“To speak of music is to foster an illusion, a “category mistake” as logicians would put it. It is to treat music as if it was or was very close to natural language. It is to transfer semantic realities from a linguistic to a musical code. Musical elements are experienced or classified as syntax; the evolving construct of a sonata, its initial and secondary “subject” are designated as grammatical. Musical statements (itself a borrowed designation) have their rhetoric, their eloquence or economy. We incline to overlook that each of these rubrics is borrowed from its linguistic legitimacies. The analogies are inescapably contingent. A musical “phrase” is not a verbal segment.” ( George Steiner, The Poetry of Thought, 2011)
இசையைப் பற்றி மொழியின் மூலம் விவரிப்பதே ஒரு மாய பிம்பத்தைத் தெரிந்தே வளர்ப்பது என்கிறார் இந்த மேற்கோள் பகுதியில் ஜியார்ஜ் ஸ்டீனர். அளவையியல் வல்லுநர்கள் கூறுவதற்கேற்ப ‘துறை பிறழ் தவறு’ என்று ஆகிவிடுமாம் மொழிக் கூறுகளால் இசையின் அனுபவத்தைப் பேசுவது. கிளவியாக்கத்தின் கூறுபாடுகளைக் கொண்டு போய் கீதம் மிழற்றும் இன்னிசை உருவுகளுக்குப் பொருத்துவது என்பது வேலி தாண்டிக் குதித்து சொற்களைக் கடத்திப் பொருத்தும் வேலை என்று ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லாமல் விவரிப்பு என்ற முறையில் கூறுகிறார். இன்னிசையின் வாக்கியங்கள் என்று சொல்வதே கடன் வாங்கி ஒட்ட வைத்த ஜோடனை என்றாலும், இன்னிசையின் வாக்கியங்களுக்கு என்று ஒரு பேச்சு, ஒரு ஆவேசப் பொழிவு, ஒரு வேகச் சிக்கன நெறி இருக்கத்தான் செய்கிறது. ஆக மொத்தம் அவர் சொல்ல வருவது ’ஓர் இன்னிசை சொற்கோவை என்பது மொழித்தன்மையான பகுதி அன்று’ என்பதேயாகும். இருந்தாலும் இன்னிசையைப் பேசுவதும் ஓர் இனிய சுகம்தான். அதுவே ஒரு துறைதான் என்பது என் எண்ணம்.
கொஞ்ச நாள் வாய்ப்பாட்டுடன் ஹார்மொனியமும் கற்றுக்கொண்டேன், ஒரு பாட்டு வாத்யாரிடம். சிறு வயதில், தந்தையின் ஏற்பாட்டில். அப்பொழுதெல்லாம் அந்த வாத்யார் ஸ்வரக் கட்டைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்துப் பிரமிப்பாய் இருக்கும். ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்குப் போகும் போதோ அல்லது ஒன்று விட்டு ஒன்றுக்குத் தாவும் போதோ இரண்டு ஸ்வர வீடுகளும் கூடவே வந்து பிரிவுபச்சாரம், வரவேற்பு விருந்துபச்சாரம் இரண்டையும் ஒரே சமயம் கலந்து செய்வது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்து வாசிப்பார். அடேயப்பா…என்று ஒரு மலைப்பு. நானும் கொஞ்சமாக அதைப் போல் முயற்சி செய்தால் அது குளிரில் நடுங்கும் கிழவியின் சொற்கள் போல் அலையலையாக வந்து கடுப்படிக்கும். அவர் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் போகப் போக கைவரும் என்பார். அந்தத் தான்சேனுக்கு நான் ஒரு மஹாராஜா.
சிறு வயதில் பிரமிக்கும் ஒன்று விழிப்பு ஏற்பட்டதும் எப்படி விரஸமாகக் காட்சியளிக்கிறது! அவர் வாசித்த முறை எப்படியென்றால் ஸ்வரங்கள் எல்லாம் நன்றாக மொந்தைக் கள்ளைக் குடித்துவிட்டு, ‘அண்ணாச்சி….நீ தனியாவே போகக் கூடாது..ஆமா சொல்லிட்டேன்…’ என்று கட்டித் தழுவி, தடுமாறி இழைந்து நெளிந்து குலாவுவது போன்ற வேலை. It is a mart of doping the notes. அதுவும் ஹார்மொனியத்தில் இது போன்ற சில்லறை வேலை நன்றாகவே செய்யலாம். அது போல் வாய்ப்பாட்டிலும். ஆனால் தூய ஸ்வர தேவதைகளின் அழகிய உடலை, அந்தத் தேவதைகள் சப்தம் என்னும் நதியில் பிறந்த மேனிக்குக் குளிக்கும் போது மர இடுக்களிலிருந்து ஒளிந்து பார்க்கும் சாகசங்களைப் பார்ப்பதுதான் இசையில் நாம் பெறும் மகோன்னதம் என்ற எண்ணம் எனக்குப் பின்னர்தான் ஏற்பட்டது.
அயின்ரேன்டின் நாவல்களில் தோய்ந்த பின்னர்தான் இந்த எண்ணம் மேலும் வலுப்பெற்று என்னிடம் ஒரு பார்வையாகவே ஆகியது. நானும் இந்த ஸ்வர தேவதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவர்கள் காடுகளில் திரியும் போது, அருவிகளில் சுதந்திரமாகக் குளிக்கும் போது காணும் வாய்ப்பு கிட்டாதா என்று யோசித்ததுண்டு. ஆனால் நான் பார்க்க நேர்ந்த இசையெல்லாம் ஒரே ஸ்வரக்கட்டு கிட்டங்கியாக அங்கப்ரதக்ஷிணம் கணக்காக உருண்டனவேவொழிய நிற்கக் கூட இசையின் கொழுந்துகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்பது போல் பட்டது.
ஆனால் ஸ்வர தேவதைகள் காட்டின் ஆழத் தனிமையில், பொங்கும் ஒலி வெள்ளத்தில், ஒளிரும் முழுத் திருமேனிகளுடன், அந்தத் திருமேனிகளின் பூரித்த அத்தனை லாவண்யங்களுடனும் குளிப்பதை ஒரு சமயம் தர்சனம் செய்யத்தான் செய்தேன். அது எப்பொழுது எனில் ஸெர்கெய் ரஹ்க்மனினோஃப் (Sergei Rachmaninoff) அவர்களின் இசை ஊழியில் தான். அவருக்கு முன்னால் பிதாமகர் ச்ட்செய்கோவ்ஸ்கி போன்றவர்களும் உண்டு. ஆனால் வியாசரைப் பார்த்தால் அப்சரசுகள் குளிக்கும்போது தங்களை மூடிக்கொண்டது போன்று ஸ்வரங்கள் அவர்களிடத்தில் எல்லாம் always in attire. ஆனால் படுபாவி, ரஹ்க்மனினோஃப் விஷயத்தில் என்றால் அந்தத் தேவதைகள் எல்லாம் சுதந்திரமாக, சுய ரூபத்தில் முழுமையாகத் திரிகின்றன.
ரஷ்யாவின் செவ்வியல் இசை மரபு என்பது கிராமிய இசையில் ஊற்றம் கொண்டு எழுந்த இயல்பான வளர்ச்சி. கிளிங்கா அவர்களின் காலம் தொடக்கமாக ஐரோப்பிய செவ்வியல் இசையில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. கிளிங்காவிற்குப் பின் பலர் செவ்வியல் இசையின் ஆலமரங்களாய்த் தொடர்ந்தனர். அந்த மரபில் ச்டெய்க்கோவ்ஸ்கி அவர்களுக்கு ஓர் தனி இடம் உண்டு. அவரது பயானோ முதலிய வாத்யங்கள் மூலமான இசை மொழியின் ஆழங்களால் ஈர்க்கப்பட்ட ரஹ்க்மனினோஃப் 1917ல் ரஷ்யா விட்டுக் கிளம்பு முன்பே தமது மகத்தான படைப்புகளை யாத்துவிட்டார். அமெரிக்கா அவருக்குப் புகல் நாடாக உதவியது, பெவர்லி ஹில்ஸில் அவர் இறுதி நாட்கள்வரை. ரஷ்யாவின் இசை மரபு விமரிசகர்கள் அவரின் படைப்புகளைப் பெரிதும் குற்றம் கண்டே எழுதினர். மென்மையான மனம் கொண்ட ரஹ்க்மனினோஃப் மிகவும் மனம் உடைந்தார். தன்னை உளவியல் சிகிச்சை மூலம் அடுத்த படைப்புகளைத் தர உதவிய மருத்துவருக்கே தமது மீண்டு வந்த இசை யாப்பை அர்ப்பணித்தார். அவரது இசையில் எப்பொழுதும், சொல்லவரும் அரட்டை குறைவாகவும், உணர்த்தவரும் ஸ்வரங்களின் தூய பிரஸன்னம் அதிகமாகவும் இருந்த இயல்பால் இன்றும் அவரது இசை ஆதி நாதத்தில் குளித்து வந்த புத்துணர்ச்சியை நமக்கும் கடத்த வல்லதாகிறது.
ரஹ்க்மனினோஃப் அவர்களின் ஸிம்ஃபொனி எண் 2, ஈ மைனர், ஓபஸ் 27 என்பது அவர் யாத்த சூழ்நிலையையும், முதன் முதலில் அந்த ஸிம்ஃபொனி மாஸ்கோவில் அடைந்த வரவேற்பையும் பற்றி நிகோலை பஷனோவ் தமது நூலான ‘Rachmoaninov’ என்பதில் அருமையான விவரணை தருகிறார். இசைக்கான உரைநடையையே மேற்கத்திய இசை தத்துவ இயலாளர்கள் வளர்த்துள்ளனர். அந்த விவரணைகளைக் கொஞ்சம் தமிழில் தர முயற்சி செய்கிறேன்.
”26ஆம் தேதி ஜனவரி 1908ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஸிம்ஃபொனி 2 வழங்கப்பட்டது. மூன்றாவது ஒத்திகையும் முடிந்து இசை யாத்தவர் தமது இசையீன் குழவியைத் தந்த உடனே சென்றுவிட்டார். மாஸ்கோ என்ன சொல்லுமோ என்று எதிர்பார்ப்பு. ஆனால் மாஸ்கோவும் அவருக்காகக் காத்துக் கொண்டு தான் இருந்தது. பழைய தலைமுறைகள் போய்விட்டன. புதிய இளைய தலைமுறைகள் புதிய ஆர்வத்தின் தொனிகளை வெளிப்படுத்தினர்.
நேரே வந்தார் இசை அரங்கிற்கு ரஹ்க்மனினோஃப். இதயம் கொஞ்சம் அடித்துக் கொண்டது. ஆனால் உள்ளே நுழையும் போதே அவரால் உணர முடிந்தது கூடியிருந்த உள்ளங்கள் அனைத்தும் இதயத் துடிப்பில் ஒத்திசைத்தன என்று!
இலாகவமான ஓர் உடல் வணக்கம் செய்து விட்டுத் தொடங்கினார். சட்டென்று திரும்பி வாத்ய அணிவரிசையைப் பார்த்தார். ஒரே சில்லென்ற அமைதி. அவருடைய உடல், நெடிய அந்த உருவம் உறைந்தது ஒரு கணம். கைகள் இசைக்குறிப்புகள் மயமாயின. முதல் இசைக் குறிப்பு அவருடைய கைகளில் முகிழ்த்தது.
ஆழ்ந்த நிதானத்துடன் அமைதியின் விக்கல்களாய் செல்லோக்கள் தொடங்கின. கீழ்ஸ்தாயியில். திடீரென்று ட்ரம்பட்டுகளின் முழக்கம், பிரெஞ்சு ஊது குழல்களின் எக்காளம் மன்றத்தில் வெடித்தன. மொத்த ஊழி இசையும் சேர்ந்து கூரையில் கீழே தொங்குவது போன்ற பிரமை உள்ளே காற்றில் எங்கும் அப்பிக் கிடந்தது.
ரஹ்க்மனினோஃப் விட்டுப் பிடிக்கத் தெரிந்தவராய் இருந்தார். கை அபிநயங்களில் கச்சிதம். அவரது கையசைவுகளோடு சேர்ந்து மொத்த வாத்ய அணிகளும் மூச்சிழுத்து விட்டுப் பழகின. வாத்யங்கள் மட்டுமா? அவற்றோடு சேர்ந்து எண்ணற்ற இசைப் பிரியர்கள் ஹாலில், அவர்களுடைய உள்ளங்களும் ஊக்கங்களும் அவரோடு எழுந்து அவரோடு மயங்கி முயங்கின. அவர்களை எதுவுமே அச்சுறுத்த முடியாது என்றுதான் பட்டது. எதுவுமே, சூறைக் காற்று ஓலமிட்டால் என்ன, இடிகள் குழல் வேட்டுகளாய் உடைந்தால் என்ன, ட்ரம்பட்டுகளின் உயிர் உறைந்துபோகும் போர் ஓலம் கேட்டால் என்ன, உயர எழும் குளம்படிகள், பூட்ஸ் குதிகால் படுஓசைகள் படியாய் எழுந்தால் என்ன, எதுவும் பொருட்டில்லை.
வயல்வெளிகளில், காற்று வீசும் இரவுகளில் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே மக்கள் அவரை இசையில் மனத்தால் பின் தொடர்ந்தனர்.
இசையின் இந்த மந்த கதி மயங்கும் கட்டத்தில் இசையின் நடைபெயர்வு கண்ணுக்கே புலனாகிறது போன்ற ஒரு தோற்றரவு! ஒவ்வொரு முகிழ்ப்பிலும் விருப்பமின்றிப் பிரியும் ஒரு சிணுங்கல் தயக்கத்துடன், ஒவ்வொரு இசைச் சங்கதியும் அதிஅற்புதமான இசையின் மொத்த நெசவில் பின்னிப் பிணைந்து அந்தச் சுடரும் நிறங்களுடன், தழல் கொண்ட அந்த இங்கிதத்துடன்…..அப்படியே இசை, சிறுகச் சிறுக ஓய்வது போல் உள்ளொடுங்க….கிளாரினட் திடுமென்று சில்மிஷம் போல் கொஞ்சும் குரலில் சிந்து பாட, மூலையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி, கருநீல ஆடையில், தன்னை மறந்து மகிழ்ச்சியில் துள்ளிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
ரஹ்க்மனினோஃப் அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம். தன் ஆசான்களில் ஒருவரான அந்த செர்கி இவானோவிச் தனயெவ் வருவாரா? நுழைவுச் சீட்டு அனுப்பி வைத்தாயிற்று. ஆனால் தான் போய் நேரில் கூப்பிட நேரம் இல்லாமல் போனது. இல்லை வரமாட்டார்.
கண்ணுக்குப் பக்கத்து ஒளியும் காரிருளும் கலந்து மறைத்த கலவைக் காட்சியினூடு ஆஹா வாசலில் வந்து நிற்பது தனயெவ் அவரேதான். வந்து அழைத்து அமரச் செய்கின்றனர். ஒரு கணம் கண்கள் சந்தித்தன. கோபம் இல்லை. பெருமிதம். பேரானந்தம் அவரது கண்களில் மிளிர்ந்தது. கண்ணீரில் நெளியும் மின்னலாய்.
விமரிசகர்கள் எழுதினர்: ‘ஸெர்கெயின் இந்த ஸிம்ஃபொனி மறுமை உலகங்களையோ, அதிமானுட திறப்புகளையோ பற்றிய ஆவேச ஊக்கங்களாய் இல்லாமல் ஓ எவ்வளவு புத்தம் புதிய, இயல்பான, இயற்கையான தூய எழிலாய் ஒளி விடுகிறது!’
ஆம் அவர்தம் இசைமொழி உள்ளதைப் பேசியது; உள்ளதை மட்டுமே பேசியது.