நுண்வெளி கிரகணங்கள்

0 comment

ஊறவைத்த பருத்திக் கொட்டையை ஆட்டுரலில் கடாமுடா வென்று காளியப்பன் ஆட்டினான். பத்து நாட்கள்தான் இருக்கு ரேஸ் விட. இந்திராகாந்தி நினைவுநாளை ஒட்டி ரேஸ். மாட்டு வதை.

பூஞ்சிட்டு, கரச்சான், நடுமாடு, பெரியமாடு என்று வகை வகையாக ரேஸ்களுக்கென்று முன்பு இந்த கொட்டத்தில் தனித் தனியாக ஜோடிகள் இருந்தன. இப்ப பெரிய மாடு மட்டும். பேருக்கு வைத்திருக்கிறார்கள். வீச்சுக்கால் மாடுகள் ரேசுக்கு தோதுப்படாது, ரெண்டு மூணு ரேஸிலேயே நீர்க்கட்டு வந்துவிடும். அப்படி வந்தும் மொலியில் சூடுவைத்து வீக்கத்தைக் குறைத்து மறு ரேஸுக்கு இறக்கத் தயார் செய்வதும் உண்டு. கிழக்குச்சீமையில் மேலூர், சிவகங்கை கிடை மாடுகளில் வெரளிகளைக் கண்ணிபோட்டுப் பிடித்துப் பழக்குவார்கள். கம்பம் பள்ளத்தாக்கில் இருப்பவர்களுக்கு வீட்டுக்கு ஒரு அட்டியிருப்பதால் தானாதளவாக கன்றைப் பால் குடிக்கவிட்டு வளர்ப்பார்கள். அட்டி மாடுகள் பதினொன்று இல்லையென்றால் பதிமூணு பிடி இருக்கும். வடக்கத்தி, காங்கேயம், தாராவரம், கன்னாவரம், அத்திக்கோம்பை மாடுகள் பதினஞ்சு பிடியிலிருந்து பதினாறு பிடிவரை இருக்கும். வடக்கத்தி மாடுகள் வேலைக்குத்தான்; ரேஸுக்கு விடுவதில்லை. அதுகள் ராஜகளையாக இருக்கும். ரேஸ்மாடுகள் கரளிகளாக இருக்கும். பெரும்பாலும் தேனி போன்ற நகரங்களில் டயர் வண்டிகளுக்கு வடக்கத்தி மாடுகள்தான் சேர்க்கிறார்கள். கன்னாவரத்தில் வாங்கிய இரண்டு ஜோடி மாடுகளும் ஒரு கோப்பு சொல்லலாம். ஆறு பல்லில் வாங்கியவை. ஒரு சுருட்டுக்கு தட்டுவண்டியை அந்தரமாகத் தூக்கிப் போகும். தொடர்ந்து ஆறாறும் பன்னிரெண்டு கிலோ மீட்டர் போய்த் திரும்ப வேண்டுமென்றால் தொடக்கப் பாய்ச்சலில் கடைசிவரை வராதுகள். நாட்டு மாடுகள் குட்டை சைசுகள். குறுங்கால். தோல் சன்னமிருக்கும். எல்லைக்கோடு தாண்டுற வரைக்கும் பிடி விடாதுகள்.

ஏழெட்டு நாளாக வல வெலக்கு, இட வெலக்கு, ஊடுபாஞ்சல் எல்லா வகை ஓட்டத்தையும் விட்டுப் பார்த்தாகிவிட்டது. கரச்சானா இருக்கும்போதே தெக்கவடக்க வெரட்டி மூச்சு ஒடஞ்சுட்டுதுகள். காரிதான் கொஞ்சம் வெயிலுக்கு இளைக்கும். புல்லை எப்படிப் பிடிகயிற்றை மாத்திப் போட்டாலும் எக்காளம் போடும். ஒரு மாசமாக கால் வாளி பருத்திப்பால்தான். ஒரு கூடை பிஞ்சுக் கத்தரிக்காய்கள், ஒரு முடி நாத்து, சோளப்பொறி. இதுதான் தீவனம். வயிறு சால் போடாது. எக்கிக் கட்டும். கொடங்கை அளவு ராத்திரிக்கி அகத்திக் கீரை. நடுஜாமத்தில் இரண்டு பஞ்சாரம் கடலைக்கொடி. இல்லையென்றால் பட்ட நாத்து. திம்மையா மாடுகளைத் தொடவிட மாட்டார். ‘மை’ வைத்து விடுவார்கள்.

மாடோட்டும் மலைச்சாமி இந்த ரேஸுக்கு சரி கொடுக்காமல் இருந்துதான் சங்கடமாக இருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை.

காளியப்பன் கொழகொழவென்று ஆட்டி முடித்தான். அரைப்படி ஏனத்தில் சுத்தமான பருத்திப்பாலை முக்கால் அளவு பிழிந்துவிட்டு மடக்மடக்கென்று குடித்தான். வாளியில் கால்பங்கு பிடித்து காரிக்காளைக்குக் கொண்டுபோனான்.

ஏழெட்டுப் பேர் கொட்டத்துக்குள் நுழைந்தார்கள். மடித்துக் கட்டிய வேஷ்டி, ஆறடி உயர சோகை உரித்த சோளத் தட்டை, சாட்டைக் கம்புடன் முறுக்குமீசையில் ஒருவன் கூட நின்றான். காளியப்பன் சுற்றி வந்து கைப்பிடிச்சுவரைப் பிடித்து குரல் கொடுத்தான். “காயத்திரியம்மா, மாடு பாக்க வந்திருக்காங்க. மொறாளிய வரச்சொல்லுங்க.”

திம்மையா, ரெங்கசாமி இருவரும் கொட்டத்துக்கு வந்தார்கள். சற்று நேரம் கழித்து அசோக் வந்தான். கன்னாவரத்து மாடுகளை வந்தவர்கள் பார்த்தார்கள். மயிலை ஜோடியின் பிட்டானியில் சோளத் தட்டையை வைத்து அளவு பார்த்தார்கள். பதினஞ்சரைப் பிடி. செங்காரி கருமயிலை ஜோடி பதினஞ்சு பிடி. மயிலை ஜோடியை வாங்க வந்தவர்கள் வண்டிக்கு தூக்குப் பாரமாயிடும்னு செங்காரி கருமயிலைக்கு அடி போட்டார்கள். ரெண்டும் செஞ்சு வச்ச செலதான். ரெட்டப்பிள்ள மாதிரி. கொம்பு தல ஓர்சு. சப்பரமாட்டம் நிக்குது. வலத்துக் காளை ஏறுவால். வாலை உச்சாந்தூக்காத் தூக்கிப் போகும். எடத்துக் காளைக்கு தடிவால் ஒரு குறைதான். ஆனா சண்டிமாடு கணக்கா தொசுக்கட்டின்னு படுக்கிற கொணமில்லை. உடல்வாகுக்கும் பெறகுதரிக்கே போகாது என்பார்கள். இது சூட்டிகை. உடல்வாகு பொய்யாகிவிட்டது. புறப்பட்டுட்டா சும்மா கிங்ங்ங்கென்னு போகும்.

“மூணு கோப்பு இருக்குமா?”

“மாட்ட கேக்காத” என்றவாறு திம்மையா தொட்டிக்குப் போனார். கல்கால் ஊண்டி மேலே கடலைக்கொடிப் படப்பு பொம்மி இருந்தது. அதன் அடியில் உட்கார்ந்து கொண்டார்கள். தரகு திம்மையாவை இழுத்து வந்தார்.

“கடைப்பல்ல பாருங்கையா. இன்னும் பல் சேந்திருக்கான்னு” ஒரு கோப்பு மாட்டை பேச்சில் காளங்கன்றாக்கிச் சொல்லிக் கொண்டு திம்மையா கௌடர் உக்கார்ந்தார்.

“நட மாடுகளா?”

“மயில ஜோடிதான் நட மாடுக. இதுக பரு மிதிதான். வண்டியில புல்லா போகும். செங்காரியெல்லாம் தாருக்கு சம்மதிக்காது. கூளம் போட புதுசா ஆள் போனா எசம்புறது மாதிரி அப்பீடியங்கும். மத்தபடி சதி பாச்ச இல்ல. எங்க கட்டுத் தொறைக்கி காரி வந்தாலே லேசா தல ஆட்டும்.”

“கருமயிலக்கி பிச்சுழி போல…”

“பிச்சுழியன்னா லேசா? திரும்புகால்ல இதுகூடப் போறதுக்கு இந்த பிராந்தியத்தில காட்டுங்க ஒங்க மாட்ட. இத சும்மா அவுத்து விடுறேன்.”

சுழி சுத்தம் மறுபடியும் பார்த்தார்கள். தரகைத் தனியாக அழைத்துப்போய் கலந்து பேசிவிட்டு வந்தார்கள். நரிமொகமும், உச்சக்கொம்பும் வாங்குற கைக்குப் பிடித்திருந்தது. தரகு இருளாண்டி துண்டை எடுத்து ரெங்கசாமியிடம் கொண்டு போனார்.

“அப்பாரு கை போடட்டும்” – ரெங்கசாமி.

“சும்மா வாயில சொல்லுங்க” – திம்மைய கௌடர்.

“நா வாங்குனதே பதினஞ்சுக்கு மேலாகுது. அதுல வேன் வாடக இருக்கு. தரகு கொடுத்திருக்கு. ஊர்தரகு…”

தரகர் மாத்துக் கைகளிடம் கைவிரல் பிடித்து விலை எல்லையைக் கேட்டுக்கொண்டார்.

“வாங்க சிய்யா” என்று தரகர் திம்மையா கௌடரை இழுத்தார். திம்மையா கௌடர் கைவிட்டதும் “ஒரு அணப்பா சொல்லுங்க சிய்யா” என்ற தரகருக்கு “நா அணையிற எடத்தத்தான் சொல்றேன்” என்றவர் மூன்று விரலையும் ஒரு கட்டையையும் தொட்டார்.

“அதுக்கெல்லாம் ஆகாது.”

மாத்துக் கைகள் “அப்பன்னா இருக்கட்டுமண்ணே” என்று இருளாண்டியை எச்சரித்தார்கள். இருளாண்டி கைகள் மேல் மூடிய துண்டுக்குள் விரல்களாலே திம்மையா கௌடரிடம் தாவா பண்ணினார். திம்மையா வாங்குனது என்னவோ ஒன்பதினாயிரத்து ஐநூறுதான். தரகு சுண்டுவிரலில் இரு கட்டையையும் தொட்டார்.

“விடுங்க சிய்யா. நீங்களும் நாலு வருசம் ஓட்டிருக்கீங்கள்ல” தரகர் பிடித்து இழுத்து நிறுத்தினார். “ஆகாகா… அந்ததுக் கெல்லாம் ஆகாது” தரகு நான்கு விரலையும் பிடித்து இறுக்கினார்.

தாத்தா பதினஞ்சிலிருந்து இறங்கி பதினாலுக்கு நின்றார்.

மாத்துக் கைகள் “சரி இது அமையாது” என்று வெளியேறி னார்கள்.

போற போக்கில் படுத்திருந்த செவலை சிந்துப் பசுவை எழுப்பிவிட்டுப் பார்த்தார்கள். எழுந்ததும் மூத்திரம் பெய்தது. அதன் தொப்பூள் காகிதப்படகுபோல் தொங்கியது. மந்தமான தோல். கூடுகொம்பு. இடக்கொம்பு வலக்கொம்புமேல் விழுந்தால் ராசி என்பார்கள். கழுத்துத் தோல் படுதாபோல் நெளிவு நெளிவாகத் தொங்கியது. வீட்டுப்பாடு பாலுக்காக வாங்கியது. இங்கு வந்து ஒரு ஈத்து ஈன்றிருந்தது. பால் வத்திய பின் செனையே பிடிக்கவில்லை. மூன்று வருசமாக மலடாக நிற்கிறது. மொட சாயும் நேரத்தில் அட்டிமாடு கூட ஓட்டிவிட்டார்கள். பொலிகாளைகள் போட்டி போட்டு ஏறின. பசு அத்தனையையும் வாங்கி ஏப்பம் விட்டு விடுகிறது. செனை பிடிக்க வைப்பதில் பொலிகாளைகள் மூன்று வருசமாக தோற்றுக்கொண்டு வருகின்றன.

அசோக் ரெண்டு வருசமாகவே மாடுகன்றுகளை விற்று விட்டு, சமயத்துக்கு டிராக்டர் விட்டு அடிச்சுக்கிடலாம் என்று ஓயாமல் கத்துகிறான். ரெங்கசாமிக்கோ திம்மையாவுக்கோ இந்தப் பேச்சே பிடிப்பதில்லை. அதிலும் திம்மையாவுக்குத் துப்பரவாகப் பிடிக்கவில்லை. ஜோடி மாட்டுக்குப் பிடியாள், தீவனச் செலவு… ஜோடிக்கி – பதினாலாயிரம் மொதலுக்கு வட்டி ஏறுவதாகக் கணக்குச் சொன்னான். ஒரு மாச ஒழவு மூணு நாள்ல டிராக்டர்ல முடிச்சிடலாம். டிராக்டர் சட்டி ஒழவன்னா அருகைக் காலி பண்ணுதா? மறுபடியும் அருகை பூமியடியிலதான அமுக்குது. அது கெடக்கட்டும். இந்த டாக்கிட்டரு என்ன சாணியா போடுது வருசாவருசம் தொழு ஒரம் அடிக்க? பொகதான் விடுது மூச்சுவிட முடியாம என்பார் தாத்தா. “வண்டி மாடுக மட்டும் அறுபதாயிரம் மொடக்கடி பண்ணுது. அதுக்கு மூணு வட்டி வீதம் மாசத்துக்கு என்னாகுது? ரெண்டு மூணு நாளைக்கி டிராக்டர விட்டு கரம்ப அடிச்சுக்கக் கூடாதா” ன்னு தினத்துக்கு அசோக் அம்மாவோடு சண்டை. அப்பா, பரம்பரையா விவசாயத்த மாட்டில பண்ணிட்டு இப்ப வந்து டிராக்டர் அதுஇதுன்னு பேசாத என்பார். டிராக்டர் செலவு தொகை பாதிக்கிப் பாதி கம்மிதான். அவர்களுக்குப் புரிந்தும் இருக்கிறது. வண்டிமாடு வேலைகளே இன்னும் வீட்டில் தொடர்கிறது. முக்குக்கு மூணு டிராக்டர்கள் வந்துவிட்டன. மிந்திமாதிரி மாடுகளுக்கும் கெராக்கி இல்லை. ஆள்களுக்கு மாட்டுமேல விருப்பம் இருக்கா? அதுவும் இல்லை. வாங்கின மாட்டை விக்க முடியல. எத்தனையோ குடும்பத்தில மாடுக அப்படியப்படியே தங்கிக் கெழண்டு போயிடுதுகள். பின்ன சொற்ப வெலைக்கி அடிமாட்டுக்கன்னு வெளிய சொல்லாமத் தள்ள வேண்டியதிருக்கு. அசோக் அதையெல்லாம் நினைத்துத்தான் சொன்னான். அப்பாக்கள் இந்த உலகத்துக்கே இன்னும் வரவில்லை. மாட்டைப் பத்தி பேசினாலே அப்பாவுக்கும் அசோக்கிற்கும் மனக்கசப்பு வருகிறது.

_______________

கார் ரேஸ், குதிரை ரேஸ்ஸுன்னு விடுற இந்தக் காலத்திலும் தொடரும் மாட்டுவண்டி ரேஸ். ஒரு ஆள் இழுத்துக்கொண்டு ஓடக்கூடிய தட்டுவண்டி. கல்மூங்கில் சாட்டைக்கம்புகள். நுனியில் ஒரு அங்குல நீளத்துக்குத் தார். மெல்லிய நூலால் சுற்றி சுருக்கென்று தைப்புக்குப் பண்ணிய பக்குவம். உறையோடு கத்தி, சூரி சகிதங்களோடு தயாரானார்கள்.

வீட்டுப் பெண்கள் குழுமினார்கள். மாடுகளுக்கு தீபம் எடுத்தார்கள். அபிசேகம் செய்தார்கள். காயத்திரி பொட்டிட வரும் போது காரியின் மூக்கணாங்கயிற்றை அசோக்கும் ரெங்கசாமியும் பிடித்துக்கொண்டார்கள். கட்டுத்தொறையில் காரி ஆர்ப்பாட்டம் பண்ணியது. வெளியில் டெம்போ நின்றது. தகரம் வழுக்கிவிடாமல் இருக்க, டெம்போக்குள் வைக்கப்புல் பரப்பியிருந்தது. மணல் மேட்டில் விட்டு வண்டி மாடுகளைப் பக்குவமாக டெம்போவில் ஏற்றினார்கள். தனகோபால் மறந்துபோன எலுமிச்சம் பழங்களை வீட்டுக்குள் போய் எடுத்து வந்தான். சுற்றிவிட்டு டெம்போ முன்சக்கரங்களில் நசுங்கும்படி வைத்தான். அப்பா திசைக் கொன்றாய் எறிந்தார். வண்டி நகர்ந்தது.

தோப்பில் நிற்கும் ரேஸ் மாடுகளைத் தனித்தனியாகச் சூழ்ந்து கொண்டு ஆட்கள் உடல்வாகு, நோட்டம், சுழிசுத்தம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்பார்வை படாமல் இருக்க காக்கரச்சாம் பட்டி தொட்டிய நாயக்கர், மாட்டின் நெற்றியில் தாயத்தைச் சன்னமான கயிற்றில் கோர்த்துக் கட்டியிருந்தார். கூடலூர் போஜப்ப கௌடர் செம்பூத்துகள் வந்திருந்தன. முன்செப்பையில் சூடு போட்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்த பையன் ‘ட்ரிக்’ என்றதும் ஒரு எறி விட்டது.

“மாட்டுகிட்ட யாரையும் அண்டவிடாமப் பாத்துக்க காளியப்பா. பூஞ்சிட்டு ஓட்டத்தை மட்டும் பாத்திட்டு வர்றோம்” என்று ரெங்கசாமியும் அசோக்கும் மெயின்ரோட்டுக்கு வந்தார்கள். கூட்டம் கூட்டமாக ஆட்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் யாரோ “ரெங்கசாமியண்ணே”ன்னு கூப்பிட்டார்.

திரும்பிப் பார்த்தால் சுருளியாண்டி மளமளவென்று எட்டு வைத்து வந்தான்.

“வா வா… வா… என்ன ரேஸ் பாக்கவா…”

“அப்பறம் நீங்க” கைகோர்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

“எம் பையன்” அசோக்கைக் காட்டிக்கொண்டார்.

பேசிக்கொண்டே நடந்தார்கள்.

“என்னாண்ணே, அப்படியே போக்கு பாத்திட்டுப் போகலா மன்னா..?”

“சும்மா பூஞ்சிட்ட மட்டும் பாத்திட்டுப் போகலாமன்னு வந்தேன்.”

சுருளியாண்டி நல்லா ஓட்டுவான். போன ரேஸில் மேக்கால் தெறித்துப் போய் குட்டிக்கரணம் அடித்ததில் அவனுக்கு எலும்பு முறிவு. அவன் சும்மா வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான். குத்த வச்சான் பாறைக்குக் கூட்டிப்போனான். அங்கிருந்து பார்த்தால் நெட்டு ரோடு. மாடுகள் கலைந்து வருவதும் விலக்குவதும் நன்றாகப் பார்க்கலாம். போலீஸ் ஜீப் வெள்ளைக்கொடியைக் கட்டிக்கொண்டு கூட்டத்தை விலக்கிக்கொடுத்துப் போனது.

பூஞ்சிட்டு ரேஸ் விட்டுவிட்டார்கள். கம்பை வைத்துக் கொண்டு ஒரு வாலிபன் கூட்டத்தில் விழுந்து முன்னுக்கு ஓடினான்.

ரோட்டில் குழுமிய கூட்டம் அலைவிரிவு போல் விலகிக் கொண்டு வந்தது. மூன்று பேரும் முன்கூட்டியே குத்தவச்சான் பாறையில் ஏறி நின்றுகொண்டார்கள். வெள்ளைச் சாரிகள் குமுகுமுத்துக்கொண்டு வருவது தெரிந்தது. பின்னால் வந்த வண்டிக்காரன் வலப்பக்கம் ரோட்டை விட்டு இறங்கி முந்தப் பார்த்தான். முன்னித்தி வண்டிக்காரன் இறங்கி மட்டக்கொம்பு மாட்டை அடித்து, பின்வண்டியை விலகவிடாமல் இடத்தை மறித்து விரட்டினான். மறுபடி இடப்பக்கம் இறங்கி விலக்க முயன்றான். ‘அடிச்சுட்டாண்டா’ கூட்டத்தில் சத்தம் கிளம்பியது. ஆனால் முந்தும் சமயத்தில் பிடி போய்விட்டது. “மாட்ட இப்படி நாலுதடவ எறக்கி ஓட்டுனாலே தம் போயிடும்மண்ணே. போக்குல விட்டுத்தான் அடிக்கணும்.” மூன்றாவது வண்டி விலகி வந்தது. இரண்டாவது வண்டிக்காரன் தார்கம்பை அப்படீன்னு தூக்கவும் கூட்டத்துக்குள் விழுந்து, சைடுவாக்கில் போகும் கம்மாய் வண்டிப் பாதையில் மாடுகள் கூடிவிட்டன. கூட்டத்தில் யாரோ “மாட்ட மாத்திப்பூட்டிட்டாங்கப்பா” என்று சொல்லியது காதில் விழுந்தது. ரோட்டை விட்டு இறக்காமல் வெள்ளைச் சாரிகளை நரசிங்கபுரத்து மாயி ஓட்டிக்கொண்டு போனான். வண்டிகள் மறைந்தன. கூட்டம் ரோட்டில் மீண்டும் கவிந்தது.

“என்ன இருந்தாலும் அய்யம்பாளையம் செம்போர் மாதிரி வருமா சுருளி! அப்படியெல்லாம் இனி மாடு பெறக்காது. போறப் பயே நாலு பக்கமும் நோட்டம் விட்டுப் போற ராட்டனக்காரி இல்ல…”

“இன்னிக்கி எங்கண்ணே சொல்லி அடிக்கிறான்? மாடும் அப்படியில்லயே.”

“பாலார்பட்டிக்காரன் மாடுக வரலையே…”

“என்னாண்ணே சொல்றது… மேலூர் ரேஸில ரெண்டாவதா வந்துக்கிட்டிருந்தது. லேசா மழைவேற தூற ஆரம்பிச்சதும் சைசா தார் கம்ப கீழ கொண்டுபோயிருக்கான். மலுச்சிட்டின்னு தவ்வுனதில வழுக்கிருச்சு. குடை சாஞ்சி ஒரு பர்லாங் தூரம் இழுத்திட்டுப் போயிருச்சு. செப்ப அந்துண்டாப் போயிருச்சு. மாயி தொட்டிய நாயக்கனுக்கு ஏன் ஓட்றான்னு தெரியுமாண்ணே?”

“இல்லயே. போஜப்ப கௌடருக்குத்தானே ஓட்டுவான்…”

“சிவகங்கை பூஞ்சிட்டு ரேஸில மொத வண்டியா அடிச்சிட்டு வந்தான். எல்லைக்கோட்டில மாடுகள நிப்பாட்டி பேப்பர்காரன் போட்டோ எடுக்க வந்தான். மாயிய எறங்கச் சொல்லிட்டு போஜப்ப கவுண்டர் மகன் போஸ் கொடுக்க பிடிகயித்தெ சுண்டிப்பிடிச்சு உக்காந்தான். அன்னக்கி எறங்குனவன்தான். பின்ன எவ்வளவோ சுவார்ஸ் பண்ணியும் மாடு ஓட்ட வரலன்னுட்டான். நோகாம பேரு எடுக்க மட்டும் ஆசை. தெறமைக்கி எங்கண்ணே மரியாதெ. பணமிருந்தா இங்க எதையும் வாங்கலாம்.”

“இங்க மட்டுமில்ல சுருளி. எங்கயும் எதையும் வாங்கலா முன்னு ஆயிடுச்சு.”

ரோட்டில் ரெண்டு பாகத்துக்கு ஒரு இடத்தில் ரத்தக் குளம்புச்சுவடு. அசோக் கூர்ந்து பார்த்தான். அளவு மாறாமல் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ரோட்டில் தெறித்த குளம்படி ரத்தம். லாடம் கழண்டிருக்க வேண்டும். புது லாடம் கட்டியதும் இரண் டொரு நாள் ஓட்டிப்பார்த்து லாடம் கப்புன்னு சேந்திடுச்சான்னு தொட்டுப்பாக்கவில்லையோ என்னவோ.

ரேஸ் திரும்புகாலைப் பார்க்காமல் சுருளியிடம் சொல்லிக் கொண்டு தகப்பனும் மகனும் தோப்புக்கு வேகமாக நடந்தார்கள்.

ஒரு கேனில் மாட்டிற்கு சாராயம் கொண்டுவந்தார்கள். கரச்சான், நடுமாடு ரேஸ்கள் முடிய பெரியமாடு ரேஸ் அறிவிப்பு வந்தது.

பணம் கட்டிவிட்டார்கள்; மாடோட்ட ஆள் அமர்த்தச் சொன்னார் திம்மையா. தோதான ஆள் கிடைக்கவில்லை. வழக்கமாக திம்மைய கௌடர் வண்டியை ஓட்டும் சின்னப்பன், மலைச்சாமி இருவரையும் கம்பத்துக்காரர்கள் முன்கூட்டியே மடக்கிவிட்டார்கள். அதனால் ரெங்கசாமி ஓட்ட வேண்டியதாகிவிட்டது.

குலுக்கல் நம்பர் நான்கு. மொத்தம் எட்டு வண்டிகள். ரெங்கசாமி, அசோக் பனியன் டிராயரோடு நான்காவது வண்டியில் இருக்கிறார்கள். புல்லை ஒரு எடத்தில நிக்காமல் ஆட்டம் போடுது.

“அப்பா, ஒண்ணும் வெலக்க வேணாம். தம் போக்குல போகட்டும். திரும்புகால்ல வச்சுப் பாத்துக்கிடுவோம்.”

“… … … …”

“புல்ல பக்கம் மட்டும் வெலக்க விடாதிங்க. காரிய தூக்கிக் கொண்டுபோயி அமுக்கிடும்.”

“… … … …”

“கால் தடுமாறிடாம. பிடிகயிறு டெம்பர்தான் முக்கியம்.”

“… … … …”

‘வண்டியிலேயே பெறந்தவன்டா நான். எனக்கு யோசன சொல்றயாக்கும்’ ரெங்கசாமி எண்ணிக்கொண்டார்.

“ஏழு முக்கு முக்கியம். கொடி வாங்குறப்போ திரும்பும் போதே வாங்கிடு” என்றார்.

பாதையோரம் ஆரவாரம். மரங்களில், குத்துக்கால்களில், கரட்டில் மனிதர்கள். ஆட்கள் கொடுக்கும் கிளப்பல்களுக்கு மாடுகள் சட்டை செய்யவில்லை. எட்டு ஜோடிகளும் காதுகளை விடைத்து நிற்கின்றன. மாடுகளுக்கு சாராயம் ஊற்றியிருக்கிறார்கள். நான்கு மணிக்கு எழும்பணுமுன்னு படுத்தால் சுவர் கடிகாரத்தில் இரண்டு, மூன்று மணிகளுக்கு இரண்டு, மூன்று தடவை டொய் டொய்ங்குக்கு எழாமல் சரியாக நான்கு டொய்ங் ஓசை முந்தியதா எழும்பியது முந்தியதா என்று அறியாமல் நிகழுமே அப்படியொரு கணம். நனவிலி யோசிப்பு. விசில், கைதட்டல், கொட்டும் தம்பட்ட முழக்கங்களுக்குக் கிளம்பாமல் ‘ட்டம்ம்ம்’ என்ற குரங்குவெடி சத்தத்தில் வண்டிகள் கலைந்தன. மாடுகள் அந்த ஒலிக்காகக் காத்திருந்த தருணம் முடிந்தது. கிளம்பி விட்டன.

ஐந்தாவது வண்டி காரியின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முந்தியது. ஐந்தில் சாட்டையின் சொடுக்கு விழ மாடு கப்பென்று தூக்கிக்கொண்டு போனது. நான்காவது வண்டி ஐந்தாவது இடத்துக்கு வந்தது.

“அப்பா அவசரம் வேணாம்.”

“மங்கிட்டி மங்கிட்டின்னு மாடுகள தவ்வ விட்டாலே பின்தங்கிப் போகும்டா. வெலக்கிப் போற மாடுக எதுவரைக்கும் தம் கட்டுதுன்னு பாப்போம்.”

வண்டிகளின் தடதடப்பு. ஆ… ஊ… கூச்சல்கள். ஆரக்கால் களில் சாட்டைக்கம்புகளின் சடசடக்கும் ஒலி. வெரண்டு சைடில் இழுக்கும் மாடுகள். இரண்டாவதாகப் போகும் ஏட்டக்கட்டு மாடுகள் உயரமும் குட்டையுமாக. குள்ளி பந்துகணக்கா எழும்பி விழுகுது.

முதல் முக்கு கடந்ததும் மூன்றாவது வண்டி ஓட்டுக்காரன் ஓடும் வண்டியிலிருந்து இறங்கி வலத்து மாட்டை அடிவயிற்றில் குத்திவிட்டு தடுக்கைப் பிடித்து ஏறுகிறான். மாடு எகிறிப் போனது. ஏட்ட மாடு சைடில் பார்த்துக்கொண்டே நெருங்கவிடாமல் போனது. அறுபத்திநாலு கால்கள் தார்ரோட்டில். படபடக் படபடக் படபடக்… லாடங்களின் ஒலி. சில லாடங்களில் தீப்பொறி கிளம்புகிறது.

நிலா வெளிச்சத்தில் தட்டுவண்டி போட்டு ராத்திரி இரண்டாவது ஆட்டத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது கன்னாவரம் மயிலை ஜோடிகள் நடப்பதைப் பார்க்கணும், நட மாட்டுக்கும் வெட்டு லாடக் கட்டுக்கும் கங்குத்தீ தார் ரோட்டில் முளைத்துக் கமுறும்.

பின்னால் வரும் ஏழாவது நம்பர் மாடுகள் மேக்காலை நெகிழ்த்துப் பிடிக்காமல் இரண்டும் சரியாகக் குதிப்பதால் லவக் லவக்கென்று வண்டியை வெட்டி வெட்டி இழுத்தன. முன்னும் பின்னுமாக மாடுகளைக் குதிக்கவிட்டால்தான் அலுங்காமல் வண்டி உருண்டு கொடுக்கும். அறாத அலைமிதப்பு போல.

ரெங்கசாமி சாட்டையைக் காரி கண்ணுக்குத் தெரிகிறாற் போலக் காட்டினார். ஐந்தாவது முக்கு நெருங்கிக்கொண்டிருந்தது. முக்கு விசாலமான இடம். இடதுபக்கத் திருப்பம் வரும். போல் மரத்தில் அப்படியே படுத்து முன்செப்பைக்கு தாரை நீட்டவில்லை, ‘அப்படீன்னு’ கொண்டுபோனார், காரி கட்டுக்கடங்காமல் கிளம்பியது. இரண்டு ஜோடி மாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ஒரே தூக்கில் மூன்றாவது இடத்துக்கு முன்னுக்குப் போனது.

முந்திப் போய்க்கொண்டிருந்த விரிகொம்பு மாடுகள் போக்கில் நல்லாதான் போகின்றன. தூண்டு ஓட்டுக்காரன் சும்மா இறங்கி இறங்கி வெலக்குறேன்னு மாடுகளை அலக்கழிப்பு பண்ணிவிட்டான்.

“தெக்கவடக்க மாட்ட ஒலட்டாம விசாலமான எடம் பாத்து தட்டிறணும்.” புல்லையும் காரியும் முதல் தாண்டல் நிகழ்த்தியதும், முன்னுக்குப் போகும் கொக்கிரி வெளாரி மாடுகளைக் குறிவைத்துப் போய்க்கொண்டிருந்தன.

இரண்டாவது போன ஏட்டமாடுகள் முதலாவதாக விலகிப் போய்க்கொண்டிருந்தன.

ரெங்கசாமி வண்டி ஓட்டும்போது மட்டும் வெத்திலை போட்டுக்கொள்வார். சுண்டுவிரலில் கயிற்றைத் திக்கல் பண்ணிக்கொண்டு சாதாரணமாக போக்கிலேயே சுண்ணாம்பு தடவி ஒதுக்கிக்கொண்டார்.

கொடி வாங்கும் ரவுண்டானா நெருங்கும்போதே அசோக் இறங்கி தட்டைப் பிடித்து ஓடியவண்ணம் இடது கையில் கொடியை வாங்கி மார்பில் பூணூல்போல் போட்டான். திரும்பலில் அசோக் ஓடியபடி பின்னித்தி பார்சட்டத்தை லேசாக எம்பியதும் இலகுவாக முக்கில் திரும்பின.

ரெங்கசாமி புல்லைக்கி நாலு வெலாரு படீரென்று விட்டார். “கொக்கிரிய வெலக்கும்போது சட்டடியா தம் கட்டி வெலக்கிற வரைக்கும் காரி பக்கம் வா” என்றார் அசோக்கிடம். எருக்கலஞ்செடி ரோட்டோரத்தில் புழுக்கூடோடு இருந்தது. ரோட்டு ஓரத்தில் அகலமாக சிமிண்ட் தரைபோல மணல்பாதை இறுகிப் போயிருந்தது. சைக்கிள்காரர்கள் தார்ரோட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரம் எருக்கலஞ்செடி விலக்கத்திலிருந்து இறங்கி மணலில் ஓட்டுவார்கள். அழுத்த அழுத்த அலுங்காமல் சைக்கிள் போகும். அந்த இடத்தை ரெங்கசாமி குறி வைத்திருந்தார்.

“அடுச்சுக்கடா மாப்ள…” மாடுகளிடம் அப்பா சொன்னாரோ இல்லையோ தார்கம்போடு காரி பக்கம் அசோக் கெதியாக ஓடினான். விலா எலும்புகளில் மொத்தமாகப் படும்படி ஓங்கிப் போட்டான். ரோமங்கள் சிலிர்த்து தடிப்பு விழுந்தது. உன்னி ஓடிப்போய் மேக்காலைப் பிடித்துக்கொண்டு ஓடினான். பிடியில்லாமல் ஓடினால் அவனுக்கு வேகம் கொடுக்காது. ரெங்கசாமி புல்லை வாலை முறுக்கிக் கடித்தார். சர்ர்ர்ரு சர்ர்ர்ருனு புலிநீளப் பாய்ச்சலில் கிளம்பியது. அசோக் கூட ஓடியவாறே காரியின் காதில் ‘புர்ர்ர்’ என்று ஊதிவிட்டு திமிலில் தார்க்கம்பால் ஓங்கிக் குத்தினான். ரத்தம் படபடவென்று பொங்கி வழிந்தது. சைசாகத் தட்டைப் பிடித்து ஏறிக்கொண்டான். மாடுகளின் வாயில் நுரை தள்ளி வழிந்தது.

“பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பிடி கிர்ர்ர்ர் கிர்கிர்கிர்கிர்கிர்…” அசோக் புல்லை பக்கம் அமர்ந்து கொண்டான். அடிகள் மாறிமாறி விழுந்தன.

“படார் படார்”

“படார் படார்”

“படார் படார்”

“படார் படார்”

“…………..  படார்”

ஒரு சக்கரம் மணல் பாதையிலும் ஒரு சக்கரம் தார் ரோட்டிலுமாக புழுதி பறக்க… குதிரையின் டாம்பீகத்தோடு கட்டுக்கடங்காமல் தீயில் விழுந்து அலறிப் போவது கணக்கா… போனதுகள்.

கொக்கிரிகள் சுருண்டு போனதுகள். ஏட்ட மாடுகளுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரெங்கசாமி மாடுகள் போய்க்கொண்டு இருந்தன. சின்னான், மலைச்சாமி ஓட்டுவது கம்பத்து ஏட்டமாடுகள். உயரத்தில் பொருத்தமில்லை. ஆனால் பாய்ச்சலில் ஒண்ணுக் கொண்ணு சளைக்காமல் போனது.

ரெங்கசாமி நெருக்கி உக்கார்ந்து நுனிவாலைக் கிள்ளினார். ஒரு சுருட்டுச் சுருட்டியது. புல்லையின் முகம் மலைச்சாமி வண்டியின் பார் சட்டத்தை தொட்டுக்கொண்டு போனது. ரெங்கசாமி இப்படி திடீர் தாக்குதல் நிகழும் என்று நினைக்க வில்லை. சின்னான் வேகத்தைக் குறைக்க பிரேக் பிடித்ததுபோல் பிடிகயித்தை இழுத்துப் பிடித்ததுதான் தாமதம், புல்லையின் மூக்கில் பார்சட்டம் இடித்துவிட்டது. ரத்தம் மூக்கில் ஒழுக ஆரம்பித்தது. காரியின் நெற்றியில் தட்டு இடித்ததும் மெய்மறந்து போயின.

“ஒரு கெஜம் விட்டே ஓட்டுங்கப்பா. எடங்கால்ல அவன் புத்திய காட்டிட்டான்ல…”

“ராஸ்கல் தயவுதாச்சண்யம்கூட இல்லாமப் பண்ணிட்டானே.”

பல்லைக் கடித்தார். சின்னான் நுணுக்கமாக ஓட்டுவதில் குறியாக இருந்தான். அவனுக்குக் குறி வெற்றி ஒன்றுதான். களத்தில் தயவுதாட்சண்யம் என்ன வேண்டிக்கிடக்கு?

வடக்க விலக்கப் பார்த்தால் வடக்கவே மலைச்சாமி இறங்கி வழி மறைக்கிறான். தெக்க நொடித்தால் இடது மாட்டை குத்தி ஓட்டுறான். அசோக்கும் இடம் வலம் மாறி மாடுகளைத் தட்டினான். முக்கை குறிபார்த்து ஓட்டினார்.

“புல்லை பக்கம் சைடு வாங்க வேணாம்ப்பா…. சொன்னாக் கேளுங்க.”

“காரி எடங்கால்ல மனச விடாதுடா. அதெல்லாம் மானத்த காப்பாத்தும்டா.”

“வேற எடத்தில வச்சு தட்டுவோம்பா.”

சின்னான் லேசுப்பட்ட ஆளில்லை. ரேஸின் அத்தனை நுட்பங்களும் அத்துப்படி. சொக்கா ஓட்டக்கூடிய ஆள்.

முக்கில் ஏட்ட மாடுகள் ஓடிச் சுத்தினால் விட்டு அடிச்சிட வேண்டியதுதான்.

மலைச்சாமி  லேசுப்பட்ட ஆளா! மாடுகள் ஓடிச்சுத்த இடம் விடாமல் நடுமுக்கிலேயே நொடித்து மடக்கி விரட்டினான்.

இடம் பத்தாதுதான். வளைவு மீது வைத்த நம்பிக்கை தலைகீழ் மாறாட்டமாகி விட்டது. விலக்கல்கள் எல்லாம் ஒரு வளைவில்தான் நடந்திருக்கின்றன. ரெங்கசாமி பிடிகயிற்றை வெளிப்பக்கம் விழும்படி திமிலில் போட்டார்.

“தும்ப காரிக்கி பத்த பூட்டியிருக்கியா?”

“பத்த தாம்பா இருக்கு. லூஸ் பண்ணணுமா?”

“பத்ததான் இருக்கணும்.”

எச்சவாயில் ஒரு குத்து, ராஜா சுழியில் தார்க்கம்பின் சுருக் பாய்ச்சல். புல்லை பக்கமே விலக்கினார். பிடிகயிற்றை அசோக்கிடம் கொடுத்துவிட்டு போல்மரத்தில் படுத்து காரியின் முன்மார்புக் குவட்டில ஒரு குத்து ஏத்தினார். ‘ங்ங்க்’ஙென நுரை கொட்ட  நாக்கு நீட்டி அனத்தியபடி எகிறிச் சாடியது.

“கயித்தப் பிடிங்கப்பா.”

நிமிர்ந்துகொண்டார்.

“தட்ட பிடிச்சுக்கடா.”

காரியின் அடங்காப்பிடாரித்தனம் இன்ன அளவு இல்லை!

அடுத்த முக்கில் வைத்தே காரி ஏட்டமாடுகளைத் தின்றுவிட்டது. முந்தும்போது காரி கோவம் கண்ணில் பிதுங்க முன்னங்கால்களை எகிறிப்போட்டது.

காரி இப்படியும் போகுமா! அசோக் ஆச்சரியப்பட்டான்.

‘சித்தயங்கோட்டை மாடுக அடுச்சிருச்சுடா.’ கூட்டத்துக்குள் குரல்கள் எதிரொலித்தன.

புளியந்தோப்பில் கூட்டம் கூடிவிட்டது. இந்தச் சமயத்தில் காரி பக்கம் யாரையும் அண்டவிடாமல் அசோக் பார்த்துக் கொண்டான்.

மலைச்சாமி வண்டியை ஒப்படைத்துவிட்டு ஓடிவந்தான்.

“அண்ணே, கம்பத்துக்காரங்க முன்கூட்டி வந்து சொல்லிட் டாங்க. நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். வழக்கமா திம்மைய கவுண்டருக்கு ஓட்டுறவன் நானு. ஒரு வார்த்த கேட்டுட்டு சொல்றேன்னேன். ஒக்காந்திட்டு எந்திரிக்க மாட்டேன்னுட்டாக…”

“இப்பென்ன நீயும் நெளிவுசுளிவாதானே கொண்டுவந்திருக்க. எனக்கும் மிந்தி மாதிரி வண்டியோட்ட முடியல. சரி பந்தயப் பணத்தை கட்டிட்டு மாட்ட அனுப்பாம இருந்தா எப்படீன்னு தான்… வரவேண்டியதாயிருச்சு.”

“என்னாண்ணே, தம்பி வண்டி ஓட்டுமன்னு தெரியாதே எனக்கு.”

அசோக் சிரித்துக்கொண்டான். மலைச்சாமி ரெங்கசாமியின் கையை விடவில்லை. மலைச்சாமி காரி பக்கம் பார்த்தான். நுரைத்த வாய் பிளந்து நாக்கு தொங்க இளைத்துக்கொண்டு நின்றது. உடலில் ஆவி பறந்தது. ஆவி கிளம்பும் விதம் கூட்டத்தினருக்கு ஆச்சரியம்தான். காளியப்பனிடம் சோடாவை வாங்கி மலைச்சாமி காரியின் கடவாய்ப் பக்கம் உடைத்துவிட்டான்.

“இவ்வளவு தொலைவு வந்திட்டு வீட்டுக்கு வராமப் போனா எப்படீ”ன்னு வீட்டுக்கு இழுத்தான் மலைச்சாமி. பரிசு நாலு மணிக்குத்தான். காளியப்பனையும் அசோக்கையும் டெம்போவில் மாட்டோடு அனுப்பிவைத்துவிட்டு ரெங்கசாமி மலைச்சாமியோடு நடந்தார்.