ஹெர்டர் (பகுதி 2) – இரா. குப்புசாமி

0 comment

ஐரோப்பிய வரலாற்றை ஆழ்ந்து வாசித்தால் ஓர் உண்மை புலப்படும். அது ஜெர்மானிய மண்ணின் தனித்த வாசனை. காலம் காலமாக அது தன்னைத் தனிமைப்படுத்தியே அடையாளம் கண்டிருக்கிறது. மற்றச் சமயங்களை, அவற்றின் தெய்வங்களை ஜெர்மானிய பழங்குடித் தொன்மங்களும் அவை காட்டிய தெய்வங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தே வந்திருக்கின்றன. சமரசம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.

மேற்கிலிருந்து வந்த யூத, கிறித்துவ சமயங்களையும், கிரேக்க, உரோமானிய தத்துவங்களையும், கலாச்சாரங்களையும் எப்போதும் அது எதிர்த்தே நின்றிருக்கிறது. பல சமயங்களில் தகர்த்து அழித்திருக்கிறது. காலத்துக்கு ஏற்றாற்போல், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் ஒன்றை எதிர்க்க மற்ற பிற சக்திகளுடன் தற்காலிக உடன்பாடு செய்துகொள்வதும் அதன் இராஜதந்திரம். ஆனால் தன் நோக்கத்தை மட்டும் அது மறந்ததே யில்லை. யூத சமய எதிர்ப்பு ஜெர்மானிய மண்ணில் பூதாகரமாக வளர்ந்து ஹிட்லரின் வடிவில் இலட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்றது என்பது அதன் ஒரு முகம்தான். அதற்கு முன்பே உரோமானியப் பேரரசைத் தரைமட்டமாக்கியது ஜெர்மானியப் பழங்குடியினரின் படையே. வெளிப்படுத்தப்படாத காரணம், கிறித்துவ சமயம், தான் பரவ உரோமானியப் பேரரசை ஓர் ஊடகமாக கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது தான். உரோமின் அரச மதமாக ஆனது அது. ஜெர்மானியர் கிறித்துவ சமயத்தின் பேரில் கொண்ட கோபம் உரோம் சாம்ராஜ்யத்தின் மேல் திரும்பியது.

அதேபோல் இரண்டாம் உலகப் போரில் தன் முக்கிய அரசியல் எதிரியான இங்கிலாந்தின் மேல் பாயாமல் உருசியா மீது ஹிட்லர் படை எடுத்ததற்கும் ஒரு காரணம் உருசியாவில் கிறித்துவ சமய ஆதிக்கம் கோலோச்சியதே. அதை ஒடுக்குவதே ஹிட்லரின் அந்தரங்க நோக்கம். வெளியில் சொன்ன அரசியல் காரணங்கள் இரண்டாம் பட்சமே.

‘இந்த வாதத்தில் ஓர் ஓட்டை உள்ளதே? ஜெர்மன் தேசத்தில் காலம் காலமாக கிறித்துவம்தானே ஆட்சி செய்து வந்திருக்கிறது?’ என்ற வினாவுக்கு விடை இதுதான். நேரடியாக எதிர்க்க முடியாதபோது, ஏற்றுக்கொள்வதைப் போல் நடித்து, சீர்திருத்தம் மற்றும் அரசியல் பகை என்ற காரணங்களைக் காட்டி எதிரியின் பலத்தைச் சூறையாடுவது அல்லது குறைப்பது என்ற உத்திதான்.

ஜெர்மானிய மார்ட்டின் லூதர் செய்ததும் இக்காரணம் பற்றியே. புரோட்டஸ்டண்ட் பிரிவைக் கிறித்துவ சமயத்திற்கு உள்ளிருந்தே தொடங்கி, உரோம் நகரிலிருந்து ஆண்டு ஐரோப்பிய மன்னர்களையும் அடிமைகளாக நடத்திய கத்தோலிக்க மதகுரு போப் ஆண்டவரின் தகாத நடவடிக்கைகளைக் குறைகூறி எவ்வளவு பஞ்சமா பாதகம் செய்தவனாயினும் ஒரு விலை கொடுத்து போப் ஆண்டவரிடம் மன்னிப்புச் சீட்டு என்ற திருவுளச் சீட்டைப் பெற்றுக் கொண்டால் போதும், ஒருவனுக்குச் சொர்க்கத்தில் இடம் நிச்சயம் போன்ற செயல்களை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார். அவருக்குத் துணையாக ஜெர்மன் தேசத்தில் அதுவரை தமக்குள் சதா சர்வ காலமும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் தம் கட்சிக்கு ஓர் ஆள் திருச்சபைக்கு உள்ளிருந்தே கிடைத்தான் என்று மகிழ்ந்து மார்ட்டின் லூதரின் கரத்தை வலுப்படுத்தினர். அதுவரை ஐரோப்பா கண்டத்தின் ஒற்றை ஆதிக்கச் சக்தியாக இருந்த கத்தோலிக்கத் திருச்சபை லூதரைத் தொடக்கூட முடியவில்லை. ‘தெய்வங்களின் கைகள் மனிதர்கள்’ என்ற பழமொழிக்கேற்ப மார்ட்டின் லூதர் ஒரு கருவியானார் – பிரும்மாண்ட ஆலமரம் போல் வளர்ந்திருந்த கிறித்துவ சமயத்தைப் பிளவுபடுத்த.

அப்பிளவைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தன மறுமலர்ச்சி இயக்கமும் பகுத்தறிவு வாதமும் இவற்றின் பிள்ளையான விஞ்ஞானமும். அந்த விஞ்ஞானம் ஈன்ற பிள்ளையான தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து, இரயில், தந்தி, கார் போன்ற வாழ்க்கை வசதிகளைத் தந்தது. புதிய வர்க்கம் – பூர்ஷ்வா என்ற முதலாளிய வர்க்கம் தோன்றியது. யுகங்களாக முடிமன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் மட்டுமே உரிமையாக இருந்த ஆடம்பரங்கள் சாதாரண குடிமக்களில் ஒரு பகுதியினருக்கும் சொந்தமாயின. மண்ணிலேயே அமர லோக வாழ்க்கையைக் காட்டுவோம் என்ற விஞ்ஞானிகளின் ஓங்கி ஒலித்த குரலை மக்கள் நம்பத் தலைப்பட்டனர். திருச்சபையின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இன்று அது பெயரளவுக்கு ஒரு நிறுவனம். அவ்வளவுதான்.

இம்மாபெரும் எதிர் இயக்கத்தின் விதை ஜெர்மானிய மொழிவழி தேசியவாதம். அதன் தந்தைகளுள் ஒருவர்தான் யோஹன் கோத்ப்ரீடு ஹெர்டர் (1744-1803). இவரும் மார்ட்டின் லூதரைப் போல் ஒரு கிறித்துவப் பாதிரியார். உள்ளத்தால், உணர்வால் ஒரு ஜெர்மானிய தேசியவாதி. இவருடைய சீடர்தான் ஜெர்மானிய இலக்கியத்தையும் உலகத்தரத்துக்கு ஏற்றி, உலகையே, அதன் அறிவாளிகள் யாவரையுமே ஜெர்மனியை அண்ணாந்து பார்க்க வைத்த மாமேதையும், உலக மகா கவியுமான கதே. அவரைப் பின்பற்றி வளர்ந்ததே இன்றுவரை ஜெர்மானிய அறிவுலகம். அதனால்தான் ஓர் ஐரோப்பிய சிந்தனை வரலாற்றாசிரியன் எழுதினான்: ஹெர்டரைப் புரிந்துகொள்ளாமல் ஜெர்மனியின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது. ஜெர்மனியைப் புரிந்துகொள்ளாமல், ஐரோப்பிய வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது.

ஹெர்டர் தன் வாழ்நாள் பணியை ஓர் இனத்தின் வாழ்வு பற்றிய உண்மையை இவ்வாறு எழுதினார்: ஓர் இனம் உலக அரங்கிலே எழுச்சி பெற, நிமிர்ந்து நின்று, மரியாதை பெற வேண்டுமானால் அதன் அரசியல், கலாச்சார உள்சண்டைகள் ஓய்ந்து ஒற்றுமை பெறவேண்டும். அந்த ஒருமைப்பாடு கலாச்சாரப் புரட்சியாக வெடிக்க வேண்டும். அது மொழி வழியில்தான் சாத்தியம். பழங்காலத்தில் அது பெற்றிருந்த பொற்காலத்தை விடாமல் படம் பிடித்து, ஓயாமல் பிரச்சாரம் செய்து மக்களின் மனத்தில் பதிய வைக்க வேண்டும். அந்த தீபம் அணையாமல் பாதுகாக்க வேண்டும். அதன் ஒளியில் உலகத்தரமான கவிஞர்களும் இலக்கியவாதிகளும் தத்துவவாதிகளும் விஞ்ஞானிகளும் பல்துறை மேதைகளும் தோன்றுவர். அவர்கள் தோன்றுவதற்கான சூழ்நிலையையும் சுயமரியாதையையும் தூண்டி நிலை நிறுத்த வேண்டும். இந்த இயக்கம் உச்சநிலையை அடையும் போது உலகம் அதைத் திரும்பிப் பார்க்கும்; பெருமைப்படுத்தும்; பொறாமை கொள்ளும்.

ஹெர்டரின் இந்த வாசகங்கள் தீர்க்கதரிசனமானவை. அவருக்குப் பின் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஜெர்மானிய வரலாறு காட்டிய படத்தின் வரி வடிவம்தான் இவ்வார்த்தைகள். ஹெர்டர் ஒரு தனிப்பட்ட ஆளுமையல்ல; ஒரு பேரியக்கத்தின் பிரதிநிதி, அச்சாணி.

தன் குருநாதர் சொன்னதை நடைமுறைப்படுத்தினார் சீடர் கதே. இந்தச் சீடர் பரம்பரை நீட்சே வரை, ஹைடெக்கர் வரை அறிவுத்துறையில் நீடித்தது; நீடித்து வருகிறது; அரசியல் துறையில் பிஸ்மார்க், மகா பிரெடரிக், கெய்ஸர், ஹிட்லர் என பல ஜாம்பவான்கள் உருவாக்கப்பட்டனர். இவர்களை விட மாபெரும் சாதனை செய்தவர் என இசை மேதை வாக்னரைச் சொல்வர். அரசியலில் கீரியும் பாம்புமாக இருந்த சமஸ்தான மன்னர்கள் யாவரையும், பழம்பெருமை பாடும் கலாச்சாரத் தூதுவனாக நின்று, பெய்ரூத் நகரில் தன் இசை நாடக அரங்கில் ஒருங்கே அமர வைத்த பெருமை அவரையே சாரும் என்பர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியலைக் கடந்து ஜெர்மானியர்கள் அனைவரும் தம் பழம் கலாச்சாரப் பெருமை கூறி, பழைய புராணக் கதைகளை ரசித்து ஒற்றுமையின் அவசியத்தையும் வலிமையையும் உணர்ந்தனர். உணர்ந்தபின், அவர்களை அரசியல் ரீதியாகவும் ஒன்றுதிரட்டுவது எளிதாயிற்று. மகா பிரெடரிக்கும் பிஸ்மார்க்கும் இப்பணியைச் செவ்வனே செய்தனர். இவர்கள் அமைத்த மேடையின் மீது ஏறித்தான் ஹிட்லர் தன்னுடைய ‘மூன்றாவது உலகளாவிய ஆட்சியைக்’ கனவு கண்டான். மக்களை நம்ப வைத்தான்.

உலகின் ஒவ்வோர் இனமும் உலக வரலாற்றில் ஏதோ ஒரு காலகட்டத்தில் எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ், அதாவது, தன் குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறது. இது வரலாற்றின் தத்துவம். இவ்வாறு வரலாற்றையும் தத்துவக் கண்கொண்டு பார்க்கும் பார்வையும் தொடங்கியது ஜெர்மனியில்தான். வரலாற்றின் தத்துவத்தைப் பற்றி எழுதாத ஜெர்மானிய தத்துவவாதியே இல்லை எனலாம். இவர்களுள் ஹெகல் எழுதிய ‘வரலாற்றின் தத்துவமே’ மிகவும் புகழ் பெற்றது. என்றாலும் அவருக்கு முன் இமானுவேல் கான்ட் அதைப் பற்றி எழுதினார். அவருக்கு முன் ஹெர்டர் எழுதினார். ஹெர்டரின் வரலாறு மிகவும் வித்தியாசமானது. தான் தொட்ட எல்லாத் துறைகளிலும் தன் தனித்த முத்திரையைப் பதித்த ஹெர்டர் வரலாற்றுத் துறையிலும் தன் தனித்த சிந்தனையைக் காட்டினார். ஒருவிதத்தில் பார்த்தால், ஹெர்டருக்கு முன்போ பின்போ கூட அப்பார்வை உலக வரலாற்றை எழுதிய நூற்றுக்கணக்கானவர்களில் யாரிடமும் காணப்படவில்லை.

அப்படி என்ன எழுதினார் ஹெர்டர்? அவர் எழுதிய நூலின் பெயர்: மனித குல வரலாற்றின் தத்துவத்துக்கான கருத்துகள் (Outlines of a Philosophy of the History of Man) வெளியிட்ட ஆண்டு 1784. பிரெஞ்சுப் புரட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு.

வரலாறே உண்மையைக் காட்டும் கண்ணாடி. வரலாறே உண்மைக்கான பாதை. இக்கருதுகோள் கிரேக்க, உரோமானிய சரித்திராசிரியர்களிடமே காணப்படுகிறது. என்றாலும் தீவிரமான சிந்தனை அலசல்களுக்கு ஆட்பட்டது ஜெர்மானிய மண்ணில்தான். கார்ல் மார்க்ஸ் தன்னுடைய ‘வரலாற்று முறைப் பொருள் முதல்வாதம்’ என்ற கைஆயுதத்தை எடுத்துக்கொண்டது ஹெகலின் ஆன்மீக வரலாற்று வாதத்திலிருந்து. மற்றுமோர் பிரபலமான வரலாற்றுத் தத்துவ நூல் சுமார் 1500 பக்கங்கள் கொண்ட பிரமாண்ட படைப்பான ஆஸ்வால்டு ஸ்பெங்க்லரின் ‘மேற்குலகின் சரிவு’. மேற்கண்ட மூவரைப் போல் மற்றும் பலர் உண்டு. அவர்கள் அனைவருக்கும் இத்துறையில் முன்னோடியும் வழிகாட்டியும் ஹெர்டரே.

வரலாற்றின் தத்துவத்தைப் பற்றி ஒன்றல்ல, இரண்டு நூல்களை அவர் எழுதினார்: 1) மற்றுமோர் வரலாற்றுத் தத்துவம், 2) உலக வரலாற்றின் தத்துவத்துக்கான சிந்தனைக் குறிப்புகள். முதலாவது சிறிய அறிமுக நூல். இரண்டாவது நூல் நான்கு தொகுதிகளைக் கொண்ட பிரமாண்டமான படைப்பு. அதில் ஐரோப்பிய வரலாற்றை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், ஹெர்டர் சீன, இந்திய, மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்றையும் சேர்த்தே ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார். அதில் சுதந்திரம், முன்னேற்றம் போன்ற ஒளிநெறிக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும், விவாதத்துக்குரிய பல கருத்துகளை முன்வைக்கிறார். அவருடைய ஆழ்ந்து அகன்ற படிப்பும், அவற்றிலிருந்து அவர் கண்டடைந்த சுயசிந்தனைகளும் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

பிரபஞ்ச உற்பத்தி, இயற்கையின் வரலாறு ஆகியவற்றுடன் ஒரு விஞ்ஞானியைப் போல் தொடங்குகிறார். அடுத்து, இயற்கையில் மனிதனின் நிலை என்ன? அவனுக்கும் மற்ற தாவர, விலங்கு உலகங்களுக்கும் என்ன உறவும் வேற்றுமைகளும் உண்டு என்று ஆய்கிறார். இறுதியாக எழுதப்பட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டு அலசி, கி.பி. 16ம் நூற்றாண்டு வரையான சரித்திரம் எவற்றையெல்லாம் நமக்கு உணர்த்துகிறது என்று படம்பிடித்துக் காட்டுகிறார்.

மற்ற வரலாற்றுத் தத்துவ ஆசிரியர்களிடமிருந்து அடிப்படையிலேயே மாறுபடுகிறார் ஹெர்டர். வரலாறு முழுவதையும் ஏதோ ஒரு ஒற்றைக் கருத்தால் விளக்கிவிட முடியும் என்பதை முற்றாக மறுக்கிறார். வாழ்க்கையைப் போலவே, வரலாறும் ஏராளமான முகங்களைக் கொண்டது. அவற்றுள் ஒரு முகத்தை மட்டும் காட்டி, இதுவே முழுமை என்று சுருக்குவது குறுக்கல்வாதம் என்கிறார். வரலாறு விஞ்ஞானமல்ல; அதற்கு நிரந்தரமான விதிகள் ஏதும் இல்லை என்பது அவரது கொள்கை. பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றின் மீது ஒற்றைப்படைத் தன்மையைத் திணிப்பது அதைப் புரிந்துகொள்ள உதவாது. அது வரலாற்றாசிரியனை பிடிவாதம் பிடித்த பள்ளி ஆசிரியன் ஆக்கிவிடும்.

ஒவ்வொரு காலகட்டமும் குறிப்பிட்ட சூழ்நிலைகளை ஏற்படுத்தும். அவற்றுக்கு ஏற்றாற்போல் ஒவ்வோர் இனமும் பல்வேறு துறைகளில் – பொருளாதாரம், அரசியல், சமயம், பண்பாடு, கலை என எதிர்வினை புரியும். அவற்றுள் ஐரோப்பிய கலாச்சாரமே சிறந்தது என்றோ, கிரேக்க நாகரீகமே உயர்ந்தது என்றோ கூறுவதற்கு எல்லாக் காலத்துக்குமான, உலகளாவிய அளவுகோல்கள் ஏதும் கிடையாது. ஒவ்வொரு பண்பாடும் சில துறைகளில் சிறந்து விளங்கும், சிலவற்றில் வளர்ச்சி ஏற்பட்டிராது. அதற்காக அவ்வினங்களின் வரலாற்றை ஒதுக்கித் தள்ள முடியாது. கூடாது.

ஒவ்வொரு பண்பாடும் உயிருள்ளதோர் உடலுக்குச் சமம். தோற்றம், வளர்ச்சி, சரிவு, முடிவு என்பன உயிரிகளுக்கு ஏற்படுவது போலவே இனங்களுக்கும், நாகரீகங்களுக்கும் உண்டு. ஹெர்டரின் இந்தக் கருத்தை ஒட்டியும், விரிவுபடுத்தியுமே பிற்கால சரித்திரத் தத்துவாசிரியர்களான ஆஸ்வால்டு ஸ்பெங்க்லர், ஆர்னால்டு டாயின்பி போன்றோர் தங்களுடைய பிரமாண்ட படைப்புகளை எழுதினர். ஹெகலும், மார்க்ஸும் ஹெர்டரின் கருத்தை வெட்டி, மறுத்து, வரலாற்றை ஒற்றைப் படைத்தனமாக விளக்க முடியும் என்று காட்டினர். ஹெகல் வரலாற்றை ‘உலக ஆன்மாவின் நடை’ என்றார்; மார்க்ஸ் ‘வர்க்கங்களின் போராட்டம்’ என்று வர்ணித்தார்.

ஒவ்வொரு மக்கள் சமுதாயமும் தனக்கே உரித்தான வகையில் சில வாழ்க்கை முறைகளை, சிந்தனைப் போக்குகளை, கலைகளை வளர்த்தெடுக்கிறது. அதை மற்றோர் சமுதாயம் செய்ய வாய்ப்பில்லை. குறிப்பாக வாழ்க்கையைப் பற்றிய ஒரு கோணத்தை, நோக்கத்தை அடிப்படைத் தத்துவமாக வரித்துக் கொண்டு அந்த அடிப்படையில் தன் கலைகளை, வாழ்நெறிகளை, கடவுளரை, சமய நிறுவனங்களை, விளையாட்டுகளை அமைத்துக் கொள்கிறது. அந்தக் குறிப்பிட்ட வாழ்க்கைக் கோணத்தைப் புரிந்துகொள்ளாமல் அச்சமுதாயத்தின் புறச்சடங்குகளையோ பழக்கவழக்கங்களையோ புரிந்துகொள்ள முடியாது. அச்சமுதாயம் சேகரித்து வைத்திருக்கின்ற அறிவுப் புதையலை, அதன் மரபுச் சொத்தை மற்ற சமூகத்தினர் தெரிந்து கொள்ளவோ, பயனடையவோ இயலாது. சான்றாக ஆங்கில மொழி, ஆங்கிலேயர் வரலாறு ஆகியவற்றை அறியாமல் முதலாம் சார்லஸ் மன்னனிடமிருந்து ஆங்கிலப் பாராளுமன்றம் ஆட்சி அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு மன்னனையே கொலை செய்து, முதல் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி, அதன் மூலம் சுதந்திரம் என்பதே மனித வாழ்வின் அடிப்படை உரிமையும் இன்பமும் என்று இங்கிலாந்து மக்கள் சமுதாயம் நினைத்தது என்ற உண்மையை அறிய முடியாது.

அதேபோல் ஆதித் தமிழ்ச் சமூகம் வாழ்வின் மெய்ப் பொருளாகக் கருதிய கருதுகோள் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்’, ‘நிலமிசை நீடு வாழ்தல்’. எதற்காக? ஒப்புரவு செய்வதற்காக. ஜீவகாருண்யமே முதல் விழுமியம் தமிழர்க்கு. உயிர் இரக்கமே வழிபாடு தமிழர்க்கு. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கைதான். எதற்காக? அன்பை உயிரில் வளர்ப்பதற்காக. இளைஞன் என்ற தனித்த உயிர் காதல் வயப்பட்டு இரண்டாவது உயிருடன் அன்பால், காதலால் கலந்து, திருமணத்தில் பந்தப்பட்டு, உற்றார் உறவினர் குழந்தைகள் என்ற வட்டத்தில் பழகி, அன்பை மேலும் வளர்த்து விருந்தோம்பலை வாழ்நெறியாகக் கொண்டு எல்லா உயிர்களிடத்தும் அன்பை வளர்த்துத் தானும் தன் உயிராகிய அன்பின் வடிவத்தை எப்போதும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே உயர்ந்ததினும் உயர்ந்த, உண்மையான வாழ்க்கை. அதனால்தான்,

ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்,

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெ னினும்வேண்டற் பாற்றன்று

என்றும் வாழ்க்கை விதிகளை வகுத்தனர். இந்த அடிப்படையை அறியாமல் சித்தர் நெறி புரியாது. அதன் வளர்ச்சி பெற்ற முழுமை நிலையான வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் புரியாது. ‘பொன்+கல்’ போன்ற திருவிழாக்களின் சடங்குகளின் பொருள் புரியாது.

வடமொழியினர் தவசிகள், துறவிகள். ஆங்கிலேயர் வணிகர்கள். ஜெர்மானியர் தத்துவவாதிகள். ஒரு சமுதாயத்தின் முதல் விழுமியம் எது என்று பார்த்தால் அதன் முழு வடிவம் புரியும்.

ஹெர்டர் கலாச்சார வரலாற்றின் அடிப்படையை, ஆணிவேரைப் படம்பிடித்து உலகுக்குக் காட்டினார். ஒற்றைக் கலாசாரத்தை வலியுறுத்தும் உலகமயமாதல் இயக்கத்தின் தாக்குதலைச் சமாளிக்க, சமப்படுத்த, பல்வேறு சமுதாயங்கள் சேகரித்து வைத்திருக்கின்ற, தனித்துவமான கலை, அறிவுச் செல்வங்களை மானுடம் முழுதும் அறிந்து, பயன்படுத்திப் பலனடைய ஹெர்டரின் இந்த அறிவுறுத்தலை உலகம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.

ஒரு சமுதாயம் வளர்ந்த சூழலை, அதன் காலத்தை, அதன் பின்புலமாக அமைந்த பூகோளத்தை, அவை அளித்த நேர்மறை, எதிர்மறைச் சக்திகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பொத்தாம் பொதுவாகச் சில அகில, உலக அளவுகளைக் கற்பித்துக்கொண்டு அவற்றைக் கொண்டு ஒவ்வொரு சமூகத்தையும் அளப்பதோ, ஒப்புமை செய்து ஏற்றுவதோ இழிவுபடுத்துவதோ சரியான வரலாற்று அணுகுமுறை ஆகாது. இக்கருத்தை வலியுறுத்த அவரது பாணியில், கவித்துவ உரைநடையில் எழுதினார்: ஷேக்ஸ்பியர் சோபோக்ளிஸ் அல்ல; மில்டன் ஹோமர் அல்ல; போலிங்புரோக் பெரிக்ளிஸ் அல்ல. வகைமாதிரிகளில், ஆற்றலின் ஒப்புமைகளில் ஒருமைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் வேறுவேறு. அவர்களின் நோக்கங்கள் வேறு. அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் வேறு. அவர்கள் வந்தடைந்த முடிவுகள் வேறு. ஒற்றுமைகளோடு வேற்றுமைகளையும் கவனத்தில் கொண்டால்தான் முழு உண்மை கிட்டும். ஒரு வரலாற்றுத் தத்துவவாதி உண்மையைக் கண்டறியும் சரியான வழி இதுவே என்று வாதிட்டார் ஹெர்டர்.

சுருக்கமாகச் சொன்னால் ஹெர்டர் தன் மாபெரும் எழுத்துக் குவியல்களின் மூலம் உணர்த்தும் முதன்மைச் செய்தி இதுதான். ஒரு மனித சமூகம் மற்ற சமூகங்களின் விழுமியங்களை அறிந்து, மதிப்பளித்து நடக்கவேண்டும். அதே நேரத்தில் தன் மரபை, தன் விழுமியங்களை மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். பிற சமுதாயங்களை வெறுப்பதோ இழிவுபடுத்துவதோ அவற்றை அடிமைப்பட வைக்க நினைப்பதோ தவறு. காலனியாதிக்கம் பாவம்.

இவ்வளவு நேர்மையானவராக மனசாட்சியின் உருவகமாக விளங்கிய ஹெர்டரின் மீது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டு மாபெரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன : 1) இவர் வலியுறுத்திய மொழிவழி தேசியமும், இனப் பாதுகாப்பு இயக்கமும்தான் ஜெர்மன் மண்ணில் ஹிட்லரையும் நாஜிகளையும் உற்பத்தி செய்தன. 2) இவர் குரு துரோகி. இவரைத் தன் செல்ல சிஷ்யனாகக் கருதி இமானுவேல் கான்ட், தன் வகுப்பறையில் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாகக் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அது மட்டுமல்ல, ஆங்கிலத் தத்துவாதிகள் டேவிட் ஹ்யூம், போலிங்புரோக் மற்றும் சாலிஸ்பரி, மாண்டெஸ்க்யூ, ரூஸோ ஆகியவர்களின் நூல்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். இவரை அறிஞர் ஆக்கிய குருவை எதிர்த்து இவர் 5 பெரிய நூல்களை எழுதினார் – பொறாமை காரணமாக.

பிளேட்டோ, அரிஸ்டாடிலுக்குப் பிறகு உலகளாவிய சிந்தனையாளன் இமானுவேல் கான்ட்தான் என்று உலகம் ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு ஜெர்மானியனும் இறும்பூது எய்தினான் – ஹெர்டரைத் தவிர. கான்ட்டின் உலகப் புகழ்பெற்ற நூலான ‘பகுத்தறிவைப் பற்றிய அலசல்’ (Critique of Practical Reason) என்ற நூலைக் கடுமையாக விமரிசனம் செய்து ஹெர்டர் மூன்று பெரும் தொகுதிகளை வெளியிட்டார். கான்ட்டினுடைய அழகியல் நூலான ‘தீர்ப்பின் மீதானதோர் அலசல்’ (Critique of Judgement) என்பதில் கூறப்பட்ட கருத்துகளை மறுத்து இரு பெரும் நூல்களை எழுதி வெளியிட்டார். இவையெல்லாம் அவருடைய அளவற்ற தன்னம்பிக்கையில் இருந்து பிறந்த பொறாமை, குரோதத்தின் வெளிப்பாடுகள்.

இக்குற்றச்சாட்டுகளை மறுத்து, ‘இல்லை இவை யாவும் ஓர் உண்மை தேடியின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட கருத்துலகப் போராட்டங்கள். அரிஸ்டாட்டில், மார்க்ஸ் செய்தவையும் இந்த இலக்கணத்தை ஒட்டியே’ என்று சமாதானம் செய்யும் திறனாய்வாளரும் உண்டு.

பின்னாளில் தோன்றிய பல சிந்தனையாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் கருத்துகளின் ஊற்றிடமாகத் திகழ்ந்தவர் ஹெர்டர். மறுமலர்ச்சி இயக்கம் முன்வைத்த முதன்மைக் கருத்தான பகுத்தறிவை ஏற்றுக்கொண்டாலும் ஹெகலைப் போலவோ, வால்டேரைப் போலவோ வாழ்வு முழுவதையும் அறிவினாலேயே புரிந்துகொண்டுவிட முடியும் என்பதை அவர் மறுத்தார் – ரூஸோவைப் போலவே. வாழ்வு பன்முகத்தன்மை கொண்டது. அறிவு மேல்மனம் என்ற ஒற்றைப் பரிமாணம் கொண்டது. பின்னத்தால் முழுமையைப் புரிந்துகொள்ள முடியாது. புலன்உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனை இயற்கை உந்துசக்திகள், உள்ளொளி போன்ற பல்வேறு சக்திகளின் கூட்டுத் தொகுதியே மனித உள்ளம். யாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்து அவற்றை ஆளத் தெரிந்துகொள்பவனே முழு மனிதன் ஆக முடியும். அவனே மகா கலைஞன் ஆக முடியும் என்று தன் கலைக் கொள்கையையும் இம்முழு உள்ளக் கொள்கையை அடிப்படையாக வைத்தே அறிவித்தார்.

வால்டேர், டிடரோ, தெகார்தே, பேகன் போன்ற மாபெரும் சிந்தனையாளர்களுக்கு எதிரான குரல் ரூஸோவுக்கு அடுத்தபடியாக ஹெர்டரிடமிருந்து ஒலித்தது. அக்குரலின் எதிரொலிதான் பிற்காலத்தில் சிக்மண்ட் ஃப்ராய்டு, சி.சி.யுங், ஜெஸ்டால்ட் தெராபி, ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மீகற்பனைவாதிகளான வேர்ட்ஸ் வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி, எமர்சன், வால்ட் விட்மன், தோரோ, குறிப்பாக கதே, ஷில்லர், ஹோல்டர்லின், ஹைடெக்கர் என்ற பல பெயர்களைத் தாங்கி வந்தது. கடைசியாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குவாண்டம் இயற்பியல், அணுத்துகள் உலகத்தில் காரண காரியம் சார்ந்த பகுத்தறிவு வேலை செய்யவில்லை; கலகமே, குழப்பமே கோலோச்சுகிறது; மனிதனுடைய எண்ணம் எதை நினைக்கிறதோ அதன்படி மாற்றம் அடைகின்றன குவாண்டம் அலைவுகள்; அங்கே இயற்கை அல்ல, மனித விருப்பமே சட்டம் என்று பகுத்தறிவை அதனிடத்தில் அமர வைத்தது எனில் இந்த எதிர் இயக்கத்தின் தந்தைகளில் ஒருவர் ஹெர்டர். மற்றவர் அவருடைய நண்பரும் குருவுமான ஹமான்.

கான்ட், ஹெகல், பிச்டே, ஷெல்லிங் என்று ஒரு தத்துவவாதிகளின் படையையே ஜெர்மனி உற்பத்தி செய்து, மகிழ்ந்து, ஆனந்தக் கூத்தாடிய காலத்தில் தத்துவத்தை விட மேலானது கவிதையே என்று வாதிட்டார் ஹெர்டர். தத்துவம் வெறுமனே இயற்கையை வெளியில் இருந்து புரிந்துகொள்ள முயல்கிறது. ஒவ்வொரு தத்துவவாதியும் தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போல் இயற்கையின் உண்மைகளைத் திரிபுபடுத்துகிறார். ஒன்றிரண்டு கருத்துகளின் மேல் பிரம்மாண்டமான தர்க்கக் கட்டடங்களைக் கற்பனையால் கட்டி முடிக்கின்றனர். அக்கருத்துகளுக்குச் சார்பான சரித்திர நிகழ்வுகளை, இயற்கை நிகழ்வுகளை மட்டும் தொகுத்துச் சான்றாதாரங்களாகக் காட்டி, எதிர் சான்றுகளை மறைத்து ஒற்றைப்படையாக இயற்கையைக் காட்டுகின்றனர். இக்காட்சி, எவ்வளவு பூதாகரமாகக் காட்டப்பட்டாலும் அரைகுறையானதே.

மாறாக, கவிதை பன்முகத்தன்மை கொண்டது இயற்கையைப் போலவே, வாழ்க்கையைப் போலவே. இயற்கையின் வடிவை முறையாக, முழுமையாக, உள்ளே ஊடுருவிப் பார்த்து எல்லாக் கோணங்களில் இருந்தும் காட்டுகிறது. அதற்கு அதன் உத்தியான படிமங்கள் உதவுகின்றன. வெறும் கருத்துகளை விட, படிமங்கள், கவியின் ஆழ்மனதிலிருந்து தோன்றி, இயற்கையின் மையத்தை ஊடுருவிச் சென்று, அதன் சாரத்தை உறிஞ்சி, வெளியே கொணர்ந்து, வாசகனின் ஆழ்மனதில் தைக்க உதவுகின்றன. இக்கொள்கையை முற்றாக ஏற்றுக்கொண்டவர்கள் ரொமான்டிசிசக் கவிஞர்களும், கோல்ரிட்ஜ், பெர்க்சன், எமர்சன் போன்ற தத்துவவாதிகளும். இக்கருத்தின் இலக்கணத்தை நிரூபிக்க மாபெரும் இலக்கியமாகத் தோன்றியதே ஹெர்டரின் பிரதம சீடரான கதே எழுதிய ‘ஃபாஸ்ட்’ காப்பியம். நவீன மனிதனின் நிறுவனச் சமய எதிர்ப்பு கிரேக்க உரோமானியச் செவ்விலக்கியங்களின் பாதிப்பால் பகுத்தறிவின் எழுச்சியாகத் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம், அதன் குறைநிறைகள், விஞ்ஞானத்தின் எல்லை, கவிதை, கலைகளின் அற்புத ஆற்றல்கள், ஹெர்மிஸின் ‘மனிதன் கடவுளின் சொரூபம்’ போன்ற எல்லாக் கருதுகோள்களையும் உள்ளடக்கிய கதாபாத்திரமாக, நவீன மனிதனின் பிரதிபலிப்பாக புதிய வேதமாக கதேயின் உள்ளத்தில் சுமார் 60 ஆண்டுகள் சிறுகச் சிறுக வளர்ந்து வெளிப்பட்டதே ஃபாஸ்ட் காப்பியம். இன்றைக்கு குவாண்டம் இயற்பியல் விஞ்ஞானிகள், சி.ஜி.யுங் போன்ற மனோ தத்துவவாதிகள், சுவைட்சர் போன்ற தத்துவவாதிகள், எமர்சன், கோல்ரிட்ஜ் போன்ற திறனாய்வாளர்கள் என்று சகல துறையைச் சார்ந்தவர்களும் அக்காப்பிய வரிகளைத் தம் கூற்றுகளுக்குச் சான்றாதாரமாக மேற்கோள் காட்டுகின்றனர் எனில் அப்படிப்பட்டதோர் கலைக்களஞ்சிய அறிவுலகத்தை அது தன் உயிராற்றல் கொண்ட படிமங்கள் மூலமாக வெளிப்படுத்தியதால்தான்.

நவீன கவிதையில் குறியீட்டியல், எஸ்ரா பவுண்டின் படிமவியல், சர்ரியலிசம் போன்ற பள்ளிகள் தோன்றின எனில் அவற்றின் மூல பாதிப்பு ஹெர்டர் ஏற்படுத்திய கருத்துப் புரட்சியே; அது ஒரு மாபெரும் இயக்கமாக எழுச்சி பெற்றதே காரணம்.

ஓவியத்துக்கு அடிப்படை மூலம் வெளி; இசைக்குக் காலகதி; கவிதைக்கு உயிராற்றல். ஹெர்டரின் இக்கலைக் கோட்பாடுதான் பின்னாளில் ஆங்கிலத் திறனாய்வாளரான தாமஸ் டி குவின்ஸியின் புகழ்பெற்ற ‘கருத்துகளின் இலக்கியம்’, ‘உயிராற்றல் இலக்கியம்’ என்று விளக்கம் பெற்றது.

நாம் அறிவதெல்லாம் உவமை மூலமே. பிராணி – மனிதன், கடவுள் – மனிதன், இயற்கை-வரலாறு என்ற ஒப்புமைகளே ‘எல்லா அறிவுக்கும் ஆதாரம்’ என்று கூறுவார் ஹெர்டர். பின்னாளில் எல்லா உயிரினங்களும் ஆதி உயிரிகளின் மேம்படுத்தப்பட்ட மாற்றங்களே; மனிதக் குரங்கினத்திலிருந்து உதித்தவனே மனிதன் என்ற சார்லஸ் டார்வின் நிரூபித்த கருத்து விதையாகச் சிந்தனை அரங்கில் ஹெர்டரால் தூவப்பட்டதே. ஹெர்டரின் இக்கருத்துக்கு மூலம் ‘ஹெர்மிஸ்’ என்ற எகிப்திய கிரேக்கச் சித்தனின் பொன்மொழியான ‘மேலே உள்ளது கீழே’ என்ற வாசகமே. ஹெர்மிஸூக்கு மூலம் சித்த மார்க்கத்தையும், இரசவாதம், வைத்தியம் ஆகியவற்றையும் கற்றுத் தந்த தமிழ்ச் சித்தர்களே. அவர்களை ‘முக்காலமும் உணர்ந்த அறிவர்கள்’ என்றழைப்பார் தொல்காப்பியர்.

‘மொழி எவ்வாறு தோன்றியது?’ என்ற தலைப்பில் பெர்லின் அகாதமி நடத்திய போட்டியில் ஹெர்டரின் கட்டுரை முதல் பரிசு பெற்றது. அவருடைய கருத்து இதுதான்: மொழி வேறு சிந்தனை வேறு அல்ல. சிந்தனை என்பது தான் அறிகிறோம் என்று அறியும் உணர்வுதான். இதுவே மனிதர்களை மற்ற விலங்குகளிடமிருந்தும், தாவரங்களிடமிருந்தும் பிரித்து, உயர்த்திக் காட்டுகிறது. அவை இயற்கையின் உந்துசக்திகளால் மட்டும் உந்தப்பட்டு இயற்கையின் ஒரு பகுதியாக, எந்திரங்களைப் போல் வாழ்ந்து, புணர்ந்து, உறக்கத்திலேயே மடிகின்றன. மனித மனம் அகத்தே, புறத்தே அறியும், உணரும் எந்த ஒரு பொருளையும், மீண்டும் மனத்துக்குள் வைத்து ஆற அமர அசை போட்டுச் சிந்தித்து, பகுத்து, தொகுத்து, வகுத்து, அடையாளப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஒரு பொருள் அதைக் குறிக்கும் குறி, இவ்விரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனிதக் கூட்டம் உள்ள எந்த இடத்திலும் காலத்திலும் மொழி தோன்றுவது இயல்பே என்கிறார். மனிதன் இயற்கையின் கைப்பாவை அல்ல; அதை அறிந்து, ஆளப் பிறந்தவன். குறியீடு என்பது ‘உயிரின் வார்த்தை’ என்பார் – அவர் ஓர் ஆன்மீகவாதி என்பதை நாம் மறக்கக்கூடாது.

சரி, எதற்காக இம் மொழியாற்றலை இயற்கை மனிதனுக்குக் கொடுத்திருக்கிறது? இக்கேள்விக்கு விடையாக ஒரு விதியை முன்வைக்கிறார் ஹெர்டர்: இயற்கை தேவையில்லாமல் எந்தச் செயலையும் செய்யாது. மனித இனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தன்னை முன்னேற்றிக் கொள்வதற்காகவுமே இக்கொடையை இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கிறது. மனித குல வரலாறும் இதைச் சரியென்றே காட்டுகிறது. ஒரு படி மேலே சென்று அறிவிக்கிறார் இந்த ஜெர்மானிய தத்துவவாதி: மனித ஆன்மாவில் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வையும் மொழியால் உரைக்க முடியும். அது மட்டுமல்ல, சிந்தனை என்பது ஒரு தொடர் ஓட்டம். எனவே சிந்தனையில் மேலும் மேலும் முன்னேற்றமும், அதனைத் தொடர்ந்து மனித வாழ்வில் முன்னேற்றமும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து வளர்வது தவிர்க்க இயலாதது. மொழி என்பது சமுதாயத்தால் உற்பத்தி செய்யப்படுவது, கலாசாரத்தை உற்பத்தி செய்து வளர்ப்பது என்று முடிக்கிறார்.

இந்த இடத்தில் மொழி எவ்வாறு தோன்றியது என்று ஆதித் தமிழ்ச் சித்தர்கள் கருதினர் என்பதை இத்துடன் இணைத்துப் பார்த்துச் சிந்திக்கலாம். நான்கு கால்களால் நடந்த விலங்கு, தன் முன்னிரண்டு கால்களைக் கைகளாக்கி, முதுகு நிமிர்ந்து நின்று மனிதன் ஆனது. அப்போது ஒரே சமயத்தில் கூன் நிமிர்தல், எழுத்து பிறத்தல் என்ற இரண்டு செயல்களும் நடைபெற்றன; ஒன்றை ஒன்று சாத்தியம் ஆக்கிற்று என்று கண்டறிந்து அறிவித்தனர். ‘த்’ என்ற எழுத்து மனித உடலையும், இறை உடலையும் குறிக்கும். ‘எழுதல்’, நிமிர்ந்து நிற்றல், உறக்கத்திலிருந்து விழித்து எழுதல் என்ற இரண்டு விதமான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இங்கே முதல் வகை அர்த்தமே கொள்ளப்படுகிறது. மனிதக் குரங்கு என்ற விலங்கு மொழியை, எழுத்துகளை உச்சரிக்கக் கற்றுக்கொண்டபோது முதுகெலும்பு பின் மூலாதாரத்திலிருந்து மேல்நோக்கி உந்தி எழுந்த பிராண சக்தி, தொடர்ந்த இச்செய்கையின் மூலம் முதுகை நிமிர்த்தியது. விலங்கு மனிதன் ஆனது. மொழியால் பேசத் தொடங்கியது. ஆறாவது அறிவு என்ற தன்னறிவு வளர்ந்தது.

பரிணாமத்தில் அடுத்தக் கட்டத்தில் எழுதல் என்ற சொல்லின் இரண்டாவது பொருள் வெளிப்படும்போது மனிதன் ஞானம் என்ற முற்றறிவு பெற்று தெய்வநிலைக்கு உயர்வான். ‘என்னுடன் எழுமின்’ என்று உலகத்தாரை வள்ளலார் அழைத்ததும், ஏசு சிலுவையில் மரணம் அடைந்து மூன்றாவது நாள் மீண்டும் ‘உயிர்த்தெழுந்ததும்’ இதற்குச் சான்றுகள் என்பர் ஆன்மீகவாதிகள். மொழியை (மனித) மனவாக்கு என்றும் (கடவுளின் தன்) ‘இனவாக்கு’ என்றும் இரண்டு படிநிலைகளில் வைத்துத் தன் திருவருட்பாவில் கூறுவார் அடிகளார். உலகியல் நோக்கம் மனவாக்கு. இறைநிலை வாக்கு இரண்டாவது. வேதங்கள் ஆகமங்கள் இவை உற்பத்தி ஆவது இறை இன வாக்கால். வேதாகமங்களை மட்டுமே வாசித்து, அந்த வாலறிவர்களின் உணர்வுநிலையை, அருள்நிலையை அடைந்து, தன்னைக் கடவுளாக உணர்ந்து அந்நிலையில் ஸ்திரப்பட்ட (கடவுள்) மனிதன் பேசுவதெல்லாம் வேதமாகும். அந்த வார்த்தைகளைக் கேட்டவர்கள், படித்தவர்கள் ஆன்ம உறக்கத்திலிருந்து விழித்து எழுவார்கள். இவ்வுண்மையை உலகுக்கு உணர்த்தச் சொல்லப்பட்டவையே கீழ்க்கண்ட வாசகங்கள்:

‘நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை’

– திருவருட்பா

‘ஆதியிலே வார்த்தை இருந்தது. அது தேவனுடன் இருந்தது. அது தேவனாக இருந்தது.’

‘வார்த்தை சதையுடன் கூடி மனித குமாரன் ஆனது. சிலுவையில் அறையப்பட்டு சதைப்பிண்டம் மீண்டும் வார்த்தை ஆனது’.

– புனித யோவானின் சுவிசேஷம்.

மேற்குலகில் மனித வாழ்வில் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியவர்கள் ஹெர்டருக்கு முன்போ பின்போ யாரும் இல்லை.

அரசியலே மனித வாழ்வை நிர்ணயிக்கிறது என்றான் ரூஸோ; பொருளாதாரமே என்றார் மார்க்ஸ்; இல்லை, இவை இரண்டை விட அதிகமாக கலாச்சாரமே என்று எழுதினார் இத்தாலிய மார்க்ஸீயவாதி கிராம்ஸி. அதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே விரிவாகப் பேசியவர் ஹெர்டர். ஒரு படி மேலேறி, கலாச்சாரம் என்ற வட்டமும் மொழி என்ற மையத்திலிருந்தே தொடங்குகிறது என்று ஆணித்தரமாக அடித்துப் பேசியவர் ஹெர்டரே.

இன்று வாழும் மொழியியல் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமானவர் நோம் சாம்ஸ்கி. அவருடைய கருத்துப்படி, தாய்மொழிக் கல்வியே சிறந்தது. தாய்மொழியிலேயே ஒரு குழந்தை விரைவில் கற்றுக்கொள்ளும். ஏனெனில் அதன் மரபணுக்களிலேயே தாய்மொழிக் கூறுகள் பதிந்திருக்கின்றன. தாய்மொழியின் இந்த ஏற்றத்தை அன்றே உரைத்தவர் ஹெர்டர். மேலும், தாய்மொழியின் வழியாகவே ஓர் இனம் தன் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கிறது. தாய்மொழியின் ஒரு சொல் மறைந்தால், அச்சொல் குறிக்க வந்த பண்பாட்டுக் கூறும் அதனுடன் மறைந்துவிடும் என்ற உண்மையை, கலாச்சார மின்சாரத்தை ஏந்தி எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் செப்புக் கம்பியே தாய்மொழிதான் என்று சிறப்பாக விளக்கினார். அதனால்தான் பிற மொழிகளின் படையெடுப்பினாலும் அவற்றின் மீது தமிழ் மக்களின் மோகத்தாலும் வழக்கொழிந்த ‘சீர், கதி, கேதம்’ போன்ற ஆயிரக்கணக்கான பழந்தமிழ் யோக, ஞானச் சொற்களை மீட்டெடுத்துத் தன் திருவருட்பாவில் பயன்படுத்துகிறார் வள்ளலார்.

தாய்மொழி, சுய பண்பாட்டு மரபின் மேன்மை கருதியே ஹெர்டர் தூய பகுத்தறிவுவாதம் தோற்றுவித்த மறுமலர்ச்சி இயக்கத்தைக் கூட எதிர்க்கத் துணிந்தார். ‘மற்றுமோர் வரலாற்றுத் தத்துவம்’ என்ற (1774) தன் நூலில், “மேற்குலக செவ்வியல் மரபான தத்துவக் கோட்பாடு மற்றும் பகுத்தறிவுவாதம் என்ற ஒற்றைப் படை அளவுகோல் ஒன்றையே கொண்டு வரலாற்றில் தோன்றிய எல்லா இனங்களின் அறிவையும், ஏற்றத்தையும் அளப்பது தவறு. அந்தந்தக் காலம், இடம், சூழ்நிலை சார்ந்தே ஒரு பண்பாடு தோன்றுகிறது. ஆக, சிந்தனை என்ற புறங்கையால் ஒரேயடியாக மேற்குலகம் தவிர மற்றைய உலக இனங்களின் பண்பாடுகளை அளப்பதோ இழிவுபடுத்துவதோ விவேகமல்ல. உணர்ச்சி, கற்பனை, ஞானம், உயிர் இரக்கம் என எத்தனையோ பரிமாணங்கள் மனித வாழ்க்கையில் உண்டு. அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டில் ஒரு கலாசாரம் உயர்ந்து நின்றிருக்கலாம். அதை உலகம் எடுத்துக் கொள்வதை இந்த ஒற்றை அளவுகோல் தடுத்துவிடும். அதனால் மனித குலத்துக்கே நட்டம் ஏற்படும் என்று காரணம் கூறினார் அந்த உலகம் மறந்த, மறக்கக்கூடாத மேதை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளான மெகாலே பிரபு, வின்ஸ்டன் சர்ச்சில் போன்றோர் பாரத மக்களை, ‘யானை, பாம்பு, பக்கிரிகள்’ என்றும் இந்தியர்களை நாகரீகப்படுத்தும் கடமை வெள்ளைக்காரர்களாகிய எங்கள் தலையில் வரலாற்றால் சுமத்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் இழித்துரைத்த கதைகள் மறக்கக்கூடியனவல்ல. இத்தீமைகளையெல்லாம் முளையிலேயே கண்டு கண்டித்த ஐரோப்பிய கண்டத்தின் மனசாட்சியின் பெயர்: ஹெர்டர். ஒவ்வோர் இனத்தின் ஆன்மாவை மற்ற இனத்தார் மதிக்கக் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அப்போதுதான் உலக சமாதானமும் முழுப் பரிமாண முன்னேற்றமும் சாத்தியம் என்று அறிவுறுத்தினார். ஐரோப்பியரின் இந்த மேட்டுக்குடி மனப்பான்மையே ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்து நாடுகளைக் காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த ஏதுவாகிறது என்ற ஏகாதிபத்திய மனப்பான்மைக்கு எதிர்க்குரல் முதலில் ஹெர்டரிடமிருந்தே வந்தது. தன் வாழ்நாள் பணியை ஒரு கதையுடன் முடித்தார்: மரணத் தறுவாயில் ஒரு அடிமையை கிறித்துவ பாதிரியார் ஒருவர் நெருங்குகிறார். உனக்குப் பாவமன்னிப்பு தருகிறேன். நீ சொர்க்கம் செல்லலாம். அந்த அடிமை பதில் சொல்கிறான்: வெள்ளையர்கள் இருக்கும் ஒரு சொர்க்கத்துக்குச் செல்ல நான் விரும்பவில்லை.

இதை எழுதிய ஹெர்டர் ஒரு புரோடஸ்டன்ட் கிறித்தவ பாதிரியார். அப்படியிருந்தும் தன் சமயத்தை விட, தன் இனத்தை விட உண்மையும், நீதிக்காகப் போராடும் வீரமுமே உயர்ந்தது என்று தான் உணர்ந்ததை உலகுக்குக் காட்டிய தீரர் ஹெர்டர்.

மனிதகுல வரலாற்றை மொழியின் வளர்ச்சிப் படிநிலைகளைக் கொண்டே அளந்துவிடுகிறார் இந்த மொழியியல் அறிஞர். ஆதி மனிதன் ஆ! ஊ! என்ற ஒலிக்குறிப்புகளால் தன் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தினான். அடுத்து வந்த புராண காலத்து மனிதன் தான் கண்ட அறிவுக் கூறுகளைப் படிமங்கள், புராணக் கதைகள் தேவதைக் கதைகள் மூலம் கற்பனையுடன் உணர்ச்சியைக் கலந்து, பீறிட்டுக் கிளம்பிய கவிதாவேசத்துடன் கவிதை மொழியில் வெளிப்படுத்தினான். அழகான, தத்ரூபமான உவமைகள், உருவகங்கள், குறியீடுகள், படிமங்கள் கொண்ட அழகான இந்த மொழி கால மாற்றத்தில் தர்க்கம், தத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பால் தட்டையாகி, உலர்ந்து, உயிரிழந்து, செத்த மொழியாகிப் போனது. இந்நிலை ஒன்றும் உயர்வானதோ, பாராட்டக் கூடியதோ அல்ல. தனி மனிதனோ, ஒரு சமுதாயமோ கவிதையை விடுத்துத் தர்க்கரீதியான உரைநடையை அடைந்தால் அதற்கு உயிராற்றல் குறைந்துவிட்டது என்று பொருள் என்று சாடினார்.

பிரெஞ்சு மொழியில் ஆகஸ்டு காம்டே தோன்றி ‘பாசிடிவ் பிலாசபி’ எழுதுவதற்கு முன், தத்துவமும் விஞ்ஞானமுமே மனித சமுதாயத்தின் விழுமிய நிலை என்று எழுதுமுன்னரே அதற்கு மறுப்பை எழுதிவிட்டார் இந்த ஜெர்மன் தீர்க்கதரிசி. அவர் கவிஞர் அல்லவெனினும் ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதில்: “இவர் கவிஞர் அல்ல. படைப்புக் கடவுள். இது நாடகம் அல்ல. உலகம். மொத்த மனிதகுல வரலாறும் இதோ!” என்று வானளாவப் புகழ்ந்தார். இவர் சுட்டிக்காட்டிய பிறகே ஜெர்மன் தேசம் ஷேக்ஸ்பியரை அடையாளம் கண்டது; தனதாக்கிக் கொண்டது. அவர் பாணியில் எழுதிய கவிகள் ஏராளமாகத் தோன்றினர் – கதே உட்பட. கவிதையின் மீது, மொழி மீது ஹெர்டர் கொண்ட தீராக் காதலே இவ்வெழுச்சிக்குக் காரணம்.

தாய்மொழியின் இன்றியமையாமையைப் பற்றிய மிக ஆழமான கருத்தை முதன்முதலில் கண்டு சொன்னவர் ஹெர்டர். கவிதை மொழியில்தான் ஒரு சொல்லுக்கும் எண்ணத்துக்கும் மிக நெருங்கிய, மிக ஆழமான, மிக அதிகமான தொடர்பு உண்டு. இதை மொழிபெயர்ப்பாலோ மற்ற மொழி அறிவாலோ அடையவே முடியாது. உலக மகாகவிகள் எல்லாம் தம் தாய்மொழியிலேயே சிந்தித்து, உணர்ந்து எழுதினர். காரணம் இதுவே.

ஹெர்டர் சொல்லும் இந்த நுட்பமான விதி கவிஞர்களுக்கு மட்டுமல்ல; எல்லாத் துறை அறிஞர்கட்கும், சிந்தனையாளர் யாவருக்கும் பொருந்தும். பிளேட்டோ, விர்ஜில், மாண்டெயின், தாந்தே, கான்ட், ஷேக்ஸ்பியர், எமர்சன், மார்க்ஸ், ஐன்ஸ்டீன் என எல்லா மேதைகளும் தம் தாய்மொழியில் சிந்தித்ததாலேயே எளிதாக மேதைமை பெற்றனர். அந்நிய மொழியில் தேர்ச்சி பெறுதல் மிகவும் கடினம். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். விலக்குகள் விதிகள் ஆகா.