வால்டேர் (பகுதி 3)

0 comment

வாழ்வில் வெற்றிபெற்ற மாமனிதர்கள் பெரும்பாலும் தனக்கு முன் வாழ்ந்த ஒருவரை முன்மாதிரியாக வைத்திருந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம்.

மாவீரர்களில் ஜுலியஸ் சீசர் மகா அலெக்சாண்டரை முன்மாதிரியாகக் கொண்டார். அவரைப் போலவே உலகம் முழுவதையும் ஒரே குடைக் கீழ்தான் உரோமப் பேரரசின் தலைவனாக இருந்து ஆள விரும்பினார். அக்கனவில் ஓரளவு வெற்றி கண்டார். ஐரோப்பா கண்டத்தில் பெரும்பகுதி, ஆப்ரிக்க கண்டத்தில் எகிப்து போன்ற பகுதிகளை வென்றார்.

பின்னாளில் பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியன் இதே போன்றதொரு பெருங்கனவைக் கண்டார். அதற்கு முன்மாதிரியாக அலெக்சாண்டர் மற்றும் ஜுலியஸ் சீசரைக் கொண்டார். அவரும் சுமார் 15 ஆண்டுகளில் சீசரைப் போலவே ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் வென்றார்.

கவிதைத் துறையில் ஆங்கிலக் கவிஞரான ஜான் கீட்ஸ் தன் முன்னுதாரணமாக மகாகவி ஷேக்ஸ்பியரைக் கொண்டார். ஷேக்ஸ்பியரின் மார்பளவுச் சிலை ஒன்றைத் தன் மேசை மீது வைத்திருந்தாராம். தான் எழுதிய எந்த ஒரு கவிதையையும் வாய்விட்டு வாசிப்பாராம். இதை ஷேக்ஸ்பியர் எழுதி இருப்பாரா? அவருடைய கவிதையின் தரத்திற்கு இணையாக இருக்கிறதா? என்று தன்னையே கேட்டுக்கொள்வாராம். ஆம் என்ற பதில் கிடைத்தால் மட்டுமே அதை வெளியிடுவாராம். இல்லை என்ற பதில் கிடைத்தால் கிழித்துப் போட்டுவிடுவாராம். 25 வயதில் அவர் அகால மரணம் அடையாமல் இருந்தால் உலகுக்கு இன்னுமொரு ஷேக்ஸ்பியர் கிடைத்திருக்கலாம்.

தமிழில் மகாகவி கம்பனுக்குக் கதையில் முன்மாதிரி வடமொழி வால்மீகி; யாப்பில் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர், கம்பர் விருத்தத்தில், சந்தங்களில், நடை அழகில் குருவை விஞ்சிய சீடர் ஆனார்.

இராமலிங்க அடிகள் திருவள்ளுவரை, மாணிக்கவாசகரைத் தன் முன்மாதிரியாகக் கொண்டார். திருக்குறளைப் போலவே மிகச் சுருக்கமாக, ஆனால் பொருளின் ஆழத்திலும் அகலத்திலும் குறளுக்கு இணையாக அருட்பெருஞ்சோதி அகவலை எழுதினார். திருக்குறளில் 2/3 அளவே கொண்டது அகவல்.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை மிக நுண்ணிய எழுத்துகளில் ஒரு பனை ஓலையில் எழுதி, அதைத் தன் சிரசின் மீது முடிபோட்டு வைத்திருந்தாராம். திருவாசகத்தை ‘உருஅண்டமாமறை’ என்று ஏத்திய வடலூர் அடிகள் தானும் அதைப்போலவே ஒரு பிரபஞ்ச மறையை உலகுக்கு அளித்தார். விஞ்ஞான யுகத்தில் தோன்றிய யுகபுருஷர் விஞ்ஞான வேதம் ஒன்றை உயிர்க்குலத்துக்குத் தன் கொடையாக வழங்கினார். அருட்பெருந்சோதி அகவலில் ஒரு புராணக் குறிப்புகூட இல்லை; முற்றிலும் விஞ்ஞானமே.

இவர்களைப் போலவே மாமேதை வால்டேருக்கும் ஒருவர் முன்மாதிரியாக இருந்தார். அவர் எழுதிய பிரமாண்டமான தத்துவ அகராதியே பின்னாளில் வால்டேர் தானும் ஓர் ‘தத்துவ அகராதி’ எழுத முன்னுதாரணம். முன்னவரின் அகராதி 10 தொகுதிகளில் 10 இலட்சம் சொற்கள் கொண்ட கலைக்களஞ்சியம். வால்டேரின் தத்துவ அகராதி அளவில் சுமார் 500 பக்கங்கள்தான். ஆனால் அதிலிருந்த கருத்துகளை வால்டேர் தான் எழுதிய 99 தொகுதிகளிலும் பல்வேறு இலக்கிய வகைகளில் விரித்து எழுதினார். அவர் எழுதியவை சுமார் 1 கோடிச் சொற்கள் என்று கணக்கிடுகிறார் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஓர் ஆசிரியர்.

வால்டேருக்கே குருவான அந்த பிரெஞ்சு மேதையின் பெயர் பியரி பெய்ல். அவர் எழுதிய அகராதியின் பெயர் ‘வரலாறு மற்றும் சிந்தனைத் திறனாய்வு அகராதி. அவர் வாழ்ந்த காலத்தில் பிரான்சில் கத்தோலிக்கத் திருச்சபையின் கை ஓங்கியிருந்தது. அதன் கொள்கைகளை, நடைமுறையை எதிர்த்து ஒரு சொல் எழுதினாலும் எழுத்தாளர்களுக்குப் பேராபத்து காத்திருந்தது. அதனால் அவர் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். முதலில் தன்னை ஒரு கிறித்துவர் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். அதைத் திருச்சபை ஏற்றுக்கொள்வதற்காகப் பகுத்தறிவால் மட்டுமே உண்மையைக் கண்டறிந்துவிடமுடியாது; அதற்குத் தேவனின் வார்த்தையும் வேண்டும் என்று எழுதினார். இது ஏற்கெனவே ‘புனித தாமஸ் அக்குவினாஸ் காட்டிய வழி. அவருடைய ‘சமயத் தத்துவத்தின் தொகை உலகப் புகழ்பெற்றது.

அந்த அகராதியில் பெய்ல் நூற்றுக்கணக்கான வரலாற்று மாந்தர்களின் மற்றும் விவிலியத்தின் கதாபாத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கருத்துகளையும் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு கட்டுரையும் மிக நீண்ட ஆழமான ஆய்வு, ஏராளமான புதிய தகவல்கள். இவற்றுக்கிடையே தான் அவருடைய யுக்தியைப் புகுத்தினார். அதாவது கிறித்துவ சமய எதிரிகள் கீழ்க்கண்டவாறு குறைகளைக் கூறுகின்றனர். ஆனால் அக்கருத்துகள் இன்னின்ன காரணங்களால் தவறு என்று அற்புதமான தர்க்கவாதங்களை முன்வைத்தார். ஒரேநேரத்தில் திருச்சபையையும் சமாளித்தார். அதே நேரத்தில் எதிரிகளின் தர்க்கவாதங்கள் என்ற தலைப்பில் கிறித்துவ சமயத்துக்கு எதிரானவை யாவற்றையும் ஒருங்கே தொகுத்துக் கொடுத்துவிட்டார். இந்த அடிப்படையின் மீது எழுந்ததே வால்டேர் மற்றும் டெனிஸ் டிடரோ தலைமையில் இயங்கிய ‘கலைக் களஞ்சியக் குழு’ எழுப்பிய மாபெரும் பகுத்தறிவு மாளிகை.

இந்த எதிர்ப்பு இயக்கத்தைத் தொடர்ந்து ஜெர்மனியில் ‘உயர்நிலைப் பனுவல் திறனாய்வு’ என்ற வரலாற்றாசிரியர்களின் மாபெரும் இயக்கம் தோன்றியது. விவிலிய மொழியை அதன் பல்வேறு காலகட்டக் கூறுகளை ஆய்ந்து ஆய்ந்து வரலாறு கூறும் உண்மைகள் என்ன? கட்டுக்கதைகள் என்ன? என்று தனித்தனியே பிரித்து மக்களுக்குக் காட்டும் மொழியியல் மற்றும் வரலாற்றாசிரியர்களின் பணி தொடங்கியது. இன்றுவரை தொடர்கிறது இந்த இயக்கம். பின்னாளில் ரிச்சர்டு ஸ்ட்ராஸ் ஃபாயர்பாக், கார்ல் மார்க்ஸ் போன்ற மேதைகள் இந்த எதிர்ப்பு அணியை அலங்கரித்தனர்; வலுப்படுத்தினர். இறுதியாக நீட்சே தோன்றி ‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார்.

இதுதான் ஐரோப்பாவில் சமய ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, அறிவியல் தோன்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்ட வரலாறு. இந்த அலை கடந்த இரண்டு நுற்றாண்டுகளாக உலகெங்கும் வீசுகிறது. மக்கள் மதங்களைவிட விஞ்ஞானத்திற்கே முதலிடம் கொடுக்கும் நிலை இப்போது வந்துவிட்டது. இப் பாரிய, சீரிய உலகளாவிய சமுதாய மாற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் பெய்லும் வால்டேரும்.

ஒன்றரைக் கோடிச் சொற்களை எழுதினார் வால்டேர். ஆனால் ஒன்றுகூட மிகையல்ல; ஒன்றுகூட சுவையற்றதல்ல. எழுத்தாளர் வால்டேரைப் பற்றிய கணிப்பு இது. வற்றாத ஜீவநதி அவரது சிந்தனை. எந்தச் செய்தியையும் யாரும் கூறாத புது வகையில் சுவைபட மாற்றிச் சொல்வது அவரது பாணி.

தான் வாழும் காலத்திலேயே உலகப் புகழ்பெற்ற ‘நட்சத்திர எழுத்தாளர்கள்’ வெகுசிலரே. பாரதத்தில் காளிதாசன், கம்பன், தாகூர் போன்ற மகாகவிகள் நாடறியப் புகழ்பெற்றவர்கள். மேற்குலகில் செர்வாண்டிஸ், டிக்கென்ஸ், விக்டர் ஹ்யூகோ, டால்ஸ்டாய், கதே, எமர்சன் போன்ற சில பெயர்களைக் கூறலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக நின்றவர் வால்டேர். காரணம், எதை எழுதினாலும், அது ஒரு பாமரனுக்கு எழுதிய கடிதமானாலும், அல்லது ஒரு காப்பியமானாலும் தன் தரத்துக்கு அணுவளவும் குறையக்கூடாது என்ற நோக்கத்துடன் தன் உடல், மனம், உயிர் ஆகிய யாவற்றையும் ஒருமைப்படுத்தி, ஒரே புள்ளியில் குவித்து எழுதியது தான்.

இரண்டாவது முக்கிய காரணம் அளவுகடந்த தன்னம்பிக்கை. தான் செய்வது சரியானது, உண்மையானது, இந்தச் சமுதாயத்துக்குப் பயன்தரவல்லது என்ற ஆழமான, வலுவான எண்ணத்திலிருந்து முளைத்தது அந்தத் தன்னம்பிக்கை. நெப்போலியனைத் தன்னம்பிக்கையின் சிகரம் என்று கூறுவர். பனிக்காலத்தில் ஆல்ப்ஸ் மலையைச் சுமார் 50,000 வீரர்களுடன் கடந்தான். கடந்து தங்கள் மண்ணில் வந்து இறங்கியபோது ஜெர்மன் தேசமே வியந்ததாம். இவன் மனிதனல்ல, அசுரன், கால தூதன் என்றெல்லாம் பலபடக் கூறினர். உலக ஆன்மா குதிரையின் மீது சென்றதைக் கண்டேன் என்று ஹெகல் என்ற புகழ்பெற்ற தத்துவவாதி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். அந்த அளவு தன்னம்பிக்கையை நெப்போலியனுக்கே அளித்தது வால்டேரின் எழுத்துகளே.

யாரையும் பகடி செய்யலாம், யாரையும் எடுத்தெறிந்து பேசலாம் என்ற அளவுக்கு இருந்தது அவரது தன்னம்பிக்கையும், தன்முனைப்பும் உலகிலேயே வலிமையானது மக்கள்சக்தியே. அந்த மக்கள்சக்தியையே தான் விரும்பிய திசையெல்லாம் திருப்பவல்லது தன் எழுத்துகள் என்று நம்பினார் அந்த பிரெஞ்சு மேதை. அதைச் செயலிலும் காட்டினார்.

மூன்றாவதாக, நீண்ட ஆயுளும் நெடிய படைப்புக் காலமும். சுமார் 60 ஆண்டு காலத்துக்கும் மேலாக எழுதினார். எழுதிக்கொண்டே இருந்தார் ஓயாமல். அவருடைய புகழ் உயர்ந்து கொண்டே சென்றது. ஒருபோதும் குறையவேயில்லை. சிலர் இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளைகள்; கொடுத்து வைத்தவர்கள். கதே (60 ஆண்டுகள் படைப்புக்காலம்), பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (75 ஆண்டுகள் படைப்புக் காலம்) போன்றவர்களையும் வால்டேருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்காவதாக, சமுதாயத்திலிருந்து விலகி, தனித்த சிந்தனையாளனாக, எதிர்காலத்துக்காக மற்றும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் வகையாக எழுதும் எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் காலத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்துக் கூரிய திறனாய்வுகளைப் பதிவு செய்துகொண்டே இருந்தார். தம்முடைய மனசாட்சியின் குரலாகப் பிரெஞ்சு தேசத்து மக்கள் வால்டேரைக் கருதத் தொடங்கினர், கொண்டாடினர். எந்தப் பிரச்சினையானாலும் வால்டேர் என்ன சொல்கிறார் என்பதே மக்களின் முதல் கவனமாயிற்று.

ஒரு வாழ்வின் வெற்றி என்பது எதிர் அடங்கியிருக்கிறது? ஒருவன் தான் எதற்காக, எந்த வேலையைச் செய்வதற்காக இந்த உலகிற்கு வந்தோம் என்று தெளிவாக அறிவது முதல் படி. அதை முழுமையாக நிறைவேற்றுவது இரண்டாவது படி. இந்த வரையறையின்படி, வால்டேர் தன் பணியை அடையாளம் கண்டுகொண்டது அறுபது வயதுக்கு மேல்தான். அதனால் தன் கடைசி இருபது ஆண்டுகளில் அவர் செய்த பெருஞ்செயலாலேயே இன்றும் நினைவுகூரப்படுகிறார். அவருடைய காலத்தை ‘வால்டேரின் யுகம்’ என்றே வரலாற்றாசிரியர்கள் – வில் டியூரன்ட் போன்றவர்கள் – இன்றும் அழைப்பதன் காரணம் இதுதான்.

என்ன அப்பெருஞ்செயல்? ‘விரோதியை ஒழித்துக்கட்டு’ என்று முதல் விரோதியாக அவர் உலகுக்கு அடையாளம் காட்டியது மதங்களின் கொடுங்கோல் ஆட்சியை, குறிப்பாக கிறித்தவத் திருச்சபையின் கொடுங்கோன்மையை, பகுத்தறிவுக்கு எதிரான அதன் இரும்புப் பிடியை, விஞ்ஞான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட அதன் மூடநம்பிக்கையை, மனிதகுல முன்னேற்றத்துக்கு சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக எதிரியாகச் செயற்பட்டதை. இப்பெருஞ் செயலைத் தனிமனிதனாகச் செய்தார். தன் கூரிய எழுத்தாணியால் எழுதி எழுதி ஒழித்தார். துளிர்விட்டிருந்த அறிவியல் துறை வால்டேர் போட்ட இராஜபாட்டைக்குள் பெருமிதமாகவும் வேகமாகவும் நுழைய முடிந்ததும், வளர்ச்சி பெற்றதும் அதன்பிறகுதான். முதல் அறுபது வருடங்களில் தன்னை ஒரு காப்பியக் கவிஞனாகவும், நாடகாசிரியனாகவும், வரலாற்றாசிரியனாகவும், கட்டுரையாளனாகவும், கதாசிரியனாகவும் இப்படிப் பல்முனை ஆற்றல் படைத்த ஒரு பெரும் எழுத்தாளனாகவே தன்னை அடையாளம் கண்டார். அதனால் அந்தத் துறைகளில் நுழைந்து சாதனைகள் புரிந்தார். அவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவற்றுக்கான திறமைகளை வளர்த்துக் கொண்டார். ஆனால் காலத்தின் கட்டாயங்களை, வரலாற்றின் நியதியை ஒரு யுக புருஷனே செய்ய இயலும். அவனுக்கே காலம் தானே முன்வந்து எல்லா உதவிகளையும் புரியும்.

ஒரு தனிமனிதன் எவ்வாறு பிரம்மாண்டமான அதிகாரக் கட்டமைப்பு கொண்ட திருச்சபையை எதிர்க்க முடியும்? துணை வலி இருந்தால் முடியும் என்பார் உலகப் பேராசான் வள்ளுவப் பெருந்தகை. அமைந்தது அப்படிப்பட்ட துணைவலி வால்டேருக்கு. ஒருமத நிறுவனத் தலைவரான போப் ஆண்டவர் மொத்த ஐரோப்பியக் கண்டத்தின் முடிசூடாச் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்தார். சுமார் 1500 ஆண்டுகளாக. இதை எதிர்த்து மனதுக்குள்ளேயே கறுவிக்கொண்டும் குமுறிக்கொண்டும் இருந்த முடி மன்னர்களும் – மகா பிரெடரிக் போன்றவர்கள் – பிரபுக்களும், பெரும் வணிகர்களும் வால்டேருக்கு நண்பர்களாக இருந்ததால் அவர்மீது கை வைக்க திருச்சபை அஞ்சியது. அதனால் தன் சமயச் சீர்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வால்டேரால் முடிந்தது. ஆனால் இத்துணை வலி – மன்னர்களின் ஆதரவு – ஒருவிதத்தில் நஷ்டமாக அமைந்தது அவருக்கு. அதிகார ஒடுக்குமுறைக்கு இரட்டை நாக்கு. ஒன்று மதம், மற்றது முடியாட்சி. இரண்டாவதைப் பற்றி வால்டேர் பேச முடியவில்லை, மன்னர்களின் நட்பால். அதை ஒழிக்கப் புறப்பட்டார் ரூஸோ. அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். ஒருவர் இல்லையென்றால் வேறு யாராவது ஒருவரைக்கொண்டு காலம் தன் பணியை ஆற்றும். அவ்வாறு வெடித்ததுதான் பிரெஞ்சுப் புரட்சி. பாரதத்தில் ஒரு புத்தரைப்போல் ஒரு வள்ளலாரைப்போல் ஐரோப்பாவில் வால்டேர் ஒரு மாபெரும் சீர்திருத்தவாதி.

இன்று வால்டேர் எதனால் அறியப்படுகிறார்? உன்னதமான அவருடைய உரைநடைக்காக. தெளிவு, கூர்மை, விறுவிறுப்பு, உயிரோட்டம், சொற்சிக்கனம், வாதத்திறமை, கற்பனை குறிப்பாக அங்கதம். எதிரியை வீழ்த்த அங்கதம் போன்றதோர் ஆயுதம் வேறில்லை. பதினெட்டு நூற்றாண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்டமான கோட்டை கிறித்துவ மதம். அதை வீழ்த்தியது வால்டேரின் அங்கதம் என்ற வெடிமருந்து.

இப்படிப்பட்ட உரைநடையை அவர் எங்கே கற்றார்? யாரிடமிருந்து? இங்கிலாந்தில் மூன்று ஆங்கில எழுத்தாளர்களிடமிருந்து. அவர்கள் 1.அலெக்சாந்தர் போப், 2. ஜொனாதன் ஸ்விப்ட், 3. பாலிங்புரோக் பிரபு.

போப் மகாகவி. நகர நாகரீகத்தைக் காப்பியம் ஆக்கியவர். தன் எதிரிகளை அங்கதக் கவிதைகளால் தலைகுனிய வைத்தவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் சொல்லில், பொருளில், ஓசையில் முழுமைபெறும்வரை செதுக்குவார். அது மேற்கோள் காட்டப்படக்கூடிய தகுதியை அடைந்த பிறகே வெளியிடுவார். வால்டேரும் அங்கதக் கவிதைகளை எழுதினார். அதோடு தன் உரைநடைக்கே கவிதைக்குரிய அக்கறையைச் செலுத்தி கவிதைக்குரிய மதிப்பைப் பெற்றுத் தந்தார்.

ஜொனாதன் ஸ்விப்ட் உலக இலக்கியவாதிகளில் தனிவகை ‘மேதை.’ கவிதைகளையும் எழுதினாலும், உரைநடைப் புனைவுகளே இவருக்கு உலகப் புகழை ஈட்டித் தந்தன. இவருடைய ‘கலிவரின் பயணங்களை’ வாசித்து மகிழாத குழந்தை எது? அங்கதத்தின் கடவுள் இவர். வால்டேரைப் போலவே இவரிடம் அங்கதத்தைப் பயின்ற மற்றோர் உலக மேதை கார்ல் மார்க்ஸ். பசியால் வாடும் தன் குழந்தைகளுக்கு ரொட்டியும், மருந்தும் வாங்க வசதியில்லாத நிலையிலும் கடன் பெற்று ஸ்விப்டின் முழுப் படைப்புகளை – 14தொகுதிகளை – வாங்கித் தன் இரவுகளையும் பகல்களையும் அவற்றுக்கே அளித்தவர். மார்க்ஸ் எழுத்துகளின் அங்கத வாள்கூர்மையின் மூல ஊற்று ஜொனாதன் ஸ்விப்ட்.

மூன்றாவது மேதையின் பெயர்கூட இன்று உலகின் நினைவில் இல்லை. ஆனால் அவர்தான் முன்னிருவரின் குரு. அவரது வளமான மாளிகையில் கூடியது இங்கிலாந்தின் இலக்கிய வட்டத் தொட்டி. மிகச் சிறந்த பேச்சாளர்; தீவிர சிந்தனையாளர். தன் கருத்துகளுக்கு உன்னத வடிவம் கொடுத்து எழுதுவதில் ஷேக்ஸ்பியர், எட்மண்ட் பர்க் ஆகியோருக்கு இணையானவர். செஸ்டர்பீல்டு பிரபு தன் மகனுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதங்களுள் ஒன்றில் குறிப்பிடுகிறார். பாலிங்புரோக் பிரபுவின் எழுத்துகளை வாசிக்கும்வரை ஆங்கில மொழியின் வீச்சும் எல்லையும் நான் அறியாதவை. இவர்தான் வால்டேருக்கு இடைநிலைக் கடவுள் கொள்கையை உபதேசித்தவர். இவருடைய அரசியல் நூல்தான் பின்னாளில் ரூஸோவின் கைகளில் உருமாற்றம் பெற்று ‘அரசியல் ஒப்பந்தம்’ ஆக உலகப் புகழ்பெற்றது; பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது.

சுருங்கக் கூறின், தான் நாடு கடத்தப்பட்டதற்காக வருத்தப்படாமல், இங்கிலாந்து என்ற பல்கலைக்கழகத்தில் தன் எதிர்காலத்திற்கான, உலகின் எதிர்காலத்திற்கான பாடங்களை யாவற்றையும் பயின்றார் வால்டேர்.

படைப்புகள்

எத்துறையில் அடியெடுத்து வைத்தாலும் அதில் புதிய சிந்தனைப் போக்கை ஏற்படுத்தி, பிற்காலச் சிந்தனையாளர்களுக்குப் புதிய பாதையை அமைத்து, வழிகாட்டிச் சென்ற கூரிய சிந்தனையும் புதிய பார்வையும் கொண்டவர் வால்டேர்.

அவருக்கு முன் வரலாறுகளை எழுதியவர்கள் வெறும் தகவல்களின் தொகுப்பாகத் தம் நூல்களை எழுதினர். குறிப்பாக, முடிமன்னர்கள்தான் மனிதர்கள், தேவர்களுக்கு அடுத்த நிலையில் பாடுபொருட்கள் அரசர்கள் மட்டுமே; சாதாரணப் பொதுமக்கள் என்ற சந்தைச் சதுக்கத்து ஈக்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல என்ற மேல்தட்டு வர்க்கப் பார்வை கொண்டு எழுதினார்கள். வால்டேருக்கு மன்னர்கள் அல்ல; மக்கள் தொகுதியே முக்கியம். ஒரு சமூகம் தன் பண்பாட்டில், நாகரீகத்தில் கலை, இலக்கிய, அறிவுத் துறைகளில் என்ன சாதனைகளைப் படைத்துள்ளது? மற்ற சமூகங்கள் சாதிக்காத புதிய முன்னேற்றங்கள் என்னென்ன கண்டடைந்தது? இவையே அச் சமூகம் மனித குல நாகரீகத்துக்கு விட்டுச்சென்ற கொடை. அதை எல்லா நாட்டு மக்களும் ஏற்றுத் தம் வாழ்வைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். இப்பணியைச் சுட்டிக் காட்டுவதே ஓர் எழுத்தாளனின் பணி; குறிப்பாக ஒரு வரலாற்றாசிரியனின் கடமை என்ற கருத்தை முன்வைத்தார். தான் எழுதிய வரலாற்று நூல்களை இந்தப் பாணியிலேயே படைத்தார். வரலாற்றுத்துறை புதிய நோக்கில், புதிய பாதையில் திரும்பியது.

அதேபோல் வெறும் பயண இலக்கியத்தை சமூகவியல், அரசியல், பொருளாதார, கலாசார ஆய்வியலாக மாற்றியமைத்த பெருமையும் வால்டேரையே சாரும். சமூகவியலின் தந்தையாக காரல் மார்க்சையும் மாக்ஸ் வேபரையும் குறிப்பிடுவர். ஆனால் இவர்கள் தோன்றுவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்துறையைத் தொடங்கி வைத்தவர் வால்டேர்.

இன்றைக்கு மைக்கேல் மூர் என்ற அமெரிக்க ஆவணப்படத் தயாரிப்பாளர் ஒரு புதிய பயணப் படத்தை எடுத்துள்ளார். அதில் பாரீஸ், பின்லாந்து போன்ற பல நாடுகளுக்குத் தான் பயணம் செய்ததை, அங்கு கண்ட காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார் – ஒரு வித்தியாசத்துடன். வழக்கமாகக் காட்டும் சுற்றுலாத்தளக் காட்சிகளைக் காட்டாமல், அந்தந்த நாட்டு மக்கள் தத்தம் வாழ்வில், தத்தம் சமுதாயங்களில் என்னென்ன புதிய கலாச்சார, அறிவியல், முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்; தன்னுடைய தேசமான அமெரிக்கா எவ்வாறு பின்தங்கியுள்ளது? என்னென்ன புதிய பாடங்களைத் தன் சமூகம் அவர்களிடமிருந்து கற்றக்கொள்ள வேண்டும்? இவற்றைக் கண்டு, தொகுத்துக் காட்டுகிறார்.

உலகமயமாக்கல் கொள்கைக்கு இக்கருதுகோள் மிக முக்கியம். ஏனெனில் ஆங்கிலமொழியின் மேலாதிக்கத்தால் இன்று ஒவ்வொரு நாளும் ஒரு மொழி அழிந்து வருவதாக மொழியியல் வல்லுநர்கள் கூறிக் கதறுகின்றனர். இது உலகப் பண்பாட்டு அழிவு என்று சுட்டிக் காட்டுகின்றனர். ஏன்? ஒரு மொழி அழிகின்ற பொழுது அம்மொழி சார்ந்த மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளில் கண்டடைந்த அறிவுத் தொகுதியைச் சுமந்து வந்த சொற்களோடு அந்த அறிவும் மறைந்துபோகிறது. ஒவ்வொரு சமூகமும் தன் காலம், இடம் சார்ந்து கண்டறிந்த அறிவுப் புதையல் தனித்தன்மை கொண்டது. உதாரணமாக, தமிழில் சித்தர் மரபும், சித்த மருத்துவமும். இவ்வாறு உலகில் இதுவரை தோன்றிய எல்லாச் சமூகங்களின் தனித்த கொடைகளை அழியாமல் காத்து, ஒன்றுதிரட்டி, புதிதாகப் பூமியின்மீது பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், ‘இந்தா! உன் சொத்து’ என்று மனிதகுல மரபு கண்டடைந்த முழு அறிவுத் தொகுதியையும் கொடுப்பதே உண்மையான உலகமயமாக்கல். வெறுமனே கோகாகோலா, ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தை உலக நாடுகளின் தலையில் திணிப்பதல்ல. உண்மையான உலகமயமாக்கலை அறிமுகம் செய்தவர் வால்டேர்; தன் ‘உலக வரலாறு’ நூலில், கிழக்கு நாடான சீன கலாசாரம் மேற்கத்திய நாகரீகத்தைவிட எந்தவகையில் உயர்ந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.

மைக்கேல் மூருக்கு வழிகாட்டி அவருடைய தேசத்து ஞானி எமர்சன். எமர்சன் 1830களில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தார். அந்நாட்டின் மேதைகளான கோல்ரிட்ஜ், ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் கார்லைல், பிரபல கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரைச் சந்தித்தார். இச் சந்திப்புகளின் மூலம் அந்நாட்டில் அப்போது நிலவிய கருத்தியல் போக்குகளை அறிந்தார். பிறகு கலைக்கூடங்கள், நாடக அரங்குகள், சொற்பொழிவு மேடைகள், பொது நிறுவனங்கள், வணிக முறைகள், அரசியல் அமைப்புகள் ஆகியவற்றைப் பார்த்து, அவ்வத் துறைகளில் இங்கிலாந்து பெற்றிருந்த முன்னேற்றங்களை அறிந்தார். தொழில்புரட்சி, தந்தி, புகைவண்டி போன்ற அறிவியல் சாதனைகளைக் கண்டு வியந்தார். இந்த முன்னேற்றங்கள் எல்லாம் தன் தேசத்தில்  இல்லையே என்று ஆதங்கப்பட்டார். இவற்றையெல்லாம் தன் பயணக் கட்டுரை நூலான ‘ஆங்கிலக் குணங்கள்’ என்ற புகழ்பெற்ற நூலில் எழுதினார். உறக்கத்தில் இருந்த அமெரிக்க தேசம் உணர்வு பெற்றது; விழித்து எழுந்தது அசுரபலத்துடன்.

மைக்கேல் மூருக்கு வழிகாட்டி எமர்சன் எனில், எமர்சனுக்கு வழிகாட்டி வால்டேர். வால்டேர் மூன்று ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கினார். பாரீஸ் நகர பிரபு ஒருவரைக் கிண்டல் செய்து ஓர் அங்கதக் கவிதை எழுதியதற்குத் தண்டனையாக நாடு கடத்தப்பட்டார். அந்த மூன்று ஆண்டுகள் அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்தது. வெறும் எழுத்தாளராக இருந்தவர் மாபெரும் சீர்திருத்தவாதி ஆனார். சமூக, அறிவியல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட நூல் அவருடைய ‘இங்கிலாந்திலிருந்து கடிதங்கள்’.

ஒரு கடிதத்தில் ஆங்கிலப் பாராளுமன்றத்தின் சிறப்பியல்புகளைக் குறித்து, அதே சமயத்தில் பிரான்சு நாட்டின் கொடுங்கோல் ஆட்சியை விமர்சித்து எழுதுகிறார்: உலகிலேயே ஆங்கில மக்கள் மட்டும்தான் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தங்கள் மன்னரின் ஆட்சியதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைத்தனர். மக்களுக்குத் தீங்கிழைக்கும் அதிகாரம் தவிர, ஒரு மன்னன் சகல அதிகாரங்களையும் வைத்துக்கொள்ளலாம். மன்னனின் கீழ் இருந்தாலும், பிரபுக்கள் அவையும் மக்களவையும், சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்களிடமே வைத்திருந்தன. பிரபுக்களுக்கென தனிப்பட்ட அதிகாரங்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் மக்களும் நேரடியாக, ஆனால் குழப்பம் இல்லாமல் ஆட்சியில் பங்கு கொள்ளலாம். (யானைக்கும் அடி சறுக்கும்; மேதையின் தீர்க்க தரிசனமும், கணிப்பும் தவறும். இந்தக் கடிதத்தில், ஆங்கிலேயர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசை இல்லை என்று பாராட்டுகிறார். இக்கணிப்பு பொய்த்ததைப் பிற்கால உலக வரலாறு கூறும். சரித்திரத்திலேயே மிகப் பெரிய, சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உருவாக்கி, உலகையே அடிமைப்படுத்தியவர்கள் ஆங்கிலேயரே.)

மொத்த அதிகாரத்தையும் ஓரிடத்திலோ, ஒரு நிறுவனத்திடமோ, ஒரு தனி நபரிடமோ குவிப்பதே எல்லாத் தீமைகளுக்கும் காரணம். இதுவே அன்றைய கிரேக்க நாகரிகக் குடியாட்சியிலிருந்து, இன்றைய மக்களாட்சி முறை வரை உணர்த்தும் பாடம். ‘அதிகாரம்: ஒரு சமூக ஆய்வு’ என்ற நூலில் பெர்ட்ரண்டு ரஸ்ஸலும், தன் பல்வேறு நூல்களின் வாயிலாகப் பின்நவீனத்துவச் சிந்தனையாளர் மிசேல் ஃபூக்கோவும் அதிகாரக் குவிப்பின் தீமைகளைச் சுட்டிக்காட்டி, அதிகாரத்தைப் பரவலாக்குவதே இதற்குத் தீர்வு என்று காட்டினர். இக் கருதுகோளைத் தன் அரசியல் சட்ட அமைப்பிலேயே கொண்டுவந்து உலகுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் ஆங்கிலேய மக்கள். இம்மாதிரியையே அமெரிக்கக் குடியரசும், பின்னர் இந்தியக் குடியரசும் ஒருசில சிறு மாற்றங்களுடன் பின்பற்றின.

சட்டம் இயற்ற ஒரு நிறுவனம்: சட்டசபை. அதை அமல்படுத்த ஒரு நிறுவனம்: செயலகம். இவ்விரண்டையும் அவற்றின் செயல்பாட்டையும் கண்காணிக்க ஒரு நிறுவனம் : நீதித்துறை. இம்மூன்றையும் கண்காணிக்க ஒரு மக்கள் தலைவர்: ஜனாதிபதி. இவ்வாறு பரவலாக்கப்பட்ட பின்பும் அதிகார வரம்பு மீறல் அன்றாடச் செயல். இம் மீறல்களைப் பட்டியலிட்டு, ஆய்ந்து, தீர்வுகளைக் கண்டறிந்து, அரசியல் அமைப்புச் சட்டங்களிலே புதிய திருத்தங்களைக் கொணர்வது மக்களாட்சி முறையின் இன்றைய தேவை.

வால்டேர் அடுத்த கடிதத்தில் ஆங்கில அரசியல் சட்டத்தின் சிறப்பைக் குறிக்கிறார். அதன் சமநீதியை விதந்து ஓதுகிறார். பிரான்சில் உள்ளதைப்போல் இங்கிலாந்தில் மேல், நடு, கீழ் மக்கள் என்ற பாகுபாடுகளின்றி, பிரபு, குருமார், வணிகர், விவசாயி என யாவரும் ஒரே வரிவிதிப்பின் கீழ் வாழ்கின்றனர். மனித வாழ்வின் அரும்பெரும் சொத்தான ‘சுதந்திரத்தை’க் கடைசிக் குடிமகனும் அனுபவிக்கிறான். இவையெல்லாம் மக்களவை அதிகாரத்தில் முதலிடம் பெற்றதால் மக்களுக்குக் கிடைத்த இலாபங்கள் என்று கூறி முடிக்கிறார். இத்தகைய முறையும் சுதந்திரமும் பிரான்சில் இல்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார். இக்கடிதத்தைப் படித்த பிரெஞ்சு மக்களின் நெஞ்சிலும் இதற்கான ஆறாத் தாகத்தையும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும், செயல்பாட்டுக்கான தூண்டுதலையும் ஏற்படுத்தினார். அத்துடன் இத்தகைய செல்வாக்கை மக்களவை எத்தகைய பெரும் போராட்டங்களுக்குப் பிறகு பெற்றது என்ற வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டித் தன் மக்களுக்கு மறைமுகமாக ஒரு செயல் திட்டத்தையும் வகுத்துக்கொடுத்தார். எத்தகைய எதிர்ப்புகள், எத் திசையிலிருந்து, யார் யாரிடமிருந்து கிளம்பும் என்று சுட்டிக்காட்டினார்.

வேறொரு கடிதத்தில் இங்கிலாந்து ஒரு வியாபாரிகளின் தேசம் என்று வர்ணிக்கிறார். கார்த்தேஜ், வெனிஸ், ஹாலந்து போன்ற பணக்கார அரசுகள் கூட இந்த உண்மையை உணரவில்லை. வீரத்தாலும், மற்ற தேசங்களைக் கொள்ளையடித்ததாலும் அவை செல்வவளம் பெற்றன. இங்கிலாந்தோவெனில் வாணிபமே செல்வவளத்துக்கு நேர்வழி என்று நம்புகிறது. ஒரு தேசத்தின் கச்சாப்பொருள் வளமே செல்வமாகிறது என்ற பொருளாதார உண்மையைக் கண்டறிந்து கூறுகிறார். இங்கிலாந்தில் மரம், தகரம், கம்பளி, சோளம் நிறைய உண்டு. ஆனால் ஸ்காட்லாந்தில் வெறும் நிலக்கரி மட்டுமே உண்டு. அதனால் ஏழையான ஸ்காட்லாந்து இங்கிலாந்துடன் இணைந்துகொண்டது என்கிறார். ஆக்ஸ்போர்டு பிரபு இங்கிலாந்து முழுவதையும் ஆண்டபோதுகூட, அவருடைய தம்பி அலெப்போ என்ற ஊரில் தொழிற்சாலை முதலாளியாக இருந்தவர் இலண்டனுக்கு வர மறுத்துவிட்டார். ‘பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற உண்மையை ஆங்கிலேயர் உணர்ந்ததைப்போல் மற்ற தேசத்தார் உணரவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். (இந்த உண்மையை உணர்ந்த வால்டேர் பிற்காலத்தில் தனவணிகம், கடிகாரத் தொழிற்சாலை மூலம் பெரும் செல்வம் குவித்தார்) ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ‘பிரபு’ என்ற வறட்டுக் கௌரவத்தைச் சுமந்துகொண்டு போலிப் பணக்காரர்களாகத் திரிகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார். இதை வால்டேரின் சொற்களிலேயே கேட்டால்தான் அவரது எழுத்தின் வலிமை புரியும். ‘யார் சிறந்தவர்? தனக்கும், தன் தேசத்துக்கும் பயனுடையவர்? என்று என் வாயால் சொல்லமாட்டேன். முகப்பூச்சுடன் ஒரு மன்னரின் காலடியில் அடிமையாக அமர்ந்து அவர் எந்த நிமிடம் எழுவார், உள்ளே செல்வார் அல்லது மலம் கழிக்கச் செல்வார் என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பதில் பெருமைப்படும் பிரபுவா அல்லது வணிகனா என்பதை என் வாயால் சொல்லமாட்டேன்.’ அங்கதத்தில் தன் குருவான ஜோனாதான் ஸ்விப்டை விஞ்சிய சீடர் வால்டேர்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று உண்மையை உரைக்கவேண்டும். ஆதம் ஸ்மித் என்ற ஆங்கிலத் தத்துவ அறிஞர் ‘வணிகச் சந்தையே மனித வாழ்வை நிர்ணயிக்கிறது’ என்று கூறி அதை நிரூபிக்க சுமார் 1000 பக்கங்கள் கொண்ட நூலை (தேசங்களின் செல்வம்) எழுதிப் புதியதோர் பொருளாதாரத் துறையையே உருவாக்கினார். இதன் நவீன வடிவமே நுகர்வியம் மற்றும் உலகமயமாக்கல்.

கலவிக்கு நிகரான இன்பத்தை எந்தச் செயல் ஒருவனுக்குத் தருகின்றதோ, அந்தச் செயலே அவனக்குத் தொழில். வால்டேருக்குக் கலவியின்பத்தைத் தந்தது எழுத்து. ஒருநாளின் பெரும்பகுதியைத் தன் மேசையின்முன் கழித்தார் வால்டேர். அதனால்தான் மலைபோல் எழுதிக் குவிக்க முடிந்தது அவரால், என்றான் ஒரு திறனாய்வாளன். எழுதாத நேரம் எல்லாம் வீணே என்று உணர்பவனே மாபெரும் எழுத்தாளன் ஆகிறான்.

ஒருவன் எழுதக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சிக்களமாக அணியியல் வல்லுநர்களும் மனோதத்துவ அறிஞர்களும் முன் வைப்பவை இரண்டு: 1. கடிதங்கள், 2. நாட்குறிப்புகள். பின்னது தன்னுடன் தானே பேசுவது. முன்னது மற்றவர்களிடம் நேரடியாகப் பேசுவது. அத்துடன் சிலரிடம் மனம் விட்டு, அந்தரங்கமாகவும் பேசலாம். பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி – சக்கரவர்த்தி பிரெடரிக் முதல் சாதாரணக் குடிமகன் வரை – இடம், பொருள், ஏவல் அறிந்து சிந்திக்கக் கற்றார் வால்டேர். அது பலநூறு கதாபாத்திரங்களை உயிர்த்தன்மையுடன் அவரது நாடகங்களிலும், கதைகளிலும் படைக்க அவருக்கு உதவியது. இவ்வாறு ஒவ்வோர் இலக்கிய வகையும் ஒவ்வொருவிதமான அறிவாற்றலைத் தரும். காப்பியம், கவிதை, நாடகம், கட்டுரை, வரலாறு, திறனாய்வு, தத்துவம், கடிதம், ஆய்வு என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் கற்றுத் துறைபோகிய வால்டேரை ‘எக்காலத்திலும் சிறந்த எழுத்தாளர்’ என்று ஜெர்மானிய மகாகவியும், வால்டேரை வழிகாட்டியாகக் கொண்டு, அவரைப்போலவே பல்துறைகளிலும் எழுதிக் குவித்தவருமான கதே வியந்து போற்றினார். வால்டேருக்கு முன் இந்த இமாலயச் சாதனையைச் செய்தவர் எவருமிலர்.

பிறந்தபொழுது, ‘இந்தக் குழந்தை பிழைக்காது’ என்று வைத்தியரால் கைவிடப்பட்டவர் வால்டேர். ஏராளமான நோய்கள் கொண்ட உடலுடன் ஆயுள் முழுவதும் போராடினார். வாழ்க்கையே போராட்டமானது. அதை வெற்றிகொண்டு 84 வயது வரை உலகப் புகழோடு, என்றும் பொன்றாப் புகழோடு, வாழ்ந்து மறைந்தவர் இந்தப் பிரெஞ்சு மேதை. நோய்களின் மீது, பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல், தன் கவனத்தைத் தன் எழுத்துத் தொழிலின்மேல் செலுத்தினார். அது கொடுத்த ஆனந்தம், ஆற்றலாக மாறி அவரைக் காப்பாற்றியது.

எமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

என்று பாரதி சரியாகச் சொன்னான். சோர்வு நீங்கிய முழுவிழிப்பு நிலையே ஆனந்தம். தளர்ந்து சிதைந்த, நோய்கொண்ட வால்டேரின் உடலில் கண்களில் மட்டும் தீப்பொறி பறக்குமாம். ஓயாது அண்டங்களையே படைக்கும் கடவுளை முன்னோர் சத்து, சித்து, ஆனந்தம் என விளக்கினர் (இயற்கை உண்மையர், இயற்கை விளக்கத்தவர், இயற்கை இன்பினர் என்று தூய தமிழாக்கம் செய்வார் வள்ளலார்). கவிஞன் மண்ணில் கடவுளின் பிரதிநிதி. கடவுளின் வேலையைப் படைப்புத் தொழிலைச் செய்பவன். இவ்வுண்மையை உணர்ந்து செய்பவன் ஆனந்தத்தையும், அறிவாற்றலையும் (சித்), நீண்ட ஆயுளையும் (சத்) பெறுகிறான் என்பதற்கு கதேவும் வால்டேரும் உதாரணங்கள்.

வால்டேர் இன்று என்ன காரணத்திற்காகப் போற்றப்படுகிறார்? அவருடைய தனித்துவம் மிக்க சாதனை என்ன? சுமார் 1400 ஆண்டுகள் கிறித்துவ மதம் ஐரோப்பாவில் நடத்திய ஆதிக்கத்தை, செய்த தீமைகளை வேரறுத்தார். ஒரு சமயம் மக்கள் சமுதாயத்தை எவ்வாறு முன்னேற விடாமல் தடுத்தது என்ற வரலாற்றை கிறித்துவ சமயத்தை முன்னிறுத்தி ஏராளமான சான்றுகளுடன் சுமார் 5000 பக்கங்களுக்கு மேல் வெவ்வேறு இலக்கிய வகைகளில் – சரித்திரம், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், கதைகள், தத்துவம், இறையியல் எனப் படம் பிடித்துக் காட்டினார்.

ஒரு மதம் எவ்வாறு தோன்றுகிறது? தன்னை ஓர் அதிகாரக் கட்டமைப்புக்காக எவ்வாறு தக்கவைத்துக்கொள்கிறது? அதற்காக என்னென்ன தந்திரங்களை, மாய்மாலங்களை, சூழ்ச்சிகளை, குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்கிறது என்று பட்டியலிட்டுக் காட்டினார். இப்படிப்பட்ட திரைமறைவுக் காட்சிகள் ஒவ்வொரு சமயத்திலும் உண்டு என்பதே வரலாறு போதிக்கும் பாடம்.

அதிகாரமும், அது தரும் ஆதிக்கமும், இவ்வுலகச் சுகங்களும், பதவிகளும், சல்லாபங்களும், இவற்றை அடைவதே மதங்களின் நோக்கம். அடைந்து மக்கள் அனைவரையும் தன் கீழ் பணிய வைப்பது. தனக்கு எதிராகக் குரல் கொடுக்கும் யாரையும் அழிப்பது. இப்படி ஒரு கும்பல், கொள்ளை கூட்டம் சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், அரசியல் கட்சிகளின் பெயரால், உலக மக்களைச் சுரண்டித் தாம் மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்து வருவதே வரலாறு. ‘மக்களுக்கு எதிராக ஒருசிலர் என்பதே சரித்திரம் காட்டும் யதார்த்தமான சமன்பாடு.

இச்சமன்பாட்டை மாற்றியமைக்க ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு காலகட்டத்தில் சீர்திருத்தவாதிகள் தோன்றியவண்ணம் உள்ளனர். அவர்களுள் மாபெரும் வீரர் வால்டேர்.

சரி, வால்டேர் நினைத்த வண்ணம் கிறித்துவ மதம் என்ற பிரம்மாண்டமான ஆலமரத்தை ஆணிவேரோடு வெட்டி எறிய அவரால் முடிந்ததா? இல்லையென்றே தோன்றுகின்றது என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஏனெனில் அந்த ஆணிவேர் என்றும் அழிக்க முடியாத அன்பு, மனிதநேயம் ஆகியவற்றினால் ஆனது.

ஏசுநாதருக்கு முன்பு ஐரோப்பா வன்முறையில் ருசி கண்ட காட்டுமிராண்டிக் கும்பல்களால் ஆளப்பட்டு வந்தது. கிரேக்க நாகரீகம், உரோமாபுரி நாகரிகம் ஆகியவற்றை அழித்தது இத்தகைய மூர்க்கக் கூட்டங்களே. இன்று ஐரோப்பிய மக்கள் ஓரளவுக்கு ஒழுக்கத்தையும் அன்பையும் பின்பற்றுகிறார்கள் என்றால் அதற்குக் கிறிஸ்துவின் போதனையே காரணம் என்று வாதிடுகிறார்கள் இவர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அதைப் படம் பிடித்துக்காட்ட ஒரு காப்பியம் எழும். அதில் அக் காலத்தின் முதல் விழுமியங்களை முன்னிறுத்திக் கதையை அமைப்பது காப்பிய விதி. கிரேக்கத்தின் ஹோமர் தன் ‘இலியட், ஒடிசி’ காப்பியங்களில் முன்வைத்தது வீரமும் அழகும். உரோமாபுரியின் விர்ஜில் தன் ‘ஈனீட்’ காப்பியத்தில் முன்னிறுத்தியது வீரமும் தேசப்பற்றும். அதற்குப் பிறகு மத்திய காலத்தில் இத்தாலிய மகாகவி தாந்தே தன் ‘தெய்வீக இன்பியல்’ காப்பியத்திலும், அவருக்குப் பிறகு வந்த ஆங்கில மகாகவி மில்டன் தன் ‘இழந்த சொர்க்கம்’ காப்பியத்திலும் முன்னிறுத்தியது ஏசுவின் உபதேசமான அன்பும் கருணையும்தான். நிறுவனமயமான திருச்சபை ஆயிரம் தீமைகளைச் செய்திருந்தாலும், அடிப்படையான போதனையாக அன்பும் மனிதநேயமும் இருந்ததே அச் சமயத்தின் பலம் என்பது இவர்களது வாதம்.

கிறித்துவ மதத்தை அழிக்கக் கிளம்பிய வால்டேர் அதற்கு மாற்றாக எதை முன்வைத்தார? சமயம் சாராத ஆன்மீகம். ஒரு கடவுள் உண்டு. அது இம் மாபெரும் பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம். அதை ஒவ்வொரு மனிதனும் தன் உள்ளத்திலேயே நினைக்க முடியும். இதற்கு நிறுவனங்கள் தேவையில்லை. இதுதான் சுருக்கமாக இந்த ஆத்திகக் கொள்கை. இதை வால்டேர் கற்றது இங்கிலாந்தில். அங்கே பெரும்பாலான அறிவுஜீவிகளின் கொள்கை இதுதான். குறிப்பாக இவர்களுக்கெல்லாம் குருவாக இருந்த ‘பாலிங்புரோக்’ பிரபுவின் கடவுள் கொள்கை இது. இவர் மிகப் பெரிய மேதை. பல்துறை நிபுணர். சொற்பொழிவு ஆற்றுவதிலும், எழுதுவதிலும் சூரர். வால்டேரும், ரூஸோவும், அமெரிக்க பெஞ்சமின் பிராங்க்ளினும் அரசியலைக் கற்றுக்கொண்டது இவரிடம்தான். இவருடைய தத்துவத்தைத்தான் ஆங்கில மகாகவி அலெக்சாண்டர் போப் ‘மனிதனைப்பற்றி ஒரு கட்டுரை’ என்ற தன் பிரபலமான நீண்ட கவிதையில் விவரித்தார். ஆனால் இவருடைய பெயரை உலகம் மறந்துவிட்டது. இப்படித்தான் சில மனிதர்களையும் சில கொள்கைகளையும், சில மரபுகளையும் வரலாற்றாசிரியர்களும், திறனாய்வாளர்களும் மறைத்தனர். எடுத்துரைத்தால் இப்பட்டியல் பெரிதாக நீளும்.

வால்டேரின் கடவுள் கொள்கையைத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரம்ம ஞான சபையும், இருபதாம் நூற்றாண்டில் நவீன யுகக் குருமார்களான கூர்ஜீப், ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் புதிய பொலிவுடன், மனோதத்துவ முறையில் எடுத்துரைத்தனர். இச் சமயம் சாராத, சமயம் கடந்த ஆன்மீகத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகள் தன் கொள்கையாக அறிவித்தார். ஆனால் மேலே கண்ட குருமார்களின் செய்தியும் பெயரும் மேற்குலகில் பரவியதுபோல் வள்ளலாரின் செய்தி அங்கே போய்ச் சேரவில்லை. வால்டேர் தன் இளவலை மானசீகமாக வாழ்த்தியிருப்பார்.

இறுதியாக, வால்டேரின் தனித்த வெற்றி என்பது, அவருக்கு முன் யாரும் செய்யாதது என்பது இதுதான்.

எல்லாப் பொதுமக்களையும் சிந்திக்க வைத்தார். சிந்தித்தலை ஓர் இயக்கமாக மாற்றியவர் வால்டேரே.

விதை போட்டவர் சாக்ரடீஸாக இருக்கலாம். ஆனால் அதை மாபெரும் ஆலமரமாக வளர்த்தெடுத்தவர் வால்டேரே.

சமூக மாற்றத்திற்கான இந்தப் புதிய உத்தியை, அமைதியான மௌனமான புரட்சி ஆயுதத்தை பிற்காலத்தில் கையில் எடுத்துக்கொண்டு வென்றவர்கள்தான் கார்ல் மார்க்ஸ், காந்தி போன்றோர். இந்த இயக்கத்தின் பிதாமகன் வால்டேரே.