நாள் சாம்பல் நிறத்தில் குளிராகத் துவங்கியது. அந்த மனிதன் பிரதான யூக்கான் தடத்திலிருந்து விலகி அங்கிருந்த சரிவின் மேலேறிய போது குளிர் மிதமிஞ்சியிருந்தது. வானம் ஆழ்ந்த சாம்பல் நிறத்துடன் காணப்பட்டது. அந்த சரிவின் உச்சியில் சொற்ப அளவிலேயான பயணிகள் செல்கிற, கண்களுக்குத் தெளிவாகப் புலப்படாத மற்றொரு தடம் கிழக்கு நோக்கிச் சென்றது. செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த ஊசியிலை மரங்களின் ஊடாக அத்தடம் அமைந்திருந்தது. செங்குத்தான அந்த சரிவின் மீதேறியதும் அதன் உச்சியில் நின்று மூச்சு வாங்கியவாறு தனது கைக்கடிகாரத்தை அவன் பார்த்தான். காலை ஒன்பது மணி. வானில் மேகம் ஏதும் காணப்படவில்லை. ஆனால் சூரியனும் தென்படவில்லை. அது உதயமாவதற்கான அறிகுறியும் சற்றேனும் காணப்படவில்லை. நாள் துலக்கமாக இருந்தும் ஏதோவொரு சோர்வும் சலிப்பும் மிகுந்த சூழல் நிலவியது. ஒரு நுட்பமான துயர் ஆழ்ந்து அந்நாளை மேலும் இருண்டதாக்கியது. அதன் காரணம் சூரியன் வெளிப்படாததுதான். இந்த நிதர்சனம் அம்மனிதனுக்கு கவலையை ஏற்படுத்தவில்லை. சூரியன் அல்லாத நாட்கள் அவனுக்குப் பழக்கமானவைதான். சூரியனைப் பார்க்காமலேயே பல நாட்களைக் கடந்து பயணித்திருக்கிறான். மேலும் சில நாட்கள் கழிந்த பிறகே மனதிற்கு குதூகலத்தை வழங்கும் அந்தச் சூரியன் தென்பகுதியிலுள்ள வான்வெளியில் சற்றே எட்டிப் பார்த்து உடனே சரிந்து பார்வையிலிருந்து மறைந்து விடும் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.
அம்மனிதன் பின்புறம் திரும்பி, தான் கடந்து வந்த பாதையின் மீது ஒரு கணம் பார்வையைச் செலுத்தினான். ஒரு மைல் அகல யூக்கான் நதி மூன்றடி உறைபனிக்குள் மறைந்திருந்தது. அந்த உறைபனிக்கு மேல் பல அடிகள் உயரத்திற்கு வெண்பனியும் விழுந்து மூடியிருந்தது. காண்பவை யாவும் தூய வெண்ணிறமாயிருந்தன. வெண்பனி விழுந்து உறைந்திருந்த வெளி யாவும் அலை அலையாக மெல்ல அசைவது போன்று தோற்றமளித்தன. வடக்கிலும் தெற்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிளவேயற்ற வெண்மை சூழ்ந்திருந்தது. ஊசியிலை மரங்கள் அடர்ந்திருந்த தீவு போன்ற பகுதி மட்டுமே கருத்த மயிரிழைக் கோடாக காட்சியளித்தது. தெற்கில் ஆரம்பமாகிய அக்கோடு வளைந்து நெளிந்து வடக்கு நோக்கிச் சென்று பின் ஊசியிலை மரங்கள் அடர்ந்திருந்த வேறொரு தீவுக்குள் மறைந்தது. அந்தக் கருத்த கோடுதான் தடம் – பிரதானத் தடம். அத்தடம் தெற்கே ஐந்நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள சில்கூட் பாஸ், அதனருகேயுள்ள டையா, பின் அதைக் கடந்தால் உப்பு நீர் பகுதிகளுக்கு இட்டுச் செல்லும். அங்கிருந்து மேலும் எழுபது மைல்கள் வடக்கே செல்லும் தடம் டாவ்சன் நகருக்குச் செல்லும் பாதை. மேலும் ஆயிரம் மைல்கள் வடக்கேயுள்ள தடத்தில் சென்றால் நுலாட்டோவை அடையலாம். பின் இறுதியாக பெர்ங் கடல் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மைக்கெல் ஆயிரத்து ஐந்நூறு மைல்களுக்கும் அப்பால் உள்ளது.
வெகு தூரம் போகிற பெரும் புதிரான அந்த மயிரிழைத் தடம், சூரியனற்ற வானம், கடுமையான குளிர் ஆகிய எதுவுமே அம்மனிதனை சற்றும் பாதிக்கவில்லை. புதுமையான, விசித்திரமான அப்பாதையில் பயணம் செய்வதும் கூட எவ்வித மனக் கிலேசத்தையும் அவனிடத்தில் ஏற்படுத்தவில்லை. அத்தகைய சூழலுக்கு அம்மனிதன் வெகுகாலம் பழகியவன் என்பதால் அவ்வாறு நேரவில்லை. அவன் அப்பிரதேசத்திற்கு புதிதாக வந்திருப்பவன். அவன் ஒரு செச்சாக்கோ. அதாவது அங்கு கிடைக்கக் கூடிய வளங்களை நாடி வரும் புதியவர்களில் ஒருவன். மேலும் அதுவே அப்பிரதேசத்தில் அவன் எதிர்கொள்கிற முதல் குளிர்காலம். அவனது சிக்கல் என்னவென்றால் ஆழ்ந்து ஆலோசிக்கக் கூடிய கற்பனைத் திறனற்றவன். வாழ்வியல் காரியங்களில் துரிதமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படக் கூடியவன். ஆனால் காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, அவை புலப்படுத்துகிற நுட்பங்களை உணரும் திறனற்றவன்.
மைனஸ் ஐம்பது டிகிரி என்றால் அசாதாரணமான எண்பது டிகிரி அளவிலான உறைபனிக் காலம். இந்த உண்மை நிலை அம்மனிதனுக்கு உணர்த்துவது குளிரும் அதனால் ஏற்படக் கூடிய தேக அசௌகரியங்களும் மட்டுமே. அவனது உடல் அத்தகைய சீதோஷ்ணத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதா என்பதை உணரும் பக்குவம் அவனுக்கில்லை. பொதுவாக மனித இனமே குறுகிய எல்லைக்குட்பட்ட குறிப்பிடத்தக்க அளவிலான வெப்பத்தையும் குளிரையும் மட்டுமே தாங்கக் கூடிய குறைபாடு கொண்டது என்பதையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவனுக்கில்லை. அதற்கு மேலும் ஆழமாகச் சிந்தித்து இப்பிரபஞ்சத்தில் மானிடனின் நிலையையும், இறவாமை போன்ற அனுமானங்களையும் ஆய்ந்துணரக் கூடிய புத்திக் கூர்மையும் அவனிடத்தில் இருக்கவில்லை.
மைனஸ் ஐம்பது டிகிரி என்பது உடலின் அங்கங்கள் விறைக்கக் கூடிய நிலையைத் தோற்றுவித்து வலியை ஏற்படுத்தும். எனவே அதற்கேற்ப கையுறைகள், தடிமனான காலுறைகள், வெதுவெதுப்பான தோலிலான காலணிகள், காதுகளை மூடும் வகையிலான தொப்பி ஆகியவற்றை அணிந்து கொண்டால் போதும் என்பதே அவனது எண்ணம். மைனஸ் ஐம்பது டிகிரி என்பது திட்டவட்டமாக வானிலையின் தட்பவெப்ப நிலையை மைனஸ் ஐம்பது டிகிரி என உணர்த்துகிறது என்பதை மட்டுமே அவன் அறிவான். அவ்வானிலை மேலும் பல்வேறு நுட்பமான விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது அவனது மூளைக்கு எட்டவில்லை.
அத்தடத்தில் திரும்ப நடந்து செல்கையில் எதையோ யோசித்தவாறு எச்சிலைத் துப்பினான். படபடவென வெடிப்பதைப் போன்றதொரு கூர்மையான சப்தம் அவனைத் திடுக்கிட வைத்தது. மீண்டும் துப்பினான். அவன் துப்பிய எச்சில் கீழே வெண்பனியில் விழுவதற்கு முன்பாகக் காற்றிலேயே வெடித்தது. வானிலை மைனஸ் ஐம்பது டிகிரிக்கும் கீழேயுள்ள நிலையில் எச்சில் துப்பினால் அது பனித்தரையில் விழுந்து படபடவென சப்திக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் தற்போது வீசும் குளிர் காற்றில் அந்தரத்திலேயே அது நிகழ்ந்தது. சந்தேகத்திற்கிடமின்றி மைனஸ் ஐம்பது டிகிரிக்கும் மிகக் குறைவாகவே வானிலை இருக்க வேண்டும். ஆனால் எந்தளவு குறைந்துள்ளது என்பதை அவன் அறியவில்லை. ஆயினும் அது அவனுக்கு முக்கிய விஷயமாகத் தோன்றவில்லை.
அவன் ஹென்டர்சன் க்ரீக் எனப்படும் ஓடைக்கு சிறிது தூரத்திலுள்ள ஃபோர்க்ஸ் என்னுமிடத்தில் இடது வளைவைக் கடந்து ஒரு நிலப்பகுதியைச் சென்றடைய வேண்டும். அங்கு ஏற்கெனவே அவனது சகாக்கள் குழுமியிருந்தனர். செவ்விந்தியர்களின் க்ரீக் பிரதேசம் பிரியும் இடத்தைக் கடந்த போது அவர்கள் நேரடியாக அந்த நிலப் பகுதிக்குச் சென்றிருந்தனர். ஆனால் இவனோ யூக்கானிலுள்ள தீவுகளின் சுனைகளில் விறகுகளை சேகரிப்பதற்கான சாத்தியங்களை அறிந்து கொள்வதற்காக சுற்று வழியில் பயணம் மேற் கொண்டிருந்தான். அவன் மாலை ஆறு மணிக்குள்ளாக சகாக்கள் தங்கியுள்ள முகாமை அடையக் கூடும். அது சிறிது இருட்டிய பிறகே என்பது உண்மைதான். ஆனால் சகாக்கள் அங்கிருப்பார்கள். குளிர் காய்வதற்கான நெருப்பும் எரிந்து கொண்டிருக்கும். இரவு உணவும் தயாராக இருக்கும்.
அவனது மேலாடைக்குள்ளிருந்து துருத்திக் கொண்டிருக்கும் மதிய உணவைக் கையினால் அழுத்திப் பார்த்துக் கொண்டான். அது கைக்குட்டையினால் கட்டப்பட்டு சட்டைக்குள்ளாகத் தோலோடு ஒட்டியிருந்தது. பிஸ்கெட்டுகள் உறைந்து விடாமலிருக்க அது ஒன்றுதான் வழி. அந்த பிஸ்கெட்டுகளைக் குறித்த எண்ணம் தோன்றியதும் உதடுகளில் இணக்கமான ஒரு புன்னகை தோன்றியது. பிஸ்கெட்டுகளின் பிளவுகளில் பன்றியின் கொழுப்பு மிகுந்திருந்தது. அவற்றின் இடையே பன்றி இறைச்சியின் துண்டங்களும் பெருமளவு திணிக்கப்பட்டிருந்தன.
அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே அவன் நுழைந்தான். செல்லும் பாதை மங்கலாகத் தென்பட்டது. கடைசிப் பனிச்சறுக்கு வண்டி அப்பாதையில் சென்றதிலிருந்து மேலும் கூடுதலாக ஓரடி வெண்பனி பொழிந்திருந்தது. தன்னிடம் பனிச்சறுக்கு வண்டி இல்லாதது குறித்து அவன் மகிழ்ச்சி கொண்டான். அந்தச் சுமையையும் குறைத்துக் கொண்டுதானே பயணிக்கிறோம் என்றும் எண்ணிக் கொண்டான். உண்மையில் கைக்குட்டையில் கட்டப்பட்டிருந்த மதிய உணவைத் தவிர வேறு எதையும் அவன் சுமக்கவில்லை.
அக்குளிரைக் குறித்து அவன் ஆச்சரியமடைந்தான். மரத்துப் போயிருந்த மூக்கையும், தாடை எலும்புகளையும் கையுறை அணிந்திருந்த கையினால் தடவிப் பார்த்து உண்மையாகவே அதிகக் குளிர்தான் என்று தீர்மானித்தான். முகத்தில் வெதுவெதுப்பான கிருதா காணப்பட்டாலும் கூட அந்த முடி அவனது தாடை எலும்புகளையோ அல்லது ஆர்வமுடன் துருத்திக் கொண்டிருக்கும் மூக்கையோ விறைத்துப் போகச் செய்யும் குளிர் காற்றிலிருந்து பாதுகாக்கவில்லை.
அவனது காலடிகளைத் தொடர்ந்து ஒரு நாயும் கூடவே வந்தது. அப்பிரதேசத்தைச் சார்ந்த அந்த நாய். உடல் வலிமை வாய்ந்த பெரிய ஓநாய் வகை நாய். அதன் சகோதர இனமான காட்டு ஓநாய் போலவே சாம்பல் நிற கனத்தத் தோலைக் கொண்டிருந்தது. அதன் சுபாவமும் ஓநாயிலிருந்து வித்தியாசம் காண இயலாதபடி ஒத்திருந்தது. கடுங்குளிரால் அது சோர்வடைந்திருந்தது. அந்நேரம் பயணத்திற்கு உகந்ததல்ல என்பதை அது உணர்ந்திருந்தது. அதன் உள்ளுணர்வு அங்கு நிலவிய உண்மை நிலையை அதற்கு உணர்த்தியது. மனிதனோ தொடர்ந்து பயணம் செய்வது என்ற முடிவை எடுத்திருந்ததால், அவனது உள்ளுணர்வு உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை.
உண்மையில் வானிலை மைனஸ் ஐம்பது டிகிரியாக இருக்கவில்லை. அறுபதிற்கும் கீழே, எழுபதிற்கும் கீழே இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் மைனஸ் எழுபத்திஐந்து டிகிரி இருந்தது. பனி உறையும் நிலை முப்பத்திரண்டு டிகிரி என்பதால் நூற்றி ஏழு டிகிரி அளவு உறைபனி படர்ந்திருந்தது. வெப்பமானிகள் பற்றியெல்லாம் அந்த நாய்க்கு எதுவும் தெரியாது. மனித மூளையைப் போல நாயின் மூளைக்கு எந்தளவு கடுங்குளிர் என்பதைத் துல்லியமாக அறியக் கூடிய ஆற்றல் இல்லாதிருக்கலாம். ஆனால் அதற்கு இயற்கையான உள்ளுணர்வின் ஆற்றல் உள்ளது. அதன் காரணமாகத் தெளிவற்ற ஆனால் அச்சுறுத்தும் ஓர் உணர்வு அந்நாய்க்குத் தோன்றியது. இருப்பினும் அந்த உணர்வை அடக்கிக் கொண்டு தலை குனிந்து அந்த மனிதனைப் பின்பற்றிச் சென்றது. என்றாலும் அம்மனிதனின் போக்கில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை தோன்றுமா என்பதை ஆர்வமுடன் கவனித்து வந்தது. அவன் முகாமை அடைய வேண்டும் அல்லது எங்காவது ஒரு புகலிடம் தேடி நெருப்பு மூட்ட வேண்டும் என்று அது எதிர்பார்ப்பதைப் போலிருந்தது. நாய் நெருப்பை அறிந்திருந்தது. அதற்கு தற்போது நெருப்பு தேவைப்பட்டது அல்லது வீசும் குளிர் காற்றைத் தவிர்க்க அந்தப் பனியிலேயே ஏதேனும் ஒரு குழியைத் தோண்டி பதுங்கிச் சுருண்டு தனது உடலின் வெப்பத்தைப் பேணிக் கொள்ள விரும்பியது.
அந்த நாயின் மூச்சுக்காற்றின் ஈரப்பதம் உறைந்து நுண்ணிய மாவு போல அதன் தோல் மீது படர்ந்தது. அதிலும் குறிப்பாக தலைப் பகுதியிலுள்ள வாய், மூக்கு, கண் இமைகள் ஆகியவற்றின் மீது பனி உறைந்து வெண்மையாக அப்பியிருந்தன. அந்த மனிதனது சிகப்புத் தாடியும் மீசையும் கூட அதே விதமாக அல்லாமல் மேலும் அதிகத் திடமான வெண்பனியால் நிறைந்திருந்தன. அவ்வாறாகப் படிந்த வெண்பனி அவன் வெளிவிடும் ஒவ்வொரு வெப்பமான ஈரப்பதமுள்ள மூச்சுக் காற்றால் மேலும் மேலும் அதிகத் திடமான பனிக்கட்டிகளாக மாறி வந்தன. தவிரவும் அவன் புகையிலையை வாயில் அசை போடடுக் கொண்டிருந்தான். உதடுகளில் படிந்திருந்த பனிக்கட்டிகளின் அழுத்தத்தால் புகையிலைச் சாறை வெளியேற்றுவதற்காக வாயை அசைக்கவும் இயலவில்லை. அதன் விளைவாக புகையிலைச் சாறு வழிந்து ஆரஞ்சு வண்ண ஐஸ் போன்றதொரு தாடியும் அம்மனிதனது முகவாய்க்கட்டையில் வளர்ந்து வந்தது. ஒருக்கால் அவன் கீழே விழுந்தால் அது தானாகக் கண்ணாடி போல உடைந்து சிறு சிறுத் துண்டுகளாகக் கூடும். ஆயினும் அந்தத் துணை உறுப்பைக் குறித்து அவன் கவலைப்படவில்லை. அந்நாட்டில் புகையிலையை சுவைப்பவர் அனைவருமே அந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
அவனது பயணத்தில் திடீரென தோன்றிய குளிரை ஏற்கெனவே இருமுறை எதிர் கொண்டிருக்கிறான். ஆனால் அப்போதும் கூட இந்தளவு கடுமையான குளிரில்லை என்பதையும் உணர்ந்தான். அச்சமயம் மேலும் அறுபது மைல்களைக் கடந்த பின்பு, ஒரு வெப்பமானியில் மைனஸ் ஐம்பதிற்கும் கீழே மைனஸ் ஐம்பத்து ஐந்தாகக் பதிவாகியிருந்ததைக் கண்டிருந்தான்.
பலப்பல மைல்கள் சமதளமாயிருந்த காடுகளின் ஊடாக நடந்து கொண்டே இருந்தான். கருத்த மரங்கள் அடர்ந்திருந்த அகலமான நிலப்பகுதியைக் கடந்ததும் உறைந்து போயிருந்த ஒரு நதியின் கரையை அடைந்தான். அதுவே ஹென்டர்சன் க்ரீக் என வழங்கப்படுகிற ஓடை. அங்கிருந்து ஃபோர்க்ஸ் நிலப்பகுதிக்குச் செல்ல பத்து மைல்கள் தூரமே என்பதை அவன் அறிந்திருந்தான். தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் பத்து மணி. மணிக்கு நான்கு மைல்கள் தூரத்தைக் கடந்திருக்கிறான். எனவே பன்னிரண்டரை மணிக்குள்ளாக ஃபோர்க்ஸ்க்கு சென்று விடலாம் எனக் கணக்கிட்டான். அந்நிகழ்வைக் கொண்டாடும் வகையில் மதிய உணவை அங்கேயே உட்கொள்ளலாம் என்றும் எண்ணிக் கொண்டான்.
அம்மனிதன் ஓடைக் கரையிலிருந்து அசைந்தாடி நடக்க முற்பட்டதும் நாய் தனது வாட்டத்தைத் தெரிவிக்கும் விதமாக வாலைத் தொங்க விட்டுக் கொண்டு மீண்டும் அவனைப் பின் தொடர்ந்தது. பாதையில் கடைசியாகச் சென்ற பனிச்சறுக்கு வண்டியின் தடம் தெளிவாகப் புலப்பட்டது. ஆனால் அதனை இழுத்துச் சென்றவற்றின் அடிச்சுவடுகளை பன்னிரண்டு அங்குல வெண்பனி மூடியிருந்தது. அந்த அமைதியான ஓடையின் வழியாக ஒரு மனிதன் கூட ஒரு மாதமாகப் போகவுமில்லை, வரவுமில்லை.
அம்மனிதன் விடாப்பிடியாக முன்னேறிச் சென்றான். அவன் அதிகமாக யோசிப்பதில்லை. அச்சமயம் யோசிப்பதற்கு குறிப்பாக எந்த ஒரு விஷயமும் இல்லை. ஃபோர்க்ஸ் பகுதியில் மதிய உணவை உண்பது பற்றியும், ஆறு மணிக்கு சகாக்களோடு முகாமில் இருக்கக் கூடும் என்பதையும் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டான். பேசுவதற்கு துணையும் யாருமில்லை. அப்படியே இருந்தாலும் கூட வாயில் படிந்திருந்த பனிப்படலத்தினால் பேச்சு நிகழவும் சாத்தியமில்லை. எனவே சலிப்புடன் புகையிலையை தொடர்ந்து அசை போட்டவாறு ஆரஞ்சு வண்ணத் தாடியின் நீளத்தை மேலும் அதிமாக்கிக் கொண்டான்.
அவ்வப்போது குளிர் கடுமையாக இருப்பதும் அதுவரை அத்தகைய கடுமையான குளிரை அனுபவித்ததேயில்லை என்கிற எண்ணமும் மீண்டும் மீண்டும் அவனுக்குத் தோன்றியது. நடந்து செல்லும் வேளையில் கையுறை அணிந்திருந்த பின் கையினால் அவனது தாடை எலும்புகளையும் மூக்கையும் தேய்த்து விட்டான். அச்செயலை அனிச்சையாக கைகளை மாற்றி மாற்றி அவ்வப்போது செய்து கொண்டே சென்றான். ஆனால் என்னதான் தேய்த்தாலும் தேய்ப்பதை நிறுத்திய அடுத்த கணமே தாடை எலும்புகள் மரத்துப் போயின. அதற்கு அடுத்த கணம் மூக்கும் மரத்துப் போனது. நிச்சயமாகக் கன்னங்களும் மரத்துப் போகும் நிலையையும் ஏற்படுத்திக் கொள்வான்.
திடீரென ஏற்படும் அத்தகைய கடுங்குளிரில் அவனுக்குத் தெரிந்த பட் என்பவர் அணியும் மூக்குக் கவசம் கன்னங்களையும் சேர்த்து மூடி அவற்றைப் பாதுகாக்கும். ஆனாலும் அது ஒரு பொருட்டல்ல. கன்னங்கள் விறைத்துப் போனால்தான் என்னவாகும்? சிறிது வலிக்கும். அவ்வளவுதான். ஒன்றும் ஆபத்தான விஷயமில்லை என்றும் எண்ணிக் கொண்டான்.
அம்மனிதனின் மனதில் அதிகமான எண்ணங்கள் ஏதும் தோன்றவில்லை. ஆதலால் அந்த ஓடையில் தோன்றும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்தான். பாதையின் நெளிவு சுளிவுகள், வளைவுகள், கீழே கிடந்த மரக் குவியல்கள் ஆகியவற்றைப் பார்த்தான். கால்களை எங்கு ஊன்றி நடக்கிறோம் என்பதையும் எச்சரிக்கையுடன் கூர்ந்து பார்வையிட்டான். ஒருமுறை பாதையில் குறுக்கிட்ட ஒரு வளைவில் திடீரென அதிர்ந்து போய் நின்றான். அது பாய்ந்தோடும் குதிரை மிரண்டு போய் திடீரென நின்று விடுவதைப் போன்றிருந்தது. அந்த இடத்திலிருந்து நகர்ந்து அத்தடத்தில் பல அடிகள் பின்வாங்கிச் சென்றான்.
அந்த ஓடையின் முழு ஆழம் வரையிலும் விறைத்துப் போயிருந்ததை அவன் அறிந்தேயிருந்தான். அந்த வட துருவப் பிரதேசத்தில் குளிர்காலத்தில் எந்த ஓடையிலும் நீர் உறையாதிருக்க முடியாது. ஆனாலும் அருகேயுள்ள மலைப் பகுதியில் இருக்கும் சுனைகளில் இருந்து விழும் நீர் ஓடையின் உறைபனிக் கட்டிகள் மீதே ஓடுவதையும் அவன் அறிந்திருந்தான். எத்தகைய கடுங்குளிரிலும் அச்சுனைகள் உறைவதில்லை என்பதையும் அவற்றின் அபாயத்தையும் அவன் அறிவான். எதிர்பாராத வகையில் சிக்க வைக்கும் பொறிகள் அவை. உறைபனிக்குக் கீழே அச்சுனை நீர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். அவற்றின் ஆழம் மூன்று அங்குலமாகவும் இருக்கக் கூடும். அல்லது மூன்று அடிகளாகவும் இருக்கக் கூடும். சில இடங்களில் வெறுமனே அரை அங்குல தடிமனுள்ள உறைபனி அவற்றை மூடியிருக்கும். அதன் மேல் வெண்பனியும் விழுந்து மூடியிருக்கும். வேறு சில இடங்களில் பனிக்கட்டியும் நீரும் அடுக்கடுக்காக மாறி மாறித் தென்படும். எனவே அதில் கால் பதித்து விட்ட ஒருவன் அவ்வாறான படலத்தை உடைத்தவாறே இடுப்பு வரையிலும் கூட நனைந்து விடக் கூடும்.
எனவேதான் அதிர்ச்சி அடைந்து அவ்விடத்தை விட்டு விலகினான். அவன் காலடி பதிந்த இடத்தின் கீழே பனிக்கட்டி நொறுங்குவதை உணர்ந்து அதன் சப்தத்தையும் கேட்டான். அங்கு நிலவும் வானிலையில் கால்கள் நனைவது பெரும் பிரச்னையும் அபாயமுமாகும். குறைந்தபட்சமாக, பயணம் ஒரு சில மணி நேரமாவது தாமதமாகும். இடையில் நின்று வேறு வழியின்றி தீ மூட்ட வேண்டிய அவசியமேற்படும். அத்தீயின் பாதுகாப்பில் வெறும் காலுடன் அமர்ந்து காலுறைகளையும், காலணிகளையும் உலர வைக்க வேண்டியிருக்கும்.
அவன் நின்று ஓடையையும் அதன் கரையையும் நோட்டமிட்டான். நீரோட்டம் வலப்புறத்திலிருந்து வருவதாகத் தீர்மானித்தான். சிறிது நேரம் மூக்கையும் கன்னங்களையும் தடவியவாறே ஆலோசித்த பின்னர் இடது புறமாக நகர்ந்தான். ஒவ்வொரு காலடியையும் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து கவனமாக சோதித்தான். அபாயப் பகுதியைக் கடந்த பின்னர் புதிய புகையிலையை எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு வழக்கமான மணிக்கு நான்கு மைல்கள் நடை வேகத்தை மேற்கொண்டான்.
அடுத்த இரண்டு மணி நேரப் பயணத்தில் அதே விதமான பல அபாயகரமானப் பொறிகளை எதிர் கொண்டான். பெரும்பாலும் மறைந்துள்ள சுனைகளின் மேல் விழுந்துள்ள வெண்பனி சற்று இளகி அமிழ்ந்திருந்து அபாயத்தை வெளிப்படுத்தும். இருப்பினும் மீண்டும் ஒரு முறை முன் போலவே அப்பொறியின் அருகாமையை அடைந்து விட்டான். சந்தேகம் தோன்றிய உடனேயே நாயை முன்னே செல்லப் பணித்தான். நாய்க்கு அங்கு செல்வதற்கு நாட்டமில்லை. இருப்பினும் அவன் கைகளினால் முன் தள்ளியதும் அது வேகமாக அந்த சீரான நிலப்பரப்பைக் கடந்தது. திடீரென ஓரிடத்தில் பனி உடைந்ததும், தத்தித் தடுமாறி வெளியேறி அழுத்தமான நிலப்பரப்பில் கால் பதித்தது. ஆனாலும் அதற்குள் அதன் முன்னங்கால்கள் ஈரமாகி விட்டிருந்தன. ஈரமாகியிருந்த இடத்திலிருந்த நீர் அடுத்த கணமே உறைபனியானது. நாய் உடனே அந்தக் பனிக்கட்டிகளை நக்கி எடுத்து விடும் முயற்சியில் ஈடுபட்டது. அப்படியே பனியில் அமர்ந்து கால் விரல்களுக்கிடையே உறைந்திருந்த பனிக்கட்டிகளை கடித்து அகற்ற முயன்றது. அம்முயற்சி அதன் உள்ளுணர்வின் உந்துதலால் நிகழ்ந்த முயற்சி. பனிக்கட்டிகளை அப்படியே விட்டு வைத்தால் அந்த இடங்கள் புண்ணாகி விடும். இந்தப் பின் விளைவு அதற்குத் தெரியாது. அது தனது உயிரின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட மர்மமான உந்துதலால் அதற்கேற்ப செயல்பட்டது.
ஆனால் அந்த மனிதனுக்கு நாயின் ஈரமான கால்கள் அக்குளிரில் என்னவாகும் என்கிற பின் விளைவு தெரியும். அந்தப் பிரச்னை குறித்து ஏற்கெனவே அவன் அறிந்திருந்தான். எனவே தனது வலது கையுறையைக் கழற்றி அந்தப் பனிக்கட்டிகளை உடைக்க உதவினான். அப்போது அவனது விரல்களை ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக வெளிப்படுத்தவில்லை. எனினும் குளிர் அந்த விரல்களைத் தாக்கியதும் அவை உணர்ச்சியற்று மரத்துப் போவதை உணர்ந்தான். உண்மையாகவே கடுங்குளிர்தான் என்பதை உணர்ந்ததும் அவசர அவசரமாக கையுறையை அணிந்து தனது மார்பின் மீது ஓங்கி அடித்துக் கொண்டான்.
பன்னிரண்டு மணியளவில் அந்நாளின் உச்சக்கட்டப் பிரகாசம் தோன்றியது. எனினும் சூரியன் வெகு தூரத்தில் தெற்கே தொடுவானைக் கடக்கும் விதமாக அதன் குளிர் காலப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தது. தொலை தூர சூரியனுக்கும் அந்த ஓடைக்கும் குறுக்கேயிருந்த ஹென்டர்சன் நிலப்பரப்பில், தெளிவான வானத்தின் கீழே நிழலும் விழாத நண்பகலில் அம்மனிதன் நடந்தான். மிகச் சரியாக பன்னிரண்டரை மணிக்கு ஃபோர்க்ஸ் என வழங்கப்படும் பகுதியை அடைந்தான். தான் கடந்து வந்த வேகத்தை எண்ணி திருப்தியுற்றான். அதே வேகத்தில் மேற்கொண்டு தொடர்ந்து பயணம் செய்தால் நிச்சயமாக ஆறு மணிக்குள்ளாக சகாக்களுடன் சேர்ந்துக் கொள்ளலாம்.
அவனது மேலங்கியிலும், சட்டையிலும் இருந்த பொத்தான்களைக் கழற்றி மதிய உணவை வெளியே எடுத்தான். அச்செயலுக்கு ஒரு நிமிடத்தின் கால் பங்குக் கூட கழிந்திருக்காது. அக்குறைந்த கணத்திலேயே வெளிப்படுத்தப்பட்ட விரல்கள் மரத்துப் போகத் துவங்கின. அவன் உடனே கையுறைகளை அணியவில்லை. மாறாக விரல்களை கால்களில் பலமுறை ஓங்கித் தட்டினான். பின் உணவருந்துவதற்காக வெண்பனியால் மூடப்பட்டு கீழே கிடந்திருந்த ஒரு மரத்தின் மீதமர்ந்தான். கைவிரல்களை கால்களில் ஓங்கித் தட்டியதால் ஏற்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சி வெகு விரைவில் தணிந்ததைக் குறித்து திடுக்கிட்டான். ஒரு பிஸ்கெட்டை வாயில் போடுவதற்குக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. திரும்பத் திரும்ப விரல்களை கால்களில் தட்டிக் கொண்டதும் கையுறைக்குள் நுழைத்துக் கொண்டான்.
பின் மற்றொரு கையால் சாப்பிடத் துவங்கினான். கை நிரம்ப எடுத்து வாயில் திணிக்க முயன்றான். ஆனால் வாயில் படிந்திருந்த பனிக்கட்டிகள் அச்செயலைத் தடுத்தன. முதல் காரியமாகத் தீயை மூட்டி வாயில் படிந்திருந்த பனிக்கட்டிகளை உருக வைக்க மறந்து விட்டான். தனது முட்டாள்தனத்தை எண்ணித் தனக்குள்ளாக நகைத்துக் கொண்டான். அவ்வாறு நகைக்கும் போதே வெளிக்காட்டப்பட்ட விரல்கள் மரத்துக் கொண்டு வருவதையும் கவனித்தான். மேலும் அமரும் போது தனது கால் விரல்கள்; உணர்வற்றுப் போவதையும் உணர்ந்தான். கால் விரல்களில் உணர்ச்சி உள்ளதா அல்லது மரத்து விட்டனவா என எண்ணினான். காலணிக்குள்ளாகவே அவற்றை அசைத்துப் பார்த்த பின் அவை மரத்து விட்டதாகத் தீர்மானித்தான்.
அவசர அவசரமாகக் கையுறைகளை அணிந்து கொண்டு அவன் எழுந்து நின்றான். சிறிது பயம் தோன்றியது. கால்களுக்கு உணர்வு திரும்பும் வரை அவற்றை மேலும் கீழுமாகத் தூக்கி இறக்கித் தரையில் உதைத்தான். உண்மையாகவே குளிர் அதிகம்தான் என்பது அவன் சிந்தனையில் உதித்தது. அப்பகுதியில் எந்தளவு கடுமையான குளிர் சில வேளைகளில் ஏற்படக் கூடும் என்கிற உண்மையை சல்ஃபர் க்ரீக்கில் வசிக்கும் ஒருவர் அவனிடத்தில் கூறியிருந்தார். அச்சமயம் அதைக் கேட்டு அவரின் முகத்திற்கு நேராகவே நகைத்ததையும் எண்ணிப் பார்த்தான். சில விஷயங்களை மிக உறுதியாக நிச்சயிப்பது சரியல்ல என்பதையே அந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது. தற்போது எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. உண்மையாகவே கடுமையான குளிர்தான் நிலவுகிறது. அவன் மேலும் கீழுமாகக் கால்களைத் தூக்கி இறக்கித் தரையில் உதைத்தான். கைகளை முன்னும் பின்னுமாக உதறி சிறிதளவு வெப்பத்தை உணர்ந்த பிறகே அச்சத்தைப் போக்கிக் கொண்டான்.
கடந்த வசந்த காலத்தில் பெய்திருந்த பெருமழையினால் மரங்களுக்கிடையே அடர்ந்திருந்த புதர்களில் கிடைத்த சுள்ளிகள் தீ மூட்டுவதற்கு பயன்பட்டன. அவற்றை கவனமாக அடுக்கி தீ மூட்டியதும் சிறிய அளவில் ஆரம்பித்த தீ விரைவில் பெரிதாக ஓங்கி உயர்ந்தது. அதன் மூலமாக அவனது முகத்தில் படிந்திருந்த பனிக்கட்டிகளை உருகச் செய்தான். அத்தீயின் பாதுகாப்பில் பிஸ்கெட்டுகளை உண்டான். அக்கணம் வெளியில் வீசிய குளிரை வென்றான். அத்தீயின் காரணமாக நாயும் திருப்தியடைந்தது. வெப்பத்திற்காக தீயின் அருகே நெருங்கினாலும், அதன் தோல் கருகாத தூரத்திலேயே அமர்ந்தது.
உணவருந்தியதும் அவனது பைப்பை நிரப்பி சௌகரியமாக சிறிது நேரம் புகைப் பிடித்தான். பின் தனது கையுறைகளை அணிந்து, தொப்பியில் இருபுறமும் தொங்கும் காது மூடிகளை சரியாகப் பொருத்திக் கொண்டு இடது வளைவிலுள்ள தடத்தில் பயணத்தைத் துவக்கினான். நாய் ஏமாற்றமடைந்து தீயின் அருகாமையில் இருக்க ஏங்கியது. வீசும் குளிரின் தன்மை பற்றி அந்த மனிதன் அறியவில்லை. ஒரு வேளை அவனது பரம்பரையின் மூதாதையர்களும் அப்பிரதேசத்தில் நிலவக் கூடிய கடுங்குளிரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கலாம். உண்மையான குளிர் அதாவது உறைநிலைக்குக் கீழே நூற்றி ஏழு டிகிரி குளிரின் தன்மை குறித்து அந்த மனிதனது மூதாதையர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த நாய் உணர்ந்திருந்தது. அதற்கு முன்னர் அப்பிரதேசத்தில் தோன்றிய அதன் அனைத்து பரம்பரையும் உணர்ந்திருந்தன. அந்தப் பரம்பரையின் மூலமாகக் கடுங்குளிர் பற்றிய உணர்வு அதன் மரபில் தொற்றிக் கொண்டிருந்தது. அச்சுறுத்தும் அத்தகைய குளிரில் நடக்கக் கூடாது என்பதை அது உணர்ந்திருந்தது. தற்சமயம் வெண்பனியில் ஒரு குழியை ஏற்படுத்திக் கொண்டு இதமாகத் தங்கி ஓய்வெடுப்பதற்கு உகந்த நேரம். பின் எங்கிருந்து இந்தக் குளிர் தோன்றியதோ அதே புறவெளியில் அக்குளிர் காற்றின் மீது திரை போன்றதொரு மேகம் படரும் வரையில் காத்திருப்பது அவசியம் என்பதையும் அது உணர்ந்திருந்தது.
மற்றொரு விஷயம் என்னவென்றால் அந்த நாய்க்கும் அம்மனிதனுக்கும் நெருக்கமான பிணைப்பில்லை. அது அவனுக்கு கடுமையாக ஊழியம் செய்யும் அடிமையைப் போன்றே பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு அவனிடமிருந்து கிடைத்த பாசமெல்லாம் சவுக்கடிதான் அல்லது சவுக்கடி விழும் என அவனது தொண்டையிலிருந்து வெளிப்படும் கடுமையான அச்சுறுத்தும் குரலைத்தான் அது கேட்டிருந்தது. எனவே அது உணர்ந்ததை அம்மனிதனுக்கு விளங்க வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அம்மனிதனின் நலன் குறித்து அது கவலைப்படவில்லை. அது மூட்டப்பட்டிருந்த தீயின் வெப்பத்தை நாடி அத்திசைக்கு திரும்ப விரும்பியது அதன் பாதுகாப்புக்காகவே. ஆனால் அம்மனிதன் விசில் சப்தமெழுப்பி சவுக்கடி விழும் என்கிற குரலில் அதனுடன் கடுமையாகப் பேசினான். அதன் பின்னரே நாய் அவனது காலடிகளைப் பின்பற்றிச் சென்றது.
அம்மனிதன் சிறிது புகையிலையை எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு புதிய ஒரு ஆரஞ்சு தாடியை வளர்க்கத் துவங்கினான். அவனது சுவாசத்தின் ஈரப்பதம் மாவு போல உருமாறி மீசை, புருவம், கண்ணிமைகள் ஆகியவற்றின் மீது விரைந்து படர்ந்தது. ஹென்டர்சன் நிலப்பரப்பின் இடது வளைவில் அதிகமாக சுனைகள் ஏதும் தென்படவில்iலை. ஆயினும் பிறகு அது நிகழ்ந்தது. எவ்வித அபாய அறிகுறிகளும் காணப்படாத ஓரிடத்தில், மென்மையான வெண்பனி சீராக விழுந்திருந்த சமவெளி, கீழேயுள்ள திடமான நிலையைத்தான் வெளிப்படுத்தியது. ஆனால் அங்கு அவன் காலடியை பதித்த போது அது உடைந்தது. அதிகளவு ஆழமில்லை. ஆனால் அங்கிருந்து நகர்ந்து திடமான நிலப்பகுதியில் கால்களை ஊன்றிக் கொள்வதற்கு முன்னர், அவனது முழங்கால்களுக்குக் கீழே பாதியளவு நனைந்து விட்டது.
அவனுக்கு கடுங்கோபம் தோன்றியதும், நேர்ந்த துரதிர்ஷ்டத்தை எண்ணிப் பெருங்குரலில் சபித்தான். ஆறு மணிக்குள்ளாக முகாமை அடைந்து தனது சகாக்களோடு கூடி இருக்கலாம் என எண்ணியிருந்தான். தற்போது நிகழ்ந்தது அவனது பயணத்தைக் கூடுதலாக ஒரு மணி நேரம் தாமதப்படுத்தி விட்டது. இனி வேறு வழியின்றி தீயை மூட்டிக் கால்களையும் அதன் கவசங்களையும் உலர்த்த வேண்டும். அத்தகைய குறைந்த டிகிரி வானிலையில் அதைத் தவிர்க்க இயலாது. இந்த மட்டும் அவன் அறிந்திருந்தான்.
பின் ஒதுங்கித் திரும்பி, கரையை அடைய மேலே ஏறினான். மேலே இருந்த பல ஊசியிலை மரங்களுக்கிடையே வளர்ந்திருந்த புதர்களில் காய்ந்த சுள்ளிகளும், விறகுக் கட்டைகளும் அதிகமாகக் காணப்பட்டன. தவிர நன்கு பக்குவப்பட்ட கிளைகளும், கடந்த வருடம் முளைத்திருந்த உலர்ந்த புற்களும் பெருமளவு காணப்பட்டன. பல பெரிய விறகுக் கட்டைகளை எடுத்து வெண்பனி மீது தூக்கி வீசினான். அவை அடித்தளம் போல அமைந்து விடும். சிறிய அளவில் ஆரம்பமாகும் தீயானது வெண்பனியை உருக்கி அதிலேயே அமிழ்ந்து அணைந்து போகாதவாறு அந்த அடித்தளம் பாதுகாக்கும். தனது பாக்கெட்டிலிருந்து சிறிய பிர்ச் மரப்பட்டையை எடுத்து அதில் தீக்குச்சியை உரசியதும் தீச்சுடர் எரிந்தது. அத்தகைய பிர்ச் மரப்பட்டைகள் காகிதத்தை விடத் துரிதமாக எரியக் கூடியவை. அதை அடித்தளத்தில் வைத்து உலர்ந்த புற்களையும் சிறிய சுள்ளிகளையும் அதில் போட்டான்.
அவன் தன் அபாய நிலையைக் கருத்தில் கொண்டு நிதானமாகவும் கவனத்தோடும் செயல்பட்டான். படிப்படியாக தீ வளர்ந்து அதிகமானதும் பெரிய சுள்ளிகளை அதில் சேர்த்தான். அவன் பனித்தரையில் அமர்ந்து புதரில் பின்னிப் பிணைந்திருந்த சுள்ளிக் கட்டைகளைப் பிடுங்கித் தீயில் போட்டுக் கொண்டே இருந்தான். தீ மூட்டுவதில் எவ்விதத் தவறும் நேர்ந்து விடக் கூடாது என்பதை அவன் அறிந்திருந்தான். வானிலை மைனஸ் எழுபத்திஐந்து டிகிரி உள்ள போது தீ மூட்டும் முதல் முயற்சியில் தோற்கவே கூடாது. அவனது கால்கள் உலர்ந்திருந்தால் அதே தடத்தில் அடுத்து அரை மைலை ஓடிக் கடந்தும் கூட ரத்த ஓட்டத்தை சீர் செய்து கொள்ளலாம். ஆனால் ஈரமாகவும், விறைக்கும் நிலையிலுள்ள கால்களையும் கொண்டு அரை மைல் ஓடினாலும் மைனஸ் எழுபத்திஐந்து டிகிரி வானிலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கவே முடியாது. எந்தளவு வேகமாக ஓடினாலும் கால்கள் விறைத்து கெட்டியாகி விடும்.
இவை எல்லாமே அந்த மனிதனுக்குத் தெரிந்திருந்தது. சல்ஃபர் க்ரீக்கில் வசிக்கும் அனுபவஸ்தர் கடந்த இலையுதிர் காலத்தில் இந்த அறிவுரைகளை அவனிடம் கூறியிருந்தார். தற்போது அதை நினைவுகூர்ந்த மனிதன் அவற்றை மெச்சினான். ஏற்கெனவே அவனது கால்கள் உணர்ச்சியற்றுப் போயிருந்தன. தீயை மூட்டுவதற்காக கையுறைகளையும் கழற்ற வேண்டியிருந்தது. ஆகையால் கைவிரல்களும் விரைந்து மரத்துப் போயின. மணிக்கு நான்கு மைல்கள் நடைப்பயணம் அவனது இதயத்தை நன்கு இயக்கி உடலின் அனைத்து பாகங்களுக்கும் அதன் இறுதி எல்லை வரை ரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது. ஆனால் நடையை நிறுத்திய கணமே இதயமும் சிறிது தளர்ந்தது.
வான்வெளியின் குளிர் இக்கோளின் பாதுகாப்பற்ற ஒரு மூலையைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தது. பாதுகாப்பற்ற அம்மூலையில் இருந்த அந்த மனிதன் அத்தாக்குதலின் முழு வேகத்தையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அக்குளிரில் அவனது ரத்தம் கூட சோம்பிப் பின்னடைந்தது. நாயைப் போன்றே ரத்தத்திற்கும் உயிர் இருந்தது. எனவே அதுவும் அச்சுறுத்தும் அக்குளிரிலிருந்து விலகிச் செல்லவும், பாதுகாவலையும் நாடியது. மணிக்கு நான்கு மைல்கள் நடந்து கொண்டிருந்த போது, அது விரும்பியோ விரும்பாமலோ கண்டிப்பாக ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அது பின்னடைந்து உடலின் உட்பகுதிக்குள் ஆழ்ந்து விட்டது. அவனது நரம்புகளின் எல்லைப் பகுதிகளே முதலில் ரத்தத்தின் இல்லாமையை உணர்ந்தன. அவனின் ஈரமான கால்கள் விரைந்து மரத்து வந்தன. கையுறையற்ற விரல்களும் வேகமாக மரத்து வந்தன. ஆயினும் இன்னமும் அவை விறைத்துப் போகவில்லை. மூக்கும், கன்னங்களும் ஏற்கெனவே விறைக்கத் துவங்கியிருந்தன. ரத்தம் பாயாததன் காரணமாக அவனது தோலும் கூட சில்லிட்டுப் போனது.
ஆனாலும் அவன் பாதுகாப்பாக இருந்தான். கால் விரல்கள், மூக்கு, கன்னங்கள் ஆகியன மட்டுமே விறைக்கும் நிலையில் இருந்தன. ஏனெனில் அப்போது நெருப்பு பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது. அவனது விரலளவு கனமான சுள்ளிகளை நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு நிமிடத்தில் அவனது கையளவு தடிமனான விறகுக் கட்டைகளை அதில் போட முடியும். அதன் பின் கால் கவசங்களையும் நீக்கி விட்டு உலர வைக்கலாம். அதே சமயம் பாதங்களை நெருப்பினால் வெதுவெதுப்பாக்கிக் கொள்ளவும் முடியும். முதலில் சிறிது வெண்பனியை எடுத்து காலில் தடவிக் கொள்ள வேண்டும். தீ மூட்டுதலை வெற்றிகரமாகச் செய்து விட்டான். எனவே அவன் பாதுகாப்பாக இருந்தான்.
சல்ஃபர் க்ரீக்கிலுள்ள வயதானவர் கூறிய அறிவுரைகளை நினைவுகூர்ந்து புன்னகைத்தான். மைனஸ் ஐம்பது டிகிரிக்கும் குறைவாக வானிலை உள்ள போது எந்த மனிதனும் க்ளான்டைக் பிரதேசத்தில் தனியே பயணம் செய்யக் கூடாது என்பதை ஒரு முக்கிய விதியாகத் தீவிரமாக அவர் எடுத்துக் கூறியிருந்தார். நல்லது! இதோ இப்போது அவன் அங்கேதான் தனியே இருக்கிறான். விபத்தும் நிகழ்ந்தது. இருப்பினும் தனியே இருந்தாலும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். வயதானவர்களில் சிலர் பெண்களின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றனர் என்று எண்ணினான். ஒருவன் செய்ய வேண்டியதெல்லாம் தலையில் குழப்பமின்றி பயமின்றி மூளையைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறாகச் செயல்பட்டால் அவன் நன்றாகவே இருப்பான். எந்த ஆணும் அவன் ஆணாயிருந்தால் தனியாகவே பயணம் செய்யக் கூடும் என்றும் எண்ணிக் கொண்டான்.
அவனது மூக்கும் கன்னங்களும் எவ்வளவு துரிதமாக விறைக்கின்றன என்பது ஆச்சரியத்திற்குரியது. மிகக் குறுகிய நேரத்தில் விரல்கள் உயிரற்றுப் போகும் என்பதை அவன் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. அவை உயிரற்றுப் போனதால் ஒரு சுள்ளியை பிடிப்பதற்குக் கூட விரல்களை அசைக்க முடியவில்லை. அவை அவனையும், அவனது உடலையும் விட்டுத் தொலை தூரத்தில் இருப்பதாக உணர்ந்தான். ஒரு சுள்ளியைத் தொடும் போது அதைக் கையில் பிடித்துள்ளோமா என்பதைப் பார்க்க வேண்டிய நிலைக்கு உள்ளானான். அவனையும் அவனது விரல் நுனிகளைப் பிணைக்கும் நரம்புகளும் வெகுவாகச் செயலிழந்திருந்தன.
எல்லாமே அற்ப விஷயங்கள்தான். நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. படபடவென்று வெடிக்கும் அதன் சப்தமும் நடனமாடும் சுடரொளியும் உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதாயிருந்தது. அவன் தனது காலணிகளைக் கழற்றத் துவங்கினான். அவற்றின் மீது பனிக்கட்டி படர்ந்திருந்தது. தடிமனான ஜெர்மானிய காலுறைகள் முழங்காலுக்குக் கீழே பாதியளவு வரை இரும்புக் கவசம் போன்றிருந்தது. காலணியைப் பொருத்தும் கயிற்றிழைகள் எஃகுக் கம்பிகள் போன்றிருந்தன. அவை பேரழிவை உருவாக்கும் தீச்சுடர் போல முடிச்சுடன் வளைந்தும் சுருண்டும் காணப்பட்டன. ஒரு கணம் தனது உணர்வற்ற விரல்களினால் அவற்றோடு போராடினான். பின் தனது மடமையை உணர்ந்ததும் உறை வாளைக் கையில் எடுத்தான்.
அந்தக் கயிற்றிழையை வெட்டுவதற்கு முன்னால் அது நிகழ்ந்தது. அந்நிகழ்வு அவனாகச் செய்து விட்டத் தவறு அல்லது தற்செயலாக நேர்ந்து விட்ட பிழை. அவன் அங்கிருந்த மரங்களுக்குக் கீழே தீயை மூட்டியிருக்கக் கூடாது. அதை வெட்ட வெளியில் செய்திருக்க வேண்டும். ஆனால் புதரிலிருந்து சுள்ளிகளைப் பிடுங்கி நேரே தீயில் எறிவது சுலபமாயிருந்தது. தற்போது எந்த மரத்தின் கீழே தீயை மூட்டினானோ அதன் கிளைகளில் அதிக எடையளவு வெண்பனி படர்ந்திருந்தது. பல வாரங்களாக காற்றும் பலமாக வீசவில்லை. எனவே ஒவ்வொரு கிளையிலும் வெண்பனி முழுமையாகப் படர்ந்திருந்தது. ஒவ்வொரு முறை சுள்ளியைப் பிடுங்கும் போதும் அம்மரத்தில் சிறு சலனத்தை ஏற்படுத்தினான். அது கண்களுக்குப் புலப்படாத சிறிய அசைவுதான். அவனைப் பொறுத்தவரையில் அது பெரும் சலனமல்ல. ஆனால் அதுவே பேரழிவை உண்டாக்கி விட்டது. மரத்தின் மேலே உயரத்தில் இருந்த கிளையின் மீது படர்ந்திருந்த முழுப் பனியும் கவிழ்ந்தது. அது கீழேயிருந்த மற்ற கிளைகளில் விழுந்து அவற்றிலிருந்த பனியையும் கீழே விழச் செய்தது. இந்தச் செயல்பாடு தொடர்ந்து பரந்தளவில் நிகழ்ந்து முழு மரத்தையும் ஆட்கொண்டது. அது பனிப்பொழிவு போல வளர்ந்து எவ்வித முன்னெச்சரிக்கையும் வழங்காது அம்மனிதன் மேலேயும் நெருப்பின் மீதும் விழுந்ததும் நெருப்பு அணைந்தது. நெருப்பு எரிந்த இடத்தை தாறுமாறான பனிச்சிதறல்கள் மூடியிருந்தன.
அம்மனிதன் அதிர்ச்சியடைந்தான். தனது மரணத் தீர்ப்பை காதில் கேட்டதைப் போல உணர்ந்தான். அமர்ந்தவாறே ஒரு கணம் நெருப்பு எரிந்திருந்த இடத்தை வெறித்துப் பார்த்தான். பின் சலனமற்று அமைதியானான். சல்ஃபர் க்ரீக்கில் சந்தித்த அந்த முதியவர் சொன்னது சரிதான். தற்போது யாரேனும் ஒருவனின் துணையிருந்திருந்தால் எந்த அபாயமும் இல்லை. அந்தத் துணைவன் நெருப்பை மீண்டும் எழுப்பியிருக்கக் கூடும். தற்போது அவனே மீண்டும் நெருப்பை எழுப்ப வேண்டும். இரண்டாவது முறை தோற்கக் கூடாது. ஒரு வேளை வெற்றிகரமாக நெருப்பை மீண்டும் மூட்டினாலும் ஒரு சில கால் விரல்களை இழப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். தற்போதே அவை மோசமாக விறைத்திருக்கலாம். மீண்டும் நெருப்பை மூட்டி எழுப்ப இன்னும் கூடுதல் நேரமாகலாம்.
இதுவே அவனது எண்ணங்களாயிருந்தன. ஆனால் இவற்றை எல்லாம் அமர்ந்தவாறு அவன் ஆலோசிக்கவில்லை. இவ்வாறான சிந்தனைகள் மனதில் எழும் போதும் அவன் சுறுசுறுப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தான். தீ மூட்டுவதற்காக மற்றொரு அடித்தளத்தை உருவாக்கினான். தற்போது திறந்த வெளியில் அதைச் செய்தான். அங்கு எந்த நயவஞ்சகமான மரமும் நெருப்பை அணைத்து விட முடியாது. அடுத்ததாக உலர்ந்த புற்களையும், சிறிய சுள்ளிகளையும் நீர் அதிகளவு தேங்கும் உச்சியிலிருந்து சேகரித்தான். தனது விரல்களினால் அவற்றை எடுக்க முடியவில்லை. ஆனால் கையினால் அள்ளி எடுக்க முடிந்தது. இவ்விதமாக அள்ளிய போது அவற்றில் அழுகிய சுள்ளிகளும், பச்சை பாசியும் கலந்திருந்தன. அவை வேண்டாதவை என்றாலும் அவனது நிலையில் அதுவே ஆகச் சிறந்த செயல்பாடு. அவன் முறையாகச் செயலாற்றினான். சற்று பெரிய அளவிலான விறகுக் கட்டைகளையும் சேகரித்தான். அவற்றை தீ சற்று உயர்ந்து எழும்பியதும் பயன்படுத்துவதற்காக எடுத்துக் கொண்டான்.
இவ்வளவு நேரமும் அந்த நாய் அமர்ந்தவாறே அவனை கவனித்துக் கொண்டிருந்தது. அதன் கண்களில் வருத்தம் தோய்ந்த ஓர் ஏக்கம் மிகுந்திருந்தது. ஏனெனில் அவனே தீயை வழங்கக் கூடியவன் என்பதாலும், தீயின் வரவு தாமதமாகிக் கொண்டிருப்பதாலும், அவ்வாறான உணர்ச்சியை அது கண்களில் வெளிப்படுத்தியது.
எல்லாம் தயாரானதும் அவன் தனது பாக்கெட்டில் கைவிட்டு இரண்டாவது மரப்பட்டையைத் துழாவினான். அது அங்கிருப்பது அவனுக்குத் தெரியும். விரல்களில் தொட்டு உணர முடியா விட்டாலும் அதன் உராய்வு சத்தம் காதில் கேட்டதும் அதை வெளியே எடுக்க முயன்றான். எவ்வளவு முயன்றாலும் அது அவனது விரல்களில் பிடிபடவில்லை. அவனது மனதில் ஒவ்வொரு கணமும் கால்கள் மரத்து விறைக்கும் நிலையை அடையப் போகிறது என்கிற எண்ணம் உறுத்திக் கொண்டேயிருந்தது. அந்த எண்ணம் அவனைப் பீதியுறுமாறு தூண்டியது. இருப்பினும் அதற்கு எதிராகப் போராடி அமைதி காத்தான். அவனது கையுறைகளைப் பற்களினால் கடித்து இழுத்து விட்டுக் கைகளை முன்னும் பின்னுமாக உதறினான். அவற்றை அவனது இடுப்புக்குக் கீழ் பக்கங்களில் பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கி அடித்தான். அமர்ந்தவாறே இதைச் செய்து கொண்டிருந்தவன் நின்றவாறு செய்வதற்காக எழுந்தான்.
அது வரையிலும் அந்த நாய் வெண்பனியில் அடர்த்தியான அதன் ஓநாய் வகை வாலை முன்னங்கால்களின் மீது படர விட்டுக் கொண்டு கதகதப்பாக அமர்ந்திருந்தது. அதன் ஓநாய்க் காதுகளை முன் நீட்டி கூர்ந்து அம்மனிதனைக் கவனித்துக் கொண்டிருந்தது. அம்மனிதன் கைகளை உதறி அடித்துக் கொண்டிருந்த போது அந்நாயைப் பார்த்தான். அதை மூடியிருந்த இயற்கையான தோலினால் வெதுவெதுப்பாக அமர்ந்திருந்த நிலையைக் கண்டு அவனுக்குள் பெரும் பொறாமை உணர்வு தலை தூக்கியது.
சிறிது நேரம் கழிந்த பின்னர் அடித்துக் கொண்டிருந்த விரல்களில் ஏற்பட்ட உணர்வின் தொலை தூர அறிகுறிகளை உணர்ந்தான். மங்கலாகத் துவங்கிய உணர்வு அதிகமாகிக் கடுமையான வேதனையுடன் கூடிய குத்தும் வலிக்குக் கொண்டு சென்றது. ஆனால் அவன் அதை நிறைவோடு ஏற்றுக் கொண்டான். வலது கையின் உறையைக் கழற்றி மீண்டும் பிர்ச் மரப்பட்டையைத் தேடினான். வெளிக்காட்டப்பட்ட விரல்கள் துரிதமாக மீண்டும் உணர்விழக்க ஆரம்பித்தன. அடுத்து, கொத்தாகக் கந்தகத் தீக்குச்சிகளை வெளியே எடுத்தான். ஆனால் கடுமையான குளிர் அவனது விரல்களை உயிரிழக்கச் செய்தது. கொத்தாக எடுத்திருந்த தீக்குச்சிகளில் ஒன்றைத் தனியாகப் பிரிக்க முயன்ற போது அனைத்தும் கீழே பனியில் விழுந்து விட்டன. அதிலிருந்து ஒன்றை எடுக்க முயன்று தோற்றான். உணர்விழந்திருந்த விரல்களால் அதைத் தொடவோ பிடிக்கவோ இயலவில்லை.
அவன் ஆழ்ந்த கவனத்துடன் செயல்பட்டான். கால்கள், கன்னங்கள், மூக்கு ஆகியவை விறைத்து விடும் என்கிற எண்ணம் எழுவதை மனதிலிருந்து போக்கிக் கொண்டான். அவனது முழு கவனத்தையும் ஒருங்கே திரட்டித் தீக்குச்சிகளுக்காக அர்ப்பணித்தான். தொடு உணர்வுக்கு மாற்றாக தனது பார்வையின் சக்தியை பயன்படுத்திக் கவனித்தான். தீக்குச்சிக் குவியலின் இரு பக்கமும் விரல்கள் இருப்பதைக் கண்டு அவற்றை நெருக்கினான். அதாவது தீக்குச்சியை எடுக்கும் நோக்கத்தில் விரல்களை நெருக்கினான். ஆனால் நரம்புகள் செயலிழந்த நிலையில் விரல்கள் அவனது நோக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை. வலது கையின் உறையை இழுத்து விட்டுக் கொண்டு கால் முட்டியின் மீது ஓங்கி அடித்தான். பிறகு கையுறைகளுடன் கூடிய இரு கைகளாலும் மொத்தமாகத் தீக்குச்சிகளைப் பெருமளவு வெண்பனியோடு சேர்த்து அள்ளி மடியில் போட்டுக் கொண்டான். இருப்பினும் அவனது முயற்சியில் முன்னேற்றம் அடைந்ததாகக் கருதுவதற்கில்லை.
பின் ஓரளவு திறமையாகச் செயலாற்றித் தீக்குச்சிக் கொத்தை கையுறைகளுடன் கூடிய உள்ளங்கைகளின் பிற்பகுதியில் பிடித்துக் கொண்டான். அதை அப்படியே வாயருகே கொண்டு சென்றான். பெரும் ஆற்றலைப் பயன்படுத்தி வலிந்து வாயைத் திறக்க முயலும் வேளையில் வாயிலிருந்த உறைபனி படபடவென உடைந்தது. கீழ் முகவாய்க்கட்டையை உள்ளிழுத்து, மேலுதடை வளைத்து ஒதுக்கி அக்கொத்தை மேல் வரிசைப் பற்களினால் தேய்த்து ஒரு தீக்குச்சியைத் தனியாக எடுக்க முற்பட்டான். ஒன்றைத் தனியாகப் பிரிப்பதில் வெற்றி கண்டு அதைத் தனது மடியில் விழுமாறு செய்தான். தற்போதும் அவனது நிலையில் முன்னேற்றம் அடைந்தாகக் கருதுவதற்கில்லை. அக்குச்சியை கையினால் எடுக்க இயலவில்லை.
பின் வேறு வழி ஒன்றைத் திட்டமிட்டான். அதைப் பற்களில் கவ்விக் காலில் தேய்த்தான். இருபது முறைகள் அவ்வாறு தேய்த்த பின்னர் அதைக் கொளுத்துவதில் வெற்றி அடைந்தான். அதைப் பற்களில் ஏந்தியவாறே பிர்ச் மரப்பட்டையின் அருகாமைக்குக் கொண்டுச் சென்றான். ஆனால் எரியும் கந்தகக் கல்லின் வாசம் அவனது நாசியில் நுழைந்து நுரையீரலுக்குச் சென்று திடுமென இருமலை உண்டாக்கியது. தீக்குச்சி பனியில் விழுந்து அணைந்து போனது. அதைத் தொடர்ந்து நம்பிக்கையற்ற உணர்வு மேலெழுந்ததும் அதைக் கட்டுப்படுத்தும் வேளையில் சல்ஃபர் க்ரீக்கில் முதிய அனுபவஸ்தர் கூறிய அறிவுரை சரியே என்னும் எண்ணம் தோன்றியது. வானிலை மைனஸ் ஐம்பதிற்கும் கீழேயுள்ள போது ஒரு துணையுடனே பயணம் செல்ல வேண்டும் என்பது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை.
தனது விரல்களை ஓங்கி ஓங்கி அடித்துப் பார்த்தான். ஆனால் அவற்றில் ஏதும் உணர்ச்சியைத் தோன்றச் செய்வதில் தோல்வியுற்றான். திடீரென இரு கையுறைகளையும் பற்களினால் கடித்து இழுத்து விட்டான். அவனது உள்ளங்கைகளின் பின்புறத்தில் தீக்குச்சிகளை கொத்தாகப் பிடித்துக் கொண்டான். அவனது கைத்தசைகள் இன்னமும் மரத்துப் போகவில்லை. ஆகையால் உள்ளங்கைகளின் பின்புறத்தால் அக்கொத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ள முடிந்தது. அக்கொத்தை தனது கால்களில் தேய்த்தான். அவை சுடர் விட்டு எரிந்தன. எழுபது தீக்குச்சிகள் ஒரே சமயத்தில்! அவற்றை அணைக்கும் விதமாக அப்போது காற்று ஏதும் வீசவில்லை. மூச்சைத் திணற வைக்கும் புகையிலிருந்து தப்பிக்கும் வகையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு எரியும் தீச்சுடரை பிர்ச் மரப்பட்டைக்கு அருகே பிடித்தான். அவ்வாறாகச் செய்யும் வேளையில் கையில் உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான். அவனது தோல் எரிந்து அதன் வாடை வீசுவதையும் உணர்ந்தான். தோலுக்குக் கீழே ஆழமாக எரிவதையும் அவனால் உணர முடிந்தது. அலங்கோலமாக மரப்பட்டையின் அருகே பிடித்தான். ஆனால் அது உடனே எரியவில்லை. ஏனெனில் அவனது கையே குறுக்கே இடைமறித்து பெரும்பாலான சுடரை ஈர்த்துக் கொண்டது.
இறுதியாக வலியை மேலும் தாங்க முடியாத நிலையில் கையை விரித்து உதறினான். எரியும் தீக்குச்சிகள் பனியில் விழுந்து அணைந்தன. ஆனால் பிர்ச் மரப்பட்டையில் தீப்பிடித்துக் கொண்டது. அதன் மீது காய்ந்த புற்களையும், சிறிய குச்சிகளையும் போட்டான். அவனால் தேர்ந்தெடுத்துக் குச்சிகளை எடுக்க முடியவில்லை. ஏனெனில் உள்ளங்கைகைளின் பின்பகுதியைத்தான் அவனால் பயன்படுத்த முடிந்தது. அழுகிய மரத்துண்டுகளும் பச்சை பாசி படர்ந்தவற்றையும் சேர்த்தே எடுக்க முடிந்தது. அவற்றை முடிந்த வரையில் பற்களினால் கடித்து அப்புறப்படுத்தினான். அந்த நெருப்பை கவனமாகப் பேணி வளர்க்க முயன்றான். ஆனால் அதைச் சீராகச் செய்ய முடியாமல் தடுமாறினான். அந்த நெருப்பு ஒன்றுதான் அவனது உயிரைக் காப்பாற்ற வல்லது. அது அணையக் கூடாது.
ஆனால் அப்போது அவனது தோலின் ரத்தம் குறைந்து உள்வாங்கியிருந்ததால் அவனது உடலில் நடுக்கம் தோன்றியது. அதன் காரணமாக அவனது செயல் மேலும் சீர்கேடானது. சிறிதாக எரிந்து கொண்டிருந்த தீயின் மீது பெருமளவுப் பாசி தொப்பென்று விழுந்தது. அதை அவன் தனது கையால் அப்பறப்படுத்த முயன்றான். ஆனால் நடுக்கத்துடன் அதைச் செய்ய நேர்ந்ததால் சிறிது ஆழமாக விரல்கள் நுழைந்து தீயின் மையப் பகுதி கலைந்தது. எரியும் புற்களும், சிறிய குச்சிகளும் தனியே பிரிந்து சிதறின. அவற்றை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையில் தள்ளினான். ஆனால் அத்தகைய கடுமையான முயற்சியையும் மீறிய உடல் நடுக்கம் அவனை ஆட்கொண்டது. எரியும் சிறிய குச்சிகளை ஒன்றிணைப்பதற்கான சாத்தியமே இல்லாத வகையில் அவை சிதறிப் போயின. தீயை மூட்டி வளர்க்கும் சக்தியுள்ளவனது முயற்சி தோல்வியுற்றது.
தற்காப்புக்கு எவ்வித வழியுமின்றி சுற்றுமுற்றும் பார்க்கையில் அவனது பார்வை நாயின் மீது பதிந்தது. அது அணைந்து விட்ட நெருப்புக் குவியலுக்கு எதிரே வெண்பனியில் அமர்ந்திருந்தது. அது அமைதியிழந்து முன்னும் பின்னுமாக அதன் உடலை அசைத்துக் கொண்டிருந்தது. ஒரு முன்னங்காலை தூக்கி இறக்கி, பின் அடுத்த முன்னங்காலை தூக்கி இறக்கி, உடலை முன்னங்கால்களின் மீதுத் தாங்கி முன்னும் பின்னுமாக அசைத்து ஆவலுடன் நெருப்புக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது.
அவனது பார்வை நாயின் மீது பதிந்த போது அவன் மனதில் திடுமென காட்டுத்தனமான ஒரு உத்தி தோன்றியது. பனிப்புயலில் சிக்கிய ஒரு மனிதனின் கதை நினைவுக்கு வந்தது. அவன் ஒரு மாட்டைக் கொன்று அதன் தோலுக்குள் நுழைந்து அவனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டதை எண்ணிப் பார்த்தான். அதே விதமாக நாயைக் கொன்று கைகளில் உணர்வு திரும்பும் வரை அதன் வெது வெதுப்பான தோலுக்குள் நுழைந்துக் கொள்ளலாம் என எண்ணினான். அதன் பிறகு மீண்டும் தீயை மூட்டிக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டான்.
அவன் நாயிடம் பேசி அருகே வருமாறு அழைத்தான். ஆனால் அவனது குரல் ஏற்படுத்திய ஏதோவொரு வகையான அச்சம் அந்த நாயைப் பயமுறுத்தியது. அவன் அவ்வாறாகத் தணிந்து பேசி அதுவரை அந்நாய் கேட்டதேயில்லை. ஏதோ விஷயம் உள்ளது என்று அதன் சந்தேக இயல்பு அபாயத்தை உணர்த்தியது. என்ன அபாயம் என்பதை அது அறியவில்லை. ஆனால் அம்மனிதனைக் குறித்து அதன் மூளையில் எங்கோ, ஏதோவோர் அச்ச உணர்வு எழும்பியது. அது தனது காதுகளைக் கூர்மையாக்கி அவனது குரலை ஆழ்ந்து கேட்டது. அதன் அமைதியற்ற முன்னும் பின்னுமான உடல் அசைவுகளும், முன்னங்கால்களை மாற்றி மாற்றி தூக்குவதும், இறக்குவதும் குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகமாயின. ஆனால் அது அம்மனிதனிடம் நெருங்கவில்லை. அவன் முழங்காலைத் தரையில் பதித்துத் தவழ்ந்தவாறு நாயை நோக்கி நகர்ந்தான். அவ்வாறாக அசாதாரண நிலையில் அவன் நகர்ந்து வருவதைக் கண்டு அதற்கு மீண்டும் சந்தேகம் உண்டாயிற்று. அது நயமாகப் பக்கவாட்டில் தூரமாக நகர்ந்தது.
அவன் பனியில் அமர்ந்தவாறு தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளப் போராடினான். பின் அவனது பற்களினால் கடித்து கையுறைகளை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து நின்றான். முதலாவதாக, தனக்குக் கீழே பார்த்து உண்மையாகவே நிற்கிறோமா என்பதை அவன் உறுதி செய்து கொண்டான். ஏனெனில் கால்களின் உணர்வற்ற நிலை பூமிக்கும் அவனுக்குமடையிலான தொடர்பைத் துண்டித்து விட்டிருந்தது. அவன் எழுந்து நிற்பதைக் கண்டதுமே நாயின் மனதில் எழும்பிய சந்தேக வலைகள் நீங்கின. அவன் அதிகாரத் தோரணை மிக்க குரலில் சவுக்கடி ஒலியை எழுப்பியதும் நாய் வழக்கமான விசுவாசத்துடன் அவனருகே சென்றது. அவன் தொடக் கூடிய தூரத்தில் நாய் நெருங்கியதும் அம்மனிதன் உடலின் கட்டுப்பாட்டை இழந்தான். அவனது கைகள் நாயினருகே நகர்ந்தன. உள்ளங்கைகளுக்கு அதைப் பிடிக்கும் ஆற்றல் இல்லை என்பதை அவன் கண்டறிந்த போது நிஜமானதோர் ஆச்சரியத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்தான். விரல்களில் உணர்ச்சியுமில்லை. அவை மடங்கவுமில்லை. ஒரு கணம் அவை மரத்துப் போயிருந்ததை மறந்து விட்டிருந்தான். நாய் அவனை விட்டு அகல்வதற்குள் இவை அனைத்தும் துரிதமாக நிகழ்ந்தன. அவனது இரு கைகளினாலும் அதன் உடலை அரவணைத்துக் கொண்டான். அப்படியே பனியில் அமர்ந்து நாயை அணைத்தவாறிருந்தான். அது உறுமி, ஓலமிட்டவாறு அவனிடமிருந்து விலகப் போராடியது.
அவனால் அந்நாயின் உடலை அரவணைத்தபடி அமர்ந்திருக்க மட்டுமே முடிந்தது. அதைக் கொல்ல முடியாது என்பதை அவன் உணர்ந்தான். கொல்வதற்கான வழி ஏதுமில்லை. உணர்வற்ற கைகளினால் தனது உறைவாளை உருவி எடுக்கவும் முடியாது. அதைக் கையில் பிடித்து அதன் தொண்டைக் குழியில் செருகவும் இயலாது. எனவே அவன் பிடியைத் தளர்த்தி விட்டதும், அது பாய்ந்து விலகிச் சென்றது. அதன் வாலை கால்களுக்கிடையே வைத்தவாறு உறுமிக் கொண்டே ஓடியது. நூற்பது அடிகள் கடந்ததும் நின்று காதுகளைக் கூர்மையாக முன்னே நீட்டி அவனை விநோதமாகப் பார்வையிட்டது.
பின் அம்மனிதன் கைகள் எங்கிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் விதமாகக் கீழ் நோக்கினான். அவை கைகளின் கீழ்ப்புறம் ஓரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். ஒருவன் தனது கைகள் எங்கிருக்கின்றன என்பதை அறிய கண்களைப் பயன்படுத்துவது அவனுக்குப் புதுமையாகப் பட்டது. அவன் முன்னும் பின்னுமாகக் கைகளை அசைக்கவும், உறைகளுடனிருந்த கைகளைப் பக்கவாட்டில் அடித்துக் கொள்ளவும் ஆரம்பித்தான். ஐந்து நிமிடங்களுக்கு அதை அவன் தொடர்ந்து மூர்க்கமாகச் செய்தான். அதன் காரணமாக அவனது இதயம் போதுமான அளவு ரத்தத்தைத் தோல்களுக்குப் பாய்ச்சி அவனது உடல் நடுக்கத்தை நிறுத்தியது. ஆனால் உள்ளங்கைகளுக்கு எவ்வித உணர்வையும் வழங்கவில்லை. அவை பெரும் பாரமாக கைகளுக்குக் கீழே ஓரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக அவன் மனதில் பதிவானது. அப்பதிவை அகற்ற எண்ணிய போது, அது இல்லாது போனதை உணர்ந்தான்.
மரணத்தைப் பற்றிய ஒரு வகையான அச்சம் மந்தமாகவும் கொடூரமாகவும் அவனுக்குத் தோன்றியது. அந்த அச்சம் மிகத் துரிதமாக மனவேதனையாக மாறியது. இனி கை விரல்களோ, கால் விரல்களோ விறைத்துப் போவது, அல்லது கைகளையும் கால்களையும் இழப்பது போன்றவை எல்லாம் பிரதான விஷயங்களே அல்ல. தற்போதைய நிலை வாழ்வுக்கும், மரணத்திற்குமிடையே நிகழும் போராட்டம். அதில் அவனுக்கு எதிராகவே வாய்ப்புகள் அமைந்திருந்தன. இவ்வாறான நிலைகுலைவு அவனை பீதியில் ஆழ்த்தியது. அவன் திரும்பி அந்த ஓடையின் கரையில் கண்மூடித்தனமாக ஓடினான். நாயும் அவனைப் பின் தொடர்ந்து ஓடியது.
அவன் கண்மூடித்தனமாக எவ்வித உள் நோக்கமுமின்றி ஒடிக் கொண்டிருந்தான். அப்போது அவனது வாழ்நாள் முழுவதும் அவன் அறிந்திராத ஓர் அச்சம் அவனைப் பீடித்திருந்தது. தட்டுத் தடுமாறி எவ்விதப் பயனுமின்றி ஓடிக் கொண்டிருந்தவன் மெதுவாக சுற்றுப்புறத்தைக் கவனித்தான். ஓடையின் கரை, வெண்பனியில் விழுந்து கிடந்த பழைய மரங்கள், இலைகளற்ற பாப்லர் மரங்கள், வானம் ஆகியவற்றைக் கண்டான். ஓடியதன் காரணமாக உடல் நிலை சற்று மேலானதாக உணர்ந்தான். தேகம் நடுங்கவில்லை. ஒரு வேளை இன்னும் ஓடினால் கால்களில் படிந்திருந்தப் பனி உருகக் கூடும். எப்படியும் ஓடிக் கொண்டே இருந்தால் முகாமை அடைந்து சகாக்களையும் காணலாம். சில கை விரல்கள், கால் விரல்கள், சிறிதளவு முகம் ஆகியவற்றை இழக்க நேரலாம். ஆனால் சகாக்கள் அவனை கவனித்துக் கொள்வார்கள். அங்கே சென்று விட்டால் மீதியுள்ள தேகத்தை அவர்கள் காப்பாற்றி விடுவார்கள்.
அதே சமயம் அவனது மனதில் மற்றொரு எண்ணமும் எழுந்தது. முகாமையோ, சகாக்களையோ ஒரு போதும் சென்றடைய முடியாது. ஏனெனில் அது பல மைல்கள் தூரத்தில் இருந்தது. மேலும் அங்கங்கள் மரத்துப் போவதும் வெகு நேரம் முன்னரே ஆரம்பித்து விட்டிருந்தது. எனவே துரிதமாக விறைத்து இறந்து விடக் கூடும். இத்தகைய எண்ணங்களைப் பின் தள்ளி, அவ்வகை சாத்தியங்களை எண்ணிப் பார்க்க மறுத்தான். சில வேளைகளில் அந்த எண்ணங்கள் வலிந்து முன்வந்து அவற்றைக் குறித்தும் ஆலோசிக்குமாறு தூண்டின. ஆனால் அவன் அதைப் புறந்தள்ளி வேறு விஷயங்களைப் பற்றி எண்ணத் துவங்கினான்.
மரத்துப் போன கால்களைக் கொண்டு ஓட முடிவதே அவனுக்கு விநோதமாகப் பட்டது. அவனது உடலின் எடையைத் தாங்கும் கால்கள் பூமியில் பதிவதைக் கூட அவன் உணரவேயில்லை. பூமிக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் அதன் மீது மிதந்து செல்வதைப் போல் உணர்வதாக தனக்குள் நினைத்துக் கொண்டான். சிறகுகளுடன் கூடிய ரோமாபுரிக் கடவுளான மெர்க்குரியை அவன் எங்கோ கண்டிருந்தான். பூமியின் மீது பறந்து செல்லும் போது அந்த மெர்க்குரியும் அவனைப் போலவே மிதப்பதாக உணர்வாரா என்றும் எண்ணினான்.
முகாமையும் சகாக்களையும் அடையும் வரை ஓடிச் செல்லலாம் என்னும் அவனது கருத்தில் ஒரு பிழை இருந்தது. அந்தளவு நீடித்துத் தாங்கக் கூடிய உடலுறுதி அப்போது அவனுக்கில்லை. பல சமயங்களில் அவன் தடுமாறினான். இறுதியில் தள்ளாடிச் சுருண்டு விழுந்தான். பின் எழ முயன்றுத் தோற்றான். அமர்ந்து சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என முடிவு செய்தான். அடுத்த முறை எழும் போது வெறுமனே நடந்து செல்ல வேண்டும். அமர்ந்து மூச்சு வாங்குகையில் உடல் கதகதப்பாகவும் சௌகரியமாகவும் இருப்பதாக உணர்ந்தான். அவன் நடுக்கமுறவில்லை. இதயத்திலும், தேகத்திலும் வெதுவெதுப்பான ஒரு சுடரொளி வந்து விட்டதாகக் கூட அவனுக்குத் தோன்றியது. இருப்பினும் தனது மூக்கையும், கன்னத்தையும் தொட்டுப் பார்த்த போது அவற்றில் எந்த உணர்ச்சியுமில்லை. ஓடுவதால் அவை சூடேறி அவற்றின் மீது படிந்திருந்த பனிப்படலம் இளகவில்லை. அவனது கை கால்களும் வெப்பமடைந்து அதன் மீதிருந்த பனியும் உருகவில்லை.
அவனது தேகத்தின் மரத்துப் போன பகுதிகளில் அந்த உணர்வு மேலும் பரவி அதிகமாகி வருவதாகவும் ஓர் எண்ணம் அவனுக்குள் தோன்றியது. அந்த எண்ணத்தை விலக்கி மறந்து வேறு எதையேனும் சிந்திக்க முயன்றான். அந்த எண்ணத்தின் காரணமாகப் பொங்கி எழும் பீதியையும் உணர்ந்தான். அந்தப் பீதி உணர்வைக் குறித்து அச்சம் கொண்டான். ஆயினும் அந்த எண்ணம் மீண்டும் அழுத்தமாகத் தலைதூக்கி, முழு உடலும் விறைத்துப் போகும் காட்சியை அவனது மனக்கண்ணில் புலப்படுத்தும் வரை நீடித்தது. அவனால் அதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் எழுந்து அத்தடத்தில் காட்டுத்தனமாக மீண்டும் ஓடினான். ஒரு முறை வேகத்தைக் குறைத்து நடந்தான். விறைப்புத் தன்மை பரவி வருவதை எண்ணியதும் அதுவே அவனை மீண்டும் ஓட வைத்தது.
அனைத்து சமயங்களிலும் அந்த நாயும் அவனைப் பின் தொடர்ந்து ஓடியது. அவன் இரண்டாம் முறை கீழே விழுந்ததும் அந்த நாய் தனது வாலை முன்னங்கால்களின் மீது படர விட்டு அவன் முன்னே அமர்ந்து விநோதமான ஆவலுடன் ஆழ்ந்து அவனை நோக்கியது. அதன் கதகதப்பையும், பாதுகாப்பையும் கண்டு அவனுக்குக் கோபாவேசம் பொங்கி வந்ததும் அதைத் திட்டிச் சபித்தான். அது காதுகளை மடித்துப் பணியும் வரையில் அதற்கு வசைமாரிப் பொழிந்தான். இம்முறை அவனது தேகத்தின் நடுக்கம் துரிதமாகத் துவங்கியது. விறைக்கும் நிலையை எதிர்க்கும் போராட்டத்தில் அவன் தோற்று வந்தான். அது அவனது உடலின் எல்லா பக்கங்களிலும் பரவிக் கொண்டே வந்தது. அந்த உணர்வு மீண்டும் அவனை ஓடச் செய்தது. ஆனால் அவன் நூறு அடிகள் தூரத்தைக் கூட கடக்க இயலாமல் தள்ளாடி மல்லாந்தான்.
அவனுக்கு இறுதி பீதியுணர்வு தோன்றியது. சற்று மூச்சு வாங்கி ஆசுவாசம் அடைந்ததும் பய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மல்லாந்த நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு வந்தான். மரணத்தைப் பெருமையோடு எதிர்கொள்ளும் கருத்தை உருவகப்படுத்திக் கொண்டு மனதை மகிழ்ச்சியுற வைத்தான். ஆயினும் அக்கருத்து இதே வகையில் உடனடியாக அவனுக்குத் தோன்றவில்லை. தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறோம் என்பதுதான் அவனுக்கு முதலாவதாகத் தோன்றிய எண்ணம். தலையிழந்த கோழி அங்குமிங்குமாக ஓடுவதைப் போலத்தான் அவனது நிலையைக் குறித்து எண்ணினான். இவ்வாறான உவமையே அவனுக்கு முதலில் உதயமாயிற்று.
எப்படியும் உடல் விறைக்கப் போகிறது. அதைப் பணிவோடு ஏற்பதே மேலானது. இவ்வாறான புதிய எண்ணம் தோன்றி மன அமைதியைக் கண்டடைந்தும் மங்கலான அரைத் தூக்க நிலை ஏற்பட்டது. தூங்கியவாறே மரணமடைவது நல்லதுதான் என்றும் எண்ணினான். அப்போது மயக்க மருந்தை உட்கொண்டதைப் போலவே இருந்தது. மனிதர்கள் நினைப்பதைப் போல விறைத்துப் போவது ஒன்றும் கொடுமையான மரணமல்ல. மரணமடைய அதை விடவும் கொடூரமான பல வழிகள் உள்ளன.
அவனது சகாக்கள் மறுநாள் அவன் உடலைக் கண்டுபிடிப்பதைப் போல அவனுக்குப் புலனாகியது. திடீரென அவர்களோடு தானும் இருப்பதைக் கண்டான். அத்தடத்தில் அவர்களுடன் சேர்ந்து வந்து தன்னையே தேடினான். தடத்தின் ஒரு திருப்பத்தில் வந்ததும் வெண்பனியில் தான் விழுந்திருப்பதைக் கண்டான். இனி அவன் தன் வசமில்லை. ஏனெனில் அவன் அப்போது அவனது உடலுக்கு வெளியே இருந்தான். சகாக்களுடன் நின்றவாறு பனியில் விழுந்து கிடக்கும் தன் உடலைப் பார்த்தான். உண்மையாகவே குளிர் அதிகம்தான் என்றே அவன் எண்ணினான். மீண்டும் ஸ்டேட்ஸிற்கு திரும்பிய பின்னர் தன் மக்களிடம் எத்தகைய குளிரில் சிக்கியிருந்தான் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்வான். இந்நிலையிலிருந்து அகன்று சல்ஃபர் க்ரீக்கிலுள்ள முதிய அனுபவஸ்தரின் காட்சிப் புலனாகியது. தெளிவாக அவரை அவனால் காண முடிந்தது. இதமாக, சுகமாக பைப்பில் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
“நீங்கள் சொன்னது சரியே! முதியவரே! நீங்கள் சொன்னது சரிதான்!” என்று அவன் சல்ஃபர் க்ரீக்கின் முதிய அனுபவஸ்தரிடம் முணுமுணுத்தான்.
பின் அம்மனிதன் உறக்கத்தில் ஆழ்ந்தான். அந்நிலை அதுவரை அவன் அனுபவித்திராத சுகமான நிம்மதியான நித்திரை என்பதாகவே அவனுக்குத் தோன்றியது. நாய் அவனைப் பார்த்தவாறே காத்திருந்தது. குறைந்த நேரமே நீடித்த அந்த நாள் முடிவடைந்து அந்திப் பொழுது மெதுவாகத் துவங்கி நீண்டது. தீ மூட்டப்படுவதற்குரிய அறிகுறி ஏதும் நாய்க்குத் தென்படவில்லை. தவிரவும் அதற்குத் தெரிந்த வரையில் எந்த மனிதனும் பனியில் அவ்வாறு அமர்ந்து கொண்டு நெருப்பு உண்டாக்காமல் இருந்ததில்லை.
அந்திப் பொழுது சாயும் வேளையில் அதன் ஆவல் மிகுந்த ஏக்கம் மேலோங்கியது. பெருமளவு முன்னங்கால்களை தூக்கியும், இறக்கியும் மெதுவாக ஓலமிட்டது. மனிதன் கோபத்துடன் கடிந்து கொள்வான் என்பதை எதிர்பார்த்துக் காதுகளை மடித்துக் கீழ்ப்புறமாக நீட்டியது. ஆனால் மனிதன் அமைதியாக இருந்தான். பின்னர் நாய் சத்தமாக ஓலமிட்டது. மேலும் சிறிது நேரத்திற்குப் பின்னர் அவனருகே நகர்ந்து சென்ற போது இறப்பின் வாடையை உணர்ந்தது. அதன் காரணமாக ரோமங்கள் சிலிர்த்துப் பின் வாங்கியது.
குளிர்ந்த வானில் துள்ளி நடமிட்டுப் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் கீழே அது மேலும் சிறிது நேரம் குரைத்தவாறே காத்திருந்தது. பின் திரும்பி அதற்குத் தெரிந்திருந்த முகாமின் தடத்தில் மெல்ல ஒடியது. அங்கு அதற்கு உணவு அளிப்பதற்கும், தீயை வழங்குவதற்கும் வேறு சிலர் இருப்பார்கள்.