The White Ribbon: திரைக்கதை (பகுதி 8) – மைக்கேல் ஹனகே

1 comment
  1. முதல் பகுதி
  2. இரண்டாம் பகுதி
  3. மூன்றாம் பகுதி
  4. நான்காம் பகுதி
  5. ஐந்தாம் பகுதி
  6. ஆறாம் பகுதி
  7. ஏழாம் பகுதி

71. வெளியே / பகல்: பண்ணை வீடு.

பண்ணை வீட்டிலிருந்து மிதிவண்டியைத் தள்ளியபடி பள்ளியாசிரியர் வெளியே வருகிறார். ஒரு குற்றேவல்காரியிடம் அவர் விடைபெற்றதும் அவள் வாயிற்கதவை மூடுகிறாள். அவர் செல்லச் செல்லச் சச்சரவு ஒன்றைப் பார்க்க நேரிடுகிறது. மேற்பார்வையாளர் செவிலியை வெளியே தள்ளி அவள் மீது வசைமாரி பொழிகிறார்.

கதைசொல்லி

வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் நான் என் வருங்கால மனைவியைச் சென்று பார்க்கும் பொருட்டு ஒரு நெடிய பயணத்துக்காக மிதிவண்டியை வாங்குவதற்குப் பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தேன். நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்ததால் வெகு காலையிலேயே சென்று பள்ளிக்குச் செல்லும் முன்பே அதை வாங்கினேன். அப்போது ஒரு விசித்திரமான சம்பவத்தைக் காண நேர்ந்தது.

மேற்பார்வையாளர்

முழுப் பைத்தியக்காரத்தனம். வேண்டுமென்றால் இங்கிருந்து போய்த் தொலை. உன் காதைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும். மற்றவர்கள் மீது அவதூறு பேசி பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறாயே! இப்போது இதுதான் மிகவும் அவசியம் பார்! வெளியே போ. ஒருபோதும் திரும்பி வராதே. நம்ப முடியாத அளவுக்கு நீ வெறிபிடித்தவள்.

செவிலி

(அதே சமயம்)

நான் சீமானைச் சந்திப்பேன். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். உங்களால் என் வாயை அடைக்க முடியாது. நீங்கள் உங்களை யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? பார்ப்போம். காவலர்களிடம் நான் அறிக்கை அளிப்பதை நீங்கள் தடுத்ததை அவரிடம் சொல்லத்தான் போகிறேன்.

(கடும் சினத்துடன் தன் கதவை இழுத்து மூடுகிறார் மேற்பார்வையாளர். முதலில் செவிலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இறுதியாக அவள் கதவிடமிருந்து அகன்று களத்தைக் குறுக்கே கடந்து நடக்கிறாள். அங்கு அவள் பள்ளியாசிரியரைப் பார்க்கிறாள். அவரருகே வருகிறாள்.)

பள்ளியாசிரியர்

திருமதி வேக்னருக்கு நல் மதியம் உண்டாகுக. என்ன நடக்கிறது?

செவிலி

(கிளர்ச்சி மேலிட)

நல் மதியம். எனக்கு உங்கள் மிதிவண்டி வேண்டும் கிடைக்குமா?

பள்ளியாசிரியர்

இது என்னுடையதல்ல.

செவிலி

இருந்தாலும் பரவாயில்லை. எனக்குக் கிடைக்குமா?

பள்ளியாசிரியர்

நானே இதை எனக்காக இப்போதுதான் கடனாக வாங்கினேன். நகரத்துக்குப் போய் என் வருங்கால மனைவியைச் சென்று சந்திக்க இது தேவைப்படுகிறது.

செவிலி

தயவுசெய்து எனக்குத் தாருங்கள்!

பள்ளியாசிரியர்

உங்களுக்கு அப்படியென்ன அவசரத் தேவை? நீங்கள் எங்கே போக வேண்டும்?

செவிலி

நான் நகரத்துக்குப் போக வேண்டும்.

பள்ளியாசிரியர்

எதற்காக?

செவிலி

நான் மேற்பார்வையாளரிடம் வண்டியைக் கேட்டேன். ஆனால் அந்தப் பிடிவாதம் பிடிக்கும் மடையன் எதற்குமே ஒப்பவில்லை.

(சிறு மெளனம்.)

செவிலி

தயவுசெய்து எனக்கு மிதிவண்டியைத் தாருங்கள்.

பள்ளியாசிரியர்

ஏன்? என்னதான் நடக்கிறது?

செவிலி

(சற்று தயங்கிய பிறகு)

நான் நகரத்துக் காவலர்களைச் சென்று சந்திக்க வேண்டும். இந்தக் குற்றங்களை எல்லாம் செய்த குற்றவாளி யாரென்று எனக்குத் தெரியும், அதனால்தான்.

பள்ளியாசிரியர்

(பெரு வியப்புடன்)

யார்?

செவிலி

எனக்கு மிதிவண்டியைத் தருவீர்களா?

பள்ளியாசிரியர்

ஏன், என்னிடம் சொல்லுங்களேன்.

செவிலி

இப்போதிலிருந்து நான் காவலரிடம் மட்டுமே சொல்ல வேண்டும். (மேற்பார்வையாளர் இல்லத்தை நோக்கித் திரும்பி) இதோ இவர்களைப் போல யாரும் இனி என்னை அவமதிப்பதை நான் விரும்பவில்லை. நீங்களே பார்த்தீர்கள் இல்லையா?

பள்ளியாசிரியர்

மருத்துவர் தன் குதிரையை உங்களுக்கு இரவல் தர மாட்டாரா என்ன?

செவிலி

எனக்குக் குதிரையேறத் தெரியாதே.

(அவளை வினாக்கள் நிரம்பிய விழிகளால் ஊடுருவிப் பார்த்தார் பள்ளியாசிரியர்.  ஏனென்றால் இதுவரை அவள் சொல்வது தெளிவாகப் புரியவில்லை. அவள் அதற்கு மறுவினையும் ஆற்றவில்லை.)

செவிலி

தயவுசெய்து என்னை நம்புங்கள். (அவள் தயக்கத்துடன் மென் ஒலியில் சொன்னாள்.) என் மகன் தன்னைக் காயப்படுத்தியது யாரென்று என்னிடம் சொல்லிவிட்டான். அவனுக்குப் பார்வை பறிபோகும் நிலை இருக்கிறது. தயவுசெய்து எனக்கு மிதிவண்டியைத் தாருங்கள். 

(பள்ளியாசிரியர் அவளைப் பார்க்கிறார். பரிதாபமாகத் தோற்றமளிக்கும் அவள் கோரிக்கை விடுபவளைப் போல அவனை நோக்கிப் புன்னகைக்கிறாள். அவள் விழிநீர் கன்னத்தில் வழிகிறது. இறுதியாக மிதிவண்டியைத் தருகிறார். அவள் அதை வாங்கிக்கொண்டு விரைவாகச் சொல்கிறாள்.)

நன்றி!

(விரைவாக அழுத்தித் தன் பாதையில் செல்கிறாள். பள்ளியாசிரியர் தனியாக நிற்கிறார். அவர் வருத்தத்தோடு கிராமத்துக்குத் திரும்புகிறார்.)

கதைசொல்லி

அமைதியாகவே இதுவரை நான் பார்த்துவந்த பெண்மனியின் அன்றைய கையறு நிலை என்னை ஆழமாகப் பாதித்தது. அவள் மகன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்? அவள் ஏன் யாரிடமும் அதைச் சொல்ல அஞ்சினாள்?

72. வெளியே / அந்திமாலை: கிராமத் தெரு.

பள்ளியாசிரியர் வீட்டிற்குச் செல்கிறார்.

(நகர்வு சுடுப்பு.)

கதைசொல்லி

பண்ணை வீட்டிலிருந்து பள்ளியை நோக்கி நான் வைக்கும் அடிதோறும் எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறேன் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ஏன் மிதிவண்டியைத் தந்தோம் என்று சிந்தித்தேன்? (செவிலியின் இல்லத்தைக் கடந்து செல்லும்போது அவர் தோட்டத்தில் இருந்த கம்பி வேலியைப் பார்க்கிறார் பள்ளியாசிரியர். பாதி, புதரில் மறைந்திருக்கிறது. அங்கே மேரியும் சில குழந்தைகளும் இருக்கின்றனர். வீட்டுச் சாளரக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன.) நான் செவிலியின் வீட்டைக் கடந்தபோது மேரி, மார்டினுடன் சில குழந்தைகள் தோட்டத்தில் இருந்ததைப் பார்த்தேன்.

(பள்ளியாசிரியர் நின்று குழந்தைகளைப் பார்க்கிறார்.  சில நொடிகளில் யாரோ தம்மை உற்று நோக்குவது அவர்களுக்கும் தெரிகிறது.)

மேரி

நல் மாலை ஐயா.

பள்ளியாசிரியர்

நல் மாலை மேரி.

குழந்தைகள்

நல் மாலை ஐயா.

பள்ளியாசிரியர்

எல்லோரும் இங்கே என்ன செய்கிறீர்கள்?

மேரி

ஹன்சி எப்படி இருக்கிறான் என்று பார்த்துச் செல்ல வந்தோம்.

பள்ளியாசிரியர்

வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா என்ன?

(சிறு மெளனம்.)

மேரி

ஆம். எங்களுக்குக் கவலையாக இருந்தது. திருமதி வேக்னர் மிதிவண்டியில் செல்வதைப் பார்த்தோம். ஹன்சிக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற கவலை எங்களுக்கு வந்தது.

(சிறு நிறுத்தம்.)

பள்ளியாசிரியர்

எல்லோரும் இப்போதே வீட்டுக்குச் செல்லுங்கள். உங்களை இங்கே வரச்சொல்லி யாருமே இசைவளிக்கவில்லை.

(பிள்ளைகள் அனைவரும் மெல்ல நகர்கின்றனர். மரவாயிற்கதவைத் திறந்து வேலியைத் தாண்டி தெருவுக்கு வருகின்றனர். ஏதோ தவறு செய்ய வந்து கையும் களவுமாகப் பள்ளியாசிரியரிடம் சிக்கியதால் அவர்கள் தயங்குவது தெரிகிறது. சிலர் அவருடைய விழிகளைத் தவிர்க்க, சிலரோ நகர்ந்தபடியே வணக்கம் தெரிவிப்பதுபோல் முணுமுணுக்கின்றனர். பள்ளியாசிரியர் இதனால் எரிச்சலுறுகிறார். மேரி வெளியே கால் வைத்ததும் அவர் சொல்கிறார்.)

பள்ளியாசிரியர்

நீ இப்போதே விரைந்து வீட்டிற்குச் செல்வதே உனக்கு நல்லது.

(மேரியிடம் குற்ற உணர்வின் சுவடே தெரியவில்லை. அவருக்கு அவள் மீண்டும் மரியாதையாக வணக்கம் தெரிவிக்கிறாள்.)

மேரி

நல் மாலை ஆசிரியரே.

பள்ளியாசிரியர்

(விருப்பமின்றி)

நல் மாலை.

(குழந்தைகள் அங்கிருந்து நீங்குகின்றனர். பள்ளியாசிரியரும் தன் வழியில் போகிறார். சில அடிகள் எடுத்து வைத்தபின் திரும்பிப் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் நடக்கிறார்.)

கதைசொல்லி

எனக்கு லீசலின் கனவு மீண்டும் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அவள் கனவேதும் காணாமல் நிஜமாகவே ஹன்சியை யாரோ துன்புறுத்தப் போவதை அறிந்திருந்தாளா? யாருடைய குற்றத்தை யாருடைய பெயரை அவள் பாதுகாக்கிறாள்? ஹன்சியின் மீது இந்தப் பிள்ளைகள் காட்டும் தீவிர ஆர்வம் எனக்கு விகாரமாகத் தோன்றியது. ஏனெனில் இதுவரை அவர்கள் அவனது ஊனத்துக்காக அவனை விலக்கி வைத்தும் பரிகாசம் செய்துமே வந்திருக்கிறார்கள்.

(பள்ளியாசிரியர் நின்று இதைத் தீவிரமாக மனதில் அசைபோடுகிறார். மீண்டும் அவர் செவிலியின் வீட்டுக்குச் செல்கிறார்.)

யாருக்கும் சொல்லாமல் சடுதியில் ஏன் செவிலி தன் வீட்டின் எல்லா அடைப்புகளையும் மூடி பூட்ட வேண்டுமென்ற கேள்வி எனக்குத் தோன்றியது. கிராமத்தில் யாருமே தம் வீட்டை முற்றாக அடைப்பதில்லையே. அவள் ஏன் தன் மகனை விட்டுச்செல்ல வேண்டும்?

(பள்ளியாசிரியர் செவிலியின் இல்லத்தின் வாயிற்பகுதியை மீண்டும் அடைந்தார். மூடியிருந்த நிலையில் யாரும் உள்ளே இல்லை என்று சொல்லத்தக்க கைவிடப்பட்ட இல்லமாகவே தோன்றியது. சுத்தமான தோட்டத்தை வைத்து வேண்டுமானால் சில நாட்கள் முன்புவரை இங்கு யாரோ வசித்திருந்தனர் என்று எவரும் ஊகம் செய்யக்கூடும். வாயிற்கதவைத் திறந்த பள்ளியாசிரியர் வீட்டை நோக்கிச் செல்கிறார். கதவையும் இழுப்பான்களையும் திறக்க முயல்கிறார். எல்லாமே கச்சிதமாக அடைக்கப்பட்டிருக்கின்றன. விரிசல் வழியாக உள்ளே எட்டிப் பார்க்கிறார்.)

பள்ளியாசிரியர்

ஹன்சி? என் குரல் கேட்கிறதா? ஹன்சி!

(யாருமே பதிலளிக்கவில்லை. சற்று நேரம் வீட்டின் கொல்லைப்புறத்திற்குச் சென்றவர் உள்ளே நுழைய வேறு வழி கிடைக்குமா என்று தேடுகிறார். ஆனால் வழியேதும் கிடைக்காமல் விரைவில் திரும்பி வருகிறார்.)

கதைசொல்லி

ஒருவேளை அவனைப் பராமரிக்க முடியாது என்று அவள் முடிவெடுத்திருந்தால் என்னிடமோ மருத்துவரிடமோ நம்பி விட்டுச்சென்றிருப்பாள். ஆனால் நேற்றிரவிலிருந்து துன்புறுத்தப்பட்ட செய்தி அறிந்த பின் அவனை நான் காணவே இல்லை.

(செவிலியின் வீட்டை விடுத்து அண்டை வீடான மருத்துவரின் வீட்டுக்குப் பள்ளியாசிரியர் விரைகிறார்.)

நான் நேரடியாகவே மருத்துவரிடம் கேட்டுவிட முடிவுசெய்தேன். மருத்துவரின் இடத்திற்குள் நுழைந்து, வாசல் வரை சென்று மணியடித்தேன். யாரும் பதிலளிக்கவில்லை. மீண்டும் மணியடித்தபோது அங்கிருந்த ஒரு குறிப்பு கண்ணில்பட்டது.

’கால வரையறையின்றி மருத்துவரது சேவை நிறுத்தப்பட்டுள்ளது.’

73. உள்ளே / இரவு: போதக அறை.

முன் வாயில் மூடியிருக்க அதன் முன் போதகரின் மனைவியும் பள்ளியாசிரியரும் நிற்கின்றனர்.

போதகரின் மனைவி

அவருடைய மகளா? அவள் உங்களோடு பள்ளியில்தானே இருந்திருப்பாள்?

பள்ளியாசிரியர்

ஆம். வகுப்பில் என்னுடன்தான் இருந்தாள்.

போதகரின் மனைவி

அவள் எதுவுமே சொல்லவில்லையா?

(பள்ளியாசிரியர் தலையை இடவலமாக அசைக்கிறார். இருவரும் வருத்தத்துடன் அமைதியாக நிற்கின்றனர்.)

பள்ளியாசிரியர்

எனக்கொரு வேண்டுகோள் இருக்கிறது.

போதகரின் மனைவி

சொல்லுங்கள். என்ன?

பள்ளியாசிரியர்

மேரியையும் மார்டினையும் விசாரிக்கலாமா?

போதகரின் மனைவி

என் கணவர் வரும்வரை காத்திருக்க முடியாதா? அவர் தேவாலயத்தில் இருக்கிறார். இன்னும் கால் மணி நேரத்தில் சேவைக்கூட்டம் முடிந்துவிடும். நீங்கள் வற்புறுத்தினால் சரி. உள்ளே வருக.

(கதவைத் திறந்துவிடுகிறாள். கூடம். ஒரு இருக்கையைச் சுட்டுகிறாள்.)

தயவுசெய்து இங்கே அமருங்கள். குழந்தைகளை அழைத்து வருகிறேன்.

மேரியும் மார்டினும்

நல் மாலை ஐயா!

பள்ளியாசிரியர்

நல் மாலை!

(சிறு அமைதி.)

போதகரின் மனைவி

நீங்கள் அமரவில்லையா?

பள்ளியாசிரியர்

(அந்தச் சிந்தனையே எழாதவராய்)

ஆம். அமர்கிறேன். மகிழ்ச்சியோடு.

(அனைவரும் அமர்கின்றனர். குழந்தைகள் பள்ளியாசிரியருக்கு எதிரே அமர்கின்றனர்.)

போதகரின் மனைவி

நீங்கள் அருந்த ஏதேனும் தரட்டுமா? (மெலிதாகப் புன்னகைத்து) பியானோ வகுப்புகளின் போது தருவதைப் போல ஒரு கோப்பை காஃபி?

(முதலில் வேண்டாமென்று மறுக்க நினைத்த பள்ளியாசிரியர், குழந்தைகளுடன் தனியாக இருக்கும் பொருட்டு அதை ஏற்றுக்கொள்கிறார்.)

பள்ளியாசிரியர்

நன்று. நிச்சயமாக அருந்துகிறேன். மிக்க நன்றி.

போதகரின் மனைவி

ஒரு நிமிடத்தில் வருகிறேன். 

(பள்ளியாசிரியர் குழந்தைகளை நோக்கித் திரும்புகிறார்.)

பள்ளியாசிரியர்

மருத்துவர் ஈச்வால்டை விட்டு வெளியேறுவது உங்களுக்கு முன்பே தெரியுமா?

(சிறு இடைவெளி.)

மேரி

தெரியாது.

பள்ளியாசிரியர்

ஆனால் என் கேள்வியால் நீ எந்த வியப்பும் அடையவில்லையே!

மேரி

எங்களை அழைக்க வந்தபோது எங்கள் அம்மா சொன்னார்கள்.

பள்ளியாசிரியர்

இது பற்றி செனியா உங்களிடம் எதுவுமே சொல்லவில்லையா?

(அவர் மார்ட்டினைப் பார்க்கிறார்.)

மார்டின்

இல்லை.

பள்ளியாசிரியர்

(சிறு எரிச்சலுடன்) ஒன்றுமே சொல்லவில்லையா? வெளியூருக்குச் செல்வதைப் பற்றி நண்பர்களிடம் சொல்லாமல் கிளம்புவது விகாரமாக இருக்கிறது.

மேரி

(சலனமற்று) செனியா எப்போதுமே தன் விட்டைப் பற்றிப் பேசுபவளில்லை.

பள்ளியாசிரியர்

என்னவொரு விசித்திரமான குணம்?

(மேரி அதை இன்னொரு கேள்வியாகக் கருதாமல் அமைதி காக்கிறாள்.)

பள்ளியாசிரியர்

நீங்கள் என்னிடமிருந்து எதையோ மறைக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

மேரி

என்ன?

பள்ளியாசிரியர்

என்னவென்றுதான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

(அமைதி. அடுத்து மார்டினை நோக்கித் திரும்புகிறார்.)

பள்ளியாசிரியர்

சற்று நேரத்துக்கு முன்பு ஹன்சியைத் தேடியபோது உனக்கு மனதில் என்ன இருந்தது? அவனிடம் உங்களுக்கு என்ன தேவைப்பட்டது?

(சிறு அமைதி.)

மேரி

அவனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் நாங்கள் கவலையாக இருந்தோம்.

பள்ளியாசிரியர்

நான் மார்டினைக் கேட்டேன்.

(மெளனம்.)

மார்டின்

ஆமாம். அவனுக்கு உடல்நிலை சரியில்லை. அவன் அம்மா சென்றுவிட்டதால்.. அவனைச் சென்று பார்த்து வர நினைத்தோம்.

(இந்த விதத்தில் கேட்டால் இவன் இதற்கு மேல் சொல்ல மாட்டான் என்பதைப் பள்ளியாசிரியர் உணர்கிறார்.)

பள்ளியாசிரியர்

ஹன்சியை இந்த நிலைக்கு ஆளாக்கியது யாராக இருக்கும் என்று யோசித்திருக்கிறாயா?

(சிறு மெளனம். அதன் பிறகு பள்ளியாசிரியர் சேர்த்துக்கொண்டார்.)

சிஜிக்கும்தான். 

(மெளனம்.)

மருத்துவரின் தோட்டத்தில் கம்பியைக் கட்டியது யார்? வைக்கோல் போருக்குத் தீ வைத்தவர் யார்? இது எல்லாம்!?

(மெளனம்.)

மேரி

ஆம். நிச்சயம் நாங்கள் அது பற்றி வியந்து யோசித்தோம். 

பள்ளியாசிரியர்

அப்படியா?

மேரி

நாங்கள் அப்பாவோடு இதுபற்றி விசாரித்தோம். ஏதோ மனநோயாளிதான் இதற்குக் காரணமாக இருப்பான் என்று அவர் சொன்னார்.

(மெளனம். பள்ளியாசிரியருக்கு இதற்கு மேல் எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை.)

பள்ளியாசிரியர்

நன்றி நவில்தல் பண்டிகையில் சிஜி உங்களோடுதான் இருந்தான். ஹன்சியும்தான்.

(மெளனம்.)

மேரி

எனக்குப் புரியவில்லை.

(கையறு நிலையை வெளிக்காட்டுபவளாய் அவள் பள்ளியாசிரியரைப் பார்த்துவிட்டு தன் தம்பியைப் பார்க்கிறாள். மீண்டும் பள்ளியாசிரியரைப் பார்த்துவிட்டுத் தலையை அசைத்து தோள்களை ஏற்றி இறக்குகிறாள்.)

பள்ளியாசிரியர்

அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?

மேரி

(புரியாதவளாய்)

யார்?

பள்ளியாசிரியர்

சிஜியும் ஹன்சியும்?

மேரி

(தொடந்து குழப்பத்துடன்)

ஏன்?

பள்ளியாசிரியர்

அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். எதற்காக?

மேரி

எனக்குத் தெரியவில்லை.

பள்ளியாசிரியர்

ஹன்சிக்குத் தண்டனை கிடைக்கும் என்பதை லீசல் முன்னறிந்திருக்கிறாள். எதற்காக?

மேரி

எனக்குத் தெரியாது.

(மெளனம்.)

எங்களை ஏன் கேட்கிறீர்கள்?

பள்ளியாசிரியர்

நீ மதிக்கூர்மை மிக்கவள் மேரி. ஒன்றுமே தெரியாதவளைப் போல நடிக்காதே.

(சிறு மெளனம்.)

மேரி

ஐயா, நீங்கள் சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபற்றி தந்தையிடமோ அம்மாவிடமோ பேச வேண்டும். நான் சென்று அவர்களை அழைத்து வரட்டுமா?

(பள்ளியாசிரியர் அவளைப் பார்க்கிறார்.)

மேரி

மார்டின் நீ சென்று அவர்களை அழைத்து வருகிறாயா?

(மார்டின் எழுந்து கதவருகே செல்ல எழுகிறான்.)

பள்ளியாசிரியர்

இங்கேயே இரு மார்டின். நான் சரியான நேரம் வந்ததும் உங்கள் பெற்றோரிடம் நிச்சயம் பேசுவேன். இப்போது உங்களிடம் பேச வேண்டிய நேரம். நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

(ஒரு கணம் மேரியைப் பார்த்துவிட்டு அமர்கிறான் மார்டின்.)

ஹன்சி கண்டுபிடிக்கப்பட்ட போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?

மேரி

(புரியாதவளாய்)

வீட்டில். 

பள்ளியாசிரியர்

அதாவது அவனுக்குக் காயம்பட்டது உறுதிசெய்யப்பட்ட பின்பு?

(அத்தருணத்தில் போதகரின் மனைவி தாம்பாளத்தில் காஃபியுடன் அறைக்குள் நுழைகிறாள்.)

போதகரின் மனைவி

இதோ வந்துவிட்டேன். ஒரு நிமிடத்தில் காஃபி கிடைக்கும்.

(மேசையில் தாம்பாளத்தை வைக்கிறாள். இனிய முகத்துடன் பள்ளியாசிரியரை நோக்கித் திரும்பிக் கேட்கிறாள்.)

குழந்தைகள் உங்கள் கேள்விகளுக்குத் தக்கவாறு பதிலளித்தார்களா?

(பள்ளியாசிரியர் மேரியைப் பார்த்துவிட்டு பதிலளிக்கிறார்.)

பள்ளியாசிரியர்

இல்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. 

போதகரின் மனைவி

என்ன ஒரு விசித்திரம்! மருத்துவர் அப்படியே காற்றில் கரைந்துவிட்டாரா என்ன? அவரது நோயாளிகளுக்குத் தெரிந்திருக்குமா? (குழந்தைகளைப் பார்த்து) அவரது மகள் பள்ளியில் ஒன்றுமே சொல்லவில்லையா?

(பள்ளியாசிரியர் எழுந்து வெளியேற அணியமாகிறார்.)

பள்ளியாசிரியர்

இல்லை. தங்கள் சிரமத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்.

போதகரின் மனைவி

ஏன் அதற்குள்? என் கணவர் வரும் நேரமிது. சற்று காத்திருங்களேன். காஃபியும் அருந்தலாம்.  

பள்ளியாசிரியர்

தங்கள் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி. ஆனால் நான் செவிலியின் மகன் குறித்து மிகவும் வருந்துகிறேன்.

போதகரின் மனைவி

தான் எப்போது திரும்புவேன் என்று அவள் குறிப்பிட்டவில்லையா?

பள்ளியாசிரியர்

நான் அவளைக் கேட்கவில்லை. அவள் என்னைத் தடுமாற வைத்துவிட்டாள். பீதியுடன் தோன்றினாள்.

(போதகரின் மனைவி சிந்தனையுடன் தலையசைக்கிறார்.)

போதகரின் மனைவி

மர்மமாக இருக்கிறது. ஒரு நொடி! என் கணவர் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

(வெளியே முன் வாயில் கதவைத் திறந்து படிகளில் ஏறிவரும் போதகரின் சத்தம் கேட்டது. போதகரின் மனைவி சென்று கதவைத் திறந்தாள். போதகர் தோன்றினார்.)

போதகர்

(பள்ளியாசிரியரை எதிர்பாராதவராய் வியந்து)

நல் மாலை.

போதகரின் மனைவி

நல் மாலை. பள்ளியாசிரியர் உங்களைச் சந்திக்க காத்திருக்கிறார். 

போதகர்

(பள்ளியாசிரியரிடம்) சொல்லுங்கள்.

பள்ளியாசிரியர்

ஆம். உங்களிடம் விரைவாக ஒரு விசயம் பற்றி பேச வேண்டும்.

(அப்படியென்ன அத்தனை அவசரமான விசயமாக இருக்குமென்பதை வியந்தபடி பார்க்கிறார் போதகர். பள்ளியாசிரியர் மாலை நேரத்தில் வருவது மிகவும் அரிது. ஆயினும் அவரிடம் நயமாகப் பேசுகிறார்.)

போதகர்

வருக. என் படிப்பறைக்குச் செல்வோம். அங்கு அமைதியாக இருக்கும்.

(பள்ளியாசிரியர், இந்தச் சந்திப்பால் மகிழ்ச்சியடைந்த போதகரின் மனைவியைப் பார்த்து தலையசைத்துவிட்டு வரவேற்கும் தொனியின் முன்னோக்கி நடந்த போதகரைப் பின்தொடர்கிறார். படிப்பறையைத் திறந்ததும் போதகர் வினவுகிறார்.)

போதகர்

சொல்லுங்கள். என்னால் என்ன ஆக வேண்டும்?

(அறைக்குள் நுழைகின்றனர். போதகர் பள்ளியாசிரியர் அமர இருக்கையைத் தருகிறார். திறந்திருந்த சாளரங்களை மூடுகிறார். பள்ளியாசிரியர் பேசத் தொடங்குகிறார்.)

பள்ளியாசிரியர்

இன்று செவிலியிடம் நான் பேசினேன். அவள் தன் மகனைத் துன்புறுத்தியது யாரென்று தனக்குத் தெரியுமெனச் சொன்னாள்.

போதகர்

(’யார்’ என்ற பாவனையுடன்)

அவளுக்குத் தெரியுமா?

பள்ளியாசிரியர்

அவள் காவலர்களிடம் மட்டுமே சொல்வாளாம். என்னிடம் அப்படிச் சொல்லிவிட்டு நகரத்துக்குச் சென்றுவிட்டாள்.

போதகர்

(பள்ளியாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாதவராய்)

அப்படியானால்?

பள்ளியாசிரியர்

தன் மகனை விட்டுவிட்டு வீட்டை நன்கு பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாள்.

போதகர்

பூட்டிவிட்டாளா?

பள்ளியாசிரியர்

(ஆமோதித்துத் தலையசைக்கிறார்)

நான் அண்டை வீட்டுக்குச் சென்று – ஒருவேளை குழந்தை அவரிடம் இருக்கலாம் என்று நினைத்து  -மருத்துவரை விசாரிக்கப் போனேன். ஆனால் ஒரு காகிதத்தில் கால வரையறையின்றி மருத்துவச் சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு மட்டும் இருந்தது. மருத்துவரும் அவர் பிள்ளைகளும் மறைந்துவிட்டனர்.

(போதகர் சாளரங்கள் அனைத்தையும் ஏறத்தாழ மூடியிருந்தார். நிலைத்து நின்றவர் பள்ளியாசிரியரைப் பார்த்து..)

போதகர்

(திகைப்புடன்)

என்ன சொல்கிறீர்கள்?

பள்ளியாசிரியர்

(தோளை ஏற்றி இறக்கி)

எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியக்கூடும் என்று நினைத்து, அதற்காகத்தான் இங்கே வந்தேன்.

(துணுக்குற்ற போதகர் தலையை இடவலமாக அசைத்தார்.)

போதகர்

எனக்குத் தெரியவில்லையே. 

(சாளரங்களை மூடி முடித்தவர், பள்ளியாசிரியர் அருகே சென்று அவரெதிரே அமர்ந்தார்.)

போதகர்

செனியா.. அவள் பள்ளிக்கு வரவில்லையா?

பள்ளியாசிரியர்

ஆம். வந்திருந்தாள். அவள் எதையுமே குறிப்பிடவில்லை.

(அமைதி. போதகர் மனம் அசைபோடுகிறது. சற்று நேரத்துக்குப் பின்)

பள்ளியாசிரியர்

நான் மேரியையும் மார்டினையும் கேட்டுவிட்டேன். அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. 

போதகர்

(திடுக்கிட்டவராய் பள்ளியாசிரியரைப் பார்த்து)

அவர்களுக்கு என்ன தெரியும்?

(பள்ளியாசிரியர் அதற்கு மேல் பேசுவதைத் தவிர்க்க விழைந்தார்.)

பள்ளியாசிரியர்

எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நான் செவிலியின் வீட்டுக்குச் சென்றபோது அவர்களும் வேறு சில பிள்ளைகளும் அங்கு இருந்தனர்.

போதகர்

(புரியாதவராய்)

எதற்காக? என்ன செய்வதற்காக?

பள்ளியாசிரியர்

அவர்கள் சிறுவனைத் தேடினார்கள். 

போதகர்

(குழம்பியவராய்)

ஏன்? எதற்கு?

பள்ளியாசிரியர்

அவனுக்கு உதவி செய்ய விரும்பினார்கள்.

போதகர்

அதனால்..

பள்ளியாசிரியர்

(தயங்கிச் சொல்கிறார்)

எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

போதகர்

(மறுப்புடன்)

எதை?

பள்ளியாசிரியர்

(தயக்கத்துடன் பேச வேண்டிய சொற்களைத் தேடியவராய்)

எனக்குத் தெரியவில்லை. (ஒருவழியாகத் தன் சந்தேகத்தைச் சொல்ல வந்தார்.) சென்ற ஆண்டு மருத்துவருக்கு விபத்து நேரிட்டபோது இந்தப் பிள்ளைகள் அந்தத் தோட்டத்தில் இருந்தது நினைவிருக்கும் என நினைக்கிறேன். செனியாவுக்குத் துணையாகச் சென்றார்கள் என்பதே எண்ணம்.

போதகர்

(எதுவும் புரியாதவராய்)

ஆம். அதற்கு?

(பள்ளியாசிரியர் தயக்கத்துடன் பெருமூச்சுவிடுகிறார். தனது சந்தேகம் விசித்திரமானதாகக் கருதப்படும் என்றும் போதகர் அதை ஏற்க மாட்டார் என்றும் உணர்கிறார்.)

பள்ளியாசிரியர்

ஒன்றுமில்லை. நான் அதை மறந்துவிட்டேன். இன்று அது என் நினைவுக்கு வந்தது.

போதகர்

எனக்குப் புரியவில்லை. 

(மெளனம்.)

பள்ளியாசிரியர்

கடந்த முறை சீமானுடைய மகனைக் கண்டுபிடித்தபோதும் அவன் இந்தப் பிள்ளைகளோடு இருந்தான். 

(பள்ளியாசிரியரைப் பார்த்த போதகரின் முகம் சிவந்து, சுருங்கி மறுப்பின் பாவனையால் நிறைந்தது.)

போதகர்

என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

(தன்னை அவர் பார்த்த பார்வையைப் பள்ளியாசிரியர் புரிந்துகொள்ளாமல் இல்லை. ஆனால் பின்வாங்க இயலாத தொலைவுக்கு ஏற்கெனவே பேசிவிட்டார். சிறிய அமைதிக்குப் பின் பேசினார்.)

பள்ளியாசிரியர்

இரு நாட்களுக்கு முன் ஹன்சிக்குச் சாவடி விழுந்தது. அதைப் பற்றி ஏற்கெனவே மேற்பார்வையாளரின் மகள் என்னிடம் முன்னறிந்து சொன்னாள். அவள் கனவு கண்டாளாம். காவலர்கள் அவள் பொய் சொல்வதாகச் சொல்கிறார்கள். அதுபற்றி அவளிடம் சொன்னது யார்? அதை அறிவித்தது யார்?

(நெடு நேரம் அமைதி. இறுதியில் போதகர் எழுந்து சில அடிகள் நடந்து, மீண்டும் அமைதியாக நிலைத்து பள்ளியாசிரியரை நோக்கித் திரும்பினார். அவர் முகம் வெளிறியிருந்தது. அவரால் எளிதில் பேச முடியவில்லை.)

போதகர்

நான் புரிந்துகொண்டது சரியானால், உங்கள் மாணவர்கள் – என் குழந்தைகள் உள்பட – இந்தக் குற்றங்களில் பங்கு வகிக்கின்றனர் என்கிறீர்கள். சரியா?

(வருத்தத்துடன் ஆமோதிக்கும் தொனியில் பள்ளியாசிரியர் மெதுவாகத் தலையசைக்கிறார். இந்த இடத்தில் மிகவும் சங்கடமாக உணர்கிறார். இன்னொரு அமைதி. போதகர் தொடர்கிறார்.)

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைத் தெரிந்துதான் சொல்கிறீர்களா?

(அமைதி. கடும் மூச்சிரைப்பு. தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்க முயல்கிறார்.)

நீங்கள் என்ன சொல்..

(அவர் குரல் அவரைக் கைவிட்டதும் தாடை நடுங்குகிறது. கண்ணீர் பொங்குகிறது. சடுதியில் முகம் திருப்பிக்கொள்கிறார். அவரைப் பார்த்த பள்ளியாசிரியர் அங்கேயே அசையாமல், ஒரு வார்த்தை பேசாமல் நிற்கிறார். சில நொடிகளுக்குப் பிறகு தற்கட்டுப்பாட்டுடன் போதகர் பள்ளியாசிரியரைப் பார்த்துச் சொல்கிறார்.)

இந்தக் கொடுமையை நீங்கள் சொல்லக் கேட்ட முதல் ஆள் நான் என்று ஊகிக்கிறேன்.

(பள்ளியாசிரியரின் மெளன எதிர்வினை ‘ஆம் ஆம்’ என்ற தலையசைப்பாக இருந்தது.)

மற்றவர்களிடம் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கத் துணிந்தீர்கள் – நல்ல குடும்பங்களின் பிள்ளைகளையும் பெற்றோர்களையும் இப்படி அவதூறு பேசினீர்கள் – எனில், நான் நிச்சயமாக – என் சொல்லை அளிக்கிறேன் – உங்களைச் சிறைக்கு அனுப்புவேன்.

(பள்ளியாசிரியர் எதோ பதிலளிக்க விழைய போதகர் தொடர்கிறார்.)

எனது சேவைக் காலத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இதைப் போலக் கீழ்மை நிறைந்த ஒன்றை அறிந்ததே இல்லை.

(அவர் எரிச்சலுடன் பள்ளியாசிரியரைப் பார்த்து நின்றார்.)

உங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்று எவரும் சொல்லலாம். இல்லாவிடில் இவ்வளவு கீழிறங்கிப் பேசியிருக்க மாட்டீர். உங்களுக்கு நோய்மனம். எப்படி இந்தப் பாவப்பட்ட ஜீவன்களுக்கு மத்தியில் உங்களைப் பள்ளி நிர்வாகம் பணியாற்ற அனுமதித்தது என்று வியக்கிறேன். சரியான நேரத்தில் தாளாளருடன் பேசுவேன். இப்போது தயவுசெய்து என் வீட்டைவிட்டுக் கிளம்புங்கள். இங்கு இனியொருமுறை உங்களை நான் பார்க்கக்கூடாது.

74. வெளியே / நாள்: செவிலியின் வீடு.

மேற்பார்வையாளர், அவர் மனைவி, பள்ளியாசிரியர் மூவரும் கதவைத் திறந்து நுழைய முற்படுகின்றனர். முதலில் மேற்பார்வையாளர் பல சாவிகளைப் பயன்படுத்துகிறார். பலனின்றிப் போகவே பின்புறமாகக் கதவை இடித்துத் திறந்து உள்ளே நுழைகின்றனர்.

கதைசொல்லி

செவிலி ஒருபோதும் திரும்பி வரவில்லை. நான் காலைவரை காத்திருந்தேன். இரு நாட்கள் கடந்தன. அதன் பிறகு மாளிகைக்குச் சென்று சீமானிடம் தெரிவித்தேன். உடனடியாக மேற்பார்வையாளரை அழைத்தவர் வீட்டைத் திறக்கவும் ஊனமுற்ற சிறுவனைக் கண்டுபிடிக்கவும் உத்தரவிட்டார்.

75. உள்ளே / நாள்: செவிலியின் வீடு – காட்சியின் தொடர்ச்சி.

பள்ளியாசிரியர், மேற்பார்வையாளர், அவர் மனைவி மூவரும் வீடு முழுவதும் தேடினார்கள். மூடிய இழுப்பான்கள் காரணமாக எங்கும் அரையொளியே கசிந்தது. பலமுறை ‘ஹன்சி!’ என்று கூவி அழைத்தார்கள். ‘ஹன்சி! எங்கே இருக்கிறாய்?’ கதைசொல்லியின் குரலில் இது மங்கிய ஒலியில் கேட்கிறது. செவிலியின் படுக்கையறையில் ஒரு புகைப்படம் இருந்ததைப் பள்ளியாசிரியர் கவனிக்கிறார். அதில் மருத்துவரும் ஒரு பெண்மனியும் இருக்க, அருகே செனியா சிறுமியாக இருக்கிறாள். சிறுவனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கதைசொல்லி

இதற்கு முன் நான் ஒருபோதும் வந்திராத செவிலியின் வீட்டுக்கு வந்து அதை உடைத்து உள்ளே நுழையும் எண்ணம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. விகாரமான உணர்வு. மூன்றாம் நபரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தேடுவது தயக்கமாக இருந்தது. ஆனாலும் ஹன்சியின் பெயரைச் சொல்லி அழைத்தபடி இருந்தோம். எங்கள் தேடுதல் வீணென்று ஏற்கெனவே அறிந்திருந்தேன். செவிலியை அறிந்திருந்த அனைவருக்குமே அவள் எப்படித் தன் மகனைப் பாதுகாத்தாள் என்பதும் அவனை ஒருபோதும் விட்டுப் பிரியக்கூடியவள் அல்ல அவள் என்றும் நிச்சயமாகத் தெரியும்.

(மூவருக்கும் ஒன்றும் கிடைக்காமல் படிகளில் மீண்டும் ஒன்றுகூடினார்கள்.)

76. வெளியே / நாள்: செவிலியின் வீடு.

பள்ளியாசிரியர், மேற்பார்வையாளர், அவர் மனைவி மூவரும் வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தார்கள். தத்தம் வீடுகளை நோக்கிச் சென்றனர். மூடிய இழுப்பான்களுடன் கைவிடப்பட்ட நிலையில் வீடு மட்டும் அங்கேயே நின்றது.

கதைசொல்லி

அடுத்த சில வாரங்களில் கிராமத்தில் இருந்த அலர்பேச்சுத் தொழில்மனைகள் கூடுதல் நேரமேடுத்து இயங்கின. சிலர் மருத்துவரே ஹன்சியின் தந்தை என்றும் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்பு செய்து அவர்களது கள்ள உறவை மறைக்க முயன்றார்கள் என்றும் அதனால்தால் குழந்தை ஊனமாகப் பிறந்தது என்றும் சொன்னார்கள். இன்னும் சிலர் மருத்துவரின் மனைவி இறப்பில் ஏதோ மர்மம் இருப்பதாகவும், இந்த இருவரும் அவள் மரணத்துக்குப் பின்னால் இருந்தால் வியப்படைய ஏதுமில்லை என்றும் சொன்னார்கள்.

77. வெளியே / நாள்: மாண்டேஜ்கள்.

மருத்துவர், போதகர், விவசாயி ஆகியோரின் வீடுகள். பள்ளி வீதி. மாளிகையின் நிர்வாக அலுவலகங்கள். மாளிகை. 

எங்கும் மக்களைக் காணவில்லை.

கதைசொல்லி

சிறுவனைக் கடுமையாகத் தாக்கியவர் யாரோ அவருக்கு அவனது பெற்றோரின் கள்ளத்தனங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். சடுதியில் மருத்துவரும் செவிலியும் – கொலைகாரர்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் பார்த்தால் – மற்ற குற்றங்களையும் அவர்களே செய்திருக்கலாம் என்று தோன்றியது. மருத்துவருக்குத் தானும் தன் குழந்தைகளும் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுவது தாளாததாக இருந்ததால் அவர்களோடு ஓடிவிட்டார் என்றும் ஊனமுற்ற பிள்ளையையும் தன் குற்ற உணர்வின் காரணமாக உடன் அழைத்துச் சென்றுவிட்டார் என்றும் தோன்றுகிறது. தன் குற்றங்களின் துணைவரான பாவப்பட்ட குழந்தையின் தாயைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். மகிழ்ச்சியாகத் தப்பித்துவிட்ட மருத்துவரோடு அனைவரையும் சேர்த்துப் பிடித்துவிடலாம் மிதிவண்டியில் ஏறிக் கிளம்பிய அவளை நினைத்ததே, பலருக்கும் கேலிப்பொருளாக இருந்தது. கைவிடப்பட்ட மாளிகை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜூலை 28 அன்று ஆஸ்திரியா செர்பியா மீது போரை அறிவித்தது. அதைத் தொடர்ந்து வந்த சனிக்கிழமை – ஆகஸ்டு 1 அன்று ஜெர்மனி ரஷ்யாவின் மீதும் மறுநாள் ஃபிரான்ஸின் மீதும் போர்ப் பிரகடனம் செய்தது.

78. உள்ளே / நாள்: தேவாலயம்.

உச்சிக் கோணச் சுடுப்பு.

கிராமத்து மக்கள் தத்தம் இருக்கைகளில் அமர்கின்றனர். சிறு பிள்ளைகள் தம் பெற்றோருடன் பின்னால் இருக்கும் பலகைகளில் அமர்கின்றனர். அனைவரும் தத்தம் சிறந்த உடைகளில் இருக்க, படையினர் தம் சீருடைகளில் இருக்கின்றனர். கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. எங்கும் மகிழ்வின் கிளர்ச்சி நிறைந்திருந்தது. தேவாலயம் நிறைந்ததும் சீமான், சீமாட்டி, அவர்களது மகன் சிஜி ஆகியோர் நடைபாதையில் நடந்துவந்து முதல் வரிசையில் அமர்ந்தனர்.

கதைசொல்லி

அந்த நாட்களிடையே வரும் ஞாயிறு அன்று அனைத்து கிராமத்தினரும் பண்டிகை சேவைக்காகத் தேவாலயத்துக்கு வந்தனர். வரவேற்பும் விடையளித்தலும் நிறைந்திருந்தது. இனி பழைய காலம் ஒருபோதும் திரும்பாது. சில நாட்களுக்கு முன்பு அனைவரும் தாம் கடவுளின் இச்சையை வாழும் பெருவாழ்வைப் பின்பற்றுவதாகவும் மாற்றத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லியிருப்பார்கள். வரும் போரை வரவேற்கும் விசித்திரமான உவகை, இந்த ஒழுங்கும் அதிகாரமும் வலுவற்ற அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டவை என்று காட்டியது. 

அண்மைக் காட்சிகள்.

மருத்துவர், செவிலி இருவரையும் தவிர படத்தின் அனைத்து பெரியவர்களது முகங்களும் காட்டப்படுகின்றன. ஏவாவும் அவளது தந்தையும்கூட காட்டப்படுகின்றனர்.

தேசப்பற்று என்ற வெறிக்களியாட்டத்தின் மிகுதியால் ஈச்வால்டில் நடந்த நிகழ்வுகள் யாவும் மறக்கப்பட்டன. வரவிருக்கும் யுத்தத்தை முன்னிட்டு ஏவாவின் தந்தை தன் மகளைத் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டார். அவளது மன்றாட்டை ஏற்று தனது வருங்கால மருமகன் வேலை செய்யும் மாளிகையைப் பார்க்க அவர்கள் அங்கே வந்திருந்தனர். நான் விரைவில் என் மனைவி என்றழைக்க நினைத்திருந்த அந்த அன்புக்குரிய ஜீவன் அங்கு வந்தது  அன்றைய நாளை எனக்கும் பொலிவுமிக்க விழா நாளாக மாற்றியது. எங்கள் உரையாடலை அதற்குப் பிறகு ஒருபோதும் போதகர் எங்கும் குறிப்பிடவில்லை. எங்கள் உறவு பணிகோரும் சந்தர்ப்பங்களை மட்டுமே கொண்டதாக இருந்தது. அவர் என்னை மிரட்டியபடி பள்ளித் தாளாளரைச் சந்திக்கவில்லை. 

தொடரும் அண்மைக் காட்சிகள்.

பள்ளியாசிரியர் நிரலறையை நோக்கிக் கையசைத்து ஆரம்பிக்கச் சொல்கிறார். அவர்கள் பாடத் தொடங்குகின்றனர். நாம் அவர்களை ஒவ்வொருவராகப் பார்க்கிறோம். இறுதியாக மேரியைப் பார்க்கிறோம். அவள் கூந்தலில் வெள்ளை நாடாவை அணிந்திருக்கிறாள்.

இன்று கால் நூற்றாண்டுக்கு மேல் கழிந்த நிலையில் என் வாழ்வின் இறுதிக்காலத்தில், முதல் உலகப்போரைவிட மோசமாக உலகையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட, இரண்டாம் உலகப்போர் மூண்டு அதற்குப் பிறகான இத்தனை கால இடைவெளியில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அன்று எங்கள் முன் நிகழ்ந்த நிகழ்வுகளும் அதற்கு நாங்கள் அளித்த மெளனங்களுமே இத்தகைய பேரழிவுக்கு எங்களை இட்டுச்செல்லும் ஆதாரமாக இருந்திருக்கிறதோ! எங்களுக்கு நிகழ்ந்ததை எங்கள் ஆழ்மனங்கள் அறியாமலா இருந்தன? நாங்கள் வலுக்கட்டாயமாக எங்கள் விழிகளைக் குருடாக்கிக்கொண்டு இதற்குத் துணை போனோமா? நாம் சொல்லிக் கொடுத்தவை யாவும் வீணாகி விடுமென்றும் அவையே குழந்தைகளின் தவறுகளுக்கும் இப்பேரழிவுக்கும் ஒருவகையில் காரணமெனத் தெரிந்துவிடுமென்றும் அறிந்தே நாங்கள் வாய் திறக்காமல் அமைதி காத்துக்கொண்டிருந்தோமோ?

மின்னும் வெண்நாடாவுடன் பாடும் மேரியின் தோற்றத்தோடு சட்டகம் உறைகிறது.

போரின் மூன்றாம் ஆண்டில் எனக்கும் ஆணை வந்தது. என் தந்தை இறந்துவிட்டதால், போருக்குப் பிறகு கிரண்ட்பாக்கில் இருந்த என் பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, நகர்புறத்தில் ஒரு தையல் கடையைத் தொடங்கினேன். அங்குதான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்தக் கிராமத்தில் இருந்து ஒருவரையும் நான் மீண்டும் பார்க்கவில்லை.

சட்டகத்தில் இறுதியாகப் பெயர் வரிசை ஓடத் தொடங்குகிறது. கதைசொல்லியின் குரல் அமைதியானதும் பாக்கின் துயரச் சேர்ந்திசை ஒலிக்கிறது. குழந்தைகள் அற்புதமாகப் பாடுகின்றனர்.

-நிறைவு.

1 comment

Geetha+Karthik+netha October 17, 2022 - 5:40 pm

ஏற்கனவே பார்த்திருந்த படம் என்றாலும் தவறவிட்ட சில நுணுக்கங்களை கமலக்கண்ணன் அண்ணாவின் கதைக்கூறலில் பலமுறை பலவாறு புரிந்துக்கொண்டிருக்கிறேன் படத்தின் காட்சிகள் முதற்கொண்டு கதாபாத்திரங்கள் உட்பட அனைத்தும் பதிந்துவிட்டிருக்கிறது. நன்றியும் அன்பும் அண்ணா. இதுபோல் அடுத்தடுத்த இதழ்களில் வேறு வேறான திரைப்படங்களையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். மேலும் இந்த கதைக்கூறல் நூலாகும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

Comments are closed.