மரத்தில் மறைந்தது

1 comment

பைன் மரங்களினூடாகக் காற்று ஊளையிட்டுக் கடந்தது. சுழன்று சீழ்க்கையடித்தது. இன்னும் விடியவில்லை. எங்கோ அடிவானில் சன்னமாய் வெள்ளிக் கீற்றுபோல சிறு வெளிச்சம். மரவீட்டின் கூரையில் என்னவோ விழுகிறது. சரசரவென உருள்கிறது. பைன் மரக்காட்டின் நடுவே ஊன்றிய கால்களின் மேலே கட்டப்பட்ட மரவீடு. காட்டின் ஒவ்வொரு அசைவுக்கும் இந்த வீடும் அசைந்து சத்தம் எழுப்புகிறது. சாத்தியிருக்கும் ஜன்னல் கதவு கிறீச்சிட்டு அசைகிறது. அதைக் கட்டியிருக்கும் சணல் கயிறு தளர்ந்திருக்க வேண்டும். கனத்த போர்வையை விலக்க மனமில்லாமல் புரண்டான் சசிதரன். 

பிரார்த்தனைக் கூடத்தின் வாசலில் மணியொலிக்கும் ஓசை. கட்டிலுக்குக் கீழிருந்த பெஸ்டி தலைநீட்டிப் பார்த்தது. ‘ம்ம்யாவ்…’. எழுந்துகொள்வதற்கான முதல் மணி. 

போர்வையை விலக்கிவிட்டு உள்ளங்கைகளைப் பரபரவெனத் தேய்த்தான். இமைகளுக்கு மேலே வைத்து மிக மெல்ல அழுத்தம் தந்தான். கைகளின் வெம்மை இமைகளில் இறங்கியது.

குரு நித்யா எழுந்து காலை நடைக்குத் தயாராகிக்கொண்டிருப்பார். எப்படி அவரை எதிர்கொள்ளப் போகிறோம்? நேற்றிரவு அந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்து போனவை. நேற்றின் பக்கங்களில் எழுதப்பட்டுவிட்டன. இனி அவற்றை மாற்ற முடியாது, எதனாலும், யாராலும்.  

மறுபடி காற்றின் ஓலம். கட்டிலின் ஓரத்தில் கிடந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான். இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் அவன் நன்கறிந்த ஓவியம் அது.  அழுத்தமான கோடுகளில் ஏசுவின் முகம். காகிதத்தில் இருக்கும் இந்த முகத்தை அந்த மரத்துண்டில் செதுக்க இன்னும் கைவரவில்லை. உற்றுப் பார்த்தான். இதோ, காருண்யம் ததும்பும் இந்தக் கண்கள்தான் சவால்.

மரப் பலகைகளாலான தரையில் கால் வைத்ததும் ஆட்சேபிப்பது போல சிறு முனகல் ஒலி. மூலையில் சுருண்டிருந்த பெஸ்டி சோம்பலுடன் தலைதூக்கியது. ‘ம்யாவ்…’ ஜன்னல் கதவை மெல்லத் திறந்தான். காத்திருந்தது போல காற்று வீட்டுக்குள் குளிரை நிரப்பியது. காதுகளை மூடும்படி குல்லாவை இறுக்கிக்கொண்டு செருப்பை மாட்டினான். குடுவையிலிருந்த நீரைத் தம்ளரில் நிரப்பி எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தான். இருள் விலகாத பொழுதின் மெல்லிய வாசனை. சீற்றம் குறையாத காற்று. கண்களை மூடி முகத்தைத் தூக்கியபடி நின்றான். காற்று அவனை முழுக்கத் தழுவியோடியது. பெஸ்டி கட்டிலுக்கு அடியில் ஓடியது. மேற்கு வானில் சுடரும் வெள்ளியைப் பார்த்தபடியே வாயைக் கொப்புளித்தான். விருந்தினர் இல்லமும் நூலகமும் இருட்டில் நின்றன. 

குவளையை வைத்துவிட்டு படிகளில் இறங்கினான். பலகைகள் அசைந்தன. சருகுகள் புரண்டன. வழக்கமான பாதைதான். ஈரமான புல்வெளி. அடர்ந்த சீமைப்புற்கள். அங்கங்கே கன்னங்கரேலென்று திட்டுத்திட்டாய்க் காட்டெருமைச் சாணம். பாதையோரத்துச் செடிகளில் ஈரம் உலராத டேலியா பூக்கள். ஓவியக்கூடத்துக்கான படிகளையொட்டிய சரிவில் நிதானமாக கீழே இறங்கினான். கண்களுக்குப் பழகியிருந்தது இருட்டு. மிதிபடும் சருகுகளின் சத்தம். கூடத்தின் கீழ்ப்பகுதியில் கிழக்குப் பார்த்தாற்போல ராமேட்டனின் அறை. அதன் பின்புற ஜன்னலுக்குக் கீழே பீடத்தின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான். மார்பு வரைக்குமான ஏசுவின் செதுக்கி முடிக்கப்படாத சிற்பம். கழுத்து, தலை எனக் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரல்களால் மெல்லத் தடவினான். மரத்தின் சொரசொரப்பு உடலைச் சிலிர்க்கச் செய்தது. நெற்றி மேடும் நாசியும் கச்சிதமாய் அமைந்துவிட்டன. புருவங்களும்கூட. இதோ, இந்தக் கண்கள்தான்.

பிரார்த்தனைக் கூடத்தின் பின்கட்டில் வெளிச்சம் பரவியது. குரு தயாராகிவிட்டார். சசி எழுந்து ஜகரண்டா மரங்களுக்கு நடுவிலிருந்த ஒற்றையடிப் பாதையில் விரைந்தான். நூலக வாசலுக்கு வந்ததும் ஒரு நிமிடம் நின்றான். நேற்றிரவு அவன் முகம் சிவக்க இங்கிருந்துதான் கத்தியபடியே வெளியேறினான்.

எங்கிருந்து வந்தவன் அவன்? குருகுலத்தில்தான் இருக்கப் போகிறான். இவனுடன் எப்படி காலம் தள்ளப் போகிறோம்? முன்பின் தெரியாத ஒருவன். அதற்குள் அவனிடம் ஏன் அப்படியொரு மூர்க்கத்தைக் காட்டினேன்? தேவையற்றதுதான். ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது. ஆனால், அந்த ஒரு நிமிடத்தை அந்த நேரத்தில் கண்டடைவதுதானே சவால்? அதைத்தானே குரு தொடர்ந்து வெவ்வேறு விதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்? இந்த மரமண்டையில் அது ஏறவில்லை. 

அவனும் நேற்றிரவு தூங்குவதற்கு நேரமாகியிருக்கும். என்னென்னவோ யோசித்திருப்பான். என்னைப் போலவே அந்தச் சம்பவம் அவனையும் பாதித்திருக்கும். அவன் கண்களில் கண்ட அந்த அலட்சியம் இப்போதும் நினைவிருக்கிறது.

மரப்பெட்டியின் மீதிருந்த விளக்குமாறை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான் சசி. மரத்தடியில் நனைந்த இலைகள் பளபளத்தன. வால்பேரி மரத்துக்கு அருகிலிருந்த மஞ்சள் விளக்கின் வெளிச்சம் பிரார்த்தனைக் கூடத்துக்கும் விருந்தினர் விடுதிக்கும் பொதுவான முகப்பில் விழுந்திருந்தது. மெதுவாக இலைகளையும் சருகுகளையும் பெருக்கிக் குவித்தான். விருந்தினர் விடுதியின் முன்னறையின் கண்ணாடிகளில் நீர்த்திவலைகள். வலமும் இடமும் அமைந்த அறைகளுக்கு நடுவிலிருந்த இடைவழியின் மேற்குக் கோடியில் மட்டும் விளக்கெரிந்தது.

எங்கே தங்கியிருக்கிறான் அவன்?

கிழக்கில் தேயிலைச் சரிவை வெண்பனி மூடியிருந்தது. அங்கங்கே கரைந்த நிழல்களெனச் சில்வர் ஓக் மரங்கள் கைவிரித்து நின்றன. இருள் இளகும் வேளைக்கான அறிகுறிகள் அடிவானில் தென்பட்டன. 

வடக்கே சற்றே தாழ்வான நிலத்தில் அமைந்த சமையல்கூடத்தின் முன்பக்க விளக்கு ஒளிர்ந்தது. தாழ்ப்பாளை விலக்கும் சத்தம். மரக்கதவுகள் ஓசையுடன் திறந்தன. முழங்கால் வரைக்குமான மங்கிய காவி வேட்டியும் தடித்த உடலை இறுக்கிய ஸ்வெட்டருமாய் தம்பான் சாமிகள் வெளியே வந்தார். அவனைப் பார்த்து கையசைத்தார். பெருக்கிக் குவித்த குப்பையை அள்ளிக்கொண்டு சரிவில் இறங்கினான். மூடிய கிணற்றில் குப்பையைக் கொட்டிவிட்டு கையைத் தட்டிக்கொண்டே அருகில் சென்றான்.

“குட்மார்னிங் சசி.”

குழாயைத் திருப்பி கையை நீட்டினான். சில நொடிகளுக்குப் பிறகு தண்ணீர் கொட்டியது. கையில் பட்டதும் சட்டென விலக்கினான். விறுவிறுவென உடலில் பாய்ந்தது குளிர்ச்சி. மீண்டும் மெல்ல கையை நீட்டி நனைத்தான். தேய்த்துக் கழுவினான். மஞ்சனக்கோரை நிறுத்தத்தை நோக்கி உறுமிக்கொண்டு பேருந்து மேலேறும் சத்தம் கேட்டது. 

தொட்டிச் செடிகளுக்கு நடுவே எதையோ துரத்திக்கொண்டு வந்தது பெஸ்டி. மீசை முடிகள் அசைய முகத்தைச் சுழித்தது, “ம்யாவ்…”. 

“கட்டன் சாயா போடலாமா சாமி?”

“ம். வெள்ளம் கொதிச்சிருக்கும் பாரு.”

நீண்ட பெஞ்சுகளின் மேல் ஒரு முறத்தில் வாடிய காய்கறிகள். மரச்சீனிக் கிழங்குகள். தென்மேற்கு மூலையிலிருந்த அடுப்பில் தண்ணீர் கொதித்தது. சசி அளவு பார்த்து தேயிலையை இட்டான். பச்சை வாசனையுடன் தேயிலை கரைய தண்ணீரின் நிறம் மாறியது. 

கூடத்தின் பின்னால் பாத்திரம் கழுவும் சிறிய தொட்டியின் அருகிலிருந்த மேடையிலிருந்து இரண்டு தம்ளர்களை எடுத்தான். தம்பான் சாமி எப்போதும் பஞ்சாரம் இட்டுக்கொள்வதில்லை. இவனுக்கு ஒன்றரை ஸ்பூன். 

“நேத்து ராத்திரி சசி எதுக்கு அப்பிடி செஞ்சது? விஜயனுக்கு சின்ன வயசு. அவருக்குத் தெரியாது. சசி இல்ல பொறுமையா இருந்துருக்கணும்?” சூடான தம்ளரை எடுத்து உள்ளங்கைக்கு நடுவில் வைத்து உருட்டினார்.

தேநீரின் வெம்மை இதமாக இறங்கியது. “இல்ல சாமி. ரெண்டு தடவை சொல்லியும் அவன் கேக்கலை. அதான்…”

தலையைக் குனிந்தபடி சிரித்தார். “ரெண்டு தடவை கேக்கலைன்னா இன்னொரு தடவை சொல்ல வேண்டிதுதானே?”

அவர் சொல்வதும் சரிதான். நூலகத்தைப் பராமரிப்பது சசியுடைய பொறுப்பு. யார் எந்தப் புத்தகத்தைக் கேட்டாலும் எடுத்துத் தரலாம், ஆனால் படித்த பிறகு அதே இடத்தில் மறுபடியும் அதைப் பத்திரப்படுத்த வேண்டும். வகுப்புகளின் போது அவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். குரு எந்த நேரத்தில் எந்தப் புத்தகத்தைக் கேட்பார் என்று சொல்ல முடியாது. 

“என்னவோ தெரியலை சாமி. புக்கையெல்லாம் அவன் ஹேண்டில் பண்ணினத பாக்கறப்பவே எரிச்சலா இருந்துச்சு. ரெண்டு மூணு தடவை கீழே போட்டதுந்தான் பொறுமையிழந்துட்டேன். மொதல் தடவை கீழ போட்டப்பவே சொன்னேன். அவன் கவனிச்ச மாதிரியே காட்டிக்கல. ரெண்டாவது தடவையும் கீழ விழுந்தப்பதான் சத்தம் போட்டேன். இவன் எப்படி லைப்ரரியை பொறுப்பா பாத்துக்குவான் சாமி?”

சற்றே தடித்த முன்பற்கள் பளிச்சிட சிரித்தார் சாமி. “அவர் வயசுக்கு அப்பிடித்தான் இருப்பார். இங்க நம்ம கூடத்தானே இருக்கப் போறார்? நாமதான் ஒவ்வொன்னா சொல்லித் தரணும்.”

“அதுக்காக அவன் என்னை அப்பிடி பண்ணலாமா சாமி?”

இரண்டு தம்ளர்களையும் எடுத்துக் கழுவினார் தம்பான் சாமிகள். சசியின் தோள் மீது கை வைத்த அதே நேரத்தில் பிரார்த்தனைக் கூடத்தின் முகப்பில் இருக்கும் மணி ஒலித்தது. 

காலை உலாவுக்கு குரு புறப்பட்டுவிட்டார். சசியின் முகத்தில் தயக்கம் தெரிந்திருக்க வேண்டும். 

“சசி போகலியா?”

கையைத் துடைத்துக்கொண்டு வெளியில் ஓடினான். அன்வரின் தோளைப் பிடித்தபடி வாசலில் நின்றார் குரு. கீழ் வானில் வெளிச்சம். தேயிலைச் சரிவின் மேல் ஒளிப்புள்ளிகள். உயரமாய் நின்ற செடார் மரத்தை அண்ணாந்து பார்த்தார் குரு. தடித்த, குள்ளமான உருவம். கணுக்கால் வரைக்குமான காவி வேட்டி. இறுக்கமான காலுறைக்கு மேல் கனத்த காலணி. உடலைப் பற்றிக்கொண்டிருக்கும் இளஞ்சிவப்பு ஸ்வெட்டர். நீல சால்வை. தலையில் வேலைப்பாடுகள் கொண்ட அழகிய காஷ்மீரத் தொப்பி. வெண்தாடியுனுள் மினுமினுக்கும் கன்னக்கதுப்புகள். ஒவ்வொரு நாள் காலையிலும் அந்தச் செடார் மரத்தைச் சில நிமிடங்கள் உற்றுப் பார்ப்பதிலிருந்துதான் அவரது நாள் தொடங்கும். 

சிபுவும் ராமேட்டனும் பின்னால் வந்து நின்றார்கள். அருகில் ஒதுங்கி நின்ற சசியைப் பார்த்ததும் ராமேட்டன் தோளைப் பற்றினார். 

தரையில் கிடந்த உலர்ந்த காயைக் கைத்தடியில் தட்டியபடியே அடியெடுத்து வைத்தார் குரு. தைலமும் எண்ணெயும் கலந்த அவரது வாசனையை உணர்ந்ததும் சசியின் அடிவயிற்றில் சிறு கலக்கம். பெஸ்டி அவர் காலருகில் வந்து உரசியது. கைத்தடியால் அதன் முகத்தின் அருகில் நீட்டினார். ஒருதரம் துள்ளிச் சாடிவிட்டு மறுபடி அவர் கால்களை உரசியது. ஆசிரமத்திலிருந்து சாலையை அடையும் வரை ஒன்றும் பேசாமல் கலையும் இருளை கவனிப்பது போல மண்ணைப் பார்த்தபடியே நடந்தார். விடியலின் களங்கமற்ற வெளிச்சம் பூமியின் மீது இறங்கியது. சாலையோரத்துச் செடிகளின் ஒவ்வொரு இலையிலும், மலரிலும் ஒளி படிந்தது. உயரமான யூகலிப்டஸ் மரங்களையும் சைப்ரஸ் மரங்களையும் கடந்து, மேற்கில் இறங்கியது வெளிச்சம். பொன்னிறம் துலங்கி மின்னியது. 

தெற்குப் பாதையில் அவர்கள் நடக்கத் தொடங்கியதும் ராமேட்டனிடம் சொல்லிவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்பினான் சசி. அவன் பின்னாலேய ஓடிவந்தது பெஸ்டி. 

சுடுநீர் அடுப்பில் விறகைப் போட்டு எரித்துக்கொண்டிருந்தார் தம்பான் சாமி. ஏறிட்டுப் பார்த்தார். 

விடுதியின் கதவு திறந்திருந்தது. பேச்சுச் சத்தம். டேலியாப் பூக்கள் அடர்ந்த செடிகளின் வரிசையைக் கடந்து ஓவியக்கூடத்தை ஒட்டியிருந்த படிகளில் கீழிறங்கினான். ஆளுயரப் பள்ளத்தில் அமைந்திருந்த அறையின் வாசல் கிழக்குப் பக்கம் என்பதால் பின்னால் ஒதுக்கமான பகுதி. சசிக்கான இடம்.

ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த கித்தான் பையிலிருந்து உளியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு மண்டியிட்டு உட்கார்ந்தான். கல்பீடத்தின் மேலிருந்தது பாதியளவு செதுக்கி முடித்திருந்த மரச்சிற்பம். கழுத்து வரையிலான ஏசுவின் முகம். புருவ மேட்டில் உளியை வைத்ததும் தங்கப்பன் ஆசாரியின் முகம் நினைவில் வந்தது.

*

வெண்தாடியுடன் கூடிய நீளவாக்கிலான முகம் தங்கப்பன் ஆசாரிக்கு. இடுங்கினாற் போன்ற சிறு கண்கள். கடுக்கன்கள் மினுமினுக்கும் காது மடல்கள். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் தேக்கும் மூங்கிலும் அடர்ந்த தோப்பின் முகப்பில் இருந்தது அவருடைய பட்டறை. கன்னிகாஸ்தீரிகளின் மடத்தில் சமையல் வேலைக்குப் போயிருக்கும் அம்மா வீடு திரும்ப மணி ஆறாகிவிடும். அதுவரை வாசல் திண்ணையில்தான் கிடக்க வேண்டும். 

பட்டறை முகப்பில் மூங்கில் கம்பின் மேல் மாட்டியிருந்த உருவத்தை வேடிக்கைப் பார்த்து நின்றபோதுதான் தங்கப்பன் ஆசாரியின் குரல் கேட்டது, “மோனே, மேல வா.” 

நீண்ட தொப்பியும் பருத்த வயிறும் கொண்ட கோமாளி பொம்மையைப் பார்த்தபடியே வளைந்து மேலேறிய பாதையில் மெதுவாக ஏறினான். மரங்களின் பச்சை வாடையுடனான வாசலில் சுருள்சுருளாய் மரப்பட்டைகள். சிறிய கோணிப்பையின் மேல் உளிகளும் சுத்தியல்களும். சிறிய ரம்பமொன்றும் சுள்ளாணிகளும் கிடந்தன. வெள்ளை மணல்போலக் குவிந்திருந்த மரத்தூளின் மேல் பூசணித்தலையுடனான ஒரு பொம்மை. ஒரு மரப்பெட்டியின் மீது வண்ணம் தீட்டப்பட்ட சின்னச் சின்னப் பொம்மைகள். 

உள்ளேயிருந்து வந்தவர் இரண்டு சப்போட்டா பழங்களை அவனிடம் நீட்டினார். “சாப்புடு. உன்னோட அம்மை வர நேரமாகுமே. இவிட இருக்கி.”

சிறிய மரத்துண்டின் மேல் உட்கார்ந்தான். தரையில் கால்களை மடக்கி அமர்ந்து மாட்டுவண்டி பொம்மையின் சக்கரத்தைப் பொருத்தலானார் தங்கப்பன் ஆசாரி. சுருக்கங்கள் மினுமினுக்கும் அவரது கைகளையே பார்த்துக்கொண்டிருந்தான் சசி. 

மறுநாள் அவனாகவே பட்டறைக்குப் போனான். ஒரு தட்டில் பலாச்சுளைகள் இருந்தன. தங்கப்பன் ஆசாரி இப்போது தலையில் குடத்துடன் நிற்கும் பெண்ணைச் செய்துகொண்டிருந்தார்.

பலாச்சுளைகளின் மணமும் இனிப்பும் தித்தித்திருக்க தங்கப்பன் ஆசாரியிடம் மெதுவாகக் கேட்டான். “நா ஒரு பூ செய்யட்டுமா?”

புருவத்தின் நீண்ட நரைமயிர்கள் காற்றில் அசைய நிமிர்ந்து சிரித்தார். “இதை எதுவும் கேக்கக் கூடாது. இப்ப வேணாம்” என்று உளியையும் சுத்தியலையும் காட்டினார்.

“இல்லை. இதோ இந்தச் சருகை வெச்சு செய்வேன்” என்று சுருள்பட்டைகளைக் காட்டினான். பழைய வெண்பசை டப்பாவை அவன் பக்கமாய் நகர்த்தினார். 

குடம் சுமக்கும் பெண்ணை அவர் முடித்துவிட்டு நிமிர்ந்தபோது சசி சருகுகளை ஒட்டிச்செய்த இரண்டு பூக்களை அவரிடம் நீட்டினான். 

“அடடே, ரெண்டு சூரியகாந்தி வந்தல்லோ”. உற்சாகத்துடன் சசியின் தலையைத் தடவினார். 

அரையாண்டு பள்ளி விடுமுறை நாட்கள் முடிகிற சமயத்தில் சசி பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டவும் ஆமை, மயில், குதிரை, சைக்கிள், படகு என சிறிய பொம்மைகளைச் செய்யயும் தங்கப்பன் ஆசாரி அனுமதித்திருந்தார். 

கன சதுரத்திலிருந்த மரக்கட்டையின் மீது சாக்கட்டியால் கோடுகள் வரைந்தார் தங்கப்பன் ஆசாரி. தாளில் செதுக்க வேண்டிய அம்மன் உருவம். நரைமயிர் கலைந்து காற்றில் பறக்க ஆசாரியின் நெற்றியில் திரண்டு நின்றன வியர்வைத் துளிகள். கீழுதட்டைப் பற்களால் கடித்திருந்தார். அருகே அமர்ந்து அவர் கைகளையே கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சசி. 

“இப்ப இது மரத்துண்டு. இதுக்குள்ளதான் இந்த அம்மன் சிலை இருக்க. இப்ப நீ என்ன செய்யணும்?”

பதில் சொல்லாமல் அவரது இடுங்கிய கண்களையே பார்த்தான். 

“இந்த மரத்துண்டுக்குள்ளதான் சிலை இருக்கு. உன் மனசுக்குள்ள கற்பனையில நீ பாத்த அந்த சிலையை மரத்துலேர்ந்து உன் கைதான் தொட்டெடுக்கணும்.”

தங்கப்பன் ஆசாரியின் உளி மரத்துண்டைச் செதுக்கத் தொடங்கியது. அவர் சொன்னது புரிந்ததுபோலவும் இருந்தது, புரியாததுபோலவும். 

“சுலபமா தெரியுதா குட்டி?” உளி மிக மெள்ளத் தட்டிக்கொண்டிருந்தது. 

“ம். அப்பிடித்தான் தெரியுது.” காகிதத்தில் இருந்த சித்திரத்தைப் பார்த்தான்.

“சுலபமா தெரியும். புத்தியில இருக்கறதை கைக்கு வரவழைக்கறது ரொம்ப கஷ்டம். கற்பனையும் கருவியும் ஒன்னாகணும். அதுக்கு நம்ம ஒடம்பாலயும் மனசாலயும் இடம் கொடுக்கணும். அது எப்பிடின்னு கண்டுபிடிக்கறதுதான் சிரமம். யாரும் அதை சொல்லித்தர முடியாது.”

தங்கப்பன் ஆசாரி பேச்சை நிறுத்திவிட்டு கண்களை இடுக்கியபடி உளியைத் தட்டத் தொடங்கினார். மெள்ள மெள்ளத் தலைகாட்டியது அம்மன் சிலை.

*

காற்றில் அசையும் சைப்ரஸ் மரங்களை ஏறிட்டுப் பார்த்தார் தம்பான் சாமி. கையில் அரிவாள். அறுத்துப்போட்ட சீமைப்புல் ஓரமாகக் குவிந்து கிடந்தது. சற்று தொலைவில் இக்லூ போன்ற அமைப்புடன் இருந்த சிறிய வீட்டுக்குள் தலை நுழைத்துப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போனான் விஜயன்.  

“சசி எதுக்கு ஆயாளை அப்பிடி மொறைச்சுப் பாக்குது?”

கையிலிருந்த உளியைக் கீழே போட்டான் சசி. “நேத்து காலையில குரு கேட்ட புக்கை அலமாரில இருந்து தேடி எடுக்க நேரமாயிடுச்சு. அதுக்குள்ள இவன் முந்திரிக்கொட்டை மாதிரி எடுத்துட்டுப் போய் குடுத்துட்டான்.”

“ஆமாம். அவன் குடுத்தப்பறமும் சசி தேடிட்டே இருந்துதே”. தம்பான் கையில் அப்பியிருந்த மண்ணைத் தட்டி உதிர்த்தார். 

“அதுகூடப் பரவாயில்லை. கிளாஸ் முடிஞ்சதுக்கப்பறம் இனிமே லைப்ரரி வேலையை அவனே பாக்கட்டும், நீ பொம்மை செய்யற வேலையைப் பாருன்னு குரு சொன்னதுதான் எனக்குச் சங்கடமா போச்சு.”

தலைமேல் விழுந்த பழுப்பிலையை எடுத்துத் திருப்பிப் பார்த்தார். “சசிக்கு ஞாபகமிருக்கா? அம்மை மரிச்சுப் போயி தங்கப்பன் ஆசாரி இங்க கொண்டுவந்து விட்டபோது இதே மாதிரிதான் இருந்தது சசி. பத்தாம் வகுப்பு பரீட்சைகூட எழுதலை.”

மறுபடி உளியை எடுத்து கையிலிருந்த மரத்தைச் செதுக்கலானான். 

“ஒம்பது வருஷம் ஓடிப்போச்சு. சசி வந்ததுக்கு அப்பறந்தானே இந்த லைப்ரரியே கட்டினது. அப்ப சசி இருந்த மாதிரிதான் இப்ப விஜயனும். அவருக்கு அந்த வேலை சரியா இருக்கும்னு குரு யோசிக்கறாரு.”

“அப்ப நான்?”

தம்பான் சாமி அருகில் வந்து தோளைத் தொட்டார். “சசி ஒரு சில்பியல்லே. செய்ய வேண்டிய காரியம் நெறைய இருக்கு.”

குருகுல வளாகத்தில் அங்கங்கே சசி செதுக்கிய சிற்பங்களைப் பார்க்க முடியும். ஜப்பானிய அம்மையார் தங்கியிருக்கும் குடிலின் முகப்பில் உள்ளது ‘தாயும் சேயும்’ சிற்பம். வெண்கலத்தாலான நாராயண குருவின் சிலைக்கு எதிரில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பெஞ்சுகளுக்குப் பின்னால் துள்ளும் இரு மான்களின் சிற்பம். பிரார்த்தனைக் கூடத்துக்கும் தோட்டத்துக்கும் நடுவில் அகலமான அடிமரத்தின் மீது மண்ணில் வனைந்த குருவின் முகம். விருந்தினர் விடுதியின் வாசலின் இருபுறமும் தொங்கு மீசையும் நீளத் தொப்பியுமாய் வணங்கி நிற்கும் இரு சீனர்களின் சிற்பம். 

துண்டுக் கட்டைகளைக் கொண்டு செதுக்கும் சின்னச் சின்னப் பொம்மைகளைப் பிரார்த்தனைக் கூடத்தில் சிறு ஓலைப்பெட்டியில் போட்டுவிடுவான். யானை, குதிரை, தவளை, அன்னம், புத்தர், சாமுராய், செம்படவன், கால்பந்து வீரன், வேட்டைக்காரன் என விதவிதமான பொம்மைகள். பிரார்த்தனைக்காக வரும் விருந்தினர்களின் குழந்தைகளுக்குப் பொம்மைகளைப் பரிசாகத் தருவார் குரு. பரிசைப் பெற்றுக்கொண்டதும் அந்தக் குழந்தைகளின் கண்களில் பரவசம் மின்னும். ஆவலுடன் ஓலைப்பெட்டியை எட்டிப் பார்க்கும். கூடத்தின் ஓரமாய் நின்றிருக்கும் சசியைக் காட்டுவார் குரு. “உங்களுக்கு என்ன வேணும்னு சசிகிட்ட கேளுங்க. செஞ்சு தருவார்.”

பிரார்த்தனை முடிந்து வெளியில் வரும்போதே குழந்தைகள் சூழ்ந்துகொள்ளும். ‘அங்கிள் எனக்கு டைனோசர் செஞ்சு தருவீங்களா?’, ‘எனக்கு ஸ்பைடர் மேன் புடிக்கும். ஒன்னே ஒன்னு செஞ்சு குடுங்களேன்’, ‘அப்துல் கலாம் செய்வீங்களா?’ அங்கிருந்து புறப்படும் வரை குழந்தைகள் எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கும். மரத்துண்டுகளைக் கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு கவனமாகச் செதுக்கும்போது அவனைச் சூழ்ந்திருக்கும்.

“இதெந்தா புதுசா இருக்கு?”

பசும்புல்லின் வாசனை. மீண்டும் தம்பான் சாமி புல்லை வெட்டத் தொடங்கியிருந்தார். 

“பக்கத்து கிராமத்துலேர்ந்து குருவோட இங்க வெளையாட சாயங்காலம் வருவாங்களே பசங்க? அவங்க ஒரு பேட் வேணும்னு கேட்டாங்க.”

“அது செரி. கிறிஸ்து எப்பிடி வந்திருக்கு? இன்னும் முடியலை போலிருக்கு.” புற்களுக்கு நடுவில் கிடந்த இரண்டு உருண்டைக் கற்களை எடுத்து மரத்தடியில் போட்டார்.

கூர் பார்ப்பதுபோல உளியை உற்றுப் பார்த்தான். கீழே வைத்துவிட்டு கைகளைத் தேய்த்துக்கொண்டான். பதில் சொல்லாமல் நாராயண குருவின் மேல் விழும் வெயில் கற்றைகளைப் பார்த்தான். 

வெட்டிய புல்லைக் குவியலில் சேர்த்துவிட்டு அரிவாளைக் கீழே போட்டார். துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தார். 

ரோஜாச் செடிகளுக்கு நடுவே புல்மேட்டில் தத்திய மைனாவை விரட்டிக்கொண்டு ஓடியது பெஸ்டி. நெற்றி வியர்வையைத் துடைத்தவன் எழுந்து நின்றான். இருவரும் மெல்ல ஓவியக்கூடத்தின் அருகே வந்தனர். பச்சைத் தாமரைகள் போலத் தரையில் அடுக்கடுக்காய் இருந்த கள்ளிகளைக் கடந்து நின்றபோது ஏசுவின் சிற்பம் தெரிந்தது. மேலே நின்றபடியே வெவ்வேறு கோணங்களில் அதைக் கூர்ந்து பார்த்தான். தம்பான் சாமி தரையில் கால்மடக்கி அமர்ந்து ஒரேயொரு முறை பார்த்துவிட்டுத் தாடியை சொறிந்தார். எழுந்து அவன் தோளை அணைத்தபடி அழைத்துச் சென்றார்.  

பிரார்த்தனைக் கூடத்தின் வாயிலிலிருந்து மீண்டும் மணியொலித்தது. 

மாலை பிரார்த்தனைக்கான அழைப்பு. விறுவிறுவென மேலேறினான். குளித்து முடித்துவிட்டு ஈரத்தலையுடன் கூடத்துள் நுழைந்தபோது பிரார்த்தனை தொடங்கியிருந்தது. ஓசைப்படாமல் சுவரோரமாய் கால்மடக்கி அமர்ந்தான். 

மூச்சு சீராகி படபடப்பு அடங்கும் வரையிலும் கண்மூடித் தலைகுனிந்து அமர்ந்திருந்தவன் மெல்ல நிமிர்ந்தான். அசையாது நின்றொளிர்ந்தன மெழுகுவர்த்திச் சுடர்கள். பெரிய வெண்கலப் பிள்ளையார் சிலைக்கு முன்பாக அகலமான தட்டில் புத்தம் புதிய பூக்கள். தூபத்தின் நறுமணம். 

யாரோ உற்றுப் பார்ப்பதுபோல் உணர்ந்தான். வலதுபக்கமாய்த் தலைதிருப்பினான். நேரெதிரில் குரு நித்யாவின் காலடியில் அமர்ந்திருந்தான் விஜயன். கண்களில் அதே அலட்சியம். உதட்டில் உதாசீனப்படுத்தும் சிரிப்பு. 

அதுவரை அவனுள் அடங்கியிருந்த பதற்றம் மெல்ல மேலெழுந்தது. கரகரப்பான குரலில் குரு பேசத் தொடங்கியிருந்தார். 

“நம் எல்லோருக்குமே கண்கள் உண்டு. பார்வையும் உண்டு. இந்த உலகத்திலுள்ள அனைத்தையும் நாம் அனைவரும் பார்க்கிறோம். ஆனால், இந்த உலகம் எல்லோருக்கும் ஒன்றுபோலக் காட்சி தருவதில்லை. ஒரு பாறை எனக்கு வெறும் பாறையாக மட்டுமே தென்படுகிறது. ஒரு மரம் வெறும் மரமாக மட்டுமே என் கண்களில் தெரிகிறது. ஆனால், பாறையில் உள்ள சிலையும் மரத்தில் உள்ள சிற்பமும் ஒரு கலைஞனின் அகத்துக்கு மட்டுமே புலனாகிறது. இயற்கை அவனிடத்தில் காட்டும் கருணை அது.”

பேச்சை நிறுத்தியவர் வெண்தாடியை வருடியபடியே ஆழ்ந்து மூச்சிழுத்தார். ஒருமுறை அனைவரையும் நிதானமாகப் பார்த்தார். அவரது சிறு கண்கள் ஒவ்வொருவரின் மீதும் ஒருகணம் நின்று ஊடுருவியிது. பின் அடுத்தவரிடம் நகர்ந்தது. சசியின் மேல் அவர் கண்கள் நிலைத்தன. உதடுகள் நடுங்க அவரது முகத்தையே பார்த்திருந்தான். நீர் சுரந்த கண்களை மூடிக்கொண்டான்.

மறுபடி கரகரத்த அவர் குரல் ஒலித்தது. “அந்தக் கருணையை உணர்ந்து கலைஞன் தன்னை உண்மையாக ஒப்புக்கொடுக்கும்போது மட்டுமே கலை முழுமைபெறும்.”

சசி தலைகுனிந்திருந்தான். 

பிரார்த்தனையின் முடிவுப் பாடல் ஒலித்து அடங்கியது. கணீரென்ற மணியொலி. அனைவரும் எழுந்து கலையும் அரவம். குரு மெல்ல எழுந்து அன்வரின் தோளைப் பற்றியபடி தன் அறைக்கு நடந்தார். 

அறை வாசலில் நின்று குரு திரும்பிப் பார்த்தார். சசி எழுந்து நின்றான். 

“என்ன சசி, கிறிஸ்து இன்னும் கண் தெறக்கலையா?”

அவன் பதிலை எதிர்பார்க்காதவராய் அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு உள்ளே மறைந்தார்.

1 comment

Kasturi G October 18, 2021 - 6:38 pm

well presented and reinforcing the concept of Karmayoga in lucid style.
Good luck to the author.
Thanks

Comments are closed.