துயரின் நிழலடர்ந்த அறைக்குள் தயங்கி நுழைந்தான் குணா. மங்கிய நீல விளக்கொளியில் யுகனின் முகத்தைப் பார்த்தான். அமைதியும் புன்னகையும் கலந்தொளிரும் பாலகன் ஏசுவைப் போலிருந்தது. பார்த்துக்கொண்டே நின்றான். முகத்தை நோக்கி மெல்லக் குனிந்தான். நெஞ்சுக்கூட்டை உற்றுக் கவனித்தான். சுவாசத்தின் அசைவைக் கணிக்க முயன்றான். நாசியருகே கைவைத்தபோது விரல்கள் நடுங்கின. சலனமேதுமில்லாத நொடிகள். பதற்றத்துடன் காத்திருந்தான். வெம்மை கூடிய மூச்சின் சிறு கற்றையொன்று விரலோரத்தைத் தீண்டிக் கடந்தது. ஆசுவாசத்துடன் நிமிர்ந்து இதுவரையில் இழுத்து நிறுத்தியிருந்த மூச்சை வெளியேற்றிய பின் மறுபடியும் அவன் மார்பை உற்று நோக்கினான். ஆம். அசைகிறது. மெல்ல மேலெழுந்து நொடிகள் பல கடந்து தாழ்கிறது.

‘உயிருடன்தான் இருக்கிறான்’ என்று உணர்ந்த கணத்தில் விம்மல் வெடித்தது. உதட்டைக் கடித்துக்கொண்டு தலையணை அருகில் வைத்திருந்த பைபிளைத் தொட்டு மார்பில் சிலுவையிட்டான். ஓசையெழுப்பாது நகர்ந்து வெளியே வந்தான். குமுறல் பீறிட்டது.

ஆட்டுக் குட்டியைக் கைகளில் ஏந்திய தேவனின் படத்துக்கு முன்னால் நின்றான். ‘தேவனே, இம் மகவிற்கு இன்னொரு நாளைப் பரிசளித்தமைக்கு நன்றி. வாதையின்றி வலியின்றி இந்த நாளும் கடந்திட ஆசிர்வதிப்பீர். உம் கரங்களில் அடைக்கலம் புகுந்த மறியே இவன். இவனை நீர் கலங்காது காத்தருளும்.’

“இன்னிக்கு என்ன நாள் சொல்லுங்க.” அர்ச்சனாவின் குரல் கேட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினான். ஆர்வம் கொப்புளிக்கும் கண்களுடன் நெருங்கினாள். அவள் என்ன கேட்கிறாள் என்பது குணாவுக்குத் தெரிந்ததுதான். நேற்றிரவிலிருந்தே அவனை வதைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுதான். ஆனால் தெரியாதவன் போலவே சாதாரணமாகக் கேட்டான் “என்ன நாள். வெள்ளிக் கிழமை.”

“உங்களுக்குத்தான் எதுவுமே ஞாபகமிருக்காதே. ஆபிஸ் விஷயத்தை மட்டுந்தான் நெனவு வெச்சிப்பீங்க. இன்னிக்கு ஆகஸ்டு 14. சுதந்திர பாகிஸ்தான். இப்ப ஞாபகம் வருதா?” ஆசையுடன் முகம் பார்த்துக் கேட்டாள். மெல்ல தலையசைத்தான். யுகன் பிறந்த நாள் இன்று.

“இதானே பொறந்த நாளுக்கு எடுத்த டிரஸ். அவன் ஆசையாக் கேட்டானே, சக்திமான் டிரஸ்.” பெட்டியைப் பிரித்து அதை எடுத்து விரித்துக் காட்டினாள். மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கியது. நீலமும் சிவப்புமான அந்த உடையின் வாசனைகூட இன்னும் மாறவில்லை.

நொடியில் உதடு பிதுக்கி மெல்ல அழத் தொங்கினாள். “ஒரு தடவைகூட இதப் போட்டுப் பாக்க முடியலை. இனிமேலும் போட்டுக்கவே முடியாதில்லே” சொல்லி முடிப்பதற்கு முன்பே அழுகை முந்திக்கொண்டது.

அவளை இழுத்துத் தோளில் அணைத்தான். தலைமுடி காற்றில் அலைந்து முகத்தில் விழுந்தது. கண்ணீரின் வெம்மை மார்பில் இறங்க முகம் நிமிர்த்தி கண்களைத் துடைத்தான். பொலிவிழந்து கருத்த முகம். கண்களுக்குக் கீழே அடர்ந்த கருவளையங்கள். கண்ணீரின் தடம் மாறாமல் வற்றிய கன்னங்கள். காய்ந்த உதடுகள் துடிக்கக் கேட்டாள் “இன்னிக்கு எத்தனாவது பர்த் டே?”

கணக்கின்படி எட்டு முடிந்து ஒன்பது தொடங்குகிறது. “எட்டு முடிஞ்சுதுப்பா.”

அடுத்ததையும் அவனே சொல்வான் என்று காத்திருந்தவள் போல முகத்தை ஏறிட்டாள். அவனால் அதைச் சொல்ல முடியாது.

ஆனாலும் அவள் கேட்டாள் “இப்ப என்ன வயசு அவனுக்கு?”

குணா தலையை உலுக்கினான். முகத்தைத் திருப்பிக்கொண்டு விலக முயன்றவனைத் தோள்களில் பற்றினாள்.

“சொல்லிட்டுப் போ” ஆத்திரத்துடன் குரலுயர்த்தினாள்.

அவள் முகத்தையே கூர்ந்து பார்த்திருக்க அவன் கன்னத்தில் அறைந்தாள். தலைமுடியைப் பற்றி உலுக்கியபடி கத்தினாள். “என்ன வயசாச்சு சொல்லு. என் புள்ளைக்கு இன்னிக்கு என்ன வயசு?”

வலி தாங்க முடியாமல் அவள் கைகளைப் பற்றி விலக்கித் தள்ளினான். தடுமாறித் தரையில் விழுந்தாள். சட்டென்று தாவிப் பிடித்தான். கைகளைத் தரையில் ஊன்றிக் கதவருகே நகர்ந்து அமர்ந்தாள். குணாவின் கைகளை விலக்கினாள்.

“எட்டு முடிஞ்சு எல்லாருக்கும் ஒன்பதில்ல வரும். ஆனா நம்ம குட்டிக்கு இப்ப நாலு முடிஞ்சு மூணு ஆரம்பிக்குது. அப்பிடித்தானே?” அவளது ஆத்திரம் இன்னும் கூடியிருந்தது.

அவன் பதில் பேசவில்லை. சட்டென்று அருகில் அவனை இழுத்தாள்.  மார்பில் ஓங்கி அறைந்தாள். ஆத்திரத்துடன் கைகளை மடக்கிக் குத்தினாள். சட்டையின் பித்தான்கள் தெறித்து விழுந்தன. வெட்டப்படாத நகங்கள் மார்பைக் கீறின.

“எம் புள்ளையை ஏண்டா இப்பிடிப் பண்ணினே?” அழுகையும் ஆத்திரமுமாய் கத்தினாள். “எல்லாப் புள்ளைங்கள மாதிரி ஏன்டா எம் புள்ளைக்கு பர்த்டே கொண்டாட முடியலை? இப்பிடி ஒவ்வொரு நாளும் உசுரோட இருக்கானான்னு தவிச்சுக்கிட்டே கெடக்கற மாதிரி என்னடா பண்ணினே?” கண்ணீர் பெருகக் கதறியபடி நெஞ்சிலும் தோளிலும் அறைந்தாள்.

0

“இழுக்காதேன்னு எத்தனை தடவை சொல்றது?” அர்ச்சனா தலைமுடியைப் பற்றியபடி கத்தினாள்.

“கொஞ்சம் பொறுத்துக்கம்மா. சிக்கலாக் கெடக்குது. போன வாரம் தலை குளிச்சப்ப பின்னிவிட்டது” குணா பொறுமையுடன் சீப்பைப் போட்டு வாரினான்.

“புள்ளை எந்திரிச்சிருவான். நீ சீவி சிங்காரிக்காத. போதும்.” எழுந்து நின்று பின்னலை முன்னுக்கிழுத்தாள். அடர்த்தி குறைந்து நரை கூடியிருந்தது.

“இடுப்பளவு கெடந்தது இல்லே குணா. நீ கூட கருஞ்சவுக்குன்னு கொஞ்சுவியே…” சிரித்தபடியே அவனைப் பார்த்தவள் மறுநொடியில் தலையை உலுக்கியபடி நகர்ந்தாள்.

“ஒரு நிமிஷம் பொறு” அவளை இழுத்து நிறுத்தினான். நெற்றியில் பொட்டை ஒட்டினான்.

அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். “சாரிப்பா. என்னாலதான உனக்கு இத்தனை சீரழிவு. நீ என்னைப் பாக்காமயே இருந்திருக்கலாம். இப்பப் பாரு கொழந்தைமாதிரி என்னையும் குளிப்பாட்டி தலை சீவி டிரஸ் பண்ணிவிட்டு…” கண்ணீர் வழிந்தது.

குணா அவள் முகத்தைத் துடைத்தான். “இப்பவே சாப்பிடு. அவன் தூங்கறான்.”

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தவள் கர்த்தரின் கீழே நின்றாள் “இப்பல்லாம் நான் வேண்டிக்கறதே சீக்கிரமா அவனை எடுத்துக்கன்னுதான்.” கைகுவித்து நின்றாள். உதடுகள் துடித்தன.

அந்த நொடிக்காகக் காத்திருந்தது போல வீறிட்டுக் கத்தினான் யுகன்.

சமையலறையிலிருந்து தாவியோடினான் குணா. “கர்த்தரே…” கதறியபடியே அர்ச்சனா அறைக்குள் நுழைந்தாள்.

உடலை முறுக்கிக்கொண்டு தலையைப் பின்னுக்கிழுத்தபடி வீறிட்டுக் கிடந்தான் யுகன். குணா அவன் அருகில் அமர்ந்தான். தோளைத் தொட்டுப் புரட்டினான். மின்னல் வெட்டியதுபோல் நொடியில் அவன் கைகளைப் பற்றி தாவினான். தோளில் முகம் பதித்துக் கத்தினான். “ஓகே. ஓகே. சரியாயிடும்.” அவனது எடையைத் தாங்கி அமர்ந்த குணா முதுகைத் தடவினான். அலறல் சத்தம் கூடியது. தோளை அணைத்திருந்த அவனது வலது கை இன்னும் இறுகியது.

அர்ச்சனா யுகனின் தலையைத் தடவினாள். உதடுகள் முணுமுணுக்க கண்ணீர் சொட்டியது “கர்த்தரே… இவன்மீது சினங்கொண்டு இவனைக் கண்டியாதேயும். கடுஞ்சீற்றங்கொண்டு தண்டியாதேயும். ஆண்டவரே! சற்றே மனம் இரங்கும். நான் தளர்ந்து போனேன். எம் எலும்புகள் வலுவிழந்து போயின. எம்மைக் குணமாக்கி அருளும்.”

அலறல் ஒருகணம் ஓய்ந்தது. அதே நொடியில் குணா வலி தாங்காது கத்தினான். யுகன் பலங்கொண்டமட்டும் குணாவின் தோளைக் கடித்திருந்தான். தாள முடியாத வலி வெறியாக மாறிக் குதறியது.

குணா அவனை விலக்க முற்பட்டான். வாயை விடுத்து நகர்ந்து மீண்டும் கடித்தான்.

“வேண்டாம் குணா. அவனைக் கீழே விட்டுரு. போதும்.” அர்ச்சனா கதறியபடியே யுகனைப் பின்னுக்கிழுத்தாள்.

“ஒண்ணுமில்லம்மா. இதோ சரியாயிடும்” முதுகைத் தடவியபடியே அவனை மெல்ல விலக்கினான். ஒருகணம் தலை நிமிர்ந்து வெட்டியது. உடலைப் பற்றியிருந்த இறுக்கம் தளர்ந்த கணத்தில் படுக்கையில் கிடத்தினான். யுகனின் கைகள் பரபரத்துக் காற்றில் துடித்தன. வாயோரத்தில் நுரைத்து வழிந்த எச்சிலைத் துடைத்தான் குணா. மொத்த உடலும் துடித்து மெல்ல அடங்கலாயிற்று. ஓரத்தில் கிடந்த சிறு துவாலையை எடுத்து வேர்த்திருந்த நெற்றியைத் துடைத்தான். கழுத்தையும் கைகளையும் மெல்ல நீவினான்.

“அவ்ளோதான்ம்மா. சரியாயிடுச்சு…”

அருகிலமர்ந்த அர்ச்சனா யுகனின் நெற்றியில் சிலுவையிட்டாள். முகத்தை மெல்ல வருடினாள்.

“இப்ப தூங்கிருவான்ம்மா. சரியாயிடுச்சு.” குணா நிமிர்ந்தான்.

அவன் தோளையே உற்றுப் பார்த்திருந்தாள் அர்ச்சனா. இரண்டு இடங்களில் பற்தடங்களில் ரத்தப் பொட்டுகள். உதடுகள் துடிக்க எழுந்து வெளியே போனவள் களிம்பை எடுத்து வந்தாள்.

“வேணாம்மா. இப்பிடியே போடக்கூடாது. கழுவிட்டுப் போட்டுக்கறேன். நீ வா.”

“இல்லப்பா. நா பக்கத்துல இருக்கேன்.” பைபிளை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள்.

“ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்? உம் பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும். ஒவ்வொரு இரவும் கண்ணிரில் எம் படுக்கை மிதக்கிறது. எம் கட்டில் அழுகையால் நனைகிறது. துயரில் எம் கண்கள் வீங்கிப் போயின. தீமையே… தீவினையே. ..எம்மை விட்டு அகன்று போங்கள்.”

0

அலுவலக மனமகிழ் மன்றத்தின்  சிறுமேடையில் கிறிஸ்டோபர் குணசீலன் கைகளைக் கோர்த்தபடி தலைகுனிந்து நின்றிருந்தார். எதிரில் அலுவலர்கள் அனைவரும் அவர் முகத்தையே கவனித்தபடி அமர்ந்திருந்தனர். மின்விசிறிகள் சுற்றும் ஓசை மட்டுமே கேட்டிருந்தது. அதிகாரிகள், பணியாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் ஒன்றுகூடியிருந்த அபூர்வமான சந்தர்ப்பம்.

முன்னால் நிற்பது மனமகிழ் மன்றச் செயலாளரா, இல்லை மண்டல உதவி மேலாளரா என்ற குழப்பம் ஒரு சிலருக்கு. செயலாளர் குணசீலன்  குதூகலமும் உற்சாகமும் கலந்த மின்னல் ஆசாமி. சட்டென்று தோளோடு சேர்த்தணைத்து தோழமை காட்டும் இணக்கம். ஆனால் மேலாளர் குணசீலன் அலுவலுகத்தினுள் உலவும் சிங்கம். தனது அறைக்கு அவர் நிதானமாய் நடந்து போகும்போதே அலுவலகம் மொத்தமும் நிமிர்ந்துகொள்ளும். கோபத்துடன் கத்த மாட்டார். கோப்புகளை விசிறி எறியமாட்டார். ஒரே ஒரு பார்வைதான். வேலை தானாக நேரத்துக்கு முடிந்துவிடும்.

கைகோர்த்து தலைகுனிந்து அவர் நிற்பது சங்கடம்தான். இந்தக் கூடுகை சீக்கிரமாய் முடிந்தால் பரவாயில்லை என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. வாய்விட்டு அவர் சொல்லவில்லை என்றாலும் வீட்டில் என்ன நிலைமை என்பது அனைவரும் அறிந்த துயரந்தான்.

“நண்பர்களே, என் வேண்டுகோளை ஏற்று வந்திருப்பதற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக நான் அழைத்திருக்கிறேன் என்று. உள்ளபடி ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவே இதை நான் கேட்டிருக்கவேண்டும். ஆனால் என்னால் முடியாது. எல்லோரையும் ஒன்றுகூட்டி இதைக் கேட்பதற்கே என்னை நான் பலநாட்கள் தயார் செய்துகொண்டேன். எல்லோரிடமும் ஒரு உதவி கேட்கவே இந்த சந்திப்பு. அலுவலகத்தில் உங்களிடம் நான் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். மனதைப் புண்படுத்தியிருக்கலாம். உங்களில் பலரையும்விட நான் வயதில் சிறியவன். அதையெல்லாம் பொருட்படுத்தாத பெரியமனதுடன் எனக்காக என் குடும்பத்துக்காக உதவி செய்யவேண்டும்.”

குரலில் சிறு நடுக்கத்தை உணர்ந்தவர் போல பேச்சை நிறுத்தினார். சிறு அமைதி. அனைவருக்குள்ளும் அந்த வேளையின் பதற்றம்.

“எனது எட்டு வயதுப் பிள்ளை யுகன். உங்களில் பலருக்கும் தெரியும். நமது மனமகிழ் மன்ற நிகழ்வுகளிலும் சுற்றுலாக்களிலும் பார்த்திருப்பீர்கள். இதே மேடையில் பல நாட்கள் அவன் ஆடியதுண்டு. பாடியதுண்டு.” மீண்டும் அவர் பேச்சு தடைபட்டது. தம்ளரில் இருந்த தண்ணீரைப் பருகினார். “இன்றைக்கு அவன் பிறந்த நாள். அவன் கர்த்தரின் ஆசி வேண்டிக்  கிடக்கிறான். எனக்கு நம்பிக்கை உண்டு. கர்த்தர் தன் பிள்ளைகளை என்றைக்குமே கைவிடமாட்டார். என் பாவத்தின் சம்பளத்தை எனக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அவனிடம் கைமாற்றிவிட்டாரோ என்ற பயம் எனக்கு. அவன் பாவம். சிறு பிள்ளை. துள்ளி ஆடவேண்டிய இந்த வயதில் ஒரு பொம்மைபோல கிடக்கிறான். அவன் இப்போது அறிந்திருப்பது வலியையும் வாதையையுமே. ரொம்பவும் சிரமப்படுகிறான். என்னால் முடிந்த வரையிலும் பார்த்துவிட்டேன். மருத்துவம் கைவிட்டுவிட்டது. பிறவிக் கோளாறு. விஞ்ஞானம் இன்னும் விடை காணாத புதிர். அர்ச்சனாவை என்னால் சமாளிக்க முடியவில்லை. பெற்றவள் அவள். என்ன சொல்லி சமாதானப்படுத்த முடியும். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். என் பிரார்த்தனைக்கு கர்த்தர் காது கொடுக்கவில்லை. நீங்கள் எல்லோரும் எனக்காக பிரார்த்தியுங்கள். உங்கள் அனைவரின் கூட்டுக்குரலுக்கு அவர் மனமிரங்கக் கூடும். நான் பாவி. என்னை அவர் தண்டிக்கட்டும். சிறுபிள்ளை அவனை ரட்சிக்கட்டும். அதற்காக நீங்கள் அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் தெய்வம் வேறாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கை இன்னொன்றாக இருக்கலாம். உங்கள் தெய்வத்திடம் உங்கள் நம்பிக்கையிடம் நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள். யுகனுக்காக அர்ச்சனாவுக்காக தயவுசெய்து ஒரு நிமிடம் பிரார்த்தியுங்கள். உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது அது ஒன்றுதான். அவர்கள் இருவருக்காக மனமிரங்கி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.”

தலைகுனிந்திருந்த அவர் அழவில்லை. திடமாகவே நின்றிருந்தார். ஆனால் எதிரில் அமர்ந்திருந்த பலர் அழுதுகொண்டிருந்தனர். பெண்களின் குமுறல் ஒலி மெல்ல வலுத்தது.

நிலைமையை கட்டுப்படுத்தும் முகமாக செயலர் எழுந்து அறிவித்தார் “நாம் அனைவரும் இப்போது யுகனுக்காக பிரார்த்திப்போம்.”

அனைவரும் எழுந்து நின்றனர். கைகூப்பி வணங்கியபடி பிரார்த்தித்தனர். குணா தலை குனிந்திருந்தார்.

0

யுகன் அன்றைக்கு பள்ளியிலிருந்து வரும்போதே மீளாத் துயரின் நிழலும் அவனுடன் வீட்டுக்குள் வந்து சேர்ந்தது. ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. அறையில் புத்தகப் பையை வைத்துவிட்டு வெளியே வராமல் படுக்கையிலேயே கிடந்தான். உணவு மேசையில் தட்டை வைத்துவிட்டு அர்ச்சனா அவனுக்காகக் குரல் கொடுத்தாள் “குட்டிம்மா… சாப்பிடலாம்.”

அவனிடமிருந்து பதில் வராமல் போகவே அர்ச்சனா படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். சுருண்டு படுத்திருந்தவனை நெருங்கி நெற்றியில் கைவைத்தாள் “என்னடா குட்டி, டயர்டா இருக்கா?” ஜுரம் சுருக்கென்று விரல்களை சுட்டது.

யோசனையுடன் அர்ச்சனா தெர்மாமீட்டரை எடுத்து அவன் கையிடுக்கில் செருகினாள். சில நொடிகளுக்குப் பிறகு கூர்ந்து பார்த்தபோது பாதரச குமிழ் 102ஐத் தொட்டு நின்றது. தொலைபேசியில் குணாவை அழைத்தபோது பதிலில்லை. கைக்குட்டையை குளிர்ந்த நீரில் நனைத்து நெற்றியில் வைத்தாள். குரோசின் சிரப்பை அளவு பார்த்துப் புகட்டிவிட்டு மீண்டும் அவனை அழைத்தாள். எடுக்கவில்லை.

டாக்டர் சத்யாவை அழைத்துச் சொல்லிவிட்டு யுகனை எழுப்பினாள். வேர்த்திருந்ததில் ஜுரம் சற்றே மட்டுப்பட்டிருந்தது. உடை மாற்றி கொஞ்சமாய் பூஸ்டை பருகக் கொடுத்தாள். அவனால் குடிக்க முடியவில்லை. ஆட்டோவில் போகும்போது மடியில் சுருண்டுகொண்டான்.

மருத்துவமனையை அடைந்தபோது உடல் மீண்டும் கொதித்திருந்தது. தெர்மாமீட்டர் இப்போதும் 102ஐ காட்டியது. பரிசோதனைக்குப் பின் சத்யா சொன்னாள் “சாதாரண காய்ச்சல் மாதிரிதான் இருக்கு. ஒரு இன்ஜெக்சன் போடறேன். எதுக்கும் அப்சர்வ் பண்ணிப் பாக்கலாம். அண்ணாகிட்ட சொல்லிட்டியா?”

அர்ச்சனா படுக்கையில் கிடந்த யுகனையே கவலையுடன் பார்த்தபடி சொன்னாள் “போன் பண்ணினேன். எடுக்கலை. பாத்துட்டு கூப்பிட்டா சொல்லிக்கலாம். வீட்டை அப்பிடியே போட்டுட்டு வந்துருக்கேன்.”

மாலை ஏழு மணிக்கு குணா மருத்துவமனைக்கு வந்தபோதும் சத்யாவால் எதுவும் தீர்மானமாக சொல்ல முடியவில்லை. “ப்ளட், யூரின் எல்லாம் டெஸ்ட் பண்ணியாச்சு. எதுவும் இன்ஃபெக்ஸன் இருக்கறமாதிரி தெரியலை. ஃபுட் பாய்ஸனும் இல்லை. ஆனா ஃபீவர் கொறைய மாட்டேங்குது. பாக்கலாம்.”

வெவ்வேறு மருந்துகள், பரிசோதனைகள், ஆலோசனைகள் என்று குழப்பமாக எதையோ செய்துகொண்டிருக்க அர்ச்சனா பயந்திருந்தாள்.

மறுநாளும் முக்கியமான வேலை என்று அலுவலகத்துக்குப் போன குணா அன்றிரவுதான் திரும்ப முடிந்தது. இரண்டாம் நாள் மாலை வரையிலும் கண் திறக்காமல் கிடந்த யுகன் இரவு எட்டரை மணிக்குத்தான் அசைந்தான். காய்ச்சல் விட்டிருந்தது. அர்ச்சனா கண்மூடி பிராத்த்தனையில் இருந்தாள்.

‘ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்? எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்.’

வெளுத்து வெடித்த உதட்டிலிருந்து “அம்மா…” என்ற ஓசை எழுந்தபோது அர்ச்சனா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். யுகன் விழித்திருப்பதைப் பார்த்து நம்பமுடியாதவளாய் எழுந்து கத்தினாள் “குட்டிம்மா… இதப் பாரு. அம்மா இருக்கேன்…”

மறுநாள் காலையில் வீடு திரும்பும்பொழுதே யுகன் புலம்பத் தொடங்கியிருந்தான் “ரெண்டு நாள் லீவாம்மா? மிஸ் திட்டுவாங்கல்ல.”

மதியம் ரசத்துடனான சாதத்தை இரண்டு கவளம் உண்டபோது அர்ச்சனாவுக்கு பயம் விட்டுப்போனது.

அன்று மாலை கிரிக்கெட் பந்துடன் வாசலில் விளையாடியபோது அர்ச்சனா கர்த்தருக்கு நன்றி சொன்னாள். ‘ஆண்டவரே, நீரே எமைக் காக்கும் கேடயம். நீரே என் மாட்சி. எனை தலை நிமிரச் செய்பவரும் நீரே. உமக்கு நன்றி.”

0

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள். அக்டோபர் மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனையிலிருந்து திரும்பி வரும்போது யுகன் அழத் தொடங்கினான். காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் சிணுங்கியபடியே சொன்னான் “டாடி, வலிக்குது டாடி.”

பாதையிலிருந்து கண்களைத் திருப்பாமலேயே குணா கேட்டான் “வயிறு வலிக்குதா? காலையில டாய்லெட் போனியா?”

“ம். வயிறு வலிக்கலே. ஆனா வலிக்குது” அழுகை வலுத்தது.

அர்ச்சனா அவன் தோளைத் தொட்டாள் “பசிக்குமாயிருக்கும். வீட்டுக்குப் போனதும் சாப்பிடலாம். சரியாப் போகும்.”

‘வலிக்குத்தும்மா…’ என்று உடலை முறுக்கியபடி அழுதான் யுகன்.

காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழையும்போது யுகன் குணாவின் கால்களை தாவிப் பிடித்தான். “ப்பா… வலிக்குதுப்பா. ப்ளீஸ். தூக்குங்க டாடி.”

கதவைத் திறந்துவிட்டு அவனைத் தூக்கியதும் தாவி அணைத்தான். அவன் கைகள் குணாவின் கழுத்தை இறுக்கின. குணா யுகனின் முதுகைத் தொட்டுத் தடவினான். உடல் கொதித்தது. முற்றிலுமாக வலி அவனைத் தன் வசத்தில் இறுக்கிக் கொண்டிருந்தது.

சத்யா இம்முறை வழக்கமான பரிசோதனைகளோடு நிறுத்தவில்லை. “என்னவோ தப்பா இருக்கு குணா. என்னால உறுதியாச் சொல்ல முடியலை. என்னோட சீனியர் கிட்ட கன்சல்ட் பண்ணிருக்கேன். போன தடவை இவனுக்கு சரியானப்பவே ஐ ம் நாட் ஸ்யூர். எப்பிடி சரியாச்சுன்னு தெரியலை எனக்கு. சீனியர்கிட்ட சொன்னேன். அவரும் மறுபடி வந்தா பாக்கலாம்னுதான் சொன்னார். இப்ப ஒடம்பு வலியும் கூடவே இருக்கு. அர்ச்சனாகிட்ட எதையும் சொல்லவேண்டாம். வீணா பயந்துடுவா.”

மூன்றாம் நாள் மாலையிலேயே வீட்டுக்கு வந்தபோது வலி தன் பிடியைத் தளர்த்தியிருந்தது. மறுநாள் காலையில் எப்போதும்போல பள்ளிக்கும் புறப்பட்டு போய்விட்டான். அர்ச்சனாவும் அத்துடன் அதை மறந்துவிட்டாள்.

ஆனால் குணா சத்யாவுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டியிருந்தது. மும்பையிலிருந்து சில பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருப்பதாகவும் அவை வந்தவுடன் தான் உறுதியாக எதையும் சொல்ல முடியும் என்றும் புதிராகச் சொன்னது அவனை கவலை கொள்ளச் செய்திருந்தது.

ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் அவன் மனம் குவியவேயில்லை.

‘வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன. வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கிறது. ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது. ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகிறது. அவற்றுக்குச் சொல்லுமில்லை பேச்சுமில்லை. அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை’ உதடுகள் சொற்களை வெறுமனே உச்சரித்திருந்தன.

ஆனால் சத்யா அழைக்கவில்லை. அலுவலக வேலைகளுக்கு நடுவே இவனும் அதை மறந்துபோனான். மீண்டும் ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது சிரித்தபடியே சொன்னாள் “சாரி குணா. கொஞ்சம் பிஸி. லேப் டெஸ்ட் ரிசல்டெல்லாம் அப்பவே வந்துருச்சு. ஏதாச்சும் பிரச்சினையா இருந்தா நானே கூப்பிட்டிருப்பேனே. நத்திங் டு வொரி. அர்ச்சனாகிட்டயும் சொல்லிரு.”

அவள் விடைபெற்று சென்ற பின்னும் குணாவுக்கு சமாதானமாயிருக்கவில்லை. அன்று மாலை கேரம்போர்டு போட்டியில் சொதப்பினான். எப்போதும் கோப்பையை வெல்லும் அவன் முதல் சுற்றிலேயே வெளியேறியது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

தொடர்ந்து சிலநாட்கள் யுகனை அவன் வழக்கத்துக்கு மாறாக கண்காணித்திருந்த போதும் அவனால் எதையும் வித்தியாசமாக உணர முடியவில்லை. உள்ளுக்குள்ளிருந்த அச்சமும் சந்தேகமும் மெல்ல அமுங்கிப் போயின.

சில நாட்கள்தான். அரையாண்டுத் தேர்வு தொடங்கிய சமயத்தில் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. அலுவலகத்திலிருந்து அங்கே சென்று சேர்ந்த சமயத்தில் யுகன் வகுப்பில் இருக்கவில்லை. ஓய்விலிருந்து மீண்ட நோய்மை அவனிடம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது.

“காலைலேர்ந்து அவன் டாய்லெட்லதான் இருக்கான். பாவம் என்னவோ ஒத்துக்கலை…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வராந்தாவின் மறுபக்கமிருந்து அழைப்பு வந்தது “டாடி…” சோர்ந்த முகமும் தளர்ந்த நடையுமாய் யுகன்.

“பரிட்சை எழுத உட்காரவே இல்லை அவன். பரவால்லே. டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போங்க. பாத்துக்கலாம்” வகுப்பாசிரியை அவன் தலையை தடவி அனுப்பினாள்.

வீட்டுக்குப் போனதுமே டாய்லெட்டுக்குள் ஓடினான். எலுமிச்சைச்  சாறில் ஏலக்காய் போட்டுக் கொடுத்தாள் அர்ச்சனா. குடித்தவுடனே குமட்டிக்கொண்டு வாந்தியெடுத்தான். டாய்லெட்டுக்கு மறுபடியும் ஓடினான். உடலிலிருந்த திரவம் மொத்தமும் வெளியேறியது. கால்கள் தளர்ந்து  கண்மயங்கினான்.

“டீஹைட்ரேசன். டிரிப்ஸ் போட்ரலாம். பயப்படாதே…” சத்யா வலது கையில் ஊசியைச் செருகியபோது அர்ச்சனா விம்மினாள்.

“ஆண்டவரே, இந்தப் பிள்ளையை ஏன் இப்படி சோதிக்கிறீர்?” புலம்பியபடியே பிரார்த்தித்திருந்தாள்.

இந்த முறை இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே அவனை சரிப்படுத்தி அனுப்பிய சத்யா எச்சரித்து அனுப்பினாள் “குணா. அவனை ஜாக்கிரதையா பாத்துக்கோ. ரெண்டு நாள் நான் ஊர்ல இல்லை. வந்ததும் பேசறேன். டேக் கேர்.”

சத்யாவிடமிருந்து வரும் அழைப்பை அவன் அச்சத்துடனும் குழப்பத்துடனுமே எதிர்பார்த்திருந்தான். செவ்வாய் கிழமை மதியம் மணியொலித்தது. அலுவலகத்திலிருந்து திரும்பும்போது சத்யாவிடம் சென்றான். அவனைக் கண்டதும் உற்சாகத்துடன் வரவேற்ற போதும் குணாவால் அவளது முகமாற்றத்தைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

“போன தடவையே உங்கிட்ட சொல்லணும்னு பாத்தேன். ஆனா எனக்கே அப்ப உறுதியாத் தெரியலை. மும்பையில இருந்து வந்த ரிசல்டை ஃபைனல்னு சொல்ல முடியாது. எப்பவுமே சில பெர்சன்டேஜ் மாறிப் போக வாய்ப்பிருக்கு. அதனால யுகனுக்கு இதுதான்னு இப்பவே நாம முடிவு பண்ணவேண்டாம்.” அவளது பீடிகைகள் அவனது பதற்றத்தைக் கூட்டின.

“எதுன்னாலும் பூசி மெழுகாம நெஜத்தை அப்பிடியே சொல்லு சத்யா. எங்கிட்ட என்ன?”

சத்யா கையிலிருந்த தாள்களை மீண்டும் கவனமாகப் புரட்டினாள். அதன் இறுதிப் பகுதியில் தடித்த எழுத்துகளில் அச்சாகியிருந்த பத்தியில் விரலை வைத்துச் சொன்னாள் “இது அவனோட பிளட் டெஸ்ட் ரிப்போர்ட். சாதாரணமா நாம பண்ற டெஸ்ட் இல்லை. கொஞ்சம் அட்வான்ஸ்ட். ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் கவலைப்படும்படியா இருக்கு.”

குணாவின் மனம் புரண்டது. அவளது சொற்கள் எதையும் அவனுக்கு உணர்த்தவில்லை. “அப்பிடின்னா என்ன?”

“ஒண்ணுமில்லை. ஒரு சந்தேகம். இந்த சேம்பிளை அப்பிடியே யு.எஸ் லேபுக்கு அனுப்பச் சொல்லிருக்கேன். அவங்க பாத்துட்டுச் சொல்லட்டும்.”

“அவங்களும் இதுதான் சொல்லிட்டா?”

சத்யா கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தாள். குணாவின் முகத்தைப் பார்த்து தீர்மானமாகச் சொன்னாள் “யுகனுக்கு சீரியஸா ஒரு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.”

“என்ன மாதிரி?” படபடப்புடன் கேட்டான். அதற்குள் ஆயிரம் கற்பனைகளுக்குள் சிக்கிக்கொண்டு புரண்டது மனம். மரணத்தின் எண்ணற்ற கைகள் சுழன்று புயலெனச் சீறி எழுந்து யுகனை அள்ளிக்கொள்ளுமோ? கர்த்தாவே, இதுதான் உம் விருப்பமா? இதற்குத்தான் அவனை எமக்குத் தந்தீரா?

“அதப் பத்தி இப்ப எதுக்கு? விடு. ரிசல்ட் வந்ததுக்கப்பறமா பாக்கலாம்.”

மேசையின் மீதிருந்த கண்ணாடிக கோளத்தை குணாவின் விரல்கள் சுழற்றியிருந்தன. உதடுகள் நடுங்கின. எழுந்தான். “ப்ளீஸ். ஒரு நிமிஷம். வரேன்.” பால்கனிக்கு வந்து நடுங்கும் விரல்களால் சிகரெட்டை பற்ற வைத்து புகையை உள்ளிழுத்தான். இருண்ட வானில் மினுமினுத்த நட்சத்திரங்களைப் பார்த்தபடியே நின்றான்.

‘உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலவையும் விண்மீன்களையும் நோக்கும்போது மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?’ என்ற வசனம் நினைவில் ஒலித்தது.

“குணா, இப்பவே ஒண்ணும் முடிவு பண்ணவேண்டாம். யுகனோட சிம்ப்டம்ஸை அப்சர்வ் பண்ணலாம். அளவுக்கதிகமான காய்ச்சல். பேதி. உடம்பு வலின்னு ஒவ்வொண்ணும் முக்கியமான சிம்ப்டம். இது ரொம்ப ரேர். இதுல ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ங்க இருக்காங்க. அவங்ககிட்ட கன்சல்ட் பண்ணலாம். ஆனா அவசரப்பட்டு அர்ச்சனாகிட்ட எதையும் சொல்லிராதே.” சத்யா சொல்லிக் கொண்டிருந்த போதே அர்ச்சனாவிடமிருந்து அழைப்பு வந்தது. “இன்னும் ஆபிஸ்லதானா? வீட்டுக்கு எப்ப வருவீங்க?” அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள்.

“வரேன்.” போனை அணைத்துவிட்டு சொன்னான் “இப்பல்லாம் போன் அடிச்சாவே பயமா இருக்கு சத்யா.”

0

அதன்பிறகு யுகனை குணாவால் சாதாரணமாகவே அணுக முடியாமல் போனது. நள்ளிரவில் எழுந்து அவனையே பார்த்துக்கொண்டு நின்றான். யுகன் எதைச் செய்தாலும் பயமாயிருந்தது. செய்யாதபோது அதைவிடவும் பயந்தான். ஒவ்வொன்றுக்கும்  சத்யாவை அழைத்துச் சொன்னான்.

“உங்கிட்ட எதையுமே சொல்லிருக்கக் கூடாது குணா. அவன் சிரிச்சாவே பயப்படறியே. ரிலாக்ஸ். நீயே அவனை வியாதிஸ்தனாக்கிருவே போலிருக்கே” சத்யா கடிந்து கொண்டாள்.

கடந்த வாரத்தின் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் அவனது மதிப்பெண் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐம்பதுக்கு பதினான்குதான் வாங்கியிருந்தான். “ஒடம்பு சரியில்லாமப் போச்சில்ல. அதான் அவனுக்கு கான்சென்ட்ரேஷன் இல்லை” அர்ச்சனா சொன்னபோது நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் விடைத்தாளைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

“எட்டும் மூணும் பனிரெண்டுன்னு எழுதிருக்கேன். எப்பிடி டாடி?”

அத்தோடு அது முடியவில்லை. எளிய சாதாரண விஷயங்களையே அவனால் தவறில்லாமல் செய்ய முடியாமல் போயிற்று.

ஒருநாள் மாலையில் வீட்டுக்கு வந்தபோது குணாவின் மடியில் விழுந்து அழுதான் “டாடி எனக்கு எதுவுமே ஞாபகம் வரமாட்டேங்குது டாடி. மிஸ் திட்டறாங்க. இன்னிக்கு த்ரீ டேபிள் சொல்லச் சொன்னப்பகூட என்னால முடியலை.”

அன்றிரவு அவன் தூங்கிய பின் பள்ளிக் குறிப்பேடுகளை எடுத்துப் பார்த்தான். சமீபத்தில் எழுதிய பக்கங்களிலெல்லாம் சிவப்பு மையால் கோடுகள், பெருக்கல் குறிகள். கையெழுத்தும் வழக்கம் போலின்றித் தடுமாற்றத்துடன் இருந்தது.

“எதிர்பார்த்தது தான் குணா. இத்தனை நாள் நாம பாத்தது உடம்புல இருந்த சிம்ப்டம்ஸ். இப்ப மூளையில” என்று கணினியை மூடிவிட்டுச் சொன்னாள் சத்யா.

“ஒன்னும் பண்ண முடியாதா?” அந்தக் கேள்விக்கான பதிலை குணா ஏற்கெனவே அறிந்திருந்த போதும் கேட்டான்.

சத்யா தலையாட்டினாள். “பாக்கலாம். என்ன பண்ண முடியும்னு தெரியலை.”

“இதுவரைக்கும் அர்ச்சனாகிட்ட எதையும் சொல்லலை. எத்தனை நாளைக்கு இப்பிடியே சமாளிக்க முடியும்? அடுத்து என்னாகும்?”

மீண்டும் கணினியை உயிர்ப்பித்தவள் நிதானமாகத் தேடினாள். தோள்களைக் குலுக்கியபடி பெருமூச்செறிந்தாள் “வேணாம் குணா. இதெல்லாம் படிச்சு உங்கிட்ட சொல்லி பயமுறுத்த விரும்பலை. நீயா தேடிப் படிக்கவும் வேணாம். வீண் குழப்பந்தான். வரும்போது பாத்துக்கலாம். விடு.”

இரண்டு நாட்கள் கழித்து யுகன் தூங்கிய பின் அர்ச்சனா வெகுநேரம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். தேவனிடம் மன்றாடும் அவளது குரலில் அச்சம் தெறித்தது. சிலுவையிட்டபடி உள்ளே வந்தவள் அவனருகில் அமர்ந்தாள்.

கண்களை மூடிப் படுத்திருந்த போதும் அவள் அவனது முகத்தையே உற்றுப் பார்த்திருப்பதை அறிந்தான்.

“நீங்க எங்கிட்ட எதையோ மறைக்கறீங்கன்னு தெரியுது குணா.”

கண்ணைத் திறந்தான். அவளது கண்ணீர்த் துளிகள் புறங்கையில் விழுந்தன. எழுந்து அமர்ந்தான்.

“உள்ளுக்குள்ளேயே வெச்சுட்டு நீங்க மட்டும் தனியா அனுபவிக்க வேணாம். எதுன்னாலும் எங்கிட்ட சொல்லுங்க. அவன் முன்ன மாதிரி இல்லைன்னு எனக்குத் தெரியாதா? தெனந்தெனம் உங்கள விட அவனை நான் கூடுதலா பாக்கறேன். பக்கத்துலயே இருக்கேன். என்னால தெரிஞ்சுக்க முடியாதா? சத்யா என்ன சொல்றாங்க? நானே கேட்டுருவேன். ஆனா…”

சிறு நீல விளக்கின் ஒளியில் மாதாவின் முகம். கருணை ஒளிர்ந்து கனிகிறது. என்ன சொல்ல இவளிடம்?

“ஒன்னில்லம்மா. அடிக்கடி ஒடம்புக்கு வருதேன்னு…” குணாவால் அவள் கண்களைப் பார்க்க முடியவில்லை.

“அவன் சாதாரணமா இல்லேங்க. இப்பல்லாம் பேசறதுக்கே கஷ்டப்படறான். என்னவோ சொல்ல வந்துட்டு அது முடியாம தெணர்றான். அவனுக்கு என்னன்னு உங்களுக்குத் தெரியும். எங்கிட்ட சொல்லிருங்க. இதுக்கு மேல முடியாது. எதுன்னாலும் பரவால்லே.” அவள் எழுந்து மாதா படத்தின் கீழே நின்றாள். கைகள் சிலுவையிட்டன.

எழுந்து வெளியே வந்தான் குணா. கூடத்திலிருந்த கர்த்தரின் படத்தருகே நின்றான். அருகில் வந்த அர்ச்சனா அவன் கைகளைப் பற்றினாள்.

0

டெட்டால் வாசனையுடன் கையைத் துடைத்தபடி வந்த சத்யா குணாவின் தோளைத் தொட்டாள்.

“சட்டையைக் கொஞ்சம் கழட்டறியா குணா?”

திடுக்கிட்டவனாய் நிமிர்ந்தான் “என்ன சொல்றே?”

“டாக்டர்கிட்ட கேள்வி கேக்கக்கூடாது. சொன்னதைச் செய்.”

“நான் உன்கிட்ட வைத்தியம் பாக்க வந்த நோயாளி இல்லை. வெளையாடாதே சத்யா. என்ன விஷயம்?”

தோளில் வைத்திருந்த கையை சற்றே அழுத்தவும் குணா எழுந்து நகர்ந்தான். “வலிக்குதில்லை. அதான் சொன்னேன். கழட்டு. பாக்கலாம்.”

“அது ஒண்ணுமில்லை சத்யா. சின்னக் காயந்தான். மருந்து போட்டுருக்கேன். சரியாயிடும்.”

“அதுக்குத்தான் பாக்கலாம்னு கேக்கறேன்” பிடிவாதத்துடன் அவன் அருகில் வந்தாள்.

மெல்ல பொத்தான்களை விடுத்து சட்டையைக் கழற்றினான் குணா. நாற்காலியில் அமர்ந்ததும் பின்னால் வந்து தோளை உற்று நோக்கினாள் சத்யா. இடது தோளில் கந்திப் போன பற்தடங்கள். கூடவே காய்ந்து கருத்துப் போன தழும்புகளும். வலது தோளிலும் சிறிதும் பெரிதுமாய் கடித்த தடங்கள்.

டெட்டால் கலந்த வெதுவெதுப்பான நீரில் பஞ்சுக் கற்றையை நனைத்துத் துடைத்தாள். பழுப்பு நிறக் களிம்பைப் பூசியவள் மேசையிலிருந்த மருந்துப் புட்டிகளுக்கு நடுவே ஊசி மருந்துகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள். சிறு கத்தியின் நுனியால் சன்னமாய் அதன் தலையில் தட்டியதும் சிணுங்கென்று உடைந்து தொட்டிக்குள் விழுந்தது. ஊசியால் மருந்தை உறிஞ்சி லேசாக அழுத்தினாள். நுனியிலிருந்து துளிகள் சீறித் தெறித்தது. இடது புஜத்தில் செருகி மருந்தை உட்செலுத்தினாள்.

“இன்னிக்கு நான் கேக்கலைன்னா இப்பிடியே கடிபட்டுட்டே இருப்பே. இதுவும் பாய்சன்தான்னு தெரியாதா உனக்கு?”

சட்டையை மாட்டியபடி கேட்டான் “உனக்கெப்படித் தெரியும்?”

“ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்கு வந்தப்ப நீ குளிச்சிட்டு வெளியே வந்தே. அப்பப் பாத்தேன். இதுமாதிரி கடிப்பாங்கன்னு படிச்சிருக்கேன். ஆனா யுகன் விஷயத்துல நான் யோசிக்கவே இல்லை. எப்பிடித் தாங்கிட்டே?”

கதறி அழும்போது அவனைத் தூக்கிக் கொண்டவுடன் தோளில் சாய்பவன் சற்று நேரத்திற்கெல்லாம் பற்களைப் பதித்து பலம்கொண்ட மட்டும் கடிப்பதை ஒருகணம் எண்ணிப் பார்த்தான். “வலி தாங்க முடியாமதானே அவன் கடிக்கறான். மொதல்ல ரெண்டு நாள் உதறி கீழே இறக்கினேன். ஆனா அதுக்கப்பறந்தான் தெரிஞ்சுது. என்ன செய்யறதுன்னு தெரியாமதான் கடிக்கறான்னு. அதுக்கப்பறம் எனக்கு வலிக்கல சத்யா.”

“முட்டாள்மாதிரி பேசாத. கடிக்கறான்னு தெரிஞ்சா அவனைத் தூக்காமல்ல இருக்கணும்.”

“உசுர் போற மாதிரி அழும்போது வேறென்ன செய்ய முடியும்?”

கைகளைத் துடைத்தபடி அமர்ந்தவள் அவன் முகத்தைப் பார்த்தவாறே சொன்னாள் “நேத்திக்குப் பெரியம்மா வந்திருந்தாங்க. ஏற்கெனவே சொல்லிருக்கேன். அப்பாவும் சொல்லிருக்காங்க. பேரனுக்கு இப்பிடி ஆயிருச்சேன்னு கவலைப்படறாங்க. ஆனா வந்து பாக்கக்கூடாதுன்னு பிடிவாதம். ரோஷம். நீயாச்சும் கொஞ்சம் விட்டுக் குடுக்கலாமில்ல.”

குணா சிரித்தான் “விட்டுக் குடுக்கறதா? இப்பவும் அவங்களுக்கு அர்ச்சனா வேண்டாம். நான் வேணும். எம் புள்ள வேணும். என்ன சத்யா இது. நியாயமா இருக்கா?”

சத்யா தலைமுடியை ஒதுக்கினாள். சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். “கொழந்தை இப்பிடி இருக்கான்னு தெரிஞ்சும் பிடிவாதமா இருக்காங்கன்னா… என்ன சொல்றது? விடு.”

0

“கர்த்தரே, நல்ல மேய்ப்பரில்லையா நீங்கள். உம் தூயகத்திலிருந்து யாரையேனும் உதவிக்கு அனுப்புவீராக. மடி நிறையக் கிடக்கிறான் உம் மைந்தன். அவனுக்குப் பசி. அழுகிறான். அவனது வாதை உமக்குத் தெரியவில்லையா? அவனது கதறல் உம் காதில் விழவில்லையா? அவனைக் கீழே கிடத்திவிட்டு பால் கலக்க முடியாது. வலிக்கும். அழுவான். என் மடிமேல் கிடந்தால் அவனுக்கு வலியில்லை. இப்படியே மடியில் போட்டுக்கொண்டு என்னால் என்ன செய்யமுடியும் என் தேவனே…”

திறந்திருக்கும் வாசற்கதவைப் பார்த்தபடியே அர்ச்சனா கதறிக் கொண்டிருந்தாள். மடிகொள்ளாமல் கிடந்தான் யுகன். எட்டு வயதுக்குரிய உடல். மருண்ட கண்களுடன் உதடுகளைச் சுழித்துக்கொண்டு குழந்தையாய் சிணுங்கியிருந்தான். அர்ச்சானவின் இடது தொடை மெல்ல அசைந்திருந்தது. கண்ணீர் வழிந்து காதோரத்தில் வழிந்து நைட்டியை நனைத்தது. கழிவைச் சுத்தப்படுத்தி உடம்பைத் துடைத்து பவுடர் போட்டு முடித்த நேரத்தில் அவன் அழத் தொடங்கிவிட்டான். சிணுங்கலோ விசும்பலோ அல்ல. தொடக்கமே உயிரை உலுக்கும் அழுகைதான். விண்ணென்று கழுத்து நரம்புப் புடைக்க குரலுயர்த்திக் கதறுவான். கண்களை மூடிக்கொண்டு கைகள் இரண்டையும் நாம்பியபடி அழும்போது அடிவயிறு பதறும்.

“தேவனே, எப்போதும் எனக்கிரங்கும் நீரே இப்போதும் கைகொடுக்கவேண்டும். உன் ராஜ்ஜியத்தில் யாரும் நிர்கதி அடைவதில்லை. ஒவ்வொரு தாகத்தின்போதும் நீராக வந்து உயிர் நனைத்த உம் கருணை இப்போதும் இங்கிரங்க வேண்டும்.”

வாசலில் நிழலாடியது. தயக்கத்துடன் எட்டிப் பார்த்த இருவரைக் கண்டதும் அர்ச்சனா கிறிஸ்துவின் படத்தைப் பார்த்துத் தலை தாழ்த்தினாள். கை தானாகக் காற்றில் சிலுவையிட்டது.

“எம்மை கைவிடமாட்டீர் என்று தெரியும் பிதாவே. இதோ வந்துவிட்டார்கள் மீட்பர்கள். வாங்க. கர்த்தர்தான் இந்த நேரத்தில உங்களை இங்க அனுப்பிச்சிருக்காங்க.”

அர்ச்சானவின் தோற்றமும் மொழியும் வந்தவர்களைத் தயங்கச் செய்தன.

“குணா சார் வீடுதானே?” இளம்பெண் துப்பட்டாவை சரிசெய்தபடியே உள்ளே எட்டிப் பார்த்தாள். உடனிருந்தவன் ஷுவைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தான்.

“ஆமா. உங்க குணா சார் வீடுதான். வாங்க. ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும். ப்ளீஸ். கிச்சன் மேடையில பால் கலந்து வெச்சிருக்கேன். கொஞ்சம் எடுத்துத் தர முடியுமா? இவனை கீழ படுக்கவெச்சா மறுபடி அழுவான்.” கெஞ்சலுடன் அர்ச்சனா கை நீட்ட அவள் உள்ளே நடந்தாள்.

வீட்டுக்குள் சுழன்ற காற்றிலிருந்த வீச்சத்தை உடனடியாக உணர்ந்தவள் போல் மூக்கை மூடினாள். மேடையிலிருந்த பால்புட்டியைக் கண்டதும் ஒருகணம் தயங்கினாள்.

“அதான். அந்தப் பால்புட்டிதான். எடுத்துத் தாங்களேன்.” அர்ச்சனா தலைதிருப்பிச் சொன்னதும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

இளைஞன் கால்மடக்கி தரையில் அமர்ந்து யுகனைப் பார்த்தான். உருவத்துக்கும் அவன் கிடக்கும் கோலத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தது தான் என்றாலும் அவன் இப்படி எதிர்பார்க்கவில்லை. இளம்பெண்ணும் அருகிலேயே உட்கார்ந்தாள்.

“நாங்க ரெண்டு பேரும் குணா சார் ஆபிஸ்லதான் வேல பாக்கறோம். இன்னிக்கு ஒரு ரிசப்ஷனுக்காக இந்தப் பக்கமா வந்தோம். அப்பிடியே பாத்துட்டுப் போலான்னு வந்தோம். சார் சொல்லிருக்காங்க.”

யுகன் பாலைக் குடித்துத் துப்பினான். “குட்டிம்மாவுக்கு புடிக்கலையா? இல்லடா பட்டு. கொஞ்சமா குடிச்சுரு. அப்பறமா வேற மம்மு தரேன். குடிச்சுடு தங்கம். குடி.” தலையை சற்றே பின்னால் சாய்த்துப் பாலை அவனுக்குப் புகட்ட முயன்றவளின் முகத்தையே நம்ப முடியாமலும் அச்சத்துடனும் பார்த்திருந்தாள் இளம்பெண். கர்ரர்ரரர் எனத் தொண்டையிலிருந்து எழுந்த ஓசையுடன் வாயிலிருந்து வழிந்தது பால்.

வாயைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தவள் அவளைப் பார்த்து சொன்னாள் “இப்பிடித்தாம்மா. ஒரு மடக்கு குடிப்பான். அப்பிடியே துப்புவான். எப்பிடி பசி அடங்கும். கொஞ்ச நேரத்துல அழுவான். அழறதுக்காவது தெம்பு வேணுமில்ல.” பால்புட்டியை வைத்துவிட்டு மடியில் அவனை இன்னும் சரியாகக் கிடத்திக் கொண்டாள். யுகன் வயிற்றில் தலையை முட்டி சற்றே திரும்பினான்.

“உம் பேரு என்ன?” யுகனின் தலையைக் கோதியபடியே அர்ச்சனா கேட்டாள்.

“சஞ்சனா. சாரோட ஆபிஸ்லதான் இருக்கேன்.”

“என் பேரு சரவணன். முன்னாடியே பாத்துருக்கீங்க. என் கல்யாணத்துக்கு இவனை அழைச்சிட்டு வந்தீங்க.”

உற்சாகத்துடன் தலை நிமிர்த்தினாள். “ஆமா. அப்பல்லாம் துறுதுறுன்னு இருப்பான். ஒரு எடத்துல நிக்க மாட்டான். உன்னோட கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வந்தேனா? ரோஜாப்பூ மாதிரி இருப்பான்ல. எல்லாம் போச்சு. எப்பிடி ஆயிட்டான் பாருங்க. எல்லாமே தலைகீழா நடக்குது இவனுக்கு. அதப் பத்தியெல்லாம் உங்க குணா சாருக்கு கவலையே இல்லை. ஆபிஸ்தான் முக்கியம். இங்க எது எப்பிடி இருந்தாலும் பரவாயில்லை. ஆபிஸ் போயாகணும் அவருக்கு. ம்… நாலு நாளா வேலக்காரம்மா லீவு. அவங்க சொந்தத்துல என்னவோ விசேஷம். இன்னும் ரெண்டு நாளாகும். அதான் நான் இவனை இப்பிடி வெச்சுட்டு சிரமப்படறேன். நாள் பூரா யாராச்சும் வருவாங்க, ஹெல்ப் பண்ணுவாங்கன்னு உக்காந்திருப்பேன். துணி துவைக்கணும். தூங்க வெக்கணும். நெறைய வேலை. நான்தான் செய்யணும். இவர் எப்பவும்போல ராத்திரிதான் வருவார்.”

சரவணன் பேச்சை மாற்ற விரும்பியவனாய் சிறு தயக்கத்துடன் கேட்டான் “நீங்களும் எங்க ஆபிஸ்லதானே வேல பாத்தீங்க?”

அவள் முகத்தில் மகிழ்வின் சிறு கீற்று மின்னலிட்டு மறைந்தது. “ம்… அதெல்லாம் இப்ப எனக்கு ஞாபகத்துலயே இல்லை.” அவள் விரல்கள் யுகனின் தலைமுடியை மெல்லக் கோதியிருக்க பால்புட்டியை உற்றுப் பார்த்தாள். ”அவரை நான் மீட் பண்ணினது ஒரு ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு. உங்களுக்குத்தான் தெரியுமே. ஸ்போர்ட்ஸ் கிளப் செக்ரட்டரி. இப்பவும் அவர்தானே? வெள்ளை டீ சர்ட்டும் பேண்டும் போட்டுட்டு டிரிம்மா நின்னாரு. நான் வாலன்டியர். வேலையில சேர்ந்து எட்டு மாசந்தான் ஆயிருந்துச்சு. அன்னிக்கு நல்ல வெயில். தாங்க முடியலை. ஷாமியானா பந்தல்ல உக்காந்து ரெண்டு நிமிஷங்கூட ஆகலை. அங்க வந்து நின்னு என்னைப் பாத்து கத்த ஆரம்பிச்சுட்டார். ‘நெழல்ல வந்து உக்கார்றதுன்னா எதுக்கு இந்த வேலைக்கு வரணும்? கோ டு யுவர் பொசிஷன்.’ எனக்கு செம கோவம். என்ன இந்த ஆளு இப்பிடி வந்து மேனர்சே இல்லாம கத்தறார்னு. மொறைச்சுட்டே எந்திரிச்சுப் போனேன். அன்னிக்கு முழுக்க அவர் என்னை மொறைக்கறதும் நான் மூஞ்சியத் திருப்பிக்கறதுமாப் போச்சு.”

யுகன் வாயிலிருந்து பால் வழிந்தது. ஓரத்தில் கிடந்த சிறு துவாலையை எடுத்த நிதானமாகத் துடைத்தாள். மடித்து வைத்தவள் நிமிர்ந்து பார்த்தாள். மறுபடியும் உதட்டில் புன்னகை “ஒரு வாரம் கழிச்சு திடீர்னு ஒருநாள் எங்க வீட்ல வந்து பொண்ணு கேட்டாரு. என்கிட்டகூட சொல்லலை.”

மடியில் கிடக்கும் மகனை மறந்து உற்சாகத்துடன் பேசியவளின் முகமே ஒளி கொண்டிருந்தது.

“ம். உங்க வீட்ல என்ன சொன்னாங்க?”

“அப்பா அம்மாவுக்கு இஷ்டமில்லை. ஜாதிவிட்டே தரமாட்டாங்க. இதுல இவர் கிறிஸ்டியன் வேறயா. முடியாதுன்னு மூஞ்சில அடிச்சமாரி சொல்லிட்டாங்க.”

“நீங்க என்ன சொன்னீங்க?”

சஞ்சனா கேட்டதும் சற்றே வெட்கத்துடன் தலை குனிந்தபடி சொன்னாள் “செம கோவம் எனக்கு. எந்த மூஞ்சிய வெச்சுட்டு லவ் யூ சொல்றான்… வீட்ல வந்து பொண்ணு வேற கேக்கறான் இவன்னு பதில் சொல்லாம போயிட்டேன். கூட இருந்த லதா அக்கா கட்டிப் புடிச்சுட்டு சொன்னாங்க. ‘நீ ரொம்ப லக்கிடீ. ஒரு தடவை திரும்பிப் பாக்க மாட்டாரான்னு நாங்க எல்லாம் தவிச்சு கெடக்கறோம். உங்கிட்ட வந்து சிரிக்கறார் மனுஷன். விட்றாதே.’ எனக்கு அப்ப தெரியலை. ரெண்டு நாள்ல ஆபிஸ் பூராவும் விஷயம் பரவிடுச்சு. அவரப் பத்தி எனக்கும் தெரிய வந்துச்சு. மூனாவது மாசமே தாமஸ் சர்ச்சில வெச்சி கல்யாணம். ரெண்டு வீட்லேர்ந்தும் யாரும் வர்லை”

கன்னத்தில் நீர் வழிந்தது. உதடுகள் நெளிய விசும்பினாள் “ஆனா இப்பத்தான் தப்பு பண்ணிட்டேனோன்னு வருத்தப்படறேன். எம் புள்ளை இப்பிடி ஒரு நிலைமையில இருக்கறது தெரிஞ்சா எங்க வீட்ல சும்மா இருப்பாங்களா? அவங்க பேச்ச கேக்கலைங்கறதுக்காக யாரும் எட்டியே பாக்க மாட்டேங்கறாங்க. எல்லாம் நான் செஞ்ச பாவம். எங் கொழந்தையை இப்பிடி வாதிக்குது. ஆனா உங்க சார், குணா சார், இதப் பத்தியெல்லாம் கவலையே படாம சூட்டும் கோட்டுமா ஆபிஸ் கௌம்பி வந்துர்றார்.”

யுகன் மெல்ல உடல் நெளித்து அழத் தொடங்கினான். உடலை முறுக்கித் தலையைத் திருப்பி கைகளை உதறிக் கொண்டு அழுதான். உக்கிரமான அழுகையைக் கேட்டவுடன் சஞ்சனாவின் உடல் நடுங்கியது. வலியே குரலாகப் பீறிட்டு வெடித்து சுவர்களின் மோதித் தெறித்தது.

“சேர்டா செல்லம். இங்க பாரு. என்ன வேணும் உனக்கு?” கண்ணில் நீர் வழிய கால்களை நீட்டி அவனை நேராகக் கிடத்தினாள் அர்ச்சனா. உடலை முறுக்கியபடி கைகளை அவன் காற்றில் வீச அவளது முகத்தில் வேகமாய் மோதியது. ஒருகணம் சற்றே பின்வாங்கியவள் நொடியில் தலையைத் தாழ்த்தி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மார்பை நீவினாள்.

“ஏன் இப்பிடி அழறான்?” சரவணன் செய்வதறியாமல் திகைத்திருந்தான்.

“எதுக்கு அழறான்னு உங்க சார்கிட்ட போய் கேளுங்க. எங்கிட்ட சொல்லிட்டா அழறான்?” முகத்தை வெடுக்கெனத் திரும்பிப் பார்த்து சீறினாள். யுகனின் உடல் துள்ளி நெளிந்தது.

சரவணன் அவன் கால்களைப் பற்றினான். சூடு கொதித்தது.

“சரியாயிடும். ரெண்டு நிமிஷம் இப்பிடி வீர்னு கத்துவான். அப்பிடியே ஓஞ்சுருவான். எங்க வலிக்குது என்ன செய்யுதுன்னு ஒண்ணும் தெரியாது. அப்பிடியே துடிச்சுப் போயி கத்துவான். உடம்பு இப்பிடித்தான் கொதிக்கும். என்ன பண்ண முடியும் என்னால? அந்த ஆண்டவரே கைவிட்டுட்டார். யாரைச் சொல்லி என்ன பண்ண முடியும்?” மார்பை நீவியபடியே அர்ச்சனா சொல்லிக் கொண்டிருக்க சஞ்சனா குலுங்கி அழுதபடி எழுந்தாள்.

உடலின் முறுக்கம் மெல்லத் தளர அழுகை அடங்கத் தொடங்கியது. சரவணன் கைகளை விடுவித்தபோது கால்கள் துவண்டு சரிந்தன.

“இப்பிடியே கொஞ்சம் புடிப்பா. பெட்ல படுக்க வெச்சர்லாம்.”

சுருட்டி வைத்திருந்த சிறிய மெத்தையை சஞ்சனா விரித்தாள். “இதக் கொஞ்சம் மேல விரிச்சிரும்மா…” அர்ச்சனா ரப்பர் ஷீட்டை நீட்டினாள். அதன் மேல் மெல்லிய போர்வையை மடித்துப் போட்டு அவனைக் கிடத்தியபோது அழுகை முற்றிலுமாய் அடங்கியிருந்தது. கண்கள் எங்கோ வெறித்து நின்றன. வாய் சற்றே கோணி எச்சில் வடிந்தது. அர்ச்சனா அவன் சட்டையை சரிப்படுத்திய போது “ம்ம்…ங்கா” என்றான்.

“இப்பிடித்தான் எப்பவாச்சும் சத்தம் வரும். உனக்குத் தெரியுமே, எப்பிடி பேசுவான் இவன்? அப்பிடியே அட்சர சுத்தமா, மழலையே இல்லாத மாதிரி தெளிவா கணீர்னு பேசுவானே. இப்ப அம்மான்னுகூட சொல்ல வர்ல.” அழுகையுடன் குரல் இடற மெல்ல எழுந்தாள்.

“கொஞ்சம் பாத்துக்கப்பா. பாத்ரூம் போயிட்டு வரேன். காலைலேர்ந்து எழுந்திருக்கவே வழியில்லை. ஏம்மா ஒரு உதவி பண்ணு. அடுப்புல கொஞ்சம் பால் இருக்கு. சூடு பண்ணி அந்த பிளாஸ்க்ல ஊத்தி இங்க கொண்டுவந்து வெச்சுரு. இனியொரு தடவை அழறதுக்கு முன்னாடி கொஞ்சம் குடுத்தர்றேன்.” தளர்வுடன் மெல்ல நடந்தாள்.

‘ங்கா..’ காற்றில் ஒருமுறை கையை வீசிய யுகன் உதடுகள் நெளிய சிரித்தான்.

பிரார்த்தனைக் குரலுடன் உள்ளே நகர்ந்தவளைப் பார்த்திருந்த சஞ்சனா கண்ணீரைத் துடைத்தாள்.

0

யுகனின் நெற்றியில் சிலுவையிட்ட பின் கண்மூடி நின்றார் பங்குத்தந்தை. அவரது உதடுகள் நிதானமாக பிரார்த்தித்தன.

“தேவனின் ஆசிர்வாதங்கள் அனைத்தும் இவரை ஸ்வஸ்திப்பதாக. இத்தனை காலமும் இவரது பாதையில் எதிர்ப்பட்ட துஷ்ட ஆவிகள் அனைத்தும் விலகிப் போக தேவனின் மகிமை கைகூடட்டும். துன்பத்தின் கனிகள் ஒருபோதும் தூயவர்களைத் தீண்டாது. ஒருபோதும் இனி இந்த வீட்டைக் கெட்ட ஆவிகள் அணுகாது. இவன் இனி அமைதி கொள்ளட்டும். வாதையிலிருந்து விடுதலையாகி வானின் ஒளியைக் காணட்டும். தேவனின் இனிய சங்கீதம் இவன் காதில் ஒலிக்கட்டும்.”

யுகன் வெறுமனே கிடந்தான். விழிகள் எங்கோ பார்த்தபடி அசைவற்று நிலைத்திருந்தன. தலை பெருத்து மூட்டுகள் வீங்கி தடித்த மூக்கும் உப்பலான வயிறுமாக அர்ச்சனாவின் மடியில் கனத்துக் கிடக்கிறான். உதடோரத்தில் வழிந்த எச்சிலைத் துடைத்த அர்ச்சனா கைகூப்பினாள். கண்ணீரை மறந்திருந்தாள். உயிர்ப்பிழந்த கண்கள். கருத்து வெடித்த உதடுகள். மடியில் கிடக்கும் கொடுந்துயரின் சுமையில் அவளும் களைத்திருந்தாள்.

வாசலுக்கு வந்ததும் பங்குத்தந்தை குணாவின் தோளில் கைவைத்தார் “பொறந்த கொழந்தை மாதிரியே ஆயிட்டானே. கடவுள் இப்பிடியும் சில நல்ல ஆத்மாக்களை சோதிக்கறார். அர்ச்சனாவ இப்பிடிப் பாக்கறதுக்கு வேதனையா இருக்கு. கண் முன்னாடி பெத்த பிள்ளை இப்பிடி குழந்தையா சுருங்கி கஷ்டப் படறதைப் பாத்தா யாராலதான் தாங்க முடியும்? கர்த்தர் மேல பாரத்தைப் போட்டுட்டு ரெண்டு பேர்த்தையும் ஜாக்கிரதையா பாத்துக்க குணா.”

குணா உள்ளே வந்தபோது அர்ச்சனா பைபிளுடன் இருந்தாள். யுகனின் விழிகள் எங்கோ வெறித்திருந்தன. நாக்கை நீட்டி உதட்டைச் சப்பிக்கொண்டிருந்தான்.

குணா அருகில் அமர்ந்தான். சற்றே மடங்கின இடதுகால் விரல்களைத் தொட்டான். ‘கிலுக்’கென்ற சிரிப்பு. தாடையில் வழிந்த எச்சிலைத் துடைத்தபோது மறுபடி சிரித்தான்.

அர்ச்சனா தேம்பியவாறே வாசித்தாள்.

“ஒழிக நான் பிறந்த அந்த நாளே. ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே. அந்த நாள் இருளாகட்டும். மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும். காரிருளும் சாவிருட்டும் அதைக் கவ்விக் கொள்ளட்டும். கார்முகில் அதனை மூடிக்கொள்ளட்டும். அவ்விரவைப் பேயிருட்டு பிடிப்பதாக. ஆண்டின் நாள் கணக்கினின்று அது அகற்றப்படுவதாக. அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும். அதன் விடியற்கால விண்மீன்கள் இருண்டு போகட்டும்.”

0

மின்விசிறிக் காற்றில் அசைந்த வண்ண பலூன்களையும் காகிதப் பூக்களையும் பார்த்துச் சிரித்தான் யுகன். பற்கள் உதிர்ந்து ரோஜா நிற ஈறுகள் பளிச்சிட்டன.

அகலமான தட்டின் நடுவில் கேக்கை வைத்து எடுத்து வந்தாள் அர்ச்சனா. “குட்டி,  சிரிக்கறியா. அம்மா இதோ வரேன்.”

கால்களை ஒருமுறை காற்றில் உதைத்து மீண்டும் சிரித்தான்.

“குணா. எங்கிருக்கே நீ. நேரமாச்சு வா. அப்பறம் அவன் அழ ஆரம்பிச்சிட்டா எதுவும் பண்ண முடியாது.”

கேக்கில் மெழுகுவர்த்திகளைக் குத்தினாள்.  மெழுகுவர்த்தியை செருகும்போது ஒருகணம் நிதானித்தாள்.

கர்த்தரின் படத்தின் கீழே நின்ற குணா மேசையின் மீதிருந்த பைபிளை எடுத்தான். கண்மூடி பிரார்த்தித்தபடியே திறந்தான். கண்களைத் திறந்து கண்ணில் பட்ட வசனத்தைப் படித்தான்.

“பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன். பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும். குள்ள நரிகளும் தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்.”

“அவனை நீங்க எடுத்து வெச்சுக்கறீங்களா? நான் கேக் வெட்டறேன்” அர்ச்சனா மெழுகுவர்த்திகளை ஏற்றினாள்.

யுகனைத் தூக்கித் தன்மேல் சாய்த்தபடி தூக்கிக்கொள்ள அர்ச்சனா கேக்கை வெட்டினாள். “ஹேப்பி பர்த் டே டு யூ. ஹேப்பி பர்த் டே டு யூ. ஹேப்பி பர்த் டே டு யுகன். ஹேப்பி பர்த் டே டு யூ.” இருவரும் உரத்த குரலில் பாடவும் விழிகளை உருட்டிச் சிரித்தான் யுகன். பலூனொன்று காற்றில் அசைந்து பட்டென்று வெடித்தது. ஒருகணம் திடுக்கிட்டு அசைந்தவன் கெக்கலித்துச் சிரித்தான்.

சிறு துண்டு கேக்கை எடுத்து அவன் வாயில் வைத்தாள் அர்ச்சனா. கண்களில் கோர்த்திருந்த நீரில் மெழுகுவர்த்தியின் ஒளி பளபளத்தது. கேக்கின் தித்திப்பை உணர்ந்த நொடியில் நாக்கைச் சுழற்றி உதடுகளைச் சப்பினான்.

சுமந்திருக்க முடியாது அவனை படுக்கையில் கிடத்தியதும் நீண்டு தடித்த கால்களை உதைத்தபடி அழத் தொடங்கினான்.

“ஓகே ஓகே. டாடி இங்கதான் இருக்கேன்.” என்றபடி அவன் அருகில் அமர்ந்தான்.

அர்ச்சனா கேக் தட்டை கர்த்தரின் மேசையின் மேல் வைத்தவள் கைகளைத் துடைத்து விட்டு கண்மூடி நின்றாள்.

யுகனின் அழுகை வலுத்தது. கால்களை உதைத்தபடி கதறத் தொடங்கினான்.

0

நள்ளிரவில் அர்ச்சனாவின் அழுகையொலி அனைவரையும் எழுப்பியது.

தரையில் படுத்திருந்த குணா எழுந்து பார்த்தபோது அர்ச்சனா யுகனை மடியில் ஏந்தி அவன் கன்னத்தைத் தட்டிக் கொண்டிருந்தாள்.

“இவனப் பாரு குணா. எனக்கு பயமாயிருக்கு குணா. கண்ணு இங்க பாரு. அம்மா இருக்கேன் பாரு. ஆண்டவரே இவனைக் குடுத்துருங்க. எங்கிட்டே இருந்து பறிச்சிறாதீங்க.”

தளர்ந்து கிடந்த யுகனின் உடலை ஒருகணம் உற்றுப் பார்த்தான். அசைவற்றுக் கிடந்தது. மார்புகூட்டை வெறித்துப் பார்த்தான். ஏறித் தாழும் கணத்துக்காகக் காத்திருந்தான். வெகுநேரம் ஆனபோதும் அசையவில்லை. நடுக்கத்துடன் விரலை நாசியில் வைத்துப் பார்த்தான்.

“பாரு. நல்லா பாரு. மூச்சிருக்குதான்னு பாரு. என்னன்னு சொல்லாமயே எங் கொழந்தையை இப்பிடி பண்ணிட்டியே. பாவி. இதுக்குத்தான் பெத்து வளத்தேனா? இப்பிடித் தூக்கிக் குடுக்கத்தான் பாத்துப் பாத்து வளத்தேனா?”

அர்ச்சனாவின் அழுகை அவனைத் தொடவில்லை. உத்தரவாதமாய் தெரிகிறது தான். அடி வயிற்றில் இன்னும் சூடு இருக்கிறது. ஆனால் மூச்சில்லை.

“இரும்மா. சத்யாவை வரச் சொல்றேன்.” வெளியே வந்தவன் செல்போனை எடுப்பதற்கு முன்பாக கர்த்தரைப் பார்த்தான். விடிவிளக்கின் ஒளியில் அவரது புன்னகை அவனைத் தொட்டது.

மறுபடி உள்ளே போனபோது அர்ச்சனா யுகனின் உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னவாச்சும் பண்ணேன் குணா. சும்மாவே நிக்கறே. இவன் போயிட்டா நிம்மதின்னு பாக்கறியா? இவனுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். என்னவாச்சும் செய்யேன்டா.” ஆர்ப்பரித்துக் கத்தினாள்.

உள்ளங்கால்களை மடியில் வைத்து தேய்க்கத் தொடங்கியவன் குமுறி அழலானான்.

0

நீலமும் சிவப்புமான பிறந்த நாள் உடையுடன் பெட்டிக்குள் யுகன். பெருத்த தலையும் சிறுத்த உடலுமாய் அடங்கியிருந்தான். சவப்பெட்டியின் மேல் சிலுவையை அசைத்தபடியே இறுதி வாக்கை உச்சரித்திருந்தார் பாதிரியார். ‘ஆண்டவர் அளித்தார். ஆண்டவரே எடுத்துக் கொண்டார். அவனது தேவ ராஜ்யத்தின் மகிமைக்கு ஆட்பட்டுவிட்டான் பாலமைந்தன். விண்ணுலகின் ஒளியுடன் கலந்துபோனது அவனது தூய ஆவி. அவனது அருளாசி இல்லம் எங்கும் நிறையட்டும். நிம்மதி நிலவட்டும். இத்தனை நாளின் வாதையும்  கண்ணீரும் விலகிப் போகட்டும். எம் ஆண்டவனின் அருள் மட்டுமே இனி இங்கு நிறைந்திருக்கும். மைந்தனை அவன் கையில் ஒப்படைப்போம். அவனது நெடும்பயணத்தில் அனைத்தும் நலமாய் அமையும். ஆமென்” மீண்டும் சிலுவையை அசைத்து பிரார்த்தனை முடித்துவிட்டு பின்னகர்ந்தார் பாதிரியார்.

மயங்கிக் கிடந்தாள் அர்ச்சனா.

2

தேவாலயத்தின் மணி ஒலித்தது. வளைமுகட்டின் விளிம்பில் அமர்ந்திருந்த புறாக்கள் சடசடத்துப் பறந்தன. வண்ணக் கண்ணாடிகள் பதித்த ஜன்னல்களின் வழியாக உள்ளிறங்கியது சூரிய வெளிச்சம். அர்ச்சனா மண்டியிட்டுக் கண்மூடி பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்தாள். மலர்களின் மென்மையான வாசனை. மாதாவின் முகத்தை, அவள் கைகளில் ஏந்திய தேவ குமாரனின் மழலை முகத்தை மனத்தில் நிறுத்தினாள். தன்னை அன்பனாகத் தேர்ந்தெடுத்தமைக்கு ஆண்டவருக்கு நன்றி சொன்னாள்.

குணா சிலுவையிட்டபடி எழுந்தான். ஓசையெழுப்பாது பின்னகர்ந்து நிமிர்ந்து பார்த்தான். சுவரில் ஜன்னலுக்கு மேலாக நல்ல மேய்ப்பனின் ஓவியம். காற்றில் கலைந்த தலைமுடியும் தாடியுமாய் துரட்டிக்கோலுடன் நிற்கும் மேய்ப்பனின் முகத்தில்தான் எத்தனை கருணை! எல்லையில்லா அந்தக் கருணையின் ஒருதுளி தான் இப்போது எமக்கு வாய்த்திருக்கிறது.

அர்ச்சனாவின் முகத்தில் புத்தொளி. துயரத்தின் கரிய நிழல் விலகிய ஆசுவாசம். கண்களுக்குக் கீழே கருவளையங்கள். அருகில் வந்தவள் மேய்ப்பனைப் பார்த்தபடியே மெல்லச் சிரித்தாள்.

“என் வயித்துல மறுபடி அவனேதான் வந்துருக்கான் குணா. எனக்கு நல்லாத் தெரியுது.” தளர்ந்த அவள் குரலில் உற்சாகமும் குதூகலமும் துள்ளின.

அருகில் அமர்ந்ததும் தயக்கத்துடன் சொன்னாள் “ஆனா, பயமா இருக்குப்பா.”

குணா அவள் கையைப் பற்றி மெல்ல இறுக்கினான். “தைரியமா இரு. அவனையே தான் பெத்து வளக்கணும்தானே ஆசப்பட்டே? அதானே உன்னோட பிரார்த்தனை. நீ கேட்டதைத்தான் ஆண்டவர் குடுத்துருக்கார். எதுக்கு பயம்?”

வளைமுகட்டின் மையத்தில் அலங்கரித்த வேலைப்பாடுகளுக்கு நடுவே நின்ற தேவகுமாரனை ஏறிட்டுப் பார்த்தபடியே அர்ச்சனா கேட்டாள் “எல்லாம் நல்லபடியா அமையணும். சத்யா உங்கிட்ட என்னவோ சொன்னா. அதெல்லாம் எனக்குத் தெரிய வேண்டாம். எனக்கு எம் புள்ளைய நல்ல விதமா குடுத்துட்டா போதும்.”

ஆலயமணி மறுபடி ஒலித்தது.

மருத்துவமனையின் கூடத்திலிருந்த அன்னை மேரியின் வெண்ணிறச் சிலையருகே நின்றாள் அர்ச்சனா. மெழுகுவர்த்திச் சுடர்கள் காற்றில் அசைந்தன.

“நா இங்கயே வெயிட் பண்றேன். நீ போயிட்டு வா.” அர்ச்சனா அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.

கதவைத் தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான் குணா. சீனியர் டாக்டர் சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சத்யா திரும்பிப் பார்த்து உள்ளே வரும்படி தலையசைத்தாள்.

“வாங்க குணா. உக்காருங்க.” நரைத்த தலைமுடியும் தடித்த கண்ணாடியுமாக நாற்காலியில் சாய்ந்திருந்தவர் நிமிர்ந்தார்.

“வாழ்த்துகள் குணா. நல்ல செய்திதான் வந்திருக்கு. அர்ச்சனா எங்க?” டாக்டர் கைகளை நீட்டினார்.

அவர் கைகளைத் தளர்ச்சியுடன் பற்றிய குணா சிரித்தான் “வெளியில உக்காந்திருக்காங்க. வரச் சொல்லவா?”

அவசரமாகத் தலையாட்டி மறுத்தார் “வேண்டாம். வீணா குழப்பந்தான். அவங்களுக்கு இது என்னன்னு தெரியாம இருக்கறது நல்லதுதான்.”

தம்ளரில் தண்ணீரை நிறைத்துப் பருகிய சத்யா மடிக்கணினியின் திரையில் இருந்ததைக் கூர்ந்து படித்தபோது குணா கேட்டான் “என்ன செய்யணும் இப்ப? எனக்கு நெறைய சந்தேகம். குழப்பம். கொஞ்சம் பயமாவும் இருக்கு.”

கணினியை மூடினாள் சத்யா “நத்திங் டு வொரி குணா. பயப்படறதுக்கு ஒன்னுமில்லை. அர்ச்சனாவுக்கு இப்ப ரெண்டு மாசங்கூட முடியலை. இப்ப ஒரு டெஸ்ட் எடுக்கணும். தொப்புள் கொடில இருந்து சேம்பிள் எடுத்து யு.எஸ்ல இருக்கற லேபுக்கு அனுப்பினா போதும். பதினைஞ்சு நாள்ல சொல்லிடுவாங்க.”

அவள் நிறுத்தியதும் டாக்டர் பேனாவைச் சுழற்றியபடியே தொடர்ந்தார் “இந்த ஹன்டர் சிண்ட்ரோமைப் பொறுத்தவரை மொதல்ல பையனா இருந்து ரெண்டாவதும் பையன்னா கொஞ்சம் ரிஸ்க்தான். அதுவே ரெண்டாவது பொண்ணுன்னா அவ்வளவு பயப்பட வேண்டியதில்லை.”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குணாவுக்குத் தலைசுற்றியது. எதற்கு வேண்டாத இந்த வேலை. ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்து பறிகொடுத்த துக்கம் போதாதா? இன்னொரு முறையும் இந்த விஷப்பரிட்சை தேவையா? அர்ச்சனாவின் துக்கத்துக்கு மருந்தாக அமையும் என்று யோசித்தது தான். ஆனால் அதுவே இன்னொரு கொடுந்துக்கத்துக்கு பாதையாகிப் போனால் என்ன செய்வது? கர்த்தர் அமைக்கிற பாதை இது. அவர்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடக்கவேண்டியதுதான்.

“இதுவே உனக்கு மொதல்ல இருந்தது பெண் குழந்தைன்னா நான் வேண்டாம்னே சொல்லிருவேன். ஏன்னா இதுவரைக்கும் அப்பிடித்தான். முதல்ல பெண் குழந்தை பிறந்து அதுக்கு இந்த வியாதி இருந்தா ரெண்டாவது ஆண் பெண் எதுவானாலும் நிச்சயமா அதுவும் அந்த வியாதியோட தான் பிறக்கும். உன் விஷயத்துல அப்பிடி இல்லை. அதுவே பெரிய அதிர்ஷ்டம்தான்.”

தேவனின் ராஜ்ஜியத்தில் எல்லாமே அதிர்ஷ்டம்தான். அவன் பிறந்தவுடன் இருவரும் எத்தனை மகிழ்ந்தோம். ஒதுங்கி நின்ற உறவுகள் அனைத்தும் இவனைக் கண்டேனும் ஒட்டிக்கொள்வார்கள் என்று நம்பினோம். ஆனால் தேவனைத் தவிர உமக்கு யாருமில்லை என்று அனைவரும் ஒதுங்கியே நின்றார்களே. இப்போது அவர்களுக்கு திருப்தியாக இருக்கும். எங்களைப் பழிவாங்கிய நிறைவு இருக்கும்.

“நீதான் முடிவைச் சொல்லணும். மொதல்ல டெஸ்ட் எடுக்கறதுக்கு ஒத்துக்கணும். ரெண்டாவது ஒருவேளை அந்த டெஸ்ட் பாஸிட்டிவா இருந்துச்சுனா உடனே யோசிக்காம அபார்ஷன்தான். அதுக்கும் தயாரா இருக்கணும்.”

கலக்கத்துடன் இருண்ட அவன் முகத்தையே பார்த்திருந்த டாக்டர் முன்னகர்ந்தார் “குணா, உங்களுக்கு யோசிக்கறதுக்கு ரொம்ப டைம் இல்லை. ஏன்னா முடிவு தெரிஞ்சு அதுக்கப்பறம் அதை டெர்மினேட் பண்றதுன்னா கொஞ்சம் சீக்கிரமா பண்ணணும். இல்லைன்னா உங்க மனைவிக்கு ஆபத்து. நான் சொல்றது புரியும்னு நெனக்கறேன்.”

சத்யா அவன் தோளைத் தொட்டாள். கண்களை மூடித் திறந்தவன் தண்ணீரை எடுத்துக் குடித்தான். நிமிர்ந்து டாக்டரின் முகத்தைப் பார்த்தான். அர்ச்சனாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

“என்ன சத்யா இது? என்னவோ சொல்றீங்க. இதெல்லாம் ஏன்? என்னமாதிரி பிரச்சினை? எனக்கு ஒன்னுமே வேண்டான்னு தோணுது.”

சத்யா அவன் தோளைத் தொட்டாள். மடிக்கணினியைத் திறந்து காட்டினாள். “இங்க பாரு. இன்னிக்கு உன்னைமாதிரி உலகத்துல எத்தனை லட்சம் பேர் இருக்காங்க பாரு. இதனால பாதிக்கப்பட்டவங்களுக்குன்னு ஒரு சொசைட்டியே இருக்கு. நெறைய அட்வைசஸ் தராங்க. குறிப்பிட்ட ஸ்டேஜ்குள்ள கண்டுபுடிச்சிட்டா ட்ரீட் பண்ணவும் முடியுங்கறாங்க. இதெல்லாம் டெஸ்ட் பாஸிட்டிவா இருந்தா மட்டுந்தான். இல்லேன்னா எதைப் பத்தியும் நாம கவலப்படவே தேவையில்லை.”

குணா கழுத்துச் சங்கிலியில் இருந்த சிலுவைத் தொட்டுக்கொண்டான். இனி இதுதான் வழி. வேறு மார்க்கமில்லை. யோசிப்பதிலும் பயனில்லை. எழுந்து நின்றபடியே சொன்னான் “எல்லாம் ஆண்டவன் விட்ட வழிதான் டாக்டர். எப்பிடியிருந்தாலும் டெஸ்ட் எடுக்கறதுதான் சரி. நீங்க தேதியை ஃபிக்ஸ் பண்ணுங்க. பண்ணிரலாம். அர்ச்சனாகிட்ட நான் சொல்லிக்கறேன்.”

வெளியே வந்தபோது அர்ச்சனா மேரியின் சிலையருகே தலைகுனிந்து நின்றிருந்தாள். மெழுகுவர்த்திகளின் அசையும் சுடர்களின் ஒளி அவள் முகத்தில் விழுந்திருந்தது.

0

கண்களை மூடியபடியே அடியெடுத்து நடந்த குணாவின் கையைப் பற்றியிருந்த அர்ச்சனா எச்சரித்தாள் “கண்ணைத் தெறக்கக்கூடாது. நான் சொல்ற வரைக்கும் அப்பிடியே வரணும்.” குரலில் இழைந்திருந்தது சந்தோஷம்.

படுக்கையறையாக இதுவரை பயன்படுத்தியிருந்த கிழக்குப்பக்க அறையை ஒரு வாரத்துக்கு முன்பே தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டாள். கூடத்தையொட்டி வலதுபக்கம் இருந்த அறையில் கட்டிலைப் போடச் செய்தாள். அன்றிலிருந்து அந்த அறைப்பக்கமாய் எட்டிப் பார்க்கவும் அவள் அனுமதிக்கவில்லை.

கதவைத் திறந்து மெல்ல அவன் முதுகில் கைவைத்து உள்ளே நகர்த்தியபடியே சொன்னாள் “இப்ப மெதுவா கண்ணைத் திறந்து பாரு.”

குணா கண்களைத் திறந்தான். இருட்டு.

“ஒண்ணுந் தெரியலையா?” அர்ச்சனா குதூகலத்துடன் கேட்டபடியே சிரித்தாள்.

“இரு இரு. லைட்டைப் போடறேன்.” மின்விளக்கின் விசையைத் தட்டும் ஓசை. நொடியில் வெளிச்சம் அறையை நிறைத்தது.

முற்றிலும் வேறொரு அறையாகியிருந்தது. மெல்லிய ரோஜாவண்ணத்தில் சிறிய பூக்களுடன் அசையும் திரைச்சீலைகள். இளமஞ்சள் வண்ணமடித்த சுவரில் பசிய இலைகளுடன் வளைகொடிகள். சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சிகள். சிறிய அழகான படுக்கை. அலமாரியில் விதவிதமான பொம்மைகள். சிவப்பு கரடி பொம்மைக்கு அருகில் சோட்டா பீம் கைகளைக் கட்டி நிமிர்ந்திருந்தான். யானைகளும் குதிரைகளும் டைனோசர்களும் நின்றிருக்க கீழ்த் தட்டில் வண்ணங்கள் ஒளிரும் கார்களும் சைக்கிள்களும். அறைவாசலுக்கு இடதுபுறமாய் மூலையில் நடைவண்டி. ஒலிக்கும் மணிகளுடன் சக்கர நடைவண்டி.

“குட்டியோட ரூம். எப்பிடி ரெடி பண்ணிருக்கேன் பாரு. நல்லா இருக்கா?” பெருமையுடன் முகம் பார்த்தாள்.

குணாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. “என்ன வேலை செஞ்சிருக்கே நீ. எங்கிட்ட ஒண்ணுமே சொல்லலை.”

“சர்பிரைஸா இருக்கட்டுமேன்னுதான். வயித்துலேர்ந்து வெளிய குதிச்சிட்டா அவன் எங்கயும் நகரவிடமாட்டான். அதான் வேணுங்கறதெல்லாத்தையும் இப்பவே வாங்கி வெச்சிட்டேன்.” கன்னத்தில் கைவைத்தபடி துள்ளினாள்.

குணா அவள் காதைப் பற்றி செல்லமாய் திருகினான் “எங்கிட்ட சொல்லிருந்தா நானும் ஏதாவது செஞ்சிருப்பேன்ல.”

அருகில் வந்தவளை அணைத்தபடியே கட்டிலில் அமர்ந்தான். இரண்டு வாரத்தில் நிறைய மாறியிருந்தாள். அழுகையும் சீற்றமுமாய் அச்சப்பட வைத்திருந்த அர்ச்சனா காணாமல் போயிருந்தாள். கன்னங்கள் மின்ன முகம் தெளிந்திருந்தது. கண்களில் நிறைவின் ஒளி.

பெரிய படங்களுடன் கூடிய வண்ணப் புத்தகத்தைப் புரட்டியபடியே மெல்லக் கேட்டாள் “சத்யா எப்ப வரச் சொல்லிருக்கா?”

குணா பதில் சொல்வதற்கு முன்பே கூடத்திலிருந்த அவனது செல்போன் மணியொலித்தது.

“இரு. போனை எடுத்துட்டு வரேன்” வெளியே வந்து பார்த்தான்.

சத்யாவிடமிருந்து தான் அழைப்பு. மனம் படபடத்தது. இரண்டு நாட்களாக எதிர்பார்த்திருந்தது தான். என்னவோ இப்போது இந்த அழைப்பைத் துண்டிக்க வேண்டுமென நினைத்தான்.

“யாரு?” அர்ச்சனா அறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் கையில் பஞ்சடைத்த சிறிய கோழிக்குஞ்சு பொம்மை.

பச்சைப் புள்ளியை நகர்த்தி காதில் வைத்தான் “சொல்லு சத்யா.”

அந்தப் பெயரைக் கேட்டதும் அர்ச்சனாவின் முகத்தின் ஒளி ஒருகணம் மங்கியது.

“சரி சத்யா. இப்பவே வரேன்.”

இணைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்தவன் அர்ச்சனாவின் முகத்தைப் பார்த்ததும் சுதாரித்தான். சிரிக்க முயன்றான்.

“என்னப்பா சொல்றா?”

“அட என்ன இது? அதுக்குள்ள இப்பிடி வேர்க்குது?” அருகில் சென்று அவள் முகத்தைத் துடைத்தவனை ஆழமாகப் பார்த்தாள்.

“சொல்லு குணா. என்ன சொன்னா?”

தோள்களை இறுகப் பற்றியவன் அவள் கண்களைப் பார்த்தான். சிரித்தான். “ஒன்னும் சொல்லலை. நாளைக்குக் காலையில ரிப்போர்ட் வருதாம். பத்து மணிக்கு வரச் சொன்னா.”

பெருமூச்செறிந்தவள் சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள் “அதானே. வேற ஒண்ணும் சொல்லலையே.”

குணா சிரித்தபடியே அவள் தலையில் தட்டினான் “நீ வேணா கேட்டுக்க.”

அவனைக் கட்டிக் கொண்டாள். உடலில் நடுக்கம். மார்பில் சாய்ந்த போது அவனது மார்புத் துடிப்பையும் கேட்க முடிந்தது.

நிமிர்ந்து முகம்பார்த்தபடி சொன்னாள் “பயமா இருக்குப்பா.”

‘எனக்கும்தான்’ என்று சொல்ல நினைத்தவன் எதுவும் சொல்லாமல் சுவரிலிருந்த படத்தைப் பார்த்தான். தேவகுமாரன் கருணை ஒளிரும் கண்களுடன் புன்னகைத்தார்.

0

மூடிய விரல்களுடன் கைகளை உயர்த்தி நெளிந்து சன்னமாய் சிணுங்கிய மகவையே உற்றுப் பார்த்திருந்தான் குணா. அடர்த்தியான முடியுடன் சின்னஞ்சிறு தலை. பிஞ்சு உயிரின் புது நிறம். வலது புருவத்தருகே கந்திப்போனதுபோல சற்றே அழுத்தமான சிவப்புத் தடம்.

“அப்பிடிப் பாக்காதீங்க. பெத்தவங்க கண்ணுபடக்கூடாதுன்னு சொல்லுவாங்க” அர்ச்சனா களைப்புடன் ஒருக்களித்துப் படுத்தாள்.

“யாரோட ஜாடைன்னு பாக்கறேன்” குணா நாற்காலியில் அமர்ந்தான்.

“பொறந்து நாலு நாள்ல இதான் ஜாடைனெல்லாம் தெரியாது. சந்தோஷத்துல சும்மா சொல்லுவாங்க” விலகிய துணிக்கு வெளியே நீண்டிருந்த குழந்தையின் பாதத்தை வருடினாள். சற்றே நடுங்கி உள்ளிழுத்தது. “அவனோதான் வந்துருக்கான். என் பிரார்த்தனை வீண்போகலை.”

கதவைத் தட்டும் சத்தம். குணா எழுந்தான். “என்ன பண்றாரு ஜூனியர்… சத்தத்தையே காணோம்” சத்யா உள்ளே வந்தாள்.

“இன்னும் தூங்கி முடியலையா. ரொம்பதான் டயர்டா” குழந்தையருகில் குனிந்து சிரித்தாள்.

“இப்பல்லாம் தூங்குவான். ராத்திரில வந்து பாரு. ஒருநிமிஷம் கண்ணை மூடவிடமாட்டான்.” குணா சடவுமுறித்தபடியே சொன்னான்.

“உனக்கென்ன வேலை. கண்ணு முழிச்சு பாத்துக்கோ. எத்தனை நாள் பாத்துக்கப் போறே. வீட்டுக்குப் போன கையோட ஆபிஸ் கௌம்பிருவே.” சத்யா கல்கண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.

மறுபடியும் கதவைத் தட்டும் சத்தம். குணா நகரவும் சத்யா அவனை நிறுத்தினாள். “ஒருநிமிஷம். இந்த குட்டி விருந்தாளியைப் பாக்க ஒருத்தர் வரப் போறாங்கன்னு நெனக்கறேன். இரு, நானே பாக்கறேன்.”

அர்ச்சனா போர்வையை சரி செய்தாள். குணா அவளை கேள்வியுடன் பார்த்தான்.

மிகுந்த தயக்கத்துடன் மெல்ல உள்ளே வந்தாள் அர்ச்சனாவின் அம்மா. இருவரையும் நிமிர்ந்து முகம் பார்க்காமல் குழந்தையின் அருகில் சென்றாள்.

“வாங்க…” குணா கதவருகிலேயே நின்றான்.

அர்ச்சனா ஒன்றும் சொல்லாமல் அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். கண்கள் கலங்கின.

“உக்காருங்க ஆன்டி… ஏய். குட்டிப் பயலே. பாட்டி வந்துருக்காங்கடா. கண்ணைத் தெறந்து பாரு” சத்யா குழந்தையின் கையைப் பற்றி மெல்ல அசைத்தாள்.

அம்மா தலை திருப்பாமல் அர்ச்சனாவை ஒருதரம் பார்த்தாள். மீண்டும் தலை கவிந்தாள்.

“ஆமா குட்டி. இப்பவே பாத்துக்க. பெத்த மகளே இருந்தாளா செத்தாளான்னு பாக்க வராதவங்க. உன்னைப் பாக்கறதுக்கு அதிசயமா வந்திருக்காங்க. நல்லா பாத்துக்க…” அர்ச்சனா கண்ணீரைத் துடைத்தாள்.

குணா மெல்ல நகர்ந்து வெளியேறினான்.

“என்ன அர்ச்சனா இது” சத்யா சொன்னதை இடைமறித்தாள் அம்மா. “அவ கேக்கறது நியாயந்தானே சத்யா. பெத்த புள்ளையை அவ தூக்கிக் குடுத்துட்டு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லாம நின்னபோதும் நான் கல்லு மாதிரிதானே உக்காந்துருந்தேன். திட்டட்டும்.” கண்ணீரைத் துடைத்தவள் சட்டென நிமிர்ந்து அர்ச்சனாவின் கையைப் பற்றினாள்.

சொற்கள் அடங்கிய நொடியில் அழுகை வலுத்தது. வெம்மையுடன் கூடிய கண்ணீர் பெருக அர்ச்சனா உடைந்தழுதாள்.

ஒருமுறை கால்களை உதைத்து துள்ளுவதுபோல் உடலை எக்கிய குழந்தை விறிட்டழுதது.

“குட்டிக்கு பொறுக்கலை பாருங்க…” சத்யா துணிகளை விலக்கினாள். ஈரமாக்கியிருந்தான். “என்ன குட்டி நீ. பாட்டி மடியில போகாம இப்பிடி பெட்லயே போயிருக்கே.”

அறையின் மூலையிலிருந்த குழாயில் கைகளைக் கழுவிய அம்மாவைப் பார்த்துக் கேட்டாள் அர்ச்சனா “நீ இங்க வந்தது அப்பாக்குத் தெரியுமா?”

கைகளைத் துடைத்துவிட்டு குழந்தையை எடுத்து மடியில் இருத்திக் கொண்டாள் அம்மா. கைகளை நீட்டி உடலை நெளித்தவன் சிவந்த உதடுகளை ஒருமுறை சப்பி நிறுத்தினான்.

“தெரியாது.”

“குழந்தை பிறந்துருக்குன்னாவது தெரியுமா?”

“ம். தெரியும். அவர்தான் எங்கிட்ட சொன்னது” குழந்தையை கூர்ந்து கவனித்தபடியே சொல்லிவிட்டு நிமிர்ந்தாள். “உன்மேல இன்னும் கோவம் தீரலை.” சற்றே இடைவெளிவிட்டுச் சொன்னாள் “எனக்குந்தான்.”

அர்ச்சனா புன்னகைத்தபடியே சத்யாவைப் பார்த்தாள். “இருக்கட்டும். ஒன்னைப் பெத்து மண்ணுல போட்டதுக்கப்பறமும் கோவம் தீரலைன்னா… இருக்கட்டும்.” கன்னத்தில் ஒருதுளி நீர் வழிந்து சொட்டியது.

“அதெல்லாம் ஒன்னுமில்லை. அவரும் வருவார். இந்தக் குட்டிப் பயலை தூக்கிக் கொஞ்சறதுக்கு எல்லாரும் வருவாங்க.” சத்யா உற்சாகத்துடன் இன்னுமொரு கல்கண்டை எடுத்து வாயில் போட்டாள்.

“வரலாமா?” கையில் இரண்டு பழச்சாறுக் குவளைகளுடன் குணா எட்டிப் பார்த்தான்.

0

“எம் ஆண்டவரின் ஆசி மண்ணில் மழையெனப் பொழிகிறது. அவரது கருணையே இங்கு ஒளியென விரிகிறது. அவரது தூயகத்தில் அடைக்கலம் வந்தோர்க்கு துன்பம் எதுவுமில்லை. நம் ஆண்டவராகிய தேவனை நாம் வணங்குவோம். அவரே எமக்கு எல்லாம் என மண்டியிடுவோம். அவர் பாதத்தில் சரணடைவோம். ஆமென்!”

பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு பாதிரியார் பீடத்திலிருந்து கீழே இறங்கினர். அனைவரும் எழுந்து சிலுவையிட்டபடி பைபிளுடன் நகர்ந்தனர். சற்று முன்பிருந்த அமைதி கலைந்து சலசலப்பு.

அடர்ந்த வேம்பின் கீழே குழந்தையுடன் அமர்ந்திருந்த குணாவின் அம்மாவும் அர்ச்சனாவும் எழுந்துகொண்டனர். “பிரேயர் முடிஞ்சிருச்சு போல…”. அதே சமயத்தில் தேவாலயத்தின் மணியொலித்தது. கணீரென்ற ஒலிகேட்டு குழந்தை உடலைச் சிலிர்த்து அழுதான்.

“குட்டி பயந்துட்டியா… இல்லடா செல்லம். இதப் பாரு. பாட்டிகிட்ட வந்துரு” குணாவின் அம்மா அர்ச்சனாவிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு ஆலயத்தை நோக்கி நகர்ந்தாள்.

நிறைவும் மகிழ்ச்சியும் துலங்கிட கூடத்தில் நின்ற குணாவின் அருகில் வந்தாள் அர்ச்சனா. “குட்டிக்கு என்ன பேர் வெக்கப் போறேன்னு சொல்லுங்க பாக்கலாம்.”

ஏற்கெனவே பலமுறை கேட்டு பதில்பெற முடியாத கேள்விதான். குணாவுக்குத் தெரியும். ஆனாலும் உதடு பிதுக்கினான். பிரார்த்தனைக் கூடத்தை நெருங்கி நின்றனர். ஏற்கெனவே சிலர் ஞானஸ்நானத்திற்காகக் காத்திருந்தனர்.

“நான் சொல்லட்டுமா…” குணாவின் அப்பா கண்ணாடியைத் துடைத்து மாட்டியபடியே கேட்டார். ஒட்டிவெட்டப்பட்ட முடியில் நரைவெண்மை மின்னியது. பளிச்சென்ற சவரக்கன்னத்தில் இறுக்கம். தூய வெள்ளைச் சட்டை பளபளத்தது. அர்ச்சனா ஓரடி பின்னகர்ந்தாள்.

“இவன் பொறந்தப்ப இருந்து கேட்டு எனக்கே சலிச்சிருச்சு. நீங்க எப்பிடிப்பா சொல்ல முடியும்?” குணா சிரித்தான்.

முன்னால் நின்றவர்கள் சிலுவையிட்டு வணங்கி நகரவும் குணாவின் அப்பா பணிவுடன் முன்னகர்ந்தார். குணா அவருக்கு இடதுபக்கமாக நின்றான். அர்ச்சனாவிடம் குழந்தையைக் கொடுத்தாள் குணாவின் அம்மா.

பாதிரியார் அருகில் வந்தார். சங்கிலியில் வெள்ளிச் சிலுவை மின்னி அசைந்தது. புன்னகைத்தார். குணாவும் அப்பாவும் அவரை நெருங்கி ஸ்தோத்திரம் சொல்லி பின்னகர்ந்தனர். “காட் பிளஸ் யூ” உதடு பிரியாமல் மெல்ல முணுமுணுத்தவர் அர்ச்சனாவின் மேல் பார்வையை நிறுத்தினார்.

“கர்த்தரோட ஆசி இருக்கும்மா. எல்லாம் நல்லதே நடக்கும்” அவள் நெற்றியில் சிலுவையிட்டவர் குணாவின் அம்மாவிடமிருந்த குழந்தையைப் பார்த்ததும் சிரித்தார். சற்றே குனிந்து உதடுகளால் சத்தமெழுப்பினார். உருண்ட விழிகளை ஒருகணம் நிறுத்திப் பார்த்துவிட்டு கால்களை உதைத்தான். உதடுகளைக் குவித்து எச்சிலைத் தூவினான்.

“குறும்புப் பயலா இருக்கானே…” பாதிரியார் நகர்ந்து முகம் துடைத்தார். கண்களை உருட்டி அர்ச்சனா குழந்தையைப் பார்க்கவும் அவன் மறுபடியும் உதட்டைக் குவித்து ‘ப்ப்ர்ப்ப்ர்…’ என்று சத்தமெழுப்ப எச்சில் தெறித்தது.

மீண்டும் ஆலய மணியொலித்தது.

இம்முறை குழந்தை சிரித்தான். “என்ன பேர் செலக்ட் பண்ணிருக்கீங்க” ஃபாதர் குணாவின் அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.

வழிபாட்டுக் கூடத்தின் மத்தியில் பளிங்குப் பீடத்தில் கருணையின் ஒளி துலங்க நின்ற தேவகுமாரனைப் பார்த்துச் சிலுவையிட்டவர் அர்ச்சனாவைப் பார்த்து நிறைவுடன் சொன்னார் “எல்லாம் எம் மருமக முடிவு பண்ணி வெச்சிருக்கா. உங்ககிட்டதான் சொல்லுவா போல.”

“அப்பிடியாம்மா. குட். எங்கிட்ட சொல்லு. அப்பத்தானே ஆண்டவரோட ஆசியோட இவனுக்கு வெக்க முடியும்.”

அர்ச்சனா குணாவின் அம்மாவின் கையிலிருந்து குழந்தையை வாங்கினாள். இரு கைகளிலும் அவனை ஏந்தியபடி ஒருகணம் பார்த்தாள். ஜன்னல் கண்ணாடி வழியே விழுந்த ஒளிக்கற்றையின் வெளிச்சம் அவன் முகத்தில். அம்மாவின் கண்களைப் பார்த்துச் சிரித்தவுடன் தேவகுமாரனை தலைவணங்கியபடி மெல்லச் சொன்னாள் “ஆனந்த்.”

குணாவின் அப்பா கண்ணசைக்க குணா பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து பீடத்திலிருந்த காணிக்கைக்கான சிறிய பெட்டியில் போட்டான்.

பளிங்குக் கிண்ணத்திலிருந்த புனித நீரை குழந்தையின் தலையில் தெளித்து நெற்றியில் சிலுவையிட்டார். நீர்த்துளி பட்டதும் உடல் சிலிர்க்க கால்களை உதைத்துச் சிணுங்கினான்.

“ஆண்டவரின் அருளாசி பரிபூரணமாய் கிட்டுவதாக. அவனது ராஜ்ஜியத்தின் அனைத்து வளமைகளும் இவனை அடைவதாக. எம் தேவனின் ஆசியால் கல்வியும் தேக ஆரோக்கியமும் பெருமையும் புகழும் இவனைச் சேரும். ஆண்டவரின் எல்லையில்லா நல்லாசியுடன் நன்மைகள் சூழ சந்தோஷம் கொள்ளும் இவனை ஆனந்த் என்று அழைப்போமாக. நல்ல மேய்ப்பனின் மந்தையில் ஒருவனாகிவிட்ட இம்மழலையை ஆன்டனி என்றும் அழைப்போமாக. தேவகிருபை உம் அனைவருக்கும் என்றென்றும் பொழிவதாக. ஆமென்!”

ஆலயமணி ஒலித்தது. ஆனந்த் உற்சாகத்துடன் விழிகளை உருட்டிப் பார்த்தான்.

0

வெள்ளையும் காவியுமான சுற்றுச்சுவரும் கோபுரமுமாய் பழனிமலை கம்பீரத்துடன் நின்றது. அடிவாரத்தில் முடிகாணிக்கை தரும் இடத்தில் அவ்வளவாய் கூட்டமில்லை. கூரையில் நின்ற மயில் தவ்விப் பறந்து மரக்கிளையில் அமர்ந்தது.

இடுப்பில் நிற்காத வேட்டியை மீண்டும் சரிப்படுத்திக்கொண்ட குணாவைப் பார்த்துச் சிரித்தாள் அர்ச்சனா.

“இப்பத்தான் பழைய அர்ச்சனாவைப் பாக்கறமாதிரி இருக்கு…” அர்ச்சனாவின் அம்மா சொன்னதைக் கேட்டு அப்பா தலையாட்டினார்.

“பையனை சரியாப் புடுச்சிக்கங்க. பத்திரம்” சவரக் கத்தியில் நறுக்கிய பிளேடைச் செருகியபடியே சொன்ன பெரியவர் பழனிமலையை நோக்கி கைகூப்பி வணங்கினார்.

அர்ச்சனாவின் தம்பி ஆனந்தின் தலையைப் பிடித்தான். “எனக்கு வேணாம்…” தலையை உலுக்கி ஆட்சேபித்தான். உதடு பிதுக்கி அழலானான்.

“ஒன்னுமில்ல செல்லம். இதப்பாரு… அம்மா பக்கத்துலதான் இருக்கேன். செரியா… உனக்கு ஐஸ்கிரீம் புடிக்குமில்ல…” அர்ச்சனா பக்கத்தில் மண்டியிட்டாள். அவள் முகத்தையே பார்த்திருந்த ஆனந்த மறுபடியும் தலையாட்டினான் “ஒண்ணும் வேணாம்…”

தலையில் தண்ணீரைத் தெளித்த பெரியவர் கண்காட்ட அர்ச்சனாவின் தம்பி தலையைப் பிடித்தான். பெரியவர் நெற்றி மேட்டில் கத்தியை வைத்து நிதானமாக நகர்த்தினார். ஆனந்தின் அழுகை வலுத்தது.

விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்தனர்.

“மூணு வயசு முடிஞ்சிருச்சா…” அர்ச்சனாவின் சித்தி அருகில் வந்தாள்.

“இந்த டிசம்பரோட மூணு வயசு முடியுது சித்தி.”

“ஸ்கூல்ல போட்டுட்டியா?”

“ஆமா சித்தி. ப்ரீ கே.ஜி படிக்கிறான்.”

“எல்லாரும் இப்பிடி ஒன்னா சேந்து கோயிலுக்கு வந்து எத்தனை வருஷமாயிருச்சு. சந்தோஷமா இருக்கு அர்ச்சனா.”

சிமெண்ட்ஷீட் வேய்ந்திருந்த கூரையிலிருந்து சரசரவென இறங்கிய மந்தி தண்ணீர் தொட்டியின் மேல் தாவி அமர்ந்தது.

“கொரங்கு வருது பாட்டி…” ரெட்டை ஜடை சிறுமி கத்தினாள்.

கண்களை உருட்டிப் பார்த்த மந்தி பல்லைக் கிஞ்சியது. கண்ணாடி அணிந்த சிறுவன் கைகளை ஓங்கி விரட்டினான்.

“டேய்… வெரட்டாதடா. எறங்கி வந்து கடிச்சிடும்” ரெட்டை ஜடை எச்சரித்தாள். ஆனந்தின் அழுகை ஓய்ந்திருந்தது. மூக்கில் வழியும் சளியுடன் குனிந்திருந்தான்.

“அவ்வளவுதான். முடிஞ்சுது” பெரியவர் கத்தியை மடக்கிக்கொண்டு எழுந்தார். இடுப்பு வேட்டியிலிருந்து முடிக்கற்றைகள் உதிர்ந்தன. மடியிலிருந்து எழுந்த ஆனந்த் தலையைத் தடவினான். கீழே கிடந்த முடியைப் பார்த்து விட்டு நிமிர்ந்து பெரியவரைப் பார்த்தான்.

“வெந்நீர் ரெடியா இருக்கு. குளிப்பாட்டிருங்க.”

மரத்திலிருந்து தொங்கிய குரங்கை கண்டதும் ஆனந்த் காலை தூக்கி உதைத்தான்.

குணா வேட்டியைப் பிடித்தபடி அருகில் வந்து நின்றவுடன் முகத்தைச் சுளித்தபடி சிணுங்கினான் “டாடி..”

அவன் பின்னால் வந்து தலையைத் தடவியபடியே அர்ச்சனா சொன்னாள் “மொட்டே…”. திரும்பிப் பார்த்துச் சிரித்த ஆனந்த் அவளிடம் தாவினான்.

‘பழனிமலை முருகனுக்கு அரோகரா…’ சாலையில் காவடிக்கூட்டம் குரலெழுப்பி நகர்ந்தது.

0

ஓயாமல் அடித்துக்கொண்டிருந்த அலைபேசியை எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தான் குணா. அர்ச்சனாவிடமிருந்து பதினோராவது அழைப்பு.

“முக்கியமான வேலை. தொந்தரவு பண்ண வேணாம்னு சொன்னேனில்லை”

“உடனே கௌம்பி ஸ்கூலுக்கு வரணும். ஆனந்தோட கிளாஸ் மிஸ்கிட்டேருந்து போன் வந்துச்சு. அவனுக்கு…” அர்ச்சனாவால் தொடர்ந்து பேசமுடியவில்லை.

பதில் பேசாமல் ஒருகணம் நின்றான். காலையில் போகும்போது உற்சாகமாக கையசைத்து விட்டுத்தானே போனான்?

“சரி. பதட்டப்படாதே. நீ ரெடியா இரு. வரேன்.”

எதைப் பற்றியும் யோசிக்காமல் பாதையில் கவனத்தைக் குவிக்க நினைத்தும் பயமும் பதற்றமும் மெல்ல அவனைச் சூழ்ந்தன. ‘எதுவுமில்லை. சாதாரணமான ஒன்றுதான். வீணாக பயப்படக் கூடாது…’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். வலதுகை உயர்ந்து அனிச்சையாக சிலுவையிட்டது.

அர்ச்சனா வாசலிலேயே காத்திருந்தாள்.

காரில் ஏறியவுடன் நிதானமாகக் கேட்டான் “மிஸ் என்ன சொன்னாங்க?”

“உடம்பு சரியில்லை. உடனே வாங்கன்னு சொன்னாங்க. வேற எதையும் சொல்லலை. எனக்கு பயமா இருக்கு குணா.” கண்ணீரைத் துடைத்தபோது விரல்கள் நடுங்கின.

மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு பன்னீர் மரங்கள் வரிசையில் நின்ற நீண்ட பாதையில் நடந்தான். அர்ச்சனா அவன் கையைப் பற்றியிருந்தாள். மைதானத்தில் பிள்ளைகளின் விளையாட்டு இரைச்சல். மையக் கட்டடத்தின் முன்னால் விரிந்திருந்த புல்வெளியில் நீர்தூவி சுழன்று தண்ணீரை இறைத்துக்கொண்டிருந்தது.

அர்ச்சனாவைக் கண்டதும் ஓய்வறையிலிருந்து ஆசிரியை வெளியில் வந்தாள். “என்னாச்சு மிஸ்…”

“பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை. வாங்க. ஹெல்த் கிளினிக்லதான் படுத்திருக்கான்.”

நீண்ட வராந்தாவில் பிரார்த்தித்தபடியே நடந்தான் குணா.

“ரெண்டாவது பீரியட்லதான் பாத்தேன். டெஸ்க்லயே சோந்து படுத்திருந்தான். தொட்டுப் பாத்தா கொஞ்சம் காய்ச்சல் தெரிஞ்சுது. அப்பறமாதான் உங்களுக்கு போன் பண்ணினேன்.”

வண்ண ஓவியங்கள் ஒட்டப்பட்டிருந்த பலகைக்கு எதிரில் சிறிய அறை. மின்விசிறி நிதானமாக சுற்றியிருக்க சுவரோரத்தில் கிடந்த சிறிய கட்டிலில் படுத்திருந்தான் ஆனந்த்.

கண்ணாடி அணிந்த இன்னொரு ஆசிரியை புன்னகைத்தபடி வந்தாள். “கொஞ்சம் டெம்பரேச்சர் இருந்துச்சு. குரோசின் குடுத்திருக்கேன். தூங்கறான்.”

ஆனந்தை நெருங்கி அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான் குணா.

காய்ச்சல் கொதித்தது.