ஜென் குரு பெர்னி க்ளாஸ்மேன் (Bernie Glassman) நவம்பர் ஐந்தாம் தேதி, ஞாயிறன்று அமெரிக்காவின் மேஸசுஸெட்ஸில் காலமானார். ஜென் அமைதி படைப்போர் (Order of Zen Peacemakers) மற்றும் கிரேஸ்டோன் (Greystone) அமைப்பின் ஸ்தாபகரான இவர் வீதியோர தியானக்கூடுகை (Street Retreats), கோமளித்தனம் (Clowning), மூழ்குதல் (plunge) சாட்சியம் பகிர்தல் (Bearing Witness) போன்ற புதுமையான ஜென் கருத்தாக்கங்களை உருவாக்கி சமூகத்தின் அடிமட்ட, பிற்படுத்தப்பட்ட, பாராமுகம் காட்டப்படும், போரினாலும் வறுமையினாலும் துன்பப்பட்டு வரும் மக்களின், ஆதரவற்றோரின் யதார்த்தங்களை, ஜென் பயில்வோரின் கண்களை, உணர்வுகளைத் திறக்க முயன்ற புதுமையும் கருணையும் கொண்டதோர் அற்புத மனிதர். அவரின் மனைவி, ஈவ் மார்கோ (Eve Marko), தங்களது கடைசித் தருணங்களை இங்கே தமது வலைதளக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார்.
“சீழ்த்தொற்றின் காரணத்தால் பெர்னி இறந்தார். பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டு, இரத்த நாளங்களுக்குள் புகுந்து, அதிவிரைவில் ஒரு காட்டுத்தீயைப் போல் உடலின் எல்லா அவயங்களிலும் பரவி அவரை அடியோடு சாய்த்து விட்டது.
நவம்பர் 2, வெள்ளி இரவு என்னை எழுப்பினார். தனது வலது பக்க உடல் முழுதும் வலிக்கிறது என்றார். மறுநாள் காலை வலி போயிருந்தது. காலை உணவைச் சாப்பிட்டார். எங்களின் உற்ற, நெடுநாளைய நண்பர் டாக்டர் ஜான் கீலி பெர்னியின் குறைந்த இரத்த அழுத்தம் குறித்து கவலை தெரிவித்தார்.
பெர்னி திரும்பவும் மேல் மாடிக்குச் சென்று ஓய்வெடுக்கவும் தொலைக்காட்சியைப் பார்க்கவும் எழுந்து போனார். கடந்த மூன்று வருடங்களாக பல மோசமான இரவுகளை அவர் கடந்து வந்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரின் மோசமான நேரம் என்பது இரவு நேரம்தான். அதனால் அன்று நான் அதைப் பற்றி பெரிதாக எண்ணவில்லை.
உண்மையில் சொல்லப்போனால், நான் சில மணிநேரம் வெளியே கடைத்தெரு சென்று ஒரு சைனீஸ் உணவு வகையை வாங்கி வந்தேன். அவ்வுணவை அவர் எப்போதுமே விரும்புவார். மேலும் அவர் அதைச் சாப்பிட்டு வெகு நீண்ட நாட்களாகி விட்டிருந்தன. அவரின் இரத்த அழுத்தமும் சீரான நிலைக்குத் திரும்பியது. எனினும் அவருக்கு பசி ரொம்பவும் இல்லை. அவரது இரு கைகளும் நடுங்குவதை நான் கண்டேன்.
மெதுவாக அவர் மாடிக்குத் திரும்பினார். அவரது பக்கவாட்டில் நான் கூடவே நடந்து சென்றேன். போகிற வழியில், குளியலறைக்கும் படுக்கைக்கும் இடையே அலங்கார மேசையில் மோதிக் கொண்டார். அவரின் கால்கள் வலுவற்றிருந்தன. அவர் பின்னால் நடந்தபடி, ஒவ்வொரு மெதுவான அடியெடுப்பை எடுக்கும்படி தள்ளிகொண்டு கட்டிலுக்கு அழைத்துப் போனேன். அவருக்கு மிக வேகமாக மூச்சு இறைத்தது. என் மேல் கனத்துச் சாய்ந்தார். இதுபோல் முன் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. அந்த சனிக்கிழமை மாலையே அவருக்கு மிக மோசமான சீழ்த்தொற்று ஏற்பட்டிருந்தது என்று பிறகு அறிய வந்தேன். படுக்கையில் சரிந்ததும் அவரின் மீறிய இதயத்துடிப்பு மெல்ல சமநிலை அடைந்தது. நடுக்கமும் தணிந்தது. தனது ஐ-பேடை கையிலெடுத்து செய்திகளைப் படிக்கத் துவங்கினார்.
பெர்னியின் பல வலுகுன்றிய தருணங்களை நான் பார்த்துள்ளேன். நேற்றிரவு ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணத்தால் அவ்வாறு அவர் அவதிப்பட்டாரென யூகித்துக் கொண்டேன். அடுத்த முறை பரிசோதிக்கையில் அவர் ஆழ்ந்து உறங்கி விட்டிருந்தார். சுவாசம் சீராயிருந்தது. ஞாயிறு அதிகாலை வரை அவர் அயர்ந்து தூங்கி வந்தார். நான் கீழே எனது அன்றாடங்களை 8.30 மணி வரையில் தொடர்ந்திருந்தேன். அப்போது ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டது. மேலோடிப் பார்க்கையில் அவருக்கு வலிப்பு கண்டிருந்தது. உடனே 911 எண்ணைத் தொடர்பு கொண்டேன். பின்னர் அது சீழ்த்தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்றறிந்தேன். பெர்னியின் மரணம் கண்முன் நிகழ ஆரம்பித்தது.
ஆனால் என்னவென்று யாருக்குத் தெரியும்? உள்ளூர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவரை தூக்கிச் சென்றனர். உடனடியாக அவசர கதியில் அவருக்கு சிகிச்சையும் பரிசோதனையும் நடத்தப்பட்டது. பெர்னி சற்றே அடங்கினார். பின் கஷ்டப்பட்டு இரைச்சலோடு மூச்சு விட்டார். படுக்கையில் ஓய்வற்று புரண்டார். அவருக்கு தொற்று இருப்பதாகக் கூறினர். ஃப்ளு காய்ச்சல் போன்றிருக்கலாம் என்றனர். பாதுகாப்பு கருதி தாம் முகத்திரை அணிய வேண்டி இருக்கலாம் என்றும், அதற்காக நான் வருந்தக்கூடாதென்றும் தயவுடன் கேட்டுக்கொண்டனர். வருத்தம் ஏன்? ஃப்ளு காய்ச்சல் தானே? ஃப்ளு என்றால் கவலை ஏதுமில்லை என நினைத்தேன். அவருடைய உடல் அமைதியுற்று குணப்பட மருத்துவர் வந்து சேர்ந்ததும் ஏதேனும் சிகிச்சையளித்து தேற்றுவார்கள் என்றிருந்தேன்.
“பரிசோதனை முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் கணவரின் சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன. கடும் உடலுறுப்புச் சேதம் ஏற்படப் போகிறது” என்றாள் அவள். உச்சபட்சமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்குமென்றும், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, செயற்கை சுவாச உபகரணங்களையும் குழாய்களையும் பொருத்த வேண்டி இருக்குமென்பதால் அது அவருக்கு ஏற்புடையதா என்றும் கேட்டாள். “வேண்டாம்” என்று மந்தித்து சொல்லிவிட்டு அங்கே வைக்கப்பட்டிருந்த உடலியக்கக் காட்சிப் பெட்டியைக் கண்ணுற்றேன். அவரின் இதயத்துடிப்பு சுமார் 140 ஆக இருந்தது. சில நொடிப்பொழுதில் அது திடுமென 40 ஆக இறங்கி அதளபாதாளத்தைத் தொட்டது. எனது கணவர் இறந்து கொண்டிருக்கிறார் என்று மருத்துவர் சொல்லிய ஐந்து நிமிடத்திற்குள் அவர் இறந்தே விட்டார்.
அவருடன் என்னை 20 நிமிடங்கள் தனித்திருக்கும்படி விட்டு விட்டு அவர்கள் வெளியேறினர். நீங்கள் வேண்டுமானால் இப்படி சொல்லலாம்: “ஈவ், அம்மனிதனுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அவர் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். பிறகென்ன?” என்று. ஆனால் நானோ, “அதை நான் ஒருபோதும் பார்க்கவில்லையே” என்றே கூறுவேன்.
இன்னொன்றையும் சொல்கிறேன். அவ்வார இறுதியில் நான் அங்கிருக்கே வேண்டிய அவசியமே இருக்கவில்லை. நான் சுவிட்சர்லாந்து செல்ல ஆயத்தப்பட்டிருந்தேன். பெர்னில் உள்ள ‘ஜென் அமைதிகாக்கும் இல்லம்’ (Zen Peacemakers House) ஒன்றை திறந்து வைக்கவும், அங்கே தர்மா மாற்றூடேற்றத்திற்கும் (Dharma transmission) தேவையான உதவிகளைச் செய்து விட்டு, கொஞ்சம் போதனைகளையும் பகிர வேண்டி இருந்தது. பின்னர் அங்கிருந்து லண்டன் சென்று பழைய தோழி ஒருத்தியுடன் நான்கு நாட்கள் ஓய்வும் களிப்புமாய் கழித்து வருவதாய் திட்டமிருந்தது. “இங்கே ஹெரால்ட் பின்டெர் திருவிழாவும் நடக்கவிருக்கிறது. அதற்கான நுழைவுச்சீட்டும் பெற்றாகிவிட்டது” என்று அவள் தகவல் அனுப்பியிருந்தாள்.
பிறகு, சுவிட்சர்லாந்தில் இருந்த போது அவள் என்னைத் தொடர்பு கொண்டு, தனக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவும் அதனால் என்னை விருந்து உபரிசக்க இயலாதென்றும் கூறினாள். நான் தனியே லண்டன் சென்று, அங்கே ஒரு ஹோட்டலில் தங்கி, பிறகு பின்டெர் திருவிழாவைப் பார்க்கலாம் என்றிருந்தேன்.
கடைசியில், அதற்கு பதிலாக நான் வீடு திரும்ப முடிவு செய்தேன். நான் வீடு வந்து சேர 19.5 மணி நேரம் ஆனது. நான் அயர்வுற்றிருந்தேன். இரவு உணவைத் தயாரித்து மேசை மேல் வைப்பதற்கு பதிலாக லண்டனில் நன்றாக பொழுதைக் கழித்திருக்கலாமே என்று மனதிலொரு அங்கலாய்ப்பு இருந்தது. அப்போது வெள்ளிக்கிழமை இரவு 7.30. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, எனக்குக் கேட்டது: “ஈவ், இங்க வாயேன்!” முப்பத்தாறு மணி நேரத்திற்குப் பிறகு அவர் இறந்து போனார்.
ஞாயிறு காலை, அவரின் உடலில் சீழ்த்தொற்றாலான அதிர்ச்சியில் அதற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கின. ஒருமுறை அவர் அண்ணார்ந்து பார்த்து என்னிடம் சொன்னார்: “நான் உனக்கு பெரும் தொந்திரவு தான்”.
அவரை நாங்கள் வீட்டிற்கு எடுத்து வந்தோம். சிலர் அவரின் உடலை மூலிகை இலைகளாலான வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி, அவரது பக்கவாதத்தால் போட முடியாமல் போன ஜீன்ஸ், ஹவாயன் சட்டை, தோள்வார்ப்பட்டை ஆகிய உடுப்புகளை அவருக்கு அணிவித்தனர். அவருடைய சட்டைப் பையில் ஒரு சிகாரையும், ஒரு கையினுள் சிகப்பு ரோஜாப்பூ ஒன்றையும் செருகினர். அவரின் இன்னொரு கையில் அவருடைய திருமண மோதிரத்தை நான் செருகினேன்.”
Courtesy : https://www.evemarko.com/