பாற்குடங்கள்

0 comment

ஆளரவமற்ற நீண்ட பிரகாரத்தில் வெகு நேரமாய் நிற்கிறேன். யாளி முகம் தாங்கி நிற்கும் கற்தூணில் கொடிமங்கை. என் கண்கள் அவள் மார்பையே உற்றுப் பார்த்திருக்கின்றன. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்க்கிறேன். யாருமில்லை. கோபுர மாடத்திலிருந்து புறாக்கள் படபடத்து அணைகின்றன. கண்கள் மீண்டும் மங்கையின் மார்பில் படிகின்றன. சிற்பியின் கற்பனையா? இல்லை இவள் இப்படித்தான் நின்றாளா? மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் பெண்கள். எல்லோர் மார்புகளும் இதே வடிவில். இதே அளவில். விரல்கள் தொட்டுப்பார்க்கத் துடிக்கின்றன. அழகைக் காட்டி நிற்கும் இவற்றை கோவிலுக்குள் ஏன் நிறுத்தவேண்டும். இப்படி உற்றுப் பார்த்திருப்பதை யாரும் பார்த்தாலே சங்கடம்தான். எல்லோருக்கும் பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கும். பார்த்தும் பார்க்காததுபோல ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு ஓடி நகர்வார்கள். மனமெல்லாம் இவற்றை எண்ணியே மாய்ந்திருக்கும். கொடிமங்கையின் கச்சிதத்தை வியந்தபடியே வீடு வந்தபின் உடைமாற்றுகையில் கண்ணாடியில் என்னைப் பார்த்து அவளுடன் ஒப்பிட்டு நின்றேனல்லவா? அவளைப் போலில்லை நான். ஆனாலும் அவள் சிலை. கற்சிலை. நான் உயிர்கொண்டு நிற்கும் உண்மை. சிரித்தபோது இன்னும் அழகாய் இருந்தேன். அழகாய் இருந்தேனா? சிரிப்புதான் வருகிறது. சிரிக்கும்போது வலிக்கிறது.

காய்ந்த உதடுகள் வலித்தன. தாகம். எதையாவது குடித்தால் தேவலை. உதடுகளை நாக்கால் தடவியபோது என்னவோ ருசி. உப்பும் கசப்புமாய் குமட்டியது. என்ன வாசனை இது? மூக்கு நுனியை எரியச் செய்யும் நெடி. ஏற்கெனவே நன்கு பரிச்சயமானதுதான். நீண்ட இலைகளுடனான நாவல் மரத்தின் கிளைகள் ஓசையுடன் உரசும் இரண்டாம் தளத்தின் மேற்குப்புற படிக்கட்டு வழியாக இறங்கும்போது மூக்கைப் பொத்திக்கொள்வேனே? அதே நெடிதான். அந்தப் படிகளை அடுத்திருந்தது வேதியியல் பரிசோதனைக்கூடம். பீக்கரில் ஊதா திரவம் கொதிக்க தனிமமென்றும் கனிமமென்றும் சுகந்தி உதடுகளைச் சுழித்து விளக்கிக்கொண்டிருப்பாள். சுகந்தியின் குரலா இது? மலையாளத்திலா பேசுகிறாள்? இருக்காது. யாரோ என்னை உற்றுப் பார்க்கிறார்கள். நிச்சயமாய். கண்களைத் திறந்து பார்க்கவேண்டும். கண்ணிமைகளின் மேல் என்னவொரு கனம். தொடுகை பெண்ணுடையது போலத்தான் உள்ளது. மலையாளக் குரல் இவளுடையதுதானா? இவள் என்ன செய்கிறாள்? ஏன் என்னை பார்க்கவிடாது என் கண்களை இப்படி கட்டிவைத்திருக்கிறாள்? ஏதோவொரு வலி சுருக்கென்று தைக்கிறது. பின் மெல்ல மெல்ல நகர்ந்து உடலெங்கும் ஊர்கிறது. வலிக்கு எத்தனை கால்கள். பூரானுக்கு நூறு கால்கள். புரவிக்கு ஆயிரம் கால்களாமே? இந்த வாசனை வலியின் வாசனையா? உடல் மிதக்கும் மரகதக் கடலெங்கும் வலியின் அலைகள்தானா?

அலைகள் ஆவேசத்துடன் மோதித் தெறிக்க ஓடி வருகிறாள் மனிஷா. அவள் நீல துப்பட்டா விலகிப் பறக்கிறது. இப்போது திரைவேகம் குறைகிறது. ஏறித் தாழும் எழில்கள். திரையைச் சுற்றி விளக்குகள் மினுக்கின்றன. “என்ன ரசனை இது? கருமம்” எரிச்சலுடன் சொன்னபோது அருகிலிருந்த அவன் கண்கள் திரையிலிருந்து நொடியும் விலகியிருக்கவில்லை. ஓடும்போதும் குதிக்கும்போதும் அவஸ்தைதான். “ஆம்பளைங்க அவசரமாப் போலாம். ஓடலாம். பறக்கலாம். நாம அப்பிடியில்ல. ரெண்டு நிமிஷம் முன்னாடி கௌம்பணும். அப்பத்தான் நிதானமா நடக்கலாம். சும்மா நடந்தாலே தெருவுக்கு நூறு கண்ணு மொளைக்கும். நீ ஓடினியா நூறு ஆயிரமாயிடும். எப்படா துப்பட்டா வெலகும், தாவணி சரியும்னு பாத்திட்டிருக்கும்” பின்னலை இறுக்கி ரிப்பனை முடிச்சிடும்போது சந்திரா அத்தை காதோரமாய் எச்சரிப்பாள். அத்தைக்கு தாட்டியமான உடல். சாதாரணமாய் நடந்தாலே குலுங்கி அசையும். எங்கே போய்விட்டாள்? கடைசி காலத்தில் அவளும் இப்படித்தானே மருத்துவமனைகளுக்கு அலைந்திருந்தாள். என்ன ஆயிற்று எனக் கேட்கவேண்டும். அவளது அலைபேசி எண்ணை எடுத்துத் தரச் சொன்னேனே? எடுத்திருப்பான். ஆனாலும் ஒத்திப்போட்டிருப்பான். அவளிடம் இப்போது என்ன பேச்சு என்று அவனாகவே தீர்மானித்திருப்பான்.

மரகதப் பச்சை இன்னும் இழுக்கிறது. பாதங்களில் பட்டு நகர்கிறது நீர் பாசிகளின் மென்மை. வெகு ஆழத்துக்குள் இழுபட்டுப் போகிறேன். குளிரவில்லை. கொஞ்சம் வெதுவெதுப்பு. மீன்களின் மூச்சுக் குமிழ்கள் நெருங்கி வருகின்றன. மீன்களுக்கு இப்படியொரு அவஸ்தையில்லை. பெண் மீன்கள் உண்டா? திமிங்கிலம் பாலூட்டி என்று படித்ததுண்டு. பாலூட்டும் என்றால் திமிங்கலம் நீந்தி எழும்போது குலுங்காதா? எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும்போது சந்திரா அத்தைதானே சொன்னாள் “இதப்பாரு ராசாத்தி. பெரிய பொண்ணாயிட்டே. இறுக்கமா சட்டை போட்டுக்காதே. தோள் கழுத்தெல்லாம் மூடறாமாதிரி தெக்கணும்.” அப்போது எதுவும் வித்தியாசமாய் தெரியவில்லை. வளரும் உடலின் ஒரு பகுதி என்கிற அறிவைத் தாண்டி எட்டாம் வகுப்பின்போதுதான் அது தரும் கிளர்ச்சியை உணர்ந்தேன். ரகசியமான கிளுகிளுப்பு. கூடவே அச்சம். உடைமாற்றும் தருணம் கண்ணாடியில் தென்பட்ட நொடிகளில் கண்களை ஈர்த்தன. தோழிகளை உற்றுப் பார்க்கச் செய்தன. யாரிடமும் கேட்டறிய முடியாத கேள்விகள் எழுந்தன. அத்தையிடம் கேட்டால் தலையில் குட்டுவாள். ஆனாலும் அருகில் படுத்திருக்கும்போதோ தலை பின்னும்போதோ திட்டுவதுபோல் விஷயத்தையும் சொல்லுவாள். கேட்பதற்கு வெட்கம். கொஞ்சம் பயமும்.

இப்போதுகூட பயம்தான் என்னை சுமந்தலைகிறது. எங்கெல்லாமோ தூக்கிக்கொண்டு திரிகிறது. எத்தனை பரிசோதனைகள்? எத்தனை கேள்விகள்? உடலைத் திறந்து காட்டச் செய்யும் மருத்துவ வித்தைகள். ஒன்பதிலா, பத்திலா? மகப்பேறு மருத்துவர் பருவப் பெண்களுக்கான சிறப்பு வகுப்பொன்றை எடுத்தாரே? விநோதமான பெயர். ஏதோவொரு நட்சத்திரத்தோடு சேர்த்து வருமே. ம். திருவோணம். ஆமாம். அவள் பெயர் திருவோணச்செல்வி உள்ளங்கைகளைக்கொண்டு நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ளும் விதத்தை எத்தனை அழகாய் சொல்லிக் கொடுத்தாள். உடை மாற்றுவதற்கு முன்பு எளிமையாய் செய்யலாம் என்று அவள் சொன்னதை ஒன்றிரண்டு முறை செய்ததோடு சரி.  அதை ஒழுங்காய் செய்திருந்தால் பயத்திற்கும் பரிசோதனைகளுக்கும் அடிமைப்பட்டிருக்க வேண்டாம். என்னவெல்லாம் சோதனைகள்? சட்டையைக் கழற்றிவிட்டு கருவியின் கண்ணாடிப் பரப்பில் அழுத்தும்படி நிற்கச் சொன்னாளே ஒருத்தி. கிறிஸ்டினாதானே? எத்தனை பேரை எத்தனை அளவுகளில் பார்த்திருப்பாள்? அவளுக்கு இதெல்லாம் பொருட்டேயிருக்காது. வெறும் சதைக் கோளங்கள். சோதனைக்கு உட்படும் திசுக்கள். கிறிஸ்டினாவைப் போலில்லை எல்லோரும். அதிலும் மேலுதட்டில் சன்னமான மயிர்க்கோடு துலங்க கண்ணாடியைத் துடைத்தபடி வெறித்துப் பார்த்திருந்த கிருஷ்ணம்மா பெருங்கொடுமை, அத்தனை எளிதில் சட்டையை மாட்டவிடமாட்டாள்.

காலடியோசை. சரசரவென்று நெருங்குகிறது. கண்களைத் திறக்க முடியவில்லை. நெருங்கி கட்டிலருகே நிற்கிறது. “யாரு?” கேட்க நினைத்து உதடுகளை அசைத்தபோது வலித்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலை. கையை அசைக்க முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. பயம்தான் இன்னும் என்னை மடியில் வைத்திருக்கிறதா? இல்லை, இதுதான் சாவா? அப்படியென்றால் நான் செத்துப் போய்விட்டேனா? இருக்காது. செத்துப்போயிருந்தால் என்னால் இந்த நெடியை இந்த வெம்மையை அறிய முடியாது. காலடியோசை எத்தனைத் துல்லியமாய் காதில் விழுகிறது. மரணத்தின் காலடியோசை இத்தனை மென்மையாகவா இருக்கும்? காட்டெருமையல்லவா எமனின் வாகனம். திபுதிபுவென்றல்லவா அது சீறி வரும். அருகிலிருந்தால் அவனோடு ஒண்டிக்கொண்டு விடலாம். எங்கே போய்விட்டான். பயத்தைச் சொன்னால்மட்டும் என்ன செய்யப் போகிறான். ஒரு பார்வை. சின்னதாய் தலையசைவு. அத்தோடு சரி. எதில்தான் சரியாக இருந்தான்? முழுக்க அனுபவித்தான்? ஒழுங்காய் இருந்திருந்தால் அவனே கண்டுபிடித்திருக்க முடியும். ஆர்வமெல்லாம் தொடக்கத்தில்தான். எத்தனை எளிதில் வடிந்துபோனது? என்னவென்று தெரிந்துகொள்வதற்கு முன்பே அவன் திரும்பிவிட்டான். அதன் பிறகானதெல்லாம் வெட்கங்கெட்ட என் முயற்சிகள்தானே?

வெட்கம் அறியாதவை கற்சிலைகள்தான். எந்தக் கோயில் அது? திரண்டு நின்ற கருங்கற் சிலைகள். ஒவ்வொன்றும் கண்ணை இழுத்து நிறுத்தும் சாகசம். அந்தக் கற்சிலைகள் எவையும் சட்டை போட்டிருக்கவில்லை. வடிவான எழிலை வெளிச்சம்போட்டு நின்றனவே? இழுத்து மூடி மறைக்காதிருந்தால் இத்தனை பிரச்சினை இல்லை. இலைமறை காய்மறையாய் காட்டி மூடுவதால்தான் கண்களை இழுக்கிறது. காட்டப்படாததை கற்பனை செய்து வதைக்கிறது. திறந்துபோட்டுவிட்டால் எல்லாம் ஒன்றுதான். எளிதில் தெளிந்துவிடும் பித்து. எத்தனை காலமாய் தீராத பித்து. ஆண்களைப் படுத்தியெடுக்கும் மர்மம். கவிதையும் கலையும் வெறும் பிதற்றல்கள்தானே? எத்தனை வர்ணனைகள்? என்னவெல்லாம் உவமைகள்? இவைகளை மட்டும் சலித்தெடுத்துவிட்டால் தொகை நூல்கள் மெலிந்துவிடும். ஒரு புலவன் வறுமைக்கு பெண்ணின் வற்றிய மார்பை ஒப்புமை சொல்கிறான். இன்னொருவன் அள்ளித் தரும் வள்ளலின் கருணையெனக் கூவுகிறான். ஆண்டாளும் மீராவும்கூட சொன்னார்களே? அவர்களையுமா இது சுமையென ஆட்டிப் படைத்தது?

பெண்ணுக்கு இவையிரண்டும் சுமைதானா? சந்தேகமேயில்லை. அவஸ்தை. எந்நேரமும் கவனமாய் இருந்து தொலைக்கவேண்டிய இம்சை. சரியக்கூடாது. தளரக்கூடாது. உடைவிட்டு மேலெழுந்துவிடவும் கூடாது. நடக்கையில் படி இறங்குகையில் குலுங்கி அசையலாகாது. எதற்கு இத்தனைத் தொல்லை? பிள்ளை சுமக்கும் உயிருக்கு கூடுதலாய் ஓர் அங்கம், அவ்வளவுதானே? அப்படி ஒதுக்கிவிடுகிறதா உலகம். இதைக் காண மட்டும் ஆயிரம் கண்கள் எந்நேரமும் இமை திறந்திருக்கும்.

இவனும் அப்படித்தானே? ஆனால் அன்றிரவு அவன் அருகில் வந்தபோது நடுக்கம் இருந்தது. பயமும் இருந்தது. ஆனாலும் அவன் சிறிதும் அவகாசம் தரவில்லை. என்னைக் கலைத்து உடைவிலக்கி அவன் காணத் துடித்தது இதைத்தானே? பார்த்தவுடன் பரவசம். துடிப்பு. எத்தனை வேகத்துடன் பற்றினான். இப்போதுகூட வலிக்கிறது அந்தப் பிடியின் மூர்க்கம். அதன் பிறகு இரவு கவியும்போதே அவன் கைகள் வேகத்துடன் நெருங்குவதை உணர்ந்து உடலில் நடுக்கம் மேலிடும். எப்போதும் அவனது இலக்கு அவைதானே? ஆனாலும் அவனுக்குப் போதவில்லை. எத்தனை இரவுகளில் வாய்விட்டுச் சொல்லியிருக்கிறான் “இன்னுங் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம்.” என்ன பதில் சொல்ல முடியும்? அவரவர்க்கு அவரவர் வார்ப்பு.

தோளை யாரோ தொட்டு அசைக்கிறார்கள். இடதுகை மணிக்கட்டை விரல்கள் பற்றுகின்றன. யார் இது? அவன்தானா? அவனது தொடுகையை அறிந்தவள்தான் என்றாலும் இப்போது உறுதியாய் சொல்ல முடியவில்லை. ஏதோ குரல் செவியருகே ஒலித்து விலகுகிறது. என்ன சொல்கிறான்? “மாலினி…” ஆமாம். என் பெயர்தான். அவன்தான் அழைக்கிறானா? முழுப் பெயரைச் சொல்லி அழைத்ததுண்டா? எப்போதும் ‘மாலு’தானே? கண்ணைத் திறந்தால் தேவலை. இமைகளை அழுத்திக் கிடக்கும் கனத்தை விலக்க முடியவில்லை. நாக்கை நீட்டி உதடுகளை ஈரப்படுத்தினாள். வலித்தது. “கொஞ்சம் தண்ணி குடுங்க…” மலையாள வாடையில் சிறு கட்டளை. “பாத்து… மெதுவா..” உதடுகளில் தண்ணீர்த் துளிகள். உயிர் வார்க்கும் நீர்ச்சுனை. தொண்டையில் இறங்கும்போது அந்த வாசனை நாசியைத் தொடுகிறது. அவனது வாசனையா? டெட்டாலின் நெடி. இன்னுமொன்று கூடவே. இருமல் மருந்தின் தித்திப்பு வாசனையா?

சுரந்திருந்த காலத்தில் உடலெங்கும் படர்ந்து கிடந்ததே ஒருவித பால் வாசனை. அருகில் வரும்போதெல்லாம் முகம் சுழிப்பான். ஆனாலும் நெருங்கித் தொடுவான். “நீ கேட்ட மாதிரி இருக்கா?” என்று கேட்கும்போதுகூட அவன் தலையாட்டி மறுப்பான். “இப்பிடி இல்ல… அது வேற. நல்ல செப்பு செலை மாதிரி.” குரலில் தொனிக்கும் வருத்தம் அவளை விலக்கும்.

பிஞ்சுக் காலுதைத்து சிணுங்கி அழும் சின்னக் கண்ணனை மடியிருத்தி அணைத்துச் சேர்த்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு முகம் முட்டி ஈறுகளை அழுத்தி உறிஞ்சும் தருணம்தான் எத்தனை அற்புதம்? வலியும் சுகமுமான கனவு அது. உயிரின் அமுதூறி கரு வளர்ந்த உயிருக்கு சத்தாகும் சித்து விளையாட்டு. முட்டி முட்டி உறிஞ்சும் மழலையின் சன்னதம். பால்கட்டிப் போன வேளைகள் எத்தனை வேதனையானவை? மரண அவஸ்தை. வலிக்க வலிக்க அழுத்திப் பீய்ச்சுகையில் வழிந்து தெறிக்கும் பால்துளிகள். என்ன சுவை அது? அசட்டு தித்திப்பல்லவா? அருகே படுத்தணைத்து ஊட்டும்போது இழுத்துச் சுவைத்ததில் இடபக்கம் தொய்ந்துபோனதே? இரண்டு வயது வரைக்கும் விடவில்லையே அவன். மறக்கடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் முறியடித்தான் பிடிவாதத்துடன். வேப்பெண்ணைத் தடவி அதன் கசப்பை சுவைத்த கணத்தில் எத்தனை வெறி அவனுக்கு. ஆத்திரத்துடன் கடித்ததின் வலி நீங்காது அவன் முதுகில் அடித்ததை இப்போதும் மறக்கவில்லை. ஏதோ ஒருகணம் என்னவென்று தெரியாமல் அவனே அதை விடுத்தான். இழுத்து வைத்து தர முனைந்தபோதும் திமிறி விலகினான். சிரித்தான். நான் அழுதேன்.

எங்கே இருக்கிறான் என் சின்னக் கண்ணன்?

எத்தனை நாளாய் கிடக்கிறேன் நான்? நேற்றா இல்லை அதற்கும் முந்தைய நாளா? சிரித்துச் சிரித்துப் பேசினாளே அந்த மருத்துவர். யார் அவள்? சுகந்தி வரதராஜனா? அவள் என்னப் பேசினாள் என்பதை கவனிக்கவேயில்லை. மூளையை அழுத்திக் கிடந்தது பயம். யாரையும் நம்ப முடியவில்லை. எல்லோரும் எதையோ மறைக்கிறார்கள். தொட்டால் வலிக்கிறது என்றுதானே தொடங்கியது. இடதிலா வலதிலா? இடதில்தான். வெகுநாளுக்குப் பிறகு தாங்க முடியாதபோதுதானே நானே சொன்னேன். முதலில் அவனும் பெரிய விஷயமாய் காதில் போட்டுக்கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப சொல்லி ஐந்தாவது வாரத்தில்தானே மருத்துவமனைக்கு அழைத்துப் போனான். இங்கும் அங்குமாகவே ஒருமாதம் ஓடியது. வலி கொஞ்சம் கொஞ்சமாய் பிடியை இறுக்கியது. சுகந்தியிடம் வந்தபோது என்னவென்று உறுதியாகிவிட்டது. ஆனாலும் வாய்விட்டு கேட்க பயம். ‘ஒரு சின்ன சர்ஜரி’ என்றுதான் அவள் சொன்னாள். இந்த சின்ன சர்ஜரிக்குத்தான் இத்தனை பரிசோதனைகளா? உடலையே துளைத்துக் கூறுபோட்டதுபோல எத்தனை முறைதான் கதிர்கள் ஊடுருவிப் பாய்ந்திருக்கும். எம் ஆர் ஐயும் டிஷ்யூ அனாலிசிசும் அலுத்துப் போய்விட்டது. இவனும் எதையும் வாய்திறந்து சொல்லவில்லை. கண்களில் எப்போதும் கலக்கம். பேசும்போதெல்லாம் குரல் இடறியது. எப்போதும் ஏதேனும் ஒன்றைமட்டும் சொல்லிவிட்டு அவசரமாய் நகர்ந்து போகிறான். அன்று அதிகாலையில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துப் போனார்கள். கையைப் பிடித்தபடியே வந்தவனை வெளியே நிறுத்திவிட்டு தள்ளு படுக்கையை உள்ளே இழுத்ததும் சாத்திக்கொண்டது கதவு. முதல் நாள் இரவு பத்து மணிக்கு மேல் எதையும் உண்ணக்கூடாது என்று கடுமையான உத்தரவு. தண்ணீர்கூட பருகவில்லை. அந்த அறை முழுக்க மரகதப் பச்சை ஒளி. அசையும் திரைச் சீலைகள். மெலிதாய் சீறிய குளிர்பதனக் காற்று. செவிலிகளும் மருத்துவர்களும் அவரவர் காரியத்தில் கவனமாய் இருக்க சுகந்தி பச்சை அங்கியுடன் அருகில் வந்து சிரித்தாள். அவள் வகிட்டுக் குங்குமம் மெல்லிய தீற்றலாய் தெரிந்தது. ‘ஒரு சின்ன இன்ஜெக்ஷன்’ என்று சொல்லிவிட்டு தலையாட்டி நகர்ந்தாள். முதுகுத் தண்டைத் துளைத்தது வலி. சில நொடிகளுக்குப் பின் மறுபடி அருகில் வந்து என்னவோ கேட்டாள். முடிக்கற்றை ஒன்று பச்சைத் தொப்பிக்கு வெளியே நீண்டிருந்தது. எல்லோரின் அசைவும் தெரிந்தது. என்மேல் அனைவரும் குனிந்து என்னவோ செய்வதும் புரிந்தது. என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சுரண்டுகிறார்களா? அறுத்து எடுத்துவிடுவார்களா? என்ன செய்கிறார்கள்? ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் தெரிந்தது. என் மீது கவிந்திருந்த பயத்தை அவர்கள் வெளியில் துரத்தியிருந்தனர்.

வெளியில் அவன் காத்திருந்தானா? அவனருகில் பயமும் பதுங்கியிருந்ததா? என்ன யோசிப்பான்? என்ன சொல்லியிருப்பான்? ஏற்கெனவே பெரிய ஈர்ப்பில்லை. இப்போது இது வேறு.. மொத்தமாய் எடுத்துவிடுவார்களா? அப்படியென்றால் ஒன்றா? இரண்டுமா? எப்படி எடுத்திருப்பார்கள்? கண்ணகி திருகி எரிந்தாளே அப்படியா? வலக்கரம்கொண்டு இடதைப் பறித்து காற்றில் எறிந்தாளா? பால்குடம் எப்படி நெருப்பைக் கக்கிற்று? பற்றி எரிந்ததே மதுரை. கண்ணகிக்கும் இதுதான் பிரச்சினையா? அவளுக்கு மட்டுமா. எல்லா பெண்களுக்கும்தான். அவள் துணிந்தாள். பற்றித் திருகி பறித்தெறிந்தாள். நான் இங்கே பறிகொடுத்துவிட்டு கிடக்கிறேன். இன்னும் பலர் கச்சைகளுக்குள் இறுக்கி பாதுகாக்கிறார்கள்.

கச்சைகள் அணிவது அவசியமா இனி? மணமான புதிதில் பரவசத்துடன் கேட்ட அந்தக் கேள்வி இப்போது அவனுக்கு நினைவிருக்குமா? ‘என்ன சைஸ் உனக்கு?’ இப்போது கேட்டால் என்ன அளவைச் சொல்வது? ஓட்டக்காரிகள்போல நானும் இனி இருக்கலாம். நடந்தால் ஓடினால் இறங்கினால் குலுங்குமென்று அசையுமென்று தயங்கவேண்டாம். ஒன்றை மட்டும் என்றால் கஷ்டம். இரண்டையுமென்றால் நிம்மதி. அவள் சொன்னாளா? முடிக்கற்றை நீட்டிக்கொண்டிருக்க குனிந்து புன்னகைத்தபடி என்னவோ சொன்னாள். அப்போது அதைப்பற்றி சொல்லியிருப்பாள். ஒன்றா இரண்டா?

பார்வதிக்கு மட்டும் மூன்றாமே? பாவம் அவள். இரண்டை வைத்துக்கொண்டே இத்தனை பாடுகள். மூன்றாவதுமென்றால் சிரமம்தான். வெட்டும் நகமும் முடியும் வளர்வதுபோல் இதுவும் வளர்ந்துவிடுமா? வேண்டாம். வளர்ந்தால் நோயும் சேர்ந்தல்லவா வளரும். உயிர் சுரக்கும் திசுக் கூட்டத்தில் இப்படி புற்றும் எப்படி முளைக்கிறது? அமுது தரும் சுரப்பியே நஞ்சையும் கக்குமா என்ன? மறுபடி சோதனைகள், ஊசிகள், மருந்துகள். பச்சைத் துணிபோர்த்தி முகமூடிகளுடன் நெருங்கி வலிக்காமல் லேசர் கத்தியால் வெட்டி எடுப்பார்கள். வேண்டாம். முளைக்கவும் வேண்டாம் அறுக்கவும் வேண்டாம். அவனிடம் சொல்லவேண்டும்.

அவன் இனியும் என்னை நெருங்குவானா? எப்போதேனும் என்றாலும் அவனது தொடக்கமே அங்குதானே. அறுத்தெடுத்த இடத்தில் தளும்புகள் இருக்குமா? உடைத்த கற்சிலைகளில் காணும் கோலந்தானா? கோளங்களை எடுத்துவிட்டு தோலை மூடி தைத்திருப்பார்களா? எப்போது பார்க்க முடியும். என்னிடமிருந்து அவனை இன்னும் விலக்கிவிடக்கூடும். அப்படியும் விலகியா போய்விடுவான். அவனுக்கு இப்படி எதுவுமென்றால் நான் விலகியா போய்விடுவேன். யார் எங்கே விலகி ஓடிவிட முடியும். அவனுக்கு நானும் எனக்கு அவனுமல்லவா தளைகள்? பாவம், நொந்துபோயிருப்பான். அருகிலிருந்த பயம் அவனைப் பற்றியிருக்கும். லட்சக்கணக்கில் செலவு வேறு. எல்லாம் சேர்ந்து அவனை வதைத்திருக்கும். இந்த இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு எப்போது மீள முடியும் என்று தவித்திருப்பான்.

கண்ணுக்குள் வெளிச்சம். இமைகளை மெல்ல அசைக்க முடிகிறது. மரகதக் கடலின் கதவு திறக்கிறதா?

காற்றில் மிதக்கிறேனா? படுத்திருக்கிறேனா? எடையற்ற உடல். நினைவுகள் மட்டும் அலைந்திருக்க உடல் கரைந்துபோனதா? தாகம். உதடுகளை அசைக்கிறேன். கொஞ்சம் வலிக்கிறது. நீர்த் துளிகள் உதடுகளில் வழிகின்றன. பக்கத்தில்தான் இருக்கிறானா? இல்லை. அவன் இருக்க வாய்ப்பில்லை. இமைகளை திறக்கிறேன். குனிந்திருக்கும் உருவம். நீல ஒளி. உதடுகளை சப்பி விழுங்கி நொடியில் “வெரி குட்…” என்ற குரல் கேட்கிறது. வலது தோளை அசைக்கிறார்கள். “கண்ணை தெறக்க முடியுதா?” பெண் குரல். இடதுகண் சற்றே திறக்கிறது. கனத்த இமைகள் விடுபட பனிமூடிய வெளிச்சம். இமைகளை அசைக்கும்போது விலகிய பனியின் பின்னே அவள் முகம். “இங்க பாருங்க…” அவள் தாடையைத் தொட்டு மெல்லத் திருப்புகிறாள். இப்போது என்னால் பார்க்க முடிந்தது. சுவரில் சூரியகாந்தி ஓவியம். இடது பக்கமாய் கதவு. அது திறக்கிறது. உள்ளே வருகிறது ஓர் உருவம். அவன்தான். கண்களை மூடித் திறக்கிறேன். அருகில் நிற்கிறான். கலைந்த தலைமுடி. களைப்பும் கவலையும் கவ்விய உருவம்.

“மாலு…” இடதுகை விரல்களை மெல்லப் பற்றுகிறான். கண்ணீர் வழிகிறது. “எதுக்கு அழறே? எல்லாம் சரியாயிடும்…” அவன் கன்னத்திலும் நீர்த்துளி உருள்கிறது.

“ரொம்ப பேசவேணாம்…” எச்சரித்துவிட்டு போகிறாள் அவள். நாற்காலியில் உட்கார்ந்தவன் கண்களையே பார்த்தேன். எதைக் கேட்பது முதலில்?

கண்ணாடியில் என்னைப் பார்க்கவேண்டும் முதலில். அதன் பிறகே அவனைக் கேட்க முடியும். “எப்படா கண் தெறப்பேன்னு பாத்துட்டிருந்தேன்.” அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான். “சர்ஜரி எப்ப முடிஞ்சது?” தன்னிச்சையாக கேட்டேன். “நேத்து காலையில பத்தரைக்கெல்லாம் முடிஞ்சது. அப்பறமா அப்சர்வேஷன்ல இன்னிக்கு காலையில வரைக்கும். பதினோரு மணிக்குத்தான் இங்க கொண்டு வந்தாங்க. ஆனா நீ கண்ணே தெறக்கலே.” அவன் குரல் கனத்திருந்தது. “இப்ப மணி என்ன?” “சாயங்காலம் ஆறரை.” விளக்கேற்றும் நேரம். வீட்டில் விளக்கேற்றி எத்தனை நாளாயிற்று? “குட்டி வந்தானா?”. “ம். இப்ப வந்துருவான். அப்பாவோட போயிருக்கான்.” இதையெல்லாம் முக்கியமற்ற கேள்விகள். சம்பிரதாயமான தொடக்கம். ஆனால் நான் கேட்க நினைப்பது வேறு பல கேள்விகள். எதிலிருந்து தொடங்குவது?

அவனுக்குள்ளும் அதுதான் ஓடிக்கொண்டிருக்கும். எதை முதலில் சொல்வது? எப்படிச் சொல்வது? சுகந்தி எல்லாவற்றையும் சொல்லியிருப்பாள். இப்போது அதையெல்லாம் என்னிடம் எப்படிச் சொல்லப் போகிறான்?

தலை லேசாக வலித்தது. அவனாகச் சொல்லட்டும். என்னிடமிருக்கும் கேள்விகளில் ஏதேனுமொன்றுக்கு அவன் சொல்வதில் பதில் கிடைக்காமல் போனால் பிறகு மெல்ல கேட்டுக்கொள்ளலாம். என்ன அவசரம்? ஒன்றா இரண்டா? சுரண்டி எடுத்தார்கள் இல்லை, மொத்தமாய் அறுத்து எடுத்துவிட்டார்களா? அந்தத் தசைக் கோளத்தைப் பார்க்க முடியுமா?

கண்களை மூடிக்கொண்டேன்.

மீண்டும் அந்த நீண்ட பிரகாரத்தில் நிற்கிறேன்.

எங்கிருந்தோ ஒரு குரல் எழுகிறது “எந்தக் கோயில்ல பாத்தாலும் இப்பிடித்தான் ஒடச்சு வெச்சிருக்கானுங்க… இதே எடத்துலதான் கை வெச்சிருக்கானுங்க. என்ன ஜென்மங்களோ? இவனுகளும் இவங்கம்மாகிட்ட மொலைப்பால் குடிச்சு வந்தவனுங்கதானே?”

யாளிமுகம் தாங்கி நிற்கும் கற்தூணில் கொடிமங்கை. வலக்கரத்தை மேல்நோக்கி உயர்த்தி நிற்கிறாள். நிமிர்ந்த உருவத்தின் முலைகள் சிதைந்திருந்தன.