இரவெல்லாம் சிறுவாணைப் பகுதியில் நான்கு யானைகள் வட்டமடித்துவிட்டு விடியற்காலை சோளக்காட்டிற்குள் புகுந்து கொண்டன. கலைந்து போகவில்லை.

காலை ஒன்பது மணிக்கே சலீமைக் கொண்டு வந்து இறக்கினர். மேட்டுப்பாளையம் வனச்சரக அதிகாரிகளும் வந்தார்கள். சலீம் உற்சாகமாகத்தான் இருந்தது. ஒன்பதரைக்கு வந்த டாக்டர் “என்ன சலீம், என்ன காரியத்த முடிச்சுத் தரமாட்டெங்கிற” என்று பேசியபடி அருகில் சென்றார். சலீம் டாக்டரை அடையாளம் கண்டுகொண்டது. துதிக்கையைத் தூக்கி டாக்டரின் தலையைத் தடவியது. செல்லமாக டாக்டரை இடித்தது. தண்ணீர் வைக்கச் சொன்னார். கொஞ்சம் குடித்தது. வாழைத்தண்டைப் பிளந்தெடுத்து வந்து போட்டார்கள். பிரியமாகச் சாப்பிட்டது. மட்டையோடு கொண்டு வந்து ஒன்றைப் போட்டுப் பார்த்தார்கள். வாழை மட்டையை லேசாக மிதித்து சட்டை உரித்துத் தண்டை மட்டும் எடுத்துத் தின்றது. இரவு என்னென்ன உணவு கொடுக்கப்பட்டது என்று கேட்டார். டாக்டர் கோக்காலியில் ஏறி எச்ச வாய்க்குள் கைவிட்டு சோதித்தார். கண்களை விரித்துப் பார்த்தார். காதுகளைப் பிடித்துப் பார்த்தார். யானை லத்தி போட்டது. ஆவி பறந்தது. லத்தியைத் தொட்டும் முகர்ந்தும் பார்த்தார். “வயிற்றில் குள்ளம் விழவில்லை. வயிற்றுப் பிரச்சனை இல்லை” என்றார். “குள்ளம் இருந்திருந்தா கழிச்சல் எடுத்திருக்கும். லத்தியும் கெட்டியாகத்தான் இருக்கு. காய்ச்சலும் இல்ல.”

காட்டு யானைகளைக் கலைப்பதற்கு முன் ஒரு யோசனை செய்தார். நடுத்தோட்டத்தில் யானைகள் இருப்பதால் உள்ளே நுழைய முடியாது. மறப்பு வேறு. விரட்டினால் ஓடித் தப்பிக்கவும் முடியாது. “சலீமைப் பின்தொடர்வோம். அதுக்கு ஒரு வழிசெய்யணும்” என்றார். கதிரேசன் டக்கென்று ஒரு யோசனை சொன்னான். “சார், அந்தப் பெரிய பாறை வழியா ஏறிப்போகலாமா சார்” என்றான். அடிவாரம் முழுக்கக் கருவேல முள் பிணையல். படிக்கட்டு இல்லாது நீள்வாக்கில் கிடக்கிறது பாறைக்குன்று. அப்படியே ஒட்டி சோளக்காடு தொடங்குகிறது. யானைகளுக்கு கோவம் வந்தால் முள் பிணையலைப் பொருட்படுத்தாமல் கூட நுழைந்து பார்க்கும்.

ஆண்டியப்பன் சாளையிலிருந்து வனக்காவலர்கள் வெட்டரிவாள், கவைகள், வேல்கம்புகளை வாங்கி வந்தார்கள். துணிந்து கிழக்கு முகமாக வெட்டு வைத்துக் கடவு செய்தோம். கிருஷ்ணன் சார் ஒன்பது வனக்காவலர்களை, பாறை நோக்கி யானை வந்தால் வெடி போட்டும் துடும்படித்தும் விரட்ட ஏதுவாக நிற்கச் சொன்னார்.

எங்களுக்கு இந்தப் பரவு, தோட்டந்துரவு, ஓடை, காடுபள்ளம், வரப்பு எல்லாம் அத்துப்படி என்பதால் கிருஷ்ணன் சார் உடன் அழைத்தார். கூட்டத்தினரை விசில் அடித்து அலக்கொலப்பு செய்ய வேண்டாம் என்றார். மேட்டுப்பாளையத்திலிருந்து வந்த அதிகாரிகளோடு டாக்டர் நின்று கொண்டார். வனக்காவலாளி குனிந்து மெல்ல பாறை நோக்கி முன் சென்றான். அடுத்து நான். அதற்கடுத்து கிருஷ்ணன் சார். அதற்கடுத்து கதிரேசன். குனிந்து குன்றுக்குச் சென்றோம். எந்தக் காலத்திலோ ஏறிச் செல்வதற்குத் தோதாத தடம் செய்த சிறுசிறு குடைவில் பாதத்தை வைத்து ஒவ்வொருவராக பல்லி போல பாறையில் படுத்து நகர்ந்தோம். எழுபது வருடங்களுக்கு முன் இதுவரை அடர்ந்த காடாக இருந்தது. அப்புறம் மேட்டாங்காடு ஆகியது. வானம்பாரி நிலமாகியது. அப்புறம் தோட்டமாகியது என்று அப்பா சொல்வார்.

ஓரளவு பாறையில் ஏறியதும் தெரிந்தது. ஒரு யானை காதை விரித்து இரண்டு எட்டு முன்னே வந்து அப்படியே சிலையாக நின்றது. வாய்விட்டு வெளியேறிய சிறிய தந்தங்கள். அதன் இடது காது ஓரம் கிழிந்து லேசாக மடங்கியிருக்கிறது. ஆண் பிறப்பிற்கே உரிய கம்பீரம். அந்தப் பக்கமிருந்து காற்றடித்தால் மனுசவாடையை முகர்ந்திருக்கும். கமுக்கமாகப் பேசியதைக் கேட்டிருக்கக்கூடும். கப்பென்று நிறுத்திக் கொண்டோம். இன்னும் அப்படியே சிலையாக நின்று கணிக்கிறது. அதன் காது அசையவில்லை.

துவாரபாலகர் போல இன்னும் நிற்கிறது. டக்கென்று காதுகள் அசைய வட்டமடித்துக் கிளம்ப தூசி எழுந்தது. ஐந்து யானைகளின் மேல் வயிற்றுப்பகுதி வரை தெரிந்தது. தலைகள் முழுக்கவே தெரிந்தன. ஒன்றைத் தவிர மற்றவை கிட்டத்தட்ட பக்கம் பக்கமாகவே நின்றன. உள்ளே அரை ஏக்கர் நிலத்தில் சோளத் தட்டைகள் படுகிடையாகக் கிடக்கின்றன. பெரிய வெளி இருப்பது ஓரளவு தெரிந்தது. கிடை வாசலின் முன்வந்து நின்ற யானை திரும்பாமல் பின்னாலே இரண்டு எட்டு வைத்து பிளிறி ஆபத்தை உணர்த்தியது. பாகன் சலீமை வேகமாக ஏவிவிட்டான்.

கவனமாக இன்னும் நான்கடி பாறையின் மேலே ஏறினேன். சோளத் தட்டைகளிடையே ரொம்ப வேகமாகச் சென்றது சலீம். சலீம் வருவதைப் பார்த்த துவாரபாலகன் போல் நின்ற இளம்யானை தூசியைக் காலால் கிளப்பி திரும்பி ஓடாமல் பின்னடிப்பது தெரிந்தது. ஆனால் தாக்குதலை முதலாவதாக எதிர்கொள்ளவும் தயாராகி சட்டென ஊன்றி நின்றது. மூத்தது துதிக்கையைத் தூக்கி முன்னால் எட்டுவைத்தது. வயிற்றின் அல்லைப்புறம் வற்றி சோர்வாக இருந்தது. கீழேயிருந்து கடாபுடாவென்று மற்றொரு யானை எழுந்தது. அப்போதுதான் தெரிந்தது ஆறு யானைகள் இருப்பது. எழுந்தது இருப்பதிலேயே அளவான யானைதான்.

வட்டமாக நின்ற யானையின் வளையத்திற்குச் சற்றுத் தள்ளியே வேகமாகச் சென்ற சலீம் நின்று காதை விரித்தது. மற்ற யானைகள் துதிக்கைகளை மாறிமாறித் தூக்கித் தொங்கும் கீழுதடுகள் அதிரப் பிளிறின. இன்னும் மெல்ல மெல்ல மேலேறினோம். எழுந்த யானைக்கு முன்னே ஒரு சின்னக் குட்டி. படுத்திருந்த குட்டியை அப்படியே துதிக்கையால் மண்ணில் புரட்டி எழவைத்தது. குட்டியின் உடலெல்லாம் மண் அப்பி படைபடையாக இருந்தது. நெற்றியில் மயிர்கள் தெரிந்தன. அடர்ந்து உடம்பெல்லாம் மண்ணோடு அப்பி இருந்தது. மிகச்சிறிய துதிக்கை. பாகன் ஏவும் சொல்லை சலீம் ஏற்றுக் கொள்ளாமல் தலையைத் தலையை ஆட்டுகிறது. மூத்தது பிளிற சலீம் ஒரு எட்டு பின்வைத்தது. தாய் துதிக்கையின் நுனி உதடால் குட்டியைத் தடவியது. யானைக் கூட்டத்துக்குள் குட்டியைத் துதிக்கையால் தள்ளி ஒளித்துவைக்க முயன்றது. ஆனால் குட்டி சொல்பேச்சு கேட்காமல் முன்னால் எட்டுவைத்தது. காட்டு யானைகள், சலீம் எல்லாம் காதுகளை விடைத்துக்கொண்டு ஒருகணம் அப்படியே அமைதியாக நின்றன. பாகனின் சொல் சலீமின் காதில் விழவில்லை. தள்ளாடும் குட்டியைத் தலைதூக்கிப் பார்த்தது சலீம். தன் பெயரை உதிர்த்துவிட்டு யானையாக அது நின்றது. கொடிவழிகளின் ஆதிரூபம் கும்கியின் அடிவயிற்றில் துள்ளியது.

டாக்டர் “என்ன” என்று கேட்டார்.

“குட்டி ஈன்றிருக்குது சார்” என்றார் கிருஷ்ணன்.

இறங்கும்படி அவசரமாகக் கைகாட்டினார் டாக்டர்.

பாகனின் சொல்லைப் பொருட்படுத்தாமல் திரும்பி நடந்தது சலீம். ஒவ்வொருவராக மெல்ல இறங்கினோம்.

முந்தா நாள் இரவு குட்டி போடத் தட்டழிந்து இருக்க வேண்டும். அதற்கு முதல்நாள் காளியண்ணன் தோட்டத்திற்கு அழைத்து வந்தது இந்த மூத்ததுதான். துரை தோட்டத்திற்கு மூத்தது வரவில்லை. முந்தாநாள் இரவோ நேற்று விடியற் காலையோ குட்டி பிறந்திருக்கிறது. இரவெல்லாம் மூத்தது எங்கும் செல்லாமல் காவல் காத்திருக்கிறது. ஆக்ரோசமாக சென்ற சலீம் பிரசவச் சூழலைப் பார்த்ததும் முதல்நாளே நின்றுவிட்டது.

எப்படியிருந்தது, படுத்திருந்தது எது, மூத்தது சோர்வாக இருந்ததா என்று டாக்டர் ஒவ்வொன்றாகக் கேட்டார். டாக்டர் ஆச்சரியப்பட்டுச் சொன்னார். “எப்படி ஏவினாலும் சலீம் இனி மூன்று நாட்களுக்கு எந்த யானையையும் தொட்டு அடிக்காது. முட்டாது. நான் நினைக்கிறேன் தன் இனத்திலே ஒரு வாரிசு வந்திருக்கிறது என்பது சலீமுக்குத் தெரியும். மூத்தது இன்னைக்கி இரவு மேய்ச்சலுக்குப் போகலாம். அநேகமா ரெண்டு நாள் பக்கத்திலிருந்தே காவல் காத்திருக்கு. குட்டி ஈன ஆறு மணிநேரம் ஆனாலும் ஆகலாம், மத்த விலங்குக வந்து தாக்கக் கூடாதுன்னு மூத்தது கவனமா இருக்கும். பிரசவிக்க முடியலையன்னா வெளிவந்த குட்டியின் துதிக்கையை நைசா பிடிச்சு மெல்ல இழுக்கும். நீங்க சொல்ற உயரத்த வச்சுப் பார்த்தா அந்த யானைக்குத் தலைப் பிரசவம். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும். அதனால தான் மூத்தது ஒருநாள் கூடுதலா காவல் இருந்திருக்கணும். பக்கத்தில தட்டைகளத் தின்னுட்டுக் கூடவே இருந்திருக்கு. நாம நினைக்கிறோம் இதுகளுக்கு என்ன தெரியுமுன்னு. ஆனா யோசிச்சுப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு இதுகளோட நடவடிக்கை. இவ்வளவுதான் இதுகளோட சக்தின்னோ, அறிவுன்னோ நெனச்சா திடுக்குன்னு இன்னொரு அறிவு விழிக்குது. இன்னும் என்னென்ன இருக்கோ” என்றார்.

“எப்படியும் குறைந்தது மூன்று நாட்கள் இருக்கும். தொந்தரவு செய்ய வேண்டாம். குட்டி மலங்காட்டில் நடக்க முடியாது. அதனால இன்னும் மூன்று நாள் அவகாசம் எடுத்துக் கொள்ளும். இரண்டு வருசத்துக்கு இந்தக் கூட்டம் அந்தக் குட்டிய ரொம்ப கவனமா பார்த்துக் கொள்ளும். வியாழக்கிழமை வரை பொறுத்திருங்க. கொஞ்சம் கூடுதல் பாதுகாப்பா இருங்க. நான் நிஜமாவே புதுசா ஒன்ன தெரிஞ்சுகிட்டேன்” என்ற விதமாய் பேசிக்கொண்டே வந்தார்.

கிருஷ்ணன் சார் மற்ற அதிகாரிகளிடம் விடைபெற்றுக் கொண்டார். பிற்பகல் வெயில் கொளுத்தத் தொடங்கியது. நான் தயங்கி நின்றேன்.

“வர்றீங்களா” என்றார் கிருஷ்ணன் சார்.

“நீங்க போங்க சார். நண்பர்கள் வண்டி கொண்டு வந்திருக்காங்க வந்திருவேன்.”

“வாங்க. போற வழிதான. இறக்கிவிட்டுப் போறோம்” என்றார்.

ஜீப்பில் அவர் அருகில் ஏறிக்கொண்டேன். “கதிரேசன், நல்லா ஒக்காருங்க.”

“கதிரேசன் அவரு சார்.”

“எனக்கு ஒங்க ரெண்டு பேரோட பேர் யார் யாருக்குன்னு மறந்திடுறேன். பலதடவை என்னைய வண்டியில கூட்டிட்டு வந்திருக்கீங்க. பேர மாத்தி மாத்தி வச்சுக்கிட்டேன்.”

“பேரு நம்மளா வச்சுக்கிர்றதுதான சார். பேருல என்ன இருக்கு. நல்ல பழக்கந்தானே முக்கியம்.”

“ஆமா. போகலாமா.”

வண்டி மெல்லப் புறப்பட்டது. “சுகுமார், நீங்க விவசாயிங்க. உங்க பாடு, அலச்சல், பயிர் அழிவு எனக்குத் தெரியுது. ஆனா யானைகளோட துயரத்தப் பத்தி யாருக்கு கவலை இருக்கு? விவசாயிகளக்கூட பெரிசா குறை சொல்ல மாட்டேன். இந்த பரவே ஒரு காலத்தில காடாத்தானே இருந்தது.”

“ஆமா சார்.”

“நமக்கு எதிலயும் தெளிவே இல்லை சுகுமார். இந்த மண்ணுல மனுசன் பொறக்குறதுக்கு முன்னால இருந்து கம்பீரமா வலம் வர்ற பெரிய ஜீவன் யானைக் கூட்டம்தான். ஆனா அதோட மண்ணுல இன்னக்கி அதால வாழ முடியல. அதுக படுகிற அவதி கொஞ்ச நஞ்சமல்ல. வேற நல்ல கிரகமிருந்தா இதுகள நிம்மதியா அனுப்பி வச்சிடலாம். ‘களிறு படு செங்களம்’ன்னு அவ்வையார் சொன்னது எதுக்கோ. ஆனா களிறோட ரத்தம் மனுசனால செதறி தெறிச்சுக்கிட்டே இருக்கு. ‘பிடியூட்டிப் பின் உண்ணும் களிறு’ன்னு கடுங்கோங்கிற புலவன் சொல்லியிருக்கான். இப்போ குட்டிக்குக் கூட பால் ஊட்ட முடியாம அலையுதுக. நேத்தைக்குப் பேப்பர் பாத்தீங்களா… சத்தியமங்கலத்து காட்டில அஞ்சு நாளா தண்ணியில்லாம அலஞ்சு குட்டையத் தேடி வந்திருக்கு ஒரு தாயும் நாலு வருஷக் குட்டியும். குட்டி எப்படியோ தாயோட முலைக்காம்பச் சப்பிச்சப்பி உயிர வச்சிருந்திருக்கு. அடிவாரத்த விட்டு தாராம்வலசு பேரூராட்சி நோக்கி வந்திருக்கு. கேபிள் பதிச்ச குழிய அரைகுறையா காட்டுக்குள்ள மூடியிருக்கானுங்க. மண்ணு செம்மல. கிறக்கத்தோட வந்த தாய் யானை முன்னங்கால வெட்டுன குழியில வைக்க பொதக்கன்னு இறங்கவும் தடுமாறி குப்பறக்க விழுந்ததுதான். ரெண்டு நாளா எழவே முடியல. எழத் தெம்பில்ல. தாயை எப்படியாச்சும் தூக்கி நிறுத்திறலாம்னு காலப் பிடிச்சு தூக்குது குட்டி. துதிக்கையப் பிடிச்சு தூக்குது. காதைப் பிடிச்சுத் தூக்குது. தூக்க முடியல. அடிவார விவசாயிக பாத்து வன அதிகாரியிட்ட சொல்லியிருக்காங்க. காப்பாத்தப் போனா, குட்டி தாய்கிட்ட நெருங்கவே விடமாட்டெங்குது. ஏதோ பண்ணிருவாங்கன்னு முட்ட வருது. குட்டிக்கு தென்னமட்ட பாக்குமட்டன்னு வெட்டிக்கிட்டு வந்து போட்டாலும் பிரிக்க முடியல. தாய்க்கு இழுத்துவந்து போடுது. தாய் முன்தலைய வச்சு படுத்தது அப்படியே தொசுக்குன்னு உக்காந்திருச்சு. குட்டிய பிரிக்கவே பெரும்பாடாயிருக்கு. வெடி அது இதுன்னு போட்டு நூறடிக்குத் தள்ளிப்போக வச்சாங்க. அங்கயே நின்னு தவதாயப்படுது. ஆறுமணி நேரம் கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்துனா தாயால நிக்க முடியல. பலமில்ல. முழுக்க நீர் சத்தே இல்ல. மயக்கம் தெளியாமலே செத்துப்போச்சு. தாயை விட்டு குட்டி போகவே மாட்டெங்குது. பரிசோதனை முடிஞ்சு அங்கயே பெரிய குழி தோண்டிப் பொதச்ச பின்னாடியும் குழி மேட்டையே ஒருநாள் முழுக்க குட்டி சுத்திக்கிட்டே இருந்திருக்கு. அப்பறம் தள்ளிப்போய் நின்னு இருட்டுறவரைக்கும் குழியவே பாத்துக்கிட்டு இருந்திட்டு போயிருக்கு.

“ஏன் பாலைவனங்கள்ல யானைக இல்ல? குளிர் பிரதேச நாடுகள்ல இல்ல? அதே கனமான உடலத் தாங்குகிற கெட்டியான தரை வேணும். மிதமான வெப்பம் வேணும். நீர்நிலைகள் ஆறுகள் வேணும். அடர்ந்த காடு வேணும். செழுமையான தீவனம் எல்லாப் பருவகாலத்திலயும் வேணும். அங்கதானே அதால இருக்க முடியும். இறைவன் படைப்புன்னா இதுதான்.

“குடகுமலை அடிவாரத்தில சுத்தித்திரிஞ்ச ஒரு யானை, அடிக்கடி ஊருக்குள்ளயும் தோட்டத்துக்குள்ளயும் புகுந்து சேதம் பண்ணிக்கிட்டே இருந்திச்சு. முடுக்கி விட்டாலும் மறுபடியும் ஊருக்குள்ள வந்து ஆளுகள அடிச்சுக் கொல்றது, மாடுகன்ன தொரத்தி அடிக்கிறதுன்னு ரவுசு விட்டது. சரி இனி விட்டா ஆபத்துன்னு காடு கடத்துனாங்க. வீரப்பூரில இருந்து இந்தப் பக்கம் பந்திப்பூர் காட்டுல கொண்டு போய்விட்டாங்க. வீரப்பூருக்கும் பந்திப்பூருக்கும் கிட்டத்தட்ட 240 கிலோமீட்டர் தூரம். மறுமாசம் பார்த்தா அதே வீரப்பூர் மலையடிவாரத்தில வந்து நிக்கிது. உங்களுக்கு மட்டும்தான் பூர்வீக ஊரு இருக்கணுமன்னு மெச்சிக்கிர்றீங்க.

“பொள்ளாச்சி வனச்சரகத்தில திரிஞ்ச யானைக கடந்த எட்டுவருசமா ஆயக்குடி தாண்டி கெழக்க போகல. போன வருசம் ஒரு கூட்டம் செம்பட்டி மலையடிவாரத்துக்கே வந்திருச்சு. சுத்தி இருக்கிற ஊர்கள்ல புகுந்து ஆட்டி எடுத்திருச்சு. அஞ்சு பேரப் போட்டுத்தள்ளிருச்சு. அந்தப் பக்கத்து மக்கள் நாங்க யானைகள முப்பது வருசமா பாக்கலன்னாங்க. எங்க தாத்தன் பூட்டன் காலத்தில இங்க இருந்ததா சொல்றாங்க. ஆனா இங்கிலீஷ்காரன் 220 வருசத்துக்கு முந்தி இங்க பெரிய யானைக் கூட்டம் மலைக்காட்டுல இருந்ததா எழுதி வச்சிருக்கான். அதுக்குத் தெரியும் எது எது தன்னோட பூர்வீக பூமின்னு.

“சில விசயங்கள சொன்னாலும் எடுபடமாட்டங்கிது. மலையடிவாரத்த நெனச்சாலே மனசு பதறுது. தீத்திபாளையத்துக்கு கீழ 300 ஏக்கரில ஒரு காலேஜ், சாடிவயலுக்குப் பக்கத்தில 400 ஏக்கரில யுனிவர்சிட்டி, செம்மேடு பக்கத்தில 300 ஏக்கரில ஆன்மீக ஆசிரமம், இந்த ஆன்மீகம் பத்தாதன்னு உரிப்பள்ளம் பக்கம் 350 ஏக்கரில ஒரு ஆசிரமம். இவங்க கிட்ட ஆன்மீகம்னா என்னான்னு ஒருநாள் கேட்கணும்னு நெனச்சிருக்கேன். எட்டிமடை அடிவாரத்தில 800 ஏக்கரில காலேஜ், வெள்ளாங்குட்டை அடிவாரத்தில 300 ஏக்கரில பசுமைக் குடியிருப்பு, அப்புறம் மலைமேல 20 ஆயிரம் ஏக்கரில ஏலம். 20 ஆயிரம் ஏக்கரில தேயிலை. போறவர்ற எடத்திலயெல்லாம் வீடு… வீடு… வீடுகள்தான். பத்துக்குளம் போச்சு. 4 பாறைக்குன்றுக போச்சு. 400 ஏக்கரில மனுசங்க விளையாட கோல்ப் மைதானம். 1700 ஏக்கர மதுக்கரையில இருந்து தீத்திபாளையம் வரைக்கும் ஒருத்தன் வளச்சு பவுண்டரி அடிச்சுப் போட்டிருக்கான். நீயும் நானும் அஞ்சு சென்ட்ட பத்து சென்ட்ட பிளாட் போட்டு விக்கிறோம். அவங்க 500 ஏக்கர் 1000 ஏக்கர்னு விக்கிறான் வாங்குறான். பிளாட் போடுறான். எத்தன எம்.எல்.ஏ.க்களோட சொத்து தெரியுமா? எத்தன மந்திரிகளோட சொத்து தெரியுமா இதுவெல்லாம். யானை மேஞ்சு காடு அழியல சுகுமார். மனுசங்க மேஞ்சு அழிச்சுப் போட்டானுக. ரயில் தண்டவாளத்தில யானைக அடிபட்டு சாகுறப்பவெல்லாம் இவன்கள சுட்டுத்தள்ளனும்னு தோணும். ஆனா எனக்கு இந்த கவர்மண்டுதான் சம்பளம் தருது. பேசாம வாயப் பொத்திக்கிறேன். கெடச்சா ரெண்ட நானும் சேத்துக்கிறேன். எங்க போனாலும் ஆதிவாசிங்க சொல்றாங்க. முன்னமெல்லாம் நாங்க சத்தம் கொடுத்தா இந்தப் பக்கம் வராம கூட்டம் வேற பக்கம் போயிரும். இப்ப வெடி போட்டாலும், தகரத்தத் தட்டினாலும், நெருப்பக் காட்டினாலும் கோவமா எதுத்துத்தான் வருதுன்றாங்க. பின்ன அதுக என்னதான் செய்யும் சுகுமார்? எதுத்துத்தானே உயிர் வாழமுடியும். நான் பாரு எதுக்காம வாழ்றேன். மனுசன் எதுக்காம வாழப் பழகிட்டான். இனி பொலம்புறதயும் விட்டிருவோம் போல. எம் பெரிய பையன் அமெரிக்கா போறத பத்திதான் பேசுறான். சின்னவன் சினிமாவில நுழைஞ்சே தீருவேங்கிறான். சரி சுகுமார், பேசினா வண்டி வண்டியாப் பேசலாம். பேசி என்ன ஆகப்போகுது. இல்லயா சுகுமார். நேரமாயிருச்சு… இன்னொரு நாள் வர்றேன் சுகுமார்.” வண்டி கடந்து சென்று மறைந்தது முக்கில். வண்டித்தடத்தில் நடந்தேன்.

சலீம் சண்டையிடாமல், மனிதனின் கட்டளைக்குப் பணியாமல் தனது பிள்ளைப் பிராயத்து காட்டின் வாசனையையும் தனது கூட்டமே அரவணைத்து வளர்த்த கோலத்தையும் பூர்வீக பந்தத்தையும் மீட்டுக்கொண்டு லாரியில் சென்றது. மூன்று நாட்கள் நாங்கள் பட்ட அலைச்சலும் வீணான முயற்சியும் சோர்வைத் தந்தன. என்றாலும் விளக்க முடியாத அந்தச் சித்திரம் உயிர்ப்போடு திரும்பத் திரும்ப வருகிறது. அந்தக் குட்டி, துவார பாலகர், மூத்தது, தாய், ஒரு துரும்பைக்கூட அவை மீது தூக்கிப்போட மாட்டேன் என்று ஒவ்வொரு முறையும் நின்று பின் திரும்பிய சலீமின் பேராண்மை. சலீம் நுழைந்தவுடன் யானைகள் வட்டமாக நின்று ஏதோ சொன்ன பரிபாஷை மனசுக்குள் விரிந்த பெருநிலத்தில் அசைகின்றன. சலீமும் காட்டு யானைகளும் அமைதியாக நின்ற அந்த கணம்! சலீம் தன் அபாரமான வீரத்தையும் பெயரையும் கழற்றிவிட்டு ஒரு யானையாக மாறிய அந்த நொடி! அந்தக் குட்டி பயமில்லாமல் தளிர்நடை போட்டு முன்வந்த கோலம்! அத்தனை உள்ளங்களிலும் பொங்கி எழுந்த தாய்மையின் புதிய பந்தம் சுடர்ந்தது.

என்னைப்பற்றி அரைகுறையாகவேனும் கேள்விப்பட்டிருப்பார்கள். நான் யாரிடமும் சொல்லாத, சொல்ல விரும்பாத ஒன்று. இப்போதும் வெளிப்படையாக என்னால் கூறமுடியவில்லை. என் காதுகளில் விழ விரும்பாத ஒரு விசயம் வந்து விழும். அப்படியே கூனிக் குறுகச் செய்யும். என் தங்கை ஏன் ஓடிப்போனாள்? மதம் மாறினாள்? அவனை மணந்து வாழ்வதாகச் சொன்னார்கள். ரெண்டு குழந்தைகள்கூட உண்டு என்றார்கள். பெயர்கள் எழுப்பிய அந்நியச் சுவரை உடைத்து நொறுக்கி ரத்த உறவின் விழுதுகளைத் தொட்டுணர வேண்டும். பெயர்மாறிய போதும் அவள் தங்கை தானே! பெயரிலில்லை பிரியம். அவனையும் பிரியத்திற்குள் காண விழைய வேண்டும். என்னால் இதுபற்றி பேச முடியவில்லை. எனக்கு என் அம்மா, மனைவி, என் குழந்தைகள் அனைவரையும் வாரி அணைக்க வேண்டும். இன்னும் கைகளை விரித்து என் தங்கையின் குடும்பத்தையும் அணைக்க வேண்டும். வெயில் உக்கிரமாகத் தாக்குகிறது. வீடு நெருங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நாள்தான் பொறுமை காத்தார்கள். மறுநாள் அவர்களால் பொறுக்க முடியவில்லை. விடியற்காலை சண்முகம் அழைத்துக் கொண்டு போனான். மேல் தோட்டக்காரர்கள் எல்லாம் ஒன்றுகூடி கலைத்துப் பார்த்திருக்கிறார்கள். நடு ராத்திரியில் வந்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போய்விட்டன. யானை தாக்கியவர் பிழைப்பது சிரமம் என்று சொன்னார்கள். கருப்பராயன் கோயில் பக்கம் இருந்த நாலைந்து குடிசைகளை அடித்து நொறுக்கிவிட்டன. பொட்டிக்கடையைப் பிரித்து மல்லாத்தி பருப்பு, அரிசி எல்லாவற்றையும் தின்றுவிட்டன. துதிக்கையால் தூக்கி எறிந்தவரை அடுத்த அடிக்குச் சிக்காமல் கூட்டம் காப்பாற்றியிருக்கிறது. பிழைத்துத் திரும்பி வந்தால்தான் உண்டு.

கூட்டத்தில் சிலர் ஆண்டியப்பன் காட்டிற்குத் தீ வைத்து விடலாம் என்றார்கள். அது முடியாது என்று கூறிவிட்டோம். அதற்குப் பதிலாக கீழ்க்காற்று லேசாக வீசுவதைப் பார்த்து வடகிழக்கு மூலையில் மட்டைத்தாளை அம்பாரமாக அள்ளிப் போட்டு தீவைத்து வெடியும் துடும்பும் தட்டலாம் என்று யோசனை கூறினோம்.

தாள் தட்டைகளை கொண்டுவந்து அம்பாரம் அம்பாரமாக நீட்டிப் போட்டனர். நெருப்பு மூட்ட புகை எழும்பிக் கொடி வீசியது. லேசாக வீசிய கீழ்க்காற்று புகையை அள்ளி சோளக் காட்டிற்குள் கொண்டுசென்றது. நெருப்பு சிறு பனை உயரத்திற்கு எழும்பி வீசியது. வெடிகளைப் போட்டு துடும்பும் தட்டினார்கள். எல்லோரும் வடகிழக்கோரமே நின்று சத்தமிட்டார்கள். காற்று விசை கூடும்போதெல்லாம் சோளக்காடு பற்றிக் கொள்ளுமோ என்று பயந்தோம். நெருப்பின் புகை வாசம் சுழன்று சுழன்று சோளக்காட்டிற்குள் புகுந்தது. சிலர் மண்கட்டிகளையும் கற்களையும் எடுத்து வடகிழக்கு மூலையிலிருந்து எறிந்தார்கள்.

மூத்தது துவரஞ்சால் போட்ட நிலத்தின் வழியாக மெல்ல முன்னால் வந்தது. அதற்கடுத்து ஒரு பெரிய யானை. அதனை ஒட்டினாற்போல் ஈன்ற பசலைக் குட்டியைத் துதிக்கையில் சுருட்டி அள்ளி அணைத்தபடி தாய் வெளியேறியது. காளியண்ணன்தான் என்னை அந்தப்பக்கம் ஓடிவந்து பார்க்கச் சொன்னார். நானும் மருதனும் ஓடினோம். பிரசவித்த தன் குழந்தையை மருத்துவமனையிலிருந்து தாய் குடங்கையில் அணைத்து வெளியேறுவது போல் இருந்தது. குட்டியால் மலங்காட்டில் நடக்க முடியாது. குட்டி ஈன்ற தாய்க்குப் பின்வந்த தோழி விரைவாக முன்னேறி நழுவும் குட்டியைத் துதிக்கையால் கைமாற்றி ஏந்தியது. பின்னால் வந்த நல்ல பிராயத்து ஆண் யானையும் சின்னக் குட்டியானையும் காதுகளையும் வாலையும் வீசி வீசித் திரும்பித் திரும்பிப் பார்த்தன. தோழி இறக்கிவிட்ட குட்டியை மறுபடியும் தாய் வாரி எடுத்து அணைத்துக் கொண்டு சென்றது.