ஆச்சிமுத்துக் கிழவி

by சயந்தன்
0 comment

‘கொக்கரக்கோ…’ முதல் கோழி கூவி அடங்குமுன்னம் தனிக் கல்லடியின் தென்புறமிருந்து அடுத்த சேவல் கூவியது. அதைவிட கம்பீரமாகக் கூவிக் காட்டியது இன்னொன்று. தொடர்ந்து மேற்கிலிருந்து ஈனக்குரலில் ஒன்று; இப்போதுதான் கூவிப்பழகும் கொண்டை வளராத சேவலாயிருக்கவேண்டும். சற்று நேரம் விட்டுவிட்டு நாலாதிசைகளிலிருந்தும் கூவல்கள் எழுந்தன.

ஆச்சிமுத்துக்கு விழிப்பு தட்டிவிட்டது. முதல் நினைப்பாக பேரப்பிள்ளைகளின் முகங்கள் நிழலாடின. ‘ஒதியமலைக்குப் போகவேணும்.’ இரவெல்லாம் அந்த நினைப்போடே நித்திரை வராமல் புரண்டு கொண்டிருந்தாள். விடியமுன்னம் வெளிக்கிட வேணும் என்ற உறுதியுடனே உறங்கிப் போனாள்.

குறண்டிக்கொண்டு படுத்திருந்த அவள் போர்த்தியிருந்த பழைய சீலையை விலக்கிவிட்டு எழுந்து விறாந்தையிலிருந்து முற்றத்தில் இறங்கினாள். இன்னும் இருட்டு அப்பியிருந்தது. வெளியே போய்விட்டு வந்து குடிசைக் கதவுத் தட்டியைத் தட்டி னாள். உள்ளே சிம்னியின் கசங்கிய ஒளி பொட்டுகளாக ஓலை நீக்கு களால் தெரிந்தது. செல்வாவுக்கு இரண்டுபுறமும் பேரப்பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கிழவி மகளை எழுப்பினாள். “பிள்ள எழும்பு..” இரண்டு மூன்று முறை உலுப்பிய பிறகுதான் அவள் முனகலோடு முழித்தாள்.

“என்னம்மா அர்த்த சாமத்துல?”

“தலைக்கோழி கூவிட்டுது. எழும்பு. நான் ஒருக்கா ஒதிய மலைக்குப் போய் கிளியையும் பேரப்பிள்ளைகளையும் பாத்துட்டு வாறன்.”

“பொறுங்க. காலைமைக் கஞ்சி குடிச்சிட்டுப் போகலாம்.”

“இல்ல. வெயிலேறிப் போடும். நான் வெளிக்கிடுறன்.”

செல்வா எழுந்து தலைமயிரை அள்ளி முடிந்தவாறே “தேத்தண்ணி வச்சுத் தாறன். குடிங்கோ” என்றாள்.

“வேண்டாம் பிள்ள. நீராகாரம் போதும். நீ கொஞ்சம் பருப்பு தானியங்களைக் கட்டிக் குடு. பிள்ளையளுக்கு ஆகும். அவள் கிளி என்னெண்டு சமாளிக்கிறாளோ பாவம்…”

தாயும் மகளுமாகச் சேர்ந்து மூட்டை கட்டத் தொடங்கி னார்கள். கிழவி ஒரு உரப்பையை எடுத்து வந்தாள். செல்வா குரக்கன் மூட்டையை அவிழ்த்து பேணியால் கோரி உரப்பையில் கொட்டினாள். கால்வாசி நிரம்பியும் கிழவி இன்னும் இன்னும் என்று பையை விரித்துப் பிடித்தபடி நின்றாள்.

“ஒன்பது மைல் என்னெண்டு இதைத் தூக்கிச் சுமப்பியள்?”

“சுமக்கிறவள் நான். நீ கொட்டு.”

ஒரு சின்ன மஞ்சள் பையில் முக்கால் தரத்துக்கு துவரம் பருப்பைப் போட்டு கயிற்றால் இறுக்கிக் கட்டிய செல்வா ஒரு பழைய துணியை எடுத்து உளுந்தைக் கொட்டி அதைப் பொட்டணமாகக் கட்டி இரண்டையும் உரப்பைக்குள் வைத்தாள்.

“கடலை எண்ணெய் செக்கில ஆட்டினதெல்லே. அதில கொஞ்சம் போத்தலில பிடிச்சுக் குடு.”

செல்வா பழுப்பேறத் தொடங்கியிருந்த ஒரு பழைய குளிர்பானப் போத்தலின் உள்ளே கம்பியால் துணியை விட்டுச் சுத்தம் செய்து கொண்டுவந்தாள். பிளாஸ்ரிக் புனலை வாயில் வைத்துப் பிடித்துக்கொள்ள கிழவி ரின்னைத் தூக்கி ஊற்றினாள். மூடி இல்லாததால் புளியை எடுத்து உருட்டி அதன் வாயை அடைத்தாள். சந்தேகத்தோடு ஒரு பொலித்தீன் பையில் அதை வைத்து இறுகக் கட்டினாள். அதைக் குரக்கனுக்குள் பதித்து வைத்தாள். பனங்கிழங்குகளையும் மொளு மொளுவென்றிருந்த ஒரு வாழைப்பழச் சீப்பையும் உள்ளே வைத்து உரப்பையைக் கட்டினாள். அரைச்சாக்குக்கு நிரம்பிவிட்டது. அதைத் தூக்கி விறாந்தையில் வைத்துவிட்டு உள்ளே வந்த செல்வா “இந்தப் பனியில இதை என்னெண்டு காவித் திரிவியள்?” என்று மறுபடி தொடங்கினாள்.

“அதை விடு. நான் சுமப்பன். குளிச்சுப்பேட்டு வாறன்” என்று கிழவி துண்டை எடுத்துக்கொண்டு பின்பக்கம் போனாள்.

பழைய சீலையை விறாந்தையிலிருந்த கூடையில் போட்டு விட்டு ஈரத்துணியை வேம்புக்கும் தென்னைக்குமிடையே கட்டி யிருந்த நைலோன் கயிற்றில் காயப்போட்டாள். மார்கழிக் குளிரில் நடுங்கிய உடல் வெடவெடத்தது. வீட்டுக்குள்ளே போய் நெற்றி நிறையத் திருநீறு பூசிக்கொண்டு முற்றத்துக்கு வந்தவள் இத்திமரத் திசையை நோக்கிக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கித் தொழுதாள். கண்கள் மூடியிருக்க, வாய் வேண்டுதலாய் ஏதோ முணுமுணுத்தது.

கிழவி விறாந்தைத் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். செல்வா மண்சட்டியில் பழைய சோற்றை மோர் விட்டுக் கரைத்து எடுத்து வந்தாள். ‘மருமகப்பிள்ளை காணிக்குப் போட்டார்போல…’ பேணியில் வார்த்த கஞ்சியைக் குடித்து இடதுகையிலிருந்த வெங்காயத்தைக் கடித்துவிட்டு கிழவி சொன்னாள் “மருமகனைப் பால் கறக்க விடாத. உதைச்சுப்போடும். நீ கறந்து பார். நான் இல்லையெண்டால் சரிவராது. இல்லாட்டி இன்டைக்கொரு நாள் முழுக்க கன்டுக்கு விட்டுடு.”

“சரி. இன்னும் கொஞ்சம் ஊத்திறன்.”

“ரெண்டு பேணி போதும். நான் வெளிக்கிடுறன்.”

செல்வா ஒரு துண்டை எடுத்துக் கொடுக்க கிழவி சும்மாடு கோலித் தலையில் வைத்துக் கொண்டாள். செல்வா உரச்சாக்கைத் தூக்கிக் கிடைவசமாகத் தலையில் ஏற்றிவிட்டுச் சொன்னாள். “இந்தக் கனம் கனக்குது. நீங்க மட்டும் போங்கோ. இவர் காணியால வந்தவுடனை சைக்கிளிலில கொண்டுவந்து தரச் சொல்லுறன்.”

“அடி போடி. கருதுக் கட்டைக் களத்துக்கும் நிறைமூடையை வீட்டுக்கும் தூக்கி நடையோட்டத்துல வர்றவளாக்கும் நான். அவன் காணியால வந்து ஆறட்டும்.”

செல்வா அரைமனதோடு பார்த்தாள். கிழவி சொன்னாள் “நாளைக்கு வெயில் தாழத் திரும்பி வருவன்.”

தலையிலிருந்த மூட்டையைப் பிடிக்காமல் இரு கைவீசி நடந்த கிழவி முற்றத்தைக் கடந்து கடவையைத் திறக்கும் போது திரும்பி ஞாபகமாய்ச் சொன்னாள் “சின்னவன் இரவே கடலையை உரிச்சுக் கொடு எண்டு என்னை ஆக்கினைப்படுத்தினவன். அதுக்குள்ள நித்திரையாப் போனான். எழும்பி என்னைத் தேடுவான். உரிச்சுக் கிண்ணத்தில போட்டு புரையில வச்சிருக்கன். எடுத்துக் குடு.”

ஆச்சிமுத்துக் கிழவி ஊரைக் கடந்ததும் பாதையில் போகாமல் குறுக்குத் தடத்தால் வயலை நோக்கி நடந்தாள். ’இந்த வழியில போனால் ஐஞ்சாறு மைலில் மந்துக்காட்டை எட்டிவிட லாம்.’ அவள் வாக்கப்பட்டு இங்கே வந்தபோது மந்துக்காடு கூப்பிடு தூரத்தில் இருந்தது. இந்த நாப்பது வருசத்தில் கறம்பிக் கறம்பிக் காட்டை அவ்வளவு தூரமாய்க் கொண்டுபோய் விட்டார்கள். சனம் பெருக்கப் பெருக்க வயலும் புலவும் விரிந்துகொண்டே போகிறது. உழுக ரக்டரும் வந்துவிட்டது.

மார்கழிப் பனி வெண்படலமாய் நிலமிறங்கியிருந்தது. இரண்டு பாகத்துக்கப்பால் எதுவுமே தெரியவில்லை. காலடித்தடம் பார்த்துக் கிழவி நடந்தாள். நேற்றும் கடும்பனி. இப்படி இன்னும் இரண்டு நாள் பனி பெய்தால் போச்சு. தளிர்களிலும் பூக்களிலும் பூஞ்சணம் படிந்துவிடும். ‘வதக்கிப் போடும். பலன் பிடிக்காது. தாயே! காப்பாத்திக் குடு.’

வரப்பினூடே நடந்தபோது நிலம் வெளித்துவிட்டது. பனித்திரள் மேகப்பொதிகள் போலாகி மறையத் தொடங்கியிருந்தது. கிழிசல்களோடு தொங்கும் வெள்ளைச் சல்லாத்துணி போல. அரவம் கேட்டுத் தவளைகள் சளக் சளக்கென்று வயல்நீரில் பாய்ந்தன. அவற்றுக்காகக் காத்திருந்த நீர்க்கோலிகள் விலகி சர்ரென உருவிப் போயின.

கனகலிங்கத்தாருடைய வயலுக்கு அவள் வந்தபோது நன்றாக விடிந்துவிட்டது. ஆனால் காற்றில் குளிர் எஞ்சியிருந்தது. நாற்றுகள் திடம் பெற்றுக் கிளையோடியிருக்கின்றன. சில வயல்களில் குட்டைச் சம்பா நெற்பயிர்கள் முழங்கால் உயரத்தில் கரும்பச்சையாய்ச் செழித்திருக்கின்றன. கொக்குகள் இந்நேரத்துக்கே வயலில் இறங்கிவிட்டன. இரை தேடித் திரிகின்றன.

சூரியன் மேலேறத் தொடங்குகையில் குளத்துப் பாசன வயல் வெளியைத் தாண்டி புலவுக் காணிகளில் கால்வைத்தாள். தெற்கே தொலைதூரத்தில் அடிவானில் மந்துக்காடு நீலத்தால் தடினமாகக் கோடிட்டது போலத் தெரிந்தது. காணிகளுக்கூடே தெற்கு நோக்கிப் போகும் வண்டித்தடத்தைப் பிடித்தாள். கழுத்து கடுக்கத் தொடங்கியது.

இந்தக் காணி களை மண்டிப்போய்க் கிடந்தது. கடலைச் செடிகள் நடுவே நலிந்து நின்றன. ‘இவன் கமம் செஞ்சு விளங்கினமாதிரித்தான்… இந்தச் சீரில போனால் கடலையெல்லாம் சோடையாப் போடும். மருமகப்பிள்ளையிட்டையே சைக்கிள்ள குடுத்து விட்டிருக்கலாமோ! சைக்கிள் மிதிப்பான்தான்; ஆனால் தன் வீட்டிலிருந்து சாமான் வெளிய போகுதெண்டால் மகளிட்டைப் புறுபுறுவென்பான். இத்தனை காலமாய் சுமை தெரிஞ்சதில்லை. வயசாகிப் போட்டுதோ! மூதூர்க்காரி பேச்சியக்கா மூண்டு நாலு வயசு மூப்பல்லே… அவள் இன்னும் கிழங்கு மாதிரி ஓடியாடித் திரியிறாளே!’

இந்தக் காணியின் உளுந்து மதர்த்தடர்ந்து கிடக்கிறது. ஆங்காங்கே இலைகளில் பூச்சரியரிப்பு தொடங்கிவிட்டது. இப்ப தான் வெள்ளைக்காரன் மனுசருக்கும் மாட்டுக்கும் மட்டுமில்ல; பயிருக்கும் மருந்து கண்டுபிடிச்சிட்டானே!

மயிலின் அகவல் கேட்டது. எப்போதும் அந்தக் காட்சிதான் ஞாபகம் வருகிறது. அம்பகாமத்தில் அவள் சின்னப்பிள்ளையாய் இருந்த காலம்! பிள்ளைகள் எல்லாம் எருமைகளைக் குளத்தில் விட்டுவிட்டு அத்திப்பழம் பொறுக்குவார்கள். கருஞ்சாம்பல் பழத்தைப் பிய்த்துப் புழு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அப்படியே வாயில் போட வேண்டியதுதான். விதைகள் குறுகுறு வென்று பல்லில் அரைபட அப்படியொரு தித்திப்பு. ஆனால் சிலதுகளுக்குப் பிடிக்காது. ‘அத்திப்பழத்தைப் புட்டுப்பாக்க அத்தனையும் சொத்தை’ என்று கேலி செய்யுங்கள். ஆலம்பழம் செக்கச் செவே லென்று பார்க்கத்தான் கொள்ளையழகாய் இருக்கும். வாயிலும் வழுக்கிக்கொண்டுபோகும். ஆனால் சுவையில்லை. அவளுக்குப் பிடிக்காது. சிலதுகள் அதையும் தின்னும். பெரு உயரத்திற்கு வளர்ந்திருந்த அத்திமர உச்சக் கொப்பில் ‘ம்ஹோஹோகோய்…’ என்று பெருத்த அகவல் கேட்டது. தலைதூக்கிப் பார்த்தபோது இறக்கைகளை சடசடத்தபடி ஒரு ஆண் மயில் மரத்திலிருந்து எழும்பி குளத்தின் எதிர்க்கரையை நோக்கிப் பறந்தது. நெடுந்தோகை யுடன் அத்தனை பெரிய பறவை அவ்வளவு தூரம் வானில் பறந்துபோன காட்சி அதிசயம் போல இருந்தது. பிறகெப்போதும் ஒரு மயில் அவ்வளவு தூரம் பறந்ததை அவள் கண்டதேயில்லை.

இந்தக் காணியில் மிளகாய் விதைத்து ஊடு பயிராய் பாசிப்பயறு போட்டிருக்கிறார்கள். மிளகாய் பழுக்க நாளிருக்கிற தென்றாலும் முந்திவிட்ட பிஞ்சுகள் ஒன்றிரண்டு பழுக்கத் தொடங்கியிருக்கும். அதைத் தேடிக் கொத்துவதற்கு மயில்கள் திரிகின்றன.

வெயில் சுள்ளென்று உறைக்கத் தொடங்கிவிட்டது. சுமையைப் பற்றி நினைக்கக்கூடாது, அந்த நெனப்பே ஆகாது என்ற ஓர்மத்துடன் கிழவி நடையை எட்டிப் போட்டாள். வேறெதையும் நினைக்காமல் ரெண்டு பக்கமும் விளைந்திருந்த பயிர்களை வேடிக்கை பார்த்தபடி ஒரே போக்காகப் போய்க்கொண்டிருந்தாள்.

ஒரு காணியில் துவரை தோள் உயரத்துக்கு நிரை நிரையாய் மதாளித்து நின்றது. மஞ்சள் பூங்கொத்துகள் எல்லாம் பிஞ்சுகளாக வும் காய்களாகவும் ஆகிவிட இன்னும் லேசாய் ஆங்காங்கே மஞ்சள் பாரித்துக் கிடந்தன.

என்ன நினைத்தாளோ, சட்டென்று சாக்கு மூட்டையை இறக்கிவைத்தாள். பாதையோரமாய் ‘சிவனேயென்று’ கிடந்த அதை ஏதோ விநோத வஸ்துவைப் பார்ப்பதுபோல் சற்று நேரம் பார்த்தாள். கழுத்தை நாற்புறமும் சுழலவிட்டாள். வலது கையால் கழுத்தை உருவிட்டாள். முந்தானையைத் தளர்த்தி இடுப்பில் மடியாய்க் கட்டிச் சொருகியவள் காணிக்குள் இறங்கித் துவரங் காய்களை உருவினாள். பிஞ்சையையும் முற்றலையும் விட்டுவிட்டு பருவெட்டான இளங்காய்களாக உருவி உருவி மடியில் போட்டாள். முக்கால் மடி நிறைந்ததும் பாதைக்குத் திரும்பி வந்தாள். கனம் தாங்காமல்தான் இறக்கி வைத்தாளா துவரங்காய் ஆசையில் இறக்கிவைத்தாளா என்று அவளுக்கே தெளிவில்லை. வந்த உடனேயே எதையும் யோசிக்காமல் ஒரு வேகத்தோடு மூட்டையைத் தூக்கினாள். நெஞ்சுக்கு உயர்ந்த மூட்டை சற்றே தாமதித்துத் தலைக்கு ஏறியது. ஆனால் சும்மாடு நழுவிக் கீழே விழுந்துவிட்டது. இறக்கிவிட்டாள். கீழே விழுந்த சும்மாடை உதறி முகம் கழுத்தெல்லாம் துடைத்துவிட்டு சுருட்டித் தலையில் வைத்தாள். இம்முறை முழங்காலை மடக்கி அனுமார்போல சற்றுநேரம் வைத்திருந்து நெஞ்சுக்கு உயர்த்தினாள். தலையை நிமிர்த்தியவாறு உயரத் தூக்கி வைத்ததும் வாகாய் அமர்ந்துகொண்டது.

மந்துக்காடு எதிரே பச்சையாய்ப் பனை உயரத்தில் தெரிந்தது. ஒண்டரை மைல் இருக்கலாம். மடியிலிருந்து துவரையை எடுத்து இரண்டு கைகளாலும் உரித்துப் பருப்புகளை வாயில் எறிந்து கொண்டே நடந்தாள். உளுந்தின் வழவழப்பும் பயத்தங்காய்களின் லேசான இனிப்பும் இதில் இல்லை. சன்னமாய்த் துவர்க்கும் திடமான பருப்புகள். பாதியை உரித்துத் தின்றுவிட்டு மீதியைப் பிள்ளைகளுக்கென்று பத்திரப்படுத்தினாள்.

‘தைப் பொங்கலுக்குப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வரவேணும். பொங்கலென்ன, அதுக்கு முதல் கிளி குடும்பத்தையே தனிக்கல்லடியில் குடியேத்திவிட வேணும். நாளைக்கு வந்து சங்கிலி யிட்டைக் கதைக்கவேணும். அவன்ர வீட்டுப்பக்கம் குடிவைக்கக் கூடாது. ரெண்டே மாசத்தில் மீனாட்சி மூஞ்சையைச் சுழிப்பாள். செல்வா வீட்டு வளவைப் பிரிச்சுப் பெருசாக்கிவிட்டு வேம்படியில் ஒரு குடிசையைப் போட்டுக் குடுக்க வேண்டியதுதான். கிணறு தோண்ட வேண்டாம். இந்தக் கிணத்தையே பாவிக்கட்டும். கிளியும் அசராமல் காணிவேலைக்குப் போறவள்தான். சின்னவள் வளந்துவிட்டாள்தானே. ஆளும்பேருமாய்க் கூட இருந்தால்தான் தகப்பனில்லாப் பிள்ளையளுக்கு ஒரு ஆதரவு. எட்டுப் பேரப் பிள்ளையளையும் நான் வளத்து எடுப்பன்.’

கிழவி மந்துக்காட்டில் தென்கிழக்காகத் திரும்பும் ஒற்றையடிப் பாதையில் நுழைந்தாள். மரங்கள் கூடாரம் போல் பின்னிக் கிடந்ததில் வெயில் இல்லை. சற்றே ஆசுவாசமாயிருந்தது. ஆனால் தலைச்சுமை கிளை கொடிகளில் படாமல் குனிந்தும் விலகியும் நடக்கவேண்டியிருந்தது. கொஞ்சதூரம் போனதுமே வலப்பக்க மிருந்து ‘உப் உப் உப் உப்’ என்று குரல் அடுக்கடுக்காய் எழுந்தது. செண்பகம். பதிலை எதிர்பார்த்தாள். சற்று நேரத்தில் இடப்பக்க மாயிருந்து அதே போலொரு குரல் உயர்ந்தது. சோடிகள். தம் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.

சங்கிலிக்குக் கலியாணமான புதுசில் அவனுக்காகப் புதுக் கொட்டில் போட நினைத்தபோது கிளிதான் வேண்டாமென்றாள். ஆனால் புதுமகராசி வந்த பத்து நாளிலேயே அவளுக்கும் கிளிக்கும் பேச்சுவார்த்தை முட்டுப்பட்டுவிட்டது. பிறகு கிளியே பெருந் தன்மையோடு பிறந்த ஊரில் அத்தையின் வீடொன்று வெறுமை யாய்க் கிடக்குதெண்டு ஒதியமலைக்குக் கிளம்பிவிட்டாள். அவளுக்குத் தாய் ஆக்களோட சேர்ந்திருக்க விருப்பம். மூத்தவன் அப்போதே பிறந்திருந்தான். நடராசனுக்கு ஊரைவிட்டுப் போக மனசில்லை. ரோசக்காரன்தான். அங்கே போய் இத்தனை காலத்திற்கு தன்ர காணிக்கான பங்கெண்டு ஒரு நாழித் தானியம் கேட்டதில்லை. அவன்தான் கேட்டதில்லை; இவனாவது கொடுக்க வேண்டாமா! தாயும் மகனும் ஒண்டெண்டாலும் வாயும் வயிறும் வேறதான் எண்ட மாதிரி ஆகிப் போட்டு. ராணி பிறந்து தவழும் வரை கூடமாட ஒத்தாசையாய் இருந்துவிட்டு கிழவி மகள் வீட்டோடு போய்விட்டாள்.

உலுவிந்தைப் பற்றைக்கப்பால் நின்ற குளுவன் மாடு தன்னையே பார்த்தவாறு நிற்பதை சட்டென்று கண்டாள். பெரிய பாறையைப் போல நின்றது. அவளை நோக்கி வந்தது. ‘என்ர அம்மோவ்!’ சற்றுதூரம் வந்தபிறகு நின்று மேயத் தொடங்கி விட்டது. வேகமாக நடந்தாள். பல எட்டுகள் போய்த் திரும்பிப் பார்த்தபோதும் மாடு மேய்ந்து கொண்டிருந்தது. கரடியும் தனியனாக யானையும் வராமலிருந்தால் சரி; மற்றபடி இந்தக் காட்டில் பயமில்லை. சிறுத்தையை யாரும் கண்டதில்லை. நரி தனித்துதான் திரியும்.

ஆச்சிமுத்துவின் வீட்டுக்காரர் வெள்ளையர் காலம் முழுக்க வேட்டைக்கு ஆக்களோடைதான் போனவர். தனிச்சுப் போறதில்லை. ‘அவருக்கு அது வாய்க்கேல்ல. குறி தவறிப் போகுது என்பார். நடராசன் எண்டைக்கும் காட்டுக்கை நுழைஞ்சதில்லை. அவன் கமக்காரன்தான். வெள்ளையர் தவிச்ச முயல் அடிக்கிறவ றெண்டு சனம் பகிடி பண்ணும். இவன் சங்கிலி ஓடுற முயலைச் சுடுறவன். இவன் தகப்பனைப் போலயில்லாமல் தாத்தனை உரிச்சுப் படைச்சுப் பிறந்தவன். அந்த மனுஷன் ராப்பகலாக் காட்டுக்கையே அலையிறவர். இவன் வெள்ளையன்குஞ்சு எப்படி ஆகப்போறானோ தெரியேல்ல. தாத்தனைப்  போல வருவானோ.. பூட்டனைப் போலயோ..  நடராசன் தன்ர மகனுக்கு பரந்தாமன் எண்டல்லே பேர் வைச்சவன். சங்கிலிதான் பிடிவாதமா தன்ர தகப்பன்ர பேரை மகனுக்கு வச்சவன். மீனாட்சிக்கு இந்தப் பேர் பிடிக்கேல்ல…

‘எட… வழியில ஒருத்தரையும் காணேல்ல.. மான் மரை ஆட்டுத் தோல் வாங்குற யாவாரியள் சைக்கிளப் போட்டுக்கொண்டு, ஊரைச் சுத்துவினம். கொஞ்சக் காலமா அவையளைக் காணேல்ல…’

நிலம் சற்றே சரிவாய் இறங்கியது. அடுத்து நிச்சயமாய் நீரோடை வரும் என்று நினைத்தபோதே கழுத்து வலிக்கத் தொடங்கியது. கால்களில் அவ்வளவாக உளைச்சல் இல்லை. நீரின் மெல்லிய சலசலப்பு கேட்டது. தூரத்தில் எங்கோ மரை கம்மும் ஒலி. வேகமாக நடந்தாள். ஓடையை நெருங்கியதும் முதல் வேலை யாக நெஞ்சுயரம் இருந்த பாறையில் மூட்டையை இறக்கிவைத்தாள். வியர்வை ஆறட்டும் என்று பாறையடியிலேயே சற்றுநேரம் பாலைமரத்தில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்தாள். ‘கண்ணசரக் கூடாது.’

கணுக்காலளவு படிகம் போல ஓடிய நீரையள்ளிக் குடித்தாள். முகத்தைக் கழுவி உடம்பு எல்லாம் தண்ணியை வார்த்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.  பாறைமேல் அந்த மூட்டை இருந்தது. வெறித்த பார்வையாய் அதையே பார்த்தாள். வாவாவென்று ஒரு எதிரியைப் போல அது சவால் விட்டது. பிறகு அதைப் பார்க்காமல் விறுவிறுவென்று போய் பாலைமரத்தில் சாய்ந்தாள்.

‘இந்தக் காட்டு நீரோடை நாரைமடுக் குளத்தில போய்ச் சேருதுபோல. நெடுங்கேணிப் பாசனக் குளம். நடராசனை நெடுங்கேணிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப ஏலேல்ல. ஏழெட்டு மைலுக்கு என்னெண்டு நடந்து போறது! தனிக்கல்லடி தொடக்கப் பள்ளிக்குடத்தோடை நிண்டுட்டான். பாட்டெல்லாம் எங்க படிச்சானோ! கண்ணை மூடிக் கையைக் கும்பிட்டுப் பாடினா னெண்டால் பண்டாரப்பிள்ளை தோத்துப்போகும். சங்கிலியின்ர சின்னவளின்ர நேர்த்திக்குக் கூடப் பாடினானே! இத்திமரக்காரிக்கு ரெட்டைப் பொங்கல் வச்சு கிடாய் வெட்டி தாத்தாடை மடியில இருத்தி நடராசனுக்கு மொட்டையடிச்சுக் காது குத்தின நேரம் கடுக்கன் போட்டுப் பாக்கத்தான் ஆசையாயிருந்தது. அவன் வயித்திலயிருந்த நேரமே தெரியும் ஆம்பளைப் பிள்ளைதானெண்டு. அப்பவிருந்தே கடுக்கன் மேல் ஆசை. பிறகு முடியவேயில்லை. காதில் துரும்பு ஒழுங்காய் வைக்காமல் காதும் தூர்ந்து விட்டது. சின்னதில் அவனுக்கும் கைகொள்ளாத தலைமயிர். எண்ணெய் வச்சு அழுத்தி இழுக்கேல்லையெண்டால் சுருள்சுருளாய் குல்லா மாதிரி பம்பி நிற்கும். அவனுக்கு எப்படி முன்னால் மயிர் கொட்டுண்டு ஏறுநெத்தி ஆச்சுதோ! கலியாணத்துக்கு அப்புறந்தான். வமிசத்தில் யாருக்கும் அப்படியில்லை. அவன் தாத்தன் கொண்டை முடியிறவர். ம்… ரெண்டு பிள்ளையளையும் ஒருக்காக் கண்ணுக்குள்ள வைச்சா அவனைப் பாத்தமாதிரியே ஒரு ஆறுதல்…’ துயரம் தலைச் சுமையைவிடக் கனமாகி அழுத்தத் தொடங்கியது. கிழவி மந்துக்காட்டைக் கடந்து மேட்டுக் காணியில் நுழைந்தாள்.

தெற்கே அடிவானில் ஒதியமலையின் தோப்புமரங்கள் பற்றைபோல் தெரிந்தன. பாதையின் குறுக்கே காட்டுச் சேவல் ஒன்று வண்ணச்சிதறலாய் ஓடியது. இலைப்புழுக்களைத் தின்னக் காணியில் இறங்கியிருக்கும். காட்டுக் கோழிகளுக்கே உடல் குறுகல்தான். சில சமயம் கண்ணியில் சிக்கிவிடும். ‘மயிர் பிடுங்கித் தீயில் வாட்டி மஞ்சள் பூசி அப்படியே உள்ளங்கையில் தூக்கிப் பார்த்தால் தேங்கா நெத்து அளவிலதான் இருக்கும். வயித்தில முட்டையோடு பேடு சிக்கினால் தனி ருசிதான். சங்கிலிக்கு சின்னதிலிருந்தே எல்லா இறைச்சியுமே இஷ்டம்தான். சோறே தின்னுறதில்லை. மரை வத்தலைப் பொடிசாய் நறுக்கி தணலில சுட்டு கொட்டானில் போட்டுக் கொடுத்தால் காணும், இல்லாட்டி வறுவோட்டை ஏத்திச் சோளத்தைப் பொரிச்சாவது குடுக்கவேணும். கோசானை ஆட்டிக் கொண்டு கொட்டானோட தெருவில் திரிவான். காக்காய்கள் எதுவும் அவனை அண்டமாட்டுது. இவன் நடராசனுக்குப் பொரிச்ச பண்டங்கள் எதுவும் பிடிச்சதில்ல. பனம் பழத்தைக் கூட சுடக்கூடாது; கீலமா உரிச்சு பனங்கட்டி போட்டு அவிச்சுத் தரவேணும். பூவரசிலைக் கொழுக்கட்டையை விட பனங்குருத்தில் அவிச்சதெண்டால் கூட ரெண்டு தின்னுவான். ஒடிய கூழ் எண்டால் உசிர். சுட்ட கருவாடு ஆகாது. குழம்புதான் வைக்கோணும். சாளை, பாறைக் கருவாட்டுக் குழம்பெண்டால் களி உருண்டையை முக்கி முக்கி முழுங்குவான். வாளை, சூடை எண்டால் பக்கத்திலயிருந்து முள் எடுத்துக் குடுக்கவேணும்.’

சுமை தாள முடியாததாயிருந்தது. எதிரே ஊரைக் கண்டு விட்ட தெம்பில் விறுவிறென்று நடந்தாள். வயல் காணிகள் முடியப் போகுது. பிறகு ஒண்டு ஒண்டரை மைல்தான். ஒரு காணி தள்ளி ஏழெட்டுப் பெண்கள் பயிரில் களை கொத்திக் கொண்டிருந்தார் கள். அவர்களைக் கண்டதும் தண்ணீர் விடாய்த்தது. ஓட்டமும் நடையுமாய் அவர்களை நோக்கி நடந்தாள். போனதும் பொழியில் நின்ற வேம்படியில் மூட்டையை இறக்கிவைத்தாள். இளமரம். கொப்பு சீவி விட்டதால் நெடுநெடுவென்று ஏறியிருக் கிறது. தாவணி போட்ட குமர்ப் பிள்ளையொருத்தி எழுந்து ஆச்சிமுத்துவை ஏறிட்டுப் பார்த்தாள் “பிள்ளை… தண்ணி விறாய்க்குது.” அவள் ஒற்றைக்கையால் பெரிய செப்புச் செம்பைத் தூக்கி வந்தாள். வாங்கி அண்ணாந்து மடமடவென்று ஊற்றினாள். அந்த இளம்பெண் பத்து எட்டு தள்ளிப்போய் செடிமறைவில் குந்தினாள். ‘ஸ்ஸ்ஸ்…’ என்று சத்தம் இங்கே கேட்டது. கிழவி செம்பைக் கீழே வைத்து விட்டு வரப்பில் நிழலோடு துண்டை விரித்துச் சாய்ந்து விட்டாள். அடித்துப் போட்டதுபோல் அசதி. எழுந்து வந்த இளங்குமரி மூட்டையை ஒத்தைக் கையால் தூக்கிப் பார்த்துவிட்டு விரிந்த கண்களோடு கேட்டாள். “எங்கயிருந்து வர்றீங்க ஆத்தை?”

“தனிக்கல்லடி.”

“எப்புடி இதச் சுமந்து வந்தீங்க? எட்டு மைலுக்கு மேலயிருக்கும். சாப்பிட்டாச்சா! இருங்க வாறன்” என்று போனாள். போனவள் ஆட்களிடம் சொல்லியிருக்க வேணும், எல்லாரும் எழுந்து அதிசயமாய்க் கிழவியைப் பார்த்தார்கள். அவள் ஒரு தூக்குவாளியோடு வந்தாள். “ஆத்தை! எழும்பி இதச் சாப்பிடுங்க. இப்ப மணி பத்து ஆச்சு. பன்னெண்டுக்கு வேலை முடிஞ்சிடும். அதுமட்டும் அப்படியே கண்ணசருங்க. வீட்ட போகும்போது மூட்டையை நான் காவிறேன்.” தலையில் முடிச்சிட்டிருந்த துண்டால் வியர்வையைத் துடைத்தபடி சொன்னாள்.

“இந்தா… இதைத் தின்னு மகள்!” என்று சொல்லி மடியிலிருந்த துவரங்காய்களில் ஒரு கொத்து அள்ளி அவள் கையில் கொடுத்துவிட்டு தூக்குவாளியைத் திறந்தாள்.

சுள்ளென்று வெயில் உறைத்தபோது கிழவிக்கு முழிப்பு தட்டியது. பாதி உடல் வெயிலிலும் மீதி நிழலிலும் கிடந்தது. எழுந்து உட்கார்ந்தாள். மூட்டையையே வெறித்துப் பார்த்தாள்.

‘இந்தக் குமரி வடிவான பெட்டை! மகாலட்சுமி மாதிரி! இவள் காணியில் கால் வச்சாளெண்டால் அந்த மண் பூத்துக் குலுங்கும். ஒரு வீட்டுக்கு இவளெல்லோ வேணும்! எவனுக்குக் கொடுத்து வச்சிருக்கோ! ம்… என்ர சங்கிலிக்கெண்டு ஒருத்தி வந்து வாய்ச்சிருக்கிறாள்.. என்ர பேரன்களில எவனாவது இளவட்டமா யிருந்து இவள மாதிரியொருத்தியைக் கண்டன் எண்டால் தாலியைக் கையில குடுத்து கட்டடா எண்டுவன். மிஞ்சிப்போனால் இவளுக்குப் பதினாறு பதினேழு வயசிருக்கும். இவளைச் சுமக்கவிடக்கூடாது. கழுத்து நோகும்.’

மூட்டையைத் தலையிலேற்றி விட்டு கிழவி அவர்களை நோக்கிப் போனாள். இளம்பெண் எழுந்து “நான் தூக்கிட்டு வர்றேன்னு சொன்னேன்ல” என்றாள். கிழவி மடியைத் தடவி பிள்ளைகளுக்காக மிச்சம் வைத்திருந்த துவரங்காய்களை எடுத்து அவளிடம் தந்தாள். “இந்தா… நாலு எட்டு. ஊர் போய்ச் சேந்திருவன். உங்க ஊர் மாரியாத்தைக்கு வெள்ளிக்கு வெள்ளி விளக்கேத்து மகள்!” என்று சொல்லிவிட்டு விலகி நடந்தாள்.

ஒதியமலைக் குளக்கரையில் பனங்கூடல்களுக்கு ஊடே ஏறினாள். வளவுப் படலைத் திறந்து உள்ளே நுழையவும் சின்னவள் புவனா ஓட்டைப்பல் தெரிய ஓடிவந்து ‘அப்பூம்மா…’ என்று காலைக் கட்டிக்கொள்ளும் சித்திரம் மனதில் விரிந்தது. எட்டி நடந்தாள்.

தெரு நாயொன்று குரைத்துக்கொண்டு வந்தது. இவள் சட்டை செய்யாமல் நடக்கவே தொடர்ந்து வந்து குரைத்துவிட்டுத் திரும்பிப் போனது.

வளவுப்படலை கயிற்றால் முடிச்சிட்டிருந்தது. திறந்து உள்ளே போய் விறாந்தைத் திண்ணையில் மூட்டையை இறக்கினாள். கதவுக் கொண்டியில் ஒரு கவைக்குச்சி சொருகியிருந்தது. ‘கிளி காணிக்கு வேலைக்குப் போயிருப்பாள்.’ திறந்து உள்ளே போய்த் தண்ணீர் குடித்துவிட்டு வந்து வெளித்திண்ணையில் இருந்தாள். வளவுக்குள் ஒரு கோழி மட்டும் ஏழெட்டுக் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்தது. பூங்குஞ்சுகள்! அடையிலிருந்து வெளியே வந்து ஒரு வாரமிருக்கலாம். கள்ளப்பருந்தோ காகமோ தூக்காமலிருக்க ஏமாற்றுவதற்காகக் கலர் பூசியிருக்கிறார்கள். பூப்போல மஞ்சள் கால்களால் தத்தித் தத்தி வாயைத் திறந்தபடி இதுகள் அலைவதே அழகுதான். தாய்க்காரி ‘கெக் கெக் கெக்’ என்று அதட்டி அருகழைத்து கூட்டிக்கொண்டு அலைகிறாள். கிழவி மூட்டையை அவிழ்த்து கொஞ்சம் குரக்கனை எடுத்து முற்றத்தில் விசிறினாள். பசித்தலைந்த தாயும் குஞ்சுகளும் அவசரமாய் ஆவலாய் கொத்தித் தின்னும் கோலத்தை ரசித்துக்கொண்டே இருந்தவளுக்கு கண் சொருகவும் அப்படியே சாய்ந்தாள்.

மத்தியான வெக்கை. கிழவி முழித்துப் பார்த்தாள். வெளியே வெயில் அனலாய் எரித்தது. எழுந்து உட்கார்ந்தாள். விறாந்தையில் இளம்பெண் ஒருத்தி முருங்கைக்கீரையை உருவிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் கைப்பிள்ளை ஒன்று துணியில் தூங்கிக்கொண்டிருந்தது. அவள் எழுந்து “வாங்கோ அம்மா” என்று வரவேற்றாள்.

“நீ ஆரடி மகள்? கிளியும் பிள்ளையளும் எங்கே?”

“கிளியக்கா என்ர ஒண்டுவிட்ட பெரியப்பான்ர மகள். தண்ணி குடிக்கிறியளே? தேத்தண்ணி போடட்டுமா? இப்பதான் காணியிலிருந்து வந்தனான்.”

“வேண்டாம் பிள்ளை. அவை எப்ப வருவினம்?”

“கிளியக்கா போன மாசமே வவுனியாவுக்குப் போயிட்டா. அவவிட அக்காக்காரி வந்து கையோட கூட்டிக்கொண்டு போயிட்டினம். அவையள் கொஞ்சம் வசதியல்லே. அதுதான் நல்லது எண்டு சித்தியும் சொல்லி அனுப்பிவிட்டினம். மூத்தவனை அங்கயே பள்ளிக்குடத்தில சேத்தாச்சாம். இந்த வீட்டில விளக்கேத்த என்னை இருக்கச் சொன்னவை. கோழிகளை மட்டும் இங்க விட்டிட்டுப் போயிட்டினம்.”

கிழவி இடி விழுந்தது போல் இருந்தாள். ‘அவள் கிளி என்னட்ட ஒரு வார்த்தையும் சொல்லாமல் எப்படிப் பிள்ளை யளைக் கூட்டிக்கொண்டு போனவள்?’

‘அவளைத் தனிக்கல்லடிக்கார் ஒருவரும் கண்டுக்காமல் விட்டால் அவள் என்ன செய்வாள் பாவம்!’

சினம் சங்கிலி மேல் திரும்பியது. ‘அவள் அக்காக்காரிக்கு இருக்கிற உருத்து சங்கிலிக்கு இல்லையே.’

‘கையேலாதவன்.’

‘அவனை அவளல்லோ சீலைக்குள்ள சுருட்டி வச்சிருக்கிறாள்.’

மீனாட்சியைச் சபிக்க வாயெடுத்தவள் அடக்கிக் கொண்டாள். தன்னை மீறிக் கண்ணீர் வழிந்தது. புலம்பத் தொடங்கினாள். “என்ர பேரக்குஞ்சுகள் அநாதையாப் போட்டுதுகளே… நான் உயிரோடை இருந்தும் அதுகள இப்படி விட்டுட்டனே…”

‘ஊருக்குக் கூட்டிக்கொண்டு போகவேணும் எண்டல்லோ காத்திருந்தன். இப்படி ஆகுமெண்டு தெரிஞ்சிருந்தா செல்வத்தை விட்டுப்போட்டு கிளியோட வந்து இருந்திருக்கலாம்.’

கிழவி வெகுநேரம் அப்படியே கல்லுப்போல உட்கார்ந்திருந்தாள்.

“கொஞ்சம் தண்ணி குடு மகள். கிளியின்ர தாய்க்காரி வீட்ட இருக்கிறாவோ?”

“ஓம். சித்தி வீட்டதான் இருக்கிறா.”

தண்ணீரைக் குடித்துவிட்டு கிழவி சொன்னாள் “நான் அவையளப் போய்ப் பாக்குறன். இந்த மூட்டையில கொஞ்சம் குரக்கன் இருக்கு. நீ வச்சுக்கொள்ளு.”

“அம்மா! இருங்கோவன். டக்கெண்டு சோறாக்குவன். சாப்பிட்டுட்டு அங்க போங்க.”

“இல்லை மகள். நான் வாறன்.”

“இருங்கோம்மா. கிழங்காவது சுட்டுத் தாறன். கருவாட்டுக் குழம்பிருக்கு.”

“சரி மகள். ராவைக்கு வாறன்.”

சேலைத் தலைப்பை வெயிலுக்கு முக்காடாகப் போட்டபடி கடவையைத் திறந்துகொண்டு ஆச்சிமுத்துக் கிழவி வெளியேறினாள்.