அகம் சுட்டும் முகம் (பகுதி 1): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

தபலா அய்யப்பனுக்குள் இருப்பது என்னவாக இருக்கும் என்கிற யோசனை விட்டபாடில்லை. நான் முதன்முதலில் பார்த்த கே.ஜி.ஜார்ஜின் படம், ‘யவனிகா’தான். பரத் கோபி வருவார், போவார், யாருடனும் இணக்கமில்லை. முறைப்பும் உறுமலுமாக அவரை எங்கேயும் இருக்கவிடாமல் செய்து, குடி தினங்களால் தன்னையே விரட்டிக்கொண்டிருக்கிற அவன் யார்? ஒரு முறை பார்த்த படம், அடுத்த முறை பார்த்து இன்னும் சற்று விளங்கிக்கொள்ளும் வரையில் எனக்குள் ஒரு தழும்பு போலவே கிடந்தது. ஜார்ஜ் நல்ல படம் எடுப்பவர் அல்ல, யாரையும் பாதிக்கிற படம் எடுக்க விரும்பினவர்.

ஸ்வப்னாடனம் படப்பிடிப்பில் நடிகை ராணி சந்திரா

1976-இல் அவர் தனது முதல் படத்தை எடுக்கிறார். ஸ்வப்னாடனம் என்பது படத்தின் பெயர். படம் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியினரைப் பற்றியது. அவர்களுக்குள் நல்லிசை கூடவில்லை. அபஸ்வரம் தொனிக்கிறது. முதலில் நாம் தனது பணச் செருக்கில் இருந்து அலட்டிக்கொள்ளுகிற படத்தின் நாயகியை சந்தேகம் கொள்ளுவோம். வழக்கமான சினிமாவைப் பார்க்கிற மனநிலையில் இருந்து ஜார்ஜ் நம்மை நகர்த்தும் தோறும், நமக்குப் படத்தில் இருந்து அகல முடியாமலும், அதே நேரம் எதையும் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாததின் அலுப்பு தோன்றியவாறும் நம்மை அலைக்கழிப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஜார்ஜ் தன்னுடைய திரைக்கதையில் உண்மைக்கு வந்துசேருவார். அது அவ்வளவு சரியான இடம். நாயகனே தனது முந்தைய காதலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போவான். மிகச்சிறிய ஒற்றை வரி மட்டுமே அது. ஆனால் அதற்குப் பிறகு நமக்கு விளங்கத் துவங்குகிற படத்தின் வேகமே வேறு. என்ன பழுது பார்த்தாலும் சீராகாத உடைவு அவனுக்குள் இருக்கிறது. அவன் காப்பாற்றி வந்த நார்மல் சும்மா. அவன் அவனை மீறி எரிந்துகொண்டிருந்த நெருப்புடன் அன்றாடங்களில் புழங்கிக்கொண்டு இருந்திருக்கிறான்.

நான் இப்படத்தைப் பற்றி பேசுவதற்காக எதையும் சொல்லி வரவில்லை.

ஜார்ஜ் எந்தக் காலத்தில் இம்மாதிரி கதைகளுடன் புறப்பட்டார் என்பது முக்கியம்.

அப்போது நிலவிவந்த சூழல் எத்தகையது என்பது முக்கியம்.

சினிமா என்பது ஒரு வெகுசன ஊடகமென்பது நிலைநாட்டப்பட்ட உண்மைதான். யாரோ ஒருவன் ஒரு கவிதையிலோ, கதையிலோ, நாவலிலோ தன்னுடைய நோக்கத்திற்கு நடந்து கலையைக் கண்டடையலாம், அதை மக்களுக்கு அவன் விரும்பும் வகையில் கொண்டுசெல்லலாம். அதுவேகூட பிரசுரம் என்கிற வணிகம் நடுவில் வரும்போது வேறு ஆட்கள் முந்துவார்கள். மக்களைச் சுளுவாக எட்டுவதற்கு எந்தக் கீழான தரத்திலும் எழுத்து உற்பத்தி செய்யப்படும். இதெல்லாம் நாம் பார்த்து வருகிற விஷயங்கள்தானே? அப்படியிருக்க யாரோ ஒரு வணிகரின் பணத்தில் எடுக்கப்படுகிற திரைப்படம், அதன் விரிந்த பொருளில் பல மடிப்புகள் கொண்டது. பார்வையாளர்களின் பார்வை விகசிப்புக்கு ஏற்ப, காலத்துக்கு ஏற்ற தடங்களை யாரெவரோ போட்டு வைத்திருந்தால், நமது குதிரையை அதில் ஏற்றித்தான் நாம் வாளைச் சுழற்ற முடியும். வீர வசனம் உதிர்க்க முடியும். நகைச்சுவை அல்லது சோக நாடகங்கள் மட்டுமல்ல, நாயக சாகசங்கள் உள்ளிட்ட அனைத்துமே மக்களுக்கு விருந்தளிக்கச் சமைக்கப்படுபவை. ஒரு பெரிய கல்யாண வீட்டில் நிதானமாக உட்கார்ந்து வயிறாற சாப்பிட்டு, வயிறைத் தடவிக்கொண்டு ஏப்பம் விட்டவாறு பட்சணங்களைப் பற்றி விதந்தோதும் மனநிலையே சினிமாவின் பார்வையாளர்களிடம் நடைமுறையாக தொழிற்பட்டது. வயிறும் மனமும் நிறைய வேண்டும் என்கிற ஒரு எதிர்பார்ப்பு.

பலமுறை சொல்லிக்கேட்ட விஷயம்தான். அரசியல் கேரள மக்களைத் தெருவிற்கு கூட்டிவந்தது. சீர்திருத்தக்காரர்கள், கம்யூனிச எழுச்சி காரணமாக கொட்டமடித்துக்கொண்டிருந்த உயர்சாதியக் கட்டுமானங்கள் தகர்ந்து விழுந்ததும், தொழிலாளிகளுக்கு முகங்கள் கிடைத்ததும், அப்போது தாண்டவமாடிக்கொண்டிருந்த வறுமை கண்ணுக்கு எதிரில் நகர்ந்து சென்றதை அந்த மக்கள் அனுபவமாக அறிந்தார்கள். இந்த உலகில் போராடாமல் எதையும் அடைய முடியாது என்கிற உண்மை கொஞ்சமேனும் அவர்களுடைய சப் கான்ஷியசில் விழுந்துவிட்டது. சினிமா நசீரின் கொஞ்சலை, உம்மரின் உறுமலைப் பிரதானமாக அடையாளப்படுத்திய போதிலும், அதில் பணி தீராத வீடு, அர நாழிக நேரம், பார்கவி நிலையம், பாபுமோன், செம்மீன், நெல்லு போன்ற படங்களுக்கு இடமிருந்தன. அடூரால் முகாமுகம், அனந்தரம், கதாபுருஷன் போன்ற படங்களை எடுக்க முடிந்தது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் படங்கள் ஓடிக்கொண்டிருந்த மாதிரி, இன்று விஜய் படங்கள் வசூலை அள்ளிக்கொண்டிருக்கின்றன. என்றாலும், அங்கே பல்வேறு இடுக்குகளில் இருந்துகொண்டு, முடிந்தவரை பழக்கத்தில் உள்ள பாதையில் நகர்ந்து, புதிதாக எதையாவது செய்துவிட முடியும் என்று புதிய பையன்கள் படங்கள் செய்தவாறு இருக்கிறார்கள். அப்படி முன்னொரு காலத்தில் பத்மராஜன் ஒரு கொரில்லா யுத்தம் செய்தார் எனச் சொல்ல வேண்டும் என்றால் ஜார்ஜ் இன்னமும் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டுதான் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் செய்திருக்க முடியும். அவர் அதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கு அந்த நிலபரப்பும், அங்கே நிலவுகிற கலை இலக்கியப் பண்பாட்டுத் தளமும் காரணமாகிறது என்றே நான் நம்புகிறேன். அவர் மக்களும் கலைஞர்களும் பொருட்படுத்துகிற ஒரு சிறப்பான ஆளுமையாக கடைசி வரையில் இருந்தார்.

அவருடைய தனித்தன்மையை நினைவுகூர்வது என்பதே, முன்பு சொன்ன மாதிரி அவர் நம்மை எப்படி பாதித்தார் என்பதில் இருந்து வரும். 

ஸ்வப்னாடனம் என்கிற படத்தைக் கறாராக வகுத்தால் அது ஒரு காதல் கதை. ஒருவன் தன்னுடைய மீற முடியாத பகல் சொப்பனங்களில் மிதந்துகொண்டிருக்கிறான். ஆனால் அந்தக் காதல் நடக்க ஆகாமல் முகம் திரிந்து விலகிப் போனதற்கு சமூக நடைமுறைகள் காரணமாக இருந்திருக்கின்றன. வறுமை காரணமாக இருந்திருக்கிறது. இதையொரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாதவர்கள் தங்களுடைய குற்றங்களை அறியவும்கூட இல்லை. படத்தில் பார்த்தீர்கள் என்றால் தங்களுடைய எல்லைகளைத் தாண்டி முழக்கமல்ல, முணுமுணுப்புகூட இல்லை. இவைகள் இப்படி இருக்கின்றன, அவ்வளவுதான். இவன் இப்படி அந்நியமாகிப் போவான், அவ்வளவுதான். சொல்லப் போனால், ஒரு பருந்துப் பார்வையில் மனிதர்கள் அத்தனை பேரும் நிலவும் நியதிகளின் கைப்பாவைகள் மட்டுமாகத்தான் தெரிகிறார்கள். நாயகனின் தூய்மையான காதலைப் பற்றிச் சந்தேகமில்லை. அவன் நல்லதொரு காதலன், ஆனால் வழக்கமான ஆண். இன்னொரு பெண்ணின் மனதைப் பற்றி அவன் யோசிக்கவேயில்லை. அதற்கு நூலிழை இடம் இருந்திருந்தால் அவனேகூட நன்றாக இருந்திருக்கலாம். அவனால் வாய்ப்பு இருக்குமா என்று பார்த்து, வேறொரு பெண்ணின் மீது கையை வைக்க முடிகிறது. குடித்துவிட்டு, வீட்டுப் பணி செய்கிற பெண்ணைத் தனக்கு எதிரே அதட்டி உட்கார வைக்க முடிகிறது. தனது மனைவி பிற புருஷனை நாடுவது பற்றி கற்பனை செய்ய முடிகிறது.

ஒருவேளை இவனுடைய காதல் நிறைவேறி இருந்தாலுமே, அது அவனுக்கு முழுமையான சந்தோஷத்தைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம்தான் என்று தோன்ற வைப்பதில் ஜார்ஜ் என்கிற படைப்பாளி வெற்றி பெறுகிறார் என்பது திண்ணம். நாம் அங்கே திருப்தி தரத்தக்க எந்த ஆசுவாசத்தையும் தொட்டுவிட முடியாது. 

பொதுவாக இம்மாதிரிப் படத்தை மக்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதைச் சொல்ல முடியவில்லை. தங்களுக்கு வேண்டிய ஆணை, பெண்ணை, காதல் சிக்கல்களை, குடும்பத் தகராறுகளை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்து சென்றார்களா என்கிற யோசனை இருந்தவாறே இருக்கிறது. மருந்தின் கசப்பை உடனடியாகத் துப்பிவிட்டு, எங்கிருந்தாவது ஒரு பிடி சக்கரையை எடுத்துப் போட்டுக்கொண்டு விட்டால், அப்போதைக்கு அது முடிந்து போகிற கதைதானே? நாம் அப்படி எவ்வளவு விஷயங்களை கண்டும் காணாமல் இருக்கிறோம்? இதெல்லாம் உலகில் நடப்பதுதான், அன்றாடங்களில் புரட்டிப் படிப்பதுதான். ஆனால் திரும்பத் திரும்ப இவைகளைப் பற்றி எதற்கு எழுத வேண்டும், படிக்க வேண்டும், படைக்க வேண்டும் என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். உலகம் கடையக் கடைய பஞ்சாமிர்தத்தை வெளித்தள்ளுகிற ஒரு நெகிழ்வு குண்டானாக இருக்க அவர்களுக்கு ஆசை. யாருடைய ஆசையின்படியும் உலகம் இருப்பதில்லை.

ஒரு கட்டத்தில் மலையாள சினிமா மொத்தமும் நகைச்சுவைப் படங்கள் பக்கமாகத் திரும்பியது. ஜார்ஜிற்கும் அதைத் தவிர வழியில்லாமல் இருந்திருக்கலாம். ஒரு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போகும்போது கட்ஷத்தில் நகைச்சுவைத் திரைக்கதை இல்லாதிருந்தால் அவரது அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் செய்து காட்டிய நகைச்சுவை ஒருபோதும் மறக்கப்பட முடியாதது.

முன்னம் ஒருநாள் சென்னைத் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த இப்படத்தைப் பகுதியில் இருந்து பார்க்க ஆரம்பித்தேன். எப்படி ஒரு ஆளால் இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நானறிந்த பல திறமையான மொத்த நடிகர்களும் வேறு ஒன்றைச் செய்துகொண்டிருந்தார்கள். உதாரணமாக நாடறிந்த தீவிரமான நடிகர் திலகன். அவருடைய ஒவ்வொரு அசைவும் சேட்டைகளாக இருந்தது. உண்மையில் படத்தின் காட்சிகளுக்கெல்லாம் உண்மையாகச் சிரித்து வைக்க வேண்டுமா என்பதில்கூட சந்தேகம் வந்தது. படத்தின் இயக்குநர் பெயர் தெரியாமலேயே பல பேரிடமும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

கொடி ஏற்றுவதற்கு காரில் பறந்து வருகிறார் மந்திரி. கோழிகள் பறக்கிற அந்தக் காட்சியைத் தனியாகச் சொல்ல வேண்டும்.

அதைப் போல வேறு ஒன்று இருக்கிறது.

நடிகை ஷோபா இறந்தபோது, அது கொலைதான் என்றும், தற்கொலைதான் என்றும் எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடினார்கள். பாலு மகேந்திரா மீது பல்வேறு வழக்குகள் விழுந்தன. முடிந்த வரையில் அவரைக் காயம் செய்து சந்தோசம் அடைந்துகொள்ள பல்வேறு தரப்பினர் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்த காலம். அப்போதுதான் இந்தப் படத்தைப் பற்றின பேச்சு வந்தது. ஷோபா சாவில் உள்ள மர்மம் பற்றி மலையாள இயக்குநர் ஒருவர் படமெடுக்கிறார். லேகாயுட மரணம்: ஒரு பிளாஷ்பேக் என்பது படத்தின் பெயர். கதாநாயகன் பாலு மகேந்திரா தொப்பி போட்டுக்கொண்டு தலையைக் குனிந்திருக்கிறார்.

உண்மையில் கே.ஜி.ஜார்ஜ் என்கிற பெயரை அந்த சமயத்தில் நான் அவ்வளவு வெறுத்திருக்கிறேன். வாயில் வந்த கெட்டக் கெட்ட வார்த்தைகளால் அவ்வளவு திட்டியிருக்கிறேன். அப்புறம் பின்னால் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தபோது உண்டான அனுபவத்தை இந்தப் படம் பற்றிப் பேச வருகையில் விரிவாகப் பேசிக்கொள்ளலாம்.

இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் சில குறிப்புகள்.

கே.ஜி.ஜார்ஜ் கோட்டயத்துக்கு அருகில் உள்ள திருவெல்லாவில் பிறந்தவர். பிறந்த வருடம், 1946. படங்களை இயக்குவதற்கு முன்பே திரைக்கதை எழுதியிருக்கிறார். ராமு காரியத் செம்மீனுக்கு அப்புறம் இயக்கிய,  மிகுந்த புகழ்பெற்ற ‘நெல்லு’ இவர் எழுதியதுதான். மனைவி பெயர் செல்மா. மக்கள் இருவர்.

நாம் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், முடிந்த வரையில் அவருடைய படங்களைப் பற்றி பேச முயலுவோம்.

-தொடரும்.