தபசி கவிதைகள்

by தபசி
0 comment

மறக்கமுடியாத கவிதை
இவ்வாறெல்லாம் நினைந்தொழுக
ஆசிர்வதிக்கப்படுவாயாக
உன்மத்த காமப் பார்வையினால்
ஊடுருவிப் பார்க்கப்படுவதாக
வெறிகொண்டதோர் தழுவலில்
உதடு கவ்வி முத்தமிடப்படுவதாக
மார்த்திறந்தவுடன் முலைகளில்
பற்தடயம் பதிக்கப்படுவதாக
அந்தரங்க உறுப்பின் தகிப்பு
அடக்கியாளப்படுவதாக
இன்னும் உன் காமுறு எண்ணமனைத்தும்
நிறைவேற்றப்படுவதாகவும்
இதைவிட முக்கியம்
இனி நாம் சந்திக்கும் நேரங்களில்லெல்லாம்
கிறக்கமான உன் மனதில்
தப்பாமல் வரப்போகும்
மறக்கமுடியா இந்தக் கவிதையின்
நாயகனாக நானே இருப்பதாகவும்.

மரணம்
அலுப்பாக இருக்கிறது.
ஒரு நாளுக்காக
இன்னும் எத்தனை நாள்தான் காத்திருப்பது?

மதிப்பீடு
நண்பர் கொடுத்துவிட்டுப் போன
புத்தகங்கள் இன்னும் மேசை மீது
விற்கச் சொல்லித் தந்தவை
அட்டையில். அச்சில் எத்தனை சிரத்தை.
‘முடிந்தால் தெரிந்தவர்க்கும் கொடுங்கள்
பத்தாயிரம் ஆயிற்று
சொந்தப் பணம்தான்’
கவிதை ஆர்வம் பலபேரை
கடனாளியாக்கியுள்ளதை அறிவேன்.
என்னால் முடியாது.
சப்தம் போட்டுப் பேசத் தெரியாதவனுக்கு
இந்த சங்கதியெல்லாம் ஒத்து வராது
திருப்பிக் கொடுத்து விடுவதென்பது
தற்கொலைக்குச் சமானம்
நண்பரும் கேட்க மாட்டார்
நினைத்துக் கொள்வார் எப்போதாவது
என்னிடம் கொடுத்த புத்தகங்களின் மதிப்பு
எவ்வளவு இருக்குமென்று.

சரண்
மீண்டுமொரு முறை
சொற்களிடம் போய்
மாட்டிக் கொள்கிறேன்
சொற்களுக்குத் தெரியும்
எப்படி என்னைச் சிறைப்பிடிப்பதென
முதலில் அவை கண்ணடிக்கின்றன
முந்தானையைச் சரி செய்கின்றன
நானோ ஒரு விடலைப் பையன்
அதி விரைவாக என் நிலையை இழப்பவன்
பிறகொரு நாள்
ஒரு விற்பனைப் பிரதிநிதியாய்
வீட்டிற்குள் நுழைகின்றன சொற்கள்.
எனக்கு எந்தப் பொருளும் தேவையில்லை
இருப்பினும்
அதன் பேச்சில் மயங்கி
தேவையற்ற ஒரு பொருளை
வாங்கித் தொலைக்கிறேன்.
சாமியாராக வருகின்றன சொற்கள்.
ஒரு சமயம் ஆட்டோக்காரனாகவும்
பிறிதொரு நேரம்
அரசியல்வாதியாகவும் வருகின்றன அவை.
ஒரு குழந்தையாக வருகின்றன சொற்கள்.
தன்னைத் தூக்கிக் கொஞ்சும்படி
கெஞ்சுகின்றன என்னிடத்தில் அவை.
எந்தவிதக் கேள்வியுமின்றி எந்தவித எதிர்ப்புமின்றி
சரணடைகிறேன் சொற்களிடம்.

குழந்தைகள்
குழந்தைகளின்
ராஜ்ய மண்டபத்தில்
சேவகர்கள் யாருமில்லை
எல்லோருமே
ராஜாக்கள் தாம்
எல்லோருமே
ராணிகள் தாம்.

சுயம் சார் கவிதைகள்
நேற்று என்
தந்தை நட்ட செடிக்கு
இன்று
நான் நீர் ஊற்றுகிறேன்
நாளை
என் மகன் அதில்
பழம் பறிப்பதில்
எனக்கு ஆட்சேபணையில்லை
அதற்கும் முன்
ஒரு செடியை அவன் நட வேண்டும்
என எதிர்பார்க்கிறேன்.

சமச்சீர்
நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது
அதுவல்ல
பள்ளி முடிந்து
நமக்காகக் காத்திருக்கும் குழந்தைகளை
வீட்டுக்கு அழைத்து வருவதல்ல
வீட்டுக்குத் தேவையான
அரிசி பருப்பு வாங்கி வருவதல்ல
தொலைபேசி மின்கட்டணம் செலுத்துவதல்ல
குளியலறை குழாயைச் சரி செய்வதல்ல
பூட்ஸுக்குப் பாலீஷ் போடுவதல்ல
ஒரு வெறிநாயைப் போல
மனைவியின் வெற்றுடலில்
விளையாடுவதல்ல
சோரம் போன மனைவியரை
தூக்கில் போடுவதல்ல
குளிப்பதல்ல
பல் விளக்குவதல்ல
கவர்ச்சி நடிகையின்
கனத்த மார்புகளை
விமர்சிப்பதல்ல
அத்தனை குளறுபடிக்கும்
காரணமான
அரசியல்வாதியைப் பார்த்து
காறித் துப்புவதல்ல
உலகே மாயம் என்று சொல்லி
குடித்து விட்டு
தெருவில் விழுந்து கிடைப்பதல்ல
எதுவுமல்ல
ஒருமுறை
ஆழமாக மூச்சை உள்ளிழுத்து
நிதானமாக வெளியிடுவது மட்டும்தான்.