வாடாமல்லி

0 comment

“அழகிய கண்ணே… உறவுகள் நீயே…”

கொன்றை மர இலைகளின் மேல் பறந்து போகிற பொன் வண்டைப் போல் மனசை வருடிச் செல்கிற பாடல். தோட்டத்தின் தூரத்து சனிமூலை குடிமுந்திரியில் தலையில் முந்தானையை போட்டபடி சொரட்டுக் கழியோடு முந்திரிக் கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு கிணற்றுக்குள் கேட்பது போல் காதில் விழவும் திரும்பி வீட்டுப்பக்கம் பார்த்தாள். “போன் அடிச்சிகிட்டு கெடக்கு. அப்பா எங்கடா போச்சி…” பூண்டியாங்குப்பத்து தேரைப் போல் சன்னபின்னலாய் காய்த்துத் தள்ளியிருக்கும் முந்திரியின் தொங்கலில் கொட்டை பொறுக்கிக் கொண்டிருக்கும் மகாலட்சுமியிடமும் செல்வகுமாரிடமும் கேட்டுக்கொண்டே சொரட்டுக் கழியை போட்டு விட்டு, வீட்டை நோக்கிப் போனாள்.

“யாரா இருக்கும்…” முந்தானையையும் மீறி தலையில் விழுந்து கிடந்த முந்திரிப் பூக்களை விரல்களால் தள்ளியபடி சந்தேகமாய் போய் வெளிமாடத்தில் குரல் ஓய்ந்திருந்த போனை எடுத்தாள். “அம்மாதான்… என்னா சேதியின்னு தெரியிலியஞ் ராத்திரிதான பேசனாங்க…”

கூப்பிட்டாள். எதிர்பார்த்துக் கொண்டு குந்தியிருந்த மாதிரி முதல் அடியிலேயே எடுத்ததும் “என்னாம்மா…” கேட்டாள். மல்லிகா முகத்தில் திடுமென ஒரு அதிர்வு. குரலில் பெரும் பதற்றம். “எப்பம்மா…”

வெலவெலத்த மாதிரி போனை வைத்துவிட்டுத் திரும்பிய போது, தெருப் பக்கமிருந்து வந்த பன்னீர்செல்வம் குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்ததும் அவளுக்கு இன்னும் படபடப்பு. ‘என்ன ஏது…’ என விசாரித்துவிட்டால் எங்கு தன்னையறியாமல் அவன் முன்னால் உடைந்து அழுது விடுவோமோ என்கிற பயத்தில் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“என்னாப்பா எதாவது முக்கியமான சேதியா?” அவனுக்கும் பதற்றம் தான்.

“என்னா பெரிய முக்கியமான சேதி. மணக்கொல்லையில நம்ப வூட்டுக்கும் மேற்கால அந்தக் குடிகாரப் பய, சக்கர இருந்தாம் பாரு. அவம் போய் சேந்துட்டானாம்.” அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் சொல்லிக் கொண்டே இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள செப்புக் குடத்திலிருந்து தண்ணீரைச் சாய்த்துக் குடித்தாள். குடித்த தண்ணீர், அவள் நினைத்தது மாதிரி அவளை இயல்பாக இருக்க விடாமல் உள்ளுக்குள் கெட்டிப்பட்டுக் கிடந்த சக்கரவர்த்தியின் நினைவுகளையெல்லாம் கணத்தில் கரைத்துவிட நாலாகடையுமாய்த் தளும்பிக் கொண்டு நின்றிருந்தாள்.

“க்கும்… நேத்திக்கி விருத்தாசலத்துல ஒங்க செம்புலிங்கப் பெரிப்பாவ பாத்தப்ப இந்த மாதிரி சக்கரவர்த்திக்கு ரொம்ப சீரியசா இருக்குன்னுதான் சொன்னாரு. ஓங்கிட்ட சொல்றதுக்கு மறந்துட்டன்…” மன்னிப்பு கேட்கிற தொனியில் சொன்னான். உண்மையில் அவளிடம் சொல்ல வேண்டும் என்கிற ஞாபகமெல்லாம் அவனுக்கு இருந்ததுதான். ஆனால் அதை நாமாகச் சொல்லி அவளைச் சங்கடப்படுத்த வேண்டாம் என யோசித்துதான் விட்டுவிட்டான். ஆனால் திடுமென இவ்வளவு குறுகலில் இப்படிச் சேதி வந்துவிடும் எனத் தெரிந்திருந்தால் நேற்றைக்கே அவளிடம் சொல்லியிருக்கலாமே எனக் குற்ற உணர்ச்சியில் மனசு குடைந்தது.

“பொழுது முப்பது நாழியும் குடிகுடின்னு குடிச்சிகிட்டு இருந்தா என்னா செய்யும்… கண்டும் காணாததுக்கு அவம் அப்பனுக்கு இருந்த சுகரு இவனுக்கும் இருந்துருக்கும். சேட்டமோட்ட எல்லாம் சேந்து வந்து கடந்த நேரத்துல, காலி பண்ணிட்டுது போல்ருக்கு. யாரு சொல்லி எதக் கேட்டான் கம்னேட்டி பய… இப்பிடி போய் சேர்றதுக்குதான் அந்த கெதியில நின்னுகிட்டு இருந்தான்…” அவளையறியாமல் தத்தளிக்கிற ஆத்திரத்தில் பேசிக் கொண்டிருந்தவள், திடுமென வாசாங்கு விடுகிற மாதிரி பேசினாள். “தே, போய் சேந்துட்டான். போக்காளியாப் போறவனுக்கு ஏறி வுழுந்து தாலி கட்டிகிட்டா பாரு, பாப்பாத்தி மொவ. இனிமே தான் தெரியும். மூணு பொட்டப் புள்ளிவுளயும் வைச்சிகிட்டு நிக்கிற அவ கத…”

தண்ணீர் குடிக்க வந்த மகா, பொரிந்துகொண்டு நிற்கும் ஆத்தாளைப் பார்த்து கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். “என்னாம்மா?”

பதிலேதும் சொல்லாமல் மல்லிகா இறுக்கமாக நின்றிருந்ததும், பன்னீர்தான் மகளிடம் சேதியைச் சொன்னான்.

“அந்த ஆள் செத்ததுக்கு எதுக்கு இப்படி…” எப்போதுமில்லாதபடிக்கு கலகலத்து நின்றிருக்கும் அம்மாவை குழப்பமாக பார்த்துக் கொண்டே  தவலையில் தண்ணீர் சாய்த்துக் குடித்தாள் மகா. துப்பட்டாவை வளைத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்த அவளுக்கு, செத்துப் போனதாய் சொன்ன ஆள் உள்ளுக்குள் வந்தான்.

சுமாரான சிவப்பில், திட்டமான உயரத்தில் எப்போது பார்த்தாலும் நெளிநெளியாய் தலை கலையாமலேயே இருக்கும், அந்த ஆளுக்கு. அரிதாய் வெளியூர் கிளம்பும் போது மட்டும் சலவைச் சட்டையில் பார்த்தால் பெரிய படிப்புக்கார தோரணை தெரியுமே தவிர மற்ற நேரமெல்லாம் கைலி பனியனில் முந்திரிக்காட்டு ஆள்தான். பெரும்பாலும் கூரை வீட்டுக்கும் முன்னால் இருக்கும் சிமிட்டிக் கட்டையில் குந்திக்கொண்டு தன்னக்கடந்த போதையில் தெருவைப் பார்த்து ஓயாமல் உளறிக் கொண்டு கிடப்பான். இல்லையென்றால் காடையைப் போல் இருக்கும் அவன் பொண்டாட்டியிடம் சண்டை வளர்த்திக் கொண்டு, சமயத்தில் செம்பட்டை பாய்ந்து கிடக்கும் அவளின் மயிரை இழுத்துப் போட்டு அடிப்பான். அடிக்கடி நடக்கிற கண்காட்சி என்பதாலே என்னவோ யாரும் வந்து விலக்கி விட மாட்டார்கள். சின்னது ரெண்டும் அம்மாக்காரியின் மேல் விழுந்து கிடக்க அவளைப் போலவே தோற்றங்காட்டும் பெரிய பொட்டைப்பிள்ளை மட்டும் அம்மா, தங்கச்சிகள் மீது விழுகிற அடியைத் தான் வாங்கிக் கொண்டு கத்திக் கதறியபடி அவனை எட்ட இழுத்துக் கொண்டு போவாள். அந்த பெண்ணுக்கு மகா வயதுதான் இருக்கும். கண்ணீரும் கம்பலையுமாக அந்தக் கோலத்தில் அவளைப் பார்க்கிற போது மகாவிற்குத் தானாகக் கண்ணோரம் ஈரம் கசியும். அந்த ஆள் செத்துவிட்டான் என சேதி தேரிந்ததும் தங்கைகளோடு கூடிய அந்தப் பெண்ணிற்கும் அவளின் அம்மாவுக்குமாக ஏதோ விடிவு வந்து விட்ட மாதிரி மகாவிற்குத் தோன்றியது.

மகா ஒருமுறை ஊருக்கு போயிருந்த போது எதிரில் போதையில் வந்துகொண்டிருந்த அவன், இவளை அப்படியே கடித்து விழுங்கி விடுகிற மாதிரி பார்த்துக் கொண்டே போனான். வெளிய வித்துக்கு போகிற கிழக்குவெளியின் தனித்த பாதையென்பதால் மகாவிற்கு பயமாய் போய்விட்டது. திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து அதே சூட்டோடு “எம்மா இந்த பக்கத்து வூட்டு குடிகாரன், என்னாம்மா இப்பிடி மொறைச்சி மொறைச்சி பாத்துக்கிட்டு போறான்?” மல்லிகாவிடம் அலண்டமாதிரி அதே நேரம் புகாராய் சொன்னாள்.

ஒருகணம் அவளுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் மல்லிகாவிற்குக் குழம்பியது. லேசாய் சிரித்துக் கொண்டே மகாவைப் பார்த்தாள். “போதையில இருக்கற ஆளுவோ எல்லாருக்குமே, கண்ணாம்பு சுத்தறமாதிரி பார்வையில பட்டுன்னு எதுவும் புரியாது. எதப் பாத்தாலும் உத்து உத்து பாக்கறதுல நமக்கு மொறைச்சி மொறைச்சிப் பாக்கறமாதிரி தெரியும். வேற ஒன்னுமில்ல.” மகாவிற்கு சமாதானம் சொன்னாலும் உண்மையில் அது இல்லை சங்கதி. மகா எப்போதும் சுடிதாரிலேயே ஊருக்கு வந்து போகிறவள், அன்று வழக்கத்திற்கு மாறாக தாவணி பாவாடை கட்டியிருந்தாள்.

மல்லிகாவிற்கு பட்டென்று மனசின் ஒரு மூலையில் சுருட்டி எரிந்த கந்தல் துணியைப்போல் சுருண்டு கிடந்த அவளின் சின்ன வயது உருவம் பொசுக்கென்று தாவணி கட்டிக் கொண்டு நின்றது.

மல்லிகாவும் தாவணி பாவாடையில் அச்சு அசலாய் மகாவைப் போல்தான் இருப்பாள். அந்தக் குடிகார பயல் சக்கரவர்த்திக்கும் இவள் தாவணி பாவாடையில் தெருவில் குறுக்க நெடுக்க வரும்போதுதான் குட்டிப் போட்ட பூனையைப் போல் அங்குமிங்குமாய் இவளையே நோட்டம் விட்ட படியாய் அலைமோதிக்கொண்டு நிற்பான். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு முறையும் புது தாவணி பாவாடை கட்டும்போதெல்லாம் எப்படியாவது கொல்லை குடிக்குப் போகிற வழியில் சாடைமாடையாய் அவனிடம் காட்டி “நா எப்பிடி இருக்கன்?” எனக் கேட்காமல் விடவே மாட்டாள்.

கடைசியாய் மல்லிகா கட்டிய தாவணி, அவனுக்குப் பிடித்த மென்மையான இலைப் பச்சை நிறம். கூழுக்கு மாங்காய் தோத்தது இல்லையென்கிற மாதிரி அதற்குத் தோதாய் அரக்கு மஞ்சளைக் குழைத்தது போன்ற ஜாக்கெட். மெலிசான நீலத்தில் சிறு பூக்களைக் கொண்ட பாவாடை. பட்டாம்பூச்சி சிறகை விரிப்பதுபோல் தாவணி பாவாடையை விரித்துக் காட்டி குள்ளச்சி ஓடை முந்திரித்தொங்கல் நிழலில் அவனிடம் மகிழ்ந்து கேட்கிறாள். “நெல்லா இருக்கா?”

பீடி நெடியோடு சிரிக்கிறான். அவன் சிரிப்பில் மல்லிகாவிற்கு திரும்பவும் ஒருமுறை வயசுக்கு வந்தது போல் மனம் கொள்ளாப் பூரிப்பு. அப்படியே ஓடை மணலில் மல்லாக்கச் சாய்ந்து அசகுலையாமல் அவனை மார்பில் கிடத்திக்கொள்ள வேண்டுமாய் உடம்பு துடித்தது.

ஒன்றும் சொல்லாமல் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு கிழக்கே மணலில் நடந்து போய் குடவு கொண்டிருந்த ஓடையின் திருப்பத்தில் வளைந்து நிமிர்ந்திருந்த தாழை மரத்தில் எக்கி ஒரு பூவை ஒடித்தான். பின்தொடர்ந்து வந்த அவளை வலிந்து திருப்பி ஒரு பூமடலைப் பிய்த்து தலையில் செருகி மீதப் பூவை அவள் கையில் கொடுத்தான். இன்னும் மரத்தில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு பூமடல்களை வட்டமிட்டுக் கொண்டிருந்தன தேனீக்கள். எங்குமாய் சூழ்ந்து கொண்ட தாழம்பூ வாசம். ஈச்சையும் நாணாவுமாய் புதர்மண்டிக் கிடந்த குள்ளச்சி ஓடை சிட்டு தட்டுவதற்குள் பூத்துக் குலுங்குகிற சோலையாகி விட்ட அதிசயம்.

“நெல்லா இருக்கான்னு கேட்டதுக்கு இப்பிடிப் பூவ ஒடிச்சிக் குடுத்தா போதுமா?” ஏக்கமாய் கேட்கிறாள்.

“வேற என்னா வேணுமாம்?” அவளின் தாவாங்கட்டையை நிமிர்த்திக் கேட்கிறான். தாழம்பூ வாசத்தை மீறியும் அவனிடமிருந்து பீடி வாசம்.

உள்ளுக்குள் தப்புத் தப்பாய் ஓடிக்கொண்டிருந்த ஆசைகளையெல்லாம் பொசுக்கென மூட்டை கட்டி வைத்துவிட்டு கெஞ்சுகிற மாதிரி அவனிடம் சொன்னாள். “எனக்கு வேணுங்கறதலாம் சொன்னன்னா நீ பொட்டுன்னு திரும்பிப் பாக்காம நடையக் கட்டிடுவ, வேணாம். அதுக்குலாம் நேரங்காலம் இருக்கு, எங்க போயிடப் போற… காலுல வளைச்சி வளைச்சிப் போட்டு கம்மஞ் சக்கைய மிறிக்கிற மாதிரி… ஒன்ன அப்பப் பாத்துக்கறன்.”

பெருமூச்சி விட்டபடி தொடர்ந்தவள், உடைந்த குரலில் சொன்னாள். “இப்பத்திக்கு எனக்கு ஒன்னும் வாணாம். ஓங் கால்ல வேண்ணாலும் வுழறன். ஒனக்கு ஒரு புண்ணியமாப் போவும். கொடலப் புடுங்கற நாத்தம் அடிக்கிற பீடியையும் இந்த வயிசிலியே வாங்கி வைச்சிருக்க பாரு பெரிய குடிகாரன் பட்டம் அதையும் எனக்காக செத்த வுட்டு ஒழிச்சி தலமொழுவுடு.”

புதுவாசம் போகாத தாவணி முனையால் கண்ணீரைத் துடைத்து விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள். “இத ரெண்டையும் வைச்சே எங்க செகா எல்லாம் ஓங் காத்தே ஆவாதுன்னு கொடுவாள எடுத்துகிட்டு நாளைக்கி நிக்கப் போறானுவோ. இது எதுல கொண்டு போயி வுடப்போவுதோ ஆண்டவனுக்குதான் வெளிச்சம்…” சொல்லிக் கொண்டிருந்தவள் பட்டென்று தீர்மானமாய் உருக்கமான சற்று உறுதியான குரலில் தெறித்தாள். “அப்பிடி ஏதாச்சும் கோண எழுத்து குறுக்கால இருந்து நீ எனக்கு இல்லன்னு ஆயிப்போச்சின்னா அப்பறம் ஒரு நிமிசங் கூட இந்த உசுர வைச்சிக்கிட்டு நா இருக்கமாட்டன் சொல்லிட்டன்.”

“எல்லாரும் வூட்டுக்குள்ள வந்து நொழைஞ்சிக்கிட்டு, நா மட்டும் தனியா கொட்ட பொறுக்கறதா…” செல்வகுமார் மூக்கால் அழுது கொண்டே வீட்டுக்குள் வரவும் காற்றசைவில் உதிரும் கிளைத் துளிகளைப் போல் நினைவுகள் விடுபட்டு குளிப்பதற்காய் கிளம்பினாள், மல்லிகா. குளிக்க என்பது இரண்டாம் பட்சம்தான். குளிக்கிற சாக்கில் மல்லிகாவிற்கு செத்த நேரமாவது தனிமையில் குலுங்கி அழ வேண்டும் போல் மனமெல்லாம் பாரமாய் அழுத்திக்கொண்டிருந்தது.

“தம்பிய இட்டுக்கிட்டு போயி ரெண்டு பேரும் கொட்டைய பொறுக்குங்கப்பா…” கெட்டித்த குரலில் மகாவிடம் சொல்லிவிட்டு கொடியில் கிடந்த புடவையை உருவினாள்.

“நீ வல்லியாம்மா?” இடுப்பில் விரல்களைக் கொடுத்து பேண்ட்டை உயர்த்தியபடி சந்தேகமாய் செல்வகுமார் கேட்கவும் மகாதான் அவனிடம் சொன்னாள். “ஆயா ஊர்ல சாவு ஒன்னுன்னு போறாங்க. நீ வா நாம ரெண்டு பேரும் போயி பொறுக்கும்.”

பசங்கள் இரண்டும் பொறுக்கிக் கொண்டிருக்கிற முந்திரிக்குப் போகிற வரை காத்திருந்து விட்டு குளிப்பதற்காக நுழைந்தவள் பக்கம் திரும்பினான். “நா வேண்ணா ஊருக்குள்ள போயி நாலு சனங்கள எழவுக்கு போற மாதிரி சொல்லிட்டு வருட்டுமாப்பா? பக்கத்து வூட்டுச் சாவு. போறவர்ற எடம். நாலு பேர இட்டுக்கிட்டுப் போனாதான மரியாதையா இருக்கும்.”

உடனடியாகத் திரும்பி பதில் சொன்னால் கலங்கியிருக்கும் கண்கள் தளும்பி சிதறிவிடுமோ என்கிற தயக்கத்தில் சற்று யோசிப்பது மாதிரி தயங்கினாள். பிறகு பொங்கி வழிந்த குமுறலை அடக்கியபடி திரும்பாமலேயே சொன்னாள். “பக்கத்து வூட்டு சாவா இருந்தா என்னா. பெரிய பாளையப்பட்டு அவுரு. படையத் தெரட்டிக்கிட்டு போயி நிக்கினுங்கற…” கதவைச் சாத்திக் கொண்டாள்.

உள்ளே சலசலவென குளிக்கிற தண்ணீர் சத்தம், அவள் உரக்க அழுது கொண்டிருப்பதாய் அவனுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

சக்கரையின் நினைவுகள் மேலெல்லாம் தண்ணீராய் வழிந்தோட அப்படியே சிலையாய் நின்றிருந்தாள். உடம்பைத் தழுவிக் கொண்டோடும் இந்தத் தண்ணீரைப் போல சக்கரையைத் தன்னோடு தழுவிக் கொள்ள எவ்வளவு ஆசைப்பட்டாள். அவனுக்காக அப்பன் ஆத்தாளிடம் தான் எப்படி எப்படியெல்லாம் போராடினாள்…

“அந்தக் குடிகார பய எதுக்கு? பொழுது முப்பது நாழியும் பீடியும் கையுமா நிக்கறவங்கிட்ட போயி தலையெழுத்தா?” கந்தன்தோப்பு குடிமுந்திரியில் கொண்டுபோய் குந்தவைத்து அப்பனும் ஆத்தாளும் அவள் சொல்லியது மாதிரியே பீடி, குடி இரண்டையும் காரணம் காட்டி முதல் முட்டுக்கட்டையைப் போடுகிறார்கள்.

“எல்லாம் நாம் போயி அவனத் திருத்தி வழிக்கு கொண்டாந்துடுவன்” பதிலுக்கு ஆணிகளாய் வார்த்தையை இறக்குகிறாள்.

அப்பனுக்கு கோபம் பொறி பறக்கிறது. “பாத்தியாடி நீ புள்ள வளத்த லட்சணத்த. என்னா தெனாட்டும் பேர்ல பேசுது பாரு.”

“பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு காணா மூணா தெரியாதவங்கிட்ட போயி தலைய நீட்டுணும்னு ஒனக்கு என்னா தலையெழுத்தாடி?” கட்டியவனிடம் எகிறிய கோபத்தைப் பார்த்து மிரண்டு போய் இரண்டாவது கணையை எறிகிறாள், பெத்தவள்.

“படிக்கிலன்னா என்னா. நம்பள மாதிரி அரைக் காணி காக் காணிகாரங்களா அவுங்க! முந்திரி, வயக்காடுன்னு பத்து பாஞ்சி ஏக்கருக்கு மேல நெலபலம். நாளைக்கிப் பிரிச்சி வுட்டாக்கூட தலைக்கி நாலு ஏக்கரு வரும். இப்ப என்னிய மட்டும் என்னா, கலெக்டருக்கா படிக்க வைச்சிட்டிங்க. படிக்காதவனக் கட்டிக்கறதுக்கு ரொம்ப மானரோஷமா போவுது” எப்போதும் இல்லாதபடிக்கு ரொம்பவும் விபரம் தெரிந்தவளைப் போல அவளின் பேச்சில் அப்பங்காரனுக்குத் தாண்டி விட்டது.

ஏற்கெனவே மின்னலாய் பறக்கிற காந்தாலத்தில் நிற்கிறவன். குறிப்பாய் நில பலத்தை பற்றிப் பேசியதும் அப்பங்காரனுக்கு தாங்கவில்லை. “நானும் போனாப் போவுதுன்னு பாத்தா ரொம்பதான் ஒனக்கு செல்லம் கொஞ்சுது போல்ருக்கு. நீ படிச்சிக் கிழிச்சதுக்கு படுத்தற பங்கம் பத்தாதுன்னு இன்னம் கலெக்டருக்கு படிக்க வைக்காததுதான் பெரிய கொறச்ச மயிரா பூட்டுது.”

நின்ற நிலையில் ஓங்கி ஒரே உதைதான். குறுக்கே ஆத்தாக்காரி விழுந்து மறிக்கவில்லையென்றால் மூஞ்சி மொகரையெல்லாம் போயிருக்கும். உடைந்து அழுகிறாள். “ஏண்டி எங்கள இப்பிடி பங்கப் படுத்தற?”

அழுகிற ஆத்தாளைப் பார்த்து முறைத்துக் கொண்டே குந்தியிருக்கிறாள். கணதாண்டிய கோபத்தில் அப்பங்காரன் இவளைப் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே சொல்கிறான். “ஒரக்கட்டையில துணி சுத்தியிருந்தாலும் தூக்கிப் பாக்கற ஆளுவோ அவனுவோன்னு தெரியாம நிக்கிற நீனு…”

“அவம் அப்பன் பெரிப்பன்னு எவனாவது அப்பிடியாப் பட்ட ஈன புத்திக்காரனா இருப்பான். ஆனா இவன்லாம் அப்பிடிபட்ட ஆளு இல்ல.” கல்லுக்குண்டாய் தெறிக்கும் குரலில் இவள் சொல்லவும் ஆத்தாக்காரிக்கு பொட்டென்று அழுகை நின்று கிட்ட நெருங்கி “அவம் அப்பிடியாப்பட்ட ஆளு இல்லியா.  அவன் அண்ணம் பொண்டாட்டி குளிக்கிறப்ப கல்ல வுட்டக் கெடாசனான்னு தெருவு சிரிச்சது ஒனக்கு மறந்து போச்சாடி?”

சொல்லி வாயைக் கூட மூடவில்லை. வாயில் அடிக்கிற மாதிரி சொல்கிறாள். “அவன் யார் மேலயும் கல்ல வுட்டு கெடாசியிருக்க மாட்டான். இவளுவோ எவளாவது தான் அவம்மேல ஆசப்பட்டு வுட்டுக் கெடாசியிருப்பாளுவோ…”

சக்கரவர்த்தி, குடும்பத்தில் நாலாவதாய்ப் பிறந்தவன். அப்பன் குப்புசாமிக்கு பத்து பாஞ்சி ஏக்கருக்கு மேலாய் சொத்து. எல்லாமும் சக்கரையின் பாட்டன், தொப்பளா படையாட்சி, சாராயம் காய்ச்சி விற்றதில் ஒன்றுக்கு முக்காலாய் வாங்கிப்போட்டது தான். தன்னக்கடந்த சொத்தில் குப்புசாமிக்கு தலைகால் புரியாத வாழ்க்கை. பொழுது முப்பது நாழிகையும் குடி. போற போற இடத்தில் கூத்தியா.

குப்புசாமியின் மற்ற மூன்று பசங்களும் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் எல்லோருக்குமே ஆத்தாள் பரிவட்டத்தாளைப் போல் ஒடித்து இடுப்பில் வைத்துக் கொள்ளலாம் என்கிறமாதிரி வெடவெடத்த உடம்பு வாட்டம். இதில் ஒதியங்கிளை மாதிரி தன்னையே உரித்து வைத்ததாய் இருக்கும் கடைக்குட்டி சக்கரை மீது மட்டும் குப்புசாமிக்கு அளவு கடந்த பிரியம். குடிபோதையில் கொடுக்கிற முத்தம். குடிக்கிறபோதில் மீந்த மிக்சர், முறுக்கு எனச் சின்ன வயதிலேயே அப்பன் வழியாய் பழக்கமாகிவிட்ட சாராய நெடி. அப்பன் போய்ச் சேர்ந்த பின்னும் கற்றுக்கொண்ட எதையும் விடமுடியாமல் காலப்போக்கில் பச்சைச் சாராயத்தைக் கூட சுடச்சுட பித்தளை ரோட்டாவிலிருந்து அப்படியே தூக்கிக் குடிக்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டது.

என்னதான் குடிகாரப் பட்டத்தை சின்ன வயதிலேயே வாங்கி விட்டாலும் இந்த பொட்டைப் பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் அவனுக்கு நாட்டமில்லாமலேயே போய்விட்டது. மாறாக கரவுசரவான அவனது உடம்பின் மீது ஏகப்பட்ட குட்டிப்படைவுளுக்கு மட்டுமல்லாமல் கல்யாணம் கட்டிக்கொண்டவள்களுக்குக்குக் கூட ஒரு கண்தான். கொல்லையில், முந்திரித் தோப்பில் அவளவள்கள் விரித்த வலையில் அவன் சிக்காத வெறுப்பிலும், சமயத்தில் வலை விரித்ததை எங்கு வெளியில் சொல்லி விடுவானோ என்கிற பயத்திலுமாக சம்பந்தப்பட்டவள்கள் ஊரெல்லாம் பறக்க விட்டதுதான் கல்லை விட்டு எறிந்தான், கையைப் பிடித்து இழுத்தான் என்கிற இந்த பொம்பளை பொறுக்கிப் பட்டம்.

அதில் ரொம்பவும் பெரிய பட்டந்தான், அவனின் நடு அண்ணி குளிக்கும்போது கல்லை விட்டுக் கெடாசியதாய் கட்டி விட்டது. ஊற வைத்த உளுத்தமாவைப் போல் உடம்பை வைத்துக் கொண்டு இவனிடம் அவள் கட்டிய கூட்றுப்புகளையெல்லாம் குடிபோதையில் எங்கு உண்மையை உளறிக் கொட்டி குடும்ப மானத்தை தெருவில் பறக்க விட்டுவிடுவோமோ என்கிற பயம். அவமானத்தைத் தாங்கித்தான் குன்னிக்கொண்டு போனான். உள் நந்தனம் புரியாமல் ஊரே அவன் மீது காறித் துப்பியது.

பூத்துக் குலுங்கும் பருவத்தில், அங்காண்ட வீட்டில் நடக்கிற கண்காட்சியையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற மல்லிகாவும் தன்பங்கிற்கு காற்றுவாட்டத்தில் காறித் துப்பினாள் தான். ஆனால் அப்படி காறித் துப்பியவன் மேலேயே அவன் இல்லையென்றால் தான் இல்லையென்கிற அளவிற்கு பைத்தியமாய் நிற்பாள் என்று ஒருபோதும் அவள் நினைத்துப் பார்க்கவேயில்லை.

அது கொல்லையில் கடும்புடியாய் நடவு வேலை நடக்கிற புரட்டாசி மாதம். தோட்டத்து வாகநார மரத்தை கழித்துக் கொண்டுபோய் போட்டு நடவு நட்டால் மேந்தீனியே தேவையில்லையென ஊராகாலி மாடாய் சுத்திவரும் சக்கரவர்த்தியிடம் தழை கழிக்கிற வேலையை ஒப்படைத்து விட்டார்கள். அவன் கூடப் பிறந்தவர்கள். படலுக்கு நட்டது எல்லாம் பெருமரமாய் அடம்பு கட்டி நிற்க, ரொம்பவும் வேண்டா வெறுப்பாய்தான் ஒவ்வொன்றாய் ஏறிக் கழிக்கிறான். பக்கத்துத் தோட்டம் மல்லிகாவுடையது.

அன்று அமாவாசை விரதம். குளித்துவிட்டு சோறாக்க வேண்டும் என்கிற பரபரப்பில் மல்லிகா. ஆனால் சல்லிசாய் குளிக்க முடியாத நெருக்கடி. உயரே மரம் கழித்துக்கொண்டு நிற்பவன் சற்று திரும்பினால் கூட சாக்கு படுதா வளைவில் குளித்துக்கொண்டு நிற்கும் இவளை சலாபத்தாய் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்துவிட முடியும் என்கிறமாதிரியான இக்கட்டு. வேறு எங்கும் போய் குளிக்க முடியாத சிக்கலில் பகமாறிக் கொண்டு நெடுநேரமாய் நிற்கிறாள். அவன் மரத்தைவிட்டு இறங்கவேமாட்டன் என்கிற மாதிரி அடுத்தடுத்த மரமாய் விடாமல் கழித்துக் கொண்டேயிருக்கிறான். அந்தாண்டப் பக்கமாய் முகம் திரும்பி கழித்துக் கொண்டிருந்தாலும், எந்த நேரத்திலும் தன் பக்கம் அவன் பார்வை திரும்பிவிடக்கூடும் என்கிற மாதிரி மல்லிகாவிற்கு உள்ளுக்குள் படபடப்பு. பத்து நாளைக்கு முன்பு அண்ணிக்காரி மீது அவன் கல்லை எறிந்ததாய் தெருவில் நடந்த கண்காட்சி வேறு சமயா சம்பந்தமில்லாமல் மனசுக்குள் வந்து அவளை ஐயறுவு படுத்தியது.

புரட்டாசி நடுப்பத்துக்கு முன்பு நடவு நட்டு முடித்து விடவேண்டும் என்கிற அரிபிரியில் சனமெல்லாம் வயக்காட்டுப் பக்கம் ஓடிவிட வெறிச்சோடிப் போய் கடபடாத கிழங்கட்டைகளைத் தவிர இவள் மட்டுந்தான் தனியாய் தெருவில். குளித்துக் கொண்டிருக்கும் போதே திடுமென மரத்திலிருந்து குதித்து அவளைத் திமிற முடியாதபடிக்கு இறுக்க கட்டிக்கொள்வதாய் தேவையில்லாமல் அவள் மனசில் காட்சிகளாய் திரும்ப திரும்ப ஓட ஆரம்பித்துவிட்டிருந்தது.

வேறு வழியில்லாமல் போய், உள்ளுக்குள் சடசடப்போடு மேற்கில் உயரே பார்வையை இறுத்திக்கொண்டு கிளைமறைவில் நின்றபடி ரெண்டு சொம்புதான் இருக்கும், தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றினாள். மளமளவென சத்தம். இவளை மறைத்து நின்ற கிளை வெட்டுப்பட்டு வீழவும் ஆவென வெறித்த மரத்தில் கத்தியை விடவும் கூர்மையான அவன் பார்வையில் றெக்கை மட்டும் பிய்க்கப்பட்ட கோழியைப்போல் மகிட்டி கட்டிக்கொண்டு நிற்கும் இவள். ஒருகணம் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் படல்மேல் கிடந்த அவிழ்த்துப் போட்டிருந்த தாவணியை நொடியில் எடுத்துப் போர்த்திக்கொண்டு அப்படியே விக்கித்துப் போய் நின்று விட்டாள்.

ஆனால் அதேநேரம் அவனுக்கு, தீயை மிதித்து விட்டமாதிரி ஒரு திகைப்பு. பார்க்கக் கூடாத ஓர் பாவச்செயலை பார்த்துவிட்ட மாதிரியான திகிலில் கண்கள். தான் நிற்கிற அதிர்வுக் கோலம், அவன் மீதான கேவலப் பார்வை எல்லாவற்றையும் மறந்து இவளே, எங்கு பிடியை தவறவிட்டு விழுந்து விடுவானோ என்கிற பயத்தில் “பாத்து பாத்து…” எனச் சொல்லாத குறைதான். கண் இமைக்கும் நேரத்தில் சரசரவென மரத்தை விட்டு இறங்கி அவன் வீட்டுப்பக்கம் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருந்தான்.

நொடியில் அவன் மீதான எல்லா காறித்துப்பல்களும் மறைந்து மாறாக அவனைப் பார்ப்பதில் ஓர் ஆர்வம், ஆனந்தம். ஈர உடம்போடு நின்று கொண்டிருந்தவள் மனதில் ஒட்டிக்கொண்ட கனிந்த அவனது உருவம் அதற்கு பிறகு ஆட்சா வைரமாய் நிலை நின்று விட்டது.

குளித்துவிட்டு வந்து மல்லிகா கட்டிக் கட்டிக்கொண்டிருந்த இலைப்பச்சை நிறப் புடவையை, அண்மையில் அவள் கட்டி பன்னீர் பார்த்ததே இல்லை. ஆனாலும் அந்தப் புடவை அவளுக்கு ரொம்பவும் அழகாய் இருந்து.

சக்கரைக்கு பிடித்த இப்படியொரு இலைப்பச்சை நிறப் புடவையைக் கட்டிக்கொண்டு, மனசுக்கு பிடித்த வாழ்க்கையை வீட்டை விட்டு ஓடிப்போயாவது வாழ்ந்து கொள்ளலாம் என்று அவளாய் தான் அவனைச் சம்மதிக்க வைத்தாள். காலம் முழுவதும் சக்கரையின் கைகளை விட்டு விடவே கூடாது என்கிற வைராக்கியத்தோடு தான் அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டு ஓடினாள்.

அவர்களின் பிரியமான குள்ளச்சி ஓடையைத் தாண்டும் போதே மறித்து விட்டார்கள். அப்படியொரு கோரமான முகமும் குரூரமான கோபமும் தங்கள் வகையறா ஆட்களுக்கு இருந்து அவள் பார்த்ததேயில்லை. ஒரே அடிதான் செவுளில் விழுந்தது. கண்ணில் பொறி பறக்கிற அதிர்ச்சியில் அப்படியே நிலைகுலைந்து போய்விட்டாள். அடுத்தும் கையை ஓங்கியதும் அவள் இருண்டே போய்விட்டாள். குறுக்கே விழுந்து கதறுகிறாள். “அவன அடிக்காதீங்க.  நாந்தான் அவன இட்டுக்கிட்டு வந்தன். நீங்க சொல்றபடி நாங் கேக்கறன். அவன வுட்டுடுங்க…”

ரெண்டாம் பேருக்குத் தெரியாமல் கொல்லைக்காட்டில் ஈவறுத்து வீட்டுக்கு இட்டுக்கொண்டு வருவதற்குள் சக்கரவர்த்தியின் அண்ணன்கள் எல்லாருமாய் பறக்கிறார்கள். “பொட்டச்சிய அடக்கி வூட்டுக்குள்ள வைக்கறதுக்கு கையாலாத பொட்டப் பயலுவோ, ஒண்டியா மாட்னவங்கிட்ட போயி திமிர் மயிர காட்றானுவோ. தெகிரியம் இருந்தா இப்ப வந்து புடுங்குங்கடா…” ஆளுக்கொரு கழியை எடுத்துக்கொண்டு செலாவரிசை சுற்றுகிறார்கள்.

“பெத்த ஆத்தாமாதிரி அண்ணம்பொண்டாட்டி. அவ மேல கல்ல வுட்டுக் கெடாசனப்பலாம் எவனும் புடுங்கிக் கிழிக்கில. இப்பதான் அரிச்சந்திரன் வூட்டுக்கும் பக்கத்து வூட்டுக்காரனுவோமாதிரி ரொம்ப கெம்புறிங்க. போங்கடா நீங்களும் ஒங்க…” இவர்களும் எகிற பங்காளி ஒறம்பரை என ஊரே இரு கட்சியானது மாதிரி சண்டையான சண்டை.

மல்லிகாவிற்கு இந்த கந்தரகோலங்கள் எல்லாவற்றையும் மீறி, பத்துப்பொழுது ஆறப்போட்டு, எப்படியாவது திரும்பவும் அவனைச் சம்மதிக்க வைத்து எங்காவது போய் வாழ்ந்து விடலாம் என்றுதான் மனந்தளராமல் காத்துக்கொண்டு இருந்தாள்.

ஆனால் அவளின் நம்பிக்கையை சக்கரையின் அண்ணன்கள் தவிடுபொடியாக்கி விட்டார்கள். வீட்டிலும் வெளியிலுமாய் அவன் பாடுகளை அதற்கு மேலும் சகித்துக்கொள்ள முடியாமல்தான், பட்டென்று அந்த முடிவிற்கு வந்தார்கள். சூட்டோடு சூடாய் சக்கரைக்கு மேற்குத் தெரு பாப்பாத்தி மகள் மீனாட்சியைப் பேசி முடித்து இட்டுக்கொண்டு போய் கோயில் தாலியாகக் கட்டிவைத்து விட்டார்கள்.

மல்லிகா இடிந்து சுக்கு நூறாகிப் போய்விட்டாள். “அவன அடிச்சி மெரட்டிக்கூட சம்மதிக்க வைச்சிருப்பானுவோ. குள்ளச்சி ஓட, தெக்குவெளி கண்டமுட்டும் நடந்த எல்லா கங்காட்சியும் தெரிஞ்சி இவ எப்பிடி ஏறி வுழுந்து கட்டிக்கிட்டா?” அவளிடமிருந்து சக்கரையை வலிந்து பறித்துக் கொண்டதாய் மீனாட்சி மீதுதான் அவளுக்கு ஆறாத கோபம்.

மல்லிகா, ஈரக் கூந்தலைக் குதிரைவாலாக தொங்கவிட்டு ரப்பர் பேண்டு போட்டிருந்தாள். கூந்தலின் நுனி கசிந்து நடு முதுகில் ஜாக்கெட்டை நனைத்துக்கொண்டிருந்தது. நடையில் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு முந்தானையை வளைத்து செருகியபடி வாசலுக்கு இறங்கினாள். திடுமென ஒரு தவிப்பு. மகாவை, செல்வக்குமாரை, பன்னீரை மொத்தத்தில் இந்த ஊரை, உறவை எல்லாவற்றையுமே விட்டுவிட்டுத் தான் மட்டும் தனியாய் பிய்த்துக் கொண்டு போவதாய் அவளுக்குள் படபடத்தது.

படலை திறந்து ரோட்டில் இறங்கி கிழக்கே போய்க்கொண்டிருந்தாள். பேசாமல் தானும் கூடவே கிளம்பி போக வேண்டும்போல் பன்னீருக்குத் தோன்றியது. ஆனால் அவள் தனியாகப் போவதுதான் நன்றாக இருக்கும் என அவனுக்குள் திரும்பவும் ஓடியது. திடுமென ஞாபகம் வந்தவனாய் வாசலில் இறங்கி சத்தமாக கேட்டான். “வண்டியில கொண்டாந்து பஸ் ஸ்டாப்பிங்கில வுட்டுட்டு வருட்டுமாப்பா?”

காதில் விழாதமாதிரி போகும் அவளை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான். விருத்தாசலம் போகிற டவுன்வண்டி பத்தைப் பிடித்து அங்கிருந்து முப்பத்திமூனைப் பிடித்து மணக்கொல்லை போக வேண்டும். கல்யாணம் ஆன இவ்வளவு நாளில் எப்போதும் இல்லாமல் தனி வழியாய்ப் போகும் அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு என்னவோ போலிருந்தது.

கல்யாணம் ஆன புதிதில் எதையோ பறிகொடுத்தமாதிரிதான் இருந்தாள் என்றாலும் பன்னீருக்கு அதுபற்றியெல்லாம் கேட்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. புது இடம், புது உறவு. அதோடு படித்தவள். கையெழுத்து மட்டுமே போடத்தெரிந்து, குறுக்க நெடுக்க நெய்வேலிக்கு அத்துக்கூலி ஹெல்பர் வேலைக்கு ஓடுகிறவனாய் வாய்த்தவன். இவையெல்லாமுந்தான் காரணமாக இருக்கும் என மனதை சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் எந்த ஆக்க, துவைக்க, படுக்க, பணிக்கை பண்ண, கொல்லை குடிகளை கவனிக்க என எந்த விதத்திலுமாய் அவனுக்குக் குறை வைக்காத அவளின் செய்கையில் எதையும் அவன் பொருட்படுத்தவில்லை.

தலைப்பொங்கலின் போது ஊருக்குப் போயிருந்தபோது பக்கத்துவீட்டு குடிகாரனின் சண்டையை மனங்கேக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும் போதுதான், மல்லிகாவிற்கு சித்தப்பனாக வேண்டுமாம், அவன் சொன்னான் “அங்க சண்ட வளத்தறவன் யாருன்னு தெரியுமா தம்பி?” இவன் கேக்காமலேயே ‘மல்லிகா – சக்கரை’ விஷயம் எல்லாவற்றையும் விலாவாரியாய் கதை கதையாகச் சொன்னான். பன்னீருக்கு ஊங்கொட்டிக் கேட்டிருக்க வேண்டாமே எனத் தோன்றியது. எவ்வளவு மனக்குமுறல்களையெல்லாம் உள்ளுக்குள் மென்று விழுங்கிவிட்டுத் தனக்கு எந்தவிதத்திலும் குறை வைக்காமல், ரெண்டு பிள்ளைகளுக்கும் தாயாகி குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாய் ஓட்டிக்கொண்டிருக்கிறாள் என ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. முன்னைய விடவும் மல்லிகா மீது பெரும் பிரியமும் மதிப்பும் வந்தது. அதுபற்றி அவளாகச் சொல்லாதவரை எதுவும் கேட்கவே கூடாது என்று அன்றே முடிவெடுத்தது தான்.

அவள் வந்த நேரம் இவனுக்கு நெய்வேலியில் காண்ட்ராக்ட் வேலை கிடைத்தது. புதுக்கூரைப் பேட்டையை விட்டு மேற்கே தள்ளி ரோட்டோரத்தில் இந்த நிலத்தை வாங்கி முந்திரிக் கன்று போட்டு தோப்பாக்கி ஓரத்தில் ஒன்பது சதுரத்தில் வீட்டையும் கட்டினான். “எல்லாம் நம்ப மகாலட்சுமி பொறந்த நேரந்தான்.” கடந்து வந்த எல்லாவற்றையும் சுத்தமாய் மறந்து விட்டவளாய் முதல் இளவரசியாய்ப் பிறந்த மகாவிற்கு முத்தமாய் பொழிந்து கொண்டிருப்பாள்.

பின்னாளில் ஊருக்குப் போகும்போது சண்டைக்காரக் குடும்பங்களுக்குள் சத்தாசாடையாய் பேசிக்கொள்ள ஆரம்பித்த பிறகும் கூட இவள் அந்த வீடு இருக்கிற திசையைக் கூட திரும்பி பார்க்கமாட்டாள். அப்படியொரு சம்பவமே அவளின் வாழ்க்கையில் நடந்ததிற்கான அடையாளமே இல்லாமல் பன்னீரும் மறந்து போய்விட்ட நிலையில்தான், சக்கரையின் இறப்பு.

தண்டராகுளத்திலிருந்து கிழக்கே திரும்பியதுமே தூரத்தில் ஊருக்கும் உயரே வாணங்கள் சீறிப் போய் வெடித்துக்கொண்டிருந்தன. ஊரை நெருங்க நெருங்க ஆட்டோ சத்தத்தையும் மீறி தப்பட்டை மேளச்சத்தங்கள் கேட்டன. ‘மணக்கொல்லை தங்களை இனிது வரவேற்கிறது’ அறிவிப்புப் பலகையில் கருப்பு வெள்ளை நிறத்தில் சக்கரையின் படத்தைப் போட்டு இரங்கல் நோட்டிஸ் ஒட்டியிருந்தார்கள். நல்ல திடகாத்திரமாக இருக்கும் போது எடுத்த படமாக இருக்க வேண்டும். கன்னங்கள் புசுபுசுவென படத்தை பார்த்த கணத்தில் மல்லிகாவிற்கு குபீரென்று அழுகை முட்டியது.

ரோட்டின் பொக்குழிகளில் ஆட்டோ சாடிக்கவும் பக்கத்தில் நீள வசத்தில் மடக்கி சவுத்தாள் சாக்குப் பையில் இருந்த பெரிய மாலை கீழே நழுவியது. பட்டென்று அணைத்துப் பிடித்துக் கொண்டாள். சக்கரையையே அணைத்துக் கொண்டதாய் மனசுக்குள் ஒரு நிறைவு. விருத்தாசலத்தில் பேருந்து நிலையத்திற்கு முன்னால் இருந்த பூக்கடையில் இதை விடவும் பெரிய மாலையாக இல்லை. ஆளுயர மாலையை பெரிய பையில் போடும்போதே கடைக்காரன் கேட்டான். “எதுல எடுத்துக்கிட்டு போறிங்கன்னு சொல்லுங்க. பையன கொண்டாந்து வைக்கச் சொல்றன்.”

“வாணாங்க. நானே எடுத்துக்கறன்.” அவனுக்கான மாலையை அவளே சுமக்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது. ஊருக்குள் போகிற ஒம்போதரை போயிருக்கவும் அடுத்து பன்னிரண்டுக்குதான். பாலக்கொல்லை போகிற விமலாதேவியைப் பிடித்து ரோட்டில் இறங்கிப் போகலாம். ஆனால் இவ்வளவு பெரிய மாலையை எடுத்துக்கொண்டு ரோட்டிலிருந்து நடந்து எப்படி… திடுமெனதான் அந்த முடிவுக்கு வந்தாள். ஒரு ஆட்டோவைப் பிடித்தாள். பக்கத்தில் அவனை குந்தவைத்துக் கொண்டதாய் கனத்தமாலை. குலுங்கலிலும் சுழலிப்பிலும் மாலை வந்து மேலே மோதுகிற போதெல்லாம் குள்ளச்சி ஓடை மணலில் அவனோட உரசிக் கொண்டு குந்தியிருந்தது ஞாபகத்திற்கு வந்து குமுறியது.

ஊருக்குள் நுழையவும் கோயில் திடல் முழுவதும் டெம்போக்கள், கார்கள், வேன்கள்… இழவுக்கு வந்த சனங்கள் ஏறவும் இறங்குவுமாய் பரபரப்பாய் நின்று கொண்டிருந்தார்கள். எடுத்துப் போவதற்கு தயாராய் ரோட்டோரத்தில் வாய்க்கரிசிக் கூடைகள் குறுக்கே மாலைகளைத் தொங்கவிட்டபடி காத்துக்கொண்டு கிடந்தன. கிழக்கில் தெருவுப் பக்கம் உறுமிச் செட்டு மேளங்கள் அதிர்ந்து கொண்டிருந்தன.

ஆட்டோக்காரன் திரும்பி பார்த்தான். “நேரா கெழக்க போ” கையைக் காட்டினாள். வழியெங்கும் நாட்டுவெடிகளின் காக்கிக் காகிதங்கள் சிதறிக் கிடந்தன. தெருவை நெருங்க நெருங்க அவளுக்கு தத்தளித்துக் கொண்டு தளும்பியது. முனையிலேயே இறங்கிக் கொண்டாள். பையை விட்டு மாலையை எடுத்து இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக்கொண்டு நடந்தாள். ஆளுயர மாலை எப்படி தூக்கிப் பிடித்து நடந்தாலும் கீழ் குஞ்சம் லேசாய் தரையில் தெராவியது.

அத்தனை பெரிய மாலையை இதுவரை யாரும் எடுத்து வரவில்லை, போலும். தாங்கியபடி தத்தளித்துக் கொண்டு நடந்து வரும் அவளுக்கு, முதலில் தெருவை அடைத்து அடித்துக் கொண்டிருந்த உறுமி செட்டுக்காரர்கள் தாம் அடிப்பதை நிறுத்திவிட்டு பட்டென்று வழியை விட்டார்கள். திடுமென மேளங்கள் மௌனமான கணத்தில் இழவு வாசலில் இவள் நுழையவும் பந்தலில் குந்தியிருந்த, பாடையோரம் அழுது கொண்டிருந்த மொத்த சனங்களின் கண்களுமே இவள் பக்கம் திரும்பின. தனித்து, மாலையோடு வருகிற மல்லிகாவைப் பார்த்த நொடியில் ஒவ்வொருவருக்குள்ளுமே குள்ளச்சி ஓடையில் அவளும் அவனுமாய் சுற்றித் திரிந்த நாளிலிருந்து கடைசியாய் இரு குடும்பங்களின் சண்டை வரைக்குமாய் காட்சிகள் மின்னலாய் வந்துபோயின.

கீச்சா ராமா என யாரிடமும் எந்த சத்தமும் இல்லை. சனங்களை விலக்கிக் கொண்டு எதிரில் கலங்கியபடி கிட்ட வந்த அவளின் அம்மாக்காரியையோ, எதிர்மாரு கொடுக்கவந்த பங்காளி சனங்களையோ பொருட்படுத்தவில்லை. மெல்ல ஐஸ்பெட்டியில் கிடத்தப்பட்டவனிடம் கனவில் மிதப்பவள் போல் நடந்து போனாள்.

வதங்கிய வாழை மட்டையாய் ஐஸ்பெட்டியின் மேல் கிடந்தவள், திடுமென “எக்கா… நம்பளலாம் வுட்டுட்டுப் பூட்டாருக்கா…” வெடித்துச் சிதறி ஓடிவந்து கட்டிப்பிடித்து கதறிய மீனாட்சியையும் ஏறெடுத்துப் பாராமல் ஒதுக்கிவிட்டுப் போய் அவனுக்கு மாலையைச் சூடினாள்.