இரவில் ஆந்தைகள் : டி.என்.ஏ.பெருமாள் ஆந்தைகளைப் படமெடுத்த அனுபவம்

0 comment

பன்னர்கட்டாவுக்கு பறவைகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வோம். பன்னர்கட்டாவிற்கு ஐந்து கிலோமீட்டருக்கு முன்பு ஒரு இடத்திலிருந்து தான் காடு தொடங்கும். அந்த கிராமத்தில் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஆந்தை ஒன்று பாறையிலிருந்து பறப்பது தெரிந்தது. அந்தப் பாறையில் ஏறிப் பார்த்த போது ஆந்தையின் முட்டைகள் இருந்தன. படமெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். உயரமான பாறை. பரண் அமைக்க வேண்டும். பக்கத்தில் கிராமத்தினரிடம் சொல்லி பரண் அமைப்பதற்கான மரக்கட்டைகளை ஏற்பாடு செய்தோம். அந்தப் பாறையின் அருகில் அந்த மரங்களை நட்டோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் அதில் இணைக்க வேண்டும். ஒரே நாளில் செய்தால் புதிதாய் ஏதோ ஒன்றைப் பார்த்து ஆந்தைகள் எச்சரிக்கை அடைந்து விடக்கூடும். அத்தனை வேலைகளையும் இரவு நேரத்தில் தான் செய்ய வேண்டும். இரவில் தான் ஆந்தை தன் குஞ்சுகளுக்கு உணவு சேகரித்துக் கொண்டு வரும். கேமராவை பாறையோடு ஒட்டி இருக்கும் மரத்தில் ‘ட’ வடிவத்தில் மரத்தாலான ஒரு கிளாம்பில் பொறுத்தி அதை உறையிட்டு மூடி வைக்க வேண்டும். இரவில் படமெடுப்பதால் கட்டாயம் பிளாஷ் வேண்டும். என்ன செய்வது? ஒரு டார்ச் லைட்டை ஏற்பாடு செய்தோம். ReoStat என்று சொல்லுவார்கள். Resistance light. அதை மேலே மரத்தில் பொருத்தி முதல் நாள் அந்த கூட்டின் மீது மிக மந்தமான ஒளி படுமாறு பொருத்தினோம். ஒவ்வொரு நாளும் அந்த ஒளியின் அளவைக் கூட்டினோம். ஒரே நாளில் பளிச்சென்ற ஒளி விழுந்தால் ஆந்தை கூட்டை விட்டுவிட்டு போய்விடலாம். அதனால் அதற்கு உறுத்தாதபடி ஒளியை கூட்டி அதற்குப் பழக்கப்படுத்தினோம். முழுக்க அந்த ஒளியை விழச் செய்த போதும் கூட அது பகல் வெளிச்சத்தில் பார்ப்பது போன்ற தெளிவுடன் இருக்காது தான். ஆனாலும் வேறு வழியில்லை.

எரிக் ஹஸ்கிங் எடுத்த புகைப்படம். Brand 17 Camera, Tessar Lens, f/36, Slow Luc shutter with High Speed flash 1/10,000th sec, Film P1200

இந்த சமயத்தில் சில விஷயங்களை கவனிக்க முடிந்தது. மாலையில் ஆறரையிலிருந்து ஏழு மணி வரையிலும் அந்தக் கூட்டை காவல் காத்திருக்கும் ஆந்தை. அந்த சமயத்தில் யாராவது கூட்டை நெருங்கினால் ஒரே அடி தான். பலத்த சேதத்தை ஏற்படுத்தும். உலகப் புகழ்பெற்ற பறவையியல் புகைப்படக் கலைஞர் எரிக் ஹஸ்கிங் (Eric Hosking) ஆந்தை தாக்கியதில் தனது ஒரு கண்ணை இழக்க நேர்ந்தது. அவருடைய சுயசரிதையின் பெயர் ‘An Eye for a bird’. அந்தப் புத்தகத்தைப் படித்திருந்ததால் பாதுகாப்புக்கு தலையில் ஹெல்மெட்டெல்லாம் மாட்டிக்கொண்டு சாயங்காலமாய் போய்விடுவோம். அப்படியும் அது தாக்க வந்த சந்தர்ப்பங்கள் உண்டு. விரட்டி விடுவோம். எப்போதுமே ஆந்தைகளைப் படமெடுப்பது மிகவும் அபாயமானது தான். பன்னர்கட்டா அப்போது அடர்த்தியான காடு. பக்கத்து கிராமத்தில் பெய்யப்பா என்று ஒருவர். அவரையும் அழைத்துக் கொண்டு போய் வேலைகளை செய்வோம். இரவு பத்து மணி வரைக்கும் தொடரும். பிறகு அவர் வீட்டுக்குப் போய் விடுவார், நாங்களும் திரும்பி வந்துவிடுவோம். அவருக்கு ஒரு மகன். ரவி என்று பெயர். சில நாட்களில் பெய்யப்பாவிற்கு முடியவில்லை என்றால் ரவியை அனுப்பி வைப்பார். ராத்திரி நேரத்தில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவன் நிறைய கதைகள் சொல்லுவான். பேய்க் கதைகள், அந்தக் காட்டில் நடந்த கொலைகள் என்று எல்லாமே பயங்கரமாயிருக்கும். அந்தப் பகுதியில் அதுபோல பார்த்தும் கேட்டும் அவனுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் எங்களுக்கு பயமாக இருக்கும்.

அப்போது ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையில் இரவில் பறக்கும் ஆந்தையொன்றின் புகைப்படம் வெளியாகியிருந்தது. உடனே அந்த புகைப்படக் கலைஞருக்கு எப்படி இந்தப் புகைப்படத்தை எடுத்தீர்கள் என்று கேட்டு கடிதம் எழுதினேன். அவரும் உடனே வரைபடங்களுடன் பதில் எழுதினார். சரி நாமும் அதே போல செய்யலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அவர் உபயோகித்த உபகரணங்கள் எல்லாம் இங்கே கிடைக்க வாய்ப்பில்லை. ரேடியோ இன்ஜினியரிங்கில் எனக்கிருந்த அனுபவம் கைகொடுத்தது. பிளாஷ் லைட்டை கேமராவுடன் இணைத்தேன். அந்த வெளிநாட்டுக்காரர் Photo diode உபயோகித்திருந்தார். நான் Light Emitting Resister ஐ உபயோகித்தேன். இதையெல்லாம் ஒன்றிணைத்து பரிசோதித்துப் பார்த்தேன். வேலை செய்தது. அதையே அந்த இடத்திற்கும் கொண்டு சென்று ஹசல்பிளேடு ஈ எல் கேமராவுடன் பொருத்தினேன். அங்கேயும் வேலை செய்தது. கோடை காலத்தில் ஏப்ரல் மே மாதங்களில் இது நடந்தது. மேலே ஏறி விளக்குகளைப் பொருத்தி மறுபக்கமாய் Receiever மற்றும் transmitter-ஐ கேமராவுடன் இணைப்பது என்று எல்லா வேலைகளையும் சர்க்கஸ் மாதிரி அந்த உயரத்தில் நின்று கொண்டு செய்ய வேண்டும். பாறையில் தாவி ஏறி, பரணில் எல்லாவற்றையும் இணைத்து சரிபார்க்க வேண்டும். எல்லாம் ஒழுங்கு செய்துகொண்டு கீழே காத்திருக்க வேண்டும். அப்போது கதிர்களை ஏதேனுமொன்று கடக்கும்போது ஒளி தானாகப் பளிச்சிடும் (ஆட்டோ கட் ஆப்) வசதிகள் கிடையாது. கீழே இறங்கிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பிளாஷ் ஆகியது. இரண்டு மூன்று முறை பிளாஷ் ஆகியது. எட்டு மணி வரையிலும் காத்திருந்து விட்டு வீட்டிற்கு எடுத்துப் போய் டெவலப் செய்து பார்த்தால் ஒரு படத்தில் ஒரு ஓரமாய் ஆந்தையின் றெக்கை மட்டும் இருந்தது. இன்னொரு படத்தில் ஒரு இலை.

நான் உபயோகித்த இந்த முறையில் ஒரு டார்சிலிருந்து வெளிச்ச கற்றை செலுத்தப்பட்டிருக்கும். மறுபக்கமாய் ஒளிவாங்கி (Receiver). வெளிச்சக் கற்றை ஏதேனும் ஒரு குறுக்கீட்டால் தடைபட்டால் கேமரா இயங்கி படம் எடுக்கும். இதுதான் ஒளிக்கற்றையைக் கொண்டு படமெடுக்கும் உத்தி (Light Beam Method). அந்த வெளிநாட்டு புகைப்படக்காரர் சொல்லியிருந்தபடி, எனக்குக் கையில் கிடைத்த உபகரணங்களை வைத்து எல்லாம் சரியாக வந்தது. ஆனால் படம் சரியாக அமையவில்லை. மீண்டும் எப்படி இதைச் சரி செய்யலாம் என்று யோசித்தேன். வெளிச்சம் தடைபட்டதும் தாமதமின்றி கேமரா இயங்க வேண்டும். ஆனால் நான் உபயோகித்த முறையில் சில நொடிகள் தாமதமாகவே இயங்கியது. அதனால் தான் பறவையை முழுமையாகப் படம் பிடிக்க முடியவில்லை. ஆந்தை வரும் கோணம், அது கூட்டை நெருங்கும் விதம் இவற்றையெல்லாம் கவனித்து இன்னும் சில மாற்றங்களை செய்தேன். தினம் தினம் தொடர்ந்து முயற்சித்து மாற்றங்களை செய்து கொண்டேயிருந்தேன். ஏனென்றால் இதற்கு முன்பு யாரும் இதை முயன்றதில்லை. தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பரீட்சார்த்தமாக முயன்று தான் சரி செய்ய வேண்டும். தினம் தினம் வெவ்வேறு விதமான பிரச்சினைகள். காடு முழுக்க இருட்டாக கிடக்க இந்த ஒரு இடத்தில் மட்டும் வெளிச்சம். இதனால் ஏராளமான பூச்சிகள். இந்தப் பூச்சிகள் ஒளிக்கற்றையில் குறுக்கிடும்போதும் பிளாஷ் ஆகி கேமரா இயங்குகிறது. இப்படி பிளாஷ் ஆகும் போதும் கேமரா இயங்கும் சத்தத்தைக் கேட்டும் காவலுக்கு இருக்கும் ஆந்தை பயப்படுகிறது. இதெல்லாமே பிரச்சினை தான்.

அந்த சமயத்தில் கோவையில் ஒரு கருத்தரங்கத்திற்காக சென்றிருந்த போது போட்டோ சென்டர் மருதாச்சலத்திடம் இந்த பிரச்சினைகளைப் பற்றி சொன்னேன். Infra Red filter ஒன்றை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். ஒரு வாரத்தில் அந்த உபகரணம் கைக்கு வந்தது. உடனே அதை எடுத்துக்கொண்டுபோய் பொருத்தினேன். இப்போது ஒளி ஊடுருவுவது நமக்கும் தெரியாது, பறவைக்கும் தெரியாது, பூச்சிகளுக்கும் தெரியாது. இதைச் செய்த பிறகு படங்கள் ஒழுங்காக வந்தன. இதற்காக கோடைகாலம் முழுக்க தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் நாங்கள் வேலை செய்ய வேண்டி இருந்தது.

இதே காலகட்டத்தில் அந்த ஆந்தைகளும் நம்முடைய நடவடிக்கைகளை கண்டு கொண்டு நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டதை கவனிக்க முடிந்தது. மாலை நேரமாகிவிட்டால், ஆட்கள் வருவதும் பிறகு பிளாஷ் ஆவதையும் அறிந்து கொண்டு, அந்த ஆந்தைகள் பறந்து வராமல் பாறை மீது உட்கார்ந்து அப்படியே சரிந்து கூட்டை நோக்கி உள்ளே போயின. இப்படி சரிந்து போவதால் ஒளிக்கற்றை தடைபடாமல் பிளாஷ் ஆகாமல் இருந்தது. ஆனாலும் ஒரு முறை விரிந்த இறக்கைகளுடன் அது உள்ளே சரியும்போது அதனுடைய நுனி ஒளியை தடைபடுத்தியதில் ஒரு நல்ல படமும் போனஸாக கிடைத்தது. கிட்டத்தட்ட ஆந்தைகளுடன் செஸ் ஆடியது போலத்தான் இருந்தது அந்த அனுபவம். நாம் ஒன்றைச் செய்யும் போது அதிலிருந்து தப்புவதற்காக அது ஒருவிதமாக செயல்படும். அதை எதிர்கொள்ள நாம் வேறு உத்திகளை யோசிக்கவேண்டி இருந்தது.

பறந்தபடி இறங்கும் ஆந்தைகளை மட்டும் படமெடுத்தால் போதாது. குஞ்சுகளுக்காக எலிகளைக் கவ்விக் கொண்டு திரும்பும் ஆந்தையை படமெடுக்க வேண்டும், படத்தில் குஞ்சுகளும் இடம் பெற வேண்டும் என்று யோசித்து மொத்த அமைப்பையும் வேறொரு கோணத்தில் மாற்றி பரிசோதித்துவிட்டு அமைத்தேன். இப்போது எலியுடன் பறந்திறங்கும் ஆந்தை, அதை ஆவலுடன் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் குஞ்சுகள் என்று பிரமாதமான படம் கிடைத்தது. நிறைய நாட்களாகும். பொறுமையாக இருக்க வேண்டும். பலன் நிச்சயம் கிடைக்கும்.

அதேபோல சாலையோரத்தில் ஒரு நாவல் மரத்தில் 25 அடி உயரத்தில் ஒரு பொந்தில் Mottled hood Owl என்று சொல்லக்கூடிய ஆந்தை இருந்தது. அது கத்துவது ஆட்டுக்குட்டி கத்துவது போல அல்லது குழந்தை கத்துவது போல இருக்கும். இந்தக் கூட்டிற்கும் Barn Owl கூட்டிற்கும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இது இங்கிருந்து கத்த அந்த ஆந்தை அங்கிருந்து பதில் குரல் எழுப்பும். இந்த ஆந்தையை எனது குரு எட்வர்ட்ஸ் படம் எடுத்திருந்த போதும் அது அசைவற்ற ஒரு கோணமே (Static Pose). அதனால் இதையும் எப்படியாவது படம் எடுத்துவிட வேண்டும் என்று முயற்சித்தேன். நிறைய சர்க்கஸ் வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 25 அடி உயரத்திலிருந்த பொந்திலிருக்கும் ஆந்தையை படமெடுக்க வேண்டி பக்கத்து கிராமத்திலிருந்து ஏணியெல்லாம் வாங்கி பக்கத்து மரத்தில் கட்டி ஏற்பாடு செய்தேன். ஆனாலும் ஒழுங்காக படமெடுக்க முடியவில்லை. கூடுகளில் இருக்கும் பறவைகளை படமெடுக்கும் போது, அந்தக் கூட்டை முழுமையாக பார்க்கும் படியான வசதியான இடத்திலிருந்து படமெடுத்தால் தான் சிறப்பாக இருக்கும். சரிவராததால் கூட்டிற்குத் திரும்பும்போது எடுக்கலாம் என்று அதற்குத் தகுந்தாற் போல பரண் அமைத்துக் காத்திருந்தேன். இப்போது படம் எடுக்க முடிந்தது. அந்த ஆந்தை வெளவாலைக் கவ்விக் கொண்டு கூட்டிற்குத் திரும்பும் காட்சி.

ஒரு ஆந்தை ஒரு இரவில் கூட்டிற்கு எத்தனை முறை வந்து போகிறது என்று கணக்கிட்டேன். குஞ்சுகள் சிறியதாக இருக்கும் போது ஒரு எலியை ஒரு முறை கொண்டுவந்தால் அதுவே அந்த எலியை துண்டுகளாக்கி குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுகிறது. அப்போது ஒன்றிரண்டு தடவைகள் தான் வந்து போகும். குஞ்சுகள் பெரிதாக பெரிதாக இரையின் தேவையும் அதிகமாகி விடுகிறது. இதனால் பல முறை வெளியில் சென்று இரையை கொண்டு வரவேண்டி இருக்கிறது. காற்றடிக்கிற காலத்தில் அது வெளியே போவதைத் தவிர்த்து விடுகிறது. காரணம் எலிகள் வெளியே வராது. சாயங்காலம் ஆறரை அல்லது ஆறே முக்கால் மணியளவில் காவலுக்கு உட்கார்ந்திருக்கும் ஆந்தை ஒரு குரல் எழுப்பும். நான் வேட்டைக்குப் புறப்படுகிறேன் என்று தகவல் சொல்கிறது. புறப்பட்டுபோய் கொஞ்ச நேரத்தில் அங்கிருந்தே ஒரு சத்தம். இரை கிடைத்து விட்டது என்ற உற்சாகத்துடன் தகவல். ஏழு மணிக்கெல்லாம் முதல் இரை வந்துவிடும். நாம் காலையில் தேநீர் அருந்துவதைப் போல. பிறகு ஒன்பது மணி வரைக்கும் ஒன்றும் இருக்காது. பிறகு மறுபடி குரல் எழுப்பிவிட்டு புறப்பட்டுப் போகும். இரை கிடைத்தவுடன் ஒலி எழுப்பிவிட்டு மீண்டும் கூட்டுக்குத் திரும்பும். இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். பெருச்சாளி போன்ற பெரிய இரை கிடைக்கும் போது மொத்தத்தையும் அது கூட்டுக்குக் கொண்டு வருவதில்லை. அந்த பெருச்சாளியில் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை அங்கேயே கல் இடுக்கில் மறைத்து வைத்துவிட்டு வருகிறது. மறுநாள் மாலையில் முதலில் புறப்பட்டு போகும் போது அந்தக் கல் இடுக்கில் உள்ள பெருச்சாளியின் பாதியை தேடி எடுத்து வந்து கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு தந்துவிட்டு போகின்றன. வருகிற வரையில் இதை சாப்பிடு என்பது போல. Mottled Hood Owl பலமுறை ஓணாண்களை கவ்விக் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். இரவில் ஓணாண்களை இவை எப்படி பிடிக்கின்றன என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம். சில முறை மட்டுமே எலிகளையும் வெளவால்களையும் பிடித்திருக்கின்றன. அதுவே Horned Owl அதிகமாக பிடிப்பது எலியை மட்டுமே. ஓணாண்களையோ, வெளவால்களையோ அது பிடிக்கவில்லை. ஒன்றிரண்டு முறை மட்டுமே முயல்களைக் கவ்வி வந்திருக்கின்றன. காட்டெலிகள், பெருச்சாளிகள் கூட. இதெல்லாமே அந்தந்த பகுதியின் அறுவடை காலங்களை பொறுத்து அமைகின்றன. இந்த அறுவடைக் காலமும் ஆந்தைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலமும் ஒத்துப் போகின்றன. இதை ஒளவையார் ஒரு பாடலில் சொல்லியிருப்பதை அறிந்தேன். ”அறுவடை காலம் வந்தால் ஆந்தைகளுக்கும் ஆனந்தம்” என்று பாடியிருப்பதாய். ஆனால் அது எந்தப் பாடலில் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மனிதர்கள் இந்த ஆந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. ஒருநாள் அந்தக் காட்டுக்குள் போன போது அந்த குறிப்பிட்ட நாவல் மரத்தில் ஆந்தையைப் பார்க்க முடியவில்லை. எப்போது போனாலும் ஒரு ஆந்தையாவது உட்கார்ந்திருக்கும். பறவையைக் காணவில்லை என்றதும் என்னுடன் வந்திருந்த என்னுடைய மகன் நட்ராஜனிடம் மரத்தில் ஏறி பார்க்கும்படி சொன்னேன். மேலே அந்த பொந்தில் ஆண்டனா போன்ற ஒரு குச்சி பொருத்தப்பட்டிருந்தது. அதன் மீது பசை போன்றதொரு பொருள் தடவப்பட்டிருந்தது. ஆந்தை வந்து அதன் மீது உட்கார்ந்ததும் கால்கள் ஒட்டிக்கொண்டு பறக்க முடியாமல் ஆகிவிடும். பிறகு பறவை பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். மாந்திரீகத்திற்கு உபயோகிப்பதாக சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஆண்டனா போன்ற அமைப்பை படம் எடுத்திருக்கிறேன். பிறகு ஆந்தையை அப்படிப் பிடித்த அந்த கிராமத்து ஆளையும் பிடித்து விட்டோம். நாங்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போது அவன் தூரத்தில் உட்கார்ந்து எங்களையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனை வரவழைத்து விசாரித்தபோது உண்மை தெரிந்தது. நான் காக்கியில் உடுப்பு அணிந்திருந்ததால் என்னை காட்டிலாக்கா அதிகாரி என்று நினைத்து எல்லாவற்றையும் சொன்னான். அவனை எச்சரித்து அனுப்பிவிட்டோம். அந்த குச்சியை எடுத்துக்கொண்டு அவன் போய்விட்டான். இரண்டு நாள் கழித்து பார்த்த போது பறவைகள் மறுபடி அந்த மரத்துக்கு வந்திருந்தன.

இவ்வளவு காலம் சிரமப்பட்டு, பல்வேறு முறைகளை யோசித்துக் கையாண்டு எடுத்த ஆந்தையின் படங்கள் பல பரிசுகளை பெற்றுத் தந்திருக்கின்றன. பரிசுகளும் விருதுகளும் ஒருவிதமான உற்சாகம் தரும் விஷயம். எப்போதுமே இத்தகைய பாராட்டுகளின் போது வெற்றி பெற்றவை மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அந்த வெற்றிக்கு பின்னால் எத்தனை முயற்சிகளும், தோல்விகளும் இருந்தன என்பது தெரியாமலே இருக்கும். தொடர்ந்த முயற்சியும் தோல்வியடையும் போது துவண்டு போகாமல் மேலும் தீவிரமாக முயற்சி செய்யும் போதுதான் அதற்கான பலன் கிடைக்கிறது.

டி.என்.ஏ.பெருமாள் எடுத்த புகைப்படங்களுள் சில: