ஜோகோவிச் : விளையாட்டின் திளைப்பு

by வெ.சுரேஷ்
0 comment

விளையாட்டு என்பது வெறும் விளையாட்டல்ல. அது ஒரு தொழிலாக உருமாறி நீண்ட காலம் ஆகி விட்டது. அதற்கான உடல் வலுத்திறன் (Fitness), உணவு முறைகள், வாழ்க்கை முறை என்று ஒவ்வொன்றையும் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளும் போக்கு, வெற்றியாளர்களுக்கு மட்டுமின்றி சுமாரான திறன் படைத்தவர்களுக்கே கூட கிடைக்கக் கூடிய பெரும் பணம் என்பதையெல்லாம் பார்க்கையில் விளையாட்டில் எங்கே விளையாட்டு இருக்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. இம்மாதிரியான கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஆட்டங்களில் ஒன்றுதான் தொழில் முறை டென்னிஸும். ஓபன் இரா (Open Era) என்று அழைக்கப்படும் இது கடந்த  ஐம்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல உருவாகி வந்து 80களில் ஒரு புது அடையாளமாகிப் போனது. இந்த நவ டென்னிஸின் பிதாமகன் என்று இவான் லெண்டிலைக் குறிப்பிடும் ஒரு கட்டுரையை அண்மையில் வாசித்தேன். உணவு முறை, பயிற்சி முறை, உடல் வலுத்திறன் போன்றவற்றில் ஒரு பென்ச்மார்க் ஏற்படுத்தியவர் அவர். அதைப் போலவே விளையாடும் போது கடும் தீவிரத்துடன் இருப்பதும் அவர் இயல்பு. ‘இது ஒரு விளையாட்டு அதை ரசித்து விளையாட வேண்டும்’ என்ற எண்ணமே போய்விட்டதோ என்றே தோன்றுமளவுக்குத் தீவிரம் உண்டு. இந்த விஷயத்தில் அவரது வாரிசாக ரஃபேல் நடாலைச் சொல்லலாம்.

ஆனால் இப்படி மாறிப்போன டென்னிஸிலும் (வேறு விளையாட்டுகளிலுமே) அவ்வப்போது அந்தப் பழைய விளையாட்டு மனநிலையுடன், அமெச்சூர் ஸ்பிரிட் என்பார்களே, அதனுடன் வீரர்கள் தோன்றாமலில்லை. அவர்கள் அந்தந்த விளையாட்டுகளின் உச்ச இடத்தை அடையாமல் இருந்ததுமில்லை. அத்தகைய வீரர்களைப் பட்டியலிட்டால் கிரிக்கெட்டில் வீரேந்தர் சேவாக் முதலிடத்தில் இருப்பார். இன்றைய டென்னிஸில் யார் என்று பார்த்தால் நிச்சயமாக அது நோவக் ஜோகோவிச் தான் (Novak Djokovic). டென்னிஸ் கோர்ட்டில் அவர் ஒரு தனி ஆளுமை. தன்னுள் பேசிக்கொண்டும் பார்வையாளர்களோடு பேசிக்கொண்டும் எதிரிகளின் நல்ல ஷாட்டுகளை பாராட்டிக் கொண்டும் அதே சமயம் குன்றாத தீவிரத்துடனும் அவர் ஆடுவதே ஒரு தனி அழகு.

அண்மையில் நிகழ்ந்து முடிந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் ரஷ்ய இளைஞரான காரென் காஷனெவிடம் தோல்வியுற்றார். ஆனாலும் அது ரஃபேல் நடாலைத் தாண்டி மீண்டும் டென்னிஸ் உலகின் நம்பர் 1 என்ற இருக்கையைப் பிடிக்கத் தடையாக இருக்கவில்லை. ஆம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதலிடத்திற்கு வந்துவிட்டார். சென்ற ஆண்டு இந்த சமயத்தில் இது இப்படி நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. அவரது டென்னிஸ் வாழ்வு முடிந்து விட்டது போலவே இருந்தது. ஆனால், இவ்வாண்டு வழக்கம் போலவே மீண்டு வந்து விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பந்தயங்களை – நடால், பெடெரெர் இருவரையும் வென்று – விட்ட இடத்தை பிடித்து விட்டார். இந்த ஆண்டு இது நடக்கும் என்பதற்கான அறிகுறி விம்பிள்டன் அரை இறுதிப் பந்தயத்தில் தெரிந்தது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தனது நீண்ட நாள் எதிரியான நடாலைச் சந்திக்கிறார் ஜோகோவிச். விம்பிள்டன் இரண்டாம் வெள்ளி மாலை மாட்ச் துவங்குகிறது.

முதல் செட்டை எளிதாக வெல்கிறார் ஜோகோவிச். இரண்டாவது செட் நடால் வசம். மூன்றாவது செட் டை-பிரேக்கருக்குச் செல்கிறது. அதிலும், வழக்கமான ஆறு புள்ளிகளைத் தாண்டி ஆட்டம் நீள்கிறது. ஆட்டத்தின் விசை இருபக்கமும் மாறி மாறி வீச, இறுதியில், சில அற்புதமான பேக் என்ட் ஷாட்களின் மூலம் அந்த டை பிரேக்கரை வென்று 2-1 என்ற கணக்கில் ஜோகோவிச் முந்தி விடுகிறார். ஆனால், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஜோகோவிச் அந்த டை பிரேக்கரின் கடைசிப் புள்ளிகளை வென்ற விதத்திலிருந்து, ஆட்டத்தின் போக்கு அவர் வசம் வந்து விட்டதாகவே எனக்குத் தோன்றியது. 4 செட்களில் வென்று விடுவார் என்று எண்ணியிருந்த போது ஆட்டம் அடுத்த நாளுக்குத் தள்ளிப் போனது உவப்பாயிருக்கவில்லை. பயந்த மாதிரியே அடுத்த நாளின் முதல் செட்டை, அதாவது பந்தயத்தின் 4வது செட்டை, நடால் வெல்கிறார். ஐந்தாவது செட்டின் எட்டாவது கேம் வரை யாரும் யாரது செர்வீஸையும் முறியடிப்பது போலத் தோன்றவில்லை. முதல் பி ரெக்கிங் பாயிண்ட், நடாலின் செர்வீசில், 3-4,3-4,4-0 என்ற இடத்தில் வருகிறது. ஆனால், நடால் அதைத் தவிர்த்து இரண்டு அற்புதமான ஃபோர்ஹேன்ட் ஷாட்டுகள் மூலம் தம் செர்வீஸை தக்கவைத்துக் கொள்கிறார். அடுத்த சர்வீஸில் 15-40 என்ற கணக்கில் பின் தங்குகிறார் ஜோகோவிச். அநேகமாக, பந்தயத்தின் முடிவு இங்கே நிர்ணயிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்த்திருந்த கணத்தில் இரண்டு தொட முடியாத செர்வீஸ்களின் மூலம் 40-40 என்று சமன் செய்கிறார் ஜோகோவிச். பின் அடுத்த இரண்டு பாயின்ட்களையும் எளிதில் வென்று விடுகிறார். விம்பிள்டனில் கடைசி செட்களில் டை-பிரேக்கர் கிடையாது. ஒரு செர்வீஸ் பிரேக் எடுத்து ஆட்டத்தை வென்றால் தான் போட்டியை வெல்ல முடியும் என்பதால் ஆட்டம் நீள்கிறது. நடால், 8-9 என்ற கணக்கில் செர்வ் செய்கிறார். நடாலின் தவறால் முதல் பாயின்ட் ஜோகோவிச்சுக்குக் கிடைக்கிறது. அடுத்த பாயின்ட்டின் ரேலியில் ஒரு நல்ல ட்ராப் ஷாட் ஆடுகிறார் நடால். அதன் மூலம் அந்தப் பாயின்ட்டை வென்றுவிட்டார் என்று நான் நினைக்கும் தருணத்தில் ஜோகோவிச் புயலென முன் கோர்ட்டுக்குப் பாய்ந்து நடாலின் நீட்டிய கரங்களுக்குச் சிக்காமல் அதைத் திருப்பி அடித்து வெல்கிறார். அதில் நடாலின் மனம் முறிந்தது தெரிந்தது. நடாலின் தவறுகளே காரணமாக அடுத்த இரண்டு பாயின்ட்டுகளில்  அந்த அரை இறுதிப்போட்டியை வென்று விடுகிறார் ஜோகோவிச். விம்பிள்டன் போட்டியின் நீண்ட வரலாற்றின் அற்புதமான ஆட்டங்களுள் இதுவும் ஒன்று. அந்தக் கடைசி ஷாட் வரை யார் வெல்வார் என்று சொல்ல முடியாத ஒன்றாகவே இந்த ஆட்டம் இருந்தது. தவிர அதன் வரலாற்றில், இரண்டாவது அதிக நேரம் எடுத்துக் கொண்ட போட்டியும் அதுதான். இந்தப் போட்டியில் வென்ற ஜோகோவிச், மிகப் பெருந்தன்மையுடன் நடாலை மனமார பாராட்டினார். ‘இந்த ஆட்டம் நடாலும் வென்றிருக்கக் கூடியதே’ என்று மனந்திறந்து சொன்னார். அதுதான் ஜோகோவிச்.

ஃபெடரர் ஒரு மகத்தான ஆட்டக்காரர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இதுவரை வந்துள்ள டென்னிஸ் வீரர்களிலேயே அவர் தான் சிறந்தவர் என்று நிறுவும் ஒரு வலுவான தரப்பு உண்டு. அத்தகைய ஃபெடரர் நடாலிடம் மிக அதிகமாகத் தோற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 1-2 என்ற கணக்கில் என்பது மிகவும் வியப்பளிக்கும் செய்தி. ஆனால் அந்த நடாலையும் நேருக்கு நேர் போட்டிகளில் அதிகம் வென்றவர் ஜோகோவிச்தான். 52 சந்திப்புகளில் (இதுவே ஒரு ரிக்கார்ட்) 27 முறை ஜோகோவிச் வென்றிருக்கிறார். ஃபெடரர் ஜோகோவிச் இடையேயான 47 சந்திப்புகளில் ஜோகோவிச்சின் ஸ்கொர் 25-22. இந்தத் தலைமுறையின் மற்ற முன்னணி வீரர்களான ஆண்டி முர்ரே, வாவ்ரிங்கா ஆகியோரிடம் ஜோகோவிச்சின் கணக்கு முறையே 25-11, 19-5 என்ற அளவில் உள்ளது. அவர்கள் எவ்விதத்திலும் இவருக்கு ஒரு சவாலே இல்லை என்பதை விளக்கும் புள்ளி விவரம் இது. 2016ம் ஆண்டு ஜோகோவிச் தனது உச்சத்தை அடைந்த ஒன்று எனச் சொல்லலாம். அந்த ஆண்டில் அவர் Nole Slam என்று ஊடகங்களால் அழைக்கப்பட்ட ஒரு சாதனையை எட்டியிருந்தார். அதாவது, அந்த ஆண்டின் ஃபிரெஞ்சு ஓபன் போட்டியை வென்றபோது நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் வென்ற 8வது ஆட்டக்காரர் என்பதோடல்லாமல், அவை நான்கையும் ஒரே சமயத்தில் வைத்திருந்த 3வது ஆட்டக்காரர் (2015ம் ஆண்டின் விம்பிள்டன், அமெரிக்க ஓபன், 16ன் ஆஸ்திரேலியன் மற்றும் ஃபிரெஞ்சு ஓபன் பட்டங்கள்) என்ற பெருமையையும் பெற்றார்.

விளையாட்டுகளில் ஒரு வீரரின் முழுப் பரிமாணத்தைச் சொல்ல புள்ளி விவரங்கள் முக்கியமான பங்கு வகித்தாலும் அவையே முற்றிலும் போதுமானதும் முழுமையானதும் அல்ல என்றும் சொல்வதுண்டு. ஆட்டத்தின் அழகு ஒரு முக்கியமான அம்சம். பொதுவாகவே, டென்னிஸ் 80களின் பிற்பகுதியிலிருந்து ஒரு பவர் கேம் ஆகிவிட்டது. அழகும் நளினமும் பின்னுக்குப் போய்விட்டது, களத்தைக் கவரும் வேகம், ஷாட்டுகளில் உள்ள வலிமை, அதில் ஏற்றப்படும் சூழல் (Top Spin) ஆகியவையே முக்கியமாகிவிட்டன. கிராஃபைட் ராக்கெட்டுகள் இதற்கொரு காரணம். செர்வ் செய்தவுடன் அப்படியே தொடர்ந்து நெட்டுக்கு வந்து, எதிரியின் ரிட்டர்னை காலத்தின் ஒரு மூலைக்குத் தள்ளி ஆடும் முறை (Serve and Volley) மறைந்துவிட்டது. அதில் இருக்கும் பல நுணுக்கமான தடுப்பு முறைகளான Stop Volley, Drop Volley, Picking Half volley போன்றவை மறைந்தே விட்டன. இனியொரு மெக்கென்ரோ வருவதற்கான சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஃபெடரர் கூட. ஆனால், ஜோகோவிச்சின் ஆட்டம்  அழகில் குறைந்தது அல்ல. அவர் ஒரு ஆல் கோர்ட் (All Court) ஆட்டக்காரர் என்றே மதிக்கப்பட்டாலும் முதன்மையாக பேஸ்லைனில் நின்று ஆடக்கூடியவர். அங்கிருந்து, துல்லியமாக எதிர் கோர்ட்டில் தான் நினைத்தபடி நினைத்த கோணங்களில், இடங்களில், பந்துகளை அடித்துச் செலுத்தும் வலிமை கொண்டவர். அவரது பேக்ஹான்ட் இன்றைய டென்னிஸ் உலகில் மிகச் சிறந்தது. அவர் நெட்டருகே வந்து விளையாடுவதிலும் சோடை போகிறவர் அல்ல. தேவையான போது அதை நன்றாகவே பயன்படுத்துவார். அதே போல, எதிராளியின் சர்வீஸ் பந்துகளைத் தடுத்துத் திருப்புவதில், அவருக்கு நிகர் இன்று யாருமேயில்லை. அதில் மிக வல்லவராக இருந்த ஆண்ட்ரே அகாஸி அண்மையில் ‘தன்னை விட ஜோகோவிச்சே அதில் மேலதிக வல்லமை வாய்ந்தவர்’ என்றார். மேலும், டென்னிஸ் கோர்ட்டின் கோணங்களை பயன்படுத்துவதில் வித்தகர். அவர் விளையாட்டின் மிக முக்கியமான அம்சம், அவரது டிராப் ஷாட்டுகள். அதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த இயற்கையான உள்ளுணர்வும் முன்னறிதலும் வாய்க்கப் பெற்றவர். அதைப் பயன்படுத்தி எதிரிகளை திணறடிக்கும் லாகவமும் பெற்றவர். பல சமயங்களில் மிக உக்கிரமான ஒரு ராலியின் முடிவாக அவர் அதைப் பயன்படுத்தியிருக்கிறார். சில சமயங்களில் அவருக்கு எதிராகவே அது போனதுண்டு. ஆனால், அதுதான் ஆட்டத்தின் போக்கில், விதியின் பங்கு. ஒரு நல்ல வீரன் அதற்கு ஒப்புக் கொடுத்தே தனது ஆட்டத்தை ஆடுகிறான்.

ஃபெடரர் நடால் ஆகிய இருவருக்கு எதிராகவும் அதிக வெற்றிகளை ஜோகோவிச் ஈட்டியிருக்கக் காரணம் அவரது ஆட்டத்திறன் மட்டுமேயில்லை. மன வலிமையும் கூடத்தான். டென்னிஸ் ஆட்டக்காரர்களிலேயே அதிக மனவலிமை கொண்டவர் என்று நடாலைத் தான் சொல்வதுண்டு. ஆனால், நடால் உடனான போட்டிகளில் அவரையும் விஞ்சும் மன உறுதியையும் வலிமையையும் ஜோகோவிச் காட்டியிருக்கிறார். இன்னொன்று அவரது உடல் வலுத்திறன். சென்ற ஒன்றரை ஆண்டுகளாக இருந்த முழங்கைக் காயம் தவிர, அவரது டென்னிஸ் வாழ்வில் அதிக காயங்கள் அவரை பாதித்ததில்லை. இதில் அவர் மற்ற வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். மிகப் பிரபல விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்கிய பயிற்சியாளர் நிக் பாலிட்டியரி (Nick Bollittieri) ‘டென்னிஸ் வரலாற்றில் ஜோகோவிச் அளவுக்கு ஒரு முழுமையான ஆட்டக்காரர் இருந்ததில்லை’ என்றே புகழ்ந்திருக்கிறார். டென்னிஸ் வரலாற்றின் சில மிகச்சிறந்த ஆட்டங்களைப் பட்டியலிட்டால், அவற்றில் ஜோகோவிச் – நடால், ஜோகோவிச் – ஃபெடரர் ஆட்டங்கள் கட்டாயம் இடம்பெறும். குறிப்பாக, 2012 ஆஸ்திரேலிய ஓபன்  இறுதி ஆட்டத்தில் அவர் நடாலை வீழ்த்திய பந்தயமும், இந்த ஆண்டு விம்பிள்டன் அரை இறுதிப் போட்டியில் மீண்டும் நடாலை ஐந்து செட்களில் வீழ்த்திய  பந்தயமும் வரலாற்றில் இடம்பெற்றவை. அதே போல ஃபெடரர் உடனான 2014 மற்றும் 2015 விம்பிள்டன் பந்தயங்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவை.

ஜோகோவிச்சிடம் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் மிகத் தீவிரமாக ஆடும் நேரத்தில் கூட அங்கே  உதவிக்கு இருக்கும் Ball Boys என்றழைக்கப்படும் பணியாளர்களிடம் அவர் காட்டும் பரிவும் அக்கறையும். சமயங்களில், அங்கே சற்று சோர்வடைந்து காணப்படும் அவர்களுக்கு அவர் சிறு சிறு பணிவிடைகள் செய்வதைக் கூட பார்த்திருக்கலாம். இப்போது நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் போது கூட ஒரு பார்வையாளருக்கு உடல் நலம் குன்றுவதைக் கண்டு, உடனடியாக அவரது உதவிக்குச் சென்று உதவி விட்டு, அவர் பத்திரமாக வெளியேறுவதைக் கண்டுவிட்டே தனது  ஆட்டத்தைத் தொடர்ந்தார். மேலும், அவர் பிற டென்னிஸ் ஆட்டக்காரர்கள் போல நடித்துக் காட்டுவதிலும் வல்லவர். தீவிரமான ஆட்டத்தின் நடுவில் கூட நடாலைப் போலவும் இன்னும் சில பிரபல வீரர்கள் வீராங்கனைகள் போலவும் அவர் நடித்துக் காட்டுவது ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்தது. அதன் காரணமாக அவர் ஜோக்கர் என்றே அழைக்கப்பட்டார். பின் அது பற்றி சில விமர்சனங்கள் எழவும் அதை நிறுத்தி கொண்டார்.

14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஜோகோவிச், நடாலின் 17 மற்றும் ஃபெடெரரின் 20 பட்டங்கள் எனும் சாதனையை முறியடிப்பாரா? இப்போது ஜோகோவிச்சுக்கு 31 வயது ஆகிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கண்டிப்பாக ஆடுவார். ஆண்டுக்கு இரண்டு பட்டங்கள் என்றால் கூட நடாலைத் தாண்டி விடுவார். ஃபெடரரின் சாதனையை முறியடிக்க இன்னும் கொஞ்சம் கால நீட்டிப்பும் அதிர்ஷ்டமும் வேண்டும். இந்த இரு சாதனைகளையும் முறியடித்தார் என்றால், இதுவரை வந்த டென்னிஸ் வீரர்களிலேயே மகத்தான வீரர் என்று போற்றப்படுவர். ஆனால், இப்போதும் அவர் அதில் பின்தங்கிவிடவில்லை தான். ஏனெனில் டென்னிஸ் வரலாற்றின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இருவரின் சகாப்தத்தில், அவர்களையும் மீறி பட்டங்கள் பல வென்று, அவர்களையும் அதிகம் வென்று காட்டியிருக்கும் ஆட்டக்காரர் அவர். ஃபெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற சாதனையையும் அவர் முறியடித்தால் என்னை விட சந்தோஷப்படுபவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.