பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 4)

by மானசீகன்
0 comment

‘ஸ்காலர்ஷிப்னா என்னடா? எதுக்கு தர்றாங்க?’

‘அது அய்யருகள்லாம் சூத்திரன்னு ஒதுக்கி வச்சுட்டாங்கள்ல? அதுக்காக கவர்மெண்ட் நமக்கு காசு கொடுக்குது.’

‘அதில்ல மாப்ள. அம்பேத்கர் அவுக ஆளுகள்ல படிக்கிறவனுகளுக்கு துட்டு தரணும்னு அரசியல் சட்டத்தில எழுதி வச்சுட்டாராம். தேவர் சண்டை போட்ருக்காப்ல. அதுக்கப்புறம்தான் நமக்கும் காசு வருது.’

‘அப்ப தேவர்தான் ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுத்தாரா? எங்க தாத்தா வெள்ளக்காரன் சட்டம் போட்டதுன்னு சொன்னாரு.’

‘யார் தந்ததுன்னு தெரியல. ஆனா பெரியார், அம்பேத்கர் எல்லாம் போராடிருக்காங்க.’

‘எம்ஜிஆராத்தான் மாப்ள இருக்கும். அவருதான சத்துணவு, செருப்பு எல்லாம் போட்டாரு.’

‘இல்லடி. கலைஞர்தான் காசு தரச் சொல்லி சட்டம் போட்டவர். அவரு பீப்பி ஊதுற ஆளுக இல்ல. அதனால ரொம்ப கஷ்டப்பட்டாராம். பத்தாவது கூட முடிக்கலை. அதனாலதான் தன்னை மாதிரி யாரும் ஃபெயிலாகக் கூடாதுன்னு காசு கொடுக்குறாப்ல.’

‘கலைஞர முதலமைச்சர் ஆக்குனதே எம்ஜிஆர்தான் தெரியுமா உனக்கு?’

‘எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வச்சதுக்காக தர்றாங்க. நீங்க தர விட மாட்டீங்கன்னு ஒங்களுக்கும் தர்றாங்க.’

‘சரி அது ஓகே. இவன் துலுக்கன் இவனுக்கு யாரு தர்றது? பாகிஸ்தான்ல இருந்து எவனும் மணியார்டர் பண்றானா?’ ( இதற்கு பலரும் சிரித்தார்கள் )

‘யாரு தந்தா என்னடா? படத்துக்கு போறோம். தமிழ்நாடு ஓட்டல்ல புரோட்டா திங்கறோம். வாழ்க ஸ்காலர்ஷிப். வாழ்க ஜெயலலிதா மேடம்!’

பதினொன்றாம் வகுப்பில் ‘ஸ்காலர்ஷிப்’ என்கிற பெயரில் சிறுதொகை கிடைத்த போது நாங்கள் இப்படித்தான் பேசிக் கொண்டோம். இப்போது யோசித்துப் பார்த்தால் இதைப் பேசிய ஒவ்வொருவரும் அவரவரின் சமூகத்தின் மன நிலையிலிருந்தே பேசியிருக்கின்றனர். இந்த உரையாடலை வைத்தே எல்லோரின் சாதியையும் கண்டறிந்து விடலாம். அன்று நான் அமைதியாக இருந்தேன். ஏனென்றால் அது குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அன்று மாலை 6 பேர்தான் படம் பார்த்து புரோட்டா சாப்பிட்டோம் . மற்றவர்கள் ‘அம்மாட்ட கொடுக்கனும்னு’ சொல்லி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டார்கள் .

மறுநாள் கிருஷ்ணமூர்த்தி கடுமையான கோபத்தில் இருந்தான். காரணமே இல்லாமல் எங்கள் மீது எரிந்து விழுந்தான். இரண்டு நாட்கள் அதே நிலை நீடித்தது. மூன்றாம் நாள் மதியம் ஒரு தோப்பில் அமர்ந்திருந்த போதுதான் உண்மையை உடைத்தான். நாங்கள் படத்துக்குப் போய் புரோட்டா சாப்பிட்ட விஷயம் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அவன் எலும்பு போட்ட புரோட்டோ சால்னா சாப்பிட மாட்டான் என்பதற்காகத்தான் அவனைக் கூப்பிடவில்லை. மறைக்க வேண்டும் என்கிற உள்நோக்கமெல்லாம் இல்லை. படத்துக்கு அழைத்திருந்தாலும் அவன் வந்திருக்க மாட்டான். அவனுடைய வீட்டில் படிப்பு, படிப்பு, படிப்பு மட்டும் தான். அப்பா கோவில் குருக்கள். ஒரு அண்ணன். ஒரு தங்கை. மூன்று பேருமே நன்றாகப் படிப்பார்கள். வறுமையிலும் செம்மையாக இருப்பார்கள். அவனுடைய வீட்டில் தீண்டாமையை எல்லாம் கடைபிடிப்பதில்லை. ஆனால் அடிக்கடி அதை பெருமையாகச் சொல்லிக் காட்டுவான். மற்றவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். எனக்கு மட்டும் அந்த மனநிலையே தீண்டாமையின் நவீன வடிவம் என்று புரிந்திருந்தது. வறுமையும், உள்ளூர்ச் சூழலும், சமூக மாற்றங்களும் தங்கள் ஆச்சாரத்தை ஒளித்து வைக்கும்படி நிர்பந்தித்திருப்பதாகவே நான் புரிந்து கொண்டேன். எந்த மாணவன் ‘ஸ்டடி அவரில்’ பேசினாலும் குப்பை பொறுக்கச் சொல்லும் திருமலை சார் அவன் பேசினால் பொறுக்கச் சொல்ல மாட்டார். ‘நீ உக்காரு சாமி’ என்று சொல்லி விடுவார்.

‘நாங்கள்லாம் எவ்வளவு கஷ்டப்படறோம் தெரியுமா? நாங்க படிச்சுதான் முன்னுக்கு வரனும். கிளாஸ்ல பார்த்தியா? நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க். எங்காளுக எப்பவும் சீப்பா குறுக்கு வழில போக மாட்டோம். ஆனா பாருங்க. புரோட்டா திங்கிறதுக்கும் சினிமா பாக்குறதுக்கும் கவர்மெண்ட்டு காசு தருது’ என்று சொல்லி விட்டு பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் என்று சகலரையும் வரிசையாகத் திட்டினான். ‘இவாளும் ஊருக்காக நடிக்கறா’ என்று இடையில் ஜெயலலிதாவையும் இணைத்துக் கொண்டான். கடைசியா ‘நாடு நாசமாயிடுச்சு’ என்ற வழக்கமான பல்லவியைப் பாடினான்.

தோப்பிலிருந்து வகுப்பிற்கு வரும்போது பலரும் குற்றவுணர்வில் இருந்தார்கள். கிட்டத்தட்ட கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குப் போக வேண்டிய சாப்பாட்டைத் தட்டிப் பறித்து புரோட்டா சாப்பிட்டு விட்டு சினிமா போன உணர்வில் இருந்தார்கள் .

அன்று மாலையும் அதே பேச்சு வந்தது. எனக்குக் கடுமையாகக் கோபம் வந்து விட்டது. ‘கிருஷ்ணமூர்த்திய விட ஏழையா நம்ம வகுப்பில எவ்வளவு பேரு இருக்காங்க. அதை ஏன்டா யோசிக்க மாட்டேங்கிறீங்க? எத்தனை பேருக்கு ஸ்காலர்ஷிப் கிடச்சது? எல்லோருமா நம்ம கூட படத்துக்கு வந்தாங்க? எத்தனை பேரு காலைல சாப்புடாம வந்து இண்டர்வ்ல்லயே அடுப்படிக்குப் போய் சத்துணவு சோறு வெந்திருச்சான்னு கேக்குறானுக? கண் முன்னாடி பாக்குறீல்ல? மணிகண்டன் வீட்ட போன மாசம்தான் முனிஸிபாலிட்டி இடிச்சு போட்டுச்சு. அவுங்க சித்தப்பா வீட்ல இருந்துதான் படிக்க வந்தான். இன்னிக்கு இடிச்சு போட்ட அதே இடத்துல அவங்க அம்மா அடுப்பு பத்த வச்சு சோறாக்குறாங்க. கிருஷ்ணமூர்த்தி மட்டுந்தேன் ஏழையா? இவ்வளவு ஏன்? எந்த சார் வந்தாலும் மணிகண்டனையோ, கமலையோதானே கூட்டச் சொல்றாங்க? எங்க கிருஷ்ணமூர்திய குப்பை பொறுக்கச் சொல்லு பாப்போம்.’

அவர்கள் என் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முதல் ரேங்க் எடுப்பவனுக்கும் , இரண்டாவது ரேங்க் எடுப்பவனுக்குமான யார் பெரிய ஆள் போட்டியாகக் கருதி கடந்து போய் விட்டார்கள். ஸ்காலர்ஷிப்பை வாங்கி வீட்டில் கொடுத்து தங்களுக்கான அடுத்த வருட நோட்டுச் செலவுகளுக்கு வைத்துக் கொண்டவர்களும் கூட கிருஷ்ணமூர்த்தி இப்படிப் பேசுகிற போது குற்ற உணர்வு அடைந்திருக்கிறார்கள்.

அப்போது அவர்கள் சிறுவர்கள். தெரியாமல் அப்படிப் பேசுகிறார்கள் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வளர்ந்த பிறகும் பலர் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டால் படித்து, வேலை வாய்ப்பைப் பெற்று, வாழ்க்கையில் முன்னேறியவர்களையே தொண்ணூறுகளுக்குப் பிறகு இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேச வைத்தது சமூக நீதியில் மிகச் சரியாகப் பயணித்து வந்த மாநிலத்தின் மிக முக்கியமான சறுக்கல்.

ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் ‘மண்டல் கமிஷன்’ அறிக்கை வெளிவந்த காலத்தில் வெளிவந்தது தற்செயலானதல்ல. அதே இயக்குநர் எடுத்த ‘இந்தியன்’ திரைப்படத்தில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்குப் பின்னால் அம்பேத்கரின் படத்தை குளோஸ் அப்பில் காட்டுவதும் உள்நோக்கம் கொண்ட ஒன்றுதான். உலகமயமாக்கலாலும், நுகர்வு வெறியாலும், மதிப்பீடுகளின் வீழ்ச்சியாலும் பெருகி விட்ட லஞ்சத்தை சாதியோடும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தோடும் இணைத்துப் பேசுவதுதான் மிக நுட்பான சாதிய அரசியல்.

நான் பல தடவை வகுப்பறைகளில் இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய போதெல்லாம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவே பேசியிருக்கிறார்கள். அந்த விஷயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு தெளிவு இருக்கிறது. ஆனால் இவர்கள் தமக்கான உரிமைகளையே அறியாமல் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டையும், ஸ்காலர்ஷிப்பையும் SC மாணவர்களுக்கு உரியதாக மட்டுமே கருதுகிறவர்களும் உண்டு. இந்த மனோபாவம்தான் தலித்துகளுக்கு எதிரான பிற்பட்ட சாதிகளின் உயர்நிலையாக்கல் மனநிலையில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இட ஒதுக்கீடு குறித்த அறியாமையை அல்லது குற்ற உணர்வை பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீது விதைப்பதில் அவர்கள் எப்படியோ வெற்றி பெற்றிருக்கிறார்கள். இளைய தலைமுறையின் சாதி ஆதிக்க மனோபாவமே இங்கிருந்து தான் தொடர்கிறது.

நன்றாகப் படித்தவர்களும் கூட கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வழங்கப்பட்டிருக்கிற இட ஒதுக்கீடு குறித்து தவறான புரிதல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அது தனி மனிதனின் பொருளாதார நிலை சார்ந்த ஒன்றல்ல. பல்வேறு சமூகங்களின் வாழ்நிலை குறித்த ஆய்வுகளின் முடிவில் அரசால் தீர்மானிக்கப்பட்ட விஷயம் என்பதை இன்னும் பலர் உணராமல் இருக்கிறார்கள். இந்திய சமூகத்தில் பல்வேறு சமூகங்களின் வாழ்க்கை நிலைக்கு வர்ணாசிரமத்தோடு மறைமுகமாக தொடர்பிருப்பதையும், நில உடைமை அல்லது நிலமற்று இருத்தல் அதைச் சார்ந்தே நிலைபெற்றதையும் அந்த நிலையின் தொடர்ச்சியாகவே அவர்களின் சமகால வாழ்க்கையும், அந்தஸ்தும் தீர்மானிக்கப்பட்டிருப்பதையும் இவர்கள் கொஞ்சம் கூட அறிந்திருக்கவில்லை.

எண்ணிக்கை பெரும்பான்மையால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி மக்கள் பிரதிநிதிகளாக பிற்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சமூக நீதி முழுமையாகச் சென்று சேர அதிகார மட்டத்திலும் அவர்களின் பிரதிநிதித்துவம் தேவை. அதற்காக உருவாக்கப்பட்டதே இட ஒதுக்கீடு என்கிற எளிய உண்மை கூட இங்கே பேசப்படுவதில்லை என்பது மிகப்பெரிய சோகம். பிற்பட்டவர்களை உயர் அடுக்கு மனோபாவத்தால் வளைத்து இன்னொரு புறத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடம் அன்பாயிருப்பது போல் நடித்து அவர்களை பிற்பட்டவர்களுக்கு எதிராய் கொம்பு சீவி விடுகிற வேலை பல்வேறு மட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்று ரீதியாக எந்தப் பகைமையும் இல்லாத இரு சமூகங்கள் தென் மாவட்டங்களில் எதிரும் புதிருமாக மாறி சின்னப் புள்ளைகளுக்கு கையில் கயிறு கட்டி விட்டு அரிவாளோடு அலைவதற்கு இந்த மனோபாவமே காரணம். கடந்த பதிவைப் பார்த்து விட்டு இரு சமூகங்களையும் சேர்ந்த பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு, ‘இந்த முரண் எண்பதுகளுக்குப் பிறகு திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்பட்ட ஒன்று இதற்குப் பின்னால் என்ஜிஓக்களும் அவர்கள் ஆதரவு பெற்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்’ என்பதைக் குறிப்பிட்டார்கள். சேரியில் கூட இடமின்றி துரத்தப்பட்டு அன்னிய ஆட்சியாளர்களாலும் ஆங்கிலேயர்களாலும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்த சமூகம் சுதந்திரத்திற்குப் பிறகான தேர்தல் அரசியலால் பலன் பெற்று முக்குலத்தோராக பொது அடையாளத்தில் கலந்து தங்களைப் போலவே பாதிக்கப்பட்ட இன்னொரு பிரிவினரான ஒடுக்கப்பட்ட மக்களை கீழானவர்களாகக் கருதுகிற சிந்தனைப் போக்கு திடீரென்று எப்படி வந்தது என்பது ஆய்வுக்குரிய ஒன்று.

‘வா ஏகலைவா
வில்லையும் அம்பையும்
அவர்களிடமே விட்டு விட்டு வா
கணிணி இயங்குவதற்கு
கட்டை விரல் தேவையில்லை’

என்று கண்மணி ராசா கவிதையில் சொல்லியிருப்பதைப் போல் கல்வியால் முன்னேறிக் கொண்டிருக்கிற ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையிலான முரண் வர்ணாசிரமத்தின் வேறொரு வடிவமாக உள் நுழைந்திருக்கிறது. அதனுடைய தொடர்ச்சிதான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமியை இட ஒதுக்கீட்டிற்கு எதிராய் பேச வைத்து விட்டு இன்னொரு புறத்தில் 3% மட்டுமே இருக்கிற உயர் சாதியினருக்கு பொருளாதார இட ஒதுக்கீடு என்கிற பெயரில் நவீன பிரம்மதேயத்தை கொண்டுவர முயற்சிக்கிறது .

சமீபத்தில் கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் சந்தித்தேன். பாடம் தவிர வேறு எதிலுமே ஈடுபாடு இல்லாத கிருஷ்ணமூர்த்தியால் பத்தாம் வகுப்பைப் போல் பனிரெண்டாம் வகுப்பில் மனப்பாடம் பண்ணி நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. ஏதோ ஒரு கல்லூரியில் பி.காம் படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் சுமாரான வேலையிலிருந்தான். இப்போது அபுதாபியில் அத்திம்பேர் மூலமாக நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் சந்தோஷப்படுவேன் என்று நினைத்து அபுதாபி சேக்கின் கல்யாண குணங்களைப் புகழ்ந்து கொண்டிருந்தான் . அரபுநாடுகள் தான் இந்தியாவை விட சிறந்தவை என்று அரைகுறை ஆங்கிலத்தில் உளறிக் கொண்டிருந்தான். ‘தமிழ்நாட்டுலயும் அது மாதிரி மாற்றம் வரனும்’ என்று முடித்தான். ‘ஜவாஹிருல்லாவ முதலமைச்சர் ஆக்கிடலாமா?’ என்று கேட்டேன். சற்று நேரம் அமைதியாக என்னைப் பார்த்து விட்டு, ‘நீ மாறவே இல்லடா’ என்று சிரித்தான். அடுத்த ஆண்டு அமெரிக்கா போய் விடுவானாம். அவன் மனைவியோட அண்ணியின் தம்பி அங்கே பெரிய வேலையில் இருக்கிறாராம். ‘அப்ப அடுத்த வருஷத்துக்குள்ள அபுதாபி சேக் கெட்டவராயிடுவாரு’ என்று கண்ணடித்தேன். ‘நீ அடங்கவே மாட்டியா?’ என்பதைப் போல் பரிதாபமாக நின்றிருந்தான். அதற்குப் பிறகு நல்ல வார்த்தைகள் மட்டுமே பேசி அனுப்பி வைத்தேன்.

அவனை சந்தித்து விட்டு வருகிற வழியில்தான் பாஸ்கரனைப் பார்த்தேன். அவன் வீடு கிருஷ்ணமூர்த்தியை விட கொஞ்சம் மேலதான். அவனும் நல்லாதான் படிப்பான். அவனுக்கும் பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து விடவே அண்ணன் தன்னோடு ஒர்க்ஷாப்பில் இழுத்துக் கொண்டான். இப்போது தனியாக மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறான். அவனுக்கும் திருமணமாகி விட்டது. அவனுடைய மச்சான்களும், மாமன்களும் கம்பம் வட்டாரத்துக்குள்தான் சேல்ஸ் மேனாகவோ, பலசரக்கு கடைக்காரனாகவோ குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கறுப்பு மசி படிந்த முகத்தோடு என்னைப் பார்த்துச் சிரித்தவன் வேகமாக கை குலுக்க வந்து கையை பின்னே இழுத்துக் கொண்டான். கையிலும் கறுப்பு. துணியால் முகத்தை அழுத்தித் துடைத்து விட்டு என்னோடு நடந்து வந்தான். டீக்கடையை நெருங்கும் போது கேட்டேன் ‘ரிஸர்வேசன்னா என்னான்னு தெரியுமா பாஸ்கரா?’ என்னைப் பார்த்துக் கொண்டே மாஸ்டரிடம் டீ சொல்லி விட்டு சத்தமாகக் கேட்டான், ‘அப்புடீன்னா?’ ஏதோ ஒரு விமானம் எங்களைக் கடந்து வானத்தில் போய்க் கொண்டிருந்தது.