கல்லிலே கண்ட கலைவண்ணம்: படங்களின் வழியே ஒரு பயணம்

0 comment

விஜயநகரப் பேரரசு – தென்னிந்தியாவின் மாபெரும் பேரரசு. செல்வச் செழிப்பும் கலைப்பெருக்கும் படைபலமும் ஆற்றலும் கொண்ட விஜயநகரப் பேரரசின் தலைநகரம் ஹம்பி. தக்காணத்தின் மத்தியில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆந்திரத்தின் எல்லையோரத்தில் அமைந்த சிற்றூர். ஒருபுறம் பெருக்கெடுத்தோடும் துங்கபத்திரையும் சுற்றிலும் பிரமாண்டமான பாறைக் குன்றுகளும் இயற்கை அரண்களாய் அமையப் பெற்ற அழகிய ஊர். 14ம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கப்பட்டு இந்திய வரலாற்றின் சிறப்புகள் மிக்க தலைநகராய் கோலோச்சிய விஜயநககரம், 1565ம் ஆண்டில் இஸ்லாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. கலை எழில்மிக்க நகரின் ஒவ்வொரு அங்கமும் சிதைக்கப்பட்டது. கோபுரங்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் நொறுங்கின. பிரமாண்டமான அரண்மனைகளும் மண்டபங்களும் தரைமட்டமாகின. இயன்றவரை தீயிட்டுக் கொழுத்தினர். ஆறுமாத காலம் வரையிலும் வெறி தணியும்வரை கைகள் ஓயும்வரை இடித்துச் சிதைத்தப் படையினர் அதற்கு மேலும் இயலாது நகரை கைவிட்டுப் போயினர்.

இன்று எஞ்சியிருப்பது விஜயநகரத்தின் சிதைவுகள் மட்டுமே.

1985ல் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட விஜயநகரத்தில் அகழ்வாய்வுகள் தொடர்கின்றன. பூமியில் புதைந்த வெற்றிச் சரித்திரம் ஒவ்வொரு நாளும் தோண்டியெடுக்கப்படுகிறது.

ஆறாவது முறையாக விஜயநகரப் பயணம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் திருவிழா முடிந்த களைப்பிலிருந்தது ஹம்பி. விருபாக்சர் கோயிலுக்கு எதிரில் நீண்டிருக்கும் ரதவீதியின் இருமருங்கும் அங்காடிகள். பல வண்ணங்களில் குங்குமக் குவியல்கள். ஹம்பியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து எளிய மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர்.

யுனெஸ்கோ மெல்ல மெல்ல நகரை தன்வசப்படுத்தியிருந்தது. நகராட்சிப் பள்ளியும் அதன் பின்னால் உள்ள ஒரேயொரு தெருவும்தான் எஞ்சி நின்றன. தங்கும் விடுதிகளும் உணவகங்களும் விருபாக்சர் கோயிலுக்கு இடதுவசத்தில் சற்று தள்ளி அமைந்த, குறுகலான அழகிய தெருக்கள் கொண்ட பகுதியில் அமைந்திருந்தன.

வழக்கம்போல இம்முறையும் எங்கள் நடையை ஹேமகூடப் பாறைகளிலிருந்தே தொடங்கினோம்.

விருபாக்சர் கோயிலுக்கு வலதுபுறம் அமைந்திருப்பது ஹேமக்கூடம். விஜயநகரம் உருவாவதற்கு முன்னும், அதன் தொடக்கத்திலும் இருந்த கட்டடக் கலையின் உதாரணங்களாக நிற்கின்றன கற்றளிகள் பல. அவற்றினிடையே கோயில்களாய் மாறாது உருண்டு திரண்டு நிற்கின்றன பாறைகள். சமணர் கோயில்களும் சிவாலயங்களுமாய் கலந்து நிற்கும் இச்சரிவிலிருந்து விருபாக்சா கோயிலை அடுத்து துங்கபத்ரை நதியையும் அதன் கரைகளையும் காணமுடியும். துங்கபத்ரையின் கரையிலிருந்து மன்மதக் குளத்தைக் கடந்து விருபாக்சர் கோயிலின் வழியாக மலையின் உச்சிக்குச் செல்லும் வழியாக மண்டபங்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணதேவராயரின் காலத்தில் விருபாக்சர் கோயில் வழியை மாற்றி கோபுரத்துக்கு முன்பாக வழி அமைக்கப்பட்டது. மலையுச்சியில் உள்ள இரட்டை அடுக்கு மண்டபமே ஹேமகூடத்தின் சிறப்பு. அதன் உச்சியிலிருந்து விஜயநகரின் மறுபக்கத்தைக் காணமுடியும்.

அந்தி மயங்கும் வேளையில் ஹேமக்கூடத்தின் மலையுச்சியை அடைந்தோம். மலையின் மேற்குப் பக்கத்தில் சூரிய அஸ்தமனத்தைக் காண பலரும் கூடியிருந்தனர். விஜயநகரத்தின் திரண்ட பாறைகளை ஒளியூட்டியவாறு சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான். ஐரோப்பிய ஜோடிகள் பலவும் ஒளிமங்கி இருள்கூடும் அழகை ரசித்துக்கொண்டிருக்க விஜயநகரத்தில் இன்னும் ஒருநாள் முடிந்துபோனது.

அதிகாலை ஐந்துமணி. சருமத்தைத் துளைக்கும் குளிர். மையிருட்டு. ரதவீதியில் கிழக்கு எல்லையை நோக்கி நடந்தோம். அகன்ற பிரமாண்டமான வீதியின் இருபக்கமும் இரண்டடுக்கு மண்டபங்கள். உற்சாகமும் கலகலப்பும் புரண்டோடிய காலம் இடிபாடுகளில் உறைந்திருக்க இப்போது பனியூடே ஆழ்ந்த மௌனம் மட்டுமே மூடிக் கிடந்தது. இடதுபக்கம் மாதங்கி மலைச் சரிவில் அசைந்தன ஒளிப்புள்ளிகள். கைவிளக்குகளின் உதவியுடன் மலையேறும் ஆர்வலர்கள்.

விருபாக்சரை நோக்கி வீற்றிருக்கும் ஒற்றைக்கல் நந்தியைக் கடந்து பெரும் பாறைகளுக்கு நடுவில் விரிந்த கற்பாளங்கள் அமைந்த பாதையில் நடந்தோம். கதிரொளிக்கு முந்தைய சாம்பல் வெளிச்சம். கிழக்கு விடிவதைக் காணும் நோக்குடன் பாறை உச்சிகளில் ஜோடிகள். மாதங்கி மலையுச்சியில் அமைந்த மண்டபங்களின் கூரைகளிலும் ஆட்கூட்டம். மலையின் அடிவாரத்தில் புகைமூட்டம். மெல்ல மெல்ல அடிவானம் துலங்கியது.

வெளிச்சம் கூடியபோது சிதைவுற்ற கோபுரத்துடன் திருவேங்கடநாதர் கோயிலைக் காணமுடிந்தது. 1534ம் ஆண்டு அச்சுதராயரின் மைத்துனர் திருமலைராஜனால் கட்டப்பட்ட போதிலும் இது அச்சுதராயர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. விஜயநகரில் அதிகமும் சேதப்படுத்தப்பட்ட கோயில் இதுவே. அகழ்வாய்வுக்குப் பிறகு எடுத்துக் கட்டியும்கூட பழைய தோற்றத்தை மீட்டெடுக்க முடியவில்லை.

திருவேங்கடநாதர் கோயிலின் முகப்பு கோபுரத்துக்கு எதிரே விருபாக்சர் கோயில் ரதவீதியைப் போலவே அச்சுதராயன் பேட்டை விரிந்திருக்கிறது. அதன் எல்லையின் இடதுபக்கம் புஷ்கரணி.

புகைப்படமெடுக்கும் போது மாதங்கி மலைச் சரிவிலிருந்து பெரிய பாறையொன்றில் உச்சியில் நின்றிருந்தது அந்த இளம் ஜோடி. பிரெஞ்சு தேசத்தினராக இருக்க வேண்டும். விஜயநகரத்தின் கலை உச்சம் அவர்களுள் காதலைக் கிளர்த்தியிருக்கக்கூடும். உச்சியிலிருந்து சரிவிலிருந்த அச்சுதராயர் கோயிலையும் உதித்தெழும் சூரியனைப் பார்த்திருந்தவர்கள் சட்டென கட்டிக்கொண்டனர். ஒருவரையொருவர் தழுவி முத்தமிடத் தொடங்கினர். அன்றைய நாளின் சூரியன் கதிரொளியைப் பரப்பி மேலெழுந்தான்.

அச்சுதராயர் கோயிலிலிருந்து விட்டலா கோயிலுக்குச் செல்லும் பாறைகள் விரிந்த பாதையில் முந்தைய நாள் திருவிழாவின் விளையாட்டு மிச்சங்கள். சிறு கற்களை அடுக்கி கோயில்களாகியிருந்தன. ஆவரம்பூக்களைப் பறித்து குவிந்த மண்ணடுக்கில் சூடியிருந்தனர். விஜயநகரின் அரசரின் பிறந்த நாளன்று அவரது எடைக்கு எடை பொன்னும் வைரமும் பவளமும் மாணிக்கமும் நிறுக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கான கல்லால் அமைக்கப்பட்ட துலாபாரம் விட்டலா கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. அதன் பின்னணியில் இரட்டை மாடங்களுடனான மண்டபங்கள். காலையொளியில் பொன்னென மின்னும் தூண்கள். தொலைவில் துங்கபத்ரை.

விஜயநகரத்தின் எழிலுக்கு பெருமைமிகு சான்றாக நிற்கும் விட்டலா கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதை உறுதி செய்யமுடியவில்லை என்பது வரலாற்றுத் துயரம். ஆனால் இதன் பெரும்பகுதியும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்லமுடியும். கிருஷ்ணதேவராயரின் இரண்டு தேவிகள் இக்கோயிலின் கோபுரங்களை அமைத்தனர் என்று சான்றுகள் சொல்கின்றன.

இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் கல்ரதம் இக்கோயிலின் சிறப்பம்சம். நான்கு சக்கரங்களுடன் அமைக்கப்பட்ட இந்த ரதத்தின் உச்சியில் முன்பு செங்கற்களாலான கோபுரம் இருந்துள்ளது. அதுபோலவே ரதத்தைக் குதிரைகள் இழுப்பது போன்றே அமைத்திருக்கிறார்கள். ஆனால் 19ம் நூற்றாண்டில் கோபுரமும் குதிரைகளும் அகற்றப்பட்டுள்ளன. இப்போதுள்ள யானைகள் அந்தச் சமயத்தில்தான் சேர்க்கப்பட்டுள்ளன.

இங்குள்ள வசந்த மண்டபம் கிருஷ்ணதேவராயரால் அமைக்கப்பட்டது. யாளிகளும் யானைகளும் எழிலார்ந்த சிற்பங்களும் செறிந்த இம்மண்டபம் விஜயநகரத்தின் அற்புதங்களில் ஒன்று.

கடுமையான சேதத்துக்கு உள்ளான விட்டலா கோயிலின் ஒவ்வொரு பகுதியும் இப்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன.

விஜயநகரத்தின் அந்தப்புரம் என்று சொல்லப்படும் வளாகத்தின் நுழைவில் பாதாள சிவன் கோயில். அரண்மனையில் உள்ளவர்களுக்கான தனிப்பட்ட கோயிலாக இருக்கவேண்டும். இந்த வளாகத்தில் இடிபாடுகளின்றி ஓரளவு பாதுகாக்கப்பட்ட அற்புதமான கட்டடம் ‘தாமரை மாளிகை’. அரண்மனை பெண்களுக்கான மாளிகை என்று சொல்லப்பட்டாலும் இது மந்திரிகளின் ஆலோசனைக் கூடமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

இதன் மேற்குப் புறத்தில் உள்ள காவல் கோபுரம் விஜயநகரத்தின் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

அந்தப்புரத்தில் அமைந்துள்ள இன்னொரு வியத்தகு கட்டடம் ‘யானைத் தாவளம்’. அந்தப்புரத்தில் யானைகளுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழக்கூடும். பதினோரு தனித்தனியான அறைகளைக் கொண்ட இந்த தாவளத்தின் ஒவ்வொரு அறையிலும் இரண்டு யானைகள் நிறுத்த முடியும்.  இதன் வளைமுகடுகளும் பலத்த கற்சுவர்களும் சேதமடையாமல் உள்ளன. இதன் எதிரில் உள்ள விரிந்த மைதானம் வீரர்களுக்கும் யானை, குதிரை உள்ளிட்ட படை விலங்குகளுக்குமான பயிற்சிக்கானதாயிருக்கும்.

அரண்மனை வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ராமர் கோயில். பதினைந்தாம் நூற்றாண்டின் முதலாம் பகுதியில் கிருஷ்ணதேவராயரால் அமைக்கப்பட்ட இது விஜயநகர அரண்மனை பெண்களுக்கான தனிப்பட்ட கோயிலாகும். கோயிலின் உட்பிரகாரத்தின் சுற்றுச் சுவர்களில் ராமாயணக் கதை முழுக்க சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறச் சுவரில் போர்க்காட்சிகள் சிற்பங்களாக அமைந்துள்ளன. விஜயநகரின் புகழ்பெற்ற மகாநவமி திருவிழாவின் பிரமாண்டமான காட்சிகளும் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ராமர் கோயிலிலிருந்து வெளியே வந்ததும் சிறிதும் பெரிதுமான கட்டடங்களைக் கொண்ட வளாகத்தை அடையலாம். அதன் வடக்கு மூலையில் பிரமாண்டமாக அமைந்துள்ளது மகாநவமி மண்டபம். உயரமான அடித்தளத்தைக் கொண்ட இதன் புறச்சுவர்களில் அற்புதான புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மல்யுத்தப் போட்டியை அரசர்கள் காண்பது, யானை குதிரைகளை நடத்திச் செல்வது, வெளிநாட்டு யாத்ரீகர்கள் என பலவிதமான காட்சிகள் அமைந்துள்ளன.

இதன் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ளது அழகிய படிகளுடன் கூடிய சதுரக் குளம். வடிவ ஒழுங்குடனும் கச்சிதமான அளவுகளுடனும் அமைந்த இந்தக் குளம் 1980ம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அருகில் நீரைக் கொண்டு வருவதற்கான கல்லாலான அமைப்பு நீண்டு செல்கிறது.

இதனையடுத்து பெரிய நீச்சல் குளம் ஒன்றும் காணப்படுகிறது.

அனந்தபூர்-பெங்களூர் சாலையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் விலக்கில் உள்ளது லேபாக்சி. இந்தியாவின் மாபெரும் ஒற்றைக்கல் நந்தி லேபாக்சியின் அடையாளம். 27அடி நீளமும் 15அடி உயரமும் கொண்ட இந்த நந்தி இவ்வூரின் பெயர் ராமாயணத்தின் ஜடாயுவுடன் தொடர்புகொண்டதாய் சொல்லப்படுகிறது.

இங்குள்ள வீரபத்ரர் கோயில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மண்டபத்தில் உள்ள சிலைகள் அழகிலும் அளவிலும் பெரியன. கூரை முகடுகளில் வண்ணச் சித்திரங்கள் உள்ளன. பிட்சாடணரும் குறபூதமும் ஒருபுறம் அமைந்திருக்க அதன் இடதுபக்கம் ஆடைநெகிழ்ந்த நிலையில் முனிபத்தினி பிட்சாடணரை நோக்கி வருவதுபோன்ற சிற்பம் அபாரமான ஒன்று. கருவறை மண்டபத்தில் உள்ள சிற்பங்களை படமெடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஒரே தூணின் இருபக்கங்களில் ஆணும் பெண்ணும் ஒத்த நடன முத்திரைகளுடன் ஆடுவதுபோன்ற சிற்பம் அபூர்வமானது. வலதுபுறமுள்ள தூணில் அமைக்கப்பட்டுள்ள துர்கையின் சிற்பம் உள்ளே செல்லும்போது நமக்குத் தெரியாது என்பதால் அதன் எதிர்புறம் கண்ணாடியை அமைத்துள்ளனர்.

கோயிலின் பின்னால் பெரிய பாறை நிற்கிறது. அதன் ஒருபக்கம் ஆறுதலை நாகமும் லிங்கமும் வெட்டப்பட்டிருக்க வலதுபக்கத்தில் பிள்ளையார். மீதமுள்ள இரண்டு புறமும் நினைத்தபடி சிற்பங்களை அமைக்க காலம் அனுமதிக்கவில்லை போலும். விஜயநகரின் கோயில்களில் உள்ளதுபோன்ற வசந்தமண்டபத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளுடன் முற்றுப்பெறாத மண்டபம் அமைந்துள்ளது. சிற்பங்களுடனான தூண்கள் நின்றிருக்க அப்படியே கைவிடப்பட்டிருக்கிறது.