3.7K
1
கடலை ஒன்றும் செய்யமுடியவில்லை
அது கரையில்
தனித்துவிடப்பட்ட காதலன் போல
பேசிக்கொண்டே செல்கிறது.
2
நிலவொளியின் கீழே
யாராலும் தொடப்படாமல்
ஒரு வைரக்கல் கிடக்கிறது
நான் பார்த்ததும்
ஒரு நண்டு அதன் மேல் ஏறிப் போனது
மவுனம்.
வைரத்தை அது சுரண்டும் ஒலி மட்டும்.
3
நீங்கள் அவளிடம் இதைத் தெரிவித்துவிடக் கூடாது
பின்னப்படாத ஒரு ஆடையென
இது அவள் வாழ்வில் கிடக்கட்டும்
அவள் யாரென அறியா ஊரிலே
இந்த ஆடை பின்னப்பட்டு
அவள் கையில் கிடைக்கட்டும்.
4
அவள் இப்போது
காதலுக்கு வெகு தூரத்தில்
இருக்கும் ஒரு ஊரில் இருக்கிறாள்
வெகு தூரத்தில் இருக்கும்
ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாள்
காற்றுக்காக சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு
ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறாள்.
அவளறியாமல் அவள் தலைமுடியைக் கோதும்
குற்றவேலையை காற்று செய்துகொண்டிருக்கிறது
அந்த அறையில் ஒரு கோப்பை தண்ணீரும்
ஒரு பூனையும் அவளுடன் உள்ளன
பூனை சலித்து
அதன் இணையைத் தேடி
வெளியே போகட்டும்
நீங்கள் அதுவரை உங்கள் பாடல்களால்
அவளது கோப்பைத் தண்ணீரை
மதுவாக்கிக் கொண்டிருங்கள்.
5
அன்று அவள் அணிந்து வந்த உடை
அவளுக்குப் பொருந்தவே இல்லை
அந்த குளிர் கண்ணாடியும்.
அவள் நகங்களை சரியாக வெட்டுவதில்லை
சருமத்தைப் பேணுவதில்லை
அவளது கைப்பை நகைக்கும் விதத்தில் இருந்தது
அவள் தனது சரியான அளவில்லாத
செருப்பு தடுக்கி இருமுறை விழுந்தாள்.
எனக்கு ஒரு காட்டுச் செடியை கையில்
வைத்துக்கொண்டு
தனித்து ஒரு சாலையில் நடப்பது போல இருந்தது.
அதன் பெயரைச் சொல்லவரும்
மனிதர்கள் வசிக்கிற ஊர்களிடமிருந்து
விலகுகிற பாதைகளைத் தேர்ந்தெடுத்து நான் நடக்கிறேன்
கவனமாக.
6
மழை ஒரு சரியான பின்புலமாய் இருந்திருக்கும்
குளிரும் நதியும் கூட.
உச்சி வெயில் நடந்து போய்
நிழலுக்காக ஏங்கி நிற்கும் தினமாய்
அது இல்லாமல் இருந்திருக்கலாம்
மழை பின்னால் வந்தது
அவள் சென்ற பின்
புழுதி மணத்தைக் கிளப்பிக்கொண்டு
ஒரு கலியாணத்துக்குத் தாமதமாக வந்து விட்ட
புகைப்படக்காரனைப் போல.
7
அதிகாலையில்
தனது நுரைத்தடத்தையும் அழித்துவிட்டு
பெரிய கப்பலை நோக்கிச்
செல்லும் சிறிய படகில்
எப்போதும் நான் இருக்கிறேன்.
8
ஒரு பெரிய குளத்தின் அருகே உறங்கிக் கொண்டிருக்கிறேன்
குளத்தில் சில நட்சத்திரங்கள்
எனக்குத் தெரியும்.
இரவில் ஒரு சைத்திரிகன் வருகிறான்.
அவனுக்கு எப்படியோ
உன்னைத் தெரிந்திருக்கிறது.
9
குளிர்காலத்தின் பொன்னை எல்லாம் திரட்டி
சரக்கொன்றை
கோடையிடம் அளித்தது.
நான் ஒரு கடிதம் எழுதினேன்.
எழுதவில்லை.
நான் சொல்லிக்கொண்டேன்.
மழைக்காலத்தில்
நீ வேறு விதமான கடிதங்களை எழுதுவாய்
பனிப்புகையை ஒரு நாய்க்குட்டியைப் போல இழுத்துக்கொண்டு
அவள் கண்களின் நிறத்தில் மினுங்கும்
ஒரு சுலைமானித் தேநீரை அருந்தச் செல்லும் போது..