1
படைப்புதிறனை உளவியல் துறையில் ‘விரிசிந்தனையின் வழியே புதியதாகவும் பயனுள்ளதாகவும் எதையேனும் உருவாக்கும் இயல்பு’ என்று கில்ஃபோர்ட் வரையறுக்கிறார். சினிமாவில் புதியது எப்படி உருவாக்கப்பட முடியும், புதியது என்பது கதைகளின் வழியே, கதை மாந்தர்களின் வழியே, இயக்கத்தைக் கொண்டு உணர்வுகளைக் கடத்துவதன் வழியே, தொழில்நுட்பங்களின் நிரல் நிரை மாற்றங்களைக் கொண்டு உருவாகும் எண்ணிலா பார்வையின் வழியே, நிலங்களின் வழியே என ஈறேயில்லாத வாய்ப்புகளைக் கொண்டு புதுமை செய்ய முடியும். சிறந்த திரைப்படங்களாகக் கருதப்படும் எவற்றிலும் உள்ள அழகியலும் யதார்த்தக் கூறுகளும் கூட ஒரு வித புதுமையைத் தருமேயாயின் மட்டுமே அது படைப்புத்திறன் என்று கருதத்தக்கது.
இரண்டாம் கூறு பயன்பாடு. ஜுரத்திற்குப் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை ஒரு தொலைக்காட்சி அளவிற்குப் பெரியதாக இருந்தால் அதை நோயாளியை விழுங்க வைத்து மருத்துவம் செய்ய முடியாமல் போய்விடும். அது போலவே எத்தனை புதிய களம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் பயனின்றி ஒரு நல்ல திரைப்படமாக அது மாறிவிடாது. திரைப்படத்தின் முதன்மைப் பயன் பார்வையாளனை ஊடுருவி, அக எதிரொளிகளை உருவாக்கி உணர்வுகளைக் கடத்தும் போதே, மெல்ல வேறொருவராக்கி அவருள் சற்றேனும் தங்கிக் கொள்ளும் தன்மையே திரைப்படத்தின் பயன். காலத்தின் துலாக்கோலில் இவ்விரண்டும் கொண்ட திரைப்படங்களே படைப்புகளாகவும், இவற்றில் ஏதோவொன்று இல்லாதிருப்பினும் அவை வெற்றுக் கூச்சல்களே எனவும் கொள்ளப்படும். அந்த பயன்பாட்டை உணரச் செய்யவே அழகியலும் யதார்த்தமும் தேவைப்படும். அவை கூடுதல் தடிகள்.
“க்வெண்டின் டராண்டினோ ஒரு பிறவிக் கலைஞன். நம் காலத்தின் மாபெரும் கதைசொல்லி” – இதெல்லாம் அவரது தர வகைப்பாட்டின் அடிப்படையில் முன் வைத்து பொருத்திப் பார்த்து செய்யப்பட்ட முடிவுகளா அல்லது சரவெடியைத் தூக்கிப் போட்டு ஆட்டம் போடும் கொண்டாட்ட மனநிலையிலிருந்து சொல்லப்பட்ட முடிவுகளா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அவரது ஆளுமை பற்றி ரசிகப்பட்டாளத்திடம் வைக்கப்படும் கேள்விகள் எதுவும் தர்க்கரீதியான பதில்களைப் பெறப்போவதில்லை. டராண்டினோ என்னும் திரைமேதை (!) எப்படி உருவாக்கப்படுகிறார் என்ற கேள்விக்கும் எவரும் பதில் தரப்போவதில்லை. விமர்சனங்களும் அவர்மீது அள்ளி வீசப்படும் புகழுரைகளாகவே எஞ்சப்போகின்றன.
ஏன் டராண்டினோ சிறந்த இயக்குநர்? இந்த எளிமையான கேள்விக்கு நேரடியான பதிலும் எவரிடமிருந்தும் வரப்போவதில்லை. அதிகபட்சம் போனால், அவருக்கு ‘லாஜிக் இல்லா மேஜிக் நிபுணர்’ என்ற உரிமம் உண்டு, அதனால் அவர் எதையும் கதையாகச் சொல்லலாம் என்றோ, வெகுசன சினிமாவில் புரட்சி செய்தவர் என்றோ, பதில் வரலாம். இது தன் மதக்கடவுள்கள் மீதும் கோட்பாடுகள் மீதும் கொண்ட்டிருக்கும் கண்கட்டிய பற்றின்பால் பேசும் அடியவரது மனநிலை மட்டுமே!
சினிமா பற்றிய தரமான ரசனையும், தொடர்ந்து தன் படிநிலைகளை முன்னகர்த்திக் கொள்ள முனையும் ரசிகன் இதே எளிமையான கேள்வியை தன் முன் வைத்து கவனிக்கும் போது, டராண்டினோ சாதாரண இயக்குநர் என்ற நிலையிலிருந்து மோசமான இயக்குநராக காலப்போக்கில் உருவெடுத்திருக்கிறார் என்பது புரியும். அதையும் விட கொடூரமானது அவரைச் சிறந்த நடிகர் / எழுத்தாளர் என்று முன்முடிவு கட்டி மதிப்பிடத் துவங்குவது.
இருப்பினும், ஒரு நேர்மையான விமர்சனத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையுணர்வில் பிசகுதல் கூடாதென்பதும் அத்தியாவசியமானதாய்ப் படுகிறது. அவருக்கிருக்கும் கோடான கோடி(!) ரசிகர்களின் பரபரப்பைப் பார்க்கும்போது, இதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதிக ரசிகர்கள் கொண்டிருப்பதாலேயே ஒருவர் உலகின் மகத்தான கலைஞராகி விடுகிறாரா என்ன? அசட்டைகளாலும், கேலிகளாலும் முன்னகரும் கலைஞர்களின் பீடம் அவர்களுக்குத் தரப்படாமல் போவதற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதிலும் கடவுளர்களின் மிகை மதிப்பீட்டு கோட்பாடு தான் உள்ளாடுகிறது.
2
90களில் உருவாகி வந்த – உலகளாவிய முதன்மைப் படைப்பாளர்களைக் கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டு – முக்கிய, வணிக வெற்றியும், சற்றே பெயரையும் பெற்றிருக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் என பரவலாக அறியப்படும் ஸ்பைக் லீ, ஜொனாதன் டெம்மி, டிம் பர்டன், சாம் மெண்டிஸ், வெஸ் ஆண்டர்சன், கோயன் சகோதரர்கள், கை ரிச்சி, ஓலிவர் ஸ்டோன், என நீளும் இப்பட்டியலில் எவருக்கும் டராண்டினோவின் ரசிகத்தொகையில் கால்வாசி கூட இல்லை. (ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமரூன் ஆகியோர் அதீத பிரபலமாக இருந்தாலும், அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஒரு பட்டாளம் இல்லை).
படங்களின் தரங்களையும் அவற்றின் படைப்புத் திறனையும் வைத்துப் பார்த்தால், மேற்சொன்ன இயக்குநர்கள் அனைவரும் டராண்டினோவை விட ஏதோ ஒரு பரிமாணத்தில் முன்னிற்க கூடியவர்கள்தான். அவர்கள் கையாண்ட களங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக இருந்திருக்கிறது. அவர்கள் மனித உணர்வுகளுக்கு சற்றேனும் மரியாதை செய்யும் படங்களையும், தருணங்களையும் தந்திருக்கிறார்கள். ஆம், ஸ்பைக் லீ கூடத்தான். படிப்படியாக ஏதேதோ சொல்லி மெல்ல புதிய கதைக் களங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், டராண்டினோ இன்னும் ஜிங்க் சா சிங் சா என நிறங்களைக் கடைவிரித்துக் கொண்டிருக்கிறார்.
3
முதலிரண்டு “தாறு மாறு தக்காளி சோறு படங்களான” (மன்னிக்கவும் இது ரசிகருடைய குரலில் சொல்லப்பட்டது) ரிசர்வாயர் டாக்ஸையும் பல்ப் ஃபிக்ஷனையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், டராண்டினோவின் படங்களிலேயே ஓரளவு நல்ல பக்குவத்துடன், நுட்பமான கதையாடலுடன், சிறுபிள்ளைத்தனமற்ற கதாபாத்திரங்களுடன் (அதிலும் ஒன்றிரண்டை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது) இருக்கும் ஒரே திரைப்படம் ‘ஜாக்கி ப்ரெளன்’ மட்டுமே. ஜாக்கி ப்ரெளனில் உருவாகி வந்திருக்கும் இயங்குதன்மையும், நிதானமாய் கதைசொல்லும் இயல்பும் மெல்ல பெருக்கப்பட்டு வெவ்வேறு அமேரிக்க வாழ்வின் நிஜங்களைப் பற்றித் தன் அடுத்தடுத்த படங்களில் முனைந்திருந்தால் டராண்டினோ வேறொங்கோ சென்றிருப்பார். ஆனால், அவர் ரசிகர்களின் கதை சொல்லியாயிற்றே. பின்னோக்கி நடந்தார். கதாபாத்திரங்களைப் பட்டியல் போட்டு கான்ட்ராஸ்ட் பொத்தான்களை அழுத்தத் தொடங்கினார். எழுத்தை ஒரு கணிதமாக்கி அதில் புலமை பெற்றார். இன்னும் சொல்லப்போனால், ஜாக்கி ப்ரெளன் படம் மட்டும்தான் டராண்டினோவின் மூளையிலிருந்து நேரடியாக உதிக்காத கதை. அதாவது, தன் சினிமா பயணத்தில் ஒரே ஒரு படத்தை மட்டுமே அவர் மற்றொருவருடைய (எல்மோர்ட் லியோனர்ட்) நாவலிலிருந்து தழுவி எடுத்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பு இது.
அதற்கடுத்து ’ப்ளாக் மாம்பா’ பரவச நாட்டியமிடும் ‘கில் பில்’, பெண்ணியத்தின் ஆழத்தை அலசும் ‘டெத் ப்ரூஃப்’, வரலாற்று புனைவு ‘இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ அதாவது, ஆங்கிலத்தில் எழுத்துப் பிழையுடன் கூடிய Inglorious Basterds (எங்கள் படமே பிழையானதுதான் என்பதன் குறியீடோ!), மேற்கத்திய வகைமை படங்களுக்கான நையாண்டி சித்திரம் ‘ஜாங்கோ அன்செயிண்ட்’ என தொடர்ந்து காவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் உச்சம் வைக்கும் விதமாக ‘தி ஹேட்ஃபுல் எய்ட்’. அதாவது, டராண்டினோவிற்குத்தான் கதையே தேவையில்லையே, அதனால் தனது எட்டாவது படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைக்கிறார். அதை வைத்ததுமே, செவ்வியல் படமான, தன் முதல் படத்திற்கு கூட இந்த பெயர் பொருந்துகிறதே என்று மெல்லிய புன்னகை அவருக்கு உருவாகிறது. அங்கிருந்து திரைக்கதை எழுதத் தொடங்குகிறார். அதில் குனியும் போது விசம் வைப்பது, குளிரில் கிச்சுகிச்சு மூட்டுவது, நாளை சாகப்போகும் கிழவனை வம்புக்கிழுத்து கொல்வது போன்ற திரையுலகம் காணாத காட்சிகளைக் கொண்டு நிரப்புகிறார். அந்தத் திரைக்கதை கூட இணையத்தில் கசிந்து விடுகிறது. அதையும் தாண்டி தன் ரசிகர்களை நம்பி இந்த படம் வெளியாகிறது. அவருக்கு இன்னுமொரு மகுடமாகிவிடுகிறது.
4
தன் இருபதுகளில் சினிமா கனவுகள் மீதான தன் பீறிடும் காதலை முன்வைப்பவர்கள் எவருக்கும் டராண்டினோ ஒரு தேவதூதனாக தோற்றமளிப்பது இயல்பே. காரணம், இருபதுகளில் எவருக்கும் உருவாகும் துறுதுறுப்பு. இளமையிலிருந்து அடுத்த நிலைக்குத் தாவிக்குதித்து விட உருவாகும் தவிப்பு. அதைக் கனவாக்கி உண்மை என்று சொல்லி, வழங்கப்படும் உளமயக்கு – சட்டைப் பட்டன் மாத்திரைகள் – டராண்டினோவிடம் கிடைக்கும்.
குழந்தைகளிடம் விளையாடும் போது, முகத்தை மறைத்து திடீரென காட்டிக் கோணல் மானலாகச் சிரித்தல் போதும். அவற்றைத் தன்பால் ஈர்த்துவிட முடியும். நீண்ட நேர கட்டமைப்பு அதற்குப் பிறகு முகத்திலறையும் நுட்பம் இதுதான் தந்திரம். இதில், திடுக்கிட்டு விழுபவர்கள் முதிரா இளைஞர்கள். பெரும்பாலான கடி சோக்குகள், டி.ஆரின் எதுகை மோனை கவிதைகள், பேய்க்கதைகள் அனைத்திற்கும் அடிநாதம் இதே உத்திதான். அதையே சினிமாவில் கையாண்டு வெற்றிகரமாகச் சில பத்தாண்டுகள் பிழைப்பு நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் டராண்டினோ. எதிர்பாராத திருப்பம் எங்கு வரும் என்று பரபரப்புடன் அமர்ந்து பார்க்கும் எவருக்கும் அது பிடிக்கும். ஆனால், அமைதியாக மானுடத்தின் கதையினை, நேர்மையின் பிராணச் சிக்கல்களை, உளவியல் நுணுக்கங்களை சொல்லி, பார்வையாளனுடன் உரையாடுவதென்பதே படைப்பாளருக்கு உண்மையான அழகு.
கெட்ட வார்த்தைகளைப் படத்தில் பயன்படுத்துவதென்பது தவறானது அதற்கு சென்சார் வேண்டும் என்று கதறும் கலா கொலையர்களைப் போலவே, ‘F’, ‘N” வார்த்தைகளால் அபிஷேகம் செய்து அனுப்புவேன் என்று சொல்வதும் சினிமாவின் மீதான தாக்குதலே. அதைப் புரட்சி என்ற முத்திரையிட்டு அழைக்கும் ரசிகர்களிடம் பேசுவதில் ஆயாசமே மிஞ்சுகிறது. இதிலும், இளமையின் பீறிடும், முரளும் முரட்டுத்தனத்திற்கு வழங்கப்படும் தீனியே தூக்கலாக இருக்கிறது. இளைஞர்கள் டராண்டினோவின் படங்களைப் பார்த்துக் கெட்டுப் போகக்கூடாது என்று அறிவுரை வழங்கும் குரல் கேட்குமாயின், இது அவ்வாறான கூற்றில்லை என்பதை தெளிதாக்குகிறேன். காதைத் தீட்டிக் கொள்பவர்களுக்கு சொல்கிறேன் ‘ஆகவே கொலை செய்க’.
5
திரைப்படம் என்பது விழியூடகம் என்பது அரிச்சுவடி மாணவனும் அறிந்ததே. அத்தனை சிறந்த படைப்பாளிகளும் அதைத் தன் மாணவப் பருவத்திலிருந்து புரிந்தே வைத்திருந்திருக்கிறார்கள். அதையே முன்னகர்த்திச் செல்லவும் தலைப்பட்டார்கள். அவர்களது கடைசிப் புள்ளியிலிருந்து முன்னகர்ந்து செல்ல வேண்டியதே அடுத்த தலைமுறையின் இலக்காக இருக்க வேண்டும். குப்ரிக் விட்ட இடத்தில் பி.டி. ஆண்டர்சனும், புனுவல் முடித்த ஓட்டத்தை யோர்கோஸ் லாந்திமோஸ் தொடர்வதும் நடக்கவேயியலாத ஒன்றில்லை. அப்படித்தான் இந்த விழியூடகம் மேலும் மேலும் சாத்தியத்தை விரித்து வரவேண்டும்.
ஆனால், டராண்டினோ உலக சினிமா ரசிகனாக இருந்து (மாணவப் பருவத்தைத் தவிர்த்துத் தாவி) நேரடியாக படைப்பாளரானவர். அவர், தனக்கென ஒரு தனி பாணியையே, ஒரு மொழியையே, தன் சினிமாக்களை தொடர்வண்டியாக்கி அனைத்திற்கும் சென்று வர ஒரு வழியையும் ஏற்படுத்தி அதில் பாத்திரங்களை உலவ விடுகிறார். அதில் அவருக்குச் சகலமும் சாத்தியமாகிறது.
வட்டமான காமிரா நகர்வுகளுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் காட்சிகளுக்கான வசனகர்த்தாவாக மிளிர்கிறார். அவரது, ஒற்றை வரிகளும் பரவசத்தைத் தருவதாக இருக்கின்றன. அதைவிட, எதிர்பாராத தருணத்தில், அவர் கெளரவத் தோற்றம் ஒன்று செய்து அதில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசி அவர் எழுதிய ‘ரிசர்வாயர் டாக்ஸ் முதல் உணவகக் காட்சி’, ‘இங்க்ளோரியஸ் பாஸ்டர்ஸ்-இன் யூத வேட்டையாளன் அறிமுகக் காட்சி’ ஆகிய உச்சங்களைத் தானே கடந்து போகிறார். உதாரணம் : ஜாங்கோ அன்செய்ண்ட்-இல் வரும் கெளரவத் தோற்றம்.
பி.கு. : ’யூத வேட்டையாளன் அறிமுகக் காட்சி’ தன் படங்களிலேயே மிகச்சிறப்பாக எழுதப்பட்ட (வசனம்) காட்சி என்று குவெண்டினே சொல்லியிருக்கிறார்.
6
கதையென்பது ஒரு வரியில் சுருக்கிச் சொல்லப்பட முடிவதாகவும், அப்படிச் சொல்லப்பட்ட ஒற்றை வரி எவரது கவனத்தையும் ஈர்க்கத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்பது எளிய சினிமாக்காரர்களும், வணிகர்களும் சேர்ந்து பெற்றெடுத்த தத்துவங்களுள் ஒன்று, மூவங்க திரைக்கதை போல! சரி, போகட்டும்! அதை அடிப்படை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் கூட, தான் எடுத்த எல்லா படங்களிலும் ஒரே வரிக்கதையையா சொல்வது?
உதாரணமாக, கில் பில் திரைப்படத்தைப் பார்ப்போம். தன்னைக் கொன்ற கொலைகார நண்பர்களைச் சாவின் தருவாயிலிருந்து மீண்டு வந்து பழிவாங்கும் பெண் என்பது படத்தின் ஒருவரி. ஆனால், அதற்கு திரைக்கதை எழுதத் துவங்கும் எழுத்தாளர் ஒரு பட்டியல் போடுகிறார், யார் யாரைக் கொல்ல வேண்டுமென்று. அதை நாயகியின் கையிலேயே கொடுத்து ஒவ்வொன்றாக அடித்து வைத்துக் கொள்ள வைக்கிறார் (நெற்றியில் சுட்டதால் அம்னீசியா பக்க விளைவாக வந்திருக்கும் போல). பட்டியலை முடிக்க வேண்டும், அதற்காக உலகின் மூலைகளுக்கெல்லாம் பயணம் போகிறாள் அந்தப் பெண். சவப்பெட்டியை உடைத்துக் கொண்டு வருகிறாள், மார்ஷியல் கலைகளில் பெடலெடுக்கிறாள், இன்னும் இன்னும். சஸ்பென்சன் ஆஃப் டிஸ்பிலீஃபிற்கே சஸ்பென்ஸ் கொடுப்பவர் கு.ட. ஆயிற்றே.
ஆளவந்தான் அனிமேசன் காட்சி, க்ரேசி 88-ஐக் கொன்று குவிக்கும் காட்சி, கைகால்கள் வெட்டப்படுதல், கண்களைப் பிடுங்குதல் என்று அரைமணி நேரமாக உருவாக்கப்படும் குருதிக்குளம், தலையைச் சீவி மூளையை முன்வைத்தல் போன்ற காட்சிகளால் பக்கங்கள் நிரப்பப்படுகிறது. நம் மனம் குதூகலிக்கிறது. இதுவல்லவோ வன்முறையின் அழகியல்! சரி, நல்ல படம்தான். ஆனால், உலகறிந்த உன்னத இயக்குநர் சொல்லும் கதையா இது? மனதை நிலை கொள்ள வைக்கும் சதைப்பற்று எங்கேயேனும் உள்ளதா? இந்த வெற்றுச் சண்டைக் காட்சிகளைக் கொண்டு உருவகப்படுத்தப்பட்ட வாழ்வியலில் ஏதேனும் தெரிகிறதா? எனக்கு டராண்டினோ ஆதர்ஷம் என்பதால், குருஷேத்திரப் போரையும், உலகப் போரையும், ஆர்ச் டியுக் ஃப்ரான்ஸிஸ் பெர்டினாண்டையும் ‘ப்ளாக் மாம்பா’ வின் மீது பொருத்திப் பார்த்து மகிழ்வடைவதும் இட்டுக்கட்டுவதும் இயலாத காரியமொன்றுமில்லை. ஆனால், அதற்கான இடம் பிரதியில் இருக்கிறதா என்றால் பெருஞ்சுழியே பதிலென எஞ்சுகிறது.
7
’ஜாங்கோ அன்செயிண்ட்’ திரைப்படத்தைக் கவனிப்போம். ஒரு பொறுப்புமிக்க அல்லது குறைந்தபட்சம் தன் இயக்கும் திறனை பயன்படுத்தத் துடிக்கும் எந்த கலைஞனும் தான் சொல்ல வேண்டிய கதையையே சொல்ல முனைவான். ஆனால், டராண்டினோ ஏற்கனவே உலகம் மெச்சிய ‘இத்தாலிய வெஸ்டர்ன்’ என்னும் வகைமையை எடுத்துக் கொண்டு அதற்கு மரியாதை செய்கிறேன் பார் என்று ஒரு படமெடுக்கிறார். உலகைக் காக்கும் ஹீரோக்கள் சேர்ந்து செய்யும் தலைவலி சண்டைகளைப் பார்க்கும் போது, உலகை முதலில் இவர்களிடமிருந்து யாரேனும் காப்பாற்றுங்களேன் என்று சொல்லத் தோன்றும். அப்படி ‘இத்தாலிய வெஸ்டர்ன்’ஐ மரியாதை செய்ய கிளம்பி அதைத் துவம்சம் செய்கிறார் இயக்குநர்.
தேவன் அசுரனைக் காத்து அவனைக் கண்டு வியந்து தன் தோழனாக்கிக் கொள்ளும் கதை. குறிபார்த்துச் சுடும் தன்மைதான் அவ்வியப்பிற்குக் காரணம். ஏற்கனவே குறிபார்த்து துல்லியமாக சுடும் ஒருவனுக்கு தன் மாயாஜாலத்தன துப்பாக்கிச் சுடும் பயிற்சியைத் தொடர்ந்து வழங்கி இன்னும் அவனைத் தீட்டுகிறார். இதிலொன்றும் குறையில்லை. துப்பாக்கி கிடைத்ததும் சுட்டுக் கொண்டே இருப்பதும், கெளபாய் உடைகளும் மட்டுமே வெஸ்டர்ன் வகைமைக்குப் போதும் என்று நினைத்து விட்டதுதான் பரிதாபம். இல்லை, ரத்தமும் சதையுமாக ஒரு கதை இருக்கிறது என்று சொல்பவர்கள், ஜாங்கோவில் ’எத்தனை குண்டுகள் உமிழப்பட்டன’ என்று கணக்கிட்டு ஆவணப்படுத்த தயாராயிருப்பவர்கள். அதன் பயனென்ன?
வெஸ்டர்ன் திரைப்படங்களின் முக்கிய அம்சமே நிலக்காட்சிகள்தான். ஒன்றாகவே இருக்கும் நிலக்காட்சிகளின் பன்மை முகம். இதைக் கொண்டு வருவதில் தான் கதையின் சாறு வெஸ்டர்ன் பானத்திற்குள் பொருந்தும். ஆனால், தன் ஆஸ்தான ஒளிப்பதிவாளரைக் கொண்டு ஆலிவர் ஸ்டோன் ஏற்கனவே செய்த ’யு-டர்ன்’ படத்தின் நிலக்காட்சிகளை விஞ்சும் அளவிற்குக் கூட எதையும் செய்து வைக்கவில்லை, இந்த வரலாற்றுப் பெருங்காவியத்தில். பெயருக்கு ஷெரிஃப்பும், மேடையில் வைக்கும் அழகு பொம்மையாக கேண்டியும், கேண்டிலேண்டும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஜாங்கோவின் அசாத்திய பிறப்பிலேயே நிறைந்திருக்கும் துப்பாக்கிச் சுடும் பண்பை வியந்து வியந்து ஆயாசமுற்றது போய், கடைசி அரைமணி நேரங்களில் அவன் செய்யும் வீராவேச விவேக பராக்கிரமங்கள் முற்றிலும் வேறொரு வகை குடைச்சல். அதிலும், குறிப்பாக சுரங்கத்திற்கு அள்ளிச் செல்லப்படும் வழியில் தன் காவலர்களுக்கே கையூட்டு தருவதாய் இலாவகமாய் (!) ஏமாற்றித் தப்பித்து அனைவரையும் கொன்று, அவர்களது வெடிமருந்து பைகளைக் கைப்பற்றி, அவர்களது குதிரையிலேயே வந்த வழி திரும்பி, பின் குருதியாட்டம் ஒன்று ஆடி, மாளிகையை மண்மேடாக்கி குதிரையுடனும், தன் மனைவியுடனும் ஸ்டைலாக நாட்டியமாடி முற்று வைப்பதெல்லாம் ரஜினிகாந்தையே திக்கு முக்காட வைக்குமளவிற்கு நிகழ்த்தப்படும் காட்சிகள்.
இதையெல்லாம் பாராட்டியதால், நமக்குக் கிடைத்தது இன்னொரு வெஸ்டர்ன் படமும், இந்தப் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட காமிக்ஸும் தான். இன்னொரு முறை இப்படி ஒரு அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிட வேண்டாமென டராண்டினோ ரசிகர்களை எத்தனை முறையும் வணங்கலாம். ஹோவர்ட் ஹாக்ஸூம், ஜான் ஃபோர்டும் செய்தவற்றைத் தாண்டி இன்றைய உளவியல், மானுட சிடுக்குகளையும் பேசி சில வெஸ்டர்ன் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், டராண்டினோ செய்திருப்பது, ஒரு கெளபாய் ஆடையணிந்த, குண்டுகளால் துளைத்துக் கொண்டேயிருக்கும், மீசை வைத்த குழந்தைகள் நிறைந்த பகடித்தனமான படம்.
1957 இல் வெளியான ‘எ கிங் இன் தி நியூயார்க்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. சார்லி சாப்ளின் ஒரு தியேட்டரில் இருப்பார். ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தில் இரண்டு கெளபாய்கள் மாறி மாறி கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பார்கள். டென்னிஸ் கோர்ட்டில் பந்து பறப்பதைப் பார்ப்பது போல, தனக்கேயுரிய டைமிங்குடன் சாப்ளின் இங்குமங்கும் பார்ப்பார். ஒரு டஜன் திருப்புதல்களுக்குப் பிறகு ஒன்றும் புரியாமல் தலையிலடித்துக் கொள்வார். அப்போதே அப்படிச் சொன்னவர், இன்று வந்த ஜாங்கோவைப் பார்த்தால் தரையில் புரண்டு கண்ணீர் விடுவார்.
8
தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்படும் அடையாளத்தன்மை, விசித்திரமான பெயர்களின் வகைமை, குண்டுவெடிப்புகள், இருள் நகைச்சுவை என்ற பெயரில் துடிக்கும் ஒழுங்கின்மை, ஆழமான ஆய்வுகளின்றி மேலோட்டமாக உருவாக்கப்படும் வரலாற்றுக் கதைகள், பாரொடித்தன்மை என ஒரே வகை, உப்பு பெறாத உத்திகளை சுழற்சிமுறையில் கையாண்டு அதை நூறு பக்கத் திரைக்கதையாக எழுதும் திறமையும், அதைக் கொண்டே முதன்மையான இயக்குநர்/ எழுத்தாளர்/ படைப்பாளர் என பெயர் வாங்கும் பேறும், ஆஸ்கார் இருக்கும் வரை டராண்டினோவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்கார் விருதுகளின் தற்போதைய நிறம் கூட மெல்ல மெல்ல மாறிவருகிறது. இன்னும், மாறாமல் பின்னோக்கியே நடக்கும் இயக்குநர்களில் ஒருவராக க்யூ.டி. இருக்கிறார். இனி வரும் காலங்களில், அவரது கெளரவத் தோற்றங்களைத் தொகுத்துப் பார்த்து பரிசீலனை செய்து, ‘ஹாலிவுட்டின் கே.எஸ்.ரவிகுமார்’ என்று புதியதாய் ஒரு விருது உருவாக்கித் தர ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கிறேன்.