தொலைக்காட்சித் தொடர்களை சினிமாவிற்கு இணையாக உலகெங்கும் பிரபலப்படுத்திய முக்கிய தொடரான Game of Thrones இவ்வாண்டு ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், அதைப் பற்றிய வருத்தமே ரசிகர்களுக்கு ஏற்படாத அளவிற்கு நெட்ஃப்ளிக்ஸ், ஃபாக்ஸ், ஹூலூ, அமேசான் என அனைத்து கட்டண சேவை நிறுவனங்களும் தொடர்களை வாரி வழங்குகிறார்கள். இவ்வாண்டின் இறுதியில் மட்டுமே ஐநூறுக்கும் மேற்பட்ட தொடர்கள் இணையத்தில் நிறைந்து வழிகின்றன. அவற்றுள் கணிசமானவை தரத்துடன் இருக்கின்றன. தொலைத்தொடர்களின் பொற்காலம்!
2018 இல் கவனிக்கத்தக்க, தனித்துவமிக்க வரையறுக்கப்பட்ட தொடர்கள் (Limited Series) மற்றும் திரட்டுதொடர்களின் (Anthology Series) நிரையிது.
1. ALIAS GRACE – NETFLIX
பெளதீக விதிகள் சற்றே தம்மை தளர்த்திக் கொண்டால் மழை தரையிலிருந்து மேலெழுவதும், சூரியன் சுருங்கி வெடித்து எல்லோர் கைகளிலும் கூழாங்கல்லாய் மாறிவிடுவதும் சாத்தியமாகி விடும். பெளதீக மூளையின், உடலின், மனக்கூறு தனக்கு கற்பனை என்ற ஒன்றை பழக்கப்படுத்தி வைத்து இருப்பதே அழுத்தங்களின் மூலக்கூறாட்டத்தின் கோர விளைவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் தான். நிழலின் கனிவுடன் அணைத்து காக்க வேண்டியவர்களிடமிருந்து, தன்னைக் காத்துக் கொண்டு தனிமைப்பட்டவளுக்கு, ஒரு பிரிய தோழியின் விரலிடைப் பகுதிகளில் எத்தனை ஈரம். மேரியின் அகவைப் பிழையால் உண்டான, கருவின் வளர்ச்சி வெடுக்கென இடுக்கியால் பிடுங்கப்பட்டதால், ரத்தமாய் அழுகிறது அவள் கருவறை. மெல்ல தன்னிலை இழந்து இறந்து படுகிறாள், எந்நாளும் ஒன்றாய் பேசி மகிழ்ந்த படுக்கையிலேயே. கைகளை அரிக்கும் குருதியின் ஈரமும் உலர்வும் மாறி மாறி க்ரேஸை அலைகழிக்கிறது. அதில் அவள் நினைவலைகளும் புகுந்து கொண்டு தவிக்கிறது. அச்சிறு அறையில் சவத்தின் அரோமா காற்றை நிறைக்கிறது. உலமருண்ட நிலையில் மூடப்பட்டிருந்த சாளரத்தை அப்படியே விட்டுவிடுகிறாள் க்ரேஸ். அவளது நீண்ட, சரளமற்ற உள்ளிழுப்புகளில் வழிகிட்டி உள் நுழைகிறாள் மேரி. அங்கிருந்து அவளைச் சுமக்கும் கிரேஸ் தடுமாற்றங்களைக் கடந்து செல்லும் தொலைவினைப் பேசுகிறது இத்தொடர்.
மார்க்ரெட் அட்வுட்டின் The Handmaid’s Tale ஐத் தொடர்ந்து வந்திருக்கும் சிறப்பான தழுவல் இது. ஒடுக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த குரலையும் இணைத்து பேசியிருந்த சிவப்பு சீருடைக்காரிகளிலிருந்து, உள்ளடக்கத்தில் பெரிதும் வேறுபடாமல், நீலச் சீருடைக்காரி ஒருத்தியின் உள்ளக் குமுறலை, அழுத்தப்பட்ட அகங்காரத்தை, உளவியல் பிளவுகளுடன் கூடிய மனப்போக்கின் வழியே சொல்லப்பட்டிருக்கும் ஒரு மனஇருள் நிறைகதை. பெண்களைப் புரிந்து கொள்வதை விடவும், பெண்களைக் குறித்து உலகிற்கு இருக்கும் பொதுப்படையான எண்ணக் குவியல்களின் கையாலாகாத தனத்தையும், பரிதாப நிலையையும் வைத்துப் பேசும் போதே இவ்வித இலக்கியம் உருவாகிறது. இயல்பாகவே, இது பல செங்குத்துப் படலங்களை இணைத்து அடிக்கப்பட்ட கீலகமாக மையக் கதாபாத்திரத்தையும், விரியும் கிளைகளாக கால வரலாற்றையும் எடுத்துக் கொண்டு கதையொருமையை அடைவதற்கு முயன்றதில் வென்றிருக்கிறது.
கிரேஸை உளப்பகுப்பாய்வு செய்யும் டாக்டர்.ஜோர்டான், தான் எத்தகைய கீறல்களை உருவாக்கும் இருளில் காலெடுத்து வைக்கிறோம் என்ற விசயம் தெரியாமல் இறங்குவது ‘பெண்கள் சிலந்திகள்’ என்று சொல்லும் நந்தகுமாரனை நினைவூட்டுகிறது. க்ரேஸ் தன் வலிய பயணத்தில் கடும் நைகரங்களை அடைகிறாள். அதனால் மெல்ல மெல்ல பெருகி அவளது நைச்சிகத்திற்கு அவளே காரணமாகிறாள் அல்லது காரணம் செய்யப்படுகிறாள். அவள், தன் பயணத்தில் கண்ட ஒவ்வொருவரையும் தழல் கொஞ்சம் தண்மை கொஞ்சம் என பிய்த்தெடுத்து தனக்குள்ளே வைத்துக் கொள்கிறாள். அவளது வன்மனதின் அழுத்தங்களை வெளியேற்ற எந்த துளையும் இல்லை, அல்லது அப்படியொரு துளை இருக்குமென அவள் நினைத்துக் கொள்ளவும் இல்லை.
தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் வரும் பெண்களின் தனிமையை, பிடிவாத குணத்தை க்ரேஸிடம் அதிகம் காண முடிகிறது. கூடவே, அந்நாவலில் வரும் ‘மெல்குயதெஸ்’ பாத்திரப் படைப்பைப் போன்றே இதில் ‘ஜெராமியா’ பாத்திரமும் வந்து செல்கிறது. அவனை ஒரு சிறிய துளையாக, அழுத்த இளக்கியாகக் காண முடிகிறது. கிரேஸிற்கு நினைவின் மீது மெல்ல மெல்ல தனிமை போதையேற்றி விட்டிருக்கிறது. அது அவளால் மெள்ள டாக்டர்.ஜோர்டானுக்கு கடத்தப்படுகிறது. அவள் செய்ததாக சொல்லப்படும் இரட்டைக் கொலை பற்றி அவள் வெளிப்படுத்தும் நுட்பங்கள், அவளிடமிருந்து மறைமுகமாக அறிந்து கொண்டு ஆய்வு செய்யும் தரவுகள் எவையுமே அவளது முகத்தை முழு வெளிச்சத்திற்குள் எடுத்து கொணர முடிவதில்லை. ஜெராமியா க்ரேஸைப் பொதுவில் ஹிப்னாசிஸ் செய்தபின் நிகழும் வெளிப்படல்களால், தன்னகம் இழக்கும் ஜோர்டான் க்ரேஸை முற்றிலும் புறக்கணிப்பது என்பதே அவனது தோல்வியின் உத்திரவாதமாகிறது.
பிரபல கொலைகாரியாக சாரா கேடனின் (Sarah Gadon) நடிப்பு ஒவ்வொரு தருணத் துளியிலும், நம் தமரகத்தினைச் சலனப்படுத்தி அமைக்கிறது. இன்னும் ஒரு அரை டஜன் கதாபாத்திரங்களுக்கு தத்தம் முழுமையை கொடுக்க நினைத்தே உழைத்திருக்கிறார்கள்.
கிளைஞர், கிட்டலர், இருள், ஒளி, துயரம், தாழ்வு என அலைகளாய் வரும் வாழ்வின் அத்தியாயங்களை சிற்சிறு துளிகளாக்கிக் கொண்டு ஒரு உள்ளார்ந்த, ஆற்றல் அரற்றும், சுழலை வைத்திருக்கும் ஒரு மனதிற்குள் எத்தனை பகடையாட்டம் நிகழும் என்பதைத் தொட்டுப் பார்க்க செய்த பிரமாதமான தொடர் இது.
2. AMERICAN VANDAL 1& 2 – NETFLIX
வெளிப்படுத்தும் விசயங்களில், நாம் யாரை முன்னிறுத்துகிறோம் என்பதற்கும், ஒளித்துக் கொள்ளும் இரகசியங்களில் நாம் யார் என்பதற்குமான தடயங்கள் இருக்கின்றன. இரண்டு நிமிட நூடுல்ஸ் சமையலாய் திடீர் உருவங்களெடுக்கும் ஆயிரமாயிரம் கொள்கைகளும், அரசியல் நிலைப்பாடுகளும், தத்துவ படையெடுப்புகளும் குறைவேயில்லாமல்- மாற வாய்ப்பளித்துக் கொண்டே – இருக்கும் நமது சூழலில், எந்த ஒன்றின் மீதான உண்மைத் தன்மையையும் சந்தேகிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒவ்வொரு புதிய தசாப்தத்தின் குழப்பங்களும், முன்னேற்றங்களும் இத்தனை வேகத்திற்குப் பழக்கப்படாத நமது மனதின் பதற்றத்தை மென் மேலும் அதிகரிக்கிறது. வாழ்க்கையின் பாலபாடங்களைக் கற்கும் காலத்திற்கும் முன்னரே, ’துள்ளும் பதின்மம்’ அந்த மாற்றத்தை முதலில் சுவை பார்க்க முனைந்திடும் வாய்ப்புடன் இருக்கும் போக்கு இளமையிலேயே சிடுக்குகளையும் சச்சரவுகளையும் விளைவித்து உண்மையின் பிம்பங்களைத் தெறிக்க வைத்து உயிரோவியங்களைச் சிதைப்பது கண்கூடு.
சென்ற ஆண்டு 13 Reasons Why -ன் முதல் சீசனை அதன் கதையாடல் முறைக்காக, மிகவும் ரசித்திருந்தேன். பள்ளியில் நிகழும் ஒரு தற்கொலைக்கு அனைத்து திசையிலிருந்து வரும் அழுத்தங்களையும் அழகான வரிசைப்படுத்தல் மூலம் சொன்ன மொழிபு சிறப்பாக இருந்தது. இவ்வாண்டு, அதன் இரண்டாம் பருவம் எதிர்ப்பார்ப்பை குறைந்தபட்சமேனும் பூர்த்தி செய்யவில்லை. ஆனால், புத்துணர்ச்சியுடன் இந்த ஆண்டு, அமெரிக்கப் பள்ளிகளில் நிகழும் வேறு வகை அத்துமீறல்களை, குற்றங்களை, உண்மையைக் கண்டறியும் நோக்கத்துடன் முன்வைக்கிறது, American Vandal -இன் இரு பருவங்கள்.
முதல் பருவத்தில், ஒரு மாணவன் அத்தனை ஆசிரியர்களின் கார்களிலும் ஆண்குறியினை களிம்பு பூசி வரைந்து விடுகிறான். அவன் யார் என்பதற்கான யூகங்கள் – துணிபுகளாக மாறி – உடனேயே பரவலாய் பேசப்பட்டு நிலைபெற்று விடுகிறது. அங்கிருந்து, இப்படியான முன்முடிவுகளைப் பற்றிய நெடிய கேள்விகளும், எளிமையாக தவற விடப்பட்ட உண்மைகளும், எத்தகைய வகையில் கண்களை மறைத்து விடுகின்றன என்பதையும், நடுநிலையான தீர்விற்கு முன்னர் நாம் கேள்விகுள்ளாக்க வேண்டியவை எத்தனை கோணங்கள் என்பதையும் டாக்குமெண்டரி தோற்றத்தில் ஒரு புனைவாக முன் வைக்கிறது இத்தொடர். அதன் கதை மொழிபின் புதுமையே இத்தொடரைத் தனித்துவமான இடத்தில் வைக்கிறது.
இரண்டாவது பருவத்தில் வேறொரு பள்ளியில் இதே போன்றதொரு சாதாரணமாக துவங்கிய மதிய உணவு வேளையில், எதிர்பாராதவாறு அனைத்து மாணவர்களும் தாங்கவே முடியாமல் கழிவறைக்குப் படை எடுக்கின்றனர். அனைவரும், கிடைக்கும் பொது இடங்களிலேயே கழிவுநீக்கம் செய்ய வேண்டிய அவதிக்குள்ளாகின்றனர். இதைச் செய்த நபரை தனக்கே உரிய பாணியில் அமெரிக்கன் வாண்டல் அறிய முற்படுகிறது. மன அழுத்தத்தினால் பள்ளிகளில் திடீரென நடைபெறும் துப்பாக்கிச் சூடுகளை ஒத்திருக்கும் இக்குற்றங்கள் அணுகி, நுண் தளத்தில் அலசப்பட வேண்டியவை என்பதை, சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது மலைப்பே. ஆனால், இதே இலக்கணத்தில் இன்னும் ஒரு பருவம் தாங்க முடியுமா என்பதும் கேள்விக்குரியது.
இன்றைய பொழுதில், தகவல் தொடர்பு சாதனங்களின் ஒளிவு மறைவிலா தன்மை, மேலும் மேலும் நம்மை நம் ரகசியங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திசையிலேயே தள்ளுகிறது. இதில் சிடுக்குகளும், மர்மங்களும் பெருகி குழப்பங்களை விளைவிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதால், கவனமான அணுகுமுறைக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது. முற்போக்கு, பெண்ணியம், சமத்துவம், மனிதம் போன்ற கற்பிதங்களெல்லாம், ‘வாய்மை’ என்ற ஒன்றையே பிரதானமாக கொண்டு முன்னகர முடியும். அவற்றுள் ரகசியங்களும், சுயநலங்களும் அதிகரிக்கும்போது, வெறும் பித்தலாட்ட கூடங்களின் வாய்ப்புகளை மட்டுமே அவை அதிகரிக்கின்றன. வஞ்சம், பொய், உண்மையை உலரச்செய்தல், மறைத்தல், அதிகப்படுத்தி உண்மையைச் சொல்லுதல் என பல நிறங்களில் மனித ஆழ்மனம் செயல்பட்டு, தொழில்நுட்பத்தின் மையத்துடன் கலவி கொள்கையில் தான் எத்தனை எத்தனை விந்தையான குற்றங்களும், பழிவாங்குதல்களும் மட்டுமின்றி, கதைகளும் கதைகூறல் முறைகளும் கூட படையெடுக்கின்றன.
3. PATRICK MELROSE – SHOWTIME / HOTSTAR
பலத்த அடி என்பது மனதில் விழும்போது, அதுவும் அகம் புறம் தொடர்பறிய தொடங்கும் பேதை பருவத்தில் கூடாத அடி விழும்போது, அம்மையப்பனே உலகம் என்ற போதனைகள் அடங்கிய உலகில் இருவராலும் கைவிடப்படும்போது – இவையெல்லாம் கடந்தும், அத்தனை வலி தாங்கும் உயிரொன்று உலகின் முன் அன்பை வெளிப்படுத்துவதன் உன்னதம் புரிந்திருக்கும் போது – என்னதான் எதிர்வினை ஆற்றிட முடியும்?
சிக்கல் கோலம் மொத்தமாய் பார்க்கும் போது தரும் ஒரு ஒருமையழகு, சிக்கல் தன்மையை அஸ்திவாரமாய் கொண்டு எழுப்பப்பட வாழ்க்கைக்கும் உண்டு. அணைக்க வேண்டியவர்கள், அணைப்பது போல வந்து நெருப்புத் துண்டுகளை நம் ஆடைகளுக்குள் கொட்டிவிட்டுச் செல்கையில், புலவல் உச்சம் கொள்கிறது. மன அலையில் கொந்தளிப்பு அடங்கியதும் கிடைப்பவரையெல்லாம் அன்பு செய்து அணைத்துக் கொள்ளத் தோன்றும் தவிப்பு உயர்ந்ததன்றோ!
பேட்றிக் மெல்ரோஸின் நாற்பதுகளின் வரை அவனது க்ஷணங்கள் அனைத்தையும், ரணங்களாக்கிய கொடுங்கனவுகளால், தவிப்புகளின் அலறல்கள் நிறைந்த தனித் தீவாகிறான். தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் ஒரு நஞ்சின் நீட்சியை தன் பிள்ளைகளுக்குக் கடத்தும் முன் இறக்கவும் தயாராக இருக்கிறான். அது அவனுக்குள் ஒரு கொதிக்கும் நீரூற்றைச் சுரந்து கொண்டே இருக்கிறது. அதை நீலகண்டன் போல் தாங்கிக் கொண்டு, தன்னுள்ளிருந்து சுரக்கும் அன்பினை மட்டுமே வெளித்தர யத்தனிக்கிறான். இதற்கு ஒரு முழு வாழ்க்கையும் தேவையாகிறது. குறிப்பாக எழுத்தில் இப்படியான வாழ்க்கைகள் வாழப்படுவது பலருக்கும் அன்பின் ஆதார சுருதியைத் தன்னளிக்க வல்லது.
பேட்றிக் மெல்ரோஸ் இப்படி ஒரு கச்சிதமான வடிவமைப்புடன் சாத்தியமாகி இருக்கிறது என்பதை விட, பெனிடிக்கின் நடிப்பாற்றல் வகை இதற்கு அவ்வளவு பொருந்தி வந்திருப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை. வெகு காலமாகவே தன்னை இந்த பாத்திரத்தில் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு அவருக்கு இருந்ததாக வாசித்தேன். ஏன் வேறொருவர் பேட்றிக்காக உருவாகியிருக்க முடியாது என்பதற்கு அந்த தவிப்பே காரணமாகி இருக்கலாம். ஒரு காட்சியில் 33வது மாடியிலிருக்கையில் தனக்கும் தற்கொலை எண்ணம் எற்படுவதை ஒரு துள்ளலான போராட்டமாக, தன் பாணியில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் பேட்றிக். கண்ணாடி ஜன்னலை உடைக்கத் திணறி தோற்கும் போது, “அதன் வழியே குதித்து விழக் கூட முடியாதென்றால், ஒரு சன்னல் இருந்து என்ன பயன்?” என்று சொல்வது பெனிடிக்கின் முத்திரைத் தீண்டல். ஷெர்லாக்கையும் டாக்டர்.ஸ்ட்ரேஞ்சையும் விட இது அவருக்கு தனிப்பட்ட பெருமை.
சொல்லி மாளாத அளவு அத்தனை கதாபாத்திரங்களின் நடிப்பும் மெருகு. குறிப்பாய் ஹூகோ வீவிங்கின் கண்களையும் தாடையையும் பார்த்து யாருக்குத்தான் அடிவயிற்றில் பீதி எழாது? The Crown இல் செய்ததைப் போலவே பெப் டொரன்ஸின் ஆங்கிலேய வழக்கு மொழித்திறனால் உண்டான, அசாத்திய வார்த்தைப் பொழிவும், மனதைச் சிறகடிக்க வைப்பவை.
லென்சின் வழியுருவான காட்சிகளில் பொருளமைவும், நிறத்தேர்வும், மைய ஈர்ப்பும் வெஸ் ஆண்டர்ச்னைப் போல தேமே என்று எஞ்சாமல், அர்த்த புஷ்டியுள்ள ஓவியங்களாக மாறிப் போய், காமிரா வழியே ஒவ்வொரு காட்சியின் அழுத்தத்தையும் பன்மடங்காக்கிச் சிருங்கரித்திருக்கிறது. அது காலத்தை கட்டி இழுத்து இலகுவாக முன்வைப்பது போன்ற பாவனையை அமைதியாய்ச் செய்திருக்கிறது.
எது தான் இந்த மதர் கொண்ட, தீமையாலான, கீழ்த்தரமான உலகை இன்னும் நீட்டிப்பு செய்து கொண்டிருக்கிறது? எதிர்த்து நின்று, நிலைப்பு கொண்டு, நேர்மையாய் சொல்லும் குழந்தையின் ஒற்றைக் கண்டிக்கும் சொல், எதையும் கலங்க வைத்து விடுமன்றோ!
4. THE SINNER – USA NETWORK / NETFLIX.
“I like them to talk nonsense. That’s man’s one privilege over all creation. Through error you come to the truth! I am a man because I err! You never reach any truth without making fourteen mistakes and very likely a hundred and fourteen.” – Fyodor Dostoevsky, Crime and Punishment.
வலிகளால் நெய்யப்பட்ட கார்மையின் சட்டை அணிந்து கொண்டு தன் குற்றங்களின் நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள முயல்வது அல்லது சோகங்களையும் குற்றங்களையுமே ஆதாரமாகக் கொண்டு அதன் மீது அன்பு, சகோதரத்துவம் எனும் உயர் கற்பிதங்களை எழுப்ப முயல்வதே வாழ்வாட்டம்.
லே மிசரெபில்ஸ் நாவல் சினிமா உலகின் அத்தனை ஜாம்பவான்கள் மட்டுமின்றி சிற்சிறு பங்களிப்பாளர்கள் வரை தொந்தரவு செய்து, அவர்களால் வளைவுகள் சற்றே முன்னும் பின்னும் மாற்றப்பட்டு, பல்லாயிரம் முறை சொல்லப்பட்டு ஒரு மகாநதியாய் சுழித்தோடிக் கொண்டிருக்கிறது.
அது போலவே, இன்றைய நவீன மனதின் குரூரங்களைச் சுட்டி கிரைம் திரில்லர்கள் எடுக்கும் எவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘ரஸ்கோல்நிகோவைத்’ தன் மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டு விடுகிறார்கள். சினிமாவில், எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். ‘ரஷோமோன்’ முதல் ‘திரிஷ்யம்’ வரை. உடி ஆலன் ‘மேட்ச் பாயின்ட்’ டில் லாவகமாக ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைப் படியெடுத்திருந்த விதம் எனக்குப் பிடித்தமானது.
The Sinner – Julian என்ற சீரீஸும் அதை புது விதமாய் அணுகியிருக்கிறது. குழந்தையின் குற்றம் என்று தொடங்கும் போதும், கொடுங்கனவுகளிலிருந்து நிஜங்களைப் பிரிக்கத் தடுமாறும் போதும், ரஸ்கால்நிகோவ் வந்து கொண்டே இருக்கிறான். கொலையைச் செய்கையில் இருக்கும் உறுதியான நிலைப்பாடு, ஆக்ரோஷம், இட்டீரு அத்தனையும் மெல்ல சிதைந்து நேர்மையிடம் அடைக்கலம் அடையுமிடம் தண்டனைகளின் ஆழத்தைச் சொல்கிறது.
டிடெக்டிவாக வரும் ‘பில்புல்மேன்’ ஆண் வசீகரன். அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதும், அவரது மெளனமுமே – திரில்லர்களுக்குப் பின்புல இசை தர வேண்டிய – ஒரு வித சலனத்தை நமக்குள் தொற்றச் செய்து விடுகிறது. முதல் சீசனில் ( The Sinner – Cora) வெகுவாகவே வார்க்கப்பட்டிருந்த இக்கதாபாத்திரம் இங்கு தன் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த கொடும் நினைவினை மீட்டெடுப்பதைக் காண்பித்து இந்த பருவத்துடன் பொருத்தி இருக்கிறார்கள். உடற்பலம் வெகுவாக இல்லாத போதும், அதீத முகபாவங்கள் காண்பிக்காமலும், அமைதியையே மூலதனமாகக் கொண்டு நடித்திருப்பது நொய்ப்பம்.
அரசு, தனியார், ஆன்மீகம் என எந்நிறுவனங்களின் ரகசியத் தன்மைகள் எங்கெல்லாம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், தாய்மையின் நிறுவனத் தன்மையையும் மெலிதாய் கவனப்படுத்துகிறது. ‘மைன்ட்ஹன்டர்’ஐ நினைவுபடுத்தினாலும் அந்த அளவிற்கு சொல்ல முடியாது. எதிர்பாராத வகையில் ஒரு நல்ல திரில்லர்.
துயரங்களின் விரிப்பில் படுத்துறங்கும் உயிர்கள் குற்றங்களைச் செய்கையில் அது தீப்படுக்கை ஆகி ஆன்மாவை எரிக்கத்தானே செய்யும்? அதைக் கடக்க கொஞ்சம் முட்டாள்தனமும், நேர்மையும் தேவைப்படலாம்.
(முதல் பருவமான The Sinner – Cora இன்னும் முழுமையும் விரிவும் கொண்ட தொலைத் தொடர். அதில் இருக்கும் நுண்ணிய கிளைக்கதைகள் பிசிறின்றி இணையும் இசைமையை ரசிப்பதற்காகவே பார்க்கலாம்.)
5. THE ASSASINATION OF GIANNI VERSACE – FX
நம்மிடம் அண்மையும் உருக்கமும் கொண்டு இருக்கும் எவரும் கூட தன்னை முழுதாக நம் முன்வைப்பதில்லை. அதனாலேயே, அரவணைக்கும் எவரும் அரவின் விடம் கொண்டும் கூட இருக்க முடியும். நெருக்கமானவர்களே நம்மை அறிந்து கொண்டிருப்பதாலேயே அதிக அந்நியத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அச்சூழலில் உழன்றமையால், பயங்கொண்டு ஒடுங்கி அத்தனை பேரிடமும் அன்பு பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?
நிராகரிக்கப்பட்ட புன்னகைகள் போருக்கான கச்சாப் பொருளை தன்னகத்தே வைத்துள்ளன. யதார்த்தத்தின் அழுத்தங்களும், பேதை பருவத்தின் கசப்பேற்படுத்தும் குடும்பச் சூழலும் – அவற்றின் வலிகளிலிருந்து தப்பிட எண்ணி – பிறர் நோக்கி வாழும் வாழ்வும் ஒருவனுக்கு அந்தகாரத்தின் தனிமையையே விடையாகத் தரும். முன்னிற்பவர்களுக்குத் தேவையான பதில்களையே தன்னுடைய ஒழுகலாக காட்சிப்படுத்த நினைத்து, அதிலிருந்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கிறான் ஆண்ட்ரூ குனானன். அவனது அத்தனை முன்னேற்பாடுகளும் முயற்சிகளும் தனக்கான ஒரு காதலனுக்காக காத்து இருந்திருக்கிறது. அவனைக் கண்டதும் தன் நிலைபற்றி டாம்பீகம் செய்து அவனுடன் காதலும் கொள்கிறான். அதை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவனது நெருங்கிய கிளைஞனையும், இறுதியில் தன் உயிரினும் மேலெனக் கருதிய காதலனையும் தன் கைகளாலேயே காவெடுத்துக் கொள்கிறது. அங்கிருந்து தொடர் கொலைகளைக் களியாட்டம் போலச் செய்து, பிரபல ஆடை வடிவமைப்பாளர் கியானி வெர்சாசேவைக் கொலை செய்து முடிக்கிறான்.
Darren Criss உடைய நடிப்பு அவரை கடைசி வரை இந்த பாத்திரத்தின் நினைவிலேயே அடையாளம் கண்டு கொள்ள வைக்கும். நளினம், நிதானம், தவிப்பு, அப்பப்பா! கதைகூறும் முறையில் விரிவும் அடர்த்தியும் போலவே, நேர்கோடற்ற கதைமொழிபும் அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறது. பதற்றத்தின் சூழலில் தொடங்கி மெள்ள பின்னோக்கி அவிழும் வரலாறு கூடுதல் தவிப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவதோடு கூர்ந்த அவதானிப்பையும் கோருகிறது.
American Crime Story-இன் முந்தைய பருவத்தின் தொடரான The People VS O.J.Simpson-ஐ கவனித்தால், அதில் பெரும் பகுதியும் வழக்குமன்றத்தில் நிகழும் தர்க்கம், தர்க்கப் பிறழ்வுகள், கருப்பு நிறத்தை கருவியாக்கி விளையாடும் பகடையாட்டம், சட்டம் மீறிய பரிவர்த்தனைகள் என்ற கோணத்தில், பிரபலம் செய்த கொலைக் குற்றத்தின் கோணங்கள் அலசப்பட்டிருக்கும்.
ஆனால், The Assassination of Gianni Versace-இல் தொடர் கொலைகாரன் ஆண்ட்ரு குனானனின் உளவியலை அறிய முற்பட்டு, அவனது பாலியல் வாழ்க்கை, குழந்தை கால வரலாறு, பண்பு மற்றும் நடத்தையின் வித்து, அவன் மீதான செல்வாக்கைச் செலுத்திய நபர்களின் செயல்பாடுகள் என அத்தனை மூலை முடுக்குகளையும் சிறப்பான வைப்புமுறை கொண்ட கதை மூலம் வெளிக்கொணர முற்பட்டிருக்கிறார்கள். தற்பாலின மனநிலையையும், அதற்கெதிரான ஒடுக்குமுறைகளையும் கூட குருதி தோய்ந்த பின்னணியில் ஆராய்ந்து மெனக்கெட்டிருக்கிறார்கள்.
ஆக,மொத்தம் மனித இருளின் அநேக கோணங்களை காண்பித்து விட்டார்கள்.
எந்தெந்த சூழலில் எல்லாம் தீயின் கருணையின்மை விதையிடப்படும் என்பதை எவர் சொல்லிவிட முடியும்? தொடர் கொலைகாரனது வாழ்வை ஆழமான தளங்களில் அணுகியிருக்கும் தொடர் இது.
இவ்வாண்டின் வரையறுக்கபட்ட தொடர்களில் மேலும் குறிப்பிடத்தகுந்தவை : Seven Seconds, The Alienist மற்றும் Godless. மேலும் Black Mirror தொடரின் இவ்வாண்டின் தொகுப்பு அற்புதமான ஆறு படங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் USS Callister, Crocodile மற்றும் Hang the DJ ஆகியவை புதிய களத்தில் தன் கருமை விளையாட்டை அரங்கேற்றி இருக்கின்றன.
நீண்ட தொலைத்தொடர்களைப் பொறுத்த வரையில் இவ்வாண்டில் சிறந்த பருவங்களைத் தந்து எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கும் தொடர்கள் என The Handmaid’s Tale 2, Peaky Blinders 4, On My Block 1, Final Space 1, Ozark 2, GLOW 2, The Kominsky Method 1 மற்றும் The Marvelous Mrs. Maizel 1 ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் ஆவணப்பட தொடர்களுள் The Staircase, Evil Genius, Wild Wild Country, Follow this மற்றும் The Confession Tapes ஆகியவற்றை குறிப்பிடத் தகுந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.
இனி வரும் தசாப்தங்கள் தொலைக்காட்சி தொடர்களின் பொற்காலமாய் அமையுமென்று சிலாகிப்பதற்கு அதன் வணிக பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் காரணமல்ல. தொழில்நுட்பங்களின் பரவிய பயன்பாடு (Patrick Melrose, The Crown, Game of Thrones), திரைக்கதையில் ஊடுபாவாக கலந்திருக்கும் நுண்ணிய கிளைக்கதைகள், பெண்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதன்மை கதாபாத்திரங்களின் அசாத்திய பரிமாணங்கள் (The Handmaid’s Tale, Alias Grace, The Sinner, 13 Reasons Why 1, The Marvelous Mrs. Maisel 1) , வரலாறு, விசாரணை போன்ற ஆவண வகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய புனைவுகள் (The Crown, Narcos) , குற்றங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆழங்களைத் தொட்டுப் பார்க்க முனையும் முயற்சிகள் (American Crime Story, The Sinner, Mindhunter) என பல காரணிகள் தொலைதொடர்களைத் தவிர்க்க முடியாத புள்ளியில் நிறுத்துகின்றன.
இதைப் புரிந்து கொண்ட அத்தனை பெரிய சினிமா நிறுவனங்கள் மட்டுமின்றி Alfonso Cuaron, Andy Serkis போன்ற ஹாலிவுட் மெச்சும் இயக்குநர்களே கூட இங்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது இதன் வணிக முக்கியத்துவத்தையும் குறிப்பிடுவதாகிறது. Sacred Games தொடரின் வருகையால் இந்த மேடையில் இந்தியாவும் தன் கணக்கைத் தொடங்கி விட்டது. தொலைத்தொடர்களின் எண்ணிக்கையை நினைத்தால் ஏற்படும் ஒரு பெருமூச்சிற்கு இடையில் ஒன்று. இவையெல்லாம் நம் பொழுதினை விழுங்கும் காலத்தை எண்ணிப் பார்த்தால், சலிப்பு என்பது கூட இனி மானுடத்தின் தேர்வாகத்தான் இருக்க முடியும்.