சிறுத்தை நடை

by போகன் சங்கர்
0 comment

1

ஸ்கார்லெட் அந்த பலகையைப் பார்த்து சட்டென்று நின்றாள்.

சிறுத்தை நடமாடும் இடம் கவனம். ”இங்கே சிறுத்தை வருமா?”

கார்மல் ”எப்பவாவது. போன வருஷம் அதோ அந்த மேட்டுல தேயிலை பறிச்சிக்கிட்டிருந்த பொன்னியோட மகளைத் தூக்கிட்டுப் போயிடுச்சி.”

ஸ்கார்லெட் ”அப்புறம் ?” என்றாள் படபடப்போடு.

”அப்புறம் என்ன ?”கார்மலின் முகத்தில் ஒரு இகழ்ச்சி படர்ந்தது ”அன்னிக்கு அந்த சிறுத்தை நிறைஞ்ச வயித்தோட சுகமாத் தூங்கியிருக்கும்.”

கார்மலை அந்தக் கணத்திலிருந்து தான் தனக்குப் பிடிக்காமல் போனதா என்று பின்னால் ஸ்கார்லெட் யோசித்திருக்கிறாள். ஆனால் அவன் அதற்கொரு பதில் எப்போதும் வைத்திருப்பான்.  ”இங்கே பார் நான் அஞ்சாவது தலைமுறையா ப்ளான்டேசன்ல வாழறவன். உங்க அப்பாவை மாதிரி அரசாங்க மருந்துச்சாலைல நாலு வருஷம் வேலை பார்த்துட்டு நான் மலைராசன்னு சொல்லிக்கறவன் கிடையாது. உன்னோட சமவெளி ஊ ஆக்களை இங்கே கொண்டுவராதே.”

2

அன்று அவள் ஷெல்லியின் கவிதை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள். வெளியே சிமென்ட் வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் காலை வெயிலில் அமர்ந்து சூடேறுவது பிடித்திருந்தது. அதிக பட்சம் பனிரெண்டு வரைக்கு இந்த வெயில் இருக்கும். முனுசாமி உள்ளிருந்து எட்டிப் பார்த்தான். ”மேடம் பிரேக்பாஸ்ட் அங்கேயே கொண்டு வரட்டுங்களா?”

பனி இல்லாததால் தூரத்தில் நகரத்தின் தொடக்கங்கள் தெரிந்தன. வளைந்து வளைந்து ஏறும் சாலைகளில் முக்கி முக்கி ஏறும் வாகனங்கள். காற்றெங்கும் எலுமிச்சைப் புல்லின் வாசம் நிறைந்திருந்தது. கார்மல் காலையிலேயே எங்கோ போய்விட்டான் ”இன்னிக்கு அந்த மேனேஜர் கூதியான் லீவு. கங்காணி பொண்டாட்டியைக் கூப்பிட்டுட்டு வால்பாறைக்குப் போயிருப்பான்.”

முனுசாமி ப்ரெட் சாண்டிவிச்சைக் கொண்டுவந்து வைத்துவிட்டு ”நீங்க கொண்டுவந்த ரோசா பூத்துட்டுதுங்க ”

அவளுள் ஒரு கணம் சிறிய எழுச்சி தோன்றி மறைந்தது. இங்கே பூத்துக்கிடக்கும் பெயரறியா காட்டு மலர்கள் நடுவில் அவளது ரோஜா நடுங்கிக் கொண்டு நிற்பது போல பட்டது.

”இதென்ன கிரேவி ?”

”காட்டுப்பன்னிங்க. தொட்டுச் சாப்பிடுங்க நல்லாருக்கும் ”

ஒரு சிறிய தயக்கத்துடன் அவள் அதைத் தோய்த்துச் சாப்பிட்டாள். ”உடம்புக்கு நல்லா சூடு வருங்க. நாட்டுப்பன்னி குளிர்ச்சிக்கு வந்திடும்.”

அப்பாவுக்கு பன்றிக்கறி பிடிக்கும். ஆனால் டாக்டராய் இருந்தும் சீக்கிரம் செத்துப் போனார். நாட்டுப்பன்றிக் கறியின் சீதளம் தான் காரணமா ?

ஆனால் அவளுக்குத் தெரியும். அப்பாவை எது கொண்டு சென்றது என்று.

அவள் உணவை முடித்துவிட்டு பின்னால் சென்று பாண்டியம்மாள் துணிகளை துவைப்பதை மேற்பார்வை செய்தாள். ”இன்னிக்கும் மழை இருக்குதுங்க.”

”இருந்தால் நல்லது” என்றாள். ”மழை இருந்தால் குளிர் அவ்வளவாக இருக்காது”

”ஆனா துணி காயாதுங்க. போர்வை எல்லாம் முடை நாத்தம் அடிக்குது ”

அப்போது தடதடவென்று பைக் ஒலி கேட்டது. புல்லட்டில் ஒரு வாலிபன் வந்துகொண்டிருந்தான். காலை வெயிலில் அவன் சிவந்த முகம் இன்னும் சிவந்திருந்தது.

”நான் டெக்னிகல் எஞ்சினீர் சாக்கோ ”என்றான். ”கார்மல் தண்ணீர் இறைக்கும் மோட்டாரில் எதோ பிரச்சினை என்றார்” என்றான்.

ஸ்கார்லெட் ”ஹீட்டரிலும் ”என்றாள்.

அவன் முகம் இறுகியது ”இதெல்லாம் எலெக்ட்ரிசியன் வேலை. ”

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ”உங்களுக்கு விருப்பமில்லை என்றாள் செய்யவேண்டாம்.” அவன் திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தான். ”விருப்பமானதைத் தான் செய்யமுடியும் என்பதற்கு இது சமவெளியல்ல”

அவன் அந்த இயந்திரங்களோடு ஒரு அரைமணி நேரம் இருந்தான்.

”எல்லாம் மிகப் பழைய மிருகங்கள் ”என்றான் முடிவில். ”ஆனால் வியக்கும் விதமாக பெரிய பிரச்சினை எதுவுமில்லை. சிறிய அன்பு வார்த்தைகளில் சரியாகி விடும். நான் சில உதிரி பாகங்களோடு வெள்ளி வருகிறேன்” என்றான்.

போகும்போது தயக்கமாக ஒருமுறை நாற்காலியில் கிடந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தான். ”ஷெல்லி!” என்றான். ”நல்லவேளையாக வோர்ட்ஸ்வோர்த் இல்லை”

3

இரவு வெகுநேரம் கழித்துதான் கார்மல் வந்தான். பாண்டியம்மாள் சொன்னது போலவே மழை முன்னமே வந்துவிட்டிருந்தது. மழை வேறு விதமான குளிரைக் கொண்டு வந்திருந்தது. முனுசாமி சப்பாத்தியும் சிக்கனும் செய்திருந்தான். ”தொரை ஆனைமலை வரைக்குப் போயிருக்காருங்க . இன்னிக்கு தேயிலைக்கு சுண்ணாம்பு அடிக்கறாங்க. சமயமாகும் ”

”சுண்ணாம்பு ஏன் அடிக்கறாங்க?”

“பூச்சி வராது. சீக்கிரம் மொட்டுவிடும். அதாவது அதை சீக்கிரம் வயசுக்கு வர வைக்கிறாங்க ”

ஸ்கார்லெட் எழுந்து ஒரு முறை கண்ணாடி சன்னல் வழியே வெளியே பார்த்தாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. மழையின் விடாத இரைச்சல் மாத்திரம். ஏதோ ஒரு கணத்தில் மேலே இரண்டு சிகப்புப் புள்ளிகள் எரிந்து அணைவது போலத் தெரிந்து உடனே மறைந்தது. ஏதாவது வாகனமாக இருக்கலாம். கார்மலின் ஜீப்பாகக் கூட இருக்கலாம்.

ஸ்கார்லெட் வெகுநேரம் அந்த மழையின் சத்தத்தைக் கேட்டபடி விழித்திருந்தாள். கொஞ்ச நேரம் இசை கேட்டாள். வியக்கும் விதமாக கார்மலின் சேகரிப்பில் நல்ல மேற்கத்திய செவ்வியல் தொகுப்புகள் இருந்தன.

”நான் இதெல்லாம் கேக்குறதில்லை. இந்த வெள்ளைக்காரத் தேவடியா மவனுகளுக்காக சில அடவுகளைப் போட வேண்டியிருக்குது. நீயும் போட வேண்டியிருக்கும். உன்னைக் கட்டிக் கூட்டிட்டு வந்ததே இதுக்குத்தான். நீ கவிதைலாம் வாசிப்பியாமே? ஆனா அது இங்கே முக்கியமில்லை. உனக்கு நல்லா விருந்தும் கம்பெனியும் கொடுக்கத் தெரியனும். இந்தியாவில எங்கெங்கே நல்ல சீஸ் கிடைக்குதுன்னு தெரியனும். வைன் பத்தி தெரியனும். குடிச்சிக்கிட்டு அவனுங்க ஆடும்போது பட்டும் படாம கம்பெனி கொடுக்கத் தெரியனும்” என்றான் கார்மல். ”கம்பனின்னா படுத்துறக் கூடாது.” அவன் கண்கள் சட்டென்று கூர்மையடைந்தன. ”அப்படி உனக்கே படுத்தே ஆகணும்னு வைய்யி நான் சொல்ற ஆளு கூட படு. நமக்கு ஒரு லிப்ட் கிடைக்கும் ”

அவள் கண்கள் தாமாக மூடின. அவள் எப்போதோ உறங்கினாள். விழித்தபோது கார்மல் அருகில் படுத்திருந்தான். அவனிடமிருந்து மது நாற்றமும் குறட்டையும் வந்துகொண்டிருந்தது. அவளது உடை இடுப்புக்கு மேலே கிடந்தது.

ஸ்கார்லெட் கதவு திறந்து கிடப்பது பார்த்து பதறி எழுந்து மூடினாள்.

மீண்டுமொரு முறை கண்ணாடியில் இரு சிகப்பு ஒளிப்பொட்டுகள் தோன்றி மறைந்தது போல பட்டது.

கார்மல் அன்று காலையிலிருந்தே பரபரப்பாகக் காணப்பட்டான். வழக்கத்துக்கு மாறாக அன்று குடிக்கவில்லை. நன்றாக சவரம் செய்து மீசையைத் திருத்தி பூட்ஸ்களை ஒளிர்பசை இட்டு ”எனது தொப்பி எங்கே?”

அவளிடம் வந்து ”நீயும் ரெடியாகு. இன்றைக்கு செகண்ட் சாட்டர்டே. இங்கிருக்கும் எல்லா பிளான்டர்களும் ஒன்று கூடுவார்கள். மதியம் அதிகம் சாப்பிடாதே. நன்றாக உடுத்திக்கொள். நான் முதல்முதலாக உன்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன். அவர்கள் எல்லோரும் உன்னை மதிப்பிடுவார்கள். உன் மூலம் என்னை. நீ அவர்களிடம் அதிகம் பேசவும் கூடாது பேசாமலிருக்கவும் கூடாது. அதிகம் சிரிக்கவோ சிரிக்காமலிருக்கவோ கூடாது. நீ அவர்களை அடுத்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை விருந்துக்கு அழைக்க வேண்டும். அங்கே சாரா என்கிற மலையாளப் பெண்மணி இருப்பாள். அவளிடம் மட்டும் கவனமாகப் பழகு. வெள்ளைக்காரப் பெண்மணிகள் பரவாயில்லை. பிரச்சினை ஆங்கிலோ இந்தியர்களும் பெண்களும் தான். அவர்கள் உன்னை அலட்சியப்படுத்துவார்கள். அவமானப்படுத்துவார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாதே” என்றவன் தயங்கி, ”நமக்கு மிக முக்கியமானவர் ரிச்சர்ட் மார்க்ஸ் என்கிற அசோசியேசன் செக்ரட்டரி தான். அவர் தான் விருந்துக்குத் தலைமை தாங்குவார். அவருக்கு உன்னைப் பிடித்திருந்தால் அவர் உனக்குக் கவனம் கொடுத்தால் அனுமதி” என்றான். இதை சொல்லி முடித்ததும் அவன் கண்கள் சிவந்தன ”கடவுளே எனக்கு ஒரு ட்ரிங் தேவை” என்று கத்தினான்.

5

அவர்கள் மதிய உணவுக்குப் பிறகு கிளம்பினார்கள். அவன் அவளது உடையைப் பார்த்து ”நீ என்ன கன்யாஸ்திரியா? இப்படி மூடிக்கொண்டு இருக்கிறாய்?” என்றான்.

அவள் திருத்திக் கொண்டு வர ”இப்போது நீ ஒரு தேவடியாளைப் போலிருக்கிறாய். கடவுளே நீ கற்றுக் கொள்ளவே போவதில்லை ”

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரப் பயணம். சரளைக் கற்களால் ஆன சாலையில் ஜீப் எந்த நேரமும் உருண்டு விழுவது போல ஒரு பதற்றத்துடன் சென்றது. மலை மேலிருந்து பனி இறங்கி தேயிலைத் தோட்டங்களை மூடுவதை அவள் பார்த்தாள். காட்டுக் கோழிகள் அவ்வப்போது குறுக்கே ஓடின. அவற்றின் வேகம் வேடிக்கையாக இருந்தது. சரிவில் இரண்டு மிளாக்கள் நின்று கொண்டு அவர்களைப் பார்க்காதது போல நடித்துக் கொண்டே அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தன. அவளுக்கு சிரிப்பு வந்தது. அப்போதுதான் அவள் அதனைப் பார்த்தாள். ஒரு குறுமரத்தின் அடிக்கிளையில் மவுனமாக ஒரு சிலை போல அமர்ந்துகொண்டு …ஒரு சிறுத்தை

அதன் கண்கள் ஒருமுறை ஒளிர்ந்து அடங்கின.

6

திரும்ப வருகையில் நள்ளிரவு அருகில் ஆகிவிட்டது. கார்மலால் வண்டி ஓட்ட முடியவில்லை. அவன் மிகக் குடித்திருந்தான். சாக்கோ தான் வண்டி ஓட்டி வந்தான். அவர்கள் அவனைத் தங்கச் சொன்னார்கள். ஆனால் அவன் மறுத்துவிட்டான், பிடிவாதமாக. அன்றைக்கு அவன் தன்னைத் தானே மிக அவமானப்படுத்திக் கொண்டிருந்தான். ரிச்சர்ட் மார்க்ஸ் சற்று கடுமையாகவே அவனிடம் பேசிவிட்டார். அவனது கணக்கு வழக்குகள் சரியில்லை என்று முதலில் நடந்த அலுவல் சந்திப்பில் அவனுக்குச் சொல்லப்பட்டுவிட்டது. அவனது தோட்டம் நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க அதற்கு அவனது தனிமனிதக் கோளாறுகளே காரணம் என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. அவன் பணியாளர்களிடம் ஒன்று மிகக் கடுமையாக நடந்து கொள்கிறான் அல்லது மிகத் தாராளமாக. அவன் தான் ஒரு குறுநில அரசனல்ல என்பதை உணர வேண்டும். அவர் அவனது பணி நீட்டிப்பு ஒப்பந்தம் பற்றி யோசிக்கிறார். அவனுக்கு சாதகமாக இப்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான். அவனது திருமணம். இனியாவது அவன் ஒழுங்காக இருக்கிறானா என்று அவர் பார்க்க விரும்புகிறார். ஆனால் அது அவனுக்கு கடைசியாக வழங்கப்படும் ஒரு சந்தர்ப்பம் மட்டுமே.

தொடர்ச்சியாக நிகழ்ந்த விருந்தில் கார்மல் அதிகம் குடித்தான். தனியாக அமர்ந்துகொண்டு. ஸ்கார்லெட் அவனது கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

திரும்ப வருகையில் அந்த இடத்தை நினைவில் வைத்துக்கொண்டு ஸ்கார்லெட் பார்த்தாள். அந்த மரத்தில் அந்திக் கிளையில் ஒரு நிலைவைத் தவிர வேறு எதுவுமில்லை.

அவள் சாக்கோவிடம் ”இங்கே சிறுத்தைகள் உண்டா” என்று கேட்டாள்

அவன் திரும்பிப் பார்த்து ”சிறுத்தைகள் பற்றிய கதைகள் உண்டு” என்றான். அப்போது லேசாகத் தெரிந்திருந்த சட்டையின் வழியாக அவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒருமுறை மினுங்கி அடங்கியது அழகாக இருந்தது.

மலையின் மீது ஒரு ஆழ்நீல வெளிச்சம் பரவியிருந்தது. மனோகரமாக இருந்தது. எங்கோ ஒரு ஆந்தை ”ஹும் ”என்றது. அவள் அன்றைய பார்ட்டி பற்றி நினைத்துக் கொண்டே வந்தாள். கார்மல் பின்னிருக்கையில் ஏறக்குறைய படுத்துக்கிடந்தான். ரிச்சர்ட் மார்க்ஸ் அவளது அப்பாவைப் பற்றி விசாரித்தார். அப்பாவை ராபிஸ் தாக்கும் முன்பு அவரை சந்தித்த நபர்களில் அவரும் உண்டு. அப்பாவின் ராபிஸ் எப்படி வந்ததென்று யாருக்கும் தெரியவில்லை. வழக்கமான விலங்குகள் மூலம் அது வரவில்லை. ”வவ்வால்கள் மூலம் அது வந்திருக்கலாம்.” என்றார் அவர். ”வவ்வால்கள் பறவைகள் அல்லவா?”

”இல்லை அவை பாலூட்டிகள். பத்தி விலங்குகள். அவற்றின் பற்களைப் பார்த்திருக்கிறாயா? நாயின் பற்கள் போலவே இருக்கும் ”

ஸ்கார்லெட் ”சாக்கோ அன்றைக்கு ஏன் நல்லவேளை வோர்ட்ஸ்வோர்த் இல்லை என்று சொன்னீர்கள்” என்று கேட்டாள்.

சாக்கோ ”ரொமாண்டிக்குகள் இங்கே அதிக நாள் ஜீவிக்க முடியாது அதனால்தான் ”என்றான் சற்று தயக்கமாக. ”நீங்கள் படித்துக் கொண்டிருந்த கவிதை ஒரு மலைப் பிரதேசத்து அம்மாவுக்கு நல்லதொரு காலைப்பொழுதில் அவள் மகன் இறந்து போனது பற்றிய செய்தி வருவது பற்றியதல்லவா ”

”ஆமாம். ஆனால் அது சமவெளியின் செய்தி அல்லவா. மலையிலேயே இருந்திருந்தால் அவன் ஒரு முட்டாள்தனமான போரில் கொல்லப்பட்டிருக்க மாட்டான் அல்லவா?”

”உண்மைதான். ஆனால் மலையின் போர்கள் வேறு விதமானவை அதன் துயரங்கள் ஆபத்துகள் வேறுவிதமானவை.” அவன் பெருமூச்சு விட்டான். ”சமவெளி இதை விடக் கொடூரமானது. அங்கிருக்கும் விலங்குகள் இங்கிருக்கும் விலங்குகளை விட கொடூரமானவை” என்றான்.

ஸ்கார்லெட் சிரித்து ”இப்போது யார் ரொமாண்டிக் ?”

அவன் ”நான்தான்” என்றான். அதன்பிறகு அந்த பதிலால் தாக்கப்பட்டவன் போல அமைதியில் ஆழ்ந்துவிட்டான்.

கார்மலை முனுசாமியும் அவனும் தூக்கித்தான் படுக்கையில் கிடத்த வேண்டி இருந்தது. படுக்கையில் சரியும்போது அவன் ஒருகணம் விழித்து ”சாக்கோ புண்டா மவனே இதன் பிறகு நீ என் பொண்டாட்டியை அனுபவிக்கப் போகிறாய் இல்லையா?” என்றான்.

7

கார்மல் காலையில் ஒன்பது மணி வரை எழுந்திருக்கவில்லை. அதன்பிறகு ஒரு போன் வந்தது. அவனது மேனேஜர் ”அவன் ஒரு மணி நேரத்துக்குள் தோட்டத்தில் இருக்காவிடில் அவன் மலையைவிட்டு இறங்க வேண்டி இருக்கும்” என்றார். அவன் எல்லோரையும் சபித்துக் கொண்டே ஜீப்பில் கிளம்பிப் போனான்.

சற்று நேரத்தில் ஒரு காரில் சாரா என்ற அந்த மலையாளப் பெண்மணி வந்து இறங்கினாள். ”ஹலோ டியர். நேற்று பார்ட்டியில் உன்னிடம் பேசவே முடியவே இல்லை. கார்மல் உன்னைக் கழுகு போல பாதுகாத்துக் கொண்டிருந்தான்” என்றாள். ”உனக்கு வேறு வேலை இல்லை என்றால் வா. உனக்கு ஒரு புத்திசாலிக் குரங்கைக் காண்பிக்கிறேன் ”

ஸ்கார்லெட் தயங்கி ‘’வீட்டின் கணப்பு அமைப்பை சரி செய்ய சாக்கோ வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் ‘’

சாரா ‘’ஓ! அவனுடன் அதற்குள் அறிமுகமாகி விட்டதா?’’ என்றாள். அந்தக் குரலில் சற்று கசப்பு இருப்பதாகப் பட்டது. ’’அப்படியானால் நீ அவனை பார்க்காமல் வர மாட்டாய் இல்லையா‘’ என்றாள்.

ஸ்கார்லெட் ‘’இல்லை, சொல்லிவிட்டு வருகிறேன்’’ என்றாள்.

அவர்கள் ஏறக்குறைய ஒருமணி நேரம் பிரயாணம் செய்து பக்கத்திலிருந்த எஸ்டேட்டுக்கு சென்றார்கள். ஸ்கார்லெட்டுக்கு கார்மல் அவளைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. கார்மல் அவளுடன் வெளியே செல்வதை எப்படி எடுத்துக் கொள்வான்?

‘’என்ன பேசாமலே வரே. பார்ட்டியிலும் அப்படித்தான் இருந்தே. என்கிட்டே கவனமா இருக்கணுமின்னு உன் புருஷன் சொல்லி வச்சிருக்கானா ‘’

ஸ்கார்லெட் திடுக்கிட்டு ‘’சேச்சே‘’ என்றாள். பிறகு ‘’ஆமாம்‘’ என்றாள்.

சாரா சிரித்து ‘’ஆனால் நேரில் இதை என்னிடம் கடுமையாக மறுப்பான்’’ என்றாள். “முதுகெலும்பே இல்லாதவன்’’ என்றவள் சற்று மவுனத்துக்குப் பிறகு ‘’எனக்கு உன் அப்பாவைத் தெரியும்’’ என்றாள்.

ஸ்கார்லெட் அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

’’பாவம். பரிதாபகரமான மரணம்‘’ என்றாள் சாரா. ‘’இங்கே புதிதாக வருகிற சமவெளி வாசிகளுக்கு இயற்கை ,விலங்குகள் மீதெல்லாம் ஒரு ரொமாண்டிக்கான எண்ணம் ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அவர் ‘’

ஸ்கார்லெட் ‘’புரியவில்லை மேடம்‘’ என்றாள். ’’பிறகு புரியும். என்னை சாரா என்றே கூப்பிடு ‘’

கார் இப்போது உச்சியில் இருக்கும் ஒரு கல் கட்டிடத்தை நோக்கி ஏறிக்கொண்டிருந்தது. ’’நாம் நமக்கு உபயோகமில்லாத விஷயங்கள் மீது நமது ஆற்றலை வீணடிக்கக் கூடாது. இதோ இப்போது நாம் காணப்போகும் மாயாவும் உன்னைப் போலவே இருந்தவள் தான். ஆரம்பகட்ட மயக்கங்களுக்குப் பிறகு அவளுக்கு எங்களைப் போன்ற பிராக்டிகல் மனிதர்கள் தான் தேவை என்பதை அவள் உணர்ந்து கொண்டதைப் போலவே நீயும் உணர்ந்து கொள்வாய்’’ என்றாள். ’’உனது அப்பாவுக்கு நான் செய்யும் உதவியாக இது இருக்கட்டும் ‘’

மாயாவின் கணவன் அந்த இடங்களுக்கு ஒரு விதத்தில் அந்நியன். பெரும்பாலும் அங்கிருந்த தோட்டங்கள் எல்லாம் பெரிய சர்வதேச கம்பெனிகளின் கிளைகள். அவர்கள் நடுவில் மாயாவின் கணவன் ஒரு சிறிய ‘அதிகப் பிரசங்கி‘. அமெரிக்காவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவன் ஏதோ தோன்றியது போல தனது சேமிப்பை எல்லாம் கொட்டி நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த இந்த தேயிலைத் தோட்டத்தை வாங்கி குடி வந்தான். இரண்டு குழந்தைகளோடும் மனைவியோடும். ‘வங்காளி’ என்றாள் சாரா. ’வங்காளிகள் பொதுவாக புத்திசாலிகள். ஆனால் மாயாவின் கணவன் தாகூரை அதிகம் படித்துக் கெட்டுப் போனவன். நீயும் நிறைய படிப்பியாமே?‘’

ஸ்கார்லெட் ‘’கொஞ்சம்‘’ என்றாள். ’’யார் சொன்னது?‘’

‘’யார் சொல்லவேண்டும்? நீ ரொம்ப சோகையாக இருப்பதிலிருந்தே தெரிகிறது. உன் கண்கள் களைப்படைந்து இருக்கின்றன‘’ என்றாள். ‘’ஆனால் உன் புருஷன் நிறைய நீலப் படங்கள் தான் பார்ப்பான். அசோசியேஷன் அவ்வப்போது வழங்கும் பிளான்டர்ஸ் கய்டுகளைக் கூட அவன் படிப்பதில்லை‘’ என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள்.

மாயாவின் வீட்டை ஒட்டியே அவர்கள் நிறைய ஆடுகளையும் வளர்த்து வந்தார்கள். உண்மையில் அதுவே திவால் ஆவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது. சக்கரவர்த்தி இங்கே வந்த பிறகு தான் அந்த தேயிலைத் தோட்டம் ஏன் விலைக்கு வந்தது என்று கண்டுபிடித்தான். அதில் நீர் அதிகம் தேங்கியது. தேயிலைக்கு நீர் அதனூடே பாய்ந்து வடிந்து சென்று விட வேண்டும். அவர்கள் நிதி நிலைமை மோசமடையத் துவங்கியது. அவர்கள் கடன் வாங்கினார்கள். தற்கொலை பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். மாதக்கணக்கில் யார் கண்ணிலும் படாமல் இருக்க ஆரம்பித்தார்கள். ஒருவகையில் சாரவும் சாக்கோவும்தான் அவர்களைக் காப்பாற்றினார்கள் என்று சொல்ல வேண்டும். இதைச் சொல்லிவிட்டு சாரா அவளை கூர்ந்து பார்த்தாள்.

‘’சாக்கோ ரொம்ப உபயோகமான மனிதன்.’’ என்றாள் சாரா. ‘’ஆனால்…..அவனுக்கு அதிர்ஷ்டமே கிடையாது ‘’

விஷயம் மாயாவின் ஆட்டு மந்தையை மேய்ப்பது ஒரு குரங்கு. அதைக் காட்டவே சாரா அவளை அழைத்துப் போனதாகச் சொன்னாலும் அவள் உத்தேசம் அது மட்டுமல்ல என்று அவளுக்குப் புரிந்தது. மாயாவும் அவள் கணவனும் சாராவிடம் மிக மரியாதையாகவும் கொஞ்சம் அச்சத்துடனும் கூட நடந்து கொள்வதாகப் பட்டது.

அவர்களது ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது நிறைய சிறுத்தைகளிடம் மாட்டிகொண்டு பலியாகின. அப்போது ஒரு நாள் இந்த குரங்கு அவர்களிடம் வந்து சேர்ந்தது. காவல் நாய்களை மீறியும் அது தொடர்ந்தது. உண்மையில் காவல் நாய்கள் அஞ்சி நடுங்கின, இந்த சமயத்தில் தான் மணி என்கிற அந்த குரங்கு அந்த பொறுப்பை தானே எடுத்துக்கொண்டது. அது ஒரு நாள் சக்கரவர்த்தியின் வீட்டு வாசலில் பலத்த காயங்களோடு கிடந்தது. அவன் அதை எடுத்து குணப்படுத்தினான். குணமானதும் அது அவனது ஆடுகளுக்கு நல்லதொரு மேய்ப்பனாக இருக்க ஆரம்பித்தது. ஆடுகளும் நாய்களும் அதன் சொல்லைக் கேட்டன. அதன்பிறகு அவர்கள் நிதி நிலைமை மேம்பட்டது.

அவர்கள் முற்றத்தில் தேநீரும் பிஸ்கட்டுகளும் சாப்பிட்டபடியே மாயாவின் ஆடுகள் வீடு திரும்புவதைப் பார்த்தார்கள் .முன்னால் வரும் ஆட்டின் மேல் அதன் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு மணி அமர்ந்திருந்தது.

8

வீடு திரும்பும் போது வாசலில் கார்மல் அமர்ந்திருந்தான். சாரா காரிலிருந்தே ‘’கார்மல் நீ என்னைப் பற்றி சொல்லிய எல்லாவற்றையும் உன் மனைவி என்னிடம் சொல்லிவிட்டாள்’’ என்று கத்தினாள்.

கார்மல் ‘’உங்களுக்கு எப்போதுமே விளையாட்டு‘’ என்று சிரித்து சமாளித்தது ஆபாசமாகப் பட்டது. ’முதுகெலும்பே இல்லாத மனிதன்.‘

9

இரவு வரை அங்கேயே அமர்ந்து கார்மல் குடித்துக் கொண்டே இருந்தான். எப்போது உள்ளே வந்து படுத்தான் என்று தெரியவில்லை. சாப்பிட்டானா தெரியவில்லை, அழைத்ததற்கு பதில் சொல்லவில்லை. தொடர்பில்லாமல் ‘’நல்லது அழுகும் போது இன்னமும் நாற்றம் உடையதாக மாறிவிடும்‘’ என்றான். அவள் உறங்கப் போய்விட்டாள். விழித்தபோது வழக்கம்போல அவளது உடைகள் மேலேறிக் கிடப்பதை அவள் கண்டாள். அவளது தொடைகளில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்டியது. நாயின் கோழை போல.

10

மறுநாள் சாக்கோ தேவையான உபகரணங்களுடன் வந்தான். முன்பிருந்ததை விட முடியைக் கட்டையாக வெட்டியிருந்தான். முகவாயில் ஒரு சிறிய வெட்டு இருந்தது. தானே ஷேவ் பண்ணிக் கொள்கிற ஆள் என்று நினைத்துக் கொண்டாள். கார்மலுக்கு முனுசாமி தான் ஷேவ் பண்ணிவிடுகிறான். கார்மல் இதுபோன்ற காலனிய உபசாரங்களை நன்றாக அனுபவித்துக் கொண்டே வெள்ளைகாரர்கள் பற்றி குறை சொல்வது முரணாகத் தெரிந்தது.

சாக்கோ ஹீட்டரின் கையிலை மாற்றும் போது ‘’உங்கள் உண்மையான பெயர் சாக்கோதானா‘’ என்று கேட்டாள். ’’ஒரு மலையாளப் படத்தில் ஜகதி ஸ்ரீகுமாரின் பெயர் சாக்கோ.‘’

‘’ஒரு கின்னாரப்புழையோரம்‘’என்றான் சாக்கோ. “சீனிவாசன் படம் சாராவின் வீட்டில் பார்த்திருக்கிறேன்‘’ என்றான். ‘’இல்லை என் பெயர் வேறு. சாரா தான் என்னை முதலில் சாக்கோ என்றழைக்க ஆரம்பித்தாள்’’ என்று சொல்லி விட்டு திருகுகளை முறுக்க ஆரம்பித்தான். ஸ்கார்லெட்டுக்கு அவர்கள் இருவரிடையே ஏதோ இருக்கிறது என்று தோன்றியது. சாரா அதை வெளியே காட்டிக் கொள்ள தயங்கவில்லை என்பதாயும். சோர்வடைந்து வெளியே வந்துவிட்டாள். தோட்டத்தில் அவளது ரோசாச் செடியை மர்மமான ஒரு பூஞ்சை தாக்கியிருந்தது. அதையே சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சாக்கோ பின்னால் வந்து ‘’இது நாட்டு வகை. இங்கே தாக்குப் பிடிக்க கடினம். நான் இதே போல் நிறமுள்ள காட்டு வகை ஒன்றைக் கொண்டு வந்து தருகிறேன்‘’

அவள் ‘’வேண்டாம்‘’ என்று உடனே சொன்னாள். ’’ஒன்றைப் போலவே உள்ள மற்றது எனக்கு வேண்டாம். நான் உங்களுக்கு பணம் எவ்வளவு தரவேண்டும் ?

அவன் பணத்தை வாங்கிக்கொண்டு சற்று நேரம் தயங்கி நின்றான்.

‘’என்ன?‘’

‘’நான் உங்களுக்கு ஒரு புத்தகம் கொண்டுவந்தேன் ‘’

அவன் அதை மேசையில் வைத்து விட்டு ஜீப்பில் ஏறி சென்றான்.

அவள் அதை எடுக்காமல் ஏறி வீட்டுக்குள் சென்றாள். இரவு வரை படுக்கையிலேயே கிடந்தாள்.

பாண்டியம்மாள் சமைத்து மூடி வைத்திருந்ததைத் திறந்து பார்த்தாள். கார்மலுக்கு மூன்று வேளையும் இறைச்சி வேண்டும், திடீரென்று சாரா சொன்னது நினைவுக்கு வந்தது. சாப்பாட்டின் நடுவிலேயே எழுந்து கார்மலின் மேசையைத் திறந்து பார்த்தாள். ஒரு இழுப்பறை முழுவதும் பெயரிடப்படாத குறுந்தகடுகள் கிடந்தன.

எல்லாமே நீலப்படங்கள். ஒரே வகையான படங்கள். எல்லாவற்றிலும், விதம் விதமான பெண்களுடன் மிருகங்கள் புணர்ந்தன. நாய்கள், குதிரைகள், கழுதைகள் கூட.

ஸ்கார்லெட் சாப்பிட்டதை எல்லாம் பின்னால் சென்று வாந்தி எடுத்தாள். முனுசாமி அவன் அறையிலிருந்து எட்டிப் பார்த்தான். சோர்வுடன் படுத்துக் கொண்டாள். அப்பாவின் நினைவு வந்தது. அவரது கடைசி நாட்கள். ’’அப்பா அப்பா” என்று அழுதாள்.

எதேச்சையாக அவள் கண்கள் கண்ணாடி ஜன்னலின் வழியே மேலே தோட்டத்தில் தேயிலைச் செடிகள் மேலே இரண்டு மிதக்கும் சிவந்த ஒளித் துண்டுகளைக் கண்டன. முன்பை விட அது இன்னமும் நெருங்கி வந்திருப்பதைப் போல பட்டது.

அவள் திடுக்கிட்டு எழுந்தபோது அவை அணைந்து விட்டிருந்தன.

வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது.

ஸ்கார்லெட் ஓடிப்போய் அந்தப் புத்தகத்தை எடுத்து வந்தாள்.

11

காலையில் அவள் சாக்கோவைத் தேடித் போனாள். முனுசாமி ‘’அவனை ஏன் தேடிப் போகணும் கூப்பிட்டு அனுப்பினா வருவான் ‘’என்றான் அலட்சியமாக. ’’தவிர மலைல பழக்கமில்லாதவங்க கார் ஓட்டுறது அவ்வளவு சரியில்லை.‘’ அவள் அதைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவன் வீடு தோட்டத்தின் ஒரு எல்லையில் இருந்தது. ஒரு சிறிய மலை தெய்வக் கோவில் இருந்தது. அவன் வீட்டிற்கு எதிரே நீண்ட தகரக் கூரையோடு தொழிலாளர்கள் குடியிருப்புகள் வரிசையாக இருந்தன. அவை மிக மோசமாக இருந்தன. சாக்கோவின் வீடு இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய கட்டிடம். போன போது அவன் வெளியே கட்டிலில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தான். வெறும் மார்புடன் இருந்தான். அவன் இடது மார்பில் ஏதோ பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தாள். ’’இங்கே சர்ச் எங்கே இருக்கு? இங்கே வந்த பிறகு நான் ஆண்டவரையே மறந்துவிட்டேன்’’

அவன் ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு வந்தான். ’’சரியாக சர்ச் என்றால் நகரத்துக்குத் தான் போக வேண்டும். ஆனால் சற்று தொலைவில் இங்கே கூலிகள் வணங்கும் ஒரு மாதா சொரூபம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதுவே பிரசன்னம் உள்ளது‘’ என்றவன், ‘’நானே காரை ஓட்டுகிறேன் ‘’என்றான்.

‘’கார்மல் நேற்று வீட்டுக்கு வரவில்லை.‘’

‘’அவர் கோவை போயிருக்கிறார். அங்கே மூன்று நாட்கள் பிளான்டர்ஸ் மாநாடு இருக்கிறது. சொல்லவில்லையா?’’

‘’இல்லை‘’ என்றாள். “நீங்கள் செல்லவில்லையா?‘’

‘’நானா? நான் கூலி வேலைக்காரன். முனுசாமியும் நானும் ஒன்று. நான் தேயிலை பறிப்பதில்லை. மற்றபடி நானும் அவர்களும் ஒன்றுதான்‘’

அவள் மவுனமாக இருந்தாள்.

“நேற்று நீங்கள் தந்த புத்தகத்தைப் பார்த்தேன். விலங்குகள் ,மரங்கள், மலர்கள், பூச்சிகள் பற்றி உலகில் எழுதப்பட்ட கவிதைகள். இன்னும் படிக்கவில்லை. இதே போன்ற சிலவற்றை அப்பா எங்களிடம் பேசியதுண்டு. ஆலமரம் பற்றி Robert Southey எழுதிய ஒரு கவிதையின் வரிகள் எனக்கு இன்னமும் நினைவில் உண்டு.

‘So like a temple did it seem that there
A pious heart’s first impulse would be prayer‘

இந்தக் கவிதை புத்தகத்தில் இருக்கிறதா?‘’

சாக்கோ திரும்பி அவளை பார்த்தான். “இருக்கிறது‘’ என்றான். ‘A pious heart’s first impulse would be prayer’ ஆமாம்,இல்லையா? நான் ஒவ்வொரு மரத்தின் முன்பும் கூட அப்படித் தான் உணர்கிறேன்‘’

இதை சொல்லும்போது அவன் முகம் இளகி நெகிழ்ந்து அவனது குழந்தைமைக்கு மீள்வது போல அவளுக்கு தோன்றியது.

‘’சாக்கோ இங்கே சிறுத்தைகள் உண்டா.’’

‘’சிறுத்தைகள் அல்ல. சிவிங்கிப்புலிகள். கார்மலுக்கு leopard க்கும் cheetah வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.’’

‘’ஓ! என்ன வித்தியாசம்? எனக்கும் தெரியாது.’’

சிறுத்தையை விட சிவிங்கிப்புலி வேகமாக ஓடக் கூடியது. அது மனிதர்களைத் தாக்குவதும் இல்லை. சொல்லப் போனால் முன்பு மகாராணிகள் அந்தப்புரங்களில் சிவிங்கிப்புலிகளை வளர்த்திருக்கிறார்கள்.’’

‘’உண்மையாகவா? கார்மல் அது ஒரு பொண்ணைத் தூக்கிக் கொண்டு போய்விட்டதாகச் சொன்னாரே ‘’

‘’அது இந்தப் பக்கங்களில் ஒரு பெண் ஒருவரோடு விரும்பி ஓடிப் போய்விட்டால் நேரடியாக சொல்ல விரும்பாமல் அப்படி சொல்வார்கள். கேரளத்தில் கந்தர்வன் பற்றிய கதைகள் இருப்பது போல.’’ என்றான் அவன். ’’கார்மல் வெள்ளைக்காரர்கள் நிறவெறியின் காரணமாக அவரை தாழ்வாக நடத்துவதாக நினைக்கிறார். காரணம் வேறு. இவ்வளவு வருடங்கள் இருந்தும் அவர் இந்நிலத்தை மலைகளை மிருகங்களை பறவைகளை மரங்களை புரிந்து கொண்டதில்லை. அதை அவர்கள் அறிவார்கள் ‘’

ஸ்கார்லெட் ‘’ஒரு மரத்தை எப்படி புரிந்துகொள்வது‘’ என்றாள் தனக்குள். ’’அல்லது ஒரு சிறுத்தையை .அல்லது ஒரு சிவிங்கிப் புலியை ‘’

பிறகு சத்தமாக ‘’நீங்கள் எப்படி புரிந்துகொண்டீர்கள்? நீங்களும் ஒரு சமவெளி மனிதர்தான், இல்லையா?’’

சாக்கோ ‘’ஆம். ஆனால் சமவெளியிலும் நாங்கள் மிருகங்களுக்கு மிக அருகே தான் வாழ்ந்துகொண்டிருந்தோம்’’

‘நாங்கள்?’ என்று ஸ்கார்லெட் முனகினாள். யாரிந்த நாங்கள்?

அதற்குள் அவர்கள் மாதா கோவிலை அடைந்திருந்தார்கள். அது ஒரு சிறிய குன்றின் உச்சியில் இருந்தது. அதன் அருகே ஒரே ஒரு மரம் மட்டுமே இருந்தது. அந்த மரம் விநோதமாக அச்சத்தை அளிப்பதாக இருந்தது. ’’இந்த மரத்தின் பெயர் பொந்தன் புளிமரம். ராத்திரியில் பார்க்க தலையை விரித்துப் போட்டுக் கொண்டு நிற்கும். பேய் போலத் தெரிவதால் இங்கே உள்ளவர்கள் பரட்டை மரம் அல்லது பேய்ப்பரட்டை என்று அழைப்பார்கள். உண்மையில் ஆப்பிரிக்காவில் தான் அதிகம் தென்படும் மரம் இது. இங்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை. வழக்கமாக இது போன்ற அச்சத்தை ஊட்டுகிற இடங்களில் ஏதாவது காளி போன்ற தெய்வங்களை வைப்பார்கள். இவர்கள் கிறித்துவர்கள் ஆனதால் மாதாவின் சொரூபத்தை வைத்திருக்கிறார்கள்.’’ என்றன். ஸ்கார்லெட் இறங்கி அந்த மரத்தை சுற்றிப்பார்த்தாள். ஏனோ அது அவளுக்கு சாராவை நினைவு படுத்தியது. திரும்பும்போது ‘’நாளைக்கு எனக்கு அந்த காட்டு வகையைக் கொண்டு வாருங்கள் ‘’என்றாள்

அவர்கள் திரும்பும் போது சாக்கோவின் வீட்டின் முன்னாள் சாராவின் கார் நின்று கொண்டிருந்தது. தொழிலாளர்கள் யாரும் வெளியே வராமல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

12

அவள் வீட்டுக்கு திரும்புகையில் வழி தவறி போய்விட்டாள். நேரமாகிவிட்டது. முனுசாமி ‘’அய்யா இல்லாத போது நீங்கள் இப்படி செய்வது நல்லா இல்லை‘’ என்றான். அவள் ‘’எப்படி செய்வது‘’ என்றாள் சூடாக. அவன் பின்வாங்கி ‘’தனியாக கார் ஓட்டுவது‘’ என்றான்.”போனடித்துக் கொண்டே இருந்தது. சாரா அம்மா பேசினார்கள். வந்ததும் பேசச் சொன்னார்கள்’’

அவள் பேசவில்லை. சாப்பிட்டுவிட்டு அவன் தந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.

மறுநாள் சாக்கோ புதியவகை ரோஜாப் பதியன்களோடு வந்தான். ’’இவற்றை முழுவதுமாக காட்டுவகை என்று சொல்லமுடியாது. அவற்றை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. இவை பாதி பழக்கப்படுத்தப்பட்டவை”

ஸ்கார்லெட் அவன் அதை நடுவதை பார்த்துக்கொண்டே இருந்தாள். ’’வேலியை சீரமைக்க வேண்டும் என்று கார்மலிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். முள் முருக்கை மரங்களை நட்டால் அழகாகவும் இருக்கும். காட்டுப்பன்றிகள் வராமல் தடுக்கவும் செய்யும். நீங்கள் முருக்கை மரத்தின் மலர்களைப் பார்த்திருகிறீர்களா? சங்க இலக்கியத்தில் அதைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். செம்முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் என்று ஒரு அகநானூறு பாடல் இருக்கிறது. ஆனால் அதை எந்த நவீன கவிதையிலும் யாரும் அதைப் பாடவில்லை. நவீனத்தின் மலர்கள் வேறு. ஆனால் என் பார்வையில் இன்றும் உலகின் அழகிய மலர் அதுவே’’

அவள் ‘’நீங்கள் எழுதுங்களேன்‘’ என்றாள். அவன் அதற்கு ஏனோ நாணம் கொண்டது போல தோன்றியது. ’’வேண்டாம். எழுதுவதும் ஒருவிதத்தில் அவற்றை மனிதனுக்குப் பழக்கப்படுத்துவது போலதான். சொல் என்பது விஷம் வாய்ந்த எச்சில் ‘’

மதியம் அவனை அங்கேயே சாப்பிட சொன்ன போது அவன் கடுமையாக மறுத்தான். அவள் வற்புறுத்தினாள். அவன் இன்னமும் தயங்கினான் ‘’

‘’நீங்கள் கார்மலைக் குறித்து அஞ்சுகிறீர்களா? நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன் ‘’

‘’இல்லை‘’ என்றான் அவன்

அவள் சட்டென்று ‘’சாராவுடன் உங்கள் உறவு என்ன? நீங்கள் பயப்படுவது அவருக்குத் தான். இல்லையா?’’

அவன் தளர்ந்தான் ‘நான் அவளது பணியாள்’’ என்றான். ’’நான் அவள் சொன்னதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.‘’

அவள் துணிச்சல் அடைந்தவளாக, ‘’நீங்கள் அவளுடன் படுத்துக் கொள்கிறீர்களா?‘’

அவன் தலையைத் திருப்பிக் கொண்டு ‘’இல்லை. அவள் என்னுடன் படுத்துக் கொள்கிறாள்” என்றான். ’’நான் அவளது நாய். நக்கும் நாய்‘’

13

மதியம் கார்மலிடமிருந்து போன் வந்தது. ‘’நான் வர மேலும் ஒரு நாளாகும். நேற்று என்ன நிகழ்ந்தது? சாக்கோ தனது புதிய உலகங்களை உனக்குக் காட்டிவிட்டானா?‘’

அவள் ‘’என்ன சொல்கிறீர்கள் கார்மல்?’’ என்றாள்.

‘’நடிக்காதே. எனக்கு ஒழுக்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. உனது சாமானை நீ எவனுக்குக் காண்பித்தால் எனக்கென்ன? ஆனால் ஒரு கிளாஸ் இருக்க வேண்டும். நாளையே நீ முனுசாமியோடு படுத்துக் கொள்வதை என்னால் சுதந்திரம் என்ற பேரில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது ‘’

‘கார்மல்!’’

‘’சர்தான் போடி. நீ கட்டாயம் படுத்துக் கொள்ள வேண்டுமானால் ரிச்சர்ட் மார்க்ஸ் கூட படு. அவன் இங்கே என்னை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் நினைத்தால் நம் இருவரையும் பிச்சை எடுக்க அனுப்பி விடுவான். அப்போது நிஜமாகவே நீ படுத்து தான் நாம் பிழைக்க வேண்டி இருக்கும் ‘’

ஸ்கார்லெட் ‘’போடா பொட்டை‘’ என்றாள். ‘’ராத்திரியில் உறங்குகையில் வந்து பாவாடையைத் தூக்குகிறவன்’’

அவன் ‘’ஹஹா ‘’என்றான். ‘’ராத்திரியில் நான் அதெல்லாம் செய்கிறேனா என்ன? எனக்கு நினைவே இல்லை. விழித்திருக்கையில் உன் முகத்தைப் பார்க்க எனக்கு பிடிக்காதது தான் ஒரு காரணமாக இருக்கவேண்டும் ‘’

அவள் போன் ரிசீவரைத் தூர எறிந்தாள்.

ஸ்கார்லெட் காரை எடுத்துக் கொண்டு செலுத்தப்பட்டவள் போல மலைகளில் இலக்கில்லாமல் அலைந்தாள். ஏதோ ஒரு கணத்தில் எப்படியோ சாக்கோ காண்பித்த மலை மாதா சொரூபத்தின் அருகில் வந்து சேர்ந்திருப்பதை உணர்ந்தாள். மூச்சு வாங்க ஏறிப் போனாள்.

அங்கே பள்ளத் தாக்குகளைப் பார்த்தபடி சாக்கோ அமர்ந்திருந்தான்.

அவன் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்து ‘’தனியாக இங்கே அலைவது ஆபத்து‘’ என்றான்.

‘என்ன ஆபத்து ?’’என்றாள் அவள் ‘’சிவிங்கிப்புலித்தான் மனிதர்களைத் தாக்காது என்றீர்களே .’’

‘’உண்மைதான். ஆனால் பாம்புகள் உண்டு. இங்கே சில நேரங்களில் காட்டுப் பன்றிகள் மிக ஆபத்தானவை ‘’

அவள் அவனருகே அமர்ந்துகொண்டாள். அங்கிருந்து பள்ளத்தாக்கைக் காணும்படியாக ஒரு சிமிண்டு பெஞ்சு போடப்பட்டிருந்தது.

‘’கார்மல் என்னிடம் இன்று மிக மோசமாகப் பேசினார்” என்றாள் பிறகு தாங்க முடியாமல்.

‘’எதிர்பார்த்தேன். நான் அங்கே சாப்பிட்டிருக்கக் கூடாது .முனுசாமி சொல்லியிருப்பான். சமவெளியின் அதிகார அடுக்குகள் இங்கும் இயங்குகின்றன‘’ என்றான் பெருமூச்சுடன்.

‘’எனக்குப் புரியவில்லை‘’ என்று அவள் வெடித்தாள். ’’நீங்கள் எல்லோருமே இங்கு மர்மமாகவே நடந்து கொள்கிறீர்கள். உங்கள் சரியான பெயர் கூட எனக்கு தெரியவில்லை. சாரா எப்போதும் பல அர்த்தங்களில் பேசுகிறாள். அவள் ஜோக்குகள் கூட கசப்பு நிரம்பியதாகவும் ஒரு எச்சரிக்கை போலவும் இருக்கிறது. நான் எதற்கோ பயப்படவேண்டும் என்பது போலவும். நான் யார் இடத்தையோ எடுத்துக் கொண்டது போலவும். யார் இடம் அது என்றுகூட எனக்குப் புரிவதில்லை ‘’

சாக்கோ சற்று நேரம் மவுனமாக இருந்தான். ’’என் உண்மையான பெயர் சங்கரலிங்கம். சமவெளியில் எனது பெயர். இந்தப் பெயருடைய நபரை அங்கே தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பெயரை முற்றிலுமாக அழித்துவிட விரும்புகிறார்கள். பூமி மீதிருந்து ஒருவகையில் அழித்து விட்டார்கள் என்றே சொலவேண்டும்.‘’

‘’அழிக்க விரும்புகிறார்களா? ஏன்?’’

‘’நீங்கள் இப்போது சொன்னதுதான். அவர்கள் நான் எனது இடத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதை விட்டு மேலேறுவதை அவர்கள் விரும்பவில்லை. உங்களைப் போலவே தனது இடத்தைப் பற்றி போதம் இல்லாத தங்கள் சொந்தப் பெண்ணைக் கூட அவர்கள் அதற்காகக் கொல்லத் தயங்கவில்லை‘’ என்றவன் உடைந்து அழ ஆரம்பித்தான். ‘’நீங்கள் போய்விடுங்கள் அவர்கள் உங்களையும் கொன்றுவிடுவார்கள்.’’

ஸ்கார்லெட் நெகிழ்ந்து அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் ‘’சாக்கோ…என்னை மன்னியுங்கள் நான் எதுவும் தெரியாமல்‘’ என்றவள் ’’இயற்கையில் எதுவும் கொல்லப்படுவதில்லை சாக்கோ. அதை நீங்கள் அறிவீர்கள்தானே?‘’

‘’இல்லை எல்லாம் இறந்து கொண்டிருகின்றன. எல்லாம். நான் ஏற்கனவே இறந்து விட்டேன். இந்த பூமியே இறந்து கொண்டிருக்கிறது.’’

‘’சாக்கோ வேண்டாம்.’’ என்றாள். அவள் பிறகு அவனை இன்னும் சற்று நெருங்கி அவனது கன்னத்தின் ஓரமாக மெலிதாக முத்தமிட்டாள். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பிறகு அவன் மிகவும் அஞ்சுவதைக் கண்டதும் விலகி அமர்ந்து கொண்டாள்.

.அவன் ‘’நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன் ஸ்கார்லெட் ‘’என்றான்.

’’சரி. போவோம் ‘’

‘’எங்கேயும் போகவேண்டாம். இங்கேயே இருங்கள் ‘’

அவர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு மவுனமாக மாலை பூமியின் மீதிருந்து பின் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரவு கீழே தேயிலைத் தோட்டங்கள் மீது யாரோ ஒரு நீண்ட போர்வையை விரித்துக் கொண்டே வருவது போல வந்தது. வந்து வந்து அவர்களையும் மூடி கடந்து போனது. இருளில் ஒவ்வொரு நட்சத்திரங்களாகத் துலங்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் வான் முழுவதும் தாழத் தொங்கும் நட்சத்திரங்களால் நிறைந்தன. வானம் மணிகள் நிரம்பிய ஒரு குடுவை போல அவர்கள் முன்பே கிடந்தது. சுழன்றது.

‘’அற்புதம் சங்கர், அற்புதம்‘’ என்றாள் அவள்.

அவன் ’’இன்னும் கொஞ்சம் பொறுங்கள் ‘’என்றான் .

அவர்கள் இருளில் அதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் மயில்களின் அகவல்கள் கேட்டன. குரங்குகளின் சளசளப்பு ஓங்கிக் குறைந்தது. கடமான்களின் பாதுகாப்பு குறித்த விசாரிப்புகள். ஸ்கார்லெட் மறுபடியும் இன்னும் சற்று நெருங்கி அவனருகே அமர்ந்துகொண்டாள். அவன் மேல் பரிவும் பரிதாபமும் ஒரு சேர எழுந்தது.

அப்போதுதான் அதைக் கவனித்தாள்.அவர்கள் எதிரே இருந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக அசைய ஆரம்பித்தன. முதலில் அவள் அதை ஏதோ பார்வைப் பிழை என்று நினைத்தாள். ஆனால் வானிலிருந்து கழற்றப்படும் ஒளி மிகுந்த தங்க அணிகள் போல அவை ஒவ்வொன்றாய் பிரிந்து நடனமாட ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் வான் முழுக்கவே நெளியும் நட்சத்திரத் துளிகளால் நிரம்பியது. ஒரு கணத்தில் மொத்த நட்சத்திரக் கூட்டமும் சுழன்று எழுந்து அவர்களை நோக்கி வந்து அவர்களை கடந்து போனது. வானம் எல்லோரும் காலி பண்ணி போய்விட்ட ஒரு வீடு போல் ஒரு கணத்தில் ஆகிவிட்டது.

‘’மின்மினிப் பூச்சிகள் ‘’என்றான் சங்கர லிங்கம். ’’நாம் இருவரும் இதுவரை பார்த்தது நட்சத்திரங்களை அல்ல. வானத்தையே அல்ல.’’

14

மறுநாள் அவள் வெகுநேரம் கழித்துதான் எழுந்திருந்தாள்.

கார்மல் வந்திருந்து முன்னறையில் அமர்ந்திருந்தான். ஷூக்களை மாட்டிக்கொண்டிருந்தான். அதே கோலத்தில் வைத்து முனுசாமி அவனுக்கு சவரம் செய்துகொண்டிருந்தான். ’’குட்மார்னிங் ‘’ என்றான். ஸ்கார்லெட் கடந்துபோய் தோட்டத்தில் சங்கர் நட்ட செடி எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். வானம் பளீரென்று இருந்தது. பாண்டியம்மாள் “காலை இவ்வளவு வெளிச்சமுடையதாக இருந்தால் மாலையில் நிச்சயம் பெருமழை இருக்கிறது என்று பொருள் ‘’ என்றாள்.

கார்மல் உள்ளிருந்தே ‘’நான் வெளியே போய்விட்டு வருகிறேன். மதியம் நாம் நமது சாமியாரைப் போய்ப் பார்த்துவருவோம். பாதிரிக்குக் கொடுக்கவேண்டிய பங்கை அவருக்கும் கொடுக்கவேண்டும் அல்லவா ‘’

ஸ்கார்லெட் பேசாமல் அவனைக் கடந்து குளிக்கப் போனாள். பாத்டப்பில் ரொம்ப நேரம் இருந்தவள் கார்மல் வெளியே போகும் ஒலி கேட்டபிறகுதான் வெளியே வந்தாள். மதியம் பாண்டியம்மாள் சொன்னது போலவே வானம் கருத்துக்கொண்டு வந்தது. என்னவோ நினைத்துக்கொண்டே படுக்கையிலேயே தூங்கிவிட்டாள். விழித்தபோது வெளியே கடும் மழை பெய்துகொண்டிருந்தது. இருட்டு. இந்த முனுசாமி எங்கே போனான்.? விளக்குகளைப் போட்டாள். போனடித்துக்கொண்டே இருந்தது. எடுத்தாள். மறுமுனையில் கார்மல். ஆனால் இணைப்பு இரைச்சலாக இருந்தது . அவன் குரல் கிணற்றுக்குள் மூழ்கி மூழ்கி வெளியே வருவதுபோல போய்ப் போய் வந்தது. ‘’என்ன ?கேட்கவில்லை” என்று கத்தினாள். மழை நீர் காற்றுடன் சேர்ந்து வந்து கூடத்துக்குள் கொட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தாள். இந்த முனுசாமி எங்கே ?

‘’என்ன இங்கே ரொம்ப மழை பெய்கிறது. ஒன்றும் கேட்கவில்லை ‘’

ஒரு கணம் இணைப்பு தெளிவாகி அவன் குரல் மேலெழுந்து இரைந்தது ‘’முட்டாளே. அந்த சாக்கோ செத்துப் விட்டான். அவனை யாரோ வெட்டிப் போட்டுவிட்டார்கள் ‘’

அவள் உறைந்து ‘’என்ன !யூ லையர் !’என்று கத்தினாள். பிறகு ‘’யூ பாஸ்டர்ட் !’’

அவன் ‘’அடி முட்டாளே. நானல்ல சாரா. சாரா அவனைக் காட்டிக்கொடுத்து விட்டாள்!’’

15

கார்மல் வந்தபோது அவள் பித்து பிடித்தது போல இருந்தாள். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. அவள் வெறி கொண்டவள் போல தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். கார்மல் அவளைக் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தான். “முட்டாளே முட்டாளே இதைக் குடி ‘’

அவளுக்கு போதம் வந்தபோது தலை கடுமையாக வலித்தது. கண்களைத் திறக்கமுடியவில்லை. உடலின் மீது ஏதோ அழுந்திக் கிடப்பது போல தோன்றியது. மூச்சு முட்டியது. ‘கார்மல் வேண்டாம்’ என்று முனகினாள். அவள் கால்களிடையே ஏதோ நெளிந்து கொண்டே இருந்தது. அவள் அதைத் தள்ள முயற்சித்தாள். முடியவில்லை. ஒரு கணத்தில் எல்லா சக்தியையும் மீறி கண்களைத் திறந்தாள். சட்டென்று ஏதோ ஒரு நிழல் விலகுவதுபோல் பட்டது. கார்மல் தரையில் படுத்து குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். எலெக்ட்ரிக் ஹீட்டரின் தாழ்ந்த ஒலி மட்டும் அறையை நிறைத்திருந்தது. வெளியே மழை நின்றிருந்தது. அவளது தலைப் பொட்டுகள் துடித்தன. வழக்கம்போல அவள் ஆடைகள் ஏறிக்கிடந்தது. தொடைகளில் நாயின் கோழை. அவள் திரும்பி அருவெறுப்புடன் ஆழ்ந்து உறங்கும் கார்மலைப் பார்த்தாள்.

ஸ்கார்லெட் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

‘’கார்மல் கார்மல்!” என்று கத்தினாள். வேகமாக அடுக்கையை விட்டு எழுந்து கூடத்துக்கு வந்தாள். தள்ளாடியது.

பின்வாசல் வழியாக முனுசாமி அவன் அறையை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தான்.

16

ஸ்கார்லெட் ஸ்தம்பித்துப் போய் படுக்கை அறைக்குத் திரும்பி வந்து படுக்கையில் அமர்ந்தாள். எல்லாம் மெல்லத் தெளிவாவதைப் போல பட்டது. ஒரு குகைப் பாதைக்குள் இருந்து வெளியே வருவது போல. குகைக்கு இருபுறமும் இருந்த வெளி மீண்டும் பார்வைக்குப் புலனாவதைப் போல.

ஸ்கார்லெட் இப்போது கண்ணாடி ஜன்னல் வழியே மீண்டும் அந்த இரண்டு சிகப்பு பொட்டுகளைக் கண்டாள். இப்போது இன்னும் நெருக்கமாக.

அவள் எழுந்து அதனை நோக்கிப் போனாள். தொடுவது போல கை நீட்டினாள். அவை அவளையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தன. இன்னும் நெருங்கி வந்தன.

பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இப்போது அதன் அருகேயே இன்னொரு ஜோடி சிகப்பு விழிகளும் தோன்றின.

இரண்டும் அங்கேயே அதன் பிறகு அசையாமல் அவளது ஏதோ ஒரு முடிவுக்காகக் காத்திருப்பது போல நின்றன.

ஒரு நீண்ட செயலின்மைக்குப் பிறகு ஸ்கார்லெட் ஆளுயரமுடைய கம்பிகளற்ற அந்த கண்ணாடி சாளரத்தைத் திறந்தாள்.