்கணித்து சாதாரணமான மனிதனாக வாழ்கிறான். அவன் வெளிப்பார்வைக்கு சுயநலம் கொண்ட எளிய உயிரி. ஆனால் அவன் தன் உறவுக்காக செய்கிற தியாகங்கள் அவனுக்கானவை மட்டுமே. சமூகத்தளத்தில் அதற்கான பெறுமதி கிடையாது. அதிகாரத்திற்கு உதவாத எவையும் இங்கு சுயநலமாகவே சுருக்கப்படும்.

இந்த இடத்தில்தான் ‘பணம்’ என்கிற கருதுகோள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது . அதிகாரத்தின் உச்சத்தைப் பெறுவதற்கு பணமே அடிப்படை. ஆனால் அதிகாரத்தின் துணைக்கருவியாக இருக்கிற ‘மதம்’ பணத்தை சாத்தானாகச் சித்தரித்தது. ஆகவே ஒரு சாதாரண மனிதன் பணத்தை தேடிக் கொண்டே அந்த குற்ற  உணர்விலிருந்து தப்பிக்க அதிகாரத்தின் விசுவாசியாய் தன்னை மாற்றிக் கொள்கிறான். நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், நவீன கால அரசுகள் என்று பல்வேறு காலகட்டங்களில் இவையே பல்வேறு மாறுபாடுகளுடன் நீடித்தன . நிலபிரபுத்துவ காலத்தில் ‘விசுவாசம்’ என்றால் முதலாளித்துவத்தில் ‘உழைப்பு’ சாதாரண மனிதனை அதிகாரத்தின் கண்ணியாக்கியது. நவீன அரசுகள் இந்த இடத்தில் கொள்கை கோட்பாடுகளுடன் கூடிய ‘தேசியத்தை’ முன்வைத்தன. அனைத்து காலகட்டங்களிலும் ‘பணம்’ அமைப்பிற்கு வெளியே இருக்கிற ஆதரவாளனாகவே நீடித்து வந்தது.

உலகமயமாக்கல்தான் இந்த நிலையை தலைகீழாக மாற்றியது . கார்ப்பரேட் யுகத்தில் ‘அமைப்பு ‘ என்பது ஸ்தூலமாக இல்லாமல் சூட்சமமான ஒன்றாக உருமாறி விட்டது. இங்கு வெகுகாலம் அதிகாரத்தை சுவைத்து வந்த பால் , வர்க்க , சாதிப் படிநிலைகள் உடைக்கப்பட்டு விட்டன . சகலரும் அதன் பயனாளிகள்தாம். சகலரும் அதனால் பாதிக்கப்படுகிறவர்தாம். ஆனால் அதன் உச்சத்தில் யார் இருக்கிறார் என்று யாருமே கணித்து விட முடியாது.  நிஜத்தில் அப்படிப்பட்ட ஒருவரோ , குழுவோ , நாடோ இல்லை. அவை யாவுமே நம் கற்பனைகள் மட்டுமே. இதற்கு முந்தைய காலங்களில் யாரோ ஒருவர் அல்லது குழு முன்னிலைப்படுத்தப்பட்டது. இப்போது அப்படியல்ல. உங்கள் குற்றச்சாட்டுகளும் கூட கார்ப்பரேட்டின் இன்னொரு வடிவமாகத் தொடரும். நிறைய பேர் கற்பனை செய்து கொள்வது போல அது அமெரிக்க மேலாண்மையோ , யூத சதியோ ,  பார்ப்பன ஆதிக்கமோ மட்டுமே அல்ல . எவையெவை சமூகத்தில் முன்னகர்ந்து சமூகத்தின் மையக்கருத்துக்களாக நிலை பெற்றிருக்கின்றனவோ அவற்றை கார்ப்பரேட் உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தும். அது அமெரிக்காவில் ஒன்றாகவும் தமிழ்நாட்டில் வேறொன்றாகவும் இருக்கும். இந்த நெகிழ்வுத்தன்மைதான் அதன் பலம். இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த நெகிழ்வுத்தன்மையை யாரோ ஒருவர்  கண்ணில் மண்ணைத் தூவி நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நாம் மிகையாகக் கற்பனை செய்து கொள்கிறோம். உண்மையில் நம் எல்லோரையும் அது விழுங்கி விட்டது . உள்ளிருந்தபடி நாம் போட்டுக் கொண்டிருக்கும் சண்டைகளும் அதன் அசைவுகளே.

பிக்பாஸ் நிகழ்ச்சி கார்ப்பரேட் தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணம். ஒரே நிறுவனம் தயாரித்தாலும் ஒவ்வொரு மொழியிலும் பிக்பாஸ் வேறுபட்ட தன்மைகள் கொண்டதாகவே இருக்கிறது . இந்தி பிக்பாஸில் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழித்து விட்டு ஒரு சாமியார் கல்லூளி மங்கனைப்  போல் உட்கார்ந்து கொள்ள முடியும் . தமிழில் டாஸ்க்கிற்காக பொய் சொன்னாலே கமலஹாசன் ஆயிரம் கேள்விகள் கேட்பார். அது ஒன்றும் கமலஹாசனின் தனிப்பட்ட அறவுணர்வோ , தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெற்றியோ கிடையாது. அவ்வாறு கருதிக் கொள்வதைப் போல் ஒரு சுய ஏமாற்று எதுவுமே இல்லை. நாம் இதனைத் தலைகீழாக புரிந்து கொள்கிறோம். அதாவது இந்தி பிக்பாஸ்தான் கார்ப்பரேட்டின் நிஜமான முகம் என்றும் , தமிழ்நாட்டில் அவர்கள் ஒரு முகமூடியை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பி விடுகிறோம் . நம்முடைய நீண்ட கால பாரம்பர்யமும் , பண்பாடும்தான் அவர்களை இந்த நிலை நோக்கித் தள்ளியதாக நமக்கு நாமே பெருமிதப்படுகிறோம். அது உண்மை அல்ல ; ஏகாதிபத்திய, நவமுதலாளித்துவ கருத்துக்கள் மட்டுமல்ல கம்யூனிஸ , திராவிட , தமிழ்தேசியக் கருத்தியல்களைக் கூட கார்ப்பரேட் தனதாக்கிக் கொள்ளலாம். ஒருபுறம் டை கட்டித்தான் ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வேட்டியும் சேலையும் கட்டிக் கொண்டு பொங்கல் கொண்டாட உற்சாகப்படுத்தும். அவற்றுக்கு பொங்கல் மட்டுமல்ல டையும் கூட முக்கியமில்லை. இரண்டுமே பாவனைகள்தாம். நவீனத்துவத்திற்கு வெளியில் இருப்பவர்களாக ஐரோப்பியர்களால் சித்தரிக்கப்படும் அரபிகளை சல்மான் எனும் வலையை வைத்து கார்ப்பரேட் உலகம் தனக்குள் கொண்டு வந்து விட்டது . இது நன்மையோ, தீமையோ அல்ல. இது இவ்வாறுதான் நிகழ முடியும். வேறு மார்க்கங்களே இல்லை. நீங்கள் தப்பி ஓடுகிற திசையும் அதே கட்டிடத்திற்குள்தான் வந்து முடியும். இப்போது உலகின் மிகப்பெரிய  அமைப்பு வணிகம் மட்டுமே. பிற எல்லா அமைப்புகளுமே அதன் துணைக்கருவிகளாகி விட்டன .

இன்னொரு மிக முக்கியமான மாற்றமும் நடந்திருக்கிறது. கார்ப்பரேட் உலகில் நமக்கு நேரடி எஜமானர்கள் யாருமில்லை. வரலாற்றில் பல யுகங்களாக துன்புறுத்தப்பட்ட சாமான்யர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். இன்னொன்று கார்ப்பரேட் சமூகத்தையும் குடும்பத்தையும் ஒன்றாக்கி விட்டது. இரண்டையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் கலாச்சார நிறுவனங்களும் அதற்குள் வந்து விட்டன. நாம் நாமாக இருந்தாலே போதும். அதுவே நம்மை உறவுசார் மனிதனாக , சமூக மனிதனாக , கலாச்சார மனிதனாக உணர வைத்து விடும். கடந்தகால இருமைகளான சுயநலம் × பொதுநலம் என்கிற கோட்டை அது அழித்து விட்டது. அதன் வழியாகவே நாம் சம்பாதிக்கிறோம். உறவுகளை உருவாக்கிக் கொள்கிறோம். அதுவே இந்த உலகின் மிகப்பெரிய அமைப்பாகவும் இருக்கிறது. ஆக சுயநலம் பொதுநலம் இரண்டும் அதுவேதான்.  ஆகவே  இரண்டையும் சமப்படுத்த இப்போது அறமும் கூடத் தேவையில்லை. வரலாற்றில் முதல்முறையாக அறத்தின் துணை இல்லாமலே நாம் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் .

வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் அதிகாரம் கை மாறிக் கொண்டேயிருந்திருக்கிறது. அது தந்த ஆசுவாசத்தால்தான் மனிதன் அதிகாரத்தைச் சகித்துக் கொண்டேயிருந்தான். இப்போது கையே இல்லாத ஒரு வெளியில் அதிகாரம் சுழன்று கொண்டிருக்கிறது. அதனை எப்படி இன்னொரு கைகளுக்கு மாற்றி விட முடியும்?

எதிரிகளே இல்லாத மாபெரும் மிருகம் அது. கடவுள் , சாத்தான் என்று உணராமலே புனையப்பட்ட இரட்டை உருவகங்களை நிஜமாக்கி தன்னை இரண்டாகவும் உணரச் செய்து கொண்டிருக்கிற அபூர்வ சக்தி அது. எப்படிச் சிக்கினோம் என்று தெரியவில்லை. அது துப்பும் வரை நாம் உள்ளேதான் இருந்தாக வேண்டும். அதுவும் அதன் கைகளில்தான் இருக்கிறதா ? நம்மிடம் எதுவும் இல்லையா? அதன் கைகளில் கூட இல்லாமல் வெற்றிடத்திலிருந்து பஞ்சபூதங்களை மலர்த்திய ஒரு பேரன்பின் கரங்களில் கூட அதற்கான முடிவிருக்கலாம். அதுவரை கார்ப்பரேட்டுகளின் மடியில் அமர்ந்தபடி கார்ப்பரேட்டுகளை விமர்சித்துக் கொண்டேயிருப்போம் .