தொல்நிலம்

0 comment

வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது.

ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியாகும். ஒருவகையில் அது பெரும்போக்குச் சரித்திரத்துக்கான நுழைவுச் சீட்டு. ஆனால் இன்னமும் இலக்கியத்தின் தெருக்களில் கூட அனுமதிக்கப்படாத மக்கள் இருக்கிறார்கள். அரசியல்சரி என்னும் பருவமழைக் காலத்துக்கு மறைவுப் பிரதேசத்தில் இருப்பதால் கவனத்தின் ஈரம் துளி கூடப்படாது உலர்ந்துபோய் காணாது மறைந்துவிட்ட பெருங்கூட்டங்கள் இருக்கின்றன. அவர்களைப் பற்றி இன்று பேசுவது என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்போக்காக பேசப்படும் நீதியின் குரல்களுக்கு சங்கடம் அளிக்கும் என்பதால் இருக்கலாம்.

பாலஸ்தீனியத் துயரம் பற்றிப் பேசும் பலருக்கு ஆர்மீனியப் படுகொலைகள் பற்றியோ இன்னமும் அந்தத் துயரம் பதில் அளிக்கப்படாமலேயே இருக்கிறது என்பது பற்றியோ தெரிவதே கூட இல்லை. இவ்வளவுக்கும் ஆர்மீனியர்கள் நம் நடுவில் வாழ்ந்திருக்கிறார்கள். சென்னையில் அவர்கள் வாழ்ந்த தெரு அரண்மனைத் தெருவாகி இருக்கிறது. ஆர்மீனியர்கள் தொழுத தேவாலயம் இப்போது சரித்திரத்தின் குப்பைகளை மட்டும் தேடி வருகிற நபர்கள் வந்து போகிற ஓரிடமாக இருக்கிறது.

அமெரிக்கக் கறுப்பினத்தவர் துயரங்கள் குறித்து தெரிந்த நமக்கு நமது அடியில் இருக்கும் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் அழித்தொழிப்பு பற்றிய போதம் முற்றிலும் இருக்காது. நமது கவிதைகளில் ஒரு மறைமுகத் துயரமாகவோ கூட இவர்களைப் பற்றிய குறிப்புகளை நீங்கள் காண்பதரிது.

சரித்திரம் குறித்த நமது குருட்டுத்தனம் புதிதல்ல. ஆனால் இந்தக் குருட்டுத்தனம் வழி தப்பி அலைவதல்ல. நாம் எவற்றின் மீதெலாம் கண்மூடிக்கொள்கிறோம் கண்திறந்து பார்க்கிறோம் என்பதில் ஒரு தேர்வு உள்ளது.

கேப்டன் குக் ‘1770 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த போது‘ அங்கே ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் குறைந்தது பதினைந்து இலட்சம் பேராவது வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கேப்டன் குக் இங்கிலாந்து ராணிக்கு அது ஒரு ‘மனிதர் வாழாப் பிரதேசம்‘ என்று எழுதி அனுப்பினார். ஆகவே, இங்கிலாந்துக்குச் சொந்தமானது என்றும்.

வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சும்மா போகவில்லை. பெரியம்மை போன்ற தொற்று வியாதிகளையும் பால்வினை நோய்களையும் பரிசாகக் கொண்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு சக்தி இல்லாத பூர்வகுடி மக்களில் 70 சதவீதம் பேர் அழிந்தனர். மிச்சமிருந்தவர்கள் வெள்ளையர்கள் செயற்கையாக ஏற்படுத்திய பஞ்சத்தினால் அழிந்தனர். இந்தியாவில் அவர்கள் ஏற்படுத்திய பஞ்சங்களிலிருந்து இது சற்றே வேறுபட்டது. பூர்வகுடிகள் நாடோடிகள் ஆனதால் அவர்களுக்கு நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மீது உரிமைகள் கிடையாது என்று வெள்ளையர்கள் சொன்னார்கள். எனினும் அப்படி உரிமை கோருகிறரவர்களுக்கு ‘வெள்ளையர்  நீதி‘யின் படி ஒரு வாய்ப்பும் கொடுத்தனர். அதாவது, அவர்கள் ஒரு நிலத்துக்கு சிப்பாய்களுடன் செல்வார்கள். அங்கிருக்கும் பூர்வகுடிகளை நோக்கி  ராணியின் பேரால் சரண் அடையும்படி மூன்றுமுறை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அவர்கள் சரணடையாவிட்டால் சுட்டுவிடுவார்கள். பிறகு அந்த நிலம் அவர்களுக்கே சட்டப்படி சொந்தமாகிவிடும். இப்படி அவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதுமே கிடைத்தது.

ஐரோப்பியர்கள் தென் அமெரிக்காவில் நடந்து கொண்ட முறையுடன் உள்ள ஒற்றுமை இங்கு கவனிக்கத்தக்கது. இங்கே ராணி என்றால் அங்கே பைபிள். தென் அமெரிக்காவைக் ‘கண்டுபிடிக்கச் சென்ற‘ கார்டெஸ் அஸ்டெக் ராஜாவிடம் பரிசுப்பொருளாக ஒரு பைபிளைக் கொடுத்தார். ஒரு புத்தகத்தையே அதுவரை பார்த்திராத செவ்விந்திய அரசர் பயந்து அதைக் கீழே எறிந்தார். அவர் விவிலியத்தை அவமானப்படுத்திவிட்டார் என்று அவரை சிறைப்பிடித்துக் கொன்றார்கள். இவ்வாறு பூர்வகுடிகள் வளமான பகுதிகளை விட்டுத் துரத்தப்பட்டு பாலைவனங்களில் அலைந்து திரிய வேண்டியிருந்தது. அவர்களில் யாராவது ஒருவர் அந்திக்குப் பிறகு நகரத்தில் காணப்பட்டால் எந்தக் கேள்வியுமின்றி அவரைச் சுட ஒரு வெள்ளைக்காரருக்கு அனுமதி இருந்தது. அவர்களில் மிச்சமிருந்த வாலிபர்களும் வெள்ளையர்கள் கொண்டு சென்ற போதை மருந்துகளினால் அடிமையாகி சீரழிந்தனர்.

இருப்பினும் பூர்வகுடிகள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கவே செய்தனர். ஆனால் அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை. மேலும் அவ்வாறு எதிர்ப்பவர்கள் வெள்ளையர்களால்  கொடூரமாகத் தண்டிக்கபட்டார்கள். அவர்களது தலைகளை வேட்டையாடும் வீரர்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. பூர்வகுடிகளின் குழந்தைகளின் தலைகளை மண்ணில் புதைத்துவிட்டு கோல்ப் போல ஒருவரால் எவ்வளவு தொலைவு அந்தத் தலைகளை உதைத்துச் செலுத்த முடியும் என்று போட்டி நடத்தினார்கள். ஆண்கள் பெண்களின் கழுத்தை அறுத்துவிட்டு அவர்கள் அலறிக்கொண்டே ஓடி வீழ்வதை ரசிப்பதும் குழந்தைகளை உயிரோடு நெருப்பில் எறிவதும் கூட நடந்தது.

இது போதாதென்று அவர்களது பண்பாட்டை அழிப்பதும் முக்கியமெனக் கருதப்பட்டு அதற்கான பணிகளும் நடந்தன. அமெரிக்காவில் நடந்தது போலவே மிசனரிகள் வரவழைக்கப்பட்டு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஒரு காலனிய அரசு தனது காலனியில் செய்யும் முதல் அறிவுப்பூர்வமான ஆக்கிரமிப்பு அதன் தொன்மங்களைத் தாக்குவது என்கிறார் பனான். ஜே சி குமரப்பா ‘ஆக்கிரமிக்கிறவர்களின் மதம் என்பது அந்த நாட்டின் ராணுவத்தின் ஒரு பகுதிதான்’ என்கிறார். ஆஸ்திரேலியாவிலும் அவர்கள் அதையே செய்தார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் பெரிய பலன் எதுவும் இல்லாதிருக்கவே பூர்வகுடிகளின் குழந்தைகளைப் ‘பண்படுத்துவதற்காக’ அவர்களைப் பெற்றோரிடமிருந்து வலுவாகப் பிடுங்கிப் பயிற்றுவிக்கும் சட்டமும் அவர்களை அடைத்து வைக்க கொட்டடிகளும் தோன்றின. 1962 வரை இது அமலில் இருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்ட இந்த கொட்டடிகளில் அவர்கள் தங்களது தாய்மொழியில் ஒரு சொல் பேசினாலும் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

வலுக்கட்டாயமாக அவர்கள் மீது ஒரு கலாச்சார மறதியும் தாழ்வுணர்ச்சியும் சுமத்தப்பட்டது. ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் நிலத்தோடு பிணைந்த ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். அவர்களது ஆன்மீகமும் நிலத்தோடு இணைந்ததே. வெள்ளையர்கள் அவர்கள் நிலத்தையும் நிலம் சார்ந்த ஆன்மாவையும் சேர்த்தே ஆக்கிரமித்தார்கள். மாயர்களின் மொழியை அழித்தது போல அவர்களது மொழி, தொன்மங்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் அவர்கள் தங்களது வாய்மொழிக்கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் தாங்கள் இழந்த வரலாற்றைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருந்தார்கள்..

சமகாலத்தில் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் நூல்கள் வெளியாகத் துவங்கி இருக்கின்றன.1929 ஆம் ஆண்டு David Unaipon எழுதிய ‘நாட்டுக்கதைகள்’ தான் முதல்முதலாக ஒரு ஆஸ்திரேலிய பூர்வகுடி எழுத்து வடிவில் கொண்டுவந்த படைப்பாகும். கேத் வால்கர் என்ற ஆங்கிலப் பெயரும் Oodgeroo Noonuccal என்ற பூர்வகுடிப் பெயரும் கொண்ட பெண்தான் பூர்வகுடிகளின் முதல் கவி. அதன்பிறகு Colin Johnson-ன் நாவல் என்று பூர்வகுடிகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றனர். எனினும் இவை ஆஸ்திரேலியாவிலும் ஆங்கிலம் பேசும் சில நாடுகளிலும் மட்டும் சிறிய அலைகளை எழுப்பி ஓய்ந்துவிட்டன. குறிப்பாக, ஏறக்குறைய இதே போன்றதொரு வரலாற்றினைக் கொண்ட ஆங்கில இலக்கியப் போக்குகள் எல்லாவற்றையும் அப்படியே சுவதந்தரித்துக் கொள்ளும் நம்மிடையே இந்த நூல்கள் பற்றிய சிறிய குறிப்புகள் கூட எழுதப்படவில்லை என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. ஆனால் யோசிக்கையில் நமது நீதியின் இலக்கியத்தின் கருணையின் போக்குகளை தீர்மானிக்கிறவர்கள் தான் ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிகளை ஒடுக்குகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் இது இப்படித்தான் நிகழும். வேறு வழி இல்லை.

டேவிட் உனைபோன்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நிகழ்ந்த நல்ல விசயங்களில் ஒன்று காலனி ஆதிக்க நாடுகளின் பிடி சற்றே தளர்ந்தது. ஒதுக்கப்பட்ட குரல்கள் சற்றே உயர்த்தப்பட முடிந்தது. இன்றைய சூழலில் இருக்கும் பெரும்பாலான தேசியங்கள் இப்படி உருவானவையே. ஆனாலும் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் இன்னமும் வனாந்தரங்களில் திரிகிறவர்களாகவே இருக்கிறார்கள். தோலின் நிறத்தைத் தவிர பிற எல்லா வகைகளிலும் வெள்ளைப்படுத்தப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அப்படி தங்களை மாற்றிக் கொண்டவர்களும் சம மதிப்பு கொண்டவர்களாக ஆகிவிடுவதில்லை என்ற இரட்டை நிலைதான் இன்னமும் அங்கு இருந்து வருகிறது.

இப்படி தாங்கள் எல்லா தளங்களிலும் அழித்தொழிக்கப்படுவதை கேத் வால்கரின் ‘நாங்கள் போகிறோம்‘ என்ற இந்தக் கவிதை அடையாளப்படுத்துகிறது

“அவர்கள் அந்த சிறிய நகரத்துக்குள் வந்தார்கள்.
ஒரு அரை நிர்வாணக் கூட்டம். அமைதியாக அடங்கி..
அவர்களது இனக்குழுவின் மிச்சம்..

அவர்கள் அவர்களது பழைய போரா நிலத்துக்கு வந்தார்கள்.
அங்கே இப்போது வெள்ளையர்கள் அங்குமிங்கும் எறும்புகள் போல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் முகவரின் ‘இங்கே  குப்பை கொட்டலாம்’ என்ற அறிவிப்பு அங்கே இப்போது தொங்குகிறது.

அது அவர்களது போரா வட்டங்களை பாதி மறைத்து விட்டது.

அவர்கள் குழப்பத்துடன் அமர்கிறார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களை வெளியே சொல்ல முடியாது.
நாம் இப்போது இங்கே அந்நியரைப் போல. ஆனால் உண்மையில் வெள்ளையர்தான் இங்கு அந்நியர்கள்.
நாம் இங்குள்ளவர்கள். பழைய வழியைச் சார்ந்தவர்கள்.
நாம்தான் போரா குலம். நாம்தான் போரா நிலம்.
நாம் நமது புனிதச் சடங்குகள், மூத்தோரின் சட்டங்கள்.
நாம் கனவு நேரத்தின் அற்புதங்கள் என்று நமது தொல்கதைகள் சொல்லின.
நாம் கடந்த காலம். சிரிப்புப் போட்டிகள், வேட்டை மற்றும் நடக்கும் வெட்டவெளி முகாம்களின் கணப்புத் தீமூட்டங்கள்.
நாம் கபம்பா மலைகளின் அப்புறம் ஒளிரும் பயங்கர வேகமுடைய மின்னல்கள்.
பிறகு தொடரும் பெருத்த இடிச் சத்தமும். அந்த ஓசையிடும் நபர்….
நாம் குளத்தை வெளிறச் செய்யும் அமைதியான காலை விடியல்கள்.
நாம் முகாம் நெருப்புகள் தணியும் போது ஊர்ந்து வரும் நிழல் பூதங்கள்.
நாம் இயற்கை. நாம் கடந்த காலம். சென்று ஒழிந்து சிதறிவிட்ட பழைய வழிகள்.
புதர்கள் போய்விட்டன. வேட்டை போய்விட்டது. சிரிப்பு போய்விட்டது.
கழுகு போய்விட்டது. ஈமுவும் கங்காருவும் இந்த இடத்தை விட்டுப் போய்விட்டன.
போரா வட்டம் போய்விட்டது.
போரா திருவிழா போய்விட்டது.
நாங்களும் போகிறோம்.”

உலகில் பின்காலனிய ஆய்வுகளின் மீதான கவனம் ஏற்பட்டபோது, ஆஸ்திரேலிய பூர்வகுடியினரின் வாய்மொழிக் கதைகளையும் பாடல்களையும் கவிதைகளையும் தொகுக்கும் உந்துதல் அவர்கள் நடுவில் எழுந்தது. பூர்வகுடிகளின் குரல்களில் முக்கியமான ஒருவரான கெவின் கில்பர்ட் விராஜ்டுரி ‘கருப்பு ஆஸ்திரேலியாவின் உள்ளே‘ என்ற ஒரு தொகுப்பை வெளியிட்டார்.

கெவின் கில்பர்ட் தனது வெள்ளையின மனைவியைக் கொன்றதாக அவரது இருபத்து மூன்றாவது வயதில் குற்றம் சாட்டப்பட்டு பதினான்கு வருடம் சிறைப்படுத்தப்பட்டார். அது குறித்து அவர் சொல்வது, ‘’நான் இதுபற்றி ஒன்று மட்டுமே சொல்ல முடியும். நான் ஒரு கறுப்புப் பையன். ஒரு வெள்ளை நீதிமன்றத்ததில் நீதிபதி, ஜுரி, வக்கீல் எல்லோருமே வெள்ளையராக இருந்த ஒரு நீதிமன்றத்தில் நான் ஒரு கறுப்புப் பையன். எனக்கு என்ன நீதி கிடைத்திருக்க முடியும் ?’

கெவின் கில்பர்ட்

கெவின் கில்பர்ட் எட்டு உடன்பிறந்தோர் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாக 1933 ல் பிறந்தார். ஏழு வயதில் பெற்றோர் இருவரையும் இழந்தவர். நிறவெறி கடுமையாக இருந்த அந்தக் காலகட்டம் பற்றி இவ்வாறு அவர் நினைவு கூர்கிறார்.

’’இரவு சினிமாவுக்குப் பிறகு நாங்கள் நகருக்குள் தங்கக் கூடாது. வெள்ளையர்க்கும் எங்களுக்கும் ஒரு தடுப்புக் கயிறு எல்லா இடங்களிலும இருக்கும். நாங்கள் மருத்துவமனைகளின் உள்ளே செல்ல முடியாது. வராண்டாவில்தான் கிடக்க வேண்டும். அங்கிருக்கும் தலையணை, போர்வைகளில் ‘கறுப்பர்!’ என்று எழுதி இருக்கும். 1950கள் வரை நாங்கள் மக்கள் தொகைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பண்படுத்துவதற்காக தனியாக மிசனரிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கொட்டடிகளில் இருக்கும் எங்கள் சகோதரர்களைக் காண நாங்கள் அனுமதி வாங்க வேண்டும். பல நேரங்களில் அது கிடைக்காது. குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வலுவாகப் பிடுங்கப்பட்டார்கள். எங்களது நாய்களை குறிபார்த்துச் சுடும் பயிற்சிக்கு வெள்ளையர்கள் பயன்படுத்துவார்கள். சில நகரங்களுக்கு பத்து மைல் சுற்றளவில் கூட நாங்கள் போக முடியாது. இரண்டாம் உலகப்போரில் வெள்ளையர் சார்பில் போரிட்ட எங்கள் இனத்தவருக்கும் இதே கதிதான்.

ஆம். நான் கருப்பாய்ப் பிறந்தேன். எங்களைத் தகரக் கொட்டகைகளிலும் பாலைநிலங்களிலும் வாழ நிர்ப்பந்தித்துக் கொண்டே அடிக்கடி ‘நீதி, ஜனநாயகம், கிறித்துவ அன்பு‘ என்றெல்லாம் கூச்சமிலாமல் பேசிக்கொண்டிருந்த ஒரு வெள்ளையர் சமூகத்தின் நடுவே கருப்பராய்ப் பிறந்தேன். ஆனால் அவ்வளவு வறுமையிலும் கந்தலிலும் மிகச் சிலவேயான உடமைகளிலும் கூட எங்களது அன்பு தூய்மையாகவே இருந்தது. எங்களது உண்மை கலப்படமில்லாததாகவே இருந்தது. எங்களது ஆன்மிகம் இந்த வெள்ளைக் கிறித்துவர்கள் எவரிடமிருந்ததை  விடவும் உயர்வானதாகவே இருந்தது.”

“கருப்பு ஆஸ்திரேலியாவின் உள்ளே” மிக முக்கியமான ஒரு கவிதைத் தொகுப்பாகும். ஆஸ்திரேலிய பூர்வகுடிக் கவிஞர்களில் முக்கியமான குரல்களை உள்ளடக்கியது.

அதிலிருந்து ஒரு கவிதை இது.

W.S .Russell எழுதிய ‘வளர்ச்சிப் பணியாளர்கள்‘ என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு.

“எனது இருதயத்தின் ஆழத்தில் செலுத்தப்படும் ஒரு ஈட்டி போல
ட்ரில் நிலத்தைத் துளைக்கிறது.
யுலு குடியினர் ஆன்மாவை விடுவிப்பது போல
கம்பெனியினர் நிலத்தைக் களிப்புடன் கொல்கின்றனர்.

ஒரு கேடயத்தைப் போல நான் இப்போது
வார்த்தைகளைக் கையாள்கிறேன்.
என்னால் செரிக்க முடியாத விஷயங்களைக் காண நேரிடும்போது!

நான் இந்த நிலம். இந்த நிலம் என்னுடையது.
என்னால் இதை மாற்ற முடியாது.
கம்பெனியை என்னுடையதாக நினைக்கவோ
எனது நிலத்தை உங்களுக்கு வழங்கவோ முடியாது.

ஒருவேளை நீங்கள் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளும் போது
நீங்கள் அதனுள் வாழ முடிகிற போது
நீங்கள் அதனைப் புரிந்துகொள்கிறோம்
என்று பெருமையுடன் சொல்லமுடிகிறபோது….

இருந்தாலும் நான் கொடுக்க மாட்டேன்.
அது எனது சொந்தமல்ல.
யாரால் தாயைத் தரமுடியும்?

ஆனால் அதைப் பெருமையுடன் உன்னுடன் நான் பகிர்ந்து கொள்ளமுடியும்.
பிறகு உன்னை என் சகோதரன் என்று அழைக்கவும்…..”