தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமியின் கதைகளில் தொன்மம்

by மானசீகன்
2 comments

எந்தக் கலைப் படைப்பும் அந்தரத்திலிருந்து கிளம்பி வருவதில்லை. ஏற்கனவே நிலைகொண்டிருக்கும் மரபுகளும் தொன்மங்களும் ஒரு படைப்பாளனின் நனவிலி மனதை ஆட்கொள்ளாமல் இருக்க முடியாது. மகத்தான படைப்பாளர்களின் படைப்புகளில் அவர்கள் வாழும் மண், பேசும் மொழி சார்ந்த தொன்மங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

தமிழில் புனைவெழுத்தின் முன்னோடியாகக் கருதப்படும் புதுமைப்பித்தன் பல தொன்மக் கதைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய ‘ சாப விமோசனம்’, ‘அகல்யா’ போன்ற கதைகள் இராமாயணத் தொன்மத்தையும், ‘அன்றிரவு’ மாணிக்கவாசகர் வரலாறையும், ‘சிற்பியின் நரகம்’, ‘கபாடபுரம்’ ஆகியவை தமிழ் வரலாறு சார்ந்த தொன்மங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.

தொன்மங்களை புதுமைப்பித்தன் சமகால நோக்கில் மீட்டுருவாக்கம் செய்தார். இராமனின் பாதம் பட்டு பெண்ணாண அகலிகையைப் பெண்ணியக் கோணத்தில் அணுகுகிறார். அதேபோல, பக்தி மரபு சார்ந்த கருத்தியலை அரிமர்த்தனப் பாண்டியன், தென்னவன் பிரம்மராயனின் மனங்கள் சார்ந்து உளவியல் பார்வையை முன்வைக்கிறார். ஆனால் தமிழ்த் தொன்மங்களை மட்டும் கட்டுடைக்காமல் மீயதார்த்த பாணியிலேயே அவற்றை எழுதியிருப்பார். அவருடைய சமகால எழுத்தாளர்கள் பலரும் தொன்மங்களை நவீன மனம் கொண்டு அணுகவில்லை.

கு.அழகிரிசாமி அடிப்படையில் யதார்த்தவாத எழுத்தாளர். கதைகளில் சோதனை முயற்சிகள் செய்ய வேண்டும் என்கிற பேராசைகூட இல்லாதவர். தன் முன்னால் கடல் போல் விரிந்திருக்கும் வாழ்வை அள்ளிப் பார்க்காமலேயே அழகிய தருணங்களைச் சுட்டிக்காட்டியவர். மனிதர்கள் அடைகிற மேன்மை அல்லது வீழ்ச்சி இரண்டையுமே கருணை பொருந்திய கண்களால் காணத் தெரிந்தவர் என்பதுதான் அவருடைய பலம்.

அவருக்குப் பழைய தமிழ் இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடு உண்டு. அதிலும் கம்பராமாயணம் என்றால் உயிர். ‘இனிமேல் குழந்தையை அடிக்க மாட்டேன். இது கம்பராமாயணத்தின் மீது சத்தியம்’ என்று டைரியில் எழுதியவர் அழகிரிசாமி. ஆனால் தமிழின் நவீன புனைகதையாளர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்திய இராமாயணத் தொன்மத்தை அவர் இரண்டு கதைகளில் மட்டுமே கையாண்டிருக்கிறார்.

‘மனசும் கல்லும்’ கதையை அழகிரிசாமி வித்தியாசமாக எழுதியிருப்பார். அந்தக் கதையில் இடம்பெறும் மனிதர் கதைக்குள்ளேயே ஒரு கதை படித்துக்கொண்டிருப்பார். அந்தக் கதையில் ஒருவன் இராமாயணம் குறித்து நவீனப் பார்வையோடு எழுதப்பட்ட ஒரு கதை குறித்து யோசித்துக்கொண்டிருப்பான்.

‘ராமனும் சீதையும் இலட்சியத் தம்பதிகள். பரம்பரை பரம்பரையாக அவர்களை இந்த விதமாகப் பாவித்து வந்திருக்கிறது மனித வர்க்கம். இன்று யாராவது ஒருவர் அதிசயம் போல் இராமாயண காவியத்தைத் துருவி ஆராய்ந்து சீதை ராமனுக்கு இன்ன சந்தர்ப்பத்தில் மறைமுகமாகத் துரோகம் செய்துவிட்டாள் என்று நிரூபித்து அது உண்மையாகவே இருந்துவிட்டாலும் தலைமுறைகள் தோறும் நாம் எழுதிப் பார்த்த சீதையின் சித்திரத்தை மாற்றி வேறு விதமாக எழுதிவிட முடியுமா? இதய உணர்ச்சியில் இடம்பெற்ற சீதை சிரஞ்சீவி. மாறுதலற்றவள். இன்று புதிதாக சிருஷ்டிக்கப்படும் சீதை வேறு, பழைய சீதை வேறு என்று கருதக்கூடியது மனித உணர்ச்சி. அறிவு ஒரு நிமிஷத்தில் மாறலாம், உண்மை ஒரு கணத்தில் பொய்யாகி விடலாம், ஆனால் நூற்றாண்டுக் கணக்கில் காட்டி வந்த உணர்ச்சி அவ்வளவு எளிதில் மாறிவிடுமா? படுக்கையில் புரண்டுகொண்டிருந்த ராஜாவுக்கு இதே சிந்தனைகள்…’ என்கிற இடம் வரை கதைசொல்லி கதையை வாசிப்பார்.

இந்தக் கதையை முழுமையாக வாசிக்க முடியாமல் அவருக்கு இரு தொந்தரவுகள் நேரும். தொட்டிலில் கிடக்கும் குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டிருக்கும். கொடியிலிருக்கும் துண்டு காற்றில் அசைவது காலடியோசயை நினைவூட்டி, ‘யாரும் வருகிறார்களோ?’ என்று வாசலைப் பார்க்க வைக்கும். மனைவி சாப்பிட அழைத்ததும் கதையைப் பாதியில் நிறுத்திவிட்டு குழந்தையை ஆட்டுவார். மனைவி கோபத்துடன் ‘நமக்கு ஒரு மனசோடு மனசைக் கல்லாக்கிக்கொண்டு வேலையைப் பார்க்க முடியவில்லையே.. அசட்டுப் பிள்ளையைப் பெற்றால்..’ என்று தொட்டிலை ஆட்டாமல் படித்துக்கொண்டிருந்த கணவனைக் குத்திக்காட்டிப் பேசுவார். ‘மனசை எவன்தான் கல்லாக்கியிருக்கிறான்? கல்லாக்கத்தான் முடியுமோ?’ என்று கணவன் சொல்வதோடு கதை முடிந்துவிடும்.

https://2.bp.blogspot.com/-koNc9gOvs6M/WPZyy3uoABI/AAAAAAAAK2k/HNmSJIesmJcqAKs7VSgwJFYxjFCZCLZ3QCLcB/s1600/PHOTO-4%2B%25283%2529_thumb%255B6%255D.jpg

இந்தக் கதையை புதுமைப்பித்தன் எழுதிய ‘சாப விமோசனம்’ கதையின் தொடர்ச்சியாகவே வாசிக்க முடியும். அந்தக் கதையில் இராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதை அறிந்தவுடன் அகலிகை ‘மீண்டும் கல்லாகி விடுவதாக’ அவர் எழுதியிருப்பார். அன்றிரவு படுக்கையில் சேர்ந்து முயங்கும் கௌதமனும் அவள் கண்களுக்கு இந்திரனாகவே தெரிவதாகப் புதுமைப்பித்தன் கதையை முடித்திருப்பார்.

புதுமைப்பித்தனை ஆழமாக வாசித்து அவரைக் கொண்டாடிய அழகிரிசாமி, அதற்கு எழுதிய மறுப்புக் கதையாகவே இதனைக் கருத முடியும். ஒருவகையில் இரண்டு கதைகளும் இருவேறு ஆளுமைகளின் முரண்பட்ட வாழ்க்கைப் பார்வையைச் சுட்டுகின்றன.

இந்தக் கதையில் பல்வேறு அடுக்குகள் உண்டு. இராமாயணக் கதை மாந்தர்கள், இராமாயணம் குறித்து நவீன நோக்கில் எழுதப்படும் எழுத்தாளனின் கதை மாந்தர்கள், அதை வாசித்துவிட்டுப் புலம்பும் கதையின் பாத்திரம், அதை வாசிக்கும் கதைசொல்லி, இந்தக் கதையைப் படிக்கும் நாம் என்று ஐந்து அடுக்குகள் கதையில் உண்டு. கதையில் வெவ்வேறு காலங்களில் பிரதிக்குள் பிரதியாக மனிதர்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

கதையை வாசிக்கும் கணத்தில் குழந்தையின் அழுகையைத் தொந்தரவாக நினைத்து அந்தக் கணவன் சில நிமிடங்கள் கல்லாகிப் போனது நிஜம்தான். அவன் கல்லாகிக் கிடக்கிற கணத்திலேயே துண்டின் அசைவை ‘காலடியோசையாகக் கருதுகிறான்’ என்று நுட்பமாக அகலிகை கதையை  இங்கு இணைத்துவிடுகிறார். (தலைப்பு- மனசும் கல்லும்) ஆனால், அடுத்த நிமிடமே கல் கரைந்து தொட்டிலை ஆட்ட வந்துவிடுகிறது. இந்த உலகத்தில் எந்த மனிதருமே கல்லாகவே இருந்துவிட முடியாது என்ற வேறொரு தரிசனத்தை கதை முன்வைக்கிறது.

‘மனிதர்கள் இயல்பாக பலவீனங்களுக்கு ஆட்படுகிறவர்கள். உயர்ந்த மனிதர்களும் விதிவிலக்கில்லை’ என்று கையும் களவுமாகக் குற்றவாளிகளைப் பிடித்து புதுமைப்பித்தன் கூண்டில் நிறுத்தினால், ‘தவறு செய்தது நிஜம்தான், ஆனால் இது மட்டுமே அவனில்லை’ என்று அதே தொன்மத்தைப் பீனல்கோடாகச் சுட்டிக்காட்டி அழகிரிசாமி விடுதலை செய்துவிடுகிறார். இருவேறு படைப்பு மனநிலைகளுக்கு இராமாயணத் தொன்மம் மிக அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

‘திரிவேணி’ என்கிற கதையில் இராமன், தியாகைய்யர், திருவையாறில் வசிக்கும் உயிரினங்கள் ஆகிய மூன்றும் காலபேதமற்று, ஆள் பேதமற்று ஒன்றாகி விடுகிற நிலையைச் சித்தரித்திருக்கிறார். அழகிரிசாமி ரொமாண்டிசிஸ மனநிலையில் எழுதிய கதைகள் மிகவும் குறைவு. குழந்தைகளைப் பற்றி எழுதுகிற போது அவருக்குள் குடியேறி விடுகிற அபூர்வமான கனிவுகூட ரொமாண்டிசத் தன்மை கொண்டதன்று. வாழ்வின் அத்தனை பாடுகளையும் அடுக்கிக் காட்டிவிட்டு அவற்றின் நடுவே பூக்கிற புத்தம் புது மலராகவே அவர் குழந்தைகளின் உலகைத் திரைவிலக்கிக் காட்டுகிறார். ஆனால் இந்தக் கதை முழுக்க முழுக்க ரொமாண்டிஸத் தன்மை கொண்ட கதை.

பல நூற்றாண்டுகள் கழித்து தன் ஒட்டுமொத்த வாழ்வையும் அதே உணர்வோடு தியாகைய்யரின் துதிப்பாடல்களில் இராமன் தரிசிக்கிறான். அவர் இசையில் தந்த தாம்பூலம் உதடுகளில் சிவக்கிறது. அவரைக் காண்பதற்காக இராமன் சீதையோடு திருவையாறுக்கே செல்கிறான். இவர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழையும் போது தற்செயலாக வரவேற்புக் கீதத்தைப் பாடிக்கொண்டிருக்கும் தியாகய்யர், பாடலில் இருவரையும் வரவேற்கிறாரே தவிர நிஜத்தில் எழுந்து நின்று வரவேற்கவில்லை. அந்த ஊரே திரண்டு அவர்களைத் தரிசிப்பதற்காக வரும்போது இராமன் ஒவ்வொரு உயிர்களிடத்திலும் வேறொன்றைத் தரிசிக்கிறான்.

‘தெய்வாம்சம் மனித நிலைக்கு வந்தது. மனிதாம்சம் தெய்வ நிலையை எட்டியது. இந்த நிலைமாற்றம் இரண்டு அம்சங்களுக்குமே பெருமையை அளித்தது. இரண்டும் சந்தித்துக்கொண்டே மத்திய உலகமும் தெய்வ உலகமும் மனித உலகமும் ஒன்றாகிவிட்டன. எப்பேர்ப்பட்ட திரிவேணி சங்கமம்? இந்தச் சங்கமத்தில் தெய்வமும் மனிதமும் மட்டுமல்ல. விலங்கினங்களும் தாவரங்களுமே வந்து கலந்துவிட்டன’ என்று திரிவேணி சங்கமத்தை அழகிரிசாமி வர்ணிக்கிறார்.

‘ராமா, நீ எங்கள் ஊரிலேயே இருந்துவிடேன்’ என்று ஒரு பாட்டி கேட்க, ‘பாட்டி! நீ இங்கே இருக்கிறாய் அல்லவா? நான் இருந்தாலும் ஒன்றுதான், நீ இருந்தாலும் ஒன்றுதான் பாட்டி’ என்று இராமன் விடை கூறுவதோடு கதை முடிந்துவிடுகிறது.

https://gumlet.assettype.com/vikatan%2F2019-06%2F4909ef81-8fda-4c73-bb7d-f77cab6fff44%2Fp100c_1559289227.jpg?auto=format%2Ccompress&format=webp&w=360&dpr=2.6

அவதாரமாக மண்ணில் இறங்கியும் மனைவியை நிலம் விழுங்குவதைக் கண்ட குற்ற உணர்வோடு வில்லை வீசி எறிந்துவிட்டு சரயூ நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட இராமனைத் தியாகய்யரின் வழியாக மீண்டும் எழுப்பி ஞானத்தை உணர வைக்கிறார். தெய்வமாக இருந்தாலும் ‘சகல உயிர்களும் ஒன்றென்று உணர்தலே’ வாழ்வின் பொருள் என்பதை இராமன் உணர்ந்துகொள்வது மாதிரி கதையை முடித்திருப்பார்.

அழகிரிசாமி தொன்மம் சார்ந்த கதைகளை எழுதுகிற போது சமகாலச் சிந்தனைப் போக்கிற்கேற்ப கதையின் அடிப்படையை மாற்றுவதோடு நின்றுவிடுவதில்லை. கதாபாத்திரங்களையும் புதியவர்களாக்கி விடுகிறார்.

எமனிடம் போராடி தன் கணவன் சாத்தியவானின் உயிரை சாவித்திரி காப்பாற்றினாள் என்பது இந்து மதத் தொன்மம். இந்தத் தொன்மம் சத்தியவானின் தவ வாழ்க்கை, சாவித்திரியின் பதி பக்தி, எமனின் தயாள குணம் ஆகியவற்றைப் புனிதங்களாக முன்னிறுத்துகிறது. அழகிரிசாமி எழுதிய ‘சத்தியவான்’ கதையில் இந்த மூவரின் குணச்சித்திரமே மாறிவிடுகிறது. அவர் சத்தியவானை ஆச்சாரங்களை யதார்த்த நோக்கில் அணுகத் தெரியாத கூட்டுப்புழுவாகவும் சாவித்திரியைத் தந்திரங்கள் நிறைந்த வாயாடியாகவும் எமனை மாட்டிக்கொண்டு முழிக்கும் அப்பாவியாகவுமே சித்திரித்திருக்கிறார்.

பொதுவாக, புதுமைப்பித்தனைப் போல் அழகிரிசாமியின் நகைச்சுவைத் திறத்தை யாரும் பேசுவதில்லை. அழகிரிசாமியின் நகைச்சுவைத் திறனின் நுட்பத்திற்குச் சான்று பகர்கிற கதை இது. அவர் நகைச்சுவையை மேலோட்டமான சொல் விளையாட்டாகக் கருதாமல் ஆழமான கருத்தியல் வடிவமாகவே உணர்ந்திருக்கிறார். அவருடைய நகைப்பு, வாழ்வின் அவலங்களைக் கேலிசெய்யும் குரூரம் கொண்டதாக இருப்பதில்லை. மனிதர்களின் மனசாட்சியைத் தொட்டு எழுப்பும் கருணையின் குரலே அவருடைய நகைச்சுவையிலும் ஒளிந்திருக்கிறது.

சாவித்திரியை மிரட்டுவதற்காக எமன் நரகத்தைக் காட்டுவான். அதைப் பார்த்ததும் அவள், ‘எங்கள் ஊரைவிட இது பலமடங்கு விசேஷமாக இருக்கிறது. அதனால்தான் இங்கே வந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு பூலோகத்தில் இருப்பவர்கள் பெரும் பாவங்களைச் செய்கிறார்கள் போலிருக்கிறது’ என்று பயப்படாமல் கேலி செய்வாள்.

ஒரு சிறுவனை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு தண்டனை தருவார்கள். சாவித்திரி ‘இவன் செய்த குற்றம் என்ன?’ என்று கேட்பாள். இவன் மேல்சாதிக்காரனுக்கு ஒரு பலகாரம் தந்துவிட்டான். அது தீட்டல்லவா? அதனால் அவனுக்குப் பாவம் வந்துசேரும். அதிலிருந்து அவன் மீள பல ஜென்மங்கள் ஆகும். இதனால் பூமியில் வர்ணக்குழப்பம் ஏற்படும் அல்லவா? அதனால்தான் இவனுக்குத் தண்டனை தருகிறோம்’ என்று எமன் கூறுவதாக எழுதியிருப்பார். வர்ணாசிரமத்தின் அபத்தத்தையும் கர்ம வினை குறித்து சாஸ்திரங்கள் உருவாக்கி வைத்திருக்கும் முட்டாள்தனத்தையும் இதைவிட நுட்பமாக எவரும் கிண்டல் செய்ய முடியாது.

சாவித்திரியின் விடாப்பிடியான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத எமன், ‘சத்தியவானுக்கு இப்படிப்பட்ட மனைவியா கிடைக்க வேண்டும்?’ என்று கவலைப்படுவான். அதோடு நிறுத்தாமல், ‘பூலோகப் பெண்கள் கற்போடிருப்பது தேவர்களுக்கு எவ்வளவு அபாயமாக இருக்கிறது? அதனால்தான் நம் தேவர்கள் அவ்வப்போது பூலோகத்துக்குப் போய் குல ஸ்திரீகளின் கற்பை அபகரித்துவிடுகிறார்கள்’ என்றெழுதி அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்திருப்பார். அங்கதக் கதையாக மட்டுமே முடித்துவிடாமல் சமூகம் சார்ந்த விமர்சனத்தோடு கதையை நிறைவுசெய்திருப்பார் அழகிரிசாமி.

எமனிடம் பிள்ளை வரம் பெற்று அதைச் சாக்காக வைத்தே தர்க்கம் பேசி கணவன் உயிரை மீட்ட சாவித்திரி, வயிற்றில் பிள்ளையோடு திரும்பி வருவாள். இப்போது மறுபிறப்பு எடுத்துவந்த சத்தியவான், ‘நான் உன் கணவன்தான். ஆனால் நான் ஏற்கனவே இறந்துவிட்டதால் நீ விதவையாகி விட்டாய். விதவையை மனைவியாக ஏற்பது சாஸ்திர விரோதம்’ என்று தர்க்கம் பேசி அவளை நிராகரிப்பான். தனக்கே நன்மை செய்துகொள்ள முடியாத நிலையிலும் தனக்கு நன்மை செய்கிறவர்களைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலையிலும் சாஸ்திரங்கள் மனிதர்களை வைத்திருப்பதைத் தொன்மத்தின் துணையோடு அழகிரிசாமி நுட்பமாக இந்தக் கதையில் அடையாளம் காட்டியிருக்கிறார்.

‘திரிபுரம்’ கதையின் தலைப்பும் கடைசி வரிகளும் சைவத் தொன்மத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. தேவர்களைக் காப்பதற்காக அசுரர்களுடன் நிகழும் போரில் சிவன் திரிபுரத்தை எரித்துவிட்டு வெறிச்சிரிப்போடு நடமாடுவதை சைவ இலக்கியங்கள் காட்சிப்படுத்தியிருக்கின்றன. சைவச் சித்தாந்தம் திரிபுரத்துக்கு ‘கன்மம், மாயை, ஆணவம்’ என்று குறியீட்டு விளக்கம் தருகிறது.

https://gumlet.assettype.com/vikatan%2F2019-06%2F084979f0-4400-4567-b521-96cb581689bf%2Fp100e_1559289320.jpg?auto=format%2Ccompress&format=webp&w=360&dpr=2.6

‘திரிபுரம்’ கதை வறுமையால் பசியின் கொடுமையை அனுபவித்து வேறுவழியின்றி உடம்பை விற்றுப் பிழைத்ததால் கையில் கிடைத்த காசைப் பார்த்து ஒரு இளம்பெண்ணுக்கு வருகிற கட்டற்ற சிரிப்பை காட்சிப்படுத்தி அதனை சிவனோடு ஒப்பிடுகிறது.

‘வலது கையிலிருந்து இடது கையில் பணத்தைப் போட்டாள். இடது கையிலிருந்து வலது கையில் போட்டாள். வியந்து வியந்து பார்த்த வண்ணம் பணத்தைக் கையில் போட்டுக் குலுக்கினாள். எவ்வளவு எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்துவிட்டது என்பதை நினைக்கும் போது அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. உரக்கச் சிரித்தாள். விட்டுவிட்டுப் பலமுறை சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பிரம்படியைப் போல் அவள் சிரிப்பு எங்கெல்லாம் பிரதிபலிக்க இருந்ததோ அவளுக்கே தெரியாது. அவள் மனிதன் கட்டிய ஒழுக்கத்தை நோக்கிச் சிரித்தாள். ஒழுக்கக்கேட்டை நோக்கிச் சிரித்தாள். நாகரீகத்தையும் அநாகரிகத்தையும் பார்த்துச் சிரித்தாள். பணக்காரர்களை, ஏழைகளை, ஆண்களை, பெண்களை, பஞ்சத்தை – இப்படி எத்தனையோ அடங்கிய உலகத்தை நோக்கிச் சிரித்தாள். சிவன் சிரித்து திரிபுரத்தை எரித்தான். இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ?’ என்று கதையை நிறைவுசெய்திருப்பார்.

மனிதர்கள் உருவாக்கிய ஒழுக்கக் கோட்பாடுகள், வர்க்க வேறுபாடுகள், ஆண் பெண் ஈர்ப்பின் போலித்தனங்கள் ஆகிய மூன்றையும் அவள் சிரிப்பு எரிக்க முயல்வதாக இந்தக் கதையை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ‘விபச்சாரம் என்பது தனிமனிதத் தவறு இல்லை, சமூகம்தான் அதற்குக் காரணம்’ என்பதை மாணிக்கவாசகர் வரலாற்றில் வருகிற சிவன் பிரம்படிபட்ட தொன்மத்தின் வழி உணர்த்துகிறார்.

கடவுளையும் ஒரு கதாபாத்திரமாக்கி கதை எழுதுகிற விஷயத்தில் அழகிரிசாமியையும் புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சுவாரஸ்யமான பார்வைகள் கிடைக்கும்.

புதுமைப்பித்தனுடைய மிக முக்கியமான கதைகளில் ஒன்று ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’. அந்தக் கதையில் புதுமைப்பித்தன் பல சைவத் தொன்மங்களைப் பயன்படுத்தியிருப்பார். குழந்தையைச் சிவன் உற்றுப் பார்ப்பதைக் கண்டவுடன் ‘விட்ரும் ஓய்! கருவாப்பிலை கொத்து மாதிரி ஒத்த புள்ளை வச்சிருக்கேன்’ என்று கந்தசாமிப்பிள்ளை எச்சரிக்கையோடு பேசுவார். சிவன் சிறுதொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்ட கதையை நினைவூட்டுவது மாதிரியான பல இடங்களைக் கதையில் காண முடிகிறது. அந்தக் கதையில் கடவுளுக்கு லௌகீக வாழ்க்கையின் துயரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கடைசியில் ‘உங்க கூடவெல்லாம் எட்ட நின்னு வரம் கொடுக்கத்தான் முடியும், சேர்ந்து வாழ முடியாது’ என்று கடவுள் சொல்ல, கந்தசாமிப்பிள்ளையோ ‘ஒங்க இனமே அதுக்குத்தானே லாயக்கு’ என்று கிண்டல் செய்கிறார். லௌகீக வாழ்வின் துயரங்களைத் தாங்க முடியாமல் கடவுள் ஊரைவிட்டு ஓடிவிடுவதாகப் புதுமைப்பித்தன் கதையை முடித்திருப்பார்.

‘வேதாளம் சொன்ன கதையில்’ ஊரையே பயமுறுத்தும் வேதாளத்தைக் கதைசொல்லி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிடுவார். வட்டாட முடியாமல் ஒரு சின்னக் குழந்தையிடம் சிவன் தோற்றுப்போவார். ‘ஆட்ட விதிமுறை தெரியலை’ என்று சமாளிக்கும் சிவனை, ‘விதிமுறை தெரியாம ஆட வரலாமோ?’ என்று குழந்தை வாயை மூடச்செய்துவிடும். கண் தெரியாத கிழவி உயிரைப் பறிக்க வந்த எமனையே வேலை வாங்கிவிடுவாள். (காலனும் கிழவியும்) அவருடைய கதைகளில் கடவுளர்களோ, வானுலகத் தேவர்களோ மனிதர்களைக் கண்டு அஞ்சுகிறவர்களாக, லௌகீகப் பாரத்தைத் தாங்க முடியாமல் ஓடிவிடுகிறவர்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘கடவுள்’ என்கிற தத்துவத்தைவிட மனிதர்களின் அன்றாடப் பாடுகளே புதுமைப்பித்தனுக்கு முக்கியமானதாக இருக்கின்றன.

அழகிரிசாமி கதைகளைப் பொறுத்தவரை இதற்கு நேர் எதிராக சக உயிர்கள் மீது உருவாகும் கருணையால் மனிதர்கள் அடையும் அக விடுதலையை அவர் கடவுளுக்கும் சேர்த்து வழிமொழிவதைப் பார்க்க முடியும்.

‘மதுரையை ஆண்ட  செண்பகப் பாண்டியனுக்குப் பெண்களின் கூந்தலுக்கு மணம் இயற்கையா? செயற்கையா?’ என்று சந்தேகம் வருகிறது. சங்கப் புலவர்களால் அவன் சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியவில்லை. தருமிக்குச் சிவன்,

‘கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ?
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
நறியவும் உளவோ நீயறியும் பூவே’

என்று பாடல் எழுதித்தர நக்கீரர் அதன் கருத்தை ஆட்சேபிக்கிறார். சிவன் நேரில் வந்து நெற்றிக்கண்ணைக் காட்டி மிரட்டியும் நக்கீரர் மசியவில்லை. அதே கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

‘கற்றைவார் சடையார் நெற்றிக்கண்ணினைத் திறந்துகாட்ட
பற்றுவான் இன்னுமஞ்சான் உம்பரார் பதிபோலாக
முற்று நீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமேயென்றான் தன்பாலாகிய குற்றந் தேரான்’

என்று திருவிளையாடல் புராணம் அந்தச் சம்பவத்தை வர்ணிக்கிறது. நெற்றிக்கண்ணால் சிவன் நக்கீரரை எரித்த பிறகு நிகழும் சம்பவங்களை அழகிரிசாமி கற்பனை செய்து ‘வெந்தழலால் வேகாது’ என்கிற கதையை எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் சமகாலத்திற்கேற்ப ஏராளமான விஷயங்களைப் புதிய கோணத்தில் பேசுகிறார்.

சிவனின் மிகப்பெரிய ஆயுதமாகவும் ஞானத்தின் அடையாளமாகவும் போற்றப்படும் நெற்றிக்கண்ணை மீனாட்சியை வைத்து விதவிதமாகக் கேலிசெய்கிறார்.

https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/3/26/15/original/ku%20alagirisamy.png

‘அவன் விதி அப்படி. நிஷ்டை கலைந்து கண்ணைத் திறந்தபோது உங்கள் நெற்றிக்கண் முதலாவதாகத் திறந்துவிட்டது’ என்று மன்மத தகனத்தைக் கிண்டல்செய்கிறார். ‘நீங்கள் மன்மதனை எரித்த பிறகும் நாம் பிள்ளைக் குட்டிகளோடு வாழ்கிறோம்’ என்று நுணுக்கமாகப் பகடிசெய்ய வைத்திருக்கிறார். காமத்தை மனிதன் ஞானத்தின் வழியாகவே எரித்துச் சாம்பலாக்க முடியும். அதற்கான குறியீடே நெற்றிக்கண்’ என்று சித்தாந்திகள் தரும் விளக்கத்தைப் பெண்ணின் கேலியால் மறுத்திருக்கிறார்.

‘இந்த நெற்றிக்கண் கொண்டு நீங்கள் முதலில் எரித்தது உங்கள் சிந்தனாச் சக்தியைத்தான்’ என்று சக்தி சிவனைக் குற்றம்சாட்டுவதாக ஓர் இடம் வரும். அதன் மூலம் நெற்றிக்கண்ணுக்கான மரபான பொருளே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

அந்தக் கதையில் ‘அதிகாரம்’ இலக்கியத்தைக் கட்டுப்படுத்துகிறது என்கிற கோணமும் இடம்பெற்றிருக்கிறது. கடைசி வரை இருவருமே தங்கள் பக்க நியாயத்தை நிரூபிக்கவில்லை. நக்கீரர் எதிர்வாதம் செய்தார். சிவன் எரித்தவுடன் மன்னிப்பு கேட்டு பொற்றாமரைக் குளத்திலிருந்து எழுந்தார். அரசனின் அதிகாரம் அற்ப விஷயத்தைக்கூட சபையில் பேசுபொருளாக்குகிறது. தலைமைப் புலவரான நக்கீரனின் அதிகாரம் எளிய மனிதனை அறிவின் பெயரால் ஒடுக்க நினைக்கிறது. சிவனின் ஆன்மீக அதிகாரம் எதிர்க்கேள்வி கேட்டவரை அழிக்க நினைக்கிறது. அதிகார விளையாட்டுக்கு நடுவே ‘இலக்கிய ஆராய்ச்சி’ காணாமல் போய்விடுகிற முரணை அழகிரிசாமி நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார். கடைசியில் தருமி தான் பெற்ற பொற்காசுகளைக் கோவிலிலேயே வைத்துவிட்டுப் போகிற இடம் அழகிரிசாமியின் கலை மேதைமைக்குச் சான்று.

இந்தக் கதையில் சிவனை அகங்காரத்தில் சிக்கித் தவிப்பவராக அழகிரிசாமி சித்தரித்திருக்கிறார். அறிவின் குறியீடாகச் சித்தாந்திகளால் விளக்கப்படும் நெற்றிக்கண் இங்கே அகங்காரத்தின் குறியீடாக உருமாற்றம் பெறுகிறது. நக்கீரனுக்கு வழங்கிய மன்னிப்பு அகங்காரத்தை இன்னும் கூட்டுகிறது. வெந்தழலாக எரிந்துகொண்டிருக்கும் சிவனின் மேனி தருமியின் செயலால் கூடுதலாகக் கொதிப்படைவதாகக் கதை முடிகிறது.

ஆனால் அகவிடுதலையின்றி சிவனை அந்தரத்தில்விட அழகிரிசாமிக்கு விருப்பமில்லை. இதன் தொடர்ச்சியாக ‘விட்ட குறை’ என்று மற்றொரு கதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் யுகங்கள் கடந்தும் சிவன் அகங்காரத்தின் சூட்டில் வெந்துகொண்டிருப்பார். அவரால் அர்த்தநாரியாகக்கூட இருக்க முடியாது. சக்தியை விட்டு விலகி வெறும் லிங்கமாகச் சுருண்டிருப்பார்.

அர்த்தநாரீஸ்வரராக இருக்க முடியாத வெறும் லிங்கத்தை ‘மனிதத் தன்மைகளின் சிறுமைகளில் அடிபட்டதால் அதன் மூலம் தெய்வாம்சத்தின் பூரண உருவம் விகாரப்பட்டு மாறிப்போனதால் அவன் உருவத்துக்கு லிங்கம் பொருத்தமான கூண்டாக இல்லை. கையையும் காலையும் மடக்கி ஒடுக்கி மூச்சுத் திணறும்படியாகச் சிவன் உள்ளே உட்கார்ந்து திக்குமுக்காடித் தவித்தான். ஸ்தானம் தெய்வ ஸ்தானம் அல்லவா?’ என்று கேலியோடு வர்ணித்திருக்கிறார்.

‘சிவன் கீரனை எரித்த பிறகு சிவனைப் போலவே புலவர்களும் யார் பெரியவர்?’ என்கிற அகங்காரத்தில் தவிக்கின்றனர். நோயாளியாகிவிட்ட வைத்தியநாதனிடமே மருந்தைத் தேடி வருகின்றனர்.

சிவன் தன் மீட்சிக்கான வழியைத் தானே கண்டறிந்து மீனாட்சியிடம் கூறுமிடம் அழகானது. ‘இந்த அகங்காரத்தை வெல்ல இன்னும் அகங்காரம் பெருக வேண்டும். இல்லையெனில் மனிதர்களிலும் கீழாக நான் தாழ்ந்து போக வேண்டும்’ என்று சிவன் பேசுவார்.

‘எங்கள் வாதங்களுக்குத் தற்காலிகத் தீர்வை அகத்தியரோ தொல்காப்பியரோ தரலாம். நிரந்தரத் தீர்வை உங்கள் தண்டனையே தர முடியும்’ என்று புலவர்கள் நுட்பமாகச் சிவனைச் சீண்டி குற்ற உணர்வுகொள்ள வைக்கின்றனர். சிவன், ‘தன்னால் தீர்வுசொல்ல முடியாது. ஊமைச் சிறுவன் தனபதியே என்னைவிட அறிந்தவன்’ என்று தன்னைத் தாழ்த்திக்கொண்டு லிங்கத்திலிருந்து விடுபட்டுத் தற்காலிக விடுதலை அடைகிறான். ஆனால் சிவன் சொன்னதாலேயே தனபதி கொண்டாடப்படுகிறான். அவனே விரும்பாவிட்டாலும் ‘அகங்காரம்’ சிவனைத் துதித்தல் என்கிற பெயரில் பிறரால் தொடர்ந்து வளர்க்கப்படுகிறது. ‘இடைக்காடன்’ என்கிற புலவன், ‘உன் நாமத்தைப் புகழ்ந்து பாடிய என் பாடலை மன்னன் மதிக்கவில்லை. இது தகுமோ?’ என்று கனலை ஊதி விடுகிறான். சிவன் வெந்தழலைத் தாங்க முடியாமல் மதுரையை விட்டே வெளியே செல்கிறான்.

‘இடைக்காடன் மேனியில் கீரன் தோன்றிய அதே நேரத்தில் சிவன் மேனியிலும் கீரன் தோன்றினான். அன்று தெய்வப் பீடமாகிய கோவில் லிங்கத்தில் சிவனால் சுகமாக அமர்ந்துகொள்ள முடிந்தது’ என்று அழகிரிசாமி கதையை நிறைவுசெய்கிறார். அகங்காரம் கடந்து  கருணையால், ‘எத்துனையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல்’ எண்ணுகிற ஞானநிலையை மனிதர்கள் அடைந்து அகவிடுதலை பெறுவதை அழகிரிசாமி சிவனுக்கும் பொருத்திப் பார்க்கிறார். கடவுள் மனிதனாக இறங்கி வருகிறபோது லௌகீகத்தின் சிறுமைகளை எடுத்துக்காட்டி துரத்திவிடாமல் மானுடத்தின் உச்ச தரிசனமாகிய ‘அக விடுதலையை’ கடவுளுக்கும் பரிசளிக்கிற இடத்தில் அழகிரிசாமியின் கதைகள் தனித்து நிற்கின்றன.

-தொடரும்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 1
  2. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 2
  3. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 3
  4. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்

2 comments

மா.உமா லீதியாள் July 27, 2021 - 5:20 pm

கதையாடல் கலை. கதை பதித்தல் நுணுக்கமான கலை. புராணக் கதைகளை நடைமுறை வாழ்வியோடு ஒப்பிட்டு ஒரு நிறுத்தத்தையோ, ஒரு தொடர்ச்சியையோ, புதிய பரிமாணத்தையோ , கொண்டு வந்து நிறுத்துதல் பெரிய கலை. பார்வைச் சுதந்திரங்களைச் சொல்ல ஒரு கதை தூண்டிவிடப்படும்போது அது மிகப் பெரிய தளத்தில் நிற்கிறது என்று பொருள். இருவரின் ஆளுமைகளையும் சிந்தாமல் சிதறாமல் ஆய்ந்து அவற்றின் புனிதத்தை அவர்கள் போக்கிலே ஒப்பிட்டு திருமூலராய் நின்றவர் யார் என்பதை தம் எழுத்துகளால் நிர்ணயம் செய்யும் கலை ஆகப்பெரிய பெரிய கலை. அது மானசீகன் ஐயாவிற்கு மிகப்பெரிய வரம். தொடரட்டும் உங்கள் எழுத்துச் சிவன் ஆட்டம். அன்பும் வாழ்த்தும்.

Dr. கோ. சுப்புலெட்சுமி July 28, 2021 - 10:03 pm

மிகச் சிறப்பான இலக்கிய ஆய்வு ஐயா. தருமிக்கு பொற்கிழி வழங்கிய விளையாடலை கதை வேறொரு கோணத்தில் பார்ப்பது அற்புதம். நன்றி வாழ்த்துக்கள்

Comments are closed.