உடனிருப்பவன்

0 comment

1

ஆறு வருடங்களுக்கு முன் எனக்கு மணமான போது நாற்பத்து இரண்டு வயது. மாலினிக்கு முப்பத்தியெட்டு. அவளைப் பெண் பார்க்கச் சென்றபோது சலிப்புடன் தான் சென்றேன். தம்பி பதினேழு வருடங்களுக்கு முன்பு மணமுடித்திருந்தான். அவன் மகன் பெண் பார்க்கப் போகும் போது சில வருடங்களாகச் செய்வது போல அன்றும் “கன்கிராட்ஸ் பெரியப்பா” என்று செய்தி அனுப்பியிருந்தான். அதை அம்மாவிடம் காட்டிய போது அம்மாவும் வழக்கமாகச் செய்வது போல முகம் பூரித்து புன்னகைத்தாள். அப்பா வழக்கம்போல மென்மையாகச் சிரித்தார். நானும் வழக்கம் போல இம்முறை பெண் பார்த்து வந்த பிறகு அம்மா அப்பாவிடம் சற்று கடுமையாக ‘இனிமேல் என்னைப் பெண்பார்க்க அழைக்காதீர்கள்’ என்று சொல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டே சென்றேன். வழக்கம் போல அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே பெண்வீட்டையும் பெண்ணையும் பார்த்து வந்த பிறகு வீடு அவர்களுக்கு ஏற்றது போல இருப்பதாகவும் மாலினி எனக்கு ஏற்றவள் போல இருப்பதாகவும் சொன்னார்கள். நானும் வழக்கம் போல அதை அந்தக் கணத்தில் நம்பினேன். வழக்கத்துக்கு மாறாக நிகழ்ந்தது மாலினி இதுவரை பார்த்த பெண்களை விட அழகாகத் தெரிந்ததுதான். ஒரு காப்பி நிறத்திலான சேலையைக் கட்டிக்கொண்டு மாலினி வந்து நின்றபோது அவளிடம் வெட்கம் படபடப்பு போன்ற உணர்வுகள் தோன்றாவிட்டாலும் எனக்கு அவளை கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற பதற்றம் உருவாகிவிட்டது. முப்பத்தியெட்டு வயதில் அவளிடம் அத்தகைய உணர்வுகளை நான் எதிர்ப்பார்த்திருக்க மாட்டேன் என்று எண்ணி என்னைப் பார்த்தவள் கொஞ்சம் அதிர்ந்து குழப்பமடைவது தெரிந்தது. நான் முதன்முறையாக காதலைச் சொல்ல அல்லது சொல்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஒரு பதின்வயது காதலனின் படபடப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன நினைத்தாளோ திடீரென அவளும் எனக்கு மட்டும் புரியும் விதமாக படபடக்கத் தொடங்கிவிட்டாள்.

அப்படிப் படபடத்தவாறே நானும் அவளும் பேசிக்கொண்டோம். எவ்வளவு பேசியும் மாலினியை நேரில் பார்க்கும்போது படபடப்பு நீங்கியபாடில்லை. ஏன் ஒருவகையில் மணமுடித்து சில வருடங்கள் வரைகூட அப்படித்தான். இருந்தாலும் எங்கள் வயது குறித்த பிரக்ஞை எங்களுக்கு இல்லாமல் இல்லை. முதல் முறை உடலுறவு கொண்டது இருவருக்கும் திருப்தியைத் தரும் என்று நாங்கள் எண்ணிப் பார்க்கவேயில்லை. மாலினி அந்த முதல்நாள் இரவுக்குப் பிறகு நான் அவளைக் காதலித்ததை விட  என்னை அதிகமாகக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள். அம்மாவிடமும் அப்பாவிடமும் தன்மையாக நடந்து கொண்டாள். வேலைக்கும் சென்று வந்தபடி வீட்டு வேலைகளையும் அவளே கவனித்துக் கொள்ளத் தொடங்கினாள். எப்போதும் ஏதோவொன்றை குறை சொல்லியபடியே இருக்கும் அம்மாவுக்குக் கூட மாலினியிடம் முழுத்திருப்தி ஏற்பட்டிருந்தது. திருப்தியை மேலும் பெருக்கும் விதமாக மாலினி கருவுற்றாள். ஏற்கனவே அவளின் மாதவிடாய் சுழற்சியை கவனித்துக் கொண்டிருந்தேன் எனும்போதும் அதை என்னிடம் அவள் சொன்னபோது எனக்கு உடற்சிலிர்ப்பு உண்டானது. சில மாதங்களாக மாலினி காலையில் எழுந்தவுடன் குளிப்பதில்லை என்பது ஒருவேளை அவளுக்கு மெனோபாஸ் வந்திருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது அந்தச் சிலிர்ப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம். அவள் கருவுற்றிருப்பதைச் சொன்ன சில கணங்களில் அவளைக் கட்டிலில் அமரவைத்து நான் தரையில் அமர்ந்து அவள் கைகளை அவள் மடியிலேயே எடுத்து வைத்து அந்த கைகளுக்குள் முகத்தை வைத்து அழுது கொண்டிருந்தேன். அவள் கனிவுடன் சிரித்தபடி என் உச்சந்தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

எழில் என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்று மாலினி முன்னரே முடிவெடுத்து விட்டாள். பிறந்தது பெண் என்பதால் அப்பெயர் மேலும் பொருத்தமாக இருந்தது. எழில் என்னைப் போல மாநிறமாக இல்லாமல் மாலினியைப் போல சிவப்பாக இருந்தாள். ஆனால் என்னைப்போல எடுப்பான முகம். குழந்தையைப் பார்ப்பவர்கள் எல்லாம் அவளது ஆரோக்கியமான சிரிப்பினைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். மாலினியும் அம்மாவும் எழிலை எப்போதும் தூய்மையாகவும் நறுமணத்துடனும் வைத்திருந்தனர்.

அப்பாவோ நானோ வெளியே சென்று வந்து அப்படியே குழந்தையைத் தூக்க வந்தால், “கட்டக்கி கால்நீட்ற வயசு வந்துடுச்சே தவிர அறிவிருக்கா பாரு” என்று அப்பாவை அம்மா உரிமையாகவும் “அப்பா குளிக்கவேல்லடி பாப்பா. அழுக்கப்பா குளிச்சிட்டு வாப்பான்னு சொல்லுடி தங்கம்” என்று மாலினி என்னை செல்லமாகவும் கடிந்தனர். மனித முகங்கள் எழிலுக்கு கொடுத்த உற்சாகத்தை இன்னதென்று சொல்லி விளக்கிவிட முடியாது. வாசலைப் பார்க்கும்படி கூடத்தில் அவளைக் கிடத்திவிட்டு அம்மாவோ மாலினியோ சமையல் வேலையில் இருக்கும்போது வாசலில் யாரேனும் வந்து நின்றால், எழிலும் ஜிம்மியும் சேர்ந்து கொட்டும் கெக்கலியில் அம்மாவோ மாலினியோ வாசலுக்கு ஓடி விடுவார்கள். ஜிம்மிக்கும் மனிதர்களை அவ்வளவு பிடிக்கும். யாரும் வந்து , திறக்காத கேட்டுக்கு வெளியே நின்றிருந்தால் ஜிம்மி பொறுமையிழந்து குரைக்கத் தொடங்கிவிடும். அந்தக் குரைப்பைக் கேட்டு பயந்தவர்கள் பலர். ஆனால் ஜிம்மி விருந்தினரைக் காக்க வைக்கக்கூடாது என்று வீட்டில் உள்ளவர்களை அழைப்பதற்காக அப்படி குரைக்கிறது என்று வாசலில் நிற்பவர்களுக்குத் தெரியாது. வந்தவரின் மணத்தை முகர்ந்து உடையில் தென்படும் நீட்சியை மென்மையாகக் கவ்வி இழுத்து கையிடுக்கில் தொடையிடுக்கில் என தலையை நுழைத்து வந்தவர்களை மகிழ்ச்சியிலும் அச்சத்திலும் நிலைதடுமாறச் செய்துதான் வீட்டுக்குள் அழைத்து வரும். வந்தவர்கள் திரும்பும்போது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மூலையில் போய் படுத்துக்கொள்ளும். அரிதாக அழவும் செய்யும். ஜிம்மியைப் போலவே எழிலும் இருந்தாள். புதுமனிதர் யாரைப் பார்த்தாலும் உட்கார்ந்த வாக்கிலேயே கைகளைத் தூக்கிக்கொண்டு குதிப்பாள். ‘ஆஆஆ’ என சத்தம்போட்டு அம்மாவையோ மாலினியையோ அழைப்பாள். மிகைச்சத்தம் அவளுக்குப் பிடித்திருந்தது. நானும் மாலினியும் எப்போது சண்டையிட்டாலும் கை தட்டி சிரிப்பாள். அவள் சிரிப்பே சமாதான ஏக்கத்தை கொஞ்சமாகச் சுமந்தபடி சண்டையிடும் எங்களை சிரிக்க வைத்து விடும். சில சமயம் சாதாரண விஷயத்தைக் கூட எழிலைச் சிரிக்க வைப்பதற்காக சண்டையின் தொனியில் மாலினி சொல்வாள்.

எழிலுக்கு இரண்டு வயது கடந்தபிறகு மாலினி ஒரு இருசக்கர வாகனம் வாங்கச் சொன்னாள். அலுவலகத்துக்கு நான் பேருந்தில் சென்று வருவேன். மாலினி செல்வதற்கு ஒரு ஸ்கூட்டி வைத்திருந்தாள். குடும்பத்துடன் தூரமாக செல்வதற்கு ஒரு கார் இருந்தது. முன்பக்கம் பெட்ரோல் டேங்க் இருக்கும்படியான ஒரு கியர் வண்டியை மாலினியின் கட்டாயத்தில் வாங்கினேன். அதன்பிறகு வண்டியிலேயே அலுவலகம் சென்று வரத்தொடங்கினேன். அதுகூட ஒருவகையில் நன்றாகவே இருந்தது. பாப்பாவை வண்டியின் முன்புறம் வைத்துக் கொண்டு மாலினி அடிக்கடி வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வாள்.  சிலசமயம் என்னையும் ஏற்றிக் கொள்வாள். எதிர்காற்று முகத்தில் பட்டால் பாப்பா சிரிசிரியென சிரிப்பாள். முகம் கூச டேங்க்கில் குப்புற படுத்துக்கொள்வாள். அவளது அந்த விளையாட்டுக்கென்றே நானும் மாலினியும் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவரத் தொடங்கினோம்.

ஒருநாள் அலுவலகம் முடிந்து வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது சாலையில் கொட்டிக்கிடந்த வேஸ்ட் ஆயிலில் வண்டி சறுக்கி முகம் சாலையில் பதியும்படி கீழே விழுந்தேன். கையை ஊன்றியதால் குவிந்து நீண்டிருந்த வாய் சாலையில் முட்டியது. முன்பற்கள் உடைந்தன. உப்புச்சுவையுடன் ரத்தம் வாயிலிருந்து கொட்டத் தொடங்கியது. முதலில் எலுமிச்சை கடித்தால் எச்சில் ஊறுவது போல வந்த ரத்தம் சற்று நேரத்துக்கெல்லாம் கொழகொழவெனத் திரண்டு கட்டி கட்டியாக கொட்டத் தொடங்கியது. மயக்கம் வரும் என நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சாலையில் யாரையும் கூப்பிட்டு உதவி கேட்கவும் மனம் வரவில்லை. தங்களை காத்துக் கொள்ளும் இறுதிப் போராட்டத்தில் உதட்டில் பற்கள் நன்றாகக் குத்தியிருந்தன. உதடு கட்டைவிரல் தடிமனுக்கு  வீங்கியது. வாய்க்குள்ளிருந்து வரும் ரத்தம் மட்டும் நிற்கவில்லை. ரத்தத்தின் புளிப்புச்சுவை அந்த நேரத்திலும் மனதுக்குச் சற்று இதமளித்தது. வலது கையில் சிறிது காயம்பட்டிருந்தது. கர்ச்சீப்பை எடுத்து வாய்க்குக் குறுக்கே கட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். செல்லும்போதே மாலினிக்கு செய்தியைச் சொல்லியிருந்தேன். அவளும் அம்மா அப்பாவிடம் காட்டிக்கொள்ளாமல் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள். மேலும் கீழுமாக முற்பற்கள் ஆறும் உடைந்து நொறுங்கியிருந்தன. மாலினி என் முகத்தைப் பார்த்ததும் அழத்தொடங்கினாள். பலமுறை முகத்தைப் பார்க்க வேண்டும் என்று கண்ணாடி கேட்டும் யாரும் எனக்குக் கண்ணாடி தரவில்லை. நீலத் தாள் ஒட்டியிருந்த மருத்துவமனை கண்ணாடிக் கதவில் முகம் மங்கலாகத் தெரிந்தது. முதன்முறையாக அவனை அப்போது தான் சந்தித்தேன்.

2

முதலில் அவன்தான் கண் விழிக்கிறான் என்று எனக்குத் தெரிகிறது. நான் கண் விழிக்கும் போது கண்கள் தள்ளிய பீளையாக வாய் வடித்தக் கோழையாக அருவருப்பூட்டும்படி அவன் எழுந்து கொள்கிறான். என் செயல்கள் எதற்கும் என்னால் பொறுப்பேற்றுக் கொள்ள இயலவில்லை. செய்தது நானா அவனா என்ற தயக்கம் உண்டாகிறது. அன்று மருத்துவமனையில் இருந்து முதல்நிலை சிகிச்சை மட்டும் பெற்றுக்கொண்டு திரும்பியபோது மாலினி என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தாள். அப்போதும் எனக்கு அவன் உடனிருப்பதைப் போலவே தோன்றியது. அவனை ஒரேயொரு முறை அந்த மருத்துவமனைக் கண்ணாடியில் பார்த்தது மீண்டும் நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டுப்போய் காருக்குள் இருக்கிறானோ என்று தேடினேன். அவன் இல்லை. மனம் சற்று நிம்மதி அடைந்தது. மாலினி அடுத்தகட்ட சிகிச்சைகளைச் சொல்லி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“பல் மட்டும்தான் ஒடஞ்சிருக்கு வேற ஒன்னும் ஆகலன்னு சந்தோஷப்படுங்கன்னு டாக்டரே சொல்றாரு . நீ போட்டு சும்மா டென்ஷன் ஆயிட்டிருக்காத. இன்னும் ஒரு மாசத்துல இத சரி பண்ணிடலாம். அம்மாவ வெந்நீர் வைக்கச் சொல்லி இருக்கேன். கைகால் கழுவிட்டு படு. ஆஃபீஸுக்கு நான் லீவ் சொல்லிக்கிறேன். நீ எதையும் யோசிச்சிட்டு இருக்காத சரியா?” என்று அவள் சொன்னபோது அவள் குரலின் பின்னணியாக அவள் உடலின் சூடு இருந்தது. அவளின் பாதுகாப்பான நறுமணத்துக்குள் படுத்து அப்படியே உறங்கிப் போனேன். விழித்தபோது வீட்டு வாசலில் கார் நின்றிருந்தது. மாலினி என்னை எழுப்பிக் கொண்டிருந்தாள். மருத்துவமனை சென்று திரும்பியதும் மாலினியின் சொற்களும் மட்டுமே நினைவிலிருந்தன. அம்மா அழுதுகொண்டே என்னை நோக்கி ஓடிவந்தார். அப்பா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நின்றிருந்தார். பாப்பாவைத் தூங்க வைத்துவிட்டதாக அம்மா சொன்னாள். என்னைப் படுக்கையில் கிடத்திய மாலினி விபூதி பூசிவிட்டு நெற்றியில் முத்தமிட்டாள். பின்னர் வேறு பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு படுத்தாள். அவள் கை சென்று விளக்கை அணைப்பதற்கும் ஒளியணைவதற்குமான சிறு இடைவெளியில் மீண்டும் அவனை எங்கள் படுக்கைக்கு எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் பார்த்தேன்.

வீட்டில் அவனை முதலில் அடையாளம் கண்டு கொண்டது பாப்பா தான். மறுநாள் காலை பாப்பா எழுந்த பிறகும் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். மாலினி வந்து என்னை எழுப்பியபோது அவளை எனக்கு முன்னே அவன் கண் திறந்து பார்த்தான். மாலினியின் முகத்தில் தெரிந்த முதுமையை அவன் கண் உடனடியாகக் கண்டு கொண்டது. ஆணின் விழிகளில் தன் உடல் குறித்த ஏக்கமும் ஏளனமும் ஊசிமுனையளவு தெரிந்தாலும் எந்தப் பெண் விழியாலும் அடையாளம் காண முடியும். மாலினி அவன் விழிகளை புரிந்து கொண்டாலும் விபத்தால் நான் மனம் குழம்பி இருப்பதாக அவள் எண்ணியது எனக்குப் பரிதாபமாக இருந்தது. ஆனால் அவன் அதற்கென நிம்மதியடைந்தான். அம்மா பாப்பாவைத் தூக்கிக்கொண்டு வந்தாள். பாப்பா என்னைப் பார்ப்பதற்கு முன் அவனைக் கண்டு விழிகளை விரித்தாள். பின்னர் அதிர்ச்சி அடைந்து அழத்தொடங்கினாள்.

‘கவலைப்படாதே அப்பாவுக்கு அடிபட்டிருப்பதாக எண்ணி அவள் அழுவதாக அவர்கள் நினைப்பார்கள். அவளால் என்னைப் பார்த்ததை அவர்களிடம் சொல்ல முடியாது’ என்று சொன்னான். நான் திடுக்கிட்டேன். அவன் குரல் எனக்கு ரொம்பவும் பழகியதாக இருந்தது. ஆனால் அது என் குரல் இல்லை. எப்போதாவது மாலினி என்னைக் கெட்டவார்த்தையில் ரகசியமாக அழைக்கும்போது நானும் அவளை அப்படி கூப்பிட நினைத்து கட்டுப்படுத்திக் கொள்வேன். அந்த எண்ணத்துக்கு குரல் கொடுத்தால் அது இக்குரல் போலத்தான் இருக்கும். பாப்பா நான் இல்லாதபோது வீட்டில் இயல்பாக இருப்பதாகவும் நான் வீட்டுக்கு வந்தால் அமைதியாகி விடுவதாவும் அவன் சொன்னான். அவன் சொல்லும் எதையும் நம்பக்கூடாது என்று நான் எனக்குச் சொல்லிக்கொண்டேன்.

‘உன் அழகு வற்றிய மனைவி உன்னைப் பார்த்து சிரிக்கும்போது அவள் பற்கள் மட்டும்தான் அழகாக இருக்கின்றன. ச்சே எவ்வளவு வலிமையான ஈறுகள். அப்படியே முத்தம் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது’ என்று சொன்னவன் மீது எனக்கு பொறாமையும் எரிச்சலும் ஏற்பட்டது. நான் மாலினியை உதட்டோடு முத்தமிட்டேன். பற்கள் உடைந்த புண்கள் வாயிலிருந்ததால் என் வாய் துர்வாடை வீசிக்கொண்டு இருந்தது. மாலினி சங்கடப்படுவது தெரிந்ததும் இன்னும் இன்னும் அவள் உதட்டை இழுத்து இறுக்கிக் கொண்டேன். அவள் மிகவும் பிரயாசைப்பட்டு என்னிடமிருந்து விலகினாள்.

“பிடிக்கல இல்லையா” என்று அவன் என்னை மாலினியிடம் கேட்கச் சொன்ன கணமே நான் கேட்டிருந்தேன். மாலினி யாரையோ பார்ப்பது போல என்னைப் பார்த்தாள்.

‘நீயொரு முட்டாள். நாற்பத்தியிரண்டு வயதுவரை எந்தப்பெண் தொடர்பும் இல்லாமல் இருந்தாய். அவளும் அப்படி இருந்திருப்பாள் என நீ நம்புவது முட்டாள்தனமில்லையா? அவள் விளைய நினைக்கும் நிலம். விதைப்பவனைத் தேடிப் பயணித்திருப்பாள். வளர்ந்த மரத்தை முறித்து எறிந்தும் இருப்பாள். வாயில் நறுமணம் வீசும் ஆண்கள் அவளை முத்தமிட்டிருப்பார்கள். போயும் போயும் பல்லுடைந்து புண்பட்ட உன் வாயுடனா அவள் முத்தமிட வேண்டும்?’ என்று சொல்லி அவன் சிரிக்கத் தொடங்கினான்.

ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு நான் அலுவலகம் புறப்பட்ட நாளில் மாலினி “முகம் ஒன்னும் வித்தியாசமா தெரியல மாமா. பேசினாத்தான் தெரியும். அதுவும் ஒரு மாசத்துல பல் வச்சு கட்டிட்டா தெரியாது” என்று ஆறுதலாகச் சொன்னாள்.

‘உன் முகத்தின் விகாரத்தை உன்னிடமிருந்து மறைக்கவே அவள் இப்படிச் சொல்கிறாள். யோசித்துப் பார். உங்களுக்கு மணமான பிறகு நீ கொஞ்சமாவது கட்டுகுலைந்திருக்கிறாயா? ஆனால் அவள் மாறிவிட்டாள். அவள் அங்கங்களில் அசைவுகளில் எங்கும் அழகின்மை தெரிகிறது. உன் அழகின்மையை அவள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். மாலினி எவ்வளவு மகிழ்ந்திருப்பாள் நீ இப்படி விகாரமடைந்த போது! இப்போது கூட உன் மனம் தன் முக விகாரத்தை உணர்ந்து அதை மறைக்கும் மாற்று வழிகளை கண்டுவிடக்கூடாது என்றுதான் இவள் உன் முகம் சரியாகவே இருப்பதாகச் சொல்லி உன் மனதை நம்ப வைக்க முயல்கிறாள்.’

“என் மூஞ்சி எந்த லட்சணத்துல இருக்குன்னு எனக்குத் தெரியும், நீங்க ஒன்னும் சொல்லத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்த என்னை மாலினி திகைத்துப் போய் பார்த்தாள். சத்தமான என் பேச்சைக் கேட்டு வெளியே வந்த அம்மாவைப் போலவே நானும் அதிர்ச்சி அடைந்திருந்தேன்.

அம்மாவைப் பார்த்து “இவ சொல்லித்தான இந்த வண்டிய வாங்கினேன். இதுல போயே அடிபட்டு செத்துப் போறேன்” என்று சொல்லி வேகமாக வண்டியை முடுக்கித் திருகினேன்.

‘அவள் அழுவாளா? மனமுடைந்து உனக்காக கண்ணீர் விடுவாளா? அப்படி நீ நினைக்கிறாயா? அவள் நிச்சயம் அழமாட்டாள்’ என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்குத் திரும்பினேன். மாலினி வாசலிலேயே பிரம்மை பிடித்தது போல நின்றிருந்தாள். எனக்குத் திருப்தியாக இருந்தது. அவன் சலிப்படைந்தான். வண்டியை போட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினேன். அலுவலகத்தில் என்னுடன் அவனையும் சேர்த்தே பலர் பார்த்தனர். பலர் அவன் முகத்தைக் கண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அவனைக் கண்டு மகிழ்கிறவர்களின் எண்ணிக்கை நாளும் பெருகிக் கொண்டே இருந்தது. அவன் என்னை மெல்ல மெல்ல வென்று கொண்டே வந்தான். எப்போதும் என்னுடன் பேசிக்கொண்டே இருந்தான். நான் தேயத்தேய அவன் மெருகேறி வந்தான்.

அவனை பாப்பா விரும்பினாள் என்பது எல்லாவற்றை விடவும் எனக்கு அதிக துயரை அளித்தது. வெற்றிடமான வாயைக் காட்ட நான் தயங்கிக் கொண்டிருந்த போது அவன் பாப்பாவின் முன் ‘ஈயென’ இளித்து அவளை பயமுறுத்தப் பார்த்தான். ஆனால் அவள் சிரித்தாள். “ம்மா ம்மா த்த த்த” என வீட்டில் பிறரை அழைத்து என்னைக் காண்பித்தாள். எனக்கு அழுகை வந்தது. ஆனால் அவனுக்கு சுள்ளென கோபம் ஏறியது. அவன் கோபத்தை நான் ரசிக்கத் தொடங்கிய போது இப்படிச் சொன்னான்.

‘உன் பெண்ணுடைய பற்களையும் அவளைக் குப்புறப்போட்டு பின்மண்டையில் மிதித்து உடைத்து நான் மகிழட்டுமா?’

ஒருநாள் என்னிடம் ‘எனக்கு இன்னிக்கு பல் வைக்கப் போறாங்க’ என்று சந்தோஷப்பட்டான். பற்கள் வைக்கப்பட்ட நாட்களிலிருந்து என்னை எப்போதும் இழுத்துச் சென்று கண்ணாடி முன் நிறுத்தி தன்னைப் பார்த்துக் கொண்டான். நான் அதிர்ச்சியும் பதைபதைப்புமாக அவனில் என்னைத் தேடிக்கொண்டே இருந்தேன். ‘இது நானில்லை, இது நானில்லை. என்னைக் கண்ணாடியின் முன் இழுத்து வராதே’ என்று அவனிடம் கெஞ்சினேன். அவனுக்கு என் கெஞ்சல்கள் கேட்கவில்லை. விபத்தன்று உள்ளடங்கியவனாக எனக்கும் மட்டும் கேட்கும்படி பேசிக்கொண்டு இருந்தவன் இப்போது எல்லோருக்கும் கேட்கும்படி பேசத் தொடங்கினான்.

“ஆக்ஸிடெண்ட்டுக்கு அப்புறம் ஆளே மாறிட்டீங்க சார்”

“இப்படி விபத்து நடக்குறதும் நல்லதுதான் தம்பி. ஏதோ நல்லது நடக்கப் போகுதுன்னு அர்த்தம்”

“முன்னவிட இப்பதான் ஸ்மார்ட்டா இருக்கீங்க”

அவனது செய்கைகளுக்கான எதிர்வினைகளை மட்டுமே நான் பெற்றுக் கொண்டிருந்தேன். என் வீடு அவன் விரும்பியது போல மாறியிருந்தது.

“காஃபி கேட்டு எவ்வளவு நேரமாகுது. என்னடி பண்றீங்க அங்க” என்று அவன் பேசுவதை கேட்பதற்கு எனக்கு அச்சமாக இருந்தது. எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் வீட்டில் இப்போது பரிபூரண அமைதி நிலவுகிறது. இந்த அமைதிதான் தனக்குப் பிடித்திருப்பதாக அவன் என்னிடம் சொன்னான். ஆனால் அவனைக் கோபப்படுத்த பாப்பாவால் முடிந்தது. அவளால் அவனில் என்னை அடையாளம் காண முடியவில்லை. முற்றிலும் புதிய ஒருவருடன் பழகுவதே போலவே அவனை அவள் அணுகினாள் என்பது ஒரே நேரத்தில் எனக்கு ஆறுதலாகவும் வருத்தமாகவும் இருந்தது. பாப்பா அவனிடம் மெல்லிய விரோதம் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றிய போதெல்லாம் அவன் கோபம் கொண்டான்.

“ஏய் இவ ஏன் மூஞ்ச பாத்துட்டே உட்கார்ந்திருக்கா? அந்தாண்ட தூக்கிட்டுப் போடி. வயசு தான் ரெண்டு தாண்டிடிச்சுல்ல? இவள ஏதாவது கிண்டர் ஸ்கூல்ல போட்டா என்ன? எல்லா வேலையும் நான்தான் செய்யணுமா?”

என் செல்லத்தை என் வாய் அவள் இவள் என பேசிக் கொண்டிருப்பதை நம்ப முடியாதவனாக அமர்ந்திருந்தேன். என்ன நினைத்தாளோ பாப்பா என்னைப் பார்த்து அழத்தொடங்கினாள். எழுந்து சென்று அணைத்துக் கொள்ள எண்ணிய என்னை அதே இடத்தில் அமர வைத்து அவன் சிரித்தான். அவன் சிரிக்கச் சிரிக்க பாப்பா மேலும் மேலும் ஓங்கிக் குரலெடுத்து அழுதாள். மாலினி அவளை தூக்க வந்தபோது அவள் கையை உதறி வெறி பிடித்தது போல சத்தமாக அழுதாள். அவன் நிறைவு கொண்டான். அந்த நிறைவு என்னுள்ளும் பரவுவதை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் மாலினியின் மனதை ரொம்பவும் புண்படுத்திவிடும் நாட்களில் தாங்க முடியாமல் அழுது கொண்டு படுக்கையில் படுத்திருப்பாள். ஒருநாள் அவ்வழுகையுடன் திரும்பிப் படுத்திருந்த என் மீது கையைப்போட்டு “ஏம்மாமா இப்படி பண்ற” என்று அவன் உறங்கிக்கொண்டிருந்த போது கேட்டாள். நான் அவள் பக்கம் திரும்பிப் படுப்பதற்குள் எழுந்து கொண்டவன் “ச்சீ கைய எட்றீ” என்றான். மாலினி உடனே கையை எடுத்துக் கொண்டாள். அன்று முதல் மாலினியின் ஒவ்வொரு அசைவிலும் என்னைத் தொடக்கூடாது என்ற கவனம் கூடியிருந்தது.

3

அன்று சென்ற திருமணத்திலும் கடைசி வரிசைக்கு இழுத்துச் சென்று என்னை அமர வைத்துக் கொண்டேன். அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனபோது இப்படியொரு முடிவை எடுத்துக் கொண்டேன். யாரிடம் பேசத் தொடங்கினாலும் பேசுபவர் என்னை சற்று வித்தியாசமாக பார்ப்பதாகப்பட்டது. அதன்பிறகே என்னை அவர்கள் பார்க்கவேயில்லை, அவனைப் பார்த்தே பேசுகின்றனர் என்று புரிந்தது. நான் ஒவ்வொருவர் முன்பாக சென்று நிற்க நிற்க அவன்தான் பேசிக்கொண்டிருந்தான். ஆண்களைக் காணும்போது அவர்களது உயரம் வயது உடல்வலிமை என ஒவ்வொன்றாக அளவெடுக்கத் தொடங்கினான். நான் ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அவனைக் கண்ணாடியில் பார்க்கும்போது நாற்பது வயது என்றுகூட சொல்ல முடியாதெனத் தோன்றும். திறந்த உதடுகளும் விரிந்த கண்களுமாகவே அவன் எல்லோரிடமும் பேசினான். இயல்பாகவே அவனிடம் பிறர் பணிந்து பேசத் தொடங்கினர். அவன் மதிப்பு உயர்ந்தது. பெண்களைப் பார்க்கும் போது அவர்கள் உணரும்படி முலைகளை வெறிப்பான். அவர்கள் சங்கடப்படுகிறார்கள் என்ற உணர்வே அவனிடம் தோன்றாது. பெண்களின் உடைகளை விட்டு வெளித்தெரியும் ஒவ்வொரு உறுப்பையும் குறிப்பெடுத்துக் கொள்ளாத குறையாக கவனிப்பான். என்னிடம் வர்ணிப்பான்.

‘இவள் கிட்ட வரும்போதே கவிச்சி வாடை அடிக்கிறது. புணர்வில் கெட்டியாக இருப்பாள்.’

‘வயதேறியும் உடலை வழித்து எடுத்தாலும் ஒரு கைப்பிடி சதை கூட கிடைக்காதபடிக்கு இருக்கிறது பார் அவள் உடல். இவளைப் போன்றவர்களை படுக்கையில் ஒரு ஆணால் கையாளவே முடியாது. இந்தச் சிறுக்கிகளுக்கு வீரியம் அதிகம்’

‘உடலெடை குறையக் குறைய முலைகளின் எடை கூட வேண்டும். அப்படியொரு உடல் வாய்த்திருக்கிறது இவளுக்கு’

‘இவள் வெளிப்பார்வைக்கு சாதாரணமாகத்தானே தெரிகிறாள். கருப்பாக. சற்று பூசிய உடலுடன். ஆனால் அவளுக்கு உடல் பூசினாற்போல மட்டும் இல்லை. பெரிய முலைகளும் இருக்கின்றன. அவள் தொடைகள் வலுவானவை. இவளிடம் படுக்கையில் போராடாமல் களித்திருக்கலாம்’

‘இவள் கணவன் பாக்கியம் செய்தவன்’

அவனைக் கட்டுப்படுத்தாமல் விடுவது எனக்கு நல்லதாகப் படவில்லை. பிறரது முகம் பார்த்து பேசப்பேசவே அவன் தன்னம்பிக்கை பெருகுகிறது என்று கண்டுகொண்டேன். அவன் என் வழியாகவே பேசியாக வேண்டும் என்பது எனக்கு அவன் மீது மெல்லிய அதிகாரத்தைக் கொடுத்தது. யாரையும் பார்க்காமல் பேசாமல் இருக்க கூடுமானவரை முயன்றேன். அவன் பலமிழக்கத் தொடங்கினான். எங்கு சென்றாலும் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு தலையைக் குனிந்து கொள்வேன். ஆனால் அப்படி ரொம்ப நாட்களுக்கு குனிந்து அமர்ந்திருக்க அவன் அனுமதிக்கவில்லை. அவன் முன் அமர்ந்திருப்பவரின் முதுகினைப் பார்க்கத் தொடங்கினான்.

‘முகத்துக்கு முகம் பார்த்து மனிதர்கள் பேசிக்கொள்ளும் போதே அவர்களின் முதுகுகளும் பேசிக் கொள்கின்றன. உடல் வெளிப்பாடு மொத்தமும் முகத்தில் திரண்டிருப்பதாக நம்புகிறவன் முட்டாள். உடலில் முகத்தின் மீது மட்டுமே மூளைக்கு கட்டுப்பாடு உண்டு. முகத்தால் நீ காட்டும் உணர்ச்சிகள் உன்னிடம் காட்டப்படும் உணர்ச்சிகள் மீதெல்லாம் மூளையின் கட்டுப்பாடு உண்டு. மூளை கட்டுப்படுத்தும் முகத்தை மட்டுமே கவனித்துப் பழக நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். தூரமாய் நிற்கும் போது நிறைய அறிய முடியும். நிலையானவற்றையும் அறிய முடியும். நாம் தூரத்தில் விலகி இருப்பதுகூட நல்லதுதான். நான் இன்னுமதிமாக அறிந்து கொள்ளப்போகிறேன்’

முதுகுகளை நான் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினேன். முதலில் நான் புறக்கணிக்கப்பட்டு வெளியே நிறுத்தப்பட்டிருப்பதன் சாட்சி போல முதுகுகள் தெரிந்தன. பெண்களின் முதுகினைக் கண்டபோது என்னுள் ஆங்காரம் எல்லையற்றுப் பெருகியது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முதுகுடன் உரையாட நான் பழகிக்கொண்டேன். வெகு நேரமாக எப்பெண்ணின் முதுகில் கண்களை நிலைக்கவிட்டாலும் அவள் திரும்பிப் பார்த்தாள். ஆண்கள் ஏன் தங்கள் முதுகினை காண்பிப்பதில்லை என்று எனக்கு கோபம் வந்தது. நெருங்கிய நண்பர்களுக்குப் பரிசாக பெரும்பாலும் முதுகினை சற்று வெளிக்காண்பிக்கும்படியான டி-ஷர்ட்டுகளைக் கொடுத்தேன். அதை அணியச் சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்தினேன். ஆனால் ஆண்கள் முதுகினை காண்பிப்பதில் ஆர்வமற்றவர்களாகவே இருந்தனர்.

சேலையணிந்த பெண் முதுகுகளே எனக்கு அதிகமாக பார்க்கக் கிடைத்தன. அவை என்னுடன் பேசவும் தொடங்கிவிட்டன. மென்மையான பொன்மயிர் பரவிய முதுகுகள் என்னை ஈர்க்கவில்லை. பொன்னிறமான வழுவழுப்பான முதுகுகள் அழகாக இருந்தாலும் அவற்றில் தென்பட்ட புள்ளிகளால் அவற்றை ரசிக்க முடியவில்லை. எருமைத்தோல் போன்ற கறுத்த முதுகுகளே எல்லாவற்றிலும் அழகாக இருந்தன. ஆண் கடித்த தடங்களும் அடிபட்டத் தழும்புகளும் டாட்டூக்களும் பச்சை குத்தல்களும் முதுகில் தென்பட்டாலும் கூட கருநீர்த்துளி போல தெளிக்கப்பட்டிருந்த மச்சங்களே அழகினை அதிகம் காட்டின. முதுகினை வைத்தே ஒரு பெண்ணின் முக அமைப்பு எப்படியிருக்கும் என ஊகித்துக் கொள்ளத் தொடங்கினேன். சட்டை அணிந்திருந்தாலும் ஆண்களுக்கும் இந்த கண்காணிப்பை விரிவுபடுத்தினேன். நிமிர்ந்து நடப்பவர்களின் முதுகு தளர்ந்திருந்தது. கூன் விழுந்தவர்களின் முதுகுகள் உயர்ந்திருந்தன. சினிமா கொட்டகையின் பின்பக்கம் அமர்ந்திருப்பவனைப் போல என் அன்றாடம் நகர்வதாக அவன் சொன்னபோது நான் திடுக்கிட்டேன்.

நள்ளிரவில் பெண்கள் பின்பக்கமாக சரிந்து என் மீது விழுவது போல கனவுகள் கண்டேன். முதுகுகளை எண்ணி சுயமைதுனம் செய்வது போல நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். அக்கனவில் மாலினி வந்து என்னைப் பார்த்துவிட்டு அருவருப்புடன் எனக்கு முதுகு காட்டியபடி திரும்பி அமர்ந்திருந்தாள். அவள் முதுகை கவனிக்கக்கூடாது என்று எண்ணமிட்டேன். எண்ணம் கொண்ட உடனேயே மாலினியின் முதுகினைப் பார்த்தேன். தொய்ந்து தளர்ந்திருந்தது. முதுகுக்கு இருபுறமும் எலும்புகள் முட்டித் துருத்தித் தெரிந்தன. அவளது ஆரோக்கியமான உடலை நினைத்துப் பார்த்தேன். அவள் இப்படி தளர்ந்து சுருங்கி அமர்ந்திருப்பது எனக்கு நிறைவினைக் கொடுத்தது. பின்னர் அவளது அந்த தளர்ந்த உடல் என்னைக் கிளர்த்தியது. அவளை நோக்கி எழுந்து செல்ல நினைத்தேன். ஆனால் அவன் என்னை எழவிடவில்லை. இக்கனவு முடிந்ததும் மாலினியிடம் சென்றுவிட வேண்டும், அவள் காலில் விழுந்து அழ வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றியது. நிகழ்ந்து கொண்டிருப்பவை கனவு என்று நான் உணரத் தொடங்கியதும் அவன் நடுக்கம் கொள்வது எனக்குத் தெரிந்தது.

“இது எதுவும் உண்மையில்லை” என்று சத்தமாகவே சொன்னேன். மாலினி திரும்பி அமர்ந்தபடியே ஓங்கிக் குரலெடுத்து அழத்தொடங்கினாள். அவள் அழுகை சத்தம் கேட்டதும் பாப்பா “அம்மா அம்மா” என்று கதவைத் தட்டினாள். மாலினி மேலும் உரக்க அழுதபடி லாஃப்டில் இருந்த நைலான் கயிறொன்றை எடுத்து சீலிங்கில் மாட்ட முனைந்தாள்.

‘உன்னுடன் இத்தனை நாள் இருந்துவிட்டேன். உன் மனைவியின் மீது நீ வைத்திருந்த அன்பு எனக்கு இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது’ என்று சொன்னவனின் தொண்டை அடைத்தது.

‘நான் உங்களைவிட்டுச் சென்றுவிடுகிறேன். ஆனால் என்னால் உன் மனைவியை நேசிக்க முடியவில்லை’ என்று சொன்னவன் அழத் தொடங்கினான். மாலினி கட்டிலில் இருந்த மெத்தையை விலக்கிப் போடுவதையும் உயரமான ஸ்டூல் போட்டு நைலான் கயிற்றை சீலிங்கில் மாட்டுவதையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் திறந்த வாயுடன் அரை நிர்வாணமாக கழிவறையில் அசையாமல் அமர்ந்திருந்தேன்.

‘எனக்காக ஒரேயொரு உதவியைச் செய்’ என்று அழுது அரற்றும் குரலில் கேட்டான்.

“செய்கிறேன்”

‘நீ நம்புவது போலவே இது உன் கனவு. நான் நிஜத்தில் வெறுக்கும் உன் மனைவியை இக்கனவிலாவது எனக்காக சாக விடு. நாங்கள் இருவரும் அவள் இறப்பினூடாக மட்டுமே மீள முடியும்’

பாப்பா கதைவை ஓங்கி ஓங்கித் தட்டினாள். “அம்மா அம்மா” எனத் தெளிவாக அலறுமளவு அவள் குரலில் தெளிவு கூடியிருந்தது. அவள் அலற அலற மாலினி நெஞ்சு நடுங்கி கை தளர்ந்தாள். பின்னர் உறுதி கொண்டவளாய் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தூக்கிட முயன்றாள். மூடியிருந்த அந்த தேக்குக் கதவின் மேல் பாப்பா எதையெதையோ கொண்டுவந்து எறிந்து கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் இப்போது இணைந்து கொண்டு கதவைத் தட்டுவது எனக்குக் கேட்டது.

அவன் மாலினியைக் கூப்பிட்டான். அவள் திரும்பினாள்.  பற்கள் தெரியும்படி சிரித்தான். மாலினியின் முகம் வெறுப்பில் கோணியது. கழிவறைக் கதவை சாத்திவிட்டு, கதவைத் திறக்க மாலினி சென்றாள். கனவு முடியாமல் நீண்டு கொண்டே இருந்தது. முடியாத இக்கனவில் இப்போது சில சுவர்களும் சில கம்பிகளும் மட்டுமே இருக்கின்றன. கூடவே அவனும்.